بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை
وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ.
2:50. உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம் (என்பதையும் நினைவுகூருங்கள்).
சூரத்துல் பஃக்ரா என்ற அத்தியாயத்தில் வரும் இவ்வாசகத்தின் மொழிபெயர்ப்பைக் கவனிக்கும் போது, மூஸா நபி அவர்கள் தம் சக தோழர்களுடன் நாட்டை விட்டு சென்ற போது, குறுக்கே இருந்த கடலைப் அல்லாஹ் பிளக்கச் செய்து, அவர்களைக் கடக்க செய்து, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஃபிர்அவ்னையும் அவனது படையையும் பிளவு பட்ட கடலை ஒன்றிணைத்து அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தது போலவும் தோன்றுகிறது.
இப்படி ஒரு சம்பவம் எப்போதோ ஒரு காலத்தில், மேற்காசியாவில் உள்ள சூயெஸ் கால்வாயைக் கடந்த போது நடந்தது போலவும், இப்போது அவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்றும் பலர் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். சூயெஸ் கால்வாய் என்பதெல்லாம் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது கிழக்காசிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழி பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக வெட்டப்பட்ட கால்வாய் தான் சூயெஸ் கால்வாய் என்பதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆஃப்ரிக்க கண்டத்தைச் சுற்றி ஏறக்குறை 5000 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டி இருக்கும்.
எனவே மூஸா நபி அவர்கள் கடந்து சென்ற கடல் பகுதி அதுவல்ல என்று தெளிவாகிறது. இப்போது எழுகின்ற கேள்வி வேறு எந்தக் கடலைக் கடந்து சென்றார் என்பதே. சரி உண்மை என்னவென்பதை பார்ப்போம்.
2.மூஸா நபி கடந்தது நைல் நதியைத் தான்
முதலில் 20ஆவது அத்தியாயத்தின் 77ஆவது வாசகத்தைக் கவனியுங்கள். அங்கு ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
وَلَقَدْ أَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِى فَٱضْرِبْ لَهُمْ طَرِيقًۭا فِى ٱلْبَحْرِ يَبَسًۭا لَّا تَخَٰفُ دَرَكًۭا وَلَا تَخْشَىٰ.
20:77. “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காகக் கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்து விடுவான் என்று பயப்படாமலும், அஞ்சாமலும் இருப்பீராக!"" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
விளக்கம் :
அதாவது எகிப்து நாட்டில் ஆட்சி செய்து வந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பித்து, செழுமை மிக்க இடமாக இருந்த பாலஸ்தீன நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுக் கொள்ள இறைச் செய்தி வந்தது. அவ்வாறு செல்லும் போது குறுக்கே வருவது நைல் நதியாகும். எனவே அதன் குறுக்கே ஒரு பாலத்தைக் கட்டிக் கொள்ள இறைவன் புறத்திலிருந்து வஹீச் செய்தி வந்தது.
எகிப்து நாட்டு எல்லைப் பகுதியில், நைல் நதி மிகவும் குறுகலாகவும் ஆழமாகவும் இருக்கும் இடத்தில், தன் தோழர்களுடன் யாருக்கும் தெரியாதவாறு பாலத்தைக் கட்டிக் கொள்ள மூஸா நபிக்கு வந்த அறிவுரையே அது. அவ்வாறு அந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு சில மாதங்கள் கூட ஆகி இருக்கலாம்.
இப்படியாக அவர்கள் திட்டமிட்டபடி இரவோடு இரவாகச் (இரகசியமாக) பயணத்தை மேற்கொண்டு அந்த நைல் நதியைக் கடந்து சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தைப் 10:90 வாசகத்தில் இவ்வாறு வருகிறது.
وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْر
10:90 மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்,
இவ்வாறு அவர்கள் புறப்பட்டுச் சென்றதை அறிந்த ஃபிர்அவன் அவர்களைப் பிடித்து கொன்றுவிட மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றான். இதைப் பற்றி 26:60இல் இவ்வாறு சொல்லப்படுகிறது.
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ.
26:60. பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ.
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் எதிரே கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்"" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
அதவாவது ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் நதியின் மறு கரையில் வந்து சேர்ந்துள்ளதைக் கண்ட மூஸா நபியின் தோழர்கள் பயந்து நாம் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் பதறிப்போய் விட்டார்கள். இதற்கு மூஸா நபியின் ஆறுதல் பேச்சு அவர்களை தைரியமூட்டியது.
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ.
26:62. அதற்கு (மூஸா), ""ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்"" என்று கூறினார்.
அதாவது ஃபிர்அவ்ன் தன் படைகளோடு பின் தொடர்வான் என்ற செய்தி அவருக்கு ஏற்கனவே கிடைத்திருந்து. எனவே இறைவனின் அறிவிப்பு ஒருபோதும் தவறாக இருக்காது. அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற திட்டமும் அவரிடம் இருந்தது.
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍۢ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ.
26:63. உம் சகத் தோழர்களுடன் நதியைக் கடந்துச் சென்று விடுங்கள்" என்று மூஸாவுக்கு வஹீ ஏற்கனவே வஹீ அறிவித்தோம். மேலும் அந்நதி மிகவும் ஆழமாக இருக்கும். அதன் இரு கரைகள் பெரும் மலை போன்று இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இதை இன்னொரு இவ்வாறு வருகிறது.
فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ. وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌۭ مُّغْرَقُونَ.
44:23&24 “என் அடியார்களை (அழைத்துக்) கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க, நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்"" (என்று இறைவன் கூறினான்). அன்றியும், அக்கடலை பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும். நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் என்று வஹீச் செய்தி இருந்தது.
கவனித்தீர்களா? அல்லாஹ்வின் அடியார்களை – அதாவது மூஸா நபியின் தோழர்களை அழைத்துக் கொண்டு சென்று விடும்படியும், குறுக்கே அந்த இடத்தில் பெரும் பிளவு இருக்கும் என்று இறைச் செய்தி வந்தது. அந்தச் செய்தியின் படிதான் அவர் தன் தோழர்களுடன் குறுக்கே பாலத்தைக் கட்டி அதன் வழியாக அந்த நதியைக் கடந்து சென்று விட்டனர்.
இருந்தும், ஃபிர்அவ்ன் தன் படையினரோடு பின் தொடர்வான் என்ற செய்தியும் இருந்ததால் அவனுக்குச் சரியான பாடத்தை புகுட்ட வேண்டும் என்பதற்காக நதியின் மறு கரையில் தன் தோழர்களுடன் மூஸா நபி, அவனுடைய வருகையை எதிர் பார்த்து காத்திருந்தார். அதன்படி அவனும் வருகையில், தோழர்கள் பயந்து விடுகிறார்கள். காரணம் அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்ற ரகசியத்தை யாருக்கும் வெளிப்படுத்த வில்லை. படைத் தளபதிகள், அரசர்கள் எல்லாம் இவ்வாறே நடந்து கொள்வார்கள். இன்றைக்கும் எதிரியை தாக்கும் திட்டத்தை அரசு பரம ரகசியமாகவே வைத்துக் கொள்ளும். காரணம் அதை வெளிப்படுத்தினால் அதனால் எதிரிக்கு சாதகமாகப் போய்விடும்.
ஆக ஃபிர்அவ்ன் நதியைக் கடந்த போது, அந்த பாலத்தின் பிடியை மூஸா நபி அறுத்து விட்டார். எனவே ஃபிர்அவ்னின் படைவீரர்கள் நிதானத்தை இழந்து அந்த நதியில் விழுந்து மூழ்கி விட்டார்கள். ஃபிர்அவ்ன் மட்டும் பாலத்தின் பிடியில் தொங்கியவாறு இவ்வாறு கூறினான்.
حَتَّىٰٓ إِذَآ أَدْرَكَهُ ٱلْغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِىٓ ءَامَنَتْ بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلْمُسْلِمِينَ
10:90 அவன்: ""இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன், இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்"" என்று நதியில் மூழ்கும் தருவாயில் கூறினான்.
அதற்கு மூஸா நபி இவ்வாறு கூறினார்.
ءَآلْـَٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ ٱلْمُفْسِدِينَ.
10:91. ‘இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்?) சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய், இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்” என்று மூஸா நபி கூறினார்.
விளக்கம் :
இப்போது மரணத் தருவாயில் தானா ஈமான் கொள்வதாக சொல்கிறாய்! உன்னை நம்பி ஒரு பலனும் கிடையாது நீ மூழ்கவேண்டியவர்களின் ஒருவனாகத் தான் இருக்கிறாய் என்று கூறிய அவர், ஃபிர்அவ்னின் பிடியை தடுமாற வைத்து நதியில் அவனை தூக்கி எறிந்து விட்டார். திருக்குர்ஆனின் வார்த்தையில் கவனியுங்கள்.
3.ஃபிர்அவ்னை நதியில் வீசி எறிந்தோம்.
فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌۭ.
51:40. ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம், அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
فَٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ فِى ٱلْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ.
7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் ஆழ்நதியில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ.
28:40. ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம், பிறகு அவர்களைக் ஆழ்நதியில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம், ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே) நீர் கவனித்துக் கொள்ளும்.
فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلْيَمِّ مَا غَشِيَهُمْ.
20:78. மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான், ஆனால் ஆழமான நதி அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.
மேற்சொன்ன வாசகங்களில் بحر “பஹர்” என்ற வார்த்தைக்குப் பதிலாக ٱلْيَمِّ “எம்மி” என்ற வார்த்தை பயன் படுத்தப்படுள்ளது. “எம்ம்” என்றால் ஆக்ரோஷமாய் பாய்ந்து ஓடும் வெள்ளம் என்று பொருளாகும். அதாவது நதி குறுகலாக இருக்கும் இடத்தில் நீரின் வேகம் மிகவும் அதிகமாகவும் சுழச்சியுடனும் இருக்கும். மேலும் நதி மிகவும் ஆழமாகவும் இருந்ததால் யாராலும் தப்பிக்கவே முடியாது.
4.மூஸா நபியின் அஸா
மேற் சொன்ன விளக்கங்களிலிருந்து மூஸா நபி நபியைக் கடந்த சம்பவம், ஒரு தீவிரமான திட்டத்துடன் நிறைவேறிய நிகழ்ச்சியே ஆகும் என்ற உண்மை தெளிவாகி இருக்கும். அன்றி, இரவோடு இரவாகச் சென்று, அதன் பின் அல்லாஹ் கடலைப் பிளந்து அதைக் கடக்கச் செய்து, ஃபிர்அவுனை மூழ்கடிக்கச் செய்த ஒரு மாய மந்திர செயல் அல்ல என்ற உண்மையும் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். உண்மை இவ்வாறு இருக்கும் போது மூஸா நபிக்கு தடியைக் கொண்டு கடலை அடிக்கச் சொன்னதாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ
26:63 உமது தடியால் கடலை அடிக்கும் படி நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது, (பிளவு கண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
இந்த வாசகத்தில் بِّعَصَاكَ பிஅஸாக என்ற வார்த்தைக்கு உன் கைத் தடி என்றும் وضْرِب வஜ்ரிப் என்பதற்கு அடிக்கும் படியும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். காரணம் அரம்ப காலக் கட்டத்தில், இருந்த மொழி பெயர்ப்பாளர்கள் யாவரும் ஈரானைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். அவர்கள் மாய மந்திர வேலைகளில் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். எனவே நபிமார்களும் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளதாக பலப் புராணக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். அதையே முஸ்லிம்கள் மத்தியிலும் பெருமையுடன் சொல்லிக் காட்டி பெருமிதம் அடைவார்கள். அந்தக் கதைகள் எல்லாம் இந்தியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் பரவி விட்டது.
இதற்காக அவர்கள் பல வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதாவது முஸ்லிம் அல்லாதவர்கள் ஏதாவது விசித்திரமான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினால் மாய மந்திரம் என்பார்கள். அவ்லியாக்கள் செய்து காட்டினால் கராமத் என்பார்கள். நபிமார்கள் செய்து காட்டியவை ""மோஜிஸா"" - அற்புதங்கள் என்பார்கள். இவை எல்லாம் வார்த்தை ஜாலங்களாகும். சிந்தித்துப் பாருங்கள். அவை எல்லாமே மாய மந்திர தந்திரங்ளே ஆகும். ஆனால் திருக்குர்ஆனை பொருத்தவரையில் உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவே உலகிற்கு வருகை தந்தார்கள் என்று பல முறை கூறுகிறது. மாய மந்திர வேலைகளை நிகழ்த்திக் காட்ட அல்ல.
وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۚ
18:56. நாம் தூதர்களை நன்மாரயம் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை,
விளக்கம் :
கவனித்தீர்களா? நற் செயல்கள் யாவை? அதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்னவென்பதை எடுத்தக் காட்டுவதற்காகவும் மக்களின் தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன் எச்சரிக்கை செய்வதற்காகவுமே வந்தார்கள்.
எனவே அஸா என்ற வார்த்தைக்கு தன் பிடியில் உள்ள சகாக்கள் - தோழர்கள் என்று பொருள் படும். வஜ்ரிப் என்றால் அழைத்துச் செல் என்று பொருளாகும். அதாவது தன் தோழர்களை அழைத்துக் கொண்டு அந்த நதியில் உலர்ந்த பாதையை ஏற்படுத்திக் கொண்டு கடந்து சென்று விடு என்று இறைச் செய்திதான் அது. ஏனெனில் 2077இல் بِعِبَادِى பிஇபாதி - என் அடியார்கள் என்று வருகிறது,
5.அக்காலத்தில் பாலத்தைக் கட்ட முடியுமா?
இப்படி ஒரு பாலத்தை அக்கால மக்களால் எவ்வாறு கட்ட முடிந்தது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இக்காலத்திலும் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் “பிரமிடுகள்” என்ற கூர்முனை கோபுரங்களை கட்டியவர்களால் பாலத்தைக் கட்ட முடியாதா? மேலும் கரையின் மறுபுறத்தில் ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும் வந்திருப்பதை மூஸா நபியின் தோழர்கள் கண்டு, தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது எனப் பயப்படுகிறார்கள் (26:61) அவர்கள் கடந்தது கடல் என்றால் இது எப்படி சாத்தியமாகும்? கடலுக்கு இரு கரைகள் ஏது?
மேலும் ஃபிர்அவ்ன் மூழ்கும் தருவாயில் இஸ்ரவேலர்களின் அல்லாஹ் மீது ஈமான் கொள்வதாக உறுதி அளிக்கிறான் (10:90). அதற்கு மூஸா நபி இது வரையில் மாறு செய்து கொண்டிருந்தாயே! இப்போது உன் பேச்சை எப்படி நம்புவது? எனக் கூறி அவனை மூழ்கடித்து விட்டார். (10:91) ஃபிர்அவ்ன் மூழ்கியது கடலில்தான் என்றால் இத்தகைய வாக்கு வாதத்திற்கு ஏது வாய்ப்பு? எனவே ஃபிர்அவ்ன் பாலத்தின் பிடியில் தொங்கிக் கொண்டிருந்த போது, தன்னைக் காப்பாற்றும்படி மூஸா நபியிடம் மன்றாடியது தெளிவாகிறது. எனவே மூஸா நபி கடந்து சென்றது நைல் நதியைத்தான் என்ற நமது விளக்கம் ஆதாரப்பூர்வமானதே.
6.படிப்பினை
ஏறத்தாழ 4800 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவத்தைப் பற்றி இப்போது ஏன் கிளற வேண்டும்? மூஸா நபிக்கு அற்புதத்தைக் காட்டியது அல்லாஹ்தானே? அவ்வாறு அல்லாஹ்வால் செய்து காட்ட முடியாதா? அந்த சம்பவத்தைப் பற்றி ஏன் புதிய கோணத்தில் விளக்க வேண்டும்? இது போன்று ஏராளனமாவர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்குத் திருக்குர்ஆன் தரும் பதில் இதுவே ஆகும்.
3:137&138. உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன, ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
வரலாற்றுத் தொகுப்புகளை திருக்குர்ஆனில் எடுத்துரைப்பதற்குக் காரணம் என்னவென்பதை கவனித்தீர்களா? அது உலகைச் சுற்றிப் பார்க்கும் படியும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதையும் கவனித்துப் பார்க்கும் படி கேட்கிறது. எனவே ஃபிர்அவ்ன் மற்றும் மூஸா நபியின் வரலாற்று தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்னவென்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
(1) மூஸா நபி அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சரியான முறையில் திட்டமிட்டு நதியைக் கடந்து செல்ல முறையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டு அவர் கடந்து சென்று விட்டார். (20:77)
(2) ஆனால் ஃபிர்அவ்னிடம் இத்தகைய எந்த ஏற்பாடும் இல்லை. அவன் கண்மூடித்தனமாக மூஸா நபியையும் அவருடைய தோழர்களையும் பிடித்து கொன்று விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் நதியைக் கடக்க முயன்றான்.(10:90)
(3) இதைக் கண்ட மூஸா நபி அவனை நதியில் எறிந்து அவனுக்குச் சரியான பாடத்தை புகட்டி விட்டார்.
(4) எவ்வளவு பெரிய அராசனாக இருந்தாலும் திட்டமிடாமல் செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தேடித் தராது. பெருத்த நஷ்டத்தைத் தான் விளைவிக்கும்.
(5) சிலர் மரணத் தருவாயில் கலிமா ஓத வைக்க முயல்வார்கள். கலிமாவுடன் மரணித்தால் சுவர்க்கம் செல்வார்கள் என்பார்கள். ஃபிர்அவனும் கடைசி நேரத்தில் ஈமான் கொள்வதாக உறுதி அளிக்கிறான். ஆனால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. (10:91) 4:18இன் விதிமுறைப் படி அவனுக்கு தண்டனையே!
(6) இன்றைக்கும் திருக்குர்ஆனின் அறிவுரைகளை மக்களிடம் எடுத்துரைக்க முற்பட்டால் அதை பிடிக்காதவர்கள் இதற்கு எதிராக சதி திட்டங்களை தீட்டத்தான் செய்வார்கள். அத்தகைய சதி திட்டங்களின் வலையில் சிக்காமல் தப்பிப்பதற்கு ஏற்ற வகையில் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
(7) இன்றைய உலகில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அற்புதத்தை எதிர் பார்த்து கிடக்கும் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அத்தகைய உதவிகள் எதுவும் வராது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கத் தான் (பார்க்க 2:210) இதைப் பற்றிய விளக்கத்தை தந்துள்ளோம்.
(8) அண்மையில் மேற்காசியாவில் முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களே இதற்கு ஆதாரமாகும்.
(9) மனிதன் அல்லாஹ்வைப் பற்றி தவறாக எண்ணி அல்லாஹ்வின் செயல் திட்டத்தில் இல்லாததை எல்லாம் எதிர் பார்த்து காத்துக் கிடக்க வேண்டியதில்லை.
(10) காரணம். இவ்வுலகை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை அல்லாஹ் தன் செயல் திட்டத்தின் படி மனிதனுக்குக் கொடுத்து விட்டான். எனவே மனிதன் எடுக்கும் முடிவில் அவன் தலை இடுவதில்லை. மனிதனின் செயல்களுக்கு ஏற்றவாறு பலன்களையும் தீய விளைவுகளையும் ஏற்படும்படியாக நிலையான சட்டங்களை இயற்றி விட்டான். அதாவது நற் செயல்களுக்கு நற் பலன்கள் தீய செயல்களுக்கு தீய விளைவுகள்.
(11) மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த ஃபிர்அவ்னே இதற்கு விதிவிலக்கு அல்ல எனும் போது சாதாரண மக்களாகிய நாங்கள் எம்மாத்திரம்? சிந்திப்பீர். செயலாற்றுவீர்.