بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


1.இஸ்லாம் வட்டித் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கிறது?

சிந்தனையாளர்களே! இறைவழிகாட்டுதலின்படி ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணிக்காக்கவே சமூக கூட்டமைப்பு/ஆட்சியமைப்பு உருவாக்கப்படுகிறது. இதுவே இஸ்லாமிய ஆட்சி என்பதாகும். அதாவது ஒட்டு மொத்த மக்களின் நலம் பேணல் என்பதாகும். இந்தக் கூட்டமைப்புக்கு தம்மாலான உதவி செய்ய வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. தம் தேவைக்குப் போக மீதமுள்ள உபரிச் செல்வங்களை இந்த அமைப்புக்காக அளிக்கச் சொல்லப்படுகிறது. (பார்க்க 2:219) உண்மை இவ்வாறு இருக்கும் போது நலிந்த மக்களின் உழைப்பில் சுகம் காண விரும்புவது இஸ்லாத்தின் நேர் விரோதமான செயலாகும். பண முதலீட்டை செய்து விட்டு ஏழைகளிடமிருந்து மிகுதியான பணத்தை வசூலிப்பது அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமமாகும். மேலும் தனிப்பட்ட முறையில் போட்டி அரசாங்கம் நடத்துவதற்கு ஒப்பானதாக ஆகிவிடுகிறது. எனவே சமுதாயத்திலிருந்து இதை முற்றிலும் நீக்க வேண்டும். திருக்குர் ஆனின் வாசகங்களைக் கவனித்துப் பாருங்கள்.

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ سِرًّۭا وَعَلَانِيَةًۭ فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:274. யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது, அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
விளக்கம் :
(1) சமுதாய மேம்பாட்டிற்காக இரவு பகல் என்று பாராமல் தேவைப்படும் போதெல்லாம் யார் உதவி செய்து வருகிறார்களோ, அவர்களுடைய இறைவனிடமிருந்து நற்பலன்கள் திரும்பக் கிடைத்துவரும்.
(2) அத்தகையவர்கள் தாம் அச்சமும் துயரமுமில்லா நிம்மதியான வாழ்விற்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
(3) அத்தகையவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரமும் ஒப்படைக்கப்படும்.
உண்மை இவ்வாறு இருக்கும் போது, வட்டியை தொழிலாக கொண்டு வாழ்பவர்களின் நிலை வேறு விதமாக இருக்கும்.

فَبِظُلْمٍۢ مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَٰتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرًۭا.

4:160. யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு முன்னர் ஆகுமாக்கப்பட்டிருந்த நல்லவற்றை நாம் தடை செய்துவிட்டோம். இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டு இருந்ததாலும் நாம் இவ்வாறு தடை செய்தோம். கவனித்தீர்களா? அவர்கள் சமுதாயத்தில் அக்கிரமம் செய்து வந்தார்கள் என சொல்லப்படுகிறது. காரணம் என்ன?

وَأَخْذِهِمُ ٱلرِّبَوٰا۟ وَقَدْ نُهُوا۟ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَٰطِلِ ۚ

4:161. வட்டியை அதனை விட்டும் திட்டமாக அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும், அவர்கள் வாங்கிய காரணத்தாலும், அவர்கள் மக்களின் பொருள்களை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாலும் தண்டனை வழங்கினோம்.

கவனித்தீர்களா? அவர்கள் வட்டி தொழிலை செய்து, மக்களின் செல்வங்களை அநியாயமாக களவாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் ஏழை எளிய மக்களின் வலி வருத்தத்தைப் பற்றி எள்ளளவும் கவலைப் பட மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கல் நெஞ்சக்கார்ர்களாக ஆகிவிட்டார்கள். (2:74)அதன் விளைவாக அவர்களுடைய சமுதாயம் சீரழிந்து பல வேதனைகளுக்கு அளாக வேண்டியதாயிற்று.

இத்தகைய யூதர்களை எதிர்த்து இரண்டாம் உலகப் போரே நடந்தது என்றால் சற்று யோசித்துப் பாருங்களேன். இது இஸ்ரவேலர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதல்ல. யாரெல்லாம் வட்டித் தொழிலை செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கல் நெஞ்சக்காரர்களாகத் தான் இருப்பார்கள்.

ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّ ۚ

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்.

கவனித்தீர்களா? வட்டித் தொழில் செய்பவர்கள் தடை உத்தரவு பற்றி கேள் வி பட்டதும் விஷப் பாம்பு தீண்டிவிட்டது போல் துடிதுடித்துப் போவார்கள்.

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ ۗ

2:275. அவர்கள், “ வட்டியும் வியாபாரம் போன்றது தான்" என்று கூறி வியாக்கியானம் பேசுவார்கள். இப்படியாக அவர்கள் செய்யும் தொழிலுக்கு நியாயம் கற்பிக்க ஆயிரமாயிரம் காரணங்களைக் காட்டுவார்கள். வட்டியும் ஒருவகை வியாபாரம்தானே என்பார்கள்.

وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ ۚ فَمَن جَآءَهُۥ

2:275. அல்லாஹ் வியாபாரத்திற்கு அனுமதி அளித்து, வட்டிக்கு தடை விதிக்கிறான்,
காரணம், வியாபாரம் என்பது கொடுக்கல் வாங்கல் என்று பண்டங்கள் பரிமாறுகின்றன். ஆனால் வட்டி என்பது ஏழை எளிய மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாகும்.

يَمْحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰا۟ وَيُرْبِى ٱلصَّدَقَٰتِ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ.

2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான், இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான், (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

விளக்கம் :
(1)அல்லாஹ்வின் சட்டம் வட்டியை ஒழித்துக்கட்டி, நலிந்த மக்கள் பலன் பெறும் வகையில் உதவி செய்யவே நாடுகிறது.
(2) சமூக நல அமைப்புக்கு உதவி செய்து வந்தால் அதன் நன்மை அவர்களுக்குக் கிடைக்கும் என்கிறது.
(3) இந்த அறிவுரைக்கு எதிராகச் செயல்படும் பாவிகளுக்கு அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது.

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

2:277. யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, தொழுகையை நியாயமாகக் கடைப்பிடித்து, ஜக்காத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது, அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

விளக்கம் :
(1) எனவே இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வோர், சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வரவேண்டும்.
(2) மேலும் தீமைகளைத் தடுத்து நன்மையின் பக்கம் அழைப்பு விடுத்து மக்களின் நல்வாழ்வு மலர வழிகாட்டும் ஸலாத்தை நிலைநிறுத்த வேண்டும்.
(3) இறை சமூக அமைப்பிற்கு உதவி புரிபவர்களுக்குப் பலவகையில் நன்மைகள் கிடைத்து வரும். அவர்களுடைய வாழ்வில் எவ்வித அச்சமோ துயரமோ நெருங்காது என்று உறுதியளிக்கப் படுகிறது.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَذَرُوا۟ مَا بَقِىَ مِنَ ٱلرِّبَوٰٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ.

2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
விளக்கம் :
இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உண்மையிலேயே முஃமினாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி வட்டித் தொகை நிலுவையில் இருந்தால் அதை வசூலிக்காதீர்கள்.

فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍۢ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ.

2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) - நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும்) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் -உங்களுக்குண்டு, (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

விளக்கம் :
(1) அதையும் மீறி வட்டித் தொழிலைக் கைவிடவில்லை என்றால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிற்கு எதிராகப் போரிட தயாராகி விட்டதாகக் கருதப்படும்.
(2) நீங்கள் திருந்தி அதைவிட்டு விலகிக்கொண்டால் கடன் தொகையை திரும்பப் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
(3) இல்லையெனில் அதையும் இழக்க நேரிடும். ஆக கடன்பட்டோருக்கு எதிராக அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

وَإِن كَانَ ذُو عُسْرَةٍۢ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍۢ ۚ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌۭ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும் வரைக் காத்திருங்கள், இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் - (அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

விளக்கம் :
மேலும் கடனாளி மிகவும் கஷ்டத்தில் இருந்தால், வசதி ஏற்படும் வரை அவருக்குத் தக்க அவகாசம் கொடுங்கள். அவரால் ஒருபோதும் திருப்பிக் கொடுக்க இயலாது என்ற நிலை இருந்தால், கடன் தொகையை தானமாகக் கருதி விட்டுவிடுங்கள். அதனால் ஏற்படும் நன்மையை அறிந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியுங்கள்.

وَٱتَّقُوا۟ يَوْمًۭا تُرْجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ.

2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள், அன்று நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மீட்கப்படுவீர்கள், பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும், மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்பட மாட்டா.

விளக்கம் :
நீங்கள் செய்து வரும் எல்லா செயல்களுக்கும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படி விளைவுகளை சந்திக்கும் தருணத்தை எண்ணி, அதற்கு அஞ்சி செயல்படுங்கள். அக்கால கட்டத்தில் அவரவர் செய்து வந்த நற்செயல்களோ தீய செயல்களோ அதற்கேற்ற பிரதிபலன் கிடைத்து விடும். அதில் அணு அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. இதற்கு முன்பாக பனீ இஸ்ராயீல் சமூகத்திற்கு ஏற்பட்ட கதியே உங்களுக்கும் ஏற்படும்.


2.சமுதாய நன்மையும் தீமையும்

وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًۭٔا وَهُوَ شَرٌّۭ لَّكُمْ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.

2:216. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம், ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். ஒரு பொருளை விரும்பலாம். அது உங்களுக்கு தீமையாக இருக்கும். இவற்றை எல்லாம் அல்லாஹ் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

அதாவது சில கடமைகள் தனிப்பட்ட முறையில் நஷ்டம் விளைவிப்பது போல் தோன்றும். ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தை வைத்துப் பார்க்கும் போது அது நன்மை பயப்பதாக இருக்கும். உதாரணத்திற்கு ஜகாத் கொடுப்பது. அதே போல் சில தொழில்கள் தனிப்பட்ட முறையில் லாபகரமாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தை வைத்துப் பார்க்கும் போது, அவை பாதிப்பை ஏற்படுத்தி வரும். உதாரணத்திற்கு வட்டி, சூதாட்டம், போதைப் பொருட்களை விநியோகித்தல் போன்றவை,

وَمَآ ءَاتَيْتُم مِّن رِّبًۭا لِّيَرْبُوَا۟ فِىٓ أَمْوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرْبُوا۟ عِندَ ٱللَّهِ ۖ وَمَآ ءَاتَيْتُم مِّن زَكَوٰةٍۢ تُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُضْعِفُونَ.

30:39. மற்ற மனிதர்களின் செல்வங்களுடன் சேர்த்து, உங்கள் செல்வங்கள் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ, அது அல்லாஹ்விடம் பெருகும். அத்தகையோர்தாம் தம் கூலியை இரட்டிப்பாக்கிக் கொணடவரகள் ஆவார்கள். கவனித்தீர்களா? அல்லாஹ்விடம் பெருகுவது என்னவென்பதை கவனியுங்கள். இதை நாம் ஆங்கிலத்தில் National Wealth என்கிறோம். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி ஆகும்.


3.வட்டியும் பொருளாதார வளர்ச்சியும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடின உழைப்பும், தொழில் நுட்பமும் அவசியமாக இருப்பினும், பண முதலீடும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக அரசாங்கமும் வங்கிகள் மூலம் பண உதவி செய்து வருகிறது. ஆனால் நலிந்த மக்கள் தம் அவசர உதவிக்கு பணம் தேவைப்படும் போது வட்டியின்றி கடனுதவி செய்யும் அமைப்புகள் இல்லாததால், வட்டிக்கு கடன் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இப்படியாக பண முதலீட்டைக் கொண்டு தனிப்பட்ட முறையில் சொத்து செல்வங்களை குவிக்கும் எண்ணங்கள் உருவாகிவிடுகிறது. இதனால் நாட்டில் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடைந்து வருகிறது. சிலரிடம் செல்வங்கள் குவிந்து விட்டால் பணப் புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டு நாட்டில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு வரும். காலம் செல்ல செல்ல நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டு வரும். எனவேதான் இஸ்லாமிய சட்டம் வட்டிக்கு தடை செய்கிறது.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوا۟ ٱلرِّبَوٰٓا۟ أَضْعَٰفًۭا مُّضَٰعَفَةًۭ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள், இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

விளக்கம் :
எனவே மூஃமின்களே! உங்கள் செல்வங்களை இரட்டிப்பாக்கிக் கொள்ள எண்ணி, வட்டியைத் தம் வாழ்வாதராமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் இலட்சியத்தில் வெற்றி இலக்கை எளிதில் அடைவீர்கள்.

وَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِىٓ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ.

3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள். அது காஃபிர்களுக்காகச் சித்தம்செய்து வைக்கப்பட்டுள்ளது.

விளக்கம் :
நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், உழைத்து சம்பாதிப்பதை விட்டுவிட்டு பண முதலீட்டைக் கொண்டு பிறர் உழைப்பில் சுகம் காணும் பழக்கத்திற்கு ஆளாகி விடுவீர்கள். இப்படியாகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, சீரழிந்து பிரச்னைகள் மிக்க சமுதாயமாக மாறிவிடும்.

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.

3:132. அல்லாஹ்வு;க்கும், (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

விளக்கம் :
எனவே நீங்கள் மனம்போன போக்கில் வாழ்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். மேலும் உங்களை வழிநடத்திச் செல்ல இறைத்தூதர் உருவாக்கியுள்ள ஆட்சியமைப்புச் சட்டங்களையும் பின்பற்றுங்கள். இதனால் மனித ஆற்றல்கள் வேகமாக வளர சரியான வழிமுறை கிடைத்துவிடும்.

وَسَارِعُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍۢ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ.

3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் பாதுகாப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள், அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது, அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
விளக்கம் :
வானங்களிலும் பூமியிலும் பரந்து விரிந்து கிடக்கும் உங்கள் இறைவனின் பரிபாலன அமைப்பின் கீழ், பாதுகாப்பான வாழ்வு பெற முழு மனதுடன் விரைந்து செயல்படுங்கள். இப்படி உங்கள் உழைப்பின் பலனாக உருவாகும் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வில் நுழையுங்கள். இறைச் சட்டங்களைப் பேணி நடப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சுவனம் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ.

3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

விளக்கம் :
இச்சுவனவாசிகள் பிறர் உழைப்பில் சுகம் அனுபவிப்பதை விட்டுவிட்டு, தாராள நிலையிலும் வறுமை நிலையிலும், பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, சமுதாய மேம்பாட்டிற்காக அயராது பாடுபடுவார்கள். இதற்காக தம்மிடமுள்ள உபரியான செல்வங்களிலிருந்து கொடுத்து உதவுவார்கள். இப்படி சமுதாயப் பணியில் ஈடுபடும்போது, மற்றவர்கள் பரிகசித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சமுதாய சமச்சீர்நிலை, மனித நேயம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள். இப்படிப்பட்ட நன்மையான செயல்களைக் கொண்டே அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும்.


4.வங்கி கடன் ஆகுமானதா?

இதற்கு முன் குறிப்பிட்டது போல, நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால் கடின உழைப்பும், தொழில் நுட்பங்களும் அவசியமாக இருப்பது போல் பண முதலீடும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. பெரிய அளவில் பண முதலீடு என்று வரும்போது, இன்றைய காலத்தில் நம் நாட்டில் வங்கிகளால் தான் கொடுக்க முடியும். உலக வங்கிகளும் குறைந்த வட்டிக்கே பண முதலீடு செய்து வருகின்றன. அங்கு வசூலிக்கப்படும் வட்டி, வங்கிகளின் நிர்வாகச் செலவுக்காகவும் ஆகும்.

மேலும் கடனுதவி பெறுபவர், பொறுப்போடும் மிகமிக எச்சரிக்கையுடனும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடனும் செயல்பட வேண்டும். பண முதலீட்டால் இலாபத்தை அடைவதாக இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக கடன் வாங்கக் கூடாது. மேலும் வட்டியின்றி கடன் வாங்கினால் சாவகாசமாக கடனை திருப்பிக் கொடுக்கலாம் என்று பொறுப்பில்லாமலும் இருக்கக் கூடாது. அவ்வாறு பொறுப்பைத் தட்டிக் கழித்தால் கடனுதவி செய்யும் நிருவனங்களுக்கு பெறுமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் புதிதாக கடனுதவி தேவைப்படுபவர்களுக்கும் பிரச்சனைகள் உருவாகி வரும்.

வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்கி தொழிற்சாலைகளை நிருவி வந்தால், அதனால் பல குடும்பங்கள் பயன் பெறும். இப்படியாக பல விஷயங்களை அனுசரித்து வட்டியைப் பற்றி சரியாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. முழுக்க முழுக்க குர்ஆனிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சமுதாயமும் ஆட்சியமைப்பும் நடைபெறும் போது தான், வட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதுவரையில் வட்டி விஷயத்தில் இழுபறி நிலைதான் இருக்கும். நீங்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இதை நாம் எழுதுகிறோம். வட்டியை ஆதரித்து எழுதுவதாக எண்ணாதீர்கள். அல்லாஹ் தடை விதித்து விட்டதை ஆகுமானது என்று அறிவிக்க யாருக்கும் உரிமையில்லை.

மேலும் ஒரு விஷயத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இன்றைய உலக அரங்கில் தொழில் மற்றும் வணிகத்திலும் பண முதலீட்டிற்குரிய வட்டியை உற்பத்தி சிலவில் இணைத்து விடுகிறார்கள். இப்படியாக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் வட்டியும் சேர்ந்தே இருக்கும்.


5.வட்டியின்றி கடன்

எனவே குடும்பங்களில் ஏற்படும் பண நெருக்கடியை தீர்க்க வட்டிக்கு கடனுதவி பெறுவதற்கும், தொழில் வளர்ச்சிக்காக கடனுதவி பெறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள். முதலாம் விஷயத்தில் அவன் உழைத்து கூடுதலாக பணம் திருப்பி தர வேண்டியுள்ளது. எனவே இந்த நிலையை சரிசெய்ய, நாட்டிலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் மற்ற நற்பணி நிறுவனங்களிலும் பைத்துல் மால் என்ற அமைப்பை ஏற்படுத்தி நலிந்த மக்களுக்கு வட்டியின்றி கடனுதவி செய்து வரவேண்டும். இருப்போர் இத்தகைய பைத்துல் மால்களுக்கு உதவி செய்து வரவேண்டும்.இவ்வாறு செய்து வரும் ஒவ்வொரு நற்செயலும் அல்லாஹ்விடமிருந்து நற்பலன்கள் பன்மடங்காகப் பெருகி உங்களிடமே வந்தடையும். காலம் செல்ல செல்ல பைத்துல் மால் அமைப்புகள் வளர்சியடைந்து சிறு தொழில்களுக்கும் வட்டியின்றி கடனுதவி செய்ய வாய்ப்புகள் உருவாகும். நலிந்த மக்களுக்கு உதவிடத்தான் வஃக்ப் போர்டு என்று உருவானது.