بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


1.முன்னுரை

இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை நமக்கு அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக அறிவித்துத் தந்துள்ளான். தான் அறிவிக்கும் வழிகாட்டுதல்களை வரலாறு மற்றும் அகிலங்கள் அனைத்திலும் தான் படைத்துள்ள படைப்புகளின் ஆதாரங்களை எடுத்துரைத்து விளக்கமளிக்கின்றான். காரணம் அந்த கொள்கை கோட்பாடுகள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை ஆகும். அதற்கு எதிராகச் செயல்பட்ட சமுதாயங்களின் நிலை என்னவாயிற்று என்பதை ஆராய்ந்துப் பார்க்கும் படி நமக்கு வலியுறுத்திச் சொல்கின்றான். உலகப் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாத சமுதாயங்களின் நிலை எந்த அளவுக்கு மோசமானது என்பதையும் திருக்குர்ஆனில் வராற்று ஆதாரங்களின் அடிப்படையில் அறிவிக்கின்றான்.

இதைத் தவிர மனித அறிவுக்குப் புலப்படாத பல உண்மைகளை உதாரணங்களின் மூலமும், உவமான வடிவிலும் அறிவிக்கின்றான். அக்காலத்து அரேபியர்களுக்கு அவற்றை புரிந்து செயலாற்றுவதில் எவ்வித சிக்கலும் இருந்ததில்லை. காரணம் அக்கால வழக்கப்படி அவர்கள் பேசி வந்த மொழியிலேயே அவை இறக்கியருளப்பட்டது. அதன்படி அவர்கள் செயல்பட்டதால் அவர்களுக்கு இவ்வுலகில் கீர்த்தியும் புகழும் கிடைத்தன. ஆனால் காலப் போக்கில் அதன்படி செயலாற்றுவதை அவர்கள் விட்டுவிட்டனர். இப்போது அவையெல்லாம் புத்தக அளவில் நின்றுவிட்டன. மேலும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு செய்யும்போது, மொழி பெயர்ப்பாளர்கள் இலக்கிய நயத்துடனும் உவமான வடிவிலும் சொல்லப்பட்ட வாக்கியங்களுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்துவிட்டார்கள். எனவே அவையெல்லாம் படிப்பவர்களுக்குப் புரியாத புதிராக உள்ளன. அவற்றை தெளிவாக்கவே இந்த நூலை நான் தொகுத்து எழுதினேன்.

இந்த நூலில் தரப்பட்டுள்ள விளக்கவுரைகள் யாவும் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் திருக்குர்ஆனை ஆய்வு செய்து எழுதிய வல்லுனர்களின் கருத்துக்களை மையமாக வைத்து தொகுக்கப்பட்டதாகும். இத்தகைய வல்லுனர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது நம் நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்தில் தத்துவ பேராசிரியராக பணியாற்றிய கவிஞர் அல்லமா இக்பால் (ரஹ்) அவர்கள் வருகிறார். அவருடைய தொகுப்புகளின் அடிப்படையில் எழுதிய நூலை வைத்து திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு தெளிவான விளக்கவுரையை பல வல்லுனர்கள் எழுதினார்கள். அந்த வரிசையில் வருபவர்கள் மௌலானா அஸ்லம் ஜயராஜ்பூரி, அல்தாஃப் ஹுஸைன் ஹாலி, பர்ஃக் ஜீலானி, ஸர் சையது அஹ்மத்ஃகான் அல்லாமா குலாம் அஹ்மத் பர்வேஸ், ஷேக் தாவூத் போன்ற சான்றோர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூலை மையமாக வைத்து திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு விளக்கவுரையை நான் எழுதியுள்ளேன்.
ஒரு முக்கிய வேண்டுகோள் என்னவென்றால், நான் எழுதியுள்ள தெளிவுரைகள் சரியே என்று நீங்கள் எண்ணினால் திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு இப்படி ஒரு விள்க்கம் உள்ளதாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இன்னார் இவ்வாறு எழுதியுள்ளார் என்று சொல்லாதீர்கள்.

وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًۭا.

17:89. உலக மக்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலைப் புரிந்து ஏற்றுக்கொண்டு அதன்படி சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆனில் பல்வேறு உதாரணங்களின் மூலம் பலக் கோணங்களில் விவரித்து கூறியிருக்கிறோம். ஆனால் மக்களோ இதை ஏற்று நடப்பதாகத் தெரியவில்லை.

وَلَقَدْ صَرَّفْنَا فِى هَٰذَا ٱلْقُرْءَانِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٍۢ ۚ وَكَانَ ٱلْإِنسَٰنُ أَكْثَرَ شَىْءٍۢ جَدَلًۭا.

18:54. உலக மக்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலை தெளிவாக விளங்கிக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே, இந்த குர்ஆனில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் பல உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறோம்.
ஆனால் மனிதனோ இதை சிந்தித்து ஏற்று நடப்பதற்குப் பதிலாக, அதில் வீணான தர்க்கம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான்.

۞ إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًۭا مَّا بَعُوضَةًۭ فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۘ يُضِلُّ بِهِۦ كَثِيرًۭا وَيَهْدِى بِهِۦ كَثِيرًۭا ۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَٰسِقِينَ.

2:26. மறைந்து நிற்கும் உண்மைகளை எடுத்துக்காட்டுகளின் மூலம்தான் விளங்கிக் கொள்ளமுடியும். இந்த உண்மைகளை விளக்கக் கொசுவையோ அல்லது அதைவிட அற்பமான பொருளையோ உதாரணமாக மேற்கோள்காட்டி விளக்குவதில் அல்லாஹ்வுக்குத் தயக்கம் இருப்பதில்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டோர், இறைவனின் இந்த எடுத்துக்காட்டுதலைக் குறித்து சிந்தித்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்போர், இந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் அல்லாஹ் நாடுவது என்னவென்று எதிர்மறையாகப் பேசுவார்கள். இப்படியாக பலர் எதிர்மறையாகப் பேசி வழிகேட்டில் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலர் இவற்றைப் சிந்தித்து நேர்வழியினைப் பெறுகிறார்கள். ஆக திசை மாறிச் செல்பவர்களே வழிகேட்டில் சென்று விடுவார்கள்.

இத்தகைய உதாரணங்களைக் கொண்டு விளக்குவது திருக்குர்ஆன் என்ற வேதத்தில் மட்டும்தானா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். முன்சென்ற சமூகத்தவர்களுக்கும் இவ்வாறே உதாரணங்களைக் கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ وَمَثَلًۭا مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ.

24:34. இன்னும் நிச்சயமாக, உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
நீங்கள் இறைவழிகாட்டுதலின் நோக்கங்களை சரியாக விளங்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவான முறையில் விளக்குகிறோம். இவற்றை உங்களுக்கு முன்சென்ற வரலாற்றின் ஆதாரத்தைக் கொண்டும் பல்வேறு உதாரணங்களின் மூலமும் விளக்குகிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுவோருக்கு இவை அறிவுரைகளாக இருக்கும்.

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ ۚ وَلَئِن جِئْتَهُم بِـَٔايَةٍۢ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ.

30:58. இப்படியாக இந்தக் குர்ஆனில் உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பல உதாரணங்கள் மூலமாக மறைந்து கிடக்கும் உண்மைகளை உதாரணங்களின் மூலம் எடுத்துரைக்கிறோம். இத்தகைய அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அவர்களுக்கு எடுத்துரைத்த போதிலும், இவையாவும் மக்களை ஏமாற்றும் வித்தைகளே என்று தான் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் கூறுவார்கள்.

كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ.

30:59. இவ்வாறே அல்லாஹ்வின் நியதிப்படி அறிவைப் பயன்படுத்தாத மக்களின் உள்ளங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது.

وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا يَعْقِلُهَآ إِلَّا ٱلْعَٰلِمُونَ.

29:43. உலக மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்வதற்காக நாம், இத்தகைய உதாரணங்களைத் தருகிறோம். ஆனால் சிந்திக்தாத மக்களுக்கு எந்த உதாரணங்களும் பலனளிக்காது.

இதில் தரப்பட்டுள்ள எண்கள் அத்தியாய எண்ணும் வாசக எண்ணும் ஆகும். உதாரணத்திற்கு 3:7 என்று வந்தால் அத்தியாயம் 3 வாக்கிய எண் 7 என்று பொருளாகும். திருக்குர்ஆனைப் வைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். அன்பர்கள் இவற்றைக் கவனமாகப் படித்து வாழ்வில் வெற்றி இலக்கை அடைந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.


2.உவமான உவமேய வாசகங்கள்:

هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَٰبَ مِنْهُ ءَايَٰتٌۭ مُّحْكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٌۭ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌۭ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّۭ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.

3:7 அவன் தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷா பிஹாத் (என்னும் ஆயத்துக்கள்) ஆகும், எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் நேரடி மொழிபெயர்ப்பைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள்.அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

விளக்கம்: (1) அகிலங்கள் அனைத்தும் செயல்படும்படி நடைமுறைச் சட்டங்களை ஏற்படுத்தியது போல் மனிதனுக்கும் சட்டதிட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை இவ்வேதத்தில் இறக்கி அருளப்படுகின்றன. மனித வாழ்வின் மிகச் சரியான வழிகாட்டியாகத் திகழும் இந்த வேதத்தின் வாக்கிய அமைப்புகள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று தெளிவான நேரடி அர்த்தங்களைத் தரக்கூடிய முஹ்கமாத் வாக்கியங்களாகும். ஒவ்வொரு விஷயமும் தெளிவாக்கிட வேண்டும் என்பதே இவ்வேதத்தின் அடிப்படை நோக்கமாகும். இரண்டு முதஷாபிஹாத் என்னும் பல கருத்துகளைத் தரும் வகையில் உவமான வடிவில் சொல்லப்பட்ட வாக்கியங்களாகும். எவர் உள்ளங்களில் நேர்வழி பெறும் ஆர்வமில்லையோ, அவர்கள் இந்த உவமை வடிவில் சொல்லப்பட்ட வாக்கியங்களின் வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தத்தைக் கொடுத்து, அதையே பின்பற்றி வருகின்றனர். இவ்வாறாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றனர். அவற்றின் உண்மையான விளக்கங்கள் அல்லாஹ்விற்கு மட்டும் தெரியும். இருப்பினும் கல்வி ஞானத்தில் முதிர்ச்சிப் பெற்ற மேதைகள் அவற்றின் உண்மை நிலையை ஓரளவு கண்டு கொள்வார்கள். மேலும் இவர்கள் இந்த உண்மைகள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்தவை தாம் என்பதைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள.

விளக்கம்:(2)“ஆயத்தெ முஹ்கமாத்” என்னும் தெளிவான அர்த்தங்களைத் தரும் வாக்கியங்கள் நிரந்தர கட்டளைகளும் செயல்முறைத் திட்டங்களும் அடங்கிய வாக்கியங்களாகும். இந்த வாக்கியங்களில் வரும் சொற்றொடர்களுக்கு நேரடி அர்த்தம் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக ஹ{ர்ரிமத் அலைக்கும் உம்மஹாதுக்கும் (4:23) என்ற வாசகத்திற்கு “உங்கள் தாயை மணமுடிக்க உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பொருள் வரும். இது நேரடிப் பொருள் தரக்கூடியதாக வாக்கியமாகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு வேறு எந்தப் பொருளையும் தர இயலாது. எனவே இவை ஆயாதுன் முஹ்கமாதுன் ஆக இருக்கின்றது. அதாவது தெளிவுபெற்ற வாக்கியங்கள் ஆகும். ஆக குர்ஆனினுள்ள ஒவ்வொரு வாக்கியமும் தெளிவாக விளங்கவேண்டும் என்பதே குர்ஆனின் நோக்கமாகும்.

விளக்கம்: (3) மேலும் குர்ஆன் குடும்பவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசும்போது, சாதாரண வாக்கியங்களாக நேரடி பொருள் கொள்ளும் வகையில் பேசுகிறது. ஆனால் உலக பொது விஷயங்களைப் பற்றிச் சொல்லும் போது, அதன் சொற்றொடர் இலக்கண இலக்கிய நயத்துடன் பேசுகிறது. இது ஒவ்வொரு மொழியிலும் உள்ள தனிச் சிறப்பாகும். எடுத்துக்காட்டாக நாம் உலகம் சிரித்தது என்று சொல்கிறோம். அது உலக மக்களைக் குறிக்கும். வயிறு பற்றி எரிகிறது என்கிறோம். அது நம் கோபத்தை வெளிப்படுத்தும் சொல்லாகும்.
அது போல இப்ராஹீம் நபியை நெருப்பில் போட்டு பொசுக்க மக்கள் ஆக்ரோஷமாகப் பேசியது, அவர்களிடையே கொழுந்துவிட்டு எரியும் கோபத்தை காட்டுகிறது. இதையே “நெருப்பே! நீ இப்ராஹீமுக்காக குளிர்ச்சியாக ஆகிவிடு” என்று 21:69ல் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மக்களில் இருந்த ஆவேசத் தீ என்பதே சரியான பொருளாகும். அதாவது அவர் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டதால் அவர்களுடைய கோபக்கனல் தணிந்துவிட்டது.
அதே போல மூஸா நபி தம்மிடமுள்ள கைத்தடியை கீழே எறிந்தார். அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று என்று 20:20ல் திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. அதாவது தன் கைவசம் இருந்த இறைவழிகாட்டுதலை மக்கள் முன்வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளைப் பற்றி சிந்தித்தபோது, ஒருவர் பாம்பைப் பார்த்து எவ்வாறு ஒருவர் பயப்படுவாரோ அவ்வாறே மூஸா நபியும் பயந்தார் என்பதே அதன் பொருளாகும்.
இப்படியாக இலக்கிய நயத்துடன் உவமான உவமேய வடிவில் சொல்லப்படும் வாசகங்களுக்கு அதன் உள்ளார்ந்த பொருளைத் தருவதால் தான் திருக்குர்ஆன் மிகவும் தெளிவாகிவிடுகிறது.

விளக்கம்: (4) இது தவிர பிரபஞ்சப்படைப்பு மற்றும் அவற்றின் செயலாக்கத்தைப் பற்றி உள்ள வாக்கியங்களும் ஒன்றை ஒன்று (Synonyms-Similarity in meaning) ஒரே மாதிரியான பொருள் தரக்கூடிய வகையில் சொல்லப்பட்டுள்ளன. இவற்றின் முழு உண்மை நிலை அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதச் சிந்தனையும் கல்வி ஆய்வுகளும் வளர்ச்சி அடையும்போது, அதன் உண்மை நிலையை ஓரளவிற்கு மனிதனாலும் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக சூரியன் தன்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. (36:38) பண்டைய காலத்தில் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற கருத்து மக்களிடத்தில் இருந்தது. அதற்கு இந்த வாசகம் சான்றாக இருந்து வந்தது. ஆனால் மனிதன் தன் ஆய்வுகளை மேற்கொண்டு, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகவும், சூரியனும் தனைத்தானே சுற்றிக்கொண்டு தன் குடும்பத்திலுள்ள கோள்களுடன் ஒர் இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இப்போது அந்த வாக்கியத்தின் உண்மை நிலை என்ன என்பது தெளிவாகிவிட்டது. முதஷாபிஹாத்தாக (Doubtful) இருந்த இந்த வாக்கியம் முஹ்கமாத்தாக (Cleared) மாறிவிட்டது. இப்படியாகத் திருக்குர்ஆனின் ஒவ்வொரு வாக்கியமும் தெளிவாகிக் கொண்டே போவது உறுதி என்று கூறப்படுகிறது. (41:53) இவற்றின் முழு ஞானமும் அல்லாஹ்விற்கு மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதனுக்குக் கிடைக்கும் ஞானம் அளவோடு இருக்கும்.


3.கணவன் மனைவியின் தாம்பத்திய வாழ்க்கை:

نِسَآؤُكُمْ حَرْثٌۭ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள், உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டி யே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்,அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள், (மறுமையில்) அவனைச்சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

(1) உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்களைப் போன்றவர்கள் ஆவர்.
(2) நீங்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களிடம் செல்லுங்கள். உங்கள் வருங்கால வாழ்விற்காக முற்கூட்டியே திட்டமிடுங்கள்.
(3) அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் நிர்ணயித்த விளைவுகளை சந்திக்கவேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
(4) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
(5) அதாவாது விவசாயி நிலத்தில் பயிரிடுவதற்குமுன் நிலத்தைப் பதப்படுத்தி நேரம், காலம், மற்றும் பயிரிடும் விதையின் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து விதைப்பது போல, நீங்கள் ஆற்றல்மிக்க பிள்ளையைப் பெற விரும்பினால் நேரம், காலம், குடும்ப வருவாய், கணவன் மனைவியின் உடல்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கூட வேண்டும்.
(6) எனவே நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வாருங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களின் விளைவுகளும் அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்பட்டே தீரும் என்பதையும், அவற்றை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
(7) இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவோருக்குத்தான் நற்பலன்கள் கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
(8)ஆக நேரம் காலமின்றி ஆசைப்படும் போதெல்லாம் உடலுறவில் ஈடுபட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்ட குடும்பத்தை ஏற்படுத்தித் தலைச் சிறந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

هُنَّ لِبَاسٌۭ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌۭ لَّهُنَّ ۗ

2:187. உங்கள் மனைவியர் உங்கள் தேவைகளை நிறைவேற்றும் ஆடை யாகவும் நீங்கள் அவர்களின் தேவை களை முழுமையாக்கும் ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.
கணவன் மனையின் உறவு நகமும் சதையும் போல இணைபிரியா உறவாக உள்ளது. சிந்தனையாளர்களே! ஆடை எப்போதும் உடலோடு ஒட்டி இருப்பது போல், கணவன் மனைவியின் உறவும் ஒன்றியே இருக்கும். உலகில் வாழும் உயிரினங்களில் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுவது ஆடையே என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது. எனவே கணவன் உயர் நிலைக்கு சென்றடைய மனைவியின் உதவி அவசியமாகிறது. அதேபோல் மனைவியின் வாழ்வும் சிறக்க, கணவனின் உதவி இன்றியமையாததாக உள்ளது. எனவே கணவன் மனைவியின் உறவுமுறையை ஒரு வண்டியின் இரு சக்கரங்களுக்கு ஒப்பிடலாம். அவ்விரு சக்கரங்களும் ஒரே திசையை நோக்கிச் சென்றால் தான் வாழ்க்கை என்கிற வண்டி சிறப்பாக நகரும்.
எனவேதான் சமுதாயத்தில் ஆடைக் குறைப்பு இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கண்டிக்கிறது. ஆடைக் குறைப்பு செய்து, சுவனத்தை பறிகொடுத்து உங்கள் வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள் என்கிறது. (7:27)


4.ஆதாமின் இரு குமாரர்களின் கதை:

பனீ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு கதையை சொல்லி வருவது பழக்கமாக இருந்து வந்தது. அந்தக் கதை என்ன என்பதை திருக்குர்ஆன் தெளிவாக்குகிறது. அதை கவனமாகப் படியுங்கள்.

۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًۭا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْءَاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ.

5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை கதையை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பியும், அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவனிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப் படவில்லையாம், (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினாராம். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர் களிடமிருந்து தான்" என்று கூறினாராம்.
இது வெறும் கதையே என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வின் வழிமுறையில் காணிக்கையை ஏற்றுக் கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதது என்ற பேச்சிற்கே இடமில்லை.

لَئِنۢ بَسَطتَ إِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِى مَآ أَنَا۠ بِبَاسِطٍۢ يَدِىَ إِلَيْكَ لِأَقْتُلَكَ ۖ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَٰلَمِينَ.

5:28. அன்றியும் அவர், “நீ என்னைக் கொலையே செய்துவிட முடிவெடுத் தால் அது உன் விருப்பம். நான் அதைத் தடுப்பேன். ஆனால் நான் உன்னைப் போன்று விபரீத செயலைச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல் படுகிறேன்” என்று கூறினாராம்.

إِنِّىٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثْمِى وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ ۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّٰلِمِينَ.

5:29.“எனவே இந்த அநியாயச் செயல் உன் புறத்திலிருந்தே இருக்கட்டும். ஏனெனில் அதைத் தடுக்கப் போய் அதனால் உனக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலும் அதன் பாவமும் உன்னையே சேரும். நான் கொல்லப் பட்டாலும் அதன் பாவமும் உன்னையே சேரும். ஆக எது எப்படி இருப்பினும் நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவாய். இதுதான் அநியாயம் செய்வோருக்குக் கிடைக்கும் தண்டனையாகும்” என்று கூறினாராம்.

فَطَوَّعَتْ لَهُۥ نَفْسُهُۥ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصْبَحَ مِنَ ٱلْخَٰسِرِينَ.

5:30. ஆனால் தம் சகோதரனின் பேச்சைக் கேட்காமல் அவன் மனம் அவரைக் கொலை செய்யவே தூண்டியதாம். எனவே அவரைக் கொன்று விட்டானாம். இப்படியாக அவன் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டானாம்.

فَبَعَثَ ٱللَّهُ غُرَابًۭا يَبْحَثُ فِى ٱلْأَرْضِ لِيُرِيَهُۥ كَيْفَ يُوَٰرِى سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَٰوَيْلَتَىٰٓ أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا ٱلْغُرَابِ فَأُوَٰرِىَ سَوْءَةَ أَخِى ۖ فَأَصْبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ.

5:31. பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான், அது பூமியைத் தோண்டிற்று, (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்து இருப்பேனே!" என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார்.
விளக்கம்:
அந்த சமயம் அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி, எவ்வாறு குழி தோண்டி தன் சகோதரனின் பிரேதத்தை மறைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தானாம். “இந்தக் காகத்திற்கு இருக்கின்ற அறிவாற்றலும் தமக்கு இல்லாமல் போய்விட்டதே. அப்படி இருந்திருந்தால் தன் சகோதரனின் பிரேதத்தை மறைத்திருப்பேனே. நான் நஷ்டவாளிகளில் ஒருவனாக ஆகாமல் இருந்திருப்பேனே” என்று மனம் வெதும்பினாராம்.

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍۢ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًۭا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًۭا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًۭا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ.

5:32. இதன் காரணமாகவே, நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த்தடுப்பதற்காவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான் என்றும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித் தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

விளக்கம் :
(1) அதாவது நபிமார்கள் என்னவோ அறிவுப் பூர்வமான சட்ட திட்டங்களையே அறிவித்துச் சென்றார்கள். ஆனால் காலப் போக்கில் அந்த சட்டங்கள் இயற்றப்பட்டதன் பின்னணியைப் பற்றி பல்வேறு கதைகளை சொல்லி மக்களை அவற்றைவிட்டு திசை திருப்பி விடவே முயன்று இருக்கிறார்கள். அதனால் தான் மேற்சொன்ன கதைகளை சொல்லி வந்துள்ளார்கள்.
(2) அதாவது முதலாவதாக அல்லாஹ் காணிக்கையை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்ற பேச்சிற்கே இடமிருப்பதில்லை. ஆனால் கதையில் இதற்கு நேர் மாற்றமாக சொல்கிறார்கள்.
(3) இரண்டாவதாக அல்லாஹ் காகத்தை அனுப்பி பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால் காகம் அவ்வாறு செத்துப் போன காகத்தை பள்ளம் தோண்டி புதைப்பதே இல்லை.
(4) மூன்றாவதாக கொலையாளி, தான் செய்த அநியாயமான கொலையைப் பற்றித் தான் கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரேதத்தை மறைப்பது பற்றி கவலைப்படுகிறார்.
(5) ஆக மக்களை திசை திருப்புவதற்காகவே இப்படிப்பட்ட கதைகளை சொல்லி வருகிறார்கள்.
(6) முஸ்லிம்களிடையேயும் “ஷானெ நுஜுல்” என்று சொல்லி, இதற்காகக் தான் “இந்த வசனம்” இறக்கி அருளப்பட்டது என்று சொல்வார்கள். உலகம் நிலைத்திருக்கும் நாள்வரையில் இருக்க வேண்டிய மார்க்கத்தை குறுகிய கால வட்டறைக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். காலம் செல்லச் செல்ல கதை மக்கள் மத்தியில் தங்கிவிடுகிறது. சட்டம் அவர்களைவிட்டு மறைந்து விடுகிறது.


5.சமுதாயம் ஒரு கூட்டுக் குடும்பமே:

وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ فِى ٱلرِّزْقِ ۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ ۚ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ.

16:71. அல்லாஹ் உங்களில் சிலரை சிலரை விட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான். இவ்வாறு மேன்மையாக் கப்பட்டவர்கள், தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கி விடுவதில்லை, (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடைப் பற்றியா இவர்கள் தர்க்கம் செய்கின்றனர்?
விளக்கம் :
(1) ஒரு சமுதாயம் அல்லது நாடு என்று எடுத்துக் கொண்டால் பலதரப்பட்ட தொழில்கள் இருக்கும். ஒவ்வொரு தொழிலிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள்.
(2) அதில் ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்புகளும் இருக்கும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் தான் சமுதாயம் என்று உருவாகும். இதில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது.
(3) எனவே அனைத்துத் தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளும் சரிசமமான முறையில் போய் சேரும்படி அரசு வழிசெய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தம் இனத்தவர் என்று பிரித்த விட்டு, அல்லாஹ்வே உயர்வு தாழ்வு என்று பிரித்து இருப்பதாக தர்க்கம் செய்வது சரியா?.

وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةًۭ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ۚ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ.

16:72. இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தி இருக்கிறான், உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான், அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?

விளக்கம் :
(1) அல்லாஹ்வின் படைப்புகளில் உங்களிலிருந்தே ஜோடி ஜோடியாக படைத்திருப்பதையும் கவனித்துப் பாருங்கள்.
(2) அதைக் கொண்டு உங்களுக்கு பிள்ளைகளும், பேரன் பேத்தி என சந்ததிகளும் உருவாகிறார்கள்.
(3) உங்கள் குடும்பங்கள் சிறப்பாக இருக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியாமாகிறது.
(4) இதற்காக குடும்பப் பொறுப்பை சமமாக பிரித்துக் கொள்கிறீர்கள். எனவே அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் ஒரே சீராக நிறைவேற்றி வருகிறீர்கள்.
(5) ஆனால் நாட்டு மக்களின் நலனைக் காக்கும் விஷயத்தில் பாரபட்சம் காட்டி அல்லாஹ்வின் அருட்கொடைகளை தவறாகப் பயன்படுத்துகிறீர்களே.
(6) நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மக்களாகப் பாவித்து, அவர்கள் அனைவரையும் சரிசமமாக நடத்திச் செல்லும் ஆட்சியமைப்பு இருந்தால் தான், அந்த நாடு வேகமாக முன்னேறி தலைசிறந்த நாடாக விளங்கும். இதுதான் அல்லாஹ்வின் செயல்திட்டமாகும்.
(7) இதிலிருந்து உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், உங்களுக்கு கிடைக்கின்ற வாழ்வாதாரங்கள் யாவும் நீங்களே உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகளின் மூலம் அல்ல. வானத்திலிருந்து பொழியும் மழை, பூமியில் புதைந்துக் கிடைக்கின்ற அளவற்ற சத்துக்கள் மற்றும் தாதுப் பொருட்கள், சூரிய வெப்பம் மற்றும் காற்றின் சக்தி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் தான், உங்களால் உழைத்து வாழ்வாதராங்களைப் பெற முடிகிறது. இவை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே ஆகும். எனவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி நீங்கள் அவற்றை சமுதாய மக்கள் அனைவருக்காகவும் சரிசமமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


6.திருக்குர்ஆன் ஓர் ஒளிவிளக்கு:

۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِۦ كَمِشْكَوٰةٍۢ فِيهَا مِصْبَاحٌ ۖ ٱلْمِصْبَاحُ فِى زُجَاجَةٍ ۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌۭ دُرِّىٌّۭ يُوقَدُ مِن شَجَرَةٍۢ مُّبَٰرَكَةٍۢ زَيْتُونَةٍۢ لَّا شَرْقِيَّةٍۢ وَلَا غَرْبِيَّةٍۢ يَكَادُ زَيْتُهَا يُضِىٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۭ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍۢ ۗ يَهْدِى ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُ ۚ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَٰلَ لِلنَّاسِ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

24:35. வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளி ஏற்படுத்தியது போல, திருக்குர் ஆன் எனும் விளக்கு மாடத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கு போன்ற தாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது, அக்க்ண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணையி)னால் எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று, மேல்திசையைச் சேர்ந்ததுமன்று. அதனை நெருப்பு தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும். (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப் பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்

விளக்கம் :
(1) அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் அகிலங்கள் அனைத்திலும் பூமியிலும் பரவி இருப்பது போல், மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு இவ்வேதம் ஒளிவிளக்காகத் திகழ்கிறது. (மேலும் பார்க்க 5:15;& 42:52)
(2) எவ்வாறு ஒரு விளக்கு கண்ணாடி மாடத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, அந்தக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கிறதோ, அதே போல் இந்த இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய இவ்வேதமும், மனித சுய சிந்தனையின் சடங்கு, சம்பிரதாயம், முன்னோர்களின் வழிப்பாடு போன்ற தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி, நேர்வழி காட்டும் ஒளிவிளக்காக உள்ளது. (14:1)
(3) எவ்வாறு அந்த விளக்கு தொடர்ந்து ஒளிவீசுவதற்கு ஜைத்தூன் எண்ணெயின் துணை நிற்கிறதோ, அது போல இறைவழிகாட்டுதல்கள் எல்லா கால கட்டத்திற்கும் தொடர்ந்து உதவிட, முன் உதாரணங்களும், படிப்பினைகளும், பிரபஞ்சப் படைப்புகளின் செயல்பாடுகளும் மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு ஊன்றுகோலாக இருக்கின்றன.
(4) ஒளிவிளக்கு எவ்வாறு கிழக்கு மேற்கு என்று எந்தப் பக்கமும் சாயாமல், ஒளிவீசக் கூடியதாக உள்ளதோ, அதுபோல இந்த வழிகாட்டுதல்கள் நாடு, மொழி, இனம், ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவையாக உள்ளது.
(5) மேலும் அவை, ஏழைக்கு ஆதரவாகவோ செல்வந்தர்களுக்கு எதிராகவோ அல்லது செல்வந்தர்களை ஆதரித்து ஏழை எளிய மக்களுக்கு எதிராகவோ சாய்ந்து இல்லை.
(6) மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழிகாட்டியாக இல்லாமல், உலக மக்கள் அனைவருக்காகவும் சரிசமமான அறிவுரைகள் அடங்கிய வேதமாக உள்ளது.
(7) அந்த வழிகாட்டுதலைக் கடைப்பிடித்தாலும் கடைப்பிடிக்காவிட்டாலும், அது தன் நிலையை மாற்றிக்கொள்ளாது.
(8)ஒரு சமுதாயம் இந்த வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கும் போது, ஒளிக்கு மேல் ஒளி கிடைத்துக் கொண்டே போகும்.
(9) மேலும் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட நாடுவோருக்கே, அது ஒளிமயமான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்லும்.
(10) எனவே இந்த உவமைகள் யாவும் உலக மக்கள் தெளிவு பெற்று, சிறப்பாக வாழ்வதற்காகவே தரப்படுகின்றன.
(11) ஆக யாவற்றையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவனே அல்லாஹ் என்பதற்கு இவ்வழிகாட்தல்கள் சாட்சியாக இருக்கும்.

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُ ۘ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ.

6:20. எவரும் தம் குழந்தைகளை(ச் சந்தேகமில்லாமல்) அறிவதைப் போல், வேதங்கொடுக்கப் பெற்றவர்கள், இவ்வேத உண்மைகளை நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ, அவர்கள் தாம் இவற்றை நம்பமாட்டார்கள்.
ஒருவர் தாம் பெற்ற குழந்தையைப் பார்த்து எவ்வித சந்தேகமுமின்றி எவ்வாறு அறிந்து கொள்வாரோ, அவ்வாறே வேதம் பெற்றவர்கள் இவ்வேத அறிவுரைகளின் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள். எனினும் இதை ஏற்க மறுப்பவர்கள் துர்பாக்கியவான்களே ஆவார்கள்.


7.இஸ்லாம் ஒரு மார்கமே ஆகும்:

فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهْدِيَهُۥ يَشْرَحْ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُۥ يَجْعَلْ صَدْرَهُۥ ضَيِّقًا حَرَجًۭا كَأَنَّمَا يَصَّعَّدُ فِى ٱلسَّمَآءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ ٱللَّهُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ.

6:125. எவர் அல்லாஹ்வின் நேர்வழிபெற நாடுகிறாரோ, அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான். யார் அவன் வழி தவறிச் செல்ல நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(1) அல்லாஹ்வின் செயல்திட்டத்தின்படி, யார் இறைவழிகாட்டுதலைப் பெற நாடி வருகிறார்களோ, (பார்க்க 18:29) அவர்களைத் தான் இந்தக் குர்ஆன் எந்தக் குறையுமில்லாத அமைதியான வளம் மிக்க வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்கிறது.
(2) இதுவே இஸ்லாம் என்பதாகும்.
(3) இதற்குமாறாக, யார் வழிகேட்டில் செல்ல நாடுகிறாரோ, (பார்க்க 17:15) அவர் வானத்தில் காற்றில்லா மண்டலத்தில் சிக்கி, எந்தப் பக்கமும் அசைய முடியாமல் தத்தளிப்பவனைப் போல், சடங்கு சம்பிரதாயங்களின் வலையில் சிக்கித் தவிக்க வேண்டியது தான்.
(4) இதுவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழ்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனையாகும்.

وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍۢ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍۢ.

14:26. (இணைவைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும், பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும், அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
(1) அல்லாஹ் அறிவித்துள்ள மார்க்கத்திற்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றி வருபவர்களுக்கு ஒரு உதாரணமாவது, எந்த பலனுமளிக்காத பட்டமரத்திற்கு ஒப்பானதாகும்.
(2) அதன் வேர்கள் பூமியின் ஆழ்பகுதி வரையில் செல்வதில்லை.
(3) அதனால் சற்றே காற்றடித்தாலும் தாங்கி நிற்கக்கூடிய சக்தி இல்லாமல் அவை வேரோடு சாய்ந்து விடும்.
(4) அது போல அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றும் சமுதாயம் வேரோடு அழிந்து விடும்.

وَسَكَنتُمْ فِى مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ.

14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே, அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள், அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது, இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
விளக்கம் :
(1) “உங்களுக்கு முன்வாழ்ந்த பல சமூகத்தாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாம் உங்களுக்கு அறிவிக்கவில்லையா? (2) அநியாயச் செயல்களில் ஈடுபட்டு, தமக்குத் தாமே அழிவை தேடிக் கொண்டார்களே, அவர்களைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்யவில்லையா?
(3) இப்படியாக இறைவன் நிர்ணயித்த மனித செயல்களின் விளைவுகளைப் பற்றி (பார்க்க 11:56) பல உதாரணங்களின் மூலம் நாம் விளக்கமளித்தோமே!
(4) இந்த உண்மைகளை அறிந்திருந்தும், நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்வதாகவே இல்லையே!


8.இஸ்லாம் ஒரு நிலையான மார்க்கம்:

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا كَلِمَةًۭ طَيِّبَةًۭ كَشَجَرَةٍۢ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌۭ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ. تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

14:24.&25 (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்க வில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது, அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் செயல் திட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
விளக்கம் :
(1) சிறப்பாக வாழ்பவர்கள் கடைபிடித்து வரும் மார்க்கத்திற்கு (வாழ்க்கை நெறிமுறைக்கு) ஒரு உதாரணமாவது, வானளாவி பரந்து விரிந்து, சதா பழங்களையும் நறுமணங்களையும் அளிக்கக் கூடிய மரமாகவும், அதன் வேர்கள் பூமியில் ஆழமாக ஊடுருவிச் சென்று, உறுதி மிக்கதாக இருக்கும் மரத்திற்கு ஒப்பானதாகும்.
(2) மேலும் அம்மரம் இறைவனின் நியதிப்படி எல்லா பருவக் காலங்களிலும் தன்னுடைய கனியை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
(3) இதுவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி சிறப்பாகச் செயல்படும் சமுதாயத்திற்கு ஒப்பான உதாரணமாகும்.
(4) மக்கள் அறிவுரை பெறும்பொருட்டு இத்தகைய உதாரணங்கள் இறைவன் புறத்திலிருந்து தரப்படுகின்றன.

مُّحَمَّدٌۭ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ۖ تَرَىٰهُمْ رُكَّعًۭا سُجَّدًۭا يَبْتَغُونَ فَضْلًۭا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًۭا ۖ سِيمَاهُمْ فِى وُجُوهِهِم مِّنْ أَثَرِ ٱلسُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ ۚ وَمَثَلُهُمْ فِى ٱلْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسْتَغْلَظَ فَٱسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعْجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ مِنْهُم مَّغْفِرَةًۭ وَأَجْرًا عَظِيمًۢا.

48:29. இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது, அது தன் முளையைக் கிளப்பிய பின்) அதை பலப்படுத்து கிறது, பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித் தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது, இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான். ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
விளக்கம் :
(1) மூஃமின்கள் உருவாக்குகின்ற ஆட்சியமைப்பை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். ஒரு பழுத்த விதையை பூமியில் விதைத்து, அது பூமியைப் பிளந்து, மிருதுவான செடியாக வளர்ந்து, அது பெரிய மரமாக வளர்ந்து அது தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வகையில் வலுவான வேர்களும் தண்டுகளும் கொண்டு வலிமையைப் பெற்று, சதா கனிகளை ஈட்டிக்கொண்டே இருக்கின்றதே அதற்கு ஒப்பிடலாம். (பார்க்க 14:24-25)
(2) இப்படியாக அந்த ஆட்சி அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய வகையில் செயல்படும். ஆனால் இந்த முன்னேற்றம் இறை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே உண்டாக்கும்.
(3) ஆக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இத்தகைய நற்பலன்கள் அளிக்கும் நல்லாட்சி கிடைக்கும் என்பதே அல்லாஹ்வின் வாக்காகும். (பார்க்க 24:55)
(4)மேலும் இத்தகையவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வும் நிலையாக கிடைத்து வரும்.


9.நூதன உலகம்:

يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ.

14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
விளக்கம் :
(1) இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆட்சியமைப்பு இவ்வுலகில் நிலைபெறுவது உறுதி.
(2) அப்போது இந்த உலகம் மாறுபட்ட உலகமாகத் திகழும். வானத்தைப் போல் உயர் பதவியின் மமதையில் இருப்பவர்களின் நிலை மாறி, நல்லோர்களின் கையில் ஆட்சியமைப்பு வந்துவிடும்.
(3) அப்படி ஒரு காலத்தில் ஏக இறைவனான அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படியே எல்லா தீர்ப்புகளும் செயல்திட்டங்களும் நடைபெற்று வரும்.


10.சுவனத்திற்கு ஒப்பான சமுதாயம்:

۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌۭ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَٰفِرِينَ ٱلنَّارُ.

13:35. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் உதாரணமாவது. அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக்கொண்டிருக்கும், அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை, இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும், காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள், அதற்கு மாற்றமாக செயல்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுபவார்கள்.
(2) இவர்களுக்கே வாக்களிக்கப்பட்ட சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு நிச்சயமாக கிடைக்கும்.
(3) அத்தகைய சமுதாயங்களில் தாராள பொருளாதார வசதிகள், வற்றாத ஜீவநதியாய் சதா பெருகி வரும்.
(4) அங்குக் கிடைக்கும் கனிவகைகள் சுவை மிக்கதாகவும், நிழல் தொடர்வது போல் அவர்களுக்கு கிடைத்த வண்ணமும் இருக்கும்.
(5) இவை தான் சுவன வாழ்விற்குத் தரப்படும் உதாரணமாகும். இவை இறையச்சத்துடன் செயல்படுவோருக்குக் கிடைக்கின்ற சன்மானங்களாகும்.
(6) மாறாக இறைவழிகாட்டுதலை நிராகரித்து, தம் மனம்போன போக்கில் வாழ்பவர்களின் வாழ்வு நரகமாக மாறிவரும்.

مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ فِيهَآ أَنْهَٰرٌۭ مِّن مَّآءٍ غَيْرِ ءَاسِنٍۢ وَأَنْهَٰرٌۭ مِّن لَّبَنٍۢ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُۥ وَأَنْهَٰرٌۭ مِّنْ خَمْرٍۢ لَّذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ وَأَنْهَٰرٌۭ مِّنْ عَسَلٍۢ مُّصَفًّۭى ۖ وَلَهُمْ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغْفِرَةٌۭ مِّن رَّبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَٰلِدٌۭ فِى ٱلنَّارِ وَسُقُوا۟ مَآءً حَمِيمًۭا فَقَطَّعَ أَمْعَآءَهُمْ.

47:15. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன, இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் பாதுகாப்பும் உண்டு. (இத்தகையோர்)
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள் சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தில் இருப்பார்கள் என வாக்களிக்கப்படுகிறது.
(2) அந்தச் சுவனம் எவ்வாறு இருக்கும் என்றால், மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு சுகமளிக்கும் மதுரச ஆறுகளும், தெளிவான தேனாறுகளும் கொண்ட நாடாக இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
(3) அது போலத்தான் அவர்களுக்கு தலைசிறந்த வாழ்வு கிடைக்கும். அவர்களுக்கு குன்றாத வாழ்வதாரங்களும், இறைவன் புறத்திலிருந்து பாதுகாப்பான வாழ்வும் கிடைத்து வரும்.
(4) இத்தகைய சிறப்பான வாழ்வைப் பெறுவதை விட்டுவிட்டு குடலைப் புண்ணாக்கும் கொதி நீரும் வேதனை அளிக்கும் வாழ்வையும் நோக்கி பயணம் செய்வது சிறப்பா?
(5) இவர்கள் அச்சுவன வாசிகளுக்கு ஒப்பாவார்களா?


11.மூதாட்டி நெய்த ஆடை:

وَلَا تَكُونُوا۟ كَٱلَّتِى نَقَضَتْ غَزْلَهَا مِنۢ بَعْدِ قُوَّةٍ أَنكَٰثًۭا تَتَّخِذُونَ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِىَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ ۚ إِنَّمَا يَبْلُوكُمُ ٱللَّهُ بِهِۦ ۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ.

16:92. நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்துத்) துண்டு துண்டாக்கி விட்டாள், ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத் தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாம நாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான்.

விளக்கம் :
(1) ஒரு பெண்மணி கஷ்டப்பட்டு நூலை நூற்று நன்றாக முறுக்கேற்றியபின், அதை தானே துண்டுதுண்டாக வெட்டிவிட்டாளே, அவளைப் போன்று ஆகிவிடாதீர்கள்.
(2) அதாவது சமுதாய ஒருமைப்பாட்டை கஷ்டப்பட்டு ஏற்படுத்திய பின், நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சுயநலத்தோடு செயல்பட்டால், நாட்டில் எதிர்ப்பும், பிளவும் ஏற்பட்டு நாடு துண்டு துண்டாக ஆகிவிடும்.
(3) மேலும் நாட்டிலுள்ள சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை மிஞ்சி விடுவார்கள் என்ற அச்சத்தில் தேவையற்ற ஆணைகளைப் பிறப்பித்து, மக்களை ஏமாற்றாதீர்கள்.
(4) இவையாவும் சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதே முக்கியமானதாகும்.
(5) மேலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.
(6) நீங்கள் இந்த அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்பட்டால், உங்கள் செயல்களின் விளைவுகள் ஏற்படும் காலக் கட்டங்களில் நிச்சயமாக தெளிவாகிவிடும்.


12.ஊசிமுனையின் துவாரத்தில் ஒட்டகம் நுழையுமா? திருக்குர்ஆன் விடும் அறைகூவல்:

إِنَّ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدْخُلُونَ ٱلْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلْجَمَلُ فِى سَمِّ ٱلْخِيَاطِ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُجْرِمِينَ.

7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில், அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்குக் கூலிகொடுப்போம்.

விளக்கம் :
(1) எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதல்கள் சரியில்லை என கர்வத்துடன் நடந்துகொண்டு, மற்ற சமூகத்தவர்களின் கலாச்சாரத்தைக் கண்மூடித்தனமாக ஏற்று நடக்குமோ, அவர்களுக்கு வானுலக அருட்கொடைகள் ஒருபோதும் கிடைக்காது. (பார்க்க 5:66 & 7:96)
(2) அதாவது இறைவேத அறிவுரைகளைப் பின்பற்றுவதால் கிடைக்கும் வானுலக நன்மைகள் இவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது.
(3) உதாரணமாக ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைய முடியுமா? அப்படித் தான் இவர்கள் தம் சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி, சுவன வாழ்வை ஈட்டிக்கொள்ளவே முடியாது.
(4) இதுவே இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து, தவறான வழியில் செல்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையாகும்.
(5) சிந்தனையாளர்களே! இதுதான் உலக மக்களுக்கு இந்தக் குர்ஆன் விடும் (challenge) அறைகூவலாகும். உலகில் சாந்தியும் சமாதானமும் நிலைக்க வேண்டும் என்றால், இந்தக் குர்ஆனின் அறிவுரைகளுக்கு உட்பட்டு வந்தே ஆக வேண்டும். இதைவிட்டு வேறு எந்த வழிமுறையைக் கடைப்பிடித்தாலும், இறுதியில் தோல்வியையே காண்பீர்கள் (மேலும் பார்க்க 3:85)


13.இரவு பகலின் உதாரணம்:

وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةًۭ لِّتَبْتَغُوا۟ فَضْلًۭا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍۢ فَصَّلْنَٰهُ تَفْصِيلًۭا.

17:12. இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம், பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம், உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும். ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
விளக்கம் :
(1) இறைவன் விதித்தபடி நிகழ்ந்து வரும் இரவையும் பகலையும் கவனித்துப் பாருங்கள்.
(2) மேலோட்டமாக பார்க்கும்போது, இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராகத் தோன்றலாம்.
(3) ஆனால் பகலை மங்கச் செய்து இருளாக்கி வைப்பதும், அதை போக்கிவிட்டு பகல் வெளிச்சத்தை ஏற்படுத்துவதும், உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளவும், மாதம் மற்றும் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகவுமே ஆகும்.
(4) மேலும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து இருக்கிறோம் என்பதை நீங்கள் கவனியுங்கள்.
(5) பகலின் ஒளியை இரவு போக்கிவிடுவது போல, நன்மையான செயல்களின் பலன்களை தீய செயல்கள் போக்கிவிடும். அவ்வாறு நற்செயலை செய்யவில்லையெனில் உங்களை அழிவில் கொண்டு போய்ச் சேர்க்கும். மாறாக எவ்வாறு மனிதன் தன் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, இரவையும் மின் விளக்குகளால் ஜொலிக்கச் செய்துள்ளானோ, அவ்வாறே இறைவழிகாட்டுதல் என்ற ஞான ஒளியின் துணையைக் கொண்டு, சமுயத்தில் இருள் சூழும் நிலை ஏற்படாதவாறு மனித வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கிக்கொள்ள முடியும்.

أَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا ٱلَّيْلَ لِيَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.

27:86. நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
இரவு பகல் என மாறிமாறி வருதையும் அவர்கள் கவனித்துப் பார்ப்பதே இல்லை. ஒய்வு பெறுவதற்காக இரவும், உழைத்து வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்காக பகலும் படைக்கப்பட்டுள்ளன. (பார்க்க 78:10-11) இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு இதில் நிச்சயமயாக அத்தாட்சிகள் உள்ளன.

அதாவது அறிவாற்றலோடு உழைத்து வாழும் சமுதாயங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பிரகாசமாகவும், உழைக்காமல் வாழும் சமுதயாங்களின் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டு வரும். இவை யாவும் திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் ஏற்படுகின்ற ஒன்றல்ல. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி படிப்படியாக ஏற்பட்டு வரும். அந்தக் கால அளவு ஐம்பது, நூறு வருடங்கள் எனவும் ஆகலாம். எனவே ஒரு சமுதாயம் ஆற்றலின்றி உழைக்காமல் சில காலம்தான் இன்புற்று வாழ முடியும். ஆனால் இறுதியில் அதற்கு இருள் சூழ்ந்த நிலைதான் ஏற்படும். இதையே ஜீவனுள்ள ஹயாத்தான சமுதாயம் என்றும் மரணமடைந்த மவுத்தாகிவிட்ட சமுதாயம் என்றும் சொல்லப்படும். இப்படியாக உழைக்காமல் பிறர் உழைப்பில் சொகுசாக வாழ்பவர்களுக்கு எதிராகத்தான் கலகம், கலவரம், மோதல் என்று இவ்வுலகில் ஏற்பட்டு வரும்.


14.தேனீயின் உதாரணம்:

وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ.

16:68. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்" (என்றும்),

ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

16:69. “பின், நீ எல்லா விதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு, நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

விளக்கம் :
(1) இறைவனின் படைப்புகளில் மனிதனைத் தவிர்த்து, மற்ற உயிரினங்களைப் பற்றி கவனித்துப் பாருங்கள்.
(2) உதாரணத்திற்கு தேனீயை எடுத்துக்கொள்ளுங்கள். இறைவனின் நியதிப்படி, அதனுள் உள்ளுர உணர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
(3) அதனால் அவை மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் தேன் கூடுகளை அமைத்து தேனை சேகரிக்கின்றன.
(4) அதன்பின் இறைவன் நிர்ணயித்த விதிமுறைப்படி, எல்லா வகையான கனி வகைகளிலும் பூக்களிலும் உள்ள தேனை உறுஞ்சி எளிதாக அந்த தேன்கூட்டிற்குள் சேகரித்து விடுகின்றன.
(5) இவ்வாறு உறிஞ்சிய தேன், அதன் வயிற்றுக்குள் சென்று பல நிறங்களாக மாறிவிடுகின்றன. எனவேதான் தேனும் பல நிறங்களை உடையவையாக உள்ளது.
(6) இந்தத் தேன், மக்களின் பல்வேறு நோய்களின் சிகிச்சைக்காகப் பயன்படுகின்றன. நிச்சயமாக சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
(7) இந்த வாசகத்தில் தேனீக்கு வஹீ அனுப்பியதாக வருகிறது. அதாவது மனிதனை தவிர்த்து, மற்ற எல்லா படைப்புகளும் தம் இயல்பின் அடிப்படையில் செயல்படும்படி அதனுள் ‘வஹீ’ என்னும் இறைவழிகாட்டுதல்கள் அமைக்கபட்டுள்ளன. அவை எல்லாம் அதன்படியே வாழ்ந்து வருகின்றன. அதாவது அவை எங்கு வாழவேண்டும்? அதன் ஆகாரம் எங்கு கிடைக்கும்? தம் இனப்பெருக்கம் எவ்வாறு செய்து கொள்ள வேண்டும்? தமக்கு யாரால் ஆபத்துகள் வரும்? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? இதுபோன்ற விஷயங்களை அந்த படைப்பினங்களுக்கு யாரும் கற்றுத் தருவதில்லை. ஆனால் மனித விஷயத்தில் அவ்வாறு இருப்பதில்லை. மனிதன் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது, நல்லது எது கெட்டது எது என்ற பாகுபாடு தெரிவதில்லை. அவனுடைய சுற்றுப்புற சூழல் எவ்வாறு செயல்படுகிறதோ, அதன்படியே அவனும் வளர்ந்து வருவான். அவனுடைய சிந்தனையும் அவ்வாறே வளரும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழியையே இவனும் பேசுவான். அவனைச் சுற்றியுள்ளவர்களின் கலாச்சாரத்தையே இவனும் பின்பற்றுவான்.

சுருங்கச் சொன்னால் மனிதனைத் தவிர்த்து, மற்ற படைப்பினங்கள் யாவும் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றன.(16:49) எனவே அவையாவும் ஏதாவது ஒரு வகையில் உலக மக்களுக்கு பலனளிக்கக் கூடியவையாக உள்ளன. மனிதனும் இறைவனின் அறிவுரைகளை ஏற்று, அதன்படி வாழ்ந்தால், அவனும் உலக மக்களுக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவான். அவன் மனிதனாய் பிறந்ததற்கு ஒரு அர்த்தமும் இருக்கும்.
தேனீக்கள் எவ்வாறு தாம் உழைத்துப் பெற்ற தேனை, தேன்கூட்டில் சேர்த்து விடுகிறதோ, அதேபோல மனிதனும் தாம் உழைத்துப் பெற்ற செல்வங்களை தம் தேவைக்குப் போக மிகுதியை பொது நிதியில் சேர்த்து அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பயன்படுத்தினால், ஏற்றத்தாழ்வு இல்லாத, சமச்சீர்நிலைக் கொண்ட சமுதாயம் உருவாகும். சமுதாய மக்களின் துயர் துடைப்புக்கு அவை பயன்படும்.
மேலும் தேன்கூட்டை தக்க நேரத்தில் எடுத்து பதப்படுத்தி விநியோகித்தால் தான் அவை மக்களுக்கு பலனளிக்கும். இல்லையென்றால் அந்தத் தேனை தேனீக்களே குடித்து பறந்துவிடும். அதுபோல செல்வங்களைக் குவித்து வைத்துக் கொண்டால், அவை நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் பயன்படாது, மேலும் அத்தகைய செல்வங்களே அவனை தவறான வழியில் செல்லும்படி செய்து அழிவைத் தேடி தந்து விடும்.


15.சிலந்திப் பூச்சியின் உதாரணம்:

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًۭا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

29:41. அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம், சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது, அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது, ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
விளக்கம் :
அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுடைய பாதுகவலராக எடுத்துக் கொள்பவருக்கு உதாரணம், சிலந்திப் பூச்சி கட்டும் வீட்டைப் போன்றதாகும். தனக்காகக் கட்டிக்கொள்ளும் அதன் வீடு மிகவும் பலவீனமானதாக இருக்கும். இதை அவர்கள் அறிந்துகொள்வாராயின், அவர்கள் இணையாக எடுத்துக் கொண்டது மிகவும் பலவீனமானது என்பதை அறிவார்கள்.

(1) அதாவது அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி தலைசிறந்த, வலுவான நாட்டை உருவாக்கவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நாடுகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல், அவர்கள் வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனால் அவர்கள் பலவீனம் உள்ளவர்களை நசுக்கி தன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே சிறப்பு என நினைக்கிறார்கள்.
(2) சிலந்திப்பூச்சி எவ்வாறு வலையைக் கட்டி தன்னைவிட பலவீனமுள்ள பூச்சிகளை அதில் சிக்கவைத்து தன் உணவாகப் பயன்படுத்திக் கொள்கிறதோ, அதுபோலத் தான் இவர்களும். ஆனால் தன்னைவிட பலம் வாய்ந்த பிராணி தாக்கினால், அதை எதிர்க்கும் சக்தியில்லாமல் அது ஓடிவிடும். அது கட்டிய வீடும் பலனளிக்காது.
(3) அது போல் ஏழை எளிய மக்களை பலவீனமாக்கி, அரசு தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டால், அதைவிட பலம் வாய்ந்த நாடு தாக்கும் போது, அதை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ச்சி அடைந்துவிடும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட்டு சுயமாக சட்டங்களை உருவாக்கி நடத்தும் ஆட்சிமுறை யாவும் சிலந்திப் பூச்சியின் வலைக்கு ஒப்பான பலமற்றவையே ஆகும்.
(4) மேலும் தர்கா போன்ற வழிபாட்டு தலங்களிலும் ஜோசியம் மற்றும் போதைப் பொருள் விநியோகம் போன்றவற்றிலும் நலிந்த மக்களை தம் வலையில் சிக்க வைத்து அவர்களிடமிருந்து பிடுங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் எண்ணமே இருக்காது.

إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

29:42. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான். இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
எந்த சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சி நடத்துகிறதோ, அதன் உண்மை நிலை என்னவென்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் ஆட்சிமுறைதான் எல்லாவற்றையும் விட தலைசிறந்த ஆட்சியாகவும் ஞானத்தின் அடிப்படையிலும் இருக்கும். (பார்க்க 9:33)


16.மழை நீரின் உதாரணம்:

وَٱلْبَلَدُ ٱلطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُۥ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَٱلَّذِى خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًۭا ۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَشْكُرُونَ.

7:58. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது, ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது, நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
விளக்கம் :
(1) இறைவனின் நியதிப்படி, மழை நீரைக் கொண்டு வளமான நிலத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, நல்ல விளைச்சலைத் தருகிறது.
(2) ஆனால் மழை நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் சக்தி பெறாத நிலத்தில் விளைச்சல்கள் மிக சொற்பமாகவே இருக்கும்.
(3) நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ள முன்வரும் சமுதாயங்களுக்கு இவ்வாறே இறைவழிகாட்டுதல் ஆதாரப்பூர்வமாக தெளிவாக்கப்படுகிறது.
(4) அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள சமுதாயம், அவற்றை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்மான நற்செயல்களைச் செய்து, வளம் மிக்க நாடாக உருவாக்கிக் கொள்ளும்.
(5) அத்தகைய ஆற்றல் இல்லாத சமுதாயம் குறைவான பலன்களையே பெறும்.
(6) ஆதி காலம் முதல் இன்று வரையில் உலகிலுள்ள பல தரப்பட்ட சமுதாயங்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இவ்வாறே ஏற்பட்டு வந்தன.

فَٱنظُرْ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحْمَتِ ٱللَّهِ كَيْفَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ ذَٰلِكَ لَمُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

30:50. (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சி களைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிப்பவனாக இருக்கிறான், மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًۭا فَرَأَوْهُ مُصْفَرًّۭا لَّظَلُّوا۟ مِنۢ بَعْدِهِۦ يَكْفُرُونَ.

30:51. ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன்பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.

فَإِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ.

30:52. ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது, (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.

விளக்கம் :
(1) அல்லாஹ் செய்துள்ள மழையின் மாபெரும் ஏற்பாட்டை நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.
(2) உயிரற்ற நிலையில் இருக்கின்ற பூமி, மழை நீரைக் கொண்டு எவ்வாறு செழிப்பாகிறது என்பதைக் கவனியுங்கள்.
(3) இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக ஒவ்வொரு படைப்பிலும் அல்லாஹ்வின் அளவற்ற வல்லமை பிரதிபலிப்பதைக் கவனியுங்கள்.
(4) அதாவது காற்றை உருவாக்கி அதிலிருந்து மழையை பொழிய வைப்பது தான் அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம். அந்த மழைநீரைப் பயன்படுத்தி அதிலிருந்து வாழ்வாதாரங்களை தேடிக் கொள்வது மனிதனின் பொறுப்பாகும்.
(5) அதைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டம் மனிதனுக்குத் தானே அன்றி மழையைப் பொழிய வைத்த அல்லாஹ்வுக்கு அல்ல.
(6) அது போல இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் இறக்கி அருளுவது தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாடாகும்.
(7) அவற்றை ஏற்று நடப்பதும் நடக்காததும் மனித விருப்பத்திற்கு விடப்பட்ட விஷயமாகும். (பார்க்க 18:29) அதை ஏற்று நடந்தால் நடை பிணமாக வாழும் இச்சமுதாயம், புத்துயிர் பெற்று சிறப்பாக வாழ வழிகள் கிடைக்கும்.
(8)ஆக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ, அவ்வாறே விளைவுகள் ஏற்படும்.
(9) இது அல்லாஹ்வின் பேராற்றலாகும்.
(10) அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அதே காற்று பயிர்களை பழுக்க வைத்து பொன் நிறமாக மாற்றிவிடுகிறது. அப்போது நீங்கள் அதை அறுவடை செய்து எடுத்துச் சென்றுவிடுகிறீர்கள்.
(11) அதன்பின் அந்த மகசூல் யாவும் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்.
(12) அல்லாஹ்வின் ஏற்பாடுகள் எல்லாம் இல்லாதிருந்தால் உங்களால் விவசாயம் செய்து தானியங்களைப் பெற்றிருக்க முடியுமா? (பார்க்க 56:63-73)
(13) எனவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி சமுதாய மக்கள் அனைவருக்கும் அந்த விளைச்சல்கள் போய் சேரும்படி வழி செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
(14) இந்த அறிவுரைகளை எல்லாம் சிந்தித்து ஏற்காதவர்கள் தாம் நடைபிணமாக வாழ்பவர்கள் ஆவர்.
(15) இத்தகைய ஜடங்களுக்கு நீங்கள் மார்க்க உண்மைகளை கேட்கும்படி செய்ய முடியாது. நன்மையின் பக்கம் நீங்கள் விடும் அழைப்பைக் கேட்காத செவிடர்கள் இவர்கள். இத்தகையவர்களையும் நீங்கள் கேட்கச் செய்ய முடியாது.


17.குர்ஆனை மலைமீது இறக்கி வைத்தால்?

لَا يَسْتَوِىٓ أَصْحَٰبُ ٱلنَّارِ وَأَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۚ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ هُمُ ٱلْفَآئِزُونَ.

59:20. நரகவாசிகளும், சுவர்க்க வாசிகளும் சமமாக மாட்டார்கள், சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.

لَوْ أَنزَلْنَا هَٰذَا ٱلْقُرْءَانَ عَلَىٰ جَبَلٍۢ لَّرَأَيْتَهُۥ خَٰشِعًۭا مُّتَصَدِّعًۭا مِّنْ خَشْيَةِ ٱللَّهِ ۚ وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.

59:21. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கி இருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர், மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.

(1) இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டு தாளா வேதனைகளை அனுபவிக்கும் நரகவாசிகளும், இறைவழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்து வாழ்வில் எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகளும் சமமாவார்களா? சுவனவாசிகள்தானே பாக்கியமிக்கவர்கள்.
(2) இத்தகைய சுவனத்திற்கு யார் வாரிசுதாரர்களாக ஆக முடியும் என்று தெரியுமா?
(3) அவர்களின் உள்ளங்களில் இறைவழிகாட்டுதல்கள் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கும் என்றால், அதற்கு எதிராகச் செயல்படும்படி அவர்ளுக்குக் கூறப்பட்டால், மலையே வெடித்து சிதறி அவர்கள் மேல் விழுவது போல் பயப்படுவார்கள்.
(4) மக்கள் இதைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்காகவே இத்தகைய உதாரணங்களைத் தருகிறோம்.
(5) வாசகர்களே! இந்த வாசகத்தில் மலையின் மீது நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தால், அல்லாஹ்வின் பயத்தால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை நீர் காண்பீர் என்று வருகிறது. இது ஒரு பழமொழியாகும். நாமும் வேலியே பயிரை மேய்கிறது என்கிறோம். ஒருபோதும் வேலி பயிரை மேயாது. வேலியைப் போல் பாதுகாக்க வேண்டியவனே அதை பாழ்படுத்தினால் அதைப் பார்த்து இப்படி சொல்கிறோம். அதுபோல குர்ஆனை மலை மேல் வைத்தால் அது ஒருபோதும் வெடிக்காது. எனவே குர்ஆனைப் பின்பற்றுபவர்களை நாம் உவமையாக வைத்து பொருள் தந்துள்ளோம்.


18.பாழ்நிலத்தின் உதாரணம்:

إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةًۭ لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًۭا. وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًۭا جُرُزًا.

18:7 & 8. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலை நிலமாக்கி விடுவோம்.

விளக்கம் :
(1) இவ்வுலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அழகாக இருப்பதால் மக்களுக்கு அதில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே. (பார்க்க 3:14)
(2) ஆனால் இந்த பாக்கியங்களைப் பெற்றவர்களில் யார் அழகிய முறையில் செயல்பட்டு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதையும்,
(3) யார் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி அழிவைச் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதையும் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வதே இறைவன் அவற்றைப் படைத்ததன் நோக்கமாகும்.
(4) இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒரு காணி நிலத்தை எடுத்து கொள்ளுங்கள்.
(5) அதை நன்றாகப் பதப்படுத்தி, சீர் செய்து, உழுது, நீர் பாய்ச்சி, பயிரிட்டு வந்தால் அது பசுமையாகவும் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
(6) அதை அப்படியே விட்டுவிட்டால் அது காலப் போக்கில் பலனற்றுப் போயிவிடும். அந்நிலத்தின் மேல்பரப்பில் மாசு படிந்து புற்பூண்டும் விளையாத பாழ்நிலமாக மாறிவிடும். இதுதான் இறைவனின் நியதியாகும் அல்லவா?
(7) அது போலவே மக்களும் இறைவழிகாட்டுதலை ஏற்று, சிறப்பாக ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களைத் தீட்டி, அதற்காகத் தம் செல்வங்களைப் பயன்படுத்தி உழைத்து வந்தால், அந்தச் சமுதாயமும் சிறப்பாக வாழும். உலக மக்களுக்கும் பலன்கள் கிடைத்து வரும்.


19.உலக வாழ்க்கை வீண் விளையாட்டு?.

وَٱضْرِبْ لَهُم مَّثَلَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًۭا تَذْرُوهُ ٱلرِّيَٰحُ ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ مُّقْتَدِرًا.

18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது, பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(துசெழித்)தன, ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

ٱلْمَالُ وَٱلْبَنُونَ زِينَةُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًۭا وَخَيْرٌ أَمَلًۭا.

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே ஆகும். என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையதாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்க வையாகவும் இருக்கின்றன.

விளக்கம் :
(1) சுயநலப் போக்குடனும் கர்வத்துடனுடம் தற்காலிக சுகங்களை மட்டும் நோக்கமாக வாழும் சமுதாயத்தின் நிலையை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கி கொள்ளலாம்.
(2) அதாவது இறைவனின் நியதிப்படி வானத்தலிருந்து மழை பொழிகிறது. அதனால் அப்பூமியிலிருக்கும் தாவரங்களும் செடி கொடிகளும் செழிப்பாகின்றன.
(3) அதே தாவரங்களும் செடிக் கொடிகளும் காய்ந்து பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது.
(4) இப்படியாக எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் பேராற்றலே மிகைத்து நிற்கிறது.
(5) அதாவது வானத்திலிருந்து பொழியும் மழையைக் கொண்டு எவ்வாறு பூமி செழிப்படைகிறதோ, அது போல வானத்திலிருந்து இறக்கி அருளப்படும் இறைவழிகாட்டுதலைக் கொண்டு ஒரு சமுதாயத்தை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றிவிடலாம்.
(6)) மேலும் செழிப்படைந்த அந்நிலத்தை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டால் அது எவ்வாறு பாழடைந்து விடுகிறதோ, அது போல சமுதாய ஒழுக்க மாண்புகளை கட்டிக்காக்க வலியுறுத்தும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்காமல் விட்டுவிட்டால், அந்தச் சமுதாயம் எவ்வளவு தான் பொருளாதார ரீதியாக வளர்ச்சிப் பெற்று செழித்திருந்தாலும் அது சீரழிந்து கொண்டே போய்விடும்;
(7) எனவே வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் செல்வங்களும் பிள்ளைகளும் தேவையற்ற ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. அவையாவும் இவ்வுலக வாழ்வை அலங்கரிக்கும் அரிய சாதனங்களே என்பதில் சந்தேகமில்லை.
(8) அதன் மேல் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே. (பார்க்க 3:14-15) அவை எல்லாம் விலக்கப்பட்டவையும் அல்ல. (பார்க்க 7:32)
(9) ஆனால் அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழக் கூடாது என்பதே இறைவழிகாட்டுதலின் நிலைப்பாடாகும்.
(10) உலகச் செல்வங்கள் யாவும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் தூய சமுதாயத்தை உருவாக்கி, அதன் மேம்பாட்டிற்காக நலத் திட்டங்களை தீட்டி அதற்காக உதவி செய்வதும் உழைப்பதும் அவசியமான ஒன்றாகும்.
(11) இதை நீங்கள் உளப்பூவர்மாக ஏற்று அதன்படி செயல்பட வேண்டும்.

ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ وَزِينَةٌۭ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌۭ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَكُونُ حُطَٰمًۭا ۖ وَفِى ٱلْءَاخِرَةِ عَذَابٌۭ شَدِيدٌۭ وَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌۭ ۚ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ.

57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது, ஆனால் சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள்நிறம் ஆவதை நீர் காண்கின்றீர், பின்னர் அது கூளமாகி விடுகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே: எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு, (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் பாதுகாப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

விளக்கம் :
(1) இன்னும் இதையும் தெரிந்துகொள்ளுங்கள். இறை நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது வெறும் வீண் விளையாட்டாகவே இருக்கும்.
(2) அவையே அவர்களுக்கு அழகாகத் தோன்றும். அவற்றைக் கொண்டு அவர்கள் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.
(3) மேலும் தங்களுடைய பிள்ளைகளுக்காகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் போட்டியும் இருக்கும்.
(4) இத்தகையவர்களுடைய வாழ்க்கை முறையை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
(5) வானத்திலிருந்து மழை பொழிந்து, நிலம் பசுமையடைந்து செழிப்பாகிறது. அதைக் காணும் விவசாயி ஆனந்த பரவசமடைகிறான். ஆனால் அதன் பயிர்கள் விரைவிலேயே உலர்ந்து கூளமாகி விடுகின்றன.
(6) அந்தப் பயிர்கள் கூளமாவதற்கு முன் அவற்றைப் பாதுகாக்கும் திறமையோ அவனிடம் இருந்ததில்லை. எனவே அவனுடைய சந்தோஷங்கள் தற்காலிகமானதே என ஆகிவிடுகிறது.
(7) அதுபோலத் தான் வருங்கால நலத்திட்டங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல், தற்காலிக சந்தோஷங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு வருங்கால சந்தோஷங்களில் எந்த பங்கும் கிடைப்பதில்லை.
(8) அவர்களுடைய வாழ்வு வருங்காலத்தில் துயர்மிக்கதாய் ஆகிவிடுகிறது. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் நிலையான சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்விற்கு வழிவகுக்கிறது.
(9) ஆக வருங்கால நிலையான சந்தோஷங்களை வைத்துப் பார்க்கும்போது, நிகழ்கால சந்தோஷங்கள் அற்பமானவையே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


20.உறுதியற்ற அஸ்திவாரம்:

أَفَمَنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ تَقْوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضْوَٰنٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍۢ فَٱنْهَارَ بِهِۦ فِى نَارِ جَهَنَّمَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்து விடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழியில் நடத்த மாட்டான்.

لَا يَزَالُ بُنْيَٰنُهُمُ ٱلَّذِى بَنَوْا۟ رِيبَةًۭ فِى قُلُوبِهِمْ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.

9:110.அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கபட்டது), அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.

விளக்கம் :
(1) நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற வகையில், நிலையான பலன்களுக்காக ஒரு கட்டிடத்தை எழுப்புகிறார். அது சிறந்ததா?
(2) அல்லது ஒருவர் கடலோரத்தில், சரிந்து விழக் கூடிய வகையில், பூமியின் மேற்பரப்பில் திடமான அஸ்திவாரம் எதுவும் இல்லாமல், ஒரு கட்டிடத்தை எழுப்புகிறார். அது சிறந்ததா?
(3) மேலும் அது பொடிப்படியாய நொருங்கி போவதுடன், அங்குள்ளவர்களையும் நரக வேதனையின் பக்கம் அழைத்துச் செல்வதாக இருந்தால், அது எப்படி சிறப்பான கட்டிடமாக இருக்க முடியும்?
(4) எனவே அநியாயக்கார கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் ஒருபோதும் கிடைக்காது.
(5) அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் சமூக அமைப்பே நிலையான சந்தோஷங்களை அளிக்கும். காரணம் அது உறுதியான கொள்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
(6) தவறான அடிப்படையில் எழுப்பப்படும் கட்டிடம் இவ்வுலகில் நீடிக்க வாய்ப்பில்லை. அது இடிந்து தரைமட்டமாகி விடும்.
(7) இவ்வாறு நடப்பது அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். மேலும் அவர்களின் உள்ளங்கள் துயரத்தில் சுக்குநூறாக உடைந்துவிடும்.
(8) இது வெறும் மிரட்டல் அல்ல. அனைத்தையும் நன்கறியும் ஞானமிக்க வல்லமையுடையவனின் சொல் இது.
(9) அதாவது தவறான கொள்கையின் அடிப்படையில் செயல்படும் சமூக அமைப்பு நீண்ட காலத்திற்கு இவ்வுலகில் நீடிக்க வாய்ப்பில்லை


21.இரு தோட்டக்காரர்களின் உதாரணம்:

۞ وَٱضْرِبْ لَهُم مَّثَلًۭا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَٰبٍۢ وَحَفَفْنَٰهُمَا بِنَخْلٍۢ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًۭا.

18:32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக!அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம், இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு இவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம். அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
விளக்கம் :
நரகம் மற்றும் சுவன வாழ்வுக்கு ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கி கொள்ளலாம். ஒருவருக்கு திராட்சைத் தோட்டங்கள் இரண்டு இருந்தன. அவற்றைச் சுற்றி பேரித்த மரங்களும் இருந்தன. அவ்விரு தோட்டங்களுக்கும் இடையே செழிப்பான விவசாயமும் இருந்தது.

كِلْتَا ٱلْجَنَّتَيْنِ ءَاتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْـًۭٔا ۚ وَفَجَّرْنَا خِلَٰلَهُمَا نَهَرًۭا.

18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை, எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
விளக்கம் :
அவ்விரு தோட்டங்களில் எவ்வித குறைவுமின்றி நிறைவான மகசூல்கள் கிடைத்து வந்தன. அத்தோட்டங்களுக்கு பக்கமாக ஒடையும் ஒலித்தோடியது.

وَكَانَ لَهُۥ ثَمَرٌۭ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكْثَرُ مِنكَ مَالًۭا وَأَعَزُّ نَفَرًۭا.

18:34.இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன, அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக, “நான் உன்னை விடப் பொருளால் அதிகம் உள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று கூறினான்.
விளக்கம் :
இப்படியாக அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து சிறப்பாக வாழ்ந்து வந்தான். இவையாவும் அவனுக்கு இறைவனின் புறத்திலிருந்த கிடைத்து வந்தன. கூடவே அவனிடம் கர்வமும் சுயநலமும் மிகைத்திருந்தது. எனவே அவன் தன் தோழனிடம், “உன்னைவிட நான் செல்வங்களிலும் ஆட்பலத்திலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்பதைப் பார்” என்று கூறி பெருமையடித்துக் கொண்டு விதண்டாவாதம் செய்து வந்தான்.

وَدَخَلَ جَنَّتَهُۥ وَهُوَ ظَالِمٌۭ لِّنَفْسِهِۦ قَالَ مَآ أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِۦٓ أَبَدًۭا.

18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான், அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை" என்றும் கூறிக் கொண்டான்.
விளக்கம் :
இவ்வாறு பேசிக் கொண்டே அவன் தன் தோட்டத்திற்குள் நுழைந்தான். ஆனால் அவனிடம் இருந்த இந்த தற்பெருமையும் கர்வமும் அவனை கெடுத்துக் கொண்டிருப்பதை அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவன் தன் தோழனிடம், “நீ கூறுவது போல, இந்த தோட்டம் ஒருபோதும் அழிந்து விடாது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.
இப்படிப்பட்ட கர்வமும், பெருமையும் கொள்வதால் அது உனக்கு அழிவைத் தேடித் தந்து விடும் என்று அவனுடைய தோழனின் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை.

وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّى لَأَجِدَنَّ خَيْرًۭا مِّنْهَا مُنقَلَبًۭا.

18:36.(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதை விடமேலான இடத்தையே நான் காண்பேன்" என்றும் கூறினான்.
விளக்கம் :
மேலும் அவன், “நீ கூறுவது போல இறைவனின் நியதிப்படி என்னுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் ஏற்படும் எனவும் நான் நினைக்கவில்லை. அப்படியும் நான் இறைவன் முன் நிற்கவேண்டி இருந்தால், இங்கு இருப்பதைவிட மேலான இடத்திலேயே நான் இருப்பேன்” என்று தன்னை பெருமிதப்படுத்திக் கொண்டான்.

قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرْتَ بِٱلَّذِى خَلَقَكَ مِن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ سَوَّىٰكَ رَجُلًۭا.

18:37.அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?" என்று அவனிடம் கேட்டான்.
விளக்கம் :
அதற்கு அவனுடைய தோழன், “இறைவன் விதித்துள்ள மனித செயல்களின் விளைவுகள் என்ற சட்டத்தையா ஏற்க மறுக்கிறாய்? உன்னுடைய படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பார். மண்ணின் சத்திலிருந்து உருவாகும் இந்திரியத் துளியிலிருந்து படைத்து உன்னை சரியான மனிதனாக படைத்தானே அந்த இறைவனின் சட்ட விதிமுறைகளையா ஏற்க மறுக்கிறாய்?” என்று தர்க்கித்து வந்தான்.
அதாவது அவனுடைய படைப்பே இறைவனின் படைப்புச் சட்டப்படி ஏற்பட்டது என்றால் அவனுக்கு கிடைத்துள்ள செல்வங்களும் இறைவன் செய்துள்ள ஏற்பாடுகளின் மூலமாகத் தான் ஆகும். ஆக நிலம், காற்று, அந்த நீரோடைகள் ஆகிய எதையும் மனிதன் படைத்ததல்ல. இறைவனின் படைப்புகளாகும். மனிதனின் உழைப்பு என்பது அதில் ஒரு பகுதியே ஆகும். உண்மை இவ்வாறிருக்கும் போது, தோட்டத்தில் கிடைக்கும் அனைத்து மகசூல்களும் தனக்கு மட்டுமே சொந்தம் என கருதுவது எப்படி நியாயமாகும்?

لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّى وَلَآ أُشْرِكُ بِرَبِّىٓ أَحَدًۭا.

18:38.“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ், அவன் தான் என் இறைவனாவான், என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன்.
விளக்கம் :
மேலும் அவனுடைய தோழன், “அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்பதை நான் திடமாக நம்புகிறேன். அவனுடைய வழிகாட்டுதலில் வேறு எதையும் இணை வைத்து பின்பற்ற மாட்டேன்” என்றான்.

وَلَوْلَآ إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِ ۚ إِن تَرَنِ أَنَا۠ أَقَلَّ مِنكَ مَالًۭا وَوَلَدًۭا.

18:39. மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, மாஷா அல்லாஹ் குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ் நாடியதே நடக்கும், அனைத்து சக்தியும் அல்லாஹவுக்கே அன்றி வேறில்லை, என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும்,
விளக்கம்:
மேலும் அவன், “நீ உன் தோட்டத்திற்குள் பிரவேசிக்கும் போதெல்லாம், இந்த செல்வங்கள் யாவும் அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின்படி எனக்கு கிடைத்தவை ஆகும் என்றும் அல்லாஹ்வைத் தவிர இவற்றைப் படைக்கும் பேராற்றல் உடையவன் வேறு யாரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, அவன் கட்டளைப் படி நீ செயல்பட வேண்டும்” என்றே நான் விரும்புகிறேன். “தற்சமயம் என்னிடம் உள்ள செல்வமும் ஆட்பலமும் உன்னைவிட குறைவாக இருக்கின்றன என்பதற்காக என்னுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்துவிடாதே” என்றார்.

فَعَسَىٰ رَبِّىٓ أَن يُؤْتِيَنِ خَيْرًۭا مِّن جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصْبِحَ صَعِيدًۭا زَلَقًا.

18:40. உன்னுடைய தோட்டத்தை விட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும், (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் முழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
விளக்கம்:
“வரவிருக்கும் காலத்தில் எனக்கு உன்னைவிட சிறந்த தோட்டங்களை இறைவன் கொடுக்கவும் செய்யலாம். அல்லது உன்னுடைய தோட்டங்களை இடி மின்னல்கள் போன்றவற்றால் அழிக்கவும் செய்யலாம்”

أَوْ يُصْبِحَ مَآؤُهَا غَوْرًۭا فَلَن تَسْتَطِيعَ لَهُۥ طَلَبًۭا.

18:41. அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக் கண்டுபிடிக்க முடியாத படியும் ஆகிவிடலாம்" என்று கூறினான்.
விளக்கம்:
“அல்லது நீரோடைகள் காய்ந்து தண்ணீர் இரைக்க முடியாதபடி பூமிக்குள் ஆழமாகச் செல்லவும் செய்யலாம். அதாவது பஞ்சக் காலமும் ஏற்படலாம்”
“அப்படிப்பட்ட கால கட்டம் ஏற்படும் போது, உன்னால் என்ன செய்ய முடியும்? எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டு வா” என அறிவுரை செய்து வந்தார். ஆனால் அவனோ இவருடைய அறிவுரையை ஏற்கவில்லை. அவர் கூறியவாறே அந்த அழிவும் ஏற்பட்டுவிட்டது.

وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُشْرِكْ بِرَبِّىٓ أَحَدًۭا.

18:42.அவனுடைய விளை பொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இருகைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!" என்று கூறினான்.
விளக்கம்:
அவ்வாறே அவனுடைய விலை மதிப்பற்ற பொருட்கள் அழிந்து போயின. அதற்காக, தான் செலவு செய்து உழைத்து வந்தவை எல்லாம் பலனற்றுப் போயிற்றே என தன் கையை பிசைந்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அந்த அளவுக்கு அத்தோட்டம் வேரோடு அழிந்து போய் இருந்தது. அந்தத் தருணத்தில் அவன், “என் இறைவனின் கட்டளைக்கு இணையாக வேறெதையும் பின்பற்றாமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று புலம்பினான்.

وَلَمْ تَكُن لَّهُۥ فِئَةٌۭ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا.

18:43. மேலும் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை, ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
விளக்கம்:
ஒரு பக்கம் அவனிடமிருந்த ஆட்பலமும் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மறுபக்கம் அவனுடைய செல்வமும் அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை. மிஞ்சி இருந்தது அல்லாஹ்வின் சட்டம் மட்டும்தான்.

هُنَالِكَ ٱلْوَلَٰيَةُ لِلَّهِ ٱلْحَقِّ ۚ هُوَ خَيْرٌۭ ثَوَابًۭا وَخَيْرٌ عُقْبًۭا.

18:44. அங்கே உதவி செய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது. அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன், முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
விளக்கம்:
அல்லாஹ்வின் அந்த சட்டங்களின் மூலம்தான் அவனுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழிகள் கிடைக்கும். அதை விட்டால் அவனுக்கு வேறு எந்த வழியும் கிடைக்காது. ஏனெனில் மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் என்ற சட்டம் எப்போதும் செயல்பட்டு வரும். அதன்படி அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்கள் நிச்சயமாக கிடைத்து வரும். ஆக இப்படி ஒரு செயல்திட்டத்தை ஏற்படுத்த அல்லாஹ் எடுத்த முடிவு எப்போதும் மேலோங்கியே நிற்கும்.

சிந்தனையாளர்களே! மேற்சொன்ன விஷயம் ஏதோ ஒரு ஊரில் நடந்து முடிந்த கதை என்று எண்ணி, அதைப் பற்றி வியாக்கியாணம் பேசிக் கொண்டிராதீர்கள். இது ஒரு உதாரணமே ஆகும். அதாவது ஒரு சமுதாயமோ அல்லது நாடோ அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துச் சொல்பவர் ஏழையா பணம் படைத்தவரா என்பதை பார்க்கக் கூடாது. இதை வைத்து அவர் செய்யும் அறிவுரைகளை ஏற்காமல் தம் மனோ இச்சைப்படி செயல்படும் போது, அவர்களுக்குக் கிடைக்கின்ற நிம்மதியான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பறிபோய் விடுகிறது என்பதையே அந்த தோட்டமும் தோட்டக்காரனின் சுயநலப் போக்கின் உதாரணத்தைக் கொண்டும் விளக்கப்படுகிறது. இது இறைவன் ஏற்படுத்திய உலக நியதியாகும். இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. இப்படிப்பட்ட அழிவுகள் ஏற்படுவது நூற்றாண்டுகள் என்ற அடிப்படையில் தான் நிகழும். எனவே வளர்ந்து முன்னேறிய நாடுகள் பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இல்லையெனில் முன்னேறிய நாடுகள் அழிவைச் சந்திக்கும்.
எனவே மேற்சொன்ன வாசகங்களில் தோட்டக்காரரை, சமுதாய மக்களுக்கு உவமானமாகவும், தோட்டத்தை நிம்மதியான சந்தோஷங்கள் நிறைந்த சமுதாயத்திற்கு உவமானமாகவும் வைத்துப் பார்த்தால், உண்மை என்னவென்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.


22.சமுதாயங்களின் இழி நிலை:

وَلَوْ شِئْنَا لَرَفَعْنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.

7:176.நம் நாட்டப்படி அவர்கள் செயல்பட்டிருந்தால், நம் வழிகாட்டுதல்களைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம், எனினும் அவன் இவ்வுலக வாழ்வை (யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான், அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு உதாரணமாகும். ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
விளக்கம்:
உலகிலுள்ள சமூகத்தவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டால், அவர்கள் மிகவும் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்களோ வாழ்வின் உயர் இலட்சியங்களுக்குப் பதிலாக தற்காலிக சொகுசு வாழ்வின் பக்கமே சாய்ந்து, தம் மன இச்சைக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி, பிடுங்கித் தின்னும் நாய்களைப் போன்று தாழ்ந்து போகிறார்கள்.
நாய்களை நீங்கள் விரட்டினாலும் விரட்டாவிட்டாலும் அவை நாக்கைத் தொங்கவிட்டு திருப்தியடையாமல் அலையும். அதுபோன்று அவர்களுக்கு மனநிறைவு என்று ஒருபோதும் ஏற்படுவதில்லை. இதனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு கலகம், கலவரம் மூண்டு அழிந்து போகிறார்கள். ஆக இறைவழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் பொய்யெனக் கூறி தம் மனஇச்சைப் படி நடக்கும் சமுதாயத்தவர்களுக்கு இதுவே ஒரு முன் உதாரணமாகும். ஆகவே உலக மக்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இந்த வரலாற்றுச் சான்றுகளை உதாரணமாக மேற்கோள்காட்டி எடுத்துரையுங்கள்.

سَآءَ مَثَلًا ٱلْقَوْمُ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمْ كَانُوا۟ يَظْلِمُونَ.

7:177.நம்முடைய வசனங்கைளப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும், அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
விளக்கம்:
மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் எல்லாம் சரி வராது எனக் கூறி, தம் மன இச்சையின் படி செயல்படும் சமுதாயங்களின் உதாரணம், மிகவும் கெட்டதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக அப்படிப்பட்டவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்களே அன்றி அல்லாஹ் அவர்களுக்கு அணுவளவும் அநியாயம் செய்வதில்லை (பார்க்க 4:40)


23.நரகத்திற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்?

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ.

7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்று படைத்துள்ளோம், அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள், அவர்களுக்கு கண்கள் உண்டு, ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சி களைப்) பார்ப்பதில்லை, அவர்களு க்குக் காதுகள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற் போதனைகளைக்) கேட்க மாட்டார்கள் -இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள், இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்கள்.
விளக்கம் :
இத்தகையவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தால், நரகத்திற்கென்றே படைக்கப்பட்டவர்கள் போல் காணப்படுவார்கள். அவர்கள் யார்?
(1) உலகில் வாழும் நகர்ப்புற மக்களும் சரி கிராமவாசிகளும் சரி. அவர்களுக்குச் சிந்தனா சக்திகள் இருந்தும், அவற்றைக் கொண்டு நல்லுணர்வு பெற நாடுவதில்லை.
(2) அவர்களுக்குக் கண்கள் இருந்தும், அவற்றைக் கொண்டு உலகில் நடைபெற்று வரும் அநியாயத்தைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை.
(3)அவர்களுக்கு காதுகள் இருந்தும், அவற்றைக் கொண்டு இறைவனின் அறிவுரைகளைக் கேட்கவும் நாடுவதுமில்லை.
(4) இத்தகையவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களே ஆவர். இல்லை. அவையாவது தம் இயல்பின் அடிப்படையில் சிறப்பாக வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு அதுவும் கிடையாது. எனவே இவர்கள் அவற்றைவிட மோசமானவர்கள். இத்தகையவர்களே இறைவழிகாட்டுதலில் அலட்சியம் செய்து நரகத்திற்காகவே பைடக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍۢ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍۢ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ.

14:18. எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது: அவர் களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை, புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விடும் (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது, இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.
விளக்கம் :
யாரெல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதற்கு மாறு செய்கிறார்களோ, அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் எரிந்து சாம்பல் போலாகிவிடும். அந்தச் சாம்பல் ஒரே ஒரு காற்றில் பறந்தோடி விடுவது போல் இவர்களுடைய உழைப்புகள் எல்லாம் இவ்வுலகில் நிலையான பலன்களை ஒருபோதும் தராது. அப்படி ஒரு கால கட்டத்தில் அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வங்கள் எதுவும் அவர்களுக்குப் பயன் தராது. இப்படி ஒரு நிலை ஏற்படுவதே வழிகேட்டில் வெகு தூரம் சென்றதற்கு உண்மையான அர்த்தமாகும்.


24.சமுதாயங்களின் அழிவு:

أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٌۭ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَابٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلْكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٌۭ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعْصَارٌۭ فِيهِ نَارٌۭ فَٱحْتَرَقَتْ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ.

2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது, அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன, அதில்அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன, (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது, அவருக்கு (வலுவில்லாத) பலகீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்) தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகிறது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கு கின்றான்.
விளக்கம் :
ஒருவரிடம் பேரீச்ச மரங்களும் திராட்சைக் கொடிகளும் கொண்ட தோட்டம் ஒன்று இருக்கிறது. அதன் பக்கமாக நீரோடைகள் ஒலித்து ஓடுகின்றன. அதில் எல்லா வகையான கனி வர்க்கங்களும் விளைகின்றன. முதுமை அடைந்த அவருக்கு, அறியா வயதில் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையில், அனல் பறக்கும் சூறாவளிக் காற்று வந்து அந்தத் தோட்டத்தை நாசமாக்கிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவருக்கு எந்த அளவிற்கு வேதனையும் துக்கமும் ஏற்படும்? அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காகத் தான் இந்த உதாரணங்கள் தரப்படுகின்றன. அது போல நீங்கள் காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த சமுதாய அமைப்பு அழிந்து போவதை விரும்புவீர்களா? அல்லது நீங்கள் பாதுகாத்து வந்த சொத்துச் செல்வங்கள் அழிவதை விரும்புவீர்களா? அப்படி அழியாமல் இருக்கத் தான் இறைவழிகாட்டுதல் அளிக்கப்படுகின்றன. அதன்படி சமுதாய சமச் சீர்நிலையை பாதுகாத்து வாருங்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் அமைப்பு ஏற்படுத்தி அதற்கு உதவி செய்து வாருங்கள். அப்போது தான் சமூக சீர்கேடுகளின் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையெனில் சமுதாய அழிவுக்கு என்ன காரணம் என்பதை வருங்காலத்தில் வரும் இளைஞர்களுக்குத் தெரியாமலே போய்விடும். இதனால் காலப் போக்கில், வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டு அவர்களே மென்மேலும் அழிவு ஏற்படுத்துவதற்குக் காரணமாகி விடுவார்கள்

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۖ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۚ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

3:116. நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களை விட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ் விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
விளக்கம்
இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், தம் அழிவினைத் தாமே தேடிக் கொள்கிறார்கள். அந்த அழிவுகள் ஏற்படும்போது, அவர்களுடைய செல்வங்களோ பிள்ளைகளோ அதிலிருந்து காப்பாற்ற முடிவதில்லை. இப்படியாக அவர்களுடைய தற்காலிக உலக வாழ்வும், வருங்கால நிலையான (மறுமை) வாழ்வும் துயர் மிக்கதாய் ஆகிவிடுகிறது. அதிலிருந்து மீள்வதற்கு எந்த வழிமுறையும் இருப்பதில்லை.

مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍۢ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍۢ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும், அது (மிகவும்) குளிர்ந்து (பனிப் புயலாக மாறித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில் பட்டு அதை அழித்து விடுகிறது -அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை, அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.
விளக்கம்:
எந்த ஒரு முன் யோசனையுமின்றி சொகுசான வாழ்விற்காக செல்வத்தைக் குவித்து செலவழிப்பவர்களின் உதாரணம் அவ்வப்போது அடிக்கும் புயல் காற்றுக்கு ஒப்பானதாகும். அதாவது தற்காலிக சந்தோஷங்கள் மட்டும் கிடைத்து விடுகின்றன. ஆனால் காலப்போக்கில் அதுவே சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, கலகம், கலவரம் எனப் புயலாக மாறி அழிவு ஏற்படுத்திவிடும்.அப்போது, அதிலிருந்து மீள எந்த வழிமுறையும் இருப்பதில்லை. இப்படியாக அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்களே அன்றி அல்லாஹ் ஒருபோதும் தீங்கிழைப்பதில்லை.

إِنَّمَا مَثَلُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ مِمَّا يَأْكُلُ ٱلنَّاسُ وَٱلْأَنْعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلْأَرْضُ زُخْرُفَهَا وَٱزَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَآ أَنَّهُمْ قَٰدِرُونَ عَلَيْهَآ أَتَىٰهَآ أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًۭا فَجَعَلْنَٰهَا حَصِيدًۭا كَأَن لَّمْ تَغْنَ بِٱلْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

10:24.இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழை நீரைப் போன்றது,(அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன, முடிவில் பூமி (அந்தப் பயிர்கள் மூலம்)தன் அலங்காரத்தைப் பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள் (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருந்தனர், அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்.

விளக்கம்: ஆக தற்காலிக சுக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழும் சமுதாயத்தை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
(1) இறைவனின் நியதிப்படி வானிலிருந்து மழை பொழிகிறது. அதைக் கொண்டு மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. பல வகையான பயிர்களும் விளைகின்றன. இப்படியாகப் பூமி பசுமை நிறைந்ததாய் அழகாகக் காணப்படுகிறது.
(2) அந்நிலத்தின் சொந்தக்காரர்கள் அதன் விளைச்சல்கள் யாவும் தமக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தார்கள். அச்சமயம் அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாய் இரவிலோ பகலிலோ இறைவனின் நியதியின்படி சூறாவளிக்காற்று, புயல், வெள்ளம் போன்றவற்றால் அழிந்து, இதற்குமுன் அங்கு எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
(3) அப்போது அவர்களின் மனவேதனை எவ்வாறு இருக்கும்? இவ்வாறே சிந்தனைச் செய்யும் மக்களுக்கு இதுபோன்ற உதாரணங்களின் மூலம் நடக்கவிருக்கும் உண்மைகள் விளக்கப்படுகின்றன.
(4) காலம் காலமாக உழைத்து முன்னேற்றம் அடைந்த நாடுகள், தற்காலிக் சுக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு சுயநலத்துடன் வாழ்ந்தால், அங்கு தீயச் செயல்களும், அவற்றின் விளைவுகளும் கூடவே வளர்ந்து வரும். அத்தீய செயல்களின் விளைவாக எதிர்பாராத விதமாக சண்டை சச்சரவு, கலவரம் மற்றும் போர் போன்றவை ஏற்பட்டு அந்த நாடே அழிந்து போகும். அப்போது அவர்களுக்கு எந்த அளவிற்கு மனவேதனை எற்படும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படியொரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே தற்காலிக சுகமான வாழ்வுடன் வருங்கால நிலையான பலன்களையும் நோக்கமாகக் கொண்டு வாழ இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. (மேலும் பார்க்க 2:266)

أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ.

7:185.வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருட்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய தவணை நெருங்கியிருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்க வில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப் போகிறார்கள்?
விளக்கம்:
பிரபஞ்சப் படைப்புகளையும் பூமியையும் அவற்றில் படைக்கப்பட்டுள்ள எண்ணற்ற படைப்புகளையும் மக்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லையா? அங்கு எல்லாமே முறைப்படி நடந்து வருவதைக் கவனிப்பதில்லையா? ஒரு விதை செடியாகி மரமாக வளர்ந்து காய்ப்பதற்கு காலஅளவு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது போல் ஒவ்வொரு படைப்பும் வளர்ந்து இறுதி இலக்கை அடைய காலஅளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா?
அதே போல மனித செயல்களுக்கும் விளைவுகள் தோற்றத்திற்கு வர காலஅளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டாமா? இந்த அளவிற்குத் தெளிவாக எடுத்துரைத்தும், வேறு எந்தப் பேச்சை (ஹதீஸை) இவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?

وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا قَرْيَةًۭ كَانَتْ ءَامِنَةًۭ مُّطْمَئِنَّةًۭ يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًۭا مِّن كُلِّ مَكَانٍۢ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ.

16:112. மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாததும், நிம்மதியுடனும் இருந்தது. அதன் உணவு(மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது, ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்)செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்கு மாறு செய்தான்.
விளக்கம் :
ஓர் ஊரில் எல்லோரும் அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் வாழ்வாதாரங்கள் யாவும் தாராளமாகக் கிடைத்து வந்தன. ஆனால் காலப்போக்கில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ தவறிவிட்டனர். அதாவது அனைத்து தரப்பு மக்களுக்கும் சேர வேண்டிய வாழ்வாதாரங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் அச்சமுதாயத்தில் பசியின் கொடுமையும், பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் ஆபத்துகளின் பயமும் நாலாப்புறமும் சூழ்ந்து கொண்டன. இப்படியாக சிறப்பாக வாழ்ந்து வந்த அச்சமுதாயம் சீரழிந்து வேதனைக்குள் ஆனது.

وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ.

16:113. இன்னும்விட நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறைத்)தூதர் வந்தார், ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர், ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது.
விளக்கம் :
இத்தகைய ஏற்றத் தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரி செய்து சமுதாயத்தை சீரமைக்க, இறைத்தூதர் ஒருவர் அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்தார். அவர் சமுதாயத்தினரை திருத்த அறிவுரைகளை செய்து வந்தார். அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்து வந்தார். ஆனால் அவருடைய அறிவுரைகளை அந்த அநியாயக்காரர்கள் ஏற்கவில்லை. எனவே அவர்கள் அநியாயம் செய்து வந்ததன் காரணமாக அவர்களிடம் வேதனைகள் வந்தடைந்தன.

فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ.

16:114.(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இந்த உதாரணத்தின் மூலம் படிப்பினை பெறுங்கள். நீங்கள் அவ்வாறு அநியாயமாகச் செயல்படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி நியாயமான முறையில் வாழ்வாதார பங்கீட்டு முறையை கடைப்பிடித்து நீங்களும் உங்கள் பங்கிற்கு பெற்று கொள்ளுங்கள். இப்படியாக நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
நபித்துவத் தொடர் முற்று பெற்றுவிட்டதால் (பார்க்க 33:40) இந்தக் கால கட்டத்தில் நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் அவர்கள் செயல்படுத்திக் காட்டிய குர்ஆனின் வழியில் நாமும் செயல்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட முடியும்.


25.ஆற்றல்களை இழந்து இறந்து கிடக்கும் சமுதாயம்:

أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍۢ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍۢ ثُمَّ بَعَثَهُۥ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍۢ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍۢ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةًۭ لِّلنَّاسِ ۖ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًۭا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன, (இதைப் பார்த்து அவர்) இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்? என்று (வியந்து) கூறினார், அல்லாஹ் அவ்வூரை நூறாண்டுகள்வரை இறந்து போகும்படிச் செய்தான், பின்னர் அவ்வூரை உயிர் பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்கள்?" என்று அவரைக் கேட்டதற்கு, ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்:“ இல்லை! நீங்கள் (இந்நிலையில்) நூற்றாண்டுகள் இருந்தீர்கள்! இதோ பாரும். உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும், (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடைய வில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும், உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சி ஆக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச்) செய்கிறோம், இன்னும் எலும்புகளைப் பாரும், அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம், பின்னர் அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக் கூறி (அதனை உயிர் பெறச்செய்தான் - இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்றார்.

விளக்கம்:

இறைவழிகாட்டுதல் இன்றி வாழும் சமுதாயங்களின் நிலையை ஓர் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். பாழடைந்த ஒரு கிராமத்தின் வழியாக ஒருவன் செல்கின்றான். அதில் வீடுகளும் இடிந்து கிடக்கின்றன. இப்படியாக அவ்வூர் செத்து மடிந்து கிடக்கிறது. இதை எவ்வாறு சரி செய்து மீண்டும் உயிர் பெறச் செய்வது என்று எண்ணி அவன் அதைக் கடந்து சென்று விடுகிறான். அதன்பின் அல்லாஹ்வின் நியதிப்படி அவ்வூர் நூறு ஆண்டுகள் வரையில் மடிந்தே கிடக்க நேர்கிறது.
அவ்வூராரிடம் எத்தனை ஆண்டுகளாக இப்படி வாழ்கிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் காலமாகத் தான் இப்படி வாழ்ந்து வருகிறோம் என்கிறார்கள். இல்லை. அவ்வூர் நூறு ஆண்டுகளாக இப்படித்தான் மடிந்து கிடக்கிறது. ஆனால் உங்கள் உணவு மற்றும் பானங்கள் விஷயங்களில் எவ்வித மாறுதலும் இல்லை. காரணம் மனிதன் உயிர்வாழ அவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுபோலவே போக்குவரத்து சாதனங்களும் நிலைத்து நிற்கின்றன. இதை உவமானமாக வைத்து உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.
மேலும் மனித படைப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் கவனியுங்கள். முறைப்படி எலும்புகளின் சேர்க்கை, அவற்றின் மேல் சதை என்று எல்லா அங்கங்களும் ஒன்றிணைந்தால் தான் மனிதன் என்று உருவம் பெற முடியும். ஆக இந்த எடுத்துக்காட்டைக் கொண்டு உண்மை விளங்கிய போது, அவன் நிச்சயமாக எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் பேராற்றலும் அளவிலா வல்லமையும் மகத்தானவை என்பதையும் அறிந்துகொண்டான்.
அதாவது எலும்பும் சதையும் தனித்தனியே இருந்தால், மக்கிப் போன எலும்புகளும் பாழடைந்த சதைகளும் தான் மிஞ்சும். அது போல ஊர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் செழிப்பான சமுதாயமாக உருவாக்க முடியும். தனித்தனியே அவரவர் சுயநலப் போக்கின்படி வாழ்ந்தால் அந்த ஊரும், ஊர் மக்களும் நடைபிணங்களாகத் தான் வாழ்ந்து அழிந்து போவார்கள்.
ஆக திசை மாறிச் செல்லும் இவ்வுலகத்தைப் பார்த்து, நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி காலத்தைக் கடத்தி விட்டால், இவ்வுலகம் காலம் காலமாய் அப்படியே அழிவை நோக்கியே சென்று விடும். இறை வழிகாட்டுதலின் உண்மைநிலை அறிந்தவர்கள், இங்குள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கி சமுதாயச் சமர்ச் சீர்நிலை உருவாகப் பாடுபட வேண்டும் என்பதே இந்த உதாரணத்தின் மூலம் கிடைக்கின்ற படிப்பினை ஆகும்.

وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ.

16:65. இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான். நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.
விளக்கம் :
எவ்வாறு அல்லாஹ் வானிலிருந்து மழை பொழிய வைத்து, அதன்மூலம் உயிரற்று இறந்து கிடக்கும் பூமியை உயிர்பெறச் செய்து செழிப்பாக ஆக்குகின்றானோ, அவ்வாறே இந்தக் குர்ஆன் மூலமாக ஆற்றலின்றி நடைபிணமாக வாழும் சமுதாயத்தை, புத்துயிர்ப் பெறச்செய்து அனைத்து வளங்களுடன் சிறப்பாக வாழும் வழியை காட்டுகிறான். இவ்வாறே அல்லாஹ்வின் அழைப்பை செவிசாய்க்கும் மக்களுக்கு இதில் தக்க அத்தாட்சி கிடைத்துவிடுகிறது.

وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةًۭ ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍۢ وَدَمٍۢ لَّبَنًا خَالِصًۭا سَآئِغًۭا لِّلشَّٰرِبِينَ.

16:66. நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால் நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
விளக்கம் :
இறைவன் படைத்துள்ள கால்நடைகளைப் பற்றி கவனித்துப் பாருங்கள். அவற்றிலும் உங்களுக்குப் பலப் படிப்பினைகள் கிடைக்கும். அவை உண்ணும் தீனிகள் வயிற்றில் ஜீரணித்த பின், சாணமாகவும் இரத்தமாகவும் பிரிந்து விடுகின்றன. இவ்விரண்டிற்கும் இடையே பரிசுத்தமான அருசுவைப் பாலும் உருவாகிறது.
சமுதாயத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். இறைவழிகாட்டுதல் என்ற ஊட்டச் சத்தை இவர்களுக்கிடையில் ஊட்டினால், மாசற்ற பால் உருவாவது போல், பரிசுத்தமான பலனளிக்கக் கூடிய உத்தமர்களை உருவாக்கலாம். பால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனுள்ளதாக விளங்குவது போல, இந்த உத்தமர்கள் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வை சிறப்பிக்க முன்வருவார்கள்.

وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًۭا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

16:67. பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள், நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

விளக்கம் :

இறைவனின் படைப்புகளான பேரீச்சை, திராட்சைப் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றைக் கொண்டு போதை அளிக்கும் மதுவும் உருவாகிறது. நல்ல ஆரோக்கியமளிக்கும் ஆகாரமாகவும் அவை விளங்குகின்றன. நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சிகள் பல கிடைக்கும். அதாவது பூமியில் விளையும் பழங்களை தக்க முறையில் பாதுகாத்து, நேர காலத்தோடு பயன்படுத்தினால், அவை மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக விளங்கும். அவற்றை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டால் அது அழுகிவிடும். அந்த அழுகல்களைக் கொண்டு மது பானங்களைத் தான் தயாரிக்க முடியும். அல்லது அவற்றை குப்பையில் தான் வீசி எறியவேண்டி வரும்.
அதுபோலவே உலகில் பிறக்கும் குழந்தைகளை நன்றாக வளர்த்து இறைவனின் வழிகாட்டுதலை அந்தந்த நேரத்தில் அவர்களுக்கு ஊட்டி சீராக வளர்த்தால், அவர்கள் சமுதாயத்திற்கு நன்மை பயப்பவர்களாக உருவாகி வருவார்கள். அப்படி எல்லாம் செய்யாமல் அவர்களாகவே வளரட்டும் என்று எண்ணி எந்த கல்வியையும் நேரக் காலத்தோடு அளிக்காமல் விட்டுவிட்டால், சமுதாயத்தில் அவர்கள் தீமை செய்பவர்களாக மாறி விடுவார்கள். அதன்பின் அவர்களை சிறைச்சாலை அல்லது நரகம் என்ற குப்பையில்தான் தள்ளவேண்டி வரும்.

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌۭ.

22:61 அது (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான், பகலை இரவில் புகுத்துகிறான், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
எவ்வாறு இருள் சூழ்ந்த நிலை மாறி வெளிச்சம் ஏற்படுகிறதோ, மேலும் எவ்வாறு வெளிச்சத்துடன் இருக்கும் பகலை இருள் சூழ்ந்து கொள்கிறதோ, அவ்வாறே அக்கிரமம் செய்யப்பட்டவர்களுக்கு விடுவுகாலம் பிறக்கும். அக்கிரம் செய்பவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்ளும். ஆக உலகில் நிகழந்து வரும் அனைத்து விஷயங்களையும் கேட்கும் வல்லமையும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டால் நசுக்கப்பட்டவர்களுடைய துயரங்கள் நீங்கி அவர்களுக்கு விடுவுக்காலம் பிறக்கும். இல்லாவிட்டால் காலா காலத்திற்கு சமுதாயம் இருளிலேயே மூழ்கிக் கிடக்கும்.

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَتُصْبِحُ ٱلْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌۭ.

22:63.நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான், அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன், நன்கறிந்தவன.
விளக்கம் :
இறைவனின் செயல்திட்டப்படி வானிலிருந்து மழை பொழிவதை நீங்கள் பார்ப்பதில்லையா? அந்த மழை நீரைக் கொண்டு வறண்ட பூமி பசுமையாகி விடுவதை நீங்கள் கவனிப்பதில்லையா?
அதுபோலத் தான் ஆற்றலின்றி வாடி வதங்கிப் போயிருக்கும் சமுதாயத்தை, புதுப் பொலிவுடன் வாழ இறைவழிகாட்டுதல்கள் வழிவகுக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் மிகமிக நுணுக்கத்துடன் செயல்படக் கூடியவையாக உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


26.முன்னோர்களை வழிபடுபவர்களின் நிலை:

وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءًۭ وَنِدَآءًۭ ۚ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَعْقِلُونَ.

2:171 அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்: ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப) வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாத (கால்நடை) போன்றவர்கள், அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர், அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து மூதாதையர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோருக்கு ஓர் எடுத்துக்காட்டு கூறலாம். ஆடு மாடுகளை மேய்ப்பவனின் கூச்சலும் கூப்பாட்டையும் போன்றதே அவர்களுடைய பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் இருக்கும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் கேட்க இயலாது.
அந்த ஆடு மேய்ப்பவனுக்கும் அவன் உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாது. அந்த ஆடுகளுக்கும் தெரியாது. அதுபோலத் தான் இவர்களும்.
இத்தகையவர்கள் தாம் செவிடர்களாகவும், ஊமைகளாகவும், குருடர்களாகவும் இருப்பவர்கள் ஆவார்கள். அவர்களிடம் வரும் நற்போதனைகளை அவர்கள் விளங்கிக் கொள்ளவே மாட்டார்கள். (பார்க்க 7:179). எனவே அவர்களுடைய செயல்களின் தீய விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் எல்லாமே வெட்ட வெளிக்கமாகிவிடும். அப்போது

وَقَالُوا۟ رَبَّنَآ إِنَّآ أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠.

33:67.“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
விளக்கம்:
அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் பெரியார்களுக்கும் வழிப்பட்டோமே! ஆனால் அவர்களோ எங்களை வழிகெடுத்து விட்டார்களே!” என்று அவர்கள் குரல் தெரிக்க கத்திக் கொண்டிருப்பார்கள்.

رَبَّنَآ ءَاتِهِمْ ضِعْفَيْنِ مِنَ ٱلْعَذَابِ وَٱلْعَنْهُمْ لَعْنًۭا كَبِيرًۭا.

33:68“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பார்கள்)
விளக்கம்:
மேலும் அவர்கள், “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த எங்கள் தலைவர்களை இருமடங்கு வேதனை அளிப்பாயாக. அவர்களை நரகத்திலேயே மிக மோசமான பாழ்குழியில் தள்ளி வேதனை அளிப்பாயாக!” என்று கதறுவார்கள்.
ஆக இப்படிப்பட்ட கேவலமான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், இறைவழிகாட்டுதலின்படி முழு மூச்சுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். திருக்குர்ஆனின் போதனைகளை மட்டும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஆனால் மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களின் நிலைமை இதோ:

إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَٰقِهِمْ أَغْلَٰلًۭا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ.

36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம். ஆகவே, அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
விளக்கம்:
குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்டது போல், அவர்களுடைய கழுத்துகளில் தாடைவரையில் சடங்கு சம்பிரதாயங்களின் விலங்குச் சங்கிலிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களால் முன்னோர்களின் வழிபாட்டைத் தவிர, வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.


27.கானல் நீர்:

وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَعْمَٰلُهُمْ كَسَرَابٍۭ بِقِيعَةٍۢ يَحْسَبُهُ ٱلظَّمْـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمْ يَجِدْهُ شَيْـًۭٔا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥ ۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ.

24:39.அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும், தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எதுவரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒருபொருளையும் (அங்கே) காணமாட்டானே (அதுவரை), ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான், (அதன்படி அல்லாஹ்); அவன் கணக்கைத் தீர்க்கிறான், மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
விளக்கம்:
எந்தச் சமுதாயம் வானுலக ஒளியாக இருக்கும் இறை வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, அதற்கு மாற்றமாகச் செயல்படுமோ, அவர்களுடைய செயல்களின் பலன்கள் திறந்த வெளியில் தென்படும் கானல் நீரைப் போன்றதாக இருக்கும். தாகமுள்ளவன் அந்தக் கானல் நீரைப் பார்த்து, தண்ணீர் என நினைத்து அதன் பக்கம் விரைவதுபோல, இவர்கள் செய்து வரும் செயல்கள் யாவும் நன்மையானவை என்று நம்பி அவற்றின் பலன்களை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். அவன் அந்த கானல் நீரின் பக்கம் வரும்போது, அங்கு ஒன்றுமில்லாததைக் காண்பது போலவே அவர்கள் எதிர் பார்க்கும் பலன்கள் ஒருபோதும் கிடைக்கவே கிடைக்காது. இப்படியாக ஒவ்வொரு செயலின் விளைவுகளை ஏற்படுத்தும் விஷயத்திலும் அல்லாஹ்வின் கணக்கு வழக்கு ஒருபோதும் தவறாது. இப்படியாக ஒவ்வொருவருடைய செயல்களின் விளைவுகளும், அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைப்படியே ஏற்படுவதைக் காண்பான்.

أَوْ كَظُلُمَٰتٍۢ فِى بَحْرٍۢ لُّجِّىٍّۢ يَغْشَىٰهُ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ سَحَابٌۭ ۚ ظُلُمَٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَآ أَخْرَجَ يَدَهُۥ لَمْ يَكَدْ يَرَىٰهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُۥ نُورًۭا فَمَا لَهُۥ مِن نُّورٍ.

24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும், அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை, அதற்கும் மேல் மேகம் (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது, எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்த வில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
விளக்கம்:
அத்தகைய சமூகத்தவர்களின் வாழ்வு இருளில் மூழ்கி சூனியம் ஆகிவிடுகிறது. எவ்வாறு ஒருவர் ஆழ்கடல் இருளில் மூழ்கித் தத்தளிக்கிறானோ, அது போல அத்தகைய சமுதாயங்களில் பிரச்சனைகள் பல ஏற்பட்டு அதற்குத் தீர்வு காணமுடியாமல் தத்தளித்து வரும்.
அது மட்டுமின்றி அவரை அந்தக் கடல் அலைகள் இழுத்துச் சென்று, மூழ்கடித்து, அலைக்கு மேலும் அலைகளும் அதன்மேல் மேகங்களும் அவனை இருளில் தத்தளிக்க வைப்பது போல, சமுதாயத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளும், அவற்றைத் தீர்த்துவைக்க முயன்றால் அந்தத் தீர்வுகளால் மேலும் பல சிக்கல்களும் ஏற்பட்டு வரும். (மேலும் பார்க்க 2:17-20) எவ்வாறு இத்தகைய இருளில் சிக்கித் தவிப்பவன் தன் கைகளை வெளியே நீட்ட முடியாதோ அல்லது தன் கையை வெளியே நீட்டினாலும் அதைப் பார்க்க முடியாதோ, அவ்வாறே சமுதாய சிக்கல்களுக்கு ஒருபோதும் நிலையான தீர்வைக் காணவே முடியாது. இதுவே அல்லாஹ்வின் பேரொளியாக இருக்கும் இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழும் சமுதாயங்களின் இழிநிலையாகும்.

சட்டம் ஒழுங்கு என்பது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமையாகும். யார் அதை விட்டுத் தவறிப் போனாலும் சீர்கேடுகள் ஏற்படும். அதுபோல மீனவ இனத்திலும் சட்ட ஒழுங்கு இருந்து வந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.


28.குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாறிப்போனவர்கள்?

وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ.

2:65.உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்" என்று கூறினோம்.
விளக்கம்:
வருடத்தில் சிலகாலம், மீன் பிடிக்கத் தடை உத்தரவு இருந்து வந்தது. அந்தத் தடை உத்தரவை மீறி நடக்கவே, அவர்களிடையே சண்டை, போட்டி, பொறாமையும் வளர்ந்து குரங்குகள் போன்ற குணங்கள் ஏற்பட்டு, சிறுமை அடைந்தோராய் மாறிப் போனார்கள். வரலாற்றின் இந்த உண்மை உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதுவும் அல்லாஹ்வின் நிரந்தர சட்டமாகும். (மேலும் பார்க்க 7:167)

قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّۢ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِ ۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ ٱلْقِرَدَةَ وَٱلْخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَ ۚ أُو۟لَٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ.

5:60.அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் -அவர்கள் தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர், நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம்:
“அல்லாஹ்வின் நியதிப்படி மனித செயல்களின் விளைவாக மிக மோசமான நிலைக்கு ஆளான சமூகத்தவர்களைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் முன்னோர்களின் வரலாறே இதற்கு ஆதாரமாக உள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறிச் செயல்பட்டதால், எல்லா அருட்கொடைகளையும் சுமூகமான சூழ்நிலையும் இழந்து தவிப்புக்குள்ளாயினர். இதனால் மனிதத் தன்மைகள் அவர்களை விட்டு போய்விட்டன. அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் குரங்குகள் மற்றும் பன்றிகளின் குணங்கள் போன்று தாழ்ந்து விட்டது. (பார்க்க 2:65) அவர்கள் அனைவரும் தம் மனோ இச்சையையே பின்பற்றலானார்கள். நேரான வழியிலிருந்து தவறிச் சென்றவர்களின் நிலை இப்படியாகத் தான் நாளுக்கு நாள் தாழ்ந்து போய்விடும். அப்படி ஒரு நிலை உங்களுக்கும் ஏற்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.

وَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًۭا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.

7:163 (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள் ஆக்கினோம்.
விளக்கம்:
கடலோரம் வாழ்ந்த மீனவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பதை அவர்களிடம் நீர் கேளும். அவர்களிடையே வருடத்தில் சில நாட்கள், மீன் பிடிக்கத் தடை உத்தரவு இருந்து வந்தது. ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடை உத்தரவை மீறி, மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்களும் தம் இனப் பெருக்கத்திற்காக இயல்பாகவே கடலின் மேல்பரப்பிற்கு வந்து துள்ளி விளையாடும். மற்ற காலங்களில் அவ்வாறு வருவதில்லை. இதனால் அந்தத் தடை உத்தரவு இருந்து வந்தது.
இதை அறிந்த அம்மீனவர்கள் தடை உத்தரவை மீறி, மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். எனவே அங்குள்ள அனைவரும் கட்டுப்பாட்டை மீறி நடக்கவே, மற்ற விஷயங்களிலும் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதனால் அவர்கள் குரங்குகள் மற்றும் பன்றிகளின் குணங்கள் போன்று தரங்கெட்டுப் போனார்கள். (பார்க்க- 2:65,4:47,5:60 &16:124)

وَإِذْ قَالَتْ أُمَّةٌۭ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ.

7:164.(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்தக் கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள், அதற்கு (அந்த நல்லடியார்கள்): “உங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்றுகூறினார்கள்."
விளக்கம்:
ஏற்கனவே 7:159இல் சொன்னது போல அவர்களில் சில நல்லவர்களும் இருந்தார்கள். அவர்கள் இவர்களிடம் இறைக் கட்டளையை மீறி நடப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துரைத்து வந்தார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் நியதிப்படி அழிந்து வேதனைகளுக்கு ஆளாகப் போகிறவர்களுக்கு நீங்கள் ஏன் வீணாக உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இறைவனின் கட்டளைப்படி அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவது நம் மீதுள்ள கடமையாகும். எனவே நாம் நேர்வழி காட்டும் பொறுப்பை நிறைவேற்றிக் கொள்கிறோம். ஒரு வேளை அவர்கள் திருந்தி, நேர்வழி பெற வந்திடலாம் அல்லவா? எனவே நாம் அவர்களுக்கு உபதேசம் செய்கிறோம்” என்று கூறினார்கள்.
அதாவது தெரிந்தோ தெரியமாலோ, ஒரு சமுதாயம் தவறான வழியில் செல்கிறது என்றால், அவர்களுக்கு அறிவுரைகளை எடுத்துரைத்து சீர்த்திருத்துவது வேத ஞானம் பெற்றவர்களின் கடமையாகும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அழிந்து போகட்டும். நமக்கென்ன வந்தது என்று இருந்து விட்டால், நீங்கள் வேத ஞானம் பெற்றும் அதை மக்கள் நலனுக்காகப் போதிக்கவில்லை என்று பொருள்படும். (பார்க்க 3:104) எனவே நீங்களும் குற்றவாளி ஆகிவிடுகிறீர்கள். மேலும் அந்த அழிவு ஏற்படும் போது நீங்களும் அதில் மடிவீர்கள்.

فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.

7:165.அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையை விட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம், வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
விளக்கம்:
இறைவழிகாட்டுதல்கள் எவற்றுக்குத் தடை விதிக்கிறதோ அவற்றில் அலட்சியப் போக்கு ஏற்படும்போது, அந்தச் சமுதாயத்தவர்களை தீமையை விட்டு விலக்க வேண்டியது வேத ஞானம் பெற்றவர்களின் கடமையாகும். அவ்வாறு செயல்படுபவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி ஆபத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்க வழிகள் பிறக்கும். அதே சமயத்தில் வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருப்பவர்கள், “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் நியதிப்படி கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.

فَلَمَّا عَتَوْا۟ عَن مَّا نُهُوا۟ عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ.

7:166.தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
விளக்கம்:
வரம்பு மீறின செயல்கள் அதிகமாகிவிடவே அவர்களுடைய நிலைமையும் மோசமாகி குரங்குகள் மற்றும் பன்றிகள் போன்றத் தன்மை உடைய பாவிகளாக ஆகிவிட்டார்கள்.

وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.

7:167.(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
விளக்கம்:
எனவே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போது, அங்கு அநியாயமும் அக்கிரமும் நடந்து அச்சமுதாயம் மிகவும் பலவீனம் அடைந்து வரும். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை நசுக்கி விடுவார்கள். இப்படித் தான் உலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில் நடந்து வரும் என்று உம் இறைவன் அளித்த வாக்கு அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆக தீய வழியில் செல்பவர்கள் யாரும் இறைவனின் இந்தத் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதே சமயத்தில் அவன் காட்டிய வழியில் திருந்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுக்கு பாதுகபாப்பான வாழ்வு நிச்சயமாக கிடைக்கும். மனிதன் திருந்துவதற்குத் தக்க வாய்ப்பை அளிக்கும் இறைவன் மாபெரும் கிருபையாளனே.

وَقَطَّعْنَٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًۭا ۖ مِّنْهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَٰهُم بِٱلْحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.

7:168.அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித் திரியுமாறு) ஆக்கிவிட்டோம், அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும் தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
விளக்கம்:
மேற்சொன்ன அந்த அநியாயக்கார கூட்டம் பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறித் திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்பிரிவுகளில் நல்லவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பல சந்தோஷங்கள் கிடைத்திருந்தன. அவர்களில் தவறான செயல்களில் நிலைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பல வேதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. இப்படியாக நன்மையும் தீமையும் ஏற்படவைப்பதன் நோக்கமே அவர்கள் நேர்வழி பெற்று திருந்தி வர வாய்ப்பு அளிப்பதே ஆகும். அவர்களை ஒரே அடியாக அழித்துவிடுவது அல்லாஹ்வின் நோக்கமல்ல. (பார்க்க 16:61)

சிந்தனையாளர்களே! மீன் பிடிக்க தடை உத்தரவை மீறிய ஒரே குற்றத்திற்காக அவர்களை அல்லாஹ் இழி நிலைக்குத் தள்ளிவிடவில்லை. அந்தத் தடை உத்தரவை மீறியதால் சமுதாயத்தில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து விட்டன. இறுதியில் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, கலகம் செய்து அங்கு அக்கிரமங்களும், அநியாயங்களும் தலை விரித்தாடின. இதனால் சமுதாயம் பலவீனம் அடைந்து எல்லா தகுதிகளையும் இழந்துவிட்டது. இன்றைய உலகில் நடப்பதும் இதுவே ஆகும்.


29.அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவது:

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍۢ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ.

2:261.அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான், இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன்.

விளக்கம்:

தனக்குக் கிடைத்துள்ள உபரி சொத்துச் செல்வங்களை அல்லாஹ்வின் சமூக அமைப்புக்குக் கொடுத்து விட்டால், அவை குறைந்து விடுமே என்று நினைக்கத் தோன்றும். உதாரணமாக ஒரு விவசாயி தம்மிடமுள்ள தானியத்தை பூமியில் போட்டுவிட்டால், அது அழிந்து விடுமே என்று எண்ணி, அதை அவன் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டால், உணவு உற்பத்தியை எப்படி பெருக்க முடியும்? எனவே அவன் முறைப்படி பயிரிடுவதால் தான் அது பன்மடங்காகி, அவனுக்கும் மற்றவர்க்கும் உணவு கிடைத்து வருகிறது.
அது போல அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு/சமூக அமைப்பின் செயல் திட்டங்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் மக்கள் நலத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்? எனவே இறைவனின் ஆட்சியமைப்புக்கு உதவி செய்வது எதுவும் வீண் போகாது. அதுவும் பன்மடங்காகப் பெருகி உங்களிடமே வந்தடையும். அல்லாஹ்வின் அறிவுரைப்படி உழைத்து வாழ்பவர்களின் செல்வங்கள் பெருகி விடுகிறது. ஆக அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அத்தியாயம் 2:261)
அத்தகைய ஆட்சியமைப்பு இல்லாதிருந்தால் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி சமூக நலப்பணிகளை செய்து வாருங்கள்.


30.பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காக செய்யும் தான தர்மங்கள்:

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌۭ فَأَصَابَهُۥ وَابِلٌۭ فَتَرَكَهُۥ صَلْدًۭا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍۢ مِّمَّا كَسَبُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.

2:264.நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள், அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும், அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது, இவ்வாறே அவர்கள் செய்த - (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள், இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.
விளக்கம்:
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் மக்கள் மத்தியில் விளம்பரம் பெறுவதற்காக, தான தர்மம் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் உண்மையிலேயே அல்லாஹ்வையும் அவன் நிர்ணயித்துள்ள மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள் என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் பொருள்படும்.
மேலும் தான் செய்த தான தர்மங்களைப் பற்றி பிறரிடம் சொல்லிக் காட்டாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்து வரும் தான தர்மங்களால் ஒரு பலனும் ஏற்படாது. எவ்வாறு கற்பாறைகள் மீது மழை பெய்யும் போது, அதன் மீது படிந்துள்ள தூசி அடித்துச் சென்று விடுகின்றதோ, அது போல நீங்கள் செய்த தர்மங்கள் பலனற்றுப் போயிவிடும். அல்லாஹ்வின் அறிவுரைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.
சிந்தனையாளர்களே! மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகச் செய்யும் தர்மத்திற்கும் ஆஃகிரத்திற்கும் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. அதாவது இப்படி தனிப்பட்ட முறையில் தான தர்மம் செய்தால், நலிந்த மக்களிடம் கையேந்தும் பழக்கம் ஏற்பட்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுவார்கள். இது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானாதாகும்.

وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًۭا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌۭ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌۭ فَطَلٌّۭ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.

2:265 அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள)பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது, அதன் மேல் பெருமழை பெய்கிறது, அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது, இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடிமழையே அதற்குப் போதுமானது, அல்லாஹ் நீங்கள் செய்வதை எல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
விளக்கம்:
மாறாக அல்லாஹ்வின் விருப்பப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு தம்மாலான பொருளுதவி செய்து அதன் மூலமாக அனைத்துத் தரப்பு மக்களின் துயரங்களையும் துடைத்து அவர்களின் மேம்பாட்டிறகாக உதவி செய்து வரவேண்டும். இப்படிச் செய்யும் உதவிகள் தாம் பலனுள்ளதாக இருக்கும். எவ்வாறு மேட்டுப் பகுதியில் இருக்கும் பூமியில் பெருமழை பெய்தாலும் கொஞ்சமே பெய்தாலும் அது செழிப்புடன் இரட்டிப்பான நல்ல விளைச்சலைத் தருகின்றதோ, அது போல நீங்கள் இறை ஆட்சியமைப்பிற்கு, உங்களிடம் உள்ள செல்வத்தை அளித்து, சிறப்பான சமுதாயம் உருவாகப் பங்கெடுத்துக் கொண்டால், உங்களுள் சிறப்பான ஒழுக்க மாண்புகளும் செயல்வேகமும் வளரும். ஆக நீங்கள் செய்வது எதுவும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்புவதில்லை என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். அதாவது அதற்குரிய பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.


31.இவ்விருவரும் சமமாவார்களா?

لَّا يَسْتَوِى ٱلْقَٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَٰعِدِينَ دَرَجَةًۭ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ عَلَى ٱلْقَٰعِدِينَ أَجْرًا عَظِيمًۭا.

4:95. ஈமான் கொண்டவர்களில் உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள், தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களை விட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்.
விளக்கம்:
மேலும் மூஃமின்களில் இருபிரிவினர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் சமூக நலப்பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள். அதற்காகத் திட்டங்களைத் தீட்டி தம் செல்வத்தையும் உயிரையும் பணயம் வைத்துச் செயல்படும் செயல்வீரர்கள்-இவர்கள் ஒரு பக்கம். இப்படிப்பட்ட எந்தச் செயலிலும் பங்கெடுக்காமல் தத்தம் தொழிலில் நிலைத்திருப்பவர்கள் மறுபக்கம். இவர்கள் இருவரும் சமமாக மாட்டார்கள்.

قُل لَّا يَسْتَوِى ٱلْخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ ٱلْخَبِيثِ ۚ فَٱتَّقُوا۟ ٱللَّهَ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

5:100. (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகா, எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக.
விளக்கம்:
மனிதவள மேம்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் செயல்படுவது நன்மையான செயல்களாகும். அழிவை ஏற்படுத்தும் செயல்கள் யாவும் பாவச் செயல்களாகும். எனவே இவை இரண்டும் சமமாகாது. ஆனால் உலகில் தீயவை அதிகமாக இருப்பதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. தீய செயலை அனைவரும் இணைந்து செய்தால் அதில் தவறு ஒன்றுமில்லை என்ற நினைப்பில் இருப்பார்கள். எனவே அறிவாளிகளே! நீங்கள் அவ்வாறு செயல்படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். உங்கள் வாழ்வின் இலட்சிய இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள்.

قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ ۚ أَفَلَا تَتَفَكَّرُونَ.

6:50. இன்னும் நீர் கூறும்: "குருடனும், பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"
விளக்கம்:
“எவ்வாறு குருடனும் பார்வை உடையவனும் சமமாகமாட்டாரோ, அதே போல் இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக வாழ்பவர்களும், அவற்றை நிராகரித்து குருட்டுத்தனமாக வாழ்பவர்களும் சமமாக மாட்டார்கள். இதைப்
பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.

أَوَمَن كَانَ مَيْتًۭا فَأَحْيَيْنَٰهُ وَجَعَلْنَا لَهُۥ نُورًۭا يَمْشِى بِهِۦ فِى ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِى ٱلظُّلُمَٰتِ لَيْسَ بِخَارِجٍۢ مِّنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَٰفِرِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

6:122.மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் -இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான், அதை விட்டு அவன் வெளியேறவே முடியாது -இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறே காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய (பாவச்) செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
விளக்கம்:
நடைபிணமாக வாழும் ஒருவனுக்கு நாம் உயிரோட்டமுள்ள வாழ்வைக் கொடுக்கிறோம். இதற்காக ஒளிமயமான வழிகாட்டுதலை அளிக்கிறோம். அவன் மக்கள் மத்தியில் அதை பரப்புகிறான். மற்றொருவன் இருளில் சிக்கித் தவிக்கிறான். அதை விட்டு அவனால் வெளியே வரவே முடியவில்லை. இவ்விருவரும் சமமாவார்களா? இவ்வாறே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகாகத் தெரிகின்றன.
அதாவது இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கு கிணற்றில் வாழும் தவளை போல் இருட்டில் இருப்பதே ஆனந்தமாக இருக்கிறது. வெளிச்சத்திற்கு வர கசப்பாக இருக்கிறது. எனவே அவர்கள் தாங்களே உருவாக்கி வைத்துள்ள சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு மகிழ்வடைகிறார்கள்.

۞ أَجَعَلْتُمْ سِقَايَةَ ٱلْحَآجِّ وَعِمَارَةَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ كَمَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَجَٰهَدَ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ لَا يَسْتَوُۥنَ عِندَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

9:19. ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டு வோரையும், கஃபத்துல்லாஹ்வை நிர்வாகம் செய்வோரையும், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான்கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
விளக்கம்:
கஅபா என்கிற தலைமைச் செயலகத்தை நிர்வகிப்பதாகச் சொல்லிக் கொண்டு, அங்கு வருடந்தோறும் ஹஜ்ஜுக்காகத் திரளாகக் கூடும் மக்களுக்குத் தண்ணீரையும், சாப்பாட்டையும் கொடுத்து விட்டால் மட்டும் போதுமா?
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்கிற ஆஃகிரத்தையும் ஏற்று, சமுதாய மேம்பாட்டிற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு இவர்கள் சமமாகி விடுவார்களா? இவ்விருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்.
எனவே அவர்களை அந்தச் செயலகத்தை விட்டு வெளியேற்றிவிட வேண்டும். இத்தகைய நற்செயல்கள் எதையும் செய்யாதவர்களே அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்களுக்கு நேர்வழி கிடைப்பது எப்படி?

۞ مَثَلُ ٱلْفَرِيقَيْنِ كَٱلْأَعْمَىٰ وَٱلْأَصَمِّ وَٱلْبَصِيرِ وَٱلسَّمِيعِ ۚ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ أَفَلَا تَذَكَّرُونَ.

11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் (நல்ல பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியையுடையவர் போலவும் இருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
விளக்கம்:
இரு பிரிவினர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒரு பிரிவினர் சிந்தித்து உணர முடியாத குருடர்கள், செவிடர்களைப் போன்றவர்களாக இருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் எதையும் சிந்தித்து செயலாற்றும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்விரு பிரிவினரும் சமம் ஆவார்களா? நீங்களே சிந்தித்துப் பதில் கூறுங்கள். (மேலும் பார்க்க 13:16-19&35:19)
மேற்சொன்ன இந்த உதாரணத்திற்கு இன்றைய நடைமுறை உலகமே சாட்சியாகும். சிந்தித்து செயலாற்றும் நாடுகள் சிறப்பாகவும், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் நாம் காண்கிறோம். இருந்த போதிலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் மனித ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட இறைவழிகாட்டுதல்கள் இல்லாததால், அவர்களுடைய வளர்ச்சியே அவர்களை அழிவின் பக்கம் அழைத்துச் சென்று விடுகின்றன. இது இன்றைய உலகில் நடக்கின்ற விஷயமல்ல. காலம் காலமாய் இப்படித்தான் நடந்து வந்துள்ளது.

۞ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًۭا مَّمْلُوكًۭا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَمَن رَّزَقْنَٰهُ مِنَّا رِزْقًا حَسَنًۭا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّۭا وَجَهْرًا ۖ هَلْ يَسْتَوُۥنَ ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.

16:75.அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை, மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம்வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்துலில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
விளக்கம்:
நீங்கள் உதாரணங்களையே கூற விரும்பினால், அல்லாஹ் காட்டும் உதாரணங்களையே நீங்களும் கூறலாம். ஒருவர் ஏழை அடிமையாக வாழ்கிறார். அவர் தன்னிச்சையாக செயல்படவே முடியாது. மற்றொருவர் இருக்கிறார். அவருக்கு எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. அவன் அவற்றிலிருந்து மற்றவர்க்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சமுதாய மேம்பாட்டிற்காகக் கொடுத்து உதவுகிறார். நீங்களே சொல்லுங்கள். இவர்கள் இருவரும் சமமாவார்களா? இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை புகழுக்குரியவையாக ஆக்குகிறார் அல்லவா? ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மையை அறிந்து கொள்வதில்லை.
அதாவது எல்லா மனிதனுக்கும் ஒரே மாதிரியான ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருந்தால், அவன் இயந்திரங்களைப் போலவே ஒரே பணியை செய்து வரும் நிர்பந்தத்தில் இருந்திருப்பான். அவனுக்கு எந்த சுதந்திரமும் திறமையும் கிடைத்திருக்காது. ஆனால் மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்து விட்டு, ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள திறமைக்கு ஏற்றவாறு உழைத்து, தம் வாழ்வாதார வசதிகளை பெருக்கிக் கொள்ள முயலவேண்டும். அவ்வாறு உழைத்துப் பெற்ற செல்வங்களை தம் தேவைக்கு போக மிகுதியானவற்றை பிறருடையத் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது தம் கடமை என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும். ஏதோ நன்றிக் கடனுக்காக என நினைத்து செய்யக் கூடாது. இப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவானால் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஆயிரமாயிரம் புகழுக்குரியவையாக ஆகிவிடுகின்றன. இதை மக்களிடமும் எடுத்துரைக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே மாணவ மாணவிகளுக்குப் பாடங்களாகக் இதைக் கற்றுத்தர வேண்டும்.

وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ ۙ وَهُوَ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

16:76.மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை), எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன், தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான், எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வரமாட்டான், மற்றவனோ, தானும் நேர் வழியில் இருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?
விளக்கம்:
அல்லாஹ் கூறும் இன்னொரு உதாரணத்தையும் கவனியுங்கள். ஒருவர் ஊமையாக இருக்கிறார். எந்த திறமையும் இல்லாதவர். அவர் தம் எஜமானனுக்குப் பெரும் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பினாலும் அவரால் எந்த நன்மையும் கொண்டு வர முடியாத நிலையில் இருக்கிறார். மற்றவரோ தானும் நேர்வழியில் இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் நீதி நியாயத்துடன் வழங்கி, நன்மையான செயல்களை செய்து வரும்படி அறிவிறுத்தி வருகிறார். ஆக இவர்கள் இருவரும் சமமாவார்களா?
அதாவது மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகி வாழ்பவர்களால், உலகிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. மாறாக எதையும் சிந்தித்துச் செயலாற்றும் தகுதியுடையவர்களால் மட்டுமே நாட்டிற்கும் உலகிற்கும் நன்மைகளை சேர்க்க முடியும். இந்த உண்மைகள் எல்லாம் அவர்களுடைய சிந்தனைப் புலன்களை விட்டு மறைவாக உள்ளவையாகும். எனவே வஹீ எனும் இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். மேலும் அவர்களுக்கு இத்தகைய உதாரணங்களின் மூலம் விளக்கவேண்டும்

أَفَمَن كَانَ مُؤْمِنًۭا كَمَن كَانَ فَاسِقًۭا ۚ لَّا يَسْتَوُۥنَ.

32:18. எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
விளக்கம்:
நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அழகான சமூக அமைப்பும், தலைச்சிறந்த நாடும் உருவாக பாடுபடும் மூஃமின்களும், சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் பாவிகளும் சமமாகி விடுவார்களா? இவ்விருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். காரணம்:

أَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ جَنَّٰتُ ٱلْمَأْوَىٰ نُزُلًۢا بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

32:19. எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப் படுவார்கள்).
விளக்கம்:
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி சமூக நலத்திட்டங்களைத் தீட்டி உழைத்து வரும் சமுதாயம் அவர்களுடைய நற்செயல்களின் விளைவாக அது சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அங்கு வாழ்பவர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பார்கள்.

وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُوا۟ فَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۖ كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَآ أُعِيدُوا۟ فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ.

32:20. ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்)பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத் தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
விளக்கம்:
இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலில் குறைகளைக் கண்டுபிடித்து அவற்றிற்கு மாற்றமாகச் செயல்படும் சமுதாயம், பிரச்சனைகள் நிறைந்த நரகமாக மாறிவரும். அந்த வேதனைகளிலிருந்து வெளிவர எவ்வளவு தான் முயன்றாலும் அவற்றிலிருந்து விடுபடவே முடியாது. அந்த பிரச்சனைகளின் தீர்வுகளில் பலப் புதுப் பிரச்சனைகள் உருவெடுக்கும். இத்தகைய வேதனைகளைப் பற்றி இவ்வேதம் முன்னெச்சரிக்கை செய்கிறது. ஆனால் அவர்களோ அப்படி எதுவும் நடக்காது என்று அலட்சியமாய் இருந்து விடுகிறார்கள். “இதோ! அந்த வேதனைகள் வந்துவிட்டன. அவற்றை அனுபவியுங்கள்” என்று கூறுவதாக சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. எனவே இவ்விரு வகையான சமுதாயங்கள் சமமானவர்கள் ஆவார்களா?

وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ.

35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
விளக்கம்:
எனவே மூடநம்பிக்கையில் குருட்டுத்தனமாக வாழ்பவர்கள் ஒரு பக்கம். இறைவழிகாட்டுதலை முன்வைத்து சிந்தித்துச் செயலாற்றுபவர்கள் மறுபக்கம். இவ்விருவரும் சமமாவார்களா?

وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ.

35:20. (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா)
விளக்கம்:
அதே போல் முன்னோர்களின் வழிப்பாடு என்ற இருளில் வாழ்பவர்கள் ஒரு புறம். இறைவழிகாட்டுதலின் ஒளியில் வாழ்பவர்கள் மறு பக்கம். இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.

وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ.

35:21. (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
விளக்கம்:
அதே போல் மூட நம்பிக்கையில் சிக்கித் வெயிலில் வாடுபவனும், இறைவழிகாட்டுதல் என்ற நிழலின் கீழ் சுகமாக வாழ்பவனும் சமமாக மாட்டார்கள்.

وَمَا يَسْتَوِى ٱلْأَحْيَآءُ وَلَا ٱلْأَمْوَٰتُ ۚ إِنَّ ٱللَّهَ يُسْمِعُ مَن يَشَآءُ ۖ وَمَآ أَنتَ بِمُسْمِعٍۢ مَّن فِى ٱلْقُبُورِ.

35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வை நாடி வருபவர்களைச் செவியேற்கும் படிச் செய்கிறான். கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
விளக்கம்:
மேலும் சிறந்த முறையில் செயலாற்றி ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்பவர்களும், எதையும் சிந்திக்காமல் நடைபிணமாக வாழ்பவர்களும் சமமாக மாட்டார்கள். இப்படியாக இறைவன், “தான் நாடியவர்களை” செவியேற்கச் செய்கிறான். எனவே நடைபிணமாக வாழ்பவர்களை நீர் கேட்கச் செய்ய முடியாது.
அதாவது இருளில் வாழ விருப்பவர்களுக்கும் நடைபிணங்களாக வாழ விரும்புவோருக்கும் குருட்டுதனமாக வாழவே எண்ணுபவர்களுக்கும் இறைவன் நேர்வழியை காட்டமாட்டான். சிந்தித்துச் செயலாற்றும் பகுத்தறிவு உடையவர்களுக்கே இறைவன் செவியுறச் செய்கிறான். இதுவே இறைவனின் நாட்டமாகும்

إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ.

35:23 நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்ல.
விளக்கம்:
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே உம் பணியாகும்.

أَمْ نَجْعَلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَٱلْمُفْسِدِينَ فِى ٱلْأَرْضِ أَمْ نَجْعَلُ ٱلْمُتَّقِينَ كَٱلْفُجَّارِ.

38:28 அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? அல்லது, பயபக்தி உடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
விளக்கம்:
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி, உழைப்பவர்கள் ஒரு பக்கம். நாட்டையும் நாட்டு மக்களையும் வழிகெடுத்து குழப்பங்களையும, கலவரங்களையும் தூண்டுவோர் மறு பக்கம். ஆக இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? இறைவனின் நியதிப்படி உள்ள “மனிதச் செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்திற்குப் பயந்து நடப்பவர்களும், மனம் போக்கில் நடந்து பாவச்செயல்களைச் செய்வோரும் சமமாவார்களா?

أَمَّنْ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيْلِ سَاجِدًۭا وَقَآئِمًۭا يَحْذَرُ ٱلْءَاخِرَةَ وَيَرْجُوا۟ رَحْمَةَ رَبِّهِۦ ۗ قُلْ هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.

39:9. எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவரா கவும் வணங்குகிறாரோ, அவர் (நிராகரி ப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."
விளக்கம்:
இறைவன் நிர்ணயித்துள்ள “மனிதச் செயல்களின் இறுதிவிளைவுகள்” என்கின்ற ஆகிரத்தை ஏற்று, தவறான செயல்களைத் தவிர்த்து, இறைச் சட்டங்களுக்கு முற்றிலும் அடிபணிந்து, இரவுப் பகலாக உழைத்து, இறை அருட்கொடைகளைப் பெறுபவர்கள் ஒருபுறம். அல்லாஹ்வுக்கு இணையாக கற்பனைத் தெய்வங்களையும், மகான்களையும் வணங்கி வருபவர்கள் மறுபக்கம். இவ்வாறு அறிஞர்களும், அறிவிலிகளும் சமமானவர்கள் என நீங்கள் கூறுவீர்களா? எனவே அறிவைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்கள் தாம் இறைவனின் அறிவுரைகளை ஏற்று அவற்றின்படி செயல்படுவார்கள்.

ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلًۭا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلًۭا سَلَمًۭا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.

39:29.அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும், ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

விளக்கம்:

ஒருவர் பல்வேறு கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்ட பல எஜமானர்களிடம் பணி புரிகிறார். இன்னொருவர் ஒரே கொள்கையுடைய ஓர் எஜமானனிடம் பணிபுரிகிறார். இவ்விருவரும் சமமாவார்களா? மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு சரியான பாதையைக் காட்டிய அல்லாஹ், போற்றுதலுக்கு உரியவனே ஆவான். ஆனால் இந்த உண்மை பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.
அதே போல ஒரு சமுதாயம், பல தெய்வ வழிபாட்டில் மூழ்கி அச்சமுதாயத்தினரிடையே கருத்து வேற்றுமைகளும், மோதல்களும் இருந்தால், அது சிறப்பான சமுதாயமாகத் திகழுமா? ஓர் இறைவன், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் ஒரு தலைவர், ஓரிறைக் கொள்கையுடைய வேதம் என்று அனைவரும் இணைந்து ஒருமித்த கொள்கையுடன் “அனைத்து சந்தோஷங்களும் அனைவருக்கும்” என்ற அடிப்படையில் ஒரு சமுதாயம் உருவெடுக்குமானால், அது எவ்வளவு சிறப்பான சமுதாயமாக இருக்கும்? அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் அல்லாஹ்வின் பாராட்டுகளும் போற்றுதல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

وَلَا تَسْتَوِى ٱلْحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُ ۚ ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ فَإِذَا ٱلَّذِى بَيْنَكَ وَبَيْنَهُۥ عَدَٰوَةٌۭ كَأَنَّهُۥ وَلِىٌّ حَمِيمٌۭ.

41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்.
விளக்கம்:
சமுதாய சமச்சீர்நிலையைக் கொண்டுவர சிறப்பாகச் செயல்படுபவரும், சமுதாயத்தைக் கெடுக்கும் தீயவர்களும் சமமாக மாட்டார்கள். எனவே சமுதாய நலத்திட்டங்களுக்காக பாடுபட்டு வந்தால்தான், சமூகச் சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வரும். அப்போது யாரெல்லாம் உங்களை எதிர்த்து நின்றார்களோ, அவர்கள் எல்லாம் உற்ற நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

أَمْ حَسِبَ ٱلَّذِينَ ٱجْتَرَحُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجْعَلَهُمْ كَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءًۭ مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۚ سَآءَ مَا يَحْكُمُونَ.

45:21.எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? அவர்கள் உயிருடன் இருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.
விளக்கம்:
சமுதாயத்தை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபவர்களுக்கு சமமானவர்கள் என எண்ணிக் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வே இப்படி சமமாக்கி விடுவானா? எவ்வாறு உயிருடன் இருப்பவர்களும் மரணமடைந்தவர்களும் சமமாக மாட்டார்களோ, அவ்வாறே இவ்விரு பிரிவினரும் சமமாக மாட்டார்கள். இவ்விருவரும் சமம் என எண்ணிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْحَقَّ مِن رَّبِّهِمْ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمْثَٰلَهُمْ.

47:3. இது ஏனெனில்: நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள், நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து( வந்து) ள்ளதையே பின்பற்றுகிறார்கள் -இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக்கூறி விள) க்குகிறான்.

أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُم.

47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தன் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகை யோருக்கு ஒப்பாவாரா?
விளக்கம்:
இறைவனின் தெளிவான வழிகாட்டுதலைப் பின்பற்றி சரியான பாதையில் இருப்பவர்கள் ஒரு பக்கம். தம் மனோ இச்சையைப் பின்பற்றி, தாம் செய்வது அனைத்தும் அழகானதே என்று எண்ணிக்கொண்டு, தகாத செயல்களை எல்லாம் செய்துகொண்டு இருப்பவர்கள் மறு பக்கம். இவ்விருவரும் சமமாகி விடுவார்களா?(பார்க்க 45:21)

يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ ءَأَرْبَابٌۭ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ.

12:39. "சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?
விளக்கம்:
யூஃசுப் நபி சிறையில் அடைப்பட்ட போது, “சிறையில் இருக்கும் என் தோழர்களே! மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு தெய்வம் என எண்ணி அவற்றிடம் மன்றாடிக் கொண்டிருப்பது சிறந்ததா அல்லது எல்லா தேவைகளையும் நிறைவேற்றும் வேராற்றல்கள் உடைய ஒரே இறைவனின் கட்டளைக்கு இணங்கி செயல்படுவது சிறந்ததா என்பதை நீங்களே சிந்தியுங்கள். ஆக அகிலங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் அல்லாஹ் ஒருவனே ஆவான்” என்று கூறினார்.


32.தூங்குவது போல் பாசாங்கு செய்பவன்:

ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَٱلَّتِى لَمْ تَمُتْ فِى مَنَامِهَا ۖ فَيُمْسِكُ ٱلَّتِى قَضَىٰ عَلَيْهَا ٱلْمَوْتَ وَيُرْسِلُ ٱلْأُخْرَىٰٓ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

39:42. அல்லாஹ்வும் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
மனித வாழ்வின் நிலையைக் கவனித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி அவனுக்கு மரணம் வரத்தான் செய்கிறது. அவன் மரணித்தபின் இவ்வுலகில் இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றான். ஆனால் தினந்தோறும் அவனுக்கு தூக்கமும் ஏற்பட்டு வருகின்றது. அதுவும் தற்காலிக மரணத்தைப் போன்றே உள்ளது. ஆனால் அவனால் அந்தத் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள முடிகிறது. இப்படியாக அவன் குறிப்பிட்ட காலம் வரையில் இவ்வுலகில் உயிர் வாழ்கிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல இருக்கும்.

அதாவது மூடநம்பிக்கையில் மூழ்கி வெறும் நடைபிணமாக வாழ்பவர்களுக்கு இந்தக் குர்ஆனின் உண்மைகளை புரிய வைக்க முடியாது. ஏனெனில் அவன் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை.
இரண்டாவதாக தூங்குபவனைத் தட்டி எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது. அவனை அடித்து தான் எழப்ப வேண்டும்.
அது போல இறைவழிகாட்டுதல் பெறாமல் அலட்சியமாக தூங்கிக் கொண்டிருப்பவனை புரிய வைத்துவிடலாம். ஆனால் எல்லாம் அறிந்தும் அறியாதது போல் தூங்கிக் கொண்டிருப்பவனை நேர்வழியில் கொண்டுவர முடியாது. அவனுக்குத் தண்டனை தான் கிடைக்கும்.


33.செவிடர்களும் குருடர்களும்:

ٱنظُرْ كَيْفَ كَذَبُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ ۚ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.

6:24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும், ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாமல் மறைந்து விடும்.)
விளக்கம்:
அல்லாஹ்வைப் பற்றி கற்பனைக் கதைகளைக் கூறி, வழிகேட்டில் சென்று, அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பொய்யாக்குபவர்களின் கதி என்ன ஆகிறது என்பதை சற்று கவனியுங்கள்.

وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர், நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தினோம், இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள், இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள், “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
விளக்கம்:
இத்தகையவர்கள் யார் என்றால் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையை காட்டும் வேத அறிவுரைகளை எடுத்துரைத்தால், அவர்கள் இதைக் கேட்பது போல் பாவனை செய்தவர்கள். உண்மையிலேயே அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று வருவதில்லை. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி அப்படிப்பட்டவர்களின் உள்ளங்களில் திரையும், காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்பட்டு விடுகின்றன. நீங்கள் எவ்வளவுதான் ஆதாரங்களைக் காட்டினாலும் அதை ஏற்க மாட்டார்கள். அப்படியே உங்களிடம் வந்தாலும் “மஹஷர் நாள்’ என்பதெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளே ஆகும். அப்படி எதுவும் நிகழாது” என்று கூறி தர்க்கம் செய்தவர்கள்.

۞ أَفَمَن يَعْلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰٓ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.

13:19. உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள்தாம்.நல்லுபதேசம் பெறுவார்கள்.
விளக்கம்:
இறைவழிகாட்டுதல்கள் உம் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்றன என்பதை அறிந்து, அதன்படி செயல்படுபவர் குருடர்களைப் போலாவாரா? ஒருபோதும் இல்லை. சிந்தித்து செயலாற்று பவர்களுக்கே இவ்வழிகாட்டுதலிருந்து அறிவுரைகள் கிடைக்கும்.

وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ.

8:21.(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்து கொண்டே, “நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
விளக்கம்:
எதையும் சரிவர கேட்காமலேயே நாங்கள் அவற்றைக் கேட்டுக் கொண்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அவ்வாறு ஒப்புக்காகக் கேட்டு அலட்சியமாக இருப்பவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلْبُكْمُ ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ.

8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப் பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமைகளும் தாம்.
விளக்கம்:
எதையும் கேட்டு நன்றாக அறிந்துகொண்டு சீரிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இப்படி எதையும் அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமைகளுமே அல்லாஹ்விடத்தில் மிகவும் கேவலமான பிறவிகள் ஆவர்.

وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًۭا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ.

8:23.அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான், (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
விளக்கம்:
அப்படியும் செவியேற்று அறிந்து கொள்ளும் ஆற்றல் சிறிதளவாவது அவர்களிடம் இருந்திருந்தால், அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களை செவி ஏற்குமாறு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களிடத்தில் அந்தத் தகுதி கூட அறவே இல்லை. அதையும் மீறி அவர்களை வலுக் கட்டாயமாகக் கேட்கச் செய்தாலும், அவர்கள் புறக்கணிக்கவே செய்வார்கள்.

وَمِنْهُم مَّن يَسْتَمِعُونَ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تُسْمِعُ ٱلصُّمَّ وَلَوْ كَانُوا۟ لَا يَعْقِلُونَ.

10:42. இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
விளக்கம்:
மேலும் உம்முடைய பேச்சை கேட்க வருபவர்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உம் பேச்சை கேட்பது போலவே பாவனை செய்கிறார்கள். எதையும் விளங்கிக்கொள்ள விரும்பாத செவிடர்களை நீர் கேட்கும்படி செய்ய முடியுமா?

وَمِنْهُم مَّن يَنظُرُ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تَهْدِى ٱلْعُمْىَ وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ.

10:43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
விளக்கம்:
மேலும் அவர்கள் உம் பேச்சைக் கேட்பது போல உன்னையே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உம் அறிவுரைகளைக் கேட்டு சிந்தித்துப் பார்க்க விரும்பாத குருடர்களை நேர்வழியில் செலுத்த முடியுமா?

إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ ٱلنَّاسَ شَيْـًۭٔا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
விளக்கம்:
உண்மை விஷயம் என்ன வென்றால் அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாமும் அணுஅளவு கூட செய்வதில்லை (மேலும் பார்க்க 4:40) ஆனால் மக்கள்தான் அல்லாஹ்வின் அறிவுரைகளை கேட்காமல் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.

وَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ حِجَابًۭا مَّسْتُورًۭا.

17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கு இடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
விளக்கம்:
இந்த குர்ஆனின் அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கும் போது, “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் நியதியை ஏற்று நடப்பவர்களுக்கும் அவற்றை மறுப்பவர்களுக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.

وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى ٱلْقُرْءَانِ وَحْدَهُۥ وَلَّوْا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِمْ نُفُورًۭا.

17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம், இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப் படைந்து தம் பின் புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின் வாங்கிவிடுகிறார்கள்.
விளக்கம்:
இதனால் அவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்களுடைய உள்ளங்களில் திரைகள் பல ஏற்பட்டு விடுகின்றன. அதைப் பற்றி எடுத்துரைத்தாலும், அவர்கள் எதுவும் கேட்காதது போல் சென்று விடுவார்கள். எனவே தான் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கியாளும் வல்லமைப் பெற்ற இறைவன் ஒருவனே. அவனுக்கு மட்டுமே மனிதனும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று நீர் அவர்களிடம் எடுத்துரைக்கும் போது, அவர்கள் முகத்தை திருப்பி கொண்டு திரும்பிச் சென்று விடுகிறார்கள்.

نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰٓ إِذْ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًۭا مَّسْحُورًا.

17:47.(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசிய மாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கு அறிவோம்.
விளக்கம்:
அப்படியும் அவர்கள் உங்களுடைய பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அதன் நோக்கம் நற்போதனைகளைக் கேட்டு அதன்படி செயல்படுவதற்காக என்று இருப்பதில்லை. அவர்கள் அக்கூட்டத்தை விட்டுச் சென்றதும், “இவை யாவும் மக்களை வசியப்படுத்தும் வெற்றுப் பேச்சுக்களே. நீங்கள் அவருடைய பேச்சில் உண்மை இருப்பதாக எண்ணி அவரை பின்பற்ற வேண்டியதில்லை” என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்கு நன்குத் தெரியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.

وَمَن كَانَ فِى هَٰذِهِۦٓ أَعْمَىٰ فَهُوَ فِى ٱلْءَاخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًۭا.

17:72.யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன் தான், இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
விளக்கம்:
இவ்வுலக வாழ்வில் குருட்டுத்தனமாக வாழ்ந்து வந்தால், அவனுடைய மறுமை வாழ்விலும் குருடனாகவே வாழ நேரிடும். அதாவது அத்தகையவர்களுக்கு இவ்வுலகிலும் எவ்வித சிறப்பும் இருப்பதில்லை. மறுமை வாழ்விலும் எந்தப் பலனும் கிடைக்காது. இத்தகையவர்களே நேர்வழியை விட்டுத் தவறியவர்கள் ஆவார்கள். (மேலும் பார்க்க 20:124)

وَمَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَآءَ مِن دُونِهِۦ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًۭا وَبُكْمًۭا وَصُمًّۭا ۖ مَّأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَٰهُمْ سَعِيرًۭا.

17:97.அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப் பெற்றவர் ஆவார், இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர், மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புறவரும் படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம், இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும், (நரக நெருப்பு) அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
விளக்கம்:
ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்களோ, அவர்களே நேர்வழி பெற்றவர் ஆவார். மாறாக யார் வழிகேட்டில் செல்ல நாடுகிறார்களோ, அவர்களுக்கு உதவி புரிவோர் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். மேலும் அத்தகையவர்களை நாம் இவ்வுலகில் மட்டுமின்றி மறுமை நாளிலும் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் ஒன்று சேர்ப்போம். இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகமாகவே இருக்கும். அந்த நரக வேதனைகள் குறையும் போதெல்லாம், அதை மீண்டும் அதிகமாக்கி விடுவோம்.

وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدَاهُ ۚ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۖ وَإِن تَدْعُهُمْ إِلَى ٱلْهُدَىٰ فَلَن يَهْتَدُوٓا۟ إِذًا أَبَدًۭا.

18:57.எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிருகரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ, அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத் தனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறோம், ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழி அடைய மாட்டார்கள்.
விளக்கம்:
நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு சமுதாயத்திற்கு நேர்வழி எவை தீய செயல்கள் எவை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து அறிவுரை செய்தும் கூட, அவற்றை ஏற்க மறுப்பவர்களை என்னவென்று சொல்வது? இத்தனைக்கும் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிலை இருக்கும் போது, அந்த அறிவுரைகளை நிராகரிப்பவனை விட அநியாயக்காரர்கள் வேறு யார் இருக்க முடியும்? அல்லாஹ்வின் நியதிப்படி இத்தகையவர்களின் உள்ளங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது. அதாவது அவர்களால் இறைவழிகாட்டுதலை விளங்கிக்கொள்ள முடிவதில்லை. அது மட்டுமின்றி அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனமும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவர்களை நேர்வழியின் பக்கம் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழியின் பக்கம் வரவும் மாட்டார்கள்.

إِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ.

27:80. நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச்செய்ய முடியாது, அவ்வாறே செவிடர்களையும் -அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்யமுடியாது.
விளக்கம்:
எனவே எந்த ஆற்றலும் இல்லாமல் நடைபிணமாக வாழ்பவர்களை, இறைவழிகாட்டுதலை செவியேற்குமாறு செய்ய முடியாது. காரணம் காதிருந்தும் செவிடர்கள் போல் உள்ளவர்கள் புறங்காட்டி ஒடிவிடுவார்கள். உன் அறிவுரைகள் இத்தகையவர்களின் மனதில் பதியாது.
அதே போன்று, இறந்து போனவர்களையும் யாரும் செவியேற்க வைக்க முடியாது. எனவே அவர்களுடைய கல்லறைகளுக்குச் சென்று தம் குறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் வீண்.

وَمَآ أَنتَ بِهَٰدِى ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ ۖ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ.

27:81.இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர்வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர்செய்ய முடியும், ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
விளக்கம்:
அதே போன்று, எதைப் பற்றியும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாக வாழும் வழிக்கேடர்களையும் நேர்வழியில் கொண்டுவர முடியாது. எவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நம்பி மனதார ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் நீ செவியேற்குமாறு செய்ய முடியும். இத்தகையவர்களே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிம்கள் ஆவர்.

தவறான வழியில் செல்லும் சமுதாயங்களில் துன்பம் துயரங்கள் பல கோணங்களில் ஏற்பட்டு வரும். சில சமயங்களில் சமுதாயத்தில் உள்ள உயர்மட்ட மக்களுள் சீர்கேடுகள் ஏற்பட்டு அழிவு ஏற்படும். ஒரு சில சமுதாயத்தின் அடிமட்ட மக்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு சட்ட ஓழுங்கு சீர்கெடும். சில சமயங்களில் இதுவே பிரிவினை உண்டாவதற்குக் காரணிகளாக அமைந்து விடும். இதனால் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து அதனால் கலகம், கலவரம், மோதல்கள் என்று பல கொடுமைகள் நிகழ்ந்து வரும். (பார்க்க 6:65)

أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍۢ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةًۭ فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ.

45:23.(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா, மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
விளக்கம்:
தன்னுடைய மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுவர்களை நீங்கள் பார்த்தீர்களா? தம் மனதில் எழும் ஆசைகளின்படி தான் அவர்கள் செயல்படுவார்கள். அவற்றின் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அந்தப் பாதிப்புகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். ஆக அவர்களுக்கு அறிவு இருந்தும் அவர்களுடைய நிலைமை என்னவாக ஆகிவிடுகிறது என்பதைக் கவனித்தீர்களா?

அவர்களுக்கு ஆசைகள் மிகைக்கும் போது, அவர்களுடைய உள்ளங்களும், காதுகளும், பார்வைப் புலன்களும் செயலிழந்து பேய்விடுகிறது. எனவே அவர்களிடம் எந்த அறிவுரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கும் தகுதியே இருக்காது. எனவே அவர்கள் இறைவனின் அறிவுரைகளை கேட்கவும் மாட்டார்கள். இத்தகையவர்களுக்கு யாரால் நேர்வழி காட்டமுடியும்? இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி அவர்களிடம் சொல்லுங்கள். மேலும் இத்தகைய சமுதாயங்களில் வாழும் மக்கள் தற்காலிக சுகங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வார்கள். வருங்கால நலன்களுக்காகவோ மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கைக்காவோ எந்த முன்னேற்பாடுகளையும் செய்ய மாட்டார்கள்.


34.சுய சிந்தனையின் அடிப்படையில் சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு:

مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًۭا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَٰتٍۢ لَّا يُبْصِرُونَ.

2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம்: நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளிவீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான், இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டுவிட்டான்.
விளக்கம்:
சுயசிந்தனையின் அடிப்படையில் சமுதாயத்தை உருவாக்கி ஆட்சி புரிபவர்களைப் பற்றி ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இருட்டில் ஒருவன் நெருப்பை மூட்டி, அதன் வெளிச்சத்தைக் கொண்டு, அவனைச் சுற்றியுள்ள இருளை நீக்கி விடுகிறான். அல்லாஹ்வின் நியதிப்படி அது அணைந்ததும், மீண்டும் இருள் சூழ்ந்து கொள்கிறது. இப்படித்தான் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தம்மால் தற்காலிகத் தீர்வே காண முடிகிறது. நிரந்தர தீர்வை அவர்களால் காண இயலாது.
எடுத்துக்காட்டு: நாட்டில் நடக்கின்ற பாலியல் பலாத்காரங்கள். இதற்கு தண்டனையைத் தான் அறிவிக்கிறார்கள். மானக்கேடானச் செயலைத் தூண்டும் ஆபாச சினிமாவையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், நாட்டியக் கலை போன்ற தவறான கலாச்சாரங்களையும் தடை செய்வதில்லை.

أَوْ كَصَيِّبٍۢ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٌۭ وَرَعْدٌۭ وَبَرْقٌۭ يَجْعَلُونَ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلْمَوْتِ ۚ وَٱللَّهُ مُحِيطٌۢ بِٱلْكَٰفِرِينَ.

2:19 அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்:) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம், (இதில் அகப்பட்டு க்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
விளக்கம்:
சுயசிந்தனையுடன் ஆட்சி புரிபவர்களைப் பற்றி இன்னொரு எடுத்துக்காட்டும் கூறலாம். காரிருளும் இடியும் மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம். மரணத்திற்கு அஞ்சி மின்னல் மற்றும் இடியோசையின் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, தம் காதுகளில் விரல்களை வைத்து அடைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய சிந்தனை இந்த அளவிற்கு மங்கிவிட்டது. ஆனால் அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமோ, அனைவரையும் சூழ்ந்ததாக இருக்கிறது. அதாவது இடி மின்னலின் தாக்கம் எங்கும் பரவி இருப்பது போல், இவர்கள் செய்யும் முறையற்ற செயல்களின் தாக்கம் சமுதாயம் முழுவதும் சூழ்ந்துள்ளது.
எடுத்துக்காட்டு: மது பானங்களின் விநியோகத்திற்கு அனுமதி அளித்து விடுகிறார்கள். அதனால் சிலருடைய உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மீது பச்சாதாபப்பட்டு கொஞ்சம் ஈட்டுத் தொகையைக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் குடிப் பழக்கத்தின் தாக்கம், நாடுமுழுவதும் ஏற்பட்டு வருவதை அவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். துக்கம் வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை சொல்லி விடுவதால், அந்தப் பிரச்சனைகளுக்குத் அது நிரந்தர தீர்வு ஆக முடியுமா?

يَكَادُ ٱلْبَرْقُ يَخْطَفُ أَبْصَٰرَهُمْ ۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوْا۟ فِيهِ وَإِذَآ أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا۟ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

2:20.அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம்மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள், அவர்களை இருள் சூழ்ந்துகொள்ளும் போது (வழியறியாது) நின்று விடுகிறார்கள், மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப்புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
விளக்கம்:
அதே மின்னல் அவர்களுடைய கண்பார்வையைப் பறித்து விடவும் செய்யலாமே. அது மட்டுமின்றி இடி மின்னலின் வெளிச்சத்தைக் கொண்டு அவர்களால் சிறிது தொலைவே நடக்க முடிகிறது. அதன்பின் உடனே இருள் சூழ்ந்துகொள்ளும் போது, நின்று விடுகிறார்கள். அதாவது இறை வழிகாட்டுதலை ஏற்க மறுத்துத் தம் சுய அறிவைக்கொண்டு தம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பவர்களின் நிலை இது போலத் தான் ஆகும். அவர்களுடைய சிந்தனை மற்றும் பார்வைப் புலன்களையும் உடனடியாகப் போக்கிவிடுவது என்பது அல்லாஹ்வின் செயல்திட்டமாக இருந்திருந்தால், அவ்வாறே செய்திருக்க முடியும். (16:61) ஏனெனில் அனைத்துப் படைப்புகளின் மீதும் அல்லாஹ்வின் பேராற்றல்கள் நிகரற்றவையாக உள்ளனவனாக இருந்தும் அவ்வாறு செய்வதில்லை.

حُنَفَآءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِۦ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخْطَفُهُ ٱلطَّيْرُ أَوْ تَهْوِى بِهِ ٱلرِّيحُ فِى مَكَانٍۢ سَحِيقٍۢ.

22:31.அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள், இன்னும் எவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துக் சென்றது போலும் அல்லது பெருங்காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
விளக்கம்:
நீங்கள் இறைவழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பை உருவாக்கி, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அதில் வேறு எந்தக் கொள்கையையும் இணைக்காதீர்கள். ஆனால் யாருடைய ஆட்சியமைப்பு இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து, அதற்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறதோ, அது இறக்கை அறுந்த பறவைகள் எவ்வாறு வானில் பறக்க முடியாமல் கீழே விழுந்து, அவற்றை மாமிசப் பட்சிகள் கொத்திக் கொள்கின்றனவோ, அதுபோல பலம் அனைத்தையும் இழந்து தத்தளிக்கும். அல்லது பலமான காற்று வீசி வெகுத் தொலைவில் உள்ள இடத்திற்கு அடித்துச் செல்லப்படுவது போல கலகம், கலவரம், போன்றவை ஏற்பட்டு வீட்டையும் நாட்டையும் இழந்து அகதிகளாய் அலைய வேண்டி வரும்.


35.கற்பனைத் தெய்வங்களுக்கு ஓர் உதாரணம்:

ضَرَبَ لَكُم مَّثَلًۭا مِّنْ أَنفُسِكُمْ ۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِى مَا رَزَقْنَٰكُمْ فَأَنتُمْ فِيهِ سَوَآءٌۭ تَخَافُونَهُمْ كَخِيفَتِكُمْ أَنفُسَكُمْ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْقِلُونَ.

30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான், உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப (தானசம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு, அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப் போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.

விளக்கம்:
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை உங்களுக்கு சரிசமமானவர்களாக நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது உங்களிடம் ஊதியம் பெற்று வாழ்பவர்களை பங்காளிகள் என எடுத்துக் கொள்கிறீர்களா? உங்களுக்குச் சமமாக இருப்பவர்களைப் மதிப்பதைப் போல், இவர்களைப் நீங்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் அறிவு பெறும் பொருட்டு உங்களிலிருந்தே உதாரணமாக மேற்கோள்காட்டி விளக்குகிறோம்.

அதாவது மேல்மட்ட அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுவது போல் சகல வல்லமையும் படைத்த அல்லாஹ்வுக்கு ஏன் பயந்து நடப்பதில்லை? மேலும் உங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை சம அந்தஸ்தை அளிக்காத நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ் பணிபுரியும் இயற்கைச் சக்திகளை ஏன் அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதி வணங்கி வருகிறீர்கள்.

உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை நீங்கள் சமஉரிமை அளித்து அவர்களுடைய வாழ்வு சிறக்க வழி செய்திருந்தாலாவது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஒரு போதும் அவ்வாறு செய்வதில்லை. மாறாக மேல்மட்ட அளவில் உள்ளவர்களுக்குப் பயந்து, அவர்களிடம் பரஸ்பர உணர்வுடன் செயல்படுகிறீர்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் மட்டும் அவனுடைய படைத்த இயற்கை சக்திகளை இணை தெய்வங்களாகக் கற்பனைச் செய்துகொண்டு, அவற்றிற்குப் பயப்படுகிறீர்கள். மேலும் அடிமட்ட நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் அதுவே உங்களுடைய அழிவுக்குக் காரணமாகி விடும். இதற்குப் பயந்து நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். முதளாளித்துவ சமூக அமைப்புகளில் இப்படிப்பட்ட கண்ணோட்டம் நிலவிவரும். இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.


36.கற்பனைத் தெய்வங்களிடம் செய்யும் பிரார்த்தனை:

لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ.

13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை)அவனுக்கு உரியதாகும், எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள், அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்:) தண்ணீர் தன்வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது, (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது -இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதேத் தவிர வேறில்லை.
விளக்கம்:
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வெறும் வார்த்தைகளால் கற்பனைத் தெய்வங்களை அழைத்துக் கொண்டிருந்தால், மனிதனுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒருவன் தண்ணீர் முன் நின்றுகொண்டு, அது தானாக தன் வாய்க்குள் வந்தடைய வேண்டும் என்று இரு கைகளையும் விரித்து பிரார்தித்துக் கொண்டிருக்கின்றான். அவன் கைகளால் அள்ளாது அது அவன் வாய்க்குள் போய்ச் சென்றடையுமா? அது போலத்தான் கற்பனைத் தெய்வங்களை புகழ் பாடிக்கொண்டும் அவற்றை திருப்திப் படுத்துவதாக எண்ணிக் கொண்டும் இருந்தால், என்ன பலன் ஏற்படப் போகிறது? ஆக இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களின் நிலைமையும் இதுவே ஆகும்.

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌۭ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًۭا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥ ۖ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًۭٔا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلْمَطْلُوبُ.

22:73. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது: எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வேயன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது, இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது, தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
விளக்கம்:
கற்பனைத் தெய்வங்களை வணங்கி வருபவர்களே! வாருங்கள். உங்களுக்கு ஓர் உதாரணத்தின் மூலம் உண்மையை விளக்குகிறோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு யாரை நீங்கள் தெய்வங்களாகப் பாவித்து வழிபட்டு வருகிறீர்களோ, அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து முயன்றாலும், ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது. அதுமட்டுமின்றி அவற்றின் இயலாமையைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள. அந்த ஈ ஒரு பொருளைப் பறித்துக் கொண்டு போனாலும், அவற்றால் அந்தப் பொருளை விடுவிக்கவும் முடியாது. இந்த அளவுக்கு உதவி சய்ய முடியாதவற்றிடம், நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டிக் கொண்டிருக்கிறீர்களே!


37.தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள்:

أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًۭا رَّابِيًۭا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَٰعٍۢ زَبَدٌۭ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءًۭ ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ.

13:17. அவன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான், அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன, அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது, (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ(உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது, இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத் திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான், அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது, ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கிவிடுகிறது, இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.

விளக்கம்:
அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைப் படி, வானிலிருந்து மழை பொழிகிறது. அதைத் தொடர்ந்து ஓடைகளிலும் ஆறுகளிலும் அவற்றின் கொள்ளளவு படி வெள்ளங்களாகப் பாய்ந்து செல்கின்றன. அவ்வெள்ளங்களின் மேல் பகுதியில் நுரைகளும் சுமந்து செல்கின்றன. நீரைப் பயன்படுத்தும் போது, நீங்கள் தேவையற்ற நுரை மற்றும் அழுக்குகளை நீக்கி விடுகிறீர்கள்.

அதேபோல் ஆபரணங்களையோ, பாத்திரங்களையோ தயாரிக்கும் போது, அந்தந்த உலோகப் பொருட்களை நெருப்பில் உருக்கி எடுக்கிறீர்கள். அப்போது அந்த உலோகங்களிலிருந்து தேவையற்ற அழுக்குகளும் நுரைகளும் கழிகின்றன. அவற்றைச் சுத்தம் செய்து நல்லதையே பயன்படுத்திக் கொள்கிறீர்கள். தேவையற்றதை விலக்கி விடுகிறீர்கள். ஆக உலக மக்களுக்கு பலனுள்ளவை இவ்வுலகில் தங்கிவிடுகிறது. பலனற்றவை அழிந்தே போய்விடுகின்றன. (மேலும் பார்க்க: 13:39,21:18&42:24). நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய உதாரணங்கள் தரப்படுகின்றன.

அது போலத்தான் உலக மக்களுக்கு பயன்படும் வாழ்க்கை நெறிமுறைகளும், நடைமுறைச் சட்டங்களும் உலகில் நிலைத்து நின்று செயல்படுகின்றன. தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள் அழிந்து போய்விடுகின்றன. மேலும் உலகிற்கு பலனளிக்கும் சமுதாயங்கள் சிறப்பாக வாழ்கின்றன. பலனளிக்காத சமுதாயங்கள் அழிந்து உலக வரைப் படத்திலிருந்து நீங்கி விடுகின்றன.


38.மனித செயல்களின் விளைவுகள்:

وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَظِلَٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ ۩.

13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை யெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸ{ஜுது செய்(து சிரம் பணி)கின்றன,அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
விளக்கம்:
அகிலங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் சிரம்பணிந்து செயல்பட்டு வருகின்றன. அவை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவை காலை முதல் மாலை வரையில் நிழல் தொடர்ந்து வருவது போல், அல்லாஹ்வின் கட்டளைக்கு தொடர்ந்து அடிபணிந்து செயல்படுகின்றன.

சூரிய வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தான், நிழலின் திசைகள் மாறுகின்றன. ஆனால் அந்த நிழல் தன் திசையை எவ்வாறு வேறு கோணத்தில் மாற்றிக்கொள்ள முடியாதோ, அதுபோலத் தான் பிரபஞ்ச இயற்கை படைப்புகள் தம் நிலையை தாமே ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது. மேலும் இந்த நிழலின் திசையை வேறு ஏதாவது சக்தியைக் கொண்டு மாற்றி அமைக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. அது போலத்தான் மனித செயல்களின் விளைவுகள், அவனை நிழல் போல் பின்தொடர்கின்றன. அந்த விளைவுகளை யாராலும் மாற்றி அமைக்கவே முடியாது.


39.இப்ராஹீம் நபியின் ஐயப்பாடு:

وَإِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةًۭ مِّنَ ٱلطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ ٱجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍۢ مِّنْهُنَّ جُزْءًۭا ثُمَّ ٱدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًۭا ۚ وَٱعْلَمْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.

2:260. இன்னும், இப்ராஹீம் :“என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான், “மெய்(யாக நம்புகிறேன்)! ஆனால் என் இதயம் அமைதி பெறும்பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்,“ (அப்படியாயின்) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, (அவை உம்மிடம்திரும்பி வருமாறு) பழக்கிக் கொள்ளும், பின்னர் அவற்றைப் பிரித்து, அவற்றின் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும், பின், அவற்றைக் கூப்பிடும், அவை உம்மிடம் வேகமாய்ப் (பறந்து) வரும், நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று அல்லாஹ் கூறினான்.

விளக்கம்:
செத்து மடிந்து கிடக்கும் இவ்வூர் மக்களை உயிர் பெறச் செய்வது எவ்வாறு என்ற ஐயப்பாடு இப்ராஹீம் நபி மனதிலும் இருந்து வந்தது. ஒருமுறை அவர், “இறைவா! உயிரற்று ஜடமாக வாழும் இம்மக்களை நீ எவ்வாறு உயிர் பெறச் செய்வாய்?” என்று கோரியபோது, இறைவன், “என் வழிகாட்டுதலில் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான். “மெய்யாகவே நம்புகிறேன். ஆனால் தெளிவுபெறும் பொருட்டு இதை நான் கேட்கிறேன்” என்றார்.

அதற்கு இறைவன்,“நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை நன்றாகப் பழக்கு. அவை உம்மிடம் நன்றாகப் பழகிய பின்னர், அவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து மலை உச்சி மீது வைத்து விட்டு, அவற்றை நீ அழைத்துப் பார். அவை உம்மிடம் வேகமாய்ப் பறந்து வந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்துகொள்” என்று கூறினான்.

அதாவது ஐந்தறிவு பெற்ற பறவைகளே நன்றாகப் பழகின பின், எவ்வளவுதான் தூரமாக அனுப்பினாலும், அவை உன்னுடைய ஒர் அசைவிற்கு இசைந்து ஒடோடி வந்து விடும் என்றால், ஆறறிவு பெற்ற மனிதனும் அவ்வாறு வர என்ன சிரமம் இருக்கப் போகிறது? அதற்காக நீ இறை வழிகாட்டுதலின் படி மக்களை நன்றாகப் பயிற்சி அளித்துப் பழக்க வேண்டும். இதற்காக பொறுமையும் நிதானமும் விடாமுயற்சியும் வேண்டும். பறவைகள் முதன் முதலில் உங்களைப் பார்த்து ஓடுவது போல் மார்க்க உண்மைகளை எடுத்துரைக்கும் போது மக்களும் ஓடுவார்கள். நிதானத்துடனும் விவேகத்துடனும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். (பார்க்க 16:125)


40.தாவூது நபியும் 99 ஆடுகளும்:

۞ وَهَلْ أَتَىٰكَ نَبَؤُا۟ ٱلْخَصْمِ إِذْ تَسَوَّرُوا۟ ٱلْمِحْرَابَ.

38:21. அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது ஓய்வு எடுப்பதற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி.
விளக்கம்:
இருவர், எந்த முன் அறிவுப்பும் செய்யாமல், திடீரென்று தாவூதுடைய இருப்பிடத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். அங்கு நடந்த விவகாரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍۢ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ.

38:22. தாவூதிடம் நுழைந்த போது அவர், அவர்களைக் கண்டு திடுக்குற்றார். அப்போது அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள். எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார். எங்கள் இருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!"
விளக்கம்:
அவர்களைக் கண்ட தாவூத் நபிக்கு மனச் சஞ்சலம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், “நீங்கள் பயப்படாதீர்கள். எங்களுக்குள் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தாங்களிடம் தான் எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும். எனவே தாங்கள் தீர்ப்பளிப்பதில் தவறிழைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தாங்கள்தான் சொல்லவேண்டும்” என்றனர்.

إِنَّ هَٰذَآ أَخِى لَهُۥ تِسْعٌۭ وَتِسْعُونَ نَعْجَةًۭ وَلِىَ نَعْجَةٌۭ وَٰحِدَةٌۭ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِى فِى ٱلْخِطَابِ.

38:23. (அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர். இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன. ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடு தான் இருக்கிறது. அவர் அதனையும் தனக்குக் கொடுத்து விட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்."
விளக்கம்:
நடந்த உண்மையை விசாரிக்கையில் அவ்விருவரில் ஒருவர், “இவர் என் உடன்பிறந்த சகோதரர் ஆவார். இவரிடம் தொண்ணுற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன. ஆனால் என்னிடமோ ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. இவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி வந்தார். மக்களிடம் இதற்கு தீர்ப்புக் கேட்கும்போது, அவர்களும் இவரையே ஆதரித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் வாதத்தில் என்னை மிகைத்து நிற்கிறார்” என்று வழக்கின் உண்மை நிலையை எடுத்துரைத்தார்.

قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٌۭ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًۭا وَأَنَابَ ۩.

38:24. (அதற்கு தாவூது:)“உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம் மீது அநியாயம் செய்துவிட்டார். நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்,ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர. இத்தகையவர் சிலரே"" என்று கூறினார். இதற்குள்:“நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்"" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் பாதுகாப்புத் தேடி வேண்டுபவராக இறைவனை நோக்கினார்.
விளக்கம்:
இதைக் கேட்ட தாவூத் நபி, “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது அநியாயச் செயலாகும். அவர் உம்மீது அநியாயம் செய்கிறார். நிச்சயமாக பங்காளிகளில் பெரும்பாலோர் இப்படித்தான் மோசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இப்படிச் செயல்படுபவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள்” என்று கூறி சரியான தீர்ப்பு அளித்தார். ஆனால் அவர் இந்தத் வழக்கில் ஓர் உண்மை மறைந்திருப்பதைக் கவனித்தார். இந்த வழக்கு இறைவனிடமிருந்து தனக்குக் கிடைத்த அறிவிப்பு என எண்ணி, நாட்டில் அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இப்படியாக அவர் அரசராக இருந்த போதும், இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.

அதாவது தாவூது நபி, அந்த வழக்கைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தார். விவகாரம் ஆடுகள் விஷயமாக வந்த வழக்காளிகளுக்கு மட்டும் அல்ல என்பதை உணர்ந்தார். நாட்டில் எங்கும் மோசடி நடந்து வருவதையும் மக்கள் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும், ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் அறிந்துகொண்டார். அவர் அரசராக இருந்தும், இதைக் கவனத்தில் கொள்ளாதது அவருடைய தவறாகும். இந்த ஆட்டின் வழக்கு, இதை அவருக்கு உணர்த்துவதாக இருந்தது. அயல் நாட்டவரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள படைகளைத் தயார்படுத்திய தாவூது நபி, உள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் விஷமிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது அவருடைய ஆட்சியில் இருந்த குறைப்பாடாகும். எனவே பொது மக்களின் நலனைப் பேணிக் காக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இன்றைக்கும் நாம் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

فَغَفَرْنَا لَهُۥ ذَٰلِكَ ۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ.

38:25. ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம். அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய( அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
விளக்கம்:
அவ்வாறே அவர் எடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகளுக்கு நம்முடைய துணையும் ஆதரவும் இருந்து வந்தது. இப்படியாக அவர் ஆற்றிய சிறந்த பணிக்காக அவருக்கு உயர் அந்தஸ்தும், அழகிய அரண்மனை வாசமும் கிடைக்கச் செய்தோம்.

يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَٰكَ خَلِيفَةًۭ فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ.

38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் ஆட்சியாளராக ஆக்கினோம். ஆகவே மனிதர்களிடையே நேர்மையைக் கொண்டு ஆட்சி செய்யும். அன்றியும், மனோ இச்சையைப் பின்பற்றாதீர். (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுகிறாரோ, அவர்களுக்குக் கேள்விக் கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்துவிட்டமைக்காக மிகக் கொடிய வேதனையுண்டு.
விளக்கம்:
இறைவனிடமிருந்து, “தாவூதே! நிச்சயமாக நாம் உமக்கு நாட்டை ஆளும் வாய்ப்பினை வழங்கியுள்ளோம். எனவே மக்களிடையே நியாயமான தீர்ப்புகள் கிடைக்கும்படி வழி செய். இப்படியாக நியாயமான முறையில் ஆட்சி செய்து வா. அன்றியும் மக்களின் விருப்பங்களுக்கு ஒருபோதும் இணங்கி செயல்படாதீர். ஏனெனில் அவர்கள் தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுகிறார்கள். எனவே அவை அல்லாஹ்வின் பாதையைவிட்டு உம்மை திசைத் திருப்பிவிடும். யார் அல்லாஹ்வின் இந்த ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்று மக்களுக்கு எச்சரிப்பீராக. இதையும் மீறி அநியாயச் செயல்களில் ஈடுபடுவோர் மிகக் கொடிய வேதனையுண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்” என்று இதுபோன்ற கட்டளைகள் அடங்கிய ஜபூர் எனும் வேதம் அவருக்கு அளிக்கப்பட்டது.(பார்க்க 17:55)


41.சுலைமான் நபியின் சாம்ராஜ்ஜியம்:

சுலைமான் நபியின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பு அவருடைய மகனுக்குக் கிடைத்தது. ஆனால் அவனோ தன் தந்தை பாட்டனாரைப் போல் இல்லாமல் எதற்கும் பயன்படாத உதவாக்கறையாக இருந்தான். (பார்க்க 38:34) எனவே சுலைமான் நபியின் பொற்கால சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்க ஆரம்பித்தது.

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ.

34:14. அவர் (சுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்தத்) தடியை அரித்துவிட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை, அவர் கீழே விழவே, ""தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவு தரும் வேதனையில் தாங்கள் தரிக்கப்பட்டிருந்திருக்க வேண்டியதில்லை"" என்று ஜின்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
விளக்கம்:
சுலைமான் நபியின் மறைவுக்குப்பின், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள், அவர் நடத்தி வந்த அற்புதமான நேர்த்தியான, ஆட்சியின் சிறப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

இதனால் அவருடைய ஆட்சியின் புகழ் செல்லறிக்க ஆரம்பித்தது. கோட்டைக்குள் நடக்கின்ற அநியாய அக்கிரமச் செயல்களைப் பற்றி, அதைப் பாதுகாத்து வந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த காவலாளிகளுக்கு நீண்ட நாள் வரையில் தெரியாமலே இருந்தது.

அந்த ஆட்சியாளர்கள் செய்த அக்கிரமங்களினால் நாட்டில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தன. இப்படியாக சுலைமான் நபியின் வான்புகழ் சாம்ராஜ்யம் முற்றிலுமாக சாய்ந்து விட்டது. அப்போது தான் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்களைப் பற்றி அந்த காவலாளிகளுக்குத் தெரிய வந்தது. எனவே அவர்கள் மிகவும் வருத்தத்துடன், “நாங்கள் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்களை இதற்கு முன்பே அறிந்திருந்தால், இந்த அளவுக்கு நம்முடைய கடின உழைப்புகள் வீணாகி இருக்காதே. நாம் இழிவுக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்க மாட்டோமே” என்று புலம்பலானார்கள்.

இதுதான் பேர்ரரசர் சுலைமான் நபியின் ஆட்சியின் புகழும், அதன் வீழ்ச்சியின் காரணங்களும் ஆகும். மேலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆட்சி பீடத்தில் நடக்கின்ற விஷயங்களைப் பற்றி அந்த “ஜின்”களுக்குத் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது அந்த “ஜின்”களுக்கு மறைவான விஷயங்கள் எதுவும் தெரியாது. ஆனால் நம் நாட்டிலுள்ள மாந்தரிகர்களைப் பாருங்கள். அவர்கள் ஜின்னாத்துகளை அடக்கி வைத்துக்கொண்டு, ஏதேதோ மந்திரங்களை செய்து மக்களின் குறைகளை தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர். இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். எனவேதான் “ஜின்”கள் என்றால் மலைவாழ் மக்கள் அல்லது பழங்குடியினர் என்று பொருள் தருகிறோம்.


42.இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் எறிந்தது?

இப்ராஹீம் நபி சிலை வணக்க வழிபாட்டிற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்து வந்ததைத் தொடர்ந்து, அவ்வூர் மக்கள் கொதித்துப் போனார்கள். இந்த சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆனில் இவ்வாறு வருகிறது.

قَالُوا۟ حَرِّقُوهُ وَٱنصُرُوٓا۟ ءَالِهَتَكُمْ إِن كُنتُمْ فَٰعِلِينَ.

21:68 (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள், (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்"" என்று கூறினார்கள்.
விளக்கம்:
“இவரை நீங்கள் ஏதாவது செய்ய நாடினால் இவரைப் நெருப்புக் குண்டத்தில் போட்டு எரித்து விடுங்கள். இப்படியாக நீங்கள் உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஆவசேமாகப் பேச ஆரம்பித்தனர்.

சிந்தனையாளர்களே! தெய்வங்கள் மனிதனுக்கு உதவிச் செய்யப் போய், அந்தத் தெய்வங்களுக்கு உதவி செய்யுமாறு மக்களை ஏவுகிறார்கள் என்பதைக் கவனித்தீர்களா? இதுதான் அந்தக் கற்பனைத் தெய்வங்களின் உண்மை நிலையாகும்.

மாறாக மக்களிடையே நிலவி வந்த ஆவேசத் தீ, அதிகரித்துக் கொண்டே சென்றது. எனவே அங்கு இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி அவர் அவ்வூரைவிட்டு ஹிஜ்ரத் செய்து பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று விட்டார். (பார்க்க 37:98) எனவே மக்களின் கோபத் தீயும் அடங்கி விட்டது.

قُلْنَا يَٰنَارُ كُونِى بَرْدًۭا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ.

21:69.(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம்.
விளக்கம்:
இப்படியாக இப்ராஹீமுக்கு எதிராக எழுந்த ஆவேசத் தீ, இறைவனின் நியதிப்படி தணிந்து விட்டது. அங்கிருந்து வெளியேறி அவர் சென்ற இடமும் (பாலஸ்தீனம்) அவருக்கு குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் இருந்தது.

وَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَخْسَرِينَ.

21:70. மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
விளக்கம்:
மேலும் அவரைத் தீர்த்துக்கட்ட சதி செய்யவே நாடினார்கள். ஆனால் அவர் ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டதால், அவர்களுடைய சதி திட்டங்கள் யாவும் வீணாகிப் போய்விட்டன. (மேலும் பார்க்க 29:26)

அதாவது அவரை உண்மையிலேயே நெருப்பில் போடவில்லை. அவர்கள் சதிதிட்டத்தை தீட்டினார்கள் என்பதும் அது பலிக்கவில்லை என்பதும் இதிலிருந்து புலனாகிறது.

وَنَجَّيْنَٰهُ وَلُوطًا إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا لِلْعَٰلَمِينَ.

21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன் லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம், பெறச்செய்தோம்.
விளக்கம்:
இப்படியாக அவரையும், அவருடைய சகோதரர் மகன் லூத்தையும் அந்த பேராபத்திலிருந்துக் காப்பாற்றி எல்லா வளங்களையும் பெற்று, சிறப்பாக விளங்கிய பாலஸ்தீன நாட்டிற்குச் செல்ல வழி செய்தோம். மேலும் அந்த நாடு அனைவருக்கும் பாக்கிய மிக்க நாடாக இருந்தது.


43.ஸபா நாட்டு இளவரசி பளிங்கு மாளிகைக்கு விஜயம் செய்தது:

قِيلَ لَهَا ٱدْخُلِى ٱلصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةًۭ وَكَشَفَتْ عَن سَاقَيْهَا ۚ قَالَ إِنَّهُۥ صَرْحٌۭ مُّمَرَّدٌۭ مِّن قَوَارِيرَ ۗ قَالَتْ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக! ""என்று சொல்லப்பட்டது, அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள், எனவே (தன்ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற சுலைமான்) “அது நிச்சயமாக பளிங்குகளால் பளபளப்பாகக்கப் பட்ட மாளிகைதான்!"" என்று கூறினார். (அதற்கு அவள்) ""இறைவனே! நிச்சயமாக எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன், அகிலங்களுக்கு எல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, சுலைமானுடன் நானும் (முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்"" எனக் கூறினாள்.
விளக்கம்:
ஸபா நாட்டு இளவரசிக்கு கண்ணாடி மாளிகையில் வரவேற்பு நடைப்பெற்றது. சுலைமான் நபி, அந்த மாளிகையின் நுழைவாயிலில் தண்ணீர் தடாகம் போன்று தளத்தை ஏற்படுத்தியிருந்தார். அதைத் தண்ணீர் என நினைத்து இளவரசி கலக்கம் அடைந்து, தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தினார். இதைக் கண்ட சுலைமான் நபி, “இது வழுவழுப்பான கண்ணாடிகளால் தளம் போடப்பட்ட மாளிகையாகும்” என்றார். இதைப் பார்த்து பிரமிப்பில், “என் இறைவா! நிச்சயமாக எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கும் சுலைமான் நபிக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்” என்றாள்.

அதாவது கண்ணாடியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தளத்தைத் தண்ணீர் தடாகம் என எவ்வாறு தவறாக எண்ணிக் கொண்டிருந்தாளோ, அவ்வாறே இறைவனின் படைப்பான சூரியனையே இறைவன் எனத் தவறாக எண்ணிக் கொண்டிருந்ததை சுலைமான் நபி இளவரசிக்குப் புரிய வைத்தார். ஓர் அரசன் இன்னொரு நாட்டு அரசனுக்கு இத்தகைய உவமானப் பொருட்களைக் கொண்டு உண்மையை விளக்குவது மரபாக இருந்து வந்தது.

மேலும் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான வளர்ச்சி எந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது என்பதையும் இவ்வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஸபா நாட்டில் இத்தகைய பளிங்கு மாளிகை எல்லாம் அக்காலத்தில் இல்லை. எனவே அந்தப் பளிங்கு மாளிகையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள். விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இந்த அளவுக்கு வளர்ச்சிப் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்பதை அந்த அரசி தெரிந்து கொண்டார். எனவே இறைவனின் பிரமாண்டமான பரிபாலன ஏற்பாட்டினை ஏற்றுக் கொள்வதாக அவள் அறிவித்தார். காரணம் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமின்றி சமுதாய ஒழுக்க மாண்புகளையும் பேணிக்காக்க இறைவழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன என்பதையும் அவள் புரிந்து கொண்டார்.


44.ஹுத் ஹூது ஒரு பறவையா?<>

وَتَفَقَّدَ ٱلطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَآ أَرَى ٱلْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ ٱلْغَآئِبِينَ.

27:20. அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: "நான் (இங்கே) ஹுது ஹுதுவைக் காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகிவிட்டதோ? என்று கூறினார்.
விளக்கம்:
ஒருமுறை சுலைமான் நபி குதிரைப் படைகளையும் சேனைகளையும் மேற்பார்வை செய்து வந்தார். அதில் உளவுப் படையைச் சேர்ந்த, “ஹுத் ஹுதூ” என்ற படைத் தலைவரைக் காணமால் போகவே, அவரைப் பற்றி விசாரித்து வந்தார். நெடு நாட்களாகியும் அவரைப் பணியில் இல்லாமல் போனது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًۭا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ.

27:21. “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன், அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன், அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்"" என்றும் கூறினார்.
விளக்கம்:
மேலும் சுலைமான் நபி, “சட்ட விரோதமாக அரசுக்கு தகவல் எதுவும் அனுப்பாமல் மாயமாய் மறைந்திருக்கும் அவருக்கு ராணுவச் சட்டப்படிக் கடுமையான தண்டனைக் கிடைக்கும். தான் பணியில் இல்லாமைக்குத் தக்க ஆதாரத்தைக் கொண்டுவரவில்லை என்றால் அவருக்குக் மரண தண்டனையும் கிடைக்கலாம்” என்றார்.

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍۢ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍۢ يَقِينٍ.

27:22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார், அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா' விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
விளக்கம்:
இதைக் கேள்வியுற்ற “ஹுத் ஹுதூ” என்கிற படைத்தலைவர் சில நாட்களில் அரசரிடம் வந்தடைந்தார். அவர் அரசரிடம், “தாங்கள் அறியாத சில விஷயங்களை நான் அறிந்து தகவல் கொண்டு வந்துள்ளேன். அது ஸபா நாட்டைப் பற்றியதாகும். நான் சமர்ப்பிக்கும் தகவல்கள் யாவும் உண்மையானதே ஆகும்” என்று தான் நெடுநாட்களாக இல்லாததற்கு விளக்கமளித்தார்.

إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةًۭ تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍۢ وَلَهَا عَرْشٌ عَظِيمٌۭ.

27:23.“நிச்சயமாக அ(த்தேசத்த )வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான்கண்டேன், இன்னும் அவளுக்கு(த் தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது, மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
விளக்கம்:
“அந்நாட்டை ஒரு பெண்மணி ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டு அரசி எல்லா வகையான வளங்களையும், வசதி வாய்ப்புகளையும் கொண்டு தன்னிறைவு பெற்று ஆட்சி செய்து வருகிறார். அதனால் அவர்கள் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பிற நாட்டவரிடம் கையேந்து வதில்லை. அப்படிப்பட்ட மகத்தான பலம்வாய்ந்த ஆட்சியாக இருக்கிறது” என்று ஹுத் ஹுதூ தகவல் அளித்தார்.

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ.

27:24. அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வேயன்றி, சூரியனுக்கு ஸுஜுது செய்வதை நான் கண்டேன், அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான், ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
விளக்கம்:
“ஆனால் அந்த அரசியும் நாட்டு மக்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, சூரியனைத் தெய்வமாக எடுத்துக் கொண்டு அதை வணங்கி வருகின்றனர். மேலும் அவர்கள் செய்து வரும் தவறானச் செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகாகக் காணப்படுகின்றன. எனவே அவர்களுடைய மனோ இச்சை அவர்களை நேர்வழிப் பெறுவதிலிருந்து தடுத்து வருகின்றது. அதனால் அவர்கள் நேர்வழிப் பெறவில்லை”

அதாவது அந்நாட்டு அரசும் மக்களும் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாததால் அவர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். தற்சமயம் அவர்கள் சிறப்பாக வாழ்ந்தாலும், பிற்காலத்தில் அவர்களுடைய சமுதாயத்தில் சீற்கேடுகளும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டு அழிவு ஏற்பட்டு விடும். மேலும் அவர்களுடைய ஒழுக்க மாண்புகள் சீரழிந்து வருகின்றன. எனவே அந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது என்ற உண்மை அந்நாட்டு அரசிக்குத் தெரியவில்லை.

أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ.

27:25. வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்: இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக் குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜுது செய்து வணங்கவேண்டாமா?
விளக்கம்:
“வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிலுள்ள மறைவானவற்றிலிருந்து தேவைக்கு ஏற்ப வெளிப்படுத்துபவனும் ஆகிய ஏக இறைவனான அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணங்கி அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டாமா? அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் மறைவான செயல்களும் வெளிப்படையான செயல்களும் அல்லாஹ்வுக்கு மறைவானவை அல்ல என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை”

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۩.

27:26. அல்லாஹ், அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை, (அவன்) மகத்தான அர்ஷ்க்கு உரிய இறைவன்"" (என்று ஹுது ஹுது கூறிற்று).
விளக்கம்:
“அகிலங்களை எல்லாம் படைத்து அவற்றை சரியான முறையில் பரிபாலித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அல்லாஹ்வைத் தவிர, வேறு யாருடைய ஆட்சி அதிகாரமும் எங்கும் நடைபெறுவதில்லை. உண்மை இவ்வாறிருக்க அவர்கள் இறைவனின் படைப்பாகிய சூரியனைக் கடவுளாகக் கருதி அதை வணங்கி வருவது சரியாகுமா? என்றும் அவர் கேட்டார்.

இப்படியாக உளவுப்படைத் தலைவரான ஹுத்ஹுது அந்நாட்டைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து, சுலைமான் நபியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்சொன்ன அனைத்து விஷயங்களையும் கவனித்துப் பாருங்கள். ஒரு பறவையால் இத்தனை பணிகளையும் செய்ய முடியுமா? எனவே ஹுத் ஹுது என்பவர் உளவு படைத் தலைவர் என்பதே சரியான விளக்கம். நாமும் இலங்கை நாட்டின் தமிழ் வீரர்களை “விடுதலைப் புலி” என்கிறோம். அவர்கள் நிஜத்தில் புலிகளா? அது வீரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அது போலத்தான் அசுர வேகத்தில் செயல்படக் கூடிய படைத்தலைவர் இதுவும்.


45.சந்திரன் பிளந்தது?

சாதாரணமாக நாம் வீட்டில் பேசும் போது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதே வார்த்தையை அரசியல் ரீதியாகப் பேசும் போது அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் வரும். உதாரணத்திற்கு வீட்டில் பேசும்போது குழம்பு நல்ல ருசிதான். ஆனால் கொஞ்சம் உப்பு காரம் குறைவு என்போம். அதே சட்டசபையில் நடக்கும் விவாதங்களைப் பற்றி எழுதும் போது, கார சாரமான விவாதம் என்கிறோம். அங்கு காரத்திற்கும் சாரத்திற்கு வேறு அர்த்தம் வரும். அதாவது விவாதங்களின் வேகத்தைக் குறிக்கும். இவ்வாறு பேசும் போதுதான் அந்த சொல்லுக்கே வலிமையும் அழகையும் சேர்க்கிறது. அது போலத்தான் திருக்குர்ஆன் உலக பொதுமறை என்பதால் குடும்பவியல் விவகாரத்தில் சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அதே அரசியல் மற்றும் உலக விவகாரங்களைப் பற்றி பேசும் போது, இலக்கிய நயத்துடன் பேசுகிறது. அதற்கு நாம் நேரடி மொழிபெயர்ப்பு செய்தால் அர்த்தம் கெட்டுவிடுகிறது.

நம் நாட்டிலும் ஒரு கட்சி தோல்வியுறும் போது சூரியன் அஸ்தமிட்டுவிட்டான் என்கிறோம். இன்னொரு கட்சி தோற்கும் போது இலை உதிர்ந்தது என்போம். இதைப் படிக்கும் போது நாம் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்பதை எளிதாக அறிந்து கொள்கிறோம். அது போலத்தான் சந்திரன் பிளக்கும் விஷயமும் ஆகும். திருக்குர்ஆனின் வாசகத்தைக் கவனியுங்கள்.

ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ

54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது, சந்திரனும் பிளந்து விட்டது.
விளக்கம் :
இதுவரையில் அளிக்கப்பட்ட வாக்குபடி, புரட்சி வெடிக்கும் கால கட்டம் நெருங்கிவிட்டது. அப்போது சந்திரனை தேசிய சின்னமாகக் கொண்டு நடக்கும் ஏகாதிபத்திய ஆட்சியமைப்பில் பிளவு ஏற்பட்டுப் போகும்.

மக்கமா நகரில் குரைஷியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. அதன் தேசிய கொடியின் சின்னம் சந்திரனாகும். இந்த வாசகத்திற்கு இந்தப் பொருளை பொருத்தமானதாகும். காரணம் சந்திரனின் புவிஈர்ப்பைக் கொண்டுதான் பூமியில் உயிரினம் வாழமுடிகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி சற்றே தள்ளிப் போனாலோ அல்லது குறைந்து விட்டாலோ, இங்கு உயிரினம் உயிர் வாழ முடியாது. உண்மை இவ்வாறிருக்கும் போது, சந்திரன் பிளப்பது என்பது அல்லாஹ் உருவாக்கியுள்ள இயற்கைச் சட்டங்களுக்கு புறம்பான ஒன்றாகும்.

وَإِن يَرَوْا۟ ءَايَةًۭ يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌۭ مُّسْتَمِرٌّۭ.

54:2.எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், “இது வழமையாக நடைபெறும் சூனியம்தான்"" என்றும் கூறுகிறார்கள்.
விளக்கம் :
கவனித்தீர்களா? அவர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தைப் பற்றி முன் எச்சரிக்கை செய்தி வருகிறது. ஆனால் அவர்கள் அதை வெற்றுப் பேச்சு என்று சொல்லி அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஒருவேளை சந்திரனையே பிளந்து காட்டி இருந்தாலும், அதைப் பார்த்து சூனியம் தான் என்று சொல்கிறார்கள் என்றால் அப்படி அதை செய்து காட்டியும் ஒரு பலனும் இல்லையே. எனவே நாம் தந்த விளக்கம்தான் பொருத்தமானதாகும். ஏனெனில் மக்கமா நகரை முஹம்மது நபிஸல் அவர்கள் காலத்தில், போரிடாமலேயே வெற்றியை ஈட்டிய சம்பவத்தைப் பற்றி 59:2-6 திருக்குர்ஆன் வாசகங்களைப் படித்துப் பாருங்கள்.

சிந்தனையாளாகளே! இதுதான் சந்திரன் பிளந்த சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மைகளாகும். இதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திரனை பிளந்து காட்டியதாக கதைகளை ஜோடித்து சொல்லி வருகிறார்கள். இவை எல்லாம் ஷேக்குமார்களின் புரளிகள் ஆகும்.


46.மலைகள் தூள் தூளாகிவிடும்?

நாம் ஏற்கனவே சொன்னது போல அரசியல் ரீதியாகப் பேசும் போது, பெரிய பெரிய செல்வந்தர்களை அசைக்க முடியாத மலைகள் என்போம். காரணம் முஹம்மது நபி(ஸல்) காலத்திலும், செல்வத்தை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்தவர்கள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி நிலை நிறுத்தப்படும் கால கட்டத்தில், அவர்களுடைய செல்வக் குவிப்பு யாவும் குறைந்து சமதர்ம சமுதாயமாக உருவாகும். இதைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّى نَسْفًۭا.

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்" என்று நீர் கூறுவீராக.
விளக்கம் :
பெரியப் பெரிய மலைகளைப் போல் செல்வங்களையும் அதிகாரங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலைமை என்னவாகும் என அவர்கள் பயத்தில் கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் என் இறைவன் தரைமட்டமாக ஆக்கிவிடுவான் என்று கூறிவிடுவீராக.

இவ்வாசகத்தில் வரும் ஜிபால் என்ற வார்த்தைக்கு “மலை” என்பது அதன் பொருளாகும். ஆனால் அரசியல் ரீதியாகப் பேசும் போது அது மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்துக் கொண்டு தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற மமதையில் இருப்பவர்களைக் குறிக்கும். மேலும் இதன் தொடர்ச்சியாக வரும் வாசகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த விளக்கமே பொருத்தமாக உள்ளது.

فَيَذَرُهَا قَاعًۭا صَفْصَفًۭا.

20:106.“பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்."
விளக்கம் :
அதன் பின் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமதர்ம ஆட்சியமைப்பு ஏற்படும்.

لَّا تَرَىٰ فِيهَا عِوَجًۭا وَلَآ أَمْتًۭا.

20:107.“அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்."
விளக்கம் :
அப்போது ஏழைப் பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் வேற்றுமை பகைமையும் இருப்பதாக நீர் எங்கும் காணமாட்டீர்

يَوْمَئِذٍۢ يَتَّبِعُونَ ٱلدَّاعِىَ لَا عِوَجَ لَهُۥ ۖ وَخَشَعَتِ ٱلْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًۭا.

20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள், அதில் எத்தகைய கோணலும் இருக்காது, இன்னும் (அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கிவிடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
விளக்கம் :
அப்போது இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக அமைப்பும் ஆட்சியமைப்பும் உருவாகிட அழைப்புகள் வரும். அவர்களைப் பின்பற்றி அனைத்து தரப்பு மக்களும் செல்வார்கள். அதில் எந்த கோணலும் இருப்பதை நீங்கள் காணமாட்டீர். அப்போது அருட்கொடையாளனின் வழிகாட்டுதலுக்கு எதிராக எழுந்த குரல்கள் யாவும் ஒடுங்கிவிடும். அவர்கள் யாவரும் இருந்த இடம் காணாமல் போய்விடுவார்கள்.

يَوْمَئِذٍۢ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَرَضِىَ لَهُۥ قَوْلًۭا.

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலன் அளிக்காது.
விளக்கம் :
அப்படியொரு கால கட்டங்களில் அருட்கொடையாளன் பொருந்திக் கொண்டவர்களைத் தவிர வேறு யாருடைய பரிந்துரையும் பலனளிக்காது.

இவை இஸ்லாமிய ஆட்சி காலத்தில் நடைபெறும் நீதிமன்ற விவகாரங்களாகும். அர்ரஹ்மானுக்குப் பொருந்திக் கொண்டவர்கள் என்றால் அர்ரஹ்மான் நிர்ணயித்துள்ள “வழக்கறிஞர்கள்” என்ற பட்டம் பெற்றவர்கள் என்பது அதன் பொருளாகும். அவர்கள் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவர்கள், நிரபராதியாக இருந்தால், அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற கியாம நாளில் இத்தகைய சட்ட நிபுணர்களின் அவசியம் இருக்காது. காரணம் அனைத்து விஷயங்களையும் அறிபவன்தான் அல்லாஹ்.

சிந்தனையாளர்களே! நாம் ஏற்கனவே எழுதியது போல் “ஜிபால்” என்ற வார்த்தைக்கு சமுதாயத் தலைவர்கள் என்றும் அகராதி அர்த்தங்கள் வருகின்றன. ஃகாமூஸ் மற்றும் லிஸானுல் அரப் போன்ற அகராதிகளைப் பாருங்கள். இந்த அர்த்தத்தைக் கொடுப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. திருக்குர்ஆனில் பல வாசகங்களில் பூமி ஆடாது அசையாதிருக்க மலைகளை ஆணிகளைப் போல் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. (பார்க்க 78:7) ஆணிகளைப் பெயர்த்து எடுத்துவிட்டால் இப்பூமியின் புவிஈர்ப்பு சிதறி பூமியே சின்னா பின்னமாகிவிடும். அதைத் தொடர்ந்து இங்கு யாரும் உயிர் வாழ முடியாது. ஆனால் திருக்குர்ஆன் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவ நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுகிறது. எனவே நாம் தந்துள்ள அர்த்தமே சிறந்தது.


47.சூரியன் சுருட்டப்படும்?

சிந்தனையாளர்களே! திருக்குர்ஆன் இறக்கியருளப்படும் கால கட்டத்தில் மக்கமா நகரில் குரைஷியர்களின் ஏகாதிபத்திய ஆட்சியும், வல்லரசாக இருந்த ஈரான் நாட்டில் ஃகைஸர் என்கிற கொடுங்கோலனின் ஆட்சியும் நடைபெற்று வந்தன. குரைஷியர்களின் கொடிச் சின்னம் (ஃகமர்) சந்திரனாக இருந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்த சந்திரன் பிளந்து அந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது (54-1). ஈரான் நாட்டின் கொடிச் சின்னம் (ஷம்ஸ்) சூரியனாகும். இந்த கொடுங்கோலாட்சி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அழிக்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டில் மக்களாட்சி ஏற்பட்டு அதைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் மறுமலர்ச்சிப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

வரவிருக்கும் காலங்களில் தன்னிச்சையாக நடைபெற்று வரும் ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பதிலாக குர்ஆனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கரங்களில் வந்து விட்டால் அந்தக் கால கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்கும்.

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ.

81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப் படும் போது –
விளக்கம் :
குர்ஆனிய ஆட்சிமுறை ஏற்படும் போது, அந்த ஏகாதிபத்திய ஆட்சிமுறை சுருட்டி வைக்கப்பட்டு விடும்.

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ.

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும் போது -
விளக்கம் :
அந்த ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிறிய அரசமைப்புகளின் ஆதிக்கமும் வலுவிழக்க ஆரம்பிக்கும்.

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ.

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது -
விளக்கம் :
செல்வங்களைக் குவித்து வைத்துக்கொண்டு தம்மை அசைக்க முடியாத “மலைகள்” என்ற எண்ணத்தில் இருக்கும் சீமான்களின் நிலையையும் தடுமாற ஆரம்பிக்கும்.

சிந்தனையாளர்களே! மேற்கண்ட திருக்குர்ஆன் வாசகங்களுக்கு நேரடி பொருள் கொண்டால், இந்தப் பிரபஞச்த்தில் வெடிக்கும் மாபெரும் புரட்சி என்றே தெரிகிறது. தற்சமயம் நம்மிடம் உள்ள அறிவை வைத்துக் கொண்டு, அது எப்போது நடக்கும் என்று கணித்துக் கூற இயலாது. ஆனால் மேற்சொன்ன புரட்சிகள் இவ்வுலகிலேயே நடந்ததால் அதற்கு நாம் இவ்வாசகங்களுக்கு உவமானகப் பொருள் தந்துள்ளோம்.


48.அபாபீல் பறவைகள்தாம் கஅபதுல்லாவைக் காப்பாற்றியதா?

முன்னுரை : ராஜ தந்திரம் என்பது போல, போர் தந்திரங்களும் முக்கியம் வாய்ந்தவை. படைப் பலத்தை விட இந்த தந்திரங்கள் நல்ல பலன்களை ஈட்டித் தரும். இன்றைய நவீன யுத்தங்களும் இதே அடிப்டையில்தான் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த அத்தியாயம் பேசுகிறது. வரலாற்றுக் குறிப்புப்படி அப்ரஹா என்ற படைத்தலைவன் கஅபாவின் கட்டிடத்தை வேரோடு தகர்த்தெறிய எண்ணி இரகசியமாக திட்டமிட்டு பெரிய யானைப் படைகளுடன் கஅபாவிற்கு பக்கத்தில் உள்ள மலைக்குப் பின்புறத்தில் வந்து கூடினான். மறு நாள் காலையில் திடீர் தாக்குதல் நடத்தி அதை அழித்திட வேண்டும் என்பது அவனுடைய சதி திட்டம். ஆனால் அவன் கண்டதோ மிகப் பெரிய தோல்வியே. அது எப்படி என்பதை நாம் பார்ப்போம்.

ஏகாதிப்பத்திய ஆட்சியை நடத்தி வரும் அதிகார வர்க்கம் எப்பொழுதும் தம்மிடமுள்ள பெரிய படைப் பலத்தையே நம்பி தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற நினைப்பில் இருக்கும். ஆனால்

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

105:1. (நபியே!) யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான்என்பதை நீர் பார்க்கவில்லையா?
விளக்கம் :
யானைப் படை வீரர்களுடைய நிலைமையை உம்முடைய இறைவன் எவ்வாறு உருமாற்றினான் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கவில்லையா? இதை அவர்களிடம் கேளுங்கள்.

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ.

105:2.அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விட வில்லையா?
விளக்கம் :
அவர்களுடைய இரகசிய சதி திட்டங்கள் உமது இறைவனின் நியதிப்படி எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதை நீங்களே பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா?

அந்த யானைப் படை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்த மலைக்குப் பின்புறத்தில் இரகசியமாக கூடியிருந்தார்கள்.

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ.

105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
விளக்கம் :
இறைவனின் நியதிப்படி பருந்துகள் மற்றும் மாமிச பட்சிகளின் கூட்டம் அந்தப் படைகள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பறந்து வந்தன. இப்படியாக அந்த இரகசிய சதி திட்டம் அம்பலமானது.

பொதுவாக போர் சமயங்களிலோ அல்லது மிருகங்கள் வேட்டையாடும் போதோ, தமக்கு உணவு கிடைக்கும் என்பதை இயல்பாகவே தெரிந்து கொண்டு, அந்தப் பறவைகள் மேல் மட்டத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து வரும். அதே போல் மலைக்கு அப்பால் வழக்கத்திற்கு மாறாக பறவைகள் கூட்டம் கூட்டமாக பறப்பதைக் கண்டு, ஏதோ நிகழ்வதாக மக்காவாசிகளால் யூகிக்க முடிந்தது.

تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ. فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ.

105:4-5. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால் அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.
விளக்கம் :
அதன்பின் நீங்கள் மலைகள் மீது ஏறி இரவோடு இரவாக கருங்கற்களை அவர்கள் மீது வீசி எறிந்தீர்கள். அந்தக் கூட்டத்தில் யானைகள் தாக்கப்பட்டதால் அவை இங்கும் அங்குமாக ஓடின. இதனால் அங்கு தங்கியிருந்த அந்தப் படைவீரர்கள் யானைகளால் மிதிபட்டு நசுங்கி போனார்கள். இப்படியாக அந்த பறவைக் கூட்டத்திற்கு மென்று தின்ன கூள் போல சரியான ஆகாரம் கிடைத்து விட்டது.

படப்பினைகள் :
(1) எனவே படைபலத்தோடு சிந்தனைப் பலமும் என்றென்றும் அவசியம் ஆகும். தரை வழி தாக்குதலை விட வான் வழித் தாக்குதல்கள் எதிரிக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி எளிதில் வீழ்த்திட முடியும் என்பது இந்த அத்தியாயத்திலிருந்து புலனாகிறது.
(2) மேலும் மனித நேயம் மற்றும் மனித உரிமைகள் காப்பாற்று வதற்காகவே போரிடுவதற்கு அனுமதி தரப்படுகிறது. (பார்க்க 22:39) அதுவும் நிர்ப்பந்தம் இருந்தாலொழிய போரிடுவதற்கு அல்லாஹ்வின் சட்டம் அனுமதிப்பதில்லை.
(3) மேலும் தம்மை திருத்திக்கொள்ள எதிர் தரப்பினருக்கு தக்க கால அவகாசமளித்து, போர் அறிவிப்பு செய்து அதன்பின்னரே முறைப்படி போரிடவேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மற்றவர் சதி திட்டங்களை தீட்டுவது, உலகில் குழப்பங்களை ஏற்படுத்துவது, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது, வழிபாட்டுத் தலங்களை நாசமாக்குவது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் இஸ்லாத்தில் இடமில்லை. (பார்க்க 22:40) உண்மை இவ்வாறிருக்க அபாபீல் பறவைகளுக்கு போரிட வேண்டிய அவசியம் என்ன?

தர்க்கம் :
அந்தப் பறவைகளே கற்களை வானத்திலிருந்து எறிந்ததாக மொழி பெயர்ப்பு செய்கிறார்கள். ‘தர்மீஹிம்’ என்ற சொல் முன்னிலையைக் (second person) – “நீங்கள்” என்று குறிக்கும். படற்கையைக (third persson)ஐ – பறவைகளைக் குறிக்காது. மேலும் லூத் நபியின் சமுதாயத்தின் மீது, வானத்திலிருந்து பொழிந்த சுடப்பட்ட கற்களுக்கு “அம்தர்னா அலைஹா ஹிஜாரதின் மின் ஸிஜ்ஜீல்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க 11:82, 7:84) அதாவது நாம் அவர்கள் மீது சுடப்படட்ட கற்களை பொழிந்தோம். எனவே தர்மீஹிம் என்பதற்கு நாம் தந்துள்ள விளக்கவுரையே பொருத்தமானது. மேலும் லூத் நபி சமுதாயத்தை அல்லாஹ்வே அழித்த போது, கஅபதுல்லாவை காப்பாற்ற பறவைகளை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. எனவே நாம் தந்த விளக்கம் தான் சாலச் சிறந்தது ஆகும்.


49.அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்து இருக்கின்றானா?

சிந்தனையாளர்களே! வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வின் கண்காணிப்பு இல்லாத இடமே இல்லை என்று திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுகின்றன. உண்மை இவ்வாறு இருக்கும் போது, அல்லாஹ் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதாகச் சொல்வது சரியாகுமா? எனவே அதன் மெய்ப் பொருளை அறிவது மிக மிக முக்கியமாகும். “அர்ஷ்” என்ற வார்த்தை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையை குறிக்கும் சொல்லாகும். அமைந்தான் என்ற வார்த்தை அனைத்து கட்டுப்பாட்டையும் தன்னகத்தே வைத்திருப்பதாகப் பொருள்படும். திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ

32:4. அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின்மீது அமைந்தான்,
விளக்கம்:
அகிலங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள அனைத்தையும் ஆறு கால கட்டங்களில் படைத்த இறைவன் (விளக்கத்திற்குப் பார்க்க 7:54) அல்லாஹ்தான். அவற்றைப் படைத்ததோடு அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செயல்படுத்தி வருபவனும் அல்லாஹ்வே.


50.அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீரின் மீது உள்ளதா?

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ

11:7. மேலும் அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷ் நீரின் மேல் இருந்தது.
விளக்கம்:
உலகம் முழுவதும் பரிபாலனத் திட்டம் சிறப்பாக செயல்படும் வகையில், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் ஆறு கால கட்டங்களாகப் படைத்து, அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டான். (விளக்கத்திற்கு பார்க்க 7:54) அது மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உயிர்நாடியாகத் திகழும் தண்ணீரின் ஏற்பாட்டையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டான். (பார்க்க 2:22)

சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தததாக எழுதப்பட்டுள்ளது. இது தவறான மொழி பெயர்ப்பாகும். காரணம் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர்தான் ஆதாரமாக விளங்குகின்றது. மேலும் தண்ணீரின் துணையைக் கொண்டுதான் அனைத்து உயிரினங்களும் உருவாகின்றன. மனிதன் மற்ற கோள்களில் தண்ணீர் இருக்கின்றதா என்பதைத்தான் இன்றைக்கும் ஆராய்ச்சி செய்து வருகின்றான். காரணம் நீர் ஆதாரம் இல்லாமல் அங்கு எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. திருக்குர்ஆன் வாசகங்களைக் கவனியுங்கள்.

وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ.

21:30. உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்க வில்லையா?
விளக்கம்:
உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் நாம் தண்ணீரிலிருந்துதான் படைத்தோம். இந்த உண்மையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍۢ مِّن مَّآءٍۢ

24:45. மேலும் அல்லாஹ்தான் எல்லா ஜீவராசிகளையும் நீரிலிருந்து படைத்தான்.
விளக்கம்:
இப்படியாக உயிரினங்களையும் அல்லாஹ் படைத்து அவை உயிர் வாழ தண்ணீரை அளிக்கிறான். எனவே அல்லாஹ்வின் அர்ஷ் நீரின் மேல் உள்ளது என்றால் அனைத்து உயிரினங்களின் படைப்பையும் அவற்றின் பரிபாலனத்தையும் அல்லாஹ் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் என்று பொருள்படும்.


51. அல்லாஹ்வின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமக்கிறார்கள்?

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ.

69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை, (வானவர்) எட்டுப் பேர் தம்மேல் சுமந்திருப்பார்கள்.

விளக்கம்:

இன்னும் மலக்குகள் அதன் கோடியில் இருப்பார்கள். அன்றியும் அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை வானவர்கள் எட்டுப்பேர் தம் மேல் சுமப்பார்கள்.

சிந்தனையாளர்களே! “மலாயிகா” என்பது அல்லாஹ் உருவாக்கியுள்ள பிரபஞ்ச இயற்கைச் சக்திகளாகும். உதாரணத்திற்கு இந்தப் பூமியைச் சுற்றி புவிஈர்ப்பு சக்தி என்று ஒன்று உள்ளது. அதன் துணையைக் கொண்டுதான், மனிதனால் எவ்வித சிறமுமின்றி பூமியில் நடமாட முடிகிறது. அவ்வாறு புவிஈர்ப்பு சக்தி இல்லாதிருந்தால், மனிதன் வான் மண்டலத்தில்தான் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டி வரும். அந்த புவிஈர்ப்புச் சக்தியை மனிதனால் காண முடியாது. இப்படியாக இந்தப் பூமி மற்றும் அகிலங்கள் அனைத்திலும் எண்ணற்ற சக்திகள் செயல்பட்ட வண்ணம் உள்ளன. அவை மலாயிகா எனப்படும்.

அதே போல சூரியக் குடும்பத்தில் இருக்கின்ற பூமி, மற்ற எட்டு கோள்களின் புவிஈர்ப்பில்தான் சூரியனைச் சுற்றி வருகிறது. எனவே அல்லாஹ்வின் “அர்ஷ்” என்பது “இவ்வுலக”மும், மற்ற எட்டுக் கோள்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாகப் பொருள்படும். எனவே இவ்வுகில் நடைபெறுகின்ற எல்லா நிகழ்வுகளும் மற்ற கோள்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த விளைவுகள் மீண்டும் பூமியை நோக்கியே வந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு மனிதன் பல லட்சக்கணக்காண டன் எடையுள்ள பொருட்களை இடமாற்றம் செய்துக் கொண்டே இருக்கின்றான். அதன் புவிஈர்ப்பில் பாதிப்புகள் (cosmic imbalance) ஏற்படும் போது, பூமி அவற்றை தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. அவையே பூகம்பம்;, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.


52. நரக காவலாளிகளாக பத்தொன்பது மலக்குகள்:

நரக காவலாளிகளைப் பற்றி திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில், வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில், நரக காவலாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இவ்வுலகிலும் இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படும் சமுதாயங்கள் பல துயரங்களை சந்தித்து வருகின்றன. அதுவும் ஒரு வகையில் நரக வேதனைகள்தாம். அதையும் திருக்குர்ஆன் பேசுகிறது. ஆனால் 74ஆவது அத்தியாயத்தில் நரக காவலாளிகள் பத்தொன்பொது பேர் என்று செல்லப்படுகிறது. எனவே நாம் இவ்வுலகில் சந்திக்கின்ற துயரங்கள் மற்றும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வேதனைகள் என இரண்டு வகைகளாக விளக்கம் தந்துள்ளோம்.

سَأُصْلِيهِ سَقَرَ.

74:26. அவனை நான் “ஸகர்" (என்னும்) நரகில் புகச்செய்வேன்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்தவன் தகாத செயல்களையெல்லாம் செய்து வந்தான். எனவே அவன் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவான்.

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ.

74:27.“ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
விளக்கம் :
அந்த வேதனைகள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று உமக்குத் தெரியுமா?

لَا تُبْقِى وَلَا تَذَرُ.

74:28. அது (எவரையும்) மிச்சம் வைக்காது. விட்டு விடவும் செய்யாது.
விளக்கம் :
அவன் சம்பாதித்து வைத்த செல்வங்கள், பெயர், புகழ் என எல்லாவற்றையும் அது சுட்டுப் பொசுக்கி விடும்.

لَوَّاحَةٌۭ لِّلْبَشَرِ.

74:29. (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
விளக்கம் :
இதனால் அவமானத்தால் அவனது முகம் கருத்துவிடும். நேற்று வரை அவன் இருந்த நிலை என்ன? இன்று அவனுடைய நிலை என்ன? எல்லாமே உருமாறிவிடும்.

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ.

74:30. அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
விளக்கம் :
இப்படியாக அவனுக்கு பத்தொன்பது வகையான வேதனைகள் அவனை வாட்டி எடுக்கும். இதைப் பற்றி பல இடங்களில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۭ ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًۭا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ.

74:31. அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம். வேதம் கொடுக்கப்பட்டவர்கள், உறுதி கொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப் பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளமால் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்).

எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும், காஃபிர்களும்: அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?"" எனக் கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கி னோம்).

இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான். இன்னும்தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான். அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றொருவரும் அறிய மாட்டார்கள். (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

விளக்கம் :
(1) உலகில் மனிதனுக்குக் கிடைக்கும் இத்தகைய வேதனைகள் யாவும் இறைவன் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற அடிப்படையிலேயே ஏற்படுவதாகும். அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில்தான் பிரபஞ்ச இயற்கைப் சக்திகள் படைக்கப்பட்டுள்ளன.
(2) திருக்குர்ஆனின் அறிவுரைகளை மதிக்காதவர்கள் தாம், இந்த எண்ணிக்கையை வைத்து பல குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். ஆனால் வேதமுடையவர்கள், தங்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளை எண்ணி திருந்தி கொள்வதற்கும், மூஃமின்கள் இவ்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேதனைகளைப் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அவற்றிலிருந்து மீண்டு கொள்வதற்கும், இதைப் பற்றி குறிப்பிடப்படுகின்றன. ஆனால்
(3) எவர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அவர்களும், இறை நிராகரிப்பவர்களும் இந்த எண்ணிக்கையைக் கொண்டு இறைவன் நாடுவது என்னவென்று எதிர் மறையாகப் பேசுவார்கள். (பார்க்க 2:26)
(4) இப்படியாக வழிதவறி நடக்க நாடுவோர் இறைவனின் நியதிப்படி வழிகேட்டில் சென்று விடுகிறார்கள். இறைவழிகாட்டுதலைப் பெற நாடி அதற்கேற்ற வகையில் முயல்பவர்களுக்கு நேர்வழி கிடைத்து விடுகிறது.
(5) ஆக விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் சக்திகளைப் பற்றி உண்மை, உமது இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதைப் பற்றி திருக்குர்ஆனில் எடுத்துரைக்கப்படுகிறது.
(6) இதன் நோக்கமே அவற்றைப் பற்றி நன்கறிந்து, மனிதன் நேரான வழியில் செல்லவேண்டும் என்பதே.

இன்றைய உலகில் :
(1) இன்றைய கால கட்டத்தில் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் வேதனைகள் ஏற்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சமுதாயத்தில் நிலவி வரும் தீய பழக்க வழக்கங்களால், மனிதனுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் நோய்களை எடுத்துக் கொள்ளுங்கள். உயிர்கொல்லி நோய், இருதய நோய், புற்று நோய், கைகால் வாதங்கள், பாலியல் நோய், எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். மனிதன் பிரபஞ்ச படைப்புகளில் ஒருவனாக இருப்பதால், அந்த இயற்கைச் சக்திகள் இவனுக்குள்ளேயும் செயல்பட்டு வருகின்றன. இவனுடைய தவறான செயல்களால் இவனுடைய உடல்நிலை பாதிப்புக்குள் ஆகின்றன. சில நோய்களுக்கு உடனே சிகிச்சை கிடைத்து விடுகிறது. மற்றும் சில, தீரா நோயாக அவனை வாட்டி வதைக்கின்றன. இதைப் பற்றி ஆராய்ந்து அறிந்து அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முயலவேண்டும். வயதான காலத்தில் ஏற்படும் நோய்கள் மரணத்தை விளைவிப்பதாக உள்ளன. அது “மலக்கு மவுத்” என்பதாகும்.

(2) இரண்டாவதாக உலகில் சமுதாயங்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. சமுதாயங்களின் தவறான செயல்களால் வீழ்ச்சி ஏற்படும்போது, ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த அளவுக்கு அவை கடுமையானதாக இருக்கும்.

(3) மூன்றாவதாக உலகில் நிகழ்கின்ற பூகம்பம், சுனாமி, புயல் காற்று, வெள்ளம், எரிமலைப் பிழம்பு, பஞ்சம் போன்ற வேதனை அளிக்கக்கூடிய அசம்பாவிதங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மனிதன் முயற்சிகளை மேற்கொண்டால், அவனுடைய வாழ்வு சிறக்கும். “சகர்” எனும் வேதனைகளை கூட்டி கழித்து எண்ணிக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தால் அவனுடைய பிரச்னைகளுக்கு ஒருபோதும் விடுவுகாலம் கிடைக்காது. எனவே இறைவழிகாட்டுதல் இத்தகைய பேராபத்துகளிடமிருந்து மீண்டு வாழ வழி வகுக்கிறது.

(4) நான்காவதாக மனிதனின் வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடரக்கூடிய ஒன்றாக இருப்பதால், அவன் உலகில் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப சுவனமும், நரகமும் கிடைக்கும். நன்மையான செயல்கள் மிகைத்திருந்தால் சுவர்க்கம் எனவும், தீயவை மிகைத்திருந்தால் நரகம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 7:8-9) இவையே இறைவனின் நிலைமாறா சட்டமாகும். அங்குள்ள நரக காவலாளிகளும் பத்தொன்பது வகையாக இருக்கும் என்று புலனாகிறது.


53.பூமியிலிருந்து வெளிப்படும் உயிர் பிராணி:

۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةًۭ مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ.

27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம், அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
விளக்கம் :
உலகில் அநியாய அக்கிரமங்கள் தலை விரித்தாடும் போது, அவற்றை முறியடிக்க ஒரு வீரனோ அல்லது ஒரு ஜமாஅத் கூட்டமைப்போ உருவெடுக்கும். அது பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். அந்த அரசு இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்பட்டு வரும் மோசமான நிலைமையைப் பற்றி மக்களிடம் அந்த ஜமாஅத் எடுத்துக் கூறும்.

இந்த வாசகத்தில்; “தாப்பதன்” என்று வருகிறது. அதற்கு அர்த்தம் உயிர் பிராணி என்பதாகும். உயிர் பிராணிகளில் மனிதனும் அடங்குவான். (பார்க்க 6:38, 11:56, 22:18) எங்காவது அநியாயம் நடந்தால் “உங்களைத் தட்டிக் கேட்க ஒரு உசிரு வராமல் போவானா?” என்று நாமும் பேச்சுவாக்கில் கூறுகிறோம். எனவேதான் இந்த வாசகத்தில் வரும் தாப்பதன் என்ற வார்த்தைக்கு மாவீரன் அல்லது ஜமாஅத் என்று பொருள் தந்துள்ளோம். மேலும்

சில நேரங்களில் அத்தகைய அநியாயக்கார நாடுகள், அன்னியர்களின் தாக்குதலுக்கும் ஆளாகும். அப்போது அதை எதிர்க்கொள்ளும் வலிமையை இழந்து, அந்நாடு தோல்வியைச் சந்திக்கும். அதைத் தொடர்ந்து அச்சமுதாயம் அடிமைப்பட்டு வாழ நேரிடும். இதுதான் காலம் காலமாக நடைபெற்று வந்த உண்மையாகும்.

وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍۢ فَوْجًۭا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمْ يُوزَعُونَ.

27:83. (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக!).
விளக்கம் :
இறைவனின் நிலைமாறா இதே சட்டத்தின்படியே இறைவழிகாட்டுதலைப் பொய்ப்பிக்கும் ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் எதிராக சீர்த்திருத்தப் பாதுகாப்புப் படைகள் உருவெடுத்து வரும். சில சமயங்களில் இதுவே பந்நாட்டுப் படையாக உருவெடுத்து, உலக யுத்தங்கள் என்ற ரூபத்தில் உருவெடுக்கும். ஒரு பிரிவு மற்றப் பிரிவின் அநியாயத்தை ஒடுக்க போராடும்.


54.கெட்ட பெண்களுக்கு ஓர் உதாரணம்:

ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا لِّلَّذِينَ كَفَرُوا۟ ٱمْرَأَتَ نُوحٍۢ وَٱمْرَأَتَ لُوطٍۢ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَٰلِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ ٱللَّهِ شَيْـًۭٔا وَقِيلَ ٱدْخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ.

66:10. நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர். எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை. இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்" என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.

விளக்கம் :
“மனித செயல்களின் விளைவுகள்” என்ற இறைச்சட்டம் நிலையானது என்பதற்கு சில உதாரணங்களின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அவற்றில் நூஹ் நபியின் மனைவி மற்றும் லூத் நபியின் மனைவியின் உதாரணத்தை மேற்கோள் காட்டிச் சொல்லலாம். அவ்விருவரும் தலைசிறந்த சீர்திருத்தவாதிகளின் மனைவிகளாக இருந்தனர். இருந்தும் அவர்கள் நம் அறிவுரைகளை கேட்டு நடக்கவே இல்லை. அவ்விரு இறைத்தூரும் தம் மனைவிகளின் தவறான செயல்களின் விளைவுகள் என்ற அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. எனவே அவ்விருவரின் மனைவிகளும் வேதனை அளிக்கும் அழிவில் சிக்கி மடிந்து போனார்கள்.

அதாவது அவ்விரு பெண்களின் உதாரணத்தின் மூலம் சில விஷயங்கள் நமக்குப் புலனாகிறது. அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அந்த நபிமார்கள் அவர்களை விவாகரத்து செய்துவிடவில்லை. மாறாக அவர்களை திருத்தவே முயன்றார்கள். ஒரு கட்டத்தில் நாட்டில் பேராபத்து ஏற்படப் போகிறது என்பதை அவர்களுக்கு அறிவித்த போதும், அப்பெண்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. எனவே அழிந்து போனவர்களில் அவர்களும் இடம் பெற்றுவிட்டனர்.

எனவே நாமும் நம் மனைவிக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து அவளை நேர்வழிப்படுத்த முயல வேண்டும். அதை விட்டுவிட்டு அவள் இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்காக அவளை விவாகரத்து செய்வதோ அல்லது துன்புறுத்துவதோ கூடாது. காரணம் நம் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி அனுசரிக்க வேண்டியுள்ளது. நாம் விவாகரத்து அளித்து வேறு பெண்ணை மணமுடித்துக் கொண்டால், பிள்ளைகளுக்கு மாற்றாந்தாய் பிரச்சனை ஏற்படும். நம்மால் சமூகப்பணியை மேற்கொள்ளவே முடியாது. மேலும் மார்க்கத்தை யாருக்கும் திணிக்க முடியாது (2:256)"


55.நல்ல பெண்களுக்கு முன்உதாரணம்:

وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱمْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ٱبْنِ لِى عِندَكَ بَيْتًۭا فِى ٱلْجَنَّةِ وَنَجِّنِى مِن فِرْعَوْنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

66:11. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவர், “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!"" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
விளக்கம் :
நல்ல பெண்மணிகளுக்கு முன்உதாரணமாக அல்லாஹ் ஃபிர்அவுனின் மனைவியை மேற்கோள் காட்டுகிறான். அவருடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் எவ்வாறு இருந்தன என்பதைக் கவனியுங்கள். அவர், “என் இறைவா! நான் என் கணவர் ஃபிர்அவுனின் அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கிறேன். இதை விட்டு என்னைக் காப்பாற்றி சாந்தமான இடத்தில் பணிபுரிய எனக்கு வழி வகுப்பாயாக. மேலும் அநியாயக்கார சமூகத்தாரை விட்டு என்னைக் காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்.

அதற்கேற்றவாறு அவருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைத்து, அவர் தலைச்சிறந்த பெண்மணி என்ற பெயரும் புகழும் பெற்றார். அவருடைய பெயர் ஆசியா ஃகாதூன் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

وَمَرْيَمَ ٱبْنَتَ عِمْرَٰنَ ٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتْ مِنَ ٱلْقَٰنِتِينَ.

66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்). அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார். நாம் (அவரில்)நம் திட்டங்களின் செய்தியை அறிவித்தோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

அதையடுத்து நல்ல பெண்மணி என்பதற்கு முன்னுதாரணமாக இம்ரானின் புதல்வியான மர்யமை அல்லாஹ் மேற்கோள் காட்டுகிறான். அவர் ஹைக்கலெ சுலைமானி என்ற ஆசிரமத்தில் துறவியாக இருக்க நேர்ந்தது. அங்கு பெண்களுக்கு எதிராக முறைகேடுகள் நடந்தும் அங்கிருந்த மடாதிபதிகளின் வலையில் சிக்காமல் தன் கற்பைக் காத்துக் கொண்டார். இதற்காக நாம் சிறப்பான வழிகாட்டுதல்களை ஜக்ரியா நபி மூலம் அறிவித்தோம். எனவே அவர் இறைவழிகாட்டுதலின்படி ஆசிரமத்தின் வழக்கப்படி இருந்த துறவித்தனத்தை விட்டுவிட்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார். இப்படியாக அவர் இறைவனின் வழிகாட்டுதலுக்குத் தலைவணங்கி அவனுடைய வேத வழிகாட்டுதலை மெய்ப்பிக்க ஆணிவேராகத் திகழ்ந்தார். அவர் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றிய வீராங்கனையாக விளங்கினார். (மேல்கொண்டு விளக்கத்திற்குப் பார்க்க 3:35-47)

அதாவது ஆணோ பெண்ணோ அவர் எப்படிப்பட்ட இடத்தில் வசிக்கிறார் என்பது அல்ல கேள்வி. அவர் எப்படி வாழ்கிறார் என்பதே கேள்வியாகும். மேற்சொன்ன இரு பெண்மணிகளும் மிகவும் மோசமான இடத்தில் வாழ நேர்ந்த போதும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து சிறந்த பெண்மணிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். எனவே நான் வாழ்ந்த இடம் கெட்டது. எனவே நான் கெட்டுப் போய்விட்டேன் என்று சொல்வதால் யாருக்கும் விடுவிப்புக் கிடைக்காது. (Ignorance of law is no excuse) (பார்க்க: 15:40, 17:65.)


56. யாஜுது மாஜுது கூட்டத்தார்:

(நசுக்கப்பட்டவர்கள் அசுரர்களாய் பொங்கி எழுபவர்கள்)

حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيْنَ ٱلسَّدَّيْنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوْمًۭا لَّا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًۭا.

18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்திய போது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.
விளக்கம் :
இம்முறை ஜுல்கர்நைன் (cyrus) என்ற பேர்ரரசர் மேற்கொண்ட இலட்சியப் பயணம், மலைப் பிரதேசமாக இருந்தது. அந்த மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களைச் சந்தித்தார். அவர்கள் பேசிய மொழி மாற்று மொழியாக இருந்ததால், அவர்கள் சொல்வதை இவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

قَالُوا۟ يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰٓ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّۭا.

18:94. அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக யாஜுஜு மஃஜுஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள், ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.
விளக்கம் :
அதன்பின் தக்க மொழி பெயர்ப்பாளரை நியமித்து அங்கிருந்த நிலவரத்தைத் தெரிந்து கொண்டார். அவர்கள் மிகவும் துக்கப்பட்டவர்களாக ஜுல்ஃகர்நைனிடம் தம் குறைகளை எடுத்துரைத்தனர். அவர்கள் யாஜுஜு மாஜுஜு ஆகிய அசுரர்களாலும், காட்டு மிராண்டிகளாலும் அடிக்கடி தாக்கப்பட்டு நிம்மதியன்றி வாழ்வதாகக் கூறினர். எனவே அவர்கள் தம் நாட்டிற்குள் நுழைய முடியாதபடி உயரமான தடுப்புச் சுவரை எழுப்பித் தருமாறு வேண்டிக் கொண்டனர். அதற்குண்டான செலவை அவர்களே ஏற்று கொள்வதாகவும் அவரிடம் சொன்னார்கள். (மேலும் விளக்கத்திற்குப் பார்க்க 21:96)

قَالَ مَا مَكَّنِّى فِيهِ رَبِّى خَيْرٌۭ فَأَعِينُونِى بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا.

18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு இதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது, ஆகவே (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள், நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்" என்று கூறினார்.
விளக்கம் :
அதற்கு அவர்,“என் இறைவன் எனக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் அளித்துள்ளான். எனவே உங்களுடைய பண உதவி எனக்குத் தேவையில்லை. எனக்கு பணியாட்களை மட்டும் ஏற்பாடு செய்து தாருங்கள். நான் உங்களுக்கும் உங்கள் பகைவர்களுக்கும் இடையே தடுப்புச் சுவரை எழுப்பித் தருகிறேன்” என்றார்.

ءَاتُونِى زُبَرَ ٱلْحَدِيدِ ۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيْنَ ٱلصَّدَفَيْنِ قَالَ ٱنفُخُوا۟ ۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارًۭا قَالَ ءَاتُونِىٓ أُفْرِغْ عَلَيْهِ قِطْرًۭا.

18:96.“நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார், அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள், அதன் மேல் ஊற்றுகிறேன்" (என்றார்).
விளக்கம் :
மேலும் அவர் தம் கண்காணிப்பில் அந்தச் சுவரை எழுப்பினார். அவர் பெரியப் பெரிய இரும்புப் பாளங்களை தம்மிடம் கொண்டுவரும்படி கூறினார். அதன்பின் இருமலைகளுக்கு நடுவே தடுப்புச் சுவரை எழுப்பினார். அந்தச் சுவர் மலை உச்சி வரை சென்றது. அதன்பின் செம்பு உருக்குவதற்காக தீயை மூட்டச் செய்தார். அது நன்றாக உருகியதும் அந்த சுவரின் மேற்பகுதி யிலிருந்து அதை ஊற்றும்படி கூறினார். இப்படியாக அந்தச் சுவர் வழவழப்பாகவும் உயரமாகவும் மிகவும் உறுதியாகவும் ஆகிவிட்டது.

فَمَا ٱسْطَٰعُوٓا۟ أَن يَظْهَرُوهُ وَمَا ٱسْتَطَٰعُوا۟ لَهُۥ نَقْبًۭا.

18:97. எனவே, (யாஜுஜு மஃஜுஜு கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை. அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
விளக்கம் :
எனவே அந்த அசுரர்களாலும் காட்டு மிராண்டிகளாலும் அந்த சுவற்றின் மீது ஏறவும் முடியவில்லை. அதை துளைத்து துவாரமிடவும் முடியவில்லை. இப்படியாக அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழி பிறந்தது.

قَالَ هَٰذَا رَحْمَةٌۭ مِّن رَّبِّى ۖ فَإِذَا جَآءَ وَعْدُ رَبِّى جَعَلَهُۥ دَكَّآءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّى حَقًّۭا.

18:98.“இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும். ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும் போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான், மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.
விளக்கம் :
“என் இறைவனிடமிருந்து கிடைத்துள்ள உலோகப் பொருட்கள் போன்ற அருட்கொடைகளைக் கொண்டே இந்த உறுதிமிக்க சுவரை என்னால் உருவாக்க முடிந்தது. ஆனால் என் இறைவனின் நியதிப்படி ஏற்படக் கூடிய வெள்ளம் பூகம்பம் போன்ற நிகழ்வுகளால் மட்டுமே இதை தூள்தூளாக ஆக்க முடியும். இப்படி நிகழும் வாய்ப்புகள் உள்ளன என்பதே இறைவனின் வாக்கு ஆகும்” என்றார்.

ஜுல்ஃகர்நைனின் கருத்துக் கணிப்பு மிகவும் சரியானதாக இருந்தது. வரவிருக்கும் எதிர் காலங்களில் சமுதாயத்தின் பாதுகாப்பான வாழ்விற்கு இப்படிப்பட்ட உறுதியான சுவர்களோ, கருங்கற்களால் கட்டப்படும் கோட்டைகளோ உதவி புரியாது என்பதை அவர் அறிந்திருந்தார். மாறாக மக்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சந்தோஷமான பாதுகாப்பான வாழ்விற்கு வழி கிடைக்கும். அவ்வாறு செயல்படவில்லை என்றால், இந்த சுவர்களும் கோட்டைகளும் தூள்தூளாகி விடும். இது எவ்வாறு நடக்கும்? இறைவழிகாட்டுதலின்படி ஒரு சமுதாயம் நடக்கவில்லை என்றால்

۞ وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍۢ يَمُوجُ فِى بَعْضٍۢ ۖ وَنُفِخَ فِى ٱلصُّورِ فَجَمَعْنَٰهُمْ جَمْعًۭا.

18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டுவிடுவோம், பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும், பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
விளக்கம் :
வரவிருக்கும் காலங்களில் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு கடல் அலைகள் ஒன்றன் மேல் ஒன்று மோதுவதைப் போல, சிலர் சிலருடன் மோதிக் கொள்ளும் நிலைமை உருவாகி விடும். அதைத் தொடர்ந்து, கலவரங்களும் போர்களும் மூளும். போரின் சங்கொலியும் முழங்கும். இப்படியாக அவர்கள் அனைவரும் களத்தில்தான் சந்திக்க நேரிடும்.

حَتَّىٰٓ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍۢ يَنسِلُونَ.

21:96. யஃஜூஜு மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.

وَٱقْتَرَبَ ٱلْوَعْدُ ٱلْحَقُّ فَإِذَا هِىَ شَٰخِصَةٌ أَبْصَٰرُ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَٰوَيْلَنَا قَدْ كُنَّا فِى غَفْلَةٍۢ مِّنْ هَٰذَا بَلْ كُنَّا ظَٰلِمِينَ.

21:97. (இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக் காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்த படியே நிலைகுத்தி நின்று விடும், (அன்றியும் அவர்கள்:) "எங்களுக்குக் கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்திய வர்களாகவே இருந்துவிட்டோம், அது மட்டுமில்லை அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்).
விளக்கம் :
இறைவழிகாட்டுதல்கள் இல்லாத/பின்பற்றாத சமுதாயங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வரும். எனவே அங்கு வளரும் செல்வந்தர்களும், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், நலிந்த மக்களை நசுக்கி வருவார்கள். ஒரு கால கட்டத்திற்குப் பின் நலிந்த மக்கள் தம் நிலையை சரிசெய்து கொள்ள, இந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது யாஜுஜு மாஜுஜு போல அசுரர்களாய்ப் பாய்ந்து அவர்களை முறியடித்து, அவர்கள் மீது வெற்றி கொள்வார்கள். அதன்பின் காலப்போக்கில் இவர்களுடைய நிலைமையும் இவ்வாறே ஆகிவிடும். இதுதான் இன்றைய உலகில் நடந்து வரும் யாஜூஜு மாஜூஜு விஷயங்களாகும்.

இதே அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகள் அசுரர்களாய் பாய்ந்து பலவீனமடைந்த நாட்டை அடிமையாக்கிக் கொள்கின்றன. சில வருடங்களுக்குப் பின் அடிமைப்பட்டவர்கள் புரட்சி செய்து அன்னியர்களை யாஜுஜு மாஜுஜுகளாக விரட்டியடித்து சுதந்திரம் பெறுகிறார்கள். அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளில் சில காலத்திற்குப் பின் இவர்களே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு நலிந்த மக்களை நசுக்குவார்கள். இதுதான் யாஜுஜு மாஜுஜு பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மைகளாகும்.

நம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில் நடந்த ஈராக் நாட்டின் மீது படையெடுத்ததையே சொல்லலாம். அமெரிக்க பன்னாட்டுப் படைகள் என்னதான் வளர்ந்து முன்னேறிய நாடுகளாக இருந்த போதும், அவர்கள் ஊரில் மூலை முடுக்கெல்லாம் புகுந்து ஈராஃக் நாட்டு பொது மக்களிடம் காட்டு மிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி விட்டார்கள். அது மட்டுமின்றி ஈராஃக் போர்க் கைதிகளிடம் நடந்து கொண்ட முறையை அறிந்து உலகமே வெட்கப்பட்டுக் கொண்டது. அந்த அளவுக்கு காட்டு மிராண்டித்தனம். இத்தகைய பரிதாப நிலையிலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இறைவழிகாட்டுதல் அடங்கிய திருக்குர்ஆன் வேதமே. அதன்படி சிறந்ததொரு உலகைப் படைப்போமாக.


57.காணா டஜ்ஜால் - ஓர் அலசல்:

“காணா டஜ்ஜால்” என்றால் “ஒற்றைக் கண்”; உடைய பிசாசு அல்லது பூதம் என்று பொருளாகும். இதைப் பற்றி திருக்குர் ஆனில் எங்கும் சொல்லப் படவில்லை. இருந்தும் மக்களிடையே இதைப் பற்றி பரவலான கருத்து நிலவி வருகிறது. எனவே இதை நாம் நிவர்த்தனை செய்ய விரும்புகிறோம்.

உலகில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். இப்படி ஓர் உலகைப் படைக்க வேண்டும் என்றால் மக்கள் சுய நலத்தோடு வாழக் கூடாது என்கிறது அல்லாஹ்வின் வழிகாட்டுதல். காரணம் சுய நலக்காரர்களாக இருந்தால் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடையும். சிலரிடம் செல்வக் குவியல் இருக்கும். பலரிடம் இருக்காது. இதனால் போட்டி பொறாமைதான் நிலவி வரும். எனவே செல்வக் குவியல் வைத்திருப்போர் மீது இல்லாதோருக்கு எப்போதும் “ஒரு கண்” இருக்கும்.

உதாரணத்திற்கு தற்சமயம் அரபு நாடுகளில் எண்ணெய் வளமும் ஆழ்பூமியில் தங்கமும் குவிந்துள்ளன. இதைக் கவனிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அரபு நாட்டின் வளங்கள் மீது “ஒரு கண்” இருக்கிறது. எனவே அரபு நாடுகளுக்கிடையே சண்டையை மூட்டி, பலவீனமாக்கி, அவர்களை அடிமைப்படுத்தி வைத்துக் கொள்ளவே அந்த நாடுகள் விரும்புகின்றன. இதனால் அரபு நாட்டவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே அரபு நாட்டு மக்களுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் “காணா டஜ்ஜால்”களாக இருக்கிறனர்.