بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

103:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:திருக்குர்ஆன் நூஹ் (அலை) Noha முதல் ஈஸா (அலை) (Jesus christ) வரையில் வாழ்ந்த பல சமூகத்தவர்களின் வரலாற்று சம்பவங்களை நம் சிந்தனைக்கு கொண்டு வருகிறது. அவற்றின் நோக்கம் என்ன? ஆதி முதல் இன்று வரையில் மனிதன் சுயமாக கடைப்பிடித்து வந்த வாழ்க்கை நெறிமுறைகள் என்ன? அதனால் ஏற்பட்ட சீர்கேடுகள் என்ன? அவற்றை திருத்த இறைத் தூதர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை? இறைத் தூதர்களைப் பின்பற்றி வெற்றி கண்ட சமுதாயங்கள் எவை? அவர்களை நிராகரித்து அழிவினை சந்தித்த சமூகங்கள் எவை ? அவற்றிலிருந்து இப்பொழுது உலகில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கிடைக்கின்ற படிப்பினைகள் என்ன? இவைதாம் அந்த வரலாற்று கூற்றுகளின் நோக்கங்கள் ஆகும். (12:108) அந்த வகையில் இந்த சிறிய அத்தியாயம் வரலாற்றை ஆதாரமாகக் காட்டி ஒரு மகத்தான உண்மையை விளக்குகிறது. அதை நாம் பார்ப்போம்.


وَٱلْعَصْرِ.

103:1. காலம் - வரலாறு - மனித வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு ஓர் உண்மை விளங்கும்.


إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ.

103:2. அதாவது காலம் காலமாக மனிதனின் உழைப்புகள் யாவும் அவனுக்கு நிலையான பலன்களை தரவே இல்லை. அவனுடைய உழைப்புகள் வீணாகியே போயுள்ளன. அவன் ஒவ்வொரு கால கட்டத்திலும் தோல்வியையே கண்டுள்ளான். மனிதனால் ஒருபோதும் தன் இலட்சியத்தை அடையவே முடியவில்லை.
ஆனால் மேற்சொன்ன விஷயத்தில் விதிவிலக்கும் உள்ளது. அதாவது சில சமுதாயத்தினர் தம் இலட்சியத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். அவர்கள் யார்?


إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ.

103:3. (1) நிலையான மாண்புகளைக் கொண்ட அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்ட சமூகத்தவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள்.
(2) இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டால் மட்டும் இலட்சியம் நிறைவேறாது. அதன்படி ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யக்கூடிய ஆற்றல்களை தம்முள் வளர்த்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவி வரும் சிக்கல்களை சுமுகமாக தீர்த்து வைத்து சமூக நல்லிணக்கத்திற்காக ஆவன செய்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் ஆற்றல்களையும் வளரச் செய்தவர்கள்.
(3) இந்தப் பணியை தனி நபர் ஒருவரால் நிறைவேற்ற முடியாது. இதற்காக ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு கூட்டு வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, அதில் ஒவ்வொருவரும் தன் கடமையை நிறைவேற்றி வருவதோடு மற்றவர்களையும் தம் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கும்படி அறிவறுத்தியவர்கள். (ஈ) இந்த சமூக அமைப்பை உருவாக்குவதில் எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் எதிர் கொண்டு தம் கொள்கையில் நிலைத்து நின்று அயராது உழைத்தவர்கள்.
ஆகிய இந்த சிறப்புகளைக் கொண்ட சமுதாயங்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்தன. மற்றவை தீராப் பிரச்சனைகளில் மூழ்கி தோல்வியையே சந்தித்தன. மனித வரலாறே இதற்கு சாட்சி.