بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.மரண சாஸனம் (வஸீயத்து) செய்வது உங்கள் மீதுள்ள கடமை:
كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ.
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்) செய்வது விதியாக்கபட்டு இருக்கிறது, (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
விளக்கம் :
(1) செல்வந்தர்கள், தம் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள், முறைப்படி மரண சாஸனம் எழுதி வைப்பது அவரது தலையாய கடமையாகும்;.
(2) இந்த மரண சாஸனம் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் பிரச்னை எதுவும் ஏற்படாமலிருக்க இதை முக்கியமாக கவனித்து எழுதி வைக்க வேண்டும்.
(3) பிள்ளைகளுக்கு 4:11-12 வாசகங்களில் உள்ள வாரிசு சட்டப்படி பங்கு கிடைத்து விடும். தன் பிள்ளைகளைப் பற்றி பெற்றவர்களுக்கு நன்கு தெரியும்.
(4) சொத்து செல்வங்களை யார் சிறப்பாக பராமரிப்பார் என்ற உண்மையும் அவருக்குத் தான் தெரியும். எனவே அதன்படி வஸீயத்து செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு.
(5) மேலும் முறைப்படி எழுதவேண்டும் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் இரு சாட்சியங்களை வைத்து செய்ய வேண்டும் என்பது அதன் பொருளாகும். (பார்க்க 5:106)
(6) அரசு பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். வஸீயத்து எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍۢ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ ۚ
5:106. ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்,அல்லது உங்களில் எவரும் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது மரணம் சமீபித்தால், (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள்கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்,
விளக்கம் :
(1) ஒருவர் தம் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் சமயம், மரண சாஸனம் கூற நாடினால், அதற்கு நம்பிக்கைக்குரிய இரு சாட்சியங்களை முன்வைத்து முறைப்படி தம் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். (2:180)
(2) ஒருவேளை நீங்கள் பயணத்தில் இருக்கும் போது, மரணம் சம்பவித்து விடும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தால், நம்பிக்கைக்குரிய வேறு இரு நபர்களை முன்வைத்து, செல்வங்கள் பங்கீடு விஷயமாகத் தம் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம்.
(3) இந்த வாசகத்தின் தொடர், “சாட்சி கூறுதல்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
فَمَنۢ بَدَّلَهُۥ بَعْدَمَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثْمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.
2:181. வஸிய்யத்து (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
இப்படியாக சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களையும் பெரியவர்களையும் வைத்துக்கொண்டு முறைப்படி செய்யப்பட்ட மரண சாஸனத்தை எவரேனும் மாற்றினால், அது மிகப் பெரிய குற்றமாகும். நிச்சயமாக அல்லாஹ்வின் யாவற்றையும் கேட்டுக்கொள்ளும் வல்லமையும் அறிந்துகொள்ளும் பேராற்றலும் அளவற்றதாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2.மரண சாஸனத்தில் முறைகேடுகள் இருந்தால்?
فَمَنْ خَافَ مِن مُّوصٍۢ جَنَفًا أَوْ إِثْمًۭا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர்(சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்தவஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை, நிச்சயமாக அல்லாஹ் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
ஆனால் இந்த மரண சாஸனத்தில் முறைகேடோ அநீதியோ இழைக்கப்பட்டதாக நடுவர்கள் அஞ்சினால், சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களை அழைத்து சமாதானம் செய்து வைக்கலாம். அவ்வாறு சீர் செய்வதில் குற்றம் எதுவுமில்லை. ஆக அல்லாஹ்வின் சட்டங்கள் பாதுகாப்பான வாழ்விற்கு வழிவகுக்கும் கிருபை மிக்கதாக இருக்கின்றன.
3.இவ்வாறு மரண சாஸனம் எழுதவில்லை என்றால்?
திருக்குர்ஆனில் உள்ள பாகப்பிரிவினை சட்டப்படி சொத்தை பிரித்துத் கொடுக்க வேண்டும்.
يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَٰدِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَآءًۭ فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَٰحِدَةًۭ فَلَهَا ٱلنِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌۭ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌۭ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌۭ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ۗ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًۭا ۚ فَرِيضَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.
4:11 பாகப்பிரிவினைச் சட்டம் பின்வருமாறு வருகிறது.
(1) இறந்தவரின் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற விகிதாசாரப்படி பிரிக்கப்படும்.
(2) பெண்கள் மட்டும் இரண்டோ அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர்களுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும்.
(3) ஒரு பெண் மட்டும் இருந்தால் அச்சொத்தில் பாதி பாகம் கிடைக்கும். மீதமுள்ளது நெருங்கிய உறவினர்களுக்குச் சேரும்.
(4) இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்து தாய் தந்தையர் உயிருடன் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
(5) இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்தால், தாய் தந்தையர் அச்சொத்திற்கு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதில் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கும் தந்தைக்கு மூன்றில் இரண்டு பங்கும் சேரும்.
(6) இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்து, சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு சேரும். அதாவது சொத்தை ஆறு பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கு தாய்க்கு போக, மீதமான ஐந்து பங்கில் ஒரு பங்கு சகோதரர்களுக்கும் நான்கு பங்கும் தந்தைக்கும் சேரும்.
(7) நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை இறந்தவரின் கடன்களை அடைத்த பின்தான் செய்யப்படும். அவருக்குக் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அந்தச் சொத்திலிருந்து அதை முதலில் ஒதுக்கவேண்டும்.
(8) அதன்பின் அவர் மரண சாஸனத்தில் உள்ள சொத்துக்கள் போக, மீதமுள்ள சொத்திலிருந்துதான் பாகப் பிரிவினை செய்ய வேண்டும்.
(9) ஒரு வேளை அவர் உயில் எழுதவில்லை என்றால் மேற்சொன்ன முறைப்படி பாகப்பிரிவினை செய்யுங்கள்.
(10) ஆக உங்கள் பெற்றோர், பிள்ளைகள் ஆகிய இவர்களில் நன்மை செய்வதில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இதனால்தான் இந்த பாகப்பிரிவினை செய்யும் முறை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்படுகிறது.
(11) நிச்சயமாக அல்லாஹ்வின் இந்தச் சட்டவிதிமுறைகள் கல்வி ஞானத்தின் அடிப்படையில் செய்யப்பட்டவையாகும்.
4.திருமண பந்தங்களின் மூலமாகக் கிடைக்கும் சொத்துக்களின் பாகப்பிரிவினை.
இப்போது திருமண பந்தங்களின் மூலமாகக் கிடைக்கும் சொத்துக்களின் பாகப்பிரிவினை பற்றியது ஆகும்.
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌۭ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌۭ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّنۢ بَعْدِ وَصِيَّةٍۢ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۗ وَإِن كَانَ رَجُلٌۭ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمْرَأَةٌۭ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌۭ فَلِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ ۚ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّۢ ۚ وَصِيَّةًۭ
(1) உங்கள் மனைவி விட்டுச் சென்ற சொத்துக்களில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருக்கு சரி பாதி பங்குண்டு. பிள்ளைகள் இருந்தால் அதில் நான்கில் ஒரு பங்கு சேரும். அதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் மரண சாஸனம் போக மீதமுள்ள சொத்துலிருந்து இந்த பாகப் பரிவினை செய்ய வேண்டும்.
(2) கணவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் மகப்பேறு இல்லாத நிலையில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு சேரும். பிள்ளைகள் இருந்தால் அதில் எட்டில் ஒரு பங்கு சேரும். இதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் தாமே எழுதிய உயில் சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்திலிருந்து இந்த பாகப் பிரிவினை செய்யப்படும்.
(3) அதாவது நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் முதலில் இறந்தவர் பேரில் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதையும், அவர் என்ன உயில் எழுதியிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போக மீதமுள்ளதைக் கணக்கெடுத்து கணவன் மனைவி உறவுமுறையில் பாகப்பிரிவினை கணக்கு எடுக்கவேண்டும் (பார்க்க: 4:33). இதைக் கழித்து மீதமுள்ள சொத்திலிருந்து வாரிசுகளான மகன் மகள் பேரன் பேத்தி அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை பாட்டனார் ஆகியவர்களுக்குப் பாகப்பிரிவினை செய்யவேண்டும்.
(4) இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்து, தாய் தந்தையர் உயிருடன் இருந்து, உடன் பிறந்த ஒரு சகோதரன் ஒரு சகோதரி இருந்தால் இவர்கள் இருவருக்கும் தலா ஆறில் ஒரு பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேல் சகோதர சகோதரிகள் இருந்தால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கெடுத்து, சரிசமமாகப் பிரித்து தரப்படும். இறந்தவருக்குத் தாய் தந்தையர் இல்லை என்றால் 4:176இன் படி பிரித்துத் தரப்படும்.
(5) நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை எல்லாம் இறந்தவர் பேரில் இருக்கும் கடன்கள் மற்றும் அவர் எழுதிவிட்டுச் சென்ற உயில் சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்திலிருந்துதான் பங்கு பிரித்துத் தர வேண்டும். ஒருவேளை அவர் எழுதிய மரண சாஸனம் வாரிசுகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று இசுலாமிய நீதிமன்றம் கருதினால், அதைத் தீர விசாரித்து சரிசெய்யலாம் (பார்க்க: 2:182) இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளாகும். அவற்றை யாரும் மீறக்கூடாது. ஏனெனில் இவையாவும் அவசரப்பட்டு செய்யப்பட்ட விதிமுறைகள் அல்ல. எல்லா வல்லமையும் உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும்.
5.சொத்துக்களுக்கு முன்னுரிமை யாருக்கு?
وَلِكُلٍّۢ جَعَلْنَا مَوَٰلِىَ مِمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ ۚ وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدًا.
4:33. இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம், அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் சாட்சியாளனாக இருக்கிறான்.
விளக்கம் :
(1) ஆண்கள் மற்றும் பெண்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து பாகப் பிரிவினை செய்யும் விகிதத்தை 4:11இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(2) தாய் தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர் பெயரில் இருக்கும் சொத்துக்களை முறைப்படி பாகப் பிரிவினை செய்யவேண்டும்.
(3) ஆனால் வாரிசுதாரர்களுக்குப் பாகப்பிரிவினை செய்வதற்கு முன், திருமண பந்தத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பங்கு கொடுத்து விட்டு மீதமுள்ளவற்றில் பங்கு பிரிக்கவேண்டும். அதாவது கணவன் பெயரில் உள்ள சொத்திலிருந்து முதலில் மனைவிக்கும் அல்லது மனைவி பெயரில் உள்ள சொத்திலிருந்து கணவனுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதன் பின்னரே மீதமுள்ளவற்றில் மற்ற வாரிசுதாரர்களுக்குப் பங்கு பிரிக்க வேண்டும். உங்களுடைய அனைத்துச் தீர்ப்புகளுக்கும் அல்லாஹ்வின் நீதி மன்றம் சாட்சியாக நிற்கும்.
6.வாரிசு இல்லாத கலாலா சொத்துக்கள்:
يَسْتَفْتُونَكَ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِى ٱلْكَلَٰلَةِ ۚ إِنِ ٱمْرُؤٌا۟ هَلَكَ لَيْسَ لَهُۥ وَلَدٌۭ وَلَهُۥٓ أُخْتٌۭ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌۭ ۚ فَإِن كَانَتَا ٱثْنَتَيْنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوٓا۟ إِخْوَةًۭ رِّجَالًۭا وَنِسَآءًۭ فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ.
4:176. (நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகியவாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்,
(1) ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு.
(2) இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்,
(3) இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்,
(4) அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர்ஆணுக்கு உண்டு.
(5) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்,அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
7.தந்தை இழந்த பேரன் பேத்திகளுக்கு சொத்துரிமை இல்லையா?
தாய் தந்தை உயிருடன் இருந்து, தம் மகன் அல்லது மகள் இறந்துவி;ட்டால் அவருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு சொத்துரிமை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கண்ணோட்டமாகும். மகனோ மகளோ இறந்து விட்டால் அவருக்குப் பிறந்த பிள்ளைகள் பேரன் பேத்தி என்ற உறவுமுறை இல்லை என்று ஆகிவிடுமா? அந்தப் பிள்ளைகள் அன்னியர்களாக ஆகிவிடுவார்களா? எனவே அவர்களுடைய தந்தைக்கு சேரவேண்டிய பங்கிலிருந்து முறைப்படி பிரித்துக் கொடுக்க வேண்டியது மற்ற உரிமையாளர்களின் கடமையாகும். ஜமாஅத் அமைப்போ அல்லது நீதிமன்றமோ இதை முக்கியமாக கவனத்தில் கொண்டு நியாயமான முறையில் பங்கு பிரித்து அளிக்கவேண்டும்.
4:7. தாய் தந்தையரோ நெருங்கிய உறவினர்களோ, விட்டுச் சென்ற சொத்துக்களில் ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பங்குண்டு. விட்டுச்சென்ற சொத்து சிறியதோ பெரியதோ, அவரவர் பங்கை பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. பாகப்பிரிவினையில் ஆண்களுக்கு மட்டும்தான் பங்கு என்பதல்ல. பெண்களும் அதற்கு உரிமை பெற்றவர்களே. (பார்க்க: 4:32) இது இறைவனால் வரையறுக்கப்பட்ட சட்டமாகும்.
இவ்வாசகத்தில் நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பங்கு உண்டு என்று சொல்லப்படுவதை கவனியுங்கள். தந்தை இல்லா பேரன் பேத்திகள் நெருங்கிய உறவினர்கள் பட்டியலில் இடம் பெற மாட்டார்களா?
8.பாகப் பிரிவினைச் சட்டங்கள் எதற்கு?
مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنْ أَهْلِ ٱلْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ كَىْ لَا يَكُونَ دُولَةًۢ بَيْنَ ٱلْأَغْنِيَآءِ مِنكُمْ ۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمْ عَنْهُ فَٱنتَهُوا۟ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ.
59:7. உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது), மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும் அல்லாஹ்i;வ அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
உறவினர்களுக்கும், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கும், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோருக்கும், அல்லாஹ்வின் பாதையில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் செல்வங்கள் பங்கிட்டுத் தரப்படும். சில செல்வந்தர்களுக்கிடையே செல்வங்கள் குவிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இத்தகைய பாகப்பிரிவினைச் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.