بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


1.முன்னுரை:

அல்லாஹ் நாடியது என்ன? மனிதன் நாடுவது என்ன?
அல்லாஹ் தன்னைப் பற்றி அறிமுகப் படுத்தியது என்ன?

திருக்குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்ட உண்மை எல்லோரும் அறிந்த ஒன்றே. முஸ்லிம்களில் சிலர் அரபி மொழியைக் கற்று, திருக்குர்ஆனை ஓதியும் வருகிறார்கள். அப்படி ஓதி வருவதால் ஒவ்வொரு வார்த்தைக்கும் நன்மைகள் கிடைப்பதாகவும் மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அரபி மொழியை முறைப்படி பயின்று, திருக்குர்ஆனை ஓதுவது நன்மையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் மன நிறைவும் கிடைக்கிறது. அதன் மூலம் அல்லாஹ்விடம் உள்ள நம் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது.
ஆனால் அத்துடன் நம் கடமை முடிந்துவிடுகிறதா என்பது தான் நம்மிடையே உள்ள கேள்வியாகும். அதையும் மீறி அல்லாஹ் நம்மிடமிருந்து வேறு ஏதையாவது எதிர் பார்க்கின்றானா என்ற கேள்வியும் எழுகிறது. இத்தகைய கேள்விகளுக்கு பதில் அறிந்து கொள்ள நாடுவோர், திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நன்றாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை நன்றாக தெரிந்து கொண்டால்தான் அல்லாஹ்வின் நாட்டம் என்னவென்பதை அறிந்து, அதன்படி செயலாற்ற முடியும். திருக்குர்ஆனில் உள்ள அனைத்து விஷயங்களையும் நன்றாகப் பயின்று அதன்படி செயலாற்றினால்தான் நன்மைகள் கிடைக்கும் என்று திருக்குர்ஆனும் ஆரம்பம் முதல் இறுதிவரையில் சொல்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு,திருக்குர்ஆனின் விஷயங்களை தலைப்பு வாரியாகப் பிரித்து,ஒவ்வொரு தலைப்பிலும் திருக்குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபட கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அந்த வரிசையில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் எடுத்துக் கொண்ட தலைப்பு “அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு” பற்றியதாகும்.


சிந்தனையாளனே! இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்குக் காரணமும் உண்டு. அல்லாஹ்வை காண வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருக்கும். எனவே அதைப் பற்றி அனைவருக்கும் தெளிவு கிடைத்திட வேண்டும் என்று நாம் எண்ணினோம். நல்ல வேளை. அல்லாஹ்வை காண வேண்டும் என்று மூஸா நபிக்கு ஆசை இருந்தது போலவே (பார்க்க 4:152) உங்களுக்கும் ஆசை இருக்கிறது. அதனால் இந்த புத்தகத்தை எழுத முடிந்தது.

ஒருவேளை இஸ்ரவேலர்கள், “அல்லாஹ்வை கண்கூடாக காணாத வரையில் மூஸா நபியின் பேச்சை கேட்க மாட்டோம்” என்று பிடிவாதமாக இருந்தார்களே,(2:55) அவ்வாறு நீங்கள் இல்லை. அவ்வாறு கூறி இருந்தால், இந்த தலைப்பில் நம்மால் எழுதியே இருக்க முடியாது. சரி,கவனமாகப் படியுங்கள். அல்லாஹ்வைக் காண முடியுமா? அவனுடைய வல்லமை என்ன? மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்ப்பு என்ன? இது போன்ற கேள்விகளுக்கு மன நிறைவான பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.


2.உலக மக்களிடையே உள்ள இறை நம்பிக்கை:

சிந்தனையாளனே! உலக மக்களுள் பெரும்பாலோர் இறை நம்பிக்கை கொண்டுதான் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஈஸா நபியை கடவுள் அல்லது தேவகுமாரன் என்று கூறி அவரை வணங்கி வருகின்றனர். யூதர்கள்,“அல்உஜைரு” என்பவரை “அல்லாஹ்வின் மகன்” என்பார்கள் (அல்குர்ஆன் 9:30) புத்த மதத்தவர்கள்,கௌதம புத்தரை கடவுளாகப் பாவித்து அவரை வணங்கி வருகின்றனர். அதே போல் ஜைன மதம், இந்து மதம் போன்ற அநேக மதங்கள் உலகில் உள்ளன. அவர்கள் யாவரும் கடவுளை ஏதாவது உருவம் கொடுத்து வணங்கி வருகின்றனர். அவரவர் கொண்டுள்ள கருத்துப்படி, இறைவனுக்கு மனைவி மக்கள் இருப்பதாகவும் சொல்வார்கள். இந்துக்கள் இறைவனுக்கு மனைவி அல்லது மனைவிகளும், பிள்ளைக் குட்டிகளும் இருப்பதாகச் சொல்வார்கள். பெரும்பாலான உலக மக்கள், இறைவன் மனிதனைப் போல் உருவம் உள்ளவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

முஸ்லிம்களும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்று வணங்கி வருகின்றனர். முஹம்மது நபி(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கும் பட்சத்தில்,அவரையே அல்லாஹ்வுக்கு இணையாகப் பாவித்து,அவர் சொன்னதாக நம்பி அதன்படி வாழ்பவர்களும் பலர் இருக்கிறார்கள். அதையும் மீறி முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்கள் தாம் தம்முடைய பாதுகாவலர்கள் என எண்ணி, அவர்களை வணங்கியும் வருகிறார்கள். இப்படித்தான் பல்வேறு மதங்கள் உலகில் நிலைபெற்றுள்ளன.


3.உலக மக்களின் பிரார்த்தனையும் அல்லாஹ்வும் :

சிந்தனையாளனே! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் முதன்முதலில் துவக்கி வைத்த ஹிட்லரும், அவன் கடைப்பிடித்து வந்த கடவுளின் பெயரைப் பயன்படுத்தியே போரை துவக்கி வைத்தான். இங்கிலாந்தைச் சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரும், தான் வழிபட்டுவந்த கடவுளின் பெயரைப் பயன்படுத்தியே அதற்குப் பதிலடி கொடுத்தார். இங்கிலாந்தின் ஆதிக்கத்தை விரும்பாத கோடான கோடி மக்கள், இங்கிலாந்து தோற்றுப் போக வெண்டும் என்று, தாம் வணங்கி வந்த இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தனர். மறுபுறம் சர்வாதிகாரி ஹிட்லரும்,அவனுக்குத் துணை நின்ற முஸோலினியின் படைகளும் தோற்க வேண்டும் என்று கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். அந்தப் போரும் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வரையில் நீடித்தது. இப்படியாக இறைவனை கோடான கோடி மக்கள் பிரார்த்தனைகள் மூலம் தத்தம் பக்கம் இழுக்கவே முயன்றனர். இறைவன் யாருடைய பிரார்த்தனையை ஏற்று யாருக்கு உதவி புரிந்தான்? இதைப் பற்றி நீ எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?


4.முஸ்லிம்களின் துவாவும் அல்லாஹ்வும்:

அண்மையில் ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையே எட்டு ஆண்டுகள் வரையில் போர் நடந்தது. அவ்விரு நாட்டைச் சேர்ந்தவர்களும், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள் தான். அதில் சதாம் ஹுஸைன் தோற்க வேண்டும் என்று ஈரானியர்களும், சதாம் ஹுஸைன் வெற்றி பெற வேண்டும் என்று ஈராக்கியர்களும் அல்லாஹ்விடம் ஓயாமல் பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து ஈராக் நாட்டின் மீது 40 நாடுகள் இணைந்து போர் தொடுத்தன. அப்போது கோடான கோடி முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும், சதாம் ஹுஸைன் வெற்றிப் பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் “துவா” செய்தனர். அதன்பின் அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளும், ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது படையெடுத்த போதும், ஆப்கரினிஸ்தானின் பகைவனாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக முஸ்லிம்கள் துவா செய்தனர். அல்லாஹ் அவர்களுடைய துவாவை ஏற்று ஈராக்கிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உதவி செய்தானா? இதைப் பற்றி நீ எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?

அல்லாஹ் முஸ்லிம்களின் பிரார்த்தனையை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டால்,அல்லாஹ் நியாயத்தின் பக்கம்தான் இருப்பான் என்று சிலர் பதில் சொன்னார்கள். அப்போது உலகில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் அநியாயக்காரர்களா என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அநியாய அக்கிரமங்கள் எதுவும் நடைபெறுவதில்லையா? அவ்வாறு இருந்தும்,அவர்கள்தானே போரில் வெற்றி பெற்றார்கள்? இதற்கு முஸ்லிம்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? யார் அநியாயக்காரர்கள் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்பதே ஆகும். அப்போது நீங்கள் அல்லாஹ்விடம் துவா செய்தீர்களே! உங்கள் துவாவை ஏற்றுக் கொள்ள வில்லையே! நீங்களும் அநியாயக்காரர்களா? என்று கேட்டால்,அதற்கும் அவர்களிடம் பதில் எதுவும் இல்லை. காரணம் என்ன தெரியுமா? அல்லாஹ்வைப் பற்றி இவர்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களே ஆகும்.


5.அல்லாஹ் யார் பக்கம்?

இவை யாவும் உலக அரங்கில் நடக்கும் விஷயங்களாகும். முஸ்லிம்களில் தனிப்பட்ட முறையில் நடக்கின்ற விஷயத்தைப் பற்றியும் பார்ப்போம். ரஹீம் என்பவர் ரஹ்மான் என்பவருக்கு எதிராக ஒரு சொத்து வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று இருவரும் ஓயாமல் அல்லாஹ்விடம் துவா செய்கின்றனர். ஆனால் அல்லாஹ் யார் பக்கம் சாய்வான் என்று தெரியவில்லை. எனவே ரஹீம் பெரிய ஆலிமிடம் சென்று, இதைப் பற்றி யோசனை கேட்டார். அவரும், ‘இந்த’ துவாவை ஓதி வாருங்கள் என்று சில துவாக்களை குறித்துக் கொடுத்தார். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விடும் என்று தைரியமூட்டி அனுப்பி வைத்தார். அதே போல் ரஹ்மானும் தன் பங்கிற்கு, ஒரு மார்க்க அறிஞரிடம் சென்று யோசனை கேட்டார். அவரும் அதே போல் துவா ஓதி வருவதுடன், வழக்கில் ஜெய்த்தால் அல்லாஹ்வுக்காக இத்தனை பேருக்கு சாப்பாடு, துணிமணி தருவதாக நேர்ச்சை செய்துகொள். இன்ஷா அல்லாஹ் உனக்குச் சாதகமாகவே தீர்ப்பு கிடைத்து விடும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். அவ்வாறே ரஹ்மானும் துவாவுடன் நேர்ச்சையும் செய்து கொண்டார்.

நீங்களே சொல்லுங்கள். இப்போது அல்லாஹ் யார் பக்கம் சாய்வான்? யார் அதிகமான தியானங்களையும் நேர்ச்சைகளையும் செய்கிறாரோ, அவர் பக்கம் அல்லாஹ் இருப்பானா? அவ்வாறு அவன் சாய்ந்தால், நீதி நியாயம் என்ன ஆவது? இல்லை. இல்லை. நீதி நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ,அவர் பக்கம்தான் அல்லாஹ் சாய்வான் என்றால் அவ்விருவரும் செய்து வரும் துவாக்களுக்கும் நேர்ச்சைகளுக்கும் அர்த்தம்தான் என்ன? அவை எல்லாம் பலனற்றவை என்றால் அல்லாஹ்விடம் சென்று ஏன் மன்றாடிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லாஹ்விடம் மன்றாடிக் கொண்டிருப்பதெல்லாம் வீண் என்றாகிவிடுகிறது அல்லவா?


6.அல்லாஹ்வே இவ்வுலகில் இல்லையா?

எனவே அல்லாஹ்வே இல்லையா என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது. கவனமாகக் கேளுங்கள். ஹிடலர் இங்கிலாந்திற்கு எதிராகப் போர் தொடுத்த போதும், அல்லாஹ் தன்னிடத்தில்தான் இருந்தான். சர்ச்சில் பதிலடி கொடுத்த போதும் அல்லாஹ் இருக்கவே செய்தான். ஈரான் ஈராக் போரிலும், பன்னாட்டுப் படை ஈராக்கிற்கு எதிராக படையெடுத்த போதும் சரி,அல்லாஹ் தன்னுடைய இடத்தில் இருக்கத்தான் செய்தான். ரஹீம் ரஹ்மானுக்கு எதிராக வழக்கு தொடுத்த போதும் சரி,தீர்ப்பு கிடைத்த போதும் சரி, அல்லாஹ் தன்னுடைய இடத்தில் இருக்கத்தான் செய்தான். இப்போதும் இருக்கிறான். உலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில் இருக்கத்தான் செய்வான். ஆனால் மதகுருமார்கள் சொல்வது போல் அல்லாஹ் மனித உருவில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருக்காமல், தன் வல்லமையின் பிரதிபலிப்புகளாகவே உலகமெங்கும் நிலைத்து இருக்கிறான். இவ்வுலகில் தன் சிறப்பு குணநலங்களின் பிரதிபலிப்பாகவே அவன் நிலைத்து இருக்கிறான். இதற்குக் காரணம் என்னவென்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றி அறிந்து கொள்ள, மதங்களுக்கும் மார்க்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். (போரில் வெற்றி தோல்வியைப் பற்றி பின்னாடி வரும்.)


7.மதமும் மார்க்கமும்:

சிந்தனையாளனே! ‘மதம்’ மற்றும் ‘மார்க்கம்’ ஆகிய இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மிடையே அலலாஹ்வைப் பற்றி உள்ள இருள் நீங்கி, வெளிச்சம் கிடைக்கும். கடவுளைப் பற்றி அல்லது அல்லாஹ்வைப் பற்றி ‘மதம்’ சொல்லும் கருத்திற்கும்,‘மார்க்கம்’ சொல்லும் கருத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள். மதச் சிந்தனை என்று வரும்போது, “இறைவனைப் பற்றி மனிதன் கொண்டுள்ள கருத்து” அல்லது “சிந்தனை” என்று பொருள்படும். ஆனால் மார்க்கம் என்று வரும்போது,“இறைவன் தன்னைப் பற்றி மனிதனுக்கு அறிமுகம் செய்து வைத்தது” என்று பொருள்படும். மனிதன் இறைவனைப் பற்றி ஏதாவது கற்பனை செய்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அல்லாஹ் தன்னைப் பற்றி, தன் வேதத்தின் மூலமாக என்ன தெரியப்படுத்தி இருக்கின்றானோ, அதுவே உண்மையானதும் இறுதியானதும் ஆகும்.
உலகில் உள்ள மத விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவை எப்பவுமே இறைவனை சந்தோஷப்படுத்துவதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும். இறைவனுக்கு நாம் ஏதாவது காணிக்கை செலுத்த வேண்டும் என்று மதகுருமார்கள் சொல்வார்கள். முஸ்லிம்களும் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்த, அவனை துதி செய்ய வேண்டும் என்பார்கள். அவனை சதா புகழ்பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். துயரத்தில் மாட்டிக் கொணடால்,“இந்த துவாவை” ஓத வேண்டும் என்பார்கள். மேலும் இந்த ‘துவா’ ஓதி வந்தால் நமக்கு நோய் நொடி நெருங்காது என்பார்கள். இப்படித்தான் அல்லாஹ்வைப் பற்றி முஸ்லிம் உலமாக்களும், மற்ற மதகுருமார்களும் மக்களிடம் சொல்லி வருவதைப் நாம் பார்க்கிறோம்.
சில சமயங்களில் மழை பெய்யாது போனால் அதற்காக தனிச் சிறப்புப் பெற்ற “யாக்னா” போன்ற பூஜை செய்தால், இறைவன் இறங்கி வந்து மழையை பொழிய வைத்து விடுவான் என்று இந்து மத குருமார்கள் சொல்வார்கள். முஸ்லிம் உலமாக்களும், மழைக்காக தனி துவா செய்வார்கள். ஆக ஒட்டு மொத்தமாக மத விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும் போது, அல்லாஹ்வை அல்லது இறைவனைத் துதி செய்து, தம் விருப்பத்திற்கு அவனை இணங்க வைக்க வேண்டும் என்றே ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. அப்படி உலகைப் படைத்த அல்லாஹ்வை அல்லது இறைவனை தம் விருப்பப்படி பணிய வைக்க மனிதனால் முடியுமா?

மேலும் மத விஷயங்களில் அறிவுக்கு வேலை இருக்காது. ஆனால் மார்க்கத்தில் எதையும் சிந்திக்காமல், அறிவைப் பயன்படுத்தாமல் ஏற்றுக் கொள்வதற்கு இடமில்லை என்கிறது திருக்குர்ஆன் (பார்க்க 25:73) மதச் சடங்கு, சம்பிரதாயங்களில் பெரும்பாலானவை உலக வாழ்க்கைக்கு ஒத்து வராத விஷயங்களாக இருக்கும். அல்லது பலனற்றவையாகவே இருக்கும். ஆனால் மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை வழிமுறைகளும், உலக வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் பலனளிக்கக் கூடிய வகையில் இருக்கும். எனவேதான் அரசியல் வேறு இறைவழிப்பாடு வேறு என்ற நிலையில்லாமல் மார்க்கமும் அரசியலும் ஒரு நாணயத்தின் இரு பகக்கங்களைப் போன்றது என்கிறது திருக்குர்ஆன்.


8.அல்லாஹ் மனித உருவில் உள்ளவனா?

சிந்தனையாளனே! யாரையும் குறைகூறி எழுதுவதாக தயவுசெய்து எண்ணிவிடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். மனித சிந்தனையில் உருவான இறைவனுக்கும், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை நாம் எழுதுகிறோம். இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், தன் சிறப்பு குணநலங்களின் (ஸிஃபத்துகள்) அடிப்படையில்தான் இவ்வுலகில் செயல்பட்டு வருவதை நம்மால் கவனிக்க முடிகிறதே அன்றி, நேரடியாக செயல்படுவதாகத் தெரிவதில்லை. இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறோம். நாம் அல்லாஹ்வை அல்லது இறைவனைப் பற்றி குறிப்பிடும் போது,“அவன்” என்றும் “செயல்படுகிறான்” என்றும் சொல்கிறோம். எனவே அவனும் ஒரு மனிதனைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இது ஒரு மொழிப் பிரச்சினையாகும். அரபி அல்லது உருது மொழியில் இந்தச் சிக்கலும் இருப்பதில்லை. எனவே அல்லாஹ் என்று சொல்லும் போது அல்லாஹ்வின் தனித்தன்மையும், ஒட்டுமொத்த குணநலங்கள் மற்றும் அவனது வல்லமைகளின் பிரதிபலிப்பையே குறிக்கும். இதை சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.


9.அல்லாஹ்வும் வாழ்வாதாரங்களும்: (மீக்காயில்)

அல்லாஹ் “அர்ராஜிகு”வாக – உணவளிப்பவனாக இருக்கிறான் என்கிறோம். அவன் மனிதனுக்குத் தேவையான உணவு வகைகளை நேரடியாக வானத்திலிருந்து இறக்கி அருளுவதில்லை. மாறாக உணவு உற்பத்தி செய்யக் கூடிய வகையில் பூமியின் சக்தி, அதற்குத் துணை நிற்கும் நீரின் சக்தி, வெயிலின் வெப்பம், காற்று, பயிரிடுவதற்குப் பயன்படுத்தும் விதையில் ஐக்கியமாகியுள்ள தன்மை, இவை அனைத்தும் பாதுகாப்பாக செயல்பட துணை நிற்கும் வானம் - என அவன் செய்து தந்துள்ள அனைத்து ஏற்பாடுகளையும் குறிக்கும். இந்த மாபெரும் சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் தான் மனிதனுக்கு வேண்டிய வாழ்வாதாரங்கள் கிடைத்து வருகின்றன. இவற்றில் ஏதாவது குறை ஏற்பட்டால், மனித வாழ்வே கேள்விக் குறியாக ஆகிவிடுகிறது. எனவே உணவளிக்கும் அல்லாஹ், உலகம் முழுவதிலும் உள்ள மேற்சொன்ன சக்திகளின் ஏற்பாடுகள் எனப் பொருள்படும்.
இதை திருக்குர்ஆன் வாசகத்தில்:

اِنَّ اللّٰهَ فَالِقُ الۡحَبِّ وَالنَّوٰى‌ؕ يُخۡرِجُ الۡحَىَّ مِنَ الۡمَيِّتِ وَمُخۡرِجُ الۡمَيِّتِ مِنَ الۡحَىِّ ‌ؕ ذٰ لِكُمُ اللّٰهُ‌ فَاَنّٰى تُؤۡفَكُوۡنَ‏ ﴿۹۵﴾ 

6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்,உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப் படுத்துகிறான், அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
விளக்கம் :
(1) தானியங்களையும் விதைகளையும் நீங்கள் விதைக்கும் போது, அவை அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படி தான் பூமியினுள் வெடித்து முளைகின்றன.
(2) மேலும் உயிரோட்டம் இல்லாத பூமி, மழை நீரைக் கொண்டு உயிர் பெற்று, பசுமை நிறைந்ததாக ஆகிவிடுகிறது.
(3) இப்படியொரு மாபெரும் ஏற்பாட்டைச் செய்த இறைவன்தான் அல்லாஹ்.
(4) இதை கவனத்தில் கொள்ளாமல் அல்லாஹ்வைப் பற்றி கற்பனைகளை செய்து கொண்டு நீங்கள் எங்கு திசை மாறிச் செல்கிறீர்கள்?

இப்படியாக அல்லாஹ்வின் எல்லையில்லா வல்லமை, அவன் “படைத்துள்ள பல்வேறு சக்திகள்” என்ற அடிப்படையில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உலகம் முழுவதிலும் ஐக்கியமாகி உள்ளன. இந்த சக்திகளே “மலாயிகா” அல்லது “மலக்குகள்”,“வானவர்கள்” என்பதாகும். (இதன் விளக்கம் பின்பு வரும்) உதாரணத்திற்கு மேற்சொன்ன உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் நீர் - நீரில் அடங்கியுள்ள சக்தி - இந்த நீர் மழை பொழிவதன் மூலம் கிடைக்கிறது. மழை பொழிவதற்கு காற்றின் சக்தியும், சூரியனின் வெப்பமும் அவசியமாகிறது. மேலும் பூமி, சூரியனை 23.5` சாய்வாக சுற்றி வருவதால்,பூமயின் சுற்றில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் காற்றின் திசை வடக்கிலிருந்து தென்திசைக்கும், தென் திசையிலிருந்து வட திசைக்கும் மாறி மாறி வீச ஆரம்பிக்கிறது. இதனால் காற்றில் அழுத்தம் ஏற்பட்டு, மழை நீராகப் பொழிவதை நாம் பார்க்கிறோம். இந்த ஏற்பாட்டை செய்தவனும் அல்லாஹ்தான் என்று திருக்குர்ஆன் வாசகம் கூறுகிறது.

اَللّٰهُ الَّذِىۡ يُرۡسِلُ الرِّيٰحَ فَتُثِيۡرُ سَحَابًا فَيَبۡسُطُهٗ فِى السَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهٗ كِسَفًا فَتَرَى الۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلٰلِهٖ‌ۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنۡ يَّشَآءُ مِنۡ عِبَادِهٖۤ اِذَا هُمۡ يَسۡتَبۡشِرُوۡنَۚ‏ ﴿۴۸﴾

30:48. அல்லாஹ்தான்,காற்றுகளை அனுப்பி,(அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதை தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான், அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர். பிறகு,அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.
விளக்கம் :
(1) அல்லாஹ் படைத்துள்ள காற்றின் பலன்களைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
(2) அல்லாஹ்வின் செயல் திட்டப்படி, அந்தக் காற்று கடலிலுள்ள ஈரப்பதத்தை மேலுக்கு இழுத்துச் சென்று மேகங்களை உருவாக்குகிறது.
(3) மேலும் இறைவனின் நியதிப்படி, அந்தக் காற்று அடர்த்தியான மேகங்களாக உருவெடுத்து, பல பிரிவுகளாகப் பிரித்து பல இடங்களில் மழை நீராகப் பொழிய வைக்கிறது.
(4) இப்படியாக பொழியும் மழை அனைவரையும் மகிழ்விக்கிறது.


10.“ரப்பு” - இறைவன் என்பவன் யார்?

சிந்தனையாளனே! அல்லாஹ்வின் “படைக்கும் வல்லமை” உலகம் முழுவதும், தான் உருவாக்கிய சக்திகளின் அடிப்படையில் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருகின்றதே அன்றி, மனிதன் எண்ணி இருப்பது போல் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உருவத்தில் அமர்ந்து கொண்டு செயல்படுவதில்லை. இவ்வாறு ஒன்றியுள்ள மாபெரும் சக்திகளின் பிரதிபலிப்பையே, “ரப்பு”- இறைவன் - பரிபாலிப்பவன் என்கிறோம். அதாவது ஒவ்வொரு படைப்பும், தன் ஆரம்ப நிலையிலிருந்து, இறுதி இலக்கு வரை சென்றடையத் தேவையான அனைத்து உபக்கரணங்ளையும் செய்து தருபவன். உதாரணத்திற்கு வேட்டையாடும் விலங்குகளுக்கு கால்நடைகள் இரையாகவும், கால்நடைகளுக்கு இலைகளும் புல்லும் இரையாகவும், அந்தப் புல்லும் இலைகளும் வளர நீரும், நிலவளமும் இரையாக அமைகின்றன. இப்படியாக இவ்வுலகில் உயிர் வாழும் அனைத்து உயிரினங்களின் தேவைகளும் எவ்வாறு நிறைவு பெறுகின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள். எதுவும் பசி பட்டிணியால் வாடுவதில்லை. இவை அனைத்தையும் ஏற்பாடு செய்தவனை இறைவன் அல்லது “ரப்பு” என்கிறோம்.

எனவேதான் ஈமான் கொள்ளும் விஷயத்தில் அல்லாஹ், மலக்குகள், இறை வேதங்கள், இறைத்தூதர்கள், இறுதிநாள் ஆகியவற்றின் மீது ஈமான் கொள்ள திருக்குர்ஆன் வலியுறுத்திச் சொல்கிறது. (பார்க்க 2:177). இவற்றில் நாம் ஒன்றை ஏற்காவிட்டாலும், நம் வாழ்வின் வெற்றி இலக்கை அடையவே முடியாது. அந்த அளவிற்கு அவை அனைத்தும் மனித வாழ்வோடு ஒன்றியுள்ளன. இந்த உண்மையை அறியா மக்களுக்கு விளக்கிடத்தான் இறைத் தூதர்கள் உலகிற்கு வருகை தந்தார்கள். இவற்றைப் பற்றிய உண்மைகளை விளக்கமாக எடுத்துரைத்து மக்களை மூடநம்பிக்கையை விட்டு விலக்கி, அவர்களை தூய்மை ஆக்கி சீர்பட்ட சமுதாயமாக உருவாக்கி காட்டுவதே அவர்களுடைய தலையாய கடமையாக இருந்தது.


11.அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம்: (சுன்னதல்லாஹ்)

எனவே திருக்குர்ஆனின் வாசகங்களில் அல்லாஹ்வைப் பற்றி வரும்போது, “அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்டப்படி” அல்லது “அல்லாஹ்வின் நியதிப்படி” இவ்வாறு நடைபெறுவதாக பொருள் கொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைக்கிறான் என்ற 2:22 வாசகத்தை, அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டப்படி வானத்திலிருந்து மழை பொழிகிறது என்று நம்மால் பொருள் கொள்ள முடிகிறது. இவ்வாறு பொருள் கொள்வதால், திருக்குர்ஆன் வாசகங்கள் தெளிவாகி விடுகின்றன. இதை நாம் இயற்கைச் சட்டங்கள் என்றும் கூறுகின்றோம். ஆனால் அந்த இயற்கையைப் படைத்தவனையே அல்லாஹ் என்கிறது திருக்குர்ஆன்.

وَهُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ .ۚ فَاَخۡرَجۡنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىۡءٍ فَاَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرًا نُّخۡرِجُ مِنۡهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ وَمِنَ النَّخۡلِ مِنۡ طَلۡعِهَا قِنۡوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنۡ اَعۡنَابٍ وَّالزَّيۡتُوۡنَ وَالرُّمَّانَ مُشۡتَبِهًا وَّغَيۡرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوۡۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَيَنۡعِهٖ ؕ اِنَّ فِىۡ ذٰ لِكُمۡ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يُّؤۡمِنُوۡنَ‏ ﴿۹۹﴾ 

6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம், அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப் படுத்துகிறோம், அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப் படுத்துகிறோம், பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன, திராட்சைத் தோட்டங்களையும்,(பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம்), அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாட்டைக் கொண்டே வானத்திலிருந்து மழை பொழிகிறது.
(2) அந்த மழை நீரைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளும் விளைகின்றன.
(3) அவ்வாறு விளைபவற்றுள், பச்சை நிறத் தழைகளைக் கொண்ட செடிகளும் மரங்களும், அடர்த்தியான கதிர்களைக் கொண்ட செடிகளும், பேரீத்த மரத்தில் வளைந்து தொங்கும் பழக் குலைகளும் அடங்கும்.
(4) அது மட்டுமின்றி திராட்சைத் தோட்டங்களும், ஒரே மாதிரியான சுவை உள்ளதும், வெவ்வேறு சுவைகளையும் கொண்ட மாதுளை, ஜைத்தூன் ஆகிய தாவரங்களும் விளைகின்றன.
(5) அவை பூத்துக் காய்ப்பதையும், கனிந்து பழமாவதையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள். அவை வளரும் வேகத்தை உங்களால் பார்க்க முடியாது. ஆனாலும் அது மெதுவாகப் பல படித்தரங்களைக் கடந்து கனிந்து பழமாகிறது.
(6) அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மக்களுக்கு, இவற்றில் அவனது வல்லமைகளின் அத்தாட்சிகள் பல உள்ளன.
(7) இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் என்னவென்பதை திருக்குர்ஆன் தெளிவுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். (6:99)


12.அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகள் :

இப்படியாக உலக படைப்புகள் அனைத்திற்கும் என்ன விதிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்றானோ, அவற்றின் வட்டறைக்குள்ளேயே அவை செயல்பட்டாக வேண்டும். இது அவற்றின் “விதி” என்பதாகும். அதாவது உலகமெங்கும் உள்ள படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவையாக உள்ளன. இதைப் பற்றி யாஸீன் என்ற அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.


(وَالشَّمۡسُ تَجۡرِىۡ لِمُسۡتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقۡدِيۡرُ الۡعَزِيۡزِ الۡعَلِيۡمِؕ‏ ﴿۳۸

36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரை யறைக்குள் சென்று கொண்டிருக் கிறது. இது யாவரையும் மிகைத் தோனும்,யாவற்றையும் நன்கறிந் தோனுமாகிய (இறை) வன் விதித்ததாகும்.
விளக்கம் :
(1) பிரம்மாண்டமான சூரியன் செயல்படும் விதத்தைக் கவனித்துப் பாருங்கள்.
(2) அது தன்னைச் சுற்றியுள்ள நவக்கிரகங்களையும் அழைத்துக் கொண்டு, தனக்கே உரிய இலக்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு விளங்கும்.
(3) இவை யாவும் சகல வல்லமையும், மிகைத்தோனுமாகிய இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளாகும்.


(وَالۡقَمَرَ قَدَّرۡنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالۡعُرۡجُوۡنِ الۡقَدِيۡمِ‏ ﴿۳۹

36:39. இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்கும் இடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
விளக்கம் :
மேலும் சந்திரனின் செயல்பாடுகளைக் கவனித்துப் பாருங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதும், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து. ஊசிமுனை அளவிற்கு ஆகிவருவதுமாக இருக்கிறது. இவையாவும் அதன் படித்தரங்களாகும்.

(لَا الشَّمۡسُ يَنۡۢبَغِىۡ لَهَاۤ اَنۡ تُدۡرِكَ الۡقَمَرَ وَلَا الَّيۡلُ سَابِقُ النَّهَارِ‌ؕ وَكُلٌّ فِىۡ فَلَكٍ يَّسۡبَحُوۡنَ‏ (۴۰)

36:40. சூரியன்,சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது. இரவு,பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
விளக்கம் :
ஆக சூரியன் சந்திரனை நெருங்கி வருதற்கோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட இரவு நேரம், முந்திக்கொண்டு பகல் ஆவதற்கோ ஒருபோதும் முடியாது. காரணம் அவை ஒவ்வொன்றும் வான்மண்டலத்தில் தனக்கே உரிய வட்டரையில் (IN THE GIBEN ORBIT) சுற்றி வருகின்றன.

இவை யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் கீழ் படைக்கப்பட்டு அவனுடைய நேரடியான கட்டுப்பாட்டில் செயல்படுபவை ஆகும். அதே விண்ணுலகத்திலிருந்து கீழே இறங்கி மண்ணுலகத்திற்கு வாருங்கள். இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளும், கோடான கோடி உயிரினங்களும் உள்ளன. வனவிலங்குகள், பறவைகள், நாற்கால் பிராணிகள், ஊர்வரன, நீரில் வாழ்வன என எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன. ஆக உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் எவ்வாறு வாழ்கின்றன என்பதைப் பற்றி கவனித்துப் பார்த்தீர்களா? அவை வாழும் விதத்தையும் கவனித்துப் பார்ப்பீர்களானால், அவை எல்லாமே தத்தம் இயல்பின் அடிப்படையிலேயே வாழ்ந்து வருவதை அறிந்து கொள்வீர்கள். உதாரணத்திற்கு மீன் குட்டிக்கு நீந்த யாரும் கற்றுத் தருவதில்லை. கோழிக் குஞ்சுக்கு தன் இரை எங்கே கிடைக்கும் என்று யாரும் சொல்லித் தருவதில்லை. தனக்கு யாரால் ஆபத்து வரும் என்பதும்,அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது போன்ற விஷயங்கள் யாவும் அவற்றின் ஒவ்வொன்றுக்கும் நன்கு தெரியும். இதையே திருக்குர்ஆன் மொழியில்:

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَالطَّيۡرُ صٰٓفّٰتٍ‌ؕ كُلٌّ قَدۡ عَلِمَ صَلَاتَهٗ وَتَسۡبِيۡحَهٗ‌ؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِمَا يَفۡعَلُوۡنَ‏ ﴿۴۱﴾

24:41. (நபியே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக இருப்பதை நீர் பார்க்க வில்iயா? நிச்சயமாக அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன, ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹுசெய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்து இருக்கிறான்.
விளக்கம் :
(1) வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் எவ்வாறு சிறப்பாக வாழ்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
(2) விண்ணில் பறக்கும் பறவைகள், தம் இறக்கைகளை விரித்து அணி அணியாய் பறந்து செல்வதை நீங்கள் பாருங்கள்.
(3) அந்தப் படைப்புகள் யாவும்,தமக்கு இடப்பட்ட கடமைகளை صلآته செவ்வன நிறைவேற்றி வருகின்றன. ஏனெனில் அவற்றிற்குத் தம் கடமைகள் صلآته என்னவென்பதும்,அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் ؤتَسْبِىْحَهُ (தஸ்பீஹ்) என்பதும் நன்கு தெரியும்.
(4) அதுமட்டுமின்றி உலகிலுள்ள எல்லா படைப்புகளின் செயல்பாடுகள் என்னவென்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை.
(5) மேலும் உலக படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு செயல்படுகின்றன.
(6) இதை திருக்குர்ஆனின் வார்த்தையில்: *தஸ்பீஹ் - தம் கடமையை நிறைவேற்றும் வழிமுறை. **ஸலாத் - தம் கடமை

(وَلِلّٰهِ يَسۡجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ مِنۡ دَآبَّةٍ وَّالۡمَلٰۤٮِٕكَةُ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُوۡنَ‏ ﴿۴۹

16:49.வானங்களில் உள்ளவையும்,பூமியில் உள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
விளக்கம் :
அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளும்,பிரபஞ்ச இயற்கை சக்திகளும் (மலக்குகளும்) அல்லாஹ்வின் கட்டளைக்கே சிரம்பணிந்து செயல்படுகின்றன என்பதை கவனித்துப் பாருங்கள். அவற்றில் எதுவும் பெருமையடித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படுவதில்லை.

(يَخَافُوۡنَ رَبَّهُمۡ مِّنۡ فَوۡقِهِمۡ وَيَفۡعَلُوۡنَ مَا يُؤۡمَرُوۡنَ ۩ ﴿۵۰

16:50. அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள், இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.
விளக்கம் :
அவை அனைத்துமே தங்களுக்கு மேலாக இருக்கும் சர்வ வல்லமையுடைய தம் இறைவனுக்குப் பயந்து செயல்படுகின்றன. இன்னும் அவையாவும் தமக்கு ஏவப்பட்ட கட்டளையின்படியே செயல்படுகின்றன.

மனிதனை தவிர்த்து உலகிலுள்ள மற்ற எல்லா உயிரினங்களைப் பொருத்த வரையில்,அவற்றிற்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் குறுகிய வட்டறைக்கு உட்பட்டதாகவே இருப்பதை காண்பீர்கள். அவை உயிருடன் வாழ்வதற்குத் தேவையான அளவே, அவற்றிற்கு சுதந்திரமும் இருக்கும். அதைத் தவிர்த்து, தம்மைத் தாமே மாற்றிக் கொள்வதற்கோ அல்லது தம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வதற்கோ அவற்றிற்கு அறவே சக்தி கிடையாது. மேலும் அவற்றில் எதுவும் எந்த முன்னேற்றத்தையும் காணவும் முடியாது. உதாரணத்திற்கு பத்தாயிரம் வருடங்களுக்கு முன், குதிரை,ஆடு,மாடு போன்ற உயிரினங்கள் எவ்வாறு வாழ்ந்து வந்ததோ,அவ்வாறே இன்றைக்கும், அதே திறன்களுடன் வாழ்ந்து வரும். இன்றைக்கும் நாம் குதிரைத் திறன் (HORSE POWER) என்கிறோம்.


13.அல்லாஹ்வை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

நாம் ஏற்கனவே சொன்னது போல, உலகிலுள்ள பல தரப்பு மக்கள், இறைவனை தம் மொழிக்கு ஏற்றவாறு பல்வேறு பெயர்களை வைத்து அழைக்கிறார்கள். மேற்சொன்ன உலகப் படைப்புகளை அல்லாஹ் படைத்ததாக முஸ்லிம்கள் கூறும் போது, மற்ற மதத்தினர் தாம் வழிபட்டு வரும் கடவுளே அவற்றைப் படைத்ததாகச் சொல்வார்கள். ஆக படைத்தவனுக்கு ஏதோ ஒரு பெயரைச் சூட்டி, அவனை வழிபட்டு வருவதால் சிறப்பு என்று எல்லா தரப்பு மக்களும் நினைக்கின்றனர். அவ்வாறே செயல்பட்டும் வருகின்றனர். சரி. நாமும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளலாம். படைத்தது அல்லாஹ்வா, ஈஷ்வரா அல்லது கடவுளா என்ற விவாதம் தன்னுடைய இடத்தில் இருக்கட்டும். ஆனால் படைத்தவனுக்கும்,படைக்கப்பட்ட மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் நம்மிடையே உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைத்தால்தான் நம்மில் உள்ள மனச் சஞ்சலங்களிலிருந்து விடுபட முடியும். எனவே கவனமாகப் படியுங்கள்.


14.மனித வாழ்க்கைக்கான நேர்வழியைக் காட்டுவது யார்?

திருக்குர்ஆன் உலக மக்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறது. உலகார் வழிபட்டு வரும் தெய்வங்கள், மனித வாழ்க்கைக்கான நேரான பாதையை காட்டுகின்றனவா என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த கேள்விக்கு யாரிடமும் எந்த பதிலும் கிடைப்பதில்லை. அவரவர் வழிப்பட்டு வரும் தெய்வங்கள், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டுவதில்லை. ஏன் என்றால் அந்த தெய்வங்கள் யாவும் மனித கற்பனையில் உருவானவை ஆகும். எனவே அவற்றால் மக்களுக்கு எந்த வழியையும் காட்டவே இயலாது. இதை திருக்குர்ஆன் மொழியில் இவ்வாறு வருகிறது.

قُلۡ هَلۡ مِنۡ شُرَكَآٮِٕكُمۡ مَّنۡ يَّهۡدِىۡۤ اِلَى الۡحَـقِّ‌ؕ قُلِ اللّٰهُ يَهۡدِىۡ لِلۡحَقِّ‌ؕ اَفَمَنۡ يَّهۡدِىۡۤ اِلَى الۡحَقِّ اَحَقُّ اَنۡ يُّتَّبَعَ اَمَّنۡ لَّا يَهِدِّىۡۤ اِلَّاۤ اَنۡ يُّهۡدٰى‌ۚ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُوۡنَ‏ ﴿۳۵﴾ 

10:35. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக, அல்லாஹ் தான் சத்தியத்திற்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றத் தக்கவனா? வழிகாட்டப் பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
விளக்கம் :
(1) அவர்களிடம்,“மனிதன் தன் கற்பனைகளால் உருவாக்கிய தெய்வங்கள், மனிதனின் சிறப்பான வாழ்விற்கு நேர் வழியை காட்டுகின்றதா?" என்று கேளுங்கள்.
(2) அத்தகைய வழிகாட்டுதலை அல்லாஹ் மட்டும் தான் தர முடியும் என்பதை விளக்கி வாருங்கள்.
(3) எனவே மனிதனின் சிறப்பான வாழ்விற்கு நேர்வழியைக் காட்டக் கூடிய வல்லமை உடையவனைப் பின்பற்றுவீர்களா?
(4) அல்லது தனக்கே வழிகாட்டுதல்கள் தேவை என்று இருப்பவற்றைத் தெய்வங்களாகப் பாவித்து அவற்றின் பின்னால் செல்வீர்களா என்பதை சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி மக்களுக்கு எடுத்துரையுங்கள்.
(5) இதையும் மீறி அவர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்களிடம், “உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைப் பற்றி எல்லாம் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்பும்,நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


15.மனித வாழ்க்கை:

உலகிலுள்ள உயிரினங்களில், மனித படைப்பு மட்டும் தனிச்சிறப்பு பெற்றதாக காணப்படுகிறது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மனிதன் முழு சுதந்திரம் பெற்றவனாகவும், அதிகாரம் படைத்தவனாகவும் இருக்கின்றான். இருப்பினும், மனித வாழ்வை இரு பகுதிகளகாகப் பிரிக்கலாம். ஒன்று அவனது சரீர வாழ்க்கை. மற்றொன்று மனிதனுள் செயல்பட்டு வரும், “சுயம்” ((Self) எனும் “தனித் தன்மை” (Personality) என்பதாகும்.
மனிதனின் சரீர வாழ்க்கையைப் பொருத்தவரையில், மற்ற உயிரினங்களில் இருப்பது போன்றே பிறப்பு, இறப்பு, சுவாம், பசி, தாகம், இனப்பெருக்கம் ஆகிய எல்லாமே இருக்கும். இவ்விஷயத்தில் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு உட்பட்டே மனிதன் வாழ்ந்தாக வேண்டும். அவனுக்கு பசி, தாகம் ஏற்படாமல் இருக்க முடியாது. அதனால் அவன் உண்ணாமல் பருகாமல் வாழவே முடியாது. அதே போல் எந்த மனிதனும் இவ்வுலகில் என்றென்றைக்கும் நீடித்து வாழவும் முடியாது. மனித வாழ்வின் இந்தப்பகுதி, அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இவ்விஷயத்தில் அல்லாஹ் மற்ற உயிரினங்களுக்கு நிர்ணயித்த சட்ட விதிமுறைகளே மனித படைப்புக்கும் பொருந்தும்.


16.மனிதனின் “சுயம்” (Self or Personality)

ஆனால் மனிதனுள் உள்ள மற்றொரு சிறப்பு அம்சமாகிய “சுயம்” எனும் “மனிதனின் தனித்தன்மை” (Self or Personality) யாவும் மனித விருப்பத்திற்கு உட்பட்ட விஷயமாகும். அல்லாஹ், தன் செயல்திட்டப்படி இவ்விஷயத்தில் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டான். இதனால் இவ்வுலகில் மனிதன் சுயமாகச் சிந்தித்து செயல்படக் கூடியவனாக ஆகிவிடுகின்றான்.
சரீர வாழ்வியல் சம்பந்தமாக மனிதனுக்கு நிர்ப்பந்தங்கள் இருப்பது போல, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் விஷயத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இருப்பதில்லை. மனிதனின் “சுயம்” எனும் “மனிதத் தன்மை” விஷயத்தில் அல்லாஹ்வின் நேரடி தலையீடு ஒருபோதும் இருப்பதில்லை. இதனால்தான் மனிதனுக்கு “தனிப்பட்ட இயல்பு” என்று எதுவும் இருப்பதில்லை. அதாவது மனிதன் என்றால் இப்படித்தான் செயல்படுவான் அல்லது செயல்பட முடியும் என்று யாரும் நிர்ணயித்து கூற இயலாது. அவன் விரும்பினால் நன்மையான செயல்களை செய்து, உயர் நிலைக்குச் செல்ல முடியும். அவன் விரும்பினால் தீய செயலில் ஈடுபட்டு, கீழ்தரமான நிலைக்கும் செல்லலாம். மனிதன் இத்தகைய நிலையில்தான் இருக்கின்றான். இதன் காரணமாகத்தான் பிறந்த குழந்தைக்கு அழத்தான் தெரிகிறதே அன்றி வேறெதுவும் அதற்குத் தெரிவதில்லை.


17.மனித இயல்பு:

உதாரணத்திற்கு கன்றுக் குட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது பிறந்ததும் தனக்கு வேண்டிய ஆகாரம் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து, அது தாயின் பால்மடி வரை தட்டித் தடுமாறிச் சென்று, அதை இடித்தும் உருஞ்சியும் பாலைக் குடிக்கும். ஆனால் நம் குழந்தைகளைப் பாருங்கள். பாலைக் குடிப்பதற்கும் தாய் தான் கற்றுத் தரவேண்டி உள்ளது. கோழிக் குஞ்சுவின் முன்பாக நெருப்பை கொண்டுசென்றால், அது ஒதுங்கிச் சென்றுவிடும். அனால் தவிழ்ந்து செல்லும் குழந்தை நெருப்பைப் பார்த்ததும், அதைப் பிடிக்க ஓடும். எனவேதான் மற்ற உயிரினங்களுக்கு அவற்றிற்கே உரிய “இயல்புகள்” இருப்பது போல், மனிதனுக்கு எவ்வித இயல்பும் இருப்பதில்லை. அவன் பிறக்கும் போது, அவனுடைய உள்ளம் வெள்ளைக் காகிதத்தைப் போல் சுத்தமாகத்தான் இருக்கிறது. இதைப் பற்றி திருக்குர்ஆன் கூறுகையில்:

وَلَـقَدۡ كَرَّمۡنَا بَنِىۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰهُمۡ فِى الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰهُمۡ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلۡنٰهُمۡ عَلٰى كَثِيۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيۡلًا‏ ﴿۷۰﴾ 

17:70. நிச்சயமாக,நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம், இன்னும்,கடலிலும்,கரையிலும் அவர்களைச் சுமந்து,அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
விளக்கம் :
(1) மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியே இருக்கிறான்.
(2) மேலும் மனித இனத்திற்குத் தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் நிலத்திலும் கடலிலும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
(3) மேலும் மற்ற பெரும்பாலான படைப்புகளைவிட, மனிதனுக்கு அல்லாஹ் மகத்துவத்தையும், உயர்வையும் அளித்துள்ளான்.

(1) அல்லாஹ்வின் இந்த விதிமுறைப்படி மனிதன் பிறக்கும் போது, ஒரே சீராகத்தான் பிறக்கின்றான். அதன்பின் அவன் எந்த சூழ்நிலையில் வளர்கின்றானோ, அதுபோலவே அவனும் மாறிவிடுகின்றான்.
(2) எவ்வாறு வானத்திலிருந்து பொழியும் பரிசுத்தமான மழைத்துளி, அது விழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறிவிடுகிறதோ, அது போலத்தான் இதுவும்.
(3) மழை நீர் கடலில் விழுந்தால் உப்பாக மாறிவிடும். குளம் ஏரியில் விழுந்தால் அதற்கேற்றவாறு சேறு கலந்த நீராக மாறிவிடும்.
(4) அதுபோலவே மனிதன் அவனைச் சுற்றி பேசப்படுகின்ற மொழியையே கற்றுக் கொள்வான். அவனுடைய முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் கலாச்சாரத்தையே கடைப்பிடித்து வருவான்.
(5) தாய் தந்தையர் மற்றும் மதகுருமார்கள் சொல்லித் தரும் சடங்கு சம்பிரதாயங்களையே இவனும் பின்பற்றுவான். பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளும் சொல்லித் தரப்படும் பாடங்களையே கற்றுக் கொள்வான். இப்படியாக அவனைச் சுற்றி இருக்கின்ற உலகம், அவனுடைய உள்ளத்தில் எத்தகைய எண்ணங்களை விதைக்கின்றதோ, அது போலத்தான் அவனுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் அமையும்.
(6) உதாரணத்திற்கு பிராமண கலாச்சாரத்தை மேற்கொள்ளும் ஒருவர் முன்பு மாமிசம் கலந்த உணவை கொடுத்து சாப்பிடச் சொன்னால், அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்வார். அதே உணவை முஸ்லிமிடம் கொடுத்தால் எவ்வித சங்கோசமும் இன்றி அதை வாங்கி சாப்பிடுவார்.


18. மனித அறிவாற்றலும் புத்தியும்:

“மனித அறிவு” என்பது ஒவ்வோரு மனிதனிலும் உள்ள சிந்திக்கும் திறனுக்கு சொல்வார்கள். "புத்தி" என்பது பழக்கத் தோஷத்தால் ஏற்படுகின்ற சிந்தனைக்குச் சொல்வார்கள். இப்படியாக அவன் பெரியவனாக ஆகியும், அவனுக்கு அறிவாற்றல் எவ்வளவு தான் வளர்ந்து இருந்தாலும் அவனுடைய புத்தி, கலாச்சார வழக்கப்படி உள்ளவற்றையே சரி என்று எண்ணி, அதையே கடைப்பிடித்து வரச் செய்யும். மாமிசம் உடலுக்கு வலிமையைத் தரும் என்று அறிந்தாலும், பழக்க தோஷத்தால் உருவான புத்தி அவனை அதிலிருந்து ஒதுங்கியே இருக்கச் செய்யும். அப்படியும் அவனிடம் தர்க்கம் செய்தாலும், அசைவ உணவில் இருக்கும் தீங்குகளையே எடுத்துரைத்து, தான் கடைப்பிடிக்கும் வழிமுறைதான் சரியானது என்று நியாயம் பேசுவான். இப்படியாக அவரவர் மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதன்படியே செயல்படுவார்கள். இவ்வாறாக சமுதயாத்தினர் இடையே சிந்தனைகள் பலவாராகச் சிதரி, தத்தம் பழக்க வழக்கப்படியே அறிவும், திறமையும், சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்து, பலப் பிரிவுகளாகப் பிரிந்து விடுகின்றன. சுருங்கச் சொன்னால் மனிதன் பிறப்பால் முஸ்லிமாகவோ, கிறிஸ்தவனாகவோ, யூதனாகவோ அல்லது இந்துவாகவோ பிறப்பதில்லை. அவனுக்கு சிறு வயதிலிருந்து எந்த மதத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கிளோ, அதையே கற்றுக் கொண்டு அந்த மதத்தைச் சேர்ந்தவனாகவே மாறிவிடுவான்.


19. சுதந்திர மனிதன்:

இப்படியாக மனிதனின் நிலை மற்ற படைப்பினங்களைப் போன்று இருப்பதில்லை. அல்லாஹ்,தன் செயல்திட்டத்தின்படி மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டதால்,அவன் சுதந்திரமாக,“தான் நாடியதை” செய்யக் கூடியவனாக இருக்கின்றான். எனவேதான் மார்க்க விஷயத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மனித விருப்பத்திற்கே விடப்படுகிறது.

وَقُلِ الۡحَـقُّ مِنۡ رَّبِّكُمۡ‌ فَمَنۡ شَآءَ فَلۡيُؤۡمِنۡ وَّمَنۡ شَآءَ فَلۡيَكۡفُرۡ ‌ۙ

18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது," ஆகவே, விரும்புபவர் (அதனை)நம்பிக்கை கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்.
விளக்கம்: இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மனித குலத்தின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழிகாட்டுதல்கள் உங்கள் இறைவனிடமிருந்து வந்து விட்டன. ஆகவே நாடுவோர் இவற்றை ஏற்று அதன்படி செயல்பட்டு வாழ்வின் வெற்றி இலக்கை அடைந்து கொள்ளட்டும். நாடுவோர் இவற்றை நிராகரித்தும் விடலாம். இதையே இன்னொரு இடத்தில்:

إِنَّا هَدَيْنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرًۭا وَإِمَّا كَفُورًا.

76:3. நிச்சயமாக,நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம். (அதைப் பின்பற்றி) நன்றியுள்ளவனாக இருக்கின்றான். அல்லது (அதைப் புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, அல்லாஹ் தன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்களை அளித்து வந்தான். அல்லாஹ், தன்னுடைய திட்டப்படி மனிதனுக்கு முழு சுதந்திரம் அளித்து விட்டதால், வழிகாட்டுதலை ஏற்று நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதும், அதற்கு மாறு செய்வதும் மனிதனுடைய விருப்பத்திற்கு விடப்பட்டுவிட்டது.

இப்படியாக மனிதனைப் பொருத்த வரையில் மற்ற உயிரினங்களைப் போல், இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்று ஒருபோதும் அல்லாஹ் விதிக்கவில்லை. குறிப்பிட்ட விதிமுறைகளின் படிதான் செயல்பட்டாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் மனினுக்கு இருப்பதில்லை.
அல்லாஹ் நாடியிருந்தால் மனிதனையும் மற்ற உயிரினஙகள் தன் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்து வருவதைப் போல் படைத்திருக்க முடியும். யூனுஸ் என்கிற அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.


20.உலகில் நடைபெறும் துயரச் சம்பவங்களுக்கு மனிதனே பொறுப்பு:

وَلَوۡ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنۡ فِى الۡاَرۡضِ كُلُّهُمۡ جَمِيۡعًا‌ ؕ اَفَاَنۡتَ تُكۡرِهُ النَّاسَ حَتّٰى يَكُوۡنُوۡا مُؤۡمِنِيۡنَ‏ ﴿۹۹﴾ 

10:99 உம் இறைவன் நாடியிருந்தால்,பூமியில் உள்ள யாவரையும் ஈமான் கொள்ள வைத்திருக்க முடியும். எனவே அவர்கள் யாவருமே ஈமான் கொண்டோராக ஆகிவிடவேண்டும் என்று நபியே, நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
விளக்கம் :
(1) அதாவது மற்ற உயிரினங்களைப் போல் மனிதனும் குறிப்பிட்ட திசையிலேயே செயல்படும் படைப்பினமாக படைக்க அல்லாஹ் நாடியிருந்தால்,அவ்வாறே அவனையும் படைத்திருக்க முடியும்.
(2) ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டம் அவ்வாறில்லை. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, அவன் தன் சுய விருப்பத்துடனே சிந்தித்து, இறைவழிகாட்டுதலை மனதரா ஏற்று நடக்க முன் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் திட்டமாகும்.
(3) எனவேதான் மனிதனை வலுக்கட்டாயமாக ஈமான்கொள்ள வேண்டும் என்று எண்ணாதீர் என நபியைப் நோக்கி அல்லாஹ் கூறி விடுகின்றான்.

மேலும் மனிதனின் சுய அதிகாரத்தில் அல்லாஹ் ஒருபோதும் தலையிடுவதில்லை. அவன் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அவனுக்கு இத்தகைய முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனிதனின் எந்தெந்த நற்செயல்களுக்கு என்ன பலன்கள் என்பதையும், எந்தெந்த தீய செயல்களுக்கு என்ன தீய விளைவுகள் என்பதையும் அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்து விட்டான். அவற்றை யாராலும் மாற்றி அமைக்கவே முடியாது. எனவே இவ்வுலகில் ஏற்பட்டு வரும் தீய விளைவுகளுக்கு மனிதனே பொறுப்பாளி ஆகிவிடுகின்றான். அல்லாஹ் ஒருபோதும் பொறுப்பாளி ஆவதில்லை.

اِنَّ اللّٰهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٍ‌ ۚ وَاِنۡ تَكُ حَسَنَةً يُّضٰعِفۡهَا وَيُؤۡتِ مِنۡ لَّدُنۡهُ اَجۡرًا عَظِيۡمًاؔ‏ ﴿۴۰﴾

4:40. நிச்சயமாக அல்லாஹ் ஓர் அணு அளவும் யாருக்கும் ஒருபோதும் அநியாயாம் செய்வதில்லை. மாறாக மனிதன் எந்த ஒரு நன்மையான செயலை செய்;தாலும்,அதன் பலன்களை பன்மடங்காக ஆக்கி மகத்தான நற்கூலியாக அல்லாஹ் கொடுத்துவிடுகின்றான்.


21.மனித ஆசைகளும் சுயநலமும்:

மேலும் மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனுக்கும் சுவாசம், பசி, தாகம், காமம் ஆகியவை உள்ளன. இவை அவனை செயல்பட வைக்கும் “விசைச் சக்தி”களாக– அவனை “இயக்கும் சக்தி”களாக இருக்கின்றன. இவையே அவனுடைய சரீரத்தின் தேற்றங்களாக இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள அவனது உள்ளத்தில் தோன்றும் உந்துதல்களே “ஆசைகள்” என்பதாகும். இப்படியாக மனிதனின் சரீர தேற்றங்கள், அவனது உணர்வுகளோடு ஒன்றியுள்ளன. அவனுடைய அறிவு, சிந்தனை மற்றும் கல்வி ஆகியவை அவனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள துணை நிற்கின்றன.
இந்த “ஆசைகள்” அளவுக்கு அதிகமாக வளர்ந்து, அவனுடைய உள்ளத்தில் வேரூன்றி செல்லும் போது, அவற்றை நிறைவேற்றிக் கொள்ள பல்வேறு வழி முறைகளைக் கையாளுவான். அதனால் ஏற்படும் ஆபத்திலிருந்து தன் வரை பாதுகாத்துக் கொள்ளவே (Preservation of Self) தம் “சுயஅறிவை” பயன்படுத்திக் கொள்வான். இப்படியாக அவனுடைய அறிவு தன்னைப் பற்றிய கவலைக் கொண்டதாகவே அமையும். காலம் செல்ல செல்ல, அந்த அறிவு உள்ளத்தில் தோன்றும் ஆசைகளுக்கு அடிமையாகி, அவனுடைய “சுயம்” எனும் மனிதனின் தனித்தன்மை, “சுயநலம்” ஆக மாறிவிடும். இதுதான் “மனோஇச்சை” என்பதாகும். இதுவே திருக்குர்ஆன் மொழியில்,“ஷைத்தான்” அல்லது “இப்லீஸ்” என்பதாகும். அதாவது “ஷயாத்தீன்கள்” என்றால் சுயநலத்துடன் மனஇச்சையின்படி செயல்படக் கூடியவர்கள் என்பதாகும். இதனால் அவனுள் “மனித நேயம்” குறைந்து, எல்லா விதமான ஒழுங்கீனங்களும் வளர்ந்து தகாத செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறான்.

وَاِذَا لَقُوۡا الَّذِيۡنَ اٰمَنُوۡا قَالُوۡاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوۡا اِلٰى شَيٰطِيۡنِهِمۡۙ قَالُوۡاۤ اِنَّا مَعَكُمۡۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُوۡنَ‏ ﴿۱۴﴾ 

2:14.இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப் போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக் கிறோம்" என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.
இவ்வாசகத்தில் சுயநலக்கார தலைவர்களை “ஷயாத்தீன்கள்” என்று விமர்சித்திருப்பதை கவனித்துப் பாருங்கள். மேலும் தம் மனோ இச்சைப்படி செயல்படுபவர்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதையும் கவனியுங்கள்.

اَفَرَءَيۡتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلۡمٍ وَّخَتَمَ عَلٰى سَمۡعِهٖ وَقَلۡبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنۡ يَّهۡدِيۡهِ مِنۡۢ بَعۡدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوۡنَ‏ ﴿۲۳﴾ 

45:23.(நபியே!) எவன் தன்னுடைய (சரீர,மனோ) இச்சையைத் தனக்குக் கட்டளையிடுபவனாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா, மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு, அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

விளக்கம் :
(1) தன்னுடைய மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுபவர்களை நீங்கள் பார்த்தீர்களா?
(2) தம் மனதில் எழும் ஆசைகளின்படி தான் அவர்கள் செயல்படுவார்கள்.
(3) அவற்றின் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். அந்த பாதிப்புகள் வரும்போது, பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள்.
(4) அவர்களுக்கு அறிவு இருந்தும், அவர்களுடைய நிலைமை என்னவாக ஆகிவிடுகிறது என்பதைக் கவனித்தீர்களா? அவர்களுக்கு ஆசைகள் மிகைக்கும் போது, அவர்களுடைய உள்ளங்களும், காதுகளும், பார்வைப் புலன்களும் செயலிழந்து விடுகின்றன. எனவே எந்த அறிவுரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கும் தகுதியே அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் இவற்றைக் கேட்கவும் மாட்டார்கள். இத்தகையவர்களுக்கு வேறு யாரால் நேர்வழி காட்டமுடியும்? இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி அவர்களிடம் சொல்லுங்கள்.


22.மனிதனிடமுள்ள குறைப்பாடுகள்:

“சுயஅறிவைக்” கொண்டு செயல்படும் சமுதாயங்களில், மனிதனின் நிலை மோசமானதாக இருக்கும். திருக்குர்ஆனில் இத்தகைய மக்களைப் பற்றி குறிப்படும்போது: அவன் அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருப்பதாகவும் (33:72); அவசரக்காரனாக இருப்பதாகவும் (70:19); நன்றி மறந்தவனாகவே இருப்பதாகவும் (17:67); கஞ்சனாக இருப்பதாகவும் (17:100) கூறுகிறது. ஆனால் அல்லாஹ் இப்படித்தான் மனிதனைப் படைத்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் மனிதனுக்கு அல்லாஹ் முழு சுதந்திரத்தை அளித்துவிட்டதன் விளைவாக அவனுடைய நிலைமை இவ்வாறு ஆகிவிடுகிறது என்றும் எண்ணிக் கொள்ளாதீர்கள். காரணம் இவiயாவும் மனிதனின் ஒரு பக்கமே ஆகும். மனிதனின் மறு பக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அவனுக்கு “வஹீ” எனும் இறைவழிகாட்டுதலை அளிக்காமல் விட்டுவிட்டால் தான், அவனுடைய நிலைமை இவ்வாறு ஆகிவிடும். இதுதான் உண்மை. மக்களுக்கு இறை வழிகாட்டுதலை எடுத்துரைக்காமல் அவரவர் போக்கில் விட்டுவிட்டால், சமுதாயத்தில் ஒவ்வொருவருடைய சுயநலங்களும் மிகைத்து வரும். அவ்வாறு மிகைக்கும் போது, அவனுள் போட்டியும் பொறாமையும் பகைமையும் வளர்ந்து விடுகிறது. மேலும் கலாச்சார பழக்க வழக்க வேற்றுமைகளால் அவர்களிடையே உள்ள “சுயநலம்” அதிக பட்சமாக தம் இனத்தவர்களை மட்டும் பாதுகாக்கவே பாடுபடும். இதனால் சமுதாயம் நிம்மதி இழந்து தவிப்புக்குள் அகிவிடுகிறது. மேற்சொன்ன தீய பண்புகள் சமுதாயத்தில் மென்மேலும் வளர்ந்து வரும்.


23.மனிதனின் பாதுகாப்பான வாழ்விற்கு அல்லாஹ் செய்துள்ள ஏற்பாடுகள்:

மேற்சொன்ன குறைப்பாடுகள் இன்றி மனிதன் சிறப்பாக வாழ அல்லாஹ் செய்த ஏற்பாடுகள் என்னவென்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيۡهِ مِنۡ رُّوۡحِهٖ‌ وَجَعَلَ لَكُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـــِٕدَةَ ‌ ؕ قَلِيۡلًا مَّا تَشۡكُرُوۡنَ‏ ﴿۹﴾

32:9. பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான், (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
விளக்கம்:
மனிதனைப் படைத்த அல்லாஹ், தன் செயல்திட்டப்படி “ரூஹ்” எனும் தனிச்சிறப்பு மிக்க ஆற்றல்களை (Divine Energy) படிப்படியாக மனிதனுக்கு அளித்தான். அதன் துணையைக் கொண்டு கேட்கும் சக்தியும், பார்க்கும் சக்தியும், எதையும் சிந்தித்து செயலாற்றும் பகுத்தறிவும் மனிதனுக்குக் கிடைத்தன. இவ்வாறிருந்தும் மனிதன் நன்றி மறப்பவானகவே இருக்கிறான்.
மேலும் மனிதனுள் வளரும் இந்த ஆற்றல்கள் யாவும் மனிதனின் “சுயம்” சம்பந்தப்பட்டவை ஆகும். மனிதனின் “சுயம்” சரியான அளவுகோலில் வளர்ச்சி பெறுவதற்காக அவனுக்கு கல்வி ஞானம் அவசியமாகிறது. இந்த கல்வி ஞானம் எழுத்து வடிவிலும்,போதனைகள் வடிவிலும் இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்பட்டது.

﴾ الَّذِىۡ عَلَّمَ بِالۡقَلَمِۙ‏ ﴿۴﴾  عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ يَعۡلَمۡؕ‏ ﴿۵

96:4-5. மனிதனைப் படைத்த இறைவனே அவனுக்கு எழுத்து வடிவத்தையும் அளித்து, அவன் அறியாததை எல்லாம் அதன் மூலம் அறிந்து கொள்ளும் ஆற்றல்களையும் அளித்தான்.
மேற்சொன்ன இந்த கல்வி ஞானம் மனித அறிவு வளர்ச்சி பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது. கல்வி ஞானம் பெறாதவனைக் கவனித்துப் பாருங்கள். அவனுடைய பேச்சு, நடை, உடை எல்லாமே மெச்சும்படி இருக்காது. இந்த கல்வி ஞானத்துடன் “வஹீ” என்று இறைவழிகாட்டுதலின் ஞானங்களும் இணைந்து விட்டால் அவனுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

اَلرَّحۡمٰنُۙ‏ ﴿۱﴾  عَلَّمَ الۡقُرۡاٰنَؕ‏ ﴿۲﴾  خَلَقَ الۡاِنۡسَانَۙ‏ ﴿۳﴾  عَلَّمَهُ الۡبَيَانَ‏ ﴿۴﴾ 

55:1-4 அருட்கொடையாளனாக இருக்கும் அல்லாஹ், மனிதனின் ஒழுக்க மாண்புகளும், பல்வேறு ஆற்றல்களும் சிறப்பாக வளர, குர்ஆனை கற்றுக் கொடுத்தான். மனிதனைப் படைத்த அல்லாஹ், நற்போதனைகளின் மூலம் அனைத்து விஷயங்களையும் தெளிவாக்கினான்.


24.அல்லாஹ் காட்டும் நேர்வழி:

எனவே அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம், மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு சிறந்த பாதையைக் காட்டுவதாகக் கூறுகிறது. அதாவது அவன் எந்த வழிமுறையைக் கடைப்பிடித்தால், அவனது உலக வாழ்வின் சந்தோஷங்களும், வருங்கால நிலையான வாழ்வின் சந்தோஷங்களும் கிடைக்குமோ, அந்த வழிமுறை என்பதாகும்.

اِنَّ هٰذَا الۡقُرۡاٰنَ يَهۡدِىۡ لِلَّتِىۡ هِىَ اَقۡوَمُ وَ يُبَشِّرُ الۡمُؤۡمِنِيۡنَ الَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمۡ اَجۡرًا كَبِيۡرًا ۙ‏ ﴿۹﴾

17:9. நேர்வழி இந்த குர்ஆன் மூலம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் அறிவுரைகளை ஏற்று நடப்பவர்களுக்கு நிலையான சந்தோஷங்களைக் கொண்ட வாழ்வு பெற நேர்வழி கிடைத்துவிடும். அது மட்டுமின்றி திருக்குர்ஆன் காட்டும் வழியில் ஆக்கப்பபூர்வமான நற்செயல்களை செய்து வந்தால், நிச்சயமாக உங்களுக்குப் பலவகையில் நன்மைகள் கிடைத்து வரும் என்பதையும் இதன் மூலம் நற்செய்தி அளிக்கப்படுகிறது.


25.மனிதனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சிந்தனையாளனே! இவ்வாறு மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து இருப்பதன் நோக்கம் என்னவென்பதையும் நன்றாகத் அறிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வாசகத்தில்

وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِيَعۡبُدُوۡنِ‏ ﴿۵۶﴾ 

51:56. ஆக நகர்புற மக்களானாலும், மலைவாழ் மக்களானாலும் சரி; அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்காகவே படைக்கப்பட்டு உள்ளார்கள்.
விளக்கம்:
அல்லாஹ்வை வணங்குவதை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி நிறைவேற்றும் தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற கடமைகளாகும்.

இரண்டாவதாக அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்வது. அதாவது அல்லாஹ் எதை தடுத்துள்ளானோ அவற்றை விட்டுத் தடுத்துக் கொள்வது, எதை செய்யச் சொல்கின்றானோ, அதை கண்டிப்பாகச் செய்வது. எனவே அல்லாஹ்வை வணங்குவது என்றால் அவன் மனிதனுக்கு திருக்குர்ஆன் மூலமாக அறிவித்த வழிகாட்டுதலுக்கு இணங்கி வாழ்வது என்று பொருள்படும். அல்லாஹ்வின் அறிவுரையின்படி செய்யும் ஒவ்வொரு காரியமும் அவனுடைய “இபாதத்” வணங்குவதற்கு ஒப்பானதாகும்.

அதாவது மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் என்ன? அறிவுரைகள் என்னவென்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதாகும். மனித வாழ்வின் முக்கிய அம்சங்களாக இருக்கும் குடும்பவியல், கல்வி, சமூக அமைப்பு, வாணிபம், பொருளாதாரம் ,நீதித்துறை, அரசியல் என ஒவ்வொரு கட்டத்திலும் வாழும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை அல்லாஹ் அளித்துள்ளான். அந்த வேதம்தான் திருக்குர்ஆன் என்பதாகும். எனவே அது ஒட்டுமொத்த மனித இனத்திற்காகவும்,அறிவுரைகள் அடங்கிய வேதமாகவே இருக்கிறது. திருக்குர்ஆன் கூறும் அறிவுரைகளை மட்டும் தொகுத்து நாம் புத்தகம் வெளியிட்டுள்ளோம். அதைப் படித்து நேர்வழியை பெறுங்கள்.


26.மனிதனுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள்:

وَهُوَ الَّذِىۡ جَعَلَـكُمۡ خَلٰٓٮِٕفَ الۡاَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّيَبۡلُوَكُمۡ فِىۡ مَاۤ اٰتٰٮكُمۡ‌ؕ اِنَّ رَبَّكَ سَرِيۡعُ الۡعِقَابِ ۖ وَاِنَّهٗ لَـغَفُوۡرٌ رَّحِيۡمٌ﴿۱۶۵﴾ 

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின் தோன்றல்காளக ஆக்கினான், அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.
விளக்கம்:
அல்லாஹ்வின் செயல்திட்டப்படி உலகை வழிநடத்திச் செல்லும் தகுதியும் ஆற்றலும் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறைவழிகாட்டுதலின்படி யார் சிறப்பாகச் சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பதை பரிசோதித்துக் கொள்ளவே, மனிதனுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது. எனவே அவரவர்களின் செயல்களைப் பொறுத்தே உலகில் உயர்வும் கண்ணியமும் கிடைக்கும். இறைவனின் நியதிப்படி ஏற்படும் தீய செயல்களின் தாக்கங்களிலிருந்து யாரும் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அதே சமயத்தில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ, வழிமுறைகளை அறிவித்து இருப்பதும் அவனது கருணையே ஆகும்

மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்ததன் நோக்கங்களில் இது முக்கியமான ஒன்றாகும். எனவே இறைவனின் இத்திட்டம் நிறைவேற வேண்டும் என்றால் மனிதன் கூட்டு வாழ்க்கை முறையை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இதைக் கொண்டுதான் அவனுடைய வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள சாத்தியமாகும். காரணம் மனிதன், தன் பல்வேறு தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இவற்றை நிறைவேற்றிக் கொள்ள அல்லாஹ் மனிதனுக்கு எல்லா ஆற்றல்களையும் அளித்தான்.


27.மனிதனின் கூட்டு வாழ்க்கை முறை (ஆதம்)

உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன. பல தரப்பட்ட சமுதாயங்களும் உள்ளன. மேலும் பல்வேறு தொழில்களும் உள்ளன. உதாரணத்திற்கு விவசாயம், நெசவு, வணிகம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் என பல்வேறு தொழில்களும் தொழிற்சாலைகளும் நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம். மேலும் விவசாயம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழவகைகள் என்று விரிவாக இருக்கும். இவை எல்லாம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு வளர்ந்து வரும். உதாரணத்திற்கு தென் இந்தியாவில் அரிசி மற்றும் காய் கறிகளின் உற்பத்தி அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கோதுமை உற்பத்தி அதிக அளிவில் இருக்கும். இப்படியாக பல்வேறு விளைச்சல்களும்,அதற்கேற்ற தொழில்களும், உழைப்புகளும் இருக்கும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதைத் தான் நாம் ‘சமுதாயம்’ என்கிறோம். இத்தகைய ஒருங்கிணைந்த சமுதாயத்தை “ஆதம்” என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. அதாவது “மனித இனம்”, “நாகரீக மனிதன்” அல்லது “மனித சமுதாயம்” என்று பொருள்படும்.

ஆக பலதரப்பட்ட தொழில்கள் இருந்தால்தான், மனிதனின் தேவைகள் நிறைவேறி வரும். எனவே வாழ்வாதார பங்கீட்டு முறை சீர்பட்டு இருந்தால்தான், சமுதாயம் சிறப்பாக இருக்கும். காரணம் ஒவ்வொரு தொழிலும் சமுதாயத்தின் அங்கங்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு நெல் பயிரிடும் விவசாயி மகசூல் அனைத்தையும் அவனே வைத்துக் கொண்டால், அவனுடைய இதர தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்? நெல்லை மட்டும் வைத்துக் கொண்டு அவன் எப்படிதான் வாழ்வான்? எனவே அவன், தன் இதர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, பிற விவாசாயிகளை சார்ந்துதான் இருக்க வேண்டியுள்ளது. இத்தகைய தேவைகளை அக்காலத்தில் பண்டமாற்று முறையைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டான். காலப்போக்கில் அவற்றை பொது விநியோகம் மூலம் நிறைவேற்றிக் கொண்டான். மனித சமுதாயம் விரிவடைந்த போது, பொது நாணயங்களை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் விலையை நிர்ணயித்து விநியோகித்துக் கொண்டான். இன்றைக்கும் இதே முறைதான் கையாளப்படுகிறது

மேலும் சமுதாயத்தில் உள்ள எந்த தொழிலானாலும் சரியே! அந்தந்த இடத்தில் அவை முக்கியமானவையே ஆகும். எதுவும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது. உதாரணத்திற்கு துப்புரவு பணியில் இருப்பவர்கள், தம் பணியை சிறப்பாக ஆற்றி வந்தால்தான், ஊர் மக்கள் சுத்தாமாகவும், சுகாதாரத்துடனும் இருக்க முடியும். அவர்கள் சரிவர பணியாற்றி வராமல் போனால், நோய் நொடிதான் வளரும். எனவே அனைவரின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் இவர்களை, தரக்குறைவாக எடை போடுவது நியாயமாகுமா? சமுதாயத்தில் அவர்களுடைய பங்கும் முக்கியமானதே. இப்படியாக சமுதாயத்தில் நடைப்பெற்று வரும் பலதரப்பட்ட தொழில்களைப் பற்றி கவனித்துப் பாருங்கள். அவை எல்லாமே தத்தம் இடத்தில் முக்கியமானவையே என்பதை உணர்வீர்கள். இதை திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள்.

وَالَّيۡلِ اِذَا يَغۡشٰىۙ‏ ﴿۱﴾  وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏ ﴿۲﴾  وَمَا خَلَقَ الذَّكَرَ وَالۡاُنۡثٰٓىۙ‏ ﴿۳﴾ اِنَّ سَعۡيَكُمۡ لَشَتّٰىؕ‏ ﴿۴﴾

92:1-4 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவைக் கவனித்துப் பாருங்கள். பிரகாசம் வெளிப்படும் பகலைக் கவனித்துப் பாருங்கள். ஆணையும் பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதைப் பற்றியும் கவனியுங்கள். உங்களுடைய முயற்சி பலவாகப் பிரிந்து இருப்பதையும் கவனியுங்கள்.
விளக்கம்:
மேலோட்டமாகப் பார்க்கும் போது இரவு, பகலுக்கு எதிராகத் தோன்றும். ஆண் பெண்ணுக்கு எதிராகத் தோன்றும். ஆனால் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால், ஒன்றில் இருக்கின்ற குறைகளை, மற்றொன்று நிவர்த்தி செய்வதற்காகப் படைத்திருப்பதை அறிந்து கொள்வீர்கள். அதே போல் சமுதாயத்தில் பலதரப்பட்ட தொழில்கள் இருக்கும். அதைப் பார்த்து அல்லாஹ்வே இப்படித்தான் பிரித்து படைத்துள்ளான் என்று எண்ணுவீர்கள். ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது, அவை அனைத்தும் இணைந்து செயல்பட்டால்தான், சமுதாயம் என்று உருவாகும் என்பதை அறிந்து கொள்வீர்கள். திருக்குர்ஆன் மேற்கொண்டு என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.

 فَاَمَّا مَنۡ اَعۡطٰى وَاتَّقٰىۙ‏ ﴿۵﴾  وَصَدَّقَ بِالۡحُسۡنٰىۙ‏ ﴿۶﴾ فَسَنُيَسِّرُهٗ لِلۡيُسۡرٰىؕ‏ ﴿۷﴾

92:5-7 எந்த சமுதாயம் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்

﴾ وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ‏ ﴿۸﴾  وَكَذَّبَ بِالۡحُسۡنٰىۙ‏ ﴿۹﴾  فَسَنُيَسِّرُهٗ لِلۡعُسۡرٰىؕ‏ ﴿۱۰

92:8-10 ஆனால் எவன் உலோபித்தனம் செய்து, அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, இன்னும், நல்லவற்றை பொய்யாக்கு கிறானோ, அவனுக்குக் கஷ்டத்திற்குள்ள வழியைத்தான் இலேசாக்குவோம்.
விளக்கம்:
கவனித்தீர்களா? இங்கு இருவகையான சமுதாயத்தைப் பற்றி பேசுகிறது. அதில் ஒன்று, கொடுக்கும் மனப்பான்மையும், அல்லாஹ்வுக்குப் பயந்து சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் எண்ணமும் கொண்ட சமுதாயம். அது சுவனத்தை எளிதில் ஈட்டிக் கொள்ளும் என்கிறது. இதற்கு மாறாக இரண்டாவது வகையினரிடம், சுயநலமும் கஞ்சத்தனமும் வளர்ந்து, சமுதாய சமன்பாடு என்பதெல்லாம் தேவைற்றது என்ற எண்ணம் கொள்கிறது. அத்தகைய சமுதாயத்தில் நரகத்தின் வாயில்கள் தான் திறக்கும். அதாவது சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகள் தோன்றி வரும் என்று சொல்லப்படுகிறது.
எனவே ஒவ்வொரு நாட்டிலும் தொழில் வளர்ச்சிக்கான கல்வியை அளிப்பதுடன் ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட கல்வியையும் அளித்திடல் மிக மிக முக்கியம் என்றாகிவிடுகிறது. அப்போதுதான் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.


28.மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகள்:

மேலும் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் அடுத்த வேளை உணவைப் பற்றி கவலைப் படுவதில்லை. அவற்றிற்கு பசி எடுக்கும் போது, தன் ஆகாரத்தை வேட்டையாடியோ அல்லது தம் ஆகாரம் இருக்கும் இடத்தை தேடிச் சென்றோ அடைந்து கொள்கின்றன. ஆனால் மனித வாழ்வு அப்படி இருப்பதில்லை. இவன் தன் உணவு வகைகளை சேமித்து வைக்க கடமைப் பட்டுள்ளான். இவ்வாறு செய்யவில்லை என்றால் அவன் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவான். எனவே ஒவ்வொரு நாட்டிலும், உணவு உற்பத்தியை சீர்படுத்தி, அவற்றை சேமித்து வைக்க தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.

ஒரு சில நாடுகள் இதை ஓரளவிற்கு சீர் செய்து உணவு விஷயத்தில் வெற்றியும் கண்டுள்ளன. மற்றும் பல நாடுகள் இதற்கான முயற்சியை சரிவர எடுக்காததால், மற்ற நாடுகளிடம் கையேந்தி வருகின்றன. இப்படியாக இன்றைய நவின உலகம், கூட்டுக் குடும்பமாகவே காணப்படுகிறது. இருப்பினும், இவையெல்லாம் மனித வாழ்வின் ஒரு பகுதியாகும். மேற் சொன்ன 92ஆவது அத்தியாயத்தின் வாசகங்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய நவீன உலகிலும், இந்த சுயநலம் நாடுகளுக்கிடையே காணப்படுகிறது. தன் நாடு, தன் இனம், தம் மொழி என்ற அடிப்படையில் அந்த சுயநலம் வளர்ந்துள்ளதை காண்பீர்கள். இத்தகைய எண்ணங்களை எல்லாம் மனிதன் விட்டுவிட வேண்டும். காரணம் அவன் அடுத்த கட்ட வாழ்விற்கு தயாராகிக் கொள்ள தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் தன் இனம் என்று பாராமல், மனிதன் என்ற அடிப்படையில் கவனித்து அதற்கேற்றவாறு செயல்பட்டால்தான் அவனுள் “மனித நேயம்” வளரும். இதற்காக அவனுக்கு இறைவழிகாட்டுதல் அவசியமாகிறது.


29.அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களும் மனித இனமும்:

நாம் ஏற்கனவே சொன்னது போல சமுதாய மக்களுள் அல்லாஹ்வின் சிறப்பு குணநலங்கள் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளன என்பதை, அவர்கள் கடைப்பிக்கின்ற வழிமுறைகளைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். அதாவது அவர்கள் எந்த அளவிற்கு அல்லாஹ் வழிவகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதல்களைப் பேணி நடக்கிறார்களோ, அந்த அளவே அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகள் அம்மக்களுள் வளர்ந்துள்ளதைக் காண முடியும்.

எடுத்துக்காட்டிற்கு அல்லாஹ் “அல்ஆதிலு” வாக - நீதிமானாக இருக்கிறான். (பார்க்க 4:40) அல்ஆதிலுவாக இருக்கும் அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நோக்கி, மக்களிடையே நீதி வழங்குமாறு அறிவுறுத்துகிறான். (பார்க்க 5:8) அதாவது அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களில் ஒன்றாக இருக்கும் “அதல்” என்ற பண்புகள் மனிதனுக்குள்ளும் வளரவேண்டும். எனவே மனிதன் வாழும் இவ்வுலகில் இத்தகைய பொறுப்புகளை மனிதனுக்கே அளித்து விடுகிறான். இறைவழிகாட்டுதல்கள் அடங்கியுள்ள திருக்குர்ஆனை கடைப்பிடிக்கா விட்டால், அவன் தன் மனோ இச்சையின்படியே நீதி வழங்குவான். இதனால் நீதிவழங்குபவன் தனக்குச் சாதகமாக இருப்பவரை ஆதரித்து தீர்ப்பளித்து விடுவான். அதனால் சமுதாயத்தில் அநியாயம் அக்கிரமம் மலிந்து விடும். இறுதியாக அச்சமுதாயம் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.

எடுத்துக்காட்டு-2: அல்லாஹ் அர்ராஜிகுவாக இருக்கிறான். அதாவது அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவன் - வாழ்வாதார வசதிகளை செய்து தருபவன். (பார்க்க 11:6) மனிதனும் அறிந்தோ, அறியாமலோ தன் குடும்ப அளவிற்கு வாழ்வதார வசதிகளை செய்து தருபவனாகவே இருக்கிறான். அல்லாஹ்வின் இந்தச் சிறப்பு குணநலம், தன்னளவில் மனிதனுள் வளர்ந்து வருகிறது. இறைவழிகாட்டுதலை அளிக்காமல் மக்களை அவரவர் போக்கில் விட்டுவிட்டால்,அவர்களுள் சுயநலம் மிகைத்து, தம் குடும்பம் வரை வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து விடுவார்கள். அதிகப் பட்சமாக தம் இனத்தவர்கள் அல்லது தம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றுதான் அந்த எண்ணம் விரிவடையும். அதையும் கடந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பற்றிய எண்ணமே வராது. ஆனால் அல்லாஹ் சமுதாய சமச்சீர்நிலையை ஏற்படுத்தி கட்டிக் காப்பாற்ற மனிதனுக்கு அறிவுறுத்துகிறான்.

﴾ اَلَّا تَطۡغَوۡا فِى الۡمِيۡزَانِ‏ ﴿۸

55:8. சமுதாய சமன்பாட்டை சீர்குலைக்காதே.
விளக்கம்:
இறைவன் படைத்த படைப்புகளில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவது போலவே, மனித சமுதயாங்களிலும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாத சமச்சீரான சமுதாயம் உருவாகிட இறைவழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது.

﴾  وَاَقِيۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِيۡزَانَ‏ ﴿۹

55:9. மனித சமுதாயமே! நீ உன் சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சமன்பாட்டை (Socio- Economic Balance) ஏற்படுத்து. அதில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வோ, அநீதியோ ஏற்படாதவாறு கட்டிக் காப்பாற்று.

وَالۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِۙ‏ ﴿۱۰﴾

55:10. இந்தப் பூமியில் விளையும் உணவு வகைகள் யாவும் அனைத்து உயிரினங்களுக்காகவுமே ஆகும். எனவே அவற்றை அனைவருக்கும் கிடைக்கும்படி பொதுஉடமை ஆக்கு.

فِيۡهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَكۡمَامِ‌ ۖ‏ ﴿۱۱﴾ ﴾ وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّيۡحَانُ‌ۚ‏ ﴿۱۲

55:11-12. அந்த உணவு வகைகளில் ருசி மிக்க கனி வகைகளும், பாளையுடைய பேரீத்த மரங்களும் அடங்கும். தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், நறுமணம் மிக்க செடிகளும் அவற்றில் அடங்கும்.

விளக்கம்: அகிலங்களையும் பூமியையும் படைத்து, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், சமச்சீர் நிலையுடன் செயல்படுத்தி வரும் அல்லாஹ், மனித உலகில் சமச்சீர்நிலையை காப்பாற்றி வரும்படி மனிதனுக்கே அறிவுரை செய்திருப்பதை கவனித்துப் பாருங்கள். அல்லாஹ்வால் முடியாமல் அவ்வாறு அறிவுருத்த வில்லை. மனிதனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டதன் காரணமாக, உலகை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை மனிதனுக்கே விட்டுவிடுகிறான். இதுதான் உண்மை.


30.மனித வாழ்வின் இலக்கு – 1.

எனவே இறை வழிகாட்டுதலின் படி சமச்சீரான சமூக அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால், மக்களுள் சுயநலப்போக்கு வளர்ந்து, வாழ்வாதாரங்களையும் செல்வங்களையும் இயன்றவரையில் குவிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். இதனால் சமூக சமன்பாடு சீர்குலைந்து நலிந்த மக்கள் அவதிக்குள்ளாவார்கள். எனவேதான் இறைவனின் வழிகாட்டுதலை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து அதன்படி சமூக சமன்பாட்டினைப் பாதுகாத்து, சிறப்பாக வாழ, திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. உலகில் மனிதன் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே எண்ணற்ற அருட்கொடைகளை இறைவன் ஏற்படுத்தி உள்ளதாவும் ஆங்காங்கே எடுத்துரைக்கிறது.
இப்படியாக அல்லாஹ்வின் பல்வேறு சிறப்புக் குணநலன்கள் யாவும் உலகம் முழுவதும் முழுமையான அளவில் சமச்சீராக பரவி உள்ளன. அவற்றில் சில, மனிதனிடத்திலும் இம்மியளவு வளராத் தன்மையுடன் உள்ளன. அவற்றை கூடுமான வரையில் தம்முள் வளர்த்துக் கொள்வதே மனிதனின் இலக்காக இருக்கிறது. அவை சரியான கோணத்தில் சமச்சீராக வளரவேண்டும் என்றால் அவனுக்கு இறைவழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன. அவை திருக்குர்ஆனில் பதிவாகி பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன (பார்க்க 15:9)

உதாரணத்திற்கு “அர்ராஜிகு” என்ற சிறப்பு குணநலத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். மனிதன் தனக்குக் கிடைக்கின்ற வாழ்வாதாரங்களை தனக்காகவே என எண்ணிக் கொள்கின்றான். ஆனால் அல்லாஹ்வின் அறிவுரை என்னவென்றால் இந்த வாழ்வாதார வசதிகள் தம் தேவைக்கு போக மிகுதியானவற்றை தன்வரை வைத்துக் கொள்ளாமல், அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்கிறது. இதற்காக தன்னிடமுள்ள உபரிச் செல்வங்களை மக்கள் நலத்திட்டத்திற்காக அளித்திட வலியுறுத்துகிறது. (பார்க்க 2:219) ஆக சமுதாய மேம்பாட்டிற்காக செயல் திட்டங்களைத் தீட்டி உழைப்பதையே “அமலெ சாலிஹாத்” என்கிறது திருக்குர்ஆன் (பார்க்க 63:10)


31.அல்லாஹ் கூறும் நற்செயல்கள்:

وَاَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰكُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِىَ اَحَدَكُمُ الۡمَوۡتُ فَيَقُوۡلَ رَبِّ لَوۡلَاۤ اَخَّرۡتَنِىۡۤ اِلٰٓى اَجَلٍ قَرِيۡبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنۡ مِّنَ الصّٰلِحِيۡنَ‏ ﴿۱۰﴾

63:10 ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு முன்பே உங்களிடமுள்ள உபரிச் செல்வங்களை சமுதாய மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தி வாருங்கள். மரணத்திற்குப் பின் இந்த வாய்ப்பு உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. அவ்வாறு செய்யவில்லை என்றால், மரணம் ஏற்படும் தருவாயில், “இறைவா! இன்னும் சிறிது அவகாசம் எனக்கு அளிக்க மாட்டாயா? அப்போது நானும் பொருளுதவி செய்து “சாலிஹீன்” களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று இறைஞ்சுவீர்கள்.
கவனித்தீர்களா? சமுதாய மேம்பாட்டிற்காக செலவு செய்வதையே “சாலிஹான” நற்செயல் என்கிறது. எனவே அர்ராஜிகு என்ற அல்லாஹ்வின் தனித்தன்மை சமுதாயம் முழுவதும் பரவி, அனைத்தும் அனைவருக்கும் என்ற அடிப்படையில் அமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே அல்லாஹ்வின் ஆட்சி அமைப்பு என்பதாகும். மேலும் வாழ்வாதார வசதிகள் பெருக வேண்டும் என்றால்,அல்லாஹ்விடம் துவா செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அல்லாஹ் படைத்துள்ள படைப்புகளை ஆராய்ச்சி செய்ய திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. திருக்குர்ஆனின் வாசகங்களைக் கவனித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்கள் மனித அளவில் வளர்த்துக் கொண்டிருப்பவர்களை நோக்கித்தான் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

(رَضِىَ اللّٰهُ عَنۡهُمۡ وَرَضُوۡا عَنۡهُ ‌ؕ ذٰلِكَ لِمَنۡ خَشِىَ رَبَّهٗ‏ ﴿۸

98:8 அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
கவனித்தீர்களா? “இறைவனுக்கு பயப்படுவர்கள்” யார்? அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் எதிர் விளைவுகளை தவிர்க்க முடியாது என்பதை அறிந்து செயல்படுபவர்களே இறைவனுக்குப் பயப்படுபவர்கள் ஆவார்கள். இத்தகையவர்கள் யாவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவோ அதன்படியே செயல்படுவார்கள். இவர்களின் தேவை என்னவோ அவற்றை அல்லாஹ் தாராளமாக வழங்குவான்.

جَزَآؤُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَاۤ اَبَدًا ‌ؕ

98:8. இவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் வற்றாத ஜீவநதி போல் நிலையாக செழிக்கும். இத்தகைய சுவனத்தில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
எனவேதான் சஹாபா பெருமக்களின் பெயரோடு “ரலி” என்று சொல்கிறோம். அதாவது அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்கள் இதற்காக அல்லாஹ்வின் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள ஆவன செய்தார்கள். சமுதாயத்தில் எங்கும் பசி பட்டினி என்ற நிலை உருவாகாதவாறு பார்த்துக் கொண்டார்கள். (3:189-190)


32.அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் விஞ்ஞானமும்:

وَسَخَّرَ لَـكُمُ الَّيۡلَ وَالنَّهَارَۙ وَالشَّمۡسَ وَالۡقَمَرَ‌ؕ وَالنُّجُوۡمُ مُسَخَّرٰتٌۢ بِاَمۡرِهٖؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوۡمٍ يَّعۡقِلُوۡنَۙ‏ ﴿۱۲﴾ 

16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான், அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப் பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு (த்தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
மேலும் இரவையும் பகலையும் மாறிமாறி வரும்படியாகவும், சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கோள்களைப் படைத்து உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக செயல்படும்படி ஆக்கி வைத்ததும் அல்லாஹ்தான். இறைவனின் இயற்கைப் படைப்புகளை ஆராய்ச்சி செய்யும் மக்களுக்கு அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை நீங்கள் பயன்படுத்தும் வகையில் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி நாம் அறிந்தால்தான் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். எனவே அறிவியல் ஆராய்ச்சி கூடங்களை ஏற்படுத்தி, மாணவர்களை வான்மண்டல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சிறந்த அறிஞர்களாக - ஆலிம்களாக (பார்க்க 35:27-28) உருவாக்குவது ஒவ்வொரு ஆட்சியமைப்பின் கடமையுமாகும். ஏனெனில் ஆய்ந்தறியக் கூடிய மக்களுக்குத் தான் இதில் அத்தாட்சிகள் பல கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக மனிதன் அறிந்தோ அறியாமலோ அல்லாஹ் படைத்துள்ள படைப்புகளின் துணையைக் கொண்டுதான் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

﴾ وَمَا ذَرَاَ لَـكُمۡ فِى الۡاَرۡضِ مُخۡتَلِفًا اَلۡوَانُهٗ‌ ؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً لّـِقَوۡمٍ يَّذَّكَّرُوۡنَ‏ ﴿۱۳ 

16:13. இன்னும்,பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களை உடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள் போன்ற)வையும் ஆகும், நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
விளக்கம்:
வான் மண்டலத்திலிருந்து கீழிறங்கி, நீங்கள் வாழும் பூமியை கவனித்துப் பாருங்கள். இறைவனின் பரிபாலன ஏற்பாடுகளின்படி வண்ண வண்ண செடி கொடிகளும், உயிர்ப் பிராணிகளும், +பறவைகளும் எவ்வளவு அழகாகப் படைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள். இறைவன் படைத்த இயற்கைப் படைப்புகளைப் பற்றி ஆராச்சி செய்யும் மக்களுக்கு இவையாவும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
அதாவது ஒரே நீரின் தன்மையைக் கொண்டு உருவாகும் செடி கொடிகள், உயிரினங்கள் மற்றும் பறவைகள் யாவும் பல்வேறு நிறங்களையும், தன்மைகளையும், உருவங்களையும் உடையதாக இருப்பதைக் கவனித்துப் பாருங்கள். அவையாவும் மனிதனுக்கு உணவாகவும், மருத்துவ மூலிகைகளாகவும் பயனளிக்கின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே இவற்றை ஆராய்ச்சி செய்து மக்களின் நல் வாழ்விற்காக பாடுபடுபவர்களே மூஃமின்கள் ஆவார்கள். (பார்க்க 3:190&191). அவற்றை ஆராய்ச்சி செய்பவர்களை உலமாக்கள் (Scientist) என்கிறது. (பார்க்க 35:27-28)

وَهُوَ الَّذِىۡ سَخَّرَ الۡبَحۡرَ لِتَاۡكُلُوۡا مِنۡهُ لَحۡمًا طَرِيًّا وَّتَسۡتَخۡرِجُوۡا مِنۡهُ حِلۡيَةً تَلۡبَسُوۡنَهَا‌ۚ وَتَرَى الۡـفُلۡكَ مَوَاخِرَ فِيۡهِ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِهٖ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ‏ ﴿۱۴﴾

16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான், இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
விளக்கம்:
(1) நிலத்தின் வளத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்குப் பின், நீர்வள ஆராய்ச்சிகளின் பக்கம் வாருங்கள். கடல்களையும் சமுத்திரங்களையும் (Rivers,Seas and Oceans) உங்களுக்குப் பல்வேறு பலன்கள் கிடைக்கும்படியாக படைத்ததும் அல்லாஹ்தான்.
(2) ஆழ்கடல் ஆராய்ச்சிகளை (Oceanography) மேற்கொண்டு, ருசிமிக்க உணவாகத் திகழும் மீன்களையும், உங்களை அலங்கரித்துக்கொள்ள அழகான ஆபரணங்களாகிய முத்து, பவளம் போன்றவற்றையும் ஏற்பாடுகளை செய்ததும் அல்லாஹ்தான்.
(3) அது மட்டுமின்றி கடல் நீரைப் பிளந்துக் கொண்டு வேகமாய்ச் செல்லும் கப்பல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அவற்றைக் கொண்டு உலகிலுள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று உணவு வகைகள் மற்றும் வணிகப் பொருட்கள் போன்ற இறைவனின் அருட்கொடைகளை எளிதாக கொண்டு வர முடிகிறது. இப்படியாக உலக மக்கள் அனைவரும் தத்தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, அவை பெரிதும் உதவுகின்றன.
(4) ஆக இந்தப் படைப்புகள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. நீங்களும் அவற்றை உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துங்கள். இதுவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் செயலாகும்.

சிந்தனையாளர்களே! அல்லாஹ் அனைத்தையும் மனிதனுக்காகவே படைத்துள்ளதாக கூறுகிறான். மனிதன் தன் ஆராய்ச்சியின் மூலம் தன்னுடைய வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ளவேண்டும். எனவேதான் திருக்குர்ஆன்

(وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏ ﴿۳۹﴾ وَاَنَّ سَعۡيَهٗ سَوۡفَ يُرٰى‏ ﴿۴۰

53:39 மனிதன் எதற்காக உழைக்கின்றானோ அவைதானே அவனுக்குக் கிடைக்கும்? உழைக்காதவனுக்கு என்ன கிடைக்கும்? ஆனால் மனித உழைப்பின் பலன்கள் எதுவும் வீண்போகாது. அவற்றின் பலன்கள் விரைந்து தோற்றத்திற்கு வரும்.

ஆக விஞ்ஞானம் என்பது அல்லாஹ்வின் படைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் வழிமுறைக்குச் சொல்வார்கள். அவை மனிதனின் வாழ்வாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். அவன் எந்த அளவுக்கு அயராது உழைத்து தன் சமுதாயத்தை சிறப்பாக்கிக் கொள்கின்றானோ, அந்த அளவுக்கு அவனுடைய சமுதாயம் வேகமாக வளர்ச்சி பெற்று சிறப்பாக விளங்கும்.
ஆனால் மனிதன் பண்புள்ளவனாக விளங்குவதற்கு வேண்டிய வழிமுறைகள் என்னவென்பதை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒரு போதும் அறிவிக்காது. எனவே அந்தக் குறையை திருக்குர்ஆன் நிறைவு செய்துவிடுகிறது. இல்லையெனில் ஒவ்வொரு விஷயத்தையும் மனிதன் அனுபவப்பட்டே அறிந்து கொள்ள வேண்டி வரும். இதற்காக அவன் யுகங்களைக் கடக்க வேண்டி வரும்.


33.அல்லாஹ்வின் நேரடி தலையீடு:

அல்லாஹ் அனைத்தும் செய்யக் கூடிய வல்லமை உடையவனாக இருந்தும் கூட, அவன் மனித வாழ்வில் ஏன் நேரடியாக செயல்படுவதில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறது. மனிதன் மீது ஏன் பொறுப்பை விதிக்க வேண்டும்? அல்லாஹ் ஒன்றுமே செய்வதில்லையா? அல்லாஹ்வால் எதுவும் செய்ய முடியாதா? இது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழும். அல்லாஹ் அனைத்தையும் செய்யக் கூடியவனாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அல்லாஹ், தன் செயல்திட்டப்படி இவ்வுலகை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை மனிதனுக்கு வழங்கி விட்டதால்,அவன் தன் சிறப்பு குணநலன்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறான். எனவே மனிதன் வாழும் உலகில் மனிதன்தான் செயலாற்ற வேண்டும் என்பது அல்லாஹ்வின் திட்டமாகும். திருக்குர்ஆனின் சில வாசகங்களை கவனித்துப் பாருங்கள். இது 2ஆவது அத்தியாயத்தில் வருகிறது.

 وَلَوۡلَا دَفۡعُ اللّٰهِ النَّاسَ بَعۡضَهُمۡ بِبَعۡضٍ لَّفَسَدَتِ الۡاَرۡضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوۡ فَضۡلٍ عَلَى الۡعٰلَمِيۡنَ‏

2:251 (இவ்விதமாக) அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு,(தீமை செய்யும்) ஒரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங் கருணை உடையோனாக இருக்கின்றான்.
விளக்கம்:
அல்லாஹ் நன்மை செய்யும் கூட்டத்தாரைக் கொண்டு, தீமை செய்யும் கூட்டத்தாரை அழிக்கிறான். அவ்வாறு அழிக்காவிட்டால் உலகமே சீர்கெட்டுப் போய்விடும். அகிலத்தார் அனைவரும் சிறப்பாக வாழ வழி செய்திருக்கும் இத்திட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கருணையை பிரதிபலிக்கிறது அல்லவா?.
கவனித்தீர்களா? உலகில் நடக்கின்ற அநியாயத்தை ஒடுக்குவதற்காக நன்மை செய்யும் படையினரை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. எனவே உலக விவகாரங்களில் அல்லாஹ்வின் நேரடி தலையீடு இருப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அதே போல் இன்னொரு வாசகத்தையும் கவனித்துப் பாருங்கள். நபிஸல் அவர்களை நோக்கி இவ்வாறு சொல்லப்படுகிறது.

وَاِذَا كُنۡتَ فِيۡهِمۡ فَاَقَمۡتَ لَهُمُ الصَّلٰوةَ فَلۡتَقُمۡ طَآٮِٕفَةٌ مِّنۡهُمۡ مَّعَكَ وَلۡيَاۡخُذُوۡۤا اَسۡلِحَتَهُمۡ فَاِذَا سَجَدُوۡا فَلۡيَكُوۡنُوۡا مِنۡ وَّرَآٮِٕكُمۡ وَلۡتَاۡتِ طَآٮِٕفَةٌ اُخۡرٰى لَمۡ يُصَلُّوۡا فَلۡيُصَلُّوۡا مَعَكَ وَلۡيَاۡخُذُوۡا حِذۡرَهُمۡ وَاَسۡلِحَتَهُمۡ‌ ۚ وَدَّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ تَغۡفُلُوۡنَ عَنۡ اَسۡلِحَتِكُمۡ وَاَمۡتِعَتِكُمۡ فَيَمِيۡلُوۡنَ عَلَيۡكُمۡ مَّيۡلَةً وَّاحِدَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ اِنۡ كَانَ بِكُمۡ اَ ذًى مِّنۡ مَّطَرٍ اَوۡ كُنۡـتُمۡ مَّرۡضٰۤى اَنۡ تَضَعُوۡۤا اَسۡلِحَتَكُمۡ‌ ۚ وَ خُذُوۡا حِذۡرَكُمۡ‌ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلۡكٰفِرِيۡنَ عَذَابًا مُّهِيۡنًا‏ ﴿۱۰۲﴾

4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழ வைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும், அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்), அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்,
கவனித்தீர்களா? போர் சமயங்களிலும் எல்லோரும் ஒரணியாக நின்று தொழக் கூடாது என்று அறிவுருத்துவதைக் கவனியுங்கள். இரு பிரிவாகப் பிரித்து தொழ வைக்கச் அறிவுருத்தப்படுகிறது. காரணம், தருணம் பார்த்து பகைவர்கள் தாக்கிவிடுவார்கள். எனவே கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.
அல்லாஹ் நாடி இருந்தால் அவ்வாறு நடக்காதவாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதுவல்ல. மனிதனுக்கு பொறுப்பைக் கொடுத்து விட்டதால், அல்லாஹ் மனிதனுக்கு அறிவுரையை மட்டும்தான் செய்கிறான். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தான் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு வழி காட்டுவதாக உள்ளன. அவன் அவ்வழிகாட்டுதலை விட்டுவிட்டால்,அல்லாஹ்விடம் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. அதன்பின் காலப்போக்கில் அல்லாஹ்வே, நம் பிரச்னைகளை தீர்த்து வைப்பான் என்ற எதிர் பார்ப்பில் இருந்து விடுவான்.

هَلۡ يَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّاۡتِيَهُمُ اللّٰهُ فِىۡ ظُلَلٍ مِّنَ الۡغَمَامِ وَالۡمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الۡاَمۡرُ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۲۱۰﴾

2:210. அல்லாஹ்வும் (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
விளக்கம்:
இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு தம் மனோ இச்சையின்படி வாழும் சமுதாயம், காலப் போக்கில் மூட நம்பிக்கையில் மூழ்கிவிடும். அதன்பின் அல்லாஹ்வும் பிரபஞ்ச சக்திகளாகிய மலக்குகளும் மேகங்கள் வானில் நிழலிடுவது போல் வந்து, இவர்களுடைய துயரங்களைத் தீர்த்து வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் இருப்பார்கள். இத்தகைய எதிர்பார்ப்புகள் யாவும் எந்த அளவிற்கு வீணானது என்பதை, இவர்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அறிந்துக் கொள்வார்கள். அல்லது மரணத்திற்கு பின் தெரிந்து விடும்.
எனவேதான் இவ்வுலகில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, கூடவே அவன் எப்படி வாழவேண்டும் என்ற வழிகாட்டுதலையும் நபிமார்கள் மூலம் அல்லாஹ் அளித்துவிட்டான். அவ்வழிகாட்டுதல்கள் தம் அசல் வடிவில் திருக்குர்ஆனில் உள்ளன. இந்தப் பேருண்மையை இன்னொரு கோணத்திலும் எடுத்துரைக்கிறோம். அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.


34.மனித வாழ்வின் இலக்கு – 2:

மக்களில் சிலரைத் தவிர்த்து, பலர் தம் வாழ்வில் ஏதாவது சாதனைப் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுடைய வாழ்வின் இலட்சியமும் அதுவாகவே இருக்கும். இந்த இலக்கை அடைய சாதனைப் படைத்தவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வார்கள்.
ஒருவர் பணக்காரராக ஆக வேண்டும் என்றால் டாட்டா, பிர்லா போன்றவர்களை முன்மாதிரியாக வைப்பார்கள். மல்யுத்த வீரராக ஆக வேண்டும் என்றால் தாராசிங், கிங்காங் அல்லது மைக் டைசன் போன்ற மல்யுத்த வீரர்களைப் போல் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சிறந்த வியாபாரி ஆக வேண்டும் என்றால் அம்பானி குடும்பத்தை மேற்கோள் காட்டுவார்கள்.
ஆனால் ஒருவர் சிறந்த மனிதர் ஆகவேண்டும் என்றால் அவர்முன் என்ன முன்மாதிரி (Patent) இருக்கிறது? அவன் யாரை பின்பற்ற வேண்டும்? அவர்முன் இதற்காக எத்தகைய முன்மாதிரி இருக்க வேண்டும்? திருக்குர்ஆன் இதற்காக ஒரு முன்மாதிரியை அறிவிக்கிறது. அதுதான் அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்கள்- சிஃபத்துகள் என்பதாகும். மனிதனின் சிறப்பான வாழ்க்கை முறைக்கு அல்லாஹ்வின் சிஃபத்துக்களை முன்மாதரியாக ஆக்கிக் கொள்ள அது வலியுறுத்துகிறது. அதன் வாசகத்தை கவனித்துப் பாருங்கள்.


35.அல்லாஹ்வின் ஸிஃபத்துகள் - சிறப்பு குண நலன்கள்

(صِبۡغَةَ اللّٰهِ ‌ۚ وَمَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ صِبۡغَةً  وَّنَحۡنُ لَهٗ عٰبِدُوۡنَ‏ ﴿۱۳۸ 

2:138 “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம் ஆகும், வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகின்றோம்" (எனக் கூறுவீராக).

விளக்கம்:
அல்லாஹ்வின் வண்ண வண்ண ஸிஃப்பத்துகள் என்கின்ற சிறப்புக் குணநலன்களே மனிதன் முன்னுள்ள தலைசிறந்த முன்மாதிரிகளாகும். மனிதன் தனக்குள் இவற்றை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஏனெனில் அல்லாஹ்வின் வண்ணமிகு சிறப்புக் குணநலன்களைவிட சிறந்த குணநலன்கள் (Patent) வேறு யாருடையதாக இருக்க முடியும்? எனவே அல்லாஹ்வுக்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்கிறோம் என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
நாம் ஏற்கனவே சொன்னபடி அல்லாஹ்விடமுள்ள ஸிஃபத்துகள் - சிறப்பு குணநலன்கள் - அகிலங்கள் அனைத்திலும் முழுமையான நிலையிலும், சமச்சீராகவும் பல்வேறு சக்திகள் வடிவில் செயல்பட்டு வருகின்றன. அவை அகிலங்களில் அவன் படைத்த இயற்கைப் படைப்புகளின் தன்மைகளாக (Properties) வெளிப்படுகின்றன. மனிதப் படைப்பும் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றாக இருப்பதால், அவனுக்குள்ளும் இந்த சிறப்பு குணநலன்கள் இம்மியளவு வளராத் தன்மையுடன் காணக் கிடைக்கின்றன. திருக்குர்ஆனின் போதனைகள் மூலம் அவற்றின் சிலவற்றை மனித அளவில் சம்சீராக வளர்த்துக் கொள்ள முடியும். இதுவும் மனித வாழ்வின் இலக்குகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதை சில எடுத்துக் காட்டுகளின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் சிறப்புக் குணநலங்களின் சிலவற்றை இங்கு தந்துள்ளோம்.

அல்ஆதிலு - நீதி வழங்குபவன்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நீதி வழங்குமாறு மனிதனுக்குக் கட்டளையிடப்படுகிறது (பாhக்க 5:8)

அர்ராஜிஃகு– வாழ்வாதாரங்களை அளிப்பவன் -
இதற்காக மழை, காற்று, சூரிய வெப்பம், பூமியின் தன்மை. இவற்றைக் கட்டக்கோப்பாக செயலபட வானம் ஆகிய ஏற்பாடுகளைத் தான் அல்லாஹ் செய்துள்ளான். (பார்க்க 56:63-70) அவற்றின் மூலம் உழைத்துப் பெற்றுக் கொள்ள மனிதனுக்கு அறிவுறுத்துகிறான். (பார்க்க 53:39)

அர் ரஹீமு : இறக்கமுடையவன்.
மனிதனுள் இந்த தன்மையும் வளராமல் இருக்கும். இறைவழிகாட்டுதலின் மூலம் இந்த குணநலங்களை வளர்க்க வேண்டும். இறைவழிகாட்டுதலை ஏற்காமல் வாழ்ந்தால் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுவார்கள். (2:74)

அல் மலிகு : பேரரசன் (67:1)
இந்த ஆளும் வல்லமை மனிதனிடத்திலும் உள்ளது.(4:54-55) ஆனால் மனிதன் தன்னிச்சையாக ஆட்சி செய்யாமல் அல்லாஹ் காட்டிய வழியில் ஆட்சி செய்ய வேண்டும். (பார்க்க 12:38-40) இதுவே அல்லாஹ்வின் ஆட்சி என்பதாகும்.

அல் ஹகீமு: ஞானமிக்கவன்.
திருக்குர்ஆனைப் பின்பற்றினால் மனிதனும் ஞானமுள்ளவனாக ஆக முடியும். (பார்க்க 33:34)

அல் ஃகபூரு : ஆபத்திலிருந்து பாதுகாப்பவன்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சமூகஅமைப்பு உருவாகும்போது, ஆபத்து விளைவிக்கும் செயல்களிலிருந்து அது மக்களை தடுக்கும். (பார்க்க 110:3)

அல் ஃகுத்தூஸு:பரிசுத்தமானவன்
திருக்குர்ஆனைப் பின்பற்றி மனிதனும் பரிசுத்த எண்ணங்களைக் கொண்டவனாக ஆகிவிடுவான்.(5:110)

அஸ் ஸலாமு :சாந்தியளிப்பவன்
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விரும்புவது சாந்தியும் சமாதானமுமே. வெறும் வார்த்தை ஜாலங்களால் இதை அடையவே முடியாது. சமுதாய நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டால் மட்டுமே இதை அடைய முடியும். (55:7-9)

அல் முஃமினு :நம்பிக்குரியவன்
இந்தச் சிறப்பு குணநலம் மனிதனுள் வளர்ந்தால்தான்,அவனை நம்பி ஆட்சி அதிகார பொறுப்புகளை ஒப்படைக்க முடியும். (பார்க்க 49:15)

அல் முஹைமினு: பாதுகாப்பு அளிப்பவன்
சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்குரிய உடல் வாகு, அறிவாற்றல் மற்றும் கல்விஞானமும் அவசியமாகிறது.

அல் அஜீஜு: மிகைப்பவன்
நன்மையான செயல்களைச் செய்வதில் ஒருவரையொருவர் மிகைத்திடல் வேண்டும். (2:148)

அல் ஜப்பாரு: அடக்கி ஆள்பவன்
பொறுப்புகளை சுமக்கும் தகுதியுடையவர்களாக ஆக வேண்டும். அப்போதுதான் தீயவர்களை அடக்கி வைக்க முடியும். (2:285)

அல் முதகப்பிரு: பெருமைக்கு உரியவன்.
அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களை தம்முள் வளர்த்துக் கொண்டால்தான் பெருமைக்கு உரியவர்களாக ஆக முடியும்.

அல் ஃகாலிகு: படைப்பவன்.
அல்லாஹ் படைத்துத் தந்துள்ள இயற்கைப் படைப்புகளைக் கொண்டு மனிதனும் தனக்கு வேண்டிய பொருட்களைப் படைத்துக் கொள்ள முடியும்.

அல் பாரிவு: ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்
இந்த குணநலமும் மனிதனிடத்தில் உண்டு. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வீட்டையும் நாட்டையும் ஒழுங்கு படுத்த முடியும்.

அல் முஸவ்விரு : உருவமளிப்பவன்.
அல்லாஹ் படைத்த இயற்கைப் படைப்புகளைக் கொண்டு மனிதனும் புதிய படைப்புகளுக்கு உருவமளிக்க முடியும்.

அல் ஹாதி: நேர்வழி காட்டுபவன்.
இந்தப் பொறுப்பையும் மனிதன் கையில் ஒப்படைக்கப்படுகிறது. (பார்க்க 3:110)

அல் ஹகீமு: மருத்துவம்:


(قُلۡ اَرَءَيۡتَكُمۡ اِنۡ اَتٰٮكُمۡ عَذَابُ اللّٰهِ اَوۡ اَ تَتۡكُمُ السَّاعَةُ اَغَيۡرَ اللّٰهِ تَدۡعُوۡنَ‌ۚ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏ ﴿۴۰

6:40 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி வேறு யாரையாவது) - அழைப்பீர்களா?" நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?
விளக்கம்:
அதாவது அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் உடல் நலக் குறைவு, நோய் நொடி அல்லது விபத்துகளால் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றை சரிசெய்ய நீங்கள் வழிபடும் தெய்வங்களிடம் சென்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையே! உடனே சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அல்லவா செல்கிறீர்கள்? அங்கு இயற்கைப் படைப்புகளின் ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த மருந்துகளைப் பயன்படுத்தி, அந்த நோயை குணப்படுத்திக் கொள்கிறீர்கள். அத்தகைய மருத்துவ வசதிகளுக்கு ஏற்ற வகையில் இயற்கைப் படைப்புகளைப் படைத்தது அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? எனவே அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டுதானே உங்களால் குணப்படுத்திக் கொள்ள முடிகிறது? இப்படியாகத் தான் அல்லாஹ் ஒவ்வொரு நோய்களையும் குணப்படுத்துகிறான்.


36.அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள சிறப்பு குணநலன்கள்:

அல் பதீவு : எப்பொருளின் துணையுமின்றி படைக்கும் வல்லமை. (2:117)
இது அல்லாஹ்வுக்கே உரிய தனிச் சிறப்பு. காரணம் அல்லாஹ் படைத்த இயற்கைப் படைப்புகளைக் கொண்டுதான் மனிதனால் புதிய படைப்புகளை உருவாக்கிக் கொலள்ள முடியுமே அன்றி ஒன்றுமில்லாததைக் கொண்டு அவனால் எதுவும் படைக்கவே முடியாது.

அல் ஹைய்யு: நித்திய ஜீவன் (2:255)
உலகில் எந்த ஜீவனமும் இவ்வுலகில் நிலைத்து வாழ முடியாது. எனவே இந்தச் சிறப்பும் அவனுக்கே உரியது.

அல் ஃபாதிரு: புதிதாக தோற்றுவிப்பவன் (35:1)
எப்பொருளின் துணையுமின்றி புதிதாகப் படைக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாகும்.

அல் அவ்வலு வல் ஆஃகிறு : முதன்மையானவனும் இறுதியானவனும் -
ஒவ்வொன்றையும் தோற்றுவித்து இறுதிவரையில சென்றடையச் செய்பவன். (57:3)

வாஹிதுல் ஃகஹ்ஹார்: அனைத்தையும் அடக்கியாளும் ஏக இறைவன். (40:16)


37.அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்:

وَلِلّٰهِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰى فَادۡعُوۡهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيۡنَ يُلۡحِدُوۡنَ فِىۡۤ اَسۡمَآٮِٕهٖ‌ ؕ سَيُجۡزَوۡنَ مَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ‏ ﴿۱۸۰﴾ 

7:180அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து)விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றவாறு கூலி கொடுக்கப்படும்.

விளக்கம்: மனிதன் வேதனைமிக்க வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்றால் அல்லாஹ்வின் அழகிய குணநலன்களை, மனித அளவில் சமுதாய மக்களுள் சமச் சீராக வளர ஆவன செய்யவேண்டும். அல்லாஹ்வுக்குப் பல குணநலன்கள் உள்ளன. அவற்றில் சில குணநலங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோரை விட்டு விலகி இருங்கள். அவர்களுடைய செயல்களுக்குத் தக்க விளைவுகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

அதாவது அல்லாஹ் ஞானமிக்கவன், அன்புடையோன், நீதிமிக்கவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், நேர்வழி காட்டுபவன்,கிருபை மிக்கவன் என பல அழகிய சிறப்பு குணநலன்கள் முழுமையான நிலையில் சமச்சீராக உள்ளன. அல்லாஹ்வின் படைப்பான மனிதனிடத்திலும் இந்த குணநலன்கள் வளராத் தன்மையில் இருக்கின்றன. அவற்றைச் சரிசமமாக மக்களுள் வளரச் செய்வது இறை ஆட்சியமைப்பின் தலையாய கடமையாகும். சில சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வின் ஓரிரு குணநலன்களை மட்டும் எடுத்துரைத்து தவறான வழியில் சென்று விடுகிறார்கள். உதாரணத்திற்கு அன்பே கடவுள் என்று கூறிக் கொண்டு அன்பு, காதல், களியாட்டம் என்று தவறான வழியில் சென்று விடுவார்கள். சிலர் இசையே (Music) கடவுள் என்று கூறி ஆட்டம் பாட்டம் என்று சமுதாயத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள் ஆகும்.

அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் குண நலன்களை சரிசமமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது அன்பு, பாசம் என்ற குணநலம், நீதி நியாயம் என்ற குணநலன்களுக்குக் குறுக்கீடாக இருக்கக் கூடாது. ஆக அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகள் மனிதனிடத்தில் மனித அளவில் சரிசமமாக வளர வேண்டும். (மேலும் பார்க்க 2:138) அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஏற்று அதன்படி வாழ முன்வந்தால் தான், அந்த சிறப்பு குணநலன்களை மனிதனுள் வளர்க்க முடியும். அவை தாமாகவே ஒருபோதும் வளராது. மூலையில் அமர்ந்து கொண்டு அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரித்த வண்ணம் தியானித்துக் கொண்டிருந்தாலும் வளராது. ஆக அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களை கூடுமான வரையில் மனித அளவில் வளர்த்துக் கொள்வது மனித வாழ்வின் இலக்காக உள்ளது.


38.மனிதன் தெய்வமாக ஆகிவிடுவானா?

எனவே அனைத்து சிறப்பு குணநலங்களையும் எவ்வித குறைவுமின்றி முழுமையான நிலையில் தன்னகத்தே கொண்டவன்தான் அல்லாஹ். அல்லாஹ்வுக்கு ஈடு இணையாக அகிலத்தில் யாரும் அந்த ஸ்தானத்தை அடையவே முடியாது. ஆனால் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றாகிய மனிதனிடத்திலும் அல்லாஹ்வின் சிறப்பு குணநலங்களே மனித அளவில் வளர வேண்டும் என்றே சொல்கிறோம். அவ்வாறு சொல்லும் போது, மனிதன் அல்லாஹ்வாக அல்லது இறைவனாக ஆகிவிடுவானா? அல்லாஹ்வுக்கு ஈடு இணையானவனாக ஆகிவிடுகின்றானா? என்ற கேள்வி எழுகிறது. ஒருபோதும் மனிதன் இறைவனாக ஆக முடியாது. உதாரணத்திற்கு ஒருவர் மருத்துவத் துறையில் தேர்ச்சி பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் மருத்துவராகத் தான் ஆக முடியுமே அன்றி, மருந்தாக அவர் ஆகிவிடமாட்டார். அது போல ஒருவன் அல்லாஹ்வின் குணநலங்களை தம்மில் வளர்த்துக் கொண்டால், அவர் ஒருபோதும் அல்லாஹ் ஆகிவிடமாட்டார். அல்லாஹ்வின் பண்புகள் உடையவராகத்தான் ஆக முடியும்.
மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம். சமுதாய மக்களுள் அல்லாஹ்வின் பண்புகள் வளர வேண்டும் என்றால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எவ்வித கலப்படமுமின்றி முழு அளவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் எல்லா தரப்பு மக்களுக்கும் போதிக்க வேண்டும். அப்போதுதான் அது சிறந்த சமுதாயமாகத் திகழ முடியும். சிறந்த பண்புள்ள மக்களை உருவாக்க முடியும்.


39.அல்லாஹ்வை (அ) இறைவனை சந்திப்பது என்றால் என்ன?

قَدۡ خَسِرَ الَّذِيۡنَ كَذَّبُوۡا بِلِقَآءِ اللّٰهِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتۡهُمُ السَّاعَةُ بَغۡتَةً قَالُوۡا يٰحَسۡرَتَنَا عَلٰى مَا فَرَّطۡنَا فِيۡهَا ۙ وَهُمۡ يَحۡمِلُوۡنَ اَوۡزَارَهُمۡ عَلٰى ظُهُوۡرِهِمۡ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوۡنَ‏ ﴿۳۱﴾ 

6:31. ஆகவே,அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள், நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர், அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது, உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள், அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
விளக்கம்:
அல்லாஹ்வை சந்திப்பதை பொய்யெனக் கூறி, தம் மனஇச்சையின்படி வாழ்ந்து வந்தவர்கள் பெரும் நஷ்டவாளிகளாக இருப்பார்கள். எதிர்பாராத விளைவுகள் அவர்கள் முன் வந்து நிற்கும் போது, நாங்கள் இது நாள் வரையில் கடைப்பிடித்து வந்த அலட்சியப் போக்கே இந்தக் கேடுகளுக்குக் காரணம் என்பார்கள். இவ்வாறு புலம்புவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அவர்கள் பாவச் சுமைகளின் பிடியில் சிக்கி நசுங்கிப் போவார்கள். எவ்வளவு பெரிய துர்பாக்கியமான நிலை இது என்பதை நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 ﴾وَ مَا الۡحَيٰوةُ الدُّنۡيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهۡوٌ‌ ؕ وَلَـلدَّارُ الۡاٰخِرَةُ خَيۡرٌ لِّـلَّذِيۡنَ يَتَّقُوۡنَ‌ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ‏ ﴿۳۲ 

6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை, பயபக்தி டையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
விளக்கம்:
அல்லாஹ்வை சந்திப்பதை பொய்யெனக் கூறுபவர்கள், இவ்வுலக வாழ்க்கையை வீண் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வார்கள். மேலும் அவர்கள் தம் செயல்களால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தம் மனோ இச்சைப்படியே வாழ்வார்கள். இதனால் அவர்களின் வாழ்வில் பிரச்னைகள் பூதாகரமாக ஏற்பட்டு அவர்கள் முன் வந்து நிற்கும். மாறாக அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற விதிமுறைக்குப் பயந்து செயல்படுபவர்களின் நிகழ்காலமும், வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பானதாக இருக்கும். (பார்க்க: 2:201 - 202) இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆனில் ஆங்காங்கே அல்லாஹ்வைச் சந்திப்பது அல்லது இறைவனைச் சந்திப்பது நிச்சயம் என்பது போன்ற வாசகங்கள் வருகின்றன. இப்படிப்பட்ட வாசகங்களுக்கு அல்லாஹ்வின் அல்லது இறைவனின் நியதிப்படி அவரவர் செய்த செயல்களின் பலன்களை அல்லது விளைவுகளை சந்திக்கும் கால கட்டம் என பொருள்படும். அதாவது மனிதன் செய்யும் நற்செயல்களுக்கு நற்பலன்களும், தீய செயல்களுக்குத் தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. உலகிலுள்ள சமுதாயங்கள் அல்லது நாடுகள் என்ற அடிப்படையில் கவனிக்கும் போது, அந்தந்த நாட்டு மக்களின் உழைப்பிற்கேற்ப பலன்களையும், தீய செயல்களுக்கேற்ப தீய விளைவுகளையும் அவை சந்தித்துக் கொள்கின்றன. இவை இவ்வுலகிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நற்செயல்களின் நற்பலன்களோ அல்லது தீய செயல்களின் விபரீத விளைவுகளோ உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அல்லாஹ்வின் நியதிப்படி அந்தந்த செயலுக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவை தோற்றத்திற்கு வருகின்றன. இந்தக் கால அளவு சில நாட்களாகவும் இருக்கலாம். மாதங்களாகவும் இருக்கலாம். ஏன்? வருடக் கணக்கிலும் இருக்கலாம். ஒரு விதை செடியாகி மரமாகி கனிப்பதற்கு எவ்வாறு காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதோ, அதே போன்று இந்த இடைவெளி காலத்தை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். இதைக் குர்ஆன் ‘அஜல்’ (காலத் தவணை) என்கிறது. இந்த இடைவெளி காலம் கொடுக்கப்பட்டதன் நோக்கமே ஒரு சமுதாயமோ அல்லது தனிநபரோ திருந்துவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பே ஆகும். (பார்க்க 16:61) இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொன்னால், அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் பொரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. எனவே அவர்கள் இப்படி நிகழப் போவதெல்லாம் பொய் என்று கூறி அலட்சியமாக இருந்துவிட்டு, பிற்காலத்தில் அவதிப்படுவார்கள்.

இரண்டாவதாக தனிநபர் விஷயத்தில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையிலேயே பலன்கள் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். அதே போன்று தீய செயல்களின் விளைவுகள் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம். அவரவர் வாழும் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இது அமையும். அதே சமயத்தில் மனிதனின் வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரக் கூடிய ஒன்றாக இருப்பதால் (பார்க்க 2:28, 37:58, 40:11, 44:56) அவன் செய்து வரும் நற்செயல்களுக்கான நற்பலன்களையோ அல்லது தீய செயல்களின் தீய விளைவுகளையோ நிச்சயமாக மரணத்திற்குப் பின் சந்தித்தே ஆகவேண்டியதாக இருக்கும். இவ்வாறாக தனிநபரோ ஒரு சமுதாயமோ, தாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சந்தித்துக் கொள்வதை அல்லாஹ்வைச் சந்திப்பது அல்லது இறைவனைச் சந்திப்பது எனும் குர்ஆனின் வாசகத்திற்குப் பொருளாகிறது.

எனவே மேற்சொன்ன 6:31 வாசகத்தின் பொருள் இவ்வாறு வரும் : அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகளை” சந்திக்கும் கால கட்டம் வந்தே தீரும் என்பதை நம்பாதவர்கள், அவ்விளைவுகள் ஏற்படும்போது பெரு நஷ்டவாளிகளாக . . . . .


40.கியாம நாளில் அல்லாஹ்வை பார்ப்போமா?

நாம் கியாம நாளில் அல்லாஹ்வை கண்டிப்பாகப் பார்ப்போம் என்று பலர் நினைக்கின்றனர். இவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்பது நம் கருத்தாகும். காரணம் அல்லாஹ் இல்லாத இடமே இல்லை எனும்போது, அவனை பார்க்க முடியும் என்று சொன்னால், அவனை நாம் குறிப்பிட்ட உருவத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கி விடுகிறோம் என்று தானே பொருள்படும்? உதாரணத்திற்கு நாம் வீட்டில் இருந்தபடி அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அல்லாஹ் நம் வீட்டில் நடப்பது மட்டுமின்றி, உலகிலுள்ள எல்லா இடங்களிலும் நடக்கின்ற விஷயங்களையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவன். எனவே அவன் குறிப்பிட்ட உருவத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால்தான் அவனைப் பார்க்க முடியும். உலகம் அனைத்திலும் தன் சக்தி வடிவில் பிரதிபலிப்பவனாக இருப்பதால் அவனை எவ்வாறு காண்பது?

(لَا تُدۡرِكُهُ الۡاَبۡصَارُ وَهُوَ يُدۡرِكُ الۡاَبۡصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيۡفُ الۡخَبِيۡرُ‏ ﴿۱۰۳

6:103. பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான்.அவன் நுட்பமானவன், தெளிவான ஞானமுடையவன்.
விளக்கம்:
எனவே புறப் பார்வையை வைத்துக்கொண்டு உங்களால் அல்லாஹ்வை ஒருபோதும் காண இயலாது. ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் இயற்கை ஏற்பாடுகள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் அல்லாஹ்வின் இந்த ஏற்பாடுகள் கண்மூடித்தனமான ஒன்றல்ல. முழுக்க முழுக்க மிகத் துல்லியமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளவையாகும்
அதாவது மனித பார்வை என்பது ஓர் எல்லைக்கு உட்பட்டதாகும். அதையும் கடந்து செல்ல வாய்ப்பில்லை. எனவே அளவிலா வல்லமையுடைய அல்லாஹ்வை ஓர் எல்லைக்கு உடப்பட்ட பார்வையை வைத்துக் கொண்டு இதுதான் அல்லாஹ் என்று எப்படி பார்த்துக் கூற முடியும்?

قَدْ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍۢ.

6:104.நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன, எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல" (என்று நபியே! நீர் கூறும்).
விளக்கம்:
எனவே அல்லாஹ்வைக் கண்கூடாகப் பார்க்கும் எண்ணங்களையும், அவனைக் கற்பனை வடிவில் கொண்டு வருவதையும் விட்டுவிட்டு, அவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட அறிவுப்பூர்வமான வழிகாட்டுதல்களை நீங்கள் உங்கள் அகப் பார்வையைக் கொண்டு சிந்தித்து ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். அவையே உங்கள் வாழ்விற்குப் பலனுள்ளதாக இருக்கும். யார் அவற்றைச் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக வாழ்கிறார்களோ,அவர்களுக்குக் கேடுகள்தான் ஏற்படும். எனவே உங்கள் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். அல்லாஹ்வோ நபியோ உங்கள் செயல்களின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். ஆக அல்லாஹ்வை மரணத்திற்குப் பின் சந்திப்போம் என்று சொல்வது ஆதாரமற்றது ஆகும்.


41.அல்லாஹ் யாருக்குச் சொந்தம்?

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். எனவே அல்லாஹ் முஸ்லிம்களின் தனிப்பட்ட கடவுள் என்றாகிவிடுகிறது. அகிலங்கள் அனைத்தையும், பூமியையும் படைத்து அதில் அனைத்து உயிரினங்களையும், அனைத்து மனித இனத்தையும் படைத்த இறைவன் எப்படி முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமாக முடியும்?

وَقَالَتِ الۡيَهُوۡدُ وَالنَّصٰرٰى نَحۡنُ اَبۡنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ‌ ؕ

5:18. யூதர்களும்,கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும், அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.
விளக்கம் :
திருக்குர்ஆன் இறக்கயருளப்படும் காலத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ் தமக்கு மட்டும் சொந்தம் என்று கூறி பெருமைப்பட்டு கொண்டிருந்தனர். அது மட்டுமின்றி அவர்களை மட்டும் அல்லாஹ் சுவனத்தில் சேர்ப்பான் என்றும் சொல்லி வந்தனர். அவர்களுடைய கூற்றை மறுக்கும் வகையில் அல்லாஹ் இவ்வாறு பதில் சொல்லும்படி அறிவுருத்துகிறான்.

قُلۡ اِنۡ كَانَتۡ لَـکُمُ الدَّارُ الۡاٰخِرَةُ عِنۡدَ اللّٰهِ خَالِصَةً مِّنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏ ﴿۹۴﴾

2:94. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக.
எனவே யாரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ் தமக்கு மட்டும் சொந்தமானவன் என்று கூறி பெருமைப்பட்டுக் கொள்வதில் யாதொரு பயனுமில்லை. காரணம்

بَلۡ اَنۡـتُمۡ بَشَرٌ مِّمَّنۡ خَلَقَ‌

5:18 “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்" என்று (நபியே!) நீர் கூறும்.
எனவே மக்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் எந்த அளவுக்கு இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقۡنٰكُمۡ مِّنۡ ذَكَرٍ وَّاُنۡثٰى وَجَعَلۡنٰكُمۡ شُعُوۡبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوۡا‌ ؕ اِنَّ اَكۡرَمَكُمعِنۡدَ اللّٰهِ اَ تۡقٰٮكُمۡ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيۡمٌ خَبِيۡرٌ ﴿۱۳ۡ

49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களை கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம், (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ,அவர் தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன். (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.
கவனித்தீர்களா? குலம் கோத்திரம் என்ற பிரிவுகளை ஏற்படுத்தியதன் நோக்கம் உடனுக்குடன் அடையாளம் கொள்வதற்காகத் தானே அன்றி, இதில் எல்லாம் உயர்வோ தாழ்வோ கிடையாது என்றும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதில் தான் உயர்வும் கண்ணியமும் கிடைக்கிறது என்றும் சொல்லப்படுவதைக் கவனியுங்கள். எனவே அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். எனவே அல்லாஹ் அனைவருக்கும் ஒருவனே ஆவான்.


42.மலாயிகா மீது ஈமான் கொள்வது?

திருக்குர்அனைப் பொருத்த வரையில், அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதோடு மட்டுமின்றி, மலாயிகா மீது ஈமான் கொள்வதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. (பார்க்க 2:177,2:285) முதலில் மலாயிக்கா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் ஈமான் கொள்ளும் விஷயத்தில் சிந்தித்துப் பார்த்து ஈமான் கொள்ள திருக்குர்ஆன் வலியுறுத்திச் சொல்கிறது. (பார்க்க 17:36, 25:73) வெறும் யூகத்தின் அடைப்படையிலோ அல்லது கற்பனை வடிவிலோ ஈமான் கொள்வதை கண்டிக்கிறது. (10:36)
திருக்குர்ஆனில் மலாயிகா என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. மலாயிக்கா மீது ஈமான் கொள்வது நிபந்தனையாக உள்ளது. அதாவது மலாயிக்கா மீது ஈமான் கொள்ளாவிட்டால், இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ள முடியாது. எனவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட நாம் அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றாகிய மலாயிகாவைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், “மலாயிகா” என்ற வார்த்தைக்கு ‘மலக்குகள்’ அல்லது ‘வானவர்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதன்பின் மலக்குகளும் மனிதர்களைப் போன்ற தோற்றமுடையவர்களே என்றும் சொல்லி வருகிறார்கள். இதற்காக திருக்குர்ஆனிலிருந்து சில வாசகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.
ஆனால் “மலாயிகா” அல்லது “வானவர்” என்ற சொல் பூமிக்கு மேல் வானங்கள் வரையில் பரவியுள்ள அனைத்து சக்திகளையும் குறிக்கும். அந்த சக்திகள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. உதாரணத்திற்கு பூமியை சுற்றியுள்ள புவி ஈர்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் துணையைக் கொண்டுதான், அனைத்து உயிரினங்களும், மற்ற படைப்புகளும் பூமியில் நிலை பெற்றுள்ளன. மனிதர்களாகிய நம்மாலும் செயல்பட முடிகிறது. இந்த புவி ஈர்ப்புச் சக்திக்கு, காற்று மண்டலம் உறுதுணையாக நிற்கிறது. இவ்விரண்டும் இணைந்து உயிரினங்களை வாழ வைக்கும் சக்திகளாக செயல்பட்டு வருகின்றன. இவ்விரு சக்திகளின் மூலம், மழை பொழிந்து பூமி செழிப்பாகிறது.

இத்தகைய எண்ணற்ற சக்திகள், பூமி மற்றும் வானங்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் ஐக்கியமாகியுள்ளன. இவ்வாறே மனித உடலிலும் இருவகையான சக்திகள் செயல்பட்டு வருகின்றன. (இதற்கு விளக்கம் பின்னாடி வரும்) எனவே உலக படைப்புகளில் ஐக்கியமாகியுள்ள சக்திகள் யாவும் அவற்றின் சக்திகளாகவும் தன்மைகளாகவும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய சக்திகள் மற்றும் தன்மைகள் அல்லது குணநலன்களைத் தான் “மலக்கு” என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் வேர்ச் சொல் அலீஃப், லாம், காஃப், மற்றும் மீம், லாம், காஃப் ஆகும். முதலாவது அலகுன் என்றும், இரண்டாவது மலகுன் என்றும் உருமாறும். மலகுன் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்தான் மலாயிகதுன் என்பதாகும். அதாவது மலக்குகள் அல்லது பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் என்பதாகும்.


43.மனித உலகில் செயல்பட்டு வரும் மலக்குகள்?

மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு “ஸஜ்தா” செய்யும்படி அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருகிறது. அதன்படி இப்லீஸைத் தவிர்த்து, அனைத்து மலக்குகளும் “ஸஜ்தா” செய்ததாக திருக்குர்ஆன் வாசகம் கூறுகிறது. (பார்க்க 2:34) மேலும் இப்லீஸிடம், ஆணவமும் அகம்பாவமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தீய குணங்கள் மனிதனிடத்திலும் இருப்பதை நாம் காண்கிறோம். அதே சமயம் இறைக்கட்டளுக்கு அடிபணிந்து வாழும் தன்மையும் மனிதனிடத்தில் இருக்கிறது. அதாவது இறைக் கட்டளளைக்கு இணங்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது மனிதனுள் உள்ள மலக்குகளின் தன்மை. அழிவை ஏற்படுத்தக் கூடிய குணங்கள் ஷைத்தானிய அல்லது இப்லீஸிய குணங்களாக இருக்கின்றன. இவை இரண்டுமே மனிதனுள் செயல்பட்டு வரும் இரு வகையான குணங்களாகும். (விளக்கத்திற்கு மலாயிக்காவுடன் ஒரி சந்திப்பு” என்ற நம் தலைப்பை படிக்கவும்)

மலக்குகளைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் விஷயங்களை இங்கு சுருக்கமாகத் தருகிறோம். படித்து உண்மையை அறிந்து பகுத்தறிவாளர்களாக ஆகுங்கள்.

(1) இறைச் செய்திகளை சமர்ப்பிக்க மலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன– 22:75 உலகில் பேசப்படும் மொழியும் அவற்றின் ஒலி அலைகளும் இதில் அடங்கும்.
(2) அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் போற்றுதலுக்குரியதாக ஆக்க,அயராது செயல்படும் மலக்குகள் (பிரபஞ்ச இயற்கை சக்திகள்) (பார்க்க 2:30,42:5)
(3) அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும் மலக்குகள். (பிரபஞ்ச இயற்கை சக்திகள்) (பார்க்க 16:49)
(4) அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை சுமக்கும் எட்டு வானவர்கள் (பிரபஞ்ச இயற்கை சக்திகள்) (பார்க்க 69:17) குர்ஆனிய ஆட்சியமைப்பின் சமயம்,அவை எட்டு துறைகளாகப் பிரிந்து செயல்படும்.
(5) மலக்குகளை இறைத்தூதர்களாக அனுப்பவில்லை. (பார்க்க 17:95) பொதுவாக மக்கள் இறைத்தூதர்கள் யாவரும் மாபெரும் சக்தி பெற்ற மலக்குகள் அல்லது வானவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இதை மறுத்து இந்த வாசகம் வருகிறது.
(6) மலக்குகளும் மனிதர்களைப் போன்றே உருவம் பெற்றவர்கள் என மக்கள் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். எனவே மலக்கையாவது இறைத்தூதராக அனுப்பி இருக்கக் கூடாதா என்று ஆட்சேபிக்கிறார்கள். (பார்க்க 23:24)
(7) அல்லாஹ்வையன்றி மற்றவர்களின் கட்டளைக்கு இணங்கி வாழக் கூடாது என்று இறைத் தூதர்கள் மக்களிடம் சொன்னபோது, அல்லாஹ் நாடியிருந்தால் ஒரு மலக்கை அல்லவா அனுப்பி இருப்பான் என்கிறார்கள். சாதாரண மனிதராக இருக்கும் உம் பேச்சைக் கேட்கமாட்டோம். (பார்க்க 25:21) காரணம் இறைத்தூதர் என்பவர் மலக்குகளைப் போன்றவர்கள் என்று எண்ணிக் கொண்டதே ஆகும்.
(8) இவரை இறைத் தூதராக ஏற்றுக் கொள்வதற்கு, பொன்னாலாகிய கங்கணங்களை இவர் அணிந்திருக்க வேண்டுமே! கூடவே மலக்குகளும் வந்திருக்க வேண்டும் என்று இறை நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (பார்க்க 43:53)
(9) மலக்குகளைப் பற்றி மக்களுக்கு தவறான எண்ணம் இருந்து வந்ததால், இத்தகைய பேச்சை பேசி வந்தனர். அவர்கள் எதிர் பார்ப்பது போல் மலக்குகளை அனுப்பி வைத்தால் அவர்களுடைய சகல வாதங்களும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கும். அவர்கள் சற்றும் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். காரணம் அவர்களில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை (பார்க்க 6:8,6:159,15:7-8,25:25-26)
(10) இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட பின், அதற்கு மாறு செய்பவர்களுக்கு மலக்குகளின் சாபங்கள்தான் வரும். (பார்க்க 3:87-88) அதாவது பிரபஞ்ச இயற்கைச் சக்திகளிலிருந்து பலன்களை பெற முடியாமல் போய்விடும் அல்லது அவற்றின் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

(11) தீயவர்களும், மலக்குல் மவுத்தும் - அநியாயக்காரர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் மலக்குகள். 4:97,16:28,6:94,7:37,8:50,47:27). மனித ஆற்றல்கள் குன்றிவிடும் போது, அவன் இவ்வுலகில் வாழும் சக்தியை இழந்து விடுகிறான். அவன் மரணித்து விட்டதாக நாம் சொல்கிறோம். மரணத்திற்குப் பின், அவன் இவ்வுலகில் செய்து வந்த செயல்களுக்கேற்ப விளைவுகளை அவன் அனுபவிப்பான்
(12) அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்தும் மலக்குல் மவுத். (பார்க்க 32:11) எளிதாக உயிரைப் பறிக்கும் மலக்குகள். (79:1) கடினமாக உயிரைப் பறிக்கும் மலக்குகள். (79:2) அதவாது சிலர் மாரடைப்பு மற்றும் விபத்துகள் மூலம் உடனடியாக உயிர் பிரிந்து விடுகிறது. மற்றும் சிலர் நீண்ட நாட்கள் நோய்வாய்ப் பட்டு பல துயரங்களையும் வேதனைகளையும் சந்தித்த பின்னரே மரணத்தை தழுவுகிறார்கள்..
(13) நல்லவர்களும், மலக்குகளும் - இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி அயராது உழைப்பவர்களுக்கு நற்செய்தியை அளிக்கும் மலக்குகள். (பார்க்க 41:30) அதாவது இத்தகையவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு சந்தோஷங்கள் நிறைந்து இருக்கும்.
(14) நபிக்கு ஆதராவாக செயல்படும் மலக்குகள் (33:56.) அதாவது முஹம்மது நபிஸல் அவர்கள் இறைவழிகாட்டுதலின்படி மக்களாட்சியை ஏற்படுத்தினார். அந்த ஆட்சியின் நலத்திட்டங்களுக்கு மலக்குகள் - பிரபஞ்ச இயற்கை சக்திகள் உறுதுணையாக இருந்தன.
(15) அதே போல் மூஃமின்களும் பாடுபட்டால் அவர்களுக்கும் மலக்குகள் - பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் ஒளிமயமான வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் என வாக்களிக்கப்படுகிறது. (பார்க்க 33:41-43)

(16) நல்லவர்களும் மலக்குல் மவுத்தும் - நல்லவர்கள் மரணித்த பின் சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் மலக்குகள். (பார்க்க 16:32) உலக வாழ்விலும், மறுமை வாழ்விலும் உறுதுணையாக இருக்கும் மலக்குகள் (பார்க்க 41:31) இவை ஏக இறைவனாகிய அல்லலாஹ்வின் ஏற்பாடாகும் (பார்க்க 41:32)
(17) மலக்குகள் வேதனைகள் கொண்டு வருவதை தீயவர்கள் எதிர்ப் பார்க்கின்றனர். (16:33) அந்த வேதனைகள் எல்லாம் அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவாகத் தானே அன்றி, அல்லாஹ் அவர்களை வேதனைப் படுத்துவதில்லை (பார்க்க 16:34) எனவேதான் மலக்குகள் என்பது மனித செயல்களுக்கேற்ற வகையில் பலன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடிய சக்திகளாக இருக்கின்றன.
(18) மனிதன் செய்து வரும் ஒவ்வொரு செயலையும் பதிவு செய்யும் மலக்குகள் (பார்க்க 82:10-11) மனித செயல்களை பாதுகாத்து வருவதாக (86:4) வாசகம் கூறுகிறது. இதையே விளைவுகளாக தோன்றும் (பார்க்க 13:11) என்று சொல்லப்படுகிறது. பகைவர்கள் தீட்டும் திட்டங்களையும் பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது (10:21,43:80) அல்லாஹ்வே பதிவு செய்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது (19:79)
(19) குர்ஆனிய ஆட்சியமைப்பு செயல்படும் கால கட்டத்தில் மலக்குகள் அணிஅணியாய் இறங்குவதாவகச் சொல்லப்பட்டுள்ளது. (25:25) ரூஹ்வும் மலக்குகளும் ஓரணியில் இருப்பதாக 78:38) வாசகம் கூறுகிறது. அதாவது இறைவழிகாட்டுதலும்,பிரபஞ்ச இயற்கைச் சக்திகளும் ஓரணியில் இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படும்.
(20) சுவனத்தில் பெற்றோர்கள் மற்றும் மனைவி மக்கள் அனைவருக்கும் நன்மாறாயம் கூறும் மலக்குகள் (சந்தோஷம் அளிக்கும் வகையில்) உறுதுணையாக இருப்பார்கள் (பார்க்க 13:23-24)

(21) நரக வேதனைகள் என்பது மலக்குகளே அன்றி வேறில்லை. (பார்க்க 66:6,74:31) (விவரங்களுக்கு நம்முடைய திருக்குர்ஆன் தெளிவுரையைப் பார்க்கவும்) நரக வேதனைகளை தாங்கமுடியாமல் தம்மை முடித்து விடுமாறு தீயவர்கள் இறைவனிடம் மன்றாடுதல் (பார்க்க 43:77-80)
(22) போர்களத்தில் மலக்குகள்: மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு உதவி செய்தல் (பார்க்க 3:126) பொர் குறிகள் கொண்ட ஐயாயிரம் மலக்குகளைக் கொண்டு உதவி புரிதல் (3:125)
(23) போர்களத்தில் மூஃமின்களின் மனதில் தைரியமூட்டவும்,இறை
நிராகரிப்பாளர்கள் மனதில் திகிலை ஏற்படுத்தும் மலக்குகள். (பார்க்க 8:12)
(24) ஆக போர்களத்தில் மலக்குகளின் உதவி என்பது, போர் வீரர்களுக்கு தைரியமூட்டுவதற்கான செய்தியே அன்றி, அல்லாஹ் அவ்வாறு மலக்குகளை அனுப்பவில்லை. (பார்க்க 3:127) அதாவது யார் எதற்காக போரிடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். மூஃமின்கள் உயர் இலட்சியத்திற்காகவும் அநியாயத்தை அடக்கி வைக்கவும் போரிடுகிறார்கள். (பார்க்க 22:39) எனவே பகைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும், அவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற மன வலிமை அதிகமாக இருந்தது (3:13) இதுவே போர் வீரர்களிடமிருந்த மலக்குகளின் சக்திகளாகும்.
(25) ஜக்கரியா நபிக்கு மகன் பிறக்கப் போவதாக நற்செய்தியை கொண்டு வந்த மலக்கு (பார்க்க 3:39) இங்கு செய்தியை கொண்டு வந்தவர் ஒரு இறைச் சேவகர் ஆவார்.

(26) இப்றாஹீம் நபிக்கு மகன் பிறக்கப் போவதாக செய்தியைக் கொண்டு வந்த மலக்கு. இவரும் இறைச் சேவகனாவார். அதாவது இறைச் செய்தி என்னவோ அதை அப்படியே சமர்ப்பிப்பவர்.
(27) கெட்ட செய்தியைக் கொண்டு வந்த மலக்குகள் உணவருந்தவில்லை. (பார்க்க 11:69-70) பொதுவாக இத்தகைய செய்திகளை கொண்டு வருபவர்கள்,ஆர அமர உணவருந்திவிட்டு செல்வதில்லை.
(28) மர்யம் (அலை) அவர்களுக்கும்,இறைச் சேவகர் செய்தியை கொண்டு வருகிறார். (பார்க்க 3:42) அவருக்கு ஈஸா என்ற மகன் பிறக்கப் போவதாக செய்தியை கொண்டுவந்த மலக்கு (இறைச் சேவகர்) பார்க்க: (3:45) அந்த செய்தியைக் கொண்டுவந்தவர் மனித உருவில் இருந்தார். (பார்க்க 19:17)
(29) யூசுஃப் நபியிடம்,பெண்கள் தம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியும் அவர் அதற்கு இடமளிக்கவே இல்லை. இதைக் கவனித்த அப்பெண்கள் அவரை ஒரு "மலக்கு" என்று சொல்லி விடுகிறார்கள். (பார்க்க் 12:31) அதாவது எக்காரணத்தைக் கொண்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாதவர் என்பதாகும்.
(30) பாமரர்கள் அல்லாஹ் படைத்த மலக்குகளை பெண் தெய்வங்களாகப் பாவித்து வணங்குகின்றனர். (பார்க்க 43:19) அல்லாஹ்வே வணங்கும்படி சொன்னதாக பொய்க் கூறுகின்றனர். (43:20) இவையாவும் மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதன் விளைவாக ஏற்பட்டவை (பார்க்க் 43:22)
(31) இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை அளித்துவிட்டு, தனக்காக பெண் மலக்குகளை ஏற்படுத்திக் கொண்டானா? என்று கேட்கவும் (பார்க்க 17:40 43:16)
(32) மனித செயல்களின் இறுதி விளைவுகள் என்ற ஆகிரத்தை ஏற்காதவர்கள்தாம் மலக்குகளுக்கு பெண்களின் பெயரைச் சூட்டி வணங்குவார்கள். (பார்க்க 53:26) மர்யமின் மகன் ஈஸாவும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயல்படுவதை கௌரவக் குறைவு என்று எண்ண மாட்டார்கள். (4:172) கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு இவ்வாசகம் மறுப்பு அறிவிப்பதாக உள்ளது.


44.இறக்கைகள் கொண்ட மலக்குகள் ?

இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கையுள்ள மலக்குகள் (35:1) அதாவது பிரபஞ்ச இயற்கைச் சக்திகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகள் ஐக்கியமாகி இருக்கும். உதாரணத்திற்கு காற்று என்ற மாபெரும் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். ஜீவராசிகளை வாழவைப்பதுடன் பூமியின் புவிஈர்ப்பு சரியாக செயல்படும்படி உதவி செய்கிறது. மேகங்களை உருவாக்கும் செயல் திறனும் அதற்கு உண்டு. அத்துடன் மழை நீர் பொழிந்ததும் பூமியில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக காய்வதற்கும் உதவுகிறது. அண்மைக் காலத்தில் காற்றின் அழுத்தத்தை வைத்தே பல பொருட்களை இயங்க வைத்திருப்பதை நாம் கவனிக்கிறோம். நான்கு நான்கு இறக்கைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட செயல் திறன்கள் கொண்டவை என்று பொருள் கொள்ளவேண்டும்.

மலக்குகள் என்று சொல்லுங்கள். வானவர்கள் என்று சொல்லுங்கள். அல்லது பிரபஞ்ச இயற்கை சக்திகள் என்று சொல்லுங்கள். எல்லாமே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படக் கூடிய சக்திகளாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி அவை மனிதனுக்கும் கட்டுப்படக் கூடியவை என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உலக நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் படைப்புகளில் செயல்பட்டு வரும் இயற்கைச் சக்திகளையும் அவற்றின் தன்மைகளையும் ஆராய்ச்சி செய்து, பல புதுப்புது படைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். அவற்றின் பலன்களை அவர்கள் அனுபவித்தும் வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களைப் பாருங்கள். மலாயிக்கா என்றால் ஃபரிஷ்தா (செய்தியை கொண்டு வருபவர்) என்று உருது மொழியில் கூறி, சிந்திக்கும் ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். தமிழில் வானவர்கள் என்று மொழிபெயர்த்து புரியாத பதிராக ஆக்கிவிட்டனர். இப்படி செய்வதால் யாருக்கு நஷ்டம்? அல்லாஹ்வுக்கா?


45.நபிமார்கள் காலத்து மலக்குகள்:

அல்லாஹ் படைத்த அனைத்து படைப்புகளும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அதனதன் உருவ அமைப்பிலேயே அமைத்து விட்டான். உதாரணத்திற்கு இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி போன்ற உலோகப் பொருட்களும்,அவற்றில் உள்ள தன்மைகள் - உயிரினங்களில் நீர்வாழ்வன மற்றும் நிலத்தில் வாழும் ஊர்வன, கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள், மற்றும் எண்ணற்ற கிருமிகள் ஆகிய அனைத்தும் அதனதன் இயல்பின் அடைப்படையிலேயே வாழ்ந்து வரும். அவற்றிற்கு வழிகாட்டுதல்கள் அதன் உருவ அமைப்பிலேயே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகளை இறைத் தூதர்கள் மூலம் அறிவித்து விடுகிறான். அந்த இறைத் தூதர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்திகளை “மலக்கு” மூலம் அறிவிக்கின்றான். அந்த மலக்கு, “ஓசை” (SOUND WAVE SYSTEM) எனும் சக்தியைக் குறிப்பதாக நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.

قُلۡ مَنۡ كَانَ عَدُوًّا لِّجِبۡرِيۡلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلۡبِكَ بِاِذۡنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدًى وَّبُشۡرٰى لِلۡمُؤۡمِنِيۡنَ‏ ﴿۹۷﴾

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை)இறக்கி வைக்கிறார்,
கவனித்தீர்களா? “ஜிப்ரீல்” எனும் மலக்கு,நபியின் உள்ளத்தில் இறைவழிகாட்டுதலை இறக்கி அருள்வதாக இவ்வாசகத்தில் சொல்லப்படுகிறது. அதாவது இறைச் செய்திகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் ஆற்றல், அந்த நபிமார்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. எனவேதான் ஜிப்ரீல் என்பது “இறைச்செய்திகளை நபிமார்களுக்கு சமர்ப்பிக்கும் தனிப்பெரும் சக்தி” என்று புலப்படுகிறது. மற்ற மனிதர்களுக்கு, மொழியின் எழுத்துக்களும், அவற்றின் உச்சரிப்புகளும் ஓசைகளாக மாறுகின்றன. இங்கும் அந்த உச்சரிப்புகளின் ஓசைகள் காற்றில் கலந்து, மற்றவர்களின் காதுகள் வழியாக உள்ளத்திற்குள் சென்றடைகிறது.
இவ்வாறாக அல்லாஹ்விடமிருந்து நேரடியாக வரும் இறைச் செய்திகள், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலம் வரை நீடித்து வந்தது. அவருக்குப் பின் இறை வழிகாட்டுதல்கள் நேரடியாக வரும் செயல்திட்டம் நிறைவு பெற்றுவிட்டது. எனவே முஹம்மது நபி(ஸல்)தான் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. (33:4;0)


46.வஹீச் செய்திகளின் தொடர் ஏன் முடிந்துவிட்டது?

மார்க்க வழிகாட்டுதல்கள் நிறைவு பெற்றுவிட்டதாக திருக்குர்ஆன் வாசகம் 5:3 அறிவிக்கிறது. மேலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட வேண்டிய வழிகாட்டுதல் முழுமையாகி விட்டதாகவும், அவை மாற்றத்திற்குள் ஆகாதவை என்றும் அறிவிக்கப்படுகிறது. (பார்க்க 6:115) அவை பாதுகாப்பாக வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. (பார்க்க 15:9) இவ்வாறாக இறைவழிகாட்தல்கள் ஆதிகாலத்தில் இறக்கி அருளப்பட்டது போல் இன்றைக்கும் ஏன் அறிவிக்கப் படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆதி முதல் முஹம்மது நபி(ஸல்) காலம் வரையில் இருந்து வந்த மனிதனின் நிலைப்பாட்டை அறிந்து கொண்டால் இதற்கு விடை கிடைத்துவிடும்.

மனித வரலாற்றை எடுத்துக் கொண்டால், ஆதி கால மனிதன், கற்கால மனிதன், உலோக கால மனிதன், நவீன விஞ்ஞான கால மனிதன் என்று பிரிக்கலாம். ஆதி காலம் என்பது மனிதனின் குழந்தைப் பருவம் எனவும், கற்கால மனிதன் என்பதை அவனுடைய விளையாட்டுப் பருவம் எனவும், உலோகக் கால மனிதன் என்பதை அவனுடைய இளமைப் பருவம் எனவும், நவீன விஞ்ஞான கால மனிதனை அவனுடைய வாலிப பருவம் எனவும் ஒப்பிட்டு சொல்லலாம். குழந்தைப் பருவம் முதல் வாலிப வயது அடையும் வரை அவனுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதன் பின் அவன் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றும் பக்குவத்தை அடைந்து விடுகின்றான். அதுபோல ஆதிகாலம் முதல் நவீன விஞ்ஞான காலம் வரையில் வாழ்ந்த மனிதனுக்கு இறைத் தூதர்களை அனுப்பி அவ்வப்போது தேவைக்கு புற்ப இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன.

மனிதன் நவீன விஞ்ஞான காலத்தில் அடி எடுத்து வைத்த போது, முஹம்மது நபி(ஸல்) மூலமாக, இறுதியாக இறைவழிகாட்டுதல் அளிக்கப்பட்டு விட்டது. இனி வரும் எல்லா கால கட்டங்களிலும், உலகின் எந்த பகுதியைச் சேர்ந்தவரானாலும், இவ்வேத அறிவுரைகளைப் பின்பற்றி,லதம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுள் வளர்ந்து விட்டது. எனவே தான் இறைவனின் செயல் திட்டப்படி இனி நேரடியாக வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுவது நிறுத்தப்பட்டதாகப் புலனாகிறது. இந்தக் கால கட்டத்தில் மனிதனின் ஆற்றல்கள் முழு அளவில் வளர்ந்து, இந்த உலகை சீராகக் கட்டிக் காக்கும் தகுதியை அடைந்து விட்டது. எனவேதான் நபித்துவ தொடர் முற்று பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. (பார்க்க 33:40). மனிதனிடம் விஞ்ஞான கல்வி மற்றும் ஆற்றல்கள் ஆயிரம்தான் வளர்ந்தாலும், உலகில் மனித நேயத்தையும், ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பாற்ற, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதை விட்டால் அவனுடைய சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேறு எந்த வழிமுறையும் கிடையாது.


47.மனிதனுக்கு வழிகாட்டுதல்களை அல்லாஹ் ஏன் நேரடியாக அளிப்பதில்லை?

இதுவும் ஒரு முக்கியமான கேள்வியாகும். அல்லாஹ் மற்ற உயிரினங்களுக்கு வழிகாட்டுதல்களை அதனதன் உடல் அமைப்பிலேயே அமைத்திருப்பது போல், மனிதனுக்கும் ஏன் அமைக்கவில்லை? ஏன் அவனில் ஒரே ஒரு நபரை தேர்ந்தெடுத்து, வழிகாட்டுதலை வழங்கவேண்டும்? இதற்கும் சரியான விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். மற்ற உயிரினங்களைப் போல் அல்லாமல், மனிதனுக்கு மட்டும் முழு சுதந்திரத்தை அளித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. கூடவே அவன் வாழும் உலகத்தைப் பற்றி அறிந்து, சிறப்பாகச் செயல்பட பகுத்தறிவையும் அளித்துள்ளான். எனவே மனிதன் தன் உலகத்தை தானே கட்டிக் காக்கும் பொறுப்புள்ளவனாக இருக்கின்றான். மற்ற உயிரினங்களைப் போல் தம் இயல்பின் அடிப்படையில் வாழ வைக்கும் திட்டம் இருந்திருந்தால், இவனுக்கு அளிக்கப்பட்டுள்ள முழு சுதந்திரம் இவனை விட்டு பறிபோய் இருக்கும். மேலும் இவன் எந்த முன்னேற்றத்தையும் கண்டிருக்கவே முடியாது.

மற்ற உயிரினங்களைப் போலவே இவனும் ஒரே நிலையிலேயே வாழ்ந்திருப்பான். உலகத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பும் இவனுக்குக் கிடைத்திருக்காது. எனவே மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அவனில் ஒருவரை தேர்ந்தெடுத்து வழிகாட்டுதல்களை அளித்துவிடுவது என்ற திட்டம் தீட்டப்பட்டது. எனவேதான் நாடுவோர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளலாம். நாடுவோர் மறுக்கவும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. (பார்க்க 18:29)

மேலும் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். அரசாங்கம் மற்றும் அதன் துறைகள் - பால் விநியோகம், கல்வி என எதை எடுத்துக் கொணடாலும் அதற்குரிய மையம் (Center) என்று இருக்கும். அப்போதுதான் அவற்றை சிறப்பாக செயலாற்ற முடியும். அது போல இறைச் செய்திக்கும் மையம் உருவாக்கப்பட்டது, அதே போல் இறைச் செயல் திட்டங்களை நிறைவேற்றும் மையத்தை கஅபாவில் நபிகளார் உருவாக்கினார். அங்கிருந்து கட்டளைகளைப் பிறப்பித்தார். செய்தியைக் கடைப்பிடித்தால் அனைவருக்கும் பலன் கிடைக்கும்.


48.போரில் வெற்றி தோல்வி:

وَاَعِدُّوۡا لَهُمۡ مَّا اسۡتَطَعۡتُمۡ مِّنۡ قُوَّةٍ وَّمِنۡ رِّبَاطِ الۡخَـيۡلِ تُرۡهِبُوۡنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمۡ وَاٰخَرِيۡنَ مِنۡ دُوۡنِهِمۡ‌

8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்,
விளக்கம்:
பகைவர்கள் படையெடுத்தால், அவர்களை எதிர்த்து போரிடுவதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும் திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அண்மையில் அரபு நாடுகளில் நடந்த போர்களில்,அவர்கள் தம் தற்காப்புக்காக போதுமான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அவர்களிடம் செல்வங்களுக்கு எந்தக் குறைவும் இருந்ததில்லை. இருந்தும்,அவர்கள் தற்காப்பு விஷயத்தில் மிகவும் உதாசீனமாக இருந்து, காலத்தை கழித்து விட்டனர். மேலும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக அவர்கள் சொகுசாக வாழ்வதையே விரும்பினர். அதனால் இயற்கைப் படைப்புகளை ஆராயும் ஏற்பாடுகளும், அறிவுத் திறன்களும் அவர்களிடம் இல்லாமல் போய்விட்டன.

மேலும் போரிடுவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களே தடை செய்துவிட்டதாக சில அறிவிலிகள் வதந்திகளைப் பரப்பி விட்டனர். இதனால் தற்காப்பு விஷயத்தில் மிகவும் பின் தங்கிவிட்டனர். ஆனால் மேலை நாடுகளிலும், அமெரிக்கா, சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தற்காப்பு விஷயத்தில் எந்த குறைவும் வைக்கவில்லை. எனவே அவர்களை எந்த எதிரியும் தாக்க முடியாது. எனவே போரின் வெற்றித் தோல்விக்கு அல்லாஹ்வின் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதிலிருந்து பலத்தை ஏற்படுத்திக் கொள்வதிலேயே இருக்கிறது. இதை விட்டுவிட்டு நாம் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு விட்டோம். எனவே நமக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று எண்ணி, அலட்சியமாக இருந்துவிட்டால் அரபு நாட்டவர்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் எல்லோருக்கும் ஏற்படும்.


49.பிறதெய்வ வழிபாடு:

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் அல்லாஹ்வை தவிர்த்து, தாமே உருவாக்கி வைத்துள்ள தெய்வங்களை வழிபட்டு வந்தும் கூட, அவர்கள் முஸ்லிம்களை விட சிறப்பாகத் தானே இருக்கிறார்களே என்று பலர் கேட்கிறார்கள். இது ஒரு முக்கியமான கேள்வியாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல மனிதனிடம் பொறுப்புகளை விதித்துவிட்டு, அவன் சிறப்பாக வாழ்வதற்காக வழிகாட்டுதல்களைத் தான் அல்லாஹ் அளிக்கின்றானே அன்றி நேரடியாக உதவி செய்வதில்லை. மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகிலுள்ள இயற்கைப் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தம் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளான்.

அவ்வாறே மேற்காசிய நாடுகளிலும் எகிப்து போன்ற ஆஃப்ரிக்க நாடுகளிலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, ஒரு கட்டத்தில் சிறப்பாகத்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்பாக, மேலை நாடுகளில் இயற்கைப் படைப்புகளைப் பற்றியும், அவற்றின் ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கின்ற கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்குப் பாடங்களாக கற்றுத் தர வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்ததனர். அதன்படி அவர்களிடையே விஞ்ஞானமும் கல்வியறிவும் வளர்ந்தன. இப்போதும் வளர்ந்து வருகின்றன. புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்து வந்தனர்.

ஆனால் விஞ்ஞான கல்வி அவசியமில்லை என்றும், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கல்வி மட்டுமே போதும் என்று அப்போது இருந்த இஸ்லாமிய உலமாக்கள் கூறிவிட்டனர். மேலும் திருக்குர்ஆன் ஓதுவதற்காக மட்டும்தான் என்றும் கூறிவிட்டனர். இதனால் காலப்போக்கில் பெரும்பாலான முஸ்லிம்களிடையே விஞ்ஞான கல்வியைப் பற்றிய முக்கியத்துவம் இல்லாமலே போயிற்று. ஒரு கட்டத்தில் ஒலிபெருக்கி கூட பயன்படுத்துவதை தடை செய்து வந்தனர் என்றால் நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். கடலாராய்ச்சி என்று எதுவுமே அரபு நாடுகளில் இருந்தது கிடையாது.

இதனால் முஸ்லிகளுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டது. மேலும் அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சி செய்து வரும்படி திருக்குர்ஆனில் கூறியிருப்பது அவர்களுக்குத் தெரியாமலே போயிற்று. அதற்கேற்றவாறே திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பையும் செய்து விட்டார்கள். இதனால் அல்லாஹ்வின் உதவியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.


50.மூஃமின்களின் சிந்தனையும் செயலாக்கமும்:

மூஃமின்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை திருக்குர்ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது என்பதை கவனியுங்கள்.

﴾اِنَّ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الۡاَلۡبَابِ ۚۖ‏ ﴿۱۹۰ 

3:190. நிச்சயமாக,வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும்,பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

الَّذِيۡنَ يَذۡكُرُوۡنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوۡدًا وَّعَلٰى جُنُوۡبِهِمۡ وَيَتَفَكَّرُوۡنَ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ ﴿۱۹۱﴾

3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும்,இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள், வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப்பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன், (நரக)நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!"

விளக்கம்:
இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட அறிவுடையோர் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதையும்,அதன் நோக்கத்தைப் பற்றியும் சிந்திப்பார்கள். மாறி மாறி வரும் இரவு பகலைக் கொண்டு இந்த பூமி எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும், அதைக் கொண்டுதான் உயிரினங்கள் உயிர் வாழமுடிகிறது என்பதையும் சிந்தித்து உணர்வார்கள். அவர்களுக்கே அல்லாஹ்வின் அளவற்ற வல்லமையைப் பற்றிய அத்தாட்சிகள் பல கிடைக்கும்
இப்படி அறிவாற்றல்களுடன் வாழும் இவர்கள், தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும், நின்ற நிலையிலும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும், அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட திட்டங்களைப் பற்றி ஆராய்வார்கள். அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள். இப்படி தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இவர்கள், “இறைவா! நீ எவற்றையும் வீணாகப் படைக்கவில்லை. இப்படிப்பட்ட எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் நீ. எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக” என்று தம் எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பிப்பார்கள்.

﴾ رَبَّنَاۤ اِنَّكَ مَنۡ تُدۡخِلِ النَّارَ فَقَدۡ اَخۡزَيۡتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيۡنَ مِنۡ اَنۡصَارٍ‏ ﴿۱۹۲ 

3:192. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய், மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்,)
விளக்கம்:
“எங்கள் இறைவனே! எந்தச் சமுதாயம் உன் நியதிப்படி நரக வேதனைக்கு ஆளாகுமோ, அது நிச்சயமாக இழிவான வாழ்விற்குத் தள்ளப்படும். மேலும் இவ்வாறு அக்கிரமம் செய்யும் சமுதாயத்தை அவ்வேதனைகளிலிருந்து மீட்க உதவி செய்வோர் எவரும் இல்லை” என்பதாக அவர்களின் பிரார்த்தனை இருக்கும்.

அதாவது எந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யாமல் அவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய பலன்களைப் பெறும் பாக்கியத்தை இழந்து நிற்கின்றதோ, அந்தச் சமுதாய மக்களின் செயல்கள் எல்லாம் வீணாகிவிடும். அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாகி இழிவுக்குள்ளாவார்கள். இப்படியாக அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையான அறிவாற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, மிகப் பெரிய அக்கிரமச் செயலாகும். எனவே இப்படி இழிவாக வாழும் சமுதாயங்களைப் பற்றி யார் அக்கறை காட்டுவார்கள்?
விஞ்ஞான வளர்ச்சி பெறாத நாடுகளில், பொருளாதார சிக்கல்கள் பல ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவார்கள். இதனால் அங்கு திருட்டு, கொள்ளை, கொலை, ஆபாசங்கள், கற்பழிப்பு போன்ற தீய சம்பவங்கள் ஏற்பட்டு தீமைகள் நிறைந்த சமுதாயமாக மாறிவிடுகின்றன. இன்றைய காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளே இதற்குச் சான்றாகும்.

எனவே அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே ஆகும். அவ்வழிகாட்டுதல்கள் உலகப் படைப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அவற்றை அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தி, சமுதாய ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பாற்றவும் வலியுறுத்துகிறது. அதனால்தான் இன்றைய காலக் கட்டத்திலும் உலகப் படைப்புகளை ஆரய்ச்சிகளை செய்து கொள்ளும் நாடுகள் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகின்றன. அந்த விஷயத்தில் அல்லாஹ் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை. காரணம்


51.அல்லாஹ் ரப்புல் ஆலமீனாக இருக்கிறான்:

مَنۡ كَانَ يُرِيۡدُ الۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهٗ فِيۡهَا مَا نَشَآءُ لِمَنۡ نُّرِيۡدُ ثُمَّ جَعَلۡنَا لَهٗ جَهَنَّمَ‌ۚ يَصۡلٰٮهَا مَذۡمُوۡمًا مَّدۡحُوۡرًا‏ ﴿۱۸﴾ 

17:18. எவர்கள் இவ்வுலக தற்காலிக வாழ்க்கை மட்டும் விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம், பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம், அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
விளக்கம்:
எந்தச் சமுதாயம் தற்காலிக சுகங்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறதோ, அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு இறைவனின் நியதிப்படி அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. இத்தகைய சமுதாயங்களின் வருங்கால வாழ்வு படிப்படியாக பிரச்சினைக்குரியதாக மாறிவரும். இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் தகுதியை இழந்து, நரக வாழ்வில் புகுவார்கள். (பார்க்க 2:200)

﴾ وَمَنۡ اَرَادَ الۡاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعۡيَهَا وَهُوَ مُؤۡمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعۡيُهُمۡ مَّشۡكُوۡرًا‏ ﴿۱۹ 

17:19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லர்ஹவிடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
விளக்கம்: மாறாக எந்தச் சமுதாயம் தற்காலிக பலன்களோடு, வருங்கால நிலையான பலன்களையும் நோக்கமாகக் கொண்டு, இறைவழிகாட்டுதலின்படி உழைக்கிறதோ, அவர்களே மூஃமின்கள் எனப்படுவர். அவர்களுடைய நற்செயல்களுக்கு ஏற்ப இவ்வுலகிலும், வருங்கால நிலையான வாழ்விலும் சந்தோஷமான வாழ்வு கிடைக்கும் (பார்க்க 2:201-202)

 ﴾ كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنۡ عَطَآءِ رَبِّكَ‌ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحۡظُوۡرًا‏ ﴿۲۰ 

17:20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம், உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
விளக்கம்: ஆனால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித பாரபட்சமும் இருக்காது. அதாவது தற்காலிக வாழ்வை நோக்கமாகக் கொண்டு உழைப்பவர்களுக்கும், தற்காலிக மற்றும் வருங்கால நிலையான பலன்களையும் நோக்கமாகக் கொண்டு அதற்காக உழைப்பபவர்களுக்கும் உமது இறைவனின் அருட்கொடைகள் எவ்வித குறைவுமின்றி கிடைத்து வரும். ஏனெனில் அல்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனாக இருக்கிறான்.

இதுதான் இறைவனின் நிலையான சட்டமாகும். இதன் அடிப்படையில் தான் உலக சமுதாயங்களின் உழைப்பிற்கேற்ப வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. உழைக்காமல் மூட நம்பிக்கையில் வாழ்பவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்க முடியாமல் சீரழிந்து போகிறார்கள். அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சமுதாயங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தாலும், இறைவழிகாட்டுதல் இல்லாததாலும் வருங்கால நிலையான பலன்களைப் பற்றி கவலைப்படாததாலும், அங்கும் ஒழுக்க மாண்புகள் இருப்பதில்லை. அதனால் அங்கும் சீரழிவுகள் ஏற்பட்டு அவர்கள் அழிவைச் சந்தித்துக் கொள்கிறார்கள்.


52.ஒழுக்க மாண்புகளைப் பற்றிய கல்வி:

இப்படியாக உலகப் படைப்புகளை ஆரய்ச்சி செய்து பலன்களைப் பெறும்படி அறிவறுத்தும் குர்ஆன், மனிதனின் ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பாற்றவும் வலியுறுத்திச் சொல்கிறது. மனிதனுள் ஒழுக்க மாண்புகள் வளர வேண்டும் என்றால் அல்லாஹ்வின் அறிவுரைப்படி மனிதன் வாழ்ந்தே ஆகவேண்டும். அவன் காட்டிய வழியில் சமூக அமைப்பை உருவாக்கியே ஆக வேண்டும். அவன் நிர்ணயித்த வரையறைகளின் படி ஆட்சியமைப்பும் நடைபெற வேண்டும். திருக்குர்ஆனின் அறிவுரைகளை எல்லா தரப்பு மக்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளுக்கு கண்டிப்பான பாடமாக இருக்க வேண்டும். இதைவிட்டால் மனிதனுக்கு நேர்வழி பெற்று சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேறு எந்த வழிமுறையும் இல்லை. இன்றைய உலகில் அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சிகளைச் செய்து புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து வரும் நாடுகளிடையே இறைவழிகாட்டுதல் இல்லாததால் பலப் பிரச்சினைகளும், ஒழுங்கீனங்களும், சமூக சீர்கேடுகளும் இருப்பதை நாம் பார்க்கிறோம். எனவே ஈமான் கொள்ளும் விஷயத்தில் திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.


53.எவற்றின் மீது ஈமான் கொள்வது?

2:285 இறை)தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார், (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள், “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை, (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம், (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம், எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்)மீளுவதும் உன்னிடமே தான்" என்று கூறுகிறார்கள்.

விளக்கம்:இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைக்கும் இறைத்தூதரும் அவரோடு இருக்கும் மூஃமின்களும் அல்லாஹ்வின் மீதும், பிரபஞ்சம் செயல்பட உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு இயற்கை சக்திகளாகிய “மலக்குகள்” மீதும், இதற்குமுன் வந்த இறைத்தூதர்கள் மீதும், அவர்கள் மூலமாக வந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். மூஃமின்களின் இந்தக் கூட்டத்தார் ஒரு தூதரை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை ஏற்க மறுக்கும் கொள்கையுடையவர்கள் அல்லர். இறைத்தூதர்கள் விஷயத்தில் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். இவர்களுடைய செயல்முறைகள் எவ்வாறு இருக்கும் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செவியேற்றால் அதன்படியே நடந்து கொள்வார்கள். இவர்களிடையே ஏற்படும் ஒருமைப்பாட்டினால் சமுதாயத்தில் எவ்வித சீர்கேடுகளின் ஆபத்துகளும் ஏற்படாதவாறு பாதுகாத்து வருவார்கள். இப்படியாகத் தம் வாழ்க்கைப் பயணத்தை துவக்கி, படிப்படியாக முன்னேறி, இறைவன் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவார்கள்.

மேற் சொன்ன வாசகத்தில் யார் யாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கவனித்துப் பாருங்கள்.
(1) அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(2) இறைத் தூதரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(3) பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(4) அவன் இயற்றிய முந்தைய வேதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(5) இதற்கு முன் வந்த நபிமார்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர்களில் வேற்றுமை பாராட்டக் கூடாது.
(6) ஆஃகிரத்து மீது ஈமான் கொள்ள வேண்டும் (பார்க்க 2:4)


54.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் கலிமா:

“லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று ஒருவர் சொல்லிவிட்டால் அவர் முஸ்லிம் ஆகிவிடுகிறார் என்பார்கள். இது உண்மையா என்பதை நாம் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். ஒருவர் இப்படி கலிமாவை சொல்கிறார் என்றால் அவர் இஸ்லாமிய பாடங்களை பயில உதட்டளவில் ஒப்புக் கொண்டதாகத்தான் பொருள்படும். கலிமா சொல்லி விடுவதால் மட்டும் ஒருவர் முழு அளவில் முஸ்லிமாக மாறிவிட்டதாக பொருள் கொள்ள முடியாது. மேலும் அவர் தன் பெயர், நடை, உடை, முகபாவனையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் சொல்வார்கள். இதற்கெல்லாம் அவசியமில்லை. அவர் மதமாற்றம் செய்யத் தேவையில்லை. மாறாக மனமாற்றம் செய்து கொள்ள வேண்டும். எனவே அந்த கலிமாவின் உண்மையான பொருள் என்னவென்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

லா - இல்லை
இலாஹா– அடக்கி ஆளக் கூடிய வல்லமை
இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
அதாவது அல்லாஹ்வைத் தவிர, இப்பிரபஞ்சத்தை அடக்கி ஆளக் கூடிய வல்லமை வேறு யாருக்கும் இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கத்தினனாகிய நானும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிபவன் ஆவேன் என்பது அதன் பொருளாகும். கலிமாவின் அடுத்த பகுதியாக இருப்பது:

முஹம்மதுன்– முஹம்மது(ஸல்)
ரசூலுல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர் ஆவார்.
அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மனிதனுக்கு நேரடியாக கிடைப்பதில்லை (பார்க்க 42:51) மாறாக மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அவற்றை மக்களுக்கு அறிவித்து விடுவது என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். (பார்க்க 2:213) அவ்வாறு வந்த இறைத்தூதர்களுள் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது நபி(ஸல்) ஆவார். (பார்க்க 33:40) அவர் மூலமாக மார்க்க உண்மைகள் நிறைவாக அறிவிக்கப்பட்டு விட்டன. (பார்க்க 5:7) இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதே அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதாகப் பொருள்படும்.
எனவே கலிமாவின் முழு விவரம் இவ்வாறு வரும்: அகிலங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே ஆகும். மேலும் முஹம்மது நபி(ஸல்) மூலமாக அல்லாஹ் அறிவித்த வழிகாட்டுதல்களை மட்டும் ஏற்று நடப்பேன். இப்போது அவ்வழிகாட்டுதல்கள் அனைத்தும் இறக்கியருளப்பட்டு திருக்குர்ஆனில் பாதுகாகக்கப்பட்டுள்ளது (பார்க்க 15:9) இதுதான் கலிமாவின் சரியான பொருளாகும்.


55.அல்லாஹ் மனிதனிடம் பேசுவதில்லையா?

அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக ஏன் பேசுவதில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். அல்லாஹ்வை எந்த மனிதனாலும் பார்க்கவே முடியாது (6:103) என்றிருக்க அவனிடம் எவ்வாறு பேச முடியும். எனவே அவன் மனிதனுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகள் அனைத்தையும் இறைத்தூதர்கள் மூலமாக அறிவித்து விட்டான். மனிதன் கேட்கும் கேள்விகளுக்கு அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக விடையும் அளித்து விடுகிறான். (பார்க்க 2:186) இந்தக் குர்ஆன் மனிதனின் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியதாக உள்ளது. (பார்க்க 17:82). எனவே அல்லாஹ் எந்த மனிதனிடத்திலும் நேரடியாகப் பேசுவதில்லை. வஹீ மூலம் அறிவிக்கப்ட்ட திருக்குர்ஆன் மூலம் பேசுகிறான். எனவே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால் அவன் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அறிவித்துத் தந்த திருக்குர்அன் கூறும் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


56.அல்லாஹ் இன்றைய கட்டத்தில் எவ்வாறு பேசுகின்றான்?

  وَمَا كَانَ لِبَشَرٍ اَنۡ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحۡيًا اَوۡ مِنۡ وَّرَآىٴِ حِجَابٍ اَوۡ يُرۡسِلَ رَسُوۡلًا فَيُوۡحِىَ ﴾بِاِذۡنِهٖ مَا يَشَآءُ‌ؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيۡمٌ‏ ﴿۵۱

42:51.அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ, அல்லது திரைக்கப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை, நிச்சயமாக அவன் உயர்ந்தவன், ஞானமுடையவன்.
விளக்கம்: அதாவது அல்லாஹ் மூன்று விதமாகத்தான் பேசுவதாக அறிவிக்கப்படுகிறது.
(1) முதல் வகை வஹீ மூலமாக அருளப்படுபவை. அவற்றை வேதங்கள் என்கிறோம். அவை இப்போது தன் அசல் வடிவில் திருக்குர்ஆனில் உள்ளன.
(2) இரண்டாவதாக வருவது திரைக்கு அப்பால் இருந்து பேசுவதைப் பற்றியது. அவன் படைத்த இயற்கைப் படைப்புகளில் இயங்கி வரும் சட்டங்கள் மூலமாக மனிதனுக்குக் கிடைக்கின்ற ஞானங்களாகும். இயற்கைப் படைப்புகளை மனித ஆய்வுகளை மேற்கொண்டு ஒவ்வொரு படைப்பிலும் அல்லாஹ்வின் சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற உண்மையை அறிந்து கொள்ளலாம்.
(3) மூன்றாவதாக சில விஷயங்களை தேவைக்கேற்ப இறைத் தூதர்களின் மூலம் செய்தியை அனுப்பியது. உதாரணத்திற்கு மர்யமிற்கு அனுப்பிய செய்தி (3:42-43) அவர் காலத்தில் வாழ்ந்த ஜக்ரிய்யா நபி மூலம் அனுப்பப்பட்டது. இதுபோன்ற செய்திகளும் திருக்குர்ஆனில் காணக் கிடைக்கும்.
இப்படியாக அல்லாஹ் இன்றைக்கும் மனிதனிடத்தில் மேற்சொன்ன மூன்று விதத்தில் பேசிக்கொண்டுதான் இருக்கிறான்.

அதை அடுத்து இறைத்தூதர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் கவனியுங்கள்.


57.நபி அல்லது ரசூலை ஏற்றுக் கொள்வது:

كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًۭا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ

2:151.இதே போன்று நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
விளக்கம் :
1. அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவது என்றால் அல்லாஹ்வின் எண்ணற்ற படைப்புகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பலன்களைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பது.
2. இப்படியாக மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை நீக்கி, அவர்களுடைய எண்ணங்களையும் தீய பழக்க வழக்கங்களையும் விட்டு தூய்மையாக்குவது. தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவது.
3. வேதத்தைக் கற்றுக் கொடுப்பது - அல்லாஹ் அறிவித்துள்ள சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை கடைப்பிடிக்கச் செய்வது.
4. ஞானத்தை ‘ஹிக்மாவை’ கற்றுக் கொடுப்பது - அந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதால் கிடைக்கவிருக்கின்ற நற்பலன்களைப் பற்றியும் அவற்றிற்கு மாற்றமாகச் செயல்பட்டால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைப்பது என்பதாகும்.
5. இப்படியாக மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை அறிவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்துவது. ஆக இவைதான் நபி அல்லது ரசூல்களின் கடமைகள் என அறிவிக்கப்படுகிறது.

நபி மற்றும் ரசூல் என்ற வார்த்தைகளுக்கு பொருள் சொல்ல வேண்டும் என்றால் இவ்வாறு சொல்லலாம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டுதல்களை அறியாத மக்களுக்கு தெரியப்படுத்துபவர் நபி ஆவார். அல்லாஹ் அறிவித்துள்ள சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களை வழி நடத்திச் செல்பவர் ரசூல் ஆவார். இவ்விரு வார்த்தைகளும் ஏறக்குறைய ஒரே அர்த்தத்தையே தருகின்றன. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதே ஆகும். நபி வேறு ரசூல் வேறு என்று சொல்வதற்கில்லை.

ஆனால் ரசூலைப் பின்பற்றுதல் என்றால் அவர் சொன்னதாக அல்லது செயல்பட்டதாகச் சொல்லி எழுதப்பட்ட மற்ற நூல்களைப் படித்து அவற்றைப் பின்பற்றுவது என்று பொருள் கொள்ளுதல் சரியாகாது. மாறாக ரசூல் எனப்படுபவர் இறைவழிகாட்டுதலின்படி (திருக்குர்ஆனின் வழிகாட்டுதலின்படி) சமூக அமைப்பையும், ஆட்சியமைப்பையும் ஏற்படுத்துகிறார். இதற்காக அவர் வஹீச் செய்தியின் அடிப்படையில் சட்ட உட்பிரிவுகளை ஏற்படுத்துகிறார். அவற்றைப் பின்பற்றுவதே ரசூலைப் பின்பற்றுவது என்பதாகும். உதாரணத்திற்கு ஜகாத் கொடுக்கச் சொல்லி பல முறை திருக்குர்ஆன் சொன்னாலும், எத்தனை விழுக்காடு என்று குறித்து சொல்வதல்லை. காரணம் அந்தந்த ஆட்சியமைப்புக்கு எவ்வளவு தேவையோ, அத்தனை விழுக்காட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திய ஆட்சியமைப்பிற்கு 21/2% தேவைப்பட்டிருக்கலாம். அதையே அவர் நிர்ணயித்துக் கொடுத்தார். இன்றைய காலக் கட்டத்திற்கு ஆட்சியமைப்புக்கு எவ்வளவு தேவையோ அதை நிர்ணயித்துக் கொள்ளலாம்.


58.நபி(ஸல்) எதைப் பின்பற்றினார்?

﴾اِتَّبِعۡ مَاۤ اُوۡحِىَ اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ‌‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِكِيۡنَ‏ ﴿۱۰۶ 

6:106. நபியே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக. அல்லாஹ்வைத் தவிர வேறு கட்டளையிடுபவன் வேறு யாரும் இல்லை. இணை வைப்போரை விட்டு விலகியே இருப்பீராக.


59.வஹீயாக அறிவிக்கப்பட்டது எது?

قُلۡ اَىُّ شَىۡءٍ اَكۡبَرُ شَهَادَةً  ؕ قُلِ اللّٰهُ ‌ شَهِيۡدٌ ۢ بَيۡنِىۡ وَبَيۡنَكُمۡ‌ وَاُوۡحِىَ اِلَىَّ هٰذَا الۡـقُرۡاٰنُ لِاُنۡذِرَكُمۡ بِهٖ وَمَنۡۢ بَلَغَ‌ ؕ

6:19 நபியே! “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும். இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருள்ளப்பட்டுள்ளதற்கு அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருப்பதாக அவர்களிடம் எடுத்துரைப்பீராக. இதனைக் கொண்டு உங்களையும் இதை அடைபவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இறக்கியருளப்பட்டது என்றும் கூறுவீராக.
வஹீ மூலமாக இறக்கி அருளப்பட்டது என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருப்பதாக இவ்வாசகம் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனைத் தவிர வேறு எதுவும் வஹீயாக அறிவிக்கப்படவில்லை என்பதற்கும் இதுவே ஆதாரமாகும்.


60.முஹம்மது நபிஸல் உலக மக்களுக்கு எதை எடுத்துரைத்தார்?

يٰۤـاَيُّهَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ‌ ؕ وَاِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسٰلَـتَهٗ‌ ؕ وَاللّٰهُ يَعۡصِمُكَ مِنَ النَّاسِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهۡدِى الۡقَوۡمَ الۡـكٰفِرِيۡنَ‏ ﴿۶۷﴾ 

5:67 தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (உலக மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும், (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆகமாட்டீர், அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
விளக்கம்:
அதாவது உலக மக்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற திருக்குர்ஆனை மட்டும் எடுத்துரைப்பீராக. அவ்வாறு செய்யாவிட்டால் நபித்துவப் பணிய நிறைவேற்றாதவர் ஆகிவிடுவீர். இதை எடுத்துரைக்கும் போது, அவற்றை சிலர் ஏற்காமல் தீங்கை விளைவிக்கலாம். அவர்களைப் பற்றி நீர் விசாரப்படாதீர். அல்லாஹ்வின் சட்டம் கவனித்துக் கொள்ளும். அவர்களுக்கு ஒருபோதும் நேர்வழி கிடைக்காது.


61.வஹீச் செய்திக்கு மாற்றமாக அவர் மக்களுக்கு எடுத்துரைத்தாரா?

وَاِذَا تُتۡلٰى عَلَيۡهِمۡ اٰيَاتُنَا بَيِّنٰتٍ‌ ۙ قَالَ الَّذِيۡنَ لَا يَرۡجُوۡنَ لِقَآءَنَا ائۡتِ بِقُرۡاٰنٍ غَيۡرِ هٰذَاۤ اَوۡ بَدِّلۡهُ‌ ؕ قُلۡ مَا يَكُوۡنُ لِىۡۤ اَنۡ اُبَدِّلَهٗ مِنۡ تِلۡقَآئِ نَـفۡسِىۡ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا يُوۡحٰۤى اِلَىَّ‌ ۚ اِنِّىۡۤ اَخَافُ اِنۡ عَصَيۡتُ رَبِّىۡ عَذَابَ يَوۡمٍ عَظِيۡمٍ‏ ﴿۱۵﴾

10:15 அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப் பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒருகுர்ஆனை நீர் கொண்டு வாரும், அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை; என் இறைவனுக்கு நான் மாறு செய்தால்,பயங்கர வேதனைகளுக்கு நான் ஆளாக வேண்டும் என்பதை நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
விளக்கம்:
முஹம்மது நபி(ஸல்)அவர்கள் உலக மக்களுக்கு வஹீ மூலமாகக் கிடைத்த திருக்குர்ஆனை மட்டும் போதித்துச் சென்றார் என்ற உண்மை இதிலிருந்து நமக்குத் தெளிவாகிறது. அஹ்லெ சுன்னதுல் ஜமாஅத்தை சேர்ந்த நாமும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எதை எடுத்துரைத்தாரோ,அதையே மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


62.முந்தைய நபிமார்கள் காட்டிய வழியை பின்பற்றக் கூடாதா?

திருக்குர்ஆனில் பல இடங்களில் எல்லா நபிமார்களும் கொண்டுவந்த வாழ்க்கை நெரிமுறைகள் ஒன்றே என்று கூறுகிறது. எனவே நபித்துவ விஷயத்தில் வேற்றுமை பாராட்டுவதற்கு ஒருபோதும் இடமில்லை.

شَرَعَ لَـكُمۡ مِّنَ الدِّيۡنِ مَا وَصّٰى بِهٖ نُوۡحًا وَّالَّذِىۡۤ اَوۡحَيۡنَاۤ اِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهٖۤ اِبۡرٰهِيۡمَ وَمُوۡسٰى وَعِيۡسٰٓى اَنۡ اَقِيۡمُوا الدِّيۡنَ وَ لَا تَتَفَرَّقُوۡا فِيۡهِ‌ؕ 

42:13 நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ,அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான், ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்" என்பதே –
விளக்கம்:
அதாவது முந்தைய நபிமார்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கும் முஹம்மது நபிஸல் மூலமாக அறிவிக்கப்படுகின்ற மார்க்க வழிகாட்டுதலுக்கும் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தாதீர்கள். காரணம் அவர்கள் என்ன வழிகாட்டுதலைக் கொண்டு வந்தார்களோ,அதுவே திருக்குர்ஆனில் இறக்கி அருளப்படுகிறது. எனவேதான் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கின்றது.

﴾ نَزَّلَ عَلَيۡكَ الۡـكِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَاَنۡزَلَ التَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَۙ‏ ﴿۳ 

3:3(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான், இது - இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
அதாவது முந்தைய வேதங்களான தவ்ராத் மற்றும் இன்ஜீல் போன்றவற்றில் உள்ள உண்மை விஷயங்களையே இது எடுத்துரைக்கிறது.


63.முந்தைய வேதங்களைப் பின்பற்றலாமா?

فَبَدَّلَ الَّذِيۡنَ ظَلَمُوۡا قَوۡلاً غَيۡرَ الَّذِىۡ قِيۡلَ لَهُمۡ فَاَنۡزَلۡنَا عَلَى الَّذِيۡنَ ظَلَمُوۡا رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوۡا يَفۡسُقُوۡنَ ﴿۵۹﴾ 

2:59 காலப் போக்கில் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வேத வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தைகளாக மாற்றிக் கொண்டார்கள், ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்தில் இருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம்.

اَفَتَطۡمَعُوۡنَ اَنۡ يُّؤۡمِنُوۡا لَـكُمۡ وَقَدۡ كَانَ فَرِيۡقٌ مِّنۡهُمۡ يَسۡمَعُوۡنَ کَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوۡنَهٗ مِنۡۢ بَعۡدِ مَا عَقَلُوۡهُ وَهُمۡ يَعۡلَمُوۡنَ‏ ﴿۷۵﴾ 

2:75 (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒரு சாரார் (மத குருமார்கள்) இறை வாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
எனவே முந்தைய வேதங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டிருந்தாலும்,அவை தம் அசல் வடிவில் இல்லாததால் அவற்றைப் பின்பற்றுவது சரியாகாது.


64.இனி நபி அல்லது ரசூல் என்று யாரும் வர மாட்டார்களா?

اِنَّ الَّذِيۡنَ يَكۡتُمُوۡنَ مَآ اَنۡزَلۡنَا مِنَ الۡبَيِّنٰتِ وَالۡهُدٰى مِنۡۢ بَعۡدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الۡكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلۡعَنُهُمُ اللّٰهُ وَ يَلۡعَنُهُمُ اللّٰعِنُوۡنَۙ‏ ﴿۱۵۹﴾

2:159 நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும்,நேர்வழியையும் -அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
விளக்கம்:
அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரங்களுடன் நேர்வழியும் வந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்காகவும் தேவையான அனைத்து விஷயங்களும் இவ்வேதத்தில் தெளிவாக்கப்பட்டு விட்டன. யார் இவற்றையெல்லாம் மூடி மறைத்து, வெறும் சடங்குச் சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கடைப்பிடிக்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து தவிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு ஏற்படும் துர்பாக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கவனத்தீர்களா? அனைத்து விஷயங்களும் இந்தக் குர்ஆன் மூலம் தெளிவாக்கபட்டு விட்டது. மேற்கொண்டு சொல்வதற்கு எந்த விஷயமும் இல்லை. எனவே முஹம்மது நபிக்குப் பின் மேற்கொண்டு இறை வழிகாட்டுதல்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பதில்லை.


65. வேதத்தை ஏற்றுக் கொள்வது:

நாம் ஏற்கனவே சொன்னது போல அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் நேரடியாகப் பேசுவதில்லை. எனவே அவன் தன் புறத்திலிருந்து மனிதனுக்கு அறிவிக்க வேண்டிய வழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் அறிவித்துவிடுகிறான். அந்தந்த காலத்தில் வாழ்ந்த நபிமார்கள், தாம் பெற்ற வழிகாட்டுதலை தொகுத்து புத்தக வடிவில் கொடுத்துவிட்டு சென்றார்கள். இவ்வாறு தொகுத்து தந்த நூலை வேதம் எனப்படுகிறது. இப்படியாக இறுதியாக வந்த வேதம் தான் திருக்குர்ஆன் என்பதாகும்.

வேதம் என்றால் நிலை மாறாதது என்று பொருள்படும். உதாரணத்திற்கு நாம் ஒரு விஷயத்தை சொன்ன பின், இது வேதவாக்கு என்கிறோம். அதற்கு பொருள் என்னவென்றால் இது இப்படித்தான் என்பதாகும். இதற்கு மாற்றமாக நடக்க வாய்ப்பே இல்லை என்பதாகும். எனவே இறை வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் நடந்த, நடக்கின்ற,அல்லது நடக்கவிருக்கின்ற உண்மைகளையே எடுத்துரைக்கும். எனவேதான் நாம் திருக்குர்ஆனின் தெளிவுரையை எழுதும் போது, நடந்த வரலாற்று உண்மைகளை இன்றைய காலத்தில் நடப்பதைப் பொருத்திப் சொல்லி இருக்கிறோம். உதாரணத்திற்கு மூஸா நபி காலத்தில் எத்தேச்சாதிகார ஆட்சி செய்து வந்த ஃபிர்அவுனைப் பற்றி குறிப்பிடும்போது, திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

28:4 நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியில் உள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒருகூட்டத்தாரை பலஹீனப் படுத்தினான், அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான், நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
விளக்கம்:
பூமியில் - தன் நாட்டில் - பெருமையடித்துக் கொண்டு – தான் தோன்றித்தனம் - இப்படி ஆட்சி செய்வது எதேச்சதிகாரம் என்பதாகும். இதற்காக நாட்டிலுள்ள மக்களைப் பலப் பிரிவினர்களாகப் பிரித்து, அதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பலவீனப்படுத்தி வந்தான். மேலும் ஆண்களைக் கொல்வதும் பெண்களை விட்டுவிடுவதும் என்று சொல்லப்படுகிறது. இங்கு ஆண்கள் என்பது சமுதாயத்தில் இருந்த வீரம் மிக்கவர்களைக் குறிக்கும். பெண்கள் என்பது வீரமற்ற பாமரர்களைக் குறிக்கும்.


66.வரலாற்று நிகழ்வுகளும் வேத வாக்கே!

அக்காலத்தில் ஆட்சி செய்து வந்த ஃபிர்அவுன்தான் அவ்வாறு நடந்து கொண்டான் என்று சொல்லி அதை கதையாக ஆக்கி விடக்கூடாது. இக்காலத்திலும், ஏதேச்சாதிகார ஆட்சி நடைபெற்று வரும் எல்லா நாடுகளிலும் இப்படி நடந்து வருவதைக் நாம் காண்கிறோம். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, மனிதன் தன்னிச்சையாக ஆட்சி செய்து வந்தால், இப்படித்தான் நடக்கும் என்பது வேத வாக்காகும். இத்தகைய ஆட்சிக்கு பக்க பலமாக ஹாமனும் (மத குருமார்கள்) ஃகாரூனும் (செல்வந்தர்கள்) இருப்பார்கள். இதைச் சரி செய்ய மூஸா நபி வந்தார். அவர் உலகிற்கு கொண்டுவந்த சீர்திருத்தங்களை, இன்றை காலத்தில் நாமும் கொண்டுவர பாடுபடவேண்டும். எனவே அவர் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இப்படியாக எல்லா நபிமார்களும், உலகிற்கு வருகை தந்த சீர்திருத்தவாதிகளே ஆவார்கள். அந்தந்த காலத்தில் நடந்து வந்த அநியாய அக்கிரமங்களை அவர்கள் எவ்வாறு சீர் செய்தார்களோ, அவ்வாறே இன்றைய காலக் கட்டத்திலும் நாமும் சீர்செய்ய முயல வேண்டும். இதுவே வலராற்று நிகழ்வுகளை வேதத்தில் எடுத்துக் கூறுவதன் நொக்கமாகும். திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.

فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيۡنَ وَمُنۡذِرِيۡنَ ط وَاَنۡزَلَ مَعَهُمُ الۡكِتٰبَ بِالۡحَـقِّ لِيَحۡكُمَ بَيۡنَ النَّاسِ فِيۡمَا اخۡتَلَفُوۡا فِيۡهِ ‌ؕ وَمَا اخۡتَلَفَ فِيۡهِ اِلَّا الَّذِيۡنَ اُوۡتُوۡهُ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ الۡبَيِّنٰتُ بَغۡيًا ۢ بَيۡنَهُمۡ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا لِمَا اخۡتَلَفُوۡا فِيۡهِ مِنَ الۡحَـقِّ بِاِذۡنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ‏ ﴿۲۱۳﴾

2:213 அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாரயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான், அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள், ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். இவ்வாறே,அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்தினான்.
விளக்கம்:
மனிதனின் நற்செயல்களின் பலன்களை எடுத்து கூறவும்,தீய செயல்களின் விளைவுகளை விளக்கி முன்னெச்சரிக்கை செய்யவும் அல்லாஹ்வின் நியதிப்படி நபிமார்கள் வந்தார்கள். அவர்களும் மக்களிடையே ஏற்பட்டிருந்த வேற்றுமைப் பகைகளை நீக்கி, சுமூகமாக வாழ, மிகச் சரியான வழிமுறையைக் காட்டும் வேதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்படியாகத் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் வந்த பின்பும், காலப்போக்கில் தம்மிடையே வளர்ந்து வந்த போட்டி பொறாமையின் காரணமாக, அவர்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனர். (பார்க்க 16:92) இருப்பினும் திசை மாறிச் செல்லும் வழியை விட்டுவிட்டு இறை வழிகாட்டுதலின் படி ஒன்றுபட்டு வாழவே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இப்படியாக சமுதாயங்களை சீர்செய்த நபிமார்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகளே ஆவார்கள்.


67.திருக்குர்ஆனின் மக்கா, மதினா அத்தியாயங்கள்?

திருக்குர்ஆனின் அத்தியாயங்களை “மக்கா” அத்தியாயங்கள் “மதினா” அத்தியாயங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அதாவது முஹம்மது நபி(ஸல்) அவாகள் மக்காவில் இருந்த சமயம் இறக்கி அருளப்பட்ட அத்தியாயங்கள் என்றும், அவர் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் மதினாவில் இருந்த காலத்தில் இறக்கி அருளப்பட்ட அத்தியாயங்கள் என்றும் பொருள்படுகிறது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்றார். அதன்பின் மக்காவில் 13 ஆண்டுகளும், மதினாவில் 10 ஆண்டுகளும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இவ்விரண்டிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது மக்கா அத்தியாயங்களில் உள்ள வஹீச் செய்திகள் யாவும் அல்லாஹ் படைத்துள்ள பிரபஞ்ச படைப்புகள் ,உலக படைப்புகள், வரலாற்றுத் தொகுப்புகள், சமுதயாங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரண காரணிகள், ஆதிகால முதற்கொண்டே இறைத் தூதர்கள் தம் மக்களுக்கு எடுத்துரைத்த அல்லாஹ்வின் அறிவுரைகள், ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. அந்த அத்தியாயங்களில் இறைக் கட்டளைகள் என்று எதுவும் இருக்காது. அறிவுரைகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

ஆனால் மதினா அத்தியாயங்களைக் கவனிக்கும் போது, வேத அறிவுரைகளில் சற்று வித்தியாசத்தைக் காண முடிகிறது. அதாவது மதினாவிற்குச் சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அங்கு ஃகிலாஃபத் என்கின்ற மக்களாட்சியை ஏற்படுத்தினார். இதற்காக அவர் மக்களின் ஆதரவை ஒன்று திரட்டினார். அங்கு வாழ்ந்த மக்களில் பலர், அவர் கொண்டு வந்த இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். எனவே மதினா அத்தியாயங்களில் இறைக் கட்டளைகள் இருக்கும். தனி நபர் முதல் சமூக அமைப்பை/ ஆட்சியமைப்பைக் கட்டிக் காப்பவர்கள் வரையில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை உள்ளன.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) கொண்டு வந்த மக்களாட்சிக்கு, “தீனுல் இஸ்லாம்” என்று பெயரிட்டார். (பார்க்க 3:19) அதாவது அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் ஆட்சிமுறை என்பதாகும். இதை ஏற்றுக் கொண்டவர்கள் “முஸ்லிம்கள்” ஆவார்கள். அதாவது பொது மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு இறைவழிகாட்டுதலை ஏற்று வாழ்பவர்கள் என்பதாகும். இறைவழிகாட்டுதலின்படி வியாபாரம், கல்விபோதனை, குடும்பம், நீதி என அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பின்பற்றி நடப்பவர்கள்.

ஆனால் “முஃமின்கள்” என்று வரும்போது, இஸ்லாமிய ஆட்சியமைப்பை மற்றும் சமூக அமைப்பை நிலை நிறுத்தி(ஸலாத்),வஅதைக் கட்டிக்காக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டு அயராது உழைப்பவர்கள் ஆகிறார்கள். (பார்க்க 49:14-15) காரணம் இறைக் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவதோடு, அவற்றை நடைமுறைப் படுத்தும் போது, பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். அவற்றை எல்லாம் எதிர்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க தம்மை அர்ப்பணித்து செயல்படும் செயல் வீரர்களே முஃமின்கள் எனப்படுவர். ஆனால் ஈமான் கொண்டவர்களே என்று வரும் திருக்குர்ஆன் வாசகம் அழைக்கும் போது, இவ்விருவரையும் பொதுவாகக் குறிக்கும் என்பதையும் மறவாதீர்கள்.

எனவே மக்கா அத்தியாயங்களில் அல்லாஹ்வின் படைப்புகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளை அறிவிக்கும் அத்தியாயங்களாக இருக்கின்றன. மதினா அத்தியாயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களையும் அவற்றின் கொள்கை கோட்பாடுகளையும் நடைமுறைப் படுத்த கட்டளைகளைப் பிறப்பிக்கும் அத்தியாயங்களாக இருக்கின்றன.

எனவே அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் என்றால் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக அறிவித்த அறிவுரைகளின் (Constituional Acts) படி வாழுங்கள். இறைத்தூதரைப் பின்பற்றுங்கள் என்றால் திருக்குர்ஆனின் அடிப்படையில் உருவாகும் இஸ்லாமிய/ மக்களாட்சி பிறப்பிக்கும் நடைமுறைச் சட்டங்களையும் (Laws Governing the State) , அதன் சட்ட உட்பிரிவுகளையும் (By Laws) பின்பற்றுங்கள் என்று பொருள்படும். ஆனால் தற்போதைய உலகில் இறைத்தூதரைப் பின்பற்றுங்கள் என்றால் முஹம்மது நபி(ஸல்) சொன்னதாகவும் செயல்பட்டதாகவும் தொகுத்து எழுதப்பட்ட ரிவாயத்துகளை - அறிவிப்புப் புத்தகங்களைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகிறது. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இருப்பதை நன்றாகப் புரிந்து கொண்டால், ரிவாயத்தகளில் எழுதப்பட்டுள்ளவை சரியான தகவலா அல்லது இட்டுக் கட்டப்பட்ட செய்தியா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


68.ஆஃகிரத் - இம்மையும் மறுமையும்:

இதுவும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பொதுவாக ஆஃகிரத்தைப் பற்றி பேசும்போது, “மறுமைநாள்” என்று சொல்லி விடுவார்கள். “மறுமைநாள்” என்றால் மரணத்திற்குப் பின் அல்லாஹ் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, அவரவர் செய்து வந்த செயல்களைப் பற்றி கேள்வி கேட்கும் நாள் தான் “மறுமைநாள்” என்பார்கள். அதன் பின் மறுமை நாளில் நடக்கும் விஷயங்கள் என்று ஏராளமான கற்பனை கதைகளை சொல்லி வருவார்கள். இதுதான் இன்றைக்கும் நடக்கின்ற விஷயமாகும். மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடாமல் இல்லை.
ஆனால் நாம் கேட்கின்ற கேள்வி என்னவென்றால் மரணத்திற்குப் பின்புதான், நாம் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ் கேள்வி கேட்பானா என்பதுதான். இந்த உலகத்தில் அவன் கேள்வி கேட்க மாட்டானா? அவன் இவ்வுலகில் கேள்வி கேட்கிறான் என்றால் எப்படி கேட்கிறான் என்பதும் ஒரு முக்கிய கேள்வியாகும்.
அதே போல் மனிதன் செய்யும் நற்காரியங்களுக்குக் கூலியாக சுவனத்தை வழங்குவான் என்றால் அவன் எங்கே வழங்குவான். மரணத்திற்குப் பின்புதான் வழங்குவானா? இவ்வுலகில் வழங்க அவன் சக்தி பெறவில்லையா? இது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. சரி. கவனமாகப் படியுங்கள். ஏனென்றால் இதை அடிப்படையாக வைத்துதான் தனி நபர் மற்றும் சமுதாயத்தின் எதிர்காலமே நிர்ணயிக்கப்படுகிறது.

مَنۡ كَانَ يُرِيۡدُ ثَوَابَ الدُّنۡيَا فَعِنۡدَ اللّٰهِ ثَوَابُ الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ‌ ؕ 

4:134. எவரேனும் இவ்வுலகின் பலனை (மட்டும்) அடைய விரும்பினால், அல்லாஹ்விடம் இவ்வுலகப் பலனும்,மறுவுலகப் பலனும் உள்ளன.

﴾لَهُمۡ عَذَابٌ فِى الۡحَيٰوةِ الدُّنۡيَا‌ وَلَعَذَابُ الۡاٰخِرَةِ اَشَقُّ‌ ۚ وَمَا لَهُمۡ مِّنَ اللّٰهِ مِنۡ وَّاقٍ‏ ﴿۳۴

13:34. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.

மேற்சொன்ன இரு வாசகங்களையும் கவனித்துப் பாருங்கள். இது போன்ற வாசகங்கள் திருக்குர்ஆனில் ஏராளமாகக் காணக் கிடைக்கும். அதாவது பலன்களும் சரி நரக வேதனைகளும் சரி அவரவர் செயல்களுக்கு ஏற்ப இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைப்பது உறுதி. ஆனால் அல்லாஹ் நேரடியாக இறங்கி தண்டனை அளிக்காமல் அவரவர் செயல்களின் விளைவுகளாக ஏற்படும்படி சட்டங்களை இயற்றிவிட்டான். உதாரணத்திற்கு ஒருவர் குடிப் பழக்கத்திற்கு ஆளானால்,ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவருடைய உடல் நிலை பாதிப்பிறகுள் ஆகும். விதவிதமான நோய்கள் பீடிக்கும். சமுதாயத்தில் அவருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அவரது குடும்பமும் சீரழியும். இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றிவிட்டதால் யாரும் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. இத்தகைய விளைவுகள் இறுதியாக ஏற்படுவதையே அந்தந்த செயல்களின் ஆஃகிரத்து ஆகும்.


69.“ஆஃகிரத்” இஸ்லாத்தின் அஸ்திவாரம்:

மேலும் “இஸ்லாம்” என்ற மார்க்க கட்டிடத்தின் அஸ்திவாரமே ஆஃகிரத்து மீதுதான் எழுப்பப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அஃகிரத்து இல்லை என்றால், எல்லாமே ‘அவரவர் விருப்பப்படி தான்’ என்றாகி விடும். உலகத்தையும் அதில் அளவற்ற அருட்கொடைகளையும் படைத்து மனித பொறுப்பில் விட்டுவிட்ட அல்லாஹ், மனிதனிடமிருந்து எதையும் எதிர் பார்ப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பல்வேறு படைப்புகளைப் படைத்த அல்லாஹ், இவ்வுலகில் மனித படைப்பினத்திற்கு மட்டும் முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, கூடவே அவனுடைய சிறப்பான வாழ்விற்கு சரியான பாதையும் காட்டிவிட்டு, எவர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதை பரிசோதித்துக் கொள்ளவே அல்லாஹ் இவ்வாறு படைத்ததாக திருக்குர்ஆன் 11:7 வாசகம் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் இத்திட்டம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நிகழ்கால வாழ்வையும், வருங்கால நிலையான வாழ்வையும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும்.

நாம் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல, மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்த அல்லாஹ், ஒவ்வொரு செயலுக்கும் என்ன பலன்கள் அல்லது விளைவுகள் என்பதை ஏற்கனவே நிர்ணயித்து விட்டான். தான் விரும்பிய படி செயல்படுவதற்கு முழு சுதந்திரம் பெற்ற மனிதன், தன் செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் சக்தி பெறவில்லை. அந்த விளைவுகளை அல்லாஹ் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொணடான்.

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰهَ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ يُعَذِّبُ مَنۡ يَّشَآءُ وَيَغۡفِرُ لِمَنۡ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏ ﴿۴۰﴾ 

5:40. நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான், இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான், அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
விளக்கம்:
கவனித்தீர்களா? அகிலங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றன. எனவே மனித செயல்களில் எவை வேதனை அளிக்கக் கூடியவை மற்றும் எவை பாதுகாப்பு அளிக்கக் கூடியவை என்ற சட்ட விதிமுறைகள் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பேராற்றல்கள் ஐக்கியமாகி உள்ளன. அதாவது மனித செயல்கள் என்னவோ, அதற்கேற்றவாறு பலன்கள். நற்செயல்களுக்கு நற்பலன்கள். தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இவை ஏற்கனவே தீர்மானிக்கப்ட்டு விட்டன. இதையே அல்லாஹ் கூலி கொடுப்பதாகச் சொல்கின்றான். இந்த சட்ட விதிமுறைகளை எவராலும் எக்காலத்திலும் உலகின் எந்த பகுதியிலும் மாற்றவே முடியாது.

எனவே தனி நபரோ அல்லது சமுதாயமோ,அவரவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறுதி விளைவுகள் மற்றும் பலன்கள் என்று நிர்ணயமாகி உள்ளன. இதுதான் அந்தந்த செயல்களின் ஆஃகிரத்தாக இருக்கிறது. நாமும் தீய செயலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பார்த்து, “இப்படி செய்யாதே. இல்லையென்றால் கடைசியில் கஷ்டப்பட வேண்டிவரும்” என்போம். இத்தகைய இறுதி விளைவைத் தான் ஆஃகிரத்து என்று சொல்லப்படுகிறது. எனவே தன் விருப்பப் படி செயல்படுவதற்கு முழு சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு. செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட வில்லை. இருப்பினும் அறிந்தோ அறியாமலோ, மனிதன் செய்யும் சிறு தவறுகளின் பாதிப்பிலிருந்து அவனால் விடுவித்துக் கொள்ள முடிகிறது. இதை திருக்குர்ஆன் மொழியில்:

اِنَّ اللّٰهَ لَا يَغۡفِرُ اَنۡ يُّشۡرَكَ بِهٖ وَيَغۡفِرُ مَا دُوۡنَ ذٰ لِكَ لِمَنۡ يَّشَآءُ‌ ۚ وَمَنۡ يُّشۡرِكۡ بِاللّٰهِ فَقَدِ افۡتَـرٰۤى اِثۡمًا عَظِيۡمًا‏ ﴿۴۸﴾

4:48 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான், இதைத்தவிர, (மற்ற) எதையும் நாடியவர்களுக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
விளக்கம்:
அல்லாஹ் படைத்த உலகில், அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தான் மனிதன் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அந்த வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றினால், அவனுக்கு நிலையான பாதுகாப்பான வாழ்வு ஒருபோதும் கிடைக்காது. இதைத் தவிர்த்து, சிறுசிறு பிழைகள் என்பது வேறு விஷயமாகும். அதன் தாக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வுக்கு நிகராக வேறு சக்திகளை வழிபட்டு வந்தால், இறுதியில் மிகப்பெரிய பாவத்தையே செய்வதாகப் பொருள்படும். அதன் விளைவாக ஏற்படும் வேதனைகளை அவன் சந்தித்துதான் ஆக வேண்டி வரும்.

ஆக செயல்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவற்றின் பாதிப்புகளை மனிதன் சந்தித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொண்டீர்கள். சிறுசிறு பாதிப்புகளை சரி செய்து கொள்ள அவனுக்கு வழிகள் கிடைத்திடலாம். உதாரணத்திற்கு மழையில் நனைந்தால், ஜலதோஷம் பிடிக்கும். அதை சரிசெய்ய மருந்து மாத்திரை கிடைக்கின்றன. அதைக் கொண்டு அதிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஆனால் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வந்தால், அவனுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதையும் மீறி அவன் ஓட்டி வந்தால் விபத்துகளை சந்திக்க வேண்டி வரும். இது போதைப் பொருட்களை பயன்படுத்துவதன் ஆஃகிரத்தாக வந்து நிற்கும். அதே விபத்து விபரீதமாக இருந்தால், கை கால்களை இழக்க நேரிடும் அல்லது உயிரையே இழக்க நேரிடும். இது அதன் ஆஃகிரத்தாக இருக்கிறது. இப்படியாக பல நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவையெல்லாம் அன்றாடம் நிகழக்கூடிய சம்பவங்களாகவே இருக்கும்.


70.இஸ்லாமும் ஆஃகிரத்தும்:

اِنَّ الدِّيۡنَ عِنۡدَ اللّٰهِ الۡاِسۡلَامُ 

3:19 நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்,

﴾وَمَنۡ يَّبۡتَغِ غَيۡرَ الۡاِسۡلَامِ دِيۡنًا فَلَنۡ يُّقۡبَلَ مِنۡهُ‌ ۚ وَهُوَ فِى الۡاٰخِرَةِ مِنَ الۡخٰسِرِيۡنَ‏ ﴿۸۵

3:85 இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும்விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது, மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
விளக்கம்:
மேற்சொன்ன இரு வாசகங்களையும் கவனித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து முன் மொழியப்பட்ட மார்க்கம் “இஸ்லாம்”தான் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்காதவர்களின் ஆஃகிரத்து பெரு நஷ்டமுடையதாகத் தான் இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. இப்போது “இஸ்லாம்” என்ற வார்த்தையின் பொருள் என்னவென்பதைத் தான் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இஸ்லாம் என்றால் சாந்தியும் சமாதானமும் என்பதாகும். தீனுல் இஸ்லாம் என்றால் சாந்தியுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்குரிய வழிமுறை என்பதாகும்.

எனவேதான் இஸ்லாம் என்பது மார்கமே அன்றி, ஒருபோதும் மதமாக இருக்க முடியாது. ஏனெனில் உலகில் சாந்தியும் சமாதானமும் கிடைக்க வேண்டுமென்றால், வெறும் வார்த்தை ஜாலங்களால் கிடைக்க ஒருபோதும் வாய்ப்பில்லை. இதற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீட்டி, அயராது உழைக்க வேண்டும். மேலும் சமுதாய மக்களுள் சுயநலம் வளராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சிறு வயதிலிருந்தே மார்க்க கல்வியை அளித்து வர வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டால் அவரவர் மனஇச்சைப் படி செயல்பட்டு, காலப்போக்கில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டு இறுதியில் (ஆஃகிரத்தில்) பெருத்த நஷ்டங்களை சந்திக்க நேரிடும். இதையே திருக்குர்ஆனில் பல கோணங்களில் பல் வேறு இடங்களில் விளக்கிச் சொல்லப்படுகிறது.


71.“கிலாஃபத்” - மக்களாட்சியே!

இஸ்லாமிய ஆட்சிமுறைதான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்று மேற்சொன்ன வாசகங்களிலிருந்து தெளிவாகிறது. அதாவது “அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காத்தல்” என்ற அடிப்படையில் செயல்படும் ஆட்சிமுறை என்று பொருள் படும். எனவே ஒரு நாட்டில் நடைபெறும் மன்னராட்சியோ, மக்களாட்சியோ - எதுவாக இருந்தாலும், அதன் நோக்கம் மேற்சொன்ன கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மன்னராட்சி ஒரு கட்டத்தில் இவ்வாறு நடைபெற்றாலும், பிற்காலத்தில் வரக்கூடிய வாரிசுகள் இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டை கடைப்பிடிக்க தவறிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மக்களாட்சி முறைதான் இதற்கு சரியான தீர்வு ஆகும். இதைத்தான் ஃகிலாஃபத் (Rules Governing the State) என்று அரபி மொழியில் சொல்லப்படுகிறது. முஹம்மது நபிக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தவர்களை ஃகலீஃபா என்றுதான் சொல்கிறோம். காரணம் அவர்கள் மக்களின் பிரிதிநிதியாக Governerஆக செயல்பட்டனர். ஆக எந்த ஆட்சியும் சரி. ஒட்டு மொத்த மக்களின் நலனைப் பேணிக் காக்க தவறி விட்டால், அந்த ஆட்சி எவ்வளவு தான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் இவ்வுலகில் நீடிக்காது என்பதே உண்மையாகும். இது அதன் அதன் ஆஃகிரத்து என்பதாகும்.
ஆக சீர்பட்ட நற்பண்புகள் உடைய சமுதாயத்தை உருவாக்க ஆட்சியமைப்பு ஆவன செய்ய வேண்டும். அத்தகைய நற்பண்புள்ளவர்களுள் தகுதியுடையவர்களே ஆட்சி பீடத்தில் அமர வேண்டும். எனவேதான் ஆட்சியமைப்பைக் கட்டிக்காக்கும் மூஃமின்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்:

﴾وَالَّذِيۡنَ يَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَـنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِيۡنَ اِمَامًا‏ ﴿۷۴

25:74 மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும்,எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக - (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!" என்று பிரார்த்தனை செய்வார்கள்.
விளக்கம்:
கவனித்தீர்களா? குடும்பமும் சந்தோஷங்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணங்களும், அதற்கேற்ற வகையில் உழைப்பும் இருக்கும். மேலும் நாட்டு மக்களும் இறை வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள் உடைய மக்களாக இருக்கவேண்டும். அத்தகையவர்களின் தலைவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும் விரும்புவார்கள். எனவே நாட்டில் அதற்கேற்ற வகையில் கல்வி போதனைகள் இருந்தால் தான், அத்தகைய சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும். பிற்காலத்தில் வரக்கூடிய தலைவர்களும் அத்தகைய நல்லோர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மக்களை அவரவர் போக்கில் விட்டுவிட்டால், அவர்களில் பெரும்பாலோர் சுயநலக்காரர்களாக மாறி விடுவார்கள். அதன் பின் சமூக அமைப்பிற்கே குந்தகம் விளைவிக்கும் மக்களாக மாறி விடுவார்கள். அவர்களுள் வரும் தலைவர்களும் சுயநலத்துடனே செயல்படுவார்கள். இறுதியில் நாடு அழிவை நோக்கி செல்லும். இப்படியாக அந்நாட்டிற்கு பெருத்த நஷ்டங்கள் ஏற்படும்.


72.சுவனத்திற்கு ஒப்பான சமுதாயம்?

 اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ وَ الۡمُشۡرِكِيۡنَ فِىۡ نَارِ جَهَنَّمَ خٰلِدِيۡنَ فِيۡهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمۡ شَرُّ الۡبَرِيَّةِ ؕ‏ ﴿۶ ﴾ اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمۡ خَيۡرُ الۡبَرِيَّةِ ؕ‏ ﴿۷ ﴾

98:6-7. நிச்சயமாக வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள். இத்தகையவர்கள் தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.

جَزَآؤُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَاۤ اَبَدًا ‌ؕ رَضِىَ اللّٰهُ عَنۡهُمۡ وَرَضُوۡا عَنۡهُ ‌ؕ ذٰلِكَ لِمَنۡ خَشِىَ رَبَّهٗ ﴿۸﴾

98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள். தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலைஉண்டாகும்.

விளக்கம்: மேற்சொன்ன மூன்று வாசகங்களையும் நன்றாகப் படித்துப் பாருங்கள். வேதக்காரர்களோ, முஷ்ரிக்குகளோ அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய செயல்களில் ஈடுபடுவோர்க்கு வேதனை மிக்க நரக வாழ்வுதான் கிடைக்கும் என்றும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு சுவன வாழ்வு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மனித விருப்பத்திற்கு விடப்படுகிறது. ஆனால் ஏற்று நடப்பவர்களின் வாழ்க்கை இனிமையானதாகவும்,மறுப்பவர்களின் வாழ்வு வேதனைகள் நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொரும் தன் விதியை தானே நிர்ணயித்துக் கொள்கின்றான். மேலும் திருக்குர்ஆன் முழுவதையும் படித்துப் பாருங்கள் இதே உண்மையை பலக் கோணங்களில் சொல்லப்பட்டிருக்கும். அதாவது மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் அவன் செய்யும் செயல்களின் விளைவுகளை அவன் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இதுவே மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள் என்பதாகும். இவையே அவனுடைய விதியை நிர்ணயிக்கும். இதுவே ஆகிரத்து என்பதாகும்.

73.ஆஃகிரத்தும் துப்பறிதலும்.

“மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள் தான்” ஆஃகிரத்து என்பதை நாம் பார்த்தோம். இப்போது ஆஃகிரத்தை வேறு கோணத்தில் பார்ப்போம். அதாவது விளைவுகளை வைத்து என்ன சம்பவங்கள் நடைப்பெற்று இருக்கும் என்பதை கணித்துப் பார்ப்பது. ஏனெனில் இன்னன செயல்கள் நடந்திருந்தால் தான், குறிப்பிட்ட விளைவு ஏற்பட்டிருக்கும் என்பதை சற்றும் சந்தேகமின்றி ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

உதாரணத்திற்கு எங்கோ ஒரு கொலை நடந்துள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி துப்பறிய,காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு சிதறிக் கிடக்கும் பொருட்களின் புகைப் படங்களை எடுப்பார்கள். அதை பத்திரப்படுத்துவார்கள். அந்த பொருட்கள் யாருக்குச் சொந்தம் என்பதை விசாரிப்பார்கள். மேலும் கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை விசாரிப்பார்கள். யாரிடமாவது முன்பகை ஏதாவது இருந்ததா என்று துருவிதுருவி விசாரிப்பார்கள். யார் யாரெல்லாம் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களில் யாரைக் காணவில்லை என்றும் விசாரிப்பார்கள். இவ்வாறு ஏன் விசாரிக்கிறார்கள்?

நெருப்பில்லாமல் புகையாது என்பது போலவே, முன்பகை இல்லாமல் கொலை நடக்க வாய்ப்பில்லை என்பதை அவர்கள் திடமாக நம்புவதால்தான். இப்படியாக அவர்கள் எப்படிப்பட்ட கொலையைப் பற்றியும் துப்பு துலக்காமல் விடுவதில்லை. கொலையாளியும் தப்புவதே இல்லை. இப்படியாக காவல் துறையினர் தெரிந்தோ தெரியாமலோ ஆஃகிரத்தைப் பற்றி சிந்தித்து செயலாற்றுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் ஆஃகிரத்தைப் பற்றி கற்பனைக் கதைகளை சொல்லி வருகிறார்கள்!!


74.மரணத்திற்குப் பின் தொடர்கின்ற ஆஃகிரத்து:

மனித வாழ்வு அவனுடைய மரணத்துடன் முடிந்து விடுவதில்லை என்று பல்வேறு இடங்களில் திருக்குர்ஆன் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறது. அதில் சில வாசகங்களைக் கவனித்துப் பாருங்கள். ஏனெனில் மனித வாழ்வைப் பற்றிய திட்டங்களை தீட்டுவதற்கு மனிதனைப் படைத்த ஏக இறைவனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. அல்லாஹ்வின் படைப்பாகிய மனதினுக்கு அதைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லை. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதையும் அதற்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள அவை உதவும். சுவனம் என்பது நம் கண்ணெதிரே இருக்கின்ற ஒன்றல்ல. இவ்வுலக சுவனமாயினும் சரியே அல்லது மரணத்திற்குப் பின் கிடைக்கின்ற சுவனமாயினும் சரி. அதை அடைய என்ன வழி என்பதை அறிந்து கொண்டால்தான் முழு வேகத்துடன் பின்பற்ற முடியும். நம் வாழ்க்கைப் பயணத்தை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும்.

فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِۙ‏ ﴿۴۳﴾  عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيۡنَ‏ ﴿۴۴﴾  يُطَافُ عَلَيۡهِمۡ بِكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۢ ۙ‏ ﴿۴۵﴾  بَيۡضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيۡنَ‌ ۖ‌ۚ‏ ﴿۴۶﴾  لَا فِيۡهَا غَوۡلٌ وَّلَا هُمۡ عَنۡهَا يُنۡزَفُوۡنَ‏ ﴿۴۷﴾  وَعِنۡدَهُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ عِيۡنٌۙ‏ ﴿۴۸﴾  كَاَنَّهُنَّ بَيۡضٌ مَّكۡنُوۡنٌ‏ ﴿۴۹﴾

37:43-49 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்து இருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டு வரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரசமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும்,நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
விளக்கம் :
கவனித்தீர்களா? சுவனத்தில் நடக்கவிருப்பதை திருக்குர்ஆன் எவ்வளவு அழகாக சித்தரிக்கிறது என்பதை கவனித்தீர்களா? ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சுவனவாசிகளின் நிலையை அதில் எடுத்துரைக்கப்படுகிறது. அங்கு கிடைப்பது போதையளிக்கும் மது பானங்கள் அல்ல. உடலுக்கு வலுவூட்டும் குளிர் பானங்கள் ஆகும். அங்கிருக்கும் சேவகர்களும் மிகவும் அடக்கமானவர்களாவும் பரிசுத்தமானவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கெட்ட எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஏது இடம்?

فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَسَآءَلُوۡنَ‏ ﴿۵۰﴾  قَالَ قَآٮِٕلٌ مِّنۡهُمۡ اِنِّىۡ كَانَ لِىۡ قَرِيۡنٌۙ‏ ﴿۵۱﴾  يَقُوۡلُ اَءِ نَّكَ لَمِنَ الۡمُصَدِّقِيۡنَ‏ ﴿۵۲﴾  ءَاِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيۡنُوۡنَ‏ ﴿۵۳﴾  قَالَ هَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ‏ ﴿۵۴﴾  فَاطَّلَعَ فَرَاٰهُ فِىۡ سَوَآءِ الۡجَحِيۡمِ‏ ﴿۵۵﴾  قَالَ تَاللّٰهِ اِنۡ كِدْتَّ لَـتُرۡدِيۡنِۙ‏ ﴿۵۶﴾  وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّىۡ لَـكُنۡتُ مِنَ الۡمُحۡضَرِيۡنَ‏ ﴿۵۷﴾  اَفَمَا نَحۡنُ بِمَيِّتِيۡنَۙ‏ ﴿۵۸﴾  اِلَّا مَوۡتَتَـنَا الۡاُوۡلٰى وَمَا نَحۡنُ بِمُعَذَّبِيۡنَ‏ ﴿۵۹﴾

37:50-59 (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர்: எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். “(மறுமை என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா?” எனக் கேட்டான். “நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின்,(மீண்டும்நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப் பெறுவோமா?" என்றும் கேட்டு வந்தான்.(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?" என்றும் கூறுவார். அவர் அவனைப் பார்க்கும் போது, நரகத்தின் நடுவில் இருப்பதைக் காண்பார். (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே! என் இறைவனுடைய வழிகாட்டுதல் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகி இருப்பேன்" என்று அச்சுவனவாசி கூறுவார். “(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா என்று அச்சுவனவாசி கேட்டதற்கு, (இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை, அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று பதில் கிடைக்கும்.
விளக்கம்:
கவனித்தீர்களா? . மனித வாழ்வைப் பற்றி இருந்த அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் நம்பிக்கை இல்லாதவன் விதண்டா வாதங்களை செய்து வந்தான். இதனால் அவன் தன் மனோ இச்சைப்படியே வாழ்ந்து வந்தான். இறுதி விளைவு நரகம் தான். ஆனால் சுவனவாசிக்கு அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் நம்பிக்கை இருந்தது. எனவே அவரால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பின்பற்ற முடிந்தது. மேலும் சுவனம் கிடைத்த பின் மீண்டும் மரணம் ஏற்படுமா என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் பதில் கிடைக்கிறது. அதாவது அங்குக் கிடைக்கும் வாழ்க்கை காலத்திற்கு அப்பாற்றபட்டது என்பது தெளிவாகிறது.

இது ஒன்றும் ஏமாற்றுப் பேச்சு என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். நடக்கவிருக்கும் உண்மையே. மனிதனை ஏமாற்றி, தன் மீது ஈமான் கொள்ள வைக்க வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை. மனிதன் தன் நிகழ்கால வாழ்வையும, வருங்கால நிலையான வாழ்வையும் சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. காரணம்.

﴾وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقًا وَّعَدۡلاً  ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ‌ ۚ وَهُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ‏ ﴿۱۱۵ 

6:115 உமது இறைவனின் சட்டதிட்டங்கள் யாவும் நியாயமான முறையில் தீட்டப்பட்டு விட்டன. உலகம் நிலைத்திருக்கும் காலம் வரையில் அவற்றில், எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர்கள். காரணம் அனைத்தையும் கேட்கும் வல்லமையும், அறிந்து கொள்ளும் வல்லமையும் உடைய இறைவனின் சொல்லாகும்.


75.ஆஃகிரத்து மீது நம்பிக்கை கொள்வதால் ஏற்படும் பலன்கள்:

உதாரணம்:1 நாம் சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல புறப்பட்டு, நான்கு முனைப் பாதை வரை வந்து நிற்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் சென்றால் பெங்களுர் சென்றடைய முடியும். இன்னொரு பக்கம் சென்றால் கோவைக்குச் செல்ல முடியும். இன்னொரு பாதை கல்கத்தா வரைச் செல்லும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்தால் தான், நாம் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியும். வெறும் யூகத்தின் அடிப்படையில் சென்றால், நமக்கு சரியான பாதை கிடைக்காது. அதன் பின் நாம் அலுத்து விட்டு இறுதிவரையில் தத்தளித்துக் கொண்டுதான் இருப்போம்.

உதாரணம்:2 கோவைக்குச் செல்ல, சென்னை பேரூந்து நிலையத்திற்கு வந்து விட்டோம். எல்லா பேரூந்துகளும் ஒரே மாதிரியான வர்ணம் பூசப்பட்டுள்ளன. எனவே எந்த பேரூந்தில் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிட முடியும் என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சரியாகுமா? அது போல எல்லா வழிபாடுகளும் ஒண்ணுதான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

உதாரணம்:3 மதங்கள் வெவ்வாவேறாக இருக்கலாம். ஆனால் இறுதியில் அனைவரும் போய் சேரும் இடம் ஒன்றுதான் என்பார்கள். ஆறுகளின் பிறப்பிடம் பலவாகும். இறுதியில் சென்றடையும் இடம் கடலாகும் என்பார்கள். அது போலத்தான் மதங்களும் என்பார்கள். இது சரியாகுமா? இயற்கைப் படைப்போடு மனிதனை ஒப்பிட்டு சொல்வது என்னவோ கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இது வெறும் ஏமாற்றுப் பேச்சுதான் என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு வணக்க வழிபாடுகள் இருப்பதை நியாயப்படுத்திப் பேசுவது போல் உள்ளது இந்தப் பேச்சு. அதில் தவறு ஒன்றுமில்லை என்பதை மறைமுகமாக சொல்வது போல் நமக்குத் தெரிய வரும். மனித வாழ்க்கையை ஆறுகளோடு ஒப்பிடுவது சரியாகாது.
ஏனெனில் ஆறுகளுக்கு எந்த செயல்திட்டமும் கிடையாது. அது ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் சென்று விடும். அவ்வளவுதான். ஆனால் மனித வாழ்க்கை என்பது செயல் திட்டங்களின் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒன்றாக உள்ளது. உலகை வழிநடத்திச் செல்வதற்கு வேண்டிய சட்டதிட்டங்களை அவன் பின்பற்றியே ஆக வேண்டும். எனவே அந்த நதிகளையும் ஆறுகளையும் மனிதன் தான் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதுவும் சாக்கடை கலந்த நீராக மாறிவிடும். அல்லது அவை காலப்போக்கில் மறைந்து வெறும் ஓடைகளாக மாறிவிடும்.

எனவே மார்க்கம் என்பது மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு மிகச் சரியான பாதையை காட்டக் கூடிய வழிமுறைக்கு சொல்வார்கள். வீண் விளையாட்டிற்காக சொல்லப்பட்ட விஷயங்கள் அல்ல. எனவே எந்தெந்த செயல்களுக்கு என்னன்ன விளைவுகள், மற்றும் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் நன்றாக அறிந்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். மேலும் எந்தெந்த செயல்களால் என்ன குறுகிய கால பலன்கள் கிடைக்கும்? அவற்றால் வருங்கால நிலையான பலன்களுக்குப் பதிலாக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுவதற்காகவே ஆஃகிரத்து மீது ஈமான் கொள்ள வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு மது பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் கொஞ்சம் பலன் இருப்பதாகவும், பலன்களைவிட தீய விளைவுகள் பன்மடங்கு அதிகமாக இருப்பதாகவும் திருக்குர்ஆன் 2:219 வாசகம் அறிவிக்கிறது. அதாவது மது பானங்கள் மருந்துகளை தயாரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மது பானங்களை தயாரிப்பவர்களுக்கும்,அவற்றை விநியோகிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைத்திடலாம். ஆனால் அதை பொது மக்களிடையே வினியோகித்தால், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழித்துவிடும். இந்த சீரழிவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. காலம் செல்ல செல்ல, அவற்றால் ஏற்படும் சீரழிவுகள் தோற்றத்திற்கு வரும். இவ்வாறு தோற்றத்திற்கு வரக்கூடிய காலம்தான், அதன் ஆஃகிரத்தாக இருக்கிறது. அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வந்த பின், அதைக் கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாகிவிடும். அதை தடுக்க முயன்றால், பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும்.
எனவே ஒரு சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று, மது பானங்களை தவிர்த்துக் கொண்டால் (பார்க்க 5:90) இத்தகைய விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இப்படியாக தனி நபரோ அல்லது சமுதாயமோ எந்த விஷயத்தைப் பற்றியும் முடிவெடுக்கும் போது, குறுகிய காலப் பலன்கள் மற்றும் நிலையான வருங்கால பலன்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். (பார்க்க 2:201) இதற்காகத் தான் ஆஃகிரத்து மீது ஈமான் கொள்ள வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.

மேலும் சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய ஏராளமான செயல்களுக்கு திருக்குர்ஆன் தடை விதிக்கிறது. ஆனால் தீய பழக்க வழக்களுக்கு ஆளானவர்கள், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் அதன் விளைவுகளைப் பற்றி அவர்களால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அறிவாற்றல் ஆயிரம் இருந்தும், அதைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் இருப்பதில்லை. உதாரணத்திற்கு சினிமாவிலும், தொலைக் காட்சியிலும் ஆபாசக் காட்சிகள் இருப்பதில் தவறு ஒன்றுமில்லை என்றும், பொழுது போக்கிற்கு அவை அவசிமானதே என்றும்,கலை உணர்வோடு தான் பார்க்கவேண்டும் என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பேசி வந்தார்கள். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றத்திற்கு வருகின்றன. பணிபுரியும் பெண்கள், பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் ஆகியோரின் கற்புக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுள்ளது. இருந்தும் இத்தகைய காட்சிகளுக்கு தடை விதிப்பதைப் பற்றி சற்றும் யோசித்துப் பார்ப்பதில்லை. அதுமட்டுமின்றி அவர்களை அழைத்து, பாராட்டி, பரிசுகளையும் பட்டங்களையும் அளித்து அவர்களை கௌரவிக்கிறார்கள். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி வருவது போல உள்ளது இன்றைய மக்களின் செயல்கள். ஏன்? அவர்களுக்கு ஆஃகிரத்தைப் பற்றி ஞானம் சற்றும் இல்லை. அவர்களைப் பொருத்தவரையில்

(اِنۡ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنۡيَا نَمُوۡتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوۡثِيۡنَ ۙ‏ ﴿۳۷ 

23:37 நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை. நாம் இறப்போம், (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம், ஆனால் மீ;ண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
இத்தகைய நினைப்பில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மரணித்த பின் என்ன நடக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.

﴾قَالُوۡا رَبَّنَاۤ اَمَتَّنَا اثۡنَتَيۡنِ وَاَحۡيَيۡتَنَا اثۡنَتَيۡنِ فَاعۡتَرَفۡنَا بِذُنُوۡبِنَا فَهَلۡ اِلٰى خُرُوۡجٍ مِّنۡ سَبِيۡلٍ‏ ﴿۱۱ 

40:11 அதற்கவர்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய், இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய், ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் -எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேற ஏதும் வழியுண்டா?" எனக்கூறுவர்.
விளக்கம்:
இறைவா! உயிரற்ற நிலையில் இருந்த எங்களை, உயிர் கொடுத்து வாழ வைத்தாய். மீண்டும் எங்களுக்கு மரணம் ஏற்பட்டது. இரண்டாம் முறையாக உயிர் பெற்று உன் முன் நிற்கிறோம். (பார்க்க 2:28) இறைத்தூதர் சொன்னவை அனைத்தும் உண்மையே என இன்றைய தினம் தெளிவாகி விட்டது. எனவே நரக வேதனைகளிலிருந்து தப்பிக்க வழி ஏதாவது உண்டா? என்று இறைவனிடம் இரைஞ்சுவார்கள்.

 ذٰ لِكُمۡ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحۡدَهٗ كَفَرۡتُمۡ ۚ وَاِنۡ يُّشۡرَكۡ بِهٖ تُؤۡمِنُوۡا ؕ فَالۡحُكۡمُ لِلّٰهِ الۡعَلِىِّ ﴾الۡكَبِيۡرِ‏ ﴿۱۲ 

40:12 (பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம்,அல்லாஹ் ஒருவனே. அவனுடைய வழிகாட்டுதலை மட்டும் ஏற்று வாழுங்கள் என்று அழைக்கப்பட்ட போது, நீங்கள் நிராகரித்தீர்கள், ஆனால்,அவனுக்கு இணையாக்கப்பட்டதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள், ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹவுக்கே உரியது”
விளக்கம்:
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து, அதன்படி செயல்பட சொன்னபோது, அவற்றை ஏற்க மறுத்துவிட்டீர்கள். அதற்கு இணையாக வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தீர்கள். எனவே இப்போது உங்களுக்கு அளிக்கப்பட்ட அல்லாஹ்வின் தீர்ப்பே இறுதியானதும் நிலையானதும் ஆகும் என்று பதிலளிக்கப்படும்.
கவனித்தீர்களா? மனிதனைப் குறித்து அல்லாஹ்வின் செயல்திட்டம் என்னவென்பதை அறிந்து, அவன் காட்டிய வழியில் செயல்பட்டு வந்தால் நிகழ்கால வாழ்வும், வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக இருக்கும். அதற்கு மாறு செய்தால் நிகழ்கால வாழ்வு மட்டும் சிறப்பாக இருக்கும். வருங்கால நிலையான வாழ்க்கை வேதனை மிக்கதாய் இருக்கும். இச்சுவன வாழ்க்கை உலக வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. எனவே திருக்குர்ஆன் அந்த விஷயத்தை ஆணித்தரமாக சொல்லிவிடுகிறது.

(لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَةَ الۡاُوۡلٰى‌ ۚ وَوَقٰٮهُمۡ عَذَابَ الۡجَحِيۡمِۙ‏ ﴿۵۶

44:56 முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள், மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றி விட்டான்.

﴾  فَاِنَّمَا يَسَّرۡنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُوۡنَ‏ ﴿۵۸ 

44:58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய (தமிழ்) மொழியில் எளிதாக்கினோம்.
விளக்கம் :
எனவே அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் நிலையானதும் உறுதியானதும் ஆகும். அவன் காட்டிய வழியில் செயல்பட்டு சுவனத்தை அடைவது மனித பொறுப்பில் விடப்பட்ட விஷயமாகும். அல்லாஹ், உலகில் பிறந்த எந்த மனிதருக்கும் அணு அளவும் அநியாயம் செய்வதில்லை (பார்க்க 4:40) மனிதனைப் படைத்து வேதனை செய்வதில் அல்லாஹ்வுக்கு என்ன இலாபம் இருக்கப் போகிறது? என்று திருக்குர்ஆன் கேட்கிறது. (பார்க்க 4:147)


76.‘அல்லாஹ் நாடினால்’ என்றால் என்ன?

திருக்குர்ஆனைப் படிக்கும் போது, அல்லாஹ் நாடினால் அல்லது நாடியிருந்தால் என்று பல வாசகங்களில் இடம் பெற்றுள்ளதைப் பார்ப்பீர்கள். உதாரணத்திற்கு இவ்வாசகத்தைப் பாருங்கள்.

(اِتَّبِعۡ مَاۤ اُوۡحِىَ اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ‌‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِكِيۡنَ‏ ﴿۱۰۶ 

6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.

(وَلَوۡ شَآءَ اللّٰهُ مَاۤ اَشۡرَكُوۡا ‌ؕ وَمَا جَعَلۡنٰكَ عَلَيۡهِمۡ حَفِيۡظًا‌ ۚ وَمَاۤ اَنۡتَ عَلَيۡهِمۡ بِوَكِيۡلٍ‏ ﴿۱۰۷ 

6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள், நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.

விளக்கம்:இவ்விரு வாசகங்களையும் படித்துப் பார்க்கும்போது, அல்லாஹ்வே பலர் முஷ்ரிக்குகள் ஆவதற்கு காரணமாக இருப்பது போல் உள்ளது. இதன் விளக்கத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே பலமுறை சொல்லி இருப்பது போல் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால் மக்களில் பலர் தம் சொந்த கற்பனையில உருவான வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அத்தகையவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம் என்று நபியைப் பார்த்து சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட வேத அறிவுரைகளின்படி செயல்பட அறிவருத்தப்படுகிறார். காரணம் மார்க்க உண்மைகளை மனிதன் சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். மார்க்க உண்மைகளை திணிக்கக் கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். அவ்வாறு திணித்தால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடும். எனவே நபியின் அழைப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கவனியுங்கள்.

(قُلۡ هٰذِهٖ سَبِيۡلِىۡۤ اَدۡعُوۡۤا اِلَى اللّٰهِ ‌ؔعَلٰى بَصِيۡرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىۡ‌ؕ وَسُبۡحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الۡمُشۡرِكِيۡنَ‏ ﴿۱۰۸

12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே,அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."
விளக்கம்:
கவனித்தீர்களா? நபியின் அழைப்பு தெளிவான ஞானத்தின் அடிப்படையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி அவரைப் பின்பற்றி வருபவர்களும் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே மார்க்கத்தின் பால் விடும் அழைப்பு யாவும் அறிவுப்பூர்வமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதில் கற்பனைக் கதைகளையோ உலக வாழ்க்கைக்குப் பொருந்தாத விஷயங்களையோ கலந்து விடக் கூடாது. மேலும் நபி என்பவர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவே இருக்கிறார் என்று பல முறை சொல்லப்படுகிறது.

قُلۡ مَا كُنۡتُ بِدۡعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدۡرِىۡ مَا يُفۡعَلُ بِىۡ وَلَا بِكُمۡؕ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا يُوۡحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيۡرٌ مُّبِيۡنٌ‏ ﴿۹﴾

46:9 நான் புதிதாக வந்த தூதன் அல்லன். எனக்கு என்ன வஹீ அறிவிக்கப் படுகிறதோ, அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை, தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை" என்று (நபியே!) நீர் கூறும்.
எனவே தெளிவான எச்சரிக்கை செய்திகள் வந்த பின்பும் ஒருவர் தன் போக்கை மாற்றிக் கொள்ள விருப்பமில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும். அவன் தன் அழிவை தானே தேடிக் கொண்டதாகத்தானே அர்த்தமாகும். எனவே அல்லாஹ்வும் அவனை மாற்றுவதில்லை.

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنۡۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهٖ يَحۡفَظُوۡنَهٗ مِنۡ اَمۡرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتّٰى يُغَيِّرُوۡا مَا بِاَنۡفُسِهِمۡ‌ؕ 

13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள், எந்த சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை,

விளக்கம்:மனிதனுக்கு முன்னாலும் பின்னாலும் தொடர்ந்து வரக் கூடியவை என்ன? அவனுடைய செயல்களின் விளைவுகளே ஆகும். இதுவே அல்லாஹ்வின் செயல்திட்டம் (கட்டளை) ஆகும். எனவேதான் அல்லாஹ் அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுடைய நிலையை மாற்றுவதில்லை என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டான். ஆக “அல்லாஹ் நாடியிருந்தால்” என்றால் “அல்லாஹ்வின் செயல்திட்டம்” அவ்வாறு இருந்திருந்தால் என்று பொருள்படும். அதாவது மற்ற உயிரின்ஙகள் தம் இயல்பின் அடிப்படையில் வாழ வைத்திருப்பது போல் மனிதனும் ஒரு குறிப்பிட்ட இயல்பில் வாழவைக்க அல்லாஹ் நாடியிருந்தால் என்று பொருள்படும்.

ஆக அல்லாஹ் மனிதனை மற்ற உயிரினங்களைப் போல் படைக்க நாடவில்லை. அவனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டு, வழிகாட்டுதல்களை நபிமார்கள் மூலம் அளித்து விட்டு, அவ்வழிகாட்டுதலின் பக்கம் நாடி வருபவர்களுக்கே வழிகாட்டுதல் கிடைத்திட செய்ய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். எனவேதான் அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர் அல்லர் என்று நபிக்கு சொல்லப்படுகிறது. அதே போல் இந்த வாசகத்தையும் கவனித்துப் பாருங்கள்.


77.அல்லாஹ் மனிதனை ஒரே சமூகத்தாராகப் படைக்க நாடவில்லையா?

﴾وَلَوۡ شَآءَ رَبُّكَ لَجَـعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً‌ وَّلَا يَزَالُوۡنَ مُخۡتَلِفِيۡنَۙ‏ ﴿۱۱۸

11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான், (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே,அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அல்லாஹ்வே மனித இனத்தை பலப் பிரிவாகப் பிரித்து விட்டு ஒற்றுமையைப் பேணிக்காக்க நமக்கு அறிவுருத்துவது பொல் உள்ளது. மேலும் இது முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போல் உள்ளது அல்லவா?

وَاعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰهِ جَمِيۡعًا وَّلَا تَفَرَّقُوۡا‌

3:103. இன்னும்,நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்,

கவனித்தீர்களா? அல்லாஹ் மனித இனத்தைப் பலப் பிரிவாகப் பிரித்து விட்டது போலவும், மனிதனைப் பார்த்து பிரிந்து விடாதீர்கள் என்று சொல்வது போலவும் இருப்பதைக் கவனியுங்கள். சமுதாயத்தினரிடையே பிரிவினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் கயிற்றை (வழிகாட்டுதலை) அனைவரும் ஒருங்கிணைந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவோ அதன்படியே செயலாற்ற வேண்டும். அதிலிருந்து யாரும் பிரிந்து விடக்கூடாது. அவ்வாறு கடைப்பிடிக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின்படி சமூகத்தாரிடையே பகைமையும் போட்டியும் ஏற்பட்டு பலப் பிரிவுகளாகப் பிரிந்துவிட நேரிடும். அல்லாஹ் மனிதனுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து விட்டதால் அவர்கள் பிரிந்து செல்வதை அல்லாஹ் தடுப்பதில்லை.
மாறாக அத்தகைய பிரிவினையால் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்களே சந்தித்துக் கொள்ள நேரிடும். எனவேதான் பகைவர்களாய் இருந்த நீங்கள் இறைவனின் அருட்கொடையாக இருக்கும் வழிகாட்டுதலை அளித்து உங்களுக்குள் பாசப்பிணைப்பை ஏற்படுத்தியாக அதே 3-103 வாசகத்தில் சொல்லப்படுகிறது.

وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًۭا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍۢ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ.

3:103 அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (வழிகாட்டுதல்களை) நினைத்துப் பாருங்கள், நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது வழிகாட்டுதலால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள், இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீது இருந்தீர்கள், அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை - வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்.


78.அல்லாஹ் நாடினால் - விளக்கங்கள்:

﴾وَلَا تَقُوۡلَنَّ لِشَاىۡءٍ اِنِّىۡ فَاعِلٌ ذٰ لِكَ غَدًا ۙ‏ ﴿۲۳

18:23. அவன் எந்த விஷயத்தைப் பற்றியும் நிச்சயமாக நாளைய தினம் அதைச் செய்வேன் என்று கூற முடியாது. ஏனெனில்

﴾اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ‌ وَاذۡكُرْ رَّبَّكَ اِذَا نَسِيۡتَ وَقُلۡ عَسٰٓى اَنۡ يَّهۡدِيَنِ رَبِّىۡ لِاَقۡرَبَ مِنۡ هٰذَا رَشَدًا‏ ﴿۲۴

18:24. “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி, தவிர (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக, இன்னும், என்னுடைய இறைவன், நேர்வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்" என்றும் கூறுவீராக!
விளக்கம்:
இந்த வாசகத்தில் “இன்ஷா அல்லாஹ்” “அல்லாஹ் நாடினால்” என்று வரவில்லை. “இல்லா அய்ன்யஷா அல்லாஹ்” என்றுதான் வந்துள்ளது. அதாவது அல்லாஹ்வின் நாட்டமும் அதுவாகவே இருந்தால் என்று வருகிறது. அதாவது நீங்கள் செய்யப் போவதாகச் சொல்லும் காரியம் அல்லாஹ்வின் “மஷீயத்” என்கின்ற செயல்திட்டத்திற்கும் உட்பட்டதாக இருந்தால் மட்டுமே, உங்களால் அதை செய்ய முடியும்;. அதையும் மீறி நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால்,அந்தச் செயல் திட்டத் தொடரில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தால் நீங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்ற வழிகள் கிடைத்து விடும். இன்னும் அதை சிறப்பாக செய்ய இறைவனின் உதவிகள் கிடைக்கும். இதை மக்களிடம் எடுத்துரைப்பீராக.
மேலும் இந்த வாசகத்தைக் கவனியுங்கள்.

 ﴾ اِنَّ هٰذِهٖ تَذۡكِرَةٌ ‌ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيۡلًا‏ ﴿۲۹

76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.

وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيۡمًا حَكِيۡمًا﴾ ۖ‏ ﴿۳۰

76:30. எனினும்,அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். ஞானம் மிக்கவன்.
விளக்கம் :
மேற்கண்ட இரு வாசகங்களையும் கவனித்துப் பாருங்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பது போல் உள்ளது. முதல் வாசகத்தில் ‘நாடுவோர்’ இறைவன் காட்டும் வழியைத் தேடிக் கொள்ளட்டும் என்று பொறுப்பு மனிதனிடம் ஒப்படைக்கிறது. ஆனால் அதன் அடுத்த வாசகமே இதை முறியடித்து ‘அல்லாஹ் நாடினால்’ தான் நீங்கள் நாடுவீர்கள் என்று சொல்வது போல் உள்ளது. ஆனால் இது சரியான மொழி பெயர்ப்பு அல்ல. இங்கும் இன்ஷா அல்லா – அல்லாஹ் நாடினால் என்று வரவில்லை. மாறாக இல்லா அய்ன்யஷா அல்லாஹ் என்றுதான் வருகிறது. அதாவது அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் வேறு எதையம் நாட மாட்டீர்கள் என்பது அதன் பொருளாகும்.
உதாரணத்திற்கு நம் பிள்ளையை பள்ளிக் கூடத்தில் சேர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு சேர்த்த பின், பிள்ளை தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது. நிர்ணயிக்கப்பட்ட நேரப்படி பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு சொல்லித் தரப்படுகின்ற பாடங்களையே கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு நிர்ணயிக்கப்படும் உடையை மட்டும் அணிய வேண்டும். ஆக பள்ளிக்கூட வரையறைப்படியே மாணவன் செயல்பட வேண்டும். அதற்கு மாற்றமாக அவன் செயல்பட்டால் அவன் வெளியேற்றப்படுவான். அதுபோலத்தான் இதுவும். அல்லாஹ்வின் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பமாகும். ‘நாடுவோர்’ இணைந்து கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கத்தில் இணைந்த பின்,அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதன்படியே செயல்பட வேண்டும். தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது. அல்லாஹ்வின் நாட்டத்திற்கு எதிராகச் செயல்படக் கூடாது.

ஆக 76:30ஆவது வாசகத்தின் மொழிபெயர்ப்பு இவ்வாறு வரும்.
“அல்லாஹ்வின் மார்க்கத்தின் இணைந்துக் கொண்டோர்,அல்லாஹ் நாடுவதைத் தவிர வேறு எதையும் நாட மாட்டார்கள். யார் எப்படிப்பட்ட எண்ணத்தில் இருக்கிறார் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்”
மேலும் இவ்வாறு நாடி வருபவர்களை அல்லாஹ் தன்னுடைய ரஹ்மத்தில் இணைத்துக் கொள்கின்றான். மற்றவர்கள் அல்லாஹ் நிர்ணயித்த தண்டனைக்கு ஆளாவார்கள்.


79.இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் - சில உதாரணங்கள்.

உதாரணம் (1) வங்கியில் பணம் இருந்து, நாளைக்கு கண்டிப்பாக தருவதாகச் சொன்னால் அது தகும். பணமே இல்லாமல் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு தருகிறேன் என்றால் அது தகுமா?

உதாரணம் (2) நான் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட ஊருக்குக் கண்டிப்பாக வருகிறேன் என்று ஒருவர் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் வாகனத்தைப் பிடித்து, அதில் அமரும் வரையில்தான், அவருடைய முயற்சியில் உள்ள விஷயமாகும். மற்றபடி அவர் சேரும் வரையில் அந்த வாகனம் பழுதுபடாமல் இருப்பதும், ஓட்டுனர் ஜாக்கிரதையாக ஓட்டுவதும், எதிரே வருகின்ற எண்ணற்ற வாகன ஒட்டிகளும் அவ்வாறே சரியாக ஓட்டுவதும், சாலைகள் பழுதுபடாமல் இருப்பதும் அவர் கையில் இல்லை. இவை யாவும் சரியாக அமைந்தால் தான் அந்த ஊருக்கு குறிப்பிட்ட நேரத்தில் அவரால் செல்ல முடியும். இந்தப் பயணத் தொடரில் எது விடுபட்டாலும், அவரால் அங்கு அந்த நேரத்திற்குள் செல்ல முடியாது. இவை யாவும் இறைவன் நிர்ணயித்த சட்டங்களின் படி உள்ளவை ஆகும். எனவே அவர் இன்ஷா அல்லாஹ் குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன்; என்றுதான் சொல்ல வேண்டும் (One can complete his mission successfully only when other things remains contant.)

உதாரணம் (3) ஒருவர் இன்ஷா அல்லாஹ் நான் உதவி செய்கிறேன் என்று வாக்களிக்கிறார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. மேலும் அவருக்கு உதவி செய்யும் எண்ணமும் இல்லை என்றால் அவருடைய பேச்சு உண்மையாகுமா? இன்ஷா அல்லாஹ் என்று சொன்னதால் அதற்காக அவர் அதை நிறைவேற்ற முயல வேண்டும். ஏனெனில் அவர் செய்வதாகச் சொன்னது அல்லாஹ்வை சாட்சியாக வைத்துதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணம் (4) சிலர் அல்லாஹ்வின் செயல் திட்டத்தில் இல்லாததை எல்லாம் அல்லாஹ் செய்வதாக அல்லது செய்ததாக சொல்வார்கள். இது மிகப் பெரிய பாவச் செயலாகும். (பார்க்க 7:33) ஏனெனில் இவற்றைக் கேட்பவர்களின் மனதில் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணங்கள் ஏற்பட்டு அல்லாஹ் செய்யாததை எல்லாம் எதிர் பார்த்து உழைக்காமல் காத்துக் கிடப்பார்கள்.

" அல்லாஹ்வின் நாட்டம்" என்பது அல்லாஹ் தன் நாட்டப்படி ஏற்படுத்திய நிலை மாறா நிலையான சட்ட வரையறைகளாகும். அன்றாடம் அவ்வப்போது நாடி செயல்படுகின்ற ஒன்றல்ல. அல்லாஹ்வின் அந்தச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மனிதன் எவ்வாறு செயல்படுகிறானோ, அதன்படியே அவன் எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு உழைத்து விவசாயம் செயவதன் மூலமே மனிதன் உணவு வகைகளைப் பெற முடியும். உணவிற்கான ஏற்பாடுகளைத் தான் அல்லாஹ் செய்துள்ளான். வானத்திலிருந்து உணவை நேரடியாக இறக்குவதில்லை. அதை விட்டு விட்டு உழைப்பின்றி வெறும் உதட்டளவில் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டு இருந்தால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது.
இப்போது துவா செய்வது விணான செயலா என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். இதற்காக நாம் எழுதிய துவாவும் அவற்றின் பலன்களும் என்ற நூலைப் படித்துப் பலன் பெறுங்கள்.


80.அல்லாஹ்விடம் உள்ள சாவிகள்?

(لَهٗ مَقَالِيۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ۚ يَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ يَّشَآءُ وَيَقۡدِرُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىۡءٍ عَلِيۡمٌ‏ ﴿۱۲

42:12. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன, தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படிச் செய்கிறான். (தான் நாடியவர்களுக்கு அவனே அளவுபடுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
விளக்கம்: அல்லாஹ்விடம் உள்ள “சாவிகள்” என்பது அவன் படைத்த ஒவ்வொரு படைப்பும், அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விதிமுறைகளுக்குச் சொல்வார்கள். உதாரணத்திற்கு நெல் பயிரிட வேண்டும் என்றால் அதற்கே உரிய விதிமுறைகள் உள்ளன. அதை அறிந்து விதைத்தால் தான், அதன் மகசூலைப் பெற முடியும். நெல் விளைவதற்கு தண்ணீர் எப்போதும் தேங்கி நிற்க வேண்டும். அதற்காக களி மண்தான் உகந்ததாக இருக்கும். மணல் முரம்பு போன்ற இடங்களில் விளைவிக்க முடியாது. மேலும் தட்ப வெப்ப நிலையும் சரியாக இருக்க வேண்டும். குளிர் பிரதேசங்களில் விளையாது. நெல் விதைத்த பின் அதை எடுத்து நாற்று நடவேண்டும். கூடவே அதை சுற்றியுள்ள புல் போன்றவற்றை நீக்கிவிட வேண்டும். நெல் மகசூல் சரியாக பெறுவதற்கு உரமிடவேண்டும். இவையாவும் நெல் விளைவதற்கான சூத்திரங்களாகும். இவற்றை நிர்ணயித்தது அல்லாஹ்தான். அவை அவற்றின் சாவிகளாக இருக்கின்றன. இதை மனிதன் கண்டறிந்து நெல் பயிரிட்டுக் கொள்ள வேண்டும். அதுபோல் ஒவ்வொரு விளைச்சலுக்கும் உரிய விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி சாகுபடி செய்தால்தான் மகசூலைப் பெற முடியும்.

விவசாயம் மட்டுமின்றி மின் உற்பத்தி, பல்வேறு வாகனங்களின் கண்டுபிடிப்புகள், பூமியில் புதைந்து கிடக்கும் அளவற்ற அமிலங்கள் மற்றும் உலோகங்களின் பொக்கிஷங்கள் என எல்லாவற்றிற்கும் உரிய சாவிகளை (Formula) கண்டுபிடித்து மனிதன் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக உலகப் படைப்புகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உழைக்கும் நாடுகளுக்கு விசாலமான வாழ்வாதாரங்கள் கிடைத்து வருகின்றன. இன்றைய நவீன உலகமே இதற்கு சான்றாகும். உழைக்காமல் கற்பனை கதைகளைச் சொல்லி வரும் சமுதாயங்களால் எவ்வித முன்னேற்றத்தையும் காண இயலாது. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரங்கள் சுருங்கி வருகின்றன. அத்தகைய சமுதாயங்களில் எல்லாமே அல்லாஹ்வின் செயல் என்று சொல்லி மக்களை தூங்க வைத்து விடுவார்கள். மேலும் நாம் இவ்வுலக வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்றும் மறுமைக்காகவே வாழவேண்டும் என்றும் சொல்லி, தாம் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு அல்லாஹ்வே காரணம் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்வார்கள். இவை யாவும் தவறான கண்ணோட்டங்களாகும். திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்.

﴾قُلۡ هَلۡ نُـنَبِّئُكُمۡ بِالۡاَخۡسَرِيۡنَ اَعۡمَالًا ؕ‏ ﴿۱۰۳

18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

( اَ لَّذِيۡنَ ضَلَّ سَعۡيُهُمۡ فِى الۡحَيٰوةِ الدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُوۡنَ اَنَّهُمۡ يُحۡسِنُوۡنَ صُنۡعًا‏ ﴿۱۰۴

18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையேச் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான்.
கவனித்தீர்களா? உலக வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களே மிகப் பெரிய நஷ்டவாளிகள் என்று ஆணித்தரமாக சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். இதன் பிறகும் நாம் அலட்சியமாக இருந்து வந்தால் நஷ்டம் யாருக்கு? இந்த நஷ்டம் இவ்வுலக வாழ்வோடு முடிந்துவிடுகின்றதா?

﴾اُولٰۤٮِٕكَ الَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ رَبِّهِمۡ وَلِقَآٮِٕهٖ فَحَبِطَتۡ اَعۡمَالُهُمۡ فَلَا نُقِيۡمُ لَهُمۡ يَوۡمَ الۡقِيٰمَةِ وَزۡنًـا‏ ﴿۱۰۵

18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள், அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும், மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.
மேலும் இவ்வுலக வாழ்வில் மட்டுமின்றி மறுமை நாளிலும் அத்தகைய செயல்கள் அவர்களுடைய நன்மையின் எடைத் தட்டில் நிற்காது என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி நாம் சிந்தித்து உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் பயனுள்ள செயல்களையே செய்து வரவேண்டும்.

﴾وَمِنۡهُمۡ مَّنۡ يَّقُوۡلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏ ﴿۲۰۱ 

2:201. இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக, மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக, இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
கவனித்தீர்களா? மக்களில் சிலர் உலக நற்பாக்கியங்களையும் மறுமையின் நற்பாக்கியங்களையும் அருளும்படி இறைவனிடம் வேண்டுகிறார்கள். அதாவது தற்காலிக நன்மைகளையும் வருங்கால நிலையான நன்மைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். அவர்களுடைய வேண்டுதலுக்கு அல்லாஹ் அளிக்கும் பதில் என்னவென்பதையும் கவனியுங்கள்.

﴾اُولٰٓٮِٕكَ لَهُمۡ نَصِيۡبٌ مِّمَّا كَسَبُوۡا ‌ؕ وَاللّٰهُ سَرِيۡعُ الۡحِسَابِ‏ ﴿۲۰۲

2:202. இவ்வாறு, (இம்மை,மறுமையிரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத் தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
இத்தகைய மனப்பான்மை கொண்டவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப நற்பாக்கியங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுவதைக் கவனித்துப் பாருங்கள். ஆக சில காரியங்கள் தற்காலிக நன்மைகளை மட்டும் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் வருங்காலத்தில் அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அத்தகைய செயல்களை மட்டும் தடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மது பானம் சூதாட்டம் போன்றவை.
இப்படியாக மனித உலகில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தாம் அல்லாஹ்வுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உருதுணையாக இருக்கிறதே அன்றி அவனைப் புகழ் பாடிக் கொண்டிருப்பது அல்ல என்பதை நாம் இந்நூலிலிருந்து தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

ந. ரூஹுல்லா. பி.காம்.
தேதி : 21/08/2016