بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
104:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ.ᴑ
104:1. சமூக சீர்திருத்தவாதியே! சொத்து செல்வங்களை சேகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து கொண்டு,
ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ.ᴑ
104:2. தான் சேகரித்த செல்வங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொண்டு (Counting) இருப்பவர்களுக்கு கேடுதான் என்பதை பகிரங்கமாக அறிவித்து விடு.
இப்படி முதலாளித்துவ கொள்கை உடையவர்கள் எப்போதாவது சீர்த்திருத்தங்களைப் பற்றி கேள்விபட்டால், அதில் ஆயிரமாயிரம் குறைகளை கண்டெடுப்பார்கள். அதை பரிகசிப்பார்கள். சீர்த்திருத்தவாதிகளுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே முயலுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பேரழிவிற்கு ஆளாவார்கள் என்பதை எச்சரித்துவிடு.
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ.
104:3.“இந்த அளவிற்கு சொத்து செல்வங்களை சேகரித்து வருகிறீர்களே, அவை உங்கள் வாழ்வில் நிலையான பாதுகாப்பு அளிக்கும் என்று எண்ணுகிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ.
104:4. அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தால், அது அவர்களுடைய தவறான கண்ணோட்டமே என்பதை விளக்குங்கள். அந்த சொத்து செல்வங்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் அவர்களை நரக வேதனைகளில் தள்ளிவிடும். அவர்களும் எதற்கும் பயன்படாதவர்களாக ஆகிவிடுவார்கள். (9:35)
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ.
104:5. அந்த நரக வேதனைகளைப் பற்றி உமக்கு இறைவனைவிட வேறு யார்தான் தெளிவாக்க முடியும் ?
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ. ᴑ
104:6. இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்கிற சட்டத்தின் பிரகாரம் ஏற்படுகின்ற வேதனைகள் ஆகும்.
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ. ᴑ
104:7. நெருப்பின் தீப்பொறிக்கு ஒப்பானதாகும். அது அவர்களின் இதயங்களை ஆட்கொள்ளும்.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ. ᴑ
104:8. வேதனைகள் அளிக்கும் தீப்பொறிகள் நிறைந்த பெரிய பெரிய கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை தம் வாழ்வின் சுகங்களைப் பாதுகாக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ.ᴑ
104:9.அவர்கள் சம்பாதித்து பாதுகாத்து வந்த செல்வங்களே அவர்களை அந்த நரக நெருப்பிற்கு அழைத்துச் சென்றுவிடும்.
பின் குறிப்பு:இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏற்படும் சமூக அமைப்பு ஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருதியே திட்டங்களை தீட்டி அவர்களுடைய நல்வாழ்விற்காக பாடுபடும். உண்மை இவ்வாறு இருக்கும் போது, முதளாளித்துவக் கொள்கைக்கு இங்கு என்ன வேலை? எனவே இஸ்லாமிய சமுதாயத்தில் முதளாளித்துவம் நீங்கி, "ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன்" என்ற அடிப்படையில் செயலாக்கம் பெறுகிறது.