بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.முன்னுரை:
உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் அல்லது இறைத்தூதர்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்ற கருத்து முஸ்லிம்களிடையே பொதுவாக நிலவி வருகிறது. இந்த கருத்து எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் ஒருவர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர் முழுமையாக முஸ்லிம் ஆக மாட்டார் என்றே சொல்லி விடுகிறார்கள். எனவே நபிமார்கள் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். காரணம், இல்லாத ஒன்றை எதிர் பார்த்து இருப்பதோ அல்லது இருப்பதை இழந்து நிற்பதோ கூடாது என்பதற்காக நாம் இந்த தலைப்பில் எழுதியுள்ளோம். திருக்குர்ஆனில் வருகின்ற எல்லா நபிமார்கள் விஷயத்தையும் எடுத்துரைக்கிறோம். இதைப் படித்து அன்பர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம்.
காலம் காலமாக நிகழ்ந்து வந்த உண்மை என்னவென்றால் சமுதாய மக்களுக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க இறைத்தூதர்கள் வந்த போதெல்லாம், அம்மக்கள் அவரை இறைத் தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்த போதும், அவற்றில் முக்கியமான ஒன்று அத்தூதரிடம் ஏதாவது தனிச் சிறப்பு இருக்க வேண்டும் என்பதே. இதற்காக அவர் ஏதாதவது அற்புதத்தை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆனால் நபிமார்கள் ஆற்றிய பணியைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை நாம் கவனிப்போம்.
2.அல்லாஹ்வின் ஆயத்துகள்
ஆயத்துல்லா – அல்லாஹ்வின் ஆயத்துகள் என்பதாகும். ஆயத்து என்ற வார்த்தை கீழ்கண்ட பொருளில் வரும்:
(1) திருக்குர்ஆன் வாசகங்கள் ஆயத்துகளாக இருக்கின்றன.
(2) உலகம் மற்றும் பிரபஞ்சப் படைப்புகள் அல்லாஹ்வின் ஆயத்துகள் ஆகும்.
(3) அறிகுறி அல்லது அடையாளம் என்பதற்கும் ஆயத்துகள் என்று வரும்.
(4) ஆதாரப்பூர்வமான நிகழ்வுகளும் ஆயத்துகள் ஆகும்.
(5) அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கும் ஆயத்துக்கள் என்று வருகிறது.
3.திருக்குர்ஆனின் வாசகங்கள் யாவும் அல்லாஹ்வின் ஆயத்துகளே
الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ.
10:1.அலிஃப். லாம். றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்கள் ஆகும்.
விளக்கம்:
அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேத அறிவுரைகள் முழுக்க முழுக்க ஞானத்தின் அடிப்படையைக் கொண்ட “ஆயத்துகள்”ஆகும்.
الٓر ۚ كِتَٰبٌ أُحْكِمَتْ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ.
11:1. அலிஃப். லாம். றா. (இது) வேதமாகும், இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால் உறுதியாக்கப் பட்டுப் பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன - மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம்மிக்க வனுமாகிய (இறை)வனிடம் இருந்து (வந்து)ள்ளன.
விளக்கம்:
கிருபைமிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட இவ்வேதம், தெளிவான ஆதாரங்களுடன் கற்பாறைகளில் செதுக்கி வைக்கப்பட்டது போல் ஆணித்தரமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்ட “ஆயத்துகள்”ஆகும். இவ்வேதத்திலுள்ள “ஆயத்துகள்”, அனைத்து விஷயங்களையும் அறிந்தோனும், ஞானமிக்கவனும் ஆகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டதாகும்.
الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.
12:1. அலிஃப். லாம். றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
விளக்கம்:
எல்லாம் வல்லமைகளையும் கொண்ட, இரக்கமே வடிவமான ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேதம், தெள்ளத் தெளிவான முறையில் தொகுக்கப்பட்ட “ஆயத்துகள்” ஆகும்.
قَدْ نَعْلَمُ إِنَّهُۥ لَيَحْزُنُكَ ٱلَّذِى يَقُولُونَ ۖ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ.
6:33. (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை, ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹவின் வசனங்களை அல்லவா மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
விளக்கம்:
நபியே! நீர் மக்களுக்கு வேத உண்மைகளை எடுத்துரைக்கும் போது, இவை எல்லாம் உண்மை இல்லை என அவர்கள் அலட்சியமாகக் கூறிவிடுதை எண்ணி, நீர் ஆழ்ந்த கவலையில் இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் உன்னைப் பொய்ப்பிக்க வில்லை. அல்லாஹ்வின் “ஆயத்துகளை” அல்லவா அவர்கள் பொய்ப்பிக்கிறார்கள்? இது எவ்வளவு பெரிய அநியாயம்!
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.
16:104. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டாமாட்டான், இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
விளக்கம்:
ஆக உண்மை விஷயம் என்னவென்றால், அல்லாஹ்வின் “ஆயத்துகளை” ஏற்க விரும்பாதவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒருபோதும் நேர்வழி கிடைக்காது. இதனால் அவர்கள் வழிதவறிச் சென்று நோவினை தரும் வேதனைகளுக்கு ஆளாகிறார்கள்.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.
29:23. இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டுநிராசையானவர்கள். மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
விளக்கம்:
மேலும், “எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் “ஆயத்துகளையும்”, தம் செயல்களுக்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் ஏற்றுக் கொள்வதில்;லையோ, அது அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து நிராசையாய் நிற்கும். அதுமட்டுமின்றி அவர்கள் பல வேதனைகளுக்கு ஆளாவார்கள்” என்றும் மக்களிடம் நபிகளார் எடுத்துரைத்து வந்தார்.
சிந்தனையாளர்களே! இப்படியாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேத வாசகங்கள் அனைத்தும் ஆயத்துகளாக இருக்கின்றன. காரணம் திருக்குர்ஆனில் உள்ள “ஆயத்துகள்” யாவும் ஆதாரப்பூர்வமாகவும், தெளிவாகவும் உள்ளன. இவ்வுலகம் நிலைத்திருக்கும் காலம் வரையில் இவ்வேதத்தில் சொல்லப்பட்ட வாக்குகளின் படியே நிகழ்ந்து வரும்படியாகவும் உள்ளன. அவற்றிற்கு வெளியே எதுவும் நிகழ வாய்ப்பில்லை. இதையே திருக்குர்ஆன் வாசகத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًۭا وَعَدْلًۭا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும், நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
விளக்கம்:
மனிதனின் சுமுகமான வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் உன் இறைவன் புறத்திலிருந்து சொல்லி முடித்தாகிவிட்டது. எதுவும் சொல்லாமல் விடுபடவில்லை. இனி இவ்வுலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில், இவ்வுலகில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளும் இறைவனின் இச்சொல்லுக்கு உட்பட்டே நடைபெற்று வரும். இதில் எக்காலத்திலும் எந்த மாறுதலும் ஏற்படாது. ஏனெனில் எல்லாவற்றையும் கேட்கும் மற்றும் அறிந்து கொள்ளும் வல்லமையும் உடைய அல்லாஹ்விடமிருந்து வந்த சொல்லாகும்.
وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍۢ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤْمِنُونَ.
7:156. ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும் அதனை பயபக்தியுடன்(பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருளச் செய்வேன்"" என்று கூறினான்.
விளக்கம் :
கவனித்தீர்களா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட குர்;ஆனும் “ஆயத்துகள்”ஆகும். அதன் மீது (இறைவழிகாட்டுதல்கள்) முழு நம்பிக்கை வைத்து உழைப்பவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்படுவதை கவனித்தீர்களா? ஆனால் அல்லாஹ்வின் ஆயத்துகள் திருக்குர்ஆனில் மட்டும் உள்ளதா?
4.பிரபஞ்சப் படைப்புகளும் அல்லாஹ்வின் ஆயத்துகளே!
உலகில் படைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை மனிதனால் படைக்கப்பட்டு இருந்தாலும் சரி. அவற்றின் பின்னணியில் மூலப் பொருட்கள் இருப்பது அவசியம் அல்லவா? உதாரணத்திற்கு ரயில் பாதை மற்றும் அதில் இயங்கும் எண்ணற்ற ரயில் வண்டிகள், சாலைகளும் அவற்றில் ஓடுகின்ற எண்ணற்ற வாகனங்கள், ஆகாய விமானங்களும், கடல் நீரைப் பிளந்து செல்லும் படகுகளும் மலைகளைப் போன்ற கப்பல்களும் சரி. மேலும் மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் என எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாமே அல்லாஹ் படைத்த இயற்கைப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதனால் படைக்க முடியும். அவனால் ஒன்றுமில்லாததைக் கொண்டு எதையும் படைக்க முடியாது. இயல்பியல் தத்துவமே Law of Physics இதில்தான் அடங்கி உள்ளது. No thing can be made without anything. அல்லாஹ் படைத்துள்ள இயற்கைப் படைப்புகளை ஆய்வு செய்து தனக்கு வேண்டியதை அவன் படைத்துக் கொள்கின்றான். இப்படியாக மனிதனின் படைக்கும் வல்லமை ஓர் எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது.
ஆனால் அல்லாஹ்வின் படைக்கும் வல்லமை எல்லைக்கு உட்பட்டதல்ல. இறைவனால் எதையும் எந்தப் பொருளின் துணையுமின்றி படைக்கவும் முடியும். அவன் ஏற்கனவே படைத்துள்ள படைப்புகளின் துணையைக் கொண்டு மனிதனையும் மற்றும் பல புதிய படைப்புகளையும் உருவாக்க முடியும். உதாரணத்திற்கு இந்தப் பூமி படைக்கப்பட்டு இருப்பதைக் கவனித்துப் பாருங்கள். அதன் மூலப் பொருட்களை உருவாக்கியவன் அல்லாஹ்வே. எனவே உலகப் படைப்புகளை எந்தப் பொருளின் துணையுமின்றி உருவாக்கும் வல்லமையை குறிக்கும் வகையில் “அல்பதீவு” اَلْبَدِيْعُ “அல்ஃபாதிரு ”اَلْفأَطِرُ போன்ற வார்த்தைகள் திருக்குர்ஆனில் வருகின்றன.
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ
6:101.அல்லாஹ் எந்தப் பொருளின் துணையுமின்றி வானங்களையும் பூமியையும் படைக்கும் வல்லமையுடையவன் ஆவான்.
ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَٰٓئِكَةِ
35:1 வானங்களையும், பூமியையும், எண்ணற்ற சக்திகளையும் யாதொரு பொருளின் துணையுமின்றி தோற்றுவித்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவையே.
இப்படியாக அல்லாஹ் புதிய படைப்புகளைப் படைக்க நாடினாலே போதும். அதற்குரிய செயல்திட்டங்களின் படி அவை உருவாக ஆரம்பித்து விடும்.
2:117. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் ""குன்"" - ஆகுக - என்று கூறினால், உடனே அதுஆகிவிடுகிறது.
விளக்கம்:
அல்லாஹ்வின் எல்லை இல்லா வல்லமைப் பற்றி அறிந்துகொள்ள அகிலங்களும் பூமியும் படைக்கப்பட்டு இருப்பதைப் பற்றி கவனித்துப் பார்க்கட்டும். அவையாவும் எவ்வித படைப்புகளின் துணையுமின்றி முறைப்படி படைக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மாபெரும் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளது என்றால், அவற்றை உருவாக்க அவன் எண்ணினால் அது முறைப்படி உருவாக தொடங்கிவிடும். இது அல்லாஹ்வின் எல்லையற்ற வல்லமை ஆகும். (விளக்கத்திற்குப் பார்க்க 6:101)
மேற்சொன்ன வாசகத்தில் அல்லாஹ் எதைப் படைக்க நாடினாலும் அதற்காக அவன், “ஆகுக” என்று சொல்லி விடுவதாகவும், அது உடனே உருவாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. சிந்தனையாளர்களே! இத்தகைய வாசகங்கள் திருக்குர்ஆனில் ஆங்காங்கே வருவதை நாம் காண்கின்றோம். இவை யாவும் அல்லாஹ்வின் நீண்ட கால செயல் திட்டங்கள் சம்பதப்பட்டவை ஆகும். இவற்றை புரிய வைப்பதற்காக இத்தகைய வாசகங்கள் வருகின்றன. உண்மையிலேயே அவன் “ஆகுக” என்று சொல்லை பயன்படுத்தியதாக பொருள் கொள்வது சரியாகாது. كُنْ “குன்” என்றால் அவனுடைய செயல்திட்டங்கள் நிறைவேற்ற நாடினால், فَيَكُوُنْ“ஃபயகூன்”அவை முறைப்படி பலப் படித்தரங்களைக் கடந்து உருவாகும் என்பதுதான் அதன் பொருளாகும். பிரபஞ்சப் படைப்புகள் யாவும் யுகங்கள் என்ற கால அளவுபடியே பலப் படித்தரங்களைக் கடந்து அவை முழுமை அடைகின்றன.
5.“ஆகுக” என்றால் ஆகிவிடுமா?
تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍۢ.
70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள். அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள்(சமமாக) இருக்கும்.
விளக்கம்:
“மலக்குகள்” என்பது பிரபஞ்சத்தை நடைமுறைப் படுத்த அல்லாஹ் உருவாக்கிய பல்வேறு சக்திகளைக் குறிக்கும். “ரூஹ்” رُوْحُ என்பது அவற்றில் உள்ள ஆற்றல்கள் அல்லது செயல் திறன்கள் என்பதாகும். எனவே இவ்வாசகத்தின் பொருள் இவ்வாறு வரும்.
பிரபஞ்ச இயற்கைச் சக்திகளும், அவற்றில் உள்ள பல்வேறு செயல்திறன்களும், பரிணாம வளர்ச்சி என்ற அடிப்படையில், பலப் படித்தரங்களைக் கடந்து முழுமையாக வளர்ச்சிப் பெற்று வருகின்றன. அந்த வளர்ச்சியின் ஒவ்வொரு படித்தரத்தைக் கடப்பதற்கும், எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு உங்கள் கணக்கின்படி ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்களாகும். அந்த அளவுக்கு நீண்ட கால செயல்திட்டங்களாகும். (மேலும் பார்க்க 22:47, 32:5, 97:4)
அதே போன்று இந்த உலக படைப்புகளிலும் இதே அளவுகோலின்படி பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றன.
يُدَبِّرُ ٱلْأَمْرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥٓ أَلْفَ سَنَةٍۢ مِّمَّا تَعُدُّونَ.
32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்கு படுத்துகிறான். ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக் கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
விளக்கம்:
வானத்திலிருந்து பூமிவரையில் உள்ள ஏக இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றிச் ஆராய்ந்து பாருங்கள். அவற்றிலுள்ள படைப்புகள் யாவும் பலப் படித்தரங்களைக் கடந்து அவன் நிர்ணயித்த இறுதி இலக்கை நோக்கியே சென்றடைகின்றன. அவ்வாறு ஒவ்வொரு படித்தரத்தையும் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு உங்கள் கணக்கின்படி ஆயிரமாயிரம் வருடங்களாகும்.
இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் யுகங்கள் என்ற அடிப்படையில் நீண்ட கால செயல்திட்டங்களாக உள்ளதே அன்றி “ஆகுக” என்று சொன்னதும், அது நொடிப் பொழுதில் ஆகிவிடுவதாக பொருள் கொள்வது சரியாகாது. எனவே ஒவ்வொரு படைப்பும் அதன்தன் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடியே வளர்ச்சிப் படித்தரங்களைக் கடந்து முழுமை அடையும். அவற்றைப் பற்றி தனி ஒரு நபர் எவ்வாறு சுயமாக கணித்து எழுத முடியும்? இவற்றைப் படைத்த இறைவனால் மட்டுமே படைப்பின் இரகசியங்களைத் தெரியப் படுத்த முடியும். எனவே குர்ஆன் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
மேலும் எந்த முன்மாதிரியும் இன்றி புதிதாகத் தோற்றுவிப்பதற்கு “அல்பதீவு” اَلْبَدِىْعُ என்ற வார்த்தைப் பயன் படுத்துகிறது. படைக்கப்பட்ட பொருளின் துணையைக் கொண்டு படைப்பதற்கு “ஃகலஃக” خَلَقَ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
6.மனித படைப்பின் துவக்கம்: (முதல் கட்டம்)
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥ ۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍۢ.
32:7.அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
விளக்கம்:
அல்லாஹ்வின் அதே நீண்ட கால செயல் திட்டத்தின்படியே ஒவ்வொரு பொருளும் அழகிய முறையில் படைக்கப்பட்டன. அத்தகைய அழகிய படைப்புகளில் மனித படைப்பும் ஒன்றாகும். மனித படைப்பின் துவக்கமும் மண்ணில் உள்ள (Inorganic Matters) சத்துகளிலிருந்து பலப் படித்தரங்களாக யுகங்கள் பல கடந்து உருவானது.
7.மனித படைப்பின்- இரண்டாம் கட்டம்
ثُمَّ جَعَلَ نَسْلَهُۥ مِن سُلَٰلَةٍۢ مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ.
32:8 பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
விளக்கம்:
அந்த உயிரணுக்கள் ஆண் பெண் என இரண்டாகப் பிரிந்தன. இவ்வாறு மனித படைப்பு உருவாகி யுகங்கள் பல கடந்தபின், ஆண் பெண் சேர்க்கையின் (Sperm) மூலம் இந்திரிய துளியிலிருந்து உருவாக ஆரம்பித்தது. இப்படியாக மனித இனம் உலகம் முழுவதும் பெருகிப் பல்கியது (பார்க்க 4:1)
8.மனித படைப்பு - மூன்றாம் கட்டம்.
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ ۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ.
32:9 பின்னர் அதை சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹ்விலிருந்து ஊதினான். இன்னும் உங்களுக்கு அவன் செலிப்புலனையும், பார்வைப் புலனையும், இருதயங்களையும் அமைத்தான். இருப்பினும் நீஙகள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமே ஆகும்.
விளக்கம் :
அதன்பின் யுகங்கள் பல கடந்து, அல்லாஹ்வின் புறத்திலிருந்து “ரூஹ்” என்ற தனிச் சிறப்பு மிக்க ஆற்றல் (Devine Energy) மனிதனுக்கு படிப்படியாக அளிக்கப்பட்டது. (32:9) அதன் பலனாக மனிதனுக்குப் பார்வைப் புலன், கேட்கும் புலன் மற்றும் சிந்தித்து செயலாற்றும் புலன் ஆகியவை கிடைத்தன.
இதனால் மனிதனும் படைக்கும் خاَلِقٌ திறமை உடையவனாக ஆகிவிடுகின்றான். இவன் படைக்கும் படைப்புகளுக்கும் “ஆகுக” என்று கட்டளை இட்டால், அவை அவ்வாறே ஆகிவிடும். இந்த நிலையில் தான் மனிதன் “ஆதம்” என்ற அந்தஸ்தைப் பெறுகிறான். ஆதம் என்றால் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய நாகரீக மனிதன் என்பதாகும். உலக படைப்புகளை ஆராய்சி செய்து அறிந்து கொள்ளக் கூடிய அறிவாற்றல் இவனுள் அல்லாஹ் வளரச் செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.(2:30)
குறிப்பு : அல்லாஹ் ""ரூஹ்"" ஊதியதற்கு முன் மனிதனை ஒரு பொருளாகவே சொல்லப்படுகிறது. ""ரூஹ்"" ஊதிய பின், ""உங்களுக்கு"" என்றும் ""நீங்கள்"" என்றும் மேற்சொன்ன வாசகத்தில் குறிப்பிடுவதை கவனியுங்கள். அதாவது மனிதனுக்கு சில பொறுப்புகளை அல்லாஹ் விதிக்கின்றான்.
9.மனித படைப்பு - சுருக்கம் :
(1) மனிதன் மண்ணின் சத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டது முதல் கட்டம்.
(2) அதன் பின் யுகங்கள் பல கடந்து ஆண் பெண் சேர்க்கையின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது இரண்டாம் கட்டம்.
(3) அதை அடுத்து அவனுக்கும் கேட்கும் சக்தியும், பார்க்கும் சக்தியும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கிடைத்தது மூன்றாம் கட்டம்.
(4) இந்த நிலை அடைந்த பின்புதான் அவன் “ஆதம்” என்ற அந்தஸ்தைப் பெற்றான். அதாவது நாகரீக மனிதன்.
(5) ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வருவதற்கும் யுகங்கள் பல ஆயின.
இதே போன்றுதான் உலகிலுள்ள மற்ற படைப்புகள் அனைத்தையும் படைத்தது அல்லாஹ் தான். இத்தகைய எல்லா படைப்புகளும் அல்லாஹ்வின் “ஆயத்துகளாக” இருப்பதாக திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுகின்றன.
10.உலக படைப்புகளும் அல்லாஹ்வின் ஆயத்துகள்
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٌۭ تَنتَشِرُونَ.
30:20. மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியில் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய (ஆயத்துகளில்) அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
விளக்கம்:
மனித படைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். அது துவக்க காலத்தில் மண்ணின் சத்திலிருந்து உருவானது. அது உயிரணு என்ற நிலையிலிருந்து, பல படித்தரங்களைக் கடந்து மனித உருவில் வந்தடைந்தான். (பார்க்க 32:7-9) (23:13-14) அந்த உயிரணுகள் ஆண்பெண் என இரண்டாகப் பிரிந்தன (பார்க்க 4:1). அதன்பின் ஆண் பெண் சேர்க்கையின் மூலம் மனித இனம் உலகம் முழுவதும் பரவிவியது.(பார்க்க 4:1) இவையாவும் அல்லாஹ்வின் படைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள ஆயத்துகளாகும்.
இன்றைக்கும் மண்ணில் கிடைக்கும் சத்திலிருந்து தான் ஆணின் விந்தும், பெண்ணின் கருப்பையில் குழந்தை வளர்வதற்கான எல்லா சத்துகளும் கிடைக்கின்றன. எனவே இன்றைக்கும் மனிதன் மண்ணிலிருந்து தான் படைக்கப்படுகிறான்.
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا لِّتَسْكُنُوٓا۟ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةًۭ وَرَحْمَةً ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.
30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், சிந்தித்து உணரக் கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
அல்லாஹ்வின் படைப்புச் சட்டத்தின் கீழ் உருவான ஆண் பெண் ஆகிய இரு பாலரும் ஒருவர் மற்றவர்க்கு ازْوَاجًا ஜோடியாக இருக்கின்றனர். இதனால் ஒருவரையொருவர், பரஸ்பர இணக்கம் கொண்டு ஒருவர் மற்றவரின் குறைகளை நிறைவு செய்பவராக விளங்குகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்வில் மன நிறைவும் நிம்மதியும் கிடைக்கின்றன. சிந்தித்துணரும் மக்களுக்கே இறைவனின் வல்லமையின் ஆயத்துகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَٰنِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْعَٰلِمِينَ.
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் வேறுபட்டு இருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
மனித படைப்பை அடுத்து பிரமாண்டமான அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்பை பற்றி ஆராய்ந்து பாருங்கள். இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன என்பதையும் கவனித்துப் பாருங்கள். மனித படைப்பிலேயே எத்தனை வகையான
நிறங்களும், உருவ வேற்றுமைகளும் உள்ளன என்பதையும் கவனித்துப் பாருங்கள். இந்த நிறங்கள், மொழிகள் மற்றும் உருவ வேற்றுமைகள் இருந்தும், மனித இனம் ஒன்றே என்ற நிலை உருவாகியுள்ளதே (பார்க்க 2:213) இவை யாவும் சிந்தித்து செயலாற்றும் மக்களுக்கு அல்லாஹ்வின் பேராற்றரல்களின் “ஆயத்துகளாக” பறை சாற்றுகின்றன அல்லவா?
وَمِنْ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱبْتِغَآؤُكُم مِّن فَضْلِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ.
30:23. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும், அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
அது மட்டுமா? இரவில் இளைப்பாறுவதற்காக உறக்கமும், உழைத்து இறை அருட்கொடைகளைத் தேடிக்கொள்வதற்காக பகலையும் ஏற்பாடுகளைச் செய்தது அல்லாஹ்தானே. இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்தால் அவற்றைக் கேட்க முன்வரவேண்டுமே! இவையாவும் அல்லாஹ்வின் “ஆயத்துகளாக” இருக்கின்றதே! இந்த உண்மைகளை கேட்டறிந்து பலன்களைப் பெற முன்வராதவர்கள் இறைவனின் “ஆயத்துகளை” பற்றி அறிந்துகொள்வது எப்படி?
وَمِنْ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًۭا وَطَمَعًۭا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَيُحْىِۦ بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.
30:24.அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும், பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக்கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளில் நின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்து உணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
விளக்கம்:
மேலும் உலக முழுவதும் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள அச்சமூட்டும் மின்னல்களைப் பற்றியும் மகிழ்ச்சியூட்டும் மழையைப் பற்றியும், ஆராய்ந்து பாருங்கள். வானத்திலிருந்து பொழியும் மழைநீரைக் கொண்டே வரண்டு கிடக்கும் பூமி செழிப்பாகிறது. மின்னல்களின் ஒளியைக் கொண்டே பூமிக்கு இரசாயண சக்தி கிடைத்து அது பசுமையாவதற்கு துணை நிற்கின்றன. (பார்க்க 13:12-13)
இந்த ஏற்பாடுகள் எல்லாம் இல்லாதிருந்தால் மனிதனுக்கு ஏது வாழ்வு? அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கே இந்த “ஆயத்துகளின்” உண்மைகள் எல்லாம் விளங்கும். ஆனால் உங்களுக்கோ மழை நீர் மீது ஆசையும் இடி மின்னல்கள் மூலம் அச்சமும் ஏற்படுத்துகிறது
`وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ بِأَمْرِهِۦ ۚ ثُمَّ إِذَا دَعَاكُمْ دَعْوَةًۭ مِّنَ ٱلْأَرْضِ إِذَآ أَنتُمْ تَخْرُجُونَ.
30:25. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலை பெற்றுநிற்பதும் அவன் அத்தாட்சிகளில் நின்றும் உள்ளன. பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
விளக்கம்:
மேலும் அல்லாஹ்வின் வானுலக செயல்திட்டங்களின் படி இந்தப் பூமையை புவி ஈர்ப்பில் நிலைத்திருக்கச் செய்து, வான் மண்டலத்தில் வேகமாகச் சுற்றி வரச் செய்ததும் அல்லாஹ்வின் ஏற்பாடுகள் தானே. இந்த “ஆயத்தைப்” பற்றி ஆராய்ந்து பாருங்கள். (பார்க்க 36:38-40) அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பூமியை விட்டு புறப்பட்டுச் சென்றே ஆகவேண்டும் என்பதை கவனித்தீர்களா?
இந்த வாசகத்தை இரு வகையில் பொருள் கொள்ளலாம். அதாவது மனிதனுக்கு மரணம் ஏற்பட்ட உடன் அவனுடைய வாழ்க்கைப் பயணம் இவ்வுலகை விட்டு வேறு கோளிலோ அல்லது “பர்ஜக்” என்று சொல்லப்படுகின்ற திரைக்கு மறைவாக இருக்கும் உலகிலோ (25:100) தொடரும் என்பதாகும்.
இரண்டாவதாக மனித தேற்றங்களை வைத்துப் பார்க்கும் போது, அவன் வானுலக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மற்ற கோள்களும் உலகங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற உண்மைகளை கண்தறிய, இவ்வுலகை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் கட்டாயத்தில் தான் இருக்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம். ஆக எது எப்படியாக இருப்பினும் அல்லாஹ்வின் அளவிலா பேராற்றலை “ஆயத்துகளை” யாரால் மறுக்க முடியும்? காரணம்
وَلَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ كُلٌّۭ لَّهُۥ قَٰنِتُونَ.
30:26. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அவற்றிலுள்ள ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ் விதித்த சட்ட விதிமுறைகளின் படியே செயல்பட்டு வருகின்றன. (பார்க்க 16:49-50)
விளக்கம் :
மற்ற படைப்புகளை நாம் இயற்கைப் படைப்புகள் என்கிறோம். அவற்றின் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் நாம் காண்பதில்லை. எனவே அவையாவும் சிறப்பாக இருக்கின்றன. மனிதனும் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றாக இருக்கிறான். எனவே அவனும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்தால் அவனுடைய வாழ்வும் சிறப்பாக இருக்கும்.
இப்படியாக அல்லாஹ்வின்; “ஆயத்துகள்” அகிலங்கள் அனைத்திலும் பரவி செயல்பட்ட வண்ணம் உள்ளன. திருக்குர்ஆன் வாசகத்தை கவனியுங்கள்.
سَنُرِيهِمْ ءَايَٰتِنَا فِى ٱلْءَافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.
41:53 நிச்சயமாக இவ்வேதம் உண்மையானது தான் என்று அவர்களுக்கு தொளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை உலகத்தின் பல கோணங்களலும் அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியெ!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பாத்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்கு போதுமானதாக இல்லையா?
கவனித்தீர்களா? அல்லாஹ்வின் ஆயத்துகள் உலகமெங்கும் பரவி இருப்பதாகவும் மனிதனுக்குள்ளேயும் இருப்பதாக சொல்லப்படுவதைக் கவனியுங்கள். எனவே உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் மாபெரும் சீர்திருத்தவாதிகளே ஆவார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (ஆயத்துகளை) ௐதிக் காண்பிக்க வில்லை. மாறாக அல்லாஹ் படைத்து செயல்படுத்தியுள்ள படைப்புகளின் ""ஆயத்துகளை"" எடுத்துரைத்தனர்.
11.நபிமார்கள் அனவைரும் அல்லாஹ்வின் ஆயத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்
சிந்தனையாளர்களே! உலகிற்கு வருகை தந்த எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் ஆயத்துகளை ஓதிக் காட்டியதாக சொல்லப்படுகிறது. இங்கு ஆயத்துகள் என்பது அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றியதாகும். அவற்றின் செயல்திறன்களைப் பற்றியும்தான் முதன் முதலில் மக்களுக்கு எடுத்துரைத்தனர். மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் படைப்புகள் எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றன என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தனர். காரணம் அவை அனைத்தும் அல்லாஹ்வின் "ஆயத்துகளாக" இருக்கின்றன.
كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًۭا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ.
2:151. இதே போன்று நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவது என்றால் அல்லாஹ்வின் எண்ணற்ற படைப்புகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பலன்களைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பது.
(2) இப்படியாக மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை நீக்கி, அவர்களுடைய எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் தூய்மையாக ஆக்குவது. தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவது.
(3) வேதத்தைக் கற்றுக் கொடுப்பது என்றால் அல்லாஹ் அறிவித்துள்ள சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை கடைப்பிடிக்கச் செய்வது.
(4) ஞானத்தை ‘ஹிக்மாவை’ கற்றுக் கொடுப்பது என்றால் அந்தச் சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதால் கிடைக்கவிருக்கின்ற நற்பலன்களைப் பற்றியும், அவற்றிற்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத் விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைப்பது என்பதாகும்.
(5) இப்படியாக மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை அறிவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குபவர் தான் நபி அல்லது ரசூல் ஆவர்.
12.நபிமார்களிடமிருந்து மக்கள் எதிர் பார்த்த ஆயத்துகள் என்ன?
وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦ ۚ قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةًۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர்அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமை உடையவனே. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை.
விளக்கம் :
ஆக மக்கள் ஒருவரை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்வதற்கு ஏதாவது ""ஆயத்தை"" (அத்தாட்சியைக்) கொண்டு வரும்படி கேட்டு வந்தனர். அதாவது அவர்கள் ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்றனர். அப்போது தான் அவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள முடியும் என்றனர். அவர் பதில் அளிக்கையில் அத்தகைய அற்புதத்தை இறக்கிக் காட்ட அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டு. ஆனால் அவ்வாறு நிகழ்த்திக் காட்டி ஒரு பலனும் இருக்கப் போவதில்லை.
13.அற்புதத்தை எதிர் பார்ப்பது ஏன்?
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًۭا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًۭا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍۢ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَٰهِلِينَ.
6:35. (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெருங்கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி)ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வாரும். அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.
விளக்கம்:
இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் இத்தகைய சாக்கு போக்குகளையே சொல்லி வந்தார்கள் என்பதே. ஒரு வேளை அவர்களின் கோரிக்கைப் படி பூமியை துளைத்து காட்டினாலும் அல்லது வானத்தில் ஏறிச் சென்று அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினாலும் நீர் எடுத்துரைக்கும் மார்க்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டீரா என்று நபியைப் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான். ஆக இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு அவர்கள் கூறும் சாக்கு போக்குகளே ஆகும். திருக்குர்ஆனின் இன்னொரு வாசகத்தையும் கவனியுங்கள்.
وَلَوْ أَنَّنَا نَزَّلْنَآ إِلَيْهِمُ ٱلْمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَىْءٍۢ قُبُلًۭا مَّا كَانُوا۟ لِيُؤْمِنُوٓا۟ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ.
6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கி வைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படி செய்தாலும் இன்னும் எல்லா பொருட்களையும் அவர்களிடம் நேருக்கு நேர் கொண்டு வந்து ஒன்று சேர்த்தாலும் அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஒரு போதும் ஈமான் கொள்ளவே மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கிறார்கள்.
விளக்கம் :
(1) அவர்களுடைய கோரிக்கையின் படி மலக்குகளே வந்து ஈமான் கொள்ள சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
(2) ஒரு வேளை இறந்தவர்களை அவர்களிடம் பேச வைத்து ஈமான் கொள்ள சொன்னாலும் அதுவும் ஒரு மாய மந்திர வேலையே என்று சொல்லி இறைவழிகாட்டுதலை தட்டிக் கழித்திருப்பார்கள்.
(3) அத்தனை ஏன்? உலகளாவிய சொத்து செல்வங்களையே கொண்டு வந்து குவித்தாலும், அவர்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொள்வார்களா?
(4) ஒரு போதும் இல்லை. காரணம் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அவர்களிடம் அறவே கிடையாது. மூடர்களைப் போல் வாழ்கிறார்கள்.
(5) இத்தகையோர் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வது எங்கணம்? சிந்தித்து செயலாற்றுபவர்களே மார்க்க உண்மைகளை ஏற்றுக் கொள்ள முடியும். இதுவே அல்லாஹ்வின் நாட்டமும் ஆகும்.
14.இன்றைய முஸ்லிம்கள்
இன்றைய காலக் காட்டத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாக சொல்லி வருகிறார்கள். உதாரணத்திற்கு இப்றாஹீம் நபியை நெருப்பிலிட்டு அந்த நெருப்பு குளிர்ச்சியானது, மூஸா நபி கைத்தடியை கீழே எறிந்து பாம்பானது போன்ற விஷயங்களை எடுத்துக் கூறி இவை எல்லாம் அற்புதங்கள் இல்லையா என்கிறார்கள். இதைப் பற்றி நாம் எழுதிய திருக்குர்ஆன் கூறும் உதாரணங்களும் அவற்றின் படிப்பினைகளும் என்ற நூலில் விவரமாக விளக்கியுள்ளோம். இங்கு ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். அவை எல்லாம் இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்டவை ஆகும். அதை நேரடி பொருள் கொண்டு அவை யாவும் அற்புதங்கள் என்று சொல்லி வருவார்கள்.
அதாவது திருக்குர்ஆனின் வாசகங்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடி மொழி பெயர்ப்பு செய்து அவையாவும் அற்புத நிகழ்வுகள் என்கிறார்கள். ஆனால் நபிமார்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள், ஏதாவது அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் தான் அவரை நபி என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.
ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍۢ تَأْكُلُهُ ٱلنَّارُ ۗ
3:183. அவர்கள், “எந்த ரஸுலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு சாப்பிடுவதை நமக்குக் காண்பிக்கும் வரையில் அவர் மீது விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதி மொழி வாங்கியுள்ளான் என்று கூறுகிறார்கள்.
கவனித்தீர்களா? ஒருவரை நபி என்று ஏற்றுக் கொள்வதற்கு என்னன்ன நிபந்தனைகளை வைக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா? அதுவும் அல்லாஹ்வே அவ்வாறு உறுதிமொழி வாங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்கள் அறிவிலிகளாக இருக்கிறார்கள். இதற்கு திருக்குர்ஆனில் என்ன பதில் வருகிறது என்பதையும் கவனியுங்கள்.
قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌۭ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
3:183. (நபியே!) “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர் தெளிவான ஆதாரங்களையும் இன்னும் நீங்கள் கேட்டுக் கொண்ட படி பலியை நெருப்பு உண்பதையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளராக இருந்தால் இதற்க பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
விளக்கம் :
உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் சீர்திருத்தவாதிகளே ஆவார்கள். எனவே அவர்கள் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களையே மக்கள் முன் சமர்ப்பித்தார்கள். ஒரு வேளை அவர்கள் சொல்வது போல் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியது உண்மையே என்று வைத்துக் கொண்டாலும், அவர்களை அவர்கள் ஏன் கொல்ல வேண்டும்? இதைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று அல்லாஹ்வே சொல்கின்றான்.
15.ஈஸா நபியின் அற்புதம்
ஈஸா நபியும் களிமண்ணால் ஒரு பறவையை செய்து பறக்கும் படி செய்தார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார். கண்ணில்லாதவர்களுக்கு கண்களை கொடுத்தார். குஷ்ட நோயாளிகளை குணப்படுத்தினார் என்று திருக்குர்ஆனில் மொழி பெயர்த்து வைத்துள்ளார்கள். (3:49)
இது உண்மை என்றால் அவரை தீர்க்க தரிசியாக ஏற்று புகழ்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக அவரை ஏன் சிலுவையில் அறைந்து கொல்ல முயற்சி செய்ய வேண்டும்?
இப்றாஹீம் நபியின் அற்புதம்?
அதே போன்று இப்றாஹீம் நபியை பெரிய நெருப்புக் குண்டத்தில் எரிந்த போது அந்த நெருப்பு பூ மெத்தைப் போல் ஆகி குளிர்ந்து விட்டது என்று மொழி பெயர்த்துள்ளார்கள். (21:68-69)
இது உண்மை என்றால் அவ்வூர் மக்கள் யாவரும் அவரை புகழ்ந்து பாராட்டி அவரை நபியாக ஏற்று இருக்க வேண்டுமே. ஆனால் அவருடைய சகோதரர் மகன் லூத் நபி மட்டும் ஈமான் கொண்டதாக அல்லவா திருக்குர்ஆன் அறிவிக்கிறது?(29:26)
அதே போன்று மூஸா நபி தம் வசமிருந்த தடியை கீழே எரிந்து அது பாம்பாகியதாக மொழி பெயர்த்துள்ளார்கள். (7:117)
ஒரு பாம்பு மற்ற மத குருமார்களின் கற்பனைகளை எப்படி விழுங்க முடியும்? (7:117) இப்படி எல்லாம் மொழி பெயர்த்து விட்டு அவை எல்லாம் அற்புதம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதில் என்ன பலன் கிடைக்கப்போகிறது.
16.மூஸா நபியின் அஸாக் கோல்?
மேலும் மூஸா நபியிடம் இருந்த கைத்தடியை கடலில் அடித்ததும் கடல் பிளந்து விட்டதாக மொழி பெயர்த்து விட்டு அதுவும் ஒரு அற்புதமே; என்கிறார்கள். கடலுக்கு ஏது இரு கரைகள்?
மொழி பெயர்ப்பாளர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடுகிறார்கள். அதாவது திருக்குர்ஆன் உலகார்க்கு வந்த அறிவுரைகளே அன்றி வேறில்லை என்று அறிவித்துள்ளது. (6:90) உண்மை இவ்வாறு இருக்கும் போது, நபிமார்கள் எப்படி மாயாஜால வித்தைகளை காட்டி அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ள வைத்திருக்க முடியும்? மாய மந்திர வித்தைகளால் உலகார்க்கு என்ன அறிவுரை கிடைக்கப் போகிறது? ஞானம் மிக்க திருக்குர்ஆனில் (36:2) மாய மந்திரங்களுக்கு ஏது இடம்? உலைக் கூடத்தில் ஈக்கு என்ன வேலை? திருக்குர்ஆனை மொழி பெயர்த்துள்ளதை கவனிக்கும் போது, அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போட முயற்சித்தது போல் உள்ளது.
நாம் ஏற்கனவே எடுத்துரைத்த 6:37வாசகத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதில் கீழ் கண்ட விஷயமும் இணைந்து இருக்கும். அதாவது
قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةًۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
6:37. நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமை உடையவனே,
விளக்கம்:
அவர்கள் எதிர் பார்ப்பது போல அற்புதங்களை (ஆயத்துகளை) நிகழ்த்திக் காட்டும் ஏற்பாடுகள் அல்லாஹ்வின் நடைமுறை சட்டத்தில் உண்டு. அதை யார் வேண்டுமானாலும் கண்டறிந்து மாயா ஜால வித்தைகளை மக்களுக்கு நிகழ்த்திக் காட்டலாம். இதனால் மக்களுடைய நிலையான வாழ்விற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? அந்த வித்தைகளால் கண நேர சந்தோஷத்தை மட்டுமே தர முடியும்.
17.நபிமார்கள் அற்புதங்களை செய்து காட்ட மறுப்பதன் காரணம் என்ன?
இது ஓரு முக்கியமான கேள்வியாகும். இதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், மத அடிப்படையில் சொல்லும் விஷயத்திற்கும் மார்க்க அடிப்படையில் சொல்லும் விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்க அடிப்படையில் நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள் யாவும் சமுதாய சீர்கேடுகளை அறவே நீக்கி, தூய்மையான, சிந்தித்து செயலாற்றக் கூடிய அற்புதமான சமுதாயத்தை ஏற்படுத்திடவே பாடுபட்டனர்.
ஆனால் மத அடிப்படையில் பார்க்கும் போது, நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்களே வேறு. அதாவது மாயா ஜால வித்தைகளை செய்து காட்டியதாகவே சொல்வார்கள். வார்த்தைக்கு வேண்டுமென்றால் மாற்றி சொல்லலாம். அதாவது நபிமார்கள் செய்து காட்டிய மாயா ஜால வித்தைகளை மோஜிஸாக்கள் என்பார்கள். அதையே அவ்லியாக்கள் செய்து காட்டினால், கராமத்து என்பார்கள். மாற்று மத சகோதரர்கள் செய்து காட்டினால், அதை கண் கட்டி வித்தை அல்லது மாயா ஜால வித்தைகள் என்பார்கள்.
மேலும் உலகில் பலர் இமாலய மந்திர வித்தைகளை எல்லாம் கற்றுக் கொண்டு அவற்றை கேளிக்கையாக மக்கள் முன் செய்து காட்டி பணத்தை சம்பாதிக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமாக பயிற்சி அளிக்கும் பள்ளிக் கூடங்களும் உள்ளன. அதில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஆக நாம் சொல்ல வருவது என்னவென்றால் மாய மந்திர வித்தைகளை கற்றுக் கொள்வதற்கும், மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தான்.
வாருங்கள், நபிமார்கள் விஷயத்தில் எவ்வாறு தவறுதலாக மொழி பெயர்த்து அவற்றை மோஜிஸாக்கள் என சித்தரிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். இதற்கு முன்பாக ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறோம். அதாவது அல்லாஹ்வின் நடைமுறை சட்டங்களில் ஒரு போதும் மாற்றத்தை காண மாட்டீர் என்று திருக்குர்ஆனில் ஆங்காங்கே சொல்லப்படுவதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் சீர்த்திருத்தவாதிகளே ஆவார்கள்.
18.மூஸா நபி தடியை போட்டார். அது உடனே பாம்பாயிற்று
7:107 அப்போது மூஸா தம் கைத்தடியை எறிந்தார். உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
இதை ஒருவர் படித்தால், மூஸா நபி மிகப் பெரிய மந்திரவாதி என்றே எண்ணுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஃபிர்அவுனிய மன்னன் தவறான வழியில் இருப்பதாகவும், தன்னிச்சையாக ஆட்சி செய்து வரம்பு மீறி செயல்பட்டு வருவதாகவும் சொல்லி (20:24) அவனையும் அவனுடைய ஆட்சியாளர்களையும் திருத்துவதற்காகத் தான் மூஸா நபியை அல்லாஹ் அனுப்புகிறான். (7:103)
அந்த மன்னரிடம் சென்ற நபி, தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வின் சார்பாக வந்துள்ள தூதன் என்கிறார் (7:104) அதைத் தொடர்ந்து அவர் ஒரு முக்கியமாக விஷயத்தையும் மன்னரிடம் சொல்கின்றார். حَقِىْقٌ عَلَىَّ اَنْ لَّا اَقُوْلَ اَلاّ الْحَقَّ என்று வருகிறது. அதாவது அல்லாஹ்வின் மீது சத்திய உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதிருப்பது என் மீதுள்ள கடமையாகும் என்கிறார்.(7:105) அவ்வாறு சொன்ன பிறகு சத்திய உண்மைக்குப் புறம்பாக, அசத்தியமான முறையில், தடியை கீழே எறிந்து பாம்பாக்கி காட்டி இருப்பாரா?
ஆட்சி பீடத்தில் இருக்கும் மன்னரிடம், ஒரு நபி மார்க்க உண்மைகளை எடுத்துரைப்பதற்குப் பதிலாக, மாய மந்திர சாகசங்களை செய்து காட்டியதாக மொழி பெயர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்? மன்னரையும் அவருடைய அரசு பிரமுகர்களையும் திருத்துவதற்காகத் தானே அல்லாஹ் அனுப்பினான்? அந்த பணியை விட்டுவிட்டு بَاطِلَ பாத்திலான முறையில் நடந்து கொண்டதாக எழுதியிருப்பது எப்படி உண்மையாகும். அதன் பிறகு பதிலுக்கு மன்னரும் தம் ஆட்களை வைத்து போட்டி நடத்தியதாக வருகிறது. இறுதியில் அவர்கள் செய்த சூனியங்கள் யாவும் வீணாகி விட்டன என்று சொல்லப்படுகிறது (7:118) சூனியக்காரர்கள் செய்தால் அவை சூனியம் எனவும், நபி செய்தால் அதை மோஜிஸா என்று மொழி பெயர்த்துள்ளார்கள். இது எந்த வகையில் நியாயம்?
இன்றைய காலக் கட்டத்தில் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அதை திருத்துவதற்கு யாரும் முயலக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் திருக்குர்ஆன் உலக நடைமுறைக்கு பொருந்தாத வேதம் என்று நிரூபிப்பதற்காகவே இவ்வாறு செய்திருப்பார்களா என்பதும் நம் சந்தேகம். இதற்காகத் தான் யாரையும் திருக்குர்ஆனை படித்து, ஆழ்ந்து சிந்திக்கக் கூடாது என்று அடிக்கடி ஆலிம்கள் சொல்லி வருகிறார்களோ?
இன்றைய காலத்தில் நாமும் மாய மந்திர வேலைகளை கற்றுக் கொண்டு ஆட்சியாளர்களிடம் அவற்றை செய்து காட்டி, இதுதான் இஸ்லாம் என்று சொல்ல வேண்டுமா? அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனிடமிருந்து வரும் சொல், உலக அரங்கில் எடுபடாத விஷயமாக இருக்குமா என்பதை யாராவது சிந்தித்துப் பார்க்கின்றாரா? ஏன் இல்லை? அவற்றை ஓதுவதற்காக மட்டும்தான் என்று சொல்லி விட்டதால் தானோ? பின்பற்றுவதற்கு அல்ல என்பதாலா?. பின்பற்றுவதற்கு வேறு ஒரு நூல் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் குர்ஆனைப் பின்பற்றுவதற்குச் சமம் என்றும் அடிக்கடி ஆலிம்கள் சொல்வதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த நூல்கள் தான் இலட்சக் கணக்கில் எழுதிய ரிவாயத்துகளின் தொகுப்புகளாகும்.
19.இப்றாஹீம் நபியை நெருப்பில் எறிந்து அது பூ மெத்தை ஆயிற்று?
அதே போல் இப்றாஹீம் நபி விஷத்திலும் மாய மந்திர வேலைகளை அல்லாஹ்வே செய்திருப்பதாக மொழி பெயர்த்துள்ளார்கள். அதையும் சற்று கவனித்துப் பாருங்கள்.
சிலை வணக்க வழிபாட்டை எதிர்த்து இப்றாஹீம் நபி பல முறை மக்களிடம் எடுத்துரைத்து வந்தார். (6:74-80) தம் தந்தையிரிடமும் வாதிட்டார். (6:74) இவை எல்லாம் பலிக்காமல் போகவே, அவர் கோயில் சிலைகளை உடைத்தெறிந்தார் (21:57-58) இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததும், அவரை அழைத்து விசாரிக்கின்றனர். அதற்கு அவர் அந்த சிலையிடமே கேட்டுக் கொள்ளும் படி சொல்கிறார்.(21:63) அந்த சிலைகள் பேசாது என்ற உண்மை மக்களில் சிலருக்கு புரிய வருகிறது.
ஆனால் சிலை வணக்க வழிபாட்டை ஆதரிப்பவர்கள், இச்சம்பவத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ள ஊராரிடமும் அறிவித்து விடுகின்றனர். தாம் வணங்கி வரும் தெய்வங்களை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது நமவடிக்கை எடுக்கும்படி கொக்கரிக்கின்றனர். மேலும் சிலர், இப்றாஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் எறிந்து பொசுக்கி விடும்படி ஆவேசமாக பேசுகின்றனர். (21:68) இப்படியாக ஊர் மக்கள் இவருக்கு எதிராக கொதித்து எழுகின்றனர். மக்களிடையே எழுந்த ஆவேசத் தீயை தணித்து விட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான். (21:69) திருக்குர்ஆன் வாசகம்:
قُلْنَا يَٰنَارُ كُونِى بَرْدًۭا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ.
21:69 நெருப்பே! நீ இப்றாஹீம் மீது குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகி விடு” என்று அல்லாஹ் கூறினான்.
நாம் சொல்ல வருவது என்னவென்றால் அல்லாஹ் நடைமுறைப் படுத்தியுள்ள சட்ட திட்டத்தில் (சுன்னதல்லாஹ்வில்) ஒரு போதும் மாறுதலைக் காணமாட்டீர் என்று திருக்குர்ஆன் வாசகம் ஆங்காங்கே அறிவிக்கின்றது. பார்க்க: (17:78 30:30 33:38 33:62 48:23) எனவே எதையும் சுட்டுப் பொசுக்கும் தன்மை உடைய நெருப்பை படைத்த அல்லாஹ், ஒரே ஒரு முறை ஒரு நபிக்காக, அதன் தன்மையை மாற்றிக் கொள்ளும்படி அல்லாஹ் சொன்னதாக மொழி பெயர்த்து இருப்பது எந்த வகையில் உண்மையாகும்? மக்களிடையே எழுந்த ஆவேசத் தீயைதான் அல்லாஹ் தணித்ததாக பொருள் கொள்ள முடியுமே அன்றி கொழுந்து விட்டு எரியும் நெருப்பை தணித்து பூமெத்தை ஆக்கிவிடவில்லை.
மேலும் அங்கிருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று எண்ணி இப்றாஹீம் நபி, குளிர்ச்சியான பிரதேசமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விடுகின்றார். (37:99) ஊரை விட்டு சென்று விட்டதால் அவ்வூர் மக்களின் கோபக் கனலும் தணிந்து விட்டது. மேலும் அவ்வூர் மக்கள் அவரை நெருப்பில் எறிந்து விட எண்ணம் தான் கொண்டிருந்தார்கள் என்று திருக்குர்ஆன் வாசகம் கூறுகிறது. (21:70) உண்மையிலேயே அவரை நெருப்புக் குண்டத்தில் எறிந்து விடவில்லை என்றும் தெளிவாகிறது.
20.ஈஸா நபி தந்தையின்றி பிறந்தாரா?
இதுவும் மிகவும் பிரபலமான ஒரு செய்தியாகும். காரணம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் என்கிறார்கள். இதை திருக்குர்ஆன் முற்றிலுமாக மறுக்கிறது. எனவே ஈஸா நபியின் பிறப்பைப் பற்றி முஸ்லிம் உலமாக்கள் கிறிஸ்தவ மதத்தை மறைமுகமாக ஆதரிப்பது போல் தத்ரூபமாக சொல்லி வருகிறார்கள்.
நடந்த உண்மை என்னவென்றால் ஈஸா நபியின் தாயார் மர்யம் (அலை) சிறு வயதிலேயே ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு துறவரம் மேற்கொண்டார். (3:35-37) அவர் பருவ மங்கை ஆன பின், ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வந்த முறைகேடுகளை அறிந்து பயந்தார் (3:42) ஜக்ரியா நபியின் பாதுகாப்பில் வளர்ந்த மர்யமை (3:37) எப்படியாது தம் கைவசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசிரமத்து மடாதிபதிகள் போட்டி போட்டுக் கொண்டனர். இறுதியில் குலுக்குச் சீட்டு போட்டு யார் பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர் (3:44)
அதைத் தொடர்ந்து யுஸ{ஃப் என்பவர் பொறுப்பில் வந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் வரலாற்று ஆதாரங்கள் அறிவிக்கின்றன. ஆசிரமத்து முறைகேடுகளை எதிர்த்து வந்ததால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அங்கிருந்து வெளியேறி நசீரியா என்ற ஊருக்குச் சென்று மறைவாக வாழ்ந்து வந்தார். (19:16)
அத்தகைய இக்கட்டான சமயத்தில் தான் அவருக்கு ஈஸா என்ற ஒரு மகன் பிறப்பான் என்ற செய்தி வந்தது. துறவறத்தை மேற்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு பிள்ளையை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த செய்தி அவருக்கு வியப்பாக இருந்தது. எனவே எந்த ஆடவரும் தொடாதிருக்க எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்று இறைச் செய்தியை கொண்டு வந்தவரிடம் கேட்டார். (19:20) அவ்வாறே ஆகும் என்று அச்செய்தியாளர் பதிலளிக்கிறார். அதாவது துறவறத்தை விட்டுவிட்டு இல்லறத்தை தொடங்கும் படி சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
ஆனால் எந்த ஆடவரும் தொடாதிருக்க எவ்வாறு பிறக்கும் என்று கேட்டதற்கு “அவ்வாறே” பிறக்கும் என்ற பதிலை வைத்து, ஆண் தொடாமலே பிறக்கும் என்று உலமாக்கள் விளக்கமளித்து விட்டார்கள். இதனால் இதுவும் ஒரு அற்புதமே என்று சொல்லிக் கொண்டு, தம்மை அறியாமலேயே கிறிஸ்தவ மதத்தை முஸ்லிம் உலமாக்கள் முஸ்லிம்களிடையே பரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கையில் ஆண் துணையின்றி குழந்தையை படைக்க அல்லாஹ்வால் முடியாதா என்று சிலர் அறிவில்லாமல் கேட்கின்றனர். அகிலத்தையே படைத்த அல்லாஹ்வால் ஒரு குழந்தை என்ன பல்லாயிரக் கணக்கான குழந்தைகளை ஆண் பெண் சேராமலேயே படைக்க முடியும். ஆனால் நடைமுறை சட்டத்தை உருவாக்கிய பின் அல்லாஹ் ஒரு போதும் மாற்றிக் கொள்வதில்லை என்பதே நாம் அறிவிக்கும் பதிலாகும். (30:30)
முதுமை அடைந்த ஜக்கரியா நபியும், தனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்று வியந்து கேட்டதற்கு, “அவ்வாறே” பிறக்கும் என்று பதில் வருகிறது. அவருக்கு மகனாகப் பிறந்த யஹ்யா நபியின் பிறப்பைப் பற்றி உலகில் யாரும் எந்த சர்ச்சையும் எழுப்புவதில்லை. ஆனால் ஈஸா நபியைப் பற்றி மட்டும் இத்தனை சர்ச்சைகள். ஏன்? கிறிஸ்தவர்களைப் பொருத்த வரையில் அவர் “தேவகுமாரன்” ஆவார். ஆனால் அல்லாஹ்வோ தந்தை மகன் என்ற உறவு முறைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவான்.(அத்தியாயம் 112)
இப்படியாக திருக்குர்ஆனில் வரும் வரலாற்று உண்மைகளை போலியான விஷயங்களைக் கலந்து “அற்புதங்கள்” என்று சொல்லிக் கொள்வதால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. மாறாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தான் ஏற்படும். காரணம் இன்றைக்கும் முஸ்லிம்கள் அற்புதங்களை எதிர் நோக்கி காத்து கிடக்கின்றனர். சிந்தனை, ஆற்றல், உழைப்பு என்றெல்லாம் இல்லாமல் அல்லாஹ் நாடினால் நமக்கு எல்லாமே கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் உலக அரங்கில் முஸ்லிம்களின் நிலைமை மாற்று மதத்தவர்களைவிட மிக மோசமாக உள்ளது. யாராவது அதைப் பற்றி விசாரித்தால் மார்க்கத்தில் சிந்தனைக்கும் அறிவுக்கும் வேலை இல்லை என்று வாய் கூசாமல் சொல்லி வருகின்றனர்.
21.யூனுஸ் நபி மீன் வயிற்றுக்குள் 40 நாட்கள் இருந்தார்?
இதையும் பல உலமாக்கள் பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள். இதுவும் மிகப் பெரிய அற்புதங்களில் ஒன்று என்பார்கள். அல்லாஹ்வுடைய வல்லமையை இச்சம்பவம் பறைசாற்றுகிறது என்பார்கள். நடந்த உண்மை என்னவென்பதை கவனியுங்கள். சூர அன்பியா என்ற அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ
21:87. மேலும் ஜன்னூன் நபியைப் (யூனுஸ்) பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தம் சமூகத்தாரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அவர்களை விட்டு கோபமாக வெளியேறி விட்டார். அவர் இறைக் கட்டளை வரும்வரை எதிர்ப்பாராமல் சுயமாகவே முடிவெடுத்துக் கொண்டார். தாம் நெருக்கடியில் சிக்கிக்கொள்ள மாட்டோம் என எண்ணிக் கொண்டார்.
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ.
37:140. அவர் ஒரு கப்பலில் ஏறி தப்பித்துச் செல்ல முற்பட்டார். அந்தப் படகில் ஏற்கனவே பயணிகள் நிரம்பி இருந்தனர்.
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ.
37:141. ஆகவே பயணத்திற்கான அனுமதி பெறாதவறாக இருந்ததால் அவர் பிடிபட்டார்.
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ.
37:142. எனவே அக்கால வழக்கப்படி அவரை கப்பலை விட்டு தள்ளிவிட வேண்டியதாயிற்று. அதைத் தொடர்ந்து மீன் ஒன்று அவரைக் கவ்விக்கொண்டது.
இந்த வாசகத்தை மொழி பெயர்க்கும் போது, யூனுஸ் நபியை மீன் விழுங்கி விட்டதாகவும், மீன் வயிற்றுக்குள் 40 நாட்கள்; தங்கி விட்டதாகவும் எழுதியுள்ளார்கள். இங்கிருந்து தான் ஆலிம்களின் அற்புத கதைகள் ஆரம்பமாகின்றன. ஆனால் فَالْتَقَمَه‘ என்றால் கவ்விக் கொள்வது என்று பொருள்படும். அதாவது குவளை لُقْمَه என்று பொருள்படும். சரி. அதைத் தொடர்ந்து என்ன எழுதியுள்ளார்கள் என்பதையும் கவனியுங்கள்.
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ.
37:143. ஆனால் அவர் அந்த மீனிலிருந்து விடுபட்டு வேகமாக நீந்தி கரைக்கு வந்தடைந்தார். அவ்வாறு செய்யாதிருந்தால்,
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.
37:144. அவர் நிலையான சட்டப்படி மீனுக்கு இறையாகி மடிந்து இருப்பார்.
இங்கு முஸப்பிஹீன் مٌسَبِّحِىْنَ என்ற வார்த்தை வருகிறது. ஸபஹ سَبَحَ என்றால் நீந்துவது என்று பொருள்படும். (பார்க்க 36:40) இந்த வார்த்தைக்கு எதிர் நீச்சல் போடுவது என்ற அர்த்தமும் வரும். மேலும் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் முழு வீழ்ச்சில் செயல்படுவது என்ற பொருளிலும் வரும்.
ஆனால் மீன் வயிற்றில் இறைவனைத் துதி செய்து – தஸ்பீஹு செய்து கொண்டிராவிட்டால் . . . . என்று எழுதியுள்ளார்கள். ஒருவர் மீன் வயிற்றிற்குள் சென்றுவிட்டால் மூச்சு திணரி அவரால் ஒரு நிமிடமும் உயிர் வாழ முடியாது. இதுதான் நிலைநிறுத்தப்பட்ட சட்டம். இது அனைவருக்கும் பொருந்தும். ஒருவர் நபி என்பதால் அவருக்கு விதிவிலக்கெல்லாம் ஒருபோதும் கிடையாது.
ஆனால் இப்படி தவறுதலாக மொழி பெயர்த்து விட்டு, “அல்லாஹ் நாடினால்” அவ்வாறு ஒரு நபியை மீன் வயிற்றுக்குள் வாழ வைக்க முடியாதா என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். இவ்வாறு கேட்பதில் எவ்வித நியாயமும் இல்லை. அல்லாஹ்வால் முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. அல்லாஹ், தான் உருவாக்கிய விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுகின்றானா என்பதுதான் கேள்வி.
அக்காலத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த மஜுஸியர்கள் மாயாஜால வித்தைகளை செய்து காட்டுவதில் மிகவும் தேற்சி பெற்றிருந்தனர். திருக்குர்ஆனை முதன்முதலில் இமாம் தப்ரீ என்பவர் தான் அரபியிலிருந்து அரபிமொழியில் விளக்கம் எழுதினார். இவரும் ஈரானைச் சேர்ந்தவர். இவர் எழுதிய விளக்கத்தை இப்னு கஸீர் என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இவ்வாறு மொழிபெயர்க்கும் போது நடைமுறையில் உள்ளபடி திக்ரு, தஸ்பீஹ், ஸஜ்தா போன்ற ஏராளமான வார்த்தைகளுக்கு மொழி பெயர்க்கவே இல்லை. அரபி வார்த்தையையே பயன்படுத்திக் கொண்டார்கள். அதன்பின் தஸ்பீஹ் என்றால் தஸ்பீஹ் மணி என்று சொல்லி இன்று வரையில் அதையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
மேலும் திருக்குர்ஆனின் வாசகங்களுக்கு மொழி பெயர்க்கும் போது ரிவாயத்துகளில் என்ன வருகிறது என்பதை பார்த்து அதற்கேற்றவாறு மொழி பெயர்த்து விட்டார்கள். அது மட்டுமின்றி அது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்று சொல்லி அதற்கு எதிராக யாரும் பேச விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ.
37:145. ஆக அவர் வேகமாக நீந்தி வந்ததால், மிகவும் களைத்துப் போய் இருந்தார். எப்படியோ அவர் கஷ்டப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தார்.
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ.
37:146. எனவே அங்கு முளைத்திருந்த சுரைக்காய் வேலிக்குள் சென்று சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டார்.
நடந்த சம்பவத்தைப் பற்றி யூனுஸ் நபி யோசித்துப் பார்த்தார். அவர் தம் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார். இதைப் பற்றி 21:87 வாசக தொடரில் இவ்வாறு வருகிறது.
فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ.
21:87 அறியாமையினால் நான் தவறிழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிந்து செயல்படுவதற்கு இல்லை. இத்தகைய கற்பனைகளுக்கெல்லாம் நீ அப்பாற்பட்டவன். நானே வழி தவறிச் சென்று விட்டேன்” என்று இறைவனிடம் மன்றாடினார்.
فَٱسْتَجَبْنَا لَهُۥ وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُۨجِى ٱلْمُؤْمِنِينَ.
அதைத் தொடர்ந்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதாக 21:88 வாசகம் அறவிக்கின்றது. இவ்வாறு மனந்திருந்தி மன்னிப்பு தேடி வரும் முஃமின்களுக்கும் பாதுகாப்பான வாழக்கைக் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ.
37:147. அதன்பின் அவர் தம் ஊருக்குத் திரும்பியதும் அங்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்து அவரை வரவேற்றனர். அதாவது
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ.
37:148. யூனுஸ் நபியின் அறிவுரைப்படி செயல்படுவதாக அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அச்சமுதாயத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அவர்கள் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள்.
மீண்டும் ஒரு முறை யூனுஸ் நபி, தம் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் கேட்ட துவாவைப் பற்றி (21:87) சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் இந்த துவாவை – لااله إلآ أنت سبحآنك إنى كنت من ا لضلمىن என்று தினந்தோறும் ஓதி வந்தால் நமக்கு எந்த கெடுதலும் தீண்டாது. நமக்கு பரகத்து கிடைத்து வரும் என்று பாமர முஸ்லிம்களிடம் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மந்திரத்தால் இவ்வுலகில் எதையாவது சாதிக்க முடியுமா?
22.முஹம்மது நபி சந்திரனை பிளந்தார்?
சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை அரபு நாட்டவர் யாரும் பார்க்கவில்லையாம். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சந்திரன் பிளந்து இணைந்ததை பார்த்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். மேலும் சந்திரனுக்கு விஜயம் செய்த ஆம்ஸ்டிராங்கும், சந்திரனில் ஏதோ ஒரு கோடு போல் இருப்பதை பார்த்து, அதைப் பற்றி முஸ்லிம் உலமாக்களிடம் விசாரித்து அறிந்து கொண்டாராம். அதைத் தொடர்ந்து அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். இதைவிட மோசமான நிலைமை வேறு எந்த மதத்தினருக்காவது வருமா?
சந்திரனின் பரப்பளவு என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? அது பிளந்து போனால் என்னவாகும்? இதைப் பற்றி எல்லாம் யாராவது ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறார்களா? ஒரு போதும் எந்த உலமாவும் சிந்தித்து தீர்க்கமான உண்மைகளை முஸ்லிம்களுக்கு அளிக்கவே இல்லை. ஏதோ கற்பனைகள் கலந்த காவியங்களைப் போல் நபிமார்களின் கதைகளை சொல்லி வருகிறார்கள். அதில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சந்திரனைப் பிளந்து காட்டிய விஷயமும் ஒன்று.
சந்திரனைப் பற்றி உண்மைகளை அறிந்து கொண்டால் இப்படி நாம் ஒருபோதும் பேச மாட்டோம். சந்திரன் பூமியிலிருந்து ஏறத்தாழ 3,84,400 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அது பூமியை சுற்றி வரக்கூடிய துணைக் கோள் (Satellite) ஆகும். இதன் சுற்றளவு 10918 கி.மீட்டர். அதன் பரப்பளவு 3,79,00,000 ச.கி.மீட்டர் ஆகும். இது பூமியை விட 27% அளவே ஆகும். அதாவது ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியாகும். (ஆதாரம்: Google Earth and Moon)
இதை ஒரு விரல் அசைவில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிளந்து விட்டு, அதை உடனே மீண்டும் சேர்த்து விட்டதாக சொன்னால், அவ்வாறு சொல்பவரை என்னவென்று சொல்வது? அவருக்கு சந்திரனைப் பற்றிய ஒரு உண்மையும் தெரியாது என்றுதானே பொருள்படும்? யாரோ கற்பனை வளத்தோடு சொல்லி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இப்படி சொல்பவர்கள் சூஃபியாக்களாகத் தான் இருக்க முடியும். அவர்கள் தான் திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில் கற்பனை செய்து சொல்லி விட்டு இப்படித்தான் முஹம்மது நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள் என்று சொல்லி விடுவார்கள்.
அது மட்டும் இல்லை. இன்றைக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலமாக்களின் கனவில் வந்து மார்க்க சந்தேகங்களை தீர்த்து வருவதாகவும் சொல்கிறார்கள். ஆச்சரியமே!
திருக்குர்ஆனில் சந்திரன் பிளந்த விஷயம் சொல்லப்பட்டுள்ளதே என்று ஒருவர் நம்மிடம் ஓடி வந்து கேட்டார். உடனே அவருக்கு திருக்குர்ஆன் வாசகத்தை எடுத்துக் காட்டினோம். வாயடைந்து போயி விட்டார். அன்றைக்கு ஓடியவர் தான். இன்று வரை திரும்பவே இல்லை. நீங்கள் அந்த வாசகத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ . . . .
ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ.وَإِن يَرَوْا۟ ءَايَةًۭ يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌۭ مُّسْتَمِرٌّۭ.
54:1-2 இறுதி நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. எனினும் அவர்கள் ஒரு அத்தாட்சியைப் பார்த்தால், அதைப் புறக்கணித்து விடுகிறார்கள். (இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
இவ்வாறு மொழி பெயர்த்து விட்டு இது மிகப் பெரிய மோஜிஸா ஆகும் என்கிறார்கள். இங்கு சொல்லப்படுகின்ற விஷயத்தை கவனித்துப் பாருங்கள். இறுதி நேரம் நெருங்கிய போது சந்திரனும் பிளந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அந்த இறுதி நேரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த இறுதி நேரம் என்பது “கியாம நாள்”(உலகம் அழியும் நாள்) என்று விளக்கம் அளித்துள்ளார்கள். அந்த விளக்கத்தின் படி பார்த்தால், “கியமா நாள்” விரைந்து வந்திருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு 1450 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த “கியாம நாள்” நெருங்கி வரவே இல்லையே. ஆக யாருக்கும் எந்த உண்மையும் தெரியாது. காரணம் இது போன்ற வாசகத்திற்கு முன்னுக்குப் பின் முரணாக அர்த்தம் எழுதி விட்டு அல்லாஹ்வுக்குத் தான் விளக்கம் தெரியும் என்றும் சொல்லி விடுகிறார்கள். உண்மை நிலைமை என்னவென்பதை கவனியுங்கள்.
இன்றைய காலக் கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட கட்சி தேர்தலில் தோல்வியை தழுவும் போது, “இலை” உதிர்ந்தது என்போம். அல்லது “சூரியன்” அஸ்தமித்து விட்டான் என்போம். இவை எல்லாம் அரசியல் மொழியில் சர்வ சாதாரணம். சட்டசபையில் “கார சாரமான” விவாதம் என்போம். அவர்கள் உப்பு மிளகாய் எல்லாம் தூவிக் கொண்டார்களா? இப்படி பேசினால் தான் கேட்பவர்களுக்க உண்மை பளிச்சென்று புரியும். அதே போன்றுதான் மேற் சொன்ன வாசகமும்.
திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் காலத்தில் மக்காவில் குரைஷியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியின் சின்னம் சந்திரனாகும். அது பிளந்து போகும் என்று அறிக்கை விடப்படுகிறது. அதாவது அங்கு வாழும் மக்கள் இரண்டாகப் பிரிந்து அங்கு நடைபெற்று வந்த ஏகாதிபத்ய ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அல்லாஹ் முன்னறிவிப்பு செய்கின்றான். இதை கேள்வியுற்ற மக்க்மா நகர மக்கள் இப்படி எல்லாம் சாத்தியமாகுமா என்று மெத்தன்ப் போக்குடன் இருந்து விடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்தது போலவே, முஹம்மது நபி மக்கமா நகரை சுற்றி வளைத்து, போரிடாமலேயே கைப்பற்றினார். (பார்க்க 59:2)
சிந்தனையாளர்களே! சற்று சிந்தித்துப பாருங்கள். இன்றைய காலக் கட்டத்திலும் அரசியல்வாதிகள் மாநில சுயாட்சியைப் பற்றி பேசினால் “நாடு துண்டு துண்டாக” ஆகிவிடும் என்கிறோம். உண்மையிலேயே நாடு பிளந்து துண்டு துண்டாக ஆகிவிடும் என்று பொருள் கொள்கிறோமா?
ஆனால் திருக்குர்ஆனை ஏன் இப்படி கற்பனை வளத்தோடு மொழி பெயர்த்துள்ளார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். திருக்குர்ஆனின் பொன் மொழிகள் உலக அரங்கில் எடுபடாத ஒன்றாக இருக்க வேண்டும். உலக அரங்களில் அல்லாஹ்வுடைய புகழோ மேலோங்கவே கூடாது. முஸ்லிம்கள் பலசாலிகளாகவோ புத்திசாலிகளாகவோ ஆகிவிடக் கூடாது. அவர்களை எப்போதும் கற்பனையில் மிதக்க வைத்து விடவேண்டும். அதையும் மீறி யாராவது திருக்குர்ஆனின் விளக்கத்தை புதிய அணுகுமுறையோடு எடுத்துரைத்தால் உடனே
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَسْمَعُوا۟ لِهَٰذَا ٱلْقُرْءَانِ وَٱلْغَوْا۟ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ.
41:26. “நீங்கள் இந்தக் குர்ஆனை செவி ஏற்காதீர்கள். அதையும் மீறி எடுத்துரைத்தால், அதில் குழப்பம் செய்து கூச்சலிடுங்கள். நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்று காஃபிர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறே இன்றைய காலத்திலும் திருக்குர்ஆனின் உண்மைகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்பதில் உலமாக்களே கண்ணும் கருத்துமாய் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமன்றி முஹம்மது நபி(ஸல்) அவர்களே இவ்வாறு விளக்கமளித்தார்கள் என்று சொல்லி வருவதால், அதை எதிர்த்து பேச யாருக்காவது தைரியம் வருமா? எல்லாமே தலையாட்டி பொம்மைகளாக எதையும் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். திருக்குர்ஆன் நபிமார்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. அதன் நோக்கமே அவர்கள் உலக நன்மைக்காக ஆற்றிய சிறப்பான பணிகள் என்னவென்பதை உலகார்க்கு எடுத்துரைக்கத் தான் ஆகும். ஆனால் அவற்றை கற்பனை கதைகளாக மாற்றிவிட்டனர்.
23.முஹம்மது நபி(ஸல்) மேராஜுக்கு விஜயம் செய்தது?
இதுவும் முக்கியமாகப் பேசப்படுகின்ற ஒரு விஷயமாகும். இதற்கான ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே எடுத்து சொல்கிறார்கள். மேராஜுக்கு முஹம்மது நபி(ஸல்) போய் வந்தார் என்றால் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விடியற்காலையில் பொழுது விடிவதற்கு முன் ஜிப்ரயீல் என்கின்ற வானவரின் துணையைக் கொண்டு வானத்தை கடந்து அல்லாஹ்வின் அர்ஷுக்குச் சென்று அல்லாஹ்வை சந்தித்து வந்தார் என்பதைத் தான் மேராஜ் சம்பவம் என்று சொல்கிறார்கள். இதற்காக எடுத்துரைக்கும் திருக்குர்ஆன் வாசகம் இதோ.
سُبْحَٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًۭا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ.
17:1 அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபதுல்லாவிலிருந்து தொலைவில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ் என்னவோ தன் அடியாரை (முஹம்மது நபியை) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரைதான் அழைத்துச் சென்றான். ஆனால் அங்கிருந்து வானத்தைக் கடந்து அர்ஷ் வரை சென்ற சம்பவத்தைப் பற்றி ரிவாயத்து புத்தகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மேற்சொன்ன மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே ( .. ) போட்டு எழுதியுள்ளார்கள். அதாவது மஸ்ஜிதுல் அக்ஸா என்பது பைத்துல் முகத்தஸிற்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசல் என்றார்கள். முஹம்மது நபி காலத்தில் அத்தகைய பள்ளிவாசலே கிடையாதே என்று சில அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாதிட்டார்கள். அதற்கு ஆலிம்களால் சரிவர நிரூபிக்க முடியவில்லை. எனவே காலப்போக்கில் மஸ்ஜிதெ அக்ஸா என்பது பைத்துல் முகத்தஸ்தான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதற்கேற்றவாறு மொழிபெயர்ப்பும் செய்து விட்டார்கள்.
இவ்வாறு எழுதி வைத்துக் கொண்டு, மேராஜ் சம்பவம் மிகப் பெரிய அற்புதம் என்று முஸ்லிம்களிடையே சொல்லி வருகிறார்கள். யாராவது மேராஜ் சம்பவத்தை ஏற்கவில்லை என்றால் அவர் முஸ்லிம் ஆக மாட்டார் என்றும் சொல்லி விடுகிறார்கள். அதன்பின் யாராவது அதைப் பற்றி வாதிடுவார்களா? அதையும் மீறி யாராவது வானத்தைக் கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றி 17:1 வாசகத்தில் இல்லையே என்று கேட்டால் முஹம்மது நபி அறிவித்ததை ஏற்க மறுக்கிறீர்களா என்று திருப்பி கேட்கிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அல்லாஹ் குர்ஆனில் அறிவித்திருக்கும் போது, (24:27) வானத்தை கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றி ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டால், அதை எல்லாம் எழுதினால் குர்ஆன் மிகப் பெரிய நூலாக ஆகிவிடும் என்று பதிலளிக்கிறார்கள்.
சரி வாருங்கள் திருக்குர்ஆன் வானத்தை கடந்து பயணிப்பதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍۢ.
55:33 உலகிலுள்ள மனித சமுதாயமோ அல்லது ஜின் இனத்தை (பழங்குடியை) சேர்ந்த சமுதாயமோ, யாராக இருப்பினும் உங்களால் முடிந்தால் பூமியை விட்டு வானத்தை கடந்து செல்லுங்கள். ஆனால் அதற்குரிய (விமானம், ராகெட் போன்ற) உபாயங்கள் எதுவும் இல்லாமல் உங்களால் கடந்து செல்லவே முடியாது.
இந்த வாசகத்தை மேற்கோள் காட்டி முஹம்மது நபி மட்டும் ராகெட் விமானம் எதுவும் இல்லாமல் எப்படி வானத்தை கடந்து சென்றிருக்க முடியும் என்று கேட்டால் வழக்கமான பதிலாக, “அல்லாஹ் நாடினால்” முடியாதா என்கிறார்கள். இப்படித் தான் முன்னுக்குப் பின் முரணாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் கற்பனை வளத்தோடு பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். போதாத குறைக்கு அல்லாஹ்வையும் இழுத்து, ""அவன் நாடினால்"" இவர்கள் கூற்றுபடி அவனும் அவ்வாறே செய்து முடிப்பான் போலும்.
மேலும் அவர்களின் கூற்றின்படி தன் அடியாரை அல்லாஹ் அர்ஷுக்கு அழைத்துச் செல்வதாக இருந்திருந்தால் கஅபாவிலிருந்தே அழைத்துச் சென்றிருக்கலாமே. தேவையில்லாமல் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு ஏன் அழைத்துச் சென்று, அங்கிருந்து அர்ஷுக்கு அழைத்துச் செல்லவேண்டும்? கஅபதுல்லாவிலிருந்து அர்ஷுக்கு செல்லும் வழி இல்லையோ? அல்லது அல்லாஹ்வால் அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியவில்லையோ? இதற்கு யாராவது பதில் சொல்வார்களா?
மேலும் இதற்காக அவர்கள் பறக்கும் குதிரை ஒன்றைக் கண்டு பிடித்து, அதற்கு புராஃக் براق என்று பெயரிட்டு அதன் மீது சவாரி செய்து சென்றதாகச் சொன்னார்கள். அதன் வரைப் படங்களையும் தயாரித்து வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த குதிரையின் முகம் அழகான பெண்ணின் முகமாக வரைந்து இருப்பார்கள். அங்கேயும் இவர்கள் ஆண் ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க தாயராக இல்லை. பெண்ணின் மீது சவாரி செய்து சென்றதாகக் கதை கட்டுகிறார்கள். சரி. மேராஜ் பிரயாணத்தைப் பற்றி மேல்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிப்போம்.
மேராஜுக்கு சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலகிற்கு என்ன கொண்டு வந்தார் என்று கேட்டால், ஐந்து வேளை தொழுகையைக் கொண்டு வந்தார் என்று சொல்லி அதைப் பற்றி விவரமாக சொல்வார்கள். அதாவது முதன் முதலில் அல்லாஹ் தன் அடியாருக்கு ஐம்பது வேளை தொழுகையை நிர்ணயித்து கொடுப்பதாக அறிவித்தானாம். மிகவும் பூரிப்புடன் சந்தோஷமாக அவர் உலகிற்கு திரும்பி வரும் போது, மூஸா நபியை சந்திக்க நேர்ந்ததாம். அவர் அல்லாஹ்விடமிருந்து என்ன பரிசு எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு முஹம்மது நபி(ஸல்) ஐம்பது வேளை தொழுகை எடுத்துச் செல்வதாக சொன்னாராம். அதற்கு மூஸா நபி அத்தனை வேளை உங்கள் உம்மதுகளால் தொழுக முடியாது. எனவே கொஞ்சம் குறைத்து கொடுக்கும்படி அல்லாஹ்விடம் சென்று கேளுங்கள் என்று சொன்னாராம்.
அவருடைய ஆலோசனையின் படியே அவர் அல்லாஹ்விடம் சென்று கேட்டதற்கு, 25 வேளை தொழுகையை அல்லாஹ் குறைத்து விட்டானாம். இதை அறிந்த மூஸா நபி, முஹம்மது நபியிடம் மீண்டும் ஒரு முறை சென்று மேலும் குறைத்துக் கொடுக்கும்படி கேட்கச் சொன்னாராம். அதன்படியே அவரும் சென்று அல்லாஹ்விடம் கேட்டதற்கு 15 வேளை தொழுகையை தள்ளுபடி செய்து 10 வேளை தொழுகையை நிர்ணயித்து கொடுத்தானாம். இதை அறிந்த மூஸா நபி மீண்டும் ஒரு முறை சென்று மேலும் குறைத்துக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் கேட்க அனுப்பி வைத்தாராம். அதன்படியே அவர் சென்றதற்கு, ஐந்து வேளை குறைத்து, ஐந்து வேளை தொழுகை இறுதியானது என்று தீர்மானித்தானாம்.
இதை அறிந்த மூஸா நபி மீண்டும் சென்று மேற்கொண்டு குறைத்துக் கொள்ளும்படி ஆலோசனைக் சொன்னாராம். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் சென்று குறைத்துக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் சொல்வதற்கு வெட்கமாக இருப்பதாகச் சொல்லி விட்டாராம். அதன் பிறகு முஹம்மது நபி(ஸல்) அவர்கள், யார் ஐந்து வேளை தொழுகையை முறைப்படி தொழுது கொள்கிறார்களோ, அவருக்கு ஐம்பது வேளை தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்று அறிவித்தாராம். இதுதூன் தொழுகை நிலை நிறுத்தப்பட்டதன் உண்மை வரலாறு என்று ரிவாயத்து புத்தகங்கள் அறிவிக்கின்றன.
இப்போதெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பத்து முறை அல்லாஹ்விடம் சென்றதாகவும் சிலர் இருபது முறை சென்றதாகவும் தன்னிச்சையாக யோசித்து யோசித்து சொல்லி வருகிறார்கள். வரும் காலத்தில் எத்தனை முறையாக மாறும் என்று தெரியவில்லை. அத்தனை முறை ஏன் அவரை மூஸா நபி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டால் அல்லாஹ்வின் ஜல்வா (ஒளி) அவர் செல்லும் போது பார்க்க முடிந்தது என்று இவர்களே யூகித்து பதில் அளிக்கிறார்கள்.
நீங்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது நபியின் உம்மது எத்தனை வேளை தொழுது கொள்ளும் சக்தி பெற்றிருக்கிறார்கள் என்று அல்லாஹ்வுக்கும் தெரியவில்லை முஹம்மது நபிக்கும் தெரியவில்லையாம். ஆனால் கி.மு. 2800 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போன மூஸா நபிக்கு தெரிந்திருந்ததாம். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் சென்று அல்லாஹ்விடம் தொழுகையை குறைத்துக் கொடுக்கும்படி சொன்னாராம். ஏதோ அல்லாஹ்வுக்கும் முன்யோசனை இல்லை. முஹம்மது நபிக்கும் இல்லை என்பதுபோல் எழுதி இருக்கிறார்களே இதைப் பற்றி யாராவது யோசித்துப் பார்க்கிறார்களா? ஆனால் ஒவ்வொரு வருடமும் பள்ளிவாசல் பயான்களில் இதைப் பற்றி பல ஜோடனை கதைகளை தயாரித்து பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.
இந்த ரிவாயத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்டால், மூஸா நபி இன்னமும் நான்காவது வானத்தில் உயிருடன் இருப்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். முஹம்மது நபியின் நிலை என்ன என்று கேட்டால் اِنَّك مَىِّتُ நிச்சயமாக நீ மரணிப்பாய் என்று அல்லாஹ்வே திருக்குர்ஆனில் சொல்லி விட்டான். எனவே முஹம்மது நபி(ஸல்) காலமாகி விட்டார். ஆனால் யூதர்களின் கடவுளாகிய மூஸா நபி இன்னமும் உயிருடன் இருக்கிறார். இந்த ரிவாயத்தே அதற்கு ஆதாரம் என்றும், முஹம்மது நபியே அவரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லி யூதர்கள் பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள்.
17:1ஆவது வாசகத்தின் பொருள் என்ன?
17:1 விளக்கம் : மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட சர்வ வல்லமையுடைய அல்லாஹ், தன் செயல் திட்டப்படி தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (மக்காவிலிருந்து) வளம் மிக்க மஸ்ஜிதெ அக்ஸாவிற்கு – தொலைவில் இருக்கும் மதினாவிற்கு இரவோடு இரவாக ஹிஜ்ரத் செய்ய ஏற்பாடு செய்தான். இதுவரையில் போதனை அளவில் இருந்த மார்கத்தை, உலக அரங்கில் நடைமுறைப்படுத்தி அதன் எழுச்சி நிலையை உலகார்க்கு நிரூபித்துக் காட்ட இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உலக நிகழ்வுகள் யாவற்றையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடைய அல்லாஹ்வின் சொல்லாகும் இது.
மஸ்ஜிதுல் ஹராம் என்றால் மக்கா என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் மஸ்ஜிதெ அக்ஸா என்னும் போது பைத்துல் முகத்தஸ் என்கிறார்கள். அக்ஸா என்றால் தொலைவு என்று பொருள் வரும். மதினாவிற்கு, “ஜிம்னன்” “யஸ்ரபுன்” “மதீனதுன்” “அக்ஸன்” என்று பலப் பெயர்கள் உண்டு. திருக்குர்ஆனில் குஸ்வா பள்ளத்தாக்கு என்று 8:42இல் வருகிறது. அதுவும் மதீனாவைத் தான் குறிக்கும்.
பைத்துல் முகத்தஸ் விவகாரமோ முடிந்து போன ஒன்றாகும். (2:142) அதை விட்டுவிட்டு தலைமைச் செயலகமாக - கஅபாவையே அல்லாஹ் அறிவிக்கின்றான்.(2:144) ஆனால் ரிவாயத்துபடி பார்க்கும் போது, அல்லாஹ் முஹம்மது நபியை பைத்துல் முகத்தஸிற்கு அழைத்து சென்றதாக உள்ளது. இதிலும் யூதர்களின் சதி திட்டங்களின் சாயல் பளிச்சிடுகிறது. அதாவது யாராக இருப்பினும் வானத்தைக் கடந்து அர்ஷுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பைத்துல் முகத்தஸ்தான் என்பதை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு சொல்வதாகத் தெரிகிறது. அதாவது காலம் காலமாக புனித இடமாக கருதப்பட்ட பைத்துல் முகத்தஸை அல்லாஹ் காலவதி ஆக்கியது, அவர்களால் ஜீரணிக்க முடியாத நிகழ்வு. எனவேதான் ரிவாயத்துகளை வைத்து முஸ்லிம்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.
24.ஈஸா நபி மீண்டும் வருவார்?
இதைக் கவனித்த நஸாராக்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் வணங்கி வரும் ஈஸா நபியும் உயிரோடு இருப்பதை முஸ்லிம்களை நம்ப வைக்க வேண்டுமே. இதற்காக என்ன செய்வது? அவர்களும் யோசித்துப் பார்த்தார்கள். இருக்கவே இருக்கப் போகிறது ரிவாயத்து புத்தகம். ஈஸா நபி முதல் வானத்தில் உயிரோடு இருப்பதாகவும் கியாம நாளில் அவர் மீண்டும் உலகிற்கு ஜெரூசெலத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் மினாராவிலிருந்து இறங்கி வருவார் என்று முஹம்மது நபி அறிவித்துள்ளதாக ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள். அவ்வளவுதான் அன்றைய காலத்திலிருந்து இன்று வரையில் முஸ்லிம்களும் அவருடைய வருகையை எதிர் பார்த்து காத்து கிடக்கின்றனர். அவருடைய வருகையை ஏற்க மறுப்பவர்களை காஃபிர்கள் என்கிறார்கள்.
நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் என்றென்றும் ஜீவித்து இருக்கக் கூடிய நித்திய வாழ்வை நாம் கொடுக்கவில்லை என்று 21:34 வாசகம் அறிவிக்கின்றதே. அதன் பின் ஈஸா நபி மட்டும் எப்படி விதிவிலக்கு ஆவார்கள் என்று கேட்டால், அதைப் பற்றி முஹம்மது நபியே அறிவிப்பு செய்துள்ளார். இதைப் பற்றி திருக்குர்ஆனிலும் ஒரு வாசகம் உள்ளது என்று குர்ஆனில் தேடி கண்டுபிடித்து அவர்களுடைய கூற்றுக் ஏற்றாற் போல் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். கவனியுங்கள்.
وَإِنَّهُۥ لَعِلْمٌۭ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ.
43:61 நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சி ஆவார். ஆகவே நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே சிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி)
இதில் சொல்லப்பட்டுள்ள இறுதிக் காலம் என்பது கியாம நாள் ஆகும் என்றும் அவருடைய வருகை இதிலிருந்து நிரூபணம் ஆகிறது என்றும் அறிவிக்கிறார்கள். இதில் சிறிதளவாவது உண்மை இருக்கிறதா? இங்கு لَعِلْمُ لّلِسَّاعَةِ என்று வருகிறது.
அதாவது மீண்டும் ஒரு நபி இறுதியாக அனுப்பப்படும் காலக் கட்டத்தைப் பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. அதைப் பற்றி அவரே முன்னரிவிப்பும் செய்துள்ளார். (பார்க்க 61:6) அவருடைய முன்னறிவிப்பின் படி நான் உங்களிடம் வந்துள்ளேன். இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்று முஹ்ம்மது நபி மக்களிடம் அறிவிக்கின்றார். எனவேதான் தன்னை பின்பற்றும் படி அவர் கேட்டுக் கொள்கிறார். ஒருவேளை ஈஸா நபியின் வருகையைப் பற்றி இந்த வாசகம் இருந்திருந்தால், அவர் வரும் போது, அவரைப் பின்பற்றுங்கள் என்றுதான் அறிவித்து இருப்பார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி ஈஸா நபி அறிவித்துச் சென்றார் (61:6) ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஈஸா நபியின் வருகையை முஹம்மது நபி(ஸல்) அறிவித்ததாக திருக்குர்ஆன் வாசகத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள். ஆச்சரியமே. ஆக மீண்டும் ஈஸா நபி உலகிற்கு வரும் அற்புதத்தை எதிர் பார்த்து யாரும் காத்திருக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
சரி. மீண்டும் மேராஜ் விஷயத்திற்கு வருவோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு மஸ்ஜிதெ அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றோம்) என்று வருகிறதே. அல்லாஹ் என்ன அத்தாட்சிகளை காண்பித்தான் என்று கேட்டதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களை சுவர்க்கம் மற்றும் நரகத்தின் பக்கமாக அழைத்துச் சென்று தன் அத்தாட்சிகளை காண்பித்தான் என்கிறார்கள்.
ஏழை எளிய மக்களையும் விதவைகளையும் சுவனத்தில் கண்டதாகவும், செல்வந்தர்களை எல்லாம் நரகத்தில் கண்டதாகவும் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ரிவாயத்துகள் அறிவிக்கின்றன. அதாவது ஒரு முஸ்லிம் பெண் கணவனை இழந்து விட்டால், அவள் மறுமணம் செய்யாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இறந்த பிறகு மறுமையில் அவளை அல்லாஹ் சுவனத்தில் சேர்ப்பான்.
அதே போல் முஸ்லிம்கள் யாவரும் ஏழையாகவே வாழ்ந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். யூதர்களும் கிறிஸ்தவர்களும் செல்வ செழிப்புடன் இன்புற்று வாழலாம். ஆனால் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட முஸ்லிம்கள் எல்லாம் ஏழ்மையில் வாட வேண்டும். இதுதான் முஹம்மது நபி கொண்டு வந்த இஸ்லாம் என்கிறார்கள்? அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் வளமான வாழ்வைப் பார்த்து, யூதர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் மஜுஸியர்கள் பொறாமைப் பட்டு இவ்வாறு இட்டுக் கட்டி எழுதியுள்ளார்கள். இதுதான் உண்மை. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?
25.நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள் என்ன?
நாம் ஏற்கனவே அறிவித்துள்ள படி உலகிற்கு வருகை தந்த ஒவ்வொரு நபியும் சீர்திருத்தவாதிகளே ஆவார். எந்த நபியும் தன்னிச்சையாக செயல்பட்டதே இல்லை. திருக்குர்ஆன் வாசகத்தை கவனியுங்கள்.
وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ ۚ
4:64 உலகிற்கு வருகை தந்த எல்லா நபிமார்களும் அல்லாஹ்வின் கட்டளையைத் தவிர வேறெதையும் பின்பற்றியதில்லை.
இப்போது நபித்துவத் தொடர் முற்று பெற்று விட்டது. (33:40) இனி வரும் காலங்களில் நபிகளார் செய்து காட்டிய பணியை மூஃமின்கள் தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் (3:104) இந்தப் பணியை ஆலிம்களால் தான் சிறப்பாக நிறைவேற்ற முடியும். எனவே திருக்குர்ஆன் தெளிவுரை மற்றும் அரிய பல தலைப்பிலும் ஆண்ட்ராய்டு ஃபோன் மற்றும் வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த வசதி இல்லாதவர்களுக்காக புத்தகங்களை வெளியிட உள்ளோம். தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் திருக்குர்ஆன் தெளிவுரையும், நாம் வெளியிட உள்ள ஏனைய புத்தகங்களும் ௐதிக் காண்பித்து சிறந்த சமுதாயமாக முன்னேற பாடுபட வேண்டும் என அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட உங்களை வேண்டுகிறேன். இவ்வாறு செய்தால் நபிமார்கள் செய்து காட்டிய அற்புதத்தை நாமும் நிகழ்த்திக் காட்டலாம்.