بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.கணவன் மனைவியிடையே விரிசல்
لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍۢ ۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்துகொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது,எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் துயரங்களிலிருந்து நிவாரணம் அளிப்பவனாகவும், மிக்க கருணை உடையோனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
(1) தம் மனைவியிடம் விரிசல் ஏற்பட்டு அவளைவிட்டு விட்டு விலகிவிடுவதாக ஒருவர் உறுதி கொண்டிருந்தால், அவருக்கு நான்கு மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும். அதற்குள் அவர் தன் மனைவியிடம் வந்து இணைந்து கொள்ளவேண்டும்.
(2) இல்லையெனில் மனைவியும் பிரிந்துவிட விரும்பினால், அவள் விவாகரத்து கோரி ஜமாஅத்தாரிடம் விண்ணப்பிக்கலாம். அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கான சட்ட விதிமுறைகளை அளித்திருப்பது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும்.
2.தலாக்கின் முதல் நிலை:
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَٱبْعَثُوا۟ حَكَمًۭا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًۭا مِّنْ أَهْلِهَآ إِن يُرِيدَآ إِصْلَٰحًۭا يُوَفِّقِ ٱللَّهُ بَيْنَهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًۭا.
4:35. (கணவன் - மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று ஜமாஅத்தாராகிய நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள், அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்கு உணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
(1) கணவன் மனைவி இடையே விரிசல் இருப்பதாகப் புகார் வந்தால் - அந்தப் பிளவு திருமண ஒப்பந்தத்தில் முறிவு ஏற்படும் அளவிற்கு சென்றுவிடும் என்று ஜமாஅத்தாராகிய நீங்கள் பயந்தால் அதன் பிரச்னைக்கான காரணங்களை அறிந்து கொள்ள கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும், மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் நடுவர்களாக நியமித்து, சமாதானமாக வாழ முயலுங்கள்.
(2) அப்படி அவர்கள் இருவரும் சமாதானமாகிவிட விரும்பினால், அவர்கள் இருவரும் பழையபடி சேர்ந்து வாழ அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு.
(3) எனவே அந்த நடுவர்கள் கணவன் மனைவி இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை நீக்கும் நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் கல்வி ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுபவையாகும்.
3.இரண்டாம் நிலை:
நடுவர்கள் மூலம் அவர்களுடைய விரிசலை சரிசெய்ய முடியவில்லையென்றால், ஜமாஅத் அல்லது இஸ்லாமிய நீதிமன்றம் அவர்களுடைய தலாக் கோரிக்கை மனுவை ஏற்று, மூன்று மாத காலத் தவணை அளித்து அவர்களை அனுப்பி வைத்து விடவேண்டும். இதை தலாக் நிலுவை காலம் அல்லது “இத்தா” காலம் (Thalaq in abeyance) எனப்படும்.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا۟ ٱلْعِدَّةَ ۖ
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா'வைக் கணக்கிட ஏற்றவகையில் (மாதவிடாய் கணக்கிட்டு) தலாக் அறிவிப்பு செய்யுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்,
விளக்கம் :
இறைவழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! விவாகரத்து கோரி விண்ணப்பித்த தம்பதியர்கள் விஷயத்தில் தலாஃக் அறிவிப்பு செய்யும் போது, அப்பெண்ணின் மாதவிடாய்ப் பற்றிய கணக்கை விசாரித்து, அதன்படி கால அவகாசம் அளித்து தலாஃக் அறிவிப்பு செய்யுங்கள். அல்லாஹ்வின் இந்த கட்டளையைப் பேணி நடந்துகொள்ளுங்கள்.
لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ
65:1 “இத்தா” எனும் தலாக் நிலுவை காலத்தில் மனைவி தன் கணவன் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. மனைவி தன் கணவனின் துன்புறுத்தலால் தலாஃக் கோரி விண்ணப்பித்திருந்தால், அவள் அவனுடைய கணவன் வீட்டில் இருக்கவேண்டிய அவசியமில்லை.
4.“இத்தா” எனும் தலாக் நிலுவைக் காலம் (Thalaq in Abeyance)
2:228. தலாக் அறிவிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்து இருக்க வேண்டும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.
விளக்கம் :
இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பு தலாக் கோரிக்கை மனுவை ஏற்று, மூன்று மாதவிடாய்க் காலத்தைக் கணக்கிட்டு, கால அவகாசம் அளித்து (பார்க்க 65:1), ‘தலாக் அறிவிப்பு’ செய்துவிடும். இவ்வாறு தலாக் நிலுவையில் உள்ள பெண்கள் இந்தக் காலத் தவணையில் கருத்தரித்து விட்டால் அதை மறைக்கக் கூடாது. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவதாக இருந்தால், அவள் கருவுற்றிருப்பதை மூடி மறைக்கக் கூடாது.
5.மாதவிடாய் ஏற்படாப் பெண்களுக்கு "இத்தா" காலம்?
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், "இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ("இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
விளக்கம் :
(1) மேலும் சில பெண்களுக்கு வயது முதுமையின் காரணமாகவோ அல்லது உடல் நிலை கோளாறு காரணமாகவோ, மாதவிடாய் ஏற்படாமல் இருக்கலாம். அத்தகைய பெண்கள் விஷயத்தில் தலாக் அறிவிப்புக்குப் பின்அளிக்கப்படும் கால அவகாசம் மூன்று மாதங்களாக இருக்கும். (பார்க்க 2:228)
(2) இந்த இடைவெளி காலத்தில் அந்தப் பெண் கருத்தரித்தால் அந்த கால அவகாசம் அவள் பிரசவிக்கும் வரையில் நீட்டிக்கப்படும்.
(3) இவையாவும் அந்த தம்பதியர் பிரிந்து செல்வதை கூடுமான வரையில் தவிர்க்கத் தான் ஆகும்.
(4) ஆக எந்தச் சமூகத்தவர் அல்லாஹ்வின் வரையறைகளைப் பேணி நடக்கிறார்களோ, அங்கு எல்லா காரியங்களும் சீராகி வரும்.
6.தலாக் நிலுவைக் காலத்தில் மனைவியை கணவன் மீட்டிக்கொள்ள விரும்பினால்?
وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَٰحًۭا ۚ
2:228 ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், அவர்களை (மனைவியராக)த் திருப்பிக் கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு,
விளக்கம் :
இவ்வாறு தலாக் நிலுவையில் இருக்கும் இத்தா காலத் தவணைக்குள் கணவன் இணக்கத்தை நாடி, மனைவியுடன் சேர்ந்து வாழ முன்வந்தால், கணவனுக்கு அதற்குரிய உரிமை அளிக்கப்படும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் வருங்கால சமூக நலனையும் கட்டிக்காக்க நாடுவோர், இதற்கு மாற்றமாகச் செயல்பட மாட்டார்கள்.
7.கணவனை தக்க வைத்துக் கொள்ள மனைவி நாடினால்?
وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ ۚ
2:228. ஆணுக்குத் தன் மனைவியின் மீது உரிமைகள் இருப்பது போன்று, பெண்ணுக்கும் தன் கணவனின் மீது சகல உரிமைகளும் உண்டு.
இந்த சட்ட விதிமுறைகளின் படி பெண் விரும்பினால் தன் கணவனை தக்க வைத்துக் கொள்ள ஜமாஅத்தாரிடம்/நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம். அவளுக்கும் அதற்குரிய உரிமை அளிக்கப்படும்.
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍۢ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًۭا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًۭا ۚ
2:231. (மீளக் கூடிய) தலாக் கூறித் தவணை - இத்தா- முடியும் போது, முறைப்படி அவர்களை (உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்,அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள், ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக்கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள், அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள், இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார், எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்,
விளக்கம் :
(1) ஜமாஅத் அறிவித்த இத்தா காலம் முடிவுற்ற பின், அவ்விருவரும் சேர்ந்து வாழலாம். அல்லது அவர்கள் விரும்பினால் பிரிந்தும் செல்லலாம்.
(2) ஆனால் இவ்விஷயத்தில் அவளை ததுன்புறுத்தக் கூடாது. அவளிடம் வரம்பு மீறியும் நடக்கக் கூடாது.
(3) இப்படி யார் வரம்பு மீறி நடக்கிறாரோ, அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். அதாவது அவர் அதற்குத் தக்க தண்டனை பெறுவார்.
(4) அதே போன்று மனைவியும் தன் கணவனோடு சேர்ந்து வாழ தன் விருப்பத்தை நீதி மன்றத்தில் அறிவிக்கலாம். அல்லது தன் கணவனோடு சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றால் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளவும் செய்யலாம்.
(5) எனவே அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதல்களைக் கேலிக்கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்.
8.இரண்டு சாட்சிகள் அவசியம்:
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍۢ وَأَشْهِدُوا۟ ذَوَىْ عَدْلٍۢ مِّنكُمْ وَأَقِيمُوا۟ ٱلشَّهَٰدَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًۭا.
65:2. ஆகவே அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்திவைத்துக் கொள்ளுங்கள், அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து(விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும் சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது.
விளக்கம் :
(1) அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலத் தவணை முழுமை அடையும் தருவாயில், அத்தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ வழி இருக்கிறதா என்பதை அலசிப் பாருங்கள்.
(2) அவர்கள் விரும்பினால் தலாக் கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு, தன் மனைவியை தன்னிடமே நிருத்திக் கொள்ள அனுமதிக்கலாம் அல்லது அவளை விட்டு சட்டப்படி பிரிந்து விடவும் செய்யலாம்.
(3) அவர்கள் தலாக் கோரிக்கையை ரத்து செய்து விட்டு மீண்டும் இணைந்து வாழ விரும்பினாலும், பிரிந்து செல்ல விரும்பினாலும் மத்தியஸ்தர்கள் இருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
(4) மேலும் அந்த சாட்சிகளை அல்லாஹ்வின் சட்டப்படி பதிவுசெய்து கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள்.
(5) அல்லாஹ்வின் மீதும் ஆஃகிரத்து மீதும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு இத்தகைய அறிவுரைகள் தரப்படுகின்றன.
9.இதுவே முதல் தலாஃக் ஆனதாகப் பொருள் படும்.
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍۢ ۚ
2:231. தலாக் கூறித் தவணை - இத்தத் - முடிந்ததும் முறைப்படி அவர்களை இணைத்து விடுங்கள், அல்லது முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்,
விளக்கம் :
இந்த இத்தா தவணைக் காலம் பூர்த்தியானதும், அவர்கள் விரும்பினால் இணைந்து வாழலாம். அல்லது அவ்விருவரும் விரும்பினால் விவாகரத்து பெற்று அழகிய முறையில் பிரிந்தும் விடலாம். ஜமாஅத்தார் தக்கவாறு தலாஃக் தீர்ப்பு சான்றிதழை வழங்குவார்கள்.
10.தாம் விரும்பியவர்களை மணந்து கொள்ள அத்தம்பதியர்களுக்கு முழு சுதந்திரம்:
இவ்வாறு அத்தம்பதியர் "விவாகரத்து" சான்றிதழைப் பெற்ற பின், தன் விருப்பப் படி வேறு துணையைத் தேடிக் கொள்ள இருவரும் முழு உரிமை பெறுகிறார்கள். இதற்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை. திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.
2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்காதீர்கள், உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது, இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும், (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
11.தலாஃக் பெறுவதற்கு ஜமாஅத்தின் தலையீடு ஏன்?
சிந்தனையாளர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். தலாஃக் பெறுவதற்கு என்ன வழிமுறையைக் குர்ஆன் கற்றுத் தருகிறது என்பதை கவனியுங்கள். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால், கணவனோ மனைவியோ தன்னிச்சையாக தலாஃக் செய்திட முடியாது. காரணம். அவ்விருவரும் சேர்ந்து வாழும் வரையில் அது குடும்ப விவகாரமாகும். அவ்விருவரும் பிரிந்துவிட நாடினால், அது சமூக விவகாரமாக ஆகிவிடும். எனவே தான் ஜமாஅத்தார் அல்லது நீதி மன்றத்தின் தலையீடு தேவைப்படுகிறது.
இரண்டாவதாக அத்தம்பதியர்க்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் எதிர் காலத்தைப் பற்றிய கேள்வியும் எழுகிறது. எனவே சில காலம் வரை வாழ்ந்த பின் அவளை நிற்கதியாய் விட்டுவிட்டு ௐடிவிட முடியாது,
அத்தம்பதியர் தம் வாழ் நாளில் ஒருமுறை தலாக் பெற்றுவிட்டதாகப் பொருள்படும். தலாக் சான்றிதழைப் பெற்ற பின் அந்த ஆண் மற்ற எந்த பெண்ணையும் மணந்து கொள்ள முழு உரிமைப் பெறுகிறார். அதே போல் வேறு ஆணை மணந்து கொள்ள அந்தப் பெண்ணுக்கும் முழு உரிமை கிடைத்து விடுகிறது. இவ்வாறு தலாக் பெற்ற பெரும்பாலான தம்பதியர்கள் வேறு துணையைத் தேடித்தான் செல்வார்கள். அந்தப் பெண் பழைய கணவனையோ அல்லது அந்த ஆண் பழைய மனைவியையோ தேடிச் செல்ல மாட்டார்கள்.
ஆனால் சில தம்பதியர்களுக்கு வேறு துணை அமைவதில்லை. அவர்கள் விவாகரத்துப் பெற்றப் பின்பும் அவதிக்கு ஆளாகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில், அந்த மாஜி தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புப் பெறுகின்றனர். அவ்விருவரும் விரும்பினால், ஜமாஅத்தையோ அல்லது இஸ்லாமிய நீதிமன்றத்தையே அணுகி தம் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இவ்வாறு மணமுடிக்க வருபவர்களை தடை செய்ய அந்த ஜமாத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ உரிமையில்லை. ஏனெனில் மேற் சொன்ன 2:232 வாசகத்தில் தான் விரும்பி ஏற்கும் ஆணை திருமணம் செய்து கொள்வதை தடுக்காதீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அப்பெண் விரும்பி ஏற்கும் ஆண், மாஜி கணவனாகவும் இருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது. காரணம் அத்தம்பதியர் ஒரு முறைதான் தலாக் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. எனவேதான் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள்.
12.இரண்டாவது முறை தலாக் கோரிக்கை:
ٱلطَّلَٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَٰنٍۢ ۗ
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தான் பெற முடியும் - முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம், அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டு விடலாம்,
விளக்கம் :
(1) தலாக் இரண்டு முறைதாம் பெற முடியும்.
(2) முறைப்படி கணவன் மனைவி சேர்ந்தும் வாழலாம்.
(3) அல்லது அழகிய முறையில் பிரிந்தும் செல்லலாம்.
(4) இதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை, “அத்தலாஃகு” என்பதாகும்.
(5) அதாவது முறைப்படி ஜமாஅத் அல்லது நீதிமன்றத்தின் மூலமாக பெறப்பட்ட விவாகரத்து என்பது அதன் பொருளாகும்.
(6) எனவே கணவன் மனைவி தம் வாழ்நாள் காலத்தில் பிரிந்து செல்வதற்கோ, இணைந்து வாழ்வதற்கோ இருமுறைதான் வாய்ப்பு அளிக்கப்படும். (They can avail only two chances)
(7) ஏனெனில் இது ஒன்றும் சிறு பிள்ளைகள் விளையாட்டு அல்ல. இது சமுதாயத்தின் ஒழுங்குமறை சம்பந்தப்பட்ட சட்ட விவகாரமாகும்.
(8) எப்போது வேண்டுமானாலும் கணவன் மனைவி தகராறு செய்து கொண்டு நீதிமன்றக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கலாம் என்பது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
(9) எனவே முதல் விவாகரத்திற்குப் பின் மீண்டும் இணைந்து வாழ்ந்து இரண்டாம் முறையாக தலாக் பிரச்னை வந்தால், முதல் தடவை என்ன வழிமுறைப் பின்பற்றப்பட்டதோ, அதே வழிமுறையை ஜமாஅத் அல்லது இஸ்லாமிய நீதிமன்றம் கையாண்டு விவாகரத்து அளிக்க வேண்டும். எனவே இருமுறை சேர்ந்து வாழ்ந்தபின் மூன்றாம் முறை தலாக்கிற்கு அனுமதிகேட்டு ஜமாத்திற்கு விண்ணப்பித்தால்
13.மூன்றாம் முறை தலாஃக் பெற விண்ணப்பம்
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍۢ يَعْلَمُونَ.
230. மீட்டமுடியாதபடி - (அதாவது இரண்டு) தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லி விட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது, ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் தலாக் சொன்னால், அதன்பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்ல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்ல்லாஹ்வின் வரையறைகளாகும், இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
விளக்கம் :
இப்படியாக ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்து பெற்ற தம்பதியர்கள், மூன்றாம் முறையும் தலாக் கோரிக்கையை வைத்தால், இம்முறை அவர்கள் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்பதை விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவர்களுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டும்.
அதன் பின் அவள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், வேறு ஒருவனைத்தான் மணந்து கொள்ள முடியும். அப்படியும் இரண்டாவது கணவனுடன் வாழ்க்கை சரிபட்டு வராமல் முறையாக விவாகரத்து பெற்றிருந்தாலோ அல்லது அவன் இறந்து விட்டாலோ, அவள் முதல் கணவனுடன் மீண்டும் நிக்காஹ் செய்துகொள்ளும் தகுதி பெறுகிறாள்.
இம்முறை அவ்விருவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி முறையோடு இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக ஜமாஅத் அமைப்பு தீர்மானித்தால், அவர்களை மீண்டும் நிக்காஹ் செய்து வைக்கலாம். நினைவில் கொள்ளுங்கள். இவையாவும் அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவை யாவும் சிந்தித்துச் செயலாற்றும் அறிவுடைய மக்களுக்கு தெளிவாக்கப்படுகின்றன.
14.தலாஃக்கின் மற்ற சட்ட நுணுக்கங்கள்.
இவைதான் விவாகரத்து சம்பந்தமாக திருக்குர்ஆன் அறிவிக்கும் சட்ட விதிமுறைகளாகும்.இதைத் தவிர இதன் சட்ட நுணுக்கங்களையும் (By Laws) அல்லாஹ் திருக்குர்ஆனில் அறிவித்துள்ளான். அதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
15.பெண்களைவிட ஆண்களுக்கு உள்ள உயர்வு என்ன?
وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌۭ ۗ
2:228. ஆண்களுக்கு அவர்கள் மீது ஒருபடி உயர்வுண்டு.
விளக்கம் :
மறுமணம் செய்து கொள்வதில் பெண் கருத்தரிக்கும் விஷயமிருப்பதால், அதைப் பற்றி உடனே முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தில் ஆணுக்கு நிர்பந்தம் இருப்பதில்லை. இதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் உயர்வு.
16.அல்லாஹ்வுக்குப் பயந்து தலாஃக் விவகாரத்தில் தீர்ப்பு அளியுங்கள்.
وَٱتَّقُوا۟ ٱللَّهَ رَبَّكُمْ ۖ
65:1 அல்லாஹ்வுக்குப் பயந்து தலாஃக் விவகாரத்தில் தீர்ப்பு அளியுங்கள்.
17.தலாஃக் சட்டத்தை கேலி கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்
وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًۭا ۚ
2:231. அல்லாஹ் விதித்துள்ள தலாஃக் சட்டங்களை கேலி கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்.
18.வரம்பு மீறாதீர்கள்.
وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ
65:1 தலாஃக் தீர்ப்பு விவகாரத்தில் அல்லாஹ்வின் அறிவுரைகளை மீறி நடந்துக் கொள்ளாதீர்கள். யார் இவ்வாறு வரம்பு மீறி செயல்படுகிறாரோ, அவர் தன்னைத் தானே அநீதி இழைத்துக் கொள்கிறார். அதாவது அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும்.
19.பெண்களை வீட்டை விட்டு அனுப்பி விடாதீர்கள்.
لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ
65:1 தலாஃக் நிலுவைக் காலம் - இத்தா காலத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. அவளும் வெளியேற வேண்டிய அவசியமில்லை.
20.இத்தா காலத்தில் அவளை துன்புறுத்தக் கூடாது.
وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًۭا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ
2:231 இத்தா காலத்தில் அவளை துண்புறுத்தக் கூடாது. அவளிடம் வரம்பு மீறியும் நடக்கக் கூடாது. யார் அவ்வாறு செய்கிறாரோ, அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்.அதாவது அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும்.
21.பெண்களுக்குக் கொடுத்த பொருட்களை திருப்பி கேட்க்கக் கூடாது,
وَإِنْ أَرَدتُّمُ ٱسْتِبْدَالَ زَوْجٍۢ مَّكَانَ زَوْجٍۢ وَءَاتَيْتُمْ إِحْدَىٰهُنَّ قِنطَارًۭا فَلَا تَأْخُذُوا۟ مِنْهُ شَيْـًٔا ۚ أَتَأْخُذُونَهُۥ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا.
4:20 நீங்கள் மறுமணம் செய்ய நாடி மனைவியை விவாகரத்து செய்வதாக இருந்தால், அவளுக்கு பொற்குவியலே கொடுத்திருந்தாலும், அதிலிருந்து சிறிதளவும் திரும்பப் பெறக் கூடாது. அவ்வாறு திரும்பப் பெறும் பொருட்டு அவள் மீது வீண் பழி சுமத்துவது மிகப் பெரிய பாவகர செயலாகும்.
22.மானக் கேடான செயலை செய்தால்
إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ
65:1 அவள் மானக்கேடான செயலை செய்ததாக நிரூபணமானால் அவளை வீட்டை விட்டு அனுப்பிவிடலாம்.
23.சொத்து விவகாரத்தில் சிக்கல் இருந்தால்
وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۖ
2:229. நீங்கள் அவளுக்குக் கொடுத்தவற்றிலிருந்து திருப்பி எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை. ஒரு வேளை அல்லாஹ் நிர்ணயித்த வரம்புகளை மீறியுள்ளதாக அஞ்சினால், அவற்றிலிருந்து திருப்பி அளிக்க வழி செய்யலாம்.
فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ ۗ
2:229. அதே போல் சொத்து விவகாரமே பிரச்சனை என்றால், அவளும் அதிலிருந்து சிலவற்றை விட்டும் கொடுக்கலாம்.
24.பராமரிப்பு சிலவு
وَإِن كُنَّ أُو۟لَٰتِ حَمْلٍۢ فَأَنفِقُوا۟ عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ
65:6 தலாஃக் நிலுவை காலத்தில் அவள் கருத்தரித்தால் அவள் பிரசவிக்கும் வரை உள்ள சிலவுகளை ஏற்றுக் கொள்வது கணவன் மீதுள்ள கடமை ஆகும்,
فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ ۖ
65:6 அவள் குழந்தைக்கு பாலூட்டுவதாக இருந்தால், உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அவளுக்கு வேண்டியன செய்து தாருங்கள்.
25.அல்லாஹ்வின் நாட்டம்.
لَا تَدْرِى لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًۭا.
65:1 விவாகரத்து சம்பந்தமாக நிர்ணயிக்கப் பட்ட வரையறைகள் யாவும் அவ்விருவரும் இணைந்து வாழ வாய்ப்பு ஏதாவது உள்ளதா என்பதை அலசி ஆராயத்தான். இதைப் பற்றிய நுணுக்கங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
26.மானக்கேடான செயலை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும்:
وَٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ثُمَّ لَمْ يَأْتُوا۟ بِأَرْبَعَةِ شُهَدَآءَ فَٱجْلِدُوهُمْ ثَمَٰنِينَ جَلْدَةًۭ وَلَا تَقْبَلُوا۟ لَهُمْ شَهَٰدَةً أَبَدًۭا ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.
24:4 தகாத உறவுமுறை வைத்திருப்பதாக யாராவது கற்புள்ள பெண் மீது புகார் செய்தால், அவர் அக்குற்றத்தை நிரூபிக்க குறைந்தது நான்கு சாட்சிகளையாவது கொண்டுவர வேண்டும். (சாட்சிகள் என்ற தலைப்பை பாருங்கள்) அப்படி அவரால் சாட்சிகளை வைத்து அக்குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால், குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடி தரப்படும். மேலும் அத்தகையவர்களின் புகார்களும் சாட்சிகளும் இனி நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாவிகளாகக் கருதப்படுவர்.
27.கணவன் தீண்டாத பெண்கள்
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَكَحْتُمُ ٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍۢ تَعْتَدُّونَهَا ۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا.
33:49 இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் பெண்களின் பாதுகாப்புக் கருதி 60:10இல் உள்ள அறிவுரைப்படி மணமுடித்துக் கொண்டவர்களைத் தீண்டுவதற்கு முன்பே விவாகரத்து அளிக்க நேர்ந்தால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று மாத கால இத்தா தவணை என்ற சட்டம் பொருந்தாது. நீங்கள் வசதிப் படைத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை செய்து தாருங்கள். இன்னும் அவர்களை அழகிய முறையில் திருமண பந்தத்திலிருந்து விடுவித்துவிடுங்கள்.
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ.
2:236. மணமுடித்த பெண்ணை தீண்டாத நிலையில் தலாக் செய்ய நேர்ந்தால் அது குற்றமாகாது. மணக்கொடையான மஹரும் நிச்சயிக்கப்படவில்லை என்றால் இந்த மணக்கொடையைத் தரவேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் வசதி படைத்தவர்கள் அப்பெண்கள் குடும்ப வாழ்க்கை தொடர்வதற்கு உரிய வசதிகளை தம் தகுதிக்கேற்ப செய்து கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நன்மையான காரியங்களைச் செய்வது நல்லோர்கள் மீது கடமையாகும்.
28.கணவனின் மறைவுக்குப் பின் இருக்கவேண்டிய இத்தா காலம்:
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًۭا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍۢ وَعَشْرًۭا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.
2:234 உங்களில் எவரேனும் இறந்து விட்டால், அவரது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் வரையில் தனித்திருந்து வாழ வேண்டும். அதாவது மறுமணம் செய்யக்கூடாது. இந்த இத்தா காலத்திற்குப் பின் முறைப்படி அந்த விதவைப் பெண் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி வாழ வழி செய்ய வேண்டும். அவள் எடுக்கும் முடிவுபடி நீங்கள் நடந்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. ஆக நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரியும் என்பதை மறவாதீர்கள்.
பின் குறிப்பு : மீண்டும் வலியுறுத்தி சொல்லிவிடுகிறோம். முதல் தடவை தலாக் பெற்றதும் மாஜி கணவனிடம் மீண்டும் இணைந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்பதல்ல. முதலாம் தலாக்கிலேயே அவள் வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அவனும் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் வேறு ஒருவரை மணந்து கொள்ளும் வாய்ப்புப் பெற முடியாதவர்களுக்கு இரண்டாம் முறை அவ்விருவரும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்றே சொல்கிறோம்.