بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை
பொதுவாக ஜின்களைப் பற்றி பேசும் போது, அது ஒரு வகையான சக்தி என்றும் அவை நம் கண்களுக்குப் புலப்படாது என்றும் சொல்வார்கள். மேலும் ஜின்களை வசப்படுத்தி, அவற்றைக் கொண்டு சூனியம் மற்றும் மாய மந்திர வேலைகளை செய்து கொள்ள முடியும் என்றும் சொல்வார்கள். மற்றும் சிலர் ஜின்களில் காஃபிர் ஜின்களும் ஈமானுள்ள ஜின்களும் இருப்பதாகவும் சொல்வார்கள். இவை எல்லாம் சரியானதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கண்ணுக்கு புலப்படாத ஒரு படைப்பைப் பற்றி நம்மிடம் ஏன் அல்லாஹ் தன் திருமறை குர்ஆனில் விரிவாகப் பேச வேண்டும் என்ற கேள்வி நம்முள் எழுகிறது. எனவே திருக்குர்ஆனில் ஜின்களைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் நமக்குத் தெளிவு கிடைத்து விடும்.
2.ஜின்களின் படைப்பு
மனித படைப்புக்கு முன்பாக இந்தப் பூமி கடுமையான வெப்பமாக இருந்த போது, ஜின்கள் படைக்கப்பட்டதாக 15:27 மற்றும் 55:15 வாசகம் அறிவிக்கிறது. அதாவது இந்தப் பூமி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வெப்பம் மிகுதியாக இருந்ததாகவும், அதைச் சுற்றி வானம் வாயு மண்டலமாக இருந்தததாகவும் 41:11 வாசகம் அறிவிக்கின்றது. அப்படியொரு காலக் கட்டத்தில் படைக்கப்பட்ட இனம்தான் இவர்கள் என்று தெளிவாகிறது. எனவே அவர்கள் ஆதி காலத்தில் படைக்கப்பட்ட மனிதர்கள் என்றே சொல்லப்படுகிறது. இவர்களை ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என்றே சொல்ல முடியும். காரணம்
3.ஜின்களுக்கு உள்ளங்கள், கண்கள், காதுகள் உண்டு
மனிதர்களைப் போன்றே ஜின்களுக்கும் உள்ளங்கள், கண்கள் மற்றும் காதுகள் உள்ளதாகவும் அவற்றை அவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் நரகவாசிகளாக வாழ நேர்கிறது என்றும் 7:179 வாசகம் அறிவிக்கின்றது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
4.ஜின்களிடமிருந்து பலன்கள்
ஜின்களிடமிருந்து மனிதர்கள் பலனடைந்து வந்ததாகவும், ஒருவர் மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதலைக் காட்டியதால் நரகத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று என்றும் கியாம நாளில் வருத்தப்படுவார்கள் என்று 6:128 வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
5.நபிமார்களுக்கு எதிராகச் செயல்பட்ட ஜின்கள்
உலகிற்கு வருகை தந்த எல்லா நபிமார்களுக்கும் எதிராக மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷயாத்தீன்கள் சதிகளை செய்ததாக 6:112 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
6.ஜின் இனத்லிருந்து வந்த நபிமார்கள்
உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் மனிதர்களே என்று 12:109,16:43,21:7 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்களிலிருந்தும் மனிதர்களிருந்தும் நபிமார்கள் வந்ததாக 6:130 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று இதிலிருந்து தெளிவாகிறது.
7.திருக்குர்ஆன் போன்றதை கொண்டுவர முடியுமா?
திருக்குர்ஆனில் உள்ள அறிவுரைகளைப் போன்றே வேறு நல்ல அறிவுரைகளை மனிதர்களாலோ அல்லது ஜின்களாலோ அல்லது இருவரும் இணைந்தோ கொண்டுவர முடியுமா என்று 17:88இல் அரைகூவல் விடுக்கப்படுகிறது. ஜின்கள் கண்ணுக்குப் புலப்படாத சக்தியாக இருந்தால் இப்படி ஒர் அரைகூலை விடமுடியுமா? எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
8.சுதந்திர ஜின்கள்
மற்ற படைப்புகளை அல்லாஹ் தம் இயல்பின் அடிப்படையில் வாழ வைத்திருப்பது போல ஜின்களையும் படைக்க நாடி இருந்தால், அவ்வாறே அவன் படைத்திருக்க முடியும். எனவே மனித இனத்திற்கு முழு சுதந்திரம் அளித்திருப்பது போலவே ஜின்களுக்கும் அளித்திருப்பதாக 32:13 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
9.சுலைமான் நபியும் ஜின்களும்
சுலைமான் நபி தன் ஆட்சி காலத்தில் ஜின்களுக்கு நன்றாகப் பயிற்சி அளித்து கடினமான பணிகளில் அமர்த்தி வந்ததாக 34:12-13 வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் தன் நாட்டை பாதுகாக்க மனிதர்கள் மற்றும் குதிரைப் படைகளோடு ஜின் இனத்தை சேர்ந்தவர்களையும் பயிற்சி அளித்து, அசுரர் படைகளைத் தயாரித்து வைத்திருந்ததாக 27:17 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
10.ஜின்களுக்கு மறைவான ஞானம்?
சுலைமான் நபியின் மறைவுக்குப் பின் அவர் ஏற்படுத்திய பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை அவருடைய மகன் தக்க வைத்துக் கொள்ளவில்லை. காரணம் அவன் அறிவிலியாக இருந்தான். (38:34). கோட்டைக்குள் நடக்கின்ற அராஜகத்தைப் பற்றிய உண்மை, அதைப் பாதுகாத்து வந்த ஜின்களுக்கு விளங்காமலே இருந்தது. காலம் செல்ல செல்ல சுலைமான் நபி உருவாக்கிய சிறந்த ஆட்சி செல்லறிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஜின்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வந்தது. இதற்கு முன்பே இந்த உண்மை தெரிந்திருந்தால் இவ்வாறு கஷ்டப்பட்டு இதை பாதுகாத்து வரவேண்டிய அவசியம் இருந்திருக்காதே என்று வருத்தப்பட்டனர். (பார்க்க 34:14) எனவே மனிதர்களைப் போன்றே ஜின்களுக்கும் மறைவான ஞானங்கள் இல்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று தெளிவாகிறது.
11.கியாம நாளில் ஜின்கள்
மனிதர்களையும் ஜின்களையும் வழி கெடுத்த தலைவர்களை தம் முன் கொண்டு வரும்படி அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள். காரணம் அவர்களால்தான் தாம் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களை தம் கால்களால் மிதித்து அவமதிப்போம் என்றும் சொல்வார்கள். (பார்க்க 41:29) ஆனால் அத்தகைய விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று 55:39 வாசகம் அறிவிக்கிறது.
12.தவ்ராத்தை பின்பற்றி வந்த ஜின்கள்
திருக்குர்ஆனுக்கு முன்பாக இறக்கி அருளப்பட்ட தவ்ராத்தை ஜின்கள் பின்பற்றி வந்ததாக 46:30 வாசகம் அறிவிக்கின்றது. மேலும் அவர்கள், திருக்குர்ஆன் தவ்ராத்தை உண்மைப் படுத்துவதாகவும் தம் சமூகத்தாரிடம் அறிவிக்கிறார்கள். இன்றைக்கும் திருக்குர்ஆனின் உண்மைகளை அவர்களுக்கும் எடுத்துரைத்து உலகை சிறப்பிக்கச் செய்யலாம்.
13.திருக்குர்ஆனை கேட்க வந்த ஜின்கள்
திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் காலக் கட்டத்தில் ஜின்கள் மறைந்திருந்து திருக்குர்ஆனை கேட்க வந்ததாகவும், அவர்கள் தம்மோடு வந்த தோழர்களை நோக்கி மவுனமாக இருந்து அங்கு சொல்லப்படும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலை கேட்கும்படி அறிவுருத்தியதாகவும் 46:29 மற்றும் 72:1 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்கள் தம் சமூகத்தாரிடம் சென்று, அவர்கள் கேட்ட திருக்குர்ஆனின் உண்மைகளை எடுத்துரைத்ததாகவும் 72:2-19 வாசகங்கள் அறிவிக்கின்றன. கூட்டுமுறை வாழ்க்கையைத் தான் “சமுதாயம்” என்று சொல்வோம். எனவே அவர்களும் மனித இனத்தைப் போன்றவர்களே என்பது உறுதியாகிறது.
மேலும் ஜின்கள் மறைந்திருந்து ஏன் கேட்க வேண்டும் என்றும் சிலர் கேட்கிறார்கள். காரணம் அவர்களுடைய தோற்றம் கலாச்சாரம் மற்றும் நடை உடை பாவனை யாவும் நகர் புறத்தில் வாழ்பவர்களைவிட தனித்து காணப்படும். இதனால் அரபு நாட்டில் அவர்கள் சகஜமாக நகரப் பகுதிகளில் சுற்றித் திரிய முடியாத நிலை இருந்தது. எனவே அவர்கள் காடுகளிலும் மலைகளிலும் தனித்து வாழ்ந்து வந்தனர். இன்றைக்கும் உலகில் பலப் பகுதிகளில் இப்படித்தான் வாழ்கிறார்கள். நம் நாட்டிலும் காடுகளில் வாழ்பவர்கள், நகர் புறத்தாரை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
மேற்சொன்ன திருக்குர்ஆன் வாசகங்களை நன்றாகப் படித்துப் பாருங்கள். “ஜின்கள்” என்று கண்ணுக்குப் புலப்படாத இனம் அல்லது சக்தி இவ்வுலகில் இருப்பதாக சொல்வதில் உண்மை ஏதாவது இருக்கிறதா என்பதை நீங்களே சொல்லுங்கள். அவ்வாறு இருந்திருந்தால் அதைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லி இருக்க வேண்டுமே.
எனவே நாம் சொல்ல வருவது என்னவென்றால், திருக்குர்ஆனில் ‘ஜின்’ மற்றும் ‘இன்ஸ்’ (ஜின்கள் மற்றும் மனித இனம்) என்று இணைந்து வரும் வாசங்களை மொழி பெயர்க்கும் போது, ‘ஜின்’ என்பதை ஆதிவாசிகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் என்று பொருள் கொள்வது முறையாகாது.
14.ஆதமுக்கு ஸுஜுது செய்யாத ஜின்?
ஆதமுக்கு ஸுஜூது செய்யும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிட்ட போது, இப்லீஸைத் தவிர மற்றவை ஸுஜூது செய்ததாகவும் அவன் ஜின் இனத்தவனாக இருந்ததாகவும் 18:50 வாசகம் அறிவிக்கிறது. அதாவது மலக்குகள் வரிசையில் இப்பலீஸ் மற்றும் ஜின்களைப் பற்றி சொல்லப்படுகிறது. அதாவது அடிபணியும் தன்மைகளைக் கொண்ட சக்திகள் மலக்குகளாக இருக்கின்றன. (2:30) அடிபணியாத் தன்மையை இப்லீஸ் அல்லது ஷைத்தான் என்று சொல்லப்படுகிறது. (2:34) அதாவது ஆணவம், கர்வம், தற்பெருமை யாவும் மனிதனுள் செயல்பட்டு வரும் அடிபணியாத் தன்மைகளாகும். இந்த உண்மை மனிதனின் அறிவுக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. எனவே அது மறைவாக - ‘ஜின்’னாக இருக்கிறது.
15.கண்ணுக்குப் புலப்படாத சக்திகள்
"ஜின்" என்ற வார்த்தை திருக்குர்ஆனில் சில வாசகங்களில் தனித்து வருகிறது. அங்கு “கண்ணுக்குப் புலப்படாத சக்தி” என்று பொருள்படும். உதாரணத்திற்கு 6:100 ஆவது வாசகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகப் படைப்புகள் அனைத்தையும் அல்லாஹ் படைத்திருக்கும் போது, மக்களில் சிலர் அறியாமையினால் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுகிறார்கள். அதாவது கண்களுக்குப் புலப்படாத சக்திகள்தாம் இவ்வுலக படைப்புகளைப் படைத்ததாகக் கருதி அவற்றை வணங்கி வருகின்றனர். ஆனால் அந்த சக்திகளைப் படைத்ததே அல்லாஹ்தான் என்றும் இவ்வாசகத்தில் சொல்லப்படுகிறது.
16.உலக அரங்கில் ஜின்கள்
மனித செயல்களைப் பற்றி கேள்வி கேட்கப்படும் காலக் கட்டத்தில் அல்லாஹ், “இவர்கள்தானா உங்களை வணங்கி வந்தவர்கள்?” என்று மலக்குகளை நோக்கி கேட்கும் போது, (34:40) அவர்கள், “அவ்வாறல்ல. இவர்கள் யாவரும் உன் அறிவுரைகளை மதிக்காமல் “ஜின்”களை வணங்கி வந்தவர்கள்” என்று பதில் அளித்துவிடுவார்கள். (34:41) அதாவது இல்லாத சக்திகளைக் கற்பனை செய்து வணங்கி வந்தார்கள்.
17.முடிவுரை
சிந்தனையாளர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியும் தன்மை மலக்குகளின் தன்மை என்றும், அடிபணியாத் தன்மை இப்லீஸியத் தன்மை என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது. இன்றைய உலகில் மனிதன், அல்லாஹ் படைத்துள்ள பல்வேறு இயற்கைச் சக்திகளை தன் வசப்படுத்தி அவற்றை அனுபவித்தும் வருகிறான். ஆனால் அவற்றை அவன் அழிவுக்காகவும் பயன்படுத்துகிறான். உதாரணத்திற்கு ஆட்டெமிக் சக்தியை (Automic Power) எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை மின் உற்பத்தி மற்றும் தகவல் துறைக்காகவும் பயன்படுத்தலாம். ஆட்டெம் பாம் (Autom Bomb) தயாரித்து அழிவுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதன் அல்லாஹ்வின் அறிவுரைக்கு உட்பட்டு உலகிலுள்ள எல்லா இயற்கைச் சக்திகளையும் பயன்படுத்திக் கொண்டால், எல்லாமே நன்மையில் முடியும். அதை விட்டுவிட்டு தன் மனோ இச்சை என்னும் இப்லீஸிய குணங்களுடன் பயன்படுத்தினால், அவற்றை அவன் தவறாகப் பயன்படுத்தி அவனுக்கு அழிவினைத் தேடி தந்து விடும். இந்த உண்மை மனிதனின் அறிவுப் புலன்களுக்குப் புலப்படுவதில்லை. எனவே அது “ஜின்”னாக இருக்கிறது. இப்படியாக இன்றைய உலகமே “ஜின்”களின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மை!
18.ஜின்களால் சூனியம்
ஜின்களை வைத்து சூனியம்? இதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை என்று 2:102 வாசகம் அறிவிக்கின்றது. எனவே இவை எல்லாம் ஏமாற்று வேலை. பாமர மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டம் தான் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறது.