بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


1.முன்னுரை:

துவா என்றால் என்ன?
சாதராண மொழியில் துவா அல்லது دَعَا தஆ என்றால் அழைப்பது, உதவிக்கு அழைப்பது என்று பொருள்படும். அல்லாஹ்விடம் தம் தேவைகளையும் குறைகளையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்வதையும் துவா என்றும் பொருள் கொள்கிறோம். உருது மொழியிலும் இதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இதை பிரார்த்தனை அல்லது வேண்டுதல்கள் என்கிறோம்.


2.ஆதிகால மனிதனின் மனோ நிலை:

ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதன் தமக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டால், தமக்கும் மேலாக ஏதோ சக்திகள் செயல்படுவதாகவும், அவற்றால்தான் தமக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எண்ணி, அந்த சக்திகளை ஏதாவது ஒரு வகையில் திருப்திப் படுத்தினால் தமக்கு பிடித்துள்ள கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடும் என்றும் எண்ணி வந்தான். ஒரு கட்டத்தில் இடி மின்னல்களின் சத்தத்திற்கும் பயந்து, அதிலிருந்து பாதுகாப்புத் தேடி மரங்களையும் கற்களையும் அணைத்து அபயம் தேடிக் கொண்டதாக வரலாற்று தொகுப்புகள் சான்று பகர்கின்றன.

காலப்போக்கில் மனிதன் தமக்கும் மேலாக இருக்கும் சக்திகளுக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தான். அவற்றை வணங்கி வந்தால் தமக்கு ஆபத்துகள் எதுவும் வராது என்ற எண்ணங்கள் அவனுள் உருவாயின. மழை, புயல்காற்று, வெள்ளம், பூகம்பம், எரிமலை பிழம்பு போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து அவை தம்மைக் காப்பாற்றும் என்று நம்பி வந்தான். எனவே ஒவ்வொரு இயற்கை சக்திக்கும் ஒரு உருவத்தை ஏற்படுத்திக் கொண்டான். மேலும் தம் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் தெய்வமாகக் கருதி அவற்றையும் வணங்கி வந்தான்.


3.இன்றைய காலத்து மனிதன்:

இன்றைய காலக் கட்டத்திலும் இந்நிலை நீடித்து வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், தாம் உருவாக்கி வைத்திருக்கும் உருவமைப்புகள் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதை நாம் அன்றாடம் காணும் காட்சிகளாக இருக்கின்றன. பிரார்த்தனை செய்யாமல் காரியத்தில் இறங்கினால் தம் காரியத்தில் வெற்றிக் கிடைக்காது என்று பயந்து பிரார்த்தனையும் பூஜை புருஸ்காரமும் செய்த பின்பே செயலில் இறங்குகிறார்கள். கிறிஸ்தவர்களும் தாம் வணங்கி வரும் இயேசு கிறிஸ்துவிற்கு (ஈஸா நபி) உருவம் கொடுத்து அதன் முன்பாக நின்று பிரார்த்தனை செய்வதைக் காண்கின்றோம். முஸ்லிம்களும் தாம் வணங்கி வரும் இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து துவாவும் செய்வதைக் காண்கிறோம். மற்றும் மறைந்த பெரியார்களின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று மண்றாடிக் கொண்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.
நம் நாட்டில் உள்ள இந்து சகோதரர்களும் பல்வேறு சக்திகளுக்கு பல உருவமைப்புகளைக் கொடுத்து அவற்றை பூஜை செய்து வருவதையும் நாம் காண்கின்றோம். உதாரணத்திற்கு கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு ஒரு கடவுள், வீரத்திற்கு ஒரு கடவுள் என்று உருவாக்கி வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஊருக்கு ஒரு கடவுள் என்றும், கடவுளுக்கு மனைவி மக்களும் உண்டு எனவும், அவையும் தெய்வங்களே என்றும் எண்ணி அவற்றின் முன்பாக பிரார்த்தனை செய்வதையும் காண்கின்றோம். அவை அனைத்தையும் திருப்திப் படுத்தினால் தான் தம் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்றும், அவற்றில் ஏதாவது ஒன்றிற்கு குறை வைத்துவிட்டால் ஆபத்துகள் வந்துவிடும் என்றும் அஞ்சுகிறார்கள். வணக்க வழிபாட்டை குறை கூறி ஏதாவது சொல்லி விட்டால், அது தெய்வக் குற்றமாகி விடுவதாகவும் அதனால் ஊருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடும் என்றும் பயமுறுத்தி வருவதையும் நாம் காண்கிறோம்.
ஆக உலகிலுள்ள பல்வேறு மதங்களைக் கவனித்துப் பாருங்கள். அவை அனைத்தும் தாம் உருவாக்கி வைத்துள்ள கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும், அவை நிச்சயமாக தம் குறைகளை நீக்கி விடும் என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதையும் காண்பீர்கள். அப்படியும் தம் நேர்ச்சைகள் நிறைவேறவில்லை என்றால், குறிப்பிட்ட பூஜை புருஸ்காரம் செய்தால் அவை கண்டிப்பாக நிறைவேறும் என்று சொல்லி சில ஆயிரங்களை அல்லது லட்சங்களை செலவழிப்பார்கள்.

முஸ்லிம்களும் தாம் வணங்கி வரும் அல்லாஹ்விடம் துவா செய்து வந்தால், அவன் கண்டிப்பாக தம் குறைகளை தீர்த்து வைப்பான் என்று சொல்வதை நாம் அன்றாடம் கேள்விப் படுகிறோம். அது மட்டுமின்றி இந்த சூராவை (அத்தியாயத்தை) ஓதி வந்தால் நம் வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல் ஏற்படாது என்றும், இந்த சூராவை ஓதி வந்தால், நமக்கு நோய் நொடி நெருங்காது என்றும் சொல்வார்கள். இப்படியாக திருக்குர்ஆனிலிருந்து பல சூராக்களை எடுத்து, அவற்றை தொகுத்து புத்தங்களை வெளியிட்டு பணத்தைச் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.


4.பிரார்த்தனையும் தலைவிதியும்

ஆக இவை எல்லாம் அன்றாடம் அந்தந்த சமுதாய மக்களில் நடைபெற்று வரும் பிரார்த்தனைகளும் அவற்றின் வழிமுறைகளும் ஆகும். இப்போது ஒட்டு மொத்த சமுதாய மக்கள் செய்யும் பிரார்த்தனைகளையும் கவனித்துப் பாருங்கள். அவை எல்லாம் நிறைவேறுகின்றதா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நிறைவேறினால் அவை எப்படி நிறைவேறின என்பதையும், அவை நிறைவேறாவிட்டால், எதனால் நிறைவேறவில்லை என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படியும் துயரங்கள் நீங்கவில்லை என்றால், அதற்கும் மத குருமார்கள் வைத்திருக்கும் உடனடி பதில் என்னவென்றால் பிரார்த்தனை நிறைவேறுவதும் நிறைவேறாததும் அவரவர் தலைவிதி ஆகும் என்பதே. இந்து மதத்தவர்கள், பகவான் மனசு வைத்தால் தான் நிறைவேறும் என்பார்கள். முஸ்லிம் அறிஞர்களும் அல்லாஹ் நாடினால்தான் நிறைவேறும் என்பார்கள். அவனுடைய நாட்டம் என்னவென்று அவனையன்றி வேறு யாருக்குத் தெரியும் என்பார்கள்.

அப்படியும் தம் வாழ்வில் குறைகள் தீரவில்லை என்றால், “துவா ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்” என்று குறிப்பிட்டு சொல்வதையும் நாம் கேட்கிறோம். அழுது அழுது துவா கேட்டால், அல்லாஹ் நம் மீது இரக்கப்பட்டு நம் குறைகளை தீர்த்து வைப்பான் என்றும் சொல்வார்கள். அழுகை வரவில்லை என்றாலும், அழுகை வருவது போல் பாசாங்கு செய்தாவது துவா செய்யவேண்டும் என்பார்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அனைவரும் சேர்ந்து மின் விளக்கை அணைத்து விட்டு துவா செய்தால் அல்லாஹ் நிச்சயமாகத் தீர்த்து வைப்பான் என்று சொல்லி அவ்வாறு செய்து வருவதையும் நாம் காணும் காட்சிகளே ஆகும். சிலர் கூட்டாக துவா செய்வார்கள். மற்றும் சிலர் கூட்டாகத் துவா செய்யக் கூடாது. அவரவர் தேவைக்கு ஏற்றபடி தமக்கு வேண்டியதை அல்லாஹ்விடம் நேரடியாகத் தனித் தனியே துவா செய்ய வேண்டும் என்பார்கள்.


5.உலக அரங்கில் நடைபெறும் துவாக்கள்:

இப்போது உலக அரங்கில் நடக்கின்ற விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். இரண்டாம் உலகப் போரில் முதன்முதலில் துவக்கி வைத்த ஹிட்லரும் சரி, அதற்குப் பதிலடி கொடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரும் சரி, தான் வழிபட்டு வந்த கடவுளைப் பிரார்த்தனை செய்த பின்பே ஆரம்பித்தனர். இங்கிலாந்தின் ஆதிக்கத்தை விரும்பாத கோடான கோடி மக்கள், இங்கிலாந்து தோற்றுப் போக வெண்டும் என்று தாம் வணங்கி வந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். மறுபுறம் சர்வாதிகாரி ஹிட்லரும், அவனுக்குத் துணை நின்ற இதாலி நாட்டைச் சேர்ந்த முசோலினியின் படைகளும் தோற்க வேண்டும் என்று கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்தனர். அந்தப் போரும் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வரையில் நீடித்தது. இப்படியாக இறைவனை கோடான கோடி மக்கள் தத்தம் பக்கம் இழுக்கவே முயன்றனர். அல்லாஹ் யாருடைய பிரார்த்தனையை ஏற்று யாருக்கு உதவி புரிந்தான்? இதைப் பற்றி எப்போதாவது நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?

மேற்சொன்ன சம்பவங்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களைப் பற்றியதாகும். ஆனால் முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நாடுகளுக்கிடையே நடந்த விவகாரத்தையும் பார்ப்போம். அண்மையில் ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையே எட்டு ஆண்டுகள் வரையில் போர் நடந்தது. அவ்விரு நாட்டைச் சேர்ந்தவர்களும், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள் தான். அப்போது ஈராக் நாட்டின் அதிபராக இருந்த சதாம் உசைன் தோற்க வேண்டும் என்று ஈரானியர்களும், சதாம் உசைன் வெற்றி பெற வேண்டும் என்று ஈராக்கியர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து ஈராக் நாட்டின் மீது 40 நாடுகள் இணைந்து போர் தொடுத்தன. அப்போது கோடான கோடி முஸ்லிம்கள், சதாம் உசைன் வெற்றிப் பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் “துவா” செய்தனர். அதன்பின் அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளும், ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது படையெடுத்த போது, ஆப்கரினிஸ்தானின் பகைவனாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷூக்கு எதிராக முஸ்லிம்கள் துவா செய்தனர். அல்லாஹ் அவர்களுடைய துவாவை ஏற்று ஈராக்கிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உதவி செய்தானா? இதைப் பற்றி நீ எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?


6.அல்லாஹ் முஸ்லிம்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கின்றானா?

அல்லாஹ் முஸ்லிம்களின் பிரார்த்தனையை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டால், அல்லாஹ் நியாயத்தின் பக்கம் தான் இருப்பான் என்று சிலர் பதில் சொன்னார்கள். அப்போது உலகில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் அநியாயக்காரர்களா என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அநியாய அக்கிரமங்கள் எதுவும் நடைபெறுவதில்லையா? அவ்வாறு இருந்தும், அவர்கள்தானே போரில் வெற்றி பெற்றார்கள்? இதற்கு முஸ்லிம்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? யார் அநியாயக்காரர்கள் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்பதே ஆகும். அப்போது நீங்கள் அல்லாஹ்விடம் துவா செய்தீர்களே! உங்கள் துவாவை ஏற்றுக் கொள்ளவில்லையே! நீங்களும் அநியாயக்காரரா? என்று கேட்டால், அதற்கும் அவர்களிடம் பதில் எதுவும் இல்லை.


7.அல்லாஹ் யார் பக்கம் ?

இவையாவும் உலக அரங்கில் நடக்கும் விஷயங்களாகும். முஸ்லிம்களில் தனிப்பட்ட முறையில் நடக்கின்ற விஷயத்தைப் பற்றியும் பார்ப்போம். ரஹீம் என்பவர் ரஹ்மான் என்பவருக்கு எதிராக ஒரு சொத்து வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று இருவரும் ஓயாமல் அல்லாஹ்விடம் துவா செய்கின்றனர். ஆனால் அல்லாஹ் யார் பக்கம் சாய்வான் என்று தெரியவில்லை.

எனவே ரஹீம் பெரிய ஆலிமிடம் சென்று, இதைப் பற்றி யோசனை கேட்டார். அவரும், ‘இந்த’ துவாவை ஓதி வாருங்கள் என்று சில துவாக்களை குறித்துக் கொடுத்தார். இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விடும் என்று தைரியமூட்டி அனுப்பி வைத்தார். அதே போல் ரஹ்மானும் தன் பங்கிற்கு, ஒரு மார்க்க அறிஞரிடம் சென்று யோசனை கேட்டார். அவரும் அதே போல் துவா ஓதி வருவதுடன், வழக்கில் ஜெய்த்தால் அல்லாஹ்வுக்காக இத்தனை பேருக்கு சாப்பாடு, துணிமணி தருவதாக நேர்ச்சை செய்துகொள். இன்ஷா அல்லாஹ் உனக்குச் சாதகமாகவே தீர்ப்பு கிடைத்து விடும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். அவ்வாறே ரஹ்மானும் துவாஉடன் நேர்ச்சையும் செய்து கொண்டார்.

நீங்களே சொல்லுங்கள். இப்போது அல்லாஹ் யார் பக்கம் சாய்வான்? யார் அதிகமான தியானங்களையும் நேர்ச்சைகளையும் செய்கிறாரோ, அவர் பக்கம் அல்லாஹ் இருப்பானா? அவ்வாறு அவன் சாய்ந்தால், நீதி நியாயம் என்ன ஆவது? இல்லை. இல்லை. நீதி நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அவர் பக்கம்தான் அல்லாஹ் சாய்வான் என்றால் அவ்விருவரும் செய்து வரும் துவாக்களுக்கும் நேர்ச்சைகளுக்கும் அர்த்தம்தான் என்ன? அவை எல்லாம் பலனற்றவை என்றால் அல்லாஹ்விடம் சென்று ஏன் மன்றாடிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லாஹ்விடம் மன்றாடிக் கொண்டு இருப்பதெல்லாம் வீண் என்றாகிவிடுகிறது அல்லவா?

இத்தகைய இழுபறி நிலைக்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்வைப் பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களே இதற்கு காரணமாகும். அல்லாஹ் - கடவுள் நம் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அல்லாஹ் - கடவுள் தன் விருப்பப்படி மனிதன் செயலபட்டால் மட்டுமே அவனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டான். திருக்குர்ஆன் வாசத்தைக் கவனியுங்கள்.

وَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ.


2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
விளக்கம் :
(1) அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்பவர்களுக்கு, ஒவ்வொரு மனிதரின் அருகாமையிலேயே இருப்பதாக பதில் அளிக்கப்படுகிறது.
(2) ஒவ்வொவரு மனிதரும் செய்யும் பிரார்த்தனையையும் அல்லாஹ் கேட்டுக் கொள்வதாகவும், அவற்றிற்குத் தக்க வகையில் பதில் அளிப்பதாகவும் உறுதி அளிக்கப்படுகிறது.
(3) ஆனால் ஒவ்வொரு மனிதரும் அல்லாஹ்வை மட்டும் நம்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(4) அப்போது தான் அவர் செய்த பிரார்த்தனைகள் நிறைவேற வழிகள் பிறக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


8.அல்லாஹ் எவ்வாறு பதிலளிக்கிறான்?

மேற்சொன்ன வாசகத்தில் நான்கு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அல்லாஹ் ஒவ்வொருவரின் பிடரி நரம்பைவிட அருகாமையில் இருப்பதாக அறிவிக்கிறான். இதை (50:16) நாம் ஏற்றுக் கொண்டாலும், அவன் நம் பிரார்த்தனைக்கு விடை அளிப்பதாக சொல்வது சற்று வியப்பாக உள்ளது. காரணம் அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் நேரடியாகப் பேசுவதில்லையே (42:51). அவன் அளிக்கும் பதிலை நம்மால் கேட்கவும் முடியாதே! எனவே அல்லாஹ் பதிலளிப்பதாகச் சொல்வது அவனுடைய வேதத்தின் மூலம்தான் என்பது தெளிவாகிறது. ஏனெனில் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று ஒருவர் கேட்கும்போது, அருகாமையில் இருப்பதாக இறை வேதமாகிய திருக்குர்ஆன் மூலமாகத் தான் விடை அளிக்கிறானே அன்றி நேரடியாக அறிவிப்பதில்லை. எனவே ஒவ்வொருவரும் செய்யும் பிரார்த்தனைக்கும் திருக்குர்ஆன் மூலம்தான் பதில் கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சம்.

மேலும் அல்லாஹ்வை மட்டுமே நம்பவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது உங்கள் தேவைகள் நிறைவேற அவன் காட்டும் வழிமுறைகளை மட்டுமே நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்போது தான் உங்கள் தேவைகள் நிறைவேற வழிகள் கிடைக்கும் என்பது அதன் பொருளாகும். ஆக மனிதன் செய்யும் பிரார்த்தனைகளுக்கு விடை அளிப்பதாகவும், அதற்கான வழிகாட்டுதலை அளிப்பதாகவும் மட்டுமே சொல்லப்படுகிறதே அன்றி, மனிதன் கேட்பவற்றை எல்லாம் அல்லாஹ் நேரடியாகத் தருவதாக திருக்குர்ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. அவன் செய்துள்ள பரிபாலன அமைப்பு மூலமே மனிதன் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.


9.வெறும் பிரார்த்தனை மட்டும் போதுமா?

இதிலிருந்து மேலும் ஓர் உண்மை தெளிவாகிறது. துவா – பிரார்த்தனை என்பது மனிதனுள் எழும் எண்ணங்கள், தேற்றங்கள் மற்றும் ஆசைகள் ஆகும். அதை அல்லாஹ்வின் முன்பு சமர்ப்பிக்கும் போது, வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. அதன் பின் அந்த ஆசைகள், தேற்றங்கள் நிறைவேற மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக்கிடத்தான் இந்நூலை தொகுத்து எழுதியுள்ளோம். கீழ்கண்ட திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.

لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ.

13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும், எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள், அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்: தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இரு கைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது, (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதையே காட்டுகின்றன.
விளக்கம் -
1. உண்மையான அழைப்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். அதாவது அல்லாஹ்வை விட்டுவிட்டு பிற தெய்வங்களை அழைத்துக் கொண்டிருப்பதில் ஒரு பலனும் கிடைக்காது. அவ்வாறு அழைப்பவர்களுக்குத் தரும் உதாரணமாவது:
2. ஒருவர் தண்ணீர் முன் நின்றுக் கொண்டு, தன் கையை விரித்து வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பவரைப் போன்றதாகும்.
3. அவருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால், அவர் தான் தன் கரங்களால் அள்ளி குடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால், கியாம நாள் வரையிலும் கூட தண்ணீர் அவருடைய வாய்க்குள் சென்றடையாது.
4.அதாவது வாழ்வாதாரங்களை அளிப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். அதைப் பெற்றுக் கொள்வது மனிதனின் பொறுப்பாகும். வெறும் வார்த்தைகளால் பிரார்த்தனை செய்து விட்டு, அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்று எதிர் பார்ப்பது, உயிரற்ற சிலைகள் முன்பு பிரார்த்தனை செய்பவருக்கு ஒப்பானதாகும்.
5. உதாரணத்திற்கு ஒரு கிலோ நெல்லை மேஜை மீது வைத்துவிட்டு, ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து ஆயிரம்தான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தாலும் ஒரே ஒரு நெல் கூட அதிகமாகாது. அப்படி யாராவது அதிகமாக்கிக் காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. அதற்குரிய ஒரே வழி நெல்லை முறைப்படி நிலத்தில் விதைத்து பயிரிடுவது. அப்போது தான் அந்த விதை ஒன்றுக்கு நூறு என்று பன்மடங்காக பெருகும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது.

وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ.وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ.

53:39 & 40 இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
விளக்கம் -
கவனித்தீர்களா? மனிதனுக்கு தன் முயற்சியின் பலன்கள் தான் கிடைக்கும் என்று சின்னஞ் சிறிய இரு வாசகங்களில் சொல்லப்பட்டு இருப்பதை கவனியுங்கள். ஆக வெறும் பிரார்த்தனை செய்து விட்டால் அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்று எதிர் பார்ப்பது சரியாகாது. அவனுடைய பிரார்த்தனைக்கு ஏற்ப முயற்சியும் உழைப்பும் அவசியமானதாகும்.

மேலும் உழைப்பிற்கு ஏற்ப அவனுக்குத் தெளிவான ஞானம் இருப்பதும் அவசியமானதாகும். அப்போதுதான் அவன் நாடுவதை அடைய முடியும். உதாரணத்திற்கு ஒருவரிடம் பசுமையான ஒரு காணி நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நெல் பயிரிட அவர் ஆசைப்படுகிறார். ஆனால் அதை எப்படி பயிரிடுவது? எவ்வாறு பராமரிப்பது? அதைப் பற்றிய ஞானம் அவருக்கு இல்லை. விதைப்பதற்கு முன் நிலத்தை ஏர் உழுது நீர் பாய்ச்சி, பதப்படுத்திய பின்பே விதைக்க வேண்டும் என்று தெரியவில்லை. அப்படியே நெல்லை நிலத்தில் தூவி விட்டால் பயிர் வளரும் என நினைக்கிறார். அவ்வாறு தூவிவிட்டால் நெல் விளையுமா? எனவே உழைப்போடு நெல் பயிரிடுவதற்கான தெளிவான ஞானமும் அவசியமாக இருக்கிறது. அதே போன்றுதான் வியாபாரங்களும் மற்ற தொழில்களும். தனக்கு தெளிவான ஞானம் இல்லாததை பின் தொடர வேண்டாம் என்று அல்லாஹ் அறிவுருத்துகின்றான். (17:36)


10.மதமும் மார்க்கமும்:

மேலும் இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக்கிட விரும்புகிறோம். மதங்கள் கூறுவது போல் அல்லாஹ் ஓரிடத்தில் ஏதோ ஒர் உருவத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். அவன் இவ்வுலகில் மட்டுமின்றி அகிலங்கள் அனைத்திலும் தம் அளவிலா வல்லமைகளின் பிரதிபலிப்பாகவே செயல்பட்டு வருவதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. விளக்கத்திற்கு நாம் வெளியிட்டுள்ள அல்லாஹ்வும் மனிதனும் என்ற நூலைப் படித்துப் பாருங்கள். இங்கு சுருக்கமாக இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது அல்லாஹ், தான் படைத்து நடைமுறைப் படுத்தியுள்ள பல்வேறு படைப்புகள் மற்றும் அவற்றில் உள்ள சக்திகளின் வடிவில் செயல்படுவதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தகைய பிரபஞ்சப் படைப்புகளில் உள்ள சக்திகளை “மலாயிகா” (வானவர்கள்) என்று அறிவிக்கின்றான். மலாயிகா மனிதனுக்குக் கட்டுப்படக் கூடியவையாக உள்ளன. (2:30) எனவே அல்லாஹ் படைத்து வசப்படுத்தித் தந்துள்ள பல்வேறு சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மனிதன் ஆராய்ச்சிகளின் மூலம் தெரிந்து கொண்டு, தன் தேவைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதை அடிப்படையாக வைத்துதான் பிரார்த்தனைகள் எவ்வாறு நிறைவேறுகின்றன என்பதை நாம் தெளிவுபடுத்த முயன்று இருக்கிறோம். அன்பர்கள் படித்து அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம்.


11.வழக்கைப் பற்றிய தீர்ப்பு:

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

5:8 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கொண்டு தீர்ப்பு வழங்குங்கள். அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்கு சாட்சியாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது கொண்டுள்ள பகைமை உங்களை நீதி செய்யாமல் இருக்க தூண்ட வேண்டாம். நியாயமான முறையில் நீதி வழங்குங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுங்கள். நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான்.
விளக்கம் :
இவ்வுலகில் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் மனித கரங்களால் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே நீதி மன்ற விவகாரத்தையும் மனிதன் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவன் எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதை அல்லாஹ் அறிவுருத்தி விடுகின்றான். இதை விட்டுவிட்டு அல்லாஹ்விடம் துவா செய்வதால் தீர்ப்பு எப்படி மாறிவிடும்?


12.குழந்தை வேண்டி ஜக்கரியா நபி செய்த பிரார்த்தனை

قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًۭا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّۭا.

19:4.“என் இறைவனே! எனக்கு மிகவும் வயதாகி விட்டதால், நான் பலவீனம் அடைந்து கொண்டே போகிறேன். என் தலைமுடியும் நரைத்துவிட்டது. இது வரையில் நான் உன்னிடம் கேட்டவை எதுவும் எனக்கு நீ அளிக்காமல் இருந்ததில்லை” என்று ஜக்கரீயா நபி பிரார்த்தனை செய்தார்.

وَإِنِّى خِفْتُ ٱلْمَوَٰلِىَ مِن وَرَآءِى وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا فَهَبْ لِى مِن لَّدُنكَ وَلِيًّۭا.

19:5.“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப் பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன், மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள், ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக! என்று ஜக்கரியா நபி பிரார்த்தித்தார்.
விளக்கம் :
தான் சம்பாதித்து வைத்துள்ள சொத்து செல்வங்களைப் பாதுகப்பதற்காக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஜக்கரியா நபி பிரார்திக்கவில்லை. மாறாக தன் உறவினர்களில் யாரும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து, அதன்படி சமுதாய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியுடையவர்களாக யாரும் இல்லையே என்று கவலைப்பட்டு, அப்பணியை தொடர்ந்து செய்யக் கூடிய ஒரு பிள்ளை வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்தார். யாகூப் நபி முதலே தொடர்ந்து வந்த இந்தப் பணிகள் இனி தொடராதோ என நான் அஞ்சுவதாகவும் கூறுகிறார்.

يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّۭا.

19:6. "அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார். யாஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார், என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"
விளக்கம்:
எனக்கு ஒரு குழந்தைப் பிறந்தால், யாஃகூப் நபியின் சந்ததியர்களில் வந்தவர்களும், நானும் எவ்வாறு இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து, சமூக சீரமைப்புப் பணியைத் தொடர தகுதியுடையவர்களாக விளங்கினார்களோ, அவ்வாறே அவனையும் இந்தப் பணியைத் தொடரத் தகுதியுடையவனாக ஆக்குவேன். என் இறைவனே! நீ இதற்காக அப்படிப்பட்ட பேராற்றல் மிக்க ஒரு குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக” என்று இறைவனிடம் வேண்டினார்.

சிந்தனையாளர்களே! நாமும் இத்தகைய ஆற்றல் மிக்க குழந்தை வேண்டும் என்றுதான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது மட்டுமின்றி நம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தாலும், அத்தம்பதியர் மூலம் இத்தகைய நன்நடத்தையும் ஆற்றல்களையும் உடைய பிள்ளையை தந்தருளும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்த வண்ணம் திருமண ஏற்பாடு செய்ய வேண்டும். ஆக ஜக்கரியா நபியின் வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் அவருடைய பெயர் யஹ்யா என்று இருக்கும் என்றும் அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு வருகிறது (3:39)
இச்செய்தியை கேட்ட ஜக்கரிய நபிக்கு சந்தோஷம் ஏற்பட்ட போதும், தானும் தன் மனைவியும் வயதானவர்களாக இருப்பதால் குழந்தை எப்படிப் பிறக்கும் என்று கேட்க, அல்லாஹ்வின் நியதிப்படி எல்லோருக்கும் எவ்வாறு பிறக்கிறதோ, ‘அவ்வாறே’ பிறக்கும் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதில் வருகிறது. (3:40) அதற்கு, தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு

قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةًۭ ۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًۭا ۗ وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًۭا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ.

3:41.“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள் வாயாக!" என்று(ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும், மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று
விளக்கம் :
குழந்தை வேண்டி செய்த பிரார்த்தனைக்கு இறைவனிடமிருந்து இவ்வாறு பதில் வருகிறது. அதாவது குழந்தை பெறுவதற்குரிய வழியையும் காட்டி விடுகிறான்.
(1) மக்களுக்கு போதிப்பதை மூன்று நாட்களுக்கு நிறுத்தி விட்டு, செயலில் இறங்க வேண்டும்.
(2) குழந்தை பிறப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.
(وَسَبِحْ (3 என்பது நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைப்படி அயராது செயல்படுவதற்கு சொல்வார்கள்.
(4) அவ்வாறே அவர் குழந்தை பிறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய மனைவியிடம் இருந்த உடல்நலக் குறைகளை மருத்துவ சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாக திருக்குர்ஆன் வாசகம் 21:90 அறிவிக்கிறது. அதன்பின் அவருக்குக் குழந்தைப் பிறந்தது. இதிலிருந்து நாம் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன வென்றால்:
(1) நாம் செய்யப் போகும் எந்த காரியமானாலும் அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே என்று இருக்க வேண்டும். அந்த வரிசையில் மகப்பேறு வேண்டும் என்றாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல்படக் கூடிய இலட்சியப் பிள்ளையைப் பெறவே நாட வேண்டும்.
(2)ஆற்றல் மிக்க பிள்ளைகளைப் பெற நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.
(3) அதாவது உயர் இலட்சியங்கள் கொண்ட பிரார்த்தனை அத்துடன் அதற்குரிய முயற்சி அவசியம் ஆகிய இவையே நமக்குத் தெளிவாகிறது.
(4) பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்று வதற்காகவே என்ற எண்ணங்களுடன் பெற்றெடுத்தால், அதற்குரிய உதவிகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும். உதாரணத்திற்கு ஆலெ இமரான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கப் போவதாக உறுதி கொண்டார். (3:35)

அவர் எதிர் பார்த்ததற்கு மாறாக அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது (3:36) மர்யம் என்ற பெயரிட்ட அக்குழந்தையை இறை இல்லத்தில் அர்ப்பணித்து விட்டு, ஜக்ரியா நபியின் பாதுகாப்பில் வளர்ந்து வர ஏற்பாடு செய்தார்.(3:37) அவர் மூலமாக மர்யம் இறைவனின் எல்லா வழிகாட்டுதல்களையும் பெற்று சிறந்த பெண்மணியாக வளர்ந்தார். அல்லாஹ்வின் செயல்திட்டப்படி அவர் மூலமாக ஈஸா நபி பிறந்தார். ஆக மர்யம் (அலை) உலக வரலாற்றில் சிறந்த பெண்மணி என்ற நீங்கா இடத்தைப் பெற்றுக் கொண்டார்.(66:12) இப்படியாக ஒவ்வொரு தாய் தந்தையரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டு வந்தால் அனைத்து சந்தோஷங்களும் கீர்த்தியும் புகழும் கிடைப்பது உறுதி.


13.மகனைக் காப்பாற்ற நூஹ் நபி செய்த பிரார்த்தனை:

وَنَادَىٰ نُوحٌۭ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَٰكِمِينَ.

11:45. நூஹ் தன் இறைவனிடம், “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே, உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது, நீதி வழங்குவோர்களில் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.

قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَٰلِحٍۢ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ.

11:46 அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன், நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயல்களையே செய்து கொண்டிருந்தான், ஆகவே நீர் ஏதும் அறியாதது போல் அவனைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."

விளக்கம் -
(1) பிரளயத்தில் அடித்துச் செல்லப்படும் தன் மகனைப் பார்த்து, துக்கம் தாளாமல் அவனைக் காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறார்.
(2) காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதாக அல்லாஹ் வாக்களித்து இருந்தான். இதற்காக நீதி வழங்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்.
(3) அதற்கு இறைவன், அந்தப் பையன் அவருக்குப் பிறந்த மகனாக இருக்கலாம். ஆனால் அவன் நடத்தைக் கெட்டவனாக இருந்ததால், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று அறிவிக்கிறான்.
(4) “மேலும் பிரளயத்தில் அடித்துச் சென்றுவிடுவாய். எனவே கப்பலில் ஏறிக் கொள்” என்று அவர் முன்எச்சரிக்கை செய்தும் கூட (11:42), அவன் அவருடைய அறிவுரைக்கு செவி சாய்க்காமல், தான் மலை மீது ஏறி தப்பித்துக் கொள்வேன் என்று ஆணவத்துடன் பதிலளித்தான். அதைத் தொடர்ந்து மலைப் போன்று எழுந்த அலைகளில் சிக்கி அவன் மாண்டு போனான்.
(5) அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டால், அது எப்படி நியாயமாகும்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கே விருப்பமில்லை. அல்லாஹ் எப்படி உதவி செய்வான்? அவருடைய மகனின் கோரமான முடிவுக்கு அவனே காரணமாவான் அல்லவா?
(6) இந்த உண்மைகளை அறிந்த ஒரு நபி இறைவனிடம் அவனக் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்வதில் நியாயமில்லை.
(7) நேர்வழி காட்டுவதே இறைவனின் பொறுப்பாகும். அதை ஏற்று நடந்து பாதுகாப்பாக வாழ்வதும், அதை நிராகரித்து ஆபத்துகளை விலைக்கு வாங்கிக் கொள்வதும் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்ட விஷயமாகும்.
(8) இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். ஒரு நபியே பிரார்த்தனை செய்தாலும் அல்லாஹ், தான் நிர்ணயித்த வரையறைகளை (சுன்னதல்லாஹ்) மாற்றிக் கொள்வதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


14.பெற்றோர்கள் பிள்ளைக்காக செய்யும் பிரார்த்தனை:

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ.

14:40.“என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
விளக்கம்:
“எங்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவனே! உன் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட "ஸலாத்" முறையைக் கடைப்பிடிப்பவர்களாக என்னையும் என்னை சார்ந்தவர்களையும் வழிவகுத்துத் தருவாயாக. நாங்கள் செய்து வரும் நற்செயல்களை நீ ஏற்றுக் கொள்வாயாக” என்று இப்றாஹீம் நபி இறைவனிடம் வேண்டினார்.
ஆனால் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்து அவர்களை நல்ல பண்புள்ளவர்களாக வளர்த்து வர வேண்டும். அவ்வாறு மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கும் போது, சில விஷயங்கள் அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதை அவர்கள் ஏற்காமலும் போகலாம். சில பிள்ளைகள் தர்க்கமும் செய்வார்கள். அந்த வகையில் திருக்குர்ஆனில் ஒரு வாசகம் வருகிறது.

وَٱلَّذِى قَالَ لِوَٰلِدَيْهِ أُفٍّۢ لَّكُمَآ أَتَعِدَانِنِىٓ أَنْ أُخْرَجَ وَقَدْ خَلَتِ ٱلْقُرُونُ مِن قَبْلِى وَهُمَا يَسْتَغِيثَانِ ٱللَّهَ وَيْلَكَ ءَامِنْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

46:17 (சன்மார்க்கத்தைத் தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி: "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்பட வில்லையே)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், அல்லாஹ் விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) "உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது" என்று அல்லாஹ் விடம் காவல் தேடுகிறார்கள், அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைளேயன்றி வேறில்லை" என்று கூறினான்.

விளக்கம் :
(1) வருங்கால நல்வாழ்வைப் பற்றியும், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற ஆகிரத்தைப் பற்றியும் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து, அதற்கேற்றவாறு செயலாற்றி வர அறிவுருத்த வேண்டும்.
(2) ஆஃகிரத்து வாழ்க்கை அவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கலாம். காரணம் அவற்றை பெற்றோர்களாலும் நிரூபித்துக் காட்ட முடியாது. எனவே அவை வெறும் அச்சுருத்தல் என்றும், முன்னோர்களின் கட்டுக் கதைகள் என்றும் பிள்ளைகள் நினைக்கலாம்.
(3) இருப்பினும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவர்களாக, ஆஃகிரத்து மீது ஈமான் கொள்ளும்படி பிள்ளைகளுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும். காரணம் இஸ்லாத்தின் அஸ்திவாரமே ஆஃகிரத்து மீது ஈமான் கொள்வதிலேயே எழுப்பப்படுகிறது. (விளக்கத்திற்கு நாம் எழுதியுள்ள அல்லாஹ்வும் மனிதனும் என்ற நூலைப் படியுங்கள்.)
(4) இதே போன்று இப்றாஹீம் நபியும் (2:132), அவரது பேரனான யாகூப் நபியும் (2:133) மற்றும் லுக்மான் என்ற ஞானியும் (31:13-19) தம் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியை அளித்த வண்ணம் இருந்தனர்.
(5) ஆக பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியும் உலக கல்வியும் அளிக்காமல், தம் பிள்ளைகளை ஸாலிஹீன்களாக – மேதைகளாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. தன் புறத்திலிருந்து முயற்சியும், அல்லாஹ்விடம் துவாவும் என இரண்டுமே இருக்க வேண்டும். இதுவே அல்லாஹ்வின் பதிலாகும்.


15.பிள்ளை தாய் தந்தையருக்காக செய்யும் பிரார்த்தனை:

وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًۭا.

17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக: மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!

رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًۭا.

17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களில் இருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான், நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால், உள்ளந்திருந்தி உங்களில் எவர் பாதுகாப்புக் கோருபவர்களுக்கு அல்லாஹ் மிக பாதுகாப்பு அளிப்பவனாக இருக்கின்றான்.
விளக்கம்:
(1) பெற்றோர்களை, “சீ” “தோ” என்று வெறுக்காமல் அவர்கள் மீது பணிவு என்ற இறக்கையை தாழ்த்தி, பாதுகாப்பாக அரவணைத்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வர வேண்டும்.
(2) அவ்விருவரும், தான் சிறு பிள்ளையாக இருந்த போது, எவ்வாறு ஒரு குறைவும் இல்லாமல் பாதுகாப்பாக தன்னை வளர்த்து வந்தார்களோ, அவ்வாறே அவ்விருவரையும் கவனித்துக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுருத்த வேண்டும்.
(3) அல்லாஹ் அதை உறுதிப்படுத்தும் வகையில், உங்கள் மனதில் எத்தகைய எண்ணங்கள் உள்ளன என்ற உண்மை இறைவனுக்குத் தெரியும் என்றும் அறிவிக்கின்றான்.
(4) எவர் தன்னுடைய பிரார்த்தனைக்கு ஏற்ப நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருக்குத்தான் எவ்வித துயரமுமின்றி பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்றும் உறுதி அளிக்கப்படுகிறது.
(5) غَفُورًۭا என்பது துயரங்கள் மற்றும் வேதனைகளிலிருந்து விடுவித்து பாதுகாப்பு அளிப்பவன் என்று பொருள்படும்
(6) இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் (1) செயல் (2) பிரார்த்தனை (3) பிரார்த்தனைக்கு ஏற்ப எண்ணங்களும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளும். (4) தாய் தந்தையரை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் தான் துயரங்களிலிருந்து விடுபட்டு உங்களக்கு மன நிறைவுடன் கூடிய வாழ்வு கிடைக்கும். இதுவே அல்லாஹ்விடமிருந்து வரும் பதிலாகும்.


16.தவறான பாதையில் இருக்கும் தந்தை:

إِلَّا قَوْلَ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ أَمْلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ.

60:4 இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக பாதுகாப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர அவரால் எதையும் செய்ய இயலவில்லை. அன்றியும் அவர் கூறினார்): "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம், (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம், மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது."

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

60:5 “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்)ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்" (என்றும் வேண்டினார்).

விளக்கம் :
(1) இப்றாஹீம் நபியின் தந்தை ஆஜர், நம்ரூத் என்ற மன்னரின் அரசவையில் ராஜ குருவாக இருந்தார். சிலை வணக்க வழிபாட்டில் இருந்த தன் தந்தைக்கு பலமுறை அறிவுருத்தி வந்தார். (21:52-56)(19:41-45) அதற்கு அவருடைய தந்தை, இத்தகைய பேச்சை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லால் அடித்துக் அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினார். (19:46)
(2) எனவே அவருக்கு ஏற்படவிருக்கும் வேதனையிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்.
(3) மேலும், தான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே முற்றிலும் சார்ந்து இருப்பதாகவும் அறிவித்து விடுகிறார்.
(4) தம் தந்தைக்கு ஆதரவாகச் செயல்படும் இறை நிராகரிப்பவர்களை தமக்கு ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே என்றும் பிரார்த்தனை செய்கிறார்.
(5) தவறான வழியில் செல்லும் தம் தந்தையை திருத்த பல்வேறு கோணங்களில் அறிவுரை செய்தார். தம் தந்தை மீதுள்ள பாசமே அதற்குக் காரணமாகும். அவரை எப்படியாவது திருத்தி நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அதில் அவர் வெற்றிப் பெறவில்லை. காரணம் அவருடைய தந்தை, ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே அவரை விட்டுப் பிரிந்து பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று, ‘மில்லத்’ என்கின்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி மக்களுக்கு சேவை செய்து வந்தார்.
(6) இப்றாஹீம் நபி, தன் தந்தையை திருத்த முயன்றது போல், தாய் தந்தையர் தவறானப் பாதையில் இருந்தால், நாமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைத்து திருத்த முயற்சி செய்ய வேண்டும் என்று இதிலிருந்து தெளிவாகிறது.


17.உலக சமாதானத்திற்காக இப்றாஹீம் நபி செய்த பிரார்த்தனை

رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ.

14:37 "எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநிறுத்தி செயல்படுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன், எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள் பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"
விளக்கம் :
(1) தானும் தன் மகன் இஸ்மாயில் மட்டுமின்றி மேலும் சிலரை அழைத்துச் சென்றார்.
(2) "கஅபா" என்ற பழமை வாய்ந்த இடம் புற்பூண்டும் விளையாத இடமாக இருந்தது.
(3) இறைவழிகாட்டுதலை போதித்து அதன்படி உலக சமாதானத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றுவதற்காக இவ்வாறு குடியமர்த்தினார்.
(4) இதற்கு அங்கிருந்த மக்களின் (14:35) ஆதரவும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஸலாத் முறையை ஏற்படத்தி அதன் மூலம் மக்களுக்கு அறிவுருத்தி அவர்களுடைய ஆதரவை பெற முயற்சி செய்தார்.
(5) மேலும் விவசாயத்தை மேற்கொண்டு கனிவர்க்கங்கள் விளையும்படி ஏற்பாடு செய்தார். அவை அம்மக்களுக்கு ஆகாரமாக விளங்கின.

وَإِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا بَلَدًا ءَامِنًۭا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًۭا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

2:126 (இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார், அதற்கு இறைவன் கூறினான்: “ யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சுகானுபவத்தை அளிப்பேன், பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்ப்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே."
விளக்கம் :
(1) இப்றாஹீம் நபி மக்காவிற்குச் சென்றபோது, சுற்றுப் புறத்தில் புற்பூண்டும் விளையாத பொத்தல் காடாக இருந்தும், அது மக்கள் திரளாக வசித்த பட்டணமாகவே இருந்தது.
(2) அங்கு விவசாய நுணுக்கத்தைக் கையாண்டு, பல வகையான கனிவர்க்கங்கள் விளையும் படி இப்றாஹீம் நபி ஏற்பாடு செய்தார்.
(3) அல்லாஹ்வின் பரிபாலன ஏற்பாடுகளையும், அவன் நிர்ணயித்த, “மனித செயல்களுக்கு ஏற்ப இறுதி விளைவுகள்” என்ற ஆகிரத்தையும் ஏற்றுச் செயல்படுபவர்களுக்கு தாராள வாழ்வாதார வசதிகளை செய்து தரும்படி இறைவனிடம் பிரார்த்தித்தனர்.
(4) ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் உழைப்பவர்களுக்கும் வாழ்வாதரங்களை வழங்குவதாக இறைவனின் பதிலாக இருந்தது. காரணம் அவன் ரப்புல் ஆலமீன் ஆவான். அதாவது அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிப்பவன். அதில் இறை நிராகரிப்பவர்கள் விதிவிலக்கு அல்ல. காரணம் மார்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இருப்பதில்லை.(2:256)
(5) ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்காதவர்கள் தற்காலிக சுகங்களை மட்டும் அனுபவிக்க நாடுவார்கள். எனவே வருங்கால நிலையான வாழ்வு வேதனைளுடன் கூடிய இக்கட்டான சூழ்நிலையாக மாறிவிடும் என்று இறைவனிடமிருந்து பதில் வருகிறது. காரணம் மனிதனின் தனிப்பட்ட அறிவு தற்காலிக சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும்.
ஆக இத்தகைய ஏற்பாடுகளை செய்த பின் அவ்விருவரும் கஅபதுல்லாவின் செயலாக்கத்தை விரிவாக்கம் செய்தனர்.

وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِۦمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

2:127 இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினார்)
விளக்கம் :
(1) இப்றாஹீம் நபியும் இஸ்மாயீலும் கஅபாவின் கட்டிடத்தை உயர்த்தினார்கள். எனவே மக்காவிற்கு இஸ்மாயீலை அழைத்துச் சென்ற போது, அவர் கைக் குழந்தையாக இருக்கவில்லை. கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து இருந்தார்.
(2) அவ்விருவரும் செய்து வரும் நற்பணியை ஏற்றுக் கொள்ளும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
(3) இங்கும் செயல்களுடன் பிரார்த்தனை என்றே சொல்லப்படுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள. வெறும் துவா கிடையாது.

رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةًۭ مُّسْلِمَةًۭ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ.

2:128.“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக ஆக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

விளக்கம் :
(1) இப்றாஹீம் நபி, தன்னையும் தன் மகனையும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக ஆக்கும்படி பிரார்த்தனை செய்தார்.
(2) மேலும் சமுதாய மக்கள் அனைவரையும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுபவர்களாக ஆக்கு என்றும் பிரார்த்தித்தார்.
(3) இதற்காக தங்களுக்கு வழிமுறைகளையும் அறிவிக்கும்படியும் பிரார்த்தித்தார்.
(4) நிச்சயாக இறைவன் மன்னிப்போனாகவும் அன்புடையோனுமாகவும் இருப்பதாக புகழ்ந்தனர்.
(5) அதாவது மார்க்க கல்வியை, தாமும் தன் சந்ததியர்கள் மட்டுமின்றி சமுதாயம் முழுவதும் கற்று, அனைவரும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும் செயல் வீரார்களாக ஆக்க, இப்றாஹீம் நபி முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக வழிமுறைகளை அறிந்து அதன்படி செயலாற்றினார். இப்படியாக சமுதாயத்தில் நிலவி வந்த துயரங்கள் நீங்கி சுமுகமான வாழ்வு மலர ஆவன செய்தார். இவையே இப்றாஹீம் நபியின் உயர் இலட்சியங்களாக இருந்தன. இப்றாஹீம் நபி தம் தந்தை மட்டுமின்றி தம் பிள்ளைகளையும் மார்க்க கல்வியை அளித்து உலக சமாதானத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அவரிடத்தில் நமக்குச் சிறந்த முன்மாதிரி இருக்கிறது.


18.குடும்பம் சிறப்பாக இருக்க செய்யும் பிரார்த்தனை:

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا.

25:74. "மேலும் இறைவனின் செயல் வீரர்கள்: ""எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக - (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!"" என்று பிரார்த்தனை செய்வார்கள்.
விளக்கம் :
(1) குடும்பத்திலுள்ள மனைவி மக்கள் தமக்கு கண்களின் குளிர்ச்சியாக ஆக்கும்படி பிரார்த்தனை செய்கின்றனர்.
(2) இங்கு أَزْوَٰجِنَا அஸ்வாஜினா என்ற வார்த்தை வந்துள்ளது. இதற்கு ஜோடி என்று பொருள்படும். அதாவது கணவனுக்கு மனைவி ஜோடியாகவும், மனைவிக்கு கணவன் ஜோடியாகவும் ஆகிறார்கள். எனவே பெண்களுக்கும் இந்த துவா பொருந்தும். அவர்களும் இவ்வாறு பிரார்த்தனை செய்துக் கொள்ளலாம்.
(3) பயபக்தி உடையோர்களுக்கு இமாமாக ஆக்குவது - இதன் விளக்கம் பின்னாடி வரும். இங்கு கணவன் மனைவி விஷயத்தை முதலில் பார்ப்போம். காரணம்:"

هُنَّ لِبَاسٌۭ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌۭ لَّهُنَّ ۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ

2:187. "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்,
விளக்கம் :
(1) கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவு ஆடைக்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடை எப்போதும் உடலோடு ஒட்டியே இருக்கும். அதுபோல கணவன் மனைவியின் உறவு இணைபிரியா உறவாக இருக்கிறது.
(2) ஆடையை உடலிருந்து நீக்கி விட்டால், அவன் முழு மனிதனாக ஆக மாட்டான். எனவே மனிதத் தன்மை நிறைவு பெறுவதற்கு ஆடை முக்கியப் பங்கு பெறுவது போல், கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவு மனித ஒழுக்கத்தைப் பேணிக் காக்கும் பரிசுத்தமான உறவாக இருக்க வேண்டும்.
(3) இதில் மூன்றாமவனின் தலையீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்காது. மனைவி மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக ஆக மாட்டார்கள்.
(4) இதுநாள் வரையில் அறியாமையில் கணவன் மனைவி இரகசியமாக செயல்பட்டு ஒருவர் மற்றவருக்கு எதிராக வஞ்சித்துக் கொண்டிருக்கலாம். அதை எல்லாம் விட்டுவிட்டு இறை வழிகாட்டுதலின் படி இருவரும் இணைந்து செயல்பட்டால் குடும்பத்தில் சந்தோஷங்கள் பூத்துக் குலுங்கும்."

أَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ قُوٓا۟ أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًۭا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ

66:6. "முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்.
விளக்கம் :
(1) முதலில் உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் குடும்பத்தாரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
(2) அதாவது குடும்பத்தை நரகமாக மாற்றும் செயல்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, சூதாட்டம், அன்னிய பெண்களோடு கள்ள உறவு வைத்துக் கொள்வது போன்ற தகாத செயல்கள்.
(3) அப்போதுதான் குடும்பத்தை சீராக்கும் உரிமை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் திருந்தாமல் குடும்பத்திலுள்ளவர்கள் மட்டும் திருந்த வேண்டும் என்று விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது.
(4) இப்படியாக ஒவ்வொரு குடும்பமும் சீர்பட்டால்தான், நாடும் நாட்டு மக்களும் திருந்தி சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். இல்லாவிடில் சமுதாயமே சீர்கெட்டு, மக்களே நரகத்திற்கு எரிபொருளாகவும் எரி கற்களாகவும் மாறிவிடுவார்கள்.
(5) சிந்தனையாளர்களே! மனைவி மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவர்களாக ஆகவேண்டும் என்று நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேதத்தின் மூலம் பதில் கிடைத்து விட்டதா? பிரார்த்தனை – அத்துடன் சீர்திருத்தப் பணிகள் ஆகிய இரண்டும் இருத்தல் அவசியம் அல்லவா?
(6) நபிமார்களின் மனைவிகளில் சிலர் இறைவழிகாட்டுதலை ஏற்காதவர்களாகவும் இருந்தனர். உதாரணத்திற்கு நூஹ் நபி மற்றும் லூத் நபியின் மனைவிகளை சொல்லலாம். (66:10) அதே போன்று ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா காத்தூன் தலைசிறந்த பெண்மணியாக விளங்கினார். ஆனால் அவருடைய கணவன் ஃபிர்அவ்ன் மிகவும் கொடுங்கோல் அரசனாக இருந்தான். இறை வழிகாட்டுதலை எடுத்துரைத்து கணவன் மனைவியை திருத்துவதும், மனைவி கணவனை திருத்துவதும் முக்கியமான கடமையாகும். அவர்கள் திருந்துவதும் திருந்தாதும் அவரவர் விருப்பமாகும். இதற்காக யாரும் விவாகரத்து செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் நீங்கள் மார்க்கத்தை திணிப்பதாகப் பொருள்படும். இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. (2:256)"


19.கல்விக்காக செய்யும் பிரார்த்தனை:

فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِٱلْقُرْءَانِ مِن قَبْلِ أَن يُقْضَىٰٓ إِلَيْكَ وَحْيُهُۥ ۖ وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًۭا.

20:114. "உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன், இன்னும் (நபியே!) உமக்கு(க் குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர், “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!"" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
விளக்கம் :
(1) அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் சகல அதிகாரங்களையும் உடைய இறைவன் தான் அல்லாஹ்.
(2) இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட நபி, அவசரப்பட்டு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அதைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க முற்படுகிறார். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
(3) மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய அவறிவுருத்தப்படுகிறார்.
(4) உலக மேதைகளில் முதன்மை இடத்தைப் பெற்ற நபிக்கே, தனக்கு கல்வி ஞானத்தை அதிகரித்துக்கொள்ள துவா செய்யும்படி அறிவுரை வருகிறது என்றால், சாதாரண மனிதனாக இருக்கும் நாம் தன்னிச்சையாக செயல்படலாமா?
(5) நாமும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலின் படியே செயல்பட நாட வேண்டும். இதற்காக கல்விஞானத்தை அதிகரிக்கும் படி பிரார்த்தனையும் செய்யவேண்டும். இதற்கு அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள பதில் என்னவென்பதையும் அறிந்து கொள்ளுங்கள்."

ٱلرَّحْمَٰنُ.ع َلَّمَ ٱلْقُرْءَانَ. خَلَقَ ٱلْإِنسَٰنَ. عَلَّمَهُ ٱلْبَيَانَ.

55:1-4. அளவற்ற அருளாளன். இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்குப் (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ.عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ.

96:4&5 அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தான்..

விளக்கம் :
(1) மனிதனின் கல்வி ஞானம் வளர நபிமார்கள் மூலம் திருக்குர்ஆனை இறக்கி அருளிய ஏக இறைவன், அளவற்ற அருளாளன் ஆவான்.
(2) மனிதனைப் படைத்த இறைவன் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நபிமார்கள் மூலம் தெளிவாக்கினான்.
(3) மேலும் கல்வி ஞானம் பரவலாக வளர, எழுத்து வடிவத்தையும் கற்றுக் கொடுத்தான். அதைக் கொண்டு மனிதன் அறியாத பல உண்மைகளை கற்றுக் கொண்டான்.
(4) கல்வி ஞானம் வளர்வதற்கு மனிதன் முன் உள்ள வழிமுறைகள் இரண்டு. (1) உலகப் படைப்புகளைப் பற்றிய கல்வி மற்றும் (2) வேத ஞானங்கள்.
(5) உலகக் கல்விக்காக உலகப் படைப்புகளைப் பற்றி திருக்குர்ஆனில் ஏறக்குறைய 850 வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் உலகப் படைப்புகளின் தன்மைகளையும் அவற்றில் அடங்கியுள்ள பல்வேறு சக்திகளையும் ஆராய்ச்சிகளின் மூலம்தான் மனிதன் அறிந்துகொள்ள முடியும். மேலும் அவற்றை ஆராய்ச்சி செய்து அவற்றிலிருந்து பலன் பெறும் ஆற்றல் மனித இனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. (2:31)
(6) ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த அந்தக் கல்வியை எல்லா தரப்பு மக்களுக்கும் அளித்து, சிறந்த மேதைகளையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
(7) ஆனால் ஒழுக்க மாண்புகளைப் பற்றிய கல்வியை வேதங்கள் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அவை இப்போது திருக்குர்ஆனில் பாதுகாகக்கப்பட்டுள்ளது. அதையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தால் சிறந்த மேதைகளாக உருவாவதுடன் மனிதரில் மாணிக்கங்களாகவும் உருவாக்கலாம்.


20.நேர்வழிப் பெறுவதற்காக செய்யும் பிரார்த்தனை:

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ.ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ.صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ.

1:5-7 . நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

விளக்கம் :
(1) இந்தத் துவா திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. இதை நாம் அன்றாடாம் தொழுகையின் போது ஓதுகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக தொழுது கொள்பவர்களுக்கு நேர்வழி கிடைக்காமலே போயிவிடுகிறது. காரணம் தாம் ஒதுவது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அல்லாஹ் நாடினால், நமக்கு நேர்வழி கிடைத்து விடும் என்று திடமாக நம்புவதால் அதற்கான முயற்சியை மேற்கொள்வதில்லை.
(2) இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வின் சரியானப் பாதை மக்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே கூட்டு ‘ஸலாத்’ முறையை எல்லா நபிமார்களின் காலத்திலும் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் காலப் போக்கில் அந்த ஸலாத்தை (19:59) பிரார்த்தனை முறையாக (Prayerஆக) மாற்றி விட்டார்கள்.
(3) இருப்பினும் தற்சமயம் நம்மிடையே உள்ள ஸலாத் முறை, அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய அரிய சாதனமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
(4) ஆக நேர்வழி கிடைத்திட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதோடு, அது எப்படிப்பட்ட நேர்வழி என்பதையும் அல்லாஹ்வே தெளிவாக்கி விட்டான். அதாவது யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதியுடைவர்களாக ஆனார்களோ, அவ்வழி வேண்டும் என்பதாக பிரார்த்தனை தொடர்கிறது.
(5) அது மட்டுமின்றி வழிதவறிச் சென்று, வாழ்வில் துயரங்களைச் சந்தித்துக் கொண்டவர்களின் வழியிலிருந்து விலகி இருக்கவே நாடுவதாகவும் பிரார்த்தனையில் இணைக்கப்பட்டுள்ளதையும் கவனியுங்கள்.
(6) தம் அடியாரின் வேண்டுதலுக்கு இணங்க, அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதிலும் வந்து விட்டது. அதையும் கவனியுங்கள்.

الٓمٓ.ذَٰلِكَ ٱلْكِتَٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ.

2:1-2 "அலிஃப் இலாம் இமீம். இது, அல்லாஹ்வின்) திருவேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழிகாட்டியாகும்.
விளக்கம் :
(1) அலீஃம் - அல்லாஹ் - லாம் - லா இலாஹா (அனைத்து அதிகாரங்களையும் உடைய) – மீம் - முஹம்மதுஸல் அதாவது அனைத்து அதிகாரங்களையும் உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபிஸல் மூலமாக இறக்க அருளப்பட்ட வேதம் -
(2) மனித வாழ்வின் சரியான பாதையை அனைவருக்கும் காட்ட வல்லது என்பதில் எவ்வித சந்தேகமோ மனச் சஞ்சலமோ இருக்க வேண்டியதில்லை. ஆனால்
(3) لِّلْمُتَّقِينَ “இறையச்சம்” உடையவர்களுக்கே இது நேர்வழி காட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த இறையச்சமுடையவர்கள் யார்? மனிதன் தீயச் செயல்களில் ஈடுபட்டால் தீய விளைவுகளை சந்தித்துத் தான் ஆகவேண்டும் என்பது அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறையாகும். அத்தகைய தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாடுபவர்களே இறையச்சம் உடையவர்கள் ஆவர். நடப்பது நடக்கட்டும் துன்பம் ஏற்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக வாழ்பவர்களுக்கு குர்ஆனிலிருந்து நேர்வழி கிடைக்காது.
(4) மேலும், மக்கள் அனைவரும் நேர்வழி பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இதை உறுதிப்படுத்தும வகையில் உள்ள கீழ்கண்ட வாசகத்தைக் கவனியுங்கள்."

إِنَّ هَٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًۭا كَبِيرًۭا.

17:9 நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது, அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்று நன்மாராயம் கூறுகிறது.

விளக்கம் :
(1) இந்தக் குர்ஆன் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்.
(2) இவ்வாறு எவ்வித சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்பவர்களே மூஃமின்கள் ஆவர்.
(3) அதை ஏற்றுக் கொள்வதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணாமல், சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நற்செயல்களையும் செய்ய வேண்டும்.
(4) இவ்வாறு செயல் படுபவர்களுக்கே அரிய பல அருட்கொடைகள் கிடைப்பது உறுதி என்றும் வாக்களிக்கு அளிக்கப்படுகிறது. அதாவது சிறந்த எண்ணங்கள். எண்ணங்களுக்கு ஏற்ப நற் செயல்கள் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்.
(5) இந்தக் குர்ஆனை ஏற்றுக் கொள்ளாமல் நற்செயல்களைச் செய்தால், அதன் பலன்கள் கிடைக்காதா என்ற கேள்வி எழலாம். கண்டிப்பாகக் கிடைக்கும். ஆனால் நற்செயல் என்று திருக்குர்ஆன் எதை கோடிட்டுக் காட்டுகிறதோ அவையே நற்செயல்களாகும். திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எவை நற்செயல் என்று தன் மனம் சொல்லுமோ அதையே செய்வீர்கள். உதாரணத்திற்கு ஃபாத்திஹா தரூத் ஒதுவது நற்செயல்கள் என எண்ணி அதற்காக உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் செலவழித்தால் அது அல்லாஹ்வின் நற்செயலின் பட்டியலில் இடம்பெறாத ஒன்றாக இருக்கிறது. எனவே திருக்குர்ஆனை ஏற்று அதன்படி நற்செயல்களைச் செய்யவேண்டும்.
(6)ஆக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று வெறும் உதட்டளவில் துவா செய்வது, தண்ணீர்முன் நின்றுகொண்டு அது வாய்க்குள் வந்தடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்பவனுக்கு (13;:14) ஒப்பானதாகும். ஆயிரம் வருடங்கள் ஆனாலும் சமுதாய மக்களுக்கு நேர்வழி கிடைக்காது.
(7) ஆக கல்வி ஞானத்துடன் நேர்வழி அளிக்கும்படி மனிதன் செய்த பிரார்த்தனைக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதற்கான வழிகாட்டுதல் வந்துள்ளது அல்லவா?


21.இப்றாஹீம் நபியின் பிரார்த்தனை:

رَبِّ هَبْ لِى حُكْمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ.وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍۢ فِى ٱلْءَاخِرِينَ.وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ.

26:83-85 "இறைவனே! “நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக, மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!"" “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!"" இன்னும் பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸூக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!""

விளக்கம் :
(1) தனக்குக் கல்வி ஞானத்தை அளிக்கும்படி இறைவனிடம் இப்றாஹீம் நபி பிரார்த்தித்தார்.
(2) அதைக் கொண்டு ஸாலிஹான நல்லடியார்களில் ஒருவனாக ஆக்கி வைக்கும்படியும் பிரார்த்தனை செய்தார். கல்வி ஞானத்தைக் கொண்டுதான் ஒருவர் சிறந்த செயல்வீரராக ஆக முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
(3) பிற்காலத்தில் வருகின்ற தலைமுறைக்கும், தான் சிறந்த வழிகாட்டியாக வரவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தார்.
(4) மேலும் பாக்கியம் மிக்க சுவனபதிக்கு வாரிசுதாரர்களில் தம்மை சேர்த்துக் கொள்ளும்படியும் பிரார்த்தனை செய்தார்.
(5) இவை யாவும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சிறந்த எண்ணங்களும், அதற்கேற்றபடி பிரார்த்தனைகளும், பிரார்த்தனைக்கு ஏற்ப முயற்சியும் உழைப்பும் ஆகும். அப்போதுதான் சிறந்த மேதைகளாகவும், சாதனைப் படைத்தவர்களாகவும், சுவனத்திற்கு உரியவர்களாகவும் ஆக முடியும்."


22.பேச்சாற்றல் வளர செய்யும் பிரார்த்தனை:

قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى.وَيَسِّرْ لِىٓ أَمْرِى.وَٱحْلُلْ عُقْدَةًۭ مِّن لِّسَانِى.يَفْقَهُوا۟ قَوْلِى.

20:25-28. "மூஸா கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ உறுதிப்படுத்தி விரிவாக்கித் தருவாயாக! . என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!. என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக! என்று மூஸா நபி பிரார்த்தனை செய்தார்.

விளக்கம் :
(1) மக்களிடம் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதற்கு மன வலிமையும் தைரியமும் அவசியமாகிறது. அதை தமக்குள் வளர்த்துக் கொள்ள இறைவனிடம் மூஸா நபி பிரார்த்தனை செய்கிறார்.
(2) இதற்கான வழிமுறைகளை எளிதாக்கித் தரும்படியும் பிரார்த்தனை செய்கிறார்.
(3) மேலும் பேச்சுத் திறமை வெகுவாக அதிகரிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறார்.
(4) காரணம், தான் சொல்ல வரும் மார்க்க விஷயங்களை மக்களுக்கு சரியாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்.
(5) எனவே அல்லாஹ்விடம் துவா செய்வதுடன், இதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.
(6) மூஸா நபியின் எண்ணங்களும் பிரார்த்தனையும் நமக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. காரணம் இறைவழிகாட்டுதலை அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துரைக்கவே தமக்குப் பேச்சாற்றல் அளிக்கும்படி பிரார்த்தனை செய்தது அவருடைய உயர்ந்த நோக்கங்களை குறிக்கிறது. அதே போன்ற எண்ணங்களும் பிரார்த்தனையும் நமக்கும் இருக்க வேண்டும்."


23.முஸ்லிமாகவே வாழவைப்பாயாக என பிரார்த்தித்தல்!

وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ.

7:126 எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக, முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்த்தித்தனர்.)

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ.

20:73 “எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம், மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்து இருப்பவனாகவும் இருக்கின்றான்"" (என்று கூறினார்கள்)

விளக்கம் :
(1) மார்க்க உண்மைகளைப் பற்றி விவாதத்திற்கு வந்திருந்த யூத மதகுருமார்கள், மூஸா நபி விளக்கம் அளித்தபின் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கின்றனர். (7:122) இதை அறிந்த ஃபிர்அவ்ன் கோபப்பட்டு மாறுகை மாறுகால் அறுத்து அவர்களை சிலுவையில் ஏற்றி கொன்றுவிடுவதாக அச்சுருத்துகிறான். (7:124)
(2) இதைக் கேட்ட மதகுருமார்கள், மன்னரிடம், இறைவனிடமிருந்து வந்த ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொண்டதற்கு இந்தத் தண்டனையா?” என்று முறையிடுகிறார்கள்.
(3) எனவே அவர்கள், “இறைவா! எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உன் வழிகாட்டுதலில் நிலைத்திருந்து செயல்படும்படி எங்களுக்கு மன வலிமையைத் தந்தருள்வாயாக என்றும், வாழ்நாள் முழுவதும் நீ காட்டிய வழியிலேயே மக்கள் நலத்திட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களாகவே இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!” என்றும் பிரார்த்திக்கின்றனர்.
(4) மேலும் அவர்கள், மதகுருமார்களாக இருந்தபோது, மக்களுக்கு எடுத்துரைத்த சூனியமான போதனைகளால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களிலிருந்து இறைவனிடம் நிவாரணம் தேடுவதாக பிரார்த்திக்கின்றனர்.
(5) இப்படியாக இறைவனின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, அதன்படியே செயல்படுவதாக இறைவனிடம் பிரரர்த்தனை செய்கின்றனர்.
(6) இவ்வாறு மனந்திருந்தி வருபவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பான் என்பதில் தங்களுக்கு சிறிதளவும் சந்தேகமில்லை என்றனர்.
(7) அதாவது மார்க்க உண்மைகளை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைக்கும் போது பல எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வரும். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு மார்க்க வழிகாட்டுதலில் நிலைத்திருந்து செயல்பட வேண்டும். இத்தகைய எண்ணங்களுடன் நாமும் செயல்பட வேண்டும். இறை நிராகரிப்பவர்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


24.உலக படைப்புகளை ஆராய்ச்சி செய்யும் மூஃமின்களின் பிரார்த்தனை:

إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ.

3:190. நிச்சயமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًۭا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ.

3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள், வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்,)

விளக்கம் :
(1) அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மூஃமின்கள், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளைப் பற்றி அராய்ச்சி செய்வார்கள்.
(2) மாறி மாறி வரும் இரவு பகலைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள். இந்த ஏற்பாட்டைக் கொண்டே உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன என்ற உண்மையைக் கண்டறிவார்கள்.
(3) இப்படியாக அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்பவர்களுக்கே அவற்றில் செயல்பட்டு வரும் பல்வேறு சான்றுகளைக் கண்டறியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை அறிவார்கள்.
(4) இந்த உண்மைகளை அறிந்து கொள்ளும் இவர்கள், அல்லாஹ்வின் படைப்புகளை இராப் பகலாக அயராது ஆராய்ச்சி செய்த வண்ணம் இருப்பார்கள்.
(5) இப்படியாக வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் இவர்கள், அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை என்பதை கண்டறிந்து அல்லாஹ்விடம் நன்றியினை அறிவித்த வண்ணம் இருப்பார்கள்.
(6) அதாவது அவற்றை ஆக்கப்பூர்வமாக நோக்கங்களுக்காகவே படைத்திருப்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு பயன்படுத்துவார்கள்.
(7) அல்லாஹ்வின் படைப்புகளை அழிவுக்காகப் பயன்படுத்துவதை கற்பனை கூட செய்ய மாட்டார்கள். அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நரக வேதனைக்கு அஞ்சி அதை விட்டு பாதுகாத்துக் கொள்வார்கள்.

رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍۢ.

3:192. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ, அவரை நிச்சயமாக நீ இழிவாக்கி விட்டாய், மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்,)

விளக்கம் :
(1) அல்லாஹ்வின் படைப்புகளை தவறாகப் பயன்படுத்தி சமுதாயத்தை நரமாக்கிக் கொண்டவர்கள் இழிவுக்குள்ளாவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
(2) இத்தகைய அநியாயச் செயல்களை செய்வோருக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் அறிந்து அதிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் பிரார்த்திப்பார்கள்.
(3) மேலும் அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யாமல், சமுதாயத்தை சீரழிப்பவர்களும் அநியாயம் செய்பவர்களே. காரணம் அல்லாஹ் அளித்துள்ள மிகப் பெரிய பொக்கிஷமான அறிவாற்றலை பயன்படுத்தாமல் இருப்பவர்களும் அநியாயக்காரர்களே. இத்தகைய இழிவடைந்த சமுதாயங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
(4) இன்றைய நவீன உலகில் நடப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள். திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு ஏற்பத்தான் நடந்து வருகின்றன. எனவே பிரார்த்தனையுடன் செயலாக்கமும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًۭا يُنَادِى لِلْإِيمَٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ.

3:193. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம், “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்,)

விளக்கம் :
(1) மேற்சொன்ன இந்த விஷயங்களின் அடிப்படையில்தான் ஈமான் கொள்ளும்படி நபிமார்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
(2) இது நாள் வரையில் இருந்து வந்த அறியாமையின் காரணமாக அல்லாஹ்வின் படைப்புகளை ஆராயாமல் தமக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாப்பு அளிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
(3) மேலும் தீமையான செயல்கள் என்று எவற்றை உன் வழிகாட்டுதல்கள் அறிவிக்கின்றனவோ அவற்றை விட்டு நீங்கிக் கொள்வோம் என்றும் அல்லாஹ்விடம் உறுதி அளிக்கிறார்கள்.
(4) அப்போதுதான் அவர்கள் உலக வரலாற்றில் முத்திரை பதித்துச் சென்ற “சான்றோர்கள்” பட்டியலில் இடம் பெற முடியும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு அயராது உழைப்பார்கள்.


25.ஆட்சிபீடத்தில் இருப்பவர்களின் எண்ணங்களும் பிரார்த்தனையும்:

فَتَبَسَّمَ ضَاحِكًۭا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ.

27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, சுலைமான் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும், புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக" என்று பிரார்த்தித்தார்.

விளக்கம் :
(1) அக்காலத்து அரசர்கள் பயணங்களை மேற்கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள நாடுகளில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வது வழக்கமாக இருந்து வந்தது. அந்த வகையில் சுலைமான் நபியும் பேரரசராக இருந்து வந்தார். அவர் பயணத்தை மேற்கொள்ளும் போது, “நம்ல்” என்ற பள்ளத்தாக்கில் வாழ்ந்த நாட்டைக் கடந்து சென்றார். அந்த நாட்டை ஒரு பெண் ஆட்சி செய்து வந்தார்.
(2) சுலைமான் நபியின் வருகையைக் கேள்வியுற்ற அந்நாட்டு அரசி, தன் ஊர் மக்களை தன் வீட்டிற்குள்ளேயே தங்கிக் கொள்ளும்படி அறிவுருத்துகிறார். காரணம் மக்கள் அவர்களை தவறுதலாகத் தாக்கப் போய், சுலைமான் நபியின் படையினர் இவர்களை அறியாமல் தாக்கி நசுக்கி விடுவார்கள் என்றார். (27:18)
(3) இதைக் கேள்வியுற்ற சுலைமான் நபி புன்னகை செய்து, இறைவன் தனக்கும் தன்னுடைய தந்தை தாவூத்துக்கும் அருட்கொடைகளை அளித்தமைக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்வதாக உறுதியளித்து இறைவனிடம் பிரார்த்தித்தார்.
(4) அதாவது அவர் பேரரசராக இருந்தும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில் தம்மாலான நற்செயல்களையே செய்யவும், தம்மால் மற்றவர்களுக்கு தீமைகள் ஏற்படாதவாறு காத்தருளும்படியும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். இப்படியாக தன்னை நல்லடியார்களின் பட்டியலில் இடம்பெறச் செய்யும்படி பிரார்த்தித்தார்.
(5) இவைதான் பேரசராக இருந்த சுலைமான் நபியின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆகும். அதாவது ஆட்சிபீடத்தில் இருந்த போதும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே அவனுடைய அறிவுரைக்கு ஏற்ப செயல்பட வைக்கும்படி பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தது அவருடைய உயர்ந்த பண்புகளைக் காட்டுகிறது.

அதே போன்று அண்டை நாடான ஸபா நாட்டில் நடந்து வந்த முறைகேடுகளைப் பற்றி ஹூத்ஹூது என்ற உளவுப் படைத் தலைவரிடமிருந்து தகவல்களை சேகரித்து வந்தார். இறை வழிகாட்டுதல்படி சமுதாய சீர்த்திருத்தங்களைக் கொண்டு வரும்படி, அந்நாட்டை ஆண்டு வந்த இளவரசி ஷீபாவுக்கு வேத உபதேசங்களை அனுப்பி வைத்தார். (27:28) அதை ஏற்க மறுத்ததால் அந்த அரசிக்கு சரியானப் பாடம் புகுட்ட அவளுடைய கோட்டையைப் பிடித்து அவளைச் சிறைபிடித்துக் கொண்டுவருபவர் யார் என்று தம் படைத் தளபதிகளிடம் ஆலோசனை கேட்டார். (27:38) இதைக் கேட்ட தளபதிகளில் ஒருவர், சுலைமான் நபி போருக்காக ஆயத்தமாவதற்கு முன்பே அந்தக் கோட்டையை கொண்டு வந்துவிடுவதாக சூளுரைத்தார்.(27:39) போர் யுக்திகளை நன்கு அறிந்த மற்றொரு தளபதி, அவளுடைய கோட்டையை கண்ணிமைக்கும் நேரத்திலேயே கொண்டு வந்துவிடுவதாக முழக்கமிட்டார்.(27:40)

சுலைமான் நபி தமக்குக் கிடைத்திருந்த வசதி வாய்ப்புகளைப் பார்த்து பெருமிதப்பட்டுக் கொண்டார். ஆனால் அவர் செய்த பிரார்த்தனை என்னவென்பதைக் கவனியுங்கள்.

قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّى لِيَبْلُوَنِىٓ ءَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّى غَنِىٌّۭ كَرِيمٌۭ.

27:40. “இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும், நான் நன்றியறியதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும், எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ, அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாகும், மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும், ஏனெனில்) என் இறைவன். (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (சுலைமான்) கூறினார்.

விளக்கம் :
(1) தமக்குக் கிடைத்திருந்த மாபெரும் அருட்கொடைகள் யாவும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தவை என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயல்பட்டார்.
(2) காரணம் “அத்தகைய வசதி வாய்ப்புகளை வைத்துக் கொண்டு, இறைவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துக் கொள்கின்றேனா அல்லது அவனுக்கு மாறு செய்கின்றேனா என்பதுதான் என்முன் உள்ள பரீட்சையாகும்” என்றார்.
(3) “எவர் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்களோ, அதன் பலன்கள் அவருக்கே கிடைக்கும். எவர் மாறு செய்கிறாரோ, அதனால் ஏற்படும் இழப்புகள் யாவும் அவருக்கே வந்தடையும்” என்றார்.
(4) தன்னுடைய இறைவன் தேவையற்றவனாகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருப்பதாகவும் அறிவித்தார்.
(5) அதாவது தமக்குக் கிடைத்திருந்த வசதி வாய்ப்புகளை ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டாலும், அவற்றை அழிவுக்காகப் பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் பலன்களும் தீய விளைவுகளும் மனிதனுக்கே அன்றி இறைவனுக்கு அல்ல என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்று சுலைமான் நபி அறிவித்தார்.
(6) இந்த அறிவுரைகளை அரசு பிரமுகர்களிடமும், படைத் தளபதி களிடமும், சேனைகளிடமும் செய்ததாகத் தெரிகிறது.
(7) ஒரு பேரரசர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற நிலையில் இருந்தும் கூட, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உலக நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்ததால், உலக வரலாற்றில் (Solemon The Great) என்ற நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவ்வாறே இன்றைய காலக் கட்டத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து, மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும். இதுவே அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனைகளுக்கு உண்மையான அர்த்தமாகும். ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது என்பதே ஆகும்.


26.போர்முனையில் செய்யப்படும் பிரார்த்தனை:

وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

2:250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறிப் பிரார்த்தனை செய்தனர்.

விளக்கம் :
(1) உயிரை பணயம் வைத்து சமூக விரோத சக்திகளின் பலத்தை முறியடிக்க, போர் முனையில் இருக்கும் சேனைகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
(2) தங்களுக்கு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை எதிர் கொண்டு செயல்படக் கூடிய மனவலிமை வேண்டும் என்கிறார்கள்.
(3) மேலும் இதற்காக உடல் பலமும் தைரியமும் வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர்.

وَكَأَيِّن مِّن نَّبِىٍّۢ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٌۭ فَمَا وَهَنُوا۟ لِمَآ أَصَابَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُوا۟ وَمَا ٱسْتَكَانُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ.

3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர், எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை, எதிரிகளுக்குப் பணிந்து விடவுமில்லை – அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

3:147. மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவிபுரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.

விளக்கம் :
(1) முஹம்மது நபி மற்றும் சஹாபா பெருமக்கள் மட்டும் போரிட்டதாகச் சொல்வது சரியல்ல. காலம் காலமாக எல்லா நபிமார்களும், இறைக் கொள்கையை ஆதரித்து அவற்றை சமுதாயத்தில் நிலை நாட்டுவதற்காக உறுதியுடன் துணை நின்றவர்களும், (ரிப்பியூன்கள) தங்களை எதிர்த்து தாக்க வந்த பகைவர்களுக்கு எதிராக போரிடாமல் இருந்ததில்லை.
(2) போரின் சமயம் தம்மை அறியாமலே வரம்பு மீறினச் செயல்களை செய்து விடலாம். அதன் பாதிப்புகளிலிருந்து காத்தருளும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
(3) இவ்வாறு போரில் பங்கெடுத்துக் கொண்ட வீரர்களுக்குப் பலப்பல துயரங்கள் ஏற்பட்டபோதும், அவர்கள் சற்றும் மனந்தளராமல் தைரியத்துடன் நின்று போரிட்டனர்.
(4)இவ்வாறு நிலைகுலையாமல் மனஉறுதியுடன் செயல்படுபவர்களுக்கே அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் போர் முனையில் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
(5)மேலும் தாங்கள் எடுத்துக் கொண்ட பணியில் உறுதியுடன் நிலைத்திருந்து செயல்படுவதற்கு தக்க ஆற்றல்களை அளிக்கும்படியும், சமூக விரோதிகளின் பலம் குன்றிவிடச் செய்யும்படி பிரார்த்தித்தனர்.
இதற்காக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவென்பதையும் கவனியுங்கள்.


27.போரில் வெற்றி தோல்வி :

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ.

8:65. நபியே! நீர் முஃமின்களைப் போருக்கு ஆர்வமூட்டுவீராக, உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள், ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

விளக்கம் :
(1)போரிடுவதற்கு முன் போருக்கான பயிற்சியை வீரர்களுக்கு அளித்து வர வேண்டும். இது அரசாட்சியின் முக்கிய பணியாகும்.
(2)அதாவது صَآبِرُؤنَ (தொடர் முயற்சி மேற்கொள்வது என்று பொருள்படும்.) அதாவது தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களில் ஒவ்வொருவரும் பத்து பகைவர்களை வீழ்ந்திவிடலாம்.
(3) இந்த உண்மைகளை அறியாத இறை நிராகரிப்பவர்கள் அறிவிலிகளாக இருக்கின்றனர்.
(4) மேலும் யார், யாருக்காக, யாருக்கு எதிராக, ஏன் போரிட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக வழிகாட்டுதல்கள் திருக்குர்ஆனில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதை விட்டுவிட்டு வெறுமெனே சமுதாயத்தில் குழப்பதை ஏற்படுத்துவது, கொலைக் குற்றங்களைச் செய்வது, வெடிப் பொருள் பயன்படுத்துவது, பயங்கரவாதத்தைப் பறப்புவது போன்ற செயல்கள் இஸ்லாத்திற்கு எதிரான செயல்களாகும்.

இன்றைய காலக் கட்டத்தில் ஆதிக்க வெறியர்கள், பலவீனமான நாடுகளின் மீது படை எடுத்து கொள்ளை அட்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களும் அல்லாஹ் உதவி செய்வான் என்ற எதிர்ப்பார்ப்பில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.


28.சுவனத்தில் இடம்பெற வேண்டி செய்யும் பிரார்த்தனை:

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ.

3:194 “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல" (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).

விளக்கம் :
(1) எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் நீ எங்களுக்கு வாக்களித்தபடி சுவன வாழ்வை அளிப்பாயாக!
(2) மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக.
(3) நீ வாக்குறுதிகளில் ஒருபோதும் மாறுபவன் அல்ல என்பதையும் நாங்கள் அறிவோம் என்பதாக அவர்களுடைய பிரார்த்தனை இருக்கும்.
(4) நரக வாழ்வு இழிவானது என்று இங்கு சொல்லப்படுகிறது. எனவே சுவன வாழ்வு என்பது எல்லா வளங்களையும் இம்மையிலும் மறுமையிலும் பெற்று கண்ணியத்துடன் வாழ்வது என்று பொருள்படும். மேலும் அல்லாஹ்வின் வாக்குகள் என்றைக்கும் மாறாது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு அல்லாஹ்வின் பதில் என்னவென்பதையும் கவனியுங்கள்.

فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٍۢ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّنۢ بَعْضٍۢ ۖ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ثَوَابًۭا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ.

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான், “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்.

எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப் பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன், இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்), இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும், இன்னும் அல்லஹாவாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

விளக்கம் :
(1) இவ்வாறு பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
(2) ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் சுவன வாழ்வு கிடைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எதுவும் வீண் போகாது என்றும் வாக்கு அளிக்கப்படுகிறது. ஆண் பெண் ஆகிய இருவருமே சமுதாயத்தின் அங்கத்தினர்களே ஆவர். எனவே இதில் ஆண் பெண் என்ற பேதம் இருப்பதில்லை.
(3) சமுதாயத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் போது, சிலர், வீடு வாசல்களை இழக்க நேரிடும். சிலர், வியாபாரம் மற்றும் விளைச்சல் களையும் இழக்க நேரிடும். (2:155)
(4) சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வெளியூருக்குச் சென்று தொண்டு பணியை செய்ய நேரிடும்.
(5) சிலர் தனிப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் போது, பல துன்பங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். எதற்கும் அஞ்சாது மனந்தளராமல் செயல் பட வேண்டும்.
(6) இத்தகைய சமூக அமைப்புக்கு எதிராக பகைவர்கள் சதிகளை செய்வார்கள். அவர்களை எதிர்த்து சிலர் போரிடவும் செய்ய நேரிடும். அதில் சிலர் உயிரையும் துறக்க நேரிடும்.
(7) இப்படியாக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தால் உங்களிடையே இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி, நற்செயல்களைச் செய்யக் கூடிய பழக்கம் ஏற்படும்.
(8) இத்தகைய நற்செயல்களைச் செய்வோருக்கே சுவனத்தில் புகுத்தப் போவதாக அல்லாஹ்வின் வாக்கு உள்ளது. இச்சுவனம் என்பது தாராள பொருளதார வசதிகள் நிறைந்த சிறப்பான வாழ்வாகும்.
(9) இவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் அழகிய சன்மானங்களாகும்.
(10) இதுவே அல்லாஹ்வின் வாக்கு ஆகும். இதைக் கடைப்பிடித்து சுவர்க்கத்திற்குச் செல்வதும், இதை விட்டுவிட்டு தற்காலிகமாக சொகுசாக வாழ்ந்து பிற்காலத்தில் நரகத்திற்குச் செல்வதும் உங்களுடைய விருப்பம்.
(11) மேற்சொன்ன வழிமுறைகளை விட்டுவிட்டு மூலையில் அமர்ந்தபடி வெறும் ஜப மணியை வைத்துக் கொண்டு சில வஜீஃபாக்களை உச்சரித்துக் கொண்டிருந்தால், ஒருபோதும் சுவனத்திற்கு செல்ல முடியாது. காரணம் அல்லாஹ்வின் வாக்கு ஒருபோதும் மாறாது.


29.பிரார்த்தனைகளும் மூட நம்பிக்கையும்:

۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًۭا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَٰلِحًۭا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ.

7:189. உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான். அவருடன் கூடி(இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவர் அவளை நெருங்கிய போது அவள் இலேசாகக் கர்ப்பவதியானாள், பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள், பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحًۭا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ.

7:190. அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ.

7:191. எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள், இன்னும், அவர்களோ (அல்லாஹ் வினாலேயே) படைக்கப்பட்டவர்கள் ஆயிற்றே!

وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًۭا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ.

7:192. அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர், (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.

விளக்கம் :
(1) உங்கள் அனைவரையும் ஓர் உயிரணு என்ற அடிப்படையிலேயே படைப்பது அல்லாஹ்தான்.
(2) அதற்காக உங்களில் ஆண் பெண் என்ற ஜோடியைப் படைத்ததும் அல்லாஹ்தான்.
(3) அவ்விருவரும் இணைந்த பின் பெண்ணானவள் கற்பவதியாகிறாள்.
(4) அந்தக் கருவை குறிப்பிட்ட காலத்திற்குச் சுமக்கவும் செய்கிறாள். ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் அந்தக் கருவு வளர்ந்து சுமையாக ஆகும் போது, தங்களுக்கு நல்ல விதமாக குழந்தைப் பிறந்தால் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.
(5) அவ்விருவருடைய வேண்டுதலின்படி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது.
(6) ஆனால் அவ்விருவரும் அக்குழந்தையிடம் மறைந்து போன மகான்களையும், பெரியார்களையும் அல்லாஹ்வுக்கு இணையாக்கி அவர்களுடைய பெருமையைக் கற்பிக்கிறார்கள். அவ்வாறு இணை வைப்பதைவிட அவன் மிக மிக தூய்மையானவன் என்பதை மறந்து விடுகின்றனர்.
(7)அதாவது யாரை அவர்கள் இணையாக்குகிறார்களோ (அதாவது மகான்கள் பெரியார் போன்றோர்) அவர்களை படைத்ததும் அல்லாஹ்தான். அவர்கள் எப்பொருளையும் படைக்கத் தகுதியற்றவர்கள்.
(8) காரணம் மறைந்து போன அந்த மகான்களும் பெரியார்களும் தமக்குத் தாமே கூட உதவி செய்து கொள்ளும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

அதாவது ஆரோக்கியமான குழந்தைப் பிறக்க அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள போஷாக்கு நிறைந்த ஆகாரங்களையும், மூலிகை மற்றும் மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். அதன்பின் எதையும் படைக்கத் தகுதி இல்லாதவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி அவர்களும் நம் வாழ்க்கைக்கு துணை நிற்பவர்களே என்று பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். அதனால் அக்குழந்தையின் மனதில் அவர்களைப் பற்றி உயர்ந்த கருத்துக்கள் வேரூன்றிவிடுகிறது. இத்தகையவர்களை என்னவென்று சொல்வது? ஆரோக்கியமான குழந்தைப் பிறப்பதற்கு மறைந்து போன அந்த மாகன்களும் பெரியார்களும் துணை நின்றார்களா? அவர்களே தம்மைத் தாமே உதவி செய்து கொள்வதற்குக் கூட சக்தியற்றவர்களாக இருக்கும் போது, அவர்களை அல்லாஹ்வுக்கு இணையான சக்தி பெற்றவர்கள் என எண்ணி பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது எந்த வகையில் நியாயம்.

உதவி கேட்டு பிரார்த்தனை செய்வது அல்லாஹ்விடம்! தம்முடைய தேவை நிறைவேறியதும் பாராட்டும் போற்றுதலும் அந்த மகான்களுக்கும் பெரியார்களுக்குமா? மூடநம்பிக்கையை விட்டு களையத்தான் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் இறக்கியருளப்பட்டது. வழிகாட்டுதல்கள் அடங்கிய திருக்குர்ஆனை வைத்துக்கொண்டு மூட நம்பிக்கை மக்களில் வளர்ந்து வருகிறது என்றால் திருக்குர்ஆனைப் பின்பற்ற மக்கள் விட்டுவிட்டார்கள் என்றுதானே பொருள்? அப்போது அல்லாஹ்விடம் துவா கேட்பதும் வெறும் சடங்கிற்குத்தானா?


30.பிரார்த்தனையும் நன்றி மறப்பதும்:

وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوْ قَاعِدًا أَوْ قَآئِمًۭا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَآ إِلَىٰ ضُرٍّۢ مَّسَّهُۥ ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

10:12. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச் சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்றுவிடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப் பட்டு விடுகின்றன.

விளக்கம் :
(1) மனிதனுக்கு ஏதாவது துன்பம் நேரும்போது, விழுந்து விழுந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பான்.
(2)அவனுடைய பிரார்த்தனையின் படி துன்பங்கள் நீங்கி விட்டால், அல்லாஹ்வுக்கும் அந்தத் துன்பங்கள் நீங்கியதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது போலவே நடந்து கொள்கிறான்.
(3) இப்படியாக அவன் பழையபடி வரம்பு மீறின செயலில் ஈடுபடவே செய்கிறான்.
(4) அது மட்டுமின்றி அவ்வாறு வரம்பு மீறின செயல்களில் ஈடுபடுவது அவனுக்கு அழகாகவும் தோன்றுகிறது.

அவனுக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்க அல்லாஹ் படைத்துள்ள பொருட்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை எல்லாம் மறந்து விடுகிறான். பழையபடி அதே தீய செயல்களில் ஈடுபடுகிறான். உதாரணத்திற்கு தகாத பாலியல் உறவுகளால் ஸிஃப்லிஸ், (Siphlis) எய்ட்ஸ் (AIDS) போன்ற கொடிய நோய்கள் வருகின்றன. அல்லாஹ் படைத்துள்ள மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி நிவராணம் பெற முயல்கிறான். ஆனால் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆபாச சினிமாக்களுக்கும், தொலைக் காட்சி மற்றும் இணையதளத்திற்கும் தடை விதிக்க மாட்டான். மாறாக ஆணுரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அறிவுருத்துவான். காரணம் அன்னிய பெண்களுடன் உடலுறவு கொள்வது அவனுக்கு அழகான செயலாகத் தோன்றுகிறது.

அதாவது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வான். ஆனால் அல்லாஹ்வின் அறிவுரைப்படி மானக்கேடான செயலாகிய ஆபாசங்களுக்கு தடை விதிக்கமாட்டான். இதன் பின் நிலையான சந்தோஷங்கள் கிடைப்பது எப்படி? இது மட்டுமின்றி அல்லாஹ்வின் பல அறிவுரைகளுக்கு எதிராகச் செயல்படுகிறான். திருக்குர்ஆனின் இன்னொரு வாசகத்தையும் கவனியுங்கள்.

هُوَ ٱلَّذِى يُسَيِّرُكُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمْ فِى ٱلْفُلْكِ وَجَرَيْنَ بِهِم بِرِيحٍۢ طَيِّبَةٍۢ وَفَرِحُوا۟ بِهَا جَآءَتْهَا رِيحٌ عَاصِفٌۭ وَجَآءَهُمُ ٱلْمَوْجُ مِن كُلِّ مَكَانٍۢ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ ۙ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنْ أَنجَيْتَنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ.

10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்ய வைக்கிறான், (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும் போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், பின்னர் புயல் காற்று வீசி எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழி இல்லையே)" என்று எண்ணுகிறார்கள், அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.

فَلَمَّآ أَنجَىٰهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰٓ أَنفُسِكُم ۖ مَّتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

10:23. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது, அழிச்சாட்டியம் செய்கிறார்கள், மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாக முடியும், உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வரவேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.

விளக்கம் :
(1) வாழ்வாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்ள கடல் பயணங்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
(2) கடற் பயணங்களின் சமயம் இதமான தென்றல் காற்று வீசும் போது, பயணிப்பவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
(3) ஆனால் புயல்காற்று வீசி, பேரலைகள் கப்பலை மோதும் போது, மிகவும் பதட்டமடைகிறார்கள். “அகப்பட்டுக் கொண்டோமே! தப்பிக்க வழி ஏதாவது உண்டா?” என புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
(4) அத்தகைய ஆபத்துகள் வரும்போதுதான், அல்லாஹ்வின் ஞாபகம் அவர்களுக்கு வரும். அப்போது தூய உள்ளம் கொண்டவர்களைப் போல் அவர்கள், “அல்லாஹ்வே! இத்துன்பத்திலிருந்து காப்பாற்றி விட்டால், நாங்கள் உன் வழிகாட்டுதலுக்கே இணங்கி என்றென்றும் உனக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்வோம்” என்று பிரார்த்தனை செய்வார்கள்.
(5) அல்லாஹ்வின் நியதிப்படி அந்த ஆபத்து அவர்களை விட்டு நீங்கி விட்டால், பழையபடி நாட்டில் அநியாய அக்கிரமங்களைச் செய்வார்கள். அழிவு ஏற்படக் கூடிய செயல்களிலேயே ஈடுபடுவார்கள்.
(6) இதனால் ஏற்படும் தீய விளைவுகள் அவர்களுக்கே என்ற உண்மையை அவர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள்.
(7) காரணம் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதனதன் விளைவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதே. அதன்படியே தீய செயல்களுக்கு ஏற்ப தீய விளைவுகள் ஏற்பட்டுத்ததான் ஆகுமே!
(8) அதன் பின் அவர்களுடைய வாழ்வில் புயல் வீச ஆரம்பிக்கும் போது, அவர்களால் என்ன செய்ய முடியும்? அப்போது அவர்கள் செய்து வந்த தீய செயல்களைப் பற்றி அத்துன்பங்கள் அறிவிப்பதாக இருக்கும். இதை அவர்கள் அறிய மாட்டார்களா?
இப்படியாக துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது - அதன்பின் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மறந்து தகாத செயல்களில் ஈடுபடுவது - அல்லாஹ் ஆபத்துகளிடமிருந்து காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது - இவையாவும் சொல் ஒன்று - எண்ணம் ஒன்று - செயல் வேறு என்ற நிலை அல்லவா? இவ்வாறு இருந்தால் வாழ்வில் நிலையான சந்தோஷங்கள் எப்படி கிடைக்கும்?


31.மூஃமின்களின் பிரார்த்தனைகள்:

ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ ۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّن رُّسُلِهِۦ ۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ.

2:285 (இறை)தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார், (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள், “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை, (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம், (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம், எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமே தான்" என்று கூறுகிறார்கள்.

விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர், இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டுள்ள ஞான உபதேசங்களை ஏற்றுக் கொள்கிறார்.
(2) இதே போன்று இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களும் (மூஃமின்கள்) இறைவன் அருளியுள்ள அறிவுரைகளை ஏற்றுக் கொள்கின்றனர்.
(3) وَمَلَٰٓئِكَتِهِ மேலும் அல்லாஹ் படைத்து வசப்படுத்தித் தந்துள்ள பிரபஞ்ச இயற்கைப் சக்திகளை (மலக்குகளை) ஏற்று அவற்றின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்வார்கள்.
(4) وَكُتُبِهِ மேலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளை (வேதங்களை) ஏற்று அதன்படி செயலாற்றுவார்கள்.
(5) وَرُسُلِهِ இறைத் தூதர்களில் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். அதாவது எல்லா நபிமார்களுக்கும் இறக்கி அருளப்பட்ட வேத ஞானங்கள் யாவும் ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதை ஏற்றுக் கொள்வார்கள். (2:4, 4:163)
(6) سَمِعْنَا வேத அறிவுரைகளையும் சட்ட விதிமுறைகளை கேட்டுக் கொள்வதோடு, وَأَطَعْنَا அதன்படியே அடிபணிந்து செயல்படுவதாக இறைவனிடம் பிரார்த்தனையும் செய்த வண்ணம் இருப்பார்கள்.
(7) غُفْرَانَكَ இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்கிறோம்.
(8) وَإِلَيْكَ ٱلْمَصِيرُ காரணம் மனிதனின் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த விளைவுகளே ஏற்படுத்தும் என்பதை திடமாக நம்புவார்கள்.
(9) கவனித்தீர்களா? அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மூன்மின்கள் அவனுடைய வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவதாக வாக்கு அளிக்கின்றனர். மேலும் அதற்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்குப் பயந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். அது மட்டுமின்றி

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًۭا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

2:286 அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை, அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும், எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"

விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலின்படி செயல்பட அறிவுருத்துவது, யாருக்கும் சிரமத்தைக் கொடுப்பதற்காக அல்ல. அதற்கு அவசியமும் இல்லை.
(2) மாறாக உங்களில் நற்பண்புகளும் செயலாற்றல்களும் வளர்வதற்காகவே ஆகும்.
(3) எனவே அதன்படி யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மை கிடைக்கும். அதை விட்டுவிட்டு யார் தீய செயல்களில் ஈடுபடுகிறார்களோ அதன் தீமைகள் அவர்களுக்கே வந்தடையும்.
(4) இந்த உண்மைகளை அறிந்துகொண்ட மூஃமின்கள், தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக ஏற்படும் பிழைகளுக்கு பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தாதிருக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
(5) முன் சென்ற சமுதாயத்தினர்களுக்கு சமுதாய சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட சிரமங்களைப் போல் தங்களுக்கும் ஏற்படாமல் தங்கள் காரியங்களை எளிதாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
(6) தங்களிடையே உள்ள தீய பழக்கங்களை நீக்கும்படி பிரார்த்தனை செய்வார்கள்.
(7) இதற்குமுன் நடந்த தீய செயல்களால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க பிரார்த்தனை செய்வார்கள்.
(8) இப்படியாக தங்கள் மீது கருணை பொழியும்படி பிரார்த்தனை செய்வார்கள்.
(9) இறை நிராகரிப்பவர்களால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படியும் பிரார்த்தனை செய்வார்கள்.

فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍۢ.

2:200. “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள், இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.

وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ.

2:201. இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக, மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக, இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.

أُو۟لَٰٓئِكَ لَهُمْ نَصِيبٌۭ مِّمَّا كَسَبُوا۟ ۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ.

2:202. இவ்வாறு, (இம்மை, மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத் தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.

விளக்கம் :
(1) மக்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தற்காலிக சந்தோஷங்களை (இம்மை) மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். அவர்களுக்கு வருங்கால நிலையான (மறுமை) சந்தோஷங்கள் கிடைக்காது. வருங்கால வாழ்வு வேதனை மிக்கதாக மாறிவிடும்.
(2) மற்றும் சிலர் தற்காலிக சந்தோஷங்களுடன் فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ வருங்கால நிலையான சந்தோஷங்களையும் وَفِى ٱلْءَاخِرَةِ حَسَنَةًۭ கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். அவ்வாறே அவர்கள் பிரார்த்தனையும் செய்வார்கள்.
(3) இப்படியாக இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு வாழ்பவர்கள் தங்கள் வாழ்வை வேதனைத் தரும் செயல்களிலிருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்வதாகப் பிரார்த்திப்பார்கள்.
(4) ஆக யார் எந்த அடிப்படையை வைத்து செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கையே அமையும். இதுவே அவர்களுடைய பிரார்த்தனைக்கு இறைவன் காட்டும் வழிமுறையாகும்.
(5) இப்படியாக யார் எப்படி செயல்படுகிறார்கள் என்ற கணக்கெடுப்பதில் அல்லாஹ் மிகவும் துரிதமானவன். அதாவது ஒவ்வொருவரும் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு விளைவுகள் துரிதமாக ஏற்பட்டு வரும். ஆனால் அவை உணரும் வகையில் தோற்றத்திற்கு வர சில காலம் ஆகும்.


32.தவறை உணர்ந்து திருந்துவதாக செய்யும் பிரார்த்தனை:

قَالَا رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ.

7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

விளக்கம் :
(1) இறைவா! எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்காததால் அநியாய அக்கிரமங்களை செய்து கொண்டு நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தோம்.
(2) எங்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளித்து وَتَرْحَمْنَا எங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழி செய்யாதிருந்தால் وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا மிகப் பெரிய நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்.
(3) அதாவது உன் வழிகாட்டுதல் கிடைத்துவிட்டதால் இனி தங்களுக்கிடையே அநியாய அக்கிரமச் செயல்களை செய்ய மாட்டோம் என்று அல்லாஹ்வுக்கு உறுதி அளிக்கிறோம்.


33.வழிகெடுத்தவர்களுக்கு எதிராகச் செய்யும் பிரார்த்தனை:

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيْتَنَآ أَطَعْنَا ٱللَّهَ وَأَطَعْنَا ٱلرَّسُولَا۠.

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ! மைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.

وَقَالُوا۟ رَبَّنَآ إِنَّآ أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠.

33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

رَبَّنَآ ءَاتِهِمْ ضِعْفَيْنِ مِنَ ٱلْعَذَابِ وَٱلْعَنْهُمْ لَعْنًۭا كَبِيرًۭا.

33:68. “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்).

விளக்கம் :
(1) தாங்கள் செய்துவந்த தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் போது அல்லது இறந்த பின் தங்கள் முகங்களை தீயில் புரட்டப்படும் போது, துக்கப்பட்டு வேதனைப்பட்டு அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்வார்கள்.
(2) “அடப்பாவமே! நாங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டிருக்க வேண்டுமே!
(3) இறைத் தூதர் உருவாக்கிய சட்ட உட்பிரிவுகளைப் பின்பற்றி இருக்க வேண்டுமே!”
(4) “இதை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் தலைவர்களையும் பெரியார்களையும் பின்பற்றி நடந்தோமே!” “அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்களே!” என்று கதறுவார்கள்.
(5) “எங்கள் இறைவா! இத்தகைய வழி கெடுத்த பெரியார்களுக்கும் தலைவர்களுக்கும் இரு மடங்கு வேதனையைத் தருவாயாக” என்றும் பிரார்த்திப்பார்கள்.
(6) அதுமட்டுமின்றி, “அவர்களுக்குக் கடுமையான வேதனை ஏற்படும் வகையில் உன் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” என்றும் பிரார்த்தனை செய்வார்கள்.
(7) இவ்வாறு ஒவ்வொரு நரகவாசிகளும் பிரார்த்தனை செய்தால் வழிகெடுத்தவர்களின் நிலைமை என்ன ஆவது என்பதை எண்ணி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மட்டும் எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் இந்நிலை அவர்களுக்கு ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது.


34.காஃபிர்களிடமிருந்து காப்பாற்ற நூஹ் நபி செய்த பிரார்த்தனை:

قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ.

23:26. “என் இறைவா! இவர்கள் என்னைப் பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!" என்று கூறினார்.

فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّۢ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ.

23:27. அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீ அறிவிப்பின் படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்பு கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்,

விளக்கம் :
(1) நூஹ் நபி இறைவழிகாட்டுதலை மக்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார். அவர் வெளிப்படையாகவும் மக்களை தனித்தனியே அழைத்தும் பேசிப் பார்த்தார். (71:8-9) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை. மேலும் அவர்கள் இவருக்கு எதிராக சதி செய்யவே நாடினார்கள். (70:22) எனவே தன்னைக் காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தித்தார்.
(2) அதற்குப் பதில் அளிக்கையில் தன் கண்காணிப்பில் ஒரு கப்பலைக் கட்டும்படி இறைவன் அறிவுருத்தினான்.
(3) அக்கப்பலைக் கட்டிய பின் பறவை மற்றும் கால்நடைகளில் ஜோடி ஜோடியாக அதில் ஏற்றிக் கொள்ளும்படி அறிவுருத்தினான்.
(4) ஈமான் கொள்ளாதவர்களை தவிர்த்து மற்றவர்களையும் அதில் ஏற்றிக் கொள்ளும்படி அறிவுருத்தினான்.
(5) கவனித்தீர்களா? காஃபிர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி, தம்மைக் காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்த போது நேரடியாக அவரைக் காப்பாற்றாமல், கப்பலைக் கட்டும்படி அறிவுருத்துகிறான். அதாவது பாதுகாப்பு நடவடிக்கையை மனிதன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் பிரார்த்தனையும் அல்லாஹ்வின் பதிலும் ஆகும்.

மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்காமல் காஃபிர்களிடமிருந்து காப்பாற்றும்படி தினமும் துவா செய்வதன் பொருள் என்ன?


35.காஃபிர்களிடமிருந்து காப்பாற்ற மூஸா நபி செய்த பிரார்த்தனை:

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ.

10:86. “(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.)

وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًۭا وَٱجْعَلُوا۟ بُيُوتَكُمْ قِبْلَةًۭ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

10:87. ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள், உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலை நிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீர்களாக!" என்று வஹீ அறிவித்தோம்.

விளக்கம் :
(1) இறை நிராகரிப்பவர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி இறைவனிடம் மூஸா நபியும் ஹாரூன் நபியும் பிரார்த்தித்தனர்.
(2) அவ்விருவரையும் நோக்கி இறைவன், அவர்களுடைய சமூகத்தாருக்காக பட்டினத்தில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும்படி அறிவுருத்துகிறான்.
(3) அது மட்டுமின்றி அத்தகைய வீடுகளையே பள்ளி வாசல்களாக ஆக்கிக் கொள்ளும்படியும் அறிவுரை வருகிறது.
(4) அப்பள்ளிகளில் நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து சமுதாயப் பணியைப் பற்றிக் கற்றுத் தரும் ஸலாத் முறையை நிலை நிறுத்தும்படியும் அறிவுரை வருகிறது.
(5) இத்தகைய நற்செயல்களைச் செய்து வந்தால் இறைநிராகரிப்பவர்களின் தொல்லைகளிலிருந்து மீண்டு சிறந்த வசதிகள் கிடைக்க வழிகள் பிறக்கும் என்றும் சொல்லப்படுகிறது
(6) காஃபிர்களிலிருந்து காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் நபி துவா செய்த போது, அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையே அறிவித்து இருப்பதைக் கவனித்துப் பாருங்கள்.


36.உணவு மரவைக்காக ஈஸா நபி செய்த பிரார்த்தனை:

قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًۭا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةًۭ مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக, அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும், இன்னும் எங்களுக்கு உணவுக் பொருட்களை அளிப்பாயாக, நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًۭا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًۭا مِّنَ ٱلْعَٰلَمِينَ.

5:115. அதற்கு அல்லாஹ், நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கி வைக்கிறேன், ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.

விளக்கம் :
(1) தங்களுக்கு வானத்திலிருந்து உணவு மரவை இறக்கி அருளும்படி இறைவனிடம் ஈஸா நபி பிரார்த்திக்கிறார். உணவு மரவை என்பது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வசதிகளைக் குறிக்கும். அதாவது தங்களுக்குத் தாராளமான வாழ்வாதார வசதிகள் வேண்டும் என்றே அவர் பிரார்த்தனை செய்தார்.
(2) அவை முன்னவர்களுக்கும், பின் வருபவர்களுக்கும் அத்தாட்சியாக இருக்கும் என்றும் பிரார்த்தனை செய்கிறார். அதாவது ஈமான் கொள்பவர்களில் முன்னொடியாக இருப்பவர்களுக்கும், ஈமான் கொள்வதன் பலன்களை அறிந்து பிற்காலத்தில் மார்க்கத்தில் வந்து இணைபவர்களுக்கும் இவை அத்தாட்சிகாளகத் திகழும் என்று பிரார்த்தித்தார்.
(3) தங்களுக்கு உணவுப் பொருட்களை அளிக்க பிரார்த்தனை செய்திருப்பதும் ‘மரவை’ مَآىِدَةً என்பதன் சொல்லுக்கு தாராள பொருளாதார வசதிகளைக் குறிக்கும் சொல் என்பதற்கு ஆதாரமாகும்.
(4) அவ்வாறே அவருடைய வேண்டுதலின்படி உணவு மரவையை இறக்கி அருள்வதாக இறைவன் அறிவிக்கிறான்.
(5) தாராள வசதி வாய்ப்புகள் கிடைத்தபின் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அவர்கள் மாற்றமாகச் செயல்பட்டால் மிக மிக மோசமான வேதனைகளை (worst consequences) சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
(6) கவனித்தீர்களா? இறைவன் புறத்திலிருந்து தாராள வசதி வாய்ப்புகள் கிடைத்தபின், அவை எல்லாம் நமக்கு மட்டுமே சொந்தம் என எண்ணி, சொத்துச் செல்வங்களைக் குவித்துக் கொள்பவர்களின் முடிவு மிக மிக மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுவதைக் கவனியுங்கள். எனவே வெறும் வார்த்தை ஜாலங்களால் தொழுதுவிட்டு இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டால், நம்முடைய நிலைமையும் மோசமானதாக மாறிவரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


37.நபிமார்களின் நிராகரிக்கப்பட்ட துவாக்கள்:

وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُۥ زِينَةًۭ وَأَمْوَٰلًۭا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا۟ عَن سَبِيلِكَ ۖ رَبَّنَا ٱطْمِسْ عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ وَٱشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا۟ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ.

10:88. இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய், எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள், எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காத வரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.

قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ.

10:89. இறைவன் கூறினான்: "உங்கள் இருவரின் பிரார்த்தனை கேட்டுக் கொள்ளப்பட்டது, எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒரு போதும்) பின்பற்றாதீர்கள்" என்று.

விளக்கம் :
(1) மூஸா நபி இறைவனிடம் பிரார்த்திக்கையில், ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அளவு கடந்த வாழ்க்கை வசதிகளை கொடுத்திருப்பதால், அவர்கள் மக்களை உன் வழிகாட்டுதலின் பக்கம் வரவிடாமல் வழிகெடுப்பதாக கூறுகிறார்.
(2) எனவே அவர்களுடைய செல்வங்களை அழித்து அவர்களை நெருக்கடியில் சிக்கவைத்து விடும்படி பிரார்த்தனை செய்கிறார். காரணம்
(3) அவர்கள் நோவினைத் தரும் வேதனையைப் பார்க்காத வரையில் அவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பிரார்த்திக்கிறார்.
(4) அதற்கு இறைவன் அவருடைய பிரார்த்தனையைக் أُجِيبَت கேட்டுக் கொண்டதாக பதிலளிக்கின்றான்.
(5) மேலும் இறைவன் இறைவழிகாட்டுதலின்படி உறுதியுடன் செயல்படுவதை விட்டுவிட்டு, அவர்களுடைய செல்வங்களை அழித்து அவர்களை நெருக்கடிக்குள் ஆக்கச் சொல்வது முறையாகாது என்று இறைவனிடமிருந்து பதில் வருகிறது.
(6) எனவே இந்த உண்மையை அறிந்த நீர், அறியாமையில் பேசுபவர்களைப் போன்று பேசாதீர். காரணம் ரப்புல் ஆலமீனாக இருக்கும் அல்லாஹ், அவ்வாறு ஒருதலை பட்சமாக செயல்பட மாட்டான்.

وَإِذْ قَالَ إِبْرَٰهِۦمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا بَلَدًا ءَامِنًۭا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًۭا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

2:126 (இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார், அதற்கு இறைவன் கூறினான்: “யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சுகானுபவத்தை அளிப்பேன், பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்ப்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே."

விளக்கம் :
(1) கவனித்தீர்களா? அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்பவர்களுக்கு தாராள வசதி வாய்ப்புகளைச் செய்து தரும்படி இப்றாஹீம் நபி பிரார்த்திக்கிறார். ஆனால் அல்லாஹ் ஆஃகிரத் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கும் வாழ்வாதார வசதிகளை அளிக்கப் போவதாக அறிவித்து விடுகிறான். ஏனெனில் அல்லாஹ்வின் பரிபாலனச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படாது. அல்லாஹ் யாருக்காகவும் தன்னுடைய செயல் திட்டத்தை மாற்றிக் கொள்ளவும் மாட்டான் என்பதை இதிலிருந்து தெளிவாகிறது.
(2) அதாவது ஆஃகிரத்து மீது ஈமான்கொண்டு செயல்படுபவர்களுக்கு தற்காலிக சந்தோஷங்களும் வருங்கால நிலையான சந்தோஷங்களும் கிடைக்கும். ஆஃகிரத்து மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கு தற்காலிக சந்தோஷங்கள் மட்டும் கிடைக்கும். வருங்கால நிலையான வாழ்வு வேதனை மிக்கதாக ஆகிவிடும்.

قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًۭا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّٰلِمِينَ.

2:124. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன் என்று கூறினான், அதற்கு இப்ராஹீம்: "என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார், என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.

விளக்கம் :
(1)இப்றாஹீம் அல்லாஹ்வின் மார்க்கத்தை, தம் தந்தைக்கும் மக்களுக்கும் அரசனுக்கும் எடுத்துரைத்தபோது, பல எதிர்ப்புகளையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் யாவும் அவருக்கு அனுபவப் பாடங்களாக இருந்தன. இப்படியாக அவர் உலக மக்களைத் தலைமை தாங்கும் தகுதியைப் பெற்றார். அவர் மாபெரும் தலைவராக (இமாமாக) விளங்கினார்.
(2) இதைக் கவனித்த இப்றாஹீம் நபி இறைவனிடம், தன் சந்ததியினரிலும் இத்தகைய தலைவர்களாக ஆக்கும்படி பிரார்த்தனை செய்தார்.
(3) ஆனால் அல்லாஹ், நீர் செயல்பட்டது போல் உயர் இலட்சியங்களுடன் செயல்படுவோருக்கே அந்த தகுதியும் பட்டமும் கிடைக்கும். அநியாயக் காரர்களுக்குக் கிடைக்காது என்று பதிலளித்து விடுகிறான்.
(4) அதாவது ஒரு நபியின் வாரிசு என்பதால் அந்தச் சிறப்பு கிடைக்காது. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் மட்டுமே உயர்வும் கண்ணியமும் கிடைத்தே தீரும்.

وَنَادَىٰ نُوحٌۭ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَٰكِمِينَ.

11:45. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே, உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது, நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.

قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَٰلِحٍۢ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ.

11:46. அ(தற்கு இறை)வன் கூறினான்: "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன், நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையேச் செய்து கொண்டிருந்தான், ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."

விளக்கம் :
(1) பிரளயத்தில் அடித்துச் செல்லப்படும் தன் மகனைக் காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். காரணம் தன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றுவதாக இறைவன் வாக்களித்திருந்தான்.
(2) இந்தப் பிரார்த்தனை நிராகரிப்பட்டது. காரணம் நூஹ்வுடைய மகன் ஒழுக்கங் கெட்டவனாக இருந்ததால், அவன் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று அறிவிக்கப்படுகிறது.
(3) இந்த உண்மையை அறிந்தும் தந்தை மகன் என்ற பாசத்தை வைத்து பிரார்த்தனை செய்வதில் எந்தப் பலனும் கிடைக்காது என்று தெளிவாகிறது.
(4) வரப்போகும் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தும், அதைப் பொருட்படுத்தாதவனை அல்லாஹ் எப்படி காப்பாற்றுவான்?


38.பாவ மன்னிப்புக்காகச் செய்யும் பிரார்த்தனை:

وَهُوَ ٱلَّذِى يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَعْفُوا۟ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ.

42:25. அவன் தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவமன்னிப்புக் கோருதலை - ஏற்றுக் கொள்கிறான், (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

وَيَسْتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۚ وَٱلْكَٰفِرُونَ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ.

42:26. அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை) களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான், இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.

விளக்கம் :
(1) அல்லாஹ், அறியாமையில் செய்த பாவங்களை மன்னித்து விடுகின்றான். (பார்க்க 4:17)
(2) அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றுவான். நீங்கள் செய்து வந்தவை எல்லாம் அவனுக்குத் தெரியாமல் இல்லை.
(3) ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அவன் காட்டிய வழியின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
(4) நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா? ஆற்றல் மிக்க நற்செயல்களையும் செய்ய வேண்டும். அதாவது நலிந்த மக்களின் துயர் துடைப்புக்காக உழைப்பதோடு தன்னிடமுள்ள உபரிச் செல்வங்களை அதற்காக அர்ப்பணிக்கவும் வேண்டும்.
(5) இப்படி எதுவும் செய்யாமல் வெறும் உதட்டளவில் துவா செய்து விட்டு அல்லாஹ் அனைத்தையும் செய்து முடிப்பான் என்று எண்ணிக் கொண்டால் அது உங்களுடைய தவறான எதிர்பார்ப்பாகும். எனவேதான் திருக்குர்ஆனில் இவ்வாறு வருகிறது:

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ تُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ تَوْبَةًۭ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّٰتٍۢ

66:8. ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்பு பெறுங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்.

விளக்கம் :
(1) கவனித்தீர்களா? நீங்கள் செய்யும் தவ்பா உளமாற இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதாவது உங்களுடைய தவ்பாவும் அதற்கேற்ற எண்ணங்களும் உழைப்பும் இருத்தல் அவசியம். அப்போதுதான் உங்களிடம் இருந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி சாந்தமான வாழ்க்கைக்கு வழி பிறக்கும்.
(2) நல்ல எண்ணங்களும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதுமே. துவா எதற்கு என்று சிலர் நினைக்கலாம். மனிதனின் உழைப்புகள் யாவும் அல்லாஹ்வின் படைப்புகளை முன் வைத்தே செய்ய முடியும். துவா இன்றி உழைப்பு மட்டும் இருந்தால் அல்லாஹ்வுடன் இருக்க வேண்டிய தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். அதன் பிறகு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து உங்கள் மனம் போன போக்கில் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். இப்படியாக நீங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு சென்று விடுவீர்கள்.
(3) ஆக வெறும் துவா மட்டும் போதாது. அதற்கேற்ற எண்ணமும், ஞானமும், உழைப்பும் அவசியம். அப்போது தான் உங்களுடைய இம்மையும் மறுமையும் சிறக்கும். துவா இன்றி வெறும் எண்ணம், ஞானம், உழைப்பு மட்டும் இருந்தால் இம்மை சிறக்கும் மறுமை சீரழியும்.

ந. ரூஹுல்லா. பி.காம்.
தொ.தொடர்பு : 9381004531, 9884852672