بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை:
திருக்குர்ஆனிலுள்ள அறிவுரைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது குடும்ப வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளாகும். இரண்டாவதாக பொது வாழ்வில் உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் ஆகும். திருக்குர்ஆன் குடும்பவியல் விவகாரத்தில் வழிமுறைகளை விவரமாக எடுத்துரைக்கிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் அவற்றின் நுணுக்கங்களையும் கொடுத்து விட்டது. இதற்குக் காரணம் என்னவென்றால் குடும்பங்களில் கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளை வைத்தே சிறப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும். நாடும் வேகமாக முன்னேறி வரும். ஒவ்வொரு வீட்டிலும் கற்றுத் தரப்படுகின்ற பாடங்களையே பிள்ளைகளும் கற்றும் கொள்வார்கள். பிள்ளைகள் தாம் வருங்கால நாட்டின் செல்வங்கள். அவர்களுக்கு சிறப்பான பாடங்களை கற்றுக் கொடுத்து, சீராக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். எனவே பெற்றோர்கள் கற்றிருந்தால்தான் பிள்ளைகளுக்கும் அவர்களால் சிறந்த வழிமுறைகளை சொல்லித் தர முடியும். எனவே தான் திருக்குர்ஆன் குடும்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களை விவரமாக எடுத்துரைக்கிறது.
இரண்டாவதாக உலக பொது விஷயங்களைப் பற்றியது. அவை கொள்கை ரீதியாக சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக போதைப் பொருட்கள் விஷயமாக ஃகம்ரு என்ற வார்த்தையை 5:90இல் பயன்படுத்துகிறது. போதை ஏற்படுத்தும் பானங்களின் பெயர்களை குறிப்பிடுவதில்லை. காரணம் ஒவ்வொரு நாட்டிலும் அவற்றிற்கு தனித்தனி பெயர்களை வைத்திருப்பார்கள். அதாவது விஸ்கி, பிராந்தி என்றும் சரஸ், கஞ்சா என்றும் பெயர்களை வைத்திருப்பார்கள். அந்நாட்டு அரசு எந்தந்த பொருட்களில் போதை ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் குடும்ப பாகப்பிரிவினைச் சட்டத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்று சட்டத்தை நிர்ணயித்து கொடுத்து விட்டது. இத்தகைய விதிமுறைகளில் இஸ்லாமிய அரசு தலையிடாது. அதில் மாற்றங்களையும் கொண்டுவராது.
இதைக் கருத்தில் கொண்டு முதலில் குடும்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகளை கொடுத்துள்ளோம். மேலும் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை கேள்வி பதில் என்ற அடிப்படையிலும் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு குடும்பத்தாரும் நாட்டின் அங்கத்தினர்கள் ஆவார்கள் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்தி சொல்லிவிடுகிறோம். எனவே இவற்றை எல்லா தரப்பு மக்களுக்கும் கற்றுத் தர வேண்டும்.
2.பிள்ளைகளுக்கு என்ன அறிவுரை செய்ய வேண்டும்?
இது முக்கியமான ஒன்றாகும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள். சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் அறிவுகளை அளித்து வளர்த்து வந்தால் தான், அவன் பெரியவனாகி சிறந்த குடிமகனாக வருவான். வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை செய்பவனாக வருவான். ஆண்பிள்ளை என்றோ, பெண்பிள்ளை என்றோ இதில் பாகுபாடு ஒன்றும் கிடையாது. “நம்ம பிள்ளைகள். அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பான்” என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. அவர்களை நல்வழிப் படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். இதையே திருக்குர்ஆன் வலியுறுத்தி சொல்கிறது.
وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِۦمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ.
2:132. இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு உபதேசம் செய்தார். யஃகூபும் (இவ்வாறே) அவர் கூறினார்: ""என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்து உள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.
விளக்கம்:
இப்றாஹீம் நபி, தான் சிறப்பாக வாழ்ந்ததோடு, தன் பிள்ளைகளுக்கும் அறிவுரை செய்து வந்தார். அவருடைய பேரனான யாக்கூப்புக்கும் அறிவுரைகளைச் செய்து வந்தார். அவர் தன் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும், “அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் ‘இஸ்லாம்’ என்னும் மிகச் சிறந்த மார்க்கத்தையே பின்பற்றி வாருங்கள். அதன்படி வாழ்நாள் முழுவதும் அனைவரின் நலனைப் பேணிக்காக்கும் செயல்வீரர்களாகவே விளங்குங்கள்” என்று அவ்வப்போது அறிவறுத்தி வந்தார்.
أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ إِلَٰهًۭا وَٰحِدًۭا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ.
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்: “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?"" எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை - உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை - ஒரே நாயனையே - வணங்குவோம். அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்"" எனக் கூறினர்.
விளக்கம் :
இப்றாஹீம் நபி மட்டுமின்றி, அவருடைய பேரனான யாகூப்பும் இதே வழிமுறையைக் கடைப்பிடித்து வந்தார். அவரும் தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் தம் பிள்ளைகளிடம், “நீங்கள் எனக்குப் பின் யாருக்கு அடிபணிந்து வாழ்வீர்கள்?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே அடிபணிந்து வாழ்வோம்” என்று உறுதியளித்தனர்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட நாமும், நம் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மார்க்க போதனைகளையும் அதன் உயர் நோக்கங்களையும் முறையாகக் கற்றுத்தர வேண்டும். இதற்காக நாம் மார்க்க உண்மைகளைத் தெரிந்து கொள்வது தலையாயக் கடமையாகும். மேலும் 31ஆவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.
وَإِذْ قَالَ لُقْمَٰنُ لِٱبْنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَىَّ لَا تُشْرِكْ بِٱللَّهِ ۖ إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌۭ.
31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே, நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை நினைவு படுத்துவீராக.
விளக்கம் :
லுஃக்மான் ஹகீம் என்பவரும், தன் மகனை நோக்கி, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு இணையாக வேறு தெய்வங்களையோ அல்லது அவனுடைய வழிகாட்டுலுக்கு இணையாக வேறு வழிமுறைகளையோ ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளாதே. இவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையாக்குவது மிகப்பெரிய அநியாய செயலாகும்” என்று போதித்து வந்தார்.
சிந்தனையாளர்களே! அவர் கடைப்பிடித்த வழிமுறையையே நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக குர்ஆனில் அவர் செய்த அறிவுரைகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளன. எவ்வாறு நபிமார்கள் தம் பிள்ளைகளுக்கு அறிவுரை செய்து வந்தார்களோ, (பார்க்க 2:132-133) அவ்வாறே நாமும் நம் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். இதற்காகத் தான் குர்ஆனின் அறிவுரைகளை நீங்கள் பேசும் மொழியிலேயே எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளோம். அவற்றை நன்றாகப் புரிந்துகொண்டு தம் பிள்ளைகளுக்கும் மற்ற உறவினர்களுக்கும் எடுத்துரைக்க வெண்டும்.
3.தாய் தந்தையர்க்கு ஏன் பணிவிடை செய்யவேண்டும்?
உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு தம் பெற்றோர்களை கவனிக்கும் பொறுப்பு இருப்பதில்லை. ஆனால் மனித வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையாக இருப்பதால் அவனுடைய வயதான காலத்தில் தம் பிள்ளைகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். எனவே தம் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّۢ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًۭا كَرِيمًۭا
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம் -இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக.
விளக்கம் :
(1) மனிதன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்ந்து, சமுதாய சமச்சீர்நிலையைக் கட்டிக் காக்க வேண்டும்.
(2) அத்தகைய சமச்சீர்நிலை உருவாகவேண்டும் என்றால் உங்கள் எண்ணங்களும் செயல்பாடுகளும் இவ்வாறிருக்க வேண்டும்.
(3) முதலில் உங்கள் தாய் தந்தையர் ஆகிய இருவரின் தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்றி வர வேண்டும்.
(4) அவ்விருவரோ அல்லது தாய் தந்தையரில் ஒருவரோ முதுமை அடைந்த நிலையில் இருப்பார்கள்.
(5) அவர்களுக்கு மனவருத்தம் அளிக்கும் வகையில் “சீ” என்று கூட சொல்லக் கூடாது.
(6) அவர்களை நீங்கள் வீட்டைவிட்டு ஒருபோதும் விரட்டக் கூடாது. அவர்களிடம் நீங்கள் கனிவான முறையிலும் கண்ணியத்துடனும் பேசவேண்டும்.
وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُۥ وَهْنًا عَلَىٰ وَهْنٍۢ وَفِصَٰلُهُۥ فِى عَامَيْنِ أَنِ ٱشْكُرْ لِى وَلِوَٰلِدَيْكَ إِلَىَّ ٱلْمَصِيرُ.
31:14. நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக(க் கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே, “நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
விளக்கம்:
(1) மனிதன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைப் பற்றி இறைவன் அறிவுறுத்துகிறான்.
(2) ஏனெனில் தாய் வயிற்றில் மிகவும் பலவீனமாக இருந்து, அவளுக்கும் பலவீனம் ஏற்பட்டு அவனைச் சுமந்து பெற்றெடுக்கிறாள்.
(3) மேலும் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் வரையில் பாலுட்டி வளர்க்கிறாள்.
(4) இந்த ஏற்பாட்டினைச் செய்த அல்லாஹ்வுக்கும் உன்னைப் பெற்று வளர்த்தத் தாய் தந்தையருக்கும் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.
(5) நீ செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த விளைவுகளின் இலக்கை நோக்கியே செல்கிறது என்பதை மறந்து விடாதே” என்று மகனுக்கு அவர் போதித்து வந்தார். (மேலும் பார்க்க 46:1)
(6) சிந்தனையாளர்களே! நன்றி செலுத்துவது என்றால் அல்லாஹ்வின் அறிவுரையின்படி செயல்படுவதே ஆகும். அதுவே அவனுக்கு நீங்கள் செலுத்தும் நன்றியாகும். தாய் தந்தையரின் தேவைகளை நிறைவேற்றுவதே நீங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாகும். காரணம் நீங்கள் வளர்ந்து வாலிப வயதை அடையும்போது, தாய் தந்தையர் முதுமை அடைந்து பலவீனமாகி விடுவார்கள். (பார்க்க 17:23) எனவே நீங்கள் சிறு பிள்ளையாக இருந்த போது, அவர்கள் உங்களை எவ்வாறு வளர்த்து வந்தார்களோ அவ்வாறே நீங்களும் அவர்களுடைய வயதான காலத்தில் கவனித்து வரவேண்டும் (பார்க்க 17:24-25)
وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًۭا.
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக: மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக.
விளக்கம் :
(1) அவர்களுக்காக நீங்கள் பணிவு எனும் இறக்கையை விரித்து, பாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
(2) மேலும், “ நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, அவர்கள் எவ்வாறு வளர்த்து வந்தார்களோ, அதுபோலவே நீயும் அவ்விருவரையும் பேரன்புடன் கவனித்து வாருங்கள்” என்று மக்களுக்கு அறிவுருத்துங்கள்.
(3) நினைவில் கொள்ளுங்கள். உள்ளத்தில் ஒன்று செயல் வேறு என்று நீங்கள் செயல்பட்டால் அல்லாஹ்வின் வெறுப்புக்குத் தான் ஆளாவீர்கள். (பார்க்க 61:2-3) எனவே நீங்கள் செய்யும் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு அவ்விருவருக்கும் பணிவிடை செய்து அவர்களை சிறப்பாக கவனித்து வரவேண்டும்.
رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًۭا.
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களில் இருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான். நீங்கள் ஸாலிஹானவர்களாக இருந்தால், அல்லாஹ் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பவனாக இருக்கின்றான்.
உங்களுடைய உள்ளங்களில் இருப்பது என்னவென்பது இறைவனுக்கு நன்கு தெரியும். நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டபடி நற்செயல்களை செய்பவர்களாக இருந்தால்தான், உங்கள் இறைவனின் பாதுகாப்பும் அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.
பொதுவாக பெற்றொர்கள் தம் வயதான காலத்தில் சிறு பிள்ளைகள் போல் பேசுவார்கள். (பார்க்க 16:70) அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதை தாளாமல் அவர்கள் மீது நீங்கள் எரிந்து விழுவீர்கள். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டபடி, அவர்களுடைய பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல், பொறுமையுடன் அழகிய முறையில் உங்களால் சாத்தியமானதை செய்து வந்தால், உங்களில் பொறுமையுடன் கூடிய நற்பண்புகள் வளரும். வீட்டை சரிசெய்யும் ஆற்றலும், நிதானத்துடன் நடந்துகொள்ளும் மனப் பக்குவமும் உங்களில் வளர்ந்தால் தான், ஊரையும் நாட்டையும் சரி செய்யும் ஆற்றல்கள் உங்களில் வளரும். உங்கள் தாய் தந்தையர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பினும், ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருப்பினும் சரியே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிடக் கூடாது.
4.தாய் தந்தையருக்கு அடிபணிந்து செயல்பட வேண்டுமா?
திருக்குர்ஆன் தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து வரச் சொல்லும் அதே சமயத்தில் அவ்விருவருடைய அறிவுரைகள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக இருந்தால் அதை நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை என்றும் சொல்கிறது.
وَإِن جَٰهَدَاكَ عَلَىٰٓ أَن تُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌۭ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِى ٱلدُّنْيَا مَعْرُوفًۭا ۖ وَٱتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَىَّ ۚ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள். (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமே ஆகும். நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
விளக்கம்:
(1) தாய் தந்தையருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றால் அவர்களுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதல்ல.
(2) நீங்கள் அவர்களிடம் பேசும் போது, நளினமாகப் பேசுங்கள். (பார்க்க 17:23) ஆனால் அவர்கள் இடும் கட்டளைகள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே நீங்கள் அதன்படி செயல்படவேண்டும். (பார்க்க 29:8)
(3) அதற்கு எதிராக இருந்தால் அதை நீங்கள் ஏற்று நடக்க வேண்டிய அவசியமில்லை.
(4) இருந்தும் அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை நீங்கள் செய்து தருவது உங்கள் மீதுள்ள கடமையாகும்.
(5) உங்களுடைய பெற்றோர் இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நடந்தால் அவற்றிற்கு நீங்கள் அடிபணிந்து செயல்படுங்கள்.
(6) ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த “விளைவுகள்” என்ற இலக்கை நோக்கியே செல்லும். அதாவது அவன் நிர்ணயித்த விளைவுகளையே ஏற்படுத்தும்.
(7) அந்த விளைவுகள் ஏற்படும் போது, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்கே வெட்ட வெளிச்சமாகி விடும்.
உதாரணத்திற்கு மாமியார் மருமகள் இடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் இருக்கும். தன் மருமகளை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையும் பல மாமியார்களுக்கு இருக்கும். இதற்குக் காரணம் தன் வயதான காலத்தில் ஆதரவற்று கஷ்டப்பட வேண்டி வந்துவிடுமோ என்ற பயம் அவர்களை அறியாமலே ஏற்படும். இந்த பயத்தை போக்கி, அவர்களை ஆதரவு அளிப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். இதைப் பற்றி மனைவிக்கு எடுத்துச் சொல்லி அவளையும் திருத்த வேண்டும். இறைவழிகாட்டுதல் பெற்று மனப்பக்குவத்தை அடைந்த மாமியார்கள், தம் வயதான காலத்தில் மருமகளிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள். தானும் ஒரு காலத்தில் மறுமகளாக இருந்து கஷ்டப்பட்டவள் தான். அந்த கஷ்டங்கள் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று எண்ணுவார்கள்.
ஒருவேளை மருமகள் மீதுள்ள கடுப்பில், மருமகளை விவாகரத்து செய்ய சொன்னால், உடனே மகன் தன் மனைவியை அவ்வாறு விவாகரத்து அளித்துவிடக் கூடாது. ஏனெனில் விவாகரத்திற்கான வரையறைகள் திருக்குர்ஆனில் தரப்பட்டுள்ளன. நிலைமை அனுசரித்து இருவரிடையே சமதானம் ஏற்பட முயல வேண்டும். அவற்றை புறந்தள்ளி விடக் கூடாது. இப்படியாக தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதற்கும் அவர்களுடைய கட்டளைகளை அடிபணிவதற்கும் உள்ள வித்தியாசாத்தை புரிந்து கொள்ளுங்கள்.
5.நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது?
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍۢ فَحَيُّوا۟ بِأَحْسَنَ مِنْهَآ أَوْ رُدُّوهَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَسِيبًا.
4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள், அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்.
விளக்கம்:
நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவர் மற்றவரின் நலனைப் பேணிக் காப்பதாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நன்மை செய்வதில் ஒருவரையொருவர் மிஞ்சுவதாக இருத்தல் அவசியம். அல்லது அதே அளவுக்காவது நன்மை செய்ய முயல வேண்டும்.
فَإِذَا دَخَلْتُم بُيُوتًۭا فَسَلِّمُوا۟ عَلَىٰٓ أَنفُسِكُمْ تَحِيَّةًۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةًۭ طَيِّبَةًۭ ۚ
24:61. நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான -பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (""அஸ்ஸலாமு அலைக்கும்"" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக் கொள்ளுங்கள் -
விளக்கம் :
நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்குச் சென்றாலும் வீட்டிலுள்ள அனைவர்களுக்கும் உளப்பூர்வமாக நன்மாறாயம் ஏற்பட வாழ்த்துக்களை கூறுவீர்களாக. அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை என்றாலும், குந்தகம் விளைவிக்கும் வகையில் எதையும் செய்யக் கூடாது. இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்படும் பாக்கியம் மிக்க வழிகாட்டுதல்களாகும்.
6.சுத்தமும் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றா?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ
5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும்இகழுவிக் கொள்ளுங்கள்இஉங்களுடைய தலைகளை (ஈரக்கையால்)தடவி(மஸஹு செய்து) கொள்ளுங்கள்,உங்கள் கால்களை இருகணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் சுத்தமான முறையில் வாழ பழகிக் கொள்ளுங்கள். வேத அறிவுரைகளைப் பெற, நீங்கள் கூட்டு ஸலாத்துக்கு நிற்கச் சென்றாலும் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் இரு கைகளையும், கணுக்;கால் வரை இரு கால்களையும் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் தலையை வாரி சரி செய்து கொள்ளுங்கள்.
وَإِن كُنتُمْ جُنُبًۭا فَٱطَّهَّرُوا۟ ۚ
5:6. நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப்பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் உடலுறவு கொண்டிருந்தால் சுத்தமாக குளித்துக் கொள்ளுங்கள்.
وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌۭ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءًۭ فَتَيَمَّمُوا۟ صَعِيدًۭا طَيِّبًۭا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍۢ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
5:6. நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவுகொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தபபடுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்துகொள்ளுங்கள், அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்)கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களை வருத்தக்கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்ப வில்லை -ஆனால் அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும், இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட் கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
விளக்கம் :
(1) நீங்கள் நோய்வாய்ப் பட்டிருந்தாலோ, பயணத்தில் இருக்கும் போதோ, மல ஜலம் கழிக்க நேர்ந்து தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சுத்தமான பொருளைக் கொண்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.
(2) மனைவியிடம் ஊடலில் ஈடுபட்டிருந்து, தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சுத்தமான மண்ணைத் தடவி முகம்; மற்றும் கைகளைத் துடைத்து தயமம் செய்து கொள்ளுங்கள் (மேலும் பார்க்க 4:43)
(3) நீங்கள் எப்போதும் சுத்தமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட அறிவுரைகள் தரப்படுகின்றன. அன்றி உங்களைச் சிரமப்படுத்த அல்லாஹ் நாடவில்லை.
(4) நீங்கள் அவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள இப்படிப்பட்ட வழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் அளிக்கப்படுகின்றன.
சிந்தனையாளர்களே! திருக்குர்ஆன் உலக பொதுமறை என்பதால் உலகில் நிலவி வரும் சீதோஷ்ண நிலை மற்றும் தண்ணீரின் வசதி வாய்ப்புகளை அணுசரித்து மேற்சொன்ன வரையறைகள் தரப்பட்டுள்ளன. குளிர் பிரதேசங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக ஆகிவிடும். பாலலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிது. எனவே கூடுமான வரையில் சுத்தமாக இருக்கவே இறைவழிகாட்டுதல் நாடுகிறது. எனவே குளிப்பதற்கு வசதி இல்லாத பட்சத்தில் கணவன் மனைவி கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது வசதி எற்படுத்திக் கொண்டு உடலுறவு கொள்ளலாம். மேலும் உடனுக்குடன் குளித்துக்கொள்ள வேண்டும்.
7.ஆடை அலங்காரங்கள் மற்றும் அழகு சாதனங்களுக்குத் தடை உண்டா?
يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்و உண்ணுங்கள், பருகுங்கள்و எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
விளக்கம் :
(1) ஓ மனித இனமே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழச் சொல்வதால் அலங்காரப் பொருட்களையும், அழகு சாதனங்களையும் தடுப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.
(2) அவற்றை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவனுக்கு அடிபணிந்து நடப்பதைக் கொண்டே, உங்களில் அழகும் பொலிவும் கூடி வரும்.
(3) ஏனெனில் இறைவனுடைய ஒவ்வொரு கட்டளையின் நோக்கமும் சந்தோஷங்கள் நிறைந்த அழகான உலகைப் படைப்பதற்காகத்தான். எனவே நீங்கள் அழகு அலங்காரப் பொருட்களை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
(4) ஆனால் அதில் வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களுக்கு இறைவனின் நேசம் கிடைக்காது.
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِىٓ أَخْرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزْقِ ۚ قُلْ هِىَ لِلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا خَالِصَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ்தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?"" இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப் பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டும் சொந்தமானவையாக இருக்கும்"". இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலின்படி செயல்படுபவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள அழகு அலங்காரப் பொருட்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய்மையான உணவு வகைகளுக்கும் தடை விதிப்பவன் யார் என்று நீ கேட்பீராக.
(2) இவை யாவும் மூஃமின்களுக்கும் மற்றவர்களுக்கும் பொதுவானவை ஆகும். யார் அதற்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைத்து வரும். (பார்க்க 17:18-20)
(3) ஆனால் வருங்கால நிலையான வாழ்வில் இந்த சந்தோஷங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படும் மூஃமின்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இந்த வித்தியாசத்தைப் அறிந்து சமுதாய மக்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக இதைத் தெளிவாக அறிவிக்கிறோம்.
8.உணவு அருந்தும் முறைப் பற்றி திருகுர்ஆன் என்ன கூறுகிறது?
அன்னியர்களின் வீட்டிற்குச் செல்லும் போது, அவ்வீட்டாரின் அனுமதிப் பெற்றபின்பே வீட்டிற்குள் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது. (பார்க்க 24:27). இதனால் உற்றார் உறவினர்களும் அன்னியர்கள் ஆகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. உறவுமுறை என்பது வேறு; பண்பாடு என்பது வேறு விஷயமாகும். ஒழுக்கத்தைப் பேணிக் காக்கவே அந்த அறிவுரைகள் தரப்பட்டன. ஏனெனில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் உணவருந்தும் விஷயத்தில் நீங்கள் சங்கோசப்பட மாட்டீர்கள். ஆனால் அன்னியர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, சஞ்ஜலப்படுவீர்கள்.
لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌۭ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمْ أَن تَأْكُلُوا۟ مِنۢ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ ءَابَآئِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَٰتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَٰنِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَٰتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَٰمِكُمْ أَوْ بُيُوتِ عَمَّٰتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَٰلِكُمْ أَوْ بُيُوتِ خَٰلَٰتِكُمْ أَوْ مَا مَلَكْتُم مَّفَاتِحَهُۥٓ أَوْ صَدِيقِكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَأْكُلُوا۟ جَمِيعًا أَوْ أَشْتَاتًۭا ۚ
24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, உங்கள் மீதும் குற்றமில்லை, நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையில் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது.
விளக்கம்:
உணவு அருந்துவதற்காக அனைவரும் சமப் பந்தியில் அமரும்போது, உங்களுடன் குருடர்கள், முடவர்கள், நோயாளிகள் ஆகியோர் சேர்ந்து உணவருந்துவதில் குற்றம் ஏதுமில்லை. அதே போல் உங்கள் சொந்த வீடுகளிலோ, உங்கள் தாய் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் சகோதாரர், சகோதரி, அத்தை, சித்தப்பா, சின்னம்மா, மாமன், உங்களுக்குச் சொந்தமான வீடுகளிலோ அல்லது உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் வீடுகளுக்கோ செல்ல நேர்ந்து, அவர்களுடன் உணவருந்த நேர்ந்தால், தன்னந்தனியாகவோ அல்லது அவர்களுடன் சேர்ந்தோ உணவருந்துவதில் தவறு ஒன்றுமில்லை.
وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ
7:31. உண்ணுங்கள் பருகுங்கள். ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது.
சிந்தனையாளர்களே! இது மிகமிக முக்கியமான விஷயமாகும். ஏனெனில் உணவு வகைகளில் வீண் விரயம் செய்வது, அல்லாஹ்வின் உணவு ஏற்பாட்டையே மதிக்காததற்கு சமமாகிவிடும். உலகில் எத்தனையோ பேர் உணவில்லாமல் கஷ்டப்படுவதைக் கேள்விப் படுகிறோம். நமக்குக் கிடைத்துள்ள உணவு வகைகளில் தேவையான அளவே சமைத்து உண்ண வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து அதை உண்ணாமல் குப்பையில் கொட்டிவிடக் கூடாது. சிலர் தேவைக்கு அதிகமாக உணவை சாப்பாட்டு தட்டில் கொட்டிக் கொண்டு அதை சாப்பிடாமல் அப்படியே கையை கழுவிக் கொள்வார்கள். இதுவும் மிகவும் கெட்ட பழக்கமாகும். தேவையான அளவே உணவை தட்டில் வைத்துக் கொண்டு உண்ண வேண்டும். சிலர் உணவை பராமரிக்கும் போதும் தேவைக்கு அதிகமாகவே தட்டில் திணித்து விடுவார்கள். அதன்பின் அவற்றை அவரால் சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டி விடுவார்கள்.
உங்களுக்குக் கிடைக்கின்ற உணவு எத்தனை படித்தரங்களைக் கடந்து வருகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து மழை நீரின் ஏற்பாடு, தானியங்கள் வளர்வதற்கு வேண்டிய சூரிய வெப்பம் மற்றும் பூமிக்குள் இருக்கின்ற மாபெரும் சக்தி அவற்றைக் கட்டிக் காக்கும் வானம் ஆகிய அனைத்தும் செயல்படுகின்றன. அவற்றின் துணையைக் கொண்டு உழவன் சேற்றில் காலை வைத்து தானியங்களைப் பயிரிட்டு அயராது உழைத்து, தன் உயிருக்கும் மேலாக அவற்றை பாதுகாத்து அதன் மகசூலை கொண்டுவந்து விநியோகம் செய்கிறான். அதை கடை வீதியில் வாங்கி வந்து பக்குவப்படுத்தி, சமையல் செய்து அதன்பின் இறுதியாக உங்கள் உணவு தட்டிற்கு வருகிறது. நீங்கள் அவற்றை வீண் விரயம் செய்தால் அதற்கு என்ன அர்த்தம் ஆகிறது? அல்லாஹ்வின் ஏற்பாட்டையும் மற்ற எல்லா உழைப்புகளையும் துச்சமாக மதித்ததற்கு ஒப்பாகிவிடும் அல்லவா? எனவே இனி அவ்வாறு ஒரு போதும் செய்யாதீர்கள். உணவை அல்லாஹ்வின் பெயரை சொல்லி உண்ணுங்கள்.
9.தடை செய்யப்பட்ட உணவு வகைகள் யாவை?
حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ وَٱلْمُنْخَنِقَةُ وَٱلْمَوْقُوذَةُ وَٱلْمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ
5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப்பட்டு இருக்கின்றன, அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடுபார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ, அதைத் தவிர, (அதைஉண்ணலாம்).
விளக்கம்:
தானாகச் செத்தவை, பீச்சிடும் இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத பெயரைச் சொல்லி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்து செத்துப் போனவை, அடிபட்டுச் செத்தவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, வனவிலங்குகளால் கடிக்கப்பட்டுச் செத்தவை ஆகியன உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. இவற்றில் உயிரோடு இருப்பதாக நீங்கள் பார்த்தீர்களானால், அவற்றை உடனே அறுத்து உண்ணலாம். ஆனால் உணவு விஷயங்களி;ல் நீங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டால் விலக்கப்பட்டதைப் புசிப்பதில் தவறு ஒன்றுமில்லை. (பார்க்க 2:172-174 & 6:145)
قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍۢ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًۭا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍۢ فَإِنَّهُۥ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۚ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ رَبَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
6:145. (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப் பட்டுள்ளது) -ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர் மீது குற்றமாகாது. ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க பாதுகாப்போனாகவும், பெருங் கருணை உடையோனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தானாக இறந்தவை, பீச்சிடும் இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகிய இவற்றைத் தவிர, புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை என மக்களுக்கு அறிவித்து விடுவீராக. ஏனெனில் இவை அசுத்தமானவை என்பதில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் இருக்காது. மேலும் அல்லாஹ் அல்லாத பெயரைச் சொல்லி அறுக்கப்படுவதும் தடை செய்யப்படுகிறது. காரணம் இது மார்க்க கட்டளையாகும். ஆனால் எவரேனும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதை விட்டால் வேறு வழியில்லை எனும் பட்சத்தில், அவற்றைப் புசிப்பதும் குற்றமாகாது. நிச்சயமாக உங்களை பாபாலிக்கும் இறைவன் எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு உங்களின் பாதுகாப்பான வாழ்விற்கு வழிகாட்டியிருப்பது இறைவனின் மாபெரும் கிருபையாகும்.
10.சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டுமா?
சிந்தனையாளர்களே! திருக்குர்ஆன் உலக பொதுமறை என்பதால் உணவு விஷயத்தில் வரையறைகளைக் கொடுத்து விட்டது. எனவே இதில் சைவ உணவு அசைவ உணவு என்று பிரித்து எதற்கும் தடை விதிக்கவில்லை. உலகில் பலப் பிரதேசங்களில் காய்கறிகள் கீறை வகைகள் கிடைப்பதே இல்லை. இதனால் மற்ற உயிரினங்களின் மாமிசமே உணவாக இன்றைக்கும் இருக்கின்றன. எனவே தடை செய்யப்பட்டதைத் தவிர்த்து மற்ற எல்லா வகையான உணவு வகைகளையும் உட்கொள்ளலாம்.
உலகில் வாழும் மக்கள் பல்வேறு வகையான பிராணிகளின் மாமிசங்களைப் புசிக்கின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் தவளை, பாம்பு மற்றும் குதிரைகளின் மாமிசம் போன்றவற்றை புசிக்கிறார்கள். நம் நாட்டில் அவற்றை பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை. வடஇந்தியாவில் எருமையின் மாமிசத்தை புசிக்கிறார்கள். ஆனால் தென் இந்தியர்களால் அதைப் புசிக்க முடியாது. காரணம் அதில் கொழுப்புச் சத்து மிக மிக அதிகம். அதை உட்கொண்டால் உடனே கைகால் இழுப்பு ஜன்னி போன்ற நோய் வந்துவிடுகிறது. எனவே உலகில் நிலவி வரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் உணவு வகைகளை அமைத்துக் கொண்டுள்ளார்கள். அவை யாவும் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை. எனவே எல்லா வகையான சுத்தமான உணவு வகைகளும் ஆகுமானதே.
மேலும் சில சமயங்களில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சில உணவுகளுக்கு தடை விதிப்பார்கள். விஷக் காய்ச்சல் வந்து விட்டால் சாதம் கூட சாப்பிட தடை விதிப்பார்கள். அவை யாவும் தனிப்பட்ட முறையில் சில காலத்திற்கு விதிக்கப்படுகின்ற தடைகளாகும். மற்றும் சிலர் இரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாக இருந்தால், அசைவ உணவுக்கு தடை விதிப்பார்கள். இவையாவும் கடின உழைப்போ உடற்பயிற்சியோ செய்யாமல் அசைவ உணவை புசித்து வருவதால் ஏற்படும் விளைவுகளாகும். கடினமாக உழைப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே குறைந்தது 40 நிமிடங்களுக்காவது தினந்தோரும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் இருக்கும் கொழுப்புச் சத்து நீங்கிவிடும்.
உணவு விஷயத்தில் அல்லாஹ் தடை செய்ததை தவிர்த்து மற்றவை எதற்கும் தடைவிதிக்க யாருக்கும் உரிமையில்லை. (பார்க்க 66:1) எனவே மார்க்க போதனைகளை மற்ற நாடுகளில் எடுத்துரைக்கும் போது, அங்கு உண்ணும் பொருட்களில் அல்லாஹ் தடை செய்ததை மட்டும்தான் தடுக்க வேண்டும். மற்றவற்றிற்கு தடை விதிக்கக் கூடாது.
11.செலவு செய்வது பற்றி திருக்குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًۭا.
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்ய மாட்டார்கள். (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
விளக்கம் :
அருட்கொடையாளன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து செயல்படுபவர்கள் செலவு செய்யும் போது, வீண் விரயம் செய்ய மாட்டார்கள். அதே சமயத்தில் செலவு செய்ய அவசியம் ஏற்பட்டால் அங்கு கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இவை இரண்டிற்கும் இடையே மத்திய நிலையோடு செலவு செய்வார்கள்.
அப்போது தான் சிக்கனமாக செலவு செய்யும் பழக்கம் ஏற்படும். கூடுமான வரையில் பணத்தை மீட்டு, ஏழை எளியோரின் தேவையை நிறைவேற்றும் வாய்ப்புகள் பிறக்கும்.
وَءَاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا.
17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக,.மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப்(பொருளை) விரையம் செய்யாதீர்.
விளக்கம் :
இதே போன்று உற்றார் உறவினர்களின் குறைகளை நீக்குவது உங்கள் மீதுள்ள கடமையாகும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் செயல்படுபவர்களுக்கும் நீங்கள் உதவி செய்து வாருங்கள். எனவே நீங்கள் அவசியமற்ற எந்த ஆடம்பர செலவுகளையும் ஒருபோதும் செய்யாதீர்கள். அப்போதுதான் உங்களால் உற்றார் உறவினர்களுக்கு உதவ முடியும்.
மேலும் ஒரு விஷயத்தை கவனியுங்கள். வசதியற்ற உறவினர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் யாவும் அவர்களுடைய உரிமை என்று குறிப்பிடுகிறது. எனவே நீங்கள் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரத்தையும் எதிர் பார்த்து உதவி செய்யக் கூடாது என்பதே இதன் பொருளாகும். நீங்கள் உங்கள் குடும்பச் செலவுகளை மிகவும் சிக்கனமாக செய்து வரவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உங்களால் உதவ முடியும்.
இதைப் பற்றி குடும்பத் தலைவியும் தலைவனும் கவனத்தில் கொள்ளவேண்டும். கணவன் சம்பாதித்து, கொண்டுவருகின்ற பணத்தை வைத்து குடும்ப செலவுகளில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வரவேண்டும். ஊதாரித்தனமாக செலவு செய்தால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை தான் ஏற்படும். எனவே தான் வீண் விரயம் செய்பவர்களை திருக்குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது.
إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِرَبِّهِۦ كَفُورًۭا.
17:27. நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்கள் ஆவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
வீண் விரயச் செலவுகளை செய்பவர்கள், தம் மனோ இச்சையின்படி செயல்படும் ஷைத்தானின் சசோதரர்கள் ஆவார்கள். உங்கள் மனோ இச்சையானது, எப்போதும் இறைக்கட்டளைக்கு மாறுசெய்யவே தூண்டிக் கொண்டிருக்கும்.
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍۢ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًۭا مَّيْسُورًۭا.
17:28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு), அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
விளக்கம் :
ஒருவேளை உறவினர்கள் உங்களிடம் உதவியை நாடிவரும் சமயத்தில், நீங்கள் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருந்தால், அவர்களிடம் கனிவான முறையில் அன்புடன் பேசி நிலவரத்தை புரியவையுங்கள்.
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًۭا مَّحْسُورًا.
17:29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர். அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர். அதனால் நீர் நிந்திக்கப் பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
விளக்கம் :
அவ்வாறு உதவி செய்யும்போது, ஒரு விஷயத்தை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். உலோபித்தனம் செய்து உங்கள் கைகளை மிகவும் இறுக்கிக் கொள்ளாதீர்கள். இதனால் நீங்கள் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். அதே சமயத்தில் முற்றிலும் கைகளை விரித்து ஊதாரித்தனமாகச் உதவி செய்து, கையேந்தும் நிலை ஏற்பட்டு, நிந்தனைக்கும் ஆளாகிவிடாதீர்கள்.
வீண் விரயம் என்றால் என்னவென்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒருவர் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல வேண்டும். பேரூந்துகளில் செல்லலாம். வசதி படைத்தோர் குளிர் சாதன பேரூந்துகளில் செல்லலாம். ஆனால் வசதியற்றோர் காரில்தான் செல்வோம் என்றால் அது வீண் விரயமாகும். வாகனம் ஏதும் கிடைக்காமல் அவசரமாகச் செல்லவேண்டிய நிலை இருந்தால் காரில் செல்வதில் தவறு ஒன்றுமில்லை. அதே போன்று எல்லா சிலவு விஷயங்களையும் கவனித்துப் பாருங்கள். கச்சிதமாக செலவு செய்யும் (Spend econoically) பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக திருமணங்களில் வீண் விரயம் ஆவதை பார்க்கிறோம். இது மிகவும் கெட்ட பழக்கமாகும்.
12.அன்னியர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்குள் செல்லும்போது
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا۟ وَتُسَلِّمُوا۟ عَلَىٰٓ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்இநீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று நடப்பவர்களே! நீங்கள் ஒருவர் வீட்டிற்குச் செல்வதாக இருந்தால் அவ்வீட்டாரிடம் முன்அனுமதி பெற்றுதான் போகவேண்டும். மேலும் அவ்வீட்டாரிடம் அவர்களுடைய நலனைப் பேணிக் காக்கவே வந்துள்ளதாக (சலாம்) சொல்லவேண்டும். இந்த வரையறையைக் கடைப்பிடிக்காமல் எந்த வீட்டிற்குள்ளும் நீங்கள் நுழையக் கூடாது. நீங்கள் நல்லறிவுரைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட விஷயங்கள் இறைவன் புறத்திலிருந்து அருளப்படுகின்றன.
இது முக்கியமான ஒன்றாகும். முன்அறிவிப்பு (Prior Appointment) செய்யாமல் வீட்டிற்கோ அலுவகங்களுக்கோ செல்வதால், அங்கிருப்பவர்களுக்கு பல சங்கடங்கள் ஏற்படலாம். அவர்கள் தம் அன்றாட அலுவல்களை செய்து முடிக்க திட்டமிட்டு இருப்பார்கள். நீங்கள் திடீரென்று செல்வதால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, அவர் உங்களை கவனிக்க வேண்டிவரும். இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
فَإِن لَّمْ تَجِدُوا۟ فِيهَآ أَحَدًۭا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرْجِعُوا۟ فَٱرْجِعُوا۟ ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ.
24:28. அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், “திரும்பிப் போய்விடுங்கள்"" என்று உங்களுக்குச் சொல்லப் பட்டால். அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். மேலும், அல்லாஹ்; நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
விளக்கம் :
மேலும் அவ்வீட்டில் எவரையும் காணவில்லையென்றால் அவ்வீட்டிற்குள் செல்லாதீர்கள். அவ்வீட்டார் வந்தபின் அவரிடம் முன்அனுமதி பெற்றே அவ்வீட்டிற்குள் பிரவேசியுங்கள். மேலும் அவ்வீட்டார் உங்களைத் திருப்பி அனுப்பிவிட்டால், நீங்கள் திரும்பிவிடுங்கள். இது உங்களுடைய நன்நடத்தையையே காட்டும். ஆக நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
அதாவது நீங்கள் சந்திக்க வேண்டிய நபர் அவ்வீட்டில் இல்லாத நிலையில் அவ்வீட்டிலுள்ளவர்கள் சங்கோசப்பட்டால், அவர்கள் உங்களைத் திருப்பியும் அனுப்பிவிடலாம். அதே போல் உங்கள் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே சென்றிருக்கலாம். அந்த சமயத்தில் பெண்கள் யாராவது உங்கள் வீட்டிற்குள் வர நினைத்தால், அதை நீங்களும் நளினமாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிடலாம்.
لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍۢ فِيهَا مَتَٰعٌۭ لَّكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ.
24:29. (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாய்ச் செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
விளக்கம் :
அதே சமயத்தில் கிடங்கு போன்ற யாருமே வசிக்காத கட்டிடங்களில் நீங்கள் உங்கள் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அத்தகைய இடத்திற்குள் செல்ல முன்அறிவிப்பு எதுவும் தேவையில்லை. ஆக நீங்கள் வெளிப்படையாகச் செயல்படுவதும் மறைமுகமாகச் செயல்படுவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது.
فَإِذَا دَخَلْتُم بُيُوتًۭا فَسَلِّمُوا۟ عَلَىٰٓ أَنفُسِكُمْ تَحِيَّةًۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةًۭ طَيِّبَةًۭ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.
24:61 நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான -பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (""அஸ்ஸலாமு அலைக்கும்"" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் அறிவித்துக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
வளக்கம் :
நீங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு பிரச்னையோ பாதிப்போ ஏற்படும்படியான எந்தச் செயலையும் செய்யக் கூடாது. மாறாக நல்ல பரஸ்பர உறவு நாடி அங்குள்ளவர்களின் நலனில் அக்கறைக் கொண்டவர்களாகவே செல்லவேண்டும். மேலும் அங்குள்ளவர்களில் குறைப்பாடுகள் ஏதேனுமிருந்தால் அவற்றை நீக்க தம்மாலான உதவி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நன்றாக அறிந்து செயல்படவேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இவை இறக்கி அருளப்படுகின்றன.
13.வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகள் யாவை?
வெளியில் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அவையே பிற்காலத்தில் மிகவும் பலன் அளிக்கக் கூடியவையாக அமையும்.
وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ ٱلْأَرْضَ وَلَن تَبْلُغَ ٱلْجِبَالَ طُولًۭا.
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது
விளக்கம் :
உங்களுடைய நன்நடத்தை, உங்களிடையே நிலவி வரும் பரஸ்பர உறவைக் கொண்டே வெளிப்படும். எனவே நீங்கள் வீதியில் நடந்து செல்லும்போது, கர்வத்துடன் நடந்து செல்லாதீர்கள். அவ்வாறு நடந்து செல்வதால் அது உங்களுக்கு எந்த சிறப்பையும் சேர்க்காது. ஏனெனில் இப்படி நடப்பதால் நீங்கள் பூமியை பிளந்துவிடவா போகிறீர்கள்? அல்லது மலையின் உச்சிக்குத் தான் சென்று விடுவீர்களா?
ஆக உங்கள் எண்ணங்கள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் உங்களுடைய நற்பண்புகளை பிரதிப்பலிப்பதாகவே இருக்க வேண்டும்.
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ.
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுச் செயல்படும் மூஃமின்களே! நீங்கள் வெளியே செல்லும்போது, சபலத்தை ஏற்படுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து செல்லாதீர்கள்.
மேலும் ஆபாச எண்ணங்களுடன் உங்கள் பார்வையை இங்கும் அங்குமாக அலைய விடாதீர்கள். இவையெல்லாம் மனதில் மறைந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். அவற்றைக் கட்டுப்படுத்தி உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்;. நீங்கள் செய்து வரும் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
وَقُل لِّلْمُؤْمِنَٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ
24:31. இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும்.
விளக்கம் :
அதே போல் மூஃமினான பெண்களும் வெளியே செல்லும் போது, சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களோ, பெண்களோ தம்மை அலங்கரித்துக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை (பார்க்க 7:32). ஆனால் தங்கள் பார்வை அன்னிய ஆடவர்களை வசீயப்படுத்தும் வகையில் இருப்பது கூடாது. எனவே அரைகுறை ஆடையுடனோ அல்லது இருக்கமான கவர்ச்சி ஆடைகளை அணிந்தோ வெளியில் திரிவது கூடாது. இதனால் மக்களுள் குறிப்பாக இளைஞர்கள் மனதில் சபலத்தை ஏற்படுத்தும். எனவே கை, கால், முகம் போன்ற சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியவற்றைக் காட்டிக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை. ஆனால் இளைஞர்களைக் கவரக்கூடிய மார்பகங்கள், இடுப்புப் பகுதி போன்றவற்றை, தான் அணியும் சேலையைக் கொண்டு மூடி மறைத்து வெளியில் செல்லுங்கள்.
சேலையை அணியாதவர்கள், கழுத்து முதல் பாதங்கள் வரையில் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத தளர்ந்த ஆடைகளை அணிந்து செல்லலாம். சிந்தனையாளர்களே! பெண்கள் வெளியே செல்வதை குர்ஆன் தடை விதிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். மேலும் தம்மை அலங்கரித்துக் கொண்டும் செல்லலாம். ஆனால் அறைகுறை ஆடை அணிந்து செல்வதைத்தான் தடைவிதிக்கிறது.
14.பிள்ளைகளை கொல்லாதீர்கள்!
وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَٰدَكُمْ خَشْيَةَ إِمْلَٰقٍۢ ۖ نَّحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًۭٔا كَبِيرًۭا.
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை(யும், வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக மிகப் பெரும் பாவமாகும்.
விளக்கம் :
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியறிவு மற்றும் நற்போதனைகளை அளித்து, நல்ல ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்து வாருங்கள். உங்கள் குடும்பத்தில் வசதி வாய்ப்பு இல்லாதிருப்பதைக் காரணம் காட்டி, அவர்களை வேலையில் அமர்த்தி, அவர்களுடைய எதிர்காலத்தை கொன்று விடாதீர்கள். இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பு உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்வாதார வசதிகளை செய்து தரும். (மேலும் பார்க்க 6:151) எனவே பிள்ளைகளை கொலை செய்வது என்பது அவர்களின் எதிர் காலத்தை பாழாக்கிவிடுவது, கொலை செய்வதற்கு சமமான பாவச் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிலர் நறபலி போன்றவற்றில் மூர்க்கத்தனமான நம்பிக்கை வைத்திருப்பார்கள். சில மூர்க்கர்களின் பேச்சைக் கேட்டு பிள்ளைகளை கொலை செய்து விடுவார்கள். இது மிகப் பெரிய பாவச் செயலாகும்.
قَدْ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓا۟ أَوْلَٰدَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍۢ وَحَرَّمُوا۟ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفْتِرَآءً عَلَى ٱللَّهِ ۚ قَدْ ضَلُّوا۟ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ.
6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாகத் தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர் வழிபெற்றவர்களாக இல்லை.
விளக்கம் :
ஆக எவர்கள் அறிவில்லாமல் தம் குழந்தைகளைப் பலியிடுவது தெய்வச்செயல் என்று மூடத்தனமாக எண்ணி கொன்று விடுகிறார்களோ அவர்களும், அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்தவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் தடை விதிக்கிறார்களோ அவர்களும், வழிதவறிச் சென்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவர். அத்தகையவர்கள் பெருத்த நஷ்டத்தில் இருப்பார்கள். அதாவது அவர்களுடைய இத்தகைய சட்ட விரோத செயல்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்து விடுங்கள்.
15.பொதுவாகத் தடை செய்யப்பட்ட செயல்கள் யாவை?
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّىَ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَٱلْإِثْمَ وَٱلْبَغْىَ بِغَيْرِ ٱلْحَقِّ وَأَن تُشْرِكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.
7:33. “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள், பாவங்கள், நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமல் இருக்கும் போதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம் :
அல்லாஹ்வின் புறத்திலிருந்து தடுக்கப்பட்டவை எவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(1) மானக்கேடான செயல்கள் தடை செய்யப்படுகின்றன. அவை பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பினும் சரியே. அவற்றை சமுதாயத்தில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
(2) மனித ஆற்றல்களைக் குன்றச் செய்யும் செயல்கள் தடை செய்யப்படுகின்றன.
உதாரணத்திற்கு போதைப் பொருட்கள், சூதாட்டங்கள், ஆபாசங்கள் போன்றவை.
(3) நியாயமான காரணமின்றி யாரையும் துன்பறுத்துவது தடை விதிக்கப்டுகிறது.
உதாரணத்திற்கு தீர விசாரிக்காமல் மனைவி மீது சந்தேகங் கொண்டு துன்புறுத்துவது, சிறுவர்களை பணியில் அமர்த்துவது, உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை உள்ளிட்ட எல்லா உரிமை மீறல்களும் இதில் அடங்கும்.
(4) பிற சக்திகளை அல்லாஹ்விற்கு இணையாக்குவது தடை செய்யப்படுகிறது.
இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவதோ, அல்லது அவற்றை மக்களிடம் போதிப்பதோ கூடாது. மற்ற சக்திகளையும் அல்லாஹ்வுக்கு இணையாக கருதுவதும் தடை செய்யப்படுகிறது.
(5) நீங்கள் அறியாத விஷயங்களை அல்லாஹ் சொல்வதாகப் பொய்க் கூறுவது தடை செய்யப்படுகிறது. அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்படாத விஷயங்களை அல்லாஹ் கூறுவதாகச் சொல்வது தடை விதிக்கப்படுகிறது.
ஆக இவற்றைச் சமுதாயத்தில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றைத் தடைசெய்து சமுதாய மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட்டால், காலப்போக்கில் அவையே சமுதாயச் சீரழிவுக்கு காரணிகளாக அமைந்துவிடும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ فَإِنَّهُۥ يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًۭا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ.
24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக்கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வ்pன் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கு அறிவோனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உங்கள் மனோ இச்சையைப் பின்பற்றி சுயநலத்துடன் ஒருபோதும் செயல்படாதீர்கள்.
(2) சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்.
(3) அவர்கள் எப்போதும் உங்களை மானக்கேடான செயல்களையும், சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய செயல்களையும் செய்யுமாறு தூண்டிக் கொண்டிருப்பார்கள்.
(4) இறைவழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் இல்லாதிருந்தால், உங்களுள் மனித நேயமும், ஒழுக்க மாண்புகளும் வளர வாய்ப்புகள் ஒருபோதும் கிடைத்திருக்காது.
(5) அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி செயல்பட நாடுபவர்களுக்கே மனித ஆற்றல்களும், சிந்திக்கும் திறனும் வளரும். நிச்சயமாக அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும், அறிந்து கொள்ளும் வல்லமையும் அளவற்றவையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
16.பொய் பேசாதீர்கள்.
قُل لَّوْ شَآءَ ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ عَلَيْكُمْ وَلَآ أَدْرَىٰكُم بِهِۦ ۖ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًۭا مِّن قَبْلِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ.
10:16. “அல்லாஹ் நாடியிருந்தால்”, இதனை தான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன். மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்க மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?"" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம் :
நபியே! மக்களிடம், “நான் உங்களோடு நீண்ட காலமாக வாழ்ந்திருக்கிறேன். இதற்கு முன் எப்போதாவது இறைவழிகாட்டுதல் சம்பந்தப்பட்ட விஷயங்களை உங்களிடம் கூறியிருக்கின்றேனா? அல்லது எப்போதாவது நான் பொய் பேசி இருக்கின்றேனா? இப்போது இவற்றை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்றால் அவையாவும் அல்லாஹ்வின் செயல்திட்டப்படி சொல்லப்பட்ட விஷயங்களாகத் தானே இருக்க முடியும்? அவ்வாறு அல்லாஹ்வின் செயல்திட்டம் இல்லாதிருந்தால், நான் உங்களிடம் இப்படிப்பட்ட விஷயங்களை அறிவித்து இருக்கவே முடியாது. இதைப் பற்றி நீங்களே சுயஅறிவோடு சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக.
சிந்தனையாளர்களே! தான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை, தான் எடுத்துரத்ததற்கு இறைத்தூதர் காட்டிய ஆதாரம் என்னவென்பதை கவனித்தீர்களா? இறைக் கொள்கை கோட்பாடுகளை நிரூபிக்க அவரிடம் இருந்த மூலதனமே அவர் தம் வாழ்நாளில் பொய் பேசாமல் இருந்தது தான் என்கிறது திருக்குர்ஆன். அவருடைய நன்நடத்தை தான் நாம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. (பார்க்க 33:21)
எனவே பொய் பேசுவதால் மக்களின் அபிமானத்தை இழக்க நேரிடும். மக்கள் பொய்யுரைப்பவரை மதிக்க மாட்டார்கள். எனவேதான் தனக்கு தெரியாத விஷயத்தைப் பற்றி பிறரிடம் சொல்ல திருக்குர்ஆன் தடை செய்கிறது. ஏனெனில் ஓர் உண்மையை மறைக்க அநேக பொய்களை சொல்ல வேண்டிவரும். இதனால் அவருடைய செயல்பாடுகளின் எடைத் தட்டில் பாவங்கள் அதிகமாகிவிடும். அதைத் தொடர்ந்து அவருக்குக் கிடைப்பதோ நரக வேதனைகள் தாம். எனவே எப்போதும் உண்மையே பேச வேண்டும். இப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், எல்லா தீய செயல்களையும் தீய பழக்க வழக்கங்களையும் நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும். இதனால் உண்மையே பேசக் கூடிய உத்தமர் என்ற பட்டத்தை மக்கள் அளிப்பார்கள். சமுதாயத்தில் நீதி நிலைக்க வேண்டும் என்றால் மக்களிடைய பொய்ப் பேசும் பழக்கம் அறவே இருக்கக் கூடாது.
17.நீங்கள் செய்யாததை சொல்லாதீர்கள்.
சிலர் பிறருக்கு மட்டும் புத்திமதி சொல்வார்கள். ஆனால் அவர்கள் தம் பங்கிற்கு எந்த நற்செயலையும் செய்ய மாட்டார்கள். இதை திருக்குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது.
أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَٰبَ ۚ أَفَلَا تَعْقِلُونَ.
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகின்றீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
விளக்கம் :
நீங்கள் வேதத்தை வைத்துக்கொண்டு, அதன்படி நன்மையான செயல்களைச் செய்யுமாறு பிறரை அறிவுறுத்தி வருகிறீர்கள். பிறருக்கு எடுத்துரைத்த அதே அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற தவறி விடுகிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ.
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
விளக்கம் :
நீங்கள் செய்ய முடியாதவற்றை செய்வதாகக் கூறுவது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய விஷயமாகும்.
இந்த அறிவுரை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகார பொறுப்பில் இருப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் பொருந்தும். அப்போது தான் மற்றவர்களின் மதிப்பையும், மரியாதையையும், அபிமானத்தையும் பெறுவீர்கள். பொது மக்களின் வெறுப்புக்கும் ஆளாக மாட்டீர்கள்.
18.புறம் பேசுவது மிகமிக தீயச் செயலாகும்.
முதலில் புறம் பேசுவது என்றால் என்னவென்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவரிடமுள்ள குறைகளை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பரப்பி வருதே புறம் பேசுவது என்பதாகும். அதாவது எந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் அவர் இருக்கும் போது பேச மாட்டீர்களோ, அவற்றை அவர் இல்லாத சமயத்தில் பேசுவது. திருமணம், வியாபாரம் போன்ற விஷயங்களுக்காக ஒருவரைப் பற்றி விசாரித்து வந்தால் அவரைப் பற்றிய உண்மையான தகவல்களை அளிப்பது என்பது வேறு விஷயமாகும். தேவையில்லாமல் ஒருவரிடம் உள்ள குறைகளை மற்றவர்களிடம் பரப்பி வருவது என்பது வேறு விஷயமாகும். இதனால் சமுதாயத்தில் பிரச்னைகள் தாம் வளரும். அவரிடமுள்ள குறைகளை நீங்கள் ஒருபோதும் சரி செய்யவே முடியாது. சமுதாய நல்லிணக்கத்திற்கு இது குந்தகம் விளைவித்துவிடும்.
وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًۭا فَكَرِهْتُمُوهُ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٌۭ رَّحِيمٌۭ.
49:12. அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம்பேச வேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன், மிக்க கிருபை செய்பவன்.
விளக்கம் :
உங்களிடையே புறம் பேசும் பழக்கம் அறவே இருக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் நேரடியாகப் பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும். புறம் பேசுவதால் சமுதாயத்தில் பகைமையும் அபிப்ராய பேதங்களும்தான் வளரும். எனவே ஒருவர் தம் சகோதாதரனின் பிணத்தை சாப்பிட எவ்வாறு வெறுப்பாரோ, அந்த அளவுக்கு புறம்பேசுவதை வெறுக்க வேண்டும். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படுகின்ற தீய விளைவுகளுக்கு அஞ்சி, அவற்றைப் பேணி நடந்து கொள்ளுங்கள். இதுவே தவறான வழியிலிருந்து மீள்வதற்கும், உங்களிடையே பரஸ்பர நல்லுறவும், அன்பும் பாசமும் ஏற்படுவதற்கு சிறந்த வழியாகும்.
لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ ٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بِأَنفُسِهِمْ خَيْرًۭا وَقَالُوا۟ هَٰذَآ إِفْكٌۭ مُّبِينٌۭ.
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் -ஒருவர் மீது பழியை கேள்வியுற்ற போது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண்பழியேயாகும்"" என்று கூறியிருக்க வேண்டாமா?
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை மனதரா ஏற்று அதன்படி செயல்படும் ஆண் பெண் ஆகியோர், பழிச் சொல்லுக்கு ஆளானவர்களைப் பற்றி எல்லோரிடமும் அவதூறு சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. மாறாக இதைப் பற்றி கேள்வியுற்றால், இது வீண் பழி என்றே தான் நினைப்பதாகவும் அதைப் பற்றி அல்லாஹ்வின் அறிவுரைப்படி செயல்படும் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறுவதே சிறந்த செயலாகும். இத்தகைய நல்லெண்களுடன் செயல்படுபவர்கள் தான் மூஃமின்கள் ஆவர்.
إِذْ تَلَقَّوْنَهُۥ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌۭ وَتَحْسَبُونَهُۥ هَيِّنًۭا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌۭ.
24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச்சொல்லி)க் கொண்டு, உங்களுக்கு(த் திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள். இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கும்.
விளக்கம் :
இதை விட்டுவிட்டு குற்றத்தைப் பற்றிய எந்த உண்மைகளையும் அறிந்து கொள்ளாமல், வேண்டுமென்றே எல்லோரிடமும் எடுத்து சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. எதைப் பற்றி உங்களுக்கு தெளிவான உண்மை தெரியவில்லையோ, அதைப் பற்றியா கூறித் திரிகிறீர்கள்? மேலும் இப்படிச் சொல்லித் திரிவது இலேசான காரியம் என்று எண்ணிக் கொண்டீர்களா? இல்லை. இதனால் சமுதாயத்தில் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும். எனவே அல்லாஹ்வின் சட்டப்படி இது மிகப் பெரிய குற்றமாகும்.
وَلَوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبْحَٰنَكَ هَٰذَا بُهْتَٰنٌ عَظِيمٌۭ.
24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை. (நாயனே!) நீயே தூயவன். இதுபெரும் பழியாகும்"" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
விளக்கம் :
இதையும் தவிர்த்து யாராவது இப்படி பேசுவதைக் கேட்டால், “இதைப் பற்றி நாம் கருத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அல்லாஹ்வின் தூய்மையான வழிகாட்டுதலின்படி செயல்படும் நீதிமன்ற விவகாரமாகும். எனவே இதைப் பற்றி நாம் ஏதாவது கூறினால் அது வீண் பழியாகிவிடும்” என்று கூறியிருக்கக் கூடாதா?
يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُوا۟ لِمِثْلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ.
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாக இருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்குப் போதிக்கிறான்.
விளக்கம் :
எனவே நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட மூஃமின்களாக இருந்தால், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத பேச்சுகளின் பக்கம் ஒருபோதும் கவனம் செலுத்தாதீர்கள். இது அல்லாஹ்வின் அறிவுரையாகும்.
செய்தி தாள, தொலைக் காட்சி போன்ற தகவல் தொடர்பு மையங்களும் இதைப் பற்றி நன்கு அறிந்து உண்மையான தகவல்களையே அளிக்க வேண்டும்.
وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.
24:18. இன்னும், அல்லாஹ்(தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு)விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ்(யாவும்) அறிந்தவன், விவேகம் மிக்கோன்.
விளக்கம் :
சமூக நல்லிணகத்தைக் கட்டிக் காக்க, எல்லா விஷயங்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றன. உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும்; என்னவென்பதையும் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ளும் வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து வரும் அறிவுரைகளாகும்.
19.பிறர் மீது பழிசுமத்துவது மிகப்பெரிய பாவச் செயலாகும்
وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் அதன் பாதிப்பிலிருந்து அல்லாஹ்விடம் நிவாரணம் பெற நாடினால் - அவர் அல்லாஹ்வே பாதுகாப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
விளக்கம் :
நீங்கள் செய்த தீய செயல்களுக்கு மனம் வருந்தி அவற்றை உடனே விட்டுவிட்டு (பார்க்க 4:17) அதற்குப் பரிகாரமாக ஆக்கப்பூர்வமான பன்மடங்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும். அப்போது தான் தீமைகள் உங்களை விட்டு விலகி, நற்பண்புகள் உங்களில் வளர்ந்து வரும் (25:70). மேலும் நீங்கள் செய்த தீய செயல்களின் பாதிப்பிலிருந்து நிவாரணமும் பாதுகாப்பும் பெற முடியும். இப்படியாக ஒருவன் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிக்காமல் அவனுடைய பாதுகாப்பு கருதி, அவனுக்குத் தக்க வாய்ப்பு அளித்திருப்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையாகும்.
وَمَن يَكْسِبْ إِثْمًۭا فَإِنَّمَا يَكْسِبُهُۥ عَلَىٰ نَفْسِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ, அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
இந்த உண்மையை அறிந்த பின்பும் ஒருவர் தீய செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், அதன் கேடுகள் அவனையே வந்தடையும் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். இதன் விளைவாக அவனையும், மனித நேயத்தையும் சீரழிக்கும். அல்லாஹ்வின் சட்டமும் வழிகாட்டுதலும் கல்வி ஞானத்தின் அடிப்படையில் அமைந்ததாகும் என்பதை அறிந்து செயல்படுங்கள்.
وَمَن يَكْسِبْ خَطِيٓـَٔةً أَوْ إِثْمًۭا ثُمَّ يَرْمِ بِهِۦ بَرِيٓـًۭٔا فَقَدِ ٱحْتَمَلَ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا.
4:112. மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து விட்டு, அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
விளக்கம் :
ஒருவன் தவறான செயலையோ அல்லது பாவச் செயலையோ செய்துவிட்டு, அதை ஒரு பாவமும் அறியாத அப்பாவி மீது பழி சுமத்திவிடுவது எவ்வளவு பெரிய அவதூறுச் செயலாகும். இது ஒரு பகிரங்கமான பாவகர செயல் அல்லவா? இப்படியாக அவன் இரு மடங்கு பாவத்தைச் சுமந்து கொண்டதாகப் பொருள்படும். அதற்கு தண்டனையும் இருமடங்காகும்.
20.வதந்திகளைப் பறப்புவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
وَإِذَا جَآءَهُمْ أَمْرٌۭ مِّنَ ٱلْأَمْنِ أَوِ ٱلْخَوْفِ أَذَاعُوا۟ بِهِۦ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسْتَنۢبِطُونَهُۥ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَٱتَّبَعْتُمُ ٱلشَّيْطَٰنَ إِلَّا قَلِيلًۭا.
4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வ்pன்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்று முள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக் கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீது இல்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றி இருப்பீர்கள்.
விளக்கம் :
மேலும் சட்ட விரோதமாகச் செயல்படுபவர்கள் அமைதியின் நற்செய்தியோ, அல்லது பீதியைப் பற்றிய செய்தியோ கேட்டால், உடனே அவற்றை மக்களிடம் பரப்பி விடுகின்றனர். இதனால் தக்க நிவாரண நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இப்படிப்பட்ட செய்தியை அரசின் (தூதரின்) கவனத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவற்றை நன்கு விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் இல்லாதிருந்தால் இப்படிப்பட்ட புரளிகளை (ஷைத்தான்களை) நம்பி உங்களில் பலர் உடனே செயலில் இறங்கி இருப்பீர்கள். பிரச்னைகள் தீர்வதற்குப் பதிலாக அது மேலும் சிக்கலாகி இருக்கும்.
எந்தப் பிரச்னையை எவ்வாறு அணுகுவது என்று பொது மக்களுக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும்? எனவே இப்படிபட்ட புரளிகளைப் பரப்புவதால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இப்படிச் செயல்படுபவர்களுக்கே ஏற்படுகின்றன. மேலும் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வந்தால் நாட்டு மக்களிடையே அவநம்பிக்கையும் செயல்களில் தொய்வும் ஏற்பட்டுவிடும்.
21.தெளிவான ஞானமின்றி கண்மூடித்தனமாகச் செயல்படாதீர்கள்.
பொதுவாக மக்களிடையே முன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் சொல்படி தான் நடக்கவேண்டும் என்ற பேச்சு நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறான வழிமுறையாகும். எது சரி, எது தவறு என்று அறிந்துகொள்ளும் உரைகல் திருக்குர்ஆன் மட்டுமே ஆகும்.
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا.
17:36. எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்ய)த் தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிப் புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்.
விளக்கம் :
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு தெளிவான ஞானம் இல்லையோ அதைப் பின்பற்றாதீர்கள். எதையும் கேட்டு அறிந்துகொள்ள செவிப்புலனும், பார்த்து விளங்கிக்கொள்ள பார்வையும், தீர்க்கமாக அறிந்து கொள்ள பகுத்தறிவும் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கிடைத்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக தெரிந்த பின்னரே அதைப் பின்பற்றுங்கள். இல்லையென்றால் இவற்றை எல்லாம் இறைவன் உங்களுக்கு கொடுத்தற்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போயிவிடும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்று யாராவது சொன்னாலும், அதை கண்மூடித்தனமாக ஏற்று செயல்படக் கூடாது. அதைப் பற்றி தீர விசாரித்து அந்த வழிகாட்டுதல் எது சம்பந்தமாக வந்துள்ளது? எவ்வாறு அவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை நன்றாக அறிந்த பின்னரே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّۭا وَعُمْيَانًۭا.
25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
விளக்கம் :
மேலும் இறைவழிகாட்டுதலின்படி செய்படும் செயல்வீரர்கள், எந்தச் செய்தியையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ள மாட்டார்க்ள். அது இறைச் செய்தியாக இருப்பினும் சரியே. அதைப் பற்றி தீர விசாரித்து, உண்மை அறிந்த பின்னரே அவற்றை ஏற்று அதற்குத் தக்கவாறு செயல்படுவார்கள். அதாவது அவர்கள் ஒருபோதும் கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள்.
22.போதைப் பொருட்கள் மற்றும் சூதாட்டங்கள்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَآ إِثْمٌۭ كَبِيرٌۭ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ
2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.
விளக்கம் :
மக்கள் உம்மிடம் மதுபானத்தைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் கேட்கின்றனர். அவ்விரண்டும் சமுதாய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாய் நிற்பவை ஆகும். தனிப்பட்ட முறையில் சிலருக்கு நன்மைகள் கிடைத்திடலாம். ஆனால் இந்த நன்மைகளை விட இவற்றால் சமுதாயத்தில் ஏற்படும் தீய விளைவுகள் பன்மடங்கு அதிகமாகும். எனவே சமுதாயத்தில் இவை நடைபெறாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். (பார்க்க 5:90)
உங்கள் சமூக அமைப்பு சிறப்பாக விளங்கவேண்டும் என்று விரும்பினால், இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். (பார்க்க 5:90). சூதாட்டங்களால் மற்றவர்களின் செல்வங்கள் எளிதில் களவு போய் விடுகின்றன. இதானல் இழப்புக்குள்ளானோர், பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே சமுதாயத்தில் இவ்வாறு எதுவும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
23.அமானிதங்களைக் கட்டிக் காப்பாற்றுவது.
உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பொருட்களை அவர்களுக்கு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதில் முறைகேடு ஒருபோதும் செய்யக் கூடாது.
وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ.
23:8. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
விளக்கம் :
மேலும் மூஃமின்கள் எத்தகையோர் என்றால், தம்மிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளையும் அவற்றைக் கட்டிகாக்க எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவார்கள்.
إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا۟ ٱلْأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ ٱلنَّاسِ أَن تَحْكُمُوا۟ بِٱلْعَدْلِ ۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعًۢا بَصِيرًۭا.
4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றிற்குரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், மக்களிடையே தீர்ப்பு கூறினால் நீதமாகவை தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ உங்களுக்கு எதனை உபதேசம் செய்கின்றானோ அது மிக்க நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகழவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
அதன் நிர்வாகப் பொறுப்பு, அதை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இரண்டாவதாக மக்களிடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்ப்பு வழங்கும்போது, அல்லாஹ் அறிவித்துள்ள சட்டங்களின்படியே நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவும் அந்த தீர்ப்பு, தீவிர விசாரணைக்குப்பின் மக்களுக்கு துரிதமாக கிடைக்க வேண்டும். இவை யாவும் அல்லாஹ்வின் நல்லுபதேசங்களாகும். இவற்றை எப்போதும் பேணி நடந்துகொள்ள வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை மட்டும் மறவாதீர்.
இதுவே சிறப்பான சமுதயாத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்றால் அது மிகையாகுமா? சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்பவர்களைத் தான் மூஃமின்கள் என்றும் அத்தகையவர்களிடமே ஆடசி பொறுப்பு அமானிதமாக இருக்கும் என்றும் திருக்குர்ஆன் சாட்சி அளிக்கிறது.
24.வீணான பொழுது போக்குகளால் தீங்கு என்ன?
وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ.
23:3. இன்னும், அவர்கள் வீணான( பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
விளக்கம் :
மேலும் மூஃமின்கள் தம்மிடமுள்ள ஆற்றல்களை ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களுக்காகப் பயன்டுத்திக் கொள்வார்களே அன்றி சமுதாய வளர்ச்சியை பாதிக்கும் வீணானவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ وَزِينَةٌۭ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌۭ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَكُونُ حُطَٰمًۭا ۖ وَفِى ٱلْءَاخِرَةِ عَذَابٌۭ شَدِيدٌۭ وَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌۭ ۚ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ.
57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும். (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது. ஆனால் சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள்நிறம் ஆவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே: எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு. (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் பாதுகாப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
விளக்கம் :
(1) இன்னும் இதையும் தெரிந்துகொள்ளுங்கள். இறை நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது வெறும் வீண் விளையாட்டாகவே இருக்கும்.
(2) அவர்களுடைய சமுதாயங்களில் கேளிக்கைகளும், வேடிக்கைகளும் மிகைத்திருக்கும்.
(3) அவையே அவர்களுக்கு அழகானதாகத் தோன்றும். அவற்றைக் கொண்டு அவர்கள் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.
(4) மேலும் தங்களுடைய பிள்ளைகளுக்காகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் போட்டி இருக்கும்.
(5) இவர்களுடைய வாழ்க்கை முறையை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
(6) அதாவது வானத்திலிருந்து மழை பொழிந்து, வயல் பசுமையடைந்து செழிப்பாகிறது. அதைக் காணும் விவசாயி ஆனந்த பரவசமடைகிறான். ஆனால் அதன் பயிர்கள் இயற்கை சீற்றங்களால் விரைவிலேயே உலர்ந்து கூளமாகி விடுகின்றன.
(7) அந்தப் பயிர்கள் கூளமாவதற்கு முன் அவற்றைப் பாதுகாக்கும் திறமையோ அவனிடம் இருந்ததில்லை.
(8) எனவே அவனுடைய சந்தோஷங்கள் தற்காலிகமானதாகவே ஆகிவிடுகிறது.
(9) அதுபோலத் தான் வருங்கால நலத்திட்டங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் தற்காலிக சந்தோஷங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு, வருங்கால சந்தோஷங்களில் எந்தப் பங்கும் கிடைப்பதில்லை. அவர்களுடைய வருங்கால வாழ்வு துயர்மிக்கதாய் ஆகிவிடுகிறது.
(10) எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் நிலையான, சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்விற்கு வழிவகுக்கிறது.
(11) ஆக வருங்கால நிலையான சந்தோஷங்களை வைத்துப் பார்க்கும்போது, நிகழ்கால சந்தோஷங்கள் அற்பமானவையே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
(12) சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? பார்ப்பதற்கு விஷயம் என்னவோ சிரியதாகத் தான் தெரிகிறது. ஆனால் அதன் பாதிப்புகள் எந்த அளவுக்கு பயங்கரமாய் உள்ளன என்பதைக் கவனித்துப் பாருங்கள். எனவே வீணான பொழுது போக்குகளில் பங்கெடுத்து உங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்காதீர்கள். இதைப் பற்றி சிறு பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே அவர்களை மிகவும் கவனத்துடன் கண்காணித்து வரவேண்டும். அவர்களுக்கு அடிக்கடி இதைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
25.பில்லி, சூனியம் மற்றும் மாய மந்திரங்கள் :
சிலர் பில்லி, சூனியம், மாய மந்திரங்களை ஒழிக்கத் தான் இஸ்லாம் வந்தது என்பார்கள். மற்றும் சிலர் பில்லி சூனியத்தால் மனிதனுக்கு குந்தகம் விளைவிக்க முடியும் என்பார்கள். அதற்காக ஜின்களையும், பேய் பிசாசுகளையும் மனிதன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு தீவினை செய்யலாம் என்பார்கள். ஆனால் திருக்குர்ஆனை அலசி ஆராயும் போது, இத்தகைய மாய மந்திரங்களால் யாரையும் எந்த தீங்கையும் செய்ய முடியாது என்றே புலனாகிறது. திருக்குர்ஆன் இதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதையும் கவனியுங்கள்.
وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَٰنَ ۖ
2:102 அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்,
விளக்கம் :
சுலைமான் நபி நடத்தி வந்த சிறப்பான ஆட்சியை விரும்பாத சில விஷமிகள், அவருக்கு எதிராகக் கட்டுக் கதைகளைச் சொல்லி வந்தார்கள். அவையே சரியானவை என்று மக்களும் நம்பி அவற்றைப் பின்பற்றியும் வருகின்றனர்.
وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ
2:102. ஆனால் சுலைமான் நபியோ இறைக் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதே இல்லை.
وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ
2:102 சமூக விரோதிகளாக இருந்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்குச் சூனிய வித்தைகள் என்று சொல்லி ஏதேதோ கற்றுக் கொடுத்து வந்தனர்.
அதன் பின்னணியில் சொல்லப்படும் கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்: அதாவது பாபிலோன் என்னும் நகரத்தில் “ஹாரூத்”“மாரூத்” என்னும் இரண்டு மலக்குகள் வந்ததாகவும், அவர்கள் தாம் ஏதோ சில சூனிய வித்தைகளைக் கற்றுக் கொடுத்ததாகவும் சொல்லி வந்தார்கள்.
وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَ ۚ
2:102 இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதாகவும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தாகவும் சொல்லி வந்தார்கள்).
ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட எந்த மலக்குகளும் அனுப்பப்படவும் இல்லை. அவர்கள் சூனிய வித்தைகளைக் கற்றுத்தரவும் இல்லை. இது இவர்களே இட்டுக் கட்டிக்கொண்ட கட்டுக்கதையே ஆகும்.
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌۭ فَلَا تَكْفُرْ ۖ
2:102 மேலும் அவர்கள் (மலக்குகள்) இருவரும்: “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லையாம்.
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ ۚ
2:102 அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள். மேலும் அந்த வித்தைகளைக் கற்றுக்கொண்டு கணவன் மனைவிக்கிடையே விரிசலை ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகிறார்கள்.
وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ
2:102. அல்லலஹ்வ்pன் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.
அல்லாஹ்வின் கட்டளை என்பது என்ன? அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைக்குச் சொல்வார்கள். அதவாது வதந்திகள், வீண்பழி, அவதூறு போன்ற அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிரானவற்றைப் பரப்பி, கணவன் மனைவி இடையே பிரச்னை ஏதாகிலும் ஏற்படுத்திடலாமே அன்றி சூனிய வித்தையைக் கொண்டு ஒருபோதும் தீமையோ நன்மையோ செய்திட முடியாது.
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ
2:102. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்தவித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்.
وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍۢ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.
2:102 (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
சிந்தனையாளர்களே! இதுதான் சூனியத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மை. நீங்களே சொல்லுங்கள். சூனியத்தால் இவ்வுலகில் ஆகப்போவது ஏதாவது உண்டா?
26.பிற மதத்தினரின் தெய்வங்களை பழிக்காதீர்கள்.
وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍۢ ۗ
6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.
விளக்கம் :
பிற மதத்தினர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அவர்கள் வணங்கி வரும் தெய்வங்களைப் பழித்துப் பேசாதீர்கள். இதனால் உங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக, வெறுப்பும் பகைமையும் வளரும். மேலும் அவர்கள் பதிலுக்கு ஆவேசத்துடன் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.
27.பிற மதத்தவர்களைப் பரிகாசம் செய்யாதீர்கள்:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.
49:11. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம். (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்று எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம். இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களே! இஸ்லாத்தை ஏற்காத பிற சமூகத்தவர்களை பரிகாசம் செய்ய வேண்டாம். காரணம் அவர்கள் பலவகையில் உங்களைவிட சிறந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கலாம். அவர்களிடம் உள்ள பரஸ்பர உறவு கெடாமல் இருக்க இது சிறந்த வழிமுறையாகும். அதே போன்று பெண்களும் மற்ற எந்தப் பெண்ணையும் பரிகசிப்பது கூடாது. ஏனெனில் அவர்களிடத்திலும் பல சிறப்பு குணங்கள் இருக்கலாம். இவை யாவும் தேவையற்ற பகைமைக்கு வழி வகுக்கும். எனவே இவற்றைக் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.
28.தரக்குறைவான பட்டப் பெயரைக் கொண்டு அழைக்காதீர்கள்
وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.
49:11 இன்னும்(உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்இஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
விளக்கம் :
உங்களில் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பழித்துப் பேசிக் கொள்ளாதீர்கள். மேலும் நீங்கள் ஒருவரையொருவர் தரக்குறைவான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டபின் இப்படிப்பட்ட பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்டதாகும். எவர் இவ்வாறு செய்வதிலிருந்து மீளவில்லையோ, அவர்கள் அநியாயக்காரர்களின் பட்டியலில் இடம்பெறுவர்.
அதாவது சிலர் சொட்டை, குள்ளன் போன்ற பெயர்களைச் சூட்டி கேலியாக அழைப்பார்கள். இது மிகவும் தவறான பழக்கமாகும்.
29.பலனற்ற விஷயங்களைப் பற்றி துருவித் துருவித் கேட்காதீர்கள்.
எங்கேயாவது குற்றம் நடந்திருந்தால், அதன் பின்னணியைப் பற்றி துப்பு துலக்க, துருவித் துருவி விசாரணை செய்வதில் பலன்கள் கிடைக்கும். ஆனால் தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் தடையிட்டுக் கொண்டு, அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதாவது கிடைக்குமா?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱجْتَنِبُوا۟ كَثِيرًۭا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعْضَ ٱلظَّنِّ إِثْمٌۭ ۖ وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களே! நீங்கள் எந்த விஷயத்தையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகாதீர்கள். காரணம் பல சமயங்களில் இது தீய விளைவுகளை ஏற்படுத்தி விடும். மேலும் உங்களிடையே பகைமை வளர்ந்திட உங்களுக்கு எதிராகப் புரளிகளைப் பரப்புவதற்கென்றே சிலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். எனவே அவற்றைப் பற்றி துருவித் துருவிக் கேட்டுகொண்டிருக்க வேண்டியதில்லை.