بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை:
இந்த புத்தகத்தைப் பார்த்ததுமே இவர்கள் அஹ்லெ குர்ஆனைச் சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது. இவர்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொள்வதில்லை போல் இருக்கிறது. எனவே இவர்களை முஸ்லிம்களாக கருத முடியாது. இவர்கள் இஸ்லாத்தை விட்டு நீங்கிவிட்ட "காரஜியாக்கள்" ஆவார்கள் என நினைக்கத் தோன்றும். ஆனால் திருக்குர்ஆனைப் பற்றியும், முஹம்மது நபி(ஸல்) அவர்ளைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால், மேற்சொன்ன கருத்துக்கள் எந்த அளவிற்கு தவறானவை என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
நாம் ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். அதவாது எந்த மனிதனிடத்திலும் அல்லாஹ் நேரடியாக பேசும் செயல்திட்டம் இல்லாததால் (பார்க்க 42:51) அவன் மனிதனுக்குக் அறிவிக்க வேண்டிய வழிகாட்டுதலை நபிமார்கள் மூலமாகத் தான் அறிவித்து வந்தான். இப்படியாக வந்த நபிமார்களில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் ஆவார். எனவே, ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நபி(ஸல்) மூலமாக அறிவித்த வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிறது. அவ்வாறு ஓருவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தன் வாழ்வின் சரியான பாதையை அவரால் ஒருபோதும் அறிந்து கொள்ளவே முடியாது. அதன் பின் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதற்கு ஒரு அர்த்தமும் இருக்காது.
இன்றைய கால கட்டத்தில, அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆன் என்ற வேதம் மட்டுமே தன் அசல் வடிவில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. முந்தைய வேதங்களில், புகழ்வாய்ந்த தவராத், இன்ஜீல் மற்றும் ஜபூர் ஆகிய வேதங்கள் யாவும் மாற்றத்திற்குள்ளாகி விட்டதாக திருக்குர்ஆன் அறிவித்துவிட்டது. (பார்க்க: 2:59, 2:75) உலகிலுள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் வேதங்கள் இறக்கி அருளப்பட்டதாகவும் (14:4) வாசகம் அறிவிக்கிறது. அவ்வேதங்களில் இருந்த உண்மையான விஷயங்களை எடுத்துரைப்பதற்காகவே திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டதாகவும் அறிவிக்கிறது. (3:3) எனவே மார்க்க உண்மைகளைப் பற்றி திருக்குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை வெளியிடுகிறோம். அன்பர்கள் படித்து திருக்குர்ஆன் கூறும் மார்க்கத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு அதன்படி செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.
நாம் திருக்குர்ஆன் மூலமொழியையும் அதன் பொருளையும் தந்துள்ளோம். அதற்கடியில் அதன் விளக்கத்தையும் தந்துள்ளோம். மேலும் அந்த வாசகத்தின் எண்ணையும் தந்துள்ளோம். அன்பர்கள் திருக்குர்ஆனை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். முதலில் வரும் எண், அத்தியாயம் எண்ணும் அதன் பின்னாடி வரக்கூடியது வாசக எணணும் ஆகும். அதாவது 42:51 என்றால் 42ஆவது அத்தியாயத்தின் 51ஆவது வாசகம் என்று பொருள்படும்.
விஷயத்தை நாம் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறோம். ஒருவர் மார்க்க சம்பந்தமாக புத்தகத்தை வெளியிட்டால் அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் சரியா தவறா என்பதை அறிந்து கொள்ளும் உரைக்கல் திருக்குர்ஆனாகத் தான் இருக்க வேண்டும். இதை மையமாக வைத்துத் தான் இந்த நூலை தொகுத்துள்ளோம்.
வஸ்ஸலாம்,
ந. ரூஹுல்லா. பி.காம்.
தேதி: 28-10-2014.
2.திருக்குர்ஆன் உலகார்க்கு வந்த அறிவுரைகளே ஆகும்:
(وَمَا هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَ ﴿۵۲
68:52. அது (குர்ஆன்) அகிலத்தோர் அனைவருக்குமே நல்லுபதேசமே அன்றி வேறில்லை. (மேலும் பார்க்க 6:90)
உலக மக்கள் அனைவருக்காகவும் அறிவுரைகளாகவே இவ்வேதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே திருக்குர்ஆனில் உள்ள வரலாற்றுத் தொகுப்புகளானாலும் சரி, உலகப் படைப்புகள் பற்றிய வாசகங்களானாலும் சரி. அவற்றிலிருந்ருது கிடைக்கின்ற பலன்கள் மற்றும் படிப்பினைகள் என்னவென்பதைத் தான் பார்க்க வேண்டும் என்று பொருளாகிறது. காரணம் திருக்குர்ஆனில் வரும் வரலாற்றுத் தொகுப்புகள் யாவும் நடந்த உண்மைகளே ஆகும். சமுதாய வளர்ச்சிக்கும் அழிவுக்கும் உரிய காரண காரணிகள் என்னவென்பதை எடுத்துரைக்கத் தான் அவை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அதே போல் உலக படைப்புகளைப் பற்றி ஏறக்குறைய 850 வாசகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இவ்வேதத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் என்னவென்றால், மனித சிந்தனை தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தோடு மட்டும் நிற்காமல், உலகளாவிய சிந்தனைகளும், படைப்புகளின் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வேகமாக முன்னேர வேண்டும் என்பதற்காகத்தான்.
திருக்குர்ஆன் வாசகங்கள் யாவும் உலக மக்களுக்கான அறிவுரைகளே எனும்போது, அவற்றை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகி விடுகிறது. காரணம்
3.இவ்வேதம் உண்மையைக் கொண்டு இறக்கி அருளப்பட்டது,
اِنَّاۤ اَنۡزَلۡنَا عَلَيۡكَ الۡكِتٰبَ لِلنَّاسِ بِالۡحَقِّ ۚ فَمَنِ اهۡتَدٰى فَلِنَفۡسِهٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيۡهَا ۚ وَمَاۤ اَنۡتَ عَلَيۡهِمۡ بِوَكِيۡلٍ ﴿۴۱
39:41. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம் மீது இறக்கியருளினோம். எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது). எவர்வழி தவறி கெடுகிறாரோ அவர் தனக்குப் பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார். நீர் அவர்களுடைய பாதுகாவலர் அல்ல.
விளக்கம் :
உலக மக்கள் அனைவருக்காகவும் இறக்கி அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
"ஹஃக்" என்ற வார்த்தைக்கு உண்மையைக் கொண்டு என்று மொழி பெயர்க்கப்படுகிறது ஆனால் அதற்கு, “ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக" (Result Oriented and Constructive purposes) என்றும் பொருள் வரும். இந்தக் குர்ஆனை வீணுக்காக இறக்கி அருளப்படவில்லை. மாறாக ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக இறக்கியருளப்பட்டது என்பதாகும். எனவே இவ்வேதத்தைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். இதை நிராகரித்து தன்னிச்சையாக செயல்படுவர்களின் வாழ்வு பிரச்சனைக்குரியதாக ஆகிவிடும் என்றும் அதற்கு நபி பொறுப்பாளி ஆக மாட்டார் என்றும் அறிவிக்கப்படுகிறது.
`4.திருக்குர்ஆன் ஓர் ஒளிவிளக்கு:
(الۤرٰ كِتٰبٌ اَنۡزَلۡنٰهُ اِلَيۡكَ لِـتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ ۙ بِاِذۡنِ رَبِّهِمۡ اِلٰى صِرَاطِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ ﴿۱
14:1. அலிஃப். லாம். றா. (நபியே!) இது) வேதமாகும். மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ்வேதத்)தை நாமே உம் மீது இறக்கி இருக்கின்றோம். புகழுக்குரியவனும் வல்லமை மிக்ககோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!).
விளக்கம் :
(1) அலீஃப் : அல்லாஹ் - லாம்: இலாஹா – சர்வ அதிகாரமுடைய - ரா: ரஹ்மான் - அளவற்ற அருட்கொடையாளன். அகிலத்தில் சர்வ அதிகாரங்களையும் படைத்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட இவ்வேதம் அருட்கொடைகளே ஆகும்.
(2) அல்லாஹ்வின் செயல்திட்டப்படி இவை இறக்கி அருளப்பட்டது.
(3) இதன் நோக்கம் யாதெனில் உலக மக்களை அறியாமை என்ற இருளிலிருந்து விடுவித்து, பிரகாசமான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்வதற்காகவே ஆகும்.
اِنَّ هٰذَا الۡقُرۡاٰنَ يَهۡدِىۡ لِلَّتِىۡ هِىَ اَقۡوَمُ وَ يُبَشِّرُ الۡمُؤۡمِنِيۡنَ الَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمۡ اَجۡرًا كَبِيۡرًا ۙ ﴿۹
17:9 நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது. அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு நிச்சயமாக மிகப் பெரும் நற்பலன்கள் உண்டு என்று நன்மாராயம் கூறுகிறது.
(1) இந்தக் குர்ஆன்; மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு வேண்டிய சரியான பாதையைக் காட்டுவதாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
(2) இந்த குர்ஆனை ஏற்றுக் கொள்வதுடன், அதில் சொல்லப்பட்ட அறிவுரைப்படி ஆற்றல் மிக்க சிறந்த செயல்களை செய்ய வலியுறுத்துகிறது.
(3) அவ்வாறு செயல்படும் சமூகத்தவர்க்கு சிறந்த வாழ்க்கை உண்டு என்ற நன்மாறாயமும் கூறுகிறது.
(4) இன்னும் மூஃமின்களுக்கு அருட்கொடையாகவும், சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க சிறந்த வழியைக் காட்டுவதாகவும் இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது (17:82)
﴾ اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ قُرۡءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲
12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
விளக்கம்:
இந்த குர்ஆனை தெளிவான மொழியில் தொகுத்து அருளப்பட்டதன் நோக்கமே அதைக் கொண்டு நீங்கள் அனைவரும் மாமேதைகளாகவும் அறிஞர்களாகவும் ஆகிவிட வேண்டும் என்பதே ஆகும்.
5.திருக்குர்ஆன் நோய் தீர்க்கும் அருமருந்தா?
(وَنُنَزِّلُ مِنَ الۡـقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحۡمَةٌ لِّـلۡمُؤۡمِنِيۡنَۙ وَلَا يَزِيۡدُ الظّٰلِمِيۡنَ اِلَّا خَسَارًا ﴿۸۲
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்தோம், ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
விளக்கம் :
(1) இந்தக் குர்ஆன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மூஃமின்களுக்கு அருமருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மக்களிடையயே உள்ள தீய பழக்க வழக்கங்களால் ஏற்பட்டுள்ள மன நோய்களை தீர்க்க வல்லது. மனித வாழ்வின் உயர் நோக்கங்களைப் பற்றி அறியும்போது, தவறான செயல்களை விலக்கிக் கொள்ளும் மனப்பான்மை உருவாகி தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்
(2) இந்தக் குர்ஆன் மூஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும் இருப்பதாகச் சொல்லப்டுகிறது. ரஹ்மத்து என்றால் அருள் இரக்கம் அன்பு அருட்கொடை என்று அர்த்தங்கள் உள்ளன. ஞானமிக்க இந்தக் குர்ஆனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால் கிடைக்கின்ற சந்தோஷங்கள் யாவும் அல்லாஹ்வின் அருட்கொடைகளாக இருக்கின்றன.
(3) ஆனால் இதைப் பின்பற்றாதவர்களின் வாழ்வில் பல துயரங்களே ஏற்பட்டு வரும். அவை அவர்களுக்கு இழப்பையே அதிகரிக்கும்.
(4) இந்த வாசகத்தின் விளக்கத்தை திருக்குர்ஆனின் மற்றொரு வாசகம் விரிவாக்கம் செய்து விடுகிறது. அதையும் கவனித்துப் பாருங்கள்.
يٰۤاَيُّهَا النَّاسُ قَدۡ جَآءَتۡكُمۡ مَّوۡعِظَةٌ مِّنۡ رَّبِّكُمۡ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوۡرِۙ وَهُدًى وَّرَحۡمَةٌ لِّـلۡمُؤۡمِنِيۡنَ ﴿۵۷
10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது:) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது.
விளக்கம் :
இருதயங்களில் உள்ள நோய்கள் என்ன? அவை யாவும் மக்களிடையே உள்ள சுயநலப் போக்கின் காராணமாக உருவாகும் பிரச்னைகளாகும். எனவே இந்தக் குர்ஆனின் அறிவுரைகள் உலக மக்கள் அனைவரின் சமுதாய பிரச்னைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளது. மேலும் தனிப்பட்ட நபரின் பிரச்னைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளது. இதில் குடும்ப தகராறு, வருவாய் பிரச்னை மற்றும் மனோ இச்சையின் அடிப்படையில் உருவாகும் தகாத ஆசைகள் ஆகிய அனைத்திற்கும் இது விமோசனம் அளிப்பதாக உள்ளது.
எனவே திருக்குர்ஆனின் வாசகங்களை வைத்துக் கொண்டு, நோயைக் குணப்படுத்த மூடு மந்திரமாகப் பயன்படுத்துவது முறையாகாது. காரணம் இது மூஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இறைவனின் அருட்கொடையாகவும் உள்ளது.
6.திருக்குர்ஆனை ஓதவேண்டிய முறையில் ஓத வேண்டும்.
اَلَّذِيۡنَ اٰتَيۡنٰهُمُ الۡكِتٰبَ يَتۡلُوۡنَهٗ حَقَّ تِلَاوَتِهٖؕ اُولٰٓٮِٕكَ يُؤۡمِنُوۡنَ بِهٖ ؕ وَمَنۡ يَّكۡفُرۡ بِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡخٰسِرُوۡن ﴿۱۲۱
2:121 யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ, அவர்கள் அதை எவ்வாறு ஓதி ஒழுகிட வேண்டுமோ அவ்வாறு ஓதி(ஒழுகி)ட. வேண்டும். அவர்கள் தாம் அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆவார்கள். யார் அதை நிராகரிக்கிரார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
விளக்கம் :
(1) உலகிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேதங்கள் இறக்கி அருளப்பட்டன. (பார்க்க 14:4) ஆனால் அவற்றை ஓதவேண்டிய முறையில் ஓதாததால் அவை நடைமுறைப்படுத்த முடியாதவாறு ஆகிவிட்டது.
(2) எனவே அதன் வார்த்தைகளை மட்டும் உச்சரித்து வந்தால் நன்மைகள் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை மக்களிடைய வளர விட்டார்கள். இந்நிலை மாற வேண்டும்.
(3) திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அறிவுரைகளாக இருப்பதால், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மேலோட்டமாகப் படித்துக் கொண்டிருக்காமல், அதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, சிறப்பாகச் செயலாற்றும் வகையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.(25:73)
(4) அத்தகையவர்களே இந்தக் குர்ஆனை ஏற்றுக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்றும் இவ்வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
(5) இதை விட்டுவிட்டு வெறும் அரபி வார்த்தைகளை மட்டும் ஓதி வந்தால் நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் வெற்றுப் பேச்சு என்று பொருளாகிவிடுகிறது.
7. திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு எங்கிருந்து விளக்கம் கிடைக்கும்?
(وَكَذٰلِكَ نُصَرِّفُ الۡاٰيٰتِ وَلِيَقُوۡلُوۡا دَرَسۡتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوۡمٍ يَّعۡلَمُوۡنَ ﴿۱۰۵
6:105: “நீர் எங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காண்பித்து வந்தீர்” என்று அவர்கள் கூறுவதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு இதனை தெளிவாக்குவதற்காகவும் நாம் திருக்குர்ஆன் வாசகங்களை திரும்பத் திரும்ப பலக் கோணங்களில் விவரிக்கின்றோம்.
(هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوۡعِظَةٌ لِّلۡمُتَّقِيۡنَ ﴿۱۳۸
3:138 இந்தக் குர்ஆன் உலக மக்களுக்கு தெளிவாக விளக்குவதற்காகவும் பயபக்தி உடையவர்களுக்கு நேர்வழி காட்டுவதாகவும் நற்போதனைகளாகவும் இருக்கின்றது.
اَفَغَيۡرَ اللّٰهِ اَبۡتَغِىۡ حَكَمًا وَّهُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ اِلَيۡكُمُ الۡـكِتٰبَ مُفَصَّلاً ؕ
6:114 நபியே நீர் கூறும்: அல்லாஹ் அல்லாதவனையாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு விளக்கமான வேதத்தை இறக்கி அருளியிருக்கின்றான்.
(1) முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு குர்ஆனை மட்டும் ஓதிக் காட்டி அதன்படி செயலாற்றும்படி சொல்லி வந்தார்கள்.
(2) வேத உண்மைகளை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தக் குர்ஆனின் வாசகங்கள் பலக் கோணங்களில் திரும்பத் திரும்ப விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குர்அனின் விளக்கத்தைத் தேடி வேறு எந்தப் புத்தகத்தையும் ஆராய்ந்துப் பார்க்கத் தேவையில்லை.
(3) இந்தக் குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளக்குவதற்காக இறக்கி அருளப்பட்டுள்ளது.
(4) எனவே இந்தக் குர்ஆனில் உள்ள அறிவுரைகளை மட்டும் உலக மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். வேறு எதையும் மார்க்க உண்மைகள் என்று எடுத்துரைக்க யாருக்கும் உரிமை இல்லை.
(5) அளவிலா ஞானங்களை உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட குர்ஆனை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளையா தீர்ப்பளிக்கும் நீதிபதியாக நான் தேடுவேன் என்று மக்களுக்கு கேட்கும்படியும் சொல்லப்படுகிறது.
(6) மேலும் இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதைக் கவனியுங்கள்.
(7) திருக்குர்ஆன் வாசகங்களுக்கு, அதை ஒட்டியுள்ள மற்ற வாசகங்களே தெளிவாக்கி விடுகின்றன என்பதே உண்மையாகும். எனவேதான் ‘தஸரீஃபெ ஆயாத்’ என்று சொல்லக்கூடிய “பலகோணங்களில் திரும்பத் திரும்ப சொல்லும் வாசகங்கள்” திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
(8) திருக்குர்ஆனை ஆராய்ந்து ஒவ்வொரு வாசகத்தின் விளக்கத்தையும் அதை ஒட்டியுள்ள மற்ற வாசகங்களை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். (பார்க்க 4:82) இதே அடிப்படையில் இந்த நூல் தொகுக்கப்படுகிறது.
8.திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதற்கு ஆதாரம்:
(اَفَلَا يَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَؕ وَلَوۡ كَانَ مِنۡ عِنۡدِ غَيۡرِ اللّٰهِ لَوَجَدُوۡا فِيۡهِ اخۡتِلَافًا كَثِيۡرًا ﴿۸۲
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(1) இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் இதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள்.
(2) இந்தக் குர்ஆனில் முரண்பாடுகள் எதுவும் இல்லாததே அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டதற்கு ஆதாரம் என்றும் சொல்லப்படுகிறது.
(3) மேலும் இந்தக் குர்அன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருப்பதாகவும் சொல்லப்படுவதை கவனியுங்கள். பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளும் இதற்குச் சாட்சியாக இருக்கின்றன. (4:166)
(لٰـكِنِ اللّٰهُ يَشۡهَدُ بِمَاۤ اَنۡزَلَ اِلَيۡكَ اَنۡزَلَهٗ بِعِلۡمِهٖ ۚ وَالۡمَلٰٓٮِٕكَةُ يَشۡهَدُوۡنَ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيۡدًا ؕ ﴿۱۶۶
4:166. (நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான், அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான், மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள், மேலும் சாட்சியம் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
விளக்கம் :
(1) இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்பட்டதற்கு அல்லாஹ்வே சாட்சி சொல்லும் போது, வேறு எந்த சாட்சி நமக்குத் தேவைப்படும்? அல்லாஹ்வைவிட சிறந்த சாட்சி வேறு ஏதாவது இருக்க முடியுமா?
(2) இதை ஆராய்ந்து பார்க்கும் போது, இவையாவும் அல்லாஹ்வின் பேரருள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
(3) காரணம் பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் யாவும் மனித கட்டளைக்கு இணங்கி செயல்படும்படியாகப் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
(4) அந்த இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தி சமுதாய மக்களுக்கு பலன்களிக்கும் படி செய்யும் போது, அவையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் யாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியானப் பாதையைக் காட்டுகிறது என்பதற்கு சாட்சியாகத் நிற்கும்.
(5) இதனடிப்டையில் சமுதாயம் உருவாகும்போது, குர்ஆன் மூலம் அல்லாஹ் அளித்த சந்தோஷங்கள் கிடைத்து வருவதைப் பார்த்து, மூஃமின்களும் சாட்சி சொல்பவர்களாகத் திகழ்வார்கள்.
قُلۡ اَىُّ شَىۡءٍ اَكۡبَرُ شَهَادَةً ؕ قُلِ اللّٰهُ ۙ شَهِيۡدٌ ۢ بَيۡنِىۡ وَبَيۡنَكُم وَاُوۡحِىَ اِلَىَّ هٰذَا الۡـقُرۡاٰنُ لِاُنۡذِرَكُمۡ بِهٖ وَمَنۡۢ بَلَغَ ؕ
6:19. (நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்,“அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான். இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக்கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக,)
(1) இந்த வாசகத்தில் திருக்குர்ஆன் மட்டுமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருப்பதாக சொல்லப்டுவதை கவனியுங்கள்.
(2) இதைக் கொண்டுதான் வேத அறிவுரைகள் சென்றடையாத இடங்களுக்கு எடுத்துரைக்கும் படி சொல்லப்படுவதையும் கவனியுங்கள்.
(3) எனவே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டதால், அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள், அல்லாஹ் இறக்கி அருளிய திருக்குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَيۡكُمۡ مِّنۡ رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَ ؕ قَلِيۡلًا مَّا تَذَكَّرُوۡنَ
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலரர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள், நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
விளக்கம் :
கவனித்தீர்களா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டதை மட்டும் பின்பற்றி நடக்கும்படியும், அதை தவிர்த்து வேறு எந்த வழிமுறையும் உங்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக விளங்கும் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
9.திருக்குர்ஆனைப் பின்பற்றினால் ஒளிக்குமேல் ஒளி கிடைக்கும்:
اَللّٰهُ نُوۡرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ مَثَلُ نُوۡرِهٖ كَمِشۡكٰوةٍ فِيۡهَا مِصۡبَاحٌ ؕ الۡمِصۡبَاحُ فِىۡ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوۡكَبٌ دُرِّىٌّ يُّوۡقَدُ مِنۡ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيۡتُوۡنَةٍ لَّا شَرۡقِيَّةٍ وَّلَا غَرۡبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيۡتُهَا يُضِىۡٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٌ ؕ نُوۡرٌ عَلٰى نُوۡرٍ ؕ يَهۡدِى اللّٰهُ لِنُوۡرِهٖ مَنۡ يَّشَآءُ ؕ وَ يَضۡرِبُ اللّٰهُ الۡاَمۡثَالَ لِلنَّاسِؕ وَاللّٰهُ بِكُلِّ شَىۡءٍ عَلِيۡمٌ ۙ ﴿۳۵
24:35 வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன்(ஏற்படுத்தும்) ஒளி ஏற்படுத்தியது போல, திருக்குர்ஆன் மாடத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கு போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது,அக்க்ண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அதுபாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணையி)னால் எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததும் அன்று, மேல்திசையைச் சேர்ந்ததுமன்று. அதனை நெருதீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும். (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ்யாவற்றையும் நன்கு அறிபவன்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் அகிலங்கள் அனைத்திலும் பூமியிலும் பரவி இருப்பது போல், மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு இவ்வேதம் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
(2) எவ்வாறு கண்ணாடி மாடத்தில் ஒரு விளக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அது நாலாப் புறத்திலும் ஒளி வீசுகிறதோ, அதே போன்று இந்தக் குர்ஆனின் வழிகாட்டுதல் என்ற ஒளி உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழிகாட்டும் நட்சத்திரமாகத் திகழ்கிறது.
(3) அந்த விளக்கு அணையாமல் தொடர்ந்து ஒளி வீசுவதற்காக, ஜைத்தூன் எண்ணெய் எவ்வாறு துணை நிற்கிறதோ அவ்வாறே அல்லாஹ்வின் ஏற்பாடுகள் யாவும் (Allah's System) திருக்குர்ஆனின் செயல்திட்டங்கள் நிறைவேற எல்லா காலத்திற்கும் துணை நிற்கும்.
(4) எவ்வாறு ஒளிவிளக்கு ஒரு குறிப்பிட்ட திசை மட்டும் ஒளி வீசாமல் எல்லா திசைகளுக்கும் ஒளி வீசுகிறதோ, அவ்வாறே திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும்தான் என்றில்லாமல், உலகிலுள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் வழிகாட்ட வல்லது. இதில் நாடு, மொழி, இனம் ஆகியவற்றிற் கெல்லாம் இடமிருப்பதில்லை
(5) எவ்வாறு எரியும் விளக்கிற்கு நெருப்பு தீண்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக ஒளிவீசுமோ, அவ்வாறே அல்லாஹ்வின் ஒளிமிக்க வழிகாட்டுதலைப் பின்பற்றும் சமுதாயங்களுக்கு எவ்வித தீங்கும் நெருங்காது.
(6)ஒளிமிக்க வழிகாட்டுதலைப் பின்பற்றினாலும் பின்பற்றா விட்டாலும் அதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் அந்தந்த சமுதாயத்திற்கே அன்றி அதனால் அந்தச் சட்ட அமைப்பு தன்னுடைய இடத்தில் பாதுகாப்பாகவே இருக்கும்.
(7) இப்படியாக திருக்குர்ஆனின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் சமுதாயங்களுக்கு ஒளிக்கு மேல் ஒளி கிடைத்து எல்லா விதமான சந்தோஷங்களும் கிடைக்கும்.
(8) இந்தப் பேருண்மையை ஏற்றுக்கொள்பவர்களுக்கே அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்கும் என்பது தீர்மானிக்கப்பட்ட சட்டமாகும். எனவே இந்த வழிகாட்டுதலைப் பெற நாடி வருபவர்களுக்கே அல்லாஹ், “ஞானஒளி” என்னும் சத்திய பாதையின் பால் நடத்திச் செல்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. (18:29)
(9) காரணம் உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளும் பேரறிவாளன் தான் அல்லாஹ் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதாவது உள்ளத்தில் ஒன்று செயல் வேறு என்றிருந்தால் அந்த உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருக்காது.
10.திருக்குர்ஆனை பின்பற்றாவிட்டால் இருள் மேல் இருள் சூழ்ந்து கொள்ளும்.
وَالَّذِيۡنَ كَفَرُوۡۤا اَعۡمَالُهُمۡ كَسَرَابٍۢ بِقِيۡعَةٍ يَّحۡسَبُهُ الظَّمۡاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمۡ يَجِدۡهُ شَيۡــًٔـا وَّ وَجَدَ اللّٰهَ عِنۡدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِيۡعُ الۡحِسَابِ ۙ ﴿۳۹
24:39.அன்றியும் எவர்கள் இறை வழிகாட்டுதுலைஏற்க மறுக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப்போலாகும், தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் (எதுவரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது, ஒருபொருளையும் (அங்கே) காணமாட்டானே (அதுவரை), ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான், (அதன்படி அல்லாஹ்)அவன் கணக்கைத் தீர்க்கிறான், மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
விளக்கம் :
(1) எந்தச் சமுதாயம் வானுலக ஒளியாகிய இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, அதற்கு மாற்றமாகச் செயல்படுமோ, அவர்களுடைய செயல்களின் பலன்கள், பாலைவனத்தில் திறந்த வெளியில் தென்படும் கானல் நீரைப் போன்றதாக இருக்கும்.
(2) தாகமுள்ளவன், அந்தக் கானல் நீரைப் பார்த்து தண்ணீர் என நினைக்கிறான். (மேலும் பார்க்க 18:103&104) அதுபோல, தான் செய்து வரும் செயல்கள் யாவும் நன்மையானவை என்றே நம்புகிறான்.
(3) அவன் அந்த கானல் நீரின் பக்கம் வரும்போது, அங்கு ஒன்றுமில்லாததைக் காண்பது போல், அவன் செய்து வந்த செயல்களின் எதிர்ப்பாத்தப் பலன்கள் ஒருபோதும் அவனுக்குக் கிடைப்பதில்லை.
(4) அவனுடைய செயல்களின் விளைவுகள் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைப்படியே ஏற்படுவதைக் காண்பான்.
(5) மேலும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை ஏற்படுத்தும் விஷயத்திலும் அல்லாஹ்வின் கணக்கு வழக்கு ஒருபோதும் தவறாது என்பதையும் அப்போது அறிந்து கொள்வான்.
اَوۡ كَظُلُمٰتٍ فِىۡ بَحۡرٍ لُّـجّـِىٍّ يَّغۡشٰٮهُ مَوۡجٌ مِّنۡ فَوۡقِهٖ مَوۡجٌ مِّنۡ فَوۡقِهٖ سَحَابٌؕ ظُلُمٰتٌۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍؕ اِذَاۤ اَخۡرَجَ يَدَهٗ لَمۡ يَكَدۡ يَرٰٮهَاؕ وَمَنۡ لَّمۡ يَجۡعَلِ اللّٰهُ لَهٗ نُوۡرًا فَمَا لَهٗ مِنۡ نُّوۡرٍ ﴿۴۰
24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல மூடுகிறது. அதற்குமேல் மற்றோர் அலை, அதற்கும் மேல் மேகம் (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன்கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது,எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்த வில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
விளக்கம் :
(1) திருக்குர்ஆனைப் பின்பற்றாத சமூகத்தவர்களின் வாழ்வு இருளில் மூழ்கி சூனியம் ஆகிவிடுகிறது. எவ்வாறு ஒருவர் ஆழ்கடல் இருளில் மூழ்கித் தத்தளிக்கிறானோ, அது போல அத்தகைய சமுதாயங்களில், பிரச்னைகள் பல ஏற்பட்டு அதற்குத் தீர்வு காணமுடியாமல் தத்தளித்து வரும்.
(2) அது மட்டுமின்றி அவரை அந்தக் கடல் அலைகள் இழுத்துச் சென்று, மூழ்கடித்து, அலைக்கு மேல் அலைகளும், அதன்மேல் மேகங்களும் அவனை இருளில் தத்தளிக்க வைப்பது போல, சமுதாயத்தில் பிரச்னைக்கு மேல் பிரச்னைகளும் ஏற்பட்டு வரும்.
(3) அவற்றைத் தீர்த்துவைக்க முயன்றால், அந்தத் தீர்வால் மேலும் பல சிக்கல்களும் ஏற்பட்டு வரும். (மேலும் பார்க்க 2:17-20)
(4) எவ்வாறு இத்தகைய இருளில் சிக்கித் தவிப்பவர் தன் கைகளை வெளியே நீட்ட முடியாதோ அல்லது தன் கையை வெளியே நீட்டினாலும் அதைப் பார்க்க முடியாதோ, அவ்வாறே சமுதாய சிக்கல்களுக்கு ஒருபோதும் நிலையான தீர்வைக் காணவே முடியாது. இதுவே அல்லாஹ்வின் பேரொளியாக இருக்கும் இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழும் சமுதாயங்களின் இழிநிலையாகும்.
(5) இவைதான் திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மைகளாகும். இத்தகைய வாசகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை பல அத்தியாயங்களில் பல கோணங்களில் விவரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை திருக்குர்ஆன் உதாரணங்களின் மூலமும் அல்லாஹ்வின் படைப்புகள் செயல்பாடுகளை முன்வைத்தும் விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றி நடக்கும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாகத் திகழும் என்பது திண்ணம்.
11.மனிதனின் தனிப்பட்ட அறிவு:
மனிதனுக்கு அறிவாற்றல் இருப்பதால், வேதம் என்பதெல்லாம் தேவையற்றது என்றும், நல்லது கெட்டதைப் பற்றி ஒவ்வொரு மனிதனாலும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சிலர் வாதிடுவதை நாம் பார்க்கிறோம். இத்தகையவர்களுக்கு சில உண்மைகளை விளக்க வேண்டியதாக உள்ளது. கவனமாகப் படியுங்கள். முதலாவதாக வேதம் என்றால் என்னவென்பதை நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். வேதம் என்ற வார்த்தைக்கு “நிலையானவை”, “உலக நடைமுறைச் சட்டம்” “மாற்றியமைக்க முடியாதவை” என்று பொருள்படும். வேத வாக்கு என்றால் “இது இப்படித்தான்”– “இதற்கு அப்பால் எதுவுமில்லை” என்று ஆணித்தரமாக சொல்வதற்கு சொல்வோம். எனவே கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இறைவன் தன்னைப் பற்றியும் தன்னுடைய செயல் திட்டங்களைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைப்பது தான் வேதம். ஆனால் மனிதனின் தனிப்பட்ட அறிவு “மதம்” என்ற அடிப்படையில் பேசி வரும். அதாவது இறைவனைப் பற்றி மனிதன் கொண்டுள்ள கற்பனைகள் என்று பொருள் படும்..
வேதம் உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான சட்டதிட்டங்களையும் வரையறைகளையும் எடுத்துரைக்கிறது. அதைக் கடைப்பிடிப்பதால் ஏற்படவிருக்கும் நன்மைகளைப் பற்றியும் அதற்கு மாற்றமாகச் செயல்பட்டால் ஏற்படவிருக்கும் பேராபத்துகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் “மனிதனின் தனிப்பட்ட அறிவு” தன்னை சுற்றியுள்ள கலாச்சாரத்தையும் வழிமுறைகளையும் மட்டுமே கற்றுக் கொண்டு அதுவே சாலச் சிறந்தது என எண்ண வைக்கும்..
மனிதனின் தனிப்பட்ட அறிவு முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளையே ஆதாரமாகக் கொண்டு பேசும். ஆனால் வேதம் வரலாற்று ஆதாரத்தை முன்வைத்து பேசும். சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுகளின் காரணங்களை எடுத்துரைத்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு சரியான பாதை எவை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டும்..
மனிதனின் தனிப்பட்ட அறிவு எப்போதும் தன் வரையில் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும். அவனுடைய செயல்கள் மற்றவர்களை பாதிக்கின்றதா இல்லையா என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்காது. ஆனால் வேதம் சமுதாய மக்கள் அனைவரின் பாதுகாப்பை முன்வைத்துப் பேசும்..
மனிதனின் தனிப்பட்ட அறிவுக்கு உடனடியாக ஏற்படும் பாதிப்புகளை மட்டும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதைப் பற்றி யோசனை சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் வேதம் மனித செயல்களின் தற்காலிக மற்றும் வருங்கால நிலையான பாதிப்புகளை எடுத்துரைத்து முன் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுருத்தும். உதாரணத்திற்கு நெருப்பில் கை வைத்தால் உடனே சுடும். எனவே அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வழிமுறைகளைக் கூறும். அதே சமயம் சமுதாயத்தில் கற்பழிப்புகள் நடந்தால் அதன் மூலக் காரணம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனின் தனிப்பட்ட அறிவுக்கு இருக்காது. காரணம் அந்த தீய விளைவுகள் சமுதாயத்தில் காலம் காலமாகத் தொன்று தொட்டு வந்த தவறான கலாச்சாரத்தால் உருவானவையாகும். அதாவது ஆபாசங்கள் கலை என்ற போர்வையில் வந்தவை. இதைப் பற்றி மனித அறிவுக்குப் புலப்படாது. அப்படியே புலப்பட்டாலும் அதை தடுப்பதைப் பற்றி பேசவே மாட்டான். ஆனால் வேதம் அதன் மூலக் காரணத்தை அறிவித்து அதற்கு தடை விதிக்க அறிவுருத்தும்.
எனவே வேத அறிவுரைகளை முன்வைத்து மனிதன் சிந்திக்கும் போது, அவனுடைய சிந்தானா சக்தி விரிவடையும். ஆனால் இதற்கு மதச் சிந்தனைகள் தடைக் கல்லாக இருக்கும். அவை எப்போதும் பழங்காலத்து நிகழ்வுகளையே கற்பனையை கலந்து பேசிக் கொண்டிருக்க வைக்கும். அந்த வகையில் இன்றைய உலகில் இஸ்லாமிய அறிஞர்களும் விதி விலக்கல்ல. அவர்கள், திருக்குர்ஆனின் வழிகாட்டுதலுக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் மாற்றமான விஷயங்களை பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்ததாக சொல்லி வருவதைப் பார்க்கிறோம். இப்படியாக இஸ்லாம் என்ற மாபெரும் எழுச்சி மிகு மார்க்கம் மதமாக மரிறவிட்டது. அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
12.ஹதீஸ் என்றால் என்ன?
பொதுவாக “ஹதீஸ்’ என்று சொன்னதும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னவை அல்லது செயல்பட்டவை என்று பொருள் கொள்கிறோம். இது உண்மையானதே ஆகும். ஆனால் “ஹதீஸ்” என்ற வார்த்தைக்கு, “சொல்”, “நிகழ்வு”, “செய்தி”, “விஷயம்”, மற்றும் “வரலாறு” போன்ற அர்த்தங்களும் வரும். திருக்குர்ஆனையே ஹதீஸ் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஹதீஸ் என்ற வார்த்தை மேற்சொன்ன அர்த்தங்களில் திருக்குர்ஆனில் 27 இடங்களில் வருகிறது. அவற்றின் சிலவற்றை நாம் பார்ப்போம்.
13.அல்லாஹ்வின் ஹதீஸ்?
(اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ لَيَجۡمَعَنَّكُمۡ اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ لَا رَيۡبَ فِيۡهِؕ وَمَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰهِ حَدِيۡثًا ﴿۸۷
4:87 அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை, நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை, மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் ஹதீஸில் (சொல்லில்) உண்மையுடையோர் யார்?
விளக்கம்:
இங்கு “ஹதீஸ்” என்ற வார்த்தை, “சொல்” என்ற பொருளில் வந்துள்ளதை கவனியுங்கள். அதாவது அல்லாஹ்வின் ஹதீஸைவிட வேறு எந்த ஹதீஸ் உண்மையானதாக இருக்க முடியும் என்றும் கேட்கப்படுகிறது. ஆனால் மக்களோ மற்றவர்கள் கைப்பட எழுதிய புத்தகங்களையே முஹம்மது நபியின் பொன் மொழிகள் என்கின்றனர். இது சரியாகுமா?
وَقَدۡ نَزَّلَ عَلَيۡكُمۡ فِى الۡـكِتٰبِ اَنۡ اِذَا سَمِعۡتُمۡ اٰيٰتِ اللّٰهِ يُكۡفَرُ بِهَا وَيُسۡتَهۡزَاُبِهَا فَلَا تَقۡعُدُوۡا مَعَهُمۡ حَتّٰى يَخُوۡضُوۡا فِىۡ حَدِيۡثٍ غَيۡرِهٖۤ ۖ
4:140. (முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக் கப்படுவதையும், பரிகசிக்கப் படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு ஹதீஸில் (விஷயத்தில்) ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்"" என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். (மேலும் பார்க்க 6:68)
விளக்கம்:
இங்கு ஹதீஸ் என்ற வார்த்தை, “விஷயம்” அல்லது “பேச்சு” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வசனங்கள் - வார்த்தைகள் - அறிவுரைகள் ஆகியவற்றை பரிகசித்து, வீணானவற்றை பேசும் இடங்களில் அமர்ந்து இருக்கவேண்டாம் என்றும், அவ்வாறு அமர நெர்ந்தால் அதைவிட்டு, அல்லாஹ்வின் ஹதீஸின் பக்கம் வரச் செய்யும் படி சொல்லப்பட்டுள்ளதையும் கவனியுங்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் அல்லாஹ் சொல்லாததை எல்லாம் அல்லாஹ் சொன்னதாக பல விஷயங்களை கேள்விப் படுகிறோம். ஆச்சரியமே! அத்தகைய இடங்களில் அமர்ந்திருந்தால் நீங்களும் அதைச் சார்ந்தவர்களே என்று பொருள்படும் என்று சொல்லப்படுவதை கவனியுங்கள். அல்லாஹ் நாம் அனைவரையும் காப்பாற்றுவானாக.
14.அல்லாஹ்வின் ஹதீஸை விட்டு வேறு எதன் மீது ஈமான் கொள்ளப் போகிறார்கள்?
اَوَلَمۡ يَنۡظُرُوۡا فِىۡ مَلَـكُوۡتِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنۡ شَىۡءٍ ۙ وَّاَنۡ عَسٰٓى اَنۡ يَّكُوۡنَ قَدِ اقۡتَرَبَ اَجَلُهُمۡ ۚ فَبِاَىِّ حَدِيۡثٍۢ بَعۡدَهٗ يُؤۡمِنُوۡنَ ﴿۱۸۵
7:185. வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருட்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய தவணை நெருங்கியிருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்க வில்லையா?) இதற்குப் பின்னர் எந்த ஹதீஸைத் தான் (விஷயத்தைத் தான்) அவர்கள் ஈமான் கொள்ளப் போகிறார்கள்?
விளக்கம் :
(1) வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் அல்லாஹ்வின் அதிகாரங்களே செயல்பட்டு வருவதை அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? அதாவது ஒவ்வொரு படைப்பும் அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டு வருவதை அவர்கள் அறியமாட்டார்களா?
(2) அவை அனைத்தும் மனித செயல்களுக்கு ஏற்றவாறு பலன்களையும், எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன என்பதை அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? (பார்க்க 11:7)
(3) இதனடிப்படையில் அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகள் நெருங்கி வருவதையும் அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா?
(4) இந்த அளவுக்கு தெளிவான ஆதாரங்களை எடுத்துரைத்த பின்பும் வேறு எந்த ஹதீஸை தேடி அலைகிறார்கள்? அவ்வாறு வேறு ஹதீஸ்களை பின்பற்றுவதால் யாருக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது?
15.வீணான ஹதீஸ்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள்?
وَمِنَ النَّاسِ مَنۡ يَّشۡتَرِىۡ لَهۡوَ الۡحَدِيۡثِ لِيُضِلَّ عَنۡ سَبِيۡلِ اللّٰهِ بِغَيۡرِ عِلۡمٍۖ وَّيَتَّخِذَهَا هُزُوًا ؕ اُولٰٓٮِٕكَ لَهُمۡ عَذَابٌ مُّهِيۡنٌ ﴿۶
31:6. (இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் -அவர்கள் அறிவில்லாமல் வீணான ஹதீஸ்களை (வீணான பேச்சுக்களை) விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
விளக்கம் :
இங்கு லஹ்வல் ஹதீஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வீணான பேச்சுக்கள் என்று சொல்லப்படுகிறது. திருக்குர்ஆனில் இப்படிப்பட்ட ஹதீஸ்கள் இல்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது. திருக்குர்ஆன் அல்லாத மற்ற புத்தகங்களில் எழுதப்பட்டவற்றில் பல ஹதீஸ்கள் வீணானவை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு, மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட வீணான ஹதீஸ்களை எழுதி வெளியிடுவதாகவும் சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள். இத்தகைய வீணாண ஹதீஸ்களைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு என்றும் எச்சரிக்கப்படுவதையும் கவனியுங்கள்
16.வரலாறுகள் என்ற பொருளில் ஹதீஸ்கள்:
(هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡغَاشِيَةِؕ ﴿۱
88:1. சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) ஹதீஸ் (செய்தி) உமக்கு வந்ததா?
விளக்கம் :
அதாவது திருக்குர்ஆனின் அடிப்படையில் உருவாகவிருக்கும் மாபெரும் மருமலர்ச்சியின் ஹதீஸ் உமக்கு வந்ததா என்று கேட்கப்படுகிறது.
(هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ مُوۡسٰىۘ ﴿۱۵
79:15. (நபியே!) மூஸாவின் ஹதீஸ் (வரலாற்றுச் செய்தி) உங்களுக்கு வந்ததா?
(هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡجُـنُوۡدِۙ ﴿۱۷﴾ فِرۡعَوۡنَ وَثَمُوۡدَؕ ﴿۱۸﴾ بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ تَكۡذِيۡبٍۙ ﴿۱۹
85:17-19 (நபியே!) அந்தப் படைகளின் ஹதீஸ் (செய்தி) உமக்கு வந்ததா? ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும். எனினும் நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
(وَّاللّٰهُ مِنۡ وَّرَآٮِٕهِمۡ مُّحِيۡطٌۚ ﴿۲۰﴾ بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِيۡدٌ ۙ ﴿۲۱﴾ فِىۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ﴿۲۲
85:20-22 ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்தியகுர்ஆனாக இருக்கும். (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் -பதிவாகி பாதுகாக்கப் பட்டதாக இருக்கிறது.
விளக்கம் :
(1) நபிமார்கள் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சீர்த்திருத்தங்களை செய்ய முற்பட்ட போது, அவர்களுக்கு எதிராக போரிட்டு தோற்றுப் போன ஃபிர்அவுன் மற்றும் சமூது கூட்டத்தார்களின் படையினரைப் பற்றிய ஹதீஸ் (வரலாற்று செய்தி) உங்களுக்கு வந்தனவா?
(2) காரணம் அல்லாஹ்வின் நடைமுறை சட்டங்கள் எக்காலத்திலும் உலகம் முழுவதும் சூழ்ந்தவையாகவே உள்ளன. அவற்றைப் பற்றி பெருமைக்குரிய குர்ஆனில் தெளிவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே இன்றைய காலத்திலும் இறைக் கொள்கைக்கு எதிராகப் போரிடுபவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்,
(3) இந்தக் குர்ஆன் அழியா ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருப்பது போல், அல்லாஹ்வின் ஹதீஸ{ம் (சட்டமும்) நிலை மாறாததாகும்.
(4) எக்கலாதிலும் பொருந்தக் கூடிய ஹதீஸ்களே திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அதே போல் எக்கலாத்திலும் நடைபெறக் கூடிய விதிமுறைகள் தாம் அழியா ஏட்டில் பதித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே உலகம் நிலைத்திருக்கும் காலம் வரை நடைபெற்று வரும்.
17.ஹதீஸ் என்றால் திருக்குர்ஆனே!
அன்பர்களே! மேற் சொன்ன திருக்குர்ஆன் வாசகங்களை ஒன்றுக்கு பத்து தடவை படித்துப் பாருங்கள். இது போன்ற இன்னும் பல வாசகங்கள் திருக்குர்ஆனில் காணக் கிடைக்கின்றன. ஹதீஸ் என்றால் வார்த்தைகள், சொற்கள், வரலாற்று நிகழ்வுகள், இறைவனின் அறிவுரைகள், என்ற பொருளில் வந்துள்ளதை அறிந்து கொண்டிருப்பீர்கள். இதையும் தவிர்த்து வேறு என்ன வழிமுறை மனிதனுக்குத் தேவை? திருக்குர்ஆன் வாசகத்தை கவனித்துப் பாருங்கள்.
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِيۡمٍۚ ۙ ﴿۴۰﴾ وَّمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍؕ قَلِيۡلًا مَّا تُؤۡمِنُوۡنَۙ ﴿۴۱﴾ وَلَا بِقَوۡلِ كَاهِنٍؕ قَلِيۡلًا مَّا تَذَكَّرُوۡنَؕ ﴿۴۲﴾ تَنۡزِيۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِيۡنَ ﴿۴۳
69:39-43. நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிகவும் கண்ணியம் மிக்க ஒரு தூதுவரின் சொல்லாகும். மேலும் சகல வல்லமையும் பெற்ற நிலையான அர்ஷுக்கு உரியவனிடமிருந்து வந்தவை ஆகும். (பார்க்க 82:20) இது ஒரு கவிஞனின் சொல்லும் அன்று. நீங்கள் சொற்பமாகவே நம்புகிறீர்கள். இது குறிகாரனின் சொல்லும் அன்று. நீங்கள் சொற்பமாகவே நல்லறிவு பெறுகிறீர்கள். அகிலத்தாரிடமிருந்து இறக்கி அருளப்பட்டவையாகும்.
விளக்கம் :
(1) இந்தக் குர்ஆனில் சொல்லப்பட்டவை அனைத்தும் கண்ணியமிக்க இறைத்தூதரின் ஹதீஸ்களே (வார்த்தைகளே) என்று சொல்லப்படுவதைக் கவனியுங்கள்.
(2) மேலும் கவிஞர்கள் கற்பனை வளத்தோடு சொற்களை ஜோடித்து சொல்வதைப் போல் முஹம்மது நபிஸல் அவர்களால் அறிவிக்கப்பட்டவை அல்ல என்றும் சொல்லப்படுகிறது.
(3) அது மட்டுமின்றி அவை அகிலங்கள் அனைத்திலும் யாருடைய ஆட்சி நடைபெற்று வருகின்றதோ, அந்த மாபெரும் வல்லவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(4) எனவே அல்லாஹ்வின் சொல் வேறு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல் வேறு என்பதல்ல என்று இதிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.
(5) இத்தகைய உண்மைகளை எடுத்துரைத்தும், இதைப் பற்றி சிந்தித்து ஏற்றுக் கொள்பவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.
لَـقَدۡ كَانَ فِىۡ قَصَصِهِمۡ عِبۡرَةٌ لِّاُولِى الۡاَلۡبَابِؕ مَا كَانَ حَدِيۡثًا يُّفۡتَـرٰى وَلٰـكِنۡ تَصۡدِيۡقَ الَّذِىۡ بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيۡلَ كُلِّ شَىۡءٍ وَّهُدًى وَّرَحۡمَةً لِّـقَوۡمٍ يُّؤۡمِنُوۡنَ ﴿۱۱۱
12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல)படிப்பினை இருக்கிறது, இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாக செய்தியாக இருக்கவில்லை. மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இதுஉண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இதுவிவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்குநேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
விளக்கம் :
(1) திருக்குர்ஆனின் பன்னிரண்டாவது அத்தியாயத்தின் கடைசி வாசகத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.
(2) இங்கும் ஹதீஸ் என்ற வார்த்தை வரலாறு என்ற பொருளில் வருகிறது. அதாவது அவை அனைத்தும் நடந்த உண்மையே என்பதாகும்.
(3) அதைப் படித்துவிட்டு யூசுஃப் நபியின் அழகைப் பற்றியும், அவருக்குக் கிடைத்த உயர்ந்த அந்தஸ்தைப் பற்றியும் பேசி, பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அவை திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. மாறாக அந்த வரலாற்று தொகுப்புகளிலிருந்து உலக மக்களுக்குக் கிடைக்கின்ற படிப்பினைகள் என்னவென்பதை அறிவிக்கத்தான் அவை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
(4) அதாவது யூசுஃப் நபி, தன் நன்நடத்தைக் கொண்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்ந்து, உயர்ந்த அந்தஸ்தை அடைந்தாரோ, அவ்வாறே ஈமான் கொண்ட மக்களும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் அவை திருக்குர்அனில் சொல்லப்பட்டுள்ளன.
(5) ஆனால் இன்றைய கால ஆலிம்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பல கற்பனைக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றையே மக்களிடம் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
اَللّٰهُ نَزَّلَ اَحۡسَنَ الۡحَدِيۡثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ۖ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُوۡدُ الَّذِيۡنَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡۚ ثُمَّ تَلِيۡنُ جُلُوۡدُهُمۡ وَقُلُوۡبُهُمۡ اِلٰى ذِكۡرِ اللّٰهِ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهۡدِىۡ بِهٖ مَنۡ يَّشَآءُ ؕ وَمَنۡ يُّضۡلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنۡ هَادٍ ﴿۲۳
39:23 அல்லாஹ் மிக அழகான ஹதீஸ்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலிகள் இவற்றைக் கேட்கும் போது, சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வன் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
விளக்கம் :
(1) அல்லாஹ் இறக்கி அருளியுள்ள மார்க்க உண்மைகளை அழகான ஹதீஸ்கள் என்று சொல்லப்படுவதை கவனியுங்கள்.
(2) இவற்றை மிக அழகிய முறையில் வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்களுடன் இறக்கி அருளியுள்ளான். அவற்றிற்கு ஒப்பான நிகழ்வுகளே இவ்வுலகில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(3) இந்த வரலாற்று உண்மைகள் அடங்கிய ஹதீஸ்களை இன்றைய நவீன காலத்தோடு ஒப்பிடுகையில், இன்றைக்கும் அவ்வாறே நிகழ்ந்து வருவதை அறிந்து கொள்வீர்கள். இந்த உண்மைகள் உங்களை மெய்ச்சிலிர்க்க வைத்து விடும்.
(4) மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எண்ணி மூஃமின்கள் உள்ளச்சத்துடன் செயல்படுவார்கள். இதுதான் அல்லாஹ்வின் வழிமுறையாகும்.
(5) ஆக அல்லாஹ் காட்டும் வழியில் செல்ல யாருக்கு ஆர்வம் இருக்கின்றதோ, அவர்கள் நேர்வழி பெறுகிறார்கள். யார் அல்லாஹ்வின் நேர்வழியினை விட்டு விலகிவிடுகிறார்களோ, அவர்களுக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இருப்பதில்லை.
18.திருக்குர்ஆனைவிட சிறந்த ஹதீஸை கொண்டுவர முடியுமா?
(فَلۡيَاۡتُوۡا بِحَدِيۡثٍ مِّثۡلِهٖۤ اِنۡ كَانُوۡا صٰدِقِيۡنَؕ ﴿۳۴
52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு ஹதீஸை அவர்கள் கொண்டு வரட்டும்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து வந்த முஹம்மது நபியை, பைத்தியக்காரர் என்றும், தானே ஏதேதோ சொல்லி வருகிறார் என்றும், ஜோசியக்காரர் என்றும், புலவர் என்றும் மக்கள் பலவாராகப் பேசி வந்தனர். (பார்க்க 52:29-33)
(2) அவர்களைப் பார்த்து மேற்சொன்னவாறு திருக்குர்ஆன் அரைகூவல் விடுகிறது. அதாவது அவர்கள் சிறந்த மேதாவிகள் என்றால், இது போன்ற அல்லது இதை விட சிறந்த ஹதீஸை (பார்க்க 2:23) (அறிவுரைகளைக்) கொண்டு வரும்படி சொல்கிறது.
(3) இதை அறிந்த பின்பும் மற்றவர்கள் எழுதிய நூலை அல்லாஹ் இறக்கி அருளிய வேதத்திற்கு ஒப்பானதாகக் கருதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.
(5) அவ்வாறு எழுதிய நூல்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதையும் கவனியுங்கள்.
19.இன்றைய காலத்து ஹதீஸ்களின் உண்மை நிலை என்ன?
فَوَيۡلٌ لِّلَّذِيۡنَ يَكۡتُبُوۡنَ الۡكِتٰبَ بِاَيۡدِيۡهِمۡثُمَّ يَقُوۡلُوۡنَ هٰذَا مِنۡ عِنۡدِ اللّٰهِ لِيَشۡتَرُوۡا بِهٖ ثَمَنًا قَلِيۡلًا ؕ فَوَيۡلٌ لَّهُمۡ مِّمَّا کَتَبَتۡ اَيۡدِيۡهِمۡ وَوَيۡلٌ لَّهُمۡ مِّمَّا يَكۡسِبُوۡنَ ﴿۷۹
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே (ஹதீஸ்) நூலை எழுதிவைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ் விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களோ, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும், அவர்களுக்கு கேடுதான், அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக்கேடு தான்!
விளக்கம் :
(1) சொற்ப ஆதாயத்திற்காக தாமே நூலை எழுதி வைத்துக் கொண்டு அல்லாஹ் சொன்னதாக சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களுக்குக் கேடுதான் என்று சொல்லப்படுவதைக் கவனியுங்கள்.
(2) மேற்சொன்ன வாசகம், திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலக் கட்டத்தில் வாழ்ந்த யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லப்பட்டது என்றும், எனவே இதற்கும் முஸ்லிம்களாகிய நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நாம் திருக்குர்ஆன் மூலமொழியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவே இல்லை என்றும் சொல்வதை நாம் கேட்கிறோம்.
(3) எனவே அல்லாஹ் சொன்னதாக சொல்லாமல், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எழுதிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்றும் அக்காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் எண்ணி விட்டார்கள் போலும். அதானல்தான், கலப்படம் செய்யப்பட்ட தவ்ராத் மற்றும் பைபிள் ஆகிய வேதங்களில் சொல்லப்பட்டவை எல்லாம் முஹம்மது நபி(ஸல்) சொன்னதாக இலட்சக் கணக்கான ரிவாயத்துகளை எழுதி ஹதீஸ் புத்தகங்கள் என வெளியிட்டுள்ளார்கள்.
(4) அவ்வாறு வெளியிட்டிருப்பதை அவர்கள் திருக்குர்அனை வைத்து சரி பார்க்கத் தவறிவிட்டார்கள். மேலும், திருக்குர்ஆன் வாசகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முஹம்மது நபிஸல் அவர்கள் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டுள்ள “ரிவாயத்து” புத்தகத்தை வைத்துதான் புரிந்து கொள்ள முடியும் என்றும் சொல்லி வருகிறார்கள்.
(5) எந்த ஒரு நூலையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ,அதன் மொழியை பயில வேண்டியது முக்கியமான ஒன்று. கூடவே அந்த நூலின் மையக் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் ஏரத்தாழ 250 ஆண்டுகள் கழிந்து, ஈரானியர்கள் எழுதிய ரிவாயத்து புத்தகங்களை, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பொன் மொழி என்று சொன்னால் அதை எப்படி கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ள முடியும்? அன்பர்கள் இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் நபிமார்களின் வருகையைப் பற்றியும், இறுதி நபியாகிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்ற உண்மையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் மற்ற ஏனைய நபிமார்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன அறிவிக்கிறது என்பதை கவனிப்போம்.
20.நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைப் படியே செயல்பட்டார்கள்.
وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذۡنِ اللّٰهِ ؕ
4:64. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே யன்றி, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை.
விளக்கம் :
கவனித்தீர்களா? உலகிற்கு வருகை தந்த எந்த நபியும், இறைக் கட்டளைக்கு மாறு செய்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்கள் நபிமார்களின் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.
21.வஹீச் செய்திகளில் வேற்றுமை இருந்ததில்லை:
شَرَعَ لَـكُمۡ مِّنَ الدِّيۡنِ مَا وَصّٰى بِهٖ نُوۡحًا وَّالَّذِىۡۤ اَوۡحَيۡنَاۤ اِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهٖۤ اِبۡرٰهِيۡمَ وَمُوۡسٰى وَعِيۡسٰٓى اَنۡ اَقِيۡمُوا الدِّيۡنَ وَ لَا تَتَفَرَّقُوۡا فِيۡهِؕ
42:13. நூஹ{க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக ஆக்கியிருக்கின்றான், ஆகவே (நபியே!) நாம் உமக்குவஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்" என்பதே -
விளக்கம்:
காலம் காலமாக, ஆதி முதல் வந்த நபிமார்கள் அனைவருக்கும் இறக்கி அருளப்பட்ட வழிகாட்டுதல்கள் யாவும் ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதை மிகத் தெளிவாக சொல்லப்பட்டு உள்ளதை கவனியுங்கள். மேலும் அதனடிப்படையில் மார்க்கத்தை சமுதாயத்தில் நிலை நிறுத்தும்படியும் எல்லா நபிமார்களும் அறிவுருத்தப்பட்டதையும் கவனியுங்கள்.
22.நபிமார்களுக்கிடையே வேற்றுமை பாராட்டக் கூடாது:
قُلۡ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنۡزِلَ عَلَيۡنَا وَمَاۤ اُنۡزِلَ عَلٰٓى اِبۡرٰهِيۡمَ وَ اِسۡمٰعِيۡلَ وَاِسۡحٰقَ وَيَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَمَاۤ اُوۡتِىَ مُوۡسٰى وَ عِيۡسٰى وَالنَّبِيُّوۡنَ مِنۡ رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ اَحَدٍ مِّنۡهُم وَنَحۡنُ لَهٗ مُسۡلِمُوۡنَ ﴿۸۴
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்ட வற்றையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம், நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (மேலும் பார்க்க 2:136)
விளக்கம்:
எல்லா நபிமார்களும் கொண்டு வந்த மார்க்க உண்மைகள் ஒரே அடிப்படையில் இருந்ததால், அவர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டுவதற்கு ஏது இடம்? எனவே நபிமார்கள் விஷயத்திலும் வேற்றுமை பாராட்ட முடியாது. அவர்கள் கொண்டுவந்த மார்க்க விஷயத்திலும் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றி சொல்லும் போது
23.முஹம்மது நபி(ஸல்) அவர்கள்:
﴾ اِنَّكَ لَمِنَ الۡمُرۡسَلِيۡنَۙ ﴿۳
36:3. நிச்சயமாக நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். என்றும்,
قُلۡ مَا كُنۡتُ بِدۡعًا مِّنَ الرُّسُلِ
46:9. (இறை) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்லன்,(என்றும் வருகிறது.)
விளக்கம் :
நபிமார்கள் வரிசையில் அவரும் ஒருவராக இருந்ததாகவும், அவர் புதிதாக வந்த நபி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே எல்லா நபிமார்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட்டது போல் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் கட்டளையை மட்டும் பின்பற்றி நடக்கும் நபியாக இருந்தார். இதுவே உண்மையாகும்.
24.முஹம்மது நபி(ஸல்) இறைக்கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட்டார்.
(ا ِتَّبِعۡ مَاۤ اُوۡحِىَ اِلَيۡكَ مِنۡ رَّبِّكَۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِكِيۡنَ ﴿۱۰۶
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர, இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
விளக்கம்:
இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள வஹீ என்னும் இறை வழிகாட்டுதலை மட்டும் பின்பற்றி நடக்கும்படி முஹம்மது நபி அறிவுருத்தப்படுவதை கவனியுங்கள். அதைத் தவிர வேறு எந்தக் கட்டளைக்கும் அடிபணிய வேண்டாம் என்றும், மார்க்க விஷயத்தில் மனோ இச்சையின்படி வாழும் முஷ்ரிக்குகளை விட்டு விலகியே இருக்கும்படியும் அறிவுருத்தபடுவதை கவனியுங்கள்.
25.மக்களிடையே திருக்குர்ஆனை மட்டும் பரப்பினார்:
وَاِذَا تُتۡلٰى عَلَيۡهِمۡ اٰيَاتُنَا بَيِّنٰتٍ ۙ قَالَ الَّذِيۡنَ لَا يَرۡجُوۡنَ لِقَآءَنَا ائۡتِ بِقُرۡاٰنٍ غَيۡرِ هٰذَاۤ اَوۡ بَدِّلۡهُ ؕ قُلۡ مَا يَكُوۡنُ لِىۡۤ اَنۡ اُبَدِّلَهٗ مِنۡ تِلۡقَآئِ نَـفۡسِىۡ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا يُوۡحٰۤى اِلَىَّ ۚ اِنِّىۡۤ اَخَافُ اِنۡ عَصَيۡتُ رَبِّىۡ عَذَابَ يَوۡمٍ عَظِيۡمٍ ﴿۱۵
10:15. அவர்கள் மீது தெளிவான நம் வழிகாட்டுதலை எடுத்துரைத்தால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒருகுர்ஆனை நீர் கொண்டு வாரும், அல்லது இதை மாற்றிவிடும்"" என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான்ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்""என்று (நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம்:
கவனித்தீர்களா? முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறெதையும் எடுத்துரைக்கவில்லை என்பதை இவ்வாசகம் தெளிவாக்கி விடுகிறது. மக்களின் விருப்பப்படி, அவர் திருக்குர்ஆனில் எவ்வித சிறு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. அவ்வாறு செய்தால் அவரும் தண்டனைக்குள்ளாவார் என்றும் சொல்லப்படுவதை கவனியுங்கள். அல்லாஹுஅக்பர். ரஹ்மதுல் லில் ஆலமீனுக்கே இந்த அளவுக்கு கட்டுப்பாடு என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்? அது மட்டுமின்றி அவர் மக்களிடையே உள்ள பிரச்சினைகளுக்கு எந்த தீர்ப்பை சொல்வதாக இருந்தாலும் அல்லாஹ் இறக்கி அருளிய வேதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கட்டளை இடப்படுவதைக் கவனியுங்கள்.
26.முஹம்மது நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் அடிப்படையிலேயே தீர்ப்பளித்தார்.
وَاَنِ احۡكُمۡ بَيۡنَهُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعۡ اَهۡوَآءَهُمۡ وَاحۡذَرۡهُمۡ اَنۡ يَّفۡتِنُوۡكَ عَنۡۢ بَعۡضِ مَاۤ اَنۡزَلَ اللّٰهُ اِلَيۡكَؕ
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக, அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர், அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மை திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பீராக,
விளக்கம் :
(1) மக்களிடையே இருந்து வந்த வேற்றுமை பகைகளையும், சமூக பிரச்சனைகளையும் அல்லாஹ் இறக்கி அருளிய திருக்குர்ஆனின் படியே தீர்ப்பளிக்கும் படி கட்டளை இடப்படுவதைக் கவனியுங்கள்.
(2) நீதி மன்ற விஷயமாக இருந்தாலும் அல்லது ஆட்சியமைப்பு சம்பந்தமாக முடிவெடுக்வேண்டியதாக இருந்தாலும் மக்களின் கருத்துக் கணிப்பை வைத்து முடிவெடுக்க வெண்டாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் அவர்களில் பெரும்பாலோர் தம் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களே ஆவார்கள்.
(3) முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பதாக முறையிட்டுக் கொள்ளும் நாம் எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெளிவாக்க வேண்டியதில்லை. நாம் அல்லாஹ் காட்டிய வழிகாட்டுதலின்படி தீர்ப்பளிக்கவில்லை என்றால், நாமும் நம் மனஇச்சைப்படி தான் தீர்ப்பளிக்க வேண்டி வரும். அதன் பின் காலப்போக்கில் மக்களிடையே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பே மக்களுக்கு இல்லாமல் போய்விடும். இதன் விளைவாக
(اَفَحُكۡمَ الۡجَـاهِلِيَّةِ يَـبۡغُوۡنَؕ وَمَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ حُكۡمًا لِّـقَوۡمٍ يُّوۡقِنُوۡن ﴿۵۰
5:50. அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்?உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்புவழங்குவதில் அழகானவன் யார்?
விளக்கம்:
அஞ்ஞான காலத்தில், மக்கள் செய்து வந்தது போலவே தீர்ப்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்து வந்திருந்தால், முஸ்லிம்களை விட சிறந்த தீர்ப்பு அளிப்பவர்கள் உலகில் வேறு யாராவது இருந்திருக்க முடியுமா?
27.முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் நாம் என்ன செய்திருக்க வேண்டும்?
يٰۤـاَيُّهَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ ؕ وَاِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسٰلَـتَهٗ ؕ
5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்.
விளக்கம்:
முஹம்மது நபி(ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் என்ன கட்டளை பிறப்பித்துள்ளான் என்பதைக் கவனியுங்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும் நாமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட வழிகாட்டுதலை மட்டுமே மக்களிடம் பரப்பி வந்திருக்க வேண்டும்.
ஆனால் பிற்காலத்தில் வஹீச் செய்தி இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. அவை வஹீயெ ஜல்லி மற்றும் வஹீயெ ஃகஃபீ என்பதாகும். வஹீயெ ஜல்லி என்பது வெளிப்படையாக இறக்கி அருளப்பட்டது. அதாவது அது திருக்குர்ஆன் ஆகும். வஹீயெ ஃகஃபீ என்பது மறைமுகமாக இறக்கி அருளப்பட்டது. அவைதான் ஹதீஸ் என சொல்லப்பட்டது.
காலப்போக்கில் திருக்குர்ஆனை வெறும் ஓதுவதற்காகவும், ஹதீஸ்களை பின்பற்றி நடப்பதற்காகவும் இறக்கி அருளப்பட்டதாக முஸ்லிம்களிடையே பரவியது. இவ்வாறு அறிவித்து உலகிலுள்ள முஸ்லிம்கள் திருக்குர்ஆனை விட்டு தனிமைப் படுத்தப்பட்டார்கள். இவ்வாறு சொல்லி வருவதால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் திருக்குர்ஆனை வெறுமனே ஒதிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலுள்ள விஷயங்களில் எதுவும் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.
ஆனால் இரு வகையான வஹீச் செய்திகள் வந்ததற்கு திருக்குர்ஆனில் எவ்வித ஆதாரமும் கிடையாது. திருக்குர்ஆன் மட்டுமே வஹீச் செய்தியாக இறக்கியருளப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது. திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.
28.வஹீச் செய்திகளில் இரு வகை உண்டா?
قُلۡ اَىُّ شَىۡءٍ اَكۡبَرُ شَهَادَةً ؕ قُلِ اللّٰهُ شَهِيۡدٌ ۢ بَيۡنِىۡ وَبَيۡنَكُمۡ وَاُوۡحِىَ اِلَىَّ هٰذَا الۡـقُرۡاٰنُ لِاُنۡذِرَكُمۡ بِهٖ وَمَنۡۢ بَلَغَ ؕ
6:19. (நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்,“அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான், இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
விளக்கம்:
திருக்குர்ஆன் மட்டுமே இறக்கியருளப்பட்டதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருப்பதாக இங்கு சொல்லப்படுகிறது. அதைவிட சிறந்த சாட்சி வேறு ஏதாவது இருக்க முடியுமா?
மேலும் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். இந்த குர்ஆனைக் கொண்டுதான் மக்களுக்கு எச்சிரிக்கை செய்ய வேண்டும் என்றும் இவ்வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே வஹீயெ ஜல்லி வஹீயெ ஃகஃபீ என்பதெல்லாம் பிற்காலத்தில் உருவான வழிமுறைகளே ஆகும்.
இன்றைய காலக் கட்டத்தில் மறைவாக வந்ததை வெளிப்படையாக பரப்பி வருகிறார்கள். உலகார் முன் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதை மூடி மறைத்து விட்டார்கள்.
29.தாங்களாகவே எழுதிக் கொண்ட நூல்கள்?
فَوَيۡلٌ لِّلَّذِيۡنَ يَكۡتُبُوۡنَ الۡكِتٰبَ بِاَيۡدِيۡهِمۡ ثُمَّ يَقُوۡلُوۡنَ هٰذَا مِنۡ عِنۡدِ اللّٰهِ لِيَشۡتَرُوۡا بِهٖ ثَمَنًا قَلِيۡلًا ؕ فَوَيۡلٌ لَّهُمۡ مِّمَّا کَتَبَتۡ اَيۡدِيۡهِمۡ وَوَيۡلٌ لَّهُمۡ مِّمَّا يَكۡسِبُوۡنَ ﴿۷۹
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடையகைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான்,அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக்கேடு தான்.
நாம் ஏற்கனவே எழுதியது போல் இவ்வாசகம் திருக்குர்ஆன் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்லப்பட்டதாகவும், நமக்கும் இதற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் முஸ்லிம் உலமாக்கள் கூறுகின்றனர். நாம் எழுதி வைத்துள்ள ரிவாயத்துப் புத்தகங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னவை அல்லது செயல்பட்டவை ஆகும் என்கின்றனர். எனவே நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமையாகும் என்கின்றனர். அல்லாஹ் அவ்வாறு நம் மீது கடமையாக்கி இருக்கின்றானா என்பதைத் தான் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
30.இன்றைய காலத்து ஹதீஸ் நூல்கள் யாவும் ரிவாயத்துகளே!!
நாம் ஏற்கனவே சொன்னது போல திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவை அனைத்தும் “ஹதீஸ்”களே ஆகும். அதாவது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் அறிவித்த “ஹதீஸ்”கள் ஆகும். உதாரணத்திற்கு (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது, மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது,"(2:219) என்று பதிலளித்துவிடு என்று திருக்குர்ஆனில் வருகிறது. ஆக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அல்லாஹ் நேரடியாக பதில் சொல்லாமல், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக பிதலளிக்கின்றான். இவ்வாறு அவர் அறிவித்தவையே “ஹதீஸ்”கள் ஆகும்.
31.ரிவாயத்துகள் என்றால் என்ன?
ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பல்வேறு மார்க்கப் புத்தகங்கள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் ஹதீஸ்கள் அல்ல. அவை யாவும் ரிவாயத்துகள் ஆகும். ரிவாயத்து என்றால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அல்லது செயல்பட்டதாக “இன்னார்” அறிவித்தது. அந்த “இன்னார்” பெயருடன்“ரலி” என்ற வார்த்தையை இணைத்துக் கொள்வார்கள். இவ்வார்த்தையை பொருத்தி விட்டால் அவர் சஹாபாவாகி விடுவார். சஹாபா என்றால் நபித் தோழர் என்பதாகும். அதன் பின் அவர் அறிவிப்பவை யாவும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தது அல்லது செயல்பட்டது என்றாகிவிடும்.
அதன் பின் அதை எதிர்த்துப் பேசவோ அல்லது அதை விமர்சிப்பதற்கோ எவருக்கும் தைரியம் இருப்பதில்லை. இப்படியாக லட்சக் கணக்கான ரிவாயத்துக்கள் உள்ளன. அவை யாவும் உண்மையான ரிவாயத்துகளே (அறிவிப்புகளே) என்று நம்பி எல்லா பள்ளிவாசல் இமாம்களும் ஜும்மா தொழுகை சொற்பொழிவின் போது, உரையாற்றி வருகிறார்கள். எனவே பெரும்வாரியான முஸ்லிம்களும் அவை அனைத்தும் உண்மையானதே என்று நம்புகின்றனர்.
32.திருக்குர்ஆன் முஹம்மது நபி(ஸல்) மீது இறக்கியருளப்பட்டதற்கு ஆதாரம் என்ன?
ரவாயத்துகளை நம்பாமல் திருக்குர்ஆனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்றும், திருக்குர்ஆன் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டது என்பதற்கு ஆதாரம் என்னவென்றும் பலர் கேட்கிறார்கள். மேலும் சிலர், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாமாகவே சிந்தித்து எழுதிய நூல்தான் திருக்குர்ஆன் என்றும், திருக்குர்ஆன் வானுலக வேதம் என்பதெல்லாம் பொய் என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.
திருக்குர்ஆனின் முழு ஞானம் இல்லாதவர்கள் தாம் இத்தகைய கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருவார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் இத்தகைய கருத்துக்களை பொறுப்பில்லாமல் வெளிப்படுத்த மாட்டார்கள். எனவே திருக்குர்ஆன் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டதற்கு தக்க ஆதாரங்களை நாம் இங்கு தந்துள்ளோம். அதை கவனமாகப் படியுங்கள்.
ذٰ لِكَ مِنۡ اَنۡۢـبَآءِ الۡغَيۡبِ نُوۡحِيۡهِ اِلَيۡكَؕ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يُلۡقُوۡنَ اَقۡلَامَهُمۡ اَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يَخۡتَصِمُوۡنَ ﴿۴۴
3:44. (நபியே!) இவை (யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும், இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம், மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
விளக்கம்:
ஈஸா நபியின் தாயார் மர்யம் (அலை) அவர்கள் ஆசிரமத்தில் கன்னி ஸ்திரியாக வாழ்ந்து வந்த சமயத்தில் நடந்த சம்பவமிது. அவர் ஜக்கரியா நபியின் பராமரிப்பில் இருந்து வந்தார். (பார்க்க 3:37) துரவறத்தை மேற்கொள்பவர்கள் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஆசிரமத்து சட்டமாகும். ஆனால் மர்யம் (அலை) பருவ மங்கை ஆன பின், ஆசிரமத்து மடாதிபதிகள் அவரை தம் பராமரிப்பில் கொண்டு வரவேண்டும் என்று ஒரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இறுதியில் அவர் யாருக்குச் சொந்தம் என்பதை கண்டறிய குலுக்குச் சீட்டுப் போட்டுப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கீழ்தரமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். இச்சம்பவத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் தெரியாது. இதை “வஹீ” எனும் “இறைச் செய்திகள் அளித்தல்” என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டவை ஆகும். எனவே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை தாமாக சிந்தித்து எழுதியிருக்க முடியாது.
تِلۡكَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَيۡبِ نُوۡحِيۡهَاۤ اِلَيۡكَۚ مَا كُنۡتَ تَعۡلَمُهَاۤ اَنۡتَ وَلَا قَوۡمُكَ مِنۡ قَبۡلِ هٰذَا ۛؕ فَاصۡبِرۡ ۛؕ اِنَّ الۡعَاقِبَةَ لِلۡمُتَّقِيۡنَ ﴿۴۹
11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும், நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை, நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
விளக்கம்:
இச்சம்பவம் நூஹ் நபி காலத்தில் நடந்ததாகும். பிரளயத்தில் மூழ்கிப் போனவர்களுள் தன் மகனும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு, மனந் தாளாமல் அவனைக் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய, அம்மகன் அவரைச் சார்ந்தவனாக இல்லாததால் அவனைக் காப்பாற்றச் சொல்வது சரியில்லை என்று அல்லாஹ் பதிலளித்து விடுகின்றான்.
இதன்பின் அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து அவர் பாக்கியமிக்க இடத்தில் வாழ அனைத்து வசதிகளும் கிடைத்தன. இந்த விஷயத்தைப் பற்றியும் முஹம்மது நபிக்கோ அல்லது அவருடைய சமூகத்தாருக்கோ தெரியாது. இவையாவும் “வஹீ” எனும் “இறைச் செய்திகள் அளித்தல்” என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டவை ஆகும். எனவே முஹம்மது நபிஅவர்கள் திருக்குர்ஆனை தாமாக சிந்தித்து எழுதியிருக்க முடியாது.
(وَكَمۡ اَهۡلَكۡنَا قَبۡلَهُمۡ مِّنۡ قَرۡنٍؕ هَلۡ تُحِسُّ مِنۡهُمۡ مِّنۡ اَحَدٍ اَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزًا ﴿۹۸
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம், அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா?அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
விளக்கம்:
வரலாற்று சம்பவங்களைப் பற்றி எடுத்துரைத்த பின் மேற்சொன்னவாறு அறிவிக்கப்படுகிறது. நபிமார்களுக்கு மறைவான ஞானம் இருப்பதில்லை. எனவே அழிந்து போன சமுதாயத்தவர்களின் அலரல் சத்தத்தைக் கேட்டு திருக்குர்ஆன் வாசகத்தை எழுதவில்லை என்று கூறப்படுகிறது. எனவே முஹம்மது நபிஸல் அவர்கள் திருக்குர்ஆனை தாமாக சிந்தித்து தாமாகவே எழுதியிருக்க முடியாது.
وَلٰـكِنَّاۤ اَنۡشَاۡنَا قُرُوۡنًا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ الۡعُمُرُۚ وَمَا كُنۡتَ ثَاوِيًا فِىۡۤ اَهۡلِ مَدۡيَنَ تَـتۡلُوۡا عَلَيۡهِمۡ اٰيٰتِنَاۙ وَلٰـكِنَّا كُنَّا مُرۡسِلِيۡنَ ﴿۴۵
28:45. எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம், அவர்கள் மீது காலங்கள் பல கடந்து விட்டன, அன்றியும் நீர் மத்யன்வாசிகளிடம் வசிக்கவுமில்லை, அவர்களுக்கு நம்வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை, எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
விளக்கம்:
மூஸா நபி காலத்திற்குப் பின் நடந்த வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கையில் திருக்குர்ஆன் வாசகம் இவ்வாறு கூறுகிறது. மத்யன்வாசிகளுக்கு அவர் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்ததும் இல்லை. அவர்களிடையே வசிக்கவும் இல்லை என்று சொல்லபடுகிறது. அவ்வாறு முஹம்மது நபிஸல் வசித்திருந்தால், அவர் அனைத்தையும் கண்கூடாகப் பார்த்து திருக்குர்ஆனை எழுதியதாக சொல்லாம். எனவே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை தாமாக சிந்தித்து எழுதிய வேதம் அல்ல என்பது தெளிவாகிறது.
33.நபித்துவத்திற்கு முன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நிலை:
(وَمَا كُنۡتَ تَـتۡلُوۡا مِنۡ قَبۡلِهٖ مِنۡ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيۡنِكَ اِذًا لَّارۡتَابَ الۡمُبۡطِلُوۡنَ ﴿۴۸
29:48. அன்றியும் (நபியே!) இதற்க முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதிவந்தவரல்லர், உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை, அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
அதாவது நபித்துவம் பெறுவதற்கு முன் அவர் எழுதப் படிக்காதவராக இருந்தார் என்பதும், நபித்துவம் பெற்ற பின் அவர் எழுத படிக்க கற்றுக் கொண்டார் என்றும் இவ்வாசகத்திலிருந்து தெளிவாகிறது. இதற்குமுன் அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருந்தால், மற்ற வேதங்களைப் படித்து அவற்றிலிருந்து தொகுத்து எழுதியுள்ளார் என்ற இறை நிராகரிப்பவர்களின் விவாதம் சரியாக இருந்திருக்கும். அவருக்குத் தான் எழுதப் படிக்கத் தெரியாதிருந்ததே. எனவே அவர்களுடைய விவாதவம் பொய்யானது.
மேலும் சிலர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார் என்றும் சொல்கிறார்கள். இதுவும் தவறான கருத்தாகும். நபித்துவத்திற்கு முன் அவ்வாறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு “இதற்கு முன் நீ மெலிந்து இருந்தாய்” என்று ஒருவர் சொல்லும் போது, இப்போது அவர் குண்டாகிவிட்டார் என்றுதானே பொருள்படும்? அது போல இதற்கு முன் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தீர் எனும்போது, இப்போது அவ்வாறு இல்லை என்பதுதானே உண்மை? இதை நாம் ஏன் எழுதுகிறோம் என்றால் வேதங்களில் இறுதியாக வந்ததுதான் திருக்குர்ஆன் ஆகும். அவர் இவ்வுலகத்தில் விட்டுச் சென்ற வேதத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நன்றாகப் படித்து சரி பார்த்து அதன் பின்பே அதை எடுத்துரைக்க மற்றவர்களுக்கு அனுமதி அளித்தார்.
وَكَذٰلِكَ اَوۡحَيۡنَاۤ اِلَيۡكَ رُوۡحًا مِّنۡ اَمۡرِنَا ؕ مَا كُنۡتَ تَدۡرِىۡ مَا الۡكِتٰبُ وَلَا الۡاِيۡمَانُ وَلٰـكِنۡ جَعَلۡنٰهُ نُوۡرًا
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை(குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம், (அதற்குமுன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கினோம்.
கவனித்தீர்களா? நபித்துவத்திற்கு முன் வேதம் என்றால் என்னவென்றோ மார்க்கம் என்றால் என்னவென்றோ அறிந்தவராக இருந்ததில்லை என்று சொல்லப்படுவதை கவனியுங்கள். அது மட்டுமின்றி
(وَمَا كُنۡتَ تَرۡجُوۡۤا اَنۡ يُّلۡقٰٓى اِلَيۡكَ الۡكِتٰبُ اِلَّا رَحۡمَةً مِّنۡ رَّبِّكَ فَلَا تَكُوۡنَنَّ ظَهِيۡرًا لِّـلۡكٰفِرِيۡنَ ﴿۸۶
28:86 இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை.
தான் ஒரு நபியாக வருவோம் என்றும் அவர் எதிர் பார்த்ததில்லை. அருக்கு நபித்துவம் கிடைத்தது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். உண்மை இவ்வாறிருக்க அவர் உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நிறைவான வேதத்தை அவரால் எப்படி சுயமாக சிந்தித்து எழுதி தந்திருக்க முடியும்.
எனவேதான் நபித்துவத்திற்கு முன் அவர் உம்மியாக இருந்ததாக திரிக்குர்ஆன் அறிவிக்கிறது. அதாவது அவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என்பதாகும். ஒருவர் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருக்கலாம். ஆனால் வியாபாரம், தொழில் நுட்பம், அரசியல் போன்றவற்றில் கைத் தேர்ந்தவராக இருக்க முடியும். எழுதப் படிக்க தெரிந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதில்லை. அது போலத்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் சிறந்த வியாபாரியாகவும் நாணயஸ்தராகவும் இருந்ததாக வரலாற்று தொகுப்புகள் அறிவிக்கின்றன. இதைப் பற்றி திருக்குர்ஆனும் எடுத்துரைக்காமல் இல்லை.
(قُلْ لَّوۡ شَآءَ اللّٰهُ مَا تَلَوۡتُهٗ عَلَيۡكُمۡ وَلَاۤ اَدۡرٰٮكُمۡ بِهٖ ۖ فَقَدۡ لَبِثۡتُ فِيۡكُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِهٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۶
10:16. “அல்லாஹ் நாடியிருந்தால், இதனை தான் உங்களிடம் ஓதிக் காண்பித்து இருக்கமாட்டேன், மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்து இருக்கமாட்டான், நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டாமா?"" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம்:
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மக்களுக்கு என்ன எடுத்துரைக்கிறார் என்பதைக் கவனித்தீர்களா? “இதற்கு முன் எப்போதாவது இப்படிப்பட்ட பேச்சை பேசி இருக்கின்றேனா? உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கின்றேனே! சற்று சிந்தித்துப் பாருங்கள். இப்போது அல்லாஹ்வின் வஹீச் செய்திகள் என்று நான் அறிவிக்கின்றேன் என்றால் அது அல்லாஹ்வின் செயல்திட்டப்படி எனக்கு அறிவிக்கப்படுகின்ற உண்மைகளாகும் அல்லவா?” என்று அறிவித்திருப்பதைக் கவனியுங்கள்.
34.திருக்குர்ஆன் - பிரபஞ்ச படைப்புகளின் ஆதாரங்கள்.
اَوَلَمۡ يَرَ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ كَانَـتَا رَتۡقًا فَفَتَقۡنٰهُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ كُلَّ شَىۡءٍ حَىٍّ ؕ اَفَلَا يُؤۡمِنُوۡنَ ﴿۳۰
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்த BIG BANG ஐப் பற்றி இவ்வாசகம் பேசுகிறது.
(ثُمَّ اسۡتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلۡاَرۡضِ ائۡتِيَا طَوۡعًا اَوۡ كَرۡهًا ؕ قَالَتَاۤ اَتَيۡنَا طَآٮِٕعِيۡنَ ﴿۱۱
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்த போது (அதைப்) படைக்க நாடினான், ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்படனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான்.(அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்"என்று கூறின.
பல லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் வானமும் பூமியும் இருந்த நிலையைப் பற்றி இவ்வாசகம் பேசுகிறது.
(مَرَجَ الۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيٰنِۙ ﴿۱۹﴾ بَيۡنَهُمَا بَرۡزَخٌ لَّا يَبۡغِيٰنِۚ ﴿۲۰
55:19-20 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
விளக்கம் :
கடல்களுக்கிடையே பிளவு இருப்பதாகவும் அக்கடல்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை என்றும் இவ்வாசகம் பேசுகிறது.
தாமாகவே இவற்றை எல்லாம் சிந்தித்து எழுதியிருக்க முடியுமா என்பதை நீங்களே சிந்தித்து முடிவு எடுங்கள். ஏறத்தாழ 1450 ஆண்டுகளுக்குமுன் அரேபிய தீப கர்ப்பத்தில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு இவ்விஷயங்கள் எப்படி தாமாகவே தெரிந்து வைத்திருக்க முடியும்? இப்படிப்பட்ட ஏராளமான வாசகங்கள் திருக்குர்ஆனில் காணக் கிடைக்கின்றன. எனவே இவற்றை எல்லாம் தனி நபர் ஒருவர் எவ்வாறு எழுத முடியும்.?
35.ரிவாயத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?
திருக்குர்ஆன் உலக மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர நாடுகிறது. (14:1) ஆனால் ரிவாயத்துகள் யாவும் மக்களை இருளிலியே மூழ்கி இருக்கும்படி செய்து விடுகிறது. இன்றைய நவீன காலத்திலும் இஸ்லாமியர் நான்கு பெண்கள் வரையில் ஒரே சமயத்தில் மணந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாக ரிவாயத்துகளை எடுத்துரைப்பார்கள். அவற்றின் சிலதை நாம் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
36.நான்கு பெண்களை மணமுடிக்கலாம் என்கிறது - ரிவாயத்து:
போர்க் கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக் கருதி ஒன்றுக்கு மேற்பட்ட அகதிப் பெண்களை (பார்க்க 60:10) – நான்கு வரையில் மணமுடித்து மனைவி என்ற அந்தஸ்தை அளிக்கும்படி, திருக்குர்ஆன் 4:3 வாசகம் அனுமதி அளிக்கிறது. “அங்கேயும் ஆதவரற்ற பெண்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றால்” என்று வருகிறது. அதாவது அவர்களுக்கு பாதுகாப்பிற்கான மாற்று ஏற்பாடு இல்லை எனும் பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் தவிக்கும் பெண்களை மணந்து கொள்ள அனுமதி அளிக்கிறது.
மேலும், “மனைவியினரிடையே நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால்” ஒரு மனைவி என்ற நிலையான சட்டத்தின்படியே இருந்து கொள்ளும்படியும் அவ்வாசகத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இரண்டாவது மூன்றாவது பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதற்கு முதல் மனைவியின் அனுமதி தேவை என்பதே.
ஆனால் இவர்களாகவே எழுதி வைத்துள்ள ஷரீயத் சட்டங்கள் யாவும் ரிவாயத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை ஆகும். எனவே போரில்லாத சாதாரண காலங்களிலும் முஸ்லிம்கள் இரண்டாவது மூன்றாவது பெண்களை மணமுடித்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதாக எழுதிக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு எழுதி மக்களிடைய பரப்பி விட்டதால் இரண்டாவது பெண்ணை மணந்து, தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களின் கோரக் கதையை சொல்லி மாளாது.
முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். இப்படியாக முதல் மனைவி அந்தரத்தில் தொங்க விடப்பட்டது போல் ஆகி விடுகிறாள் (பார்க்க 4:129) யாராவது கேட்டால் இப்படித் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், சஹாபா பெருமக்களும் மணமுடித்துக் கொண்டார்கள் என்று வாய் கூசாமல் பதிலளித்து விடுவார்கள்.
வேடிக்கை என்னவென்றால் இஸ்லாமிய மதம்தான் பெண்களுக்கு சம உரிமை அளிக்கக் கூடிய மதமாகும் என்றும் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இதில் எள்ளளவாவது உண்மை இருக்கிறதா? இப்படித்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை கற்றுத் தந்து சென்றாரா? ஆச்சரியமே!
37.மரண சாஸனம் தேவையற்றது – ரிவாயத்து:
இன்னொரு விஷயத்தையும் கவனித்துப் பாருங்கள். மரண சாஸன சட்டத்தைப் பற்றியும் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். மரண சாஸனத்தை எழுத இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்பார்கள். ஆனால் சொத்துள்ளவர்கள் மரண சாஸனத்தை எழுதுவது ஈமான்கொண்டவர்கள் மீது கடமையாக்கப்பட்ட ஒன்று என்று ஆணித்தரமாக திருக்குர்ஆன் 2:180 வாசகம் கூறுகிறது. அவ்வாறு எழுதவில்லை என்றால் பாகப்பிரிவினைச் சட்டம் பொருந்தும் என்றும் 4:11&12 வாசகங்கள் சொல்கின்றன. ஆனால் லா வஸீயத்து லில் வாரிஸி என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததாக ரிவாயத்துகளை எழுதி வைத்துக் கொண்டு, அதையே பின்பற்றி வருவதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டத்திலும் அதற்கேற்றவாறு திருத்தங்களை கொண்டு வந்து விட்டார்கள். எனவே முஸ்லிம் மரண சாஸனத்தை எழுதியிருந்தால், அது நீதி மன்றத்தில் செல்லுபடி ஆகாது என்ற நிலை உருவாகிவிட்டது.
அல்லாஹ் ஹலால் ஆக்கியதை (அனுமதி அளித்ததை) தடை செய்வதாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்த போது, “ நீர் எப்படி அவ்வாறு அறிவிக்கலாம்?” என்று கண்டிக்கும் போது, (பார்க்க 66:1) அல்லாஹ் கடமையாக்கிய “மரண சாஸனம்” விவகாரத்தில் தலையிட்டு அது தேவையில்லை என்று அவர் தன்னிச்சையாக அறிவித்திருப்பாரா? எல்லாமே ரிவாயத்துக்கள் செய்யும் குளறுபடிகளே!
மேலும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். தந்தை உயிருடன் இருக்கும்போது, மகன் இறந்து விட்டால் அவருடைய சந்ததிக்கு – பேரன் பேத்திகளுக்கு அவருடைய சொத்தில் பங்கு கிடைக்காது என்றும் ஷரீயத்து சட்டத்தில் எழுதி வைத்துள்ளார்கள். அதாவது இவர்களுடைய கணிப்பின்படி, மகனோ மகளோ தாய் தந்தை உயிருடன் இருக்கும் போது இறந்து விட்டால், அவருடைய சந்ததிகள் பேரன் பேத்தி இல்லை என்று அகிவிடுகிறது போலும். ஆச்சரியமே!
38.தலாக் தலாக் தலாக் - மனைவி குளோஸ் - ரிவாயத்து
கணவன் மனைவி இடையே பிணக்குண்டாகி பரிவினை ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டால், அவ்விருவரின் குடும்பத்திலிருந்தும் ஒரு முக்கியஸ்தரை நியமித்து,அந்தப் பிணக்கைத் தீர்த்து வைக்க திருக்குர்ஆன் 4:35 வாசகம் அறிவுருத்துகிறது. அதையும் மீறி பிணக்கு தீரவில்லை என்றால் 3 மாத கால தவணை அளிக்கும்படி ஜமாத்தார் அல்லது நீதிபதிகளுக்கு அறிவுறுத்துகிறது. (பார்க்க 2:228) அதையும் கடந்து விரிசல் தீரவில்லை என்றால், இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில் அந்த ஜமாத்தார் அத்தம்பதியர்களுக்கு தலாக் அறிவித்துவிட 65:2 வாசகம் வழிவகுக்கிறது.
இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, கணவன் மனைவியைப் பார்த்து மூன்று முறை தலாக் சொன்னானா? அதை மனைவி கேட்டாளா? ஆம் என்றால் ஷரீயத் சட்டப்படி அத்துடன் கணவன் மனைவி உறவு முறிந்துவிட்டது என்று இன்றைய காலத்திலும் அறிவித்து விடுகிறார்கள். அந்த அப்பாவி பெண்மணியும் இப்படித் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அறிவித்துத் தந்திருப்பார்கள் என்று நினைத்து, இவர்களுடைய அக்கிரமங்களை சகித்துக் கொள்கிறாள். இது தான் பெண்களுக்கு இஸ்லாம் தரும் சம அந்தஸ்தா? அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்த வழிமுறையையே பின்பற்றும்படி முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தும், (6:106) அதற்கு மாற்றமாக இவ்வாறு செயல்பட்டிருப்பாரா அல்லது இவ்வாறுதான் தன்னிச்சையாக தீர்ப்பு அளித்திருப்பாரா? ஆச்சரியமே!!
இவ்வாறு ஜமாத் மூலம் தலாக் பெற்றிருந்தாலும், இரண்டாவது முறையும் அந்த தம்பதியர் இணைந்து வாழ திருக்குர்ஆன் அனுமதி அளிக்கிறது. (பார்க்க 2:229) மூன்றாம் முறையாக தலாக் பெறும்போதுதான் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்றும், அப்பெண் வேறொருவனைத்தான் மணக்க நேரும் என்றும் திருக்குர்ஆன் 2:230 வாசகம் அறிவிக்கிறது. அதையும் மீறி இரண்டாவது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவனுடனும் சேர்ந்து வாழ சர்த்தியமில்லை என்னும் பட்சத்தில் அவனை ஜமாத் மூலம் தலாக் செய்துவிட்டு, முதல் கணவருடன் நிக்காஹ் செய்து கொள்ள அப்பெண்ணுக்கு அனுமதி அளிக்கிறது.
ஆனால் இன்றைய காலத்தில் நடப்பது என்ன? மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை மனைவியைப் பார்த்து சொன்னதும், அந்த திருமண உறவு முறிந்து விட்டதாகவும் அதன் பிறகு அவர்கள் இணைவதாக இருந்தால், மனைவி வேறொருவனை மணந்து ஒர் இரவு உறவு கொண்டு அதன் பின்பே முதல் கணவனோடு இணைய முடியும் என்றும் அறிவிக்கிறார்கள். இதற்காகவே வட இந்தியாவில் சில “ஆண் கிடாக்கள” உலா வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தலாக் செய்த பெண்களை மணமுடித்து ஓர் இரவு அனுபவித்துவிட்டு, மறுநாள் தலாக் செய்து விடுவார்கள். அதன் பின் முதல் கணவனுடன் நிக்காஹ் செய்து வைப்பார்கள். இப்படிப்பட்ட கேவலமாக பழக்கம் வேறு எந்த சமுதாயத்திலாவது இருக்குமா? திருக்குர்ஆனை விட்டுவிட்டால் இருள் மேல் இருள் சூழ்ந்து கொள்ளும் என்ற 24:40 வாசகத்தில் சொல்லப்பட்டது உண்மையாகி விட்டது அல்லவா? கணவன் செய்யும் தவறுகளுக்கு மனைவிக்குத் தண்டனை கிடைப்பதா? நாம் எங்கே செல்கிறோம் என்று யாராவது எப்போதாவது சிந்தித்துப் பார்திருப்பார்களா? இதுதான் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் இஸ்லாமா?
39.சஹாபா பெருமக்களிடையே இருந்த பாசப் பிணைப்பு:
நபி தோழர்களாம் சஹாபா பெருமக்களைப் பற்றி நாம் பேசும்போது, அவர்களுடைய பெயருடன் “ரலி” என்ற வார்த்தையை இணைத்துச் சொல்கிறோம். இதன் பொருள் யாதெனில், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொண்டான் என்பதே. அதாவது அல்லாஹ்வுக்கு எது விருப்பமோ அதன்படியே செயல்பட்ட மகான்கள் ஆவார்கள். அவர்களைப் பற்றி திருக்குர்ஆன் எந்த அளவுக்கு அழகாக புகழ்ந்துரைக்கிறது என்பதையும் கவனியுங்கள்.
وَاذۡكُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ عَلَيۡكُمۡ اِذۡ كُنۡتُمۡ اَعۡدَآءً فَاَ لَّفَ بَيۡنَ قُلُوۡبِكُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِهٖۤ اِخۡوَانًا ۚ وَكُنۡتُمۡ عَلٰى شَفَا حُفۡرَةٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَكُمۡ مِّنۡهَا ؕ
3:103. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த வஹீ எனும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் -உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள், இன்னும், நீங்கள் (நரக)நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள், அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்.
கவனித்தீர்களா? ஒருவருக்கொருவர் பகைவர்களாய் நரகத்தின் விழிம்பில் இருந்து வந்த மக்களிடையே, பாசப் பிணைப்பை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்களாக ஆகிவிட்டதாக திருக்குர்ஆன் சாட்சி அளித்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள். அதுவும் எப்படிப்பட்ட பாசப் பிணைப்பு தெரியுமா?
وَاَلَّفَ بَيۡنَ قُلُوۡبِهِمۡؕ لَوۡ اَنۡفَقۡتَ مَا فِى الۡاَرۡضِ جَمِيۡعًا مَّاۤ اَلَّفۡتَ بَيۡنَ قُلُوۡبِهِمۡ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيۡنَهُمۡؕ اِنَّهٗ عَزِيۡزٌ حَكِيۡمٌ ﴿۶۳
8:63. மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அதன்பின்) பிணைப்பை உண்டாக்கினான், பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான், மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம் :
உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டினாலும் அத்தகைய பாசப் பிணைப்பை உண்டாக்கி இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. இவை இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்பட்ட சஹாபா பெருமக்களைப் பற்றி உண்மைகளாகும். இதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? கீழ்கண்ட வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.
40.மதினாவாசிகள் ஆட்சி செய்ய ஆசைப்பட்டார்களா?
وَالَّذِيۡنَ تَبَوَّؤُ الدَّارَ وَالۡاِيۡمَانَ مِنۡ قَبۡلِهِمۡ يُحِبُّوۡنَ مَنۡ هَاجَرَ اِلَيۡهِمۡ وَلَا يَجِدُوۡنَ فِىۡ صُدُوۡرِهِمۡ حَاجَةً مِّمَّاۤ اُوۡتُوۡا وَيُـؤۡثِرُوۡنَ عَلٰٓى اَنۡفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٌ ؕ وَمَنۡ يُّوۡقَ شُحَّ نَـفۡسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَۚ ﴿۹
59:9 இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதினாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொடுத்தவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப் பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
விளக்கம் :
(1) கவனித்தீர்களா? மதினாவாசிகள் மக்காவாசிகளை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா? தமக்குத் தேவை என்றிருந்த போதும் பிறர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இது எவ்வளவு பெரிய தியாகம்?
(2) மதினாவில் குடியேறிய மக்காவாசிகள் ஆட்சி செய்வது மதினாவாசிகளுக்குப் பிடிக்கவில்லை என்று ரிவாயத்து புத்தகங்களில் எழுதி இருக்கிறார்கள். ஏதோ ஆட்சி பீடத்தில் இருப்பது சொத்துச் செல்வங்களை குவிப்பதற்கா? அல்லது பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பதற்கா? ஆட்சி செய்வது என்பது பொறுப்பு ஏற்பது என்பதாகும். யார் அதற்குத் தகுதியானவரோ அவருக்குத் தான் ஆட்சி பொறுப்பு தர முடியும் என்று திருக்குர்ஆன் வாசகம் அறிவிக்கிறது. மேலும்
(3) மேற்சொன்ன வாசகத்தில் தமக்கு தேவை என்றிருந்த போதும் தங்களைவிட மக்காவாசிகளையே தேவையுள்ளவர்கள் என தேர்ந்தெடுத்துக் கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. இத்தகையவர்கள் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுவார்களா? எனவே வரலாற்றுத் தொகுப்புகளும் தவறான தகவல்களையே நமக்கு அறிவிக்கிறது.
41.ஸஹாபா பெருமக்களிடையே மோதல் - ரிவாயத்து
ரிவாயத்து புத்தகங்களில் சஹாபா பெருமக்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது, அவருக்குப் பின் யார் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்துவது என்று குறித்துக் கொடுக்க அவரிடம் கேட்கும்படி ஒருவர் மற்றவரிடம் சொல்லிக் கொண்டதாக ரிவாயத்துக்கள் அறிவிக்கின்றன. அது மட்டுமின்றி இந்த விஷயத்தில் ஒருவருக் கொருவர் சண்டை போட்டுக் கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. மக்கவாசிகள் ஆட்சி செய்வதை மதினாவாசிகளுக்குப் பிடிக்கவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தபோது ஒரு விதமாகவும் அவருடைய மறைவுக்குப் பின் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பாடாக நடந்து கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِهِ الرُّسُلُؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوۡ قُتِلَ انْقَلَبۡتُمۡ عَلٰٓى اَعۡقَابِكُمۡؕ وَمَنۡ يَّنۡقَلِبۡ عَلٰى عَقِبَيۡهِ فَلَنۡ يَّضُرَّ اللّٰهَ شَيۡـــًٔا ؕ وَسَيَجۡزِى اللّٰهُ الشّٰكِرِيۡنَ ﴿۱۴۴
3:144. முஹம்மது (ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர், அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்)சென்று விட்டார்கள், அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும்செய்துவிட முடியாது, அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
விளக்கம் :
கவனித்தீர்களா? முஹம்மது நபி(ஸல்) காலமாகி விட்டால் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி சென்று விடுவீர்களா என்று அல்லாஹ் கேட்கிறான். ஆனால் ரிவாயத்துப் புத்தகங்களைப் படித்துப் பார்க்கும் போது, அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைக்குப் புறம்பாக நடந்து கொண்டது போல் எழுதியுள்ளார்கள். இது எப்படி உண்மையாக இருக்க முடியும். சஹாபா பெருமக்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்த வாக்கு என்னவாயிற்று?
اِنَّ الَّذِيۡنَ يُبَايِعُوۡنَكَ اِنَّمَا يُبَايِعُوۡنَ اللّٰهَ ؕ يَدُ اللّٰهِ فَوۡقَ اَيۡدِيۡهِمۡ ۚ فَمَنۡ نَّكَثَ فَاِنَّمَا يَنۡكُثُ عَلٰى نَفۡسِهٖۚ وَمَنۡ اَوۡفٰى بِمَا عٰهَدَ عَلَيۡهُ اللّٰهَ فَسَيُؤۡتِيۡهِ اَجۡرًا عَظِيۡمًا ﴿۱۰
48:10. நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து (வாக்குறுதி) செய்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத் (வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது, ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான், எவர் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
விளக்கம் :
முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் அளிக்கும் வாக்கு அல்லாஹ்வுக்கு அளிக்கும் வாக்கு என்று சொல்லப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்கும் போது, ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் எப்படி போட்டி இருந்திருக்க முடியும்? எனவே இதில் போட்டி இருந்திருக்க சற்றும் வாய்ப்பில்லை. இதற்கு மாறாக யார் ஆட்சி பொறுப்பைச் சுமக்கத் தகுதியானவர் என்று கருதப்பட்டாரோ அவரையே தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இதில் ஒவ்வொருவரும் இந்தப் பொறுப்பு எடுத்துக் கொள்வதில் தன்னைவிட உங்களில் ஒருவர்தாம் தகுதியானவர் என்றே சொல்லி இருப்பார். அதில் அவர்களுக்கிடையே மதிப்பு மரியாதை கலந்த பொறுப்புணர்வே இருந்திருக்க முடியும். ஏன்?
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا بِاللّٰهِ وَرَسُوۡلِهٖ ثُمَّ لَمۡ يَرۡتَابُوۡا وَجَاهَدُوۡا بِاَمۡوَالِهِمۡ وَاَنۡفُسِهِمۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوۡنَ ﴿۱۵
49:15. நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யாரென்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள். இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
விளக்கம் :
இத்தகைய உயர் இலட்சியங்களும், தியாக மனப்பான்மையும் கொண்டவர்களைத் தான் முஹம்மது நபி(ஸல்) உருவாக்கினார்கள். இப்போது நம் நாட்டு மக்களிடையே பதவி அந்தஸ்திற்காக எதையும் செய்வோம் என்று சொல்லிக்கொண்டு வெறிபிடித்து அலைவது போலவா அந்த சஹாபா பெருமக்கள் இருந்தார்கள்? இதெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராகச் செய்த பல சதி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சஹாபா பெருமக்களே பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டார்கள் என்றால் இன்றைய காலத்தில் வாழும் நாமும் அப்படி நடந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்ற மனப்பான்மை தான் முஸ்லிம்கள் மத்தியிலும் வளர்ந்து விடுகிறது. அதன்பின் இவர்களும் பதவிக்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தான். எனவே வரலாற்று தொகுப்புகள் எல்லாம் சரியான தகவல்களை கொடுப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவே முடியாது. மேலும் அவை மார்க்கத்தின் அளவுகோலாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
42.முஸ்லிம்கள் நரகத்திலிருந்து சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்?
முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீதும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) மீதும் ஈமான் கொண்டுள்ளதால் நாம் செய்த பாவச் செயல்களுக்கு சிலகாலம் வரையில் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும் அல்லாஹ் நம் மீது இரக்கப்பட்டு சுவனத்திற்கு அனுப்பிவிடுவான் என்று ரிவாயத்துகள் அறிவிக்கின்றன. இதையே பள்ளிவாசல் பயான்களிலும் அவ்வப்போது கேட்கிறோம். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். காரணம் சுவனம் மற்றும் நரகத்திற்கு யார் தகுதியானவர்கள் என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாக்கிவிட்டது.
(وَالۡوَزۡنُ يَوۡمَٮِٕذِ اۨلۡحَـقُّ ۚ فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِيۡنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۸
7:8. அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி, அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோஅவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
(وَمَنۡ خَفَّتۡ مَوَازِيۡنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَهُمۡ بِمَا كَانُوۡا بِاٰيٰتِنَا يَظۡلِمُوۡنَ ﴿۹
7:9. யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறு செய்த காரணத்தால், அவர்கள்தமக்குத் தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். (மேலும் பார்க்க 23:102&103, 103:8&9)
இதுதான் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறையாகும். இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும். (பார்க்க 36:54) எனவே ஒருவர் சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், அவர் தம் வாழ்நாளில் நன்மையான செயல்களை அதிகமாக செய்து, நன்மையின் எடைத் தட்டை மிகைக்கச் செய்து கொள்ள வேண்டும். மேலும் அந்த நற்செயல்கள் யாவும் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருத்தல் அவசியம் (பார்க்க 18:103&104) அத்தகைய நற்செயல்களை செய்யாமல் மரணம் ஏற்படும் தருவாயில் அவகாசம் கேட்டு இரைஞ்சுக் கொண்டிருப்பதில் ஒரு பலனும் கிடைக்காது (பார்க்க 63:10) அல்லது மரணத்திற்குப் பின் மீண்டும் உலகிற்கு அனுப்பினால், நற்காரியங்களை செய்வேன் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும் ஒரு பலனும் கிடைக்காது. (பார்க்க 7:53) உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டினாலும் நரக வேதனைகளை விட்டு மீள முடியாது (பார்க்க 3:91)
இப்படித்தான் திருக்குர்ஆன் நரக வேதனைகளைப் பற்றியும், சுவனத்து சந்தோஷங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. நரகத்திலிருந்து சுவனத்திற்குச் செல்வதைப் பற்றி எங்கும் பேசுவதில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை என்பது திண்ணம். ஆனால் ரிவாயத்துகளில் இதற்கு நேர் மாற்றமாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரத்தை கொண்டு வர முடியுமா என்று கேளுங்கள். அவர்களால் ஒருபோதும் கொண்டு வரவே முடியாது. காரணம் அல்லாஹ் அத்தகைய சட்டத்தை எங்கும் யாருக்காகவும் நடைமுறைப் படுத்தவில்லை. அது மட்டுமின்றி அப்படி ஏதாவது உறுதிமொழியை அல்லாஹ் யாருக்காவது அளித்துள்ளானா என்று கேட்கும்படியும் சொல்கின்றான்.
وَقَالُوۡا لَنۡ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعۡدُوۡدَةً ؕ قُلۡ اَتَّخَذۡتُمۡ عِنۡدَ اللّٰهِ عَهۡدًا فَلَنۡ يُّخۡلِفَ اللّٰهُ عَهۡدَهٗۤ اَمۡ تَقُوۡلُوۡنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۸۰
2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதிமொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான், அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று நீர் கேளும். (மேலும் பார்க்க 3:24)
இதையும் மீறி, இவ்வாசகம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். முஸ்லிம்களாகிய நமக்குப் பொருந்தாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் யாருக்கு நஷ்டம் ஏற்படப் போகிறது?
43. திருக்குர்ஆனைப் புரிந்துகொள்ள 16 ஞானங்கள் தேவை?
யாராவது திருக்குர்ஆனில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொன்னால், உடனே அவர்கள் இவ்வாசகம் எதைப்பற்றி வந்துள்ளது என்பதை ஷானெ நுஜுலை வைத்துப் பார்க்க வேண்டும் என்பார்கள். அதையும் மீறி அவர் அதை வலியுறுத்திச் சொன்னால், அரபி மொழியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. எந்த அர்த்தத்தை நீங்கள் பொருத்திச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனவே பெரிய ஆலிமிடம் தான் நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் ஆலிம்கள் யாவரும் பாவம். அவர்களுக்கு என்ன கற்றுத் தந்தார்களோ, அதையே அவர்கள் பிறருக்கும் எடுத்துரைத்து வருவார்கள். அவர்களிடம் சென்று கேட்டால் உடனே அவர் திருக்குர்ஆன் வாசகங்களைப் புரிந்து கொள்ள 16 வகையான கல்வி ஞானங்கள் வேண்டும் என்பார். அந்த 16 கல்வி ஞானங்கள் என்னவென்பதை பட்டியலிட்டுத் தாருங்கள் என்று கேட்டால், அதை தேவ்பந்த் போன்ற பெரிய பெரிய அரபி மதர்சாக்களில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடமும் சென்று கேட்டால் நீங்கள் முஸ்லிம்களில் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டார்கள். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அதற்கேற்றவாறு தான் நாம் விளக்கம் அளிக்க முடியும் என்றார்கள்.
எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் என்னவென்று கேட்டோம். இது கூட தெரியாதா? நீங்கள் ஹனஃபீயா? ஷாஃபீயா? ஹம்பலீயா? மாலிகியா? அஹ்லெ ஹதீஸா? எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டார்கள். இவை எல்லாம் என்னவென்று கேட்டோம். முஹம்மது நபிஸல் அவர்கள் ஏற்கனவே அறிவித்துச் சென்றுள்ளார். அதாவது பனி இஸ்ராயீல் சமூகத்தனிரிடையே 72 பிரிவுகள் உண்டு. ஆனால் என் உம்மத்துகளில் 73 பிரிவுகள் ஏற்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி நீங்கள் எந்த மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துதான் அதற்கேற்றவாறு பதில் சொல்ல முடியும் என்றார். திருக்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளதே என்று கூறினோம்.
اِنَّ الَّذِيۡنَ فَرَّقُوۡا دِيۡنَهُمۡ وَكَانُوۡا شِيَـعًا لَّسۡتَ مِنۡهُمۡ فِىۡ شَىۡءٍ ؕ
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படிபலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை,
விளக்கம் :
யார் மார்க்கத்தில் பிரிவை ஏற்படுத்துகிறார்களோ, அவர்களுக்கும் முஹம்மது நபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று திருக்குர்ஆன் கூறி இருக்கிறதே! அவர் எப்படி தனக்குப் பின் இத்தனை பிரிவுகள் ஏற்படும் என்று சொல்லி இருப்பார்? அதுவும் பிரிவினை ஏற்படுத்துவதில் போட்டியா? இஸ்ரவேலர்களில் 72 பிரிவுகள் என்றால் முஸ்லிம்களில் ஒன்று அதிகமா? நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்றும் 3:103 வாசகம் கூறுகிறதே என்று அவரிடம் சொன்னோம்.
ஓ! நீங்கள் அஹ்லெ குர்ஆனா? அவர்களுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. காரணம் அத்தகையவர்கள் முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாத ""காரஜியாக்கள்"" ஆவார்கள். எனவே அத்தகையவர்களுக்கு நாம் பதில் சொல்வதற்கு இல்லை என்று சொல்லி விட்டார். உண்மை என்னவென்றால் நாம் கேட்ட கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக 16 கல்வி ஞானங்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். காரணம் யாரும் திருக்குர்ஆனை ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்பதே அவர்ளின் உள் நோக்கம். அவ்வாறு ஆராய்ந்து பார்த்தால், இவர்கள் செய்துள்ள குளறுபடிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடுமே! அதற்காகத்தான் திருக்குர்ஆன் மூலம் அல்லாஹ் இவ்வாறு அறிவிக்க்கின்றான்.
(وَاِنَّكَ لَـتَدۡعُوۡهُمۡ اِلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ ﴿۷۳
23:73. நீர் அவர்களின் நிம்மதியான பாதுகாப்பான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்லும் நேரானப் பாதையை அல்லவா காட்டுகின்றீர்?
44.திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில் முரண்பாடுகள்?
(اِنَّ هٰذِهٖ تَذۡكِرَةٌ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيۡلًا ﴿۲۹
76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். எனவே யார் விரும்புகிறாரோ, அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
(وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيۡمًا حَكِيۡمًا ۖ ﴿۳۰
76:30. எனினும்,அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். ஞானம் மிக்கவன்.
(يُّدۡخِلُ مَنۡ يَّشَآءُ فِىۡ رَحۡمَتِهٖؕ وَالظّٰلِمِيۡنَ اَعَدَّ لَهُمۡ عَذَابًا اَلِيۡمًا ﴿۳۱
76:31. அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்.அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைஅவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
விளக்கம் :
(1) கவனித்தீர்களா? முதலில் இறைவனின் பால் செல்ல நாடுவோர், இந்தக் குர்ஆனைப் பின்பற்றி நேர்வழி பெற்றுக் கொள்ளட்டும் என்று மனிதனின் சுய அதிகாரத்திற்கு விடப்படுகிறது.
(2) அதற்கு அடுத்து வரும் வாசகத்தில் அல்லாஹ் நாடினால்தான் நீங்கள் நாடுவீர்கள் என்றும் சொல்லி அந்த அதிகாரத்தை மனிதனிடமிருந்து பறித்து விடுகிறது.
(3) அதையடுத்து “தான் நாடியவர்களை” அல்லாஹ் ரஹ்மத்தில் புகுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
(4) அதன் பின் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை சித்தப்படுத்தி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேற்சொன்ன மூன்று வாசகங்களையும்; கவனித்துப் பாருங்கள். அவை ஒன்றுக்கொன்று முரண்படவில்லையா?
உலக மக்களிடம் அல்லாஹ் இப்படித்தான் பேசுவானா? அல்லது இப்படித்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்து இருப்பாரா? எந்த ஆலிம்களும் இதைப் பற்றி கவனித்துப் பார்த்ததில்லையா? காலம் காலமாக இந்த மொழி பெயர்ப்புத்தான் சரியானது என்று சொல்லிக்கொண்டு, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட குர்ஆனைத்தான் மக்களிடம் பரப்பி வருகிறார்களே! அல்லாஹ்வுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? (பார்க்க 4 :82)
மேற்சொன்ன வாசகங்களுக்கு சரியான விளக்கம் என்னவென்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
(1) நேர்வழி பெற நாடுவோர் அல்லாஹ் இறக்கி அருளியுள்ள இந்தக் குர்ஆனின் வழியை தேர்தெடுத்துக் கொள்ளட்டும்
(2) அவ்வாறு தேர்ந்தெடுத்த பின், அல்லாஹ் என்ன நாடுகின்றானோ அதன்படியே அவர்கள் செயல்பட வேண்டும். இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பின் எவரும் தத்தம் நாட்டப்படி செயல்படக் கூடாது. மேலும் யார் என்ன நினைப்பில் இருக்கிறார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியும்.
(3) இவ்வாறு நாடி வருபவர்களுக்குத் தான் அல்லாஹ் தன் ரஹ்மத்தில் புகுத்துகிறான். இதற்கு எதிராக செயல்படும் அநியாயக்காரர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகளை சித்தப்படுத்தியுள்ளான். இதுதான் அதன் சரியான கருத்தாகும்.
45.ரிவாயத்துகள் இல்லாமல் எவ்வாறு தொழுது கொள்வீர்கள்?
இது ஒரு முக்கியமான கேள்வியாகும். ஹதீஸ்களின் உண்மை நிலையைப் பற்றி சந்தேகம் உள்ளதாக ஒருவர் கூறினால், உடனே அவரை முஹம்மது நபியை ஏற்காதவர் என்று சொல்லி விடுகிறார்கள். உண்மை அதுவல்ல. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததாக சொல்லப்படுபவை அனைத்தும் ரிவாயத்துகளாகும். அவற்றை திருக்குர்ஆனை உரைக்கல்லாக வைத்துப் பார்க்க வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோம். எனவே அவை திருக்குர்ஆனுக்கு எதிராக இருந்தால் அவ்வாறு நபிகள் நாயகம் சொல்லி இருக்க மாட்டார் என்று தான் சொல்கிறோம்.
மேலும் ரிவாயத்துகளின் துணையின்றி எவ்வாறு தொழுது கொள்வீர்கள் என்று நம்மிடம் கேட்கிறார்கள். ஆனால் இன்றைய காலக் காட்டத்தில் ஹனஃபீ, ஷாஃபீ, ஹம்பலீ, மாலிகி, ஷியா மற்றும் அஹ்லெ ஹதீஸ் பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வழிமுறைப்படி தொழுது வருகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர்களில் ஒவ்வொருவரும் தாம் கடைப்பிடித்து வரும் வழிமுறைதான் மிகச் சரியானவை என்றும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை அதுவே என்றும் முறையிட்டுக் கொள்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒரே ஒரு வழிமுறையைத் தானே கடைப்பிடித்திருப்பார்கள்? அப்போது அவர் தொழுது கொண்ட சரியான வழிமுறை எதுவென்று கேட்டால் அதற்கு யாரிடமும் பதில் இருப்பதில்லை.
46.நபிமார்கள் நிலைநாட்டிய கூட்டு ஸலாத் முறை
உலகிற்கு வருகைத் தந்த எல்லா நபிமார்களும் நாட்டில் நிலவி வந்த சீர்கேடுகளை சீர்செய்த சீர்திருத்தாவாதிகளே ஆவார்கள். (பார்க்க 42:13)
كَمَآ اَرۡسَلۡنَا فِيۡکُمۡ رَسُوۡلًا مِّنۡکُمۡ يَتۡلُوۡا عَلَيۡكُمۡ اٰيٰتِنَا وَيُزَكِّيۡکُمۡ وَيُعَلِّمُکُمُ الۡكِتٰبَ وَالۡحِکۡمَةَ وَيُعَلِّمُكُمۡ مَّا لَمۡ تَكُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ؕۛ ﴿۱۵۱
2:151 இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
விளக்கம் :
(1) அதாவது அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் படைப்புகளின் ஆயத்துகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்தார்கள்.
(2) மேலும் அவர்களிடையே இருந்து வந்த மூட நம்பிக்கை மற்றும் தீய பழக்க வழக்கங்களை விட்டு அவர்களை தூய்மைப் படுத்தினார்கள்.
(3) அதன்பின் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதலை எடுத்துரைத்து, அதனால் ஏற்படவிருக்கின்ற பலன்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்கள். (பார்க்க 2:151)
(4) இவ்வாறாக அம்மக்கள் அறியாதவற்றை எல்லாம் கற்றுத் தந்தார்கள்.
இதற்காக ஒவ்வொரு வீடாகச் சென்று இந்தப் பணியை செய்ய நபிமார்களால் முடியாது. எனவே அவர்கள் மக்களை ஒன்று திரட்டி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைத்தார்கள். மேலும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நபிமார்கள் சுயமாக பதிலளிக்காமல் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீச் செய்தி வந்த பின் அதை அவர்கள் அறிவித்தார்கள். இவ்வாறு மக்களை ஒன்று திரட்டி வஹீச் செய்தியை அறிவிக்கச் செய்த ஏற்பாடுகளே கூட்டுத் தொழுகை முறை என்பதாகும். இதை அராபி மொழியில் “இஃகாமதிஸ் ஸலாத்” என்பார்கள். அக்கால வசதி வாய்ப்புப் படி சிலர் முரசொலித்தார்கள். மற்றும் சிலர் மணி அடித்து அழைத்தார்கள். முஹம்மது நபி அவர்கள் பாங்கு சொல்லி அழைத்தார்கள்.
47.பாங்கு சொல்வதன் பொருள்
பாங்கு சொல்லப்படுகின்ற வார்த்தைகளுக்கு பொருள் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
(1)அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹ்தான் மிகப் பெரியவன்.
(2) அஷ்ஹது அன்லா இலாஹா இல்லல்லாஹ் - அகிலங்கள் அனைத்திலும் அதிகாரத்திற்குரியவன் அல்லாஹ்வே ஆவான்
(3) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் - இந்தப் பேருண்மையை எடுத்துரைத்த முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார். இந்த உண்மையை ஏற்றுக் கொண்டவர்கள்,
(4) ஹையா அலஸ் ஸலாத் - அவர் அளிக்கும் தூதுச் செய்தியைப் பெற கூட்டு ஸலாத்தின் பக்கம் விரைந்து வாருங்கள்.
(5) ஹையா அலல் ஃபலாஹ் - இப்படியாக உங்கள் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் வெற்றிப் பெற வாருங்கள். (பார்க்க 2:201)
(6) அல்லாஹு அக்பர் - அவ்வாறு நீங்கள் வரவில்லை என்றாலும் அல்லாஹ் மிகப் பெரியவனே.
(7) லா இலாஹா இல்லல்லாஹ் - அவனே அனைத்து அதிகாரத்திற்கும் உரியவனே.
கவனித்தீர்களா? இம்மை மற்றும மறுமை வாழ்வின் வெற்றிக்கான வழிகாட்டுதலை அளிப்பதற்காக அழைப்பு விடப்படுகிறது. கூட்டு ஸலாத்தில பங்கெடுப்பவர்கள் யாவரும், அகிலத்தைப் பரிபாலிக்கின்ற ஏக இறைவன் முன் கைக் கட்டி நின்று, நேர்வழி பெற நாடுவதாக கூறுகிறார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக உலக முஸ்லிம்களுக்கு இக்கூட்டு ஸலாத் மூலம் நேர்வழி கிடைக்காமலே போய்விடுகிறது. காரணம் அங்கு ஓதப்படும் விஷயங்கள் எதுவும் யாருக்கும் புரிவதில்லை. வெறும் வார்த்தைகளை உச்சரித்து விட்டு வந்து விடுகிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) மற்றும் சஹாபா பெருமக்களும், தம் தாய் மொழியாகிய அரபி மொழியிலேயே கூட்டு ஸலாத் கடைப்பிடித்தார்கள். எனவே அவர்களால் அங்கு சொல்லப்படுகின்ற விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் இறைவழிகாட்டுதல்படி செயல்பட்டு அவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. ஆனால் அரபி மொழியில் நம் ஸலாத் உள்ளதால் அவை அனைத்தும் புரியாத புதிராக உள்ளது.
எனவே அரபி மொழியை ஒவ்வொருக்கும் கற்றுத் தர வேண்டும். அல்லது ஸலாத்தில் ஓதப்படுகின்ற வாசகங்களுக்கு விளக்கத்தை தர வேண்டும். இதனால் அர்த்தமுள்ள பயனுள்ள ஸலாத்தாக ஆகிவிடும்.
48.கூட்டு ஸலாத் முறையின் நோக்கம் என்ன?
கூட்டு ஸலாத்தைப் பற்றி திருக்குர்ஆன் மேற்கொண்டு என்ன சொல்கிறது என்பதையும் கவனியுங்கள்.
اُتۡلُ مَاۤ اُوۡحِىَ اِلَيۡكَ مِنَ الۡكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنۡهٰى عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡكَرِؕ وَلَذِكۡرُ اللّٰهِ اَكۡبَرُ ؕ وَاللّٰهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ ﴿۴۵
29:45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கபட்டதை நீர் எடுத்து ஓதுவீராக, இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் அறிவுரைகள் மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
விளக்கம் :
(1) கவனித்தீர்களா? நபிக்கு இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆன் வாசகங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் கூட்டு ஸலாத் முறையை நிலைநிறுத்தும் படி கட்டளையிடப்படுகிறது.
(2) அத்தகைய ஸலாத் மானக்கேடானவற்றையும் தீமைகளையும் நீக்கி விடும் என்று சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள். அதாவது கூட்டு ஸலாத் முறையில் நன்மை தீமை ஆகியவற்றைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர்ஆன் வாசகங்கள் எடுத்துரைக்கப்படும்.
(3) தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. இதனால் மக்களிடையே இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி சுத்தமான சமுதாயமாக உருவெடுக்கும். இதுதான் கூட்டு ஸலாத் முறையால் ஏற்பட வேண்டிய பலன்களாகும்.
கூட்டு ஸலாத் முறையைப் பற்றி மேற்கொண்டு சில வாசகங்களைக் கவனித்துப் பாருங்கள்.
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَى الصَّلٰوةِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَكُمۡ وَاَيۡدِيَكُمۡ اِلَى الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِكُمۡ وَاَرۡجُلَكُمۡ اِلَى الۡـكَعۡبَيۡنِ ؕ
5:6 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் கூட்டு ஸலாத்திற்காக நின்றால், உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இருஉகைகளை கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலையை சிரங்கைகளால் தடவிக் கொள்ளுங்கள். கணுக்கால் வரையில் உங்கள் கால்களை கழுவிக் கொள்ளுங்கள்.
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا الصَّلٰوةَ وَاَنۡـتُمۡ سُكَارٰى حَتّٰى تَعۡلَمُوۡا مَا تَقُوۡلُوۡنَ
4:43. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று அறிந்து கொள்ள முடியாதவாறு, நீங்கள் போதையில் இருக்கும் போது கூட்டு ஸலாத்திற்கு நெருங்காதீர்கள்.
இதிலிருந்து கூட்டு ஸலாத்தின் நோக்கம் என்னவென்று தெரிந்து விடுகிறது. அதாவது அங்கு சொல்லப்படுகின்ற வழிகாட்டுதல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் உட்கருத்து.
(فَوَيۡلٌ لِّلۡمُصَلِّيۡنَۙ ﴿۴
107:4-6 மக்களுக்குக் காட்டிக் கொள்வதற்காக தொழுபவர்களுக்குக் கேடுதான்.
(مَا سَلَـكَكُمۡ فِىۡ سَقَرَ ﴿۴۲﴾ قَالُوۡا لَمۡ نَكُ مِنَ الۡمُصَلِّيۡنَۙ ﴿۴۳﴾ وَلَمۡ نَكُ نُطۡعِمُ الۡمِسۡكِيۡنَۙ ﴿۴۴
74:42-44 “உங்களை ‘ஸகர்’ என்னும் நரகத்தில் நுழையச் செய்தது எது? என்று கேட்கப்படும் போது, “நாங்கள் தொழுகையாளிகளாக இல்லை. மேலும் நாம் ஏழைக்கு உணவளிக்கவில்லை” என்று நரகவாசிகள் பதில் சொல்வார்கள்.
கூட்டு ஸலாத்தில் கலந்து கொள்வதுடன், ஏழை எளிய மக்களின் வாழ்வாதார ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்று இங்கு சொல்லப்படுவதை கவனியுங்கள். வெறும் கூட்டு ஸலாத்தில் கலந்து கொண்டு நம் கடமைகள் முடிந்து விட்டன என்று இருந்து விட்டால் இறுதியில் அவர் நரகத்திற்குள் தான் நுழைய வேண்டி வரும் என்றும் இதிலிருந்து தெரிய வருகிறது.எனவேதான் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது.
(فَخَلَفَ مِنۡۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا ۙ ﴿۵۹
19:59. ஆனால், நபிமார்களுக்குப் பின் சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள், அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள், (இழிவான மன) இச்சைகளைப் பின்பற்றினார்கள்,(மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
அன்பர்களே! நடைமுறையில் உள்ள கூட்டு ஸலாத்தை குறை கூறி எழுதுவதாக எண்ணி விடாதீர்கள். அதுவல்ல என் நோக்கம். எவ்வாறு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், அவருக்கும் முன் வந்த நபிமார்கள் காலத்திலும், கூட்டு ஸலாத் முறையைக் கொண்டு உலக வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்று, சிறந்த மாமேதைகள் என்று முத்திரை பதித்துச் சென்றார்களோ, அவ்வாறே இன்றைய காலத்தில் வாழும் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட மக்களும், சிறந்த செயல்வீரர்களாக - சிறந்த மாமேதைகளாக - சிறந்த சமூக மெய்க் காப்பாளர்களாக - சிறந்த கடமை வீரர்களாக - சிறந்த அறிஞர்களாக - இம்மையிலும் மறுமையிலும் சுவனத்திற்கு உரியவர்களாக வர வேண்டும் என்பதற்காகத் தான் இதை நாம் எழுதுகிறோம். கூட்டு ஸலாத் முறையைக் கொண்டுதான் இது சாத்தியமாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
49.அர்த்தமுள்ள கூட்டு ஸலாத் முறை:
இதற்காக நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் நடைமுறையில் உள்ள அரபி மொழி ஸலாத்தை அப்படியே கடைப்பிடித்துக் கொண்டு, ஸலாத்துக்கு முன்பாகவும் அதற்குப் பின்பும், அங்கு ஓதிய திருக்குர்ஆன் வாசகத்தின் பொருளையும் அதன் விளக்கத்தையும் அந்தந்த பிராந்திய மொழியில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அதில் சொல்லப்பட்ட அறிவுரைகளை தலைசாய்த்து ஏற்றுக் கொண்டதாக ருக்கூவும், அதன்படியே செயல்படுவதாக நெற்றியை பூமியில் பதித்து உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் வகையில் ஸஜ்தாவும் செய்வதாக பொருளாகிறது என்ற உண்மையை மக்களுக்கு அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும்.
50.கூட்டு ஸலாத் முறையில் இரு வகைகள்:
கூட்டு ஸலாத் முறையில் போதிக்கப்படும் இறைவழிகாட்டுதல்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது அல்லாஹ் படைத்த உலகப் படைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியது. இரண்டாவது, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகள் மற்றும் சட்ட திட்டங்கள். திருக்குர்ஆன் உலகப் படைப்புகளைப் பற்றி ஏறக்குறைய 850 வாசகங்கள் பேசுகின்றன. அவற்றின் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அத்துடன் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகளையும் ஒழுக்க மாண்புகளைப் பற்றியும் கற்றுத் தர வேண்டும். இதை ஓர் எடுத்தக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.
51. நிஜாமெ ஸலாத்
அது மட்டுமின்றி திருக்குர்ஆனில் நிஜாமெ ஸலாத் என்ற சமூக கூட்டு அமைப்பு மற்றும் ஆட்சியமைப்பைப் பற்றியும் வருகிறது. அத்தகைய வாசகங்களில் ஜகாத்தைப் பற்றியும் இணைந்தாற் போல் வரும். அதன் அடிப்படையில் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து ஃகிலாஃபத் என்கின்ற மக்களாட்சியை ஏற்படுத்தினார். மக்களை நேர் வழிப்படுத்த கூட்டு ஸலாத்முறை - மக்களின் நலனைப் பேணிக் காக்க ஆட்சியமைப்பு ஸலாத் முறை என இரண்டையும் உருவாக்கி மிகக் குறுகிய காலத்திலேயே தலைசிறந்த சமுதாயத்தை ஏற்படுத்திக் காட்டினார்.
52.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது
அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள முன்வருபவர்களுக்கு, அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நேர்வழியை காட்டி விடுகின்றான். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது முதல் நிபந்தனை, அதைத் தொடர்ந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் திருக்குர்ஆன் மூலம் காட்டிய வழிமுறைகளை ஏற்றுக் கொள்வது இரண்டாவது நிபந்தனையாக உள்ளது. இவை இரண்டும் இருந்தால்தான் மக்களுக்கு நேர்வழி கிடைக்கும். அல்லாஹ்வை மட்டும் ஏற்றுக் கொண்டு, அவன் திருக்குர்ஆன் மூலமாக காட்டிய வழிகாட்டுதலை ஏற்க மறுத்தால் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதில் ஒரு அர்த்தமும் இருக்காது. காரணம் அல்லாஹ் இறக்கி அருளியுள்ள திருக்குர்ஆனின் வழிகாட்டுதலை ஏற்காவிட்டால், அத்தகையவர்கள் வேறு ஏதாவது ஒரு வழிமுறையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இந்த சந்தர்ப்பத்தில்தான் ரிவாயத்துகளின் கைவரிசை ஆரம்பமாகிறது. முஸ்லிம்கள் திருக்குர்ஆனை விட்டுவிட்டதால் இந்த வழிமுறைதான் தொன்று தொட்டு வந்துள்ளது.
53.மாணவ மாணவிகளுக்கு கல்வி முறை ஸலாத்
உலக மக்களிடையே அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றிய பாடங்களை மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். தமிழ் நாட்டிலும், தமிழ் பாட நூல் மற்றும் சரித்திரப் பாடநூல்களைத் தவிர்த்து, விஞ்ஞானம், பூகோளம், கணிதம், வணிகம், கணிணி போன்ற பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள். அவற்றை இயற்கைப் படைப்புகள் என்ற அளவில் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த இயற்கையைப் படைத்ததும் அல்லாஹ்தான். இந்த உண்மையை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இதன் விளைவாக அறிந்தோ அறியாமலோ உலக மக்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு அவற்றைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் மார்க்கத்தின் மறு பகுதியான ஒழுக்க மாண்புகளைப் பற்றிய திருக்குர்ஆனின் மார்க்கக் கல்வியை கற்றுத் தருவதில்லை. எனவேதான் சிறந்த அறிஞர்களாகவும் செயல் வீரர்களாகவும் இருக்கும் இவர்களிடம், ஒழுக்க மாண்புகள் இருப்பதில்லை. இதனால் அவர்கள் கல்வி பயில்வதன் நோக்கமே உலகில் சந்தோஷமாக வாழ வழியைத் தேடிக் கொள்வதே என்றாகிவிடுகிறது.
54.நவீன உலகம்?
இதன் விளைவாக இன்றைய உலகில் தெய்வாதீனமாக இருக்க வேண்டிய அரசியல், ‘சுயநலம்’ என்ற சாக்கடையில் சிக்கிக் கொண்டு பொது மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. அதே போன்று சேவை மனப்பான்மையுடன் உருவான கல்வி, மருத்துவம், வாணிபம் மற்றும் அரசாங்க உத்தியோகம் யாவும் “சுயநலம்”என்ற சாத்தானின் பிடியில் சிக்கி மக்களிடம் கொள்ளை அடித்து வருகின்றன. அதனால் மனித நேயம் எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று மக்களை பலவகையில் வேதனைக்குள் ஆக்குகிறது. இதனால் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமையை விரிவடைய செய்து, நாட்டின் எதிர்காலத்தையே சூனியமாக்கி வருகிறது. இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் நாம் கூட்டு ஸலாத் முறையை, மக்கள் அனைவருக்கும் பொதிக்கும் பொதுவான கல்வி கூடமாக மாற்ற வேண்டும். அந்த கல்வி, உலகக் கல்வி மற்றும் மார்க்க கல்வி ஆகிய இரண்டையும் கற்றுத் தரப்பட வேண்டும்.
இப்படியாக நாம் நவீன உலகைப் படைத்து,(14:48) நம் நாட்டை அல்லாஹ்வின் ஒளியைக் கொண்டு ஜொலிக்க வைப்போமாக! (39:69)
வஸ்ஸலாம்
நெரி. ரூஹுல்லா. பி.காம்.
தேதி 24-08-2016