بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
102:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ.
102:1. மனித நேயத்தை மறக்கடிக்கச் செய்வது எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் சொத்து செல்வங்களை குவிப்பதில் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ள வளரும் பேராசையே ஆகும். (57:20) (83:2 – 6)
ஒருவர் இந்த ஆர்வத்தை தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அளவோடு வைத்துக் கொண்டால் அதற்கு ஒரு எல்லையும் இருக்கும். நியாயமும் இருக்கும். (பார்க்க 3:14) ஆனால் இந்த ஆர்வம் ஒருவரையொருவர் மிஞ்சிக்கொள்ள வேண்டும் என்று இருந்தால், அதற்கு அளவே இருக்காது. அவன் எந்த அளவிற்கு செல்வத்தை சேகரிக்கிறானோ அந்த அளவிற்கு அவனுடைய ஆர்வமும் கூடிக்கொண்டே செல்லும்.
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ.
102:2. இப்படியாக அவனுடைய ஆர்வம், மரணிக்கும் வரையில் நீடிக்கும்.
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ.
102:3. இது ஒன்றும் புரிந்துகொள்ள முடியாத உண்மை அல்ல. சற்றே நிதானத்துடன் சிந்தித்துப் பார்த்தால் இது எந்த அளவிற்கு அழிவினை ஏற்படுத்தும் என்பதை வெகு சீக்கரமே உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும்.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ.
102:4. ஆம். அதனால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்னவென்பதை விரைவில் உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ.ᴑ
102:5. மனிதனின் இந்தப் போக்கு அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது என்கிற உண்மையை நீங்களே உங்கள் சிந்தனைப் புலன்களால் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ.ᴑ
102:6. ஆனால் உங்களைப் பார்க்கும் போது, அதைப்பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. எனவே சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதால், நீங்களே அந்த நரகத்தில் விழுந்து
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ.
102:7. உங்கள் நிஜக் கண்களால் அதைப் பார்த்துக் கொள்வீர்கள் போலும். இதுதான் நடக்க போகின்ற உண்மை.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ.
102:8. அந்தத் தருவாயில் அனைத்துத் தரப்பு மக்களின் பரிபாலனத்திற்காக அளிக்கப்பட்ட இறைவனின் அருட்கொடைகளை, நீங்கள் உங்கள் சுய சந்தோஷங்களுக்காக ஏன் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்ற கேளவியே உங்கள் முன் நிற்கும். நீங்கள் அனுபவித்த சுக போகங்களில் யார் யாருடைய வியர்வைத் துளிகள் கலந்திருந்தன என்றும் கேட்கப்படும். யார் யாருடைய உழைப்பை நீங்கள் அபகரித்துக் கொண்டீர்கள் என்றும் கேட்கப்படும். ( 21:13-15)