بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.நபித்துவத்திற்கு முன் மூஸா நபி
إِذْ أَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ.
20:38. உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
விளக்கம் :
மூஸாவே! நீ சிறு குழந்தையாக இருந்தபோது, உன்னை வளர்த்து ஆளாக்குவதில் உன் தாயாருக்கு சில சிக்கல்கள் இருந்தன. அப்போது நாம் செய்துள்ள ஏற்பாட்டினைப் பற்றிய செய்தியை அவருக்கு அனுப்பி வைத்தோம் (மேலும் பார்க்க 28:7)
أَنِ ٱقْذِفِيهِ فِى ٱلتَّابُوتِ فَٱقْذِفِيهِ فِى ٱلْيَمِّ فَلْيُلْقِهِ ٱلْيَمُّ بِٱلسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّۭ لِّى وَعَدُوٌّۭ لَّهُۥ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةًۭ مِّنِّى وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِىٓ.
20:39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து ( அப்பேழையை நீர்) நதியில் விட்டு விடவும், பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து சேர்த்து விடும். அங்கே எனக்குப் பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக் கொள்வான்"" (எனப் பணித்தோம்). மேலும், “(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்”.
விளக்கம் :
உன்னை ஒரு பேழையில் வைத்து நதியில் விட்டுவிடும்படி உன் தாயாருக்கு செய்தி அனுப்பினோம். அந்த பேழை நதியில் மிதந்தவாறே ஒரு குறிப்பிட்ட கரையை சென்றடைந்தது. அங்கே நமக்கு எதிராக செயல்பட்டு வந்தவனும், உன் சமூகத்தாருக்கு பகைவனாகவும் இருந்த ஃபிர்அவுன் மன்னன், உன்னை தத்து எடுத்துக் கொண்டான். இப்படியாக நீ நம் கண்காணிப்பில் சிறப்பாக வளர்ந்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம்.
إِذْ تَمْشِىٓ أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُۥ ۖ فَرَجَعْنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًۭا فَنَجَّيْنَٰكَ مِنَ ٱلْغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونًۭا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِىٓ أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍۢ يَٰمُوسَىٰ.
20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டாள், ஆகவே உம் தாயாரிடம் அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கி இருந்தீர், மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
விளக்கம் :
அந்தப் பேழை செல்லும் வழியாகவே உன் சகோதரி நடந்து சென்று, நீ சென்றடைந்த இடத்தை கண்டுக் கொண்டாள் (பார்க்க 28:11) அவள் மன்னரிடம் சென்று இக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று கேட்டாள்.
அவ்வாறே அந்த மன்னரிடம் அனுமதி பெற்று, உன் தாயாரை உன்னிடம் மீட்டுத் தந்தோம். இப்படியாக உன் தாயார் உன்னைப் பார்த்து கண் குளிர்ச்சி அடைந்தார். மேலும் உன்னை பிரிந்து வாடிய உன் தாயாரின் துக்கமும் தீர்ந்தது.
அதன் பின் நீ வாலிப வயதை அடைந்த போது, இருவரிடையே நடைபெற்ற தகராறைத் தீர்த்து வைக்கப் போய், ஒரு மனிதனை எதிர்பாராத விதமாக கொன்று விட்டாய். (பார்க்க 28:15) அதைத் தொடர்ந்து நாம் உன்னை மத்தியன் நாட்டிற்கு அனுப்பி வைத்து அக்கவலையிலிருந்து விடுவித்தோம். அங்கும் நீ பல இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து வந்தாய்.
2.மூஸா நபி நபித்துவத் தேர்வுக்குப் பின்?
وَٱصْطَنَعْتُكَ لِنَفْسِى.
20:41. இப்படியாக நீ உன் வாழ்வின் பலப் படித்தரங்களைக் கடந்து, பலப் பயிற்சிகளுக்குப் பின்னரே பக்குவமாகி இறைத் தூதனாக ஆகும் தகுதியைப் பெற்றாய்.
إِنَّنِىٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدْنِى وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكْرِىٓ.
20:14. “நிச்சயமாக நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே என்னையே நீர் வணங்கும். என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.”
விளக்கம் :
“நிச்சயமாக நானே உன் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன். அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்திற்கும் நானே அதிபதி ஆவேன். எனவே நீ என் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட்டு வா. மேலும் என் அறிவுரைகளை மக்களுக்குக் கற்றுத் தர கூட்டு ஸலாத் முறையை நிலைநிறுத்து”
إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا تَسْعَىٰ.
20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கப்படி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது. ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.”
விளக்கம் :
“இவ்வாறு செயல்பட்டு வந்தால், உன் சமுதாயத்தில் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்படும். அப்படி ஒரு கால கட்டத்தில் ஒவ்வொருக்கும் அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்ற வகையில் பலன்கள் கிடைத்து வரும். மக்களை விட்டு மறைந்து நிற்கும் இந்த பேருண்மையை நான் உனக்கு வஹீ மூலம் அறிவிக்கிறேன்” என்று இறைவன் புறத்திலிருந்து வந்த ஒலிச் செய்தி கூறிற்று.
فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرْدَىٰ.
20:16. “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன். திடனாக அதனைவிட்டும் உம்மைத் திருப்பி விட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்து போவீர்.”
விளக்கம் :
“எனவே நான் ஏற்படுத்தியுள்ள செயல் திட்டத்தை யார் மனதார ஏற்று அதன்படி செயலாற்ற முன் வருகிறார்களோ, அவர்களை மட்டும் உன்னோடு இணைத்துக் கொள். இதை ஏற்காதவர்களை உன்னோடு வைத்துக் கொண்டால், அவர்கள் இந்த செயல்திட்டம் நிறைவேறதவாறு இடையூறுகளை செய்து வருவார்கள். அதன்பின் உன்னுடைய உழைப்பெல்லாம் வீணாகிவிடும்”
இப்படிப்பட்ட கட்டளைகள் அடங்கிய குறிப்புகள் மூஸாவுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்து வந்தன. அவர் அவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டார். தன்னை சுற்றியுள்ள குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்து வந்தார். அந்த இறை வழிகாட்டுதல்கள் மனிதனின் வளமான வாழ்விற்கு சிறந்த பாதையை காட்டுவதாக இருந்தன. அதன் பின் ஒரு நாள் இறைவன் மூஸா நபியை நோக்கி,
3.மூஸா நபி தடியை எறிந்தாரா. அது பாம்பாயிற்று?
وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ.
20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் கேட்டான்.)
விளக்கம் :
“மூஸாவே! உன் கைவசமிருக்கும் இந்த வழிகாட்டுதலின் நிலை என்ன?” என்று வினவினான்.
قَالَ هِىَ عَصَاىَ أَتَوَكَّؤُا۟ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِى وَلِىَ فِيهَا مَـَٔارِبُ أُخْرَىٰ.
20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி. இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன"" என்று கூறினார்.
கவனித்தீர்களா? குழந்தைப் பருவத்திலிருந்து ஃபிர்அவ்னின் அரண்மணையில் வளர்த்து, பல படித்தரங்களைக் கடக்கச் செய்து, அவற்றின் மூலமாக பல அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து, அல்லாஹ் விடமிருந்து நேரடியாக வஹீச் செய்தியைப் பெரும் அளவுக்கு தகுதி பெற்ற ஒருவர், ஆடு மாடுகளைத் தான் மேய்த்துக் கொண்டு இருப்பாரா? ஆடு மாடுகளை மேய்ப்பவரைத் தான் அரசனை திருத்துவதற்கு அல்லாஹ் அனுப்பி வைப்பானா?
இப்படியெல்லாம் மொழி பெயர்த்து விட்டு, இது தான் இறை வேதம் என உலகார் முன் சமர்ப்பிக்கிறார்களே! இது எந்த வகையில் நியாயம்? இவை யாவும் இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்ட வாக்கியம் என்பதை ஏன் உலமாக்கள் கவனிப்பதில்லை? காரணம் என்ன? திருக்குர்ஆனை ௐதக்கூடிய தாரகை மந்திரமாக ஆக்கியதுதான் அதற்குக் காரணம். சரி. வாருங்கள் அதன் விளக்க்கத்தைப் பார்ப்போம்.
20:18 அதற்கு மூஸா, “இதுவே என் உயிர் நாடி. இதன் அடிப்படையிலேயே நான் செயலாற்றுவேன். ஆட்டு மந்தைகளாக அடிமைப் பட்டு வாழும் என் சமூகத்தாரை (பார்க்க 20:47) தட்டி எழுப்பி, அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கு வழிசெய்வேன். அது மட்டுமின்றி இந்த இறைவழிகாட்டுதல்கள் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன” என்று பதிலளித்தார்.
ஆக ஆடுகளை மேய்க்கவில்லை. மாறாக ஆட்டு மந்தைகளாக வாழந்த இஸ்ரவேலர்களை வாழ வைக்கத்தான் அவர் உழைத்தார்.
قَالَ أَلْقِهَا يَٰمُوسَىٰ.
20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்"" என்றான்.
விளக்கம் :
அதற்கு இறைவன், “ஆம். நீ சரியாகப் புரிந்து வைத்துள்ளாய். எனவே இவற்றை மக்களிடம் தொடர்ந்து சமர்ப்பித்து வா” என்று கட்டளையிட்டான். (பார்க்க 26:10-14)
அதன்படி அவர் மக்களிடம் அவற்றை போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அம்மக்கள் இவற்றின் உண்மை நிலையை புரிந்து கொள்ளவில்லை. எனவே நாலாப் புறமும் பரவலாக எதிர்ப்புகள் வலுத்தன. எனவே அவர்
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلْأُولَىٰ.
20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும். பயப்படாதீர், உடனே நாம் அதனை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.""
விளக்கம் :
அதற்கு இறைவன், “இந்த எதிர்ப்பைக் கண்டு பயப்படாதே. என் வழிகாட்டுதலின் படி உறுதியோடு எடுத்தரைத்து வா. காலப் போக்கில் எல்லாமே சீராகி வரும். உன் விருப்பப் படி அவர்கள் இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வார்கள்” என்று அறிவுருத்தினான்.
சாதாரண மொழிப் பெயர்ப்பையும், நாம் கொடுத்துள்ள விளக்கத்தையும் கவனித்தீர்களா? எது சரியானது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இப்படியாக மக்களின் ஆதரவை திரட்டிக் கொண்டு, அடுத்த கட்டமாக அந்நாட்டு மன்னரை திருத்தும் முயற்சியை மேற்கொள்ளும் படி மூஸா நபிக்கு அறிவுரை செய்யப்படுகிறது.
20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்"" (என்றும் அல்லாஹ் கூறினான்).
விளக்கம் :
அதை அடுத்து இரண்டாம் கட்டமாக, ஃபிர்அவ்ன் மன்னனிடம் சென்று இறை வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் படி மூஸா நபிக்கு கட்டளை வந்தது. ஏனெனில் அவனது ஆட்சியில் அநியாய அக்கிரமச் செயல்கள் மிகைத்திருந்தன. மேலும் அவனும் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டு வந்தான் (பார்க்க 28:4)
4.ஃபிர்அவ்னிடம் மூஸா நபி தடியைப் போட்டார்,
قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍۢ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.
7:106. "நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்பீரானால், நீர் உண்மையாளராக இருப்பின் - அதைக் கொண்டு வாரும்" என ஃபிர்அவ்ன் கூறினான்.
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ.
7:107, அப்போது மூஸா, தம் கைத்தடியைப் போட்டார். உடனே அது ஒரு தெளிவான பெரிய பாம்பாகி விட்டது.
கவனித்தீர்களா? மூஸா நபியை அல்லாஹ் அனுப்பியது மன்னரை திருத்துவதற்காகத் தான் (79:17-20)
ஆனால் அதை விட்டு விட்டு அவர் மாயா ஜால வித்தைகளைக் காட்டியது போல் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்களே! ஆச்சரியமே!
இந்த வாசகத்தின் மெய்ப்பொருள் என்ன?
அதன்படி அவர் கைவசம் இருந்த தெளிவான ஆதாரங்களை ஃபிர்அவ்ன் முன் சமர்ப்பித்தார். அவற்றைக் கவனித்த அவன், அவை தன் சாம்ராஜ்ஜியத்தையே விழுங்கும் மலைப் பாம்பாக இருப்பதை எண்ணிப் பயந்தான். (பார்க்க 7:110)
5.ஃபிர்அவ்ன் அல்லாஹ்வின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை,
وَلَقَدْ أَرَيْنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ.
20:56 நாம் நம்முடைய அத்தாட்சிகளை எல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம். ஆனால் அவன் அவற்றை எல்லாம் பொய்யெனக் கூறி நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.
قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَٰمُوسَىٰ.
20:57 "மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?" என்று கூறினான்.
6.மத குருமார்களை அழைத்து போட்டிக்கு அழைப்பு விடுத்தான்.
فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍۢ مِّثْلِهِۦ فَٱجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًۭا لَّا نُخْلِفُهُۥ نَحْنُ وَلَآ أَنتَ مَكَانًۭا سُوًۭى.
20:58“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம், ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாத படி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
விளக்கம்:
“அவ்வாறாயின் இது போலவே நாங்களும் நம் மதகுருமார்களைக் அழைத்து வந்து, உமக்குத் தக்க பதிலடி தருவோம். எனவே இந்தக் கருத்துப் போட்டியை வைத்து கொள்ள ஒருநாளை குறித்துச் சொல்லுங்கள். இதில் நானோ அல்லது நீரோ மாற்றம் செய்யாதவாறு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எனவே மக்கள் அனைவரும் திரளாக வந்து சேரும் ஒரு நாளை குறிப்பிட்டுச் சொல்லுங்கள்” என்றான்.
قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ ٱلزِّينَةِ وَأَن يُحْشَرَ ٱلنَّاسُ ضُحًۭى.
20:59.“யவ்முஜ் ஸீனத்"" (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற்பகல்) நேரமுமாக இருக்கட்டும்"" என்று சொன்னார்.
விளக்கம்:
அதற்கு மூஸா நபி, அழகு அலங்காரங்களுடன் அனைவரும் திரளாக ஒன்றுகூடும் திருநாளில் இந்தக் கருத்துப் போட்டியை வைத்துக் கொள்ளலாம் என்று அந்த நாளைக் குறித்துக் கொடுத்தார். அதற்கான முற்பகல் நேரமும் நிர்ணயிக்கப்பட்டது.
فَتَوَلَّىٰ فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُۥ ثُمَّ أَتَىٰ.
20:60.அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, மத குருமார்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.
விளக்கம்:
அதன்படியே ஃபிர்அவுனும் நாட்டில் பேச்சுத் திறமைமிக்க மதகுருமார்களை வரச் சொல்லி கட்டளைப் பிறப்பித்தான் (பார்க்க 7:111). அவ்வாறே அவர்களும் குறித்த நாளில் வந்து விட்டனர். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு போட்டியின் இடத்திற்கு ஃபிர்அவ்னும் வந்து சேர்ந்தான்.
قَالَ لَهُم مُّوسَىٰ وَيْلَكُمْ لَا تَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ كَذِبًۭا فَيُسْحِتَكُم بِعَذَابٍۢ ۖ وَقَدْ خَابَ مَنِ ٱفْتَرَىٰ.
20:61.(அப்பொழுது) மூஸா மதகுருமார்களிடம், “உங்களுக்குக் கேடு தான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான், எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறுகெட்டு) அழிந்து விட்டான்"" என்று கூறினார்.
விளக்கம்:
அந்த கருத்துப் போட்டி நடைபெறுவதற்கு முன் மதகுருமார்களை மூஸா நபி சந்தித்து, “அல்லாஹ்வின் மீது பொய்யான விஷயங்களை இட்டுக்கட்டிக் கூறாதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்குக் கேடுதான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு பேசுங்கள். இல்லையென்றால் இறைவனின் நியதிப்படி நீங்கள் பல வேதனைகளுக்கு ஆளாவீர்கள். எந்தச் சமுதாயத்தில் இறைவனைப் பற்றி தவறான கற்பனைக் கதைகள் கூறப்பட்டு வந்ததோ, அது அழிவைச் சந்தித்தே இருக்கின்றன” என எச்சரித்தார்.
فَتَنَٰزَعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَىٰ.
20:62. மத குருமார்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்துத் (தங்களிடேயே) விவாதித்து (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
விளக்கம்:
அதைத் தொடர்ந்து அந்த மதகுருமார்களும் ஒன்றுகூடி, தங்களுடைய அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டனர். அதன் பின்னரே அவர்கள் விவாதத்திற்கு ஆயத்தமானார்கள்.
قَالُوٓا۟ إِنْ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخْرِجَاكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلْمُثْلَىٰ.
20:63.(மாதகுருமார்கள் மக்களை நோக்கி:) ""நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டைவிட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்)பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
விளக்கம்:
அதன்பின் மதகுருமார்கள், திரளாக கூடியிருந்த மக்களைப் பார்த்து, “நிச்சயமாக இவ்விருவரும் தம் வசீகரப் பேச்சுத் திறமையால் உங்கள் அனைவரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சைக் கொண்டு அவர்கள் உங்களை நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்கள் மார்க்கப் பாதையை போக்கிவிடவும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்கள்.
فَأَجْمِعُوا۟ كَيْدَكُمْ ثُمَّ ٱئْتُوا۟ صَفًّۭا ۚ وَقَدْ أَفْلَحَ ٱلْيَوْمَ مَنِ ٱسْتَعْلَىٰ.
20:64.ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள், இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர் தாம் வெற்றியடைவார்"" (என்றும் கூறினர்)
விளக்கம்:
அதன்பின் அவர்கள் விவாதத்திற்கு வந்த மற்ற குருமார்களைப் பார்த்து, “இன்றைய தினம் வேற்றுமை பகைகளை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று, நம் அனைவருக்கும் பகைவராய் இருக்கும் இவர்களை முறியடிக்கத் தயாராகி விடுங்கள். இன்றைய தினம் வாதத்தில் யாருடைய கை மேலோங்கி நிற்கிறதோ, அவர்தாம் வெற்றியாளர் ஆவார்” என்று முழக்கமிட்டனர்.
قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ.
20:65.“மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?"" என்று (மதகுருமார்கள்) கேட்டனர்.
விளக்கம்:
அதன்பின் விவாதத்தை ஆரம்பித்து வைக்க மூஸா நபியிடம் அவர்கள், “நீர் முதலில் வாதத்தை தொடங்குகிறீரா அல்லது நாங்கள் முதலில் தொடங்கட்டுமா?” என்று கேட்டார்கள்.
قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ.
20:66.அதற்கவர்: ""அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்"" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் தம் வசீகர பேச்சுத் திரமையில் உண்மை இருப்பது போல் அவருக்குத் தோன்றியது.
விளக்கம்:
அதற்கு அவர், “அவ்வாறல்ல. நீங்கள் உங்கள் வாதத்தை முதலில் எடுத்துரையுங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவராகத் தம் கைவசம் இருந்த மார்க்க விஷயங்களை சமர்ப்பித்தனர். அவர்கள் தம் பேச்சுத் திறமையால் அவற்றில் உண்மை இருப்பது போல் எடுத்துரைத்தனர். அவை மக்களைக் கவர்ந்துவிடுவது போல் மூஸா நபிக்குத் தோன்றின.
فَأَوْجَسَ فِى نَفْسِهِۦ خِيفَةًۭ مُّوسَىٰ.
20:67 அப்போது, மூஸா தம் மனத்தில் அச்சம் கொண்டார்.
விளக்கம்:
எனவே மூஸா நபிக்கும் மனதில் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. (மேலும பார்க்க 7:116)
قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ ٱلْأَعْلَىٰ.
20:68.“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!""என்று நாம் சொன்னோம்.
விளக்கம்:
அப்போது, “மூஸாவே! நீர் பயப்படாதீர். நிச்சயமாக நீ சமர்ப்பிக்கும் மார்க்க விஷயங்களே மேலோங்கி நிற்கும்” என்று இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி வந்தது.
7.போட்டியில் மூஸா நபிக்கு வெற்றி
وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ ۖ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَٰحِرٍۢ ۖ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ.
20:69.“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும், அவர்கள் செய்த (பேச்சுகள்) யாவற்றையும் அது விழுங்கி விடும், அவர்கள் செய்தது பொய்யர்களின் சூழ்ச்சியே ஆகும், ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான்"" (என்றும் கூறினோம்).
விளக்கம்:
“எனவே உன் கைவசம் இருக்கும் மார்க்க உண்மைகளை அவர்கள்முன் சமர்ப்பியும். அவர்கள் சமர்ப்பித்த மார்க்க விஷயங்களை எல்லாம் முறியடித்து நீயே மேலோங்கியவனாக வருவாய். ஏனெனில் அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் யாவும் வெறும் யூகங்களே ஆகும். நீ இறைவழிகாட்டுதலை ஆதரப்பூர்வமாக அவர்கள் மனதில் பளிச்சிடும்படி எடுத்துரை. அவர்களால் உன்னை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது.” என்று மூஸா நபிக்கு இறைவன் ஊக்கமளித்தான் (மேலும் பார்க்க 7:117-118).
அவ்வாறே அவரும் இறைவனின் மார்க்க உண்மைகளை அவர்கள் முன் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கவே, அவர்களுடைய மதப் போதனைகளின் சாயம் வெளுத்து விட்டது. மூஸா நபி மார்க்க உண்மைகளை எடுத்துரைத்து வெற்றிப் பெற்றார்.
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سُجَّدًۭا قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ.
20:70 (மூஸா வெற்றி பெற்றதும்) மதகுருமார்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப் பட்டு “ஹாரூனுடையவும் மூஸாவுடையவும் இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்"" என்று கூறினார்கள்.
விளக்கம்:
அவருடைய மார்க்க உண்மைகளைக் கேட்ட மதகுருமார்கள் அனைவரும் மூஸா நபிக்கு தலைவணங்கி, அவருடைய மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர். “ஹாரூன் மற்றும் மூஸாவுடைய இறைவனின் வழிகாட்டுதலை நாங்களும் மனமாற ஏற்றுக்கொள்கிறோம்” என்று அறிவித்தனர்.
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ ۖ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ فِى جُذُوعِ ٱلنَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابًۭا وَأَبْقَىٰ.
20:71.“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான்கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது), எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களை கழுவேற்றுவேன், மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார்? அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்"" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
விளக்கம்:
இதைக் கவனித்து வந்த ஃபிர்அவ்ன் மன்னனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. அவன், “என் அனுமதி எதுவும் பெறாமலேயே நீங்கள் அனைவருமே அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டீர்களா? நிச்சயமாக அவர் பேச்சில் மயக்கும் மகாசூரன் என்றே நினைக்கிறேன். நீங்கள் என் வழிக்கு வரவில்லை என்றால் நான் உங்களை மாறுகை மாறுகால் வாங்கி பேரித்த மரத்தில் உங்களைத் தொங்க விட்டுவிடுவேன். இவ்வாறு வேதனை அளிப்பதில் கடுமையானவன் நானா அல்லது மூஸாவின் இறைவனா என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்” என கோபக் கனலில் கத்தினான்.
8.மத குருமார்கள் திருந்தி விட்டனர்.
قَالُوا۟ لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلَّذِى فَطَرَنَا ۖ فَٱقْضِ مَآ أَنتَ قَاضٍ ۖ إِنَّمَا تَقْضِى هَٰذِهِ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ.
20:72.(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ளமாட்டோம், ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கின்றாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்து கொள், நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்" என்று கூறினர்.மறுமை வாழ்வில் உனக்கு எந்தப் பாக்கியமும் கிடைக்காது என்பதை நாங்கள் மூஸா நபி மூலம் தெரிந்து கொண்டோம்.
إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ.
20:73.“எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) போதனைகளையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம், மேலும், அல்லாஹ்தான் மிக்க மேலானவனாகவும், என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்"" (என்று கூறினார்கள்).
விளக்கம்:
மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டோம். இதுவரையில் நாங்கள் போதித்து வந்த தவறான மதப் பிரச்சாரங்களால் ஏற்பட்ட தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற எங்கள் இறைவனிடமே பாதுகாப்புத் தேடிக் கொள்கிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் அவனுடைய செயல் திட்டங்களுமே மிகவும் மேலானவையாக இருக்கின்றன என்பதை நாம் மூஸா நபி மூலம் அறிந்து கொண்டோம்” என்று மிகவும் பணிவோடு கூறினர்.
إِنَّهُۥ مَن يَأْتِ رَبَّهُۥ مُجْرِمًۭا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ.
20:74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வரு கிறானோ, அவனுக்கு நரகம் நிச்சய மாக இருக்கிறது, அதில் அவன் மரிக்கவும் மாட்டான், வாழவும் மாட்டான்.
விளக்கம்:
மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “எவன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக காத்திருக்கிறது. அதில் அவன் சாகவும் மாட்டான்; வாழவும் மாட்டான் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலமாக தெரிந்து கொண்டோம்” என்றனர்.
وَمَن يَأْتِهِۦ مُؤْمِنًۭا قَدْ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلْعُلَىٰ.
20:75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
விளக்கம்:
மேலும் அவர்கள், “எந்த சமுதாயத்தவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வருகிறார்களோ, அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் நிச்சயம் உண்டு என்பதையும்”
جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ.
20:76. (அத்தகையவருக்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர், இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்)கூலியாகும்.
விளக்கம்:
“எதுவரையில் அவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். அங்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப தாராளமான பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயமாக விளங்கும். இதுவே தன்நலமற்ற தூய எண்ணங்களுடன் செயல்படும் சமூகத்தவர்களுக்குக் கிடைக்கும் சன்மானமாகும் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலம் தெரிந்து கொண்டோம்” என்றும் ஃபிர்அவ்னிடம் விளக்கமளித்து அவன் அறிவித்த தண்டனையைப் பொருட்படுத்தவில்லை.
9.போட்டிக்கு முன் மத குருமார்கள் மன்னரிடம் கேட்ட சன்மானம்?
சிந்தனையாளர்களே! மூஸா நபி அந்த மதகுருமார்களுக்கு எப்படி எல்லாம் மார்க்க உண்மைகளை விரிவாக எடுத்துரைத்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளார் என்பதை கவனித்தீர்களா? கைத்தடியை கீழே எறிந்து பாம்பாக்கி, இந்த மார்க்க உண்மைகளை விளக்க முடியுமா? இந்தக் கருத்துப் போட்டி நடப்பதற்கு முன் குருமார்கள் ஃபிர்அவுனிடம் கேட்ட சன்மானம் எங்கே? (பார்க்க 7:113-114) இந்தப் போட்டிக்குப் பின் அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஏற்பட்ட அசைக்க முடியாத ஈமான் எங்கே? தெளிவாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயமே!!
அதன்பின் மூஸா நபி தம் சமூகத்தவர்களுக்கு வேண்டிய ஒழுக்க மாண்புகளை கற்றுக் கொடுத்தார். மேலும் தற்காப்புப் பயிற்சி அளித்து, சிறந்த செயல்வீரர்களாக வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வந்தார் (பார்க்க 7:128) ஃபிர்அவ்னிடம் பலமுறை இஸ்ரவேலர்கள் போராடியும் அவர்களை விடுதலை அளிக்க அவன் மறுத்துவிட்டான். (பார்க்க 7:130-135) எனவே எகிப்து நாட்டிலிருந்து பாலஸ்தீன நாட்டிற்குத் தப்பித்துச் சென்றுவிட இறைக் கட்டளை வந்தது. அவர்கள் செல்லும் பாதையின் குறுக்கே நைல் நதி வருவதால், அவர்கள் அதன் குறுக்கே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (விளக்கத்திற்கு பார்க்க 7:136)