.بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


.ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

1:1.அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பரிபக்குவப்படுத்தி, பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாட்டினை ஆராய்பவர்கள், (பார்க்க 3:190&191) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனப் போற்றிப் பாராட்டுவார்கள். (பார்க்க 35:27-28)


.ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1:2. இத்தகைய மாபெரும் ஏற்பாடுகள் யாவும் அளவற்ற அருளையும் நிகரற்ற பேரன்பையும் கொண்ட அல்லாஹ்வின் குணநலன்களையே பிரதிபலிக்கின்றன என்பதையும் அறிவார்கள்.


.مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

1:3. அகிலங்களில் நடைப்பெற்று வரும் எல்லா செயல்பாடுகளும் அவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன. (பார்க்க 43:84-85) அதன்படியே மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப பலன்களை அளிக்கும்படியாகவே அவை செயல்படுகின்றன என்பதையும் அறிவார்கள். (பார்க்க 82:17-19)


.إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

1:4. இந்த பேருண்மையை ஏற்றுக் கொண்டவர்கள்,“நாங்களும் ஏக இறைவனாகிய உன் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படவும், (பார்க்க 6:162) நீ நிர்ணயித்த கோட்பாடுகளுக்கு உட்பட்டே வாழவும் நாடுகிறோம்” என்றும்; (பார்க்க 9:33)


.ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

1:5. “எனவே உன் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட நேர்வழி எங்களுக்குக் கிடைத்திடச் செய்வாயாக!” என்றும்; (பார்க்க 6:161)


صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

1:6. “உன்னுடைய வழிமுறைகளைப் பின்பற்றி யார் சிறப்பாக வாழ்ந்து உலக வரலாற்றில் “சான்றோர்கள்” என முத்திரைப் பதித்துச் சென்றார்களோ, அந்த வழிமுறையையே பின்பற்ற நாடுகிறோம்” (பார்க்க 2:47& 40:8) என்றும்;


.غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

1:7. “யார் உன் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு, வழிதவறி இடம் மாறிப் போய், வாழ்வில் அழிவையும் வேதனைகளையும் சந்தித்தார்களோ, (பார்க்க 45:23) அந்த வழிமுறையை விட்டு நாங்கள் விலகியிருக்கவே நாடுகிறோம்” என்றும் எண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
(உங்களுடைய வேண்டுதலுக்கு இணங்க மனிதனுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலும் திருக்குர்ஆனில் இறக்கியருளப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன. பார்க்க 15:9 & 17)