بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை
திருக்குர்அனைப் பொருத்த வரையில், அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதோடு மட்டுமின்றி மலாயிகா மீது ஈமான் கொள்வதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. (பார்க்க2:177, 2:285) முதலில் மலாயிக்கா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் ஈமான் கொள்ளும் விஷயத்தில் சிந்தித்துப் பார்த்து ஈமான் கொள்ள திருக்குர்ஆன் வலியுறுத்திச் சொல்கிறது. (பார்க்க 17:36 25:73) வெறும் யூகத்தின் அடைப்படையிலோ அல்லது கற்பனை வடிவிலோ ஈமான் கொள்வதை கண்டிக்கிறது. (10:36)
திருக்குர்ஆனில் மலாயிக்கா என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. மலாயிக்கா மீது ஈமான் கொள்வது நிபந்தனையாக உள்ளது. அதாவது மலாயிக்கா மீது ஈமான் கொள்ளா விட்டால், இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ள முடியாது. எனவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட நாம் அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றாகிய மலாயிக்காவைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், “மலாயிக்கா” என்ற வார்த்தைக்கு ‘மலக்குகள்’ அல்லது ‘வானவர்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதன்பின் மலக்குகளும் மனிதர்களைப் போன்ற தோற்றம் உடையவர்களே என்றும் சொல்லி வருகிறார்கள். இதற்காக திருக்குர்ஆனிலிருந்து சில வாசகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.
பூமி மற்றும் வானங்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் எண்ணற்ற சக்திகள் ஐக்கியமாகியுள்ளன. இவ்வாறே உலக படைப்புகளிலும் ஐக்கியமாகியுள்ள சக்திகள் யாவும் அவற்றின் சக்திகளாகவும் தன்மைகளாகவும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய சக்திகள் மற்றும் தன்மைகள் அல்லது குண நலன்களைத் தான் “மலக்கு” என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் வேர்ச் சொல் ا ل ك அலீஃப், லாம், காஃப், மற்றும் م ل ك மீம், லாம், காஃப் ஆகும். முதலாவது اَلَكٌ ""அலகுன்"" என்றும், இரண்டாவது ملك ""மலகுன்"" என்றும் உருமாறும். மலகுன் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்தான் மலாயிக்கதுன் என்பதாகும். அதாவது மலக்குகள் அல்லது பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் என்பதாகும்.
திருக்குர்ஆனில் உள்ள வாசகங்களை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் உரையாடல் வடிவில் விளக்கத்தை தந்துள்ளோம். அதை திருக்குர்ஆன் வாசகத்தை வைத்து சரி பார்த்துக் கொள்வீர்கள்.
ந.ரூஹுல்லா. பி.காம்.
2.அறிமுகம்
நேயர்: வாங்க. உள்ளே வாங்க. நீங்க யாரு? உங்களை அடையாளம் கொள்ள முடியவில்லை.
மலக்கு : நாங்க தானுங்க மலக்குமார்கள். எங்க கூட்டத்தரை مَلآءِكَةُ மலாயிக்கா என்று சொல்வார்கள்.
நேயர்: ஓ ஹோ! நீங்கதான் வானவர்களா?
மலக்கு : நீங்க உங்க மொழியிலே எந்த வார்த்தையாவது பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் எங்களைப் பற்றி நன்றாக அறிந்தால் தான் உங்களால் உலகில் சிறப்பாக வாழ முடியும்.
நேயர்: அவ்வளவு முக்கியமானவங்களா நீங்க?
மலக்கு : ஆமாம். ஆனால் நீங்க நினைக்கின்ற மாதிரி ஏதோ ஒரு குறிப்பிட்ட உருவத்தில் எங்கோ இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.
நேயர்: சரி. உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன். நீங்க உங்களைப் பற்றி சரியா சொல்லுங்க.
மலக்கு : எங்களைப் பற்றி நாங்கள் என்ன புதிதாக சொல்லப் போகிறோம்? ஏற்கனவே நம்மைப் படைத்த அல்லாஹ் தன் திருமறை குர்ஆன் மூலம் அறிவித்ததை மட்டும் எங்களால் சொல்ல முடியும். அதையும் மீறி எதுவும் சொல்ல முடியாது.
3.அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படும் மலக்குகள்
நேயர்: சரி விஷயத்துக்கு வாங்க. நீங்க யாரு? எங்கே இருக்கீங்க? என்ன செய்றீங்க?
மலக்கு : நாங்கள், அகிலங்களை எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படும் சக்திகளாக உவகமெங்கும் இருக்கின்றோம்.
நேயர்: உங்களுடைய பணி என்ன?
மலக்கு : அல்லாஹ் எங்களுக்கு வகுத்துத் தந்துள்ள கடமைகளை செவ்வன நிறைவேற்றுவதே (نُسًبِحُ ) எங்கள் பணி. அல்லாஹ்வின் கட்டளைகளை போற்றுதலுக்கு உரியதாக (بِحَمْدِكَ ) ஆக்குகின்றோம். அது மட்டுமின்றி அவனுடைய கட்டளையில் எதையும் பிசகாமலும் பிழராமலும் அழகிய முறையில் செயல்பட்டு (نُقَدِسُ ) வருகிறோம். (2:30)
நேயர்: ஆஹா! எவ்வளவு அழகான செயல்பாடுகள்? இதுவல்லவா இறைவனுக்கு வணங்கி நடப்பதற்கு உண்மையான அர்த்தம்? ஆமாம். உங்களிடம் தான் அல்லாஹ் ஆதமைப் படைக்கப் போவதாக ஆலோசனை கேட்டானா?(2:30)
மலக்கு : அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க. அல்லாஹ் தன் செயல் திட்டத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை யாரையும் கலந்து ஆலோசிப்பதும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. (17:111) (18:26)
நேயர் : இது உண்மை என்றால், நீங்கள் ஆட்சேபனை செய்ததாக சொல்கிறார்களே! (2:30)
மலக்கு : எங்களால் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்? அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படுவதுதானே எங்கள் பணி. (16:48)
நேயர் : அப்பொ உண்மை ஒன்றிருக்க உங்களைப் பற்றி வேறுவிதமாய் கேள்விபடுகிறோம் என்கின்றீர்களா?
மலக்கு : ஆமாம். உலகை ஆளுகின்ற பொறுப்பு ஆதமுக்கு - மனித இனத்திற்கு கொடுக்கப்படுவதை அறிந்து எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
காரணம், மனிதன் உலகில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டும், ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், இரத்தக் களறி செய்து கொண்டும் இருந்தான். அப்படிப்பட்ட படைப்புக்கா இவ்வளவு பெரிய பொறுப்பு என திகைத்தோம். (2:30) அவ்வளவுதான்.
நேயர் : அதாவது அல்லாஹ் ஆதமை படைப்பதைப் பற்றி சொல்லவில்லை. மாறாக மனிதனுக்கு خَلِىْفَة ஆளும் பொறுப்பை அளிக்கப்படும் திட்டத்தைப் பற்றிதான் சொல்லப்பட்டது. அத்திட்டத்தின் உள்நோக்கத்தைப் பற்றி உங்களால் கணிக்க முடியாது என்றும் அந்த வாசகம் அறிவிக்கிறது அல்லவா? (2:30)
மலக்கு : ஆமாம். அல்லாஹ் எங்களுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றலையும் செயல் திறனையும் அளித்து இருக்கின்றானோ அதோடு சரி.எங்களால் மேற்கொண்டு எதுவும் அறிந்து கொள்ளவும் முடியாது. அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைக்கு மாற்றமாக செயல்படவும் முடியாது (2:32)
நேயர் : மாறாக மனிதனுக்கு உலக படைப்புகளை ஆராய்ச்சி செய்து, அவற்றின் செயல்திறன்களைப் பற்றி அறிந்து கொள்ளும் عَلٌمَ آدَمَ الا سْمَآءَ كُلٌهَآ ஆற்றல்களை அல்லாஹ் அளித்துள்ளான். (2:31) அத்தகைய செயல் திறன் உங்களிடம் உள்ளனவா என்று அல்லாஹ் கேட்டானா?
மலக்கு : அப்படி எல்லாம் எங்களைக் கேட்டு அதைப் பற்றி உண்மையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை.
( لآ يُشْرِكُ فِىْ حُكْمِه اَحَدًا ( 18:26
இத்தகைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் سُبْحَانَهُ அல்லாஹ். (2:32) உண்மையை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக அல்லாஹ் உரையாடல் வடிவில் குர்ஆனில் சொல்லி இருக்கலாம்.
4.ஆதமுக்கு ஸஜ்தா செய்த மலக்குகள்
நேயர் : அப்பொ ஆதம் முன்பாக ஸஜதா سجدا செய்யச் சொன்னதும் உண்மை இல்லையா?
மலக்கு : இல்லை. இல்லை. அது உண்மைதான். ஆனால் நீங்கள் தொழுகையில் செய்கின்ற ஸஜ்தா போன்றது அல்ல.
நேயர் : தொழுகையில் செய்கின்ற ஸஜ்தா உண்மையில் ஸஜ்தா இல்லையா?
மலக்கு : நாங்கள் அப்படி சொல்லவில்லை. தொழுகையில் செய்யும் ஸஜ்தா என்பது மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை ஆகும். ஆனால் நாங்கள் செய்யும் ஸஜ்தா என்பது மனிதனின் கட்டளைக்கு இணங்கி செயல்படுவது என்பதாகும்.
நேயர் : கொஞ்சம் கன்ஃபியூஷனாக (confusion) இருக்கிறதே!
மலக்கு : அதில் என்னங்க குழப்பம் இருக்கப் போகுது? அல்லாஹ்வுக்கு இணங்கி سَجَدَا செயல்பட வேண்டியது எங்களுடைய கடமையாக இருக்கிறது. மனித கட்டளைக்கு சிரம் பணிந்து ( سَجَدَا) செயல்பட கட்டளை இட்டதும் அல்லாஹ்தான். எனவே அல்லாஹ்வின் கட்டளைப் படி மனித கட்டளைக்கும் இணங்கி செயல்படுகிறோம். (2:34) அவ்வளவுதான்.
5.ஆதம்(அலை) ஃகலீஃபாவாக தேர்வு?
நேயர் : அல்லாஹ் ஏன் உங்களை மனித கட்டளைக்கு இணங்கி செயல்பட வைக்கணும்?
மலக்கு : உலகை வழி நடத்திச் சென்று அதை ஆளும் பொறுப்பை خَلِىْفَة நாகரீக மனிதனுக்கு அளிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் செயல்திட்டம். இதற்காக மனிதனும் தான் நாடியதை செய்யக் கூடியவனாக இருக்கவேண்டும். அதாவது முழு சுதந்திரத்தைப் பெற்று வாழ்பவனாக இருக்க வேண்டும். அவ்வாறே அவன் இருக்கவும் செய்கின்றான் (18:29)
நேயர் : எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கும் என்று சொல்கிறார்களே! இது உண்மை இல்லையா?
மலக்கு : அது உண்மைதானுங்க. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்திட வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் நாட்டம் தானுங்க - அதாவது நிலையான செயல் திட்டம் ஆகும். (2:253) ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
6.மனிதனுக்கு ஸஜ்தா செய்யும் மலக்குகள்?
நேயர் : நீங்கள் எவ்வாறு மனித கட்டளைக்கு கட்டுப்படுகிறீர்கள்? அவ்வாறு கட்டுப்படுவதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!
மலக்கு : உங்களை சுற்றியுள்ள உலகைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அதிலுள்ள படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உண்மை உங்களுக்கே விளங்கும்.
நேயர் : உலக படைப்புகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
மலக்கு : என்ன இப்படி சொல்லிட்டீங்க? பூமியை சுற்றி புவி ஈர்ப்பு என்றொரு சக்தி இல்லையென்றால், உங்களால் ஓடி ஆடி வேலை செய்ய முடியுமா?
நேயர் : முடியாது. அந்த சக்தியை படைத்தது அல்லாஹ்தானே?
மலக்கு : யார் இல்லை என்று சொன்னது? அத்தகைய எண்ணற்ற சக்திகளை படைத்து, அவை அனைத்தையும் தன் கட்டளைக்கு இணங்கி கட்டுக்கோப்பாக செயல்படும் படி அல்லாஹ் ஏற்பாடுகளை செய்துள்ளான். அந்த சக்திகளை அல்லாஹ் குர்ஆனில் ٱلْمَلَٰٓئِكَةُ மலாயிக்கா என்று குறிப்பிடுகிறான்.
7.பிரபஞ்ச சக்திகளாக செயல்படும் மலக்குகள்
நேயர் :இன்னும் என்னன்ன சக்திகள் உள்ளன என்பதையும் சற்று விவரமாக சொல்லுங்கள்.
மலக்கு : காற்று – அதில் உள்ள சக்தி - அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்க எங்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளது. நீர் - அதில் ஹைட்ரோஜன் Hydrogen மற்றும் ஆக்ஸீஜன் Oxygen என்ற இரு சக்கதிகளாக செயல்பட்டு வருகிறோம். அதே போன்று செடி கொடிகள், தாவரங்கள் மற்றும் எண்ணற்ற தாதுப் பொருட்கள் மற்றும் அமிலங்கள் அகியவற்றில் தன்மைகளாக நாங்கள் அவற்றுள் ஐக்கியமாகி செயல்படுகிறோம்.
நேயர் : அது எப்படி? மலக்குகளை பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறதே. (33:9) நீங்க சொன்ன படைப்புகளை எல்லாம் எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே! எனவே நீங்க சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
மலக்கு : நீங்க சொல்வது படைப்புகளைப் பற்றியது. நாங்க சொல்வது அந்த படைப்புகளில் அடங்கியுள்ள சக்திகள் மற்றும் தன்மைகளைப் பற்றித்தான். அவற்றுள் சக்திகளாக செயல்படும் எங்களை உங்களால் பார்க்கவே முடியாது.
நேயர் : ஓ ஹோ! அதாவது நாம் காற்றை பார்க்க முடியாது. ஆனால் நாம் உயிர் வாழ்வதற்கு அது முக்கியமான ஒன்றாக உள்ளது. காற்று இல்லை என்றால் ஒரு நிமிடமும் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. இப்படியாக காற்று நமக்கு பலனுள்ளதாக உள்ளது. ஆனால் அதற்கும் நீங்கள் கட்டுப்படுவதற்கும் என்ன சம்பந்தம்?
மலக்கு : ஏங்க இல்லை என்று சொல்றீங்க? காற்றை வாகன சக்கரத்தில் புகுத்தி பயன்படுத்திக் கொள்வதில்லையா? தேவைப் பட்டால் Air Conditioner and Regerators போன்றவற்றைப் பயன்படுத்தி அதை குளிர்ச்சியாக ஆக்கிக் கொள்கிறீர்கள். தேவைப் பட்டால் Hair Drier போன்றவற்றைப் பயன்படுத்தி அதை வெப்பமாக்கிக் கொள்கிறீர்கள் அல்லவா? காற்றில்லாமல் உங்களால் சமைக்க முடியுமா? நீங்க எப்படி பயன்படுத்திக் கொள்ள விரும்பினாலும் நாங்க அதுக்கு அடிபணிகிறோம் அல்லவா?
நேயர் : ஓ ஹோ! அப்படியா? அதனால் தானா நம்மைப் படைத்த அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளதாக சொல்லி இருக்கின்றான்? (31:20)
மலக்கு : ஆமாங்க! வானங்களிலும் எண்ணற்ற சக்திகள் செயல்பட்ட வண்ணம் இருக்கின்றன. உதாரணத்திற்கு சூரிய ஒளி. அது ஒன்றன் மேல் ஒன்று அடுக்காகப் படைக்கப்பட்டுள்ள வானங்களைக் Zones கடந்து பூமிக்கு வந்தடைகிறது.(78:12) இதனால் சூரியனின் கதிர் வீச்சு ஒளியாகவும், வெப்பத்தை தரக்கூடியதாகவும் உள்ளது (78:13)
நேயர் : ஆமாங்க. அது உண்மைதான் ஆனால் சூரியனையும் வானத்தையும் நாங்கள் பார்க்கின்றோமே?
மலக்கு : அவற்றை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆனால் சூரியனின் வெப்பத்தை உணரத்தான் முடியுமே அன்றி அதை நீங்கள் பார்க்க முடியாது.அதே போல் உங்களுக்கு காட்சி அளிக்கும் வானத்தில் சக்திகளாக செயல்படும் எங்களை உங்களால் பார்க்கவே முடியாது.
நேயர் : சரி அது இருக்கட்டும். அதை வைத்து உங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது?
மலக்கு : சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பாருங்கள். சூரிய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்துக் கொள்வதில்லையா? அந்த சக்திகள் ஆதிமுதலே பூமியை சுற்றி இருந்து வந்ததுதானே!. ஆனால் மனிதன் ஆராய்ச்சி செய்து அவற்றை தன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் போதுதான் மனிதனுடைய கட்டளைக்கு சூரிய ஒளியில் சக்தியாக இருக்கும் நாங்கள் இணங்கி விடுகிறோம்?
8.ஜிப்ரயீல் (Gabriel) எனும் மலக்கு?
நேயர் : ஆமாம். இதெல்லாம் சரி. ஜிப்ரயீல் என்னும் மலக்கு ஏதோ முஹம்மது நபியின் உள்ளத்தில் வஹீச் செய்தியை இறக்கி அருளிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளதே.(2:97) எங்களுக்கெல்லாம் அவர் செய்தியை அருளமாட்டாரா?
மலக்கு : ஆமாங்க. ஜிப்ரயீல் என்பது மாபெரும் “ஒலி அலை”களின் சக்தியாகும். அது நபிமார்களின் உள்ளத்தில் அல்லாஹ்விடமிருந்து நேரடியாக இறக்கியருள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு ஆகும். இன்னும் சற்று விவரமாக சொல்ல வேண்டுமென்றால் நபிமார்களுக்கு என்று இறைச் செய்தியை கிரகித்துக் கொள்ளக் கூடிய தனிச் சிறப்பு மிக்க ஆற்றல் இருந்ததுங்க. அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி அந்த செய்தி இறக்கி அருளப்பட்டது. மற்ற மனிதர்களுக்கு நபிமார்கள் மூலமாக அந்த வஹீச் செய்தி அருளப்படுகிறது.
நேயர் : இந்த விஷயத்தில் அல்லாஹ் சற்று பாகுபாடுடன் செயல்படுவதாக சிலர் எண்ணுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?(2:90)
மலக்கு : மற்ற உயிரினங்களுக்கு அதனதன் உடலமைப்பிலேயே உள்ளுர உந்துதல்களாக செயல்படுகிறோம்.(16:68). இதனால் அவற்றிற்கு வஹீச் செய்தி என்பது உள்ளூர உந்துதல்களே. உதாரணத்திற்கு மீனுக்கு நீந்த கற்றுத் தரத் தேவையில்லை. கோழிக் குஞ்சுக்கு தன்னுடைய பகைவன் யார் என்று சொல்லித் தரத் தேவையில்லை. அதனதன் உடல் அமைப்பிலேயே அவை வைக்கப்பட்டுள்ளன (24:41) كُلٌّۭ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥ ۗ ஆனால் மனிதனின் நிலை வேறு விதமாய் உள்ளதுங்க.
நேயர் : நான் கேட்ட கேள்விக்கு நீங்க தரும் பதில் பொறுத்தமா இல்லையே!.
மலக்கு : சற்று பொறுங்கள். மனிதனை மற்ற உயிரினங்களைப் போல் அல்லாமல், எல்லா ஆற்றல்களுடன் சுதந்திரமாக செயல்படக் கூடியவனாக படைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் திட்டம். எனவே அவனுக்கு வழிகாட்டுதலும் வெளியிலிருந்துதான் கிடைக்குமே அன்றி அவனுள் உதிக்கின்ற உந்துதல்களாக இருப்பதில்லைங்க. மேலும் மனிதனின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்பதற்காகவே அவனில் ஒருவரை தேர்ந்தெடுத்து, ( وَٱللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ(2:105 இறை வழிகாட்டுதலை அறிவித்துவிட வேண்டும்.(2:105) மற்றவர்கள் அவற்றை தம் முழு விருப்பத்துடன் ஏற்று அதன்படி நடக்க வேண்டும்.
நேயர் : சரி அது போகட்டும். எவன் ஜிப்ரயீலுக்கு பகைவனாக இருக்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கும் பகைவனாவான் என்று சொல்லப் பட்டுள்ளதே (2:97)
மலக்கு : ஜிப்ரயீல் மற்ற மலக்குகளைப் போலவே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முடியுமே அன்றி தன்னிச்சையாக செயல்பட முடியாதுங்க. உலகைச் சுற்றி ஒலி அலைகளாக செயல்படும் ஜீப்ரயீல் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கித்தானுங்க முஹம்மது நபியின் உள்ளத்தில் வஹீச் செய்தியை இறக்கி அருளியதுங்க. ஆனால் பனீ இஸ்ராயீல் சமூகத்தவருக்கு இது பிடிக்கவில்லை. (2:105)அவர் ஜீப்ரயீலுக்கு Gabrielக்கு எதிராக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அதற்காகத்தான் அல்லாஹ் 2:97இல் அவ்வாறு கூறினான்.
நேயர் : என்னவோ நீங்க சொல்றீங்க. எனக்குப் புரியவிலைங்க. அது எப்படிங்க ஒலி அலைகள் என்கின்ற சக்திக்கு எதிரியாக இருக்க முடியம்?
மலக்கு : நாங்க சொல்வது முற்றிலும் உண்மைதானுங்க. நீங்க வேண்டும் என்றால் அந்த வாசகத்தை தொடர்ந்து வரும் 2:99-102 வாசகங்களை படித்து நன்கு ஆராய்ந்து பாருங்கள். உண்மை உங்களுக்கே விளங்கும்.
நேயர் : சரி அது இருக்கட்டும் ஜிப்ரயீலுக்கு – அதாவது நீங்க சொல்கின்ற ஒலி அலைகளுக்கு எதிரியாக எப்படி இருக்க முடியும்?
மலக்கு : அதாவது ஒலி அலைகள் மூலமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் பரப்பலாம். இதற்கு மாற்றமாக வதந்திகளையும், தவறான செய்திகளையும் பரப்பி மக்களை கெடுக்கவும் செய்யலாம். இசை என்ற பெயரிலும் மக்களை கெடுக்கவும் செய்யலாம். ஒலி அலைகள் என்கின்ற சக்தியாக, உலகம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட்ட வண்ணம் இருக்கிறோம். அல்லாஹ்வின் நெறிமுறைக்கு எதிராக அதை பயன்படுத்துபவர்கள் அல்லாஹ்வின் எதிரிகளாக கருதப்படுவார்கள்.
நேயர் : அது சரிங்க. இப்போதுள்ள மக்களுக்கு வஹீச் செய்தி எப்படி கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே. இங்கு ஒலி அலைகள் என்கின்ற ஜிப்ரயீலின் பங்கு என்ன?
மலக்கு : முஹம்மது நபி, தனக்கு அளிக்கப்பட்ட வஹீச் செய்தியை புத்தகத்தில் பதிவு செய்து உலக மக்களுக்கு பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு சென்று விட்டார். (15:9) அதை உலகில் உள்ள மற்ற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. (14:4) அந்தந்த மொழியில் படிக்கும் போது, அதை காது கொடுத்து கேட்பவர்களின் உள்ளத்தில் ஒலி அலைகளாக பதித்து விடுகிறோம். (5:15-16)(7:204)
நேயர் : கேட்க விரும்பாதவர்களின் கதி என்ன?
மலக்கு : அவர்களுக்கு எப்படி இறைவழிகாட்டுதல் என்ற வஹீச் செய்தி சென்றடையும்? (10:42-43) அதன் பின் உங்களுக்கு பகைவனாக இருக்கும் “மனோ இச்சை” (36:40) எனும் ஷைத்தானின் கட்டளைப் படிதான் செயல்பட முடியும்.
9.மலக்குகளும் வாழ்வாதாரங்களும்
நேயர் : அது சரி. மீக்கால் என்ற மலக்கு என்பது என்ன? (2:98) அவற்றின் பணி யாது?
மலக்கு : உலகில் உள்ள உயிரினங்களின் வாழ்வாதார வசதிக்காக செய்யப்பட்ட பல்வேறு சக்திகளே மீக்கால் என்பதாகும். அதாவது நீர் - நீரில் உள்ள சக்தி; சூரிய ஒளி – அதிலுள்ள வெப்பம்; காற்று அதில் உள்ள ஈரப்பதம் கொண்ட சக்தி; நிலத்திலுள்ள வளம்; இவற்றை கட்டுக் கோப்பாக வைத்து செயல்படுத்தும் ஆகாயம்; மாறி மாறி வரும் இரவு பகல் ஆகியன மீக்கால் என்ற சக்திகள் ஆகும். இதைக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வாதார வசதிகளை கிடைக்க செய்வது மனிதனின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. அதன் பங்கீட்டு முறையில் மனிதன் தவறாக செயல்படுத்தினால் அல்லாஹ்வுக்கு விரோதியாவான். அல்லாஹ்வும் அத்தகையவர்களுக்கு பகைவனாவான்.(2:98)
நேயர் :இத்தகைய சக்திகள் எல்லாம் காலம் காலமாக இருந்து வந்தவை தானே. இப்பொ மட்டும் நீங்கள் ஏன் செயல்படுகிறீர்கள்?
மலக்கு : ஆமாங்க. உயிரினங்களைப் படைப்பதற்கு முன்பாகவே அல்லாஹ் தன் செயல்திட்டத்தின் படி (32:5) எங்களை எல்லாம் படைத்தது என்னவோ உண்மைதான். (32:7) ஆனால் மனிதன் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளாத வரையில் நாங்கள் எதுவும் அவனுக்கு உதவி செய்ய மாட்டோம். (53:39)
நேயர் : அது எப்படிங்க? விளக்கம் தேவை.
மலக்கு : உதாரணத்திற்கு மனிதன் தனக்குத் தேவையான உணவு தானியங்களை விதைக்கும் வரையில் நாங்கள் தனித்து இருப்போம். அவன் அதை விதைத்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படி ஒருங்கிணைந்து செயல்பட்டு உணவு தானியங்களை ஒன்றுக்கு நூறாக பெருகச் செய்வோம்.
நேயர் :இவ்வாறு அல்லாஹ் செய்வதாக அல்லவா குர்ஆனில் குறிப்பிடுகிறான்.? (2:261)
மலக்கு : ஆமாங்க. எங்களைப் படைத்ததும் அல்லாஹ் தான். எனவே அல்லாஹ், தானே செய்வதாகச் சொல்வதும் சரிதானே. அதாவது அவன் நேரடியாக செயல்படாமல் எங்களை உருவாக்கி, கட்டளையைப் பிறப்பித்து அதன் மூலம் செயல்பட வைக்கின்றான். (16:48-50)
10.இறக்கைகள் உடைய மலக்குகள்
நேயர் : அது சரி. மலக்குகளுக்கு இறக்கைகள் இருப்பதாக சொல்கிறார்களே (35:1)
மலக்கு : எங்களுக்கு அப்படி இறக்கை எல்லாம் இல்லைங்க. மனித கற்பனையில் அப்படிப்பட்ட கருத்து இருந்து வந்தது.
நேயர் : குர்ஆனில் சொல்லப்பட்ட அஜ்னிஹதின் اَجْنِهَة என்பதன் பொருள் இறக்கைகள் தானே?
மலக்கு :சாதாரணமாக அதற்கு இறக்கைகள் என்றுதான் அர்த்தம் வரும். ஆனால் எங்களைப் பொருத்த வரையில் எங்களிடம் உள்ள பல்வேறு செயல் திறன்களைத் தான் அவை குறிக்கும்.
நேயர் : சற்று விளக்கமாக சொன்னால் எங்களுக்கும் புரியும்.
மலக்கு :காற்றின் சக்தி பூமியின் புவிஈர்ப்பிலும் செயல்படும். மழையை உருவாக்கவும், அதை பொழிய வைக்கவும் உதவும். நெருப்பை எரிய வைக்கவும் காற்று தேவை. எல்லா உயிரினங்களை வாழ வைப்பதற்கும் காற்று தேவை. இப்படியாக ஒவ்வொரு சக்தியும் பல்வேறு செயல் திறன்களைக் கொண்டதாக இருக்கும்.
11.மலக்குகளும் அழிவுகளும்
நேயர் : ஆஹா! எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அல்லாஹ்வின் படைப்புகள்! இவற்றின் துணையின்றி மனிதனால் எதுவுமே செயல்பட முடியாதே! இப்படியாக ஒவ்வொரு படைப்பிலும் உள்ள சக்திகள் மற்றும் அவற்றின் தன்மைகளை மனிதன் அறிந்து கொண்டால், அவற்றை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் போல இருக்கே.
மலக்கு :ஆமாம். இப்போதாவது எங்களுடைய சேவையைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து விட்டதே! எங்களுடைய சேவையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து அல்லாஹ்வின் அறிவுரைப் படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.
நேயர் : ஆமாங்க நான் சொல்லவே மறந்து விட்டேன். உங்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் அழிவுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
மலக்கு :ஆமாங்க. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துவிட்டதால் எங்களைப் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதையும் எங்களால் தடுக்கவே முடியாதுங்க.
நேயர் : அந்த வகையில் பார்க்கும் போது, நீங்களும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்களே! இதை எப்படி சரி செய்வதுங்க.
மலக்கு :அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்கள் - அதாவது அல்லாஹ்வின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் உலக படைப்புகளில் எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை என்பதை அறிந்து கொள்வார்கள் (3:191
நேயர் : அதாவது அல்லாஹ்வின் படைப்புகள் எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகத் தான் படைக்கப் பட்டுள்ளன என்பதை அறிந்து ஆக்கப்பூர்வமாக மட்டும் பயன்படுத்துவார்கள்.(3:191)
மலக்கு :எங்களை அழிவுக்காகப் பயன்படுத்தினால் எந்த அளவுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்துவோம் என்பதை அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து செயல்படுவார்கள்.(3:191)
நேயர் : ஒரு வேளை உங்களைப் பற்றிய உண்மைகள் எதுவும் மக்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்தால் என்ன ஆகும்?
மலக்கு :அத்தகையவர்கள் வீணான கற்பனையில்தான் வாழ்வார்கள். அல்லாஹ்வும் நாங்களும் வானில் மேகங்கள் நிழலிடுவது போல், வந்து அவர்களுடைய சகல காரியங்களையும் முடித்து வைப்போம் என்ற எதிர் பார்ப்பில் தான் இருப்பார்கள். (2:210)
நேயர் : நீங்கள் அவ்வாறு உதவி செய்ய மாட்டீர்களா?
மலக்கு : எங்களுக்கு என்று விதிக்கப்பட்ட சட்டத்தை மீறி எங்களால் ஒரு போதும் செயல்பட முடியாது. அல்லாஹ்வின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒருபோதும் நாங்கள் சோர்வு அடைவதும் இல்லைங்க. (41:38)
12.மலக்குகளும் கற்பனை தெய்வங்களும்
நேயர் : மக்கள் எல்லாம் அறியாமை என்ற இருளில் மூழ்கி கற்பனையில் வாழ்ந்து வருகிறார்களே. போதாத குறைக்கு உங்களை எல்லாம் பெண்களின் பெயரிட்டு உங்களை வழிபட்டும் வருகிறார்களே! (43:19)
மலக்கு :அப்படிங்களா? அது எங்களுக்கு தெரியவே தெரியாதுங்க. கியாம நாளில் அல்லாஹ் எங்களை அழைத்து இதைப் பற்றி கேட்டாலும் எங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது என்று தான் சொல்லி விடுவோம். (34:40
நேயர் : மலக்குகளாக - இயற்கை சக்திகளாக இருக்கும் உங்களை மனிதன் தன் ஆற்றலைக் கொண்டு பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக உங்களையே தெய்வங்களாகக் கருதி வணங்கி வருவது வருதப்பட வேண்டிய விஷயமே.
மலக்கு : ஆமாங்க. இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாததால், உண்மை என்னவென்று அவர்களுடைய அறிவுக் கண்ணுக்கு புலப்படாமல் திறைக்கு மறைவாக – ஜின்னாக இருக்குதுங்க. இதை நாங்கள் அல்லாஹ்விடம் சொல்லவேண்டி வருமுங்க. (34:41)
நேயர் : அது மட்டுமின்றி அவர்களுடைய கண்களுக்குப் புலப்படாத சக்திகளை (ஜின்களை) பல்வேறு உருவங்களைக் கொடுத்து அவற்றை வணங்கி வருவதும், அல்லாஹ்வுக்கு இணையாக்குவதும் வருத்தப்பட வேண்டிய விஷயமே. (6:100)
மலக்கு : அத்தகைய கற்பனை தெய்வங்களைப் படைக்கும் போது, அவர்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்தார்களா என்றும் அல்லாஹ் கேட்கின்றான் (43:19) அதாவது அவர்கள் கூறி வருவதும் வழிபட்டு வருவதும் வெறும் யூகங்களின் அடிப்படையில் தான் என்பது திண்ணம்.(10:36)
13.மலக்குல் மவுத்
நேயர் : மலக்குல் மவுத் என்கின்றார்களே. அதைப் பற்றிய உண்மைகளை சற்று எடுத்துரையுங்கள்.
மலக்கு :பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகளாக செயல்பட்டு வரும் நாங்கள், மனித உடலிலும் செயல்பட்டு வருகிறோம்.
நேயர்: அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி, மனிதனுள் இயங்கி வரும் “ரூஹ்” என்ற ஒரு சக்தி. அது மலக்குடைய தன்மை. அடிபணியாமை ஷைத்தானுடைய தன்மை. சரியா?
மலக்கு : சரிதானுங்க. மனித உடலில் இரத்த நாணங்களில் சக்திகளாக செயல்படுவதால்தான் மனிதனால் உயிர் வாழ முடிகிறது. அந்த சக்திகள் சிறுக சிறுக குறைந்து செயலிழந்து விட்டால், அவன் மரணமடைந்து விட்டதாக கருதப்படும்.
நேயர்: ஓ ஹோ! இதைத் தான் மலகுல் மவுத் வந்து உயிரைப் பறிப்பதாக சொல்வார்களா? (32:11)
மலக்கு : அதன் பின் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின்படி இவ்வுலகில் மனிதன் செயல்பட்டு வந்த நற்செயல்களுக்கு ஏற்ப இன்பமான வாழ்வோ, அல்லது தீய செயல்களுக்கு ஏற்ப நரக வேதனையோ அளிப்போம். (36:54)
நேயர்: அது சரி. நீங்க என்ன? சிலரை எளிதாக உயிரை பறித்துக் கொள்வதாகவும் சிலரை கஷ்டப்படுத்தி உயிரைப் பறிப்பதாகவும் சொல்கிறார்களே (79:1-2)
மலக்கு :அப்படி எல்லாம் இல்லைங்க. சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணம் ஏற்பட்டு விடுகிறது. சிலர் விபத்தில் சிக்கி மாண்டு போகிறார்கள். மற்றும் பலர் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் பட்டு கஷ்டங்களை அனுபவித்த பின் இறக்கிறார்கள்.
14.மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்தும் மலக்கு
நேயர்: இதைத் தான் அல்லாஹ் திருமறை குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றானா? அது சரி. ஒவ்வொரு மனிதரிடத்திலும் இரு மலக்குகள் இருப்பதாக சொல்கிறார்களே.(50:17)
மலக்கு : அதாவது மனிதன் ஆக்கப்பூர்மாகவும் செயல்படலாம். தீய செயல்களையும் செய்யலாம். இவ்விரு பண்புகளும் மினிதனிடத்தில் உள்ளன.( 91:8 ) (فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا.) எனவே மனிதனின் ஒவ்வொரு செயலையும் நாங்கள் பதிவு செய்து வருகிறோம். (50:17)
நேயர்: மனித செயல்களை அல்லாஹ்வே பதிவு செய்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளதே!. (19:79) இதன் பொருள் என்ன? பதிவு செய்து என்ன செய்வீர்கள்.
மலக்கு : மனிதனுடைய செயல்களுக்கு ஏற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தி வருபவர்களாக இருக்கிறோம். மனிதன் விதையை பயிரிடும்போது, உணவு தானியங்களை பன்மடங்காகப் பெருகிட எவ்வாறு உதவி செய்கிறோமோ, அவ்வாறே தீய செயல்களின் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறோம். இதைத்தான் பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது.
நேயர்: உதாரணத்திற்கு தவறான செய்திகளை மக்களிடையே மார்க்கமாக பரப்பி வந்தால், அம்மக்களும் தவறானதையே சரியானவை என்று எண்ணிக் கொள்வார்கள். அதன் பின் தவறான முறையில் செயல்பட்டு, அவையே அழகான செயல்கள் எனவும் எண்ணிக் கொள்வார்கள்.(29:38)
மலக்கு : அதை தொடர்ந்து அவர்களின் தீய செயல்களின் விளைவுகளை எங்களால் ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த உலகத்தையும் எங்களையும் அல்லாஹ் படைத்துள்ளதாக அறிவிக்கின்றான். (11:7 ) لِيَبْلُؤَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلا
நேயர்: இதைத்தான் மனிதனுக்கு முன்னாலும் பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய, சக்திகளாக இருப்பதாக சொல்லப்படுகிறதா? (13:11) لَه‘ مُعَقِّبآةٌ مِنْ يْنِ يَدَىْهِ وَمِنْ خَلْفِه அவ்வாறு நீங்கள் பின் தொடர்ந்து செயல்படுகிறீர்களா?
மலக்கு : மனிதனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்த அல்லாஹ், அவனுடைய செயல்களின் விளைவுகளை தடுத்துக்கொள்ளும் சக்தி அறவே கிடையாது. காரணம் மனிதன் ஒவ்வொரு கட்டத்திலும் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ற வகையில் நாங்கள் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவர்களாகவே இருக்கிறோம். (13:11)
நேயர்: எனவேதான் ஒரு சமுதாயம் தன் நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுடைய நிலையை ஒருபோதும் அல்லாஹ் மாற்றமாட்டான் என்றும் சொல்லப்படுகிறதா? (13:11)
மலக்கு : அவர்கள் தீமையில் நிலைத்து விட்டால், நாங்கள் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்ய இயலாதுங்க. இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து எங்களுக்கு நிலை நிறுத்தப்பட்ட சட்டமாகும் (25:22) அதை எங்களால் ஒருபோதும் மீற முடியாது,
15.நபிமார்கள் மலக்குகளா?
நேயர்: நம்மைப் போன்ற மனிதரையா நபியாக அல்லாஹ் அனுப்ப வேண்டும்.? அவன் தன் செய்தியை இறக்கி அருள ஒரு மலக்கை அல்லவா அனுப்பி இருக்க வேண்டும்?" என்று மக்கள் ஆட்சேபிக்கிறார்களே (25:7) மேலும் சிலர் அல்லாஹ் நாடியிருந்தால் ஒரு மலக்கை அனுப்பி இருப்பான் என்கிறார்களே (23:24) மற்றும் சிலர் எங்களிடம் ஏன் மலக்குகளை அனுப்பவில்லை? அல்லாஹ் ஏன் நம் முன் தோன்றுவதில்லை என்றும் பேசி வருகிறார்கள். (25:21) இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
மலக்கு : மனிதன், மலக்குகளை (எங்களை) மனித உருவில் கற்பனை செய்து வைத்துள்ளான். மனிதனைவிட மலக்குகள் பன் மடங்கு அதிகமான சக்தியுடையவர்கள் எனவும் எண்ணிக் கொண்டு இருக்கிறான். அதனால் இறைச் செய்தியை எடுத்துரைப்பவர் அவனைப் போன்ற மனிதராகவே இருப்பதைக் கண்டு அவனால் ஜீரணிக்க முடிவதில்லை. மேலும் அவர் கொண்டு வரும் கொள்கை கோட்பாடுகள் யாவும் அவன் கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக இருப்பதால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை நேரடியாக சொல்வதற்குப் பதிலாக இவ்வாறு சாக்கு போக்கு இவ்வாறு சாக்கு போக்கு சொல்கிறான்..
நேயர்: ஆக இறைத்தூதர் கொண்டு வந்த இறைச் செய்திகளைக் கவனித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அவருடைய நடை உடை பாவனை மற்றும் செல்வங்கள் ஆகியவை உள்ளதா என்றுதான் பார்க்கிறார்கள். (17:93) இன்றைக்கும் இதே நிலைதான். யாராவது குர்ஆனின் செய்தியை எடுத்துச் சொன்னால் அவருக்கு என்ன தகுதி இருக்கு என்று உடனே கேட்பார்கள்.
மலக்கு : ஆக இவ்வுலகில் மலக்கின் ஆட்சி நடைபெற்று இருந்திருந்தால் மலக்கை அல்லாஹ் தூதராக அனுப்பி இருப்பான் என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டான். (17:95) மாறாக மனிதர்கள் வசித்து வருவதால் மனிதரையே நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கிறான். எனவே நபிமார்களில் யாரும் மலக்காக இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
நேயர்: அது சரி. மலக்குகளிலிருந்து இறைச் செய்திகளை எடுத்துரைக்கும் தூதர்களை அனுப்பிவைப்பதாக 22:75 வாசகத்தில் அறிவிக்கின்றானே!
மலக்கு : நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் உலகில் உள்ள பல்வேறு மொழிகளின் ஓசை (ஒலி அலைகள்) மூலமாக இறைத் தூதர்களுக்கு செய்தியை அனுப்பி, அவர் மூலமாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். இக்காலத்தில் அந்த “ஒலி அலைகள்” என்ற சக்தி வடிவில் உலகம் முழுவதும் தொலைக் காட்சி, இன்டர்நெட், மொபைல் நெட் ஆகியவற்றின் மூலமாக செயல்படுகிறோம். இதுதான் இன்றைய காலக் கட்டத்தில் 22:75 வாசகம் பொருந்தும்.
நேயர்: இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ஒரு சந்தேகம். நபிமார்கள் காலத்தில் மனித உருவில் வந்து செய்திகளை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்களே! உதாரணத்திற்கு இப்றாஹீம் நபியிடம் வந்த தூதர்கள் (11:69) ஈஸா நபியின் தாயார் மர்யமிடம் செய்தியைக் கொண்டு வந்தவர் (3:42-45 & 19:17) மனித உருவில் இருந்ததாக சொல்லப்படுகிறதே.
மலக்கு : அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு செயல்படுவது மலக்கின் தன்மை. இந்த பண்புகள் மனிதனிடத்தில் வந்து விட்டால் அவரையும் தெய்வம் فَرِشْتَه என்பார்கள். அரபியில் மலக்குன் مَلَكٌ என்பார்கள்.
நேயர்: ஓஹோ! உதாரணத்திற்கு தகாத பாலியில் உறவை அல்லாஹ் தடுக்கின்றான். ஆனால் அஜீஸின் மனைவி தம் தோழிகள் மூலம் யூஸுஃப் நபியை மயக்கி தன் வலையில் சிக்கவைக்க எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்களால் அவரை மயக்கவே முடியவில்லை. கடைசியில் அவரைக் கண்டு அப்பெண்கள், இவர் சாதாரண மனிதரே இல்லை. “மேன்மைக்குரிய மலக்” காக இருக்கிறார் என்று சொல்லி விடுகிறார்களா? (12:31)
மலக்கு : இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிய வருகிறது? இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் எங்களைப் போன்று ஒருபோதும் இறைவனுக்கு எதிராகச் செயல்படவே மாட்டார்கள். எனவே இறைச் செய்தியைக் கொண்டு வருபவரும் அவ்வாறே அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி என்னவோ, அதை அப்படியே ஒப்பிக்கிறார். எனவே இறைச் செய்திகளை மலாயிகா என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது அம்மனிதர் கொண்டு வந்த செய்தியில் எவ்வித திருத்தமோ பிழையோ இல்லை என்பதாகும்.
நேயர்: அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுவோரை ஷயாத்தனீகள் شَيآطِىْن என்று சொல்வது போல அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு செய்படுபவர்கள் மலக்குகள் என்று சொல்லலாமா?
மலக்கு : இல்லை. மலக்குடைய பண்புகள் உடையவராக ஆவார். சுருக்கமாக “மலக்கு” என்று சொல்லிவிடுவார்கள். இந்த வித்தியாசத்தை நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கும் எங்களைப் போன்ற பண்புகள் உடைய மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்ளுங்கள்.
நேயர்: மிக்க சரி. ஏனெனில் உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பணியை மட்டும் உங்களால் செய்ய முடியும். ஆனால் மனிதனின் நிலை உங்களைவிட பன் மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. அது சரி. மலக்குகள் உணவு அருந்த மாட்டார்களாமே!
மலக்கு : எங்களுக்கு என்று உணவு எல்லாம் கிடையாது. ஆனால் செய்தியை எடுத்து வருபவர்களுக்குத் தேவைப்படும். மேலும் கெட்ட செய்தியை கொண்டு வருபவர்கள், ஆற அமர உட்கார்ந்து உணவருந்திவிட்டு செல்ல மாட்டார்கள். (11:70)
நேயர் : மீண்டும் ஒரு கேள்வி. நபிமார்கள், தாம் மல்லக்காக இருக்கவில்லை என்று அறிவித்துள்ளார்களே (6:50, 11:31) இதற்கு என்ன அர்த்தம்?
மலக்கு: நபிமார்களிடம் மலக்குகளின் பண்புகள் இருக்கும். ஆனால் மக்களோ மலக்குமார்களை சூப்பர் மேன் Super Man என்று எண்ணிக் கொண்டும், அவர்கள்தாம் உதவி புரிவார்கள் என்ற எதிர் பார்பிலும் இருந்தார்கள். (6:158) இன்றைக்கும் இருக்கிறார்கள். நான் அத்தகைய சூப்பர் மேன் அல்ல என்று தான் நபிமார்கள் சொன்னார்கள்.(6:50)
நேயர் : அது சரி. மலக்குகள் வந்தால் எல்லாமே முடிந்து விடும் என்றும், அவகாசம் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் அல்லாஹ் சொல்கின்றானே. (15:7) மேலும் நிராகரிப்பவர்களுக்கு உங்களின் வருகை நற்செய்தியாக இருக்காது என்றும் சொல்லப் படுகிறதே (25:22) இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மலக்கு : மனிதனின் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் தாம் நாங்கள். எனவே ஒரு சமுதாயம் தீய வழியில் செயல்படும் போது, அதை சீரமைப்பதற்காக இறைத் தூதர்கள் முறைப்படி அறிவுரை செய்து அந்த அழிவிலிருந்து காப்பாற்றவே முயல்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், ஒரு நபி ஏன் மலக்காக வரக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தால், அம்மக்கள் காலம் காலமாக செய்து வந்த தீய செயல்களின் விளைவுகளைத் தான் மலக்குகளும் ஏற்படுத்த முடியும். இதை சொல்லத்தான் மலக்குகளின் வருகை தீயவர்களுக்கு நற்செய்தியாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. (25:22) நபியின் அறிவுரை ஏற்காமல் தீய வழியில் செயல்பட்டால் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த அவகாசமும் கிடைக்காது.
16.போரில் மலக்குகளின் பங்கு
நேயர் : உஹது போரில் உங்களில் 5000 பேரும் (3:126) பத்று போரில் 1000 பேரும் (8:9) இஸ்லாமிய படைகளை ஆதரித்து உதவி புரிந்தீர்களாமே! இது உண்மையா?
மலக்கு : அப்படி எல்லாம் எங்களால் உதவி செய்யவே முடியாதுங்க. அவை யாவும் போர் களத்தில் வீரர்களை உற்சாகமூட்டுவதற்கு படைத் தளபதி விடும் வீர முழக்கம் தானுங்க. (3:126, 8:10) களத்தில் தைரியமூட்டு வதற்காக இவ்வாறு சொல்வார்கள். மற்றபடி அவர்களுக்கு உதவி என்பது போர்த் தளவாடங்களைக் கொண்டும் போரில் கையாளப்படும் தந்திரங்களைக் கொண்டும் தான் பெற முடியும். (அத்தியாயம் 105)
நேயர் : பத்று போரின் சமயம பெய்த மழை நீரைக் கொண்டு மூஃமின்கள் குளித்து சுத்தமாக்கிக் கொண்டனர். இதனால் அவர்களுக்கு மன நிம்மதியும் கிடைத்தது. அவர்களை இவை யாவும் பலப்படுத்தியாக சொல்லப்படுகிறது (8:11) (33:9)
மலக்கு : ஆமாம். இவையாவும் நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவை. எனவே நாம் அந்தத் தருணத்தில் உதவி செய்தோம். அது மட்டுமின்றி எதிரிப் படையின் உள்ளத்தில் திகிலை ஏற்படுத்தும் படியும் எங்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.(8:12)
நேயர் : அந்த ஒரு முறைதான் நீங்கள் உதவி செய்தீர்களா? அப்பொ அல்லாஹ் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அர்த்தமாகி விடுகிறது அல்லவா?
மலக்கு : எதிரிப் படைகள் ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அதாவது மக்காவிலிருந்து மதினாவுக்கு வந்து போரிடுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே அங்கு பெய்த மழை அவர்களுடைய உடல் நலத்தை பெரிதும் பாதித்து விட்டது. போரில் வெற்றிப் பெற்று வீடு திரும்பவில்லை என்றால் தம் மனைவி மக்களின் நிலை என்ன ஆகும் என்ற உள்ளுர பயமும் ஏற்பட்டது. இவை யாவும் இயல்பாக நடைபெறுவது தான்.
நேயர் : இது மிகவும் சரியானதே. மூஃமின்கள் போரில் மாண்டு போனால் அவர்களுக்கு சுவனம் கிடைக்கும் என்று வாக்களிக்கப்படுகிறது.(3:170) அவர்களுடைய குடும்பத்தையும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பாதுகாத்துக் கொள்ளும் என்றும் வாக்கு அளிக்கப்படுகிறது. (2:154) எனவே அவர்களுக்கு எவ்வித பயமும் இருக்காது.
மலக்கு : அது மட்டுமின்றி யார், யாரை எதிர்த்து, எதற்காகப் போரிடுவது என்ற விஷயமும் முக்கியமானதாகும். உலகில் தர்மமான முறையில் அல்லாஹ் காட்டிய வழியில் மக்களாட்சியை நிலை நாட்டவேண்டும் என்பதற்காக களத்தில் இறங்கும் فَإِنَّ حِزْبَٱللَّهِ அல்லாஹ்வின் படைவீரர்கள் ஒரு புறம். (5:55-56) மறு புறம் போலியான அராஜக ஆட்சிமுறையை ஆதரித்து حِزْبُ ٱلشَّيْطَٰنِ ۚ போரிடும் படை வீரர்கள். (58:19)
நேயர் : இன்றைய காலக் கட்டத்தில் நீஙகள் போரில் உதவி செய்ய மாட்டீர்களா? நபிமார்கள் காலத்தில் உதவி செய்ததோடு சரியா? நாங்கள் என்ன பாவம் செய்தோம்?
மலக்கு : ஏற்கனவே பல முறை சொன்னபடி நாங்கள் மனித கட்டளைக்கு இணங்கி செயல்படுபவர்களே. நீங்கள் அல்லாஹ் காட்டிய வழியில் தர்மமான ஆட்சியமைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அநியாத்தை தட்டிக் கேட்டு உலக சமாதானத்திற்காகத் தான் போரிடுகிறீர்களா? மனித நேயம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போரிடுகிறீர்களா?
நேயர் : அப்படி எல்லாம் இல்லையே. அதைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியவே தெரியாது. அண்டை நாட்டை ஒடுக்கி வைக்கத்தான் போரிடுகிறோம். அங்கு ஏதாவது செல்வ செழிப்பு இருந்தால், தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகத் தான் போரிடுகிறோம். எங்களைப் பொருத்த வரையில் நியாயம் அநியாயம் என்பதெல்லாம் இல்லை.
மலக்கு : எனவே எங்களுக்கு வகுக்கப்பட்ட கட்டளைப் படி மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகளே ஏற்படுத்தி வருகிறோம். அதுவும் நம் கடமை என்பதால் செய்கிறோம். அதன் பலன்களோ அல்லது விபரீத விளைவுகளோ, அவை யாவும் உங்களைச் சார்ந்தது. நீங்கள்தான் அல்லாஹ்வுக்கு பதிலளிக்கப் போகிறீர்கள்.
நேயர்: அல்லாஹு அக்பர். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, மனிதனில் யாருமே தீய செயல்களின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாதே (69:25-26)
மலக்கு : ஆமாங்க. அல்லாஹ் காட்டிய வழியில் ஆக்கப்பூர்வமாக நற்செயல்களை செய்வோர்க்கு சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு இவ்வுலகில் கிடைக்கும் படி செய்வோம். (16:30) அது மட்டுமின்றி அவர்களுடைய வருங்கால வாழ்வும் சிறப்பானதாக இருக்கும்படி செய்வோம்.
நேயர் :இது அல்லாஹ்வுடைய கூற்று ஆயிற்றே.
மலக்கு : அது உண்மைதான். ஆனால் அதை நிறைவேற்றுவது நாங்கள் தானே. அது மட்டுமின்றி ஒரு சமுதாயம் ஆற்றல் மிக்க நற்செயல்களை செய்து வந்தால், அந்த சமுதாயத்தையே சுவனத்திற்கு ஒப்பானதாக மாற்றி விடுவோம் (16:31)
நேயர் : எனவேதான் இறையச்சத்துடன் செயல்படுவோருக்கு அச்சுவனம் மிகப் பெரிய சன்மானமாக இருக்கும் என்று அல்லாஹ் அறிவிக்கின்றானா? (16:31)
மலக்கு : அத்தகைய நற்செயல்களை செய்தோர் மரணித்தாலும் அவர்களை மிக அழகான முறையில் சுவனத்தில் கொண்டு போய் செர்ப்போம். அவர்களுக்கு வாக்களிப்பட்ட சுவனம் இதுதான் என்று ஆரவாரத்துடன் மகிழ வைப்போம்.(16:32)
நேயர் :இருந்தாலும் உங்களைப் பற்றி மேலும் ஒரு கேள்வி. யார் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி அதன் மீது உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களிடம் நீங்கள் சென்று நன்மாறாயம் கூறுவதாக சொல்லப்பட்டுள்ளதே (41:30)
மலக்கு : வெறும் வார்த்தை ஜாலங்களால் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாங்கள் எப்படி உதவ முடியும்? உங்களுக்கும் பலன் எதுவும் கிடைக்காது. அவன் காட்டிய வழியில் உறுதியோடு நிலைத்திருந்து செயல்படும் போதுதான் எங்களால் உதவி செய்ய முடியும். (Only action will count)
நேயர் : ஓஹோ! அப்போதுதான் அச்சம் தீர்ந்த சமுதாயமாக உருவெடுக்க நீங்கள் உதவி செய்வீர்களோ? அத்தகைய சமுதாயங்களில் அனைவரும் எவ்வித கவலையுமின்றி வாழ்வார்கள் அல்லவா? இதைத்தான் சுவர்க்கம் என்றும் சொல்லப்படுகிறதா? (41:30)
மலக்கு : ஆமாங்க. இத்தகைய சுவனம் இவ்வுலகிலும், தனி நபர்களுக்கு மரணத்திற்குப் பின்பும் கிடைக்கும் என்று வாக்கு அளிக்கப்படுகிறது. (41:31) அங்கு நீங்கள் கேட்பதெல்லாமே கிடைக்கும்.
17.நரகத்திற்கு இழுத்துச் செல்லும் மலக்கு
நேயர் :இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்காமல் தீய செயல்களை செய்து வந்தவர்களின் நிலைமை மிக மிக மோசமானதாக இருக்குமே!
மலக்கு : ஆக மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்தி வரத்தான் எங்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளதே அன்றி யாருக்கு எள்ளளவும் அநியாயம் இருக்காது என்றும் அறிவிக்கப்படுகிறதே (16:33) யாருக்கும் அநியாயம் செய்யக் கூடாது என்பதும் எங்கு இடப்பட்ட கட்டளை ஆகும்.
நேயர்: எனவே மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கின்றானே அன்றி அல்லாஹ் அவனுக்கு எந்த வகையிலும் அநியாயம் செய்வதில்லை. (16:33)
மலக்கு : ஆமாங்க. தீய செயல்களை செய்தோருக்கு தீமைகளே வந்தடையும். மார்க்கத்தை பரிகாசம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு பரிகாசமே அவர்களை வந்தடையும் என்று அறிவிக்கப்படுகிறது (16:34)
18.நரக காவலாளிகள் 19 மலக்குகள்
நேயர் : அது சரி. நரக காவலாளிகள் பத்தொன்பது மலக்குகள் என்று சொல்லப்பட்டுள்ளதே. (74:31) கரெக்டா பத்தொன்பது பேர்தானா?
மலக்கு : உலகில் நிகழ்ந்து வரும் பேராபத்துகள் மற்றும் வேதனைகள் யாவும் இவற்றில் அடங்கும். மனிதனின் தீய செயல்களின் விளைவுகளாகவும் தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திலும் தீங்குகளை ஏற்படுத்தி வருகிறோம். 19 என்ற எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, கூட்டி கழித்து கணக்கு பார்ப்பதை விட்டுவிட்டு அந்த ஆபத்துகள் என்னவென்பதையும் அவற்றிலிருந்து தப்பித்து பாதுகாப்பாக இருக்க என்ன வழி என்பதையும் கண்டறிந்து, முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தால் உங்களுடைய வாழ்வு சிறப்பாக இருக்கும்.
நேயர் : குடும்பத்தை சீராக்க வில்லை என்றால் சமூக சீர்கேடுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சீராக்கிக் கொள்ள அறிவுருத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால் என்னவாகும்?
மலக்கு : குடும்பத்தில் ஏற்படுகின்ற சீர்கேடுகள், குடும்பங்களுக்கிடையே மோதல்களையும் கலவரங்களையும் உண்டாக்கி, சமுதாயத்தில் பரவி, காலப் போக்கில் தீராப் பகையாக உருவெடுக்கும். அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பலம் வாய்ந்தவர்களாக நாங்கள் இருக்கிறோம். (66:6)
19.நரகத்தில் தண்டிக்கும் மலக்குகள்
நேயர் : குற்றவாளிகளின் உயிர்களை கைப்பற்றும் போது அவர்களுடைய முகங்களிலும் முதுகளிலும் அடித்து எரிச்சலை ஏற்படுத்தி, நரக வேதனையை அனுபவியுங்கள் என்று கூறுவீங்களாமே! இது உண்மையா? (8:50)
மலக்கு : காலமெல்லாம் செய்து வந்த தீய செயல்களின் விளைவாக அவர்களை நாங்கள் அத்தகைய நிலைக்கு தள்ள வேண்டி வருகிறது. (8:51) அவர்களுக்கு உடல் முழுவதும் எரிச்சலை ஏற்படுத்துவோம். அதை மரணத் தருவாயில் இருப்பவர்களால் தான் உணர முடியும். மற்றவர்களுக்கு அதன் ஆழம் தெரியாது. இதை முன் எச்சரிக்கையாக அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கின்றான்.
நேயர் : மரணத் தருவாயில் அல்லாஹ்வை விட்டு வணங்கி கற்பனை தெய்வங்கள் எல்லாம் எங்கே என்று கேட்டு நரகத்தில் தள்ளுவீர்களாமே. (7:37)
மலக்கு :அல்லாஹ்வின் மீது கற்பனை செய்து மக்களிடம் சொல்வது மன்னிக்க முடியாத குற்றம். அதன் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். இறுதியில் அத்தகையவர் மரணிக்கும் போது, தான் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்துக் கொள்வார் அல்லவா? அதன் பின் அவருக்குக் கிடைப்பதோ நரக வேதனையே (7:37)
நேயர் : அவ்வாறு ஏன் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். (47:27)
மலக்கு : அல்லாஹ் சொல்லாததை எல்லாம் மக்களிடம் பரப்பி வந்தால் மக்கள் தவறான வழியையே சரியான வழி என்று எண்ணி செயல்படுவார்கள் அல்லவா? இதன் விளைவாக அல்லாஹ் எதை எல்லாம் தடுத்துள்ளானோ அவற்றை எல்லாம் செய்வார்கள் அல்லவா? எனவே அவர்கள் செய்யும் சில நற்செயல்களும் வீணாகி பலனற்று போய் விடும்.
நேயர் :இதை ஒரு உதாரணத்தை கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும். அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகும் செயல்கள் எவை என்று சொல்ல முடியுமா?
மலக்கு : அவரவர் செய்து வந்த நற்செயல் மற்றும் தீய செயல்களின் எடை போடப்படும். யாருடைய நன்மையின் எடைத் தட்டு கனத்ததோ அவருக்கு சுவனம். யாருடைய தீய செயல்களின் எடை மிகைக்கிறதோ அவருக்கு நரகம் என்றும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். (7:8-9) மாறாக நபிகளார் பரிந்துரை செய்து சுவர்க்கத்தில் சேர்த்து விடுவார் என்று மக்களிடம் அறிவிப்பது சரியா?
நேயர் : அது சரியில்லை. காரணம் பரிந்துரை செய்து சுவனத்தில் சேர்க்க ஒருவர் இருக்கிறார் என்ற தைரியத்தில் தகாத செயல்களை செய்யும் துணிச்சல் வந்து விடும்.
மலக்கு : ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்தி, நற்செயல்களை செய்து சுவனத்திற்குச் செல்ல தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சில நாட்கள் மட்டும் நரகத்தில் இருப்போம். அதன் பின் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தில் சேர்ப்பான் என்று சொல்வது சரியா?
நேயர் : அது சரியில்லை. இத்தகைய வாக்குறுதியை எப்போதாவது யாருக்காவது அளித்து இருக்கிறேனா என்று அல்லாஹ்வே கேட்கின்றான். (2:80) இப்போது எனக்கு புரிந்து விட்டது. அது சரி. நீங்கள், ஏன் ஹிஜ்ரத் செய்து செல்லவில்லை என்று மரணத் தருவாயில் கேட்பீங்களாமே. (4:97) அப்போ கேட்டு என்னங்க பிரயோஜனம்?
மலக்கு : அப்படி எல்லாம் கேட்கமாட்டோம். மனிதன் சாகும் போது, மரணத் தருவாயில் தன் இயலாமையை எண்ணி மனம் வெதும்புவதைத் தான் அவ்வாறு சொல்லப்படுகிறது. அதாவது உள்ளூரில் இருந்து கொண்டு கஷ்டப்படுவதை விட வெளியூர் சென்றாவது பிழைப்பைத் தேடிக் கொள்ளக் கூடாதா என்று சொல்வார்களே அதுபோலத்தான் இதுவும்.காலத்தை கடத்திவிட்டோமே என்ற நிலையை இவ்வாறு சொல்லப்படுகிறது.
நேயர் : மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக முஹம்மது நபி(ஸல்)அவர்கள் மக்காவை விட்டு தனக்கு சாதகமான இடமாக இருந்த மதினாவுக்குச் சென்றாரே (17:1)அது போலவா?
மலக்கு : ஆமாங்க. மக்காவாசிகள் அவரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார்கள். எனவே அவர் ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு சொன்றார். அங்கு மார்க்க அடிப்படையில் ஃகிலாஃபத் என்ற மக்களாட்சியை நிறுவினாருங்க.
நேயர் : அது போல இன்றைய காலத்தில் வாழும் மூஃமின்களும் சமுதாய சீர்த்திருத்தப் பணியில் ஈடுபடவேண்டும் என்கிறீர்கள்.
மலக்கு : அதை நாங்கள் சொல்லவில்லை. எங்களைப் படைத்த அல்லாஹ்வின் அறிவுரைங்க. (3:144)
20.மலக்குகளின் சாபம்?
நேயர் : அது சரி. நீங்கள் மனிதர்களுக்கு எதிராக சாபம் இடுவீங்களாமே! (2:161, 3:87)
மலக்கு : அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து தம் விருப்பம் போல் செயல்பட்டு வந்தால், அவர்களுக்கு இயற்கை எழில்கள் மூலம் கிடைக்கக் கூடிய பொக்கிஷங்கள் எதுவும் கிடைக்காமலே போய்விடும். அல்லது அவையே அவர்களுக்கு எதிர் வினையாக நிற்கும். இது அவர்களுக்குக் கிடைக்கும் சாபமாக இருக்கும்.
21.அல்லாஹ்வின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமக்கிறார்களா?
நேயர் : அல்லாஹ்வின் அர்ஷை உங்களில் எட்டு பேர் மட்டும் சுமந்து கொண்டு இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறதே. (69:17) இது எப்படி சாத்தியமாகும்? இது ஒரே அடியா கன்ஃபியூஸ் பண்றீங்க. அது எப்படிங்க? வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் படைத்தது அல்லாஹ்தானே? (32:4) அகிலங்கள் அனைத்தையும் படைக்கும் அளவற்ற வல்லமை உடையவனின் அர்ஷை சுமப்பதற்கு உங்களுடைய உதவி தேவையா? இது எப்படி.?
மலக்கு : நீங்கள் கொஞ்சம் நிதானத்துடன் கேட்டால் எங்களால் பதிலளிக்க முடியும். அவசரப்பட்டால் எங்களால் பதில் எதுவும் தரவே முடியாது. சரியா? அதாவது சூரய குடும்பத்தில் உள்ளவை ஒன்பது கிரகங்கள். அதில் பூமியும் ஒன்று. பூமியை மற்ற எட்டு கோள்களின் புவி ஈர்ப்பின் துணைக் கொண்டு, சூரினைச் சுற்றி வருகிறது. பூமியில் உருவாகும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை மற்ற கோள்களின் புவிஈர்ப்பு சுமந்து கொள்வதாக பொருள்படும்.
22.அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீரின் மீது உள்ளதா?
நேயர்: இன்னமும் புரியவில்லை. அப்படி ஒரு ஆட்சி ஏற்படும் போதுதான் நீங்கள் சுமந்துக் கொண்டு இருப்பீர்களா?
மலக்கு : கவனமாகக் கேளுங்கள். அல்லாஹ்வன் அர்ஷ் தண்ணீரின் மேல் உள்ளதாக 11:7 வாசகம் கூறுகிறது. அல்லாஹ் நாற்காலியில் அமர்ந்துகொண்டு இருப்பான். அந்த நார்காலி தண்ணீரின் மீது இருக்கும் என்று பொருள் கொள்ள முடியுமா? அர்ஷ் என்பது கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையைக் குறிக்கும் சொல்லாகும். உலகமெங்கும் மழை பொழிய வைத்து, பூமியை செழிப்பாக்கும் வல்லமை தன்னகத்தே வைத்துள்ளான் என்று தான் பொருள் படும். மேலும் நீர் ஆதாரத்தைக் கொண்டு தான் உலகில் உயிரினங்கள் உருவாகின்றன. வாழ்கின்றன. இதை வைத்துப் பார்க்கும் போது, உயிரினங்களை உருவாக்குவதும் அவற்றை வாழ வைப்பதும் அல்லாஹ் தான் என்று பொருள்படுகிறது.
நேயர் : இதை வைத்துப் பார்க்கும் போது, இவ்வுலகில் மனித கரங்களால் உருவாகும் அல்லாஹ்வின் ஆட்சி அமைப்பு எட்டு துறைகளாக பிரிந்து Eight Cabinet Ministers செயல்படும் என்கிறீர்களா? சற்று கடினமான விஷயம் தான். எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
மலக்கு : இவை யாவும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, விவசாயம் மற்றும் நெசவு, சட்ட ஒழுங்கு, கல்வித் துறை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபம், பொருளாதராம், மனித நேயம் ஆகிய எட்டு துறைகள் மந்திரி சபையில் இடம் பெற்றிருக்கும். இவையாவும் அந்த ஆட்சியமைப்பு சிறப்பாகச் செயல்பட ஒருங்கிணைந்து செயல்படும்.
23.“ரூஹ்” வைப் பற்றிய உண்மைகள்
நேயர் : ரூஹ்வைப் பற்றி மக்கள் கேட்கிறார்கள். அது ஒரு வகை சக்தி தானே. அதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.
மலக்கு : மனிதனுள் செயல்பட்டு வரும் கேட்கும் சக்தி, பார்க்கும் சக்தி மற்றும் சிந்தித்து செயல்படும் அறிவுத்திறன் ஆகியன ரூஹ் என்பதாகும். (32:9)
நேயர் : இவை யாவும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறதே!
மலக்கு : மற்ற உயிரினங்களுக்கும் உள்ளன. ஆனால் அவை யாவும் குறகிய வட்டறைக்குள் செயல்படக் கூடியவை ஆகும். அதாவது அவை உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவே செயல்படும். அவ்வளவுதான். ஆனால் மனிதனின் நிலை அவ்வாறு இல்லை. இவன் நிகழ்கால வாழ்க்கையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வருங்கால நிலையான வாழ்வைப் பற்றியும் கவனத்தில் கொண்டு வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.(2:201)
நேயர் : ஓ ஹோ! இவனுக்கும் மட்டும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் உலகத்தை வழி நடத்திச் செல்லக் கூடிய ஆற்றல்கள் உள்ளன. மற்ற உயிரினங்களிடம் இவை இருப்பதில்லை. ஆனால் “ரூஹ்” இறைவனுடைய கட்டளையிலிருந்து உருவானது என்று 17:85 வாசகம் அறிவிக்கின்றதே!
மலக்கு : அங்கு மக்கள் கேட்கும் கேள்வி மனிதனுள் செயல்பட்டு வரும் ஆற்றல்களைப் பற்றி அல்ல. மாறாக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் குர்ஆன் என்னும் “ரூஹ்” வைப் பற்றி கேட்கிறார்கள். அது எவ்வாறு இறக்கி அருளப்படுகிறது என்று அறிந்து கொள்ள விரும்புகிறாhகள். அது இறைவனின் செயல்திட்டத்தின் கீழ் இறக்கி அருளப்படுபவை என பதிலளிக்கப்படுகிறது (17:85)
நேயர் : எல்லாமே இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டதுதானே. இதில் என்ன வேற்றுமை இருக்கிறது.
மலக்கு : மனிதனுக்கு என்று ஒரே சீரான பேச்சாற்றல், கேட்கும் ஆற்றல், சிந்திக்கும் ஆற்றில் வைக்கப் பட்டுள்ளன. இவை யாவும் “ரூஹ்”தான். (17:70) ஆனால் இவை இறைவழிகாட்டுதல் என்று “ரூஹ்”வைக் கொண்டு பயிற்சி பெற்றால், அவனுடைய ஆற்றல்கள் மிக வேகமாக வளர்ந்து, சிறப்பாகச் செயல்படக் கூடிய அறிவுத்திறன் கிடைத்து விடுகிறது.
உதாரணத்திற்கு முஹம்மது நபி காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த குரைஷியர்கள், இறைவழிகாட்டுதல் என்று “ரூஹ்”வைக் கொண்டு பயிற்சி பெற்று உலகையே ஆளக்கூடிய உயர் அந்தஸ்தைப் பெற்றுவிட்டனர்.
நேயர் : அவர்களிடம் நீதி, நேர்மை, வீரம், உழைப்பு என்று எல்லா ஆற்றல்களும் வளர்ந்ததால் தான் அவர்கள் குறுகிய காலத்திலேயே அத்தகைய உயர்வை பெற்றார்கள். இதை Emergent Evolution என்று சொல்வார்கள்.
மலக்கு : ஆக உலகமே இருளில் மூழ்கியிருந்த காலக் கட்டத்தில் (97:1) வழி தெரியாமல் குழப்பதில் உலகமே தவித்துக் கொண்டிருந்த போது, (30:41) மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர (14:1) புதிய அளவுகோல்களுடன் இந்தக் குர்ஆன் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் இதில் எஙகளைப் பற்றியும், உஙகளுள் மறைந்து கிடக்கும் மனித ஆற்றல்களை வளர்க்க இறைவழிகாட்டுதல் என்ற "ரூஹ்”வைப் பற்றிய உண்மைகளும்" இறக்கி அருளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ (97:4) இவையாவும் இறைவனின் செயல் திட்டத்தில் நின்றும் உள்ளவை என்றும் فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ. சொல்லப்படுகிறது (97:4)
24.மலக்குகளும் “ரூஹ்” வும் ஓரணியில்?
நேயர்: அதாவது பிரபஞ்ச இயற்கைச் சக்திகளாக செயல்படும் உங்களைப் பற்றிய உண்மைகளையும், இறைவழிகாட்டுதல் என்ற “ரூஹ்”வைப் பற்றியும் இறக்கி அருளப்படுகிறது. இதன் நோக்கம் என்ன?
மலக்கு: பிரபஞ்ச இயற்கை சக்திகளாக இருக்கும் நாங்களும், இறைவழிகாட்டுதல் என்கின்ற “ரூஹ்”வும் ஓரணியில் செயல்பட வேண்டும்
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ என்பதற்காகத் தான்.( 78:38)
நேயர் : அதாவது பிரபஞ்ச இயற்கைச் சக்திகளின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்ற புதிய புதிய படைப்புகளை அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படியே ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
மலக்கு : ஆமாம். சரியாக சொன்னீங்க. அட்டாமிக் ஆராய்சியின் மூலம் மின்சாரத்தையும் கண்டுபிடிக்கலாம். அணு ஆயதங்களைத் தயாரித்து அழிவையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். குர்ஆனிய ஆட்சி காலத்தில் இவற்றை அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமிருக்காது. (78:38) இவ்வாறு நடப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது. (78:39) இத்தகைய சமுதாயத்தை உருவாக்க நாடினால் உங்கள் இறைவனின் வழிகாட்டுதலை முன்வைத்து அதன் வழியை தேடிக் கொள்ளட்டும்.
நேயர் : அவ்வாறில்லாமல் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் கிடைத்தவற்றை தம் மனோ இச்சைப் படி பயன்படுத்தினால் அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவின் நாட்களை எண்ணிக் கொள்ளட்டும. (Let them count their days of destruction)
மலக்கு : ஆக எது எப்படி இருந்தாலும் மனித செயலுக்கு ஏற்ற வகையில் விளைவுகளை ஏற்படுத்துவதே நம் மீது சாட்டப்பட்ட கடமை ஆகும். அதை எங்களால் மீறி நடக்க முடியாது.
25.தரூதெ ஷெரீஃபும் மலக்குகளும்
நேயர் : சரி நீங்கள் நபிக்கு தரூதெ ஷெரீஃப் அனுப்புவீர்களா?
மலக்கு : தரூதெ ஷெரீஃப் என்றால் என்ன?
நேயர் : அதாவது முஹம்மது நபி(ஸல்) மீது அல்லாஹ் அருள் புரிவதாகவும், நீங்கள் அனைவரும் அவருக்காக அருளைத் தேடுவதாகவும் திருக்குர்ஆன் வாசகம் அறிவிக்கின்றதே (33:56) அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மலக்கு : நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படுபவாக்ள் தாம். அல்லாஹ்வின் கட்டளைப் படி மனிதர்களுக்கும் கட்டுப்படுபவர்கள். அவ்வளவுதான். நாங்கள் யாருக்காகவும் தனிப்பட்ட முறையில் அருளைத் தேடி தர முடியாதுங்க.
நேயர் : அப்போ இதன் பின்னாடி ஏதோ ஓர் உண்மை மறைந்திருப்பது போல் தெரிகிறதே. காரணம் அவர் மீது “ஸலவாத்” சொல்லி “ஸலாமும்” சொல்லும்படி ஈமான் கொண்டர்வளைக் நோக்கி சொல்லப்படுகிறது. (33:56)
மலக்கு : அது இருக்கட்டும். ஸலவாத் சொல்லி ஸலாம் சொல்வதெல்லாம் உங்கள் விஷயம். நாங்கள் அவருக்காக அருளைத் தேடுவது பற்றி உண்மை எங்களுக்குத் தெரியாது.
நேயர் : ஸலவாத் صَلَوَآة என்றதும் இறைவனின் “நல்லாசி” பெறுவது என்ற பொருளில் திருக்குர்ஆன் வாசகத்தில் வருகிறது (2:157) நல்லாசி என்றால் பேராதரவு என்றுதானே பொருள்வரும்?
மலக்கு : ஆமாங்க. இப்பத்தான் நீங்க சரியான விஷயத்திற்கு வர்ரீங்க. முஹம்மது நபி அவர்கள் கொண்டுவந்த ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் அல்லாஹ்வும் பிரபஞ்ச சக்திகளாக இருக்கும் நாங்களும் பக்கபலமாக இருந்தோம். அதுதான் உண்மை.
நேயர் : ஓ ஹோ! அதனால் தான் மூஃமின்களைப் நோக்கி, அவரை ஆதரித்து முழு மனதுடன் அவருக்குத் துணை நின்று உதவி செய்ய சொல்லப்படுகிறதா? ஆனால் இதை மக்களிடம், “தரூத்” என்று சொல்லி, ஏதோ துவா செய்து கொண்டு இருக்கிறார்களா?
மலக்கு: ஆமாங்க. எனவேதான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நோவினை செய்பவர்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் தண்டிப்பதாக சொல்லப்படுகிறது. அல்லாஹ்வுக்கு யாராவது நோவினை செய்ய முடியுமா? அவன்தான் எல்லையற்ற வல்லமை உடையவன் ஆயிற்றே. எனவே முஹம்மது நபி நிலைநிறுத்திய அல்லாஹ்வின் ஆட்சி அமைப்புக்கு பங்கம் விளைவிக்காதீர்கள் என்றுதான் சொல்லப்பட்டது.(33:57)
நேயர் : அல்லாஹு அக்பர். அவர் எவ்வளவு பெரிய செயல் திட்டத்தை அவர் கொண்டு வந்துள்ளார். அதற்கு அல்லாஹ்வும் நீங்களும் துணை நிறப்பது அவசியம் தானே. இப்போது தரூத் ஓதிக் கொண்டிருந்தால் அவருக்குப் பெருமை சேர்க்க முடியுமா?
மலக்கு : அது உண்மை தானுங்க. மலக்குகளாகிய நாங்கள் அல்லாஹ்வின் செயல்திட்டத்தை போற்றுதலுக்குரியதாக ஆக்குகின்றோம். நபிமார்களும் அரும்பாடுபட்டு சமுதாயத்தை சீர்படுத்தி உலக அரங்கில் அல்லாஹ்வின் புகழை மேலோங்கச் செய்தார்கள். (35:34-35) இதற்கு அல்லாஹ்வும் நாங்களுமே சாட்சியாக இருக்கிறோம். (3:18)
நேயர் : சரி. அல்லாஹ்வின் பேராதரவும் உங்களுடைய உதவியும் கிடைத்து வந்தன. இனி நபிமார்கள் யாரும் வர மாட்டார்கள். (33:40) இக்கால சமுதாயங்களுக்கு எவ்வாறு உதவி செய்வீர்கள்?
மலக்கு : நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். நபிமார்களுக்கு மட்டும்தான் எங்கள் உதவி என்பதல்ல. யாரெல்லாம் அவர் காட்டிய வழியில் முயல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் எங்கள் உதிவி கிடைக்கும். இது உறுதி. அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு வாழ்வின் இருள் நீங்கி, எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகிவிடும். (33:43)
26.ஹாரூத் மாரூத் எனும் மலக்கு
நேயர் : அது சரி. பாபிலோன் நகரத்தில் ஹாரூத் மாரூத் என்று பெயர் கோண்ட இரு மலக்குமார்கள் வந்தார்களாமே? (2:102)
மலக்கு : அப்படி எல்லாம் எங்களுக்கு என்று தனிப்பட்ட பெயரெல்லாம் கிடையாதுங்க. எங்களுக்கு அங்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லைங்க. யாரோ கதை கட்டி விட்டிருக்காங்க என்று நினைக்கிறோம். நீங்கள் மிகவும் உஷாரா இருந்துக்குங்க.
நேயர் : அப்போ நீங்கள் மக்களுக்கு சூனிய வித்தைகளை கற்றுக் கொடுக்கவில்லையா? நீங்கள் தான் உலகத்தில் முதன்முதலாக சூனிய வித்தைகளை கற்றுக் கொடுத்ததாக சொல்கிறார்களே.
மலக்கு : அது எப்படி எங்களால் கற்றுக் கொடுக்க முடியும்? மனித செயல்களுக்கு ஏற்றவாறு விளைவுகளை ஏற்படுத்துவதுதான் எங்கள் பணி. அதாவது மனிதனுடைய கட்டளை என்னவோ அதற்கு அடிபணிவதோடு சரி. இதைத் தவிர எங்களால் வேறு எதையும் செய்ய இயலாதுங்க. சுலைமான் நபியின் சிறப்பான ஆட்சியை விரும்பாத சில விஷமிகள் இப்படிப்பட்ட புரளிகளை பரப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். (2:102)
நேயர் : சரி விடுங்க. நான் ஷைத்தானிடம் கேட்டு தெரிந்துக் கொள்கின்றேன்.
மலக்கு : அதை செய்யுங்க. எங்க பெயரை கெடுக்காதீங்க.
27.முடிவுரை
எனதருமை சிந்தனையாளர்களே! அகிலங்களும் உலகமும் சிறப்பாக செயல்படுவதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட பல்வேறு சக்திகள் தாம் “வானவர்கள்” என்கின்ற “மலாயிகா” என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் உரையாடல் வடிவில் கொடுத்ததன் நோக்கமே நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
மற்றபடி யாரோ ஒரு மலக்கு நம்மிடம் நேரடியாக வந்து பேசியதா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் சொல்வோம். அப்படி யாருமே போசவும் முடியாது. மேலும் திருக்குர்ஆனின் வாசகங்களை ஆதாரமாக வைத்தே விளக்கம் அளித்துள்ளோம். உலக மக்களின் அன்றாட வாழ்வில் பிரபஞ்ச இயற்கை சக்திகள் எவ்வாறு ஐக்கியமாகி உள்ளன என்பதை அறிந்து இருப்பீர்கள்.
மேற்கொண்டு ஏதாவது திருக்குர்ஆன் வாசகம் விடுபட்டு, அதன் விளக்கம் என்னவென்று கேட்டு எழுதினால் நாம் மிகமிக சந்தோஷத்துடன் வரவேற்போம். மற்றபடி நாம் எழுதியவை எல்லாம் சரியானவை என்று நீங்கள் எண்ணினால் மலக்குகளைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறுதான் பேசுகிறது என்று சொல்லுங்கள். “இன்னார்” இவ்வாறு எழுதுகிறார் என்று சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்வீர்களானால் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தி விடுவீர்கள்.