بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

2:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


.الٓمٓ

2:1. அளவற்ற அருளாலன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து, முஹம்மது நபி மூலமாக இறக்கி அருளப்பட்ட வேதமிது.


ذَٰلِكَ ٱلْكِتَٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ.

2:2. நீங்கள் 1:5இல் வேண்டிக் கொண்டதற்கு இணங்க வேதம் இறக்கியருளப்படுகிறது. இவ்வேதம் நேர்வழி காட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதே சமயம் தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாடுவோருக்கே இது நேர்வழியினை வழங்கும். (பார்க்க 2:46, 32:2)


ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.

2:3. இவர்கள், அறிவுப் புலன்களுக்குத் தற்சமயம் புலப்படாத உண்மைகள் இவ்வேதத்தில் குறிப்பிடப்படும் போது, அவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் சமுதாயமும் நேர்வழி பெற்று, ஒழுக்க மாண்புகளைப் பேணிக் காப்பதற்காகக் கற்றுக் கொடுக்கும் கூட்டு ஸலாத் முறையை நிலைநாட்டுவார்கள். (பார்க்க 29:45) இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து சமுதாய மேம்பாட்டிற்காக உதவியும் செய்து வருவார்கள். (பார்க்க 2:219)


وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْءَاخِرَةِ هُمْ يُوقِنُونَ.

2:4. மேலும் இவர்கள், உம்மீது இறக்கி அருளப்பட்ட இவ்வேதமும், உமக்கு முன்னர் நபிமார்கள் பலர் மூலமாக இறக்கி அருளப்பட்ட வேதங்களும் ஒரே அடிப்டையைக் கொண்டவையே என்பதையும் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்கின்ற ஆஃகிரத்து மீதும் உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.


أُو۟لَٰٓئِكَ عَلَىٰ هُدًۭى مِّن رَّبِّهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.

2:5. இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே தம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைபவர்கள் ஆவார்கள்.(பார்க்க 23:1-10, 31:2-5)
அதாவது இத்தகைய நல்லோர்கள் மூலமாக நடைபெறும் ஆட்சியும், அந்த ஆட்சிக்கு ஆதரவாக பொது மக்களும் இருப்பார்கள். மேலும் அவர்கள் வேகமாக முன்னேறி, சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக விளங்கும். (பார்க்க 23:1-10 & 32:2-5)


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ.

2:6. இதற்கு மாறாக இறைவனின் வழிகாட்டுதலை தெளிவாக எடுத்துரைத்தும் அவற்றை ஏற்க மறுப்பவர்களும் இருக்கிறார்கள். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் செய்யாததும் ஒன்றே. இவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.


خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰٓ أَبْصَٰرِهِمْ غِشَٰوَةٌۭ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ.

2:7. காரணம், ஏற்கனவே அவர்கள் முன்னோர்களின் வழிபாட்டில் மூழ்கிக் கிடப்பதால், (2:170) அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களின் இதயங்களிலும், செவிப்புலன்களிலும் திரை ஏற்பட்டு விடுகிறது. (பார்க்க:4:155) அவர்களின் பார்வைப் புலன்களிலும் திரை ஏற்பட்டுவிடுகிறது. (பார்க்க:6:25-26,41:5) இத்தகையவர்களின் வாழ்வு கடுமையான வேதனை மிக்கதாய் ஆகிவிடும்.


وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ.

2:8. மேற்சொன்ன இரு வகையினரைத் தவிர மூன்றாம் வகையினரும் இருக்கிறார்கள். இவர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” (Cause and effects) என்கிற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்வதாக உதட்டளவில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் மனதார ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.


يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَمَا يَخْدَعُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ.

2:9. இவ்வாறு சொல்பவர்கள், அல்லாஹ்வையும் நம்பிக்கைக் கொண்டோரையும் ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். உண்மையில் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்களே அன்றி வேறில்லை. ஆனால் அவர்கள் இதனை உணர்வதில்லை


فِى قُلُوبِهِم مَّرَضٌۭ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضًۭا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْذِبُونَ.

2:10. அவர்களிடம் இருக்கும் பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம் யாவும் ஒருவகை மனநோய் ஆகும். அல்லாஹ்வின் நியதிப்படி அந்நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படியாக அவர்கள் வேதனை தரும் அழிவைத் தாமே தேடிக் கொள்கிறார்கள். (பார்க்க 9:125)


وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ.

2:11. மேலும் இத்தகைய தீய மனப்பான்மைக் கொண்ட சமுதாய தலைவர்களிடம், “சமூக நலன்கள் சீர்குலையும் வகையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள்” என்று கூறினால், “நாங்கள் தாம் சீர்திருத்தவாதிகள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள்.


أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ.

2:12. ஆனால் நிச்சயமாக இத்தகையவர்களே சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்து, குழப்பங்களை உண்டாக்குபவர்களே ஆவார்கள். ஆனால் இவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்வதில்லை.


وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓا۟ أَنُؤْمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُ ۗ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ.

2:13. அவர்களிடம், “இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மக்களோடு நீங்களும் இணைந்து செயலாற்றுங்கள்” என்று கூறினால், “அறிவீனர்களாக இருக்கும் இவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டது போல் நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று கேட்கிறார்கள். அப்படி அல்ல. இவ்வாறு கூறும் இவர்களே மூடர்கள். ஆனால் அவர்கள் தம் மடமையை அறிவதில்லை.


وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ إِلَىٰ شَيَٰطِينِهِمْ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُونَ.

2:14. மக்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களைச் சந்திக்கும் போது, “நாங்களும் உங்களைப் போன்று ஈமான் கொண்டவர்கள்தாம்” என்று கூறிக் கொள்வார்கள். அதே சமயம் அவர்கள், தீய செயல்களில் ஈடுபடும் சமுதாயத் தலைவர்களைத் தனிமையில் சந்திக்கும் போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்வதற்காகவே அவர்களோடு இருக்கிறோம்” என்று கூறுவார்கள்.


ٱللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ.

2:15. அல்லாஹ்வின் நியதிப்படி, இப்படி இரட்டை வேடம் போடுபவர்களே பரிகாசத்திற்கு ஆளாவார்கள். மேலும் அவர்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தடுமாறிக்கொண்டு வாழ நேரிடும். (பார்க்க 9:79)


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَٰلَةَ بِٱلْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمْ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ.

2:16. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாகத் தவறான வழியை கொள்முதல் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களுடைய இந்த வியாபாரம் நிலையான இலாபம் தராது. அது மட்டுமின்றி இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
இத்தகைய மனப்பான்மைக் கொண்டவர்களின் ஆட்சியமைப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அவர்களால் தற்காலிக தீர்வுகளையே தர முடியுமே அன்றி, அவற்றின் மூலக் காரணத்தை அறிந்து அவற்றைச் சரி செய்யவே முடியாது. எனவே அவர்கள் எடுக்கும் நிவாரண நடவடிக்கைகளை


مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًۭا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَٰتٍۢ لَّا يُبْصِرُونَ.

2:17. ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இருட்டில் ஒருவன் நெருப்பை மூட்டி, அதன் வெளிச்சத்தைக் கொண்டு அவனைச் சுற்றியுள்ள இருளை நீக்கிவிடுகிறான். அந்த வெளிச்சம் சிறிது நேரத்தில் நீங்கிவிட்டதும், மீண்டும் இருள் சூழ்ந்து கொள்கிறது. இப்படித் தான் சமுதாய பிரச்னைகளுக்கு தம் சுயஅறிவைக் கொண்டு தற்காலிகத் தீர்வையே காண முடிகிறதே அன்றி அவர்களால் நிலையான தீர்வை ஒருபோதும் காண முடிவதில்லை. (24:40)


.صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَرْجِعُونَ

2:18. இப்படியாக இத்தகையவர்கள் காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய், கண்களிருந்தும் குருடர்களாய் செயல்படுகின்றனர். (பார்க்க 7-179) இவர்கள் நேர்வழியின் பக்கம் வருவது எங்கணம்?


أَوْ كَصَيِّبٍۢ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٌۭ وَرَعْدٌۭ وَبَرْقٌۭ يَجْعَلُونَ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلْمَوْتِ ۚ وَٱللَّهُ مُحِيطٌۢ بِٱلْكَٰفِرِينَ.

2:19. மேலும் தன்னிச்சையாக ஆட்சி செய்யும் இத்தகையோரைப் பற்றி இன்னொரு எடுத்துக்காட்டும் கூறலாம். காரிருளும் இடியும் மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம். தம் உயிருக்குப் பயந்து, இடியோசையிலிருந்து தப்பித்துக் கொள்ள தம் காதுகளில் விரல்களை வைத்து அடைத்துக் கொள்கிறார்கள். இதனால் இடியோசையின் தாக்கம் ஏற்படாமல் போய்விடுமா? இவர்களுடைய சிந்தனை இந்த அளவிற்கு மங்கி விடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமோ அனைவரையும் சூழ்ந்ததாக இருக்கிறது.
அதாவது இடி மின்னலின் தாக்கம் எங்கும் பரவி இருப்பது போல், இவர்கள் செய்யும் முறையற்ற செயல்களின் தாக்கம் சமுதாயம் முழுவதும் சூழ்ந்து கொள்கிறது. அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வையே தருகிறார்களே அன்றி, அவற்றின் மூலக் காரணங்களை அறிந்து அதற்கு தடை விதிப்பதில்லை. அவற்றைப் பற்றிதான் இறைவேதம் குறிப்பிடுகிறது. (பார்க்க 29:54)


يَيَكَادُ ٱلْبَرْقُ يَخْطَفُ أَبْصَٰرَهُمْ ۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوْا۟ فِيهِ وَإِذَآ أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا۟ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:20. அதுவும் அதே மின்னல் அவர்களுடைய கண் பார்வையைப் பறித்து விடவும் செய்யலாமே. அது மட்டுமின்றி இடி மின்னல்கள் வெளிச்சத்தைத் தரும்போது மட்டும் அவர்களால் சிறிது தொலைவு நடக்க முடிகிறது. அதன்பின் உடனே இருள் சூழ்ந்துகொள்ளும் போது, நின்று விடுகிறார்கள். அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தம் சுய அறிவைக் கொண்டு தீர்வு காண்பவர்களின் நிலை இது போலத்தான் இருக்கும். அதாவது அவர்கள் காணும் தீர்வு தற்காலிக தீர்வாகவே இருக்கும். அதுமட்டுமின்றி அவர்கள் கொண்டுவரும் தீர்வுகளில் புதிய சிக்கல்கள் உருவாகி விடும். (பார்க்க 24:40) அவர்களுடைய சிந்தனை மற்றும் பார்வைப் புலன்களை உடனடியாகப் போக்கிவிடும் செயல்திட்டம் அல்லாஹ்விடம் இருந்திருந்தால், அவ்வாறே செய்திருக்க முடியும். (பார்க்க 16:61) ஏனெனில் அல்லாஹ்வின் பேராற்றல்கள் அனைத்துப் படைப்புகளையும் கட்டுக் கோப்பாக செயல்படுத்துவதாக உள்ளது. எனவே


ييَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعْبُدُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ.

2:21. உலக மக்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். இதனால் உங்கள் வாழ்வின் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும்.


ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ فِرَٰشًۭا وَٱلسَّمَآءَ بِنَآءًۭ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا وَأَنتُمْ تَعْلَمُونَ.

2:22. காரணம், உங்களைப் படைத்ததோடு மட்டுமின்றி, நீங்கள் உயிர் வாழ உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதிலிருந்து உங்கள் உணவிற்காக கனி வகைகளையும் வெளிவர ஏற்பாடு செய்தவன் அல்லாஹ்வே. இந்தப் பேருண்மையை உணர்ந்து அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணியுங்கள். அவன் கட்டளைக்கு இணையாக வேறு எந்த வழிமுறைகளையும் பின்பற்றாதீர்கள்.


وَإِن كُنتُمْ فِى رَيْبٍۢ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا۟ بِسُورَةٍۢ مِّن مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

2:23. அல்லாஹ் இறக்கி அருளியுள்ள இவ்வேத வழிகாட்டுதல்கள் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு வழி வகுக்காது என்ற சந்தேகம் இருந்தால், அதில் நீங்கள் உறுதியாகவும் இருந்தால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக, வேறு வழிமுறைகளை ஏற்படுத்திக் காட்டுங்கள். இதற்காக உங்களிடமுள்ள வல்லுநர்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். இவ்வேதத்தில் உள்ளது போல் வேறு சிறந்த வழிமுறைகளில் ஒரு பகுதியையாவது கொண்டுவாருங்கள். (பார்க்க 7:40 10:38)


فَإِن لَّمْ تَفْعَلُوا۟ وَلَن تَفْعَلُوا۟ فَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِى وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ.

2:24. அவ்வாறு நீங்கள் செய்து காட்டுங்கள் – அப்படி சிறந்த வழிமுறைகளை உங்களால் ஒருபோதும் கொண்டு வரவே முடியாது. (பார்க்க 28:50) எனவே இவ்வேத அறிவுரைகளை நிராகரித்து வாழும் மக்களுள் கலகம், கலவரம் போன்ற துர்பாக்கிய சம்பவங்களே நேரிடும் என்பதை அஞ்சி கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழும் சமுதாயங்களில் இது போன்ற துர்பாக்கியங்களை ஒருபோதும் தவிர்க்க முடியாது.


وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍۢ رِّزْقًۭا ۙ قَالُوا۟ هَٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَٰبِهًۭا ۖ وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ ۖ وَهُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:25. மாறாக இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று, ஆக்கப்பூர்வமான சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி, உழைத்து வருபவர்களின் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறி வரும் என்ற நற்செய்திகள் உண்டு. இவர்களுக்கு தாராளமான பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவ நதிபோல் கிடைத்து வரும். இவர்களுக்குக் கிடைக்கும் உணவு மற்றும் கனி வகைககள் யாவும் இதற்கு முன்பும் கிடைத்தது போன்றே இருக்கும். முன்பு இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இப்போது சிரமமின்றி தாராளமாகவும் தரமுள்ளதாகவும் கிடைப்பதை இவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும் இந்த சமூக அமைப்பில் உற்ற தோழர்களும் இணைந்த வண்ணம் இருப்பார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை இறை வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரை நிலையாக இருக்கும். தனி நபர் விஷயத்தில் இத்தகைய சுவன வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும்.
இவ்வாசகத்தில் தாராள பொருளாதார வசதிகளைக் குறிப்பிட ஜீவ நதியையும், சந்தோஷமான வாழ்க்கைக்கு கனிவகைகளையும் உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.


۞ إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًۭا مَّا بَعُوضَةًۭ فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۘ يُضِلُّ بِهِۦ كَثِيرًۭا وَيَهْدِى بِهِۦ كَثِيرًۭا ۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَٰسِقِينَ.

2:26. இப்படியாக மறைந்து நிற்கும் உண்மைகளை எடுத்துக்காட்டுகளின் மூலம்தான் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இத்தகைய உண்மைகளை விளக்குவதற்காக, கொசுவையோ அல்லது அதை விட அற்பமான பொருளையோ உதாரணமாக மேற்கோள்காட்டி விளக்குவதில் அல்லாஹ் தயக்கம் காட்டுவதில்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டோர், இத்தகைய எடுத்துக்காட்டுதலைக் குறித்து சிந்தித்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்போர், “இந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் அல்லாஹ் நாடுவது என்ன?” என்று எதிர்மறையாகப் பேசுவார்கள். இப்படியாக எதிர்மறையாகப் பேசி பலர் வழிகேட்டில் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலர் இவற்றைப் சிந்தித்து நேர்வழியினைப் பெறுகிறார்கள். ஆக திசை மாறிச் செல்பவர்களே வழிகேட்டில் சென்று விடுவார்கள். (பார்க்க 29:43)


 الَّذِيۡنَ يَنۡقُضُوۡنَ عَهۡدَ اللّٰهِ مِنۡۢ بَعۡدِ مِيۡثَاقِهٖوَيَقۡطَعُوۡنَ مَآ اَمَرَ اللّٰه .بِهٖۤ اَنۡ يُّوۡصَلَ وَيُفۡسِدُوۡنَ فِى الۡاَرۡضِ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الۡخٰسِرُوۡنَ

2:27. இவ்வாறு திசைமாறிச் செல்பவர்கள் யாரென்றால், அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்த வாக்குமூலத்தை உறுதிப் படுத்திய பின்னர், (பார்க்க 2:63-64, 13:25, 48:10) அதை முறித்து விடுபவர்கள். ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு கூடி வாழ்வோம் என்பதே அவர்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியாகும். அதை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, அல்லாஹ்வுடன் இருக்கும் உறவைத் துண்டித்துக் கொண்டு, நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர்கள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்கள் தாம் பேரிழப்புக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.


كَيْفَ تَكْفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمْ أَمْوَٰتًۭا فَأَحْيَٰكُمْ ۖ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ.

2:28. வழிதவறிச் செல்பவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதன் காரணம் என்ன? உயிரற்ற நிலையில் இருந்த உங்களை உயிர் பெறச் செய்தது அவன்தானே. இங்கு உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கப் போவதும் இல்லை. நீங்கள் மரணித்து தான் ஆக வேண்டும். உங்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீங்கள் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளதே.
இவ்வாறிருந்தும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதன் நோக்கம் என்ன?


هُوَ ٱلَّذِى خَلَقَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبْعَ سَمَٰوَٰتٍۢ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

2:29. அதுமட்டுமின்றி உலகில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்ததும் அல்லாஹ் தானே. அவ்வாறு அனைத்தையும் படைத்து, அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கட்டுக்கோப்பாக இயக்கி வருபவனும் அந்த ஏக இறைவன்தானே. அத்துடன் வானங்கள் பலவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, அவற்றை ஆள்பவனும் அவன்தானே. அது மட்டுமின்றி இங்கு நடந்துவரும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்தவனாகவே அவன் இருக்கின்றானே! உண்மை நிலை இவ்வாறிருக்க, நீங்கள் அவனுடைய வழிகாட்டுதலை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள்?


وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌۭ فِى ٱلْأَرْضِ خَلِيفَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ.

2:30. பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகளுக்கு, இந்தப் பூமியில் வழிநடத்திச் செல்லும் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் இறைவனிடம் இருந்ததை அறிந்தபோது, அவற்றிற்கு மிகவும் வியப்பாக இருந்தது. “பூமியில் குழப்பங்களை உண்டாக்கி இரத்தம் சிந்தி வருவோருக்கா இந்த உயர் தகுதி? இன்னும் நாங்களோ உன் செயல்திட்டங்கள் யாவற்றையும் சிறிதளவும் பிசகாமல் பாராட்டுக்கு உரியவையாக ஆக்க அயராது செயல்பட்டு வருகிறோமே! ஆனால் மனிதனின் நிலை வேறு விதமாய் இருக்கிறதே” என வியந்தன. ஆனால் இறைவனின் செயல்திட்டத்தின் உண்மை நிலை அவற்றிற்குத் தெரியவில்லை. (பார்க்க 7:11)


وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَٰدِقِينَ.(31)

2:31. இன்னும் இறைவனின் செயல்திட்டப்படி, அனைத்துப் படைப்புகளின் தன்மைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறையை அறிந்துகொள்ளும் ஆற்றல்கள் மனித இனத்திற்குப் படிப்படியாகக் அளிக்கப்பட்டது. (பார்க்க 55:3-4, 96:3-5) மனிதனிடம் இருக்கும் இந்த ஆற்றலைப் பற்றி அந்த மலக்குகளிடம் எடுத்துக்காட்டி, “உண்மையிலேயே இப்படிப்பட்ட ஆற்றல்கள் உங்களிடம் உள்ளனவா?” என்று கேட்கப்பட்டது.
மனிதனின் வல்லமையும் ஆற்றல்களும் என்னவென்பதும், பிரபஞ்ச சக்திகளின் எல்லைக்கோடு என்னவென்பதும் இதிலிருந்து நமக்குப் புலனாகிறது.


قَالُوا۟ سُبْحَٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ.

2:32. அதற்கு அவை, “இறைவா! நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவைத் தவிர வேறு எதைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆற்றல் எங்களிடம் இல்லை. நீயே பேரறிவாளன். விவேகம் மிக்கவன் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” எனக் கூறின.
இதுதான் மலக்குகளின் உண்மை நிலையாகும். அவற்றிற்கு இடப்பட்ட கட்டளையை மீறி நடக்க ஒருபோதும் இயலாது (பார்க்க 16:49-50)


قَقَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئْهُم بِأَسْمَآئِهِمْ ۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسْمَآئِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّىٓ أَعْلَمُ غَيْبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ.

2:33. இறைவனின் செயல்திட்டப்படி, உலகப் படைப்புகளை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் ஞானம் மனிதனுள் வளர வளர, அந்த மலக்குகளுக்கும் உண்மை நிலவரம் விளங்கியது. இதைக் கண்ட மலக்குகளிடம், “நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன். உங்களிடம் வெளிப்பட்டுள்ள சக்திகள் மற்றும் உங்களிடம் மறைந்து நிற்கும் சக்திகளைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று இறைவன் கேட்டான்.
மனிதனின் நிலை, மலக்குகளின் எல்லைக் கோடு. இன்னும் அல்லாஹ்வின் அளவற்ற வல்லமை என்னவென்பது இதிலிருந்து புலனாகிறது. இவற்றை விளக்கவே இந்த உண்மைகளை உரையாடல் வடிவில் தரப்படுகிறது. (பார்க்க 3:7) இந்த சம்பவம் உண்மையிலேயே எங்கோ நடந்ததாக எடுத்துகொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் தன் செயல்திட்டத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்வதில்லை. (பார்க்க 18:26)


وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ أَبَىٰ وَٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَٰفِرِينَ.

2:34. இறைவனின் செயல்திட்டப்படி, பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகள் மனித கட்டளைக்கு சிரம் பணிந்து செயல்படுகின்றன. ஆனால் மனிதனுள் செயல்பட்டு வரும் மனோ இச்சை எனும் ஆணவமும், பெருமையும், சுயநலமும் கொண்ட இப்லீஸிய தன்மை இறைக் கட்டளைக்குக் கட்டுப்படுவதில்லை. எனவே மனிதனுள் செயல்பட்டு வரும் இந்த இப்லீஸிய குணம் இறைக்கட்டளைக்கும் மாறுசெய்யும் தன்மை கொண்டதாக ஆகிவிடுகிறது.
மனிதன் தன் கல்வி அறிவு, அனுபவம் மற்றும் ஆராய்ச்சிகளைக் கொண்டு பிரபஞ்ச இயற்கை சக்திகளை ஆராய்ந்து அறிந்து, தன் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். இது மனிதனிடம் உள்ள பலமாகும். அதே சமயத்தில் மனிதன் இறை வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து வாழவில்லை என்றால் சுயநலம் கொண்ட இப்லீஸிய குணம் இவனை ஆட்டிப்படைக்கும். இப்படியாக மனிதனை இறைவனின் செயல்திட்டத்திற்கு எதிராகச் செயல்படும்படி செய்து விடும். இது மனிதனிடம் உள்ள பலவீனமாகும்.


وَقُلْنَا يَٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ.

2:35. இன்னும் இறைவனின் செயல்திட்டப்படி, மனிதன் தன் மனைவி மக்களோடு சந்தோஷமாக உண்டு மகிழ்ந்து இவ்வுலகில் சுவன வாழ்வை வாழும்படி ஏற்பாடு ஆனது. (பார்க்க 2:58) “ஆனால் ஆணவம், பெருமை, சுயநலம் கொண்ட இப்லீஸிய குணங்களின் வலையில் சிக்கி, தம்மில் குலம் கோத்திரம் என்ற பாகுபாடு கொண்டு, மரக்கிளை போல் பிரிந்துவிட வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், தமக்குள் பகைமை வளர்ந்து ஒருவர் மற்றவர்க்கு எதிராக அக்கிரமம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்” என்பது இறைவனின் அறிவுரையாக இருந்தது.


فَأَزَلَّهُمَا ٱلشَّيْطَٰنُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّۭ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٍۢ.

2:36. ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆண் பெண் ஆகிய இருபாலரிலும் வளர்ந்து வந்த சுயநலப் போக்கு, அவர்களை வழிதவறச் செய்து விட்டது. இதனால் அவர்களுக்குக் கிடைத்திருந்த சுவன வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய் விட்டது. மேலும் பிரபஞ்ச இயற்கை சக்திகளை அடக்கி ஆளும் உயர் நிலையிலிருந்து இறங்கி, கீழ்த்தர நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே சிலர் சிலருக்கு எதிராக பகைவர்களாக ஆகி விட்டார்கள். ஆயினும் இறைவன் நிர்ணயித்த செயல்திட்டப்படி, பூமியில் மனிதன் சில காலம் வரையில் வாழ்வதற்குரிய வாழ்வாதாரங்கள் மட்டும் செய்து கொடுக்கப்பட்டன. (பார்க்க 16:61) ஆனால் நிலையான சந்தோஷமான வாழ்வு கிடைக்கவே இல்லை.


فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٍۢ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

2:37. மனிதன் இழந்துவிட்ட இச்சுவன வாழ்வை மீண்டும் ஒருபோதும் திரும்பப் பெறவே முடியாதா? நிச்சயமாக திரும்ப பெற முடியும். இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால், இழந்த இச்சுவன வாழ்வை மீண்டும் திரும்பப் பெறலாம். இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டம், மனிதன் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் மாபெரும் கருணை மிக்கதாக இருக்கின்றது


قُلْنَا ٱهْبِطُوا۟ مِنْهَا جَمِيعًۭا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًۭى فَمَن تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:38. எனவே மனிதனின் தவறான செயல்களால் சுவன வாழ்வை இழந்து, கீழ்தரமான வாழ்விற்குத் தள்ளப்பட்டாலும், இறைவனிடமிருந்து நபிமார்கள் மூலமாக நேர்வழி கிடைக்கச் செய்து, மீண்டும் சிறப்பாக வாழ வழிவகை செய்யப்பட்டது. எந்தச் சமுதாயம் நபிமார்கள் மூலம் அல்லாஹ் காட்டும் நேர்வழியை பின்பற்றுமோ, அது எவ்வித அச்சமும் துக்கமும் இல்லா சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை ஈட்டிக் கொள்ளும்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:39. இதற்கு மாறாக எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதைப் பொய்ப்பிக்குமோ, அது துயரம் மிக்க வேதனைகளில் சிக்கிக்கொள்ளும். அதிலிருந்து தப்பிக்க வேறு எந்த வழிமுறையும் இருக்காது.
இதுதான் மனிதனைக் குறித்து அல்லாஹ் வகுத்துள்ள செயல்திட்டமாகும். இதை மையமாக வைத்துத்தான் சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன.
குர்ஆன் இறக்கி அருளப்பட்ட கால கட்டத்தில், அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்து வந்த சமுதாயங்களின் வரலாற்று ஆதாரங்கள் தரப்படுகின்றன. அவர்களுள் பனீ இஸ்ராயீல் சமூகத்தவரும் வாழ்ந்து வந்தார்கள்.


يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّٰىَ فَٱرْهَبُونِ.

2:40. இஸ்ரவேலர்களே! இறை வழிகாட்டுதலின் படி வாழ்ந்த காலமெல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகள் எந்த அளவிற்குத் தாராளமாகக் கிடைத்து வந்தன என்பதை எண்ணிப் பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட வாக்குறுதியை (2:27) இப்போதும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய தேவைகள் நிறைவேற மீண்டும் வழிகள் பிறக்கும். மேலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


وَءَامِنُوا۟ بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًۭا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا۟ أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ ۖ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًۭا قَلِيلًۭا وَإِيَّٰىَ فَٱتَّقُونِ.

2:41. இன்னும் அல்லாஹ் இறக்கி அருளிய இவ்வேதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள வேதத்தின் உண்மை விஷயங்களை இது உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு இருந்தும், இதை ஏற்க மறுப்பவர்களில் முன்னிலை வகிக்கிறீர்களே! மேலும் சொற்ப ஆதாயங்களுக்காக இந்த அறிவுரைகளைப் புறக்கணித்து விடாதீர்கள். இன்னும் அல்லாஹ்வுக்கே அஞ்சி அவனுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள்.


وَلَا تَلْبِسُوا۟ ٱلْحَقَّ بِٱلْبَٰطِلِ وَتَكْتُمُوا۟ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ.

2:42. மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டும் இந்த வழிகாட்டுதலைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டே, போலியான தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை அதில் கலந்து விடாதீர்கள். மேலும் இதிலுள்ள ஆக்கப்பூர்வமான நன்மையான விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்காமல் மறைத்து விடாதீர்கள். (பார்க்க 2:159)


وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱرْكَعُوا۟ مَعَ ٱلرَّٰكِعِينَ.

2:43. மேலும் இறைவழிகாட்டுதலைப் பேணி ஒழுக்கத்துடன் வாழ வழி காட்டும் ஸலாத்தை நிலைநிறுத்தி, அதை முறைப்படி கடைப்பிடித்து வாருங்கள். மேலும் சமுதாய மேம்பாட்டிற்காக உதவியும் செய்து வாருங்கள். (பார்க்க 29:45) இப்படியாக ஆக்கப்பூர்வமாகச் செயல்படு பவர்களுடன் இணைந்து நீங்களும் செயலாற்றுங்கள்.


۞ أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَٰبَ ۚ أَفَلَا تَعْقِلُونَ.

2:44. ஆனால் நீங்கள் வேதத்தை வைத்துக்கொண்டு, அதன்படி நன்மையான செயல்களைச் செய்யுமாறு பிறரை அறிவுறுத்தி வருகிறீர்கள். பிறருக்கு எடுத்துரைத்த அதே அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற தவறி விடுகிறீர்கள். இது நியாயமா? இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாமா?


وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلْخَٰشِعِينَ.

2:45. மேலும் இறைவன் அறிவித்த கொள்கை கோட்பாடுகளில் உறுதியுடன் நிலைத்திருந்து, அதன் வாழ்க்கை நெறிமுறைகளை முறையோடு கடைப்பிடித்து வாருங்கள். இறையச்சம் உள்ளவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இது மிகப் பெரிய பாரமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُوا۟ رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَٰجِعُونَ.

2:46. இறையச்சம் என்பது இறைவழிகாட்டுதலை விட்டுவிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்ற பயம் கொள்வதே ஆகும். தம்முடைய ஒவ்வொரு செயலின் விளைவுகளும் இறைவன் நிர்ணயித்த இலக்கையே நோக்கிச் செல்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.


يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ.

2:47. இஸ்ரவேலர்களே! இறை வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வந்த காலம் எல்லாம் எந்த அளவிற்கு உங்களுக்கு அருட்கொடைகள் கிடைத்து வந்தன என்பதை எண்ணிப் பாருங்கள். அக்காலத்தில் உலகில் வாழ்ந்த மற்ற சமுதாயங்களை விட, எந்த அளவிற்கு மேன்மை பெற்று திகழ்ந்தீர்கள் என்பதையும் நினைவு கூருங்கள்.
ஆனால் இப்போதோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டீர்கள். இதனால் சமூக சீர்கேடுகள் அதிகமாகி விட்டன. இனி இறைவனின் வழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன்படி சட்ட ஒழுங்கு இவ்வாறு இருக்கும்.


وَٱتَّقُوا۟ يَوْمًۭا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍۢ شَيْـًۭٔا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَٰعَةٌۭ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌۭ وَلَا هُمْ يُنصَرُونَ.

2:48. இனி வரும் ஆட்சி காலத்தில் அவரவர் செய்யும் செயல்களின் பலனை அவர்களே அனுபவித்துக் கொள்ள வேண்டிவரும். குற்றவாளிகளுக்கு சிறிதளவும் எவரும் ஆதரிக்கவும் மாட்டார்கள். அப்படி ஒரு நிலைமை உருவாகும் என்பதை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அப்போது எந்த குற்றவாளிக்கும் சாதகமாக யாரும் பரிந்து பேசவும் முடியாது. அப்படி ஒரு பரிந்துரை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. ஒருவர் செய்யும் செயலுக்குப் பிறிதொருவர் பொறுப்பு ஏற்பதும் செல்லாது. அதற்காக லஞ்சமும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்களுக்கு யாருடைய உதவியும் கிடைக்காது.
இதே நிலை தனி நபருக்கும் மரணத்திற்குப் பின்பு தொடரும். வரலாற்று நிகழ்ச்சியின் மற்றொரு ஆதாரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.


وَإِذْ نَجَّيْنَٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ.

2:49. ஃபிர்அவ்னின் ஆட்சி காலத்தில் நீங்கள் எந்த அளவிற்கு வேதனைகளை அனுபவித்து வந்தீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். மூஸா நபி மூலம் இறைவனின் வழிகாட்டுதல் கிடைத்து அங்கிருந்து நீங்கள் எவ்வாறு விடுதலைப் பெற்றீர்கள் என்பதைப் பற்றியும் நினைவு கூருங்கள். ஃபிர்அவுனின் ஆட்சியாளர்கள் உங்களில் இருந்த வீரம் மிக்க ஆண்களைக் கொன்று குவித்து, கோழைகளை வாழ விட்டார்கள். (பார்க்க 7:127 & 14:6) இறைவனின் அறிவுரைகளைப் புறக்கணித்து வாழ்ந்து வந்ததால் உங்களுக்கு இத்தகைய இழிநிலை ஏற்பட்டு இருந்தது.


وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ.

2:50.மேலும் இறைவன் மூஸா நபி மூலம் உங்களுக்கு அறிவுறுத்தி, குறித்த நேரத்தில் உங்களை நதியைக் கடக்கச் செய்ததும், உங்களைப் பின்தொடர்ந்த ஃபிர்அவ்னும் அவனது படைவீரர்களும் உங்கள் கண்ணெதிரே அதே நதியில் மூழ்கிப் போன நிகழ்ச்சியும் உங்களுக்குத் தெரியும். இப்படியாக நீங்கள் காப்பாற்றப் பட்டீர்கள் அல்லவா?
இந்த நிகழ்வின் விளக்கத்தை 7:136இல் பார்க்க


وَإِذْ وَٰعَدْنَا مُوسَىٰٓ أَرْبَعِينَ لَيْلَةًۭ ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَٰلِمُونَ.

2:51. மேலும் இறைவழிகாட்டுதல் பெறுவதற்கு, நாற்பது இரவுகளுக்காக வரும்படி மூஸா நபிக்கு கட்டளை வந்தது. அவர் சென்றிருந்த அந்த இடைவெளியில் நீங்கள் ஒரு காளைக் கன்றைத் தெய்வ வழிபாட்டிற்காக எடுத்துக் கொண்டீர்கள். இப்படியாக நீங்கள் வழி பிசகியவர்களாக ஆகிவிட்டீர்கள். (20:77)


ثُمَّ عَفَوْنَا عَنكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

2:52. இதன் பின்னரும், உங்கள் பிழைகளைச் பெரிதுபடுத்தாமல் நீங்கள் நன்றி விசுவாசத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே மூஸா நபி மூலம் வழிகாட்டுதலை அளித்து, உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தோம்.


وَإِذْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَٱلْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ.

2:53. நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, நாம் மூஸா நபி மூலமாக நன்மை தீமை ஆகியவற்றைப் பிரித்து அறிவிக்கும் நிலைமாறா நிரந்தர சட்ட விதிமுறைகள் கொண்ட வேதத்தை அளித்தோம்.


وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلْعِجْلَ فَتُوبُوٓا۟ إِلَىٰ بَارِئِكُمْ فَٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

2:54. ஒரு கட்டத்தில் தம் சமூகத்தாரின் பரிதாப நிலையைக் கண்ட மூஸா நபி, “என் சமுதாய மக்களே! நீங்கள் காளைக் கன்றைத் தெய்வ வழிபாட்டிற்காக எடுத்துக் கொண்டது மிகப் பெரிய அக்கிரமச் செயலாகும். ஆகவே இதை விட்டுவிட்டு உங்களைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதலின் பால் திரும்பி விடுங்கள். இறைவனின் செயல்திட்டம் நிறைவேற நீங்கள் உங்களையே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களைப் படைத்தவனிடமிருந்து நற்பலன்களைப் பெற சிறந்த வழியாகும்” என்று கூறினார். அவருடைய அறிவுரையின் படி நீங்கள் செயல்பட்டதால் உங்களுக்கு மீண்டும் உயர்வு கிடைத்தது. திருந்தி வாழ முன் வருபவர்களுக்கே அல்லாஹ்வின் புறத்திலிருந்து மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாகும். எனவே இப்போதும் இந்த வழிகாட்டுதலின் பக்கம் வாருங்கள்.
இது மட்டுமின்றி வரலாற்றின் இன்னொரு சம்பவத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


وَإِذْ قُلْتُمْ يَٰمُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهْرَةًۭ فَأَخَذَتْكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ.

2:55. நீங்கள் மூஸா நபியிடம், “நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாகக் காணும் வரையில் உம் பேச்சை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று பிடிவாதமாக இருந்தீர்கள். உங்கள் கோரிக்கையின் படி குறித்த நேரத்தில் அல்லாஹ்வைப் பார்க்க ஒன்று கூடிய போது, உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக் கொண்டது. இடி முழக்க சத்தத்தையே கேட்க இயலாத உங்களால் எல்லை இல்லா வல்லவனை எங்ஙனம் காண்பது? (பார்க்க 7:155)


ثُمَّ بَعَثْنَٰكُم مِّنۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

2:56. இப்படியாக சிந்தனையற்று நடைபிணமாக வாழ்ந்து வந்த உங்களுக்கு மூஸா நபி மூலம் வழிகாட்டுதல்களை அளித்து, மீண்டும் உயிரோட்டமுள்ள வாழ்வைப் பெற்று நன்றி உள்ளவர்களாய் வாழ வழி செய்தோம்.


وَظَلَّلْنَا عَلَيْكُمُ ٱلْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

2:57. மேலும் நீங்கள் வாழ்ந்த இடம் நீர்வளம் மிக்க பிரதேசமாக இருந்தது. அதனால் தாராளமான வாழ்வாதாரங்களும் எல்லா வகையான உணவு வகைகளும் தேவைக்கு அதிகமாகவே கிடைத்திருந்தன. இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்பட்ட உணவு வகைகளில் பரிசுத்தமான, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவற்றை அனைவரும் உண்டு மகிழுங்கள் என்று அறிவறுத்தினோம். எனினும் காலப் போக்கில் நம் அறிவுரைகளுக்கு மாறு செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். இதனால் நமக்கு எந்த தீங்கும் செய்துவிடவில்லை. மாறாக உங்களை நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள்.


وَإِذْ قُلْنَا ٱدْخُلُوا۟ هَٰذِهِ ٱلْقَرْيَةَ فَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًۭا وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا وَقُولُوا۟ حِطَّةٌۭ نَّغْفِرْ لَكُمْ خَطَٰيَٰكُمْ ۚ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ.

2:58. மேலும் ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற நீங்கள், வளம் மிக்க பிரதேசத்தில் நுழைந்த போது, “அங்கு கிடைக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் உங்கள் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தோம். ஆனால் “உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம் வழிகாட்டுதலுக்கு மட்டுமே தலைவணங்கி நடக்க வேண்டும். அப்போது தான் அடிமை வாழ்வில் ஏற்பட்ட தீய பழக்க வழக்கங்கள் நீங்கி, பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிகள் பிறக்கும்” என்று அறிவுறுத்தினோம். அந்த அறிவுரைகளின் படி ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைத் தொடர்ந்து செய்திருந்தால் மென்மேலும் உயர்வு கிடைத்திருக்கும்.


فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.

2:59. ஆனால் அவர்களோ காலப்போக்கில் நம் வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவந்து அக்கிரமக்காரர்களாக மாறிவிட்டார்கள். அல்லாஹ் சொல்லாத விஷயங்களை எல்லாம் அல்லாஹ் சொன்னதாகக் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படியாக அவர்கள் தொடர்ந்து அநியாயம் செய்து வந்ததால், அவர்களுக்கு வானுலக சட்டங்களின்படி வேதனைகள் வந்தடைந்தன.
சிந்தனையாளர்களே! வரலாற்றின் இந்தத் தொகுப்புகள் பனீஇஸ்ராயில் சமூகத்தவருக்கோ அல்லது கிறிஸ்தவ சமூகத்தவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும், நமக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இறை வழிகாட்டுதல் எல்லாக் கால கட்டத்திற்கும் எல்லா தரப்பு மக்களுக்கும் பொருந்தும். தற்போதைய முஸ்லிம்களுக்கும் இந்த உபதேசங்கள் பொருந்தும். குர்ஆனுக்கு முரணான விஷயங்களை தவிர்க்க வேண்டியது தலையாய கடமையாகும். வரலாற்றின் இன்னொரு தொகுப்பும் கொடுக்கப்படுகிறது. இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


۞ وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ.

2:60. ஒரு கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தம் சமூகத்தாருக்காக மூஸா நபி தண்ணீர் வேண்டிய போது, கற்பாறைக்குள் நீர் ஊற்று இருப்பது நம் நியதிப்படி அவருக்குத் தெரிய வந்தது. அதன்படி கற்பாறைகளை அகற்றி கிணறுகளைத் தோண்டி எடுத்தனர். இப்படியாக அவர்களுக்கு பன்னிரண்டு நீரூற்றுகள் கிடைத்தன. அவற்றில் ஒவ்வொன்றையும் அடையாளமிட்டு, ஒவ்வொரு பகுதி மக்களும் பயன்படுத்திக் கொள்ள வழி செய்தோம். அவர்களும் அவற்றை நன்கு அறிந்து, பயன்படுத்திக் கொண்டனர். இப்படியாக அல்லாஹ் அருளிய வாழ்வாதாரங்களை நன்றாகப் பயன்படுத்தி சிறப்பாக வாழுங்கள் என்றும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி குழப்பங்களை உண்டாக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தினோம். (பார்க்க 7:160)


وَإِذْ قُلْتُمْ يَٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍۢ وَٰحِدٍۢ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ۚ ٱهْبِطُوا۟ مِصْرًۭا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُو بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّۦنَ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ.

2:61. ஆனால் இறைவழிகாட்டுதலின்படி சிறந்த செயல் வீரர்களாக வாழ்வதற்குப் பதிலாக, உணவு விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து விட்டீர்கள். இதனால் மூஸா நபியிடம், “ஒரே விதமான உணவை அருந்தி சலிப்பு தட்டிவிட்டது. ஆதலால் நிலத்தில் விளையும் கீரை வகைகளும், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும், கோதுமை, பருப்பு போன்ற தானிய வகைகளும், வெங்காயம் போன்ற சுவைமிக்க உணவுகளும் கிடைக்க வழி செய்து தாருங்கள்” என்று கூற ஆரம்பித்து விட்டீர்கள்.
அதற்கு மூஸா நபி, “வாழ்வில் உயர்நிலை பெற சிறந்த இராணுவ பயிற்சி அளிப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன். ஆனால் நீங்களோ அற்பமான விஷயத்தில் அக்கறை காட்டுகிறீர்கள். அதுவே உங்கள் நோக்கம் என்றால் அருகில் உள்ள ஊருக்குச் சென்று அங்கு வாழ்ந்து கொள்ளுங்கள். அங்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும்” என்றார்.
அவ்வாறே அவர்களில் சிலர் சென்று விட்டனர். இதனால் அவர்களுக்கு பயிற்சியில் கிடைத்த சிறப்பும், செயல் வேகமும் குறைந்து வறுமையும், கேவலமும், இழிவுமே பீடித்துக் கொண்டன. இப்படியாக அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் இழந்து விட்டார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்ததோடு நபியின் அறிவுரைகளையும் துச்சமாக எண்ணி, அங்கிருந்து போய்விட்டதே ஆகும். இப்படியாக அவர்கள் வரம்பு மீறிய செயல்களைச் செய்து வந்ததால், இழிவும் வறுமையும் கேவலமும் அவர்களைப் பிடித்துக்கொண்டன.
இப்போதோ அவர்கள் இஸ்ரவேலர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு, அவர்கள்தாம் சுவர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். (2:94) உண்மை அதுவல்ல.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:62. ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், மதச் சடங்குகளைப் பின்பற்றாதவர்கள் என எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரியே, யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கேற்ற பின்விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று, சிறப்பான ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி அதன்படி உழைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நற்பலன்கள் கிடைப்பது உறுதி. மேலும் அவர்களுக்கு எவ்வித பயமோ துக்கமோ இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். இதுவே அல்லாஹ்வின் நிரந்தர சட்டமாகும். (மேலும் பார்க்க 5:69)
எனவே நீங்கள் எந்தச் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதே முக்கியமானதாகும். (மேலும் பார்க்க 2:137,4:136)


وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ.

2:63. இதே அடிப்படையில் அக்கால சமுதாயத்தினரிடமும், நபிமார்கள் மூலம் வாக்குறுதி வாங்கிக் கொண்டோம். “தூர்” என்னும் உயரமான மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த உங்களிடமும் அவ்வாறே அந்த வாக்குமூலம் இருந்தது. “அல்லாஹ் உங்களுக்கு நபியின் மூலம் அளித்த வேத அறிவுரைகளை உறுதியாகக் கடைப்பிடித்து வாருங்கள். அதிலுள்ளவற்றை எப்போதும் நினைவில் கொண்டு அதன்படி செயலாற்றுங்கள். அவ்வாறு செயல்பட்டு வந்தால், உங்களுக்குப் பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைக்கும்” என்பதுதான் அந்த வாக்குமூல ஒப்பந்தமாகும்.


ثُمَّ تَوَلَّيْتُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۖ فَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلْخَٰسِرِينَ.

2:64. ஆனால் நீங்களோ, சில காலம் வரையில் அதன்படி வாழ்ந்து விட்டு, அதன்பின் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணித்து விட்டீர்கள். உங்களுடைய செயல்களுக்கு உடனுக்குடன் உங்களைத் தண்டிக்காமல், நீங்கள் திருந்தி வாழ காலத் தவணை அளிப்பது என்ற அல்லாஹ்வின் கிருபையும் அருளும் இல்லாதிருந்தால், நீங்கள் முற்றிலும் நஷ்டவாளிகளாய் ஆகியிருப்பீர்கள். (பார்க்க 16:61)
மேலும் சட்ட ஒழுங்கு என்பது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமையாகும். யார் அதை விட்டுத் தவறிப் போனாலும் சீர்கேடுகள் தான் ஏற்படும். அதுபோல மீனவ இனத்திலும் சட்ட ஒழுங்கு இருந்து வந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.


وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ.

2:65. வருடத்தில் சில நாட்கள் மீன் பிடிக்கத் தடை உத்தரவு இருந்து வந்தது. அந்தத் தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக மீறி நடக்கவே, அவர்களிடையே காலப் போக்கில் சண்டை, போட்டி, பொறாமையும் வளர்ந்து, குரங்குகள் போன்ற கீழ்தர குணங்களுடன் சிறுமை அடைந்தோராய் மாறிப் போனார்கள். வரலாற்றின் இந்த உண்மை உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதுவும் அல்லாஹ்வின் நிலையான சட்டங்களில் ஒன்றாகும். (மேலும் பார்க்க 5:60,7:163-167)


فَجَعَلْنَٰهَا نَكَٰلًۭا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ.

2:66. வரலாற்றின் இந்தத் தொகுப்புகளை உங்களுக்கு அளிப்பதன் நோக்கமே அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும், பிற்காலத்தில் வரக்கூடிய மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதேயாகும். எனவே இக்காலத்தில் வாழும் மக்கள் இதை நன்கு உணர்ந்து அவ்வாறு நடக்காதவாறு சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும். இறையச்சத்துடன் இலட்சிய வாழ்வை வாழ நாடுபவர்களுக்கே இந்த அறிவுரைகள் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்காக வீணான சடங்கு சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் நீக்கி, சமுதாயத்தைச் சீர்திருத்துவது அவசியமான ஒன்றாகும். இது ஒரு சாதாரண காரியம் அல்ல. இதற்காகப் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். வரலாற்றின் இன்னொரு நிகழ்ச்சியும் இதற்குச் சான்றாக உள்ளது.


وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًۭا ۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ.

2:67. மூஸா நபி தம் சமூகத்தாரிடம், “ஒரு பசுமாட்டை அறுக்குமாறு அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்துள்ளது” என்று சொன்னபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தவர்களாக, “நீர் எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். அப்போது அவர், “நான் எப்படி உங்களைப் பரிகாசிக்க முடியும்? அப்படிப்பட்ட அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவேனா? அப்படி ஒரு நிலை எனக்கு ஏற்படாமல் இருக்க, நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று கூறினார்.


قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ لَّا فَارِضٌۭ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ ۖ فَٱفْعَلُوا۟ مَا تُؤْمَرُونَ.

2:68. அந்தக் கட்டளையை நிறைவேற்ற விரும்பாமல், “அது எத்தகையது என்று உம் இறைவனிடம் கேட்டு விளக்கம் அளிப்பீராக” என்று கேட்டனர். அப்பசுமாடு அதிகக் கிழடும் அல்ல கன்றும் அல்ல. அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற இறைவன் கூறுவதாகவும் மூஸா நபி கூறினார்.


قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ صَفْرَآءُ فَاقِعٌۭ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ.

2:69. “அதன் நிறம் யாது என்று விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக” என்று அக்கட்டளையை தட்டிக்கழிக்க அவர்கள் மீண்டும் கேட்டனர். “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசுமாடு. பார்ப்பவர்களுக்குப் பளிச்சென்று பரவசமூட்டும் மஞ்சள் நிறமுடைய மாடு” என இறைவன் கூறுவதாக மூஸா நபி கூறினார்.


قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ إِنَّ ٱلْبَقَرَ تَشَٰبَهَ عَلَيْنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهْتَدُونَ.

2:70. இதன் பின்பும் அவர்கள் தம் பிடிவாதத்தை விட்டுவிடுவதாக இல்லை. “நீர் எங்களுக்காக இறைவனிடம் வேண்டுவீராக. அது எப்படிப்பட்டது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவு படுத்துவான். ஏனெனில் எங்களுக்கு எல்லா பசுமாடுகளும் ஒரே மாதிரியாகத் தான் தோன்றுகின்றன. அல்லாஹ்வின் நாட்டப்படி நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்றனர்.


قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ لَّا ذَلُولٌۭ تُثِيرُ ٱلْأَرْضَ وَلَا تَسْقِى ٱلْحَرْثَ مُسَلَّمَةٌۭ لَّا شِيَةَ فِيهَا ۚ قَالُوا۟ ٱلْـَٰٔنَ جِئْتَ بِٱلْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا۟ يَفْعَلُونَ.

2:71. அதற்கு மூஸா நபி, நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நீர் பாய்ச்சவோ பயன்படுத்தாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுவதாகப் பதிலளித்தார். “இப்போது தான் நீர் சரியான விவரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் அதை நிறைவேற்ற சற்றும் விருப்பமில்லாத நிலையில் வேண்டா வெறுப்பாக அப்பசுமாட்டை அறுத்தார்கள்.
சமுதாயத்திலுள்ள தேவையற்றச் சடங்குகளை நீக்குவதில் இப்படிப்பட்ட சிக்கல்கள் இன்றைக்கும் உண்டு. அந்தச் சடங்குகள் தேவையற்றதாக இருக்கும். அதை விட்டுவிட அறிவுறுத்தும் போது, ஆயிரமாயிரம் தர்க்கங்கள் செய்வார்கள். அதற்கு மூஸா நபியின் இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.


وَإِذْ قَتَلْتُمْ نَفْسًۭا فَٱدَّٰرَْٰٔتُمْ فِيهَا ۖ وَٱللَّهُ مُخْرِجٌۭ مَّا كُنتُمْ تَكْتُمُونَ.

2:72. அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு நபரை கொன்று விட்டீர்கள். அதன்பின் அக்கொலைக் குற்றத்தை மறைக்க, பழியை ஒருவர் மற்றவர் மீது சுமத்தி தப்பிக்கவும் முயன்றீர்கள். ஆனால் கொலையாளி யார் என்ற உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது.


فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْىِ ٱللَّهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.

2:73. எனவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி அக்கொலைச் சம்பவத்தின் பின்னணியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரிக்க வழி செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பின், அக்கொலையைப் பற்றிய துப்புத் துலங்கியது. இப்படியாக மறைந்து கிடந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. நீங்கள் அறிவு பெறும் பொருட்டு இம்மாதிரியான சம்பவங்களின் ஆதாரங்கள் தரப்படுகின்றன.
பசுமாட்டை அறுக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து கொலைச் சம்பவத்தைப் பற்றி குர்ஆன் பேசுவதால், அவ்விரண்டையும் இணைத்து பலர் அர்த்தம் கொள்கிறார்கள். இதனால் பசுமாட்டை அறுத்து அதன் கறித் துண்டுகளால் இறந்து போன சடலத்தின் மீது அடிக்கச் சொன்னதாகவும், அப்போது கொலையுண்டவன் உயிர் பெற்றுவிடுவான் என்றும் பொருள் கொள்கிறார்கள். அதாவது அவர்கள் பசுவை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருவதால், அதன் கறித் துண்டைக் கொண்டு சடலத்தின் மீது அடிக்கச் சொல்லும்போது, கொலை செய்தவன் பயத்தால் நடுங்குவதை உணர்ந்து கொலையாளி யார் என்ற உண்மையை கண்டுபிடித்து விடலாம். இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.
ஆனால் நடைமுறை உலகில் (சுன்னதல்லாஹ்வில்) இப்படி எங்கும் நடப்பதில்லை. எனவே தனித்தனியே விசாரணை மேற்கொள்ளும்படியும் அப்போது கொலையுண்டவனின் பிரேதத்தை ஆய்வு (Postmortem) செய்வதை கொண்டு, செத்து கிடந்த உண்மை உயிர் பெற்று வெளிச்சத்திற்கு வந்து விடும் என்றும் பொருள் தந்துள்ளோம்.


ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ فَهِىَ كَٱلْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةًۭ ۚ وَإِنَّ مِنَ ٱلْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ ٱلْأَنْهَٰرُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ ٱلْمَآءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.

2:74. இப்படியாக நம் வழிகாட்டுதல்கள் கிடைத்து சிறப்பாக வாழ்ந்து வந்த நீங்கள், காலம் செல்லச் செல்ல கல் நெஞ்சக்காரர்களாய் மாறி விட்டீர்கள். இன்னும் சொல்லப் போனால் உங்கள் மனம் பாறையை விட அதிகமாக இறுகிவிட்டது. ஏனெனில் அப்பாறைகளில் சில, உருகி ஆறுகளாக ஒலித்து ஓடுவதுண்டு. இன்னும் சில, பிளவுபட்டு அவற்றினின்று நீர் கசிவதுமுண்டு. மேலும் அல்லாஹ்வின் நியதிப்படி அப்பாறைகளில் சில உருண்டு விழவும் செய்கின்றன. ஆனால் உங்கள் மனோ நிலைமையோ அதைவிட மோசம். நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்து வருவது பற்றி அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.


۞ أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌۭ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ.

2:75. சிந்தனையாளர்களே! இப்படிப்பட்ட இவர்கள், இறைவழிகாட்டுதலை ஏற்று, உங்களோடு வந்து இணைவார்கள் என்று எதிர் பார்க்கின்றீர்களா? இவர்களில் உள்ள மத குருமார்கள் அல்லாஹ்வின் வாக்கை நன்கு விளங்கிக் கொண்டே, அதில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.


وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ قَالُوٓا۟ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمْ ۚ أَفَلَا تَعْقِلُونَ.

2:76. எனவேதான் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, தாமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கு சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தனியே சந்தித்துக் கொள்ளும் போது, “நீங்கள் அவர்களிடம் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நமக்கு அறிவித்துத் தந்துள்ள வேத ஆதாரங்களையே நமக்கு எதிராக எடுத்துரைத்து நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள். எனவே நம் வேத விஷயங்களை அவர்கள் முன் எடுத்துரைக்காதீர்கள். இதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்துக் கொள்கிறார்கள்.


أَوَلَا يَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ.

2:77. ஆனால் அவர்கள் செய்து வருவதை அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியுமா? அவர்கள் மறைத்து வைப்பதும், வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?


وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ ٱلْكِتَٰبَ إِلَّآ أَمَانِىَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ.

2:78. மேலும் அவர்களிலுள்ள பாமர மக்களிடம், வெறும் கட்டுக் கதைகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களிடம் சொல்லி வருவதெல்லாம் வெறும் கற்பனையே அன்றி வேறெதுவும் இல்லை.


فَوَيْلٌۭ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ ٱللَّهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًۭا ۖ فَوَيْلٌۭ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌۭ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ.

2:79. அது மட்டுமல்ல. அவர்கள் தாமே புத்தகங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவை யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று சொல்லி, அதிலிருந்து சிறிது ஆதாயங்களைத் தேடிக் கொள்கின்றனர். இவ்வாறு எழுதுபவர்களுக்கும் அதை விற்று பணம் காசு சம்பாதிப்பவர்களுக்கும் மிகவும் கேடுதான்.


وَقَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًۭا مَّعْدُودَةًۭ ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّهِ عَهْدًۭا فَلَن يُخْلِفَ ٱللَّهُ عَهْدَهُۥٓ ۖ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.

2:80. அப்படிப்பட்ட கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்று. அதாவது “ஒரு சில நாட்களைத் தவிர நாங்கள் நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை. அதன்பின் நாங்கள சுவர்க்கத்திற்குச் சென்று விடுவோம்” என்று பேசி வருகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது வாக்குறுதி வந்துள்ளதா?” என்று அவர்களை கேளுங்கள். “உண்மையிலேயே அப்படி ஒரு வாக்குறுதி வந்திருந்தால் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


بَلَىٰ مَن كَسَبَ سَيِّئَةًۭ وَأَحَٰطَتْ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:81. அல்லாஹ்வின் நிலைமாறா நிரந்தர சட்டம் அவ்வாறு இல்லை. எவர்கள் தீமையைச் சம்பாதித்து அந்தத் தீமைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றனவோ, அத்தகையோர் நரகவாசிகளே. அதில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். நரகத்திலிருந்து சுவனத்திற்கு ஒருபோதும் அனுப்பப்பட மாட்டாது.
தீய செயலில் ஈடுபட்டு வரும் சமுதாயங்களுக்கும் இதே சட்டம் பொருந்தும். ஆனால் தம்மை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு சமுதாயங்களுக்கு இவ்வுலகில் கிடைக்கிறது. தனிநபர் விஷயத்தில் இந்த வாய்ப்பு இவ்வுலகில் மட்டும் கிடைக்கும். மரணத்திற்குப் பின் கிடைக்காது.


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:82. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வாழும் சமூகத்தவர்கள் சுவனவாசிகளே ஆவார்கள். அதில் என்றென்றும் வசிப்பார்கள். தனிநபர் விஷயத்தில் மரணத்திற்குப் பின்பும் இச்சுவன வாழ்வு தொடரும்.


وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَانًۭا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًۭا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًۭا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ.

2:83. ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்கள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அதே அடிப்படையில் தான் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரிடமும் வாக்குறுதி வாங்கப்பட்டது. அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறைக்கும் இணங்கி நடக்கக் கூடாது அதையடுத்து பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், சம்பாதிக்க இயலாதவர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றி வரவேண்டும். சமுதாயத்தில் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரும் “ஸலாத்” முறையை நிலைநிறுத்த வேண்டும். சமுதாய மேம்பாட்டிற்காக இறையாட்சி தீட்டும் திட்டங்களுக்கு ஆதரவாக, தாராளமாகப் பொருளுதவியும் செய்து வர வேண்டும் என்று அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவற்றை எல்லாம் நிறைவேற்றாமல் திசைமாறிப் போய் விட்டீர்கள். உங்களில் சிலர் தாம் அவற்றைக் கடைப்பிடித்தீர்கள். இப்போதும் அந்த வாக்குறுதிகளை உங்களில் பெரும்பாலோர் புறக்கணிப்பவர்களாகவே இருக்கிறீர்கள்.


وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ.

2:84. மேலும், “உங்களிடையே கொலை, கொள்ளை போன்ற இரத்தம் சிந்தும் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நலிந்த மக்களை அநியாயமாக அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” என்றும் உறுதிமொழி வாங்கிக் கொள்ளப்பட்டது. நீங்கள் அனைவரும் அவ்வாறே நடந்து கொள்வதாக ஒப்புதலும் அளித்தீர்கள். அதற்கு நீங்களே சாட்சியாளர்களாக இருக்கின்றீர்கள்.


ثُمَّ أَنتُمْ هَٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًۭا مِّنكُم مِّن دِيَٰرِهِمْ تَظَٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَإِن يَأْتُوكُمْ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ ۚ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍۢ ۚ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.

2:85. இருந்தும் என்ன பயன்? இப்போது உங்களிடையே நடப்பது என்ன? உங்களிடையே கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. நலிந்தோரை அவர்களின் வீட்டைவிட்டு வெளியேற்றவும் செய்கிறீர்கள். மக்கள் விரோத செயலில் ஈடுபடும் அக்கிரமக் காரர்களுக்கு, நீங்கள் மறைமுகமாக உதவியும் செய்து வருகிறீர்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடம் உதவியை நாடி வந்தால், பெரிய புண்ணியம் செய்வதாகக் கருதி கொஞ்சம் ஈட்டுத் தொகைக் கொடுத்து விடுகிறீர்கள். ஆனால் வீட்டைவிட்டு வெளியேற்றுவது தடை செய்யப்பட்ட கட்டளை ஆயிற்றே. அதைப் பற்றி சிந்திப்பதில்லையே. ஆக இறை வழிகாட்டுதல்களில் சிலவற்றை ஏற்று நடக்கிறீர்கள். மற்றதை விட்டு விடுகிறீர்கள். எனவே இவ்வாறு செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மரணத்திற்குப் பிறகும் இழிவைத் தவிர வேறு எதுவும் கிடைக்காதே. இவர்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், மிகக் கடுமையான வேதனைகளில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து தப்பவே முடியாது. காரணம். அல்லாஹ்வின் சட்டம் நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا بِٱلْءَاخِرَةِ ۖ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ.

2:86. இவர்கள்தாம் வருங்கால நிலையான நன்மைகளைக் கொண்ட வாழ்விற்குப் பதிலாக, தற்காலிக சொகுசு வாழ்வை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். ஆகவே இவர்களுக்குக் கிடைக்கும் வேதனைகள் இலேசாக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு யாரும் எவ்வித உதவியும் செய்ய முடியாது.
இறைவழிகாட்டுதல் என்பது இன்றைக்கு மட்டுமே தரப்படும் ஒரு நூதன விஷயமல்ல. காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழிமுறையே அகும். ஆக அந்த வரிசையில்


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ ۖ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَٰتِ وَأَيَّدْنَٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ فَفَرِيقًۭا كَذَّبْتُمْ وَفَرِيقًۭا تَقْتُلُونَ.

2:87. மூஸா நபிக்கும் நாம் வேதத்தைக் கொடுத்தோம். அதன்பின் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பினோம். இன்னும் மர்யமின் குமாரர் ஈஸாவுக்கும் எவ்வித குறைபாடும் இல்லாத தெளிவான சட்டதிட்டங்கள் அடங்கிய வழிகாட்டுதலை அளித்து அவருக்கு வலுவூட்டினோம். ஆனால் இறைத்தூதர்கள் கொண்டு வந்த செயல் திட்டங்கள், உங்களுடைய சுயநலப் போக்கிற்குப் பாதகமாக இருந்தன. எனவே அவற்றைக் ஆணவத்துடன் புறக்கணித்தும், பொய்ப்பித்தும் வந்தீர்கள். அது மட்டுமின்றி இறைத்தூதர்களில் சிலரைக் கொல்லவும் முயன்றீர்கள்.


وَقَالُوا۟ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًۭا مَّا يُؤْمِنُونَ.

2:88. இப்போதும், நாங்கள் செய்து வருவதே மிகச் சரியானவை என்று உங்களுடைய இதயங்களைப் பூட்டு போட்டுக் கொண்டீர்கள். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து முறையற்ற செயல்களைச் செய்து வருவதால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து தவிக்கவேண்டி வருமே. இதைப் பற்றி சிலரைத் தவிர பெரும்பாலோர் சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லையே!


وَلَمَّا جَآءَهُمْ كِتَٰبٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌۭ لِّمَا مَعَهُمْ وَكَانُوا۟ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُوا۟ كَفَرُوا۟ بِهِۦ ۚ فَلَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلْكَٰفِرِينَ.

2:89. இந்த இறை வேதமான குர்ஆன் அவர்களிடமுள்ள இறைவேதங்களின் உண்மை விஷயங்களை எடுத்துரைக்கவே வந்துள்ளது. சமூக விரோத சக்திகளை முறியடிக்க ஒரு வல்லவர் வரவேண்டும் என்று இதற்குமுன் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்படி ஒருவர் வருவார் என்ற விஷயமும் அவர்களுக்குத் தெரிந்தும் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு வழிகாட்டி வந்துள்ள போது, அவரை எதிர்த்து நிற்கிறார்கள். இப்படி இறை வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவோர், அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து தவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.


بِئْسَمَا ٱشْتَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضْلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍۢ ۚ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌۭ مُّهِينٌۭ.

2:90. அவ்வாறு அவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? “வஹீ” எனும் இறைவழிகாட்டுதல்கள் யாவும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஆகும். அவை தம் சமுதாயத்தைச் சேராத ஒருவருக்கு அல்லாஹ் அளித்து விட்டதாகப் காழ்ப்புணர்ச்சி கொண்டு, அல்லாஹ்வின் அறிவுரைகளையே புறந்தள்ளி விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்து, தம் ஒழுக்க மாண்புகளையே இழந்து விடுகிறார்கள். இவர்கள் செய்துகொண்ட இந்தக் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டமானது என்பதை சிந்திப்பதில்லை. இப்படியாக அவர்கள் பொதுமக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் அளாகிவிடுகிறார்கள். அதனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரிப்போருக்கு இழிவான வேதனைகள் கிடைக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
எனவே யார் மீது இறைவழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுகின்றன என்பதைப் பார்க்காமல், என்ன வழிமுறைகள் அளிக்கப்படுகின்றன என்பதைக் கவனித்தால் பலன்கள் கிடைக்கும்.


وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ نُؤْمِنُ بِمَآ أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلْحَقُّ مُصَدِّقًۭا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

2:91. அதனால் அவர்களிடம், “அல்லாஹ் இறக்கி அருளிய இந்த வேதத்தை ஏற்று அதன்படி செயலாற்றுங்கள்” என்று சொன்னால், “எங்கள் மீது இறக்கி அருளப்பட்டதையே பின்பற்றுவோம். அதற்குப் பின் வந்துள்ள வேதத்தை ஏற்க மாட்டோம்” என்று மறுக்கிறார்கள். “இந்த இறை வேதமான குர்ஆனோ அவர்களிடம் உள்ள வேத விஷயங்களை நடைமுறைப் படுத்தி, உண்மைப்படுத்திக் காட்டவே வந்துள்ளது. நீங்கள் உண்மையிலேயே உங்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்திருந்தால் இதற்கு முன் வந்த நபிமார்களைக் கொல்வதிலேயே குறியாய் இருந்தீர்களே! அது ஏன்? அப்படி ஒரு கட்டளை உங்கள் வேதங்களில் உள்ளதா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


۞ وَلَقَدْ جَآءَكُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَٰلِمُونَ.

2:92. நீங்கள் அனைவரும் நேர்வழி பெற மூஸா நபி தெளிவான, ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தார். ஆனால் நீங்கள் செய்வது என்ன? அவருடைய மறைவுக்குப் பின், காளைக் கன்றை தெய்வமாக எடுத்துக்கொண்டீர்கள். இப்படி செய்தது நியாயமான செயலா? அப்படிச் செய்துகொள்ள உங்கள் வேதம் அனுமதி அளித்துள்ளதா?


وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍۢ وَٱسْمَعُوا۟ ۖ قَالُوا۟ سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْعِجْلَ بِكُفْرِهِمْ ۚ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

2:93. “தூர்” என்னும் உயரமான மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த உங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்த வாக்குமூலம் என்ன? “மூஸா நபி மூலம் உங்களுக்கு நாம் அருளிய தவ்ராத் என்னும் வேதத்தை உறுதியுடன் பின்பற்றி வாருங்கள். அதைச் செவியேற்று என்றென்றைக்கும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றுதானே வாக்குறுதி வாங்கினோம்? ஆனால் நீங்கள் செய்வதைப் பார்த்தால் “ஏதோ அவற்றைச் செவி ஏற்றோம், அதற்கு மாறு செய்தோம்” என்பது போலத் தானே உள்ளது? “இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டுதன் விளைவாக உங்கள் மனதில் காளைக் கன்றின் மீது பக்தி வளர ஆரம்பித்து விட்டது. உண்மையிலேயே இறை வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்களாக இருந்திருந்தால், நீங்கள் செய்து வருவது எவ்வளவு பெரிய தவறானச் செயல் என்பதை உணர்ந்து இருப்பீர்கள் இதுதான் நீங்கள் இறைவேதத்தைப் பின்பற்றும் லட்சணமா?”என்று அவர்களுக்கு எடுத்துரைத்து விளக்குங்கள்.
இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களும், இந்த இறைவேதமான குர்ஆனை விட்டுவிட்டதால் அவர்களிடம் இஸ்லாத்திற்கு நேர் மாற்றமான தர்கா வழிபாடு போன்றவற்றில் பக்தி வளர்ந்துள்ளது. இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு அழிந்து போகிறார்கள்.


قُلْ إِن كَانَتْ لَكُمُ ٱلدَّارُ ٱلْءَاخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةًۭ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

2:94. இது மட்டுமா? அவர்கள் பாமர மக்களிடம் கூறி வரும் கட்டுக்கதைகளில் ஒன்று, “இறைவனிடத்தில் மறுமையின் வீடான சுவர்க்கம் எங்களுக்கு மட்டுமே சொந்தம். அது மற்றவர்களுக்குக் கிடைக்காது” என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். “நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், எதற்கு வீணாக உயிர் வாழ்கிறீர்கள்? மரணத்தை விரும்பி சாகவேண்டியது தானே?” என்று அவர்களிடம் சொல்லிப் பாருங்கள்.


وَلَن يَتَمَنَّوْهُ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ.

2:95. ஆனால் இப்படி மக்களை ஏமாற்றி சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்கள், ஒருபோதும் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். இவர்கள் எத்தனை காலம் வாழ்ந்தும் என்ன பயன்? இப்படி அக்கிரமம் செய்து வருபவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவா போகிறார்கள்? அதாவது அவர்களுடைய செயல்களுக்கேற்ற தீய விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டுமே!


وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٍۢ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۚ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍۢ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِۦ مِنَ ٱلْعَذَابِ أَن يُعَمَّرَ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ.

2:96. இப்படிப்பட்ட அவர்கள், மரணத்தை விரும்புவது ஒருபக்கம் இருக்கட்டும். அவர்கள் மற்ற சமுதாயத்தவரை விடவும், மனம்போன போக்கில் வாழும் முஷ்ரிக்குகளை விடவும், அதிக சிறப்பாக வாழவேண்டும் என்ற பேராசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் உயிர் வாழவேண்டும் என்ற பேராசையும் இருக்கும். அப்படியும் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ்வதால் ஏற்படும் பலன்தான் என்ன? அவர்கள் செய்து வரும் செயல்கள் எதுவும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியுமா? அதாவது அவர்களுடைய செயல்களுக்கேற்ற தீய விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டுமே!


قُلْ مَن كَانَ عَدُوًّۭا لِّجِبْرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ ٱللَّهِ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًۭى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ.

2:97. அதுமட்டுமல்ல. “வஹீ” என்னும் இறைவழிகாட்டுதலை பனீ இஸ்ராயீல் அல்லாத வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு சமர்ப்பித்து விட்டதாக அல்லாஹ்வின் மீதும், “ஜிப்ரீல்” மீதும் அவர்களுக்குக் கோபம். “ஜிப்ரீல்” என்னும் மலக்கு தன்னிச்சையாக செயல்படும் திறன் கொண்டதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி நபியின் உள்ளத்தில் இறக்கியருளச் செய்யப்பட்ட ஒரு மாபெரும் ஏற்பாடே அன்றி வேறில்லை. இப்படி இறக்கியருளப்படுவது புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்பும் இவ்வாறே இறக்கியருளப்பட்டன. அவற்றை உண்மைப்படுத்தவே இந்த வேதமும் இறக்கியருளப்படுகிறது. இதைப் பின்பற்றிச் செயல்படுவோருக்கு சிறப்பான வாழ்வு கிடைக்கும் என்ற நற்செய்தி அளிப்பதாகவும் அமைந்துள்ளது.


مَن كَانَ عَدُوًّۭا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبْرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوٌّۭ لِّلْكَٰفِرِينَ.

2:98. இப்படியாக அல்லாஹ்வின் மீதும், பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகள் மீதும், இறைத்தூதர் அல்லது இறைச் செய்திகள் மீதும், செய்திகளைச் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளில் ஒன்றான “ஜிப்ரீல்” மீதும், வாழ்வாதார ஏற்பாடுகளாகிய “மீக்கால்” மீதும், கோபப்பட்டு பகையை வளர்த்துக் கொள்வதில் என்ன ஆகிவிடப் போகிறது? இப்படிச் சிந்தனை எதுவுமின்றி எதிர் மறையாகச் செயல்படுவோருக்குத் தான் தீய விளைவுகள் ஏற்படும்.


وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكَ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ ۖ وَمَا يَكْفُرُ بِهَآ إِلَّا ٱلْفَٰسِقُونَ.

2:99. நாம் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும் நபி மூலமாக இறக்கி அருளுகிறோம். உண்மை இவ்வாறிருக்க, குறுக்கு வழியில் வாழ நாடுபவர்களே இதை எற்க மறுப்பார்கள்.


أَوَكُلَّمَا عَٰهَدُوا۟ عَهْدًۭا نَّبَذَهُۥ فَرِيقٌۭ مِّنْهُم ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ.

2:100. இவைதாம் வரலாற்று உண்மைகளாகும். அவர்கள் அல்லாஹ்விடம் நபிகள் மூலமாக உடன்படிக்கை செய்த போதெல்லாம் அவர்களில் சிலர் – முக்கியமாக மதத் தலைவர்கள் அவற்றை முறித்து விடவில்லையா? அதனால் இப்போதும் மக்களில் பலருக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புரிந்து, அதன்படி நடக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது.


وَلَمَّا جَآءَهُمْ رَسُولٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌۭ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌۭ مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ.

2:101. இப்படித்தான் காலம் காலமாக, அவர்களிடம் உள்ள வேதத்தை உண்மைப்படுத்தி சமுதாயத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, வழிநடத்திச் செல்ல அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி நபிமார்கள் வந்தார்கள். அவ்வாறு எடுத்துரைத்த போதெல்லாம் அவர்களில் வேத ஞானம் பெற்ற மத குருமார்கள், அல்லாஹ்வின் வேதத்தை ஏதும் அறியாதவர்களைப் போல், தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
இதுதான் உண்மை வரலாறாகும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நபிமார்கள் மீதும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி வருவதும் அவர்களின் பழக்கமாக இருந்து வந்தது. அந்த வரிசையில் சுலைமான் நபியையும் விட்டு வைக்கவில்லை.


وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَٰنَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُوا۟ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌۭ فَلَا تَكْفُرْ ۖ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ ۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍۢ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

2:102. சுலைமான் நபி காலத்தில் நடத்தி வந்த சிறப்பான ஆட்சியை விரும்பாத சில விஷமிகள், அவருக்கு எதிராகக் கட்டுக் கதைகளைச் சொல்லி வந்தார்கள். அவையே சரியானவை என்று மக்களும் நம்பி, அவற்றைப் பின்பற்றியும் வருகின்றனர். ஆனால் சுலைமான் நபியோ இறைக் கட்டளைக்கு மாறு செய்யவே இல்லை. சமூக விரோதிகள்தாம் இறைக் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் சூனிய வித்தைகள் என்று சொல்லி ஏதோ கற்றுக் கொடுத்தனர். அதன் பின்னணியில் சொல்லப்படும் கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்:
அதாவது பாபிலோன் என்னும் நகரத்தில் “ஹாரூத்” “மாரூத்” என்னும் இரண்டு மலக்குகள் வந்ததாகவும், அவர்கள்தாம் இந்த சூனிய வித்தைகளைக் கற்றுக் கொடுத்ததாகவும் சொல்லி வந்தார்கள். மேலும் அதைக் கற்றுக் கொடுப்பதற்கு முன், “நாங்கள் மிகப் பெரிய சோதனையில் இருக்கிறோம். நீங்கள் சூனியத்தைக் கற்று, நிராகரிப்பவர்களாக ஆகிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்வது போல் ஏக்கத்தை ஏற்படுத்தி விடுவார்களாம். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட எந்த மலக்குகளும் அனுப்பப்படவும் வில்லை. அத்தகைய சூனிய வித்தைகளைக் கற்றுத்தரவும் இல்லை. இது இவர்களே இட்டுக் கட்டிக்கொண்ட கட்டுக் கதையே ஆகும்.
மேலும் அந்த வித்தைகளைக் கற்றுக்கொண்டு கணவன் மனைவிக்கிடையே விரிசலை ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். எனினும் வதந்திகள், வீண்பழி, அவதூறு போன்றவற்றைப் பரப்பி பிரச்சனை ஏதாகிலும் ஏற்படுத்திடலாமே அன்றி, அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டங்களுக்கு எதிராக சூனிய வித்தைகளைக் கொண்டு ஒருபோதும் தீமையோ நன்மையோ செய்திடவே முடியாது. சூனிய வேலை என்பதெல்லாம் ஏமாற்று வித்தைகளே அன்றி எவ்வித தீங்கையும் ஏற்படுத்திடவே முடியாது.
எனவே இதையே பிழைப்பாகக் கொள்பவர்களுக்கு, தம் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வில் எவ்வித நற்பேறும் கிடைக்காது. இந்த உண்மையும் அவர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர்கள் தம் மனித ஒழுக்க மாண்புகளையும் விற்று, சொற்ப ஆதாயங்களைத் தேடிக்கொள்வது மிகவும் தீய செயலே ஆகும். இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?


وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَمَثُوبَةٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ خَيْرٌۭ ۖ لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

2:103. இதையெல்லாம் விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்கி, பாதுகாப்பாக வாழ வழிசெய்து கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் சன்மானங்கள் எவ்வளவு மேலானதாக இருக்கும்? இதனை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
உங்கள் பொது வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقُولُوا۟ رَٰعِنَا وَقُولُوا۟ ٱنظُرْنَا وَٱسْمَعُوا۟ ۗ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌۭ.

2:104. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் சபையில் கோரிக்கை வைக்கும் போது, இரு வேறு அர்த்தங்கள் தரும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். நிபந்தனை இடுவது போலவும் பேசாதீர்கள். உங்கள் தேவைகள் நிறைவேற, “சபையின் கவனத்திற்கு இதை நாம் கொண்டு வருகிறோம்” என்று கனிவோடு கேளுங்கள். இதுவே சபை மரபாகும். இதற்கு மாற்றமாகச் செயல்படுவோருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளட்டும். (மேலும் பார்க்க 4:46)


مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَلَا ٱلْمُشْرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيْكُم مِّنْ خَيْرٍۢ مِّن رَّبِّكُمْ ۗ وَٱللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ.

2:105. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நன்மைகளை அளிக்கும் வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுவது அங்கு வாழும் வேதமுடையவர்கள், இறைவழிகாட்டுதலை எதிர்ப்பவர்கள், மனம் போனபோக்கில் வாழும் முஷ்ரிக்குகள் ஆகியோர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டமோ வேறுவிதமாக உள்ளது. இறைவழிகாட்டுதல்கள் பெறுவதற்கு யார் தகுதியானவரோ அவர் மூலமாகத் தான் வழிகாட்டுதல்கள் இறக்கியருளப்படும். பிறகு யார் அந்த வழிகாட்டுதலைப் பெற நாடுகிறார்களோ, அவர்களுக்குத் தான் இதன் மூலம்தான் நேர்வழி கிடைக்கும். இது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும்.
ஏற்கனவே உள்ள வேதத்தை உண்மைப்படுத்தத் தான் இந்த வேதம் இறக்கி அருளப்படுகிறது என்கிறீர்களே! ஆனால் ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளில் புதிதாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றனவே அது ஏன் என்று ஆட்சேபிக்கிறார்கள்.


۞ مَا نَنسَخْ مِنْ ءَايَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍۢ مِّنْهَآ أَوْ مِثْلِهَآ ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

2:106. அப்படி நம் புறத்திலிருந்து மாற்றங்களைக் கொண்டு வருவதோ, மறதி ஏற்பட்டு மீண்டும் புதிதாக அதைவிட சிறந்த சட்டங்களை கொண்டுவந்து திருத்தங்களைச் செய்வதோ ஒருபோதும் கிடையாது . (பார்க்க 16:101) ஆக எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் பேராற்றல் நிகரற்றதாகும் என்பதை நீங்கள் அறியவில்லையா?
மக்கள் தான் அவற்றைக் கடைப்பிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். அதனால் மீண்டும் பிறப்பிக்கிறோம். இப்படியாக இறைவேத அறிவுரைகள் நிறைவு பெற்றுவிட்டது. (பார்க்க 5:3, 16:115)


أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ.

2:107. அதுமட்டுமின்றி அகிலங்கள் அனைத்திலும், பூமியிலும் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரமே செயல்பட்டு வருவதை நீங்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டால் உங்களுக்கு வேறு எந்த பாதுகாப்போ, உதவியோ ஒருபோதும் கிடைக்காது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
இறைவழிகாட்டுதலின்படி நாம் செயல்படுகிறோமா இல்லையா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். மாறாக ஒரு சமுதாயம் கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியோ அதன் கலாச்சாரத்தைப் பற்றியோ இறைவனின் வழிகாட்டுதல் என்ன சொல்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தால் அது சரியாகாது. அதற்குப் பதிலும் கிடைக்காது. எனவே


أَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ ۗ وَمَن يَتَبَدَّلِ ٱلْكُفْرَ بِٱلْإِيمَٰنِ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ.

2:108. இதற்கு முன்னர் மூஸா நபியிடம் அச்சமுதாயத்தினர் தேவையற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது போல், நீங்களும் இந்த இறைத்தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? அவ்வாறு தேவையற்ற கேள்விகளுக்குப் பதில் வரவில்லை என்றால் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுவீர்களா? யார் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள் யாவரும் திசை மாறிச் சென்றுவிடுவர். (மேலும் பார்க்க 5:102)
அதாவது வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் உலகளாவிய பொது விஷயங்களைப் பற்றி மட்டும் பேசும். பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் சடங்கு சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி பேசாது.


وَدَّ كَثِيرٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَٰنِكُمْ كُفَّارًا حَسَدًۭا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ ۖ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:109. இது போலத்தான் வேதமுடையவர்களின் நிலைமையும் ஆகும். அவர்களில் பெரும்பாலோர் வேத உண்மைகள் அவர்களுக்குத் தெளிவான பின்பும், தங்களிடையே உள்ள போட்டி பொறாமையின் காரணமாக, இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்கு மாற்றமாகவே செயல்பட விரும்புகிறார்கள். எனவே அவர்கள் விஷயமாக அல்லாஹ்வின் கட்டளைகள் வரும் வரை, அவர்களைக் கண்டும் காணாதது போல் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவையே என்பதில் ஐயமில்லை.


ووَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍۢ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.

2:110. எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தீமையை விலக்கி ஒழுக்க மாண்புகளைக் கற்றுத்தரும் (பார்க்க 29:45) “ஸலாத்” முறையை நிலைநிறுத்தி, சமுதாய மேம்பாட்டிற்காக நலத் திட்டங்களைத் தீட்டி, அதற்காக உங்கள் செல்வங்களிலிருந்து தொடர்ந்து கொடுத்து வாருங்கள். நீங்கள் செய்து வரும் எந்த நற்செயலும் வீண்போகாது. அதன் பலன்கள் அல்லாஹ்வின் நியதிப்படி பன்மடங்காகப் பெருகி உங்களிடமே வந்தடையும். (பார்க்க 2:261) ஏனெனில் நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வின் கண்காணிப்பிற்கு வெளியே செல்லவே முடியாது.
ஆனால் சமுதாயத்தில் பேசப்பட்டு வரும் பேச்சுகளைக் கவனித்துப் பாருங்கள். யார் சுவர்க்கவாசிகள் யார் நரகவாசிகள் என வார்த்தை ஜாலங்களில் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த வகையில் அக்காலத்தில் வாழ்ந்த


وَقَالُوا۟ لَن يَدْخُلَ ٱلْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَٰرَىٰ ۗ تِلْكَ أَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

2:111. “யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று பேசி வருகிறார்கள். அதற்கான நேர்வழியும் பெறமாட்டார்கள் என்கிறார்கள் (பார்க்க 2:135) இது அவர்களுடைய வீணான ஆசையே ஆகும். இந்தக் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதற்கான சான்றுகளைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கேளுங்கள்.


بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌۭ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:112. உண்மை அதுவல்ல. எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் சிரம்பணிந்து, ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வருமோ, இறைவனின் நியதிப்படி அவர்களுக்குத் தான் நற்பலன்கள் கிடைத்து வரும். இத்தகையவர்கள் தாம் எவ்வித பயமும் துயரமும் இல்லா சுவனத்திற்கு ஒப்பான வாழ்வைப் பெறுவர். இந்தச் சுவன வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


وَقَالَتِ ٱلْيَهُودُ لَيْسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَىْءٍۢ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيْسَتِ ٱلْيَهُودُ عَلَىٰ شَىْءٍۢ وَهُمْ يَتْلُونَ ٱلْكِتَٰبَ ۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.

2:113. இதுநாள் வரையில் யூதர்களின் கிறிஸ்தவர்களின் நிலை என்னவாக இருந்து வந்தது? கிறிஸ்தவர்கள் நேர்வழியில் இல்லை என்று யூதர்களும், யூதர்கள் சரியில்லை என்று கிறிஸ்தவர்களும் பேசி வந்தனர். இத்தனைக்கும் வேதங்களை இரு தரப்பினரும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல. ஒன்றும் அறியா பாமர மக்களும் அவ்வாறே பேசுகின்றனர். இறைவழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு நிலைபெறும் வரையில் அவர்கள் இப்படித்தான் வேற்றுமை பகையுடன் இருப்பார்கள். அதன்பின் உண்மை என்னவென்று அவர்களுக்கே விளங்கிவிடும். அல்லாஹ்வின் நியதிப்படி இவர்களின் தர்க்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அல்லது மரணத்திற்குப் பின்பு யார் சரியில்லை என்ற உண்மை தெரிந்து விடும்.


وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ وَسَعَىٰ فِى خَرَابِهَآ ۚ أُو۟لَٰٓئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَآ إِلَّا خَآئِفِينَ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌۭ وَلَهُمْ فِى ٱلْءَاخِرَةِ عَذَابٌ عَظِيمٌۭ.

2:114. மேலும் இறை இல்லமான பள்ளிகளில் அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள செயல் திட்டத்தை ஆய்வு செய்து, அதன்படி செயல்படுத்துபவர்களை தடுத்து, அதைப் பாழாக்க முயல்பவர்களை என்னவென்று சொல்வது? அத்தகையவர்களை விட பெரிய அநியாயக்காரர்கள் வேறு யாராக இருக்க முடியும்? இப்பள்ளிவாசல்களின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொள்ள இறையச்சம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தகுதி பெற மாட்டார்கள். (பார்க்க 9:17-19) மேலும் அக்கிரமம் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற மறுமை வாழ்விலும் கடுமையான வேதனை உண்டு என்பதை அறிந்து கொள்ளட்டும்.


وَلِلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا۟ فَثَمَّ وَجْهُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٌۭ.

2:115. அல்லாஹ்வின் விசாலமான வல்லமையோ திசைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். இதில் கிழக்கு மேற்கு என்ற அளவுகோல்கள் இல்லை. எல்லா திசைகளும் அல்லாஹ்வின் கண்காணிக்கும் வல்லமைக்கு உட்பட்டவையே ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வின் வல்லமை அளவற்ற விசாலத்தன்மையும் ஞானமிக்கதாகவும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًۭا ۗ سُبْحَٰنَهُۥ ۖ بَل لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ كُلٌّۭ لَّهُۥ قَٰنِتُونَ.

2:116. இப்படிப்பட்ட வல்லமை உடைய அல்லாஹ்வவுக்கு ஒரு புதல்வன் உண்டு என்று பேசி, அல்லாஹ்வை மனித அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். உண்மை அதுவல்ல. அல்லாஹ்வின் வல்லமை இவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். அகிலங்கள் அனைத்திலும், இப்பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவை அனைத்துமே அவன் நிர்ணயித்த சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. உண்மை இவ்வாறு இருக்க அவனுக்கு உதவி புரிய ஒரு புதல்வன் தேவையா?


بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَإِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ.

2:117. அல்லாஹ்வின் எல்லை இல்லா வல்லமைப் பற்றி அறிந்துகொள்ள அகிலங்களும் பூமியும் படைக்கப்பட்டு இருப்பதைப் பற்றி கவனித்துப் பார்க்கட்டும். அவையாவும் எவ்வித படைப்புகளின் துணையுமின்றி முறைப்படி படைக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மாபெரும் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளது என்றால் அவற்றை உருவாக்க நாடினால் அது முறைப்படி உருவாக தொடங்கிவிடும். இது அல்லாஹ்வின் எல்லையற்ற வல்லமை ஆகும். (பார்க்க 6:101)


وَقَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوْ تَأْتِينَآ ءَايَةٌۭ ۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ ۘ تَشَٰبَهَتْ قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يُوقِنُونَ.

2:118. இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மக்கள், “அல்லாஹ் ஏன் நம்மிடம் நேரடியாக வந்து பேசுவதில்லை? மேலும் தன் வல்லமையின் சான்றுகளை ஏன் நமக்குக் காட்டுவதில்லை?” என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு முன்சென்ற சமுதாயத்தவரும் இப்படித்தான் கேட்டு வந்தனர். இவர்களுடைய அறிவிலித்தனமும் அவர்களைப் போன்றே உள்ளது. அல்லாஹ்வை உறுதியுடன் நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக மாபெரும் படைப்புகளின் ஆதாரங்களைக் குறித்து அந்தந்த சமுதாய மக்களுக்கு தெளிவாக விவரிக்கப்பட்டே உள்ளன.


إِنَّآ أَرْسَلْنَٰكَ بِٱلْحَقِّ بَشِيرًۭا وَنَذِيرًۭا ۖ وَلَا تُسْـَٔلُ عَنْ أَصْحَٰبِ ٱلْجَحِيمِ.

2:119. இறைவழிகாட்டுதல்களின் நோக்கம் என்ன? இதை ஏற்று பின்பற்றி வருபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்ற நற்செய்தியை அறிவிப்பதும், இதற்கு மாற்றமாகச் செயல்படுவோருக்கு அதற்கேற்ப விபரீத பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிப்பதுமே ஆகும். ஆக இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இறைவழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைப்பதே உம் கடமை. அதை ஏற்காமல் நரகத்தைத் தேடிக் கொள்பவருக்கு நீர் பொறுப்பாளி ஆகமாட்டீர்.


وَلَن تَرْضَىٰ عَنكَ ٱلْيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۗ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ ٱلَّذِى جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ.

2:120. தற்போதுள்ள யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணங்கள் என்ன? அவர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறைகளையே நீங்களும் ஏற்று, அவர்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே. அப்போதுதான் அவர்களுக்கு மனநிறைவு ஏற்படும். “உண்மை விஷயம் உங்களுடைய வழிமுறையா அல்லது எங்களுடைய வழிமுறையா என்பதல்ல. யாருடைய வழிமுறை அல்லாஹ் காட்டியபடி உள்ளதோ, அதுவே நேரான வழிமுறையாகும்” என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். ஆக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள் வந்த பின்பும், அவர்களுடைய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்களானால், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற பின்விளைவுகள்” என்ற விதிமுறையின் பிடியிலிருந்து உங்களை யாரும் காப்பாற்றவோ உதவி செய்யவோ முடியாது.


ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۗ وَمَن يَكْفُرْ بِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.

2:121. அல்லாஹ்வின் வழிகாட்டுதல் கிடைப்பதற்கு இந்த வேத அறிவுரைகளை நன்றாக ஆராய்ந்து அறியும் வகையில் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஈமான்கொண்ட மக்கள் இவ்வாறே செய்வார்கள். அவர்கள் தாம் உண்மையில் ஈமான் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள். வெறும் கதைகளைப் படிப்பது போல படித்து, அதிலுள்ள உண்மைகளை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது சரியாகாது. இதனால் வழிதவறிச் சென்று இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு பெரும் இழப்புக்கு ஆளாகிவிடுவார்கள்.


يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ.

2:122. பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்களே! உங்கள் வரலாறே இதற்குச் சான்றாக இருக்கிறது. நீங்கள் இறைவழிகாட்டுதலின் படி வாழ்ந்த காலமெல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று, எந்த அளவிற்கு சீரும் சிறப்புமாக வாழ்ந்தீர்கள் என்பதை நினைவு கூருங்கள். அக்காலத்தில் உலகில் வாழ்ந்த மற்ற சமுதாயங்களை விட நீங்கள் மேலானவர்களாகத் திகழ்ந்தீர்கள் அல்லவா?
ஆனால் இப்போது உங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உங்கள் தீயச் செயல்களின் விளைவாக, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எனவே இதைச் சரிசெய்யவே இறைவழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. எனவே


وَٱتَّقُوا۟ يَوْمًۭا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍۢ شَيْـًۭٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌۭ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٌۭ وَلَا هُمْ يُنصَرُونَ.

2:123. வரப்போகும் அந்தக் கால கட்டங்களில் யாரும் உங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அங்கு எந்தக் குற்றவாளிக்கும் பிறிதொருவர் உதவமாட்டார். இலஞ்சம் வாங்கி பரிந்துறையும் செய்ய இயலாது. அவர்கள் யார் மூலமாகவும் உதவியும் செய்யப்பட மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுக் கோப்பான சமூக அமைப்பு உருவாகும். மரணத்திற்குப் பின்பும் இதே சட்டம் பொருந்தும்.
இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. நீங்கள் அனைவரும் முயன்றால் அப்படி ஒரு சிறந்த சமுதாயத்தை உங்களாலும் உருவாக்க முடியும். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன. குறிப்பாக


۞ وَإِذِ ٱبْتَلَىٰٓ إِبْرَٰهِۦمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٍۢ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًۭا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّٰلِمِينَ.

2:124. இப்ராஹீம் நபியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்ள்.
இறைக் கட்டளைகளைச் செயல்படுத்த முயன்றபோதெல்லாம், அவருக்குப் பல இன்னல்களும் சோதனைகளும் ஏற்பட்டன. இருந்தும் அவற்றை மன உறுதிப்பாடுடன் நிறைவேற்றி வந்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வொரு சோதனையும் ஒர் அனுபவப் பாடமாக அமைந்தது. இப்படியாக இறைவனின் நியதிப்படி அவர் உலக மக்களின் சிறந்த தலைவராக ஆகும் தகுதியைப் பெற்றார். “இந்த உயர் பதவியும் அந்தஸ்தும் என் சந்ததிகளுக்கும் கிடைக்குமா?” என்று இறைவனிடம் கேட்டதற்கு, “உன் சந்ததியினர் என்பதால் பதவி அந்தஸ்து கிடைக்காது. சிறப்பாகச் செயல்படுவோருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி கிடைக்கும். அநியாயக் காரர்களுக்குத் தரப்பட மாட்டாது” என்று பதில் வந்தது.
மேலும் இப்ராஹீம் நபி படைத்த சாதனைகள் பல உள்ளன. அவற்றில் கஅபா என்னும் உலக சமாதானக் கேந்திரத்தை நிறுவியதும் ஒன்றாகும். அதை நிறுவி சிறப்பாகச் செயல்பட அயராது பாடுபட்டார்.


ووَإِذْ جَعَلْنَا ٱلْبَيْتَ مَثَابَةًۭ لِّلنَّاسِ وَأَمْنًۭا وَٱتَّخِذُوا۟ مِن مَّقَامِ إِبْرَٰهِۦمَ مُصَلًّۭى ۖ وَعَهِدْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ أَن طَهِّرَا بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ.

2:125. இப்படியாக ‘கஅபா’ என்னும் தலைமைச் செயலகம், உலக மக்களுள் நிலவி வரும் வேற்றுமை பகைகளை நீக்கி, அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிவகுத்துத் தரும் செயலகமாக விளங்க, இறைவனின் திட்டப்படி ஏற்பாடுகளைச் செய்தார். இதுதான் இப்ராஹீம் நபியின் உயர்ந்த நிலைப்பாடாகும். இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள கஅபாவின் சுற்றுப் புறத்திலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள், அந்த செயலகத்தை நிறுவகிப்பவர்கள், அதைக் கட்டிக் காக்கும் செயல் வீரர்கள் என அனைவரும் இந்த இடத்தை வீணான சடங்கு சம்பிரதாயங்களுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாக வைத்திருக்க, இப்ராஹீமிடமும் அவருடைய புதல்வர் இஸ்மாயீலிடமும் வாக்குறுதி வாங்கப்பட்டது.


وَإِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا بَلَدًا ءَامِنًۭا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًۭا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

2:126. இப்படியாக அச்செயலகத்தை நிறுவிய அவர், “இறைவா! இந்தக் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இங்குள்ளவர்களில் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்து சட்டங்களையும் ஏற்று ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறார்களோ, அவர்கள் இன்புற்று வாழ ஏற்பாடுகளைச் செய்து தருவாயாக!” என்று தம் மனதில் எழுந்த எண்ணங்களை இறைவன் முன் வைத்தார். அதற்கு, “யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்கவில்லையோ, அவர்களுக்கும் கிடைக்கும். அவர்களுக்கு தம் உழைப்பிற்கு ஏற்ற வகையில், குறுகிய கால சுக வாழ்வு மட்டும் கிடைக்கும். அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவாக பிற்காலத்தில் வேதனை மிக்க வாழ்வே கிடைக்கும். இப்படியாக அவர்கள் போய்ச் சேருமிடம் மிகவும் மோசமானதாக இருக்கும்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.

وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِۦمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

2:127. இத்தகைய மாபெரும் செயல்திட்டங்களுடன் இப்ராஹீம் நபியும், அவருடைய புதல்வர் இஸ்மாயீலும் அந்தச் செயலகத்தை விரிவாக்கம் செய்து வருகையில், “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக. நீயே யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்தனர்.
எனவே ஒவ்வொருவரும் எந்தச் செயலைச் செய்தாலும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அவனுடைய கட்டளைகளுக்கு உட்பட்டே செயலாற்ற வேண்டும் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. மேலும் பிரார்த்தனையுடன் செயல்பாடும் அவசியம் என்றும் இதிலிருந்து விளங்குகிறது.


رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةًۭ مُّسْلِمَةًۭ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

2:128. மேலும் அவர்கள், “எங்கள் இறைவனே! உனக்கு முழுமையாக அடிபணிந்து செயல்படக் கூடியவர்களாகவும், மக்களின் நலனைக் காக்கும் வீரர்களாகவும் எங்களை ஆக்குவாயாக! பிற்காலத்தில் வரும் சந்ததியினரையும் உனக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும் சமூகத்தவர்களாக ஆக்குவாயாக! இப்படி ஒரு சிறந்த சமுதாயம் உருவாக, எங்களுக்கு சிறந்த வழிமுறைகளை அறிவிப்பாயாக! இதில் ஏற்படும் பிழைகளை மன்னித்தருள்வாயாக! திருந்தி வாழ முன்வருபவர்களுக்கு தக்க வாய்ப்பு அளிக்கும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றாய் என்பதில் எங்களுக்கு சிறிதளவும் சந்தேகமில்லை” என்று இறைவனிடம் தம் எண்ணங்களைச் சமர்ப்பித்தனர்.


رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًۭا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

2:129. மேலும் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ படைத்துள்ள உலகம் மற்றும் அவற்றிலுள்ள படைப்புகள் யாவும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக மக்களுக்கு எடுத்துரைத்து, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையும் அவற்றின் நோக்கங்களையும் விளக்கி, அவர்களிடமுள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் தீய பழக்க வழக்கங்களிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தி, சிறந்த சமுதாயம் உருவாகிட ஒரு தூதரை அனுப்பி வைப்பாயாக! நிச்சயமாக நீயே வல்லமை மிக்கவனாகவும் மாபெரும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைவனிடம் வேண்டினர்.
ஒரு நபியின் அடிப்படை கடமைகள் என்னவென்று இதிலிருந்து நமக்குப் புலனாகிறது


وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَٰهِۦمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُۥ ۚ وَلَقَدِ ٱصْطَفَيْنَٰهُ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ.

2:130. இத்தகைய மாபெரும் இலட்சியங்களுடன் வாழ்ந்து மாமேதையாக விளங்கியவர் தான் இப்ராஹீம் நபி. அவர் கடைப்பிடித்த மார்க்கத்தைப் புறக்கணிப்பவனை என்னவென்று சொல்வது? அப்படிப் புறக்கணிப்பவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனே அன்றி வேறில்லை. அல்லாஹ்வின் நியதியின்படி அவருக்கு உயர்வும் அந்தஸ்தும் கிடைத்திருந்தது. நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லடியார்களில் ஒருவராகவே இருப்பார்.


إِذْ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ.

2:131. இதற்குக் காரணம், இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும்படி இறைவனிடமிருந்து கட்டளை வந்தபோது, அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவேன் என்று சொன்னதோடு அதன்படி செயல்பட்டுக் காட்டியவரும் ஆவார். எனவேதான் இந்த உயர்வும் அந்தஸ்தும்.


وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِۦمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ.

2:132. இப்படி அவர் சிறப்பாக வாழ்ந்ததோடு, அவர் தம் பிள்ளைகளுக்கும் அல்லாஹ் காட்டிய வழியிலேயே செயல்படும்படி அறிவுருத்தி வந்தார். அவருடைய பேரனான யாக்கூப்புக்கும் இதே அறிவுரைகளைச் செய்து வந்தார். அவர் தம் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும், அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் ‘இஸ்லாம்’ என்னும் மிகச் சிறந்த மார்க்கத்தையே பின்பற்றி வாருங்கள். அதன்படி வாழ்நாள் முழுவதும் அனைவரின் நலனைப் பேணிக்காக்கும் செயல் வீரர்களாகவே விளங்குங்கள்” என்று அவ்வப்போது அறிவறுத்தி வந்தார்.


أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ إِلَٰهًۭا وَٰحِدًۭا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ.

2:133. அவர் மட்டுமின்றி, அவருடைய பேரனான யாகூப்பும் இதே வழிமுறையைக் கடைப்பிடித்து வந்தார். அவரும் தம் வாழ்நாள் முடியும் தருவாயில் தம் பிள்ளைகளிடம், “நீங்கள் எனக்குப் பின் யாருக்கு அடிபணிந்து வாழ்வீர்கள்” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்வோம்” என்று உறுதியளித்தனர்.
ஆக முஸ்லிம்களாகிய நாமும் மார்க்க கட்டளைப்படி செயல்பட்டு, நம் பிள்ளைகளுக்கும் சிறு வயதிலிருந்தே மார்க்க போதனைகளையும், அதன் உயர் நோக்கங்களையும் முறையாகக் கற்றுத்தர வேண்டும். இதற்காக நாம் மார்க்க உண்மைகளைத் தெரிந்து கொள்வது தலையாயக் கடமையாகும்.


تِلْكَ أُمَّةٌۭ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ.

2:134. இதுதான் அவர்கள் அனைவரும் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளாகும். அப்படிச் சிறப்பாக வாழ்ந்து சாதனைகள் படைத்த சமுதாயங்கள் எல்லாம் சென்று விட்டன. அவர்கள் சிறப்பாக வாழ்ந்ததன் பலன்கள் அவர்களுக்குக் கிடைத்தன. நீங்களும் அப்படி வாழ்ந்தால் உங்களுக்கும் கிடைக்கும். மாறாக அவர்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள் என்று கூறி பெருமை கொள்வதால் உங்களுக்கு உயர்வு கிடைக்குமா? காரணம் அவர்கள் செய்து கொண்டிருந்தது என்னவென்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.


وَقَالُوا۟ كُونُوا۟ هُودًا أَوْ نَصَٰرَىٰ تَهْتَدُوا۟ ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَٰهِۦمَ حَنِيفًۭا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ.

2:135. ஆனால் இப்போது என்ன பேசப்பட்டு வருகிறது என்பதைக் கவனியுங்கள். “நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ மாறிவிடுங்கள். அப்போதுதான் நேர்வழி பெறுவீர்கள்” என்று சொல்கிறார்கள். இவை எல்லாம் பிற்காலத்தில் தோன்றியவை. இதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. “முஸ்லிம்களாகிய நாம் இப்ராஹீம் நபி கடைப்பிடித்த மார்க்கத்தையே பின்பற்றுகிறோம். அவர் ஒருபோதும் இறைக்கட்டளைக்கு மாற்றமாகச் செயல்பட்டதே இல்லை” என்று கூறிவிடுங்கள்.


قُولُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِىَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ.

2:136. அதுமட்டுமின்றி, “நாங்கள் அல்லாஹ்வையும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள இவ்வேதத்தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாக்கூப் மற்றும் அவர்களுடைய சந்ததியினர்களுக்கும், இன்னும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதும், இதே போல் மற்ற ஏனைய நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதமும் இதுவே என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களிடம் வந்த வேத அறிவுரைகளில் வேற்றுமை பாராட்ட மாட்டோம். மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்கிறோம்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍۢ ۖ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّهُ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

2:137. ஆகவே நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவது போல் அவர்களும் ஏற்றுச் செயல்பட்டால், அவர்களும் நேர்வழியைப் பெறுவார்கள். ஆனால் இந்த உண்மையை அறிந்த பின்பும், அவர்கள் அதைப் புறக்கணித்து விட்டால் அவர்கள் பெரும் கருத்து வேறுபாட்டிலே மூழ்கிவிட்டதாகப் பொருள்படும். எனவே இந்த இறைக்கொள்கை வளராதவாறு ஏதாவது சூழ்ச்சியில் அவர்கள் இறங்குவார்கள். இதிலிருந்து உங்களைக் காப்பாற்ற அல்லாஹ்வின் வழிகாட்டுதலே போதுமானது. ஏனெனில் இந்த வழிகாட்டுதல்கள் யாவும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அறிந்த பேராற்றலுடைய அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்.
அதுமட்டுமின்றி மக்களில் சிலர் வர்ண சாயங்களைத் தம்மீது தூவிக்கொண்டு மனமகிழ்ச்சி அடைகின்றனர். மற்றும் சிலர் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டால் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தவான்களாக ஆகிவிடலாம் என்பார்கள். இவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை. மாறாக


صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةًۭ ۖ وَنَحْنُ لَهُۥ عَٰبِدُونَ.

2:138. அல்லாஹ்வின் வண்ண வண்ண சிஃபத்துகள் என்கின்ற சிறப்புக் குணநலன்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால், எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஏனெனில் அல்லாஹ்வின் வண்ணமிகு சிறப்புக் குணநலன்களைவிட சிறந்த குணநலன்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? எனவே அல்லாஹ்வுக்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்கிறோம் என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
உதாரணத்திற்கு அல்லாஹ் இரக்கமுள்ளவனாக இருக்கின்றான். ரஹீம் என்னும் இந்தக் குணநலன் மனிதனிடத்திலும் வளராத் தன்மையில் மறைந்து கிடக்கிறது. இறைவழிகாட்டுதல்கள் மூலம் இந்தத் தன்மையை மனிதனுள் வளர்க்க முடியும். அதற்காக மக்களிடம் இறைவழிகாட்டுதலை போதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போல் அல்லாஹ்வின் பல சிறப்புக் குணநலன்கள் உள்ளன. அவற்றை சமச்சீராக மனிதனுள் மனித அளவிற்கு வளர, குர்ஆனிய போதனைகள் அவசியமாகின்றன. (விளக்கத்திற்குப் பார்க்க 7:180) இதை விட்டுவிட்டு


قُلْ أَتُحَآجُّونَنَا فِى ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ وَنَحْنُ لَهُۥ مُخْلِصُونَ.

2:139. அல்லாஹ் எங்களுக்குச் சொந்தமானவன் எனறோ அல்லது உங்களுக்குச் சொந்தமானவன் என்றோ பேசி வருவதில் என்ன பயன் உள்ளது? அல்லாஹ்வோ அனைவருக்கும் பொதுவானவன் ஆவான். எங்களுடைய இறைவனே உங்களுடைய இறைவனும் ஆவான். ஆனால் அவரவர் செய்து வரும் வெவ்வேறு செயல்களுக்கு ஏற்ப பலன்களும் வெவ்வேறு விதமாய் இருக்கும். அதன்படி “நாங்கள் செயல்படுவதன் பலன்கள் எங்களுக்கு. நீங்கள் செய்து வருவதன் பலன்கள் உங்களுக்கு. ஆனால் நாங்களோ அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே முற்றிலும் சார்ந்தவர்களாக இருக்கின்றோம். எனவே நாங்கள் எங்கள் வாழ்வின் இலட்சியத்தை அடைவோம் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.


أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطَ كَانُوا۟ هُودًا أَوْ نَصَٰرَىٰ ۗ قُلْ ءَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّهُ ۗ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.

2:140. அவர்கள் வரலாற்று உண்மைகளையும் சரிவர தெரிந்து கொள்ளவில்லை. “இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாக்கூப் மற்றும் அவர்களுடைய சந்ததியினர்கள் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்கிறார்கள். “இதைப் பற்றி உங்களுக்கு நன்றாகக் தெரியுமா? அல்லது அல்லாஹ்வுக்கா?” என்று கேளுங்கள். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள ஆதாரப்பூர்மான விஷயங்களை மக்களிடம் எடுத்துரைக்காமல் அவற்றை மறைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யாராக இருக்க முடியும்? இவர்கள் செய்து வருவதும், சொல்லிக் கொண்டிருப்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது.


تِلْكَ أُمَّةٌۭ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ.

2:141. இறைவழிகாட்டுதலின்படி சிறப்பாக வாழ்ந்த அந்த சமுதாயங்கள் இப்போது இல்லை. அவை சென்று விட்டன. அவர்கள் செயல்பட்டதன் பலன்களை அவர்கள் பெற்றுக்கொண்டனர். அதுபோல நீங்கள் செய்து வரும் செயல்களின் பலன்களை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அவர்கள் செய்து வருவது பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. அதே போல் நீங்கள் செய்யும் செயல்களுக்கு அவர்களிடம் கேட்கப்பட மாட்டாது.


۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

2:142. இப்போதோ மக்களில் சிலர் அறிவீனர்களாக இருக்கின்றனர். அவர்கள், ஃகிப்லா என்னும் தலைமைச் செயலகம் விஷயமாக சர்ச்சைகளை எழுப்புகின்றனர். ஏற்கனவே உள்ள ஃகிப்லாவை விட்டுவிட்டு புதிய கிப்லாவை ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். கிழக்கு மேற்கு என்ற திசைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்தான் அல்லாஹ். நேர்வழி பெற நாடி வருபவர்களுக்கே அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
அதாவது யூதர்கள் பைத்துல் முகத்தஸை அவர்களின் தனிப்பட்ட தலைமைச் செயலகமாக ஆக்கிக் கொண்டனர். எனவே உலக மக்கள் அனைவருக்காகவும் ஒரு செயலகம் அவசியம் என்பதற்காக மக்காவில் மீண்டும் கொண்டு வரப்படுகிறது. எனவே வெறும் மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டே, நேர்வழியும் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டால் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் கிடைக்காது.


وَكَذَٰلِكَ جَعَلْنَٰكُمْ أُمَّةًۭ وَسَطًۭا لِّتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًۭا ۗ وَمَا جَعَلْنَا ٱلْقِبْلَةَ ٱلَّتِى كُنتَ عَلَيْهَآ إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ.

2:143. எனவே இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, நீங்கள் அனைவரும் ஒரு *நடுநிலை சமூகத்தவர்களாகத் திகழ வேண்டும். மேலும் உங்கள் நன்னடத்தையைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கமே உலகில் தலைசிறந்தது என்பதை நிரூபித்துக் காட்டும் சாட்சியாளர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இதுவே அல்லாஹ்வின் நாட்டமாகும். இந்த வழிகாட்டுதலைக் கொண்டுவரும் இறைத்தூதரும் அதற்கு சாட்சியாளராக இருக்கின்றார். மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு யார் இவ்வழிகாட்டுதலின் பக்கம் நிலைத்து இருக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவே ஃகிபுலாவின் மாற்றம் செய்யப்பட்டது. எனவே உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இது பெரும் பாரமாகவே இருக்கும். மன உறுதிப்பாடுடன் செயல்படுவோரின் செயல்கள் அல்லாஹ்வின் நியதிப்படி வீணாகிப் போகாது. நிச்சயமாக அனைத்துத் தரப்பு மக்களின் மீதும் அல்லாஹ்வின் கருணையும் அன்பும் உண்டு.
அதாவது ஆட்சி பொறுப்பு வகிப்பவர்கள் அரசு பணியாட்கள் நீதித்துரை யாவும், ஜாதி மதம் பேதம் பாராமல் பணியாற்ற வேன்டும்.


ققَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةًۭ تَرْضَىٰهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ ۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ.

2:144. இறைத்தூதரே! இறைத் திட்டங்களை நிறைவேற்ற, தலைமைச் செயலகம் ஒன்று அவசியம் வேண்டும் என்று உம்மிடம் இருந்த வானளாவிய ஆசையைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். உம் விருப்பத்திற்கு ஏற்ப பழமை வாய்ந்த புகழ்பெற்ற இடமான மஸ்ஜிதுல் ஹராமை தலைமைச் செயலகமாக நிர்ணயித்து, அங்கிருந்து செயல்பட, உம் கவனத்தை அதன் பக்கம் நிலைப்படுத்துவீராக. இனி நீங்கள் அனைவரும் எங்கிருந்து எதைச் செய்ய நாடினாலும், அந்த தலைமைச் செயலகத்தில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளைக் கவனத்தில் கொண்டே செயல்படுங்கள். இறைச் செயல் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வர இதுதான் மிகச் சரியான வழிமுறை என்பது அந்த வேதமுடையவர்களுக்கும் தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் இதில் இணைந்து செயல்பட முன்வரவில்லை. ஆக அவர்கள் செய்துவருவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது.


وَلَئِنْ أَتَيْتَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ بِكُلِّ ءَايَةٍۢ مَّا تَبِعُوا۟ قِبْلَتَكَ ۚ وَمَآ أَنتَ بِتَابِعٍۢ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُم بِتَابِعٍۢ قِبْلَةَ بَعْضٍۢ ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم مِّنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ إِنَّكَ إِذًۭا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ.

2:145. அந்த வேதமுடையவர்களிடம் எல்லா விதமான ஆதாரங்களையும் கொண்டுவந்தாலும், நீர் ஏற்படுத்திய தலைமைச் செயலகத்தின் கட்டளைகளை ஏற்று செயல்படுவதாக இல்லை. அதே போல் அவர்கள் கடைப்பிடித்து வரும் செயலகத்தின் கொள்கைகளை நீர் ஏற்றுக் கொள்பவராகவும் இல்லை. அதேபோல் அவர்களில் ஒரு சிலர் சிலருடைய செயலகத்தையும் ஏற்றுக் கொள்பவராகவும் இல்லை. அதாவது அவர்களிடையேயும் பல பிரிவுகள் இருக்கின்றன. எனவே உண்மை எது? பொய் எது? என்று தெளிவான ஞானம் கிடைத்த பின், நீர் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப நடக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு நீர் நடப்பீராயின், நீரும் அநியாயக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்.


ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًۭا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ.

2:146. அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்திருந்தால், உண்மை விஷயம் விளங்கி இருக்கும். வேத ஞானம் உள்ளவர்களுக்கும் விஷயம் புரியாமல் இல்லை. ஒருவருக்குத் தம் பிள்ளையை அறிந்து கொள்வதில் எவ்வாறு சிரமம் இருப்பதில்லையோ, அவ்வாறே இவ்வேத அறிவுரைகளை அறிந்து கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. உண்மை தெரிந்திருந்தும், அவர்களுள் உள்ள மதகுருமார்கள் அதை மக்களிடம் எடுத்துiரைக்காமல் மறைக்கின்றனர்.
அதாவது நம் பிள்ளையை நாம் எவ்வாறு சீரும் சிறப்புமாக வளர்த்து ஆளாக்குவோமோ, அவ்வாறே வேத உண்மைகளை கட்டிக் காத்து மக்கள் மத்தியில் சிறப்பாக வளர ஆவன செய்ய வேண்டும்.


ٱلْحَقُّ مِن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ.

2:147. உம் இறைவனிடமிருந்து வரும் இந்த வேத அறிவுரைகள் யாவும், மனித குலத்தின் சிறப்பான வாழ்விற்குச் சரியானப் பாதையை காட்டக் கூடியதாக உள்ளன. இதில் யாரும் சிறிதளவும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.


وَوَلِكُلٍّۢ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:148. அப்படியும் உலகில் ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் ஒரு தலைமைச் செயலகம் உண்டு. அவர்களுடைய கவனமெல்லாம் அதை நோக்கியே இருக்கும். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில், அவர்களில் ஆக்கப்பூர்வமான நற்செயல்களில் முன்னிலை வகிப்பவர்கள் யார் என்பதே ஆகும். ஆக உலக மக்கள் எங்கு எப்படி வாழ்ந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் கால கட்டம் நிச்சயமாக வந்தே தீரும். இது அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். அல்லாஹ்வின் வல்லமையோ எல்லா விஷயங்களிலும் சட்ட விதிமுறைகளை நிர்ணயிக்கும் பேராற்றலுடையதாக உள்ளது.


وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ وَإِنَّهُۥ لَلْحَقُّ مِن رَّبِّكَ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.

2:149. ஆகவே நீங்கள் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும், இறைவனின் திட்டங்களின்படி செயல்பட தொடங்கினால், சங்கை மிக்க இந்த தலைமைச் செயலகத்தில் நிர்ணயிக்கப்படும் சட்ட விதிமுறைகளை உங்கள் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். உங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற, அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறை இதுவே ஆகும். எனவே நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.


وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ.

2:150. எனவே நீங்கள் உலகில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், உங்களுடைய சிந்தனை மற்றும் கவனங்கள் யாவும் சங்கை மிக்க தலைமைச் செயலகத்தில் பிறப்பிக்கப்படும் நடைமுறைச் சட்டங்களின் பக்கமே இருத்தல் அவசியம். இது விஷயமாக அநியாயக்காரர்களைத் தவிர, மற்றவர்கள் யாரும் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய மாட்டார்கள். அவ்வாறு வீணான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க, ஒரு தலைமையின் கீழ் செயல்பட இந்தச் செயலகம் நிலைநிறுத்தப்படுகிறது. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சி நடக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் முழு அருட்கொடைகளும் தாராளமாகக் கிடைப்பதற்காகவும், நேர்வழியில் நடப்பதற்காகவும் இதுவே சரியான வழிமுறையாகும். எனவே பிறருக்கு அஞ்சாமல் உங்கள் செயலில் வேகம் காட்டுங்கள்.


كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًۭا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ.

2:151. இப்படிப்பட்ட மாபெரும் செயல்திட்டங்களை நிறைவேற்றவே இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை வழிநடத்திச் செல்லும் தூதரை உங்களிலிருந்தே அனுப்பும் திட்டம் இருந்து வந்தது. அவர் அல்லாஹ்வின் படைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்க முறைகளைப் பற்றி எடுத்துரைத்து, உங்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளை போக்கி, தூய்மையான சமுதாயத்தை உருவாக்க அவர் பாடுபடுகிறார். அதற்காக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகளையும், அவற்றின் நோக்கங்களையும் கற்றுத் தருகிறார். இப்படியாக நீங்கள் அறியாத எல்லா விஷயங்களையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
நபிகள் செயல்படுத்திக் காட்டிய வழிமுறைப்படி, முஸ்லிம்களாகிய நாமும் தொடர்ந்து இன்றைக்கும் செயலாற்ற வேண்டும். (பார்க்க 3:144)


فَٱذْكُرُونِىٓ أَذْكُرْكُمْ وَٱشْكُرُوا۟ لِى وَلَا تَكْفُرُونِ.

2:152. எனவே நீங்கள் அனைவரும் இறைவனின் அறிவுரைகளை ஏற்று, அதன்படி நன்றி விசுவாசத்துடன் செயல்பட்டால், இறைவனின் நியதிப்படி உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறி வரும். (பார்க்க 21:10) எனவே நீங்கள் அவற்றை நிராகரித்து இறை வழிகாட்டுதலுக்கு ஒருபோதும் மாறு செய்யாதீர்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ.

2:153. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அனைவரும் இறைக் கொள்கையில் நிலைத்திருந்து தொடர்ந்து உழைத்து வாருங்கள். மேலும் தீமையை விலக்கி, நன்மையின் பக்கம் அழைப்பு விடும் “ஸலாத்”தைக் கடைப்பிடித்து வாருங்கள். (பார்க்க:29:45) இப்படியாக தொடர் முயற்சியில் உள்ளவர்களுக்கே அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவ்வாசகத்தில் ‘ஸபர்’ (Sabar) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொறுமை கொள்ளுதல் என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் ‘ஸபர்’ என்ற அரபி வார்த்தைக்கு தொடர் முயற்சி, விடா முயற்சி, தன் கொள்கையில் நிலைத்திருந்து உழைப்பது (Perseverance and steadfast)போன்ற அகராதி அர்த்தங்கள் வருகின்றன.


وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتٌۢ ۚ بَلْ أَحْيَآءٌۭ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ.

2:154. மேலும் அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள செயல் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் இலட்சிய வீரர்கள் கொல்லப்பட்டால், அவர் மரணித்து விட்டதாகச் சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் சட்டப்படி அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு விளங்காது. (3:169)
இறைவழிகாட்டுதலின் படி செயல்படும் இஸ்லாமிய ஆட்சி, இவ்வாறு உயிர் நீத்த செயல் வீரர்களின் குடும்பங்களைப் பராமரித்துக் கொள்ளும். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற தம் உயிரை அர்ப்பணித்தவர்களுக்கு சுவர்க்கம் கிடைப்பதும் நிச்சயம் என்று இவ்வாசகத்தில் வாக்களிக்கப்பட்டுள்ளது.


وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍۢ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍۢ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ ۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ.

2:155. இப்படிப்பட்ட மாபெரும் செயல்திட்டங்களை நிறைவேற்ற நீங்கள் முற்படும்போது, பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். உங்களுக்குச் சிறிதளவு அச்சமும் ஏற்படும். சில சமயங்களில் நேரத்தோடு உணவு கிடைக்காமல் போகும். சிலருக்கு பொருட் சேதமும், விளைச்சலின் பாதிப்புகளும் ஏற்படக் கூடும். எத்தனை இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அந்தச் செயல் வீரர்களுக்கு இது பெரிய விஷயமாக இருக்காது. தம் கொள்கையில் நிலைத்திருந்து பாடுபடுபவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நற்பலன்கள், இந்த இழப்புகளை விட பன்மடங்கு மேலானதாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.


ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتْهُم مُّصِيبَةٌۭ قَالُوٓا۟ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ.

2:156. எனவே இந்தச் செயல் வீரர்கள் எத்தனை இன்னல்கள் வந்தாலும், “நாம் அனைவரும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே உயிர் வாழ்வோம். ஏனெனில் நிச்சயமாக அவன் நிர்ணயித்துள்ள இந்த வழிகாட்டுதலின் பக்கமே அனைவரும் வர வேண்டியுள்ளது” என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவார்கள்.


أُو۟لَٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌۭ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌۭ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ.

2:157. இப்படிப்பட்ட இலட்சிய வீரர்களுக்குத்தான் அல்லாஹ்வின் பேராதரவும், கிருபையும் கிடைக்கின்றன. மேலும் இவர்கள்தாம் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள். (மேலும் பார்க்க 33:43)
வெறும் வாயால் சில வார்த்தைகளை தினமும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகுதியும் அந்தஸ்தும் கிடைக்குமா? மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களின் நிலையைப் பற்றி கவனியுங்கள்.


۞ إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًۭا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ.

2:158. கஅபதுல்லா என்னும் இடத்தில் இருக்கும் ‘ஸஃபா’, ‘மர்வா’ விஷயமாக சர்ச்சையை எழுப்புகிறார்கள். அவையாவும் நீங்கள் அறிந்து கொண்டு எளிதாகச் சென்றடைய அடையாளச் (Land Mark) சின்னங்களாக உள்ளன. எனவே அங்கு செல்பவர்கள் அவற்றை சுற்றிப் பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கஅபாவுக்குச் செல்லும் உண்மையான நோக்கங்களை மறந்து விடக்கூடாது. (பார்க்க 2:148) அதாவது ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்ய என்ன வழிமுறை என்பதை தெரிந்துகொள்ளச் செல்வதே முக்கிய கடமையாகும். இவ்வாறு நன்றி விசுவாசத்துடன் செயல்படுவோருக்கு அல்லாஹ்வின் ஏற்பாடுகள் மூலம் தக்க பலன்கள் கிடைத்தே தீரும். அனைத்தையும் அறிந்துகொள்ளும் அல்லாஹ்வின் வல்லமை அளவற்றதாகும் என்பதை மறவாதீர்கள்.


إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَٰبِ ۙ أُو۟لَٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّهُ وَيَلْعَنُهُمُ ٱللَّٰعِنُونَ.

2:159. மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரங்களுடன் நேர்வழியும் வந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்காகவும் தேவையான அனைத்து விஷயங்களைப் பற்றியும் இவ்வேதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன. யார் இவற்றை எல்லாம் மூடி மறைத்து, வெறும் சடங்குச் சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கடைப்பிடிக்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து தவிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு ஏற்படும் துர்பாக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

2:160. இத்தகைய துர்பாக்கியங்களிலிருந்து வெளியே வர எந்த வழிமுறையும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. எந்தச் சமுதாயம், தாம் கடைப்பிடித்து வரும் தவறான வழிமுறைகளை விட்டுவிட்டு, தம்மைத் திருத்திக் கொண்டு, (பார்க்க 13:11) தெளிவான நேர்வழியின் பக்கம் வந்து விடுகிறதோ, அச்சமுதாயத்திற்கு இந்தத் துயரத்திலிருந்து தீர்வு கிடத்து விடும். ஏனெனில் மனிதன் செய்யும் தவறான செயலுக்கு உடனே தண்டனை அளிக்காமல், திருந்தி வாழ அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. (பார்க்க 16:61) இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும்.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ أُو۟لَٰٓئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ ٱللَّهِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ.

2:161. மாறாக எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, மறுப்பதிலேயே நிலைத்து விடுகிறதோ, அதுதான் இறைவனை நிராகரிக்கும் சமுதாயமாகும். இத்தகைய நாடுகளில் நிலவி வரும் ஆட்சி, அல்லாஹ்வின் அருட்கொடைளை இழந்து, பிரபஞ்ச சக்திகளின் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் பலன்களையும் இழந்து, பொது மக்களின் அபிமானத்தையும் இழந்து பெரும் சாபத்திற்குள்ளாகி விடும்.


خَٰلِدِينَ فِيهَا ۖ لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ.

2:162. இப்படியாக அவர்களுடைய துயரங்களும் வேதனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படிப்பட்டவர்கள் திருந்தி வாழும் வாய்ப்பையும் இழந்து விடுவார்கள்.


وَإِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ.

2:163. இதே சட்டம் உலகிலுள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் எல்லா சமுதாயங்களுக்கும் பொருந்தும். இதில் யாருக்கும் எந்த பாரபட்சமும் கிடையாது. ஏனெனில் உங்கள் அனைவரின் இறைவனும் ஒருவனே ஆவான். அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டங்கள் உலகம் முழுவதும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. எல்லா தரப்பு மக்களும் உயிர்வாழ அனைத்து வசதிகளையும் செய்து தந்த அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன் தான் அல்லாஹ்.
அப்படிப்பட்ட வல்லமையுடைய அல்லாஹ், நம் கண்களுக்குப் புலப்படுவதில்லையே என்ற ஏக்கம் மக்களில் ஏற்படுவது இயல்பானதே. எனவே அல்லாஹ்வின் படைப்புகளைக் கவனித்துப் பார்த்து அவனுடைய வல்லமையை ஓரளவிற்கு அறிந்து கொள்ளலாம்.


إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱلْفُلْكِ ٱلَّتِى تَجْرِى فِى ٱلْبَحْرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٍۢ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍۢ وَتَصْرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلْمُسَخَّرِ بَيْنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

2:164. வானங்களும் பூமியும் படைக்கப்பட்டு இருப்பதைக் கவனியுங்கள். அதில் இரவும் பகலும் மாறி மாறி வருவதையும் கவனியுங்கள். உலகில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கடலில் செல்லும் கப்பல்கள், அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி வானத்திலிருந்து பொழியும் மழை, அதன் மூலமாக இறந்து கிடக்கும் பூமி புத்துயிர் பெற்று செழிப்பாக மாறுவது, அதன் மூலமாக எல்லா வகையான உயிரினங்களும் பரவி இருப்பது, காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வது, வானத்திற்கும் பூமிக்கும் இடையே கட்டுக்கோப்பாக ஓடும் மேகங்கள் – என உங்களைச் சுற்றியுள்ள அனைத்துப் படைப்புகளையும், அவை செயல்படும் முறைகளையும் கவனித்துப் பாருங்கள். இவற்றை எல்லாம், மனிதனால் படைக்க முடியுமா? இல்லை என்று பதில் வந்தால் அவற்றை படைத்த மாபெரும் வல்லவன் அல்லாஹ்வே என்ற முடிவுக்கு வருவீர்கள். ஏனெனில் அத்தகைய அளவற்ற வல்லமை உடையவன்தான் அல்லாஹ்.


وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادًۭا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّۭا لِّلَّهِ ۗ وَلَوْ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِذْ يَرَوْنَ ٱلْعَذَابَ أَنَّ ٱلْقُوَّةَ لِلَّهِ جَمِيعًۭا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعَذَابِ.

2:165. இப்படிப்பட்ட மாபெரும் வல்லமையுடைய அல்லாஹ்வை விட்டுவிட்டு, மக்களில் பலர் அவனுக்கு இணையாகப் பிறரை இறைவன் என கூறிக்கொண்டு, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களும் கற்பனைக் கடவுளை நேசிக்கிறார்கள். ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் இறுதி வரையில் இம்மார்க்கத்தில் நிலைத்திருப்பார்கள். (பார்க்க 7:3) ஆனால் இறை நிராகரிப்பவர்களோ நேர்வழியைக் கடைப்பிடிக்காததால், வழிதவறி சென்றுவிடுவார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு துன்பம் நெருங்கும் போது, நீர் அவர்களைப் பார்க்க நேர்ந்தால், அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை புரிந்துகொள்வார்கள். அவர்கள் செய்த தீய செயல்களுக்கேற்ற தக்க தண்டனை அளிப்பதில் அல்லாஹ்வின் சட்டம் எந்த அளவிற்குக் கடுமையானவை என்பது அப்போது புரியும். அப்போது புரிந்து என்ன பயன்?


إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ.

2:166. மேலும் மக்களைத் தவறான பாதையில் வழிநடத்தி வந்த மதகுருமார்களும், அவர்களை நிராதரவாக விட்டுவிடுவார்கள். காரணம் அவர்களும் இவ்வேதனைகளில் சிக்கிக் கொள்வார்கள். அவர்களிடையே இருந்த தொடர்புகளும் அறுபட்டுவிடும்.


وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ لَوْ أَنَّ لَنَا كَرَّةًۭ فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا۟ مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعْمَٰلَهُمْ حَسَرَٰتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ.

2:167. அப்போது அத்தலைவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், “நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், அத்தலைவர்கள் எங்களை கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களை விட்டுவிட்டு அல்லாஹ்வையே பின்பற்றுவோம்” என்று வேதனைகளைத் தாங்க முடியாமல் இறைவனிடம் மன்றாடுவார்கள். இவ்வாறே அவர்கள் செய்து வந்த தீயச் செயல்களுக்கு ஏற்ப வேதனைகனை அளிப்பதாக இறைவனின் சட்டம் எடுத்துக் காட்டுகிறது. அப்போது மன்றாடி என்ன பயன்? அதிலிருந்து மீளும் வாய்ப்பு மீண்டும் அளிக்கப்பட மாட்டாது.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُوا۟ مِمَّا فِى ٱلْأَرْضِ حَلَٰلًۭا طَيِّبًۭا وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌ.

2:168. மனிதர்களே! உலகில் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளை நியாயமான முறையில் உழைத்து, உங்கள் பங்கிற்கு நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். உணவு விவகாரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய்மையானவற்றையே உண்ணுங்கள். இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு உங்கள் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். உங்கள் மனோ இச்சை உங்களுடைய சுமூகமான வாழ்க்கைக்கு எதிராகவே செயல்படும். இது தெளிவான உண்மையாகும்.


إِنَّمَا يَأْمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلْفَحْشَآءِ وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.

2:169. காரணம், இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டால் உங்களின் மனோ இச்சை தீயவற்றையும் மானக்கேடானவற்றையும் செய்யவே எப்போதும் தூண்டிக் கொண்டிருக்கும். அல்லாஹ்வைப் பற்றிய உண்மை ஒன்றிருக்க, நீங்கள் அறியாத விஷயங்களை எல்லாம் அல்லாஹ் சொன்னதாகச் சொல்ல தூண்டிக் கொண்டிருக்கும்.


وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۗ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًۭٔا وَلَا يَهْتَدُونَ.

2:170. மேலும் இப்படிப்பட்டவர்களிடம், அல்லாஹ் இறக்கி அருளியுள்ள வேத அறிவுரைகளைப் பின்பற்றச் சொன்னால் அவர்கள், “அப்படியல்ல. எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழிமுறையைக் கடைப்பிடித்தார்களோ, அந்த வழிமுறையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று சொல்வார்கள். “என்ன? அவர்களுடைய மூதாதையர்கள் அறிவிலிகளாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்?” என்று அவர்களிடம் கேளுங்கள்.(பார்க்க 5:104, 10:78, 11:62, 11:87, 21:53, 23:24, 34:43, 38:7, 43:23.


وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءًۭ وَنِدَآءًۭ ۚ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَعْقِلُونَ.

2:171. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து மூதாதையர்களைப் பின்பற்றுவோருக்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். ஆடு மாடுகளை மேய்ப்பவனின் கூச்சலும், கூப்பாட்டையும் போன்றதே அவர்களுடைய பிரார்த்தனையும் வழிபாடுகளும். அதைத் தவிர அவற்றிற்கு வேறு எதுவும் தெரியாது. அந்த ஆடு மேய்ப்பவனுக்கும் அவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அந்த ஆடுகளுக்கும் தெரியாது. அது போலத் தான் இவர்களும். இத்தகையவர்கள்தாம் செவிடர்களாகவும் ஊமைகளாகவும் குருடர்களாகவும் இருப்பவர்கள். அவர்களிடம் வரும் நற்போதனைகளை ஒருபோதும் செவியேற்று விளங்கிக் கொள்ளவே மாட்டார்கள். (பார்க்க 7:179)


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ.

2:172. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அவ்வாறு வாழாதீர்கள். இறைவனின் அருட்கொடைகளில் நியாயமான முறையில் உழைத்துப் பெற்றுக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சுத்தமான ஆகாரங்களை மட்டும் உண்ணுங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களாக இருந்தால், நீங்கள் அவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ளுங்கள்.


إإِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.

2:173. உணவு விஷயங்களில் மேற்கொண்டு சில சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தானாகச் செத்தவை, பீச்சிடும் இரத்தம், பன்றியின் மாமிசம் மற்றும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லி அறுக்கப்பட்டவை ஆகியவையே உண்ண தடை விதிக்கப்படுகிறது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அதைத் தவிர உண்பதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அந்த சமயங்களில் அவற்றை உண்பதில் தவறு ஒன்றுமில்லை. காரணம். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் அறிந்த அல்லாஹ் மிக்க கருணையாளனும், பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவனும் ஆவான்.(பார்க்க 5:3 & 6:145)
அல்லாஹ்வின் பெயரைச் சொல்லியே முறைப்படி அறுத்து உண்ண வேண்டும். அதுதான் உடல் நலத்திற்கு சிறந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. அவ்வாறில்லாம் இதற்கு மாற்றமாக கழுத்து முறித்தோ அல்லது ஒரே அடியாக வெட்டியோ உண்பது முறையாகாது. உடல் நலத்தையும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلْكِتَٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًا ۙ أُو۟لَٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.

2:174. இப்படியாக ஹலால் ஹராம் பற்றிய தெளிவான இறைவழிகாட்டுதல்கள் வந்துவிட்டன. (பார்க்க:5:3, 5:87, 10:59, 16:115-116, 66:1) இதன் பின்பும், யார் இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறாமல் சொற்ப ஆதாயங்களுக்காக அவற்றை மறைத்து விடுகிறார்களோ, அவர்கள் தம் வயிறுகளில் தாமே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்பவர்களுக்கு சமமாவார்கள். அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அல்லாஹ்வின் இரக்கம் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. அவர்களுடைய வளர்ச்சியும் தடைபட்டு துன்பம் தரும் வேதனைகள் வந்தடையும்.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَٰلَةَ بِٱلْهُدَىٰ وَٱلْعَذَابَ بِٱلْمَغْفِرَةِ ۚ فَمَآ أَصْبَرَهُمْ عَلَى ٱلنَّارِ.

2:175. அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், பாதுகாப்பான வாழ்விற்குப் பதிலாக வேதனைகளையும் விலைக்கு வாங்கிக் கொள்பவர்கள் ஆவார்கள். உண்மை இவ்வாறிருக்க அவர்களுக்கு ஏற்படவிருக்கும் தாளா வேதனைகளைப் பற்றி அஞ்சாமல் அவர்களை தைரியமூட்டியது எது?


ذذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِى ٱلْكِتَٰبِ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍۢ.

2:176. இதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றி வருவதேயாகும். மாறாக மனித குலத்தின் சிறப்பான வாழ்க்கைக்குச் சரியான பாதையைக் காட்டும் வேதம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகிறது. வெற்றி இலக்கை அடைய நேரான வழிமுறையைக் காட்டும் வேதத்தில் கவனம் செலுத்தாமல், பெரும் கருத்து வேறுபாட்டிலேயே மூழ்கி இருக்கின்றனர். இப்படியாக அவர்கள் நேர்வழியை விட்டு வெகு தூரம் சென்று விடுகிறார்கள்.


۞ لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلْكِتَٰبِ وَٱلنَّبِيِّۦنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَٰهَدُوا۟ ۖ وَٱلصَّٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ ۗ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ.

2:177. அவர்களிடையே உள்ள பாவப் புண்ணிய விஷயங்களே வேறு. இறைவழிகாட்டுதலின்படி உள்ள பாவப் புண்ணிய வழியே வேறு. எனவே புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை.
மாறாக அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை மீதும், “மனித செயல்களுக்கு ஏற்ப இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத் மீதும், மனித வாழ்விற்கு ஊன்றுகோலாக திகழும் பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் மீதும், வேத அறிவுரைகள் மீதும், சமூக சீர்திருத்தவாதிகளான இறைத்தூதர்கள் மீதும் முழுவதுமாக சிந்தித்து அவற்றை மனதார ஏற்றுக் கொள்வதிலேயே புண்ணியம் உள்ளது.
அவற்றை ஏற்றுக் கொள்வதோடு விஷயம் முடிந்து விடாது. அதற்கேற்ற வகையில் முழு மனதுடன் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்க உதவிக் கரங்களை நீட்டவேண்டும். அந்த வரிசையில் உற்றார் உறவினர்கள், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்கள், இத்திட்டங்களை நிறைவேற்றப் பிரயாணத்தை மேற்கொள்பவர்கள், கஷ்டத்தில் அவதிப்படுபவர்கள், கடன் போன்றவற்றில் சிக்கித் தவிப்பவர்களின் மீட்புக்காக எனப் பட்டியலிட்டு உங்கள் வசதிக்கேற்ப செலவிடுவதில் தான் புண்ணியம் உண்டு.
அதுமட்டுமின்றி தீமைகள் விலக வழிமுறைகளைக் கற்றுத் தரும் “ஸலாத்”தை நிலைநிறுத்தி, சமுதாய மேம்பாட்டிற்காகச் செலவும் செய்து வரவேண்டும். சமுதாயப் பணியில் ஈடுபடும் போது, பல இன்னல்கள் ஏற்படும். அப்போதும் ஒருவரையொருவர் உதவி செய்து, தோளோடு தோள் நின்று துணை நிற்க வேண்டும். சில சமயங்களில் மோதல்களும் ஏற்படலாம். இவற்றை எல்லாம் எதிர்கொண்டு, தான் எடுத்துக்கொண்ட திட்டத்தில் நிலைத்திருந்து, தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.
இத்தகையவர்களே தம் வாழ்வில் வெற்றி இலக்கை அடையக் கூடியவர்கள். இப்படிப்பட்டவர்களே இறையச்சமுள்ள “முத்தகீன்கள்” என்ற பட்டத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ۖ ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌۭ فَٱتِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَٰنٍۢ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌۭ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌۭ ۗ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌۭ.

2:178. மேலும் உங்களுடைய நீதித்துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! கொலைக் குற்றங்களுக்குத் தக்க தண்டனை அளிப்பது உங்கள் நீதிமன்றத்தின் தலையாய கடமையாகும். இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ ஆண் பெண் என்றோ பாரபட்சம் இருக்கக்கூடாது.
மேலும் குற்றங்களின் பின்னணியைப் பற்றியும், சந்தர்ப்ப சூழ்நிலையையும் ஆராயவேண்டும். அக்குற்றம் எதிர்பாராத விதமாய் நடந்திருந்தால், அதற்குப் பரிகாரமாக பாதிக்கப்ட்ட வாரிசுதாரர்களுக்கு நஷ்டயீட்டை கொடுக்க முறைப்படி ஏற்பாடு செய்யலாம். இந்தச் சலுகையும் கருணையும், எதிர்பாராமல் நடந்த விபரீதங்களுக்கு மட்டும்தான் என்பது இறைவனின் கட்டளை. திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங்களுக்கு அல்ல.
ஆக குற்றங்களுக்கு ஏற்ப தக்க தண்டனையே வழங்கவேண்டும். (பார்க்க 4:93) இதில் ஒருபோதும் வரம்பு மீறுதல் கூடாது. இல்லையேல் நீதித்துறையும் சீர்கெட்டுவிடும். சமுதாயமும் வேதனைகளுக்கு ஆளாகும். வரம்பு மீறித் தீர்ப்பளிக்கும் நீதிபதியும் தண்டனைக்கு உரியவர் ஆவார். (மேலும் பார்க்க 17:33, 42:40)


وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌۭ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ.

2:179. சிந்தனையாளர்களே! குற்றங்களுக்குத் தக்க தண்டனைக் கிடைக்க வழிசெய்வதைக் கொண்டே சமுதாயத்தின் வளர்ச்சியும், சிறப்பான வாழ்வும் பெற அடிப்படையாக அமைகிறது. இதனால் மட்டுமே நீங்கள் தீய விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ.

2:180. நீதித்துறைக்குப் பின் குடும்ப விவகாரங்களுக்கு வாருங்கள். சொத்து செல்வங்களைப் பெற்றிருப்பவர்கள், தம் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள், முறைப்படி மரண சாஸனம் எழுதி வைப்பது தலையாய கடமையாகும். இந்த “உயில்” எனும் மரண சாஸனம் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் பிரச்சனை எதுவும் ஏற்படாமலிருக்க இதை முக்கியமாக கவனித்து மறைப்படி எழுதி வைக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு 4:11-12 வாசகங்களில் உள்ள வாரிசு சட்டப்படி பங்கு கிடைத்து விடும். சாஸனத்தை முறைப்படி எழுதவேண்டும் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில், இரு சாட்சியங்களை வைத்து எழுதுவது என்றும் பொருள்படும்.(பார்க்க 5:106) அரசு பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.


فَمَنۢ بَدَّلَهُۥ بَعْدَمَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثْمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.

2:181. இப்படியாக சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களையும் பெரியவர்களையும் வைத்துக்கொண்டு முறைப்படி செய்யப்பட்ட மரண சாஸனத்தை எவரேனும் மாற்றினால் அது மிகப் பெரிய குற்றமாகும். நிச்சயமாக அல்லாஹ்வின் வல்லமை யாவற்றையும் கேட்டுக்கொள்ளக் கூடியதாகவும், அறிந்துகொள்ளும் பேராற்றல் கொண்டதாவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


فَمَنْ خَافَ مِن مُّوصٍۢ جَنَفًا أَوْ إِثْمًۭا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

2:182. ஆனால் இந்த மரண சாஸனத்தில் முறைகேடோ, அநீதியோ இழைக்கப்பட்டதாக நீதிபதிகள் அஞ்சினால், சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களை அழைத்து, சமாதானம் செய்து, சீராக்குவதில் குற்றம் எதுவுமில்லை. ஆக அல்லாஹ்வின் சட்டங்கள் பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கும் கிருபை மிக்கதாக இருக்கின்றன.
இதுபோன்ற சமுதாயப் பணிகளிலும் குடும்ப விவகாரங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதற்காகவே இறைவனின் வழிகாட்டுதல்கள் அருளப்படுகின்றன. இதற்காக மனக் கட்டுப்பாடும் செயல் திறனும் உங்களுக்குள் வளர வேண்டும். எனவே


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ.

2:183. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்கள் மீது நோன்பு விதியாக்கப்படுகிறது. இறைவனின் இந்த விதிமுறைகள் காலம் காலமாய் இருந்து வந்தவையே. நோன்பிருக்க வலியுறுத்தவதன் நோக்கம் யாதெனில் இதைக் கொண்டு நீங்கள் இறையச்சத்துடன் செயல்படும் செயல்வீரர்களாக ஆகிவிட வேண்டும் என்பதே.


أَيَّامًۭا مَّعْدُودَٰتٍۢ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍۢ فَعِدَّةٌۭ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌۭ طَعَامُ مِسْكِينٍۢ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًۭا فَهُوَ خَيْرٌۭ لَّهُۥ ۚ وَأَن تَصُومُوا۟ خَيْرٌۭ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

2:184. இந்த நோன்பு குறிப்பிட்ட நாட்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். அது சமயம் எவரேனும் நோய்வாய்ப் பட்டோ அல்லது பயணத்திலோ இருந்தால், விடுபட்ட நோன்பை பின்வரும் நாட்களில் பூர்த்தி செய்து கொள்ளலாம். எனினும் தீரா நோயுள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்தோர், நோன்பு நோற்பதைக் கடுமையாகக் கண்டால், அதற்குப் பரிகாரமாக ஏழைக்கு உணவளிக்கலாம். அதிகமான ஏழைகளுக்கு உணவளித்தாலும் நன்மையானதே. ஆயினும் நோன்பின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்தால், நோன்பு நோற்பதே மிகவும் சிறந்தது என்பதை உணர்வீர்கள்.


شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًۭى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍۢ فَعِدَّةٌۭ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.

2:185. இந்த நோன்பு ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த மாதத்தில்தான் குர்ஆன் என்னும் இவ்வேதம் இறக்கி அருளப்பட ஆரம்பமானது. இது உலக மக்கள் அனைவருக்கும் தெளிவான வழிகாட்டியாகவும், நன்மை தீமை ஆகியவற்றை ஆதாரப்பூர்வமாகப் பிரித்து அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே அனைவரும் இம்மாதத்தில் நோன்பு நோற்கவேண்டும். எனினும் நோயாளியாக இருப்பவர்களும் பயணத்தில் இருப்பவர்களும் பின்வரும் நாட்களில் நோன்பு நோற்க வேண்டும். இந்தச் சலுகை உங்கள் சிரமங்களை நீக்கி எளிதாக்கிடவே தரப்படுகிறது. இப்படியாக இந்த நோன்பை நிறைவேற்றி வாருங்கள். நீங்கள் சிறந்த செயல் வீரர்களாகத் திகழ்ந்து, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் மகத்துவத்தை உலக அரங்கில் மேலோங்கச் செய்வதே உங்களின் முக்கிய பணியாகும். இதுவே உங்களுக்கு வழிகாட்டுதலை அளித்ததன் நோக்கமும் ஆகும்.(பார்க்க 9:33)
ஏதோ நோன்பு நோற்பதால் அல்லாஹ்வின் நெருக்கம் கிடைத்துவிடும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அதனால் கேட்பது அனைத்தும் கிடைத்துவரும் என்ற நினைப்பும் வேண்டாம். உண்மை என்னவென்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.


ووَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ.

2:186. இறைவழிகாட்டுதலின்படி செயல்படுபவர்கள், அல்லாஹ்வைப் பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். அவன் எப்போதும் அவர்களின் அருகிலேயே இருப்பதாக அறிவித்துவிடுங்கள். நீங்கள் கேட்கும் அனைத்து விஷயங்களுக்கும், இந்தக் குர்ஆன் மூலமே பதிலளிக்கின்றான். எனவே அவர்களுடைய தேவைகள் நிறைவேற, அவனுடைய வழிகாட்டுதலுக்குச் செவிசாய்த்து, அவற்றையே பின்பற்றி வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுடைய தேவைகளும் நிறைவேறி வரும். மேலும் இறை நெருக்கம் பெற நாடுவோர் இறைவழிகாட்டுதலை முழுக்க முழுக்க பேணி நடக்க வேண்டும். (பார்க்க7:56, 8:24, 32:15-16, 40:60,)


أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ ۚ هُنَّ لِبَاسٌۭ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌۭ لَّهُنَّ ۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَٱلْـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبْتَغُوا۟ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ مِنَ ٱلْخَيْطِ ٱلْأَسْوَدِ مِنَ ٱلْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا۟ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيْلِ ۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمْ عَٰكِفُونَ فِى ٱلْمَسَٰجِدِ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ.

2:187. மேலும் நோன்பு பகல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். இரவு நேரங்களில் மனைவியுடன் ஊடல் கொள்வதிலோ அல்லது உணவு அருந்துவதிலோ தடை ஏதுமில்லை. உங்கள் மனைவியர் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களின் ஆடையாகவும் இருக்கின்றீர்கள். ஆடை மனித வாழ்வை சிறப்பிக்க உடலோடு ஒன்றி, பாதுகாப்பும் கண்ணியமும் அளிப்பது போல், கணவன் மனைவியின் உறவு நகமும் சதையும் போல இணைபிரியாமல், மனிதகுல மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய ஒன்றாக உள்ளது. இதுநாள் வரையில் நோன்பு என்ற பெயரில், நீங்கள் தம்மைத்தாமே வஞ்சித்துக் கொண்டிருந்தது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். இனி நீங்கள் நோன்பு கால இரவு நேரங்களில் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின்படி(2:223) உங்கள் மனைவியிடம் கூடிக்கொள்வது ஆகுமானது. பொழுது சாய்ந்து இருள் சூழும் நேரத்திலிருந்து, விடியற்காலை வரையில் உண்ணலாம் பருகலாம். இப்படியாகப் பகல் நேர நோன்பை பூர்த்தி செய்து வாருங்கள். மேலும் விசேஷ தற்காப்புப் பயிற்சிக்காக (Special Training Camp) செல்பவர்கள், மனைவியை விட்டு விலகியே இருக்க வேண்டும்.* இவையாவும் அல்லாஹ் விதித்துள்ள வரம்புகளாகும். அவற்றை மீறி நடக்காதீர்கள். இப்படியாகத்தான் நீங்கள் இறையச்சத்துடன் செயல்படும் சிறந்த செயல்வீரர்களாக ஆகிவிடலாம். நோன்பின் நோக்கமும் அதுவே ஆகும். இதை அல்லாஹ் தெளிவுபடுத்திடவே இத்தகைய விளக்கங்கள் இந்தக் குர்ஆனில் இடம்பெறுகின்றன.
இராணுவ பயிற்சியில் ஆண் பெண் ஆகிய இருவருமே சேர்ந்து கொள்ளலாம் என்று இதிலிருந்து தெரிகிறது. மேலும் பயிற்சி எடுப்பவர்கள் பாலியல் உறவு முறைகளில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.


وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًۭا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ.

2:188. இறைக்கட்டளையின்படி நோன்பு நேரங்களில் உண்ணமால் பருகாமல் இருந்தீர்கள். அதே போல் ஒருவர் மற்றவரின் செல்வங்களையும் தவறான முறையில் அபகரித்துக் கொள்ளாதீர்கள். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து, தனக்குச் சாதகமாகப் பிறருடைய செல்வங்களை அபகரிக்க முயலாதீர்கள். இது மிகப்பெரிய அநியாயச் செயல் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நோன்பின் நோக்கமே உங்கள் அனைவரையும் இறைவழிகாட்டுதல் என்ற வட்டத்துக்குள் கொண்டு வருவதே ஆகும்.
நோன்பிற்குப் பின் ஹஜ் உடைய விஷயம் எழுகிறது. இதற்காக நேரம் காலம் குறிப்பிட வேண்டியுள்ளது.


۞ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ ۖ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ ۗ وَلَيْسَ ٱلْبِرُّ بِأَن تَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنِ ٱتَّقَىٰ ۗ وَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِنْ أَبْوَٰبِهَا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

2:189. எனவே பிறையைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்கள். அவை நாள் கணக்கையும், மாதக் கணக்கையும் அனைவரும் அறிந்துகொள்ள பயன்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்தி விடுங்கள். அதன்படியே ஹஜ்ஜுடைய நேர அறிவிப்பும் செய்யப்படுகிறது. இன்னும் மூட நம்பிக்கைகளை விட்டு விலகியே இருங்கள். ஹஜ் முடிந்த பின் உங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் மேற்குப் பக்கமாகச் செல்லவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். அதில் பாவ புண்ணியம் எதுவும் கிடையாது. மாறாக இறைவனுக்கு அஞ்சி அவன் காட்டிய வழிமுறைப்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வந்தால் புண்ணியம் கிடைக்கும். எனவே உங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் வழக்கமான வழியாகவே செல்லுங்கள். நீங்கள் சுபிட்சமான வாழ்வைப் பெற இந்த வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
உள்நாட்டு விவகாரங்களுக்குப் பின் அண்டை நாட்டவரிடம் உங்கள் பரஸ்பர உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


وَقَٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ.

2:190. எனவே போரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். யாரிடமும் எப்பொழுது வேண்டுமானாலும் போரிட்டுக் கொள்ளலாம் என்பதல்ல. இதற்காகவும் வரையறைகள் உள்ளன. அதன்படி உங்கள் நாட்டை எதிர்த்து அத்துமீறிப் போரிடுபவர்களுக்கு எதிராகவே போரிட உங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதிலும் நீங்கள் வரம்பு மீறி நடக்கக் கூடாது. ஏனெனில் வரம்பு மீறி நடப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.


وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ ۚ وَلَا تُقَٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمْ فِيهِ ۖ فَإِن قَٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَٰفِرِينَ.

2:191. அயல்நாட்டுப் பகைவர்களைவிட உள்நாட்டுக் கலகக்காரர்களே மிகவும் கொடியவர்கள் ஆவார்கள். எனவே அவர்களை நாட்டில் சுதந்திரமாக உலவ விடக்கூடாது. அவர்களை எங்கு கண்டாலும் உயிருடன் விட்டுவைக்கலாகாது. அவர்கள் நலிந்தோரை வீட்டைவிட்டு வெளியேற்றிய அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். எனவே உள்நாட்டுக் குழப்பங்கள், கொலை குற்றங்களை விட கொடியதாகும். மேலும் உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகமான மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் ஒழுக்கத்தோடு நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். ஆனால் அங்கு அவர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டால், அவர்களை விட்டு வைக்காதீர்கள். அவர்களைப் பிடித்து மரண தண்டனை விதியுங்கள். இதுதான் சட்ட விரோத செயலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் கடும் தண்டனையாகும்


فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

2:192. எனினும் அவர்கள் தீய செயல்களை விட்டு விலகிக் கொண்டால், நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதியே சட்டங்களை உருவாக்குகிறது. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையாகும்.


وَقَٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌۭ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ.

2:193. நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் முற்றிலும் நீங்கி, சாந்தியும் சமாதானமும் நிலைக்கச் செய்யவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட ஆட்சி செயல்படுவதைத் தடுக்கும் விஷமிகளின் அட்டூழியங்கள் ஓயாத வரையில், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்கள். ஆனால் தீங்கிழைப்பதிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டால், தீர பரிசோதனை செய்த பின் அவர்களை விட்டு


ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَٰتُ قِصَاصٌۭ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ.

2:194. போர் நடவடிக்கைகளில் வருடம் முழுவதும் ஈடுபடுவது என்பதல்ல. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொள்வது அவசியம். வருடத்தில் நான்கு மாதங்கள் போரிடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொள்வது முக்கியமாகும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். (பார்க்க 9:36) அதை இரு நாட்டவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீறி நடந்தால் நீங்களும் அதே அளவு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறைக்கட்டளையின்படி செயல்படுவோருக்குதான் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوٓا۟ ۛ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ.

2:195. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற உதவி செய்து வாருங்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால் சமூக சீர்கேடுகள் ஏற்பட்டு அதுவே அழிவிற்குக் காரணமாகிவிடும். இப்படியாக நீங்கள் உங்கள் கரங்களாலேயே அழிவை தேடிக் கொள்ளாதீர்கள். மாறாக சமூக நலனுக்காக அழகிய செயல்களைச் செய்யுங்கள். அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருதி, சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு அல்லாஹ்வின் நேசம் நிச்சயமாக கிடைக்கும்.


وَأَتِمُّوا۟ ٱلْحَجَّ وَٱلْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ ۖ وَلَا تَحْلِقُوا۟ رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ ٱلْهَدْىُ مَحِلَّهُۥ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًۭى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌۭ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍۢ ۚ فَإِذَآ أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِٱلْعُمْرَةِ إِلَى ٱلْحَجِّ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٍۢ فِى ٱلْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌۭ كَامِلَةٌۭ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُۥ حَاضِرِى ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.

2:196. உலக சமாதானத்திற்காக வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது அவ்வப்போதோ, கூடி கலந்தாலோசிப்பது மிக முக்கியமான கடமையாகும். இதைக் கொண்டு உலக மக்களின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வைக் காண முடியும். இது ஹஜ் மற்றும் உம்ரா நேரங்களில் முடிவெடுக்கப்படும். அவற்றை முறையாக நிறைவேற்றுங்கள்.
அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்களால் இயன்றவரை உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கட்டும். உங்களில் ஒருமைப்பாட்டை பிரதிப்பலிக்கும் வகையில், அப்பொருட்கள் அங்கு போய்ச் சேரும் வரையில் நீங்களும் உங்கள் தலைமுடிகளைக் களைவதற்காகக் காத்திருங்கள். ஆயினும் உங்களில் நோய்வாய்ப்பட்டு, முடிகளைக் களைய முடியாத நிலையில் இருந்தால், அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும். அல்லது பரிகாரப் பொருட்களை ஏழை எளியோருக்கு அளித்தல் வேண்டும்.
நெருக்கடி நிலை நீங்கி, வசதி வாய்ப்பு ஏற்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா செல்ல நாடுவோர், தம்மால் இயன்ற அளவிற்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும். வசதி இல்லாதோர் ஹஜ் சமயம் மூன்று நாட்களும், ஊர் திரும்பியதும் ஏழு நாட்களுக்கும் நோன்பு நோற்க வேண்டும். ஆக முழுமையாகப் பத்து நோன்புகள் நோற்க வேண்டும். இந்தக் கட்டளை மஸ்ஜிதுல் ஹராமிற்கு அருகாமையில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. எப்போதும் அல்லாஹ்வுக்குப் பயந்து அவன் கட்டளைப்படியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வரையறைகள் தரப்படுகின்றன. வரையறைகளை மீறி நடப்பவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


ٱلْحَجُّ أَشْهُرٌۭ مَّعْلُومَٰتٌۭ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَتَزَوَّدُوا۟ فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰ ۚ وَٱتَّقُونِ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ.

2:197. ஹஜ்ஜுடைய மாதங்கள் எதுவென்று உங்களுக்கு நன்கு தெரியும். எனவே அங்கு செல்ல முடிவெடுத்து புறப்படுவோர், அக்கால கட்டத்தில் மனைவியிடம் ஊடல் கொள்வதோ, பேசும் போது காமக் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ அல்லது விதண்டா வாதம் செய்வதோ அறவே கூடாது. இதுவே உங்களுக்குத் தனிப் பயிற்சியாக அமையும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையான செயல்களும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள், தமக்குத் தேவையான பொருட்களை சித்தப்படுத்தி எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. இல்லையெனில் தம் தேவைகளுக்கு மற்றவர்களிடம் கையேந்த வேண்டி வரும். சிந்தனையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி அவன் வழிகாட்டுதலின்படியே செயல்படுங்கள். இதைக் கொண்டே உங்களுக்கு நன்மைகள் பல வந்தடையும்.


لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًۭا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَٰتٍۢ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ ۖ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ.

2:198. ஹஜ் சமயங்களில் வியாபார விஷயமாகக் கலந்தாலோசித்து அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. இப்படியாக ஒருவரையொருவர் நன்கு அறிமுகமானபின், அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பெற குறிப்பிட்ட இடத்தில் கூடிவிடுங்கள். அங்கு அல்லாஹ் காட்டிய வழிகாட்டுதலை நினைவில் கொண்டு அதன்படியே செயலாற்றுங்கள். ஏனெனில் இதற்கு முன் நீங்கள் வழி தவறியவர்களகாக இருந்தீர்கள்.


ثُمَّ أَفِيضُوا۟ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

2:199. அதன்பின் மக்கள் அனைவரும் கூடும் இடத்திற்குச் சென்றுவிடுங்கள். அங்கு தற்காப்பு சம்பந்தமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் கிருபை மிக்கதாய் இருக்கின்றன.


فَإِذَا قَضَيْتُم مَّنَٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًۭا ۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍۢ.

2:200. இப்படியாக ஹஜ்ஜின் சகல காரியங்களை முடித்துக் கொண்டு, தத்தம் ஊருக்குத் திரும்பிச் சென்றதும், தம் கடமை முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். தம் முன்னோர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சிறப்பாகச் செயல்பட்டு வந்தது போல், நீங்களும் அதைவிட சிறப்பாகச் செயல்பட வழிமுறைகளைக் கண்டறிந்து, அவற்றை மக்களிடமும் எடுத்துரைத்து, சிறந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். மக்களில் சிலர் இவ்வுலக வாழ்வின் குறுகிய கால சந்தோஷங்களை மட்டும் முன்வைத்து வாழ்வார்கள். இத்தகையோர் வருங்கால வாழ்வில் நிலையான நற்பாக்கியங்களை இழந்து விடுவார்கள்.இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருங்கள்.


وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ.

2:201. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டோரின் எண்ணங்களும் செயல்களும் அவ்வாறு இருக்கக் கூடாது. இவ்வுலக வாழ்வின் குறுகிய காலப் பலன்களும், வருங்கால வாழவின் நிலையான பலன்களும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர்தாம், தம் வாழ்வில் ஏற்படும் துயரங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்கள் ஆவார்கள்.


أُو۟لَٰٓئِكَ لَهُمْ نَصِيبٌۭ مِّمَّا كَسَبُوا۟ ۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ.

2:202. அதற்கு இறைவனின் பதில் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். யார் எதற்காக உழைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கிடைக்கும். அவரவர் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தக்க தருணத்தில் கிடைக்கும்படி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கணக்கிட்டு வைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (பார்க்க 53:39)


۞ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ فِىٓ أَيَّامٍۢ مَّعْدُودَٰتٍۢ ۚ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ ٱتَّقَىٰ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ.

2:203. மேலும் ஹஜ் விஷயமாக குறிப்பிட்ட நாட்கள் வரையில் தங்கியிருந்து, இறைவனின் அறிவுரைகளைப் பெறலாம். விஷயத்தைப் புரிந்து கொண்டவர்கள் ஓரிரு நாள் முன்கூட்டியே திரும்பிச் சென்றுவிடலாம். அறிவுரைகள் தெளிவுபெற நாடுவோர், மேற்கொண்டு அங்கு தங்கியிருப்பதிலும் தடை ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வதே முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கணக்கு உண்டு என்பதையும், அல்லாஹ்வின் செயல்திட்டப்படி அனைவரும் ஒன்று சேரவேண்டி வரும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ.

2:204. உண்மை இவ்வாறிருக்க மக்களில் தந்திரமாகப் பேசுபவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சுத் திறமையைக் கவனித்தால் மிகவும் வியப்பூட்டும் வகையில் இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் உள்ளத்தில் ஒன்றிருக்க, பேச்சு வேறு விதமாய் இருக்கும். பேச்சிற்கு ஒரு முறை அல்லாஹ்வையே சாட்சியாக வைத்துப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களை அல்லாஹ்விடம் மறைக்க முடியுமா?


وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِى ٱلْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ ٱلْحَرْثَ وَٱلنَّسْلَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْفَسَادَ.

2:205. அவர்கள், மக்கள்முன் பேசிவிட்டு திரும்பிச் சென்றதும், நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் குழப்பங்களால் நாட்டின் உற்பத்தியும், வளர்ச்சியும் பாதிக்கப்படும். இப்படிப்பட்ட குழப்பவாதிகளை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது.
அதாவது எல்லாமே அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. நம் கையில் ஒன்றுமில்லை. அவன் நாடினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கும். அவன் நாடாவிட்டால் நமக்கு எதுவும் கிடைக்காது. இது போன்ற சொற்பொழிவுகளால் மக்கள் மனதில் தொய்வு ஏற்பட்டு உழைப்பில் உற்சாகம் இல்லாமல் போயிவிடும். இப்படியாக நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படும். (பார்க்க 6:148)


وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ ۚ فَحَسْبُهُۥ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ ٱلْمِهَادُ.

2:206. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளும்படி அவர்களிடம் சொன்னால், அவர்கள் தம் ஆணவம் மற்றும் அகம்பாவத்தின் காரணமாக ஏற்க மறுத்து விடுகிறார்கள். அவை அவர்களை பாவகர செயல்களின் பக்கமே இழுத்துச் செல்கின்றன. அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளே அவர்களைத் தண்டிக்கப் போதுமானதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நரக வேதனைகள் ஏற்படும் இடம், மிகவும் கெட்ட இடமாகும். இதைப் பற்றி அவர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டாமா?


وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ.

2:207. மாறாக அல்லாஹ்வின் செயல் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற, தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள்தாம் சிறந்த செயல் வீரர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அன்போடு அரவணைத்துக் கொள்ளும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةًۭ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ.

2:208. எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அனைவரும் மக்கள் நலனைப் பேணிக் காக்கும் மார்க்கத்தில் ஒருங்கிணைந்து முழு வேகத்துடன் செயல்படுவீர்களாக. தவிர சுயநலத்துடன் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படாதீர்கள். சுயநலக்கார கூட்டம் உங்களுடைய வளர்ச்சித் திட்டங்களைப் பாழாக்கிவிடும்.


فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ.

2:209. மேலும் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் வந்த பின்பும் எந்தச் சமுதாயம் அதை விட்டு சருகிவிடுகிறதோ, அதனால் ஏற்படும் விளைவுகளை அது சந்தித்துக்கொள்வது உறுதி. காரணம் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நிலையான நடைமுறை சட்டங்கள் யாவும் மிகவும் உறுதிமிக்கவை, அதே சமயத்தில் ஒவ்வொரு சட்டத்தின் நுணுக்கமும் உயர்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍۢ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ.

2:210. இப்படியாக இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு அவரவர் மனோ இச்சையின்படி வாழும் சமுதாய மக்கள், காலப்போக்கில் மூட நம்பிக்கைகளில் மூழ்கிவிடுவார்கள். அதன்பின் அல்லாஹ்வும் பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகளும், மேகங்கள் வானில் நிழலிடுவது போல் வந்து தங்களுடைய துயரங்களைத் துடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் இருப்பார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் யாவும் எந்த அளவிற்கு வீணானது என்பது, அவர்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக் கட்டத்தில் வெட்ட வெளிச்சமாகி விடும். அல்லது மரணத்திற்குப் பின் தெரிந்து விடும்.


سَلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ كَمْ ءَاتَيْنَٰهُم مِّنْ ءَايَةٍۭ بَيِّنَةٍۢ ۗ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.

2:211. இப்படிப்பட்ட துரதிஷ்ட நிலை எத்தனை சமுதாயங்களுக்கு ஏற்பட்டன என்பதை மனித வரலாற்றின் ஏட்டைப் புரட்டிப் பாருங்கள். அவ்வளவு ஏன்? உங்களோடு வாழும் பனீஇஸ்ராயில் சமுகத்தாரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் எத்தனை முறை வந்தன? அதன்படி வாழ்ந்த காலங்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் எந்த அளவிற்கு சிறப்பாகக் கிடைத்து வந்தன என்பதையும் எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். அதன்பின் காலப் போக்கில் அந்த வழிகாட்டுதலை விட்டுவிட்டதன் விளைவாக, எத்தனை துயரச் சம்பவங்களைச் சந்திக்க நேர்ந்தது என்பதையும் கேட்டுப் பாருங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி தம் தீய செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் எந்த அளவிற்குக் கடுமையாக இருந்தன என்பதையும் அவர்கள் பலமுறை கண்டிருக்கிறார்கள்.


زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۘ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ.

2:212. அப்படி கண்டிருந்து என்ன பயன்? இன்றைக்கும் தம்மளவில் தற்காலிக சொகுசு வாழ்வைப் பெறவே அவர்களின் மனம் நாடுகிறது. அவ்வாறு வாழ்வது அவர்களுக்கு அழகாகவும் தெரிகிறது. இதனால் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள், இறுதியில் அவர்களை விட உயர்நிலைக்கு வருவார்கள். (மேலும் பார்க்க 83:31-36) இன்னும் இப்படி செயல்படுவோருக்கு அல்லாஹ்வின் நியதிப்படி கணக்கில்லா அருட்கொடைகளும் கிடைத்து வரும்.


كَانَ ٱلنَّاسُ أُمَّةًۭ وَٰحِدَةًۭ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّۦنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍ.

2:213. மனித வரலாற்றின் இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆதி காலத்தில் மனிதன் ஒரே குடும்பம் போல் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தான். மனித நற்செயல்களின் பலன்களைப் பற்றிய நற்செய்திகளை அறிவிக்கவும், தீய செயல்களின் விளைவுகளை விளக்கி முன்னெச்சரிக்கை செய்யவும் அல்லாஹ்வின் நியதிப்படி நபிமார்கள் வந்தார்கள். அவர்களும் மக்களிடையே ஏற்பட்டிருந்த வேற்றுமைப் பகைகளை நீக்கி, சுமுகமாக வாழ மிகச் சரியான வழிமுறையைக் காட்டும் வேதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்படியாகத் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் வந்த பின்பும், காலப்போக்கில் தம்மிடையே உருவாகிய போட்டி, பொறாமை, சுயநலம் போன்ற மனப்பான்மை காரணமாக, அவர்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்துவிட்டனர். (பார்க்க 16:92) இருப்பினும் திசை மாறிச் சென்ற வழியை விட்டுவிட்டு, இறைவழிகாட்டுதலின்படி ஒன்றுபட்டு வாழ அவ்வப்போது அறிவுரைகள் அளிக்கப்பட்டன. அதன்படி நேர்வழி பெற நாடியோருக்கு இறைவனிடமிருந்து நபிமார்கள் கொண்டுவந்த வேதத்தின் மூலமாக நேர்வழி கிடைத்து வந்தது. இவ்வாறே இன்றைக்கும் நேர்வழி பெற நாடுவோருக்கே அல்லாஹ்விடமிருந்து நேர்வழி கிடைக்கிறது.


أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌۭ.

2:214. இவ்வாறாக மக்களை நல்வழிபடுத்தி சீர்பட்ட, சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தை உருவாக்குவது ஒரு சாதாரண விஷயமல்ல. இதற்காக அல்லும் பகலும் பாடுபட வேண்டி வரும். அப்படி எதுவும் உழைக்காமலேயே எளிதாக சுவன வாழ்வை ஈட்டிக்கொள்ள முடியும் என்று கனவு காண்கிறீர்களா? இல்லை. இதற்குமுன் இதற்காக உழைத்தவர்கள், பல இன்னல்களுக்கு ஆளானார்கள். சமுதாயத்தை வழிநடத்திச் சென்ற இறைத்தூதர்களும், அவர்களைப் பின்பற்றி வந்த செயல்வீரர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போதுதான் வரும் என்று கூறும் அளவிற்கு தவிப்பில் இருந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி மிகவும் சமீபத்தில்லேயே இருக்கிறது என்று பதிலளிக்கும் வகையில் அவர்களுடைய இன்னல்கள் நீங்கி நிம்மதியான வாழ்விற்கு வழிகள் பிறந்தன. (பார்க்க 3:142, 9:16, 9:111, 29:1-2, 33:10)


يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍۢ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌۭ.

2:215. இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் என்ன? சமுதாயச் சீரமைப்புப் பணிகளுக்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக சகல உதவிகளையும் செய்து வர வேண்டும். எவ்வளவு உதவ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உங்களால் முடிந்த வரை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து உதவுங்கள். (பார்க்க 2:219) இதில் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், ஆதரவற்ற நிலையில் தவிப்பவர்கள், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்கள், இறைச் செய்திகளைப் பரப்புவதற்காகப் பயணத்தை மேற்கொள்பவர்கள், என பட்டியலிட்டு உங்கள் வசதிக்கேற்ப உதவி செய்து வாருங்கள். ஆக ஆக்கப்பூர்வமான எந்த நற்செயலைச் செய்தாலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதன் பலன்கள் அவனிடமிருந்து நிச்சயமாக வந்தடையும்.


كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌۭ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًۭٔا وَهُوَ شَرٌّۭ لَّكُمْ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.

2:216. உள்நாட்டு சீரமைப்புப் பணிகளுடன் அயல்நாட்டு விவகாரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இராணுவப் பயிற்சியும் அவசியமாகிறது. இதற்காக ஏற்பாடு செய்வது உங்களுடைய முக்கியக் கடமை ஆகும். இப்படிப்பட்ட பயிற்சிகள் யாவும் மிகவும் கடினமானவை என எண்ணுவீர்கள். எனவே சில சமயங்களில் நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமுதாய நலனை வைத்துப் பார்க்கும் போது, அது நன்மை பயப்பதாக இருக்கும். அதே போல் ஒரு விஷயத்தை நீங்கள் தனிப்பட்ட முறையில் விரும்பலாம். ஆனால் அது சமுதாயத்தை பாதிக்கும் செயலாக இருக்கும். இவையெல்லாம் அல்லாஹ்வுக்கு நன்குத்தெரியும். நீங்கள் அறியமாட்டீர்கள்.


يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍۢ فِيهِ ۖ قُلْ قِتَالٌۭ فِيهِ كَبِيرٌۭ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّهِ ۚ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ ۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَٰعُوا۟ ۚ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌۭ فَأُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:217. இறைத்தூதரே! போர் தடுக்கப்பட்ட மாதங்களைப் பற்றிய விவரங்களை உம்மிடம் கேட்கிறார்கள். இரு நாட்டவருக்கும் இடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அம்மாதங்களில் போரிடுவது பெருங் குற்றமாகும். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முடியாதபடி தடுப்பதும், அதற்கு எதிராகச் செயல்படுவதும், தலைமைச் செயலகமான மஸ்ஜிதுல் ஹராமின் வளாகத்தை விட்டு வெளியேற்றுவது போன்ற செயல்களும், அதை விட பெருங் குற்றமாகும். இப்படிக் கலகத்தையும் கலவரங்களையும் உண்டாக்குவது கொலைக் குற்றங்களை விடக் கொடியது. உங்களுடைய மார்க்கப் பணிகளை விட்டு நீங்கள் விலகாத வரை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடுவதிலிருந்து ஓயமாட்டார்கள். இத்தகையவர்களுக்கு இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பொருந்தாது. ஒப்பந்தம் மீறல் காரணமாக, நீங்களும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். ஆனால் உங்களில் எவரேனும் இம்மார்க்கத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டால், அவர்கள் இறை நிராகரிப்பவர்கள் பட்டியலில் இடம் பெறுவர். அவர்கள் செய்து வந்த நற்செயல்களின் பலன்கள் யாவும், இவ்வுலகில் வீணாகிப் போகும். மறுமையிலும் எவ்விதப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. இத்தகையவர்கள் நரகவாசிகளாக வேதனைகளில் சிக்கித் தவிப்பார்கள்.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ يَرْجُونَ رَحْمَتَ ٱللَّهِ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

2:218. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டு, இறைத்திட்டங்களைச் செயல்படுத்தத் தம் வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறி, பொதுவாழ்வில் அல்லும் பகலும் அயராது ஈடுபடுபவர்கள் எல்லாம், உண்மையிலேயே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வு பெற வழிவகை செய்யும் கிருபை மிக்கதாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


۞ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَآ إِثْمٌۭ كَبِيرٌۭ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ.

2:219. சமுதாயத்தில் பிரச்சனை ஏதுமின்றி பாதுகாப்பாக வாழ, சமூகக் கட்டுப்பாடு அவசியமாகிறது. மக்கள் உம்மிடம் மதுபானத்தைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் கேட்கின்றனர். அவ்விரண்டும் சமுதாய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாய் நிற்பவை ஆகும். தனிப்பட்ட முறையில் சிலருக்கு நன்மைகள் கிடைத்திடலாம். ஆனால் இந்த நன்மைகளை விட இவற்றால் சமுதாயத்திற்கு ஏற்படும் தீய விளைவுகள் பன்மடங்கு அதிகமாகும். எனவே சமுதாயத்தில் இவை இடம்பெறாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். (பார்க்க 5:90) மேலும் சமுதாய வளர்ச்சிக்காக இந்த ஆட்சி/சமூக அமைப்புக்கு எவ்வளவு உதவிட வேண்டும் என்றும் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மிகுதியானவை அனைத்தையும் அளித்து உதவிட வேண்டும் என்று சொல்லிவிடுங்கள். உங்கள் சமுதாயம் பாதுகாப்பாக வாழ இந்த அமைப்பு உதவி புரியும். எனவே நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ்வின் புறத்திலிருந்து தெளிவான முறையில் சட்ட விதிமுறைகள் விளக்கப்படுகின்றன.


فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۗ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَٰمَىٰ ۖ قُلْ إِصْلَاحٌۭ لَّهُمْ خَيْرٌۭ ۖ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.

2:220. இப்படி சட்ட ஒழுங்கு முறையைச் கடைப்பிடித்து வருவதால், உலகின் தற்காலிக பலன்களும் வருங்கால நிலையான பலன்களும் நிச்சயமாகக் கிடைத்து வரும். எனவே உதவி பெறுபவர் பட்டியலில் முதலில் வருவது சமுதாயத்தில் ஆதவற்ற நிலையில் தவிப்பவர்கள் ஆவர். அவர்களுடைய துயரங்களைத் துடைத்து அவர்களைச் சீராக்கி வைக்கவேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் அவர்களோடு சேர்ந்து வாழ நேரிட்டால், அவர்களிடம் சகோதரத்துவ பாசத்துடன்தான் பழக வேண்டும். சமுதாய சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருப்போர்களில், யார் முறைதவறி நடக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். இவ்வாறு வழிமுறைகளைத் தெளிவாக்காமல் இருந்திருந்தால் அல்லாஹ்வின் நியதிப்படி நீங்கள் கஷ்டத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். அல்லாஹ்வின் சட்டத்திட்டங்கள் மிகவும் உறுதிமிக்கவை என்பதையும் அதே சமயத்தில் ஒவ்வொரு சட்டத்தின் நோக்கமும் உயர்ந்தவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


ووَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌۭ مُّؤْمِنَةٌ خَيْرٌۭ مِّن مُّشْرِكَةٍۢ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ ۚ وَلَعَبْدٌۭ مُّؤْمِنٌ خَيْرٌۭ مِّن مُّشْرِكٍۢ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُو۟لَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

2:221. சமுதாய சீரமைப்புப் பணியில் தொடர்ந்து முயன்றால், நீங்கள் விரும்பும் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு மலரும். மேலும் திருமண பந்த விஷயங்களிலும் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எந்த இலட்சியமும் இல்லாமல் மனம்போன போக்கில் வாழும் பெண்களை இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட ஆண்கள் மணந்து கொள்வது கூடாது. ஒருவேளை அவளும் ஈமான் கொண்டு நற்பண்புகளுடன் இருந்தால் மணந்து கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அவளைவிட ஈமான் கொண்ட நற்பண்புடைய ஏழ்மையில் வாழும் பெண்களே மேல். அதே போல் மனம்போன போக்கில் வாழும் முஷ்ரிக் ஆண்களை ஈமான் கொண்ட பெண்கள் மணந்துகொள்ளக் கூடாது. அவர்கள் எவ்வளவுதான் செல்வந்தர்களாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாலும், அதைவிடப் ஏழ்மையில் வாழும் ஈமான் கொண்ட நல்லொழுக்கமுள்ள ஆணே மேல். ஏனெனில் இது உங்களோடு வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழக்கூடிய விஷயமாகும். அவர்களுடைய செயல்கள் யாவும் நரகத்தின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலோ பாதுகாப்பான சுவன வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்ல நாடுகிறது. எது சரியான வழிமுறை என்பதை ஆய்ந்தறிந்து அவற்றையே பின்பற்றுங்கள். ஆக உலக மக்கள் அனைவரும் அறிவுரைகள் பெறவே இத்தகைய ஒழுங்குமுறை சட்டங்கள் அருளப்படுகின்றன.


وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًۭى فَٱعْتَزِلُوا۟ ٱلنِّسَآءَ فِى ٱلْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلْمُتَطَهِّرِينَ.

2:222. மேலும் கணவன் மனைவியிடையே நடைபெறும் தாம்பத்திய வாழ்க்கைப் பற்றிய கேள்வி எழுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் காலத்தில் கூடுவது பற்றி கேட்கிறார்கள். அது ஒரு தூய்மையற்ற நிலை என்பதை அறிந்து, அத்தகைய சமயங்களில் அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் அதிலிருந்து தூய்மையான பின்பு அல்லாஹ்வின் விதிமுறைகளின்படி கூடலாம். இது நாள்வரையில் செய்து வந்த தவறான வழிமுறைகளை விட்டுவிட்டு தூய்மையான வாழ்வின் பக்கம் திரும்புவோருக்கு அல்லாஹ்வின் நேசமும் அரவணைப்பும் நிச்சயம் கிடைக்கும்.


نِسَآؤُكُمْ حَرْثٌۭ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

2:223. மேலும் உங்கள் மனைவியர், உங்களின் விளை நிலங்களைப் போன்றவர்கள் ஆவர். அதாவது விவசாயி நிலத்தில் பயிரிடுவதற்கு முன் நிலத்தைப் பதப்படுத்தி நேரம், காலம், மற்றும் பயிரிடும் விதையின் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து விதைப்பது போல, நீங்களும் ஆற்றல் மிக்க பிள்ளையைப் பெற விரும்பினால் நேரம், காலம், குடும்ப வருவாய், கணவன் மனைவியின் உடல்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கூட வேண்டும். எனவே நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வாருங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களின் விளைவுகளையும் இறைவனின் நியதிப்படி சந்தித்து தான் ஆகவேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவோருக்குத் தான் நற்பலன்கள் கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
ஆக நேரம் காலமின்றி ஆசைப்பட்ட போதெல்லாம் உடலுறவில் ஈடுபட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்ட குடும்பத்தை ஏற்படுத்தித் தலைச்சிறந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து, இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் வெற்றி காணுங்கள்.


وَلَا تَجْعَلُوا۟ ٱللَّهَ عُرْضَةًۭ لِّأَيْمَٰنِكُمْ أَن تَبَرُّوا۟ وَتَتَّقُوا۟ وَتُصْلِحُوا۟ بَيْنَ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ.

2:224. இன்னும் சிலர் வார்த்தைக்கு வார்த்தை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பேசுவார்கள். இவ்வாறாக ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்தல், இறையச்சத்துடன் மக்களிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல் போன்றவற்றிற்கு இத்தகைய சத்தியங்கள் தடையாக இருப்பது சரியல்ல. நீங்கள் பேசி வருவது, செயல்பட்டு வருவது எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைந்து நிற்காது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَٰنِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌۭ.

2:225. எனவே வெறுமனே விளையாட்டாக பேச்சுவாக்கில் செய்யும் சத்தியங்களை அல்லாஹ்வின் சட்டம் பிடித்துக் கொள்ளாது. ஆனால் சீரிய விஷயங்களில் நன்றாக அறிந்து கொண்டே செய்யும் சத்திய வாக்குகளை நிறைவேற்றியே ஆக வேண்டும். இல்லையெனில் அது குற்றமாகும். நீங்கள் திருந்தி வாழ்ந்தால் உங்கள் தீய செயல்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். மனிதனுக்கு அளிக்கப்படும் இந்த வாய்ப்பு அல்லாஹ்வின் சட்டம் விவேகம் மிக்கது என்பதை தெளிவுபடுத்துகிறது.


لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍۢ ۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

2:226. கணவன் மனைவி இடையே அவ்வப்போது பேச்சுவாக்கில் செய்யப்படும் சத்தியங்களும் இதே போன்றுதான் ஆகும். உங்கள் மனைவியை விட்டு விலகிவிடுவதாக ஒருவர் உறுதி கொண்டிருந்தால், அவருக்கு நான்கு மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும். அதற்குள் அவர்கள் இணைந்து கொள்ளவேண்டும். அவர்கள் பிரிந்துவிட விரும்பினால், விவாகரத்து கோரலாம். இப்படியாக அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சட்ட விதிமுறைகளை அளிப்பது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும்.


وَإِنْ عَزَمُوا۟ ٱلطَّلَٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.

2:227. இந்த நான்கு மாதக் காலத் தவணையும் கடந்து, கணவன் மனைவி பிரிந்தே இருந்து விவாகரத்து கோரினால் அதை இஸ்லாமிய அமைப்பு அல்லது நீதிமன்றம் 4:35ல் சொன்ன அறிவுரையின்படி நடுவர்கள் மூலம் அவர்களுடைய பிரச்சனையைச் செவியேற்று தீர்த்து வைப்பது அவசியம்.


وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۢ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ ٱللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَٰحًۭا ۚ وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌۭ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ.

2:228. இதன் பின்பும் பிரச்சனைத் தீரவில்லை என்றால் இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பு அல்லது நடுவர் மன்றம் விவாகரத்து கோரிக்கை மனுவை ஏற்று, மூன்று மாதவிடாய்க் காலத்தைக் கணக்கிட்டு, கால அவகாசம் அளித்து (பார்க்க 65:1), "தலாக் அறிவிப்பு" செய்துவிடும்.
இவ்வாறு தலாக் அறிவிக்கபட்ட பெண்கள், இந்தக் காலத் தவணையில் கருத்தரித்து விட்டால், அதை மறைக்கக் கூடாது. இந்தத் தவணைக்குள் கணவன் இணக்கத்தை நாடி, மனைவியுடன் சேர்ந்து வாழ முன்வந்தால், அதில் கணவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் வருங்கால சமூக நலனையும் கட்டிக்காக்க நாடுவோர், இதற்கு மாற்றமாகச் செயல்பட மாட்டார்கள்.
மேலும் ஆணுக்குத் தன் மனைவியின் மீது உரிமைகள் இருப்பது போன்று, பெண்ணுக்கும் தன் கணவனின் மீது சகல உரிமைகளும் உண்டு. ஆயினும் மறுமண விஷயத்தில் பெண் கருத்தரிக்கும் விஷயமிருப்பதால், மறுமணத்தைப் பற்றி உடனே முடிவெடுக்கலாகாது. இவ்விஷயத்தில் ஆணுக்கு நிர்பந்தம் இருப்பதில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மிகவும் உறுதி மிக்கவை என்பதையும், அதே சமயத்தில் ஒவ்வொரு சட்டமும் ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


ٱلطَّلَٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَٰنٍۢ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

2:229. இப்படியாக கணவனோ மனைவியோ, தம்வாழ்வில் இருமுறைதான் தலாக் கோரிக்கையை ஜமாஅத்தில் வைக்கலாம். அதாவது பிரிந்து செல்வதற்கும் இணைந்து வாழ்வதற்கும் இரண்டு வாய்ப்புகள்தான் அளிக்கப்படும். அவர்களும் நியாயமான முறையில் பிரிந்தும் போகலாம் அல்லது சேர்ந்தும் வாழலாம். ஆனால் எதுவும் முறைப்படி ஜமாஅத் அல்லது இஸ்லாமிய நீதிமன்றம் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
மேலும் நீங்கள் மனைவிக்கு அளித்தவற்றில் எதுவும் திரும்பப் பெறுதல் சரி இல்லை. (பார்க்க 4:20) ஆனால் இதுவே தலாக் தீர்வுக்குத் தடையாக இருந்தால், ஜமாஅத் அல்லது நீதிமன்றம் அதை முறைப்படி மனைவியிடமிருந்து ஒரு பகுதியைத் திருப்பி வாங்கிக் கொடுக்கலாம். அதில் குற்றம் ஏதுமில்லை.
ஆக இவை யாவும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளாகும். அவற்றை யாரும் மீறக் கூடாது. யார் அல்லாஹ் விதித்துள்ள வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
கணவன் மனைவி சேர்ந்து வாழும் வரை அது குடும்ப விவகாரம் ஆகும். ஆனால் அவர்களிடையே பிணக்குண்டாகி பிரச்சனை ஏற்பட்டு பிரிவை நாடினால், அது சமூகப் பிரச்சனையாகி விடுகிறது. எனவேதான் இந்தப் பிரிவினைக்கு இஸ்லாமிய ஜமாத் அல்லது நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது.


فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍۢ يَعْلَمُونَ.

2:230. இப்படியாக ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்து பெற்ற தம்பதியர்கள், மூன்றாம் முறையும் தலாக் கோரிக்கையை வைத்தால், இம்முறை அவர்கள் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்பதை விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவர்களுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டும்.
அதன் பின் அவள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், வேறு ஒருவனைத்தான் மணந்து கொள்ள முடியும். அப்படியும் இரண்டாவது கணவனுடன் வாழ்க்கை சரிபட்டு வராமல் முறையாக விவாகரத்து பெற்றிருந்தாலோ அல்லது அவன் இறந்து விட்டாலோ, அவள் முதல் கணவனுடன் மீண்டும் நிக்காஹ் செய்துகொள்ளும் தகுதி பெறுகிறாள்.
இம்முறை அவ்விருவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி முறையோடு இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக ஜமாஅத் அமைப்பு தீர்மானித்தால், அவர்களை மீண்டும் நிக்காஹ் செய்து வைக்கலாம். நினைவில் கொள்ளுங்கள். இவையாவும் அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவை யாவும் சிந்தித்துச் செயலாற்றும் அறிவுடைய மக்களுக்கு தெளிவாக்கப்படுகின்றன.


وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍۢ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًۭا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًۭا ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

2:231. மேலும் 2:228இன் படி தலாக் அறிவிப்பு ஆனதும், ‘இத்தா’ என்னும் மூன்று மாத காலத் தவணை ஆரம்பமாகிறது. அப்போது கணவன் வீட்டில் அவள் தங்க விரும்பினால் அதற்கு அனுமதி உண்டு. (பர்க்க 65:1) அவ்வாறு தங்குவதை தடுக்காதீர்கள். ஆனால் அவளை உங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு துன்புறுத்தக் கூடாது. அவளிடம் வரம்பு மீறியும் நடக்கக் கூடாது. இப்படி யார் வரம்பு மீறி நடக்கிறாரோ, அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். அதாவது அவர் அதற்குத் தக்க தண்டனை பெறுவார்.
மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் அளித்துள்ள பொறுப்புகளை தட்டிக் கழித்து அவனுடைய அருட்கொடைகளை இழந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள மகத்தான ஞான அறிவுரைகளை எண்ணிப் பாருங்கள். இதைக் கொண்டுதான் உங்களுக்கு நற்போதனைகள் கிடைக்கின்றன. அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக இருக்கின்றான் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி நினைவில் கொண்டு அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்


وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.

2:232. இன்னும் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நீங்கள் விவாகரத்து அறிவிப்பு செய்தபின், அப்பெண்ணும் தன் காலத் தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவளுக்கு “விவாகரத்து தீர்ப்பு” சான்றிதழை அளித்து அவளை விடுவித்து விடுங்கள்.
மேலும் தான் விரும்பி ஏற்கும் ஆணை திருமணம் செய்துகொள்வதை தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும்,“மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளையும் ஏற்று நடக்க விரும்புகிறாரோ, அவருக்கு இந்த அறிவுரைகள் தரப்படுகின்றன. இதன்படி செயல்படுவதால் ஒழுக்க மாண்புகளும் சமூக வளர்ச்சியும் ஏற்படும். ஆக நீங்கள் அறியாததை எல்லாம் அல்லாஹ்விற்கு நன்கு தெரியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது “தலாக் அறிவிப்பு” காலத் தவணை முடிந்த பின், தீர்ப்பளித்து அவ்விருவரிடமும் தலாக் சான்றிதழை அளித்துவிட வேண்டும். மறுமணம் செய்து கொள்ள இது உதவிகரமாக இருக்கும். மேலும் அவள் விரும்பி ஏற்கும் ஆணை மணந்து கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒருமுறை விவாகரத்து பெற்ற முந்தைய கணவனும் அடங்குவான். அதாவது முன்தைய கணவனையே இரண்டாவது முறையாக மணந்து கொள்ளும் அனுமதி இதிலிருந்து கிடைத்துவிடுகிறது. அப்படி மணந்து கொள்ள பெரும்பாலான தம்பதியர் விரும்பமாட்டார்கள். எனினும் தலாக் செய்துவிட்ட தம்பதியர்கள் வேறு ஒருவரோடு திருமணம் செய்து கொள்ள வாய்ப்புப் பெறாமல் தவிப்பவர்களுக்கு இச்சட்டம் ஏதுவாக இருக்கும்.


۞ وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ ۚ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌۭ لَّهُۥ بِوَلَدِهِۦ ۚ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍۢ مِّنْهُمَا وَتَشَاوُرٍۢ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.

2:233. தாய்மார்கள், தம் குழந்தைக்குப் பாலுட்டுதலை இரண்டு ஆண்டுகள் வரையில் நீட்டிக்கலாம். (பார்க்க 33:14, 46:15) விவாகரத்து செய்த பின், பாலூட்டும் தாய்மார்களுக்கு, முறைப்படி தம் வசதிக்கு ஏற்ப உணவும், உடையும் அளிப்பது முந்தைய கணவனின் பொறுப்பாகும். இதில் அவருடைய சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்பட மாட்டார். குழந்தையைக் காரணம் காட்டி தாயோ, தந்தையோ ஒருவருக்கெதிராக மற்றவர் துன்புறுத்தலாகாது.
குழந்தையின் தந்தை இறந்துவிட்டால், அவருடைய வாரிசுகள் அவளையும் குழந்தையையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். மேலும் அக்குழந்தையின் தாய் தந்தை ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் இணங்கி ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. ஒரு செவிலித் தாயை நியமித்தும் பாலூட்ட ஏற்பாடு செய்யலாம். இருப்பினும் அக்குழந்தையின் தாய்க்குச் சேர வேண்டியதை முறைப்படி அளித்துவிட வேண்டும். ஆக உங்கள் அச்சம் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி நடப்பதிலேயே இருத்தல் அவசியம். ஏனெனில் உங்களுடைய எந்த செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.


وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًۭا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍۢ وَعَشْرًۭا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.

2:234. இவை யாவும் தலாக் மற்றும் அதை ஒட்டிய சட்டதிட்டங்களில் உள்ளவை ஆகும். இதைத் தவிர, வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும். உங்களில் எவரேனும் இறந்து விட்டால், அவரது மனைவி “இத்தா” தவணையாக நான்கு மாதம் பத்து நாட்களை கழிக்க வேண்டும். அதாவது அந்தக் காலத்தில் மறுமணம் செய்யலாகாது. இந்த இத்தா காலத்திற்குப் பின், அந்த விதவைப்பெண் முறைப்படி வாழ என்ன முடிவெடுக்கிறாரோ, அதற்கேற்ற படி அவள் வாழ்ந்துகொள்ள அவளைச் சார்ந்தவர்கள் உதவி செய்யவேண்டும். அவள் எடுக்கும் முடிவு படி நீங்கள் நடந்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.


وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ ۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًۭا مَّعْرُوفًۭا ۚ وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَٰبُ أَجَلَهُۥ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌۭ.

2:235. நான்கு மாதம் பத்து நாட்கள் என்ற இந்த ‘இத்தா’ காலக் கட்டத்தில், அந்த விதவைப் பெண்ணை மணந்து கொள்ள நாடுவோர் மறைமுகமாகப் பேச்சு எடுப்பதில் குற்றமில்லை. அப்படி ஓர் எண்ணம் மனதில் மறைமுகமாக வைத்திருந்தாலும் தவறில்லை. உங்களுடைய எண்ணம் என்னவென்பது அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நிக்காஹ் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்யாதீர்கள். கணவனை இழந்த அந்தப் பெண்மணி துக்கத்திலிருந்து மீண்டு இருக்கமாட்டாள். மறுமணத்தைப் பற்றி எண்ணமும் இருக்காது. எனவே எதையும் முறைப்படி தக்க உறவினர்கள் மூலமாக தம் எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். இருப்பினும் இந்த காலத் தவணைக்குள் திருமணம் செய்துகொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளாதீர்கள். உங்கள் மனதில் எழும் எண்ணங்களும் அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரியும் என்பதை மறவாதீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுங்கள். உங்களுடைய பாதுகாப்பு கருதியே இத்தகைய வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ.

2:236. மணமுடித்த பெண்ணை தீண்டாத நிலையில் தலாக் செய்ய நேர்ந்தால் அது குற்றமாகாது. மணக்கொடையான மஹரும் நிச்சயிக்கப்படவில்லை என்றால் இந்த மணக்கொடையைத் தரவேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் வசதி படைத்தவர்கள் அப்பெண்கள் குடும்ப வாழ்க்கை தொடர்வதற்கு உரிய வசதிகளை தம் தகுதிக்கேற்ப செய்து கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நன்மையான காரியங்களைச் செய்வது நல்லோர்கள் மீது கடமையாகும்.


وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةًۭ فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.

2:237. இவ்வாறு தம் மனைவியைத் தீண்டாத நிலையில் விவாகரத்து செய்ய நேர்ந்தால், ஒரு வேளை மணக்கொடையான மஹர் நிச்சயமாகி இருந்தால், அந்த மஹர் தொகையிலிருந்து பாதியை அளித்திடவேண்டும். இவ்வாறாக திருமண பந்தத்தில் இருப்போர், அழகிய முறையில் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்துகொள்வதைக் கொண்டு, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறமுடியும். அதாவது உயர் பண்புடையவர்கள் ஆகலாம். ஆக கணவனோ மனைவியோ பிரிந்துவிட எண்ணினால் அழகியமுறையில் பிரிந்து செல்லட்டும். சேர்ந்து வாழ நினைத்தால் அழகிய முறையில் சேர்ந்து வாழட்டும். நிச்சயமாக உங்கள் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளன என்பதை மறவாதீர்கள்.
மேற்சொன்ன இரு வாசகங்களில் “தம் மனைவியைத் தீண்டாத நிலையில் இருந்தால்” என்று வருகிறது. இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது போர்க் கால அடிப்படையில் ஆதரவற்றப் பெண்களின் பாதுகாப்பு கருதி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ள தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டது. (பார்க்க 4:3) இப்படி மணந்து கொண்டவர்கள் போர்களிலும் பொதுவாழ்விலும் ஈடுபட்டு வந்ததால், அவர்களைத் தீண்டும் வாய்ப்பும் பெறாமல் இருந்ததுண்டு. மேலும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அன்றி சிற்றின்பத்தை நாடி அவர்கள் மணந்து கொள்ளவில்லை என்றும் புலனாகிறது. சுமுகமான சூழ்நிலை உருவானதும், அப்பெண்களின் விருப்பப்படி, அவர்களுக்கு விவாகரத்து அளித்து, அக்கால கட்டத்தில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இளைஞர்களுக்கு மறுமணம் செய்து கொடுத்தார்கள். இத்தகைய ஏற்பாடுகள் நடந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் அறிவிக்கின்றன.


حَٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَٰنِتِينَ.

2:238. இவ்வாறாக ஒவ்வொரு சமூகப் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் போது, இறைவன் வகுத்துத் தந்துள்ள நெறிமுறைகளை கருத்தில் கொண்டு, நடு நிலைமையுடன் தீர்வு காணுங்கள். எப்போதும் உள்ளச்சத்துடன் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு உட்பட்டு தீர்ப்பளிப்திலேயே நிலைத்திருங்கள்.


فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًۭا ۖ فَإِذَآ أَمِنتُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ.

2:239. ஆயினும் இத்தகைய ஒழுங்குமுறை சட்டங்களை நடைமுறைப் படுத்தும்போதோ அல்லது தீர்ப்பு அளிக்கும் போதோ, பதற்றமான நிலை காரணமாக சட்ட ஒழுங்கு சீர்குலையும் என்று அஞ்சினால் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் நிதானத்தைக் கையாள வேண்டும். அச்சம் தீர்ந்து காலசூழ்நிலை மாறி வரும் வரையில் காத்திருங்கள். அதன்பின் முறைப்படி இறைவழிகாட்டுதல் அறிவித்ததைப் போல் நீதி வழங்குங்கள். அல்லாஹ்வின் அறிவுரைகளை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.


وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًۭا وَصِيَّةًۭ لِّأَزْوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍۢ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍۢ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌۭ.

2:240. பொதுப்படியான இந்த விஷயங்களுக்குப் பின், மீண்டும் குடும்பவியலை பற்றி மேற்கொண்டு விளக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் தம் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்தால், தன் மரணத்திற்குப் பின் பாதுகாப்புக் கருதி மணந்து கொண்ட மனைவிகளை (4:3) குறைந்தது ஒரு வருடமாவது தன் வீட்டிலேயே தங்கவைத்து முறைப்படி அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தரும்படி தன் வாரிசுதாரர்களுக்கு அவர் அறிவுறுத்துவது அவசியம். அவர்கள் தாமாகவே வீட்டைவிட்டு வெளியேற எண்ணி, முறைப்படி தன் வருங்கால தேவைகளைத் தானே நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்தால், அப்போது அவர்களை அழகியமுறையில் அனுப்பி வைப்பதில் குற்றமில்ல. அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மிகவும் உறுதிமிக்கவை என்பதையும், அதே சமயத்தில் ஒவ்வொரு சட்டத்தின் நோக்கமும் உயர்ந்தவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


وَلِلْمُطَلَّقَٰتِ مَتَٰعٌۢ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ.

2:241. இதேபோல் விவாகரத்து நிலுவையில் உள்ள இத்தா காலத்தில் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளை முறைப்படி ஏற்படுத்தித் தாருங்கள். (மேலும் பார்க்க 65:6-7) அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைப் பேணி நடப்பவர்கள் மீது இது கடமையாகும்.


كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.

2:242. இவ்வாறாக நீங்கள் அனைத்து விஷயங்களையும் நன்கறிந்து சிறந்த முறையில் செயலாற்றுவதற்காகவே அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன.
குடும்ப விவகாரங்களுக்குப் பின் நாட்டைக் காக்கும் விஷயத்திற்கு வாருங்கள்.


۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَٰهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ.

2:243. போர் சமயத்தில், பகைவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்த போதிலும், அவர்கள் மரண பயத்தில் தங்கள் வீடுகளை விட்டு மிரண்டோடி விட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?. போர்க் களத்தில் மரண பயமுள்ளவன் அல்லாஹ்வின் நியதிப்படி, உயிர் வாழத் தகுதியற்றவன் ஆவான். அச்சமின்றி துணிந்து செயல்படுபவனுக்கே அர்த்தமுள்ள வாழ்வு கிடைக்கிறது. இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து மனிதனுக்குக் கிடைக்கின்ற மிகப் பெரிய அருட்கொடையாகும். இருந்தும், மக்களில் பெரும்பாலோர் இதைப் புரிந்துகொள்ளாமல் துணிந்து செயல்படுவதில்லை.


وَقَٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.

2:244. நீங்கள் அவ்வாறு துணிச்சல் இன்றி வாழாதீர்கள். அனைத்துத் தரப்பு மக்களின் அமைதியான வாழ்விற்கு வழிவகை செய்யும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பைக் கட்டிக் காத்துச் சிறப்பாகச் செயல்பட தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் சொல் மற்றும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்குத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضْعَافًۭا كَثِيرَةًۭ ۚ وَٱللَّهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

2:245. உங்களுக்கு சிறந்ததொரு வாழ்வு கிடைக்க இறைவனின் ஆட்சியமைப்புக்குப் பொருளுதவி செய்வதும் மிக முக்கியமான ஒன்றாகும். அவற்றைக் கடனாகவே கொடுங்கள். அவை பன்மடங்காகப் பெருகி உங்களுக்கே திரும்பி வந்தடையும். இப்படியாக சிறப்பாகச் செயல்படுபவர்களின் செல்வங்கள் அல்லாஹ்வின் நியதிப்படி பெருகுகின்றன. (பார்க்க 2:261) இதற்கு மாற்றமாகச் செயல்படுவோரின் செல்வங்கள் சுருங்கி விடுகின்றன. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படியே விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மறவாதீர்கள்.
அதன் பின் இந்த ஆட்சியமைப்பைத் தலைமை தாங்கும் விஷயமும் முக்கியமான ஒன்றாகும். வரலாற்றின் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. இதை நன்றாக அறிந்து அதன்படி செயலாற்றுங்கள்.


أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّۢ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًۭا نُّقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَٰتِلُوا۟ ۖ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَٰرِنَا وَأَبْنَآئِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًۭا مِّنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ.

2:246. இந்தச் சம்பவம் மூஸா நபியின் மறைவுக்குப் பின் இஸ்ரவேலர்கள் மத்தியில் நடந்தது. அவர்களை வழிநடத்தி வந்த இறைத்தூதரிடம் அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஒரு படைத் தலைவனைத் தேர்ந்தெடுப்போம்” என்றனர். அதற்கு அவர், “போரிட உங்களுக்குக் கட்டளை வந்தால், நீங்கள் அதில் கலந்து கொள்ளாமல் இருந்துவிடுவீர்களா?” என வினவினார். அதற்கவர்கள், “எங்கள் மக்களையும், எங்களையும் ஊரைவிட்டு வெளியேற்றியவர்களுக்கு எதிராக, அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று ஆவேசமாகப் பேசினார்கள். ஆனால் போருக்கான கட்டளை வந்த போது, சிலரைத் தவிர மற்றவரெல்லாம் விரண்டோடி விட்டனர். இத்தகைய அநியாயக்காரர்கள் யார் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை.


وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًۭا ۚ قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةًۭ مِّنَ ٱلْمَالِ ۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةًۭ فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ ۖ وَٱللَّهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ.

2:247. மேலும் அந்த இறைத்தூதர் அவர்களிடம், “அல்லாஹ்வின் நியதிப்படி தாலூத் உங்களுடைய படைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்றதும் அவர்கள், “அவர் எப்படி எங்கள் அதிகாரியாக வர முடியும்? அவரைவிட நாங்கள் அல்லவா தகுதியானவர்கள்? அது மட்டுமின்றி அவரிடம் எந்த செல்வமும் இல்லையே” என்றனர். அதற்கவர், “நிச்சயமாக உங்களைவிட அவரிடம் தனிச் சிறப்புகள் பல உள்ளன. படைத் தளபதி ஆவதற்கு அவரிடத்தில் அறிவாற்றலும் உடல் வலிமையும் மிகுதியாக உள்ளன. மேலும் அவர் தனக்காக எந்த செல்வத்தையும் குவித்துக் கொள்வதில்லை. இந்தத் தகுதிகள் எல்லாம் உங்களிடம் இல்லை. இப்படியாகத்தான் அல்லாஹ்வின் நிரந்தர சட்ட விதிமுறைகளின்படி, யார் தகுதியானவராக இருக்கிறாரோ, அவர்தான் படைத்தலைவனாக ஆகவும், அரசாளும் அதிகாரத்தையும் பெறுகின்றார். அல்லாஹ்வின் அளவிலா அறிவாற்றலின் வல்லமை மிகவும் விசாலமானதாகும்” என்றார். (மேலும் பார்க்க 21:105)


وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ءَايَةَ مُلْكِهِۦٓ أَن يَأْتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٌۭ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌۭ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحْمِلُهُ ٱلْمَلَٰٓئِكَةُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

2:248. மேலும் அந்த இறைத்தூதர் அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய ஆட்சியின் சிறப்பு அம்சமாக, உங்கள் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படும். அவர் கொண்டுவரும் இறைவனின் செயல் திட்டங்களால், உங்களுக்குப் பெருமளவில் மனஆறுதல் கிடைக்கும். இன்னும் மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் பின்பற்றி பலர் ஏற்படுத்திச் சென்ற சாதனைகளை இவரும் படைப்பார். அவருடைய செயல்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற, பிரபஞ்ச இயற்கை சக்திகளின் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை வசப்படுத்தி செயல்படுவார். நீங்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால் இதில் நிச்சயமாக பல சான்றுகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
இதன் பின்னர் “தாலூத்” தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் முறைப்படி படைச் சேனைகளுக்குத் தக்க பயிற்சி அளித்து, உலகில் நடந்து வரும் அநியாய அக்கிரமங்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வந்தார்.


فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍۢ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ ۚ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًۭا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ ۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍۢ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةًۭ كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ.

2:249. இப்படியாக ஒருமுறை தாலூத், தம் படைகளுடன் புறப்பட்டுச் சென்றபோது, “நாம் போகும் வழியில் குறுக்கே ஓர் ஆறு வரும். அதிலிருந்து யாரும் நீர் அருந்தக் கூடாது. யார் அவ்வாறு அருந்துகிறாரோ, அவர் என்னோடு இருக்கமாட்டார். கடுமையான தாகத்தைத் தணிக்க தேவை ஏற்படின், ஒரு சிறங்கை தண்ணீர் மட்டும் அருந்தலாம். அவர்கள் மட்டுமே என்னுடன் தொடர்ந்து வருபவர் ஆவர்” என்று கட்டளையிட்டார். அதே போல் அவர் பேச்சைக் கேட்டு ஒரு சிறங்கை நீர் மட்டும் அருந்தியவர்கள், அவருடன் சென்றுவிட்டனர். ஆனால் வயிறு நிறைய நீரருந்தி இளைப்பாறியவர்கள் அலுத்துப் போய் விட்டனர். இதனால் அவர்கள், “இன்று ஜாலூத்துடன் போரிட வலுவில்லை” என்று கூறிவிட்டனர். அல்லாஹ்வின் நியதிப்படி தம் செயல்களின் விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டோரில் எத்தனையோ சிறு படையினர், பெரும் படையினரை வென்றிருக்கிறார்கள். யார் தாம் எடுத்த காரியத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து முயலுகிறார்களோ, அவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் உதவிகள் கிடைக்கின்றன.
படைத்தலைவனின் ஒவ்வொரு கட்டளையையும் படைவீரர்கள் முற்றிலும் அடிபணிவது மிக மிக அவசியம். தண்ணீர் அருந்தும் விஷயமும் ஒரு சோதனைக்காகவே பிறப்பித்த கட்டளையாகும்.


وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

2:250. மேலும் தாலூத் படையினர், ஜாலூத் படைகளுடன் களத்தில் சந்திக்க ஆயத்தமானபோது, “எங்கள் இறைவா! எங்களுக்கு எதையும் தாங்கும் மன வலிமையைத் தந்தருள்வாயாக! எங்களின் இம்முயற்சியில் தடுமாறாதபடி எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! உலகின் தீயவர்களை முறியடிக்க எங்களுக்கு உதவி செய்வாயாக!” என இறைவனிடம் தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தினர்.


فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍۢ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَٰلَمِينَ.

2:251. இவ்வாறு அவர்கள் அல்லாஹ் காட்டிய போர் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, ஜாலூத்தின் படையை முறியடித்தனர். களத்தில் பங்கெடுத்த தாவூத் நபி ஜாலூத்தைக் கொன்றார். இப்படியாக தாவூதுக்கு அரசாளும் உரிமையும் தகுதியும் பிற்காலத்தில் கிடைத்தன. மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
இவ்வாறே அல்லாஹ் நன்மை செய்யும் கூட்டத்தாரைக் கொண்டு, தீமை செய்யும் கூட்டத்தாரை அழிக்கிறான். அவ்வாறு அழிக்காவிட்டால் உலகமே சீர்கெட்டுப் போய்விடும். அகிலத்தார் அனைவரும் சிறப்பாக வாழ வழி செய்திருக்கும் இத்திட்டம், அல்லாஹ்வின் மாபெரும் கருணையை பிரதிபலிக்கிறது அல்லவா?


تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ.

2:252. ஒ மனிதனே! இவை யாவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற உண்மை வரலாறுகளாகும். இவ்வேதத்திலிருந்து அவற்றை எடுத்துரைப்பவராகிய நீர், நிச்சயமாக இறைத் தூதர்களில் ஒருவர் ஆவீர்.


۞ تِلْكَ ٱلرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍۢ ۘ مِّنْهُم مَّن كَلَّمَ ٱللَّهُ ۖ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَٰتٍۢ ۚ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَٰتِ وَأَيَّدْنَٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعْدِهِم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخْتَلَفُوا۟ فَمِنْهُم مَّنْ ءَامَنَ وَمِنْهُم مَّن كَفَرَ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلُوا۟ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ.

2:253. இப்படியாக உலகில் இறைத்தூதர்கள் மூலம் இறைக்கியருளப்பட்ட இறை வழிகாட்டுதல்கள் ஒரே கொள்கையைக் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். ஆனால் வெற்றி இலக்கு என்று பார்க்கும் போது, சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப தூதர்களில் சிலர் சிலரைவிட மிகைத்து இருந்தார்கள். சிலர் தகுதிக்கு ஏற்ப உயர் பதவியும் வகித்திருந்தார்கள். அதே போல மர்யமின் குமாரர் ஈஸாவுக்கும் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலை அளித்தோம். இன்னும் தூய்மையான சக தோழர்கள் அவருக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தனர்.
மற்ற உயிரினங்களுக்கு வாழ்வியல் நிர்ணயிக்கப்பட்டது போல, மனிதர்களையும் தனி இயல்பின் அடிப்படையிலேயே வாழவைக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் செயல்திட்டமாக இருந்திருந்தால், மனிதர்களையும் அவ்வாறே படைத்திருக்க முடியும்.
இது விஷயமாக இறைத்தூதர்கள் மூலம் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்பும், அவர்களுடைய மறைவிற்குப் பின், அவர்கள் தங்களுக்கிடையே சண்டை சச்சரவு எதுவும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டம் அவ்வாறாக இல்லை. மனிதனுக்கு முழுஅளவில் சுதந்திரத்தை அளித்து, அவன் எந்த வழிமுறையை வேண்டுமானாலும் தனக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் (18:29) என்ற சுய அதிகாரம் அளிப்பது என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. சிலர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடந்து சிறப்பாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
சிலர் அதை நிராகரித்து அதற்கு மாறுசெய்து அழிவைத் தேடிக்கொண்டவர்களும் இருக்கின்றனர். ஆக மற்ற உயிரினங்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் போல் மனிதனும் ஒரு குறிப்பிட்ட இயல்பின் அடிப்படையில்தான் வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தம் மனிதனுக்கு இல்லை.
இப்போது உங்கள் மனதில் எழுகின்ற கேள்வி என்னவென்றால், அல்லாஹ் மனிதனுக்கு ஏன் இப்படி முழு சுதந்திரத்தைக் கொடுத்து மனிதர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வைக்கவேண்டும்? என்பதே. ஆனால் இது, உங்களுடைய விருப்பம் போன்று ஏற்படக்கூடிய ஒன்றல்ல. இவையெல்லாம் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து அவற்றில் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற முழு ஞானத்தையும் வல்லமையும் பெற்ற அல்லாஹ்வின் செயல் திட்டங்களாகும். மனிதனுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டதும் அவற்றில் ஒன்றாகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا بَيْعٌۭ فِيهِ وَلَا خُلَّةٌۭ وَلَا شَفَٰعَةٌۭ ۗ وَٱلْكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

2:254. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்களுக்குக் கிடைத்துள்ள உபரி செல்வங்களைச் சமுதாய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க முன்வாருங்கள். இவ்வாறு செய்வதற்கு இப்போது உங்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு உங்களை விட்டுப் பறிபோன பிறகு, உங்களால் ஒன்றுமே செய்ய இயலாது. மேலும் அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கவிருக்கின்ற மகிழ்ச்சிகள் கிடைக்காமலே போய்விடும். நீங்கள் நினைப்பது போல் கொடுக்கல் வாங்கல் என்ற இந்த வியாபாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். யாருடைய நட்புறவின் பேரிலோ, பரிந்துரையின் பேரிலோ இந்த வாய்ப்பை மீண்டும் பெற இயலாது. (மேலும் பார்க்க 63:10) இந்தப் பேருண்மையை ஏற்க மறுப்பவர்கள் தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கின்றனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளட்டும்.


ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ.

2:255. (1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய கட்டளைக்கும் அடிபணிந்து செயல்படுதல் ஆகாது. அல்லாஹ் இயற்றிய சட்டதிட்டங்கள் நிலையானவை ஆகும்.
(2) அல்லாஹ்வுக்கு ஓய்வு உறக்கம் என்பது ஒருபோதும் கிடையாது.
(3) வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படியே செயல்படுகின்றன. அவற்றை மாற்றி அமைக்க யாருடைய பரிந்துறையும் செல்லாது.
(4) உங்கள் கண்ணெதிரே நடப்பவையும் உங்களுக்குப் பின்னால் நடப்பவையும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். ஓர் அணு அளவாயினும், ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை.
(5) அல்லாஹ்வின் செயல் திட்டத்திற்கு உட்பட்டே அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
(6) வானங்களையும் பூமியையும் கட்டுப்படுத்தும் அல்லாஹ்வின் வல்லமை எங்கும் பரந்து விரிந்து இருக்கிறது. அதாவது அவனது கட்டுப்பாட்டில் இல்லாத இடமே இல்லை. அவ்விரண்டையும் கட்டிக் காப்பதில் அவனுக்கு எவ்வித சிரமும் இருப்பதில்லை.
(7) இத்தகைய அளவிலா வல்லமையும் பேராற்றலும் உடையவன் அல்லாஹ்.
இதை மையமாக வைத்துத் தான் இவ்வேதமாகிய திருக்குர்ஆன் இறக்கி அருளப்படுகிறது.


لَآ إِكْرَاهَ فِى ٱلدِّينِ ۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشْدُ مِنَ ٱلْغَىِّ ۚ فَمَن يَكْفُرْ بِٱلطَّٰغُوتِ وَيُؤْمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسْتَمْسَكَ بِٱلْعُرْوَةِ ٱلْوُثْقَىٰ لَا ٱنفِصَامَ لَهَا ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ.

2:256. ஆனால் மனிதனைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வுடைய செயல்திட்டம் வேறு விதமாக உள்ளது. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட வேண்டும் என்பதே அத்திட்டமாகும். எனவே மார்க்க விஷயங்கள் அனைத்தையும் தெளிவாக்கிய பின், அதை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் மனிதனுக்கு எவ்வித நிர்பந்தமும் இருப்பதில்லை.
எந்தச் சமுதாயம் தீய வழியினை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படிச் செயல்படுகிறதோ, அவர்களுக்கு வளம் மிக்க வாழ்க்கைக்கு உறுதிமிக்க பாதை கிடைத்து விடுகிறது. நீங்கள் சொல்வதை அனைத்தையும் கேட்கும் வல்லமையும், செய்வதனைத்தையும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.


ٱللَّهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ ۖ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِ ۗ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:257.இன்னும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள், மனித வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாக நிற்கும். இவை அனைத்தும் அவர்களை, இருள் சூழ்ந்த வாழ்விலிருந்து ஒளிமயமான வாழ்வின் பக்கம் கொண்டு வந்து விடும்.
ஆனால் இந்த வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள், சுயநலம் கொண்ட மனோ இச்சைக்கே துணை போவார்கள். அது அவர்களை வெளிச்சத்தை விட்டு இருள்களின் பக்கம் இழுத்துச் சென்று விடும். அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக இம்மையில் நரக வேதனைகள் கொண்ட சமுதாயமாகவும், மறுமையிலும் நரக வேதனைகளில் தொடர்ந்து மூழ்கி இருப்பார்கள்.
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் அறிவுரைப்படி ஆட்சியமைப்பு ஏற்படுத்துவது கஷ்டமான காரியமாயிற்றே. அதற்கான எந்த வாய்ப்பும் இல்லையே. இது ஒருபோதும் இயலாத காரியம் என்று எண்ணுகிறீர்களா? இது விஷயமாக ஏற்கனவே வரலாற்று தொகுப்புகள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதலைக் கொண்டு இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்துவது இயலாத காரியம் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். அந்த முயற்சியின் தொடராக இப்ராஹீம் நபியின் வரலாற்று சம்பவங்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.


أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِى حَآجَّ إِبْرَٰهِۦمَ فِى رَبِّهِۦٓ أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ إِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّىَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحْىِۦ وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَٰهِۦمُ فَإِنَّ ٱللَّهَ يَأْتِى بِٱلشَّمْسِ مِنَ ٱلْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ ٱلْمَغْرِبِ فَبُهِتَ ٱلَّذِى كَفَرَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

2:258. இப்ராஹீம் நபியிடம் அந்நாட்டு அரசன் இறைவழிகாட்டுதலைப் பற்றி தர்க்கம் செய்ததைக் கவனித்தீரா? இப்ராஹீம் அந்த அரசனிடம், “அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ யார் வழி செய்துள்ளானோ இன்னும் யார் உருவாக்கிய சட்ட விதிமுறைகளின் படி மரணம் ஏற்படுகின்றதோ, அவனே என்னை பரிபாலிக்கின்ற இறைவன் ஆவான்” என்றார்.
அதற்கவன், “இதில் ஒன்றும் சிறப்பு இல்லை. நானும் உயிர் கொடுக்கவும் செய்கிறேன். உயிர் எடுக்கவும் செய்கிறேன்” என்றான்.
அதற்குப் பதிலளிக்கையில், “அல்லாஹ்வின் செயல்திட்டப்படி சூரியன் கிழக்கிலிருந்து உதயமாகிறது. உன்னால் முடிந்தால் அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய். பார்க்கலாம்” என்றார். அல்லாஹ்வின் பிரமாண்டமான பிரபஞ்ச செயல் திட்டத்தை அறிந்த அந்த அரசன், அதற்கு எதிராக எதுவும் பேச முடியாமல் திகைத்துப் போனான்.
இன்னும் அநியாயம் செய்யும் ஆட்சியமைப்பு ஒருபோதும் நல்வழியில் செல்ல முடியாது என்பதை அந்த அரசனுக்கு அவர் தெளிவுபடுத்தினார்.


أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍۢ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍۢ ثُمَّ بَعَثَهُۥ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍۢ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍۢ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةًۭ لِّلنَّاسِ ۖ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًۭا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:259. இறைவழிகாட்டுதல் இன்றி வாழும் சமுதாயங்களின் நிலையை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். பாழடைந்த ஒரு கிராமத்தின் வழியாக ஒருவன் செல்கின்றான். அதில் பெரும்பாலான வீடுகள் இடிந்தும், பார்ப்பதற்கு அவ்வூர் வாழத் தகுதியற்றதாகப் பாழடைந்து கிடக்கிறது. இதை எவ்வாறு சரி செய்து மீண்டும் உயிரூட்டுவது என்று எண்ணி அதைக் கடந்து சென்று விடுகிறான்.
அதன்பின் அல்லாஹ்வின் நியதிப்படி, அவ்வூர் நூறு ஆண்டுகள் வரையில் மடிந்தே கிடக்க நேர்கிறது. அவ்வூராரிடம் எத்தனை ஆண்டுகளாக இப்படி வாழ்கிறீர்கள் என்று கேட்டால், சில நாட்களாகத்தான் இப்படி வாழ்ந்து வருகிறோம் என்பார்கள். இல்லை. அவ்வூர் நூறு ஆண்டுகளாக இப்படித்தான் மடிந்து கிடக்கிறது.
ஆனால் அவர்களின் உணவு மற்றும் பானங்கள் விஷயங்களில் எவ்வித மாறுதலும் இல்லை. காரணம் தம் அடிப்படை தேவைகள் மட்டும் நிறைவேறினால் போதும் என்ற நிலையில் வாழ்கிறார்கள். அதுபோலவே போக்குவரத்துக்கு வேண்டிய சில கால்நடைகளைப் பார்க்கலாம்.
இதை உவமானமாக வைத்து உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள். மேலும் மனித படைப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் கவனியுங்கள். முறைப்படி எலும்புகளின் சேர்க்கை, அவற்றின் மேல் சதை என்று எல்லா அங்கங்களும் ஒன்றிணைந்தால் தான் மனிதன் என்று உருவம் பெறுகிறான். அவை தனித்தனியே இருந்தால் எலும்புகளும் பாழடைந்த சதைகளும்தான் மிஞ்சும்.
அது போல ஊர்க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் செழிப்பான சமுதாயமாக உருவாகும். தனித்தனியே அவரவர் சுயநலப் போக்கின்படி வாழ்ந்தால் அந்த ஊரும், ஊர் மக்களும் நடைபிணங்களாகத் தான் வாழ்ந்து மடிந்துப் போவார்கள். இந்த எடுத்துக்காட்டைக் கொண்டு உண்மை விளங்கிய போது, நிச்சயமாக எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் பேராற்றலும் அளவிலா வல்லமையும் மகத்தானவை என்பதையும் அந்த வழிப்போக்கன் அறிந்துகொண்டான்.
திசை மாறிச் செல்லும் இவ்வுலகத்தைப் பார்த்து, நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி காலத்தைக் கடத்திவிட்டால், இவ்வுலகம் காலம் காலமாய் அப்படியே அழிவை நோக்கிச் சென்று விடும். இறைவழிகாட்டுதலின் உண்மை நிலையை அறிந்தவர்கள், இங்குள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கி சமுதாயச் சமச் சீர்நிலை உருவாகப் பாடுபட வேண்டும் என்பதே இந்த உதாரணத்தின் மூலம் கிடைக்கின்ற படிப்பினை ஆகும்.


وَإِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةًۭ مِّنَ ٱلطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ ٱجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍۢ مِّنْهُنَّ جُزْءًۭا ثُمَّ ٱدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًۭا ۚ وَٱعْلَمْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.

2:260. செத்து மடிந்து கிடக்கும் இவ்வூர் மக்களை உயிர் பெறச் செய்வது எவ்வாறு என்ற ஐயப்பாடு இப்ராஹீம் நபி மனதிலும் இருந்து வந்தது. ஒருமுறை அவர், “இறைவா! உயிரற்று ஜடமாக வாழும் இம்மக்களை நீ எவ்வாறு உயிர் பெறச் செய்வாய்?” என்று கோரியபோது இறைவன், “என் வழிகாட்டுதலில் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான். “மெய்யாகவே நம்புகிறேன். ஆனால் தெளிவுபெறும் பொருட்டு இதை நான் கேட்கிறேன்” என்றார். அதற்கு இறைவன், “நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை நன்றாகப் பயிற்சி கொடு. அவை உம்மிடம் நன்றாகப் பழகிய பின்னர், அவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து மலை உச்சி மீது வைத்து விட்டு அவற்றை நீ அழைத்துப் பார். அவை உம்மிடம் வேகமாய்ப் பறந்து வந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் பேரறிவாளன் என்பதை அறிந்துகொள்” என்று கூறினான்.
அதாவது ஐந்தறிவு பெற்ற பறவைகளே நன்றாகப் பழகின பின், எவ்வளவுதான் தூரமாக அனுப்பினாலும் அவை உன்னுடைய ஒர் அசைவிற்கு இசைந்து ஒடோடி வந்து விடும் என்றால், ஆறறிவு பெற்ற மனிதனும் அவ்வாறு வர என்ன சிரமம் இருக்கப் போகிறது? அதற்காக நீ இறைவழிகாட்டுதலின்படி மக்களை நன்றாகப் பயிற்சி அளித்து வழிநடத்திச் செல்லவேண்டும். இதற்காக பொறுமையும் நிதானமும் விடாமுயற்சியும் அவசியமாகின்றன.


مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍۢ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ.

2:261. இத்தகைய செயல் திட்டத்தை நிறைவேற்ற தனக்குக் கிடைத்துள்ள உபரி சொத்துச் செல்வங்களை எல்லாம் கொடுத்து விட்டால், அவை குறைந்து விடுமே என்று நினைக்கத் தோன்றும்.
உதாரணமாக ஒரு விவசாயி தம்மிடமுள்ள தானியத்தை பூமியில் போட்டுவிட்டால் அது அழிந்து விடுமே என்று எண்ணி, அதை அவன் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டால் உணவு உற்பத்தியை எப்படி பெருக்க முடியும்? எனவே அவன் முறைப்படி பயிரிடுவதால்தான் அது பன்மடங்காகி, அவனுக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ச்சியாக உணவு கிடைத்து வருகிறது.
அது போல அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு செயல் திட்டங்களுக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால் அதன் செயல்திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்?
எனவே இறைவனின் செயல திட்டத்தற்கு உதவி செய்வது எதுவும் வீண் போகாது. அதுவும் பன்மடங்காகப் பெருகி அதன் பலன்கள் உங்களிடமே வந்தடையும். அல்லாஹ்வின் அறிவுரையின்படி உழைத்து வாழ்பவர்களின் செல்வங்கள் பெருகி விடுகிறது. அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا۟ مَنًّۭا وَلَآ أَذًۭى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:262. அல்லாஹ் காட்டிய வழியில் உதவி செய்பவர்கள், தாம் உதவி செய்ததைப் பிறரிடம் சொல்லிக் காண்பிக்கக் கூடாது. (பார்க்க 76:9) அவ்வாறு சொல்லிக் காட்டி மற்றவர்களை நோவினை செய்வதும் கூடாது. தாம் செய்யும் நற்செயல்களுக்கு உரிய பிரதிப்பலன்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பி உதவி செய்பவர்களின் வாழ்வில் எவ்வித துக்கமோ துயரமோ இருக்காது.


۞ قَوْلٌۭ مَّعْرُوفٌۭ وَمَغْفِرَةٌ خَيْرٌۭ مِّن صَدَقَةٍۢ يَتْبَعُهَآ أَذًۭى ۗ وَٱللَّهُ غَنِىٌّ حَلِيمٌۭ.

2:263. பொருளுதவி செய்து, நோவினை ஏற்படும்படி பேசுவதை விட, கனிவான இனிய சொற்களும் பிறர் நலனைப் பாதுகாக்கும் எண்ணங்களுமே மேலான செயலாகும். நீங்கள் உதவி புரிந்தால் அது உங்கள் நலனுக்கே. அல்லாஹ் எவ்விதத் தேவையும் அற்றவன். மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் நிலைமாறா நிரந்தரமானவையாகும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌۭ فَأَصَابَهُۥ وَابِلٌۭ فَتَرَكَهُۥ صَلْدًۭا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍۢ مِّمَّا كَسَبُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.

2:264. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் மக்கள் மத்தியில் புகழ் பெறுவதற்காக, தான தர்மம் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் உண்மையிலேயே அல்லாஹ்வையும் அவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆகிரத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும். நீங்கள் அவ்வாறு செய்து வரும் தான தர்மங்களால் ஒரு பலனும் கிடைக்காமல் வீணாகிவிடும். எவ்வாறு கற்பாறைகள் மீது மழை பெய்யும் போது, அதன் மீது படிந்துள்ள தூசியை மழைநீர் அடித்துச் சென்றுவிடுமோ, அது போல நீங்கள் செய்த தர்மங்களின் பலன்கள் சமுதாயத்தில் நிலைக்காமல் வீணாகிப் போயிவிடும். அல்லாஹ்வின் அறிவுரைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.
சிந்தனையாளர்களே! மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகச் செய்யும் தர்மத்திற்கும் ஆஃகிரத்திற்கும் ஒப்பிட்டுச் சொல்லப்படுவதைக் கவனியுங்கள். அதாவது இப்படி தனிப்பட்ட முறையில் தான தர்மம் செய்தால், நலிந்த மக்களிடம் கையேந்தும் பழக்கம் தான் அதிகமாகி விடும். நாளடைவில் அவர்கள் அழிவிற்குள்ளாகி விடுவார்கள். இது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானதாகும்.


وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًۭا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌۭ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌۭ فَطَلٌّۭ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.

2:265. மாறாக அல்லாஹ்வின் விருப்பப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலமாக அனைத்துத் தரப்பு மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் முறையாக உதவி செய்து வரவேண்டும். இப்படிச் செய்யும் உதவிகள்தாம் பலனுள்ளதாக இருக்கும்.
எவ்வாறு மேட்டுப் பகுதியில் இருக்கும் பூமியில் பெருமழை பெய்தாலும், கொஞ்சமே பெய்தாலும் அது செழிப்புடன் இரட்டிப்பான நல்ல விளைச்சலைத் தருகின்றதோ, அது போல நீங்கள் இறைவனின் ஆட்சியமைப்பிற்கு, உங்களிடம் உள்ள உபரிச் செல்வங்களை அளித்து, சிறப்பான சமுதாயம் உருவாகப் பங்கெடுத்துக் கொண்டால், உங்களுள் சிறப்பான ஒழுக்க மாண்புகளும் செயல்வேகமும் வளரும். ஆக நீங்கள் செய்வது எதுவும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.


أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٌۭ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَابٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلْكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٌۭ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعْصَارٌۭ فِيهِ نَارٌۭ فَٱحْتَرَقَتْ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ.

2:266. இன்னொரு உதாரணத்தையும் கவனித்துப் பாருங்கள். ஒருவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட தோட்டம் ஒன்று இருக்கிறது. அதன் பக்கமாக நீரோடைகள் ஒலித்து ஓடுகின்றன. அதில் எல்லா வகையான கனி வகைகளும் விளைகின்றன.
முதுமை அடைந்த அதன் சொந்தக்காரருக்கு, அறியா வயதில் சம்பாதிக்க இயலாத பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையில், அனல் பறக்கும் சூறாவளிக் காற்று வந்து, அந்தத் தோட்டத்தை நாசமாக்கிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவருக்கு எந்த அளவிற்கு வேதனையும் துக்கமும் ஏற்படும்? அப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்படுவதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
அது போல நீங்களும், காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த சமுதாய அமைப்பு அழிந்து போவதை விரும்புவீர்களா? அப்படி அழியாமல் இருக்கத்தான் இறைவழிகாட்டுதல் அளிக்கப்படுகின்றன. நீங்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதாரணங்கள் தரப்படுகின்றன.
மக்களை அறியாமையில் விட்டுவிட்டால் சமுதாயத்தை நேர்வழியில் வழிநடத்திச் செல்லும் பொறுப்பு அவர்களிடம் இல்லாமல் போய்விடும். அதனால் அச்சமுதாயம் அழிவைச் சந்திக்கும் போது அதைக் காப்பாற்ற முடிவதில்லை. ஏனெனில் அது அனல் பறக்கும் புயலைப் போல கலகம் கலவரம் போர் என்று எல்லாமே கட்டுக்கடுங்காமல் போய்விடும். மேலும் எதனால் அழிவுகள் ஏற்படுகின்ற என்ற உண்மைகளையும் அக்கால மக்களால் அறிந்து கொள்ள முடியாது.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِن طَيِّبَٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ أَخْرَجْنَا لَكُم مِّنَ ٱلْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا۟ ٱلْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغْمِضُوا۟ فِيهِ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَنِىٌّ حَمِيدٌ.

2:267. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உழைத்து ஈட்டிய பொருட்கள் மற்றும் நிலத்தில் பயிரிட்டு பெற்ற தானிய வகைகளில் சிறந்தவற்றையே இறை ஆட்சியமைப்புக்குக் கொடுத்து உதவுங்கள். நீங்கள் அதிலிருந்து பயனற்றதைக் கொடுக்க எண்ணாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு வேறொருவர் கொடுத்தால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொள்வீர்களா?
அது போலத்தான் இந்த இறை ஆட்சியமைப்பும் ஆகும். பயனற்றதையும் தரங்கெட்டதையும் பெற்றுக்கொள்ள இந்த அமைப்பு ஒன்றும் கையேந்தி நிற்கவில்லை. இவையெல்லாம் உங்கள் நன்மைக்காக செலவிடத்தான் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. நீங்கள் கொடுக்க விரும்பவில்லை என்றால் அதன் பலன்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். அகிலங்களைப் படைத்த அல்லாஹ் தன்நிறைவு பெற்றவன். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் போற்றுதலுக்கு உரியவையாக இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


ٱلشَّيْطَٰنُ يَعِدُكُمُ ٱلْفَقْرَ وَيَأْمُرُكُم بِٱلْفَحْشَآءِ ۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةًۭ مِّنْهُ وَفَضْلًۭا ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ.

2:268. இவ்வாறு இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்து விட்டால், நமக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று உங்களிடமுள்ள “சுயநலமும் கஞ்சத்தனமும்” என்ற ஷைத்தான் உங்களை பயமுறுத்தும். அது மட்டுமின்றி உங்கள் மனோ இச்சையானது, தவறான ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யும்படியும் தூண்டிக் கொண்டே இருக்கும்.
ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலோ உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கைக் கிடைக்க நாடுகிறது. மேலும் அந்த வழிகாட்டுதல்படி வாழ்ந்தால், மென்மேலும் செல்வச் சிறப்புடன் சந்தோஷமாக வாழ வழிகள் பிறக்கும் என்றும் வாக்களிக்கிறது. நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும், விசாலமான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை மனதில் கொண்டு சரியான பாதையில் வழிநடத்திச் செல்லுங்கள்.


يُؤْتِى ٱلْحِكْمَةَ مَن يَشَآءُ ۚ وَمَن يُؤْتَ ٱلْحِكْمَةَ فَقَدْ أُوتِىَ خَيْرًۭا كَثِيرًۭا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.

2:269. இப்படியாக அல்லாஹ்வின் அறிவுரைப்படி வாழ நாடுவோருக்கு, முழு அறிவாற்றலும் சிந்தனையின் சீற்றமும் கிடைத்துவிடுகிறது. கூடவே கணக்கில்லா நன்மைகளும் வந்தடைகின்றன. எனினும் அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.


وَمَآ أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍۢ فَإِنَّ ٱللَّهَ يَعْلَمُهُۥ ۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍ.

2:270. இன்னும் இறை ஆட்சியமைப்புக்கு எதைக் கொடுத்து உதவினாலும் அல்லது சந்தர்ப்பம் ஏற்படும் போது உதவி செய்ய உறுதி கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே உதட்டளவில் சொல்லிக் கொண்டு, அதற்கு மாற்றமாக செயல்படுவோரின் நயவஞ்சகமும் வெளிச்சமாகி விடும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆட்சியமைப்பின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது.


إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.

2:271. நலிந்த மக்களின் நன்மைக்காக அளிக்கும் கொடைகளும், உதவித் தொகைகளும் மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தூண்டும் வகையில் வெளிப்படையாகச் செய்வதும் நல்லதே. நீங்கள் அவற்றை மறைமுகமாகச் செய்தாலும் நன்மையானதே. இத்தகைய நற்செயல்களால் அறியாமையில் செய்து வந்த தீய செயல்கள் உங்களைவிட்டு நீங்கி, நற்பலன்கள் உங்களுக்கு கிடைத்து வரும். ஆக நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்குத் தெரியும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். வெறும் புகழை வேண்டி செயல்படாதீர்கள்.


۞ لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍۢ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّهِ ۚ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍۢ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ.

2:272. நபியே! இத்தகைய நேர்வழியினை எடுத்துரைப்பதுதான் உங்கள் கடமையாகும். மக்களை நேர்வழியில் கொண்டுவருவது உங்கள் பணியல்ல. ஏனெனில் யார் நேர்வழியில் செல்ல நாடுகிறார்களோ, அவர்களுக்கே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நேர்வழியில் கொண்டுச் செல்லும். மக்கள் நன்மைக்காக நீங்கள் எதைச் செய்தாலும், அதன் நன்மை உங்களுக்கே வந்தடையும். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் எதைச் செய்தாலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப அமைப்பு ரீதியாகவே செய்யவேண்டும். அப்போதுதான் அதன் பலன்கள் திரும்ப உங்களிடம் வந்தடையும். (பார்க்க 2:261) இதில் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது.


لِلْفُقَرَآءِ ٱلَّذِينَ أُحْصِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًۭا فِى ٱلْأَرْضِ يَحْسَبُهُمُ ٱلْجَاهِلُ أَغْنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَٰهُمْ لَا يَسْـَٔلُونَ ٱلنَّاسَ إِلْحَافًۭا ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ.

2:273. இவ்வாறு வசூலிக்கபட்ட உதவிப் பொருட்கள் எவருக்கும் பிச்சையாகத் தரப்பட மாட்டாது. மாறாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேற, மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு இதற்காகவே அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்குத் தான் இந்த உதவிப் பொருட்கள் போய் சேரும். அவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு செல்வந்தர்கள் போன்று தோன்றலாம். ஆனால் நீங்கள் அவர்களுடைய முக அடையாளங்களால் அவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வீர்கள். அவர்கள் மற்றவர்களிடம் வருந்தி எதையும் கையேந்த மாட்டார்கள். இப்படி வாழ்பவர்களின் நலனுக்காக நீங்கள் கொடுப்பது யாவும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.


ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ سِرًّۭا وَعَلَانِيَةًۭ فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:274. இப்படி மக்கள் நலனுக்காக இரவு பகல் என்று பாராமல் தேவைப்படும் போதெல்லாம் யார் உதவி செய்து வருகிறார்களோ, அவர்களுடைய இறைவனிடமிருந்து நிச்சயமாக நற்பலன்கள் திரும்பக் கிடைத்துவரும். அத்தகையவர்கள்தாம் அச்சமும் துயரமும் இல்லாத நிம்மதியான வாழ்விற்கு உரியவர்கள் ஆகிறார்கள். மேலும் அவர்கள்தாம் ஆட்சிக்கும் அதிகாராத்திற்கும் உரியவர்கள் ஆகிறார்கள்.


ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ ۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ ۚ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌۭ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

2:275. மாறாக சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பில் சுகமாக வாழ விரும்புவார்கள். வட்டிக்குக் கடன் கொடுத்து வாழ்க்கை நடத்துவார்கள். இந்நிலை இனி நீடிக்காது. இறைவனின் ஆட்சி நிலைபெறும் காலகட்டத்தில் அதற்குத் தடை விதிக்கப்படும். ஆனால் வட்டித் தொழில் செய்பவர்கள் பாம்பு தீண்டிவிட்டது போல் துடிதுடித்துப் போவார்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்கு நியாயம் கற்பிக்க ஆயிரமாயிரம் காரணங்களைக் காட்டுவார்கள். வட்டியும் ஒரு வகை வியாபாரம்தானே என்பார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் வியாபாரத்தை ஆகுமானதாகவும் “ரிபா” எனும் வட்டியைத் தடை விதிக்கவும் செய்கிறது. இறைக் கட்டளை வந்த பின் யார் இதைவிட்டு விலகிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது நல்லது. இருப்பினும் ஏற்கனவே வட்டியாக வசூலித்ததை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு அவர்கள் வட்டித்தொழிலை விடவில்லை என்றால் அவர்களுடைய விவகாரங்களை, அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு கவனித்துக் கொள்ளும். அவர்கள் தண்டனைக்குரியவர் ஆவார்கள். அதில் அவர்கள் நீண்ட ஆயுளைக் கழிப்பார்கள். மரணத்திற்குப் பின்பும் இதே நிலை நீடிக்கும். (விளக்கத்திற்கு பார்க்க 30:39)


يَمْحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰا۟ وَيُرْبِى ٱلصَّدَقَٰتِ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ.

2:276. அல்லாஹ்வின் வழிகாட்டுதல் படி வட்டியை ஒழித்துக்கட்டி, நலிந்த மக்கள் பலன் பெறும் வகையில் உதவி செய்து வந்தால், அதன் நன்மை அவர்களுக்குக் கிடைக்கும் என்கிறது. இந்த அறிவுரைக்கு எதிராகப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:277. யார் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு, சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைத்து, தீமையைத் தடுத்து நன்மையின் பக்கம் அழைப்பு விடுத்து மக்களின் நல்வாழ்வு மலர வழிகாட்டும் :ஸலாத"முறையை நிலைநிறுத்தி, இறை ஆட்சியமைப்புக்கு உதவி புரிகிறார்களோ, அவர்களுக்குப் பல வகையில் நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அவர்களுடைய வாழ்வில் எவ்வித அச்சமோ துயரமோ நெருங்காது.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَذَرُوا۟ مَا بَقِىَ مِنَ ٱلرِّبَوٰٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

2:278. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உண்மையிலேயே முஃமினாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சி நிலுவையில் இருக்கும் வட்டித் தொகையையும் வசூலிக்காதீர்கள்.


فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍۢ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ.

2:279. அதையும் மீறி வட்டித் தொழிலைக் கைவிடவில்லை என்றால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை எதிர்த்துப் போரிட தயாராகி விட்டதாகக் கருதப்படும். நீங்கள் திருந்தி அதைவிட்டு விலகிக்கொண்டால் கடன் தொகையை திரும்பப் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இல்லையெனில் அதையும் இழக்க நேரிடும். மேலும் கடன்பட்டோருக்கு எதிராக அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். மக்களிடம் ஜகாத் பணத்தை (Tax) வசூலிக்க அரசுக்கு மட்டும் உரிமை உண்டு. தனிப்பட்ட முறையில் கடன் கொடுத்துவிட்டு ஏழை எளிய மக்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது, போலி அரசாங்கம் நடத்துவதற்கு ஒப்பானதாகும். எனவேதான் அவர்களை எதிர்த்து இஸ்லாமிய ஆட்சி போர் பிரகடனம் செய்கிறது.


وَإِن كَانَ ذُو عُسْرَةٍۢ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍۢ ۚ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌۭ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

2:280. மேலும் கடனாளி மிகவும் கஷ்டத்தில் இருந்தால், வசதி ஏற்படும் வரை அவருக்குத் தக்க அவகாசம் கொடுங்கள். அவரால் ஒருபோதும் திருப்பிக் கொடுக்க இயலாது என்ற நிலை இருந்தால், கடன் தொகையை தானமாகக் கருதி விட்டுவிடுங்கள். அதனால் ஏற்படும் நன்மையை அறிந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியுங்கள்.


وَٱتَّقُوا۟ يَوْمًۭا تُرْجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ.

2:281. நீங்கள் செய்து வரும் எல்லா செயல்களுக்கும் அல்லாஹ்விடம் பதிலளிக்கும் தருணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை அஞ்சி செயல்படுங்கள். அப்படியொரு கட்டத்தில் அவரவர் செய்து வந்த நல்ல செயல்களோ தீய செயல்களோ அதற்கேற்ப கூலி கிடைத்துவிடும். அதில் அணு அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது.


أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ ۚ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًۭٔا ۚ فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ ۚ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ ۖ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌۭ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ ۚ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ ۚ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ۚ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ ۖ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةًۭ تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا ۗ وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ ۚ وَلَا يُضَآرَّ كَاتِبٌۭ وَلَا شَهِيدٌۭ ۚ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

2:282. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! கடன் கொடுக்கல் வாங்கல் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதல்ல. கடனாக பணத்தை கொடுக்கவும் செய்யலாம். வாங்கவும் செய்யலாம். ஆனால் அதற்காக முறைப்படி எழுதிக்கொள்ளுங்கள். கடனுதவி பெறுபவர் யாரும் அதை எழுதிக்கொடுக்க மறுக்கவும் கூடாது. கடன் ஒப்பந்தத்தை எழுதுபவரும் முறைப்படி எழுதித் தர வேண்டும். எழுதப் படிக்க ஞானம் பெற்றிருப்பவர்கள் இருவருக்கும் பாதிக்காத வகையில் நீதமாகச் செயல்படவேண்டும். கடன் ஒப்பந்தத்தில் எவ்விதக் குறைப்பாடும் இருக்கக்கூடாது. அதற்காக கடன் வாங்கியவர் மற்றும் கடன் கொடுத்தவர் முன்னிலையில் எழுதப்பட்டதை வாசித்துக் காட்டவேண்டும்.
இவ்வாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். கடனுதவி பெறுபவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தாலோ அல்லது முதுமை போன்ற காரணங்களுக்காக அதைப் படிக்க இயலாமல் இருந்தாலோ, அவருக்குத் துணையாக உற்ற நண்பனை வைத்துப் படித்துக் காட்டட்டும். இது விஷயமாக இரண்டு சாட்சியாளர்களையும் வைத்துக்கொள்ளுங்கள். சாட்சியாளர்களில் இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லை என்றால் ஒர் ஆணும் மற்ற ஆணுக்குப் பதிலாக இரண்டு பெண்களையும் சாட்சிகளாக வைத்துக் கொள்ளலாம். இரண்டு பெண்கள் எதற்கு என்றால் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருக்கலாம். (43:18). மேலும் சாட்சிக்காக நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டால், அவர்கள் மறுக்கலாகாது.
கடன் தொகை சிறியதோ பெரியதோ காலக்கெடு வைத்துக் கடன் ஒப்பந்தத்தை எழுதுவதில் முறைகேடுகள் எதுவும் இருக்கக்கூடாது. இதுவே நியாயமான முறையில் நடந்து கொள்வதற்காகவும், கடன் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிரச்னை எதுவும் இல்லாமலிருக்க சாட்சியங்கள் நியமனம் ஆக்கியதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட சிறந்த வழிமுறைகளாகும்.இதைத் தவிர உங்களிடையே நடைபெற்று வரும் ரொக்க வியாபாரங்களுக்காக அதை எழுதிக் கொள்ளாவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. இருந்தும் பில், ரசீது போன்ற தக்க ஆவணங்களை ஏற்படுத்திக் கொள்வதும் மிகவும் நல்லது. இதை நினைவில் கொள்ளுங்கள். கடன் ஒப்பந்தங்களை எழுதுபவர் எந்த வகையிலும் யாருக்கும் தீங்கிழைக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின் சட்டங்களின்படி குற்றவாளியாவார்.
எனவே ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவென்பதை அனுசரித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள். வஹீ என்னும் இறைவழிகாட்டுதல்கள் மூலமாக இவற்றை உங்களுக்காக அறிவிக்கிறோம். எல்லா விஷயங்களைப் பற்றியும் முழு ஞானமும் உடைய அல்லாஹ்விடமிருந்து வரும் வழிகாட்டுதல்கள் இவை என்பதை அறிந்து அதன்படிச் செயல்படுங்கள்.
பெண்களில் இரண்டு சாட்சியங்கள் விஷயத்தில் “ஒருவர் அச்சம் காரணமாக மறந்து விட்டால் மற்றவர் நினைவுறுத்தலாம்” என்று மூல மொழியில் சொல்லப்படுவதாக மொழி பெயர்த்து உள்ளார்கள். அதாவது கல்வி ஞானம் பெறாத கால கட்டத்தில் பெண்களின் நிலை அவ்வாறு இருக்கலாம். கல்வி ஞானம் வளர்ந்த பின் அவர்கள் மறக்க வேண்டிய நிலை இருக்காது. மேலும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் சங்கோசப்பட மாட்டார்கள். அப்போது சாட்சிக்காக ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டாலே போதுமானது.


۞ وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍۢ وَلَمْ تَجِدُوا۟ كَاتِبًۭا فَرِهَٰنٌۭ مَّقْبُوضَةٌۭ ۖ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًۭا فَلْيُؤَدِّ ٱلَّذِى ٱؤْتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ ۗ وَلَا تَكْتُمُوا۟ ٱلشَّهَٰدَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٌۭ قَلْبُهُۥ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ.

2:283. ஒரு வேளை நீங்கள் பயணத்தில் இருக்கும் நிலையில் கடனுதவி செய்ய நேர்ந்து, கடன் ஒப்பந்தங்களை எழுத வாய்ப்பில்லை என்றால், கடன் வாங்குபவரிடமிருந்து ஏதாவது பொருளை அடமானமாகப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருளை கடன் தீர்ந்ததும் திருப்பிக் கொடுத்து விடவேண்டும். இப்படியாக அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி நடந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இதற்குச் சாட்சியாக இருந்தால் அந்தச் சாட்சியத்தை மறைக்காதீர்கள். இவ்வாறு மறைப்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நீங்கள் செய்யும் இத்தகைய செயலால் உங்கள் மனம் நிச்சயமாகப் பாவத்திற்குள்ளாகிறது. மேலும் இதனால் உங்களுடைய வளர்ச்சி தடைபட்டுப் போய்விடுகிறது. ஏனெனில் உங்களுடைய எந்த ஒரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவு”களிலிருந்து தப்பித்துச் செல்ல இயலாது. உங்களுடைய எல்லா செயல்களும் அல்லாஹ்விற்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.


لِّلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا۟ مَا فِىٓ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ ٱللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

2:284. நினைவில் கொள்ளுங்கள். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அதன்படி மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய விளைவுகளை அவை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும். ஆகவே நீங்கள் வெளிப்படையாகச் செயல்படுவதும், மறைமுகமாகச் செயல்படுவதும் செயல்வினைச் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும். அதன் பலன்களும் பாதிப்புகளும் உங்களுக்குத்தான் ஏற்படும். ஆக எந்தச் செயலுக்கு என்ன விளைவுகள் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படியே உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வும், வேதனைமிக்க வாழ்வும் கிடைத்து வரும். எல்லா படைப்புகளின் மீதும் பேராற்றலுடைய அல்லாஹ்விடமிருந்து உருவாக்கப்பட்ட சட்டவிதிகள் இவை.


ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ ۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّن رُّسُلِهِۦ ۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ.

2:285. இவ்வாறு இறைவனால் தீர்மானிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் -“வஹீ” என்னும் வழிகாட்டுதல்கள், இறைத்தூதர்கள் மூலமாக அருளப்படுகின்றன. இறைத்தூதரும் அவரோடு இருக்கும் மூஃமின்களும் இவற்றின் உண்மை நிலையை சிந்தித்து ஏற்றுக்கொள்கின்றனர். அது மட்டுமின்றி அல்லாஹ்வின் மீதும், பிரபஞ்சம் செயல்பட உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு இயற்கை சக்திகளாகிய “மலக்குகள்” மீதும், இறைத்தூதர்கள் மீதும், அவர்கள் மூலமாக வந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். மூஃமின்களின் இந்தக் கூட்டத்தார் ஒரு தூதரை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை ஏற்க மறுக்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்லர். இறைத்தூதர்கள் விஷயத்தில் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். இவர்களுடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செவியேற்றால் அதன்படியே நடந்து கொள்வார்கள். இவர்களிடையே ஏற்படும் ஒருமைப்பாட்டினால் சமுதாயத்தில் சீர்கேடுகளைத் தவிர்த்து அதன் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வருவார்கள். இப்படியாகத் தம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கி, படிப்படியாக முன்னேறி, முழு அளவில் வளர்ச்சிப் பெற்று இறைவன் நிர்ணயித்துள்ள உன்னத இலக்கை அடைவார்கள்.


للَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًۭا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

2:286. நினைவில் கொள்ளுங்கள். உங்களிடையே மனித நேயமும் ஆற்றல்களும் வளரச் செய்வதற்காகவே, இந்தச் சட்டதிட்டங்கள் அருளப்பட்டு அதன்படி சமுதாயம் முழுவதும் செயல்படும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதனால் கிடைக்கப் போகும் பலன்கள் உங்களுக்கே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. (6:153) (7:42) (23:62). மனித மாண்புகளின் உயர்வும் தாழ்வும் அவரவர் செய்துவரும் செயல்களைப் பொறுத்தே அமையும். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட இறைவனின் செயல்வீரர்கள், தம் மனதில் உதிக்கும் அழகான எண்ணங்கள் உதடுகளில் இவ்வாறு வந்தவண்ணம் இருக்கும்:
எங்கள் இறைவா! எங்கள் சமூகப் பணியின் அணுகுமுறையில் தவறு ஏதாவது நடந்திருந்தால், இதனால் சமூக வளர்ச்சியில் தடை ஏற்படாது காத்தருள்வாயாக!
எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்ற சமுதாயங்கள் தம் முன்னோர்களின் பாவச் சுமைகளால் நசுக்கப்பட்டது போல், நாங்களும் நசுங்காமல் இருந்திட எங்களுக்கு மனவலிமையும் நேரான பாதையும் கிடைத்திடச் செய்வாயாக.
எங்கள் இறைவா! நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்புகளை எளிதாக நிறைவேற்றிட எங்களுக்கு ஆற்றல்களைத் தந்தருள்வாயாக. இதில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால் குறைகளை நீக்கி அதன் தீய விளைவுகளிலிருந்து காத்தருள்வாயாக. இப்படிப்பட்ட எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் செயலில் ஈடுபட்ட வண்ணமிருப்பார்கள்.