بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை
இந்த தலைப்பை படித்ததும் இப்படி ஓர் உரையாடல் எங்கே எப்போது நடந்தது என்று கேட்காதீர்கள். இது ஒரு கற்பனையே. இருந்தாலும் இதன் கேள்வி பதில்கள் திருக்குர்ஆனின் அடிப்படையைக் கொண்டதாகும். அன்பர்கள் திருக்குர்ஆனை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த உரையாடல் சாதாரணமாக பேசுவதைப் போலவே எழுதியுள்ளோம். காரணம், படிப்பதற்கு எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு தந்துள்ளோம்.
இந்தத் தலைப்பில் எழுதுவதன் நோக்கமே ஷைத்தானைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. காரணம் காலம் காலமாக ஷைத்தான் என்பது ஒரு தனிப் பிறவி என்றும் அது நமக்கு தீங்கு இழைப்பவன் என்றும் சொல்லி வந்துள்ளார்கள். அதை வைத்து பலர் பல்வேறு கதைகளையும் மக்களிடம் சொல்லி வருகிறார்கள். மற்றும் சிலர் ஷைத்தானை சாத்தான் என்றும் சனியன் என்றும் சொல்வார்கள். சில மதவாதிகள் சனி பகவான் என்பார்கள். மற்றும் சிலர் சாத்தானை வசப்படுத்தி பல மாய மந்திர வேலைகளை செய்வதாக சொல்வார்கள். இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகத்தை எழுதியுள்ளோம். அன்பர்கள் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
வழக்கம் போல் திருக்குர்ஆனின் அத்தியாய எண்ணையும் வாசக எண்ணையும் தந்துள்ளோம். 2:36 என்றால் அத்தியாயம் 2 வாசகம் 36 என்று பொருள்படும். அன்பர்கள் திருக்குர்ஆனை வைத்து சரி பார்த்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.
மேலும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எழுதப்பட்டுள்ள உண்மைகள் சரி என்று எண்ணினால் திருக்குர்ஆன் ஷைத்தானைப் பற்றி இப்படித்தான் பேசுகிறது என்று சொல்ல வேண்டுமே அன்றி, இன்னார் இவ்வாறு எழுதியுள்ளார் என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.
2.அறிமுகம்
நேயர் : யார் நீ? எங்கே வந்தாய்?
ஷைத்தான் : என்னை தெரியாதா உனக்கு? என்னை தெரியாதவன் இந்த லோகத்தில் யாருமே இருக்க முடியாது.
நேயர் : அவ்வளவு முக்கியமான ஆளா நீ? யார் என்றுதான் சொல்லேன்? நீ என் கண்ணுக்கு தென்படலியே.
ஷைத்தான் : நான்தான் ஷைத்தான். என்னை எல்லோருக்கும் தெரியுமே. நீ என்ன புதுசா கேள்வி கேட்குறே?
3.ஆதமை வழிகெடுத்த ஷைத்தான்?
நேயர் : அவனா நீ? சுவனத்தில் இருந்த ஆதமை வழிகெடுத்து அதிலிருந்து வெளியேற்ற முயற்சித்தது நீ தானா? (2:35)
ஷைத்தான் : அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. நான் சற்றே ஊசலாட்டம் செய்தேன். அவ்வளவுதான் அவரே வந்து என் வலையில் சிக்கிக் கொண்டார். இதனால் அவர் சுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். (2:36)
நேயர் : சுவனத்தில் ஏதோ மரம் இருந்ததாமே! அதை நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் சொன்னதாக சொல்கிறார்களே. (2:35)
ஷைத்தான் : அப்படி ஆதம் நெருங்கக் கூடாத மரம் என்று எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியாது. சமுதாயத்தில் பிரிவினை மற்றும் சண்டை சச்சரவு என்கின்ற شَجَرَ “ஷஜரா”வைத் தான் நான் உருவாக்கினேன்.(4:65)
நேயர் : அந்த மரத்தில் வளர்ந்த பழத்தை ஆதமும் அவரது மனைவியும் புசித்து விட்டதாக சொல்றாங்களே.(20:121)
ஷைத்தான் : அதெல்லாம் எனக்குத் தெரியாது. உம்மை படைத்த அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்துக்கொள்.
4.நெருப்பால் படைக்கப்பட்ட ஷைத்தான்
நேயர் : சரி. உன்னை நெருப்பால் படைத்ததாக சொன்னாயா? (15:33)
ஷைத்தான் : ஆமாம். தீய செயல் என்று சொல்கிறீர்கள். அதிலே “தீ” என்ற எழுத்தும் வார்த்தையும் இருக்கு. “தீ” என்றதும் பத்தி எரியுமா? அது போலத் தான் நான் சொன்னதும்.
நேயர் : ஏன் அப்படி சொன்னாய்? அது உண்மையா?
ஷைத்தான் : பின்னே என்ன? மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு سجدا ஸஜ்தா செய்ய சொன்னா கோபம் வராதா? மண்ணைவிட நெருப்புதானே பவர்ஃபுல்? நான்தானே உயர்ந்தவன். அதனால்தான் நான் அப்படி சொன்னே.(15:3)
5.ஸஜ்தா செய்ய மறுத்த ஷைத்தான்
நேயர் :ஸஜ்தா سَجْد اَ செய்வதுன்னா என்ன?
ஷைத்தான் : இதுகூட தெரியாதா? ஆதாவது ஒருவருடைய கட்டளைக்கு இணங்கி செயல்படுவதுதான் ஸஜ்தா سَجْد اَ என்பதாகும். (16:49-50) அது எனக்கு நியாயம் என்று தோணலே.
நேயர் : ஏம்பா? மனிதனுக்குக் கட்டுப்படச் சொன்னது நம்மை படைத்த அல்லாஹ் தானே? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்பட வேண்டியதுநதானே? அது எப்படி அல்லாஹ்வையே எதிர்த்து பேசினாய்? (7:12)
ஷைத்தான் : அங்கு மட்டும் என்ன வாழுதாம்? மனுஷன் கூட அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிராகச் செயல்பட்டு வருவதில்லையா? (2:64) நான் செய்தால் தப்பு. நீங்க செய்தால் சரியா?
நேயர் : எல்லாம் உம் பேச்சை கேட்டு நடப்பதால் வருகின்ற வினைதான்.
ஷைத்தான் : அல்லாஹ்வை விட்டு மனிதனை பிரித்து, தனிமைப் படுத்தி விடுவது தானே எனது முக்கியமான பணி (2:27)
6.அல்லாஹ்வை எதிர்த்து அறைகூவல் விட்ட ஷைத்தான்
நேயர் : அப்படி என்ன அல்லாஹ்வின் மீது உனக்குக் கோபம்?
ஷைத்தான் : என்னை அல்லாஹ் வழிகெட்டவனாக ஆக்கியதால், அவனுடைய படைப்பாகிய மனிதனை வழிகெடுத்து சுவனத்திற்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்வதே என் பணி. (7:16)
நேயர் : அதெல்லாம் இப்லீஸ் உடைய கூற்று ஆயிற்றே!
ஷைத்தான் : ஆமாம். அவனும் நானும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுதான். அவன் வேறே நான் வேறே அல்ல. நாங்க இருவரும் இணைந்துதான் இந்தப் பணியை செய்து வருகிறோம்.
நேயர் : அப்படி என்ன மனுஷன் மேலே உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? ஏன் அவனை கெடுக்கனும் என்று விரும்புகிறீர்?
ஷைத்தான்: பின்னே என்னாப்பா? நாங்க தான் வஸத்தி எனும்போது, மனுஷனுக்கு உயர் அந்தஸ்து அளித்து உலகை கட்டிக் காக்கின்ற பொறுப்பை கொடுத்து, خلىفة ஆக்கியது சரியா? (2:30) அது மட்டுமின்றி மலக்குகளை ملاىكة எல்லாம் மனித கட்டளைக்கு சிரம்பணிய வைத்தது எனக்கு மிக மிக வயித்தெரிச்சல்.
நேயர் : அது அகிலத்தைப் படைத்த இறைவனின் செயல் திட்டமாயிற்றே. அதை எதிர்த்து செயல்படுவது சரியாகுமா? அப்படியும் மனிதனின் பொறுப்பில் தானே உலகில் ஆட்சி அதிகாரம் எல்லாமே இருக்கு?
ஷைத்தான் : அது சரி. அல்லாஹ் காட்டிய வழியில் யாருமே ஆட்சி செய்யவில்லையே! அங்கேயும் எல்லாமே என்னுடைய ஆதிக்கம் தானே செயல்பட்டு வருகிறது? விளக்கமா அப்புறம் சொல்றேன்.
7.மனிதனுக்கு பகைவனான ஷைத்தான்
நேயர் : கடைசி மனுஷனை என்னதான் ஆக்கனும் என்று விரும்புகிறாய்?
ஷைத்தான் : அவனை அறிவிலியாக ஆக்கனும் (33:72) அவசரக்காரனாக ஆக்கனும் (21:37) ஏழ்மையை காரணம் காட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தடுக்கனும் (2:268) செல்வத்தை குவிக்க வைக்கனும் (70:18) அநியாயக்காரனாக ஆக்கனும்.சுய நலக்காரனாக ஆக்கனும்.
நேயர் : உன்னை எப்படி அடையாளங் கொள்வது?
ஷைத்தான் : ஆணவம் மற்றும் அகம்பாவத்திற்கு நான் பேர் போனவன் (2:34)
நேயர் : நீ கொஞ்சம் வெளீலே வாயேன்? ஏன் கண்ணுக்கு மறைவா இருந்து இப்படி எல்லாம் செய்யறே?
ஷைத்தான் : மனிதனின் (அறிவுக்)கண்ணுக்கு மறைவாய் இருப்பதால் தான் என்னை “ஜின்”னாக இருப்பதாகவும் சொல்வாங்க. (18:50)
நேயர் : உன்னை ஏன் நெருப்பால் படைக்கப்பட்டதாகச் சொல்லனும்?
ஷைத்தான் : மனிதனுடைய ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும் வல்லமை எனக்கு உள்ளதால் நான் “தீ”யாக இருக்கிறேன். எனவே நீயும் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ.
நேயர் : அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்காதது உன் தப்பு தானே. இதைப் புரிந்து கொள்ளாத நீ, பழியை அல்லாஹ்வின் மீது சுமத்துவது நியாயமாகுமா? (7:16)
ஷைத்தான் : மனிதன் மட்டும் என்ன? காலம் எல்லாம் எனக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து விட்டு, அவனுக்கு பிரச்சனை என்று வரும் போது, அல்லாஹ் மீது பழி சுமத்துவதில்லையா? அல்லாஹ் ஏன் தான் நம்மை சோதிக்கிறானோ தெரியலெ என்று புலம்புவதில்லையா?
நேயர் : அப்போ உன்னை ஒழித்துக் கட்டவேண்டியது தான்!
ஷைத்தான் : அது எப்படிப்பா முடியும்?
நேயர் : நீ இவ்வளவு டேன்ஜரான ஆளா இருக்கிறாயே! ஒழித்துக் கட்டாமல் உன்னை என்ன அப்படியே விட்டு வைக்கச் சொல்றியா?
ஷைத்தான் : ஏம்பா? நெருப்பில்லாமல் மனித வாழ்க்கை சிறுப்பாக இருக்க முடியுமா? மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இல்லையா? அதை கட்டுப்படுத்தி வைப்பதில்லையா? அதுபோலத் தாம்பா என்னையும் கட்டுப்படுத்தி வைக்கனும்!
நேயர் : விளங்கவில்லையே! சரியாக சொல்லுப்பா!
ஷைத்தான் : அதாவது மனித வாழ்வில் நெருப்பு எப்படி முக்கியமான அங்கம் வகிக்கின்றதோ, அது போலத்தான் நானும். மனிதனுள் இருக்கின்ற பசி, தாகம், காமம், சந்தோஷம், கோபம், இன்பம் ஆகிய உணர்வுகள் அனைத்தும் அவனை இயக்க வைக்கும் விசைச் சக்திகளாக இல்லையா? அவை எல்லாம் இல்லை என்றால் அவன் வெறும் மண்ணு. இத்தகைய விசைச் சக்திகளாக - மனிதனை இயக்கும் சக்திகளாக மனிதனுள் செயல்பட்டு வருபவன்தானே நான்.
நேயர் : இவை எல்லாம் மனிதனுள் இயல்பாக இருக்கின்ற அல்லாஹ்வின் படைப்புகள் தானே. இதில் உனக்கு என்ன பங்கு இருக்கு?
ஷைத்தான் : இவை எல்லாம் இயல்பாக இருக்கும் உள்ளுர உந்துதல்கள் தான். மனித அறிவுக்கு அவை கட்டுப்பட்டு செயல்படும் வரை இயல்பு. ஆனால் அவற்றை கட்டுக்கடங்காமல் செய்ய வைப்பது என் பங்கு. அவற்றை நான் மிகைப்படுத்தி “தீ”ய பழக்கங்களாக ஆக்கி வருகிறேன்.
8.அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படும் ஷைத்தான்
நேயர்:திருக்குர்ஆன் மூலம் மனிதனை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்? (14:1)
ஷைத்தான் : ஆனால் நான் மனிதனை அறியாமை என்ற இருளில் மூழ்கி இருக்கும்படி முயற்சி செய்து வருகிறேன். (2:257)
நேயர் : மனிதன் தாராள மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்.(2:274)
ஷைத்தான் : ஆனால் நான் அவனுள் உலோபித்தனம் வளர பாடுபட்டு வருகிறேன். (4:37-38)
நேயர் : மனிதன் வட்டி தொழிலை செய்வதை அல்லாஹ் தடுக்கிறானே! (2:276)
ஷைத்தான் : ஆனால் நான் வட்டி தொழில் மூலம் கிடைக்கின்ற சொகுசான வாழ்க்கையை வைத்து, அவனை பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆக்குகிறேன். வட்டித் தொழிலை நியாயப்படுத்திப் பேச வைக்கிறேன். (2:275)
நேயர் : மனிதன் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்? இதற்காக ஆடையை ஏற்படுத்தித் தந்துள்ளானே! அத்துடன் “இறையச்சம்” என்ற ஆடையையும் அவனுள் வளரச் செய்தானே! (7:26)
ஷைத்தான் : ஆனால் மனுஷனுடைய தோற்றத்தை அலங்கோலமாக ஆக்க பல வகையில் முயற்சி செய்து வருகிறேன். கை கால் முகங்களை கம்பியால் குத்த வைத்து, தலையை மொட்டை அடிக்க வைத்து, அரை நிர்வாணமாக்கி அவனை அலங்கோலமாக காட்சியளிக்கும்படி செய்து வருகிறேன். இதற்காக வீணான எண்ணங்களையும் ஆசைகளையும் தூண்டி வருகிறேன். (4:119)
நேயர் : வேறு என்னவெல்லாம் செய்திருக்கிறாய்? அதையும் சொல்லிவிடு.
ஷைத்தான் : மனித இனத்தை ஜாதி வாரியாகப் பிரித்து காட்டுவதற்கு விதவிதமாக ஆடைகளை செய்து கொடுத்து விட்டேன்.
நேயர் : ஆடை குறைப்பு செய்து, ஆதமின் முன்னோர்கள் தம் சந்தோஷமான வாழ்க்கையை இழந்து விட்டார்களே! இதை எடுத்துரைத்து இக்கால மனிதனுக்கு அவ்லாஹ் முன் எச்சரிக்கை செய்ய வில்லையா? (7:20)
ஷைத்தான்: ஆனால் அந்த தவறை மக்கள் தொடர்ந்து செய்து வர பாடுபட்டு வருகிறேன். அதாவது கூடுமான வரையில் ஆடை குறைப்பு செய்ய வைத்து வெட்க ஸ்தலங்களைப் பார்த்து ரசிக்கும்படி செய்து வருகிறேன். அப்போதுதான் ஆண்களின் காம இச்சைக்கு இளம் பெண்கள் இரையாகி, விபச்சாரமும் பல்கி பெருகும்.
நேயர் : அல்லாஹ் விபச்சாரத்தை தடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதன் பக்கமே செல்லக் கூடாது என்றும் தடுத்துள்ளானே. அது மானக் கேடானதும் கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் “தீ”ய வழியாக இருப்பதாகவும் எச்சரிக்கை செய்துள்ளானே? (17:32)
ஷைத்தான் : பழங்காலத்தில் எனக்கு சற்று சிரமமாகவே இருந்து வந்தது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட எற்பட, முதலில் சினிமா, அதை அடுத்து தொலைக் காட்சி, இண்டர் நெட், மொபைல் நெட் என்று பல அரிய பல சாதனங்கள் எனக்குக் கிடைத்து வந்தன. அந்த சாதனங்களை வைத்து ஆபாசங்களை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். எனக்கு அதில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. இப்போதெல்லாம் எனக்கு விபச்சாரத்தைப் பற்றிய கவலையே இல்லை. என்னுடைய சகாக்களே அதை கவனித்துக் கொள்கிறார்கள். எனவே இனி யாரும் விபச்சாரத்திலிருந்து தப்பிக்கவே முடியாது.
நேயர் : சினிமா மற்றும் தொலைக் காட்சி படங்களில் என்ன செய்தாய்?
ஷைத்தான் : டூயட் பாடல்களில் ஆணுக்கு கோட்டும் சூட்டும் பெண்ணுக்கு ஜட்டியும் பாடியும் போட்டுவுட்டேன்.
நேயர் :இதன் விளைவாக பல குடும்பங்கள் சீரழிந்து விடுமே? எனவே நீ மனிதனுக்கும் மனித நேயத்திற்கும் நேர் விரோதியாக இருக்கிறாயே? (36:60)
ஷைத்தான் : என்னாப்பா நீ? அல்லாஹ்வின் கண்ணியத்தின் மீது சத்தியமாக, மக்கள் அனைவரையும் வழி கெடுப்பேன் என்றுதானே நான் சேல்லன்ஜ் பண்ணினேனே? (38:82) இதுக்குள்ள மறந்து விட்டாயே!
நேயர் : உன்னை பின்பற்றுபவர்கள் அனைவரையும் நரகத்தில் நிரப்புவதாக அல்லாஹ் முன் எச்சரிக்கை செய்துள்ளானே! (17:63) அதையும் மீறி மனிதனுக்கு எப்படி தைரியம் வந்தது? இதற்காக நீ என்ன யுக்தியை கையாளுகிறாய்?
ஷைத்தான்: இதற்காக நான் முன்னோர்களின் வழிமுறைகளை எடுத்துரைத்து அதையே பின்பற்றி வரும்படி செய்து வருகிறேன்.(7:28) ஆக “முன்னோர்களின் வழிமுறை” என்ற கருவி எனக்கு மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுவே மனுஷனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்ல போதுமான கருவியாக இருக்கிறது (31:21)
நேயர் :இருந்தாலும் அல்லாஹ் இதைப் பற்றி பல முறை முன்னெச்சரிக்கை செய்துள்ளானே. நரகத்தின் பயங்கரத்தைப் பற்றி பல இடங்களில் எடுத்துரைத்து இருக்கிறானே.
ஷைத்தான்: அதனால் என்ன? நரகத்தில் சில நாட்கள் மட்டுமே இருக்க நேரிடும் என்றும் அதன் பிறகு அல்லாஹ் சுவனத்தில் சேர்த்து விடுவான் என்று கதை கட்டி வருகிறேன் (3:24 & 2:80)
நேயர் : மனிதன் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் “தீ”யதை விலக்கி சுருசுருப்பாக செயல்பட வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்?(3:104, 53:39)
ஷைத்தான் : ஆனால் மனிதனுள் ஒண்ணுக்கும் உதவாத வீணான எண்ணங்களையும் ஆசைக் கனவுகளையும் ஏற்படுத்தி அவனை ஏமாற்றி வருகிறேன். (4:120) இப்படியாக அவனுடைய வாழ்வை நரகமாக மாற்றி வருகிறேன். (4:121)
நேயர் : முந்தைய சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி எடுத்துரைத்து மனிதனுக்கு விழிப்புணர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்?(3:137-138)
ஷைத்தான் : ஆனால் நான் மனிதனின் தீய செயல்களை அழகாக காட்டி, அதிலும் படிப்பினை பெறாதவாறு செய்து வருகிறேன். (6:42-43) அது மட்டுமின்றி முன்சென்ற சமுதாயங்களின் அழிவைப் பற்றி எடுத்துரைக்கும் போது, அவை எல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளே என்றும் சொல்ல வைக்கிறேன்.(27:68)
நேயர் : உலக மக்களுக்கு நேர்வழி காட்டத்தானே அல்லாஹ் குர்ஆனை இறக்கி அருளினான்? (68:52)
ஷைத்தான் : ஆனால் நான் குர்ஆனைப் பற்றி வீணான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் யாரும் அதன் பக்கமே வராதவாறும், அதன் மூலம் நேர்வழி பெறாதவாறும் பார்த்துக் கொள்கிறேன். (6:68)
நேயர் : தன் கட்டளைக்கு மட்டும் மனிதன் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்? (36:60-61)
ஷைத்தான் : ஆனால் நான் அல்லாஹ் அல்லாதவற்றை மனிதனைப் போலவே உருவம் கொடுத்து, தம் கரங்களால் அவற்றை படைக்க வைத்து அவற்றையே வணங்கி வரச் செய்து, வழிதவறச் செய்து வருகிறேன். (6:71)
நேயர் : மனிதனின் நிகழ்கால மற்றும் வருங்கால வாழ்வின் சந்தோஷங்களை கருத்தில் கொண்டு தானே அல்லாஹ் “ஆஃகிரத்து” என்ற செயல் திட்டத்தை உருவாக்கினான்?
ஷைத்தான் : ஆனால் நான் உலக வாழ்வின் சுக போகங்களைப் பற்றி அலங்கார வார்த்தைகளில் எடுத்துரைத்து ஆஃகிரத்தை மறக்கடிக்கச் செய்து வருகிறேன். (6:113)
நேயர் : மனிதன் ஒழுக்கத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் என்றுதானே சில உணவுப் பொருட்களை அல்லாஹ் தடை விதித்தான்? (5:3, 6:121)
ஷைத்தான் : ஆனால் நான் அதிலும் தலையிட்டு தர்க்கம் செய்யுமாறு தூண்டி வருகிறேன். (6:121) அல்லாஹ்வுக்கு இணையாக சட்டங்களை ஏற்படுத்தி கூடுமான வரையில் அவற்றையே பின்பற்றும்படி செய்து வருகிறேன்.
நேயர் : ஒண்ணு மனுஷன் அல்லாஹ் காட்டிய வழிகாட்டுதலின்படி வாழ்ந்தாகனும். அதை விட்டுவிட்டால் அவன் தன் மனோ இச்சைப் படி – அதாவது உன்னைப் பின்பற்றி வாழனும். இதை விட்டால் வேறு வழி கிடையாது.
ஷைத்தான்: சரியாப் புரிஞ்சுகிட்டே என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு இந்த உண்மை தெரியாமல் அல்லாஹ்வை வெறும் வாயால் புகழ்பாடிகிட்டு இருக்க செய்து விட்டேன்.
9. நபிமார்களுக்கு எதிராக செயல்பட்ட ஷைத்தான்
நேயர் : அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி எடுத்துரைத்து மூட நம்பிக்கையிலிருந்து தூய்மைப்படுத்தி சமுதாய மக்களை திருத்துவதற்குத் தானே அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான்?(2:151)
ஷைத்தான் : ஆனால் நான் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. நகர் புறம் மற்றும் நாட்டுப்புற மக்களிடையே இருந்து வந்த என் தோழர்களை வைத்து அலங்கார வார்த்தைகளை சொல்லி நபிமார்களை எதிர்த்து செயல்பட வைத்தேன்.(6:112)
நேயர் : அதையும் கடந்து நபிமார்கள் சீர்திருத்தப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்களே! (11:88)
ஷைத்தான் : என் நண்பர்களை வைத்து நபிமார்களில் சிலரை கொலையும் செய்து விட்டேன். (2:61) மற்றும் சிலருக்கு எதிராக போரிடவும் செய்தேன்.(17:64) சிலரை ஊரை விட்டு துரத்தியும் இருக்கிறேன். (71:76)
நேயர் : நபிமார்கள் தன்னிச்சையாக செயல்படாமல், தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றுவதாக அறிவிக்கிறார்களே. (6:106) (46:9)
ஷைத்தான் : எங்களாலும் வஹீச் செய்தியை கொண்டு வர முடியும் என்று சொல்ல வைக்கிறேன். (6:21) அவை ரிவாயத்துகளாக நபிக்கு தனிப்பட்ட முறையில் இறங்கிய வஹீ செய்திகள் என்று நம்ப வைக்கிறேன். அந்த ரிவாயத்துகளையே மார்க்கம் என்று புத்தகங்களாக வெளியிடுகிறேன்.
நேயர் :இது நம்பிக்கை துரோகம் அல்லவா? இதை எந்த தைரியத்தில் செய்தாய்?
ஷைத்தான் : அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் பேசப் போவதில்லை. (42:51) அந்த தைரியம் தான் எனக்கு! நான் எப்படிப்பட்ட புரளியை கிளப்பி விட்டாலும், அது உண்மையா என்பதை அறிந்து கொள்ளும் உரைக்கல் குர்ஆன் மட்டுமே. ஆனால் குர்ஆனை யாரும் படித்து உண்மைகளை அறிந்து கொள்ளாதவாறு பார்த்துக் கொள்கிறேனே. இதுதான் எனக்கு கிடைத்த வெற்றி.
நேயர் : கியாம நாளில் நபிமார்களை சாட்சியாக வைத்து இப்படி எல்லாம் சொன்னீர்களா என்று கேட்கப் போவதாக அல்லாஹ் சொல்லி இருக்கின்றானே!(4:41)
ஷைத்தான் : அதெல்லாம் நீங்கள் மரணித்த பின்புதானே? அப்போது அங்கே எனக்கு என்ன வேலை இருக்கப் போகுது? நீங்களாச்சு. உங்களைப் படைத்த அல்லாஹ் ஆச்சு. எப்படியாவது போங்கள் என்று ஒதுங்கிக் கொள்வேன் (14:22)
நேயர் : அல்லாஹ் சொல்லாததை சொன்னதாக சொல்லி இணை கற்பிப்பதை தடுத்துள்ளானே. அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்து சொல்லக் கூடாது என்றும் சொல்லி இருக்கின்றானே! அதையும் மீறி மக்களை எப்படி நீ கெடுத்தே?(7:33)
ஷைத்தான் : இது எனக்கு மிக மிக சுலபம். குர்ஆனில் நபி, தன்னை பின்பற்றி நடக்கும்படி சொல்லி இருக்கிறார்.(3:31) நபியை பின்பற்றுவது தன்னைப் பின்பற்றுவதற்குச் சமம் என்று அல்லாஹ்வும் சொல்லிவிட்டான். (4:80) இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன். சில நபித் தோழர்களின் பெயரைப் பயன்படுத்தி, நபி சொன்னதாக பலப் புரளிகளை பரப்பி விட்டேன். காலப் போக்கில் மக்கள் அல்லாஹ் சொன்னதை மறந்து விட்டு, நான் பரப்பிய புரளிகளையே மார்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.
நேயர் : அப்போ மனிதனை எப்பாடு பட்டாவது நரகத்தில் தள்ளிவிடுவது என்று கங்கணம் கட்டி இருக்கிறாய் அல்லவா?
ஷைத்தான் : என்னாப்பா நீ? இதுக்குள்ள மறந்துட்டியா அல்லாஹ்விடம் நான் செய்த சேல்லன்ஜ்? (15:39) உலகம் நிலைத்திருக்கும் காலம் வரையில் இப்படித்தான் செயல்பட்டு வருவேன்.
10. அல்லாஹ்வின் மீது பழி சுமத்திய ஷைத்தான்
நேயர் : தன்னை இணையாக்குவதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லையே. (31:13) நீ என்ன செய்தாய்?
ஷைத்தான் : அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நாங்கள் இணை வைக்கிறோம் என்றும் அவன் நாடாமல் இருந்திருந்தால் எந்தப் பொருளையும் தடை விதித்திருக்க மாட்டோம் என்று இணைவைப்பவர்களை வைத்து பழியை அல்லாஹ்வின் மீதே போட்டு விட்டேன் (6:148)(16:35)
11. அல்லாஹ்விடம் அவகாசம் கேட்ட ஷைத்தான்
நேயர் : மனிதனை கெடுப்பதற்கு கியாம நாள் வரையில் அவகாசம் கேட்டாயா?
ஷைத்தான்: ஆமாம்பா. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி மனிதன் சில காலம் வரையில் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டும். (2:36) இப்படியாக மனிதனுக்கு ஆயுட்காலம் என்ற அவகாசம் கிடைக்கிறது. அவன் வாழும் வரையில் அவனை கெடுத்துக் கொண்டிருக்க அவகாசம் கேட்டேன். (15:35)
நேயர் : அதுக்கு ஏம்பா கியாம நாள் வரையில் அவகாசம் கேட்கணும்?
ஷைத்தான் : தனி நபர் விஷயத்தில் அவன் இறந்து விட்டால் அவனது உடலை புதைத்து விடுகிறீர்கள். சிலர் எரித்து விடுகிறார்கள். அவ்வளவுதான்.
அதை தொடர்ந்து வரும் வாழ்க்கை அவனுக்கு கியாமத்தாக இருக்கிறது. எனவே அவன் சாகும் வரை கெடுத்துக் கொண்டிருக்கத் தான் நான் அவ்வாறு அவகாசம் கேட்டேன்.
நேயர் : அவ்வளவுதானா? செத்த பிறகுதான் உனக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டியே. (14:22) ஆனால் அவன் செய்த “தீ”ய செயல்களின் விளைவுகள் இவ்வுலகில் தொடர்கிறதே.
ஷைத்தான்: அந்த தீய விளைவுகளை அவனுடைய சந்ததிகள் அனுபவித்துக் கொள்ளட்டுமே. எனக்கு அங்கு ஒரு வேலையும் குறையுதே! தீய செயல்களால் துயரத்தில் சிக்கும் குடும்பங்கள் தான் எனக்குத் பிடிக்கும். இதற்காக சூதாட்டம், போதைப் பொருட்கள், விபச்சாரம் போன்றவை துணை புரிகின்றன.
நேயர் :இந்த கால அவகாசம் மனிதன் திருந்துவதற்காகத் தான் அளிக்கப்பட்டது என்று அல்லாஹ் சொன்னதாக எனக்கு ஞாபகம் இருக்கு.
ஷைத்தான்: அதாவது மனுஷன் செய்கின்ற செயல்களின் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. காலம் கடந்த பின் ஏற்படுகிறது. விளைவுகள் தோற்றத்திற்கு வரும் வரை (الِى يوم يبعثون) அவனை கெடுத்துக் கொண்டிருப்பதற்கும் எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. (15:36)
நேயர் : அல்லாஹ் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை உடனுக்குடன் ஏற்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!
ஷைத்தான் : என்னைப் பின்பற்றி நடக்கும் போது, அவனுக்குக் ஏற்படுகின்ற தீய விளைவுகள் என்பது அல்லாஹ் விதிக்கும் தண்டனையாகும். மனிதனின் தீய செயல்களுக்கு உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகில் யாருமே உயிர் வாழ முடியாதே. எனவே இந்த கால அவகாசம் அளிக்கப்படுகிறது. (16:61)
நேயர் : மனிதன் திருந்துவதற்கு அல்லாஹ் வழிவகை செய்துள்ளது அவனுடைய மிகப் பெரிய கருணையாகும் அல்லவா?(16:64)
ஷைத்தான் : இந்த அவகாசத்தை மனிதன் பயன்படுத்திக் கொள்ளாதவாறு அவனை வீண் விளையாட்டில் மூழ்க வைக்கிறேன். (6:32) மார்க்கத்தை விளையாட்டாக ஆக்குகிறேன். (7:51) தொழுகையையும் நான் விளையாட்டாகவும் அர்த்தமற்றதாகவும் ஆக்கி விட்டேன். (5:58)
12. ஷைத்தானும் சமூக சீரழிவுகளும்
நேயர் : சமுதாய சீரழிவுக்காக நீ எப்படி எல்லாம் செயல்பட்டு வருகிறாய்?
ஷைத்தான் : மனிதனுள் இருக்கின்ற தீரா மன வேதனையை தணித்துக் கொள்ள முடியும் என்று சொல்லி, போதைப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னேன். டைம் பாஸ் செய்து கொள்ள சூதாட்டத்தை அறிமுகப் படுத்தினேன். அவனது வாழ்வின் எதிர்கால நிலையை அறிந்து கொள்ள ஜாதகக் கணிப்பை கண்டு பிடித்தேன். (5:90)
நேயர் :இதெல்லாம் மனுஷன் தானே செய்கின்றான்?
ஷைத்தான் : ஆமாம். மனிதன் தான் செய்கிறான். அவனுள் இருந்தபடி தூண்டி வருவது நான்தானே.
நேயர் : இது எப்படி உன்னால் முடிந்தது?
ஷைத்தான் : இது எனக்கு கஷ்டமான காரியமல்ல. எல்லா தீய செயலையும் அழகாகக் காட்டி வருகிறேன். (15:39)
நேயர் : உதாரணத்துடன் விளக்கம் தேவை.
ஷைத்தான் : மனித இனப் பெருக்கத்திற்காக அல்லாஹ் ஏற்படுத்திய பாலியல் உணர்ச்சியில், ஆபாசத்தை வெளிப்படுத்தி, தவறாகப் பயன்படுத்த வைத்து விடடேன்.
நேயர் :இதை எப்படி செய்தாய்? இதெல்லாம் தவறானவை என்று மனிதனுக்குத் தெரியாதா?
ஷைத்தான் : அவனுக்கு என்னவோ தெரியும். இவையெல்லாம் முன்னோர்களின் வழிமுறை தான் என்று சொல்ல வைத்தேன். அதோடு அல்லாஹ்வே இதை விரும்புகிறான் என்றும் அதற்காகத் தான் காம வேட்கையை மனிதனுக்கு அளித்துள்ளான் என்றும் சொல்ல வைத்தேன். (7:28)
நேயர் : பெண்களைக் குறித்து அல்லாஹ்வின் திட்டம் என்ன?
ஷைத்தான்: பெண்களை ஆண்களுக்குச் சமமாக எல்லா ஆறறல்களுடனும் பணியாற்ற வேண்டும் என்பது அல்லாஹ்வின் செயல் திட்டம். (4:32) (33:35) ஆனால் அதை முறியடித்து பெண்களை விலைப் பொருளாக ஆக்கி விட்டேன். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி விட்டது.
நேயர் : ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் எல்லா ஆற்றல்களும் இருக்கும் போது, ஏன் பெண்களுக்கு சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைப்பதில்லை. (33:35)
ஷைத்தான் : அது பரம ரகசியம். நீ யார் கிட்டேயும் சொல்லக் கூடாது. சரியா? உண்மையிலேயே ஆண்களிடம்தான் பாலியல் பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். எனவே பெண்கள் சமூகப் பணி என்று வெளியே வந்துவிட்டால், ஆண்களால் தம் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்களை எப்படியாவது வலை வீசி சிக்க வைத்து, கற்பை சூரையாடி விடுவேன். இதை சரி செய்ய, பெண்களை வீட்டிலேயே அடைச்சு வைத்து விட முடிவெடுக்க செய்து விட்டேன்.
நேயர் : என்ன செய்வது? யாருக்கும் அல்லாஹ்வுடைய பயம் இல்லாமல் போய் விட்டது. எனவே அவனவன் தன் இஷ்டத்துக்கும் ஆடுகிறான்.
ஷைத்தான் : இப்போ புரியர்தா என் கைவரிசை எப்படின்னு? இது எனக்கு கைவந்த கலை. இதற்காக பெண்களுக்கு ஆதரவாக சில பழமொழிகளை எல்லாம் சொல்லி இருக்கிறேன்.
நேயர் : பெண்களைப் பற்றி உயர்ந்த கருத்துடைய பழமொழிகளா? சொல்லு. சொல்லு.
ஷைத்தான் : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லி வுட்டேன்.
நேயர் : என்னையா இது? பெண்ணை வீட்லியே அடைச்சு வைச்சுகிட்டு இப்படி எல்லாம் பழமொழிகளா? இங்கேயும் ஆண்கள் எல்லாம் கையாலாகாதவங்க என்று சொல்லாமெ சொல்றியே.
ஷைத்தான் : உன்னைப் பார்த்தால் ரம்பொ சிந்திக்கிற ஆள் மாதிரி தோணுது. அதனால் தான் ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியையும் போட்டுட்டேன்.
நேயர் : அதாவது ஒரு ஆண் வெற்றி பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் பெண்தானா? அவன் கெட்டுப் போனாலும் அதற்கும் காரணம் பெண்தானா? இதைக் கவனித்துப் பார்த்தால் பெண்களைப் பாராட்டுகிற மாதிரி இழிவு படுத்திறியே.
ஷைத்தான் : நீதாம்பா நான் எதைச் சொன்னாலும் அதிலெ குற்றம் கண்டுபிடிக்கிறே. மக்களெல்லாம் மிகவும் நல்லவங்க. நான் சொல்றதெ எல்லாம் கம்முண்ணு ஏத்துக்குறாங்க. உன்னெ மாதிரி அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை எல்லாம் கண்டுக் கொள்வதே இல்லை.
நேயர் : ஆக உன் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு தோல்விதான் ஏற்பட்டது என்று சொல்லலாமா?
ஷைத்தான் : அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன் (112:2) இதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பையும் என்னால் ஏற்படுத்திட முடியாது. மனுஷனை சீண்டி விடுவதோடு சரி. என் வலையில் அவன் சிக்கி விட்டால், அவதிப்படப் போவது மனுஷன் தான். நான் வெறும் தமாஷ் பார்ப்பேன். (14:22)
நேயர் : இரு இரு. அல்லாஹ் உன்னை நரகத்தில் தள்ளுவான். உனக்காகவே நரகத்தை தயார் பண்ணி வைத்துள்ளான்.
ஷைத்தான் : நரக நெருப்பு என்னை ஒண்ணும் பண்ணாது.
நேயர் : என்னாப்பா இப்படி சொல்றே?
ஷைத்தான் : நான் ஏற்கனவே நெருப்பால் படைக்கப்பட்டுள்ளேன். என்னை நரக நெருப்பில் தள்ளினால் அங்கும் சென்று விளையாடிக் கொண்டு தான் இருப்பேன்.
நேயர் : என்னப்பா இது? கடைசி உன் ஆசை தான் என்ன?
ஷைத்தான் : அல்லாஹ்வின் திட்டப்படி மனிதன் சந்தோஷமாக வாழ வேண்டும். இதை கெடுத்து விடவேண்டும் என்பது தான் என் ஆசை. இதற்காக அவனை வற்புருத்துவதில்லை. வெறும் ஆசை வார்த்தைகளை தான் பயன் படுத்துகிறேன். (14:22)
நேயர் : அப்படி என்ன ஆசை வார்த்தைகளை சொல்கின்றாய்?
ஷைத்தான் : ஒரு புரளியை பரப்பி விட்டேன்.
நேயர் : புரளியா? என்ன அது?
ஷைத்தான் : மனிதனாகிய நீ மலக்கு ஆவதை அல்லாஹ் விரும்பவில்லை என்று ஒரு புரளியை வுட்டேன். (7:20) எனவே மரத்தின் கிளைகளைப் போல் பிரிந்து விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். உன் நல்லதுக்குத் தான் நான் சொல்றேன் என்று சொல்லி மனிதனை ஏமாற்றி விட்டேன். (7:21)
நேயர் : பிறகு என்னவாயிற்று?
ஷைத்தான் : என் வலையில் சிக்கியவனுக்கு நரகம் என்று அல்லாஹ் அறிவித்து விட்டான் (15:42-43)
நேயர் : எல்லோருமே நரகத்திற்குச் செல்வார்களா?
ஷைத்தான் : இல்லை. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படுபவர்களிடம் என்னுடைய பாச்சா பலிக்காது என்று நானே ஒப்புக் கொண்டேனே! (15:40)
13. அரசியல் விவகாரத்தில் ஷைத்தான்
நேயர் : அரசியல் விஷயத்தில் என்ன செய்தாய்?
ஷைத்தான் : உனக்கு நித்திய ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் வம்சா வழி ஆட்சி முறைதான் சிறந்தது என்று அறிவித்தேன். (20:120)
நேயர் : ஏன்? வம்சா வழி ஆட்சிமுறை அல்லாஹ்வுக்கு பிடிக்காதா?
ஷைத்தான் : அப்படி அல்ல. மக்களாட்சியைத் தான் ஃகிலாஃபத் என்று சொல்வார்கள். திறமைசாலிகளுக்குத் தான் நாட்டை ஆளும் தகுதி கிடைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். (2:247) அது எனக்குப் பிடிக்கவில்லை.
நேயர் : இதற்காக நீ என்ன யுக்தியை கையாண்டாய்?
ஷைத்தான் : அல்லாஹ்வின் அடியார்களிடையே அந்த தகுதி வளராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்காக ஆட்சி அதிகாரம் எல்லாம் வேண்டாம். அல்லாஹ்தான் நமக்கு வேண்டும் என்று ஓயாமால் 52 வாரங்களும் பள்ளிவாசல்களில் பயான் பண்ண வைத்து விட்டேன்.
நேயர் :இப்போது நடக்கின்ற ஆட்சி முறையில் என்ன குளறுபடி செய்துள்ளாய்?
ஷைத்தான் : தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனுடைய மானம் போவதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் படி செய்து விட்டேன். உடலை மறைப்பதற்கு மட்டும் ஆடை. மற்றபடி எல்லாமே மானங்கெட்ட செயல்கள் தான்.(20:121)
நேயர் : என்னையா அக்கிரமம் இது? இதுதான் நீ நடத்தும் அரசியலா?
ஷைத்தான் : மனிதன் பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதானே என் ஆசை. என் இலட்சியமும் அதுவே. இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.
நேயர் : உன்னைப் பற்றிய உண்மை தெரியாமல் தான் மக்கள் இப்படி தவறான வழியில் செயல்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஷைத்தான் : இப்போதாவது என்னை புரிந்து கொண்டாயே!
14. வானவர்களும் ஷைத்தானும்
நேயர் : அது சரி. ஏதோ “மலக்கு”ன்னு சொன்னியே அது என்ன?
ஷைத்தான் : இதுவும் தெரியாதா? நானும் மலக்கின் வரிசையில்தான் இருந்ததாக பலர் நினைக்கிறார்கள். மிகவும் நல்லது. அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படும் தன்மை கொண்டதுதான் மலக்கு என்பதாகும். அடிபணியாமை தான் என் குணம்.
நேயர் : மலக்குகளை ஆதமுக்கு ஸஜ்தா செய்யச் சொன்னது ஆதமுடைய கட்டளைக்கு அடிபணிய வைப்பது தானே? (2:34)
ஷைத்தான் : ஆமாம். இது எப்போதோ நடந்த விவகாரம் அல்ல. இப்பொதும் மலக்குகள் (பிரபஞ்ச இயற்கை சக்திகள்) மனிதனுக்குக் கட்டுப்படும்.
நேயர் : பிரபஞ்ச படைப்புகளில் இயங்கி வரும் சக்திகள் எல்லாம் மனித கட்டளைக்கு அடிபணிந்து செயல்படும்படி செய்திருப்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடை ஆகும் அல்லவா? ஆனால் இதைப் பற்றிய உண்மைகள் மக்களுக்கு ஏன் தெரியவில்லை?
ஷைத்தான் : அது தெரியாதா? மலக்கு என்பதை ஏன்ஜல்ஸ் (Angels) அதாவது தேவர் தேவதைகள் என்று சொல்லி வுட்டேன். அதைத் தொடர்ந்து மலக்குகளுக்கு மனித உருவதைக் கொடுத்து ஆண்டவனின் அவதாரங்கள் எனவும் கதை கட்டிவிட்டேன். மக்களும் அவை யாவும் உண்மையே என நம்பி, “தேவியர்கள்” என சொல்லி அவற்றிற்கு பெண்களின் பெயரிட்டு (43:19) பூஜை புருஸ்காரம் செய்ய வைத்து விட்டேன். மேலும் அவற்றை அலங்கரித்து வலம் வரும்படியும் செய்து விட்டேன். இனி யாரும் பிரபஞ்ச சக்திகளின் ஆராய்ச்சி செய்வதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.
நேயர் : அந்த தேவர் தேவதைகளைப் படைத்ததை அம்மக்கள் கண்கூடாகப் பார்த்தார்களா என்று அல்லாஹ்வே கேட்கின்றானே (43:19) அதையும் மீறி மக்களை நீ எப்படி நம்ப வைத்தாய்?
ஷைத்தான் : அதுதான். “முன்னோர்களின் வழிமுறை” என்ற கருவியை வைத்துதான் அவர்களை வழிகெடுத்தேன் (43:22) அதைவிட்டு விலகாதவாறு பல யுகங்களாக அவர்களை கவனித்துக் கொள்கிறேன். (11:53)
15. குடும்ப விவகாரங்களில் ஷைத்தான்
நேயர் : அது போகட்டும். கணவன் மனைவி விஷயத்தில் என்ன செய்தாய்?
ஷைத்தான் : எதுக்குப்பா ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு? ஏதோ பொண்ணை பார்த்தோமா? அவளை மயக்குனோமா? கூட்டிக்கிட்டு போய் எங்கேயாவது வாழ்க்கை நடத்துனோமா என்று இல்லாமெ ஊரைக் கூட்டி இப்படி கெடுபடி செய்ஞ்சுகிட்டு?
நேயர் : ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணக் கூடாதா?
ஷைத்தான் : அதெல்லாம் பணக்காரர்களுக்கு என்றே தனி ஏற்பாடு செய்திருக்கிறேன். ஏழைகளுக்கு மேற்சொன்ன வழி தான் சரி.
நேயர் : ஆண் பெண் ஆகியோர் இணைந்து வாழும் வாழ்க்கை, நிக்காஹ் என்னும் ஒப்பந்தம் முறையில் இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் அறிவுரை. (4:127) இந்த உறவு முறையில் பிணக்கு உண்டானால் பெரியவர்களை வைத்து தீர்த்துக் கொள்ளவேண்டும். (4:35) அதையும் மீறி பிணக்குத் தீரவில்லை என்றால் ஜமாஅத் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய நீதி மன்றத்தின் மூலமாகவோ விவாகரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஷைத்தான் : இதெல்லாம் செய்து கொண்டு இருக்க வேண்டுமா? மனைவியை பார்த்து மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்லி விட்டாலே போதும். விவாகரத்து ஆகி விட்டதாக அறிவிப்பு செய்தேன். சில சமயம் போனில் மூலமும் தலாக் ஆகிவிட்டதாகவும் அறிவிக்கிறேன். குடிபோதையில் தலாக் சொன்னாலும் அது தலாக் ஆகிவிடும் என்றும் அறிவிக்கின்றேன். வேண்டாப் பொண்டாட்டியை விட்டு ஓடுவதற்கு சுலபமான வழியில்லையா?
நேயர் : சரி. கணவன் செய்த தவறை உணர்ந்து மீண்டும் தன் மனைவியை மீட்டிக் கொள்ளலாமா?
ஷைத்தான் : அது முடியாதுன்னு அறிவித்து விட்டேன். தலாக் ஆனது ஆனதுதான். அதன் பின் அவளை வேறு ஆணுடன் நிக்காஹ் செய்து அவனுடன் ஓர் இரவு இன்பம் அனுபவித்த பின்புதான் அவள் முதல் கணவருக்கு ஆகுமானதாக ஆகிறாள்.
நேயர் : என்னய்யா அக்கிரமம் இது? ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களுக்குத் தண்டனையா?
ஷைத்தான் : அதுதான் ஷரீயத் சட்டம் என்றும் அப்படித் தான் நபிகளார் செயல்பட்டதாகவும் அறிவித்து விட்டேன். அதன்பிறகு அதை எதிர்த்துப் பேச யாருக்காவது தைரியம் உண்டா?
நேயர் : என்னய்யா அக்கிரமம் இது? இதனால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படாதா? பிள்ளை குட்டிகளின் நிலைமை என்னாவது?
ஷைத்தான் : அதுதானே எனக்கு வேணும்! விபச்சாரம் பிடிக்காது என்று அல்லாஹ் அறிவித்து விட்டான். (17:32) ஆனால் அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நேயர் : விவாகரத்துக்கும் விபச்சாரத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?
ஷைத்தான்: பெண்கள் நீண்ட காலத்திற்கு ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. தலாக் அதிகம் அதிகம் ஆகும்போதுஇ மறுமணத்திற்கு வாய்ப்பு இல்லாமல் விபச்சாரம் அதிகமாகி வருமல்லவா. இது கூடவா உனக்குப் புரியலே?
16.முஹம்மது நபிக்கு எதிராக செயல்பட்ட ஷைத்தான்
நேயர் : உன்னை ஒடுக்கி வைக்கத்தான் நபிமார்கள் வந்தார்களே!
ஷைத்தான் : நபிமார்கள் வந்தார்கள். மக்கள் நபிமார்களை பின்பற்றி வந்த காலமெல்லாம் என்னுடைய ஆதிக்கம் செல்லுபடி ஆகலே. அவர்களுடைய மறைவுக்குப் பின் காலப் போக்கில் மக்களிடையே போட்டி பொறாமையை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தி விட்டேன். (2:213) மீண்டும் அல்லாஹ் தன் திட்டத்தின் படி ஒரு நபியை அனுப்பி சீர் படுத்துவான். (2:213) அதன் பின் நான் மீண்டும் என் கைவரிசையை காட்டுவேன். இப்படியாகத்தான் காலம் காலமாக நடந்து வந்துள்ளது.
நேயர் : அதன் பின் என்னவாயிற்று?
ஷைத்தான் : இறுதியாக முஹம்மது நபி(ஸல்) வந்தார். அவர் மூலமாக அல்லாஹ் காட்டிய வழியில் 200–250 ஆண்டுகள் வரையில் மக்கள் செயல்பட்டு வந்தார்கள். அதன் பின் அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் சிறுக சிறுக நழுவிச் செல்ல ஆரம்பித்தார்கள். கிடைத்ததே ஒரு சந்தர்ப்பம் என நானும் புகுந்து புஃகாரி அவர்களைப் பயன் படுத்தி பழையபடி கலக்கிவிட ஆரம்பித்தேன் (7:17)
நேயர் :இதன் விளைவு என்னவாயிற்று?
ஷைத்தான் : அம்மக்கள் அல்லாஹ் காட்டிய உயர் பண்புகளை விட்டுவிட்டு அற்பமான தற்காலிக ஆதாயங்களுக்காக வாழ அரம்பித்தனர். இதன் விளைவாக அவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. (7:176)
நேயர் : நீ உன் பங்கிற்கு என்ன செய்தாய்?
ஷைத்தான் : வெரி ஸிம்புள். அல்லாஹ் நபியை பின்பற்றும் படி திருமறை குர்ஆன் மூலமாக அறிவித்துள்ளான். (3:31) இதை வைத்து நபிகளார் சொன்னதாக பலப் புரளிகளை பரப்ப ஆரம்பித்தேன். மக்களிடையே குர்ஆனின் ஞானம் இல்லாததை, எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன். திருக்குர்ஆனை ஓதுவதற்காகவும் நபிகளார் பெயரிலுள்ள ரிவாயத்துகளை பின்பற்றுவதற்காகவும் என ஆக்கி விட்டேன். மக்களும் அதை காலப் போக்கில் உண்மையே என்று நம்ப ஆரம்பித்தார்கள்.
நேயர் : அதன் விளைவு என்னவாயிற்று?
ஷைத்தான் : இப்போது மக்கள் திருக்குர்ஆனின் சில வாசகங்களை மட்டும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலானவற்றை பின்பற்றுவதில்லை. மக்களுக்கு அதன் உண்மை நிலையும் தெரியாது.(2:159) திருக்குர்ஆனின் வசனங்களை “ஷானெ நுஜுல்” என்று சொல்லி திசை திருப்பி விட்டேன். இப்போது வெறும் தாடி வைப்பது, மீசையை எடுத்துவிடுவது, ஜிப்பா போட்டுக் கொள்வது, ஐந்து வேளைதொழுது கொள்வது, ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, பணம் இருந்தால் ஹஜ் யாத்திரை செய்து கொள்வது என்ற அளவில் மார்க்கத்தை சுருக்கி விட்டேன்.
17. திருக்குர்ஆனுக்கு எதிரான ஷைத்தான்
நேயர் : திருக்குர்ஆன் நேரான வழியை காட்டுவதாகவும் அதன்படி செயல்படுவோருக்கு சிறந்த வாழ்வு கிடைக்கும் என்றும் வாக்களிக்கப்படுகிறதே. (17:9)
ஷைத்தான் : திருக்குர்ஆனை ஓதி வந்தாலே போதும். பல நன்மைகள் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னதாக புரளியை பரப்பி விட்டேன்.
நேயர் : திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களை நன்கு ஆராய்ந்து அறிந்து அதன் பிறகே செயல்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே. (25:73) எனவே அதை ஓதவேண்டிய முறையில் ஓதவேண்டும் என்றும் சொல்லப்பட்டு உள்ளதே (2:121)
ஷைத்தான் : எந்தெந்த சூராவை ஓதினால் என்னன்ன நன்மை கிடைக்கும் என்பதையும், எந்தெந்த சமயத்தில் ஓத வேண்டும் என்பதையும் எழுதி பல புத்தகங்களை வெளியிட செய்துள்ளேன். (2:79) அதுவும் ராகத்தோடு ஓதி வரச் செய்துள்ளேன். அது தான் ஓதவேண்டிய முறை. உலக அரங்கில் அதில் போட்டிக்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.
நேயர் : என்னய்யா இது? குர்ஆன் சமுதாயங்களின் வாழ்வா சாவா என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீ இப்படி செய்திருக்கிறாயே?
ஷைத்தான் : ஏம்பா? அல்லாஹ் ஸஜ்தா செய்ய சொல்கின்றான். தொழுகையில் ஸஜ்தா செய்ய வைத்தேனா இல்லையா?
நேயர் : போதுமா? அகிலங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு சிரம்பணிந்து செய்ல்படும் போது, (16:48) மனிதனும் அவனுடைய கட்டளைக்கே சிரம்பணிந்து நடக்க வேண்டும் என்பதுதானே அதன் அர்த்தம்?
ஷைத்தான் : அதெல்லாம் இல்லை. அல்லாஹ் தஸ்பீஹ் ஓத சொல்ல வில்லையா? (2:45) எனவே மனுஷன் கையில் தஸ்பீஹ் மணியை செய்து கொடுத்து விட்டேன். அதுதான் தஸ்பீஹ் என்றும்இ அதை ஓதி வந்தால் சுவனம் கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டேன்.
நேயர் : என்னையா இது நியாயம்? அல்லாஹ் நிர்ணயித்த கடமையை சிறப்பாக நிறைவேற்றுவதைத் தானே سَبَحَ ஸபஹ என்று சொல்வார்கள்? (73:7) அதையே ذكر திக்ரு என்று மாற்றி விட்டாயா? ஏன் அப்படி செய்தாய்?
ஷைத்தான் : அதுவும் பரம இரகசியம். அல்லாஹ் விரும்பாத ஆன்மிகத்தை இஸ்லாத்தில் திணித்து விட்டேன். (57:27) இப்போ முஸ்லிம்கள் அல்லாஹ் காட்டிய நேர்வழியை விட்டுவிட்டு யூகங்களையும் ஆன்மிகத்தையும் பின்பற்றுகிறார்கள் (10:36)ஷேக் மார்களுக்கு நல்ல மவுஸூ தெரியுமா?
18. அய்யூப் நபியும் ஷைத்தானும்
நேயர் : அய்யூப் நபி விஷயத்தில் நான் கேள்விபட்டது உண்மையா? நீ அவரை தீண்டியதாக சொல்கிறார்களே!
ஷைத்தான்: அவர் ஒரு நபியாக இருந்தாரே. அல்லாஹ்வின் நல்லடியார் அல்லவா? அவரை என்னால் எப்படி தீண்ட முடியும்? (15:42)
நேயர் : அப்போ நடந்த உண்மை என்ன? அவர் குஷ்ட நோயால் ரொம்ப அவதிப்பட்டதாக சொல்கிறார்களே.
ஷைத்தான் : அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு நாள் அவரை பாம்பு ஒன்று கடித்து விட்டது. அதன் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். பாம்புவுக்கும் ஷைத்தான் என்று அரபி மொழியில் சொல்வார்கள். இதை வைத்து நான் பல கட்டுக் கதைகளை கட்டி விட்டேன்.
நேயர் : ஓ ஹோ! அவ்வளவுதானா? அதனால் தான் அருகிலிருந்த குகை வரையில் தட்டுத் தடுமாறிச் சென்று, குளிர்ந்த நீரில் பாம்பு கடித்த காலை விட்டு ஆட்டும்படி சொன்னதா? (38:41)
ஷைத்தான் : அதன் பிறகு அவருடைய மனைவியும் மற்ற தோழர்களும் வந்தடைந்தனர். அவர்களை வைத்து பாம்பு கடிக்கு மந்திரக் கோலால் சரி செய்யும் படி சொன்னேன். ஆனால் அவர் பொறுமையுடன் இருந்து மூலிகை மூலமே சிகிச்சைப் பெற்றார். (38:43-44)
19. யூஸுஃப் நபியும் ஷைத்தானும்
நேயர் : தான் கண்ட கனவைப் பற்றி யூஸுஃப் நபி தம் தந்தை யாஃகூப்பிடம் எடுத்துரைத்த போது, நீ என்ன செய்தாய்? சகோதரர்களிடையே ஏன் சண்டை மூட்டினாய்?
ஷைத்தான் : நீயே சொல்லுப்பா. அவர் எப்ப பார்த்தாலும் தன் இளைய மகனிடம் மட்டும் தான் பாசத்தோடு இருப்பார். (12:8) எனவே அவரை தீர்த்துக் கட்டிட்டா அதன் பிறகு தங்களிடம் தந்தை பாசத்தோடு இருப்பார் என உசுப்பி விட்டேன். (12:9)
நேயர் : ஏனய்யா. அவங்க தம் தந்தையின் அறிவுரைப்படி நடந்துக்கல. அதனால் அவர்கள் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருக்கலாம். ஆனால் யூஸுஃப்பும் பின்யாமினும் அவர் பேச்சை கேட்டு நடந்துக் கொண்டதால், அவர்களிடம் பாசத்துடன் இருந்திருக்கலாம். இதை வைத்து அவரை தீர்த்துக் கட்ட சொல்வது நியாயமா?
ஷைத்தான் : யாரையும் சிந்திக்க விடாமல் செய்வதே என் பணி. எனவே தம் தந்தையின் பாசத்தை பெறுவதற்கு அவர்களை குறுக்கு வழியைக் காட்டினேன். அவ்வளவுதான். அதன் பின் அவர்கள் தம் சகோதரனை பாழ் கிணற்றில் தள்ளி விட்டு வரச் செய்தேன். (12:15)
நேயர் : அதன் பின் அவரை பிரயாணக் கூட்டம் காப்பாற்றி (12:9) அவரை அற்பமான கிரயத்திற்கு விற்று விட்டார்கள். (12:10) அவர் வாலிப வயதை அடைந்த போது அவரை கெடுக்க, நீ அதிகமாக முயற்சி செய்தது போல் தோன்றுகிறதே.
ஷைத்தான் : ஆமாப்பா. அவருடைய எஜமானி சற்று சபல புத்தியுள்ளவளாக இருந்தாள். எனவே அவளை வைத்து அவரை கெடுக்க முயற்சி செய்தேன். 12;:23)
நேயர் : ஆனால் அவர் தெளிவான இறைவழிகாட்டுதலைப் பெற்றிருந்ததால் அவளால் கெடுக்கவே முடியவில்லை. (12:24) எனவே அவரை சதி செய்து சிறையில் அடைக்க வைத்தாய். இருந்தாலும் அவர் தம் கொள்கையில் நிலைத்திருந்தார்.
ஷைத்தான் : ஆமாம்பா. அவர் விஷயத்தில் எனக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசி யூஸுஃப் நேர்மையானவர் என்றும் (12:51) தம்மிடமிருந்த நஃப்ஸுன் அம்மாரா نَفْسلاَاَمًاَرَةவின் பலவீனத்தினால் தான் அவரை தன் ஆசைக்கு இணங்க முயற்சித்தேன் என்று அந்த எஜமானஜ அரச சபையில் அறிவித்து விட்டார். (12:53)
நேயர் : நஃப்ஷஸுல் லஅம்மாரதுன் ٱلنَّفْسَ لَأَمَّارَةٌۢ என்றால் என்ன?
ஷைத்தான் : தீய பழக்கத்திற்கு ஆளானவர்களிடம் எளிதில் தீய வழியில் செயல்படும் பலவீனம் இருக்கும். இது எனக்கு மிகவும் பிடிக்கும். இதையே குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
20.ஜகாத்தும் ஷைத்தானும்
நேயர் : ஜகாத் زكواةஎன்பது வறுமை ஒழிப்பு நிதி என்று பொருளாகும். இதை ஆங்கிலத்தில் Tax System என்பார்கள். சமுதாய மேம்பாட்டு நிதி என்றும் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் வேறு விதமாய் இருக்கிறதே.
ஷைத்தான் : அதுவா? அதை நான்தான் பிச்சைகாரர்களுக்கு வருடந்தோரும் போடும் பிச்சை என்று மாற்றி விட்டேன். அங்கெங்கே சில்லரையா மாத்தி வைத்துக் கொண்டு மனிதன், தன்னை ஒரு பெரிய தர்ம கர்த்தா என்று காட்டிக் கொள்ளும்படி செய்துவிட்டேன். (2:264)
நேயர் : அதனால் யாதொரு பலனும் கிடைக்காது என்று அல்லாஹ்வே தெளிவா அந்த வாசகத்தில் சொல்லி இருக்கின்றானே! தனிப்பட்ட முறையில் தானம் செய்வதை விட்டுவிட்டு, ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சமூக சீரமைப்பு செய்யச் சொல்வதேன்?
ஷைத்தான் : குர்ஆனை நன்றாக ஆராய்பவர்களுக்குத் தான் இந்த உண்மை எல்லாம் விளங்கும். நான் தான் மக்களுடைய காதுகளில் பூட்டை மாட்டி விட்டேனே! (2:88) இனி எங்கே குர்ஆனிலிருந்து அறிவுரைப் பெறுவது?
நேயர் : பொது மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட மூஃமின்களுக்காவது தெரிந்திருக்குமே?
ஷைத்தான் : மூஃமின்களில் சிலர்தான் என் பேச்சை கேட்கவில்லை. மற்றபடி அவர்களில் பெரும்பாலோர் என் பேச்சை கேட்டு நடக்கிறார்கள். (34:20) அது மட்டுமின்றி நேர்வழி இன்னதென்று தெளிவான பின்பும் அவர்களிடையே தவறாக எண்ணங்களை அழகாகக் காட்டுவதில் எனக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. (47:25)
நேயர் : சமுதாயத்தினரிடையே உலோபித்தனம் வளர்ந்தால், ஆட்சி அதிகாரம் எல்லாம் கைவிட்டு போய்விடும் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளானே (47:38)
ஷைத்தான் : ஏம்பா? கஷ்டப்பட்டு சம்பாதிப்பதிலிருந்து தம் தேவைக்கு போக மிகுதியானவற்றை எல்லாம் தர்மமாக கொடுத்துவிடச் சொல்வது நியாயமா? (2:219) அதனால் 2.5% கொடுத்தா போதும் என்று முஹம்மது நபி சொன்னதாக அறிவிப்பு செய்ய வைத்தேன். அதுவும் பொன், வெள்ளி மற்றும் கைஇருப்பு பணம் ஆகியவற்றிலிருந்து மட்டும் 2.5% கொடுத்தால் போதும். அதுவும் அந்த பொருட்களை வாங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்ய வைத்தேன்.
நேயர் : ஏம்பா? விவசாயம் செய்கிறார்களே. அல்லாஹ் படைத்த நீர், நெருப்பு, காற்று, பூமி மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் உதவியைக் கொண்டுதானே விவசாயம் செய்து ஒன்றுக்கு நூறு மடங்கு மகசூலைப் பெற முடிகிறது. (56:63-73) எனவே விவசாயத்திற்கு செய்த உழைப்பு போக மிகுதியானவற்றை மக்கள் நலத் திட்டத்திற்காக கொடுக்கச் சொல்ல அல்லாஹ்வுக்கு உரிமை இல்லையா? அதுபோலத் தான் மற்ற எல்லா துறையைச் சேர்ந்த சம்பாத்தியங்களும். அது போக எல்லாவற்றையும் கொடுத்து விட்டு நிர்கதியாய் நிற்கச் சொல்லவில்லையே!
ஷைத்தான் : இதை எல்லாம் யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்றுதானே நான் ரிவாயத்து (System) சிஸ்டத்தை அறிமுகப் படுத்தினேன். நபி சொன்னதாக எதை சொன்னாலும் அதை முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளத் தயார். இதுவே எனக்கு கிடைத்த அருமையான சாதனம். அதை வைத்து ஏரக்குறைய 1200 ஆண்டுகளாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். சொத்து செல்வத்திலிருந்து ஒரு முறை கொடுத்தாலே போதும் என்றும் அண்மையில் ஒரா தலைவரை வைத்து அறிவித்தேன். எல்லாம் எங்களுடைய இஷ்டம். நீங்க வீணா குட்டையை கலக்காதீங்க.
நேயர் : ஆமா . . . 2.50% தர்மம் கொடுத்தா போதும் என்று எப்படி மக்களை புரிய வைச்சே?
ஷைத்தான்: அதுவா ரமலான் மாசத்துல தர்மம் கொடுத்தா ஒண்ணுக்கு எழுபது மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னதாக சொல்லி வுட்டேன்.
நேயர் : அது எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
ஷைத்தான் : அதாவது ஒரு லட்சம் பெருமானம் உள்ள பொருளுக்கு ரூ.2500/- தர்மம் கொடுத்தால் போதும். அது 70 மடங்காகப் பெருகி அதாவது 2500X70 ரூ.175000 கொடுத்ததற்குச் சமம் ஆகிவிடுகிறது. இப்படித்தான் நபிகளார் சொன்னதாக ஒவ்வொரு வருடமும் அறிவிப்பு செய்து வைக்கிறேன்.
நேயர் : என்னையா நியாயம்? அது எப்படியா உண்மையாகி விடும்? இப்படி எல்லாமா மார்கத்தை சொதப்பி விட்டே? இதன் விளைவாக சமுதாய சமன்பாடு சீரழிந்து வருகிறதே!
ஷைத்தான் : இதைக் கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?. எல்லாம் அல்லாஹ் விதித்த விதி என்று சொல்லி பலரை ஏமாற்றி மனசை தேற்றிக் கொள்ள வைக்கிறேன்.
21. நீதித் துறையும் ஷைத்தானும்
நேயர் : குற்றங்களுக்கு தண்டனை அளிப்பது நீதிமன்ற விவகாரம் ஆயிற்றே. அதைப் போயி பழி தீர்த்துக் கொள்வது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக மொழி பெயர்க்கச் சொல்லி இருக்கிறாயே! (2:178)
ஷைத்தான் : அப்படி மொழிபெயர்க்க சொன்னதே நான் தான்.
நேயர் :இப்படி மொழிபெயர்த்து கொடுத்து விட்டால் அவனவன் ஒருவனையொருவன் அடிச்சிக்கிட்டு சாக மாட்டானா? அவ்வாறு சாவதை அல்லாஹ்வே விரும்புவதாக எண்ணிக் கொள்ள மாட்டானா? ஏற்கனவே மூஸா நபி விஷயத்திலும் இப்படித்தான் மொழி பெயர்க்க செய்துள்ளாய்.(2:54)
ஷைத்தான் : என்னாப்பா நீ? அல்லாஹ்விடம் நான் செய்த சேல்லன்ஜை (Challenge)ஐ அடிக்கடி மறந்து விடுகிறாயே! மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனை வழிகெடுத்துக் கொண்டே இருப்பேன் என்று சொன்னேன் அல்லவா? (7:17) அதன்படி தானே நான் செய்கிறேன்?
நேயர் : மக்களிடையே ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்க நியாயமாக முறையில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டுள்ளானே. இது ஒரு தலைசிறந்த உபதேசம் என்றும் அறிவிக்கின்றானே! (4:58)
ஷைத்தான்:இது சரியல்ல. நீதி நியாயம் என்பதெல்லாம் செல்வந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவா இருக்கனும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு இருக்கக் கூடாது என்று எல்லா வேதங்கள் மூலமும் அல்லாஹ் அறிவித்துள்ளான். ஆனால் அல்லாஹ் எதை தடுத்துள்ளானோ அதையே செய்து வரும்படி ஏவி வருகிறேன். இவ்வாறு வேத ஞானிகளை நேர்வழியை விட்டு வெகுதூரம் வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறேன். (4:60)
நேயர் : நீதிமன்ற விஷயத்தில் பகை கூட்டதைச் சேர்ந்தவரானாலும் சரியே. உண்மைக்கு சாட்சி சொல்லும்படி அல்லாஹ் சொல்லி இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்? (5:8) தன்னை இயன்றெடுத்த தாய் தந்தை என்றோ, ஏழை பணக்காரன் என்றோ பாகுபாடு இல்லாமல் உண்மை எதுவோ அதற்கு சாட்சியாக நிற்கும்படி அல்லாஹ் அறிவுருத்தி இருக்கின்றானே (4:135) இதை எல்லாம் விட்டுவிட்டு பழிதீர்த்துக் கொள்ளச் சொல்வது எவ்வளவு பெரிய அநியாயம்?
ஷைத்தான் : என்னாப்பா நீ? நீதி மன்றத்திற்கு போய், பணம் காசு செலவு செய்து, வழக்கு தொடர்ந்து, அதன்பின் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, குற்றங்களுக்கு ஆதரவாக ஆதாரங்களை திரட்டி, நீதி கிடைக்கற்துக்குள்ளே 15 முதல் 20 ஆண்டுகள் ஆகிவிடும். அவ்வப்போது சாட்சிக்காகவும் அழைப்பு விடுவார்கள். அதன்பின் நீதிபதிக்கு எது சரி என்று தோணுதோ, அதன்படியே தீர்ப்பு சொல்லிவிடுவார். (4:60). இதெல்லாம் தேவையா? தப்பு செய்தானா? ஸ்பாட்லியே தண்டனை கொடுத்தோமா? விவகாரத்தை அங்கியே முடிப்பா. அவ்வளவுதான். அதனால் தான் அப்படி மொழி பெயர்க்கச் சொன்னே.
நேயர் : அல்லாஹ் இறக்கி அருளியுள்ள வேத அறிவுரைகளின் படியே நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கும்படி நபிமார்களுக்கு அறிவுருத்தி இருக்கிறான். (5:49) மக்களுடைய ஆசாபாசங்களுக்கு இணங்கி தீர்ப்பு அளிக்காதீர்கள் என்றும் சொல்லி இருக்கிறான். இவ்வாறு இருக்கும் போது, மக்கள் ஏன் இதை மறந்து விட்டார்கள்.?
ஷைத்தான் : அல்லாஹ் இறக்கி அருளிய வேத அறிவுரையின்படி தீர்ப்பு அளிக்காத பாவிகள் எல்லாம் என் சக தோழர்கள் (5:47). அத்தகைய காஃபிர்கள் எல்லாம் என் உற்ற நண்பர்கள் (5:44). அத்தகைய அநியாயக்காரர்கள் எல்லாம் என் சொந்தக்காரர்கள் (5:45). இத்தகையவர்களை வைத்துக் கொண்டே உலகில் நீதி மன்றத்தை அநியாயமாக நடத்தி வருகின்றேன்.
22. ஷைத்தானும் சூனியமும்
நேயர் : சுலைமான் நபி மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாக அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் அறிவிக்கின்றானே! (38:35) ஆனால் அவர் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயல்பட்டதாக உன்னைப் பின்பற்றியவர்கள் புரளியை கிளப்பி இருக்கிறார்களே (2:102) இது என்ன நியாயம்?
ஷைத்தான் : அது மட்டுமா? பாபிலோன் நகரில் ஹாரூத் மாரூத் என்னும் இரு மலக்குகளை அல்லாஹ்வே அனுப்பியதாகவும், அவர்கள் தாம் சூனியத்தை கற்றுக் கொடுத்ததாகவும் புரளிகளை பரப்பச் செய்தேன். இதை மக்களும் உண்மையே என நம்பி விட்டார்கள். (2:102)
நேயர் : அடப்பாவமே! அவ்விருவரும் பெரும் சோதனையாக இருப்பதாக அறிவித்ததும் புரளிதானா? “சூனியத்தைக் கற்று நீங்கள் காஃபிர்கள் ஆகிவிட வேண்டாம்” என்று மக்களிடம் சொல்லி ஏக்கத்தை ஏற்படுத்திய பின்னரே கற்றுக் கொடுத்ததாகச் சொல்வதும் புரளிதானா? (2:102)
ஷைத்தான் : ஆமாம்பா. ஆமாம். சூனியம் செய்யும் வித்தையை கற்று கணவன் மனைவியிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடலாம் என்றும் மக்களை நம்ப வைத்தேன். (2:102)
நேயர் : சூனியத்தை கொண்டு அவ்வாறு யாருக்கும் எந்த தீங்கும் இழைக்க முடியாது என்று அல்லாஹ் தீர்க்கமா அறிவித்து விட்டானே! அதன் பிறகு என்ன? (2:102)
ஷைத்தான் : அல்லாஹ் அப்படி சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் “தன் கட்டளையின்றி” என்று அரைப்புள்ளியை வைத்து விட்டான் அல்லவா? அதை வைத்து அவன் சில சமயம் அனுமதிப்பான் என்றும் சூனியம் பலிக்கும் என்றும் அறிவித்து விட்டேன். (2:102)
நேயர் : அல்லாஹ்வின் கட்டளை என்பது நிலைநிறுத்தப்பட்ட كُنْஎன்ற நிலையான சட்டம் என்றுதானே பொருள். அதாவது மனைவிக்கு எதிராக ஏதாவது சந்தேகத்தை கிளப்பி அதைக் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்திடலாமே.
ஷைத்தான் : மாய மந்திரத்தால் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்க முடியாது என்று எனக்கும் தெரியும். அந்த “சூனிய வித்தை” என்று கற்றுக் கொண்டவனுக்கும் தெரியும். (2:102) ஆனால் கணவனை புரளியை நம்ப வைத்து தகராறை ஏற்படுத்தலாம் அல்லவா? (2:102)
நேயர் :இந்த சூனிய வித்தையை வான சாஸ்திரம் என்றும் சொல்லி மக்களை நம்ப வைத்துள்ளாயே இது சரியா? (72:8) உண்மையை சொல்.
ஷைத்தான் : ஆமாம்பா. அப்படி சொல்லித்தான் மக்களை நம்ப வைத்தேன். ஆனால் வானத்தை கடந்து என்னால் செல்லவே முடியாது என்பதுதான் உண்மை. (37:7)
நேயர் : இக்காலத்தில் அவ்வளவா சூனியத்தின் பாதிப்புகள் இல்லையே! இதை முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும்.
ஷைத்தான் : விஞ்ஞான கல்வி வளர வளர சூனிய விஷயத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பாமர மக்களிடையே இன்னமும் இதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறேன். அதை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் குர்ஆனுடைய முழுஞானம் வளர வேண்டும்.(17:82)
நேயர் : சில சமயங்களில் சிலருக்கு பேய்ப் புடிச்சிருக்குன்னு சொல்றாங்களே! சிலருக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு என்று சொல்றாங்களே! அங்கே ஏதாவது நீ செஷ்டை செய்றியா?
ஷைத்தான் : என்னப்பா நீ? உலகம் முழுவதும் மக்களை நான் ஆட்டிப் படைக்கிறேன். எல்லாமே என் சொல்படி தான் நடக்குறாங்க. இதுக்கும் மேலே பேய் ஏதாவது ஸ்பெஷல்லா வந்து பிடிக்கனுமா?
நேயர் : தீயவர்கள் இறந்த பின் அவர்களுடைய ஆவி உலகில் சுற்றிக் கொண்டு, தம் எதிரியை பழி தீர்த்துக் கொள்ளும் என்கின்றார்களே. இப்படி சொல்லி சிலர் சினிமாப் படம் எல்லாம் எடுக்கிறாங்களே.
ஷைத்தான் : மனிதன் உயிருடன் இருக்கும் வரையில் நற்செயல் எதையும் செய்ய முடியாத படி பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு தான். காரணம் இறந்த பின் மனிதனால் எதுவுமே செய்ய முடியாது. அவனுக்கும் அவனுடைய நஃப்ஸ் نَفْسٌ என்கின்ற ஆவிக்கும் இடையே திரை ஏற்பட்டு விடுகிறது. (23:100) மற்றபடி சினிமாவில் காட்டுவதெல்லாம் என் சார்பாக உருவான யூகங்கள் மற்றும் கற்பனை கதைகளே!
நேயர் : அப்போ பேய் புடிச்சிருக்குன்னு சொல்றதுல்லாம் உண்மை இல்லையா?
ஷைத்தான் : சிலருக்கு பணப் பைத்தியம் பிடிச்சிருக்கும். சிலருக்கு காதல் பைத்தியம், சிலருக்கு காமப் பைத்தியம், சிலருக்கு சூதாட்ட பைத்தியம், சிலருக்கு பதவிப் பைத்தியம் பிடிக்கும். இப்படித்தான் அவர்களோடு திறைக்கு மறைவாய் இருந்து அவர்களை ஆட்டிப் படைக்கிறேன. அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் விரக்தியுடன் பேய் பிடித்திருப்து போல் இருப்பார்கள். இதனால் புத்தி தடுமாறி, நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்தி இல்லாத ஆட்டத்தை எல்லாம் போட வைப்பேன். அவ்வளவுதான்.
நேயர் : சிலர் தாயத்து பலீதா தகடு எல்லாம் செய்து தருகிறார்களே! இவை எல்லாம் உன் சேஷ்டையா?
ஷைத்தான் : அதுவா? எப்போதாவது உங்கள் மனதில் தவறான எண்ணங்களை ஊசலாடச் செய்து, தீய செயலை செய்ய தூண்டினால் அல்லாஹ்விடம் فَسْتَعِذْ بِاالّله பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆனில் 7:200 வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து تعؤيذ “தாயத்து” என்ற வார்த்தை வருகிறது. எனவே திருக்குர்ஆனின் வாசகங்களை எழுதி தாயத்துகளையும் தகடுகளையும் செய்து கொடுத்து விட்டேன்.
நேயர் : அடப் பாவி! இதனால் மக்கள் தம் ஆற்றலைக் கொண்டு சிறப்பாக உழைப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கையில் அல்லவா மூழ்கி விடுவார்கள்?
ஷைத்தான் : அதுதானப்பா எனக்குத் தேவை. எந்தெந்த சூராவுக்கு (அத்தியாயம்) என்ன பலன்கள் என்றும் எழுதி திருக்குர்ஆனிலேயே இணைத்து விட்டேன். அதை எண்களைக் கொண்ட அட்டவணையாகவும் போட்டு விட்டேன். அந்த எண்களை எழுதி தகடு செய்து கடைகளில் மாட்டி விட்டால் போதும். கடை ஓஹோ ஆஹா என்று பேஷா ஓடும் என்று ஏமாற்றி வருகிறேன். மக்களும் ஏமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்பொ உங்களுக்கு என்ன வந்தது?
நேயர் : நீ நபியைக் கூட விட்டு வைக்கவில்லையே! முஹம்மது நபியையே யாரோ சூனியம் செய்ததாகவும், அச்சூனியத்திலிருந்து விடுபட சில சூராக்களை அல்லாஹ் இறக்கி அருளியதாகவும் அல்லவா கதை கட்டி விட்டிருக்கே?
ஷைத்தான் : வேடிக்கை என்ன தெரியுமா? சூனிய வித்தைகள் செல்லாது என்று அறிவிப்பவர்களை வைத்தே நபிமார்கள் அற்புதத்தை (சூனிய வித்தைகளை) நிகழ்த்திக் காட்டினார்கள் என்று அறிவிக்க வைத்ததைப் பாருப்பா! அதுவும் ஒரு வகையில் கண்கட்டி வித்தைதான் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி விடுவதை பாருப்பா.
சூனியக்காரர்கள் தனி நபரின் சிந்தனா சக்தியைத் போக்கி, சூனியத்தை நம்ப வைப்பார்கள். அற்புத நிகழ்ச்சிகள் என்பது (Magical Porgrammes) திரளான மக்களின் சிந்தனா சக்தியை கண் இமைக்கும் நேரத்தில் செயலிழக்கச் செய்து மந்திரவாதிகள் காட்டுகின்ற வித்தைகளாகும்.இவ்வளவு தான் வித்தியாசம்!
நேயர்: கவனித்தீர்களா? ஒருவர் தீய செயலை செய்ய முற்படும்போது, அதனால் ஏற்படுகின்ற பின் விளைவுகளை எண்ணிப் பார்த்து அதிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அல்லாஹ் அறிவுருத்துகின்றான். ஆனால் ஷைத்தானோ தாயத்து தகடு என்று சொல்லி மக்களின் சிந்தனா சக்தியை நிரந்தரமாகச் செயலிழக்க செய்து விட்டான்.
ஷைத்தான் : இது போதும் எனக்கு. நான் மிகவும் திருப்தியோடு இருக்கிறேன். எப்போது தான் அல்லாஹ் அறிவித்த அழிவுகள் வருமோ என ஆவலோடு காத்திருக்கிறேன்.
23. திருக்குர்ஆனின் முதஷாபிஹாத் வசனங்கள்?
நேயர் : ஆமாம்பா. அதற்குத் தகுந்தாற் போல் திருக்குர்ஆனின் “முதஷாபிஹாத்” என்னும் உவமை வடிவில் சொல்லப்பட்ட வாசகங்களை (3:7) நேரடி அhத்தத்தைக் கொடுத்து ஜீபூம்பா வித்தைகளை நபிமார்கள் செய்து காட்டினார்கள் என்றும் நம்ப வைத்துள்ளாயே!
ஷைத்தான் : ஈரானியர்கள் சூனியக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். அவர்களை வைத்து திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு செய்ய வைத்தேன். அவர்களும் இத்தகைய வாசகங்கள் எல்லாம் தமக்கு சாதகமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
நேயர் : ஏதாவது ஒரு வாசகத்தை எடுத்துரைத்து விளக்கம் கொடுப்பா?
ஷைத்தான் : அல்லாஹ்வின் மீது உண்மையைக் கொண்டு சன்மார்க்கத்தை ஃபிர்அவுனிடம் எடுத்துரைத்து அவனை திருத்த மூஸா நபி (7:105) சென்றார். மார்க்க உண்மைகளைக் கேட்டு மலைத்து போன ஃபிர்அவுன், தம் சாம்ராஜ்ஜியத்தையே விழுங்கும் மலைப் பாம்பாக இருப்பதைக் கண்டு பயந்தான். (7:107) ஆனால் மூஸா நபி கொம்பு போட்டதும் மலைப் பாம்பாகி விட்டது என்று நான் மொழி பெயர்க்க வைத்து விட்டேன்.
நேயர் : அடப்பாவி! அதனால் தான் இப்போதும் மக்கள் அவர் செய்து காட்டியது மிகப் பெரிய அற்புதம் என நம்பி, அதைப் பற்றி பெருமையாகப் பேசி பேசியே தம் நேரத்தையும் சிந்தனா சக்தியையும் வீணடித்து வருகிறார்களா? இவ்வளவு குர்ஆனைப் படித்து தெரிந்து கொண்ட நீ ஏன் இப்படி செய்றே?
ஷைத்தான் : முஹம்மது நபியின் சித்தப்பா அபூலப்புக்கு அரபி மொழி தெரியாதா? அல்லது குர்ஆன் புரியாதா? அவரே ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? எது எப்படியோ! மக்களில் எவரும் திருக்குர்ஆனைப் படிக்கக் கூடாது. அப்படியே படித்தாலும், அதை அவன் எளிதில் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படியே புரிந்தாலும் அதை மக்கள் மத்தியில் அறிவுப் பூர்வமாக எடுத்துரைக்கக் கூடாது. அப்படியே எடுத்துரைத்தாலும் அது இக்கால மக்களுக்கு பொருந்தாத விஷயங்களாக இருக்க வேண்டும். அப்படியே பொருந்துகின்ற விஷயங்களாக இருந்தாலும் அவை சடங்கு சம்பிரதாயங்கள் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். அவற்றையும் மற்றவர்கள் பார்த்து வஞ்சப் புகழ்ச்சி செய்து வரவேண்டும். அதை புரியாத இறை நம்பிக்கையாளர்கள் பெருமிதப் படுத்திக் கொள்ள வேண்டும். இப்படித்தான் …. இப்படித்தான் என் கை வரிசை.
24. அல்லாஹ் நாடியது என்ன?
நேயர் : அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் ஆட்சிதான் செயல்பட்டு வருகிறது. (5:17) மனித உலகிலும் தன்னுடைய ஆட்சி நடை பெறவேண்டும் என்று அல்லாஹ் நாடுகிறான். (12:40)
ஷைத்தான் : அப்படி ஒரு ஆட்சியமைப்பு இவ்வுலகில் நிலை நிறுத்தி விட்டால் அது மிக மிக பாக்கியமிக்க நாடாக விளங்கும் (67:1) மேலும் உலகம் முழுவதும் போற்றி பாராட்டுவார்கள். ஆனால் அது எனக்கு சிக்கலை உண்டாக்கி விடும்.
நேயர் : அப்படிப்பட்ட மக்களும் ஆட்சியும் இவ்வுலகில் உருவாகி விட்டால் ஆதம் இழந்த சுவனத்தை அந்த நாடு மீண்டும் ஈட்டிக் கொள்ளும் அல்லவா? (2:25)
ஷைத்தான் : இதை இலகுவாகக் கிடைக்கும்படி செய்வேனா? அனைவரையும் படாத பாடுபடுத்தி பலவலையில் கஷ்டப்படுத்துவேன். அதையும் மீறி அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து பாடுபட்டு வந்தால்தான் நான் விலகிக் கொள்வேன். காரணம் மலக்குகளுடைய உதவி கிடைத்து வரும்.(41:30-31)
நேயர் :இப்படியாக உலக அரங்கில் அல்லாஹ்வின் பெயர் மேலோங்க வேண்டும் என்று விரும்புகிறேன். (2:185, 22:37)
ஷைத்தான் : இதெல்லாம் நடக்காதவாறு 1200 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறேன். உன்னால் மட்டும் என்ன ஆகப்போகுது?
நேயர் : உன்னைப் பற்றிய உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புர்ணர்ச்சி ஏற்பட பாடுபடுவேன்.
ஷைத்தான் : உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். முதலில் என் பலத்தைப் பற்றி நன்றாக தெரிந்து கொள். அதன் பிறகும் தைரியம் இருந்தால் எனக்கெதிராக செயல்படு.
நேயர் : உன்னுடைய பலம் என்னவென்பதை இதுவரையில் உம்மோடு பேசுகையில் அறிந்து கொண்டேன். சிந்தனையாளர்களும் அறிந்து கொள்ளட்டும். அதையும் அறிவித்துவிடு.
ஷைத்தான் : எனக்கு ஆதரவாக செல்வந்தர்களும் (11:62) சமுதாயத் தலைவர்களும் (2:14,11:27) ஆட்சியாளர்களும் (11:97) மத குருமார்களும் (26:70) செயல் படுவார்கள். இவர்களை எல்லாம் எதிர்த்து உன்னால் என்னை வெல்ல முடியுமா?
நேயர் :இவர்களை எல்லாம் வெல்லக் கூடிய அல்லாஹ் எனக்கு பக்கபலமாக இருக்கும் போது, எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. உன் படைகளை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (58:19)
முடிவுரை : சிந்தனையாளர்களே! ஷைத்தானைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உரையாடல் வடிவில் திருக்குர்ஆனிலிருந்து எடுத்துரைத்துள்ளோம். ஏனெனில் ஏதோ ஒரு காலத்தில் அல்லாஹ் ஆதமை படைத்து, அவர் முன் ஸஜ்தா செய்யும் படி ஷைத்தானிடம் சொல்லி அதை மறுத்து விட்டதாக சொல்வார்கள். அதன் பின் சுவனத்தில் இருந்த ஆதமை கெடுத்து அங்கிருந்து வெளியேற்றி விட்டதாக சொல்வார்கள். அத்துடன் நமக்கும் ஷைத்தானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் கவலையற்று இருந்து விடுவார்கள். ஆனால் மனித வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஷைத்தானின் கைவரிசை இருந்துகொண்டு மனித வாழ்வை எவ்வாறு நரகமாக்கி வருகிறது என்ற உண்மை மேற்சொன்ன உரையாடல் மூலம் தெளிவாகி இருக்கும் என நம்புகிறோம்.
சிந்தனையாளர்களே! இனியாவது திருக்குர்ஆனின் தெளிவுரை வாங்கிப் படித்து வேத ஞானத்தின் படி வாழ முயற்சி செய்யுங்கள். நமக்குள் செயல்படும் ஷைத்தானை அடையாளங் கண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்.