1.திருமண சட்டம் எதற்கு?
ஆண் பெண் இடையே ஏற்படும் உறவுமுறைக்கு பெற்றவர்களின் சம்மதமும் சமூக அங்கீகாரமும் அவசியமானதாக உள்ளது. சமுதாயத்தில் யாரும் தனித்திருந்து இன்புற்று வாழ முடியாது. எனவே அனைவரின் ஆசியுடன் செய்துகொள்ளும் உறவுமுறையே திருமணம் என்பதாகும். ஆனால் இதற்காக ஆடம்பர செலவுகளை செய்வது முறையற்ற செயலாகும். (பார்க்க 17:26-27) மேலும் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள, இஸ்லாமிய சமூக அமைப்பு/ஆட்சியமைப்பு வரையறைகளுடன் கூடிய சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். இத்தகைய ஏற்பாடுகளின்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடிக் கொள்ளலாம் அல்லது இணைந்து வாழலாம் என்றிருந்தால் காலப்போக்கில் பெண்கள், ஆண்களின் காம வேட்கைக்கு இரையாகி விடுவார்கள். மேலும் பெண்கள் விலைப் பொருளாக மாறி விடுவார்கள். எனவே கட்டுக் கோப்பான சமூக அமைப்பு சீர்கெடும். பெண்களுக்கு சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைக்காது. எனவே யார் யாருடைய கணவன் அல்லது யார் யாருடைய மனைவி என்பதற்கு வாழ்நாள் காலத்து ஒப்பந்த வாக்கு மூலத்தை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். இதுவே நிக்காஹ் என்பதாகும்.
இதைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். அதாவது மேலை நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாலியல் உறவுமுறைக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லையே. இருந்தும் அவர்கள் சிறப்பாகத் தானே வாழ்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போருக்குப் பின் மேலை நாடுகளும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் தம் இழப்பைச் சரி செய்ய அல்லும் பகலும் அயராது உழைத்து சில ஆண்டுகளிலேயே பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று விட்டார்கள். இந்த வளர்ச்சி அவர்களுடைய காம களியாட்டங்களைத் தாக்குப் பிடித்து வருகின்றன. ஆனால் இந்நிலை வெகுநாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய வீரம், ஆண்மை வீரியம் மற்றும் தொலை நோக்குப் பார்வை போன்றவை குன்றி வருகின்றன. அவர்கள் வெறும் இயந்திர வாழ்வையே வாழ்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு வேறு கோணங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள். (பார்க்க 26:199-208) மேலும் வருங்கால சந்ததியர்களுக்கு உடல் ரீதியாகவும் அறிவுத்திறன் விஷயத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
எனவே திருமணம் சம்பந்தமாக திருக்குர்ஆனும் வரையறையை தருகிறது. அவை என்னவென்பதை நாம் இங்கு பார்ப்போம்.
2.திருமணத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவு முறைகள்:
وَلَا تَنكِحُوا۟ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةًۭ وَمَقْتًۭا وَسَآءَ سَبِيلًا.
4:22. முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இதுமானக்கேடானதும், வெறுக்கக் கூடியதும், தீமையான வழியுமாகும்.
உஙகள் தந்தை மணமுடித்த பெண்ணை நீங்கள் மணப்பது முறையல்ல. ஏனெனில் அவள் உன் தாய் ஆவாள். இந்த உண்மை அறிவதற்கு முன்பாக இப்படி மணந்து இருந்தால், அந்த உறவை தக்க வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. இனி யாரும் தந்தை மணமுடித்த பெண்ணை மணக்கக் கூடாது,
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّٰتُكُمْ وَخَٰلَٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمْ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا۟ دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَٰٓئِلُ أَبْنَآئِكُمُ ٱلَّذِينَ مِنْ أَصْلَٰبِكُمْ وَأَن تَجْمَعُوا۟ بَيْنَ ٱلْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:23. இதைத் தவிர வேறு எந்தெந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள தடை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(1) உங்களைப் பெற்றெடுத்த தாய்
(2) உங்கள் மகள்கள்
(3) உங்கள் சகோதரிகள்
(4) உங்கள் தந்தையின் சகோதரிகள், (அத்தை)
(5) உங்கள் தாயின் சகோதரிகள்
(6) உங்கள் சகோதரனின் மகள்கள்
(7) உங்கள் சகோதரியின் மகள்கள்
(8) உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்
(9) பால்குடி சகோதரிகள்
(10) உங்கள் மனைவியின் தாய் ஆகியவர்களுடன் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
(11) அதே போல் நீங்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவளுடன் உறவு கொண்டபின் அவளுடைய முந்தைய கணவருக்குப் பிறந்து, உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
(12) ஆனால் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்ணிடம் கூடாமல் இருந்தால், அவளை விவாகரத்து செய்து, அவளுடைய முந்தைய கணவனுக்குப் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் குற்றமில்லை.
(13) உங்களுக்குப் பிறந்த மகன்களின் மனைவியையும் (மருமகள்) திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
(14) மேலும் இரு சகோதரிகளை ஒரே சமயத்தில் மனைவிகளாக ஆக்கிக்கொள்வது தடை செய்யப்படுகிறது.
(15) இருந்தும் அறியாமைக் காலத்தில் ஏற்கனவே இதற்கு மாற்றமாகத் திருமணங்கள் நடந்திருந்தால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதாவது இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதும், விவாகரத்து செய்துவிட எண்ணாதீர்கள்.
(16) நிச்சயமாக அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியவையாகவும் கருணை மிக்கவையாகவும் இருக்கின்றன.
وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا۟ بِأَمْوَٰلِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ ۚ فَمَا ٱسْتَمْتَعْتُم بِهِۦ مِنْهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَٰضَيْتُم بِهِۦ مِنۢ بَعْدِ ٱلْفَرِيضَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.
4:24 (1) மேலும் திருமண உறவில் இருக்கும் கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது.
(2) இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவிய பெண் அகதிகளாகப் பாதுகாப்பு கருதி உங்களிடம் வந்து தங்கியிருந்தால், அவர்களை மணமுடித்துக் கொள்ளலாம்.
(3) இவை யாவும் அல்லாஹ் உங்களுக்கு நிர்ணயித்துத் தந்துள்ள வரையறைகளாகும்.
(4) மேலே தடை செய்யப்பட்டுள்ள பெண்களைத் தவிர, வேறு எந்தப் பெண்ணுடனும் திருமணம் செய்து கொள்ளலாம்.
(5) ஆனால் அவர் திருமணச் சட்ட விதிமுறைகளின்படி பதிவுத் திருமணம் (நிக்காஹ்) செய்துகொள்ள வேண்டும்.
(6) இப்படியாக ஒருவர் மற்றவரின் நலனைப் பேணிக் காக்கும் வாழ்நாள் காலத்து தம்பதிகளாக ஆகிவிடவேண்டும்.
(7) இதை விட்டுவிட்டு வெறும் சிற்றின்பத்தை மட்டும் அனுபவிக்கும் எண்ணத்துடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது முறையல்ல. கணவன் மனைவி என்ற உறவுமுறையின் அடிப்படையில் இருக்கவேண்டும்.
(8) நிர்ணயிக்கப்பட்ட ‘மஹர்’ என்னும் வாழ்க்கை நடத்த வசதிகளை நன்கொடையாக அளித்திடல் வேண்டும். இதில் இருவரின் சம்மதத்துடன் அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். அதில் குற்றம் ஏதுமில்லை.
(9) அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
3.விருப்பமில்லாத பெண்ணை மணக்கலாமா?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًۭا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது கூடாது, பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம்கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்.
விளக்கம் :
(1) உங்களை விரும்பாத பெண்களைப் பலவந்தமாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
(2) மேலும் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களுக்கு அளித்துள்ள பொருட்களைத் திரும்பப் பெறும் பொருட்டு, அவர்களை உங்களிடமே நிறுத்திக் கொண்டு துன்புறுத்தக் கூடாது.
(3) இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஆண் பெண் ஆகிய இருவரும் மனமுவந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே.
(4) எனவே மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்து மனதிற்குப் பிடித்திருந்தால், மணமுடித்துக் கொள்ளலாம்.
(4) மேலும் திருமண விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் மனப் பக்குவத்தை அவ்விருவரும் அடைந்திருக்க வேண்டும்.
(5) எனவேதான் சிறுவர் சிறுமியர் திருமணத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றாகிவிடுகிறது.
4.காதல் திருமணம் ஆகுமானதா?
ஆண் பெண் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள திருக்குர்ஆன் அனுமதியளிப்பதால், காதலிப்பதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்று சிலர் நினைக்கலாம். இது தவறான கருத்தாகும். காரணம், காதல் வசப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு பல விஷயங்களைப் பற்றி சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்காது. காதலை விளையாட்டாகவோ அல்லது பொழுது போக்காகவோ எடுத்துக் கொள்வார்கள். காதலனின் குணநலங்களைப் பற்றியும், அவனுடைய குடும்ப சூழ்நிலைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெண்ணுக்கு அறவே இருக்காது. அது போல பெண்ணின் நடத்தைப் பற்றியும் அவளுடைய குடும்ப சூழ்நிலைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பே அவளை காதலிக்கும் ஆணுக்கு இருக்காது.
எனவே பெற்றவர்கள் தம் பிள்ளைகளின் செய்கைகளை கண்காணித்து, தம் பிள்ளைகள் காதல் வலையில் சிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அது சாத்தியமாகாத உறவு என்று அவர்கள் எண்ணினால், அதைப் பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். எனவே அந்த உறவை ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்த முயலவேண்டும். அதை வளர விட்டுவிட்டால், அதன்பின் காதலர்களை கட்டுப்படுத்த முடியாது.
குறிப்பாக கல்லூரி படிப்புக்குச் செல்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கும் இடையே இத்தகைய நட்புறவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே தாய் தந்தையர் தம் பிள்ளைகளுக்குத் தக்க முறையில் புத்திமதி சொல்லி பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.
ஏனெனில் இது பிள்ளைகளுடைய வாழ்க்கைப் பிரச்னையாகும். இப்படி எதுவும் சிந்திக்காமல் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்து திருமணம் செய்து கொண்ட எத்தனையோ தம்பதியர்கள், துயரங்களில் சிக்கித் தவித்து வருவதையும், விவாகரத்துக் கோரி நீதி மன்றத்தில் மன்றாடிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். இதைப் பற்றி அவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைத்து பிள்ளைகளுக்கு முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும். காதலை ஆதரிப்பது சரியாகாது. ஒரு பெண்ணை ஆணோ அல்லது ஓர் ஆணை பெண்ணோ மணமுடித்துக் கொள்ள விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை. காதலிப்பதாக சொல்லிக் கொண்டு மனதில் ஆசைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
5.திருமண வயது:
மனப் பொருத்தமில்லாத பெண்ணை பலவந்தமாக அனந்தரமாக்கிக் கொள்வது கூடாது (பார்க்க 4:19) மேலும் அநாதைகளின் சொத்துப் பராமரிப்பு சம்பந்தமாக எது வரையில் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்கு, அவர்கள் திருமண வயதை அடையும் வரையில் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. (பார்க்க 6:152) மேலும் திருமண வரையறைகளைப் பற்றி பேசும் போது, பெண்களைத்தான் மணந்து கொள்ள திருக்குர்ஆன் சொல்கிறதே அன்றி சிறுவர் சிறுமியர்களின் திருமணத்தைப் பற்றி பேசுவதில்லை. எனவே சிறுவர் சிறுமியர் திருமணத்திற்கு ஒரு போதும் இஸ்லாத்தில் இடமில்லை. ஆனால் திருமண வயதை திருக்குர்ஆன் குறிப்பிட்டு நிர்ணயிக்க வில்லை. எனவே பிள்ளைகள் குடும்பத்தை நடத்திச் செல்லும் தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கவேண்டும்.
وَأَنكِحُوا۟ ٱلْأَيَٰمَىٰ مِنكُمْ وَٱلصَّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ.
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
விளக்கம் :
(1) வாழ்க்கைத் துணையில்லாமல் இருப்பவர்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யும் போது, சில வரையறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
(2) உங்களில் ஆணோ பெண்ணோ குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தகுதியுடைய சாலிஹீன்களுக்கு மணமுடித்து கொடுங்கள்.
(3) அவர்களில் ஏழையாகவோ, விதவையோ விதவனாகவோ இருந்தாலும் சரியே.
(4) ஆற்றல்மிக்கவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் நாளடைவில் கிடைக்க வழிகள் பிறக்கும்.
(5) மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களோ மிக விசாலமாகவும் ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளவை ஆகும்.
(6) ஆணோ பெண்ணோ திருமண வயதை அடைந்திருப்பதோடு, மனப்பக்குவமும் கல்வியும் இருத்தல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கைப் பிரச்னையாகும். ஒருவரிடம் வசதி வாய்ப்புக் குறைவாக இருக்கலாம். காலப்போக்கில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் பெற்றுவிடுவார்கள். ஆனால் மனோ ரீதியாக அவர்கள் பக்குவமடையவில்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக ஆகிவிடும்.
وَلْيَسْتَعْفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ
24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தன் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை --அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்.
விளக்கம் :
(1) எனவே விவாகம் செய்து கொள்வதற்குரிய வசதி வாய்ப்பு பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அத்தகையவர்கள் முழு அளவில் தகுதி பெறும் வரையில் மனக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தகாத செயல் எதுவும் செய்யாமல் ஒழுக்கத்தைப் பேணி நடந்துகொள்ள வேண்டும்.
(2) திருமணம் செய்து விட்டால் அவர்களுக்கு பொறுப்பு வந்து விடும். அல்லாஹ் அவர்களை கவனித்துக் கொள்வான் என்று சிலர் தப்பு கணக்கு போடுகிறார்கள். இப்படி பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது.
(3) காரணம் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் வரை காத்திருக்கும் படி சொல்லப்படுகிறது, குடும்பத்தை நிர்வகிக்கும் அளவுக்கு வருவாய் இருத்தல் அவசியம் என்றும் புலனாகிறது.
6.முஷ்ரிக்குகளை மணக்கலாமா?
وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌۭ مُّؤْمِنَةٌ خَيْرٌۭ مِّن مُّشْرِكَةٍۢ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ ۚ وَلَعَبْدٌۭ مُّؤْمِنٌ خَيْرٌۭ مِّن مُّشْرِكٍۢ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُو۟لَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.
2:221. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை-நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணைவைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள், அவ்வாறே இணை வைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள், இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன், (நிராகரிப்போராகிய)இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கின்றார்கள், ஆனால் அல்லாஹ்N;வா தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான், மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
விளக்கம் :
(1) திருமண பந்த விஷயங்களிலும் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
(2) எந்த இலட்சியமும் இல்லாமல் மனம்போன போக்கில் வாழும் பெண்களை இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு இலட்சியத்துடன் வாழும் ஆண்கள் மணந்து கொள்ளக் கூடாது.
(3) ஒருவேளை அவளும் ஈமான் கொண்டு இறைவழிகாட்டுதலின் படி வாழ முற்பட்டால் மணக்கலாம்.
(4) ஏனெனில் அவளைவிட ஈமான் கொண்ட நற்பண்புள்ள பரம ஏழைப் பெண்களே மேல்.
(5) அதே போல் மனம்போன போக்கில் வாழும் முஷ்ரிக் ஆண்களை ஈமான் கொண்ட பெண்கள் மணந்து கொள்ளக்கூடாது. அவர்கள் எவ்வளவு தான் செல்வந்தர்களாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாலும் சரியே!.
(6) அதைவிடப் பரம ஏழையான ஈமான் கொண்ட நற்பண்புள்ள ஆணே மேல்.
(7) ஏனெனில் இது உங்களுடைய வாழ்க்கை பிரச்னையாகும். அவர்களுடைய செயல்கள் யாவும் நரகத்தின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும்.
(8) அல்லாஹ்வின் வழிகாட்டுதலோ பாதுகாப்பான சுவன வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்கிறது.
(9) எது சரியான வழிமுறை என்பதை ஆய்ந்தறிந்து அவற்றைப் பின்பற்றுங்கள்.
(10) ஆக உலக மக்கள் அனைவரும் அறிவுரைகள் பெறவே இத்தகைய ஒழுங்குமுறை சட்டங்கள் தெளிவாக்கப்படுகின்றன.
சிந்தனையாளர்களே! மணமகள் மணமகன் பொருத்தத்தைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதைக் கவனித்தீர்களா? செல்வங்களோ அல்லது உயர் அந்தஸ்தோ இல்லை. மாறாக நற்பண்புகள் தாம் முக்கியம் என்று சொல்கிறது. எனவே தான் ஒருவருக்கு நல்ல மனைவி கிடைத்துவிட்டால், அது அவனுக்குக் சுவர்க்கம் கிடைத்ததற்கு ஒப்பாகும். அதே போல் ஒரு பெண்ணுக்கு நல்ல கணவன் அமைந்துவிட்டால், அதுவே அவளுக்கு சுவர்க்கமாகும். எனவேதான் நற்பண்புள்ள பிள்ளைகளை உருவாக்க வேண்டும்!!!
7.‘மஹர்’ எனும் திருமண நன்கொடை:
وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحْلَةًۭ ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَىْءٍۢ مِّنْهُ نَفْسًۭا فَكُلُوهُ هَنِيٓـًۭٔا مَّرِيٓـًۭٔا.
4:4. நீங்கள் (மணம் செய்து கொள்ளும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்(திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
விளக்கம் :
நீங்கள் மணந்து கொள்ளும் பெண்ணுக்கு, ‘மஹர்’ என்ற குடும்ப வாழ்க்கைக்கான வசதிகளைத் தன் தகுதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மஹர் என்னும் இத்தகைய அன்பளிப்புப் பொருட்கள் திரும்பப் பெறும் நோக்கத்துடன் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவை அன்புடன் அளிக்கப்படுவதாகும். அதே சமயத்தில் அவர்களே மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதை நீங்கள் வாங்கிக் கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.
8.பலதார மணம் ( Polygamy) ஆகுமானதா?
அதிக பட்சமாக நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதி அளிப்பதாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. அதாவது ஒன்றுக்கு மேல் நான்கு பெண்கள் வரையில் மனைவியாக்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். இவை யாவும் உண்மை தெரியாமல் பேசும் பேச்சுகளாகும். உண்மை என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا جَآءَكُمُ ٱلْمُؤْمِنَٰتُ مُهَٰجِرَٰتٍۢ فَٱمْتَحِنُوهُنَّ ۖ ٱللَّهُ أَعْلَمُ بِإِيمَٰنِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَٰتٍۢ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى ٱلْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّۭ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُوا۟ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا۟ بِعِصَمِ ٱلْكَوَافِرِ وَسْـَٔلُوا۟ مَآ أَنفَقْتُمْ وَلْيَسْـَٔلُوا۟ مَآ أَنفَقُوا۟ ۚ ذَٰلِكُمْ حُكْمُ ٱللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.
60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்தப் பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப் பட்டவர்கள் இல்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் இல்லை, (ஆனால், இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரைக் கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை,
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு தம் ஊரைவிட்டு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களை நீங்கள் நன்றாகப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
(2) அவர்கள் யார்? எந்த ஊர்? எதற்காக வந்துள்ளார்கள் என்பது போன்ற விஷயங்களை அறிந்த பின்னரே அவர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
(3) அவர்களுடைய உள்ளங்களில் எந்த அளவுக்கு மார்க்க ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்ற விஷயம் அல்லாஹ்வுக்குத் தெரியும்.
(4) எனவே அவர்கள் உண்மையான மூஃமின்கள் என்று அறிந்தால் அவர்களை இறை நிராகரிப்பவர்களிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டாம்.
(5) காரணம் அவர்கள் இந்தப் பெண்மணிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இவர்கள் அத்தகைய ஆண்களுடன் இருப்பது சரியாகாது.
(6) இவர்களாலும் அவர்களோடு இருக்கவும் முடியாது.
(7) மேலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயணச் செலவு போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.
(8) மேலும் அவர்களை விவாகம் செய்ய நாடினால் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதில் குற்றமேதுமில்லை.
(9) இத்தகைய போர்க்கால கட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ ۖ
4:3. அநாதை(ப் பெண்கள் விஷயத்தில்) நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்று நீங்கள் பயந்தீர்களேயானால், அவர்களில் உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் -இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ,
விளக்கம் :
(1) போர்க் கால கட்டங்களில் ஆதரவற்றப் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் நீதமான ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால்,( Emergent Situation) ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணச் சட்டம் தற்காலிகமாகத் தளர்த்தப்படுகிறது.
(2) அதாவது அப்படிப்பட்ட கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகஅமைப்பு/ஆட்சியமைப்பு அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க ஒன்றுக்கு மேல் இரண்டு, மூன்று அல்லது நான்கு பெண்கள் வரை தமக்குப் பிடித்தமானவர்களை மணமுடித்துக்கொள்ள அனுமதி அளிக்கும்.
(3) அப்படி ஆட்சியில்லாத சூழ்நிலையில் தனிப்பட்ட முறையிலும் அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க இவ்வாறு முடிவெடுக்கலாம்.
(4) இதுதான் நான்கு பெண்களை மணந்து கொள்வது பற்றி சொல்லப்பட்ட உண்மைகளாகும். அது மட்டுமின்றி அதே வாசகத்தில் என்ன வருகிறது என்பதையும் கவனியுங்கள்.
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟.
4:3 ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
விளக்கம் :
(1) இவ்வாறு மணமுடித்துக் கொண்டு மனைவிகளிடையே சரி சமமான முறையில் நியாயமாக நடந்து கொள்ள முடியாது என்ற பயமுள்ளவர்கள், ஒரு மனைவி என்ற நிலையான சட்டப் படி இருந்து கொள்ளட்டும். (பார்க்க: 4:129)
(2) அல்லது ஏற்கனவே அவர்களிடமிருக்கும் பணிவிடைப் பெண்களையே மணமுடித்துக் கொள்ளட்டும்.
(3) இதுவே சமுதாயத்தில் அநியாயம் நடைபெறாமல் பாதுகாப்பாக வாழ சிறந்த வழிமுறையாகும்.
(4) நினைவில் கொள்ளுங்கள். மனைவியர்களிடையே பொருளாதார ரீதியாக சரிசமமாக நடந்து கொள்ளமுடியுமே தவிர, உளப்பூர்வமாக நீதமான முறையில் ஒருபோதும் நடக்க முடியாது என்று இறைவனே ஆணித்தரமாகச் சொல்லிவிட்டான் (பார்க்க: 4:129).
(5) இருப்பினும் போர், கலவரம் போன்ற காலங்களில் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு கருதியே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ள இறைச் சட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால்
(6) சுமுகமான சூழ்நிலையில் ஒன்றுக்கு மேல் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது முறையாகாது.
(6) மேலும் திருக்குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன் அரபு நாட்டில் அடிமைப் பெண்களை விலைக்கு வாங்கி பணிவிடைக்காக வைத்துக் கொள்வது பழக்கமாக இருந்து வந்தது. அவர்களை மணமுடித்து மனைவி என்ற அந்தஸ்து அளித்து பெண்களின் அடிமைத்தனத்திற்கு திருக்குர்ஆன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَٰبِ فِى يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًۭا.
4:127. (நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்)கேட்கிறார்கள், அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தீர்ப்பு கூறுகிறான்"" என்று சொல்லும், வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும், குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும், ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
(1) சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! ஆதரவற்றப் பெண்களைப் பற்றி மேற்கொண்டு மார்க்கக் கட்டளைகள் (ஃபத்வா) என்னவென்று உம்மிடம் கேட்கிறார்கள்.
(2) அதற்கு அல்லாஹ் இவ்வாறு பதிலளிப்பதாகக் கூறுங்கள்.
(3) ஏற்கனவே இவ்வேதத்தில் ஆதரவற்ற பெண்களைப் பற்றி கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகளை 4:3இல் அறிவித்துள்ளோம்.
(4) அதன்படி நீங்கள் அவர்களை மணப்பதாக இருந்தால், நிர்ணயித்த மஹர் என்னும் அன்பளிப்பை அவர்களுக்கு அளித்து விடுங்கள்.
(5) அவ்வாறு அன்பளிப்பு எதுவும் கொடுக்காமல் மணந்துகொள்ள விரும்புகிறீர்கள். இது தவறாகும்.
(6) மேலும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் அவர்களுக்குரிய உதவி செய்து வாருங்கள்.
(7) ஆக நன்மையான செயல்கள் எதைச் செய்தாலும், அதற்குரிய பலன்கள் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாகக் கிடைக்கும். காரணம் நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
(8) அதாவது நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
9.திருமணமின்றி கொள்ளும் பாலியல் உறவுமுறை:
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍۢ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ.
24:2 விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
விளக்கம் :
(1)ஆண் பெண் ஆகிய இருவரில் சட்ட விரோதமான பாலியல் உறவுமுறைக்கு திருக்குர்ஆன் தடை விதிக்கிறது.
(2) அதையும் மீறி திருமணமின்றி யாரவது அப்படிப்பட்ட உறவை வைத்துக் கொண்டால், அவர்கள் இருவரும் தண்டனைக்கு உரியவர் ஆவார்கள்.
(3) அப்படிப்பட்ட உறவு இருப்பதாக நிரூபணமானால் (பார்க்க 4:15&24:4) இஸ்லாமிய நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடிக்க உத்தரவு பிறப்பிக்கும்.
(4) உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனிதச் செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்பவராக இருந்தால், இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்; யாருக்கும் பாரபட்சம் காட்டவேண்டாம்.
(5) அதுமட்டுமின்றி அது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனையை பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றுங்கள்.
ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ.
24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணிடமும் கள்ளத் தொடர்பு கொள்ளமாட்டான், விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாருடனும்) கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டாள் - எனவே இது முஃமின்களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது.
விளக்கம் :
(1) நூறு கசையடி தண்டனையை இருவருக்கும் ஏன் தரப்படவேண்டும் என்றால், ஆண் பெண் இடையே ஏற்படும் இத்தகைய கள்ள உறவு இருவரின் இணக்கத்துடன்தான் ஏற்பட முடியும்.
(2) இதில் பெண்ணையோ, ஆணையோ தனியாகக் குற்றம் சுமத்த முடியாது.
(3) இருவரில் ஒருவர் பரிசுத்தமானவராக இருந்தால், இப்படி நடக்க சாத்தியமில்லை.
(4) ஆண் சபலபுத்தி உள்ளவனாகவோ, அல்லது தம் வாழ்வின் எந்த இலட்சியமும் இல்லாதவனாகவோ இருந்தால்தான், இப்படிப்பட்ட உறவுமுறைக்கு வழி ஏற்படும்.
(5) அதே போல பெண்ணும் அத்தகைய சபலபுத்தி உள்ளவளாகவோ, அல்லது எந்த இலட்சியமும் இல்லாதவளாகவோ இருந்தால் தான், இத்தகைய தகாத உறவு ஏற்படும்.
(6) எனவே அவ்விருவரும் தண்டனைக்கு உரியவர்களே. மேலும் இறை வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்கள் இப்படிப்பட்ட தகாத செயலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வார்கள்.
10. பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
மனைவி கருத்தரித்த பின் கூடுமான வரையில் உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் பலர் சொல்கிறார்கள். குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் வரை தான் உடலுறவு கொள்வதை மனைவி தடுக்க முடியும். நாற்பது நாட்கள் கழிந்த உடன் உடலுறவு கொள்வது சிறப்பு என்ற கருத்தும் முஸ்லிம்களிடையே பரவலாக நிலவி வருகிறது. மேலும் குழந்தைக்குப் பாலூட்டும் போது, உடலுறவு கொண்டால் கருத்தரிக்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். இவை எல்லாம் பாலியல் உறவுமுறையை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழும் சமுதாயத்தில் நடைபெறும் பேச்சுகளாகும்.
மேலும் சிலர் உடலுறவு கொள்ள கணவன் அழைக்கும் போதெல்லாம் மனைவி அவனுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிடில் மலக்குமார்களின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்றும் பயமுறுத்தி வைப்பார்கள். எனவே மனைவியானவள் கணவனுடைய காமப் பசியைத் தீர்க்கும் இயந்திரமாகவே ஆகிவிடுகிறாள். அடிக்கடி உடலுறவு கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான சில சபலமுள்ள ஆண்கள், மனைவிக்கு உடல்நிலை குன்றிவிட்டால், வேறு பெண்ணைத் தேடி அலையும் அவலநிலை ஏற்படுகிறது. கருத்தரித்த பின்பும் இடைவிடாமல் உடலுறவு கொள்வதால், அதன் தாக்கமாக சில பெண்களுக்கு புணர்ச்சி வேட்கை அதிகரிக்கும்.
பிரசவமான பிறகும் விரைவில் உணர்ச்சிகள் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. இதனால் பலருக்குத் தாய்ப் பால் கெட்டுப் போயி விடுகிறது. மற்றும் பலருக்கு பால் உற்பத்தி ஆவதும் தடைப்பட்டுப் போகிறது. பெரும்பாலான பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும். அதை சரி செய்து அதன்பின் பாலூட்டுவார்கள். இப்படியாக பால் சுரப்பது விரைவில் நின்று விடும். தாய்ப் பால் தான் குழந்தைக்கு சிறந்த ஆகாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் கட்டுப்பாடுடன் கூடிய தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ள யாரும் அறிவுறுத்த மாட்டார்கள். அந்தத் தம்பதியர்களுக்கும் அந்த உண்மைகள் எல்லாம் தெரியவும் வாய்ப்பில்லை.
11.குழந்தைக்கு ஏற்படும் தீட்டு (Infectional Diseases) நோய்கள்:
மேலும் முக்கியமான ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். பச்சிளங் குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு, பல தம்பதியர்கள் அறியாமையில் உடலுறவு கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அத்தம்பதியர்களுக்கு தெரிவதில்லை. ஆணின் விந்தும் பெண்ணின் மதன நீரும் கலக்கும் போது, விந்திலுள்ள உயரணுக்களுக்கு உயிரோட்டம் கிடைத்து காற்றில் கலந்து விடுகிறது. ஒருமுறை விந்து வெளியாகும் போது, அதில் அடங்கியுள்ள உயிரணுக்களின் சராசரி எண்ணிக்கை அறுபது இலட்சங்களாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த கலவை நீரில் உள்ள கிருமிகள் காற்றில் கலந்து குழந்தையின் சுவாசத்தில் சென்று விட்டால், நாளடைவில் ஜலதோஷம் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் உருவாகின்றன. இதனால் குழந்தையிடம் சேர்ந்துள்ள சத்துக்கள் யாவும் வீணாகிவிடுகின்றன. இவற்றால் குழந்தை மிகவும் பலவீனாகிவிடுகிறது.
குழந்தைக்கு தோஷம் ஏற்பட்டுள்ளது என்றோ அல்லது தீட்டு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்லி, சில மந்திர வேலைகளை செய்வார்கள். அண்மைக் காலத்தில் இவற்றிற்கு மருத்துவ சகிச்சையும் உண்டு. இவை எல்லாம் இருந்தாலும் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு பாதிப்புதான். அதை சரிகட்டவே முடியாது. மருத்துவ வசதிகளைக் கொண்டு சரி செய்து விட்டாலும், சில குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி குன்றிவிடுகிறது. சிலருக்கு சிடுசிடுப்பும், மந்தமான நிலையும் ஏற்படுகிறது. சில குழந்தைக்கு வாதம் (Polio) போன்ற நோய்கள் தாக்கி, உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் போலியோ போன்ற நோயும் தாக்கிவிடுகிறது.
12.தீட்டு நோய்களுக்கு ஆதாரம்? (Infectional Diseases)
மேற்சொன்ன விஷயங்களைப் பற்றி மேலோட்டமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆழ்ந்து சிந்தித்து இதில் ஆராய்ச்சிகளை செய்து அதன் பின்னரே ஏற்றுக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சரிதான் என்பதற்கு நாம் சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
குழந்தைக்கு அம்மை போட்டிருந்தால், அப்போது மட்டும் கணவன் மனைவி பத்தியமாக இருக்கச் சொல்வார்கள். ஏன்? அந்த கிருமிகள் அம்மையை தாக்கி எரிச்சலை உண்டாக்கி விடும் என்பதால்தான். இதிலிருந்து நமக்கு என்ன புலனாகிறது? உடலறுவு கொள்ளும்போது கலவை கிருமிகள் காற்றில் பரவுகின்றன.
எனவேதான் வீடுகளில் வளரும் பெரும்பான பிள்ளைகள், வீதியில் வளரும் குழந்தைகளைவிட பலவீனமாக இருக்கின்றன. காரணம் அங்கு அந்த கலவை கிருமிகள் காற்றில் கலந்து விடுகின்றன. குழந்தையை அவ்வளவாக தாக்குவதில்லை. வீட்டு அறைகளில் கூடும்போது, கலவை கிருமிகள் அறைக்குள்ளேயே பரவி குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்த கருத்தினை நினைவில் கொண்டு, உடலறவு கொள்ள விரும்பும் தம்பதியர்கள், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பான வழிமுறையை தேடிக் கொள்ள வேண்டும். குழந்தையை பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு கூடிக் கொள்ளலாம். மேலும் நன்றாக குளித்து சுத்தமான பின்னரே குழந்தையை தொட வேண்டும். சுத்தமான பின்புதான் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். மேலும் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்த பின்னரே கூடவேண்டும்.
13.ஆணின் வீரியசக்தி ஒரு பொக்கிஷமே!
சிந்தனையாளர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோய் நொடி இல்லாமல் வாழ்வது எப்படி என்பதைத் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவேதான் தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவி ஆகிய இருவரும் கட்டுப்பாடுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய காட்சிகளைப் பார்ப்பதையோ அல்லது காமக் கதைகளைக் கேட்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோலத் தான் கட்டுப்பாடு இல்லாத உடலுறவு பெரும்பாலானவர்களின் உடல் நிலையை வெகுவாக பாதித்து விடுகிறது. நாற்பது வயது கூட கடப்பதில்லை. அதற்குள் நீரிழிவு நோய் (Diabetes), இரத்தக் கொதிப்பு (Blood Pressure) இரத்தத்தில் கொழுப்புச் சத்து (Cholesterol), மூட்டுவலி போன்ற தீரா நோய் ஏற்பட்டு உலகத்தை விட்டே சென்று விடுகிறார்கள். ஆண்களிடத்தில் உள்ள ஆண்மை விந்து விலை மதிப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதை கூடுமான வரையில் பத்திரப்படுத்தி வைப்பதைக் கொண்டுதான் உடல் ஆரோக்கியத்தை கட்டிக் காக்க முடியம். குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் இரகசியமே இதில்தான் அடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதும் மிக மிக அவசியம். இதைப் பற்றி படித்த மருத்துவ மேதைகளே அறிவுருத்துகிறார்கள். அவர்களிடம் அணுகி அறிவுரையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
எனவே நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ விரும்பினால் நாம் சொன்ன விஷயத்தை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன் கணவன் மனைவியின் உடலுறவு முறையை விவசாயத்திற்கு ஒப்பாக சொல்லி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தி விடுகிறது.
14.மற்ற உயிரினங்கள் எவ்வாறு கலவையில் ஈடுபடுகின்றன?
மற்ற உயிரினங்களையும் பறவை இனங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில்தான் கூடிக் கொள்கின்றன. அதன்பின் பெண்ணினம் ஆண் இனத்தை நெருங்க விடுவதில்லை. தெருவில் திரியும் நாயைக் கூட கவனித்துப் பாருங்கள். அது கருத்தரித்த பின் ஒதுங்கி சென்று விடுகிறது ஆனால் மனிதனின் நிலை அவ்வாறில்லை. அவன் காமப் பசியைத் தணித்துக் கொள்ள கூடுமான வரையில் உடலுறவில் ஈடுபடுகிறான். இதனால் அவனுடைய உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் மற்ற உயிரினங்களுக்கு புதுப்புது நோய்கள் எதுவும் வருவதில்லை. ஆனால் தீய பழக்க வழக்கங்களால் மனிதனுக்கு மட்டும் உலகிலுள்ள எல்லா விதமான புதிது புதிதான நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.
அந்த நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே அன்றி, நோய்களுக்கு மூலக் காரணம் என்னவென்பதை கண்டறிந்து அதை சரிசெய்ய யாரும் முன் வருவதில்லை.
نِسَآؤُكُمْ حَرْثٌۭ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ
2:223. உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்களைப் போன்றவர்கள் ஆவர். நீங்கள் விரும்பும் போது வீடு கூடிக் கொள்ளுங்கள்.
விவசாயி தினந்தோறும் நிலத்தில் விதையை விதைத்துக் கொண்டிருப்பதில்லை. அதற்காக அவன் நேரம் காலம் நிலத்தின் ஆனால் மனிதன் மட்டும் காம வேட்கையால் விந்து என்கிற விதையை பெண்ணின் கருப்பைக்குள் அவ்வப்போது விதைத்துக் கொண்டிருக்கிறான். இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிய உண்மைகள் அவனுக்குத் தெரியாது.
15.சினிமா, தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பியல் (Internet)
மேலும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு கெட்ட செயலையும் சமுதாயத்தில் நடைபெற ஆரம்பிக்கும் போது, ஆரம்ப நிலையில் அதற்கு எதிர்ப்புகள் இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல அதுவே பழக்கமாகி அவை சிறப்பாகத் தெரியும். எடுத்துக்காட்டாக சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப கால கட்டத்தில் காதல் காட்சிகள் மிக மிக தத்ரூபமாக இருந்தது. காதலன் காதலியை தொடுவதற்குக் கூட அனுமதி இருந்ததில்லை. ஆனால் காலப் போக்கில் சிறுக சிறுக வளர்ந்து காதலன் காதலியைத் தொடுவதற்கு அனுமதித்தார்கள். அதுவே வளர்ந்து இன்றைய கால கட்டத்தில் எல்லை மீறிச் சென்றுவிட்டது. எதற்குமே கட்டுப்பாடு இல்லை என்றாகிவிட்டது.
தாய் தந்தையர் தம் பிள்ளைகளோடு சினிமாவே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. ஆனால் அவை இளைஞர்களுக்கு மிகவும் சுவாரசியமாக உள்ளன. இதனால் இளம் வயதினர்களிடையே உறங்கிக் கொண்டிருக்கும் காம உணர்ச்சிகளை சிறுக சிறுக தூண்டி விடுகிறது. இன்றைய நவீன காலத்தில் வீடுவீடாக இருக்கும் தொலைக் காட்சி மற்று தகவல் தொடர்பு சாதனங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு தரம் கெட்டுப் போயுள்ளது. இதனால் காம உணர்ச்சிகள், வேட்கையாக வளர்ந்து கட்டுக்கு அடங்காமல் போய், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழியைத் தேடி அலைகிறார்கள். இப்படியாக சிலர் பலரோடு தொடர்பு கொள்ளும் பழக்கத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
மேலும் சில இளைஞர்கள் சுய இன்பம் அல்லது ஓரினச் சேர்க்கை போன்ற தீய பழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். இதனால் பெண்களுடைய பிறப்பு உருப்புகளிலும் மற்றும் ஆண்களின் விந்துவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பலவீனமானவர்கள் உடலுறவு கொள்வதால் பலவீனமாக குழந்தைகளே பிறக்கின்றன. அந்த குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மேலும் பலவீனமாகவோ, குறைப் பிரசவங்களோ அல்லது அங்கஹீனமாகவோ பிறக்கின்றன. அதாவது இந்த தலைமுறையினர் செய்த தவறுகள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இறுதியாக வரும் தலைமுறையினர்கள், தாம் என்ன பாவத்தை செய்தோம். எங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட துயரங்கள் வந்தடைகின்றன என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். எனவே இறைவன் இப்படி நம்மை சோதிக்கிறானே என்று பழியை இறைவன் மீது சுமத்தி புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
இந்நிலை ஏற்படக்கூடாது என்றால் நாம் அனைவரும் கட்டுப்பாடுடன் கூடிய தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்வோமாக. மேலும் சமுதாயத்தில் ஆபாசங்கள் குறைய தக்க நடவடிக்கை எடுப்போமாக!