بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


1.முன்னுரை

பனீ இஸ்ராயீல் சமூகத்தவர்களிடையே வந்த நபிமார்களின் வரிசையில் இறுதியாக வந்தவர் ஈஸா நபி ஆவார். நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இவருடைய வரலாறு முக்கிய அங்கம் வகிக்கிறது. இன்றைய காலக் கட்டத்தில் நாம் கடைப்பிடித்து வரும் ஆங்கிலேய தேதி அவருடைய மறைவுக்குப் பின் இன்றைய தினம் வரையில் உள்ள கணக்காக உள்ளது. அதாவது உலக வரலாற்றைப் படிக்கும் போது, கி.மு. (B.C) மற்றும் கி.பி. (AD.) என்று எழுதப்பட்டிருக்கும். கி.மு. என்றால் கிறிஸ்தவர் பிறந்ததற்கு முன்தைய காலக் கட்டம் என்றும், கி.பி. என்பது கிறிஸ்தவர் இறந்ததற்குப் பின் என்றும் பொருள்படும். ஆக அரசியல் ரீதியாக அவரைப் பற்றி பிறப்பு இறப்பு என்றுதான் பேசப்படுகிறது. ஆனால் மத குருமார்கள் அவருடைய பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி திருக்குர்ஆனிலும் இடம் பெற்றுள்ளது. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவருடைய பிறப்பு இறப்பு பற்றி பல கற்பனைக் கதைகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி வந்தார்கள். இன்றைக்கும் அவரைப் பற்றி கிறிஸ்தவர்கள் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். இதில் அவரது தாயாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்கள் கூறும் கதைகளை எல்லாம் கவனித்துப் பார்க்கும்போது, அவர் அல்லாஹ்வின் கட்டளைகளின்படி இவ்வுலகில் எந்த சீர்திருத்தங்களையும் செய்ததாகத் தெரிவதில்லை. அவர் ஏதோ ஒரு வானுலக தேவமகன். ஆன்மிகப் பாடங்களைக் கற்றுத் தந்தவர் போல் சித்தரிக்கப்படுகிறார். எனவே அவரைப் பற்றிய தவறானக் கருத்துகளைப் போக்குவது மிகமிக அவசியமாகிறது. திருக்குர்ஆனில் அவருடைய வாழ்க்கை வரலாறு இவ்வாறு ஆரம்பமாகிறது.


2.ஈஸா நபியின் பூர்வீகம்

اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّىۡ نَذَرۡتُ لَـكَ مَا فِىۡ بَطۡنِىۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّىۡ ۚ اِنَّكَ اَنۡتَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ‌‏ ﴿۳۵﴾

3:35. இம்ரானின் மனைவி: “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன், எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்"" என்று கூறியதையும் -

விளக்கம் :
இம்ரானின் சந்ததியரில் ஒரு பெண்மணி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை உலக வாழ்வைத் துறந்து, இறைவனின் பாதையில் முற்றிலும் வழிபட இறை இல்லத்திற்கே அர்ப்பணம் செய்யப் போவதாக உறுதி கொண்டிருந்தார். அதாவது அக்காலத்தில் துறவிகளின் மடமாக செயல்பட்டு வந்த ‘ஹைக்கல்’ என்கிற ஆசிரமத்தில் அவளது குழந்தையைச் சிறு வயதிலேயே விட்டுவிட எண்ணினார். தன்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும்படி இறைவனிடம் வேண்டியும் வந்தார். “இறைவா! நிச்சயமாக நீ அனைத்தையும் கேட்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்றார்.


3.ஈஸா நபியின் தாயார் - மர்யம் (அலைஹ்)இன் பிறப்பு

  فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ اِنِّىۡ وَضَعۡتُهَاۤ اُنۡثٰىؕ وَاللّٰهُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡؕ وَ لَيۡسَ الذَّكَرُ كَالۡاُنۡثٰى‌‌ۚ وَاِنِّىۡ سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَاِنِّىۡۤ اُعِيۡذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيۡطٰنِ الرَّجِيۡمِ‏ ﴿۳۶﴾ 

3:36. (பின், தான் எதிப்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்"" எனக் கூறியதையும் நினைவு கூருங்கள், அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான், ஆண், பெண்ணைப் போலல்ல, (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன், இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.”

விளக்கம்:
தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் என்றும், தன் வாழ்நாள் முழுவதும் இறை இல்லமாக இருக்கும் ஆசிரமத்தின் சேவகனாக பணியாற்றுவான் என்றும் மர்யமின் தாயார் எண்ணியிருந்தார்.

ஆனால் அவருக்குப் பிறந்ததோ ஒரு பெண் குழந்தை. அவருக்குப் பிறந்த குழந்தையைப் பற்றியும் அக்குழந்தையின் ஆற்றல் என்னவென்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும். அவள் மற்ற பெண்களைப் போல சாதாரண பெண்ணாக இருக்க மாட்டாள் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும்.

ஆனால் அக்குழந்தையைப் பற்றி அப்பெண்மணிக்குத் தெரியாது. அவர் தன்னுடைய குழந்தைக்கு “மர்யம்” என்று பெரிட்டுள்ளதாகவும், அவளை ஆலயத்தில் தொண்டு செய்ய அர்ப்பணிப்பதாகவும் கூறினார். அவளையும் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளையும் தீயவர்களின் விஷமத்தனத்தை விட்டு பாதுகாப்பாக வைக்கும்படியும் இறைவனிடம் வேண்டினார்.


4.சிறுமி மர்யம் ஆசிரமத்தில் - ஜக்கரிய்யா நபியின் பாதுகாப்பில்

 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّاَنۡۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا الۡمِحۡرَابَۙ وَجَدَ عِنۡدَهَا رِزۡقًا ‌ۚ‌ قَالَ يٰمَرۡيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتۡ هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرۡزُقُ مَنۡ يَّشَآءُ بِغَيۡرِ حِسَابٍ‏ ﴿۳۷﴾

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக்கொண்டான், அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான், அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும் படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார். “மரியமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?"" என்று அவர் கேட்டார்,“இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான் என்றும் பதிலளித்தாள்.

விளக்கம்:
(1) அவ்வாறே அவளுடைய வேண்டுதலின்படி அச்சிறுமி மர்யம் ஆசிரமத்தில் அழகிய முறையில் விடப்பட்டாள். மேலும் அவளைப் பாதுகாத்து வளர்த்துவர, ஜகரிய்யா நபி பொறப்பேற்றுக் கொண்டார்.
(2) ஜகரிய்யா நபி அந்த ஆசிரமத்திற்குப் போகும் போதெல்லாம், அவளிடம் உணவு வகைகள் இருப்பதைப் பார்த்து அவை எங்கிருந்து வந்தன என்று கேட்கும் போது, அல்லாஹ்விடமிருந்து வந்தன என அவள் அடக்கமாகப் பதில் சொல்லிவிடுவாள். இப்படியாக அவள் எந்தச் சிரமுமின்றி சிறப்பாக வளர்ந்து வந்தாள். ஆக அல்லாஹ்வின் நாட்டப்படி செயல்படுவோருக்கு, வசதி வாய்ப்புகள்; அளவின்றி கிடைத்து விடுகின்றன.
(3) மர்யம் தன் சிறு வயதிலேயே துறவறம் மேற்கொண்டதால், அவளுடைய பெயரும் புகழும் நாலாப் புரமும் பரவின. எனவே அந்த ஆலயத்திற்கு வருபவர்கள், அவள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து போவார்கள். அப்போது அவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களை அன்பளிப்பாகக் கொண்டுவந்து தருவது வழக்கமாகி விட்டது. அவற்றைப் பார்த்து அவை எங்கிருந்து வந்தன என்று ஜகரிய்யா நபி கேட்டதற்கு, அல்லாஹ்விடம் இருந்து வந்தன என்று மர்யம் கூறிவிடுவாள்.

இதற்கிடையில் ஜகரிய்யா நபிக்கு ஆண் குழந்தை பிறக்கும் செய்தி திருக்குர்ஆனில் இடம் பெறுகிறது. இதன் விளக்கத்தை பிறகு பார்ப்போம்.


5.குமாரி மர்யம்

ஜகரிய்யா நபி தன் குழந்தையையும் ஆசிரமத்திலிருந்த மர்யமையும் நன்றாக பராமரித்து வந்தார். ஆண்டுகள் பல உருண்டோட மர்யமும் பருவ மங்கையானார். அவர் ஆசிரமத்திலிருந்த மற்ற கன்னி ஸ்திரிகளோடு (NUNS) வாழ்ந்து வந்தார். ஆனால் அங்கு மற்ற கன்னிஸ்திரிகளுடன் மடாதிபதிகளும்,மதகுருமார்களும் நடந்து கொண்ட தகாத செயல்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் தெரிய வந்தது. அது போக அவர்களுடைய பார்வை மர்யம் மீதும் விழாமல் இல்லை.

ஜகரிய்யா நபி அவரை வளர்த்து வந்ததோடு, தவ்ராத்தின் வழிகாட்டுதல்களையும் தெள்ளத் தெளிவாக மர்யமிற்கு கற்றுக் கொடுத்தார். எனவே மர்யமும் மிகவும் பரிசுத்தமானவராக இருந்து வந்தார். அங்கு நடந்துவந்த முறைகேடுகளை அவர் அறவே வெறுத்தார். ஏனெனில் துறவறத்தில் பாலியல் உறவுகளுக்கே இடமிருப்பதில்லை. தகாத உறவுகளுக்கு ஏது இடம்? இருந்தும் மர்யம் பயந்த நிலையில் வாழலானார். அந்தக் கால கட்டத்தில் மர்யமுக்கு ஜகரிய்யா நபி மூலமாக இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி வந்தது.

 وَاِذۡ قَالَتِ الۡمَلٰٓٮِٕكَةُ يٰمَرۡيَمُ اِنَّ اللّٰهَ اصۡطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصۡطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الۡعٰلَمِيۡنَ‏ ﴿۴۲﴾ 

3:42 மலக்குகள்: “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கின்றான், இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும்விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான்"" என்று கூறினார்கள்.

விளக்கம்:
மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னை உயர்நிலைக்கு எடுத்துச் செல்வான். அதாவது நீ பயப்படுவது போல், அவர்களுடைய தவறான ஆசைகளின் வலையில் சிக்கமாட்டாய். நீ பரிசுத்தமாகவே இருக்க அவன் பாதுகாப்பான். மேலும் உலகிலுள்ள மற்ற சாதாரண பெண்களைப் போல் நீ இல்லை. அவர்களை விட நீ பல வகையில் மேலோங்கியவளாக விளங்குவாய்"" என்று அந்தச் செய்திக் குறிப்பு கூறிற்று. மேலும்

  يٰمَرۡيَمُ اقۡنُتِىۡ لِرَبِّكِ وَاسۡجُدِىۡ وَارۡكَعِىۡ مَعَ الرّٰكِعِيۡنَ‏ ﴿۴۳﴾ 

3:43.“மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக"" (என்றும்) கூறினர்.

விளக்கம்:
“மர்யமே! நீ தைரியமாக இரு. ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடான செயல்களைவிட்டு விலகி இரு. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருவதில் உறுதியாக இரு. நீ தனித்திருந்து வாழாமல், அங்கு நற்காரியங்களைச் செய்பவர்களோடு சேர்ந்து நீயும் பணியாற்றி வா"" என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறிற்று.


6.ஆசிரமத்து முறைகேடுகள்

ஆசிரமத்தில் இருந்த மடாதிபதிகளும் குருமார்களும் மர்யமை ஜகரிய்யா நபியின் பாதுகாப்பிலிருந்து விடுவித்து விட்டு, தம்மில் ஒருவருடைய பொறுப்பில் கொண்டு வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். அந்த விஷயத்தில் அவர்களுள் போட்டியும் நிலவி வந்தது.

  ذٰ لِكَ مِنۡ اَنۡۢـبَآءِ الۡغَيۡبِ نُوۡحِيۡهِ اِلَيۡكَ‌ؕ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يُلۡقُوۡنَ اَقۡلَامَهُمۡ اَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يَخۡتَصِمُوۡنَ‏ ﴿۴۴﴾

3:44. (நபியே!) இவை (யெல்லாம்) மறைவான வற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும், இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம், மேலும், மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி(குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

விளக்கம்:
(1) மர்யம் யார் பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க குலுக்குச் சீட்டு போட்டு பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தனர். நடந்து போன இந்த உண்மை விஷயங்களை எல்லாம் மக்கள் மறந்துவிட்டனர். இப்போது யாருக்கும் எந்த உண்மையும் தெரியாது. நபியே! அது சமயம் நீயும் அங்கு இருந்ததில்லை. அங்கு நடந்த உண்மை விவரங்களை இறைவன் உனக்கு வஹீ மூலமாகத் தெரியப்படுத்துகிறான்.
(2) அதாவது மர்யமை ஜக்கரீயா நபியின் பராமரிப்பிலிருந்து விடுவித்து தம்மில் யாராவது ஒருவரின் கைவசம் வந்துவிட வேண்டும் என்பதே அந்த மடாதிபதிகளின் ஆசையாகும். அந்த அளவுக்கு அவர்களுடைய தீய எண்ணங்கள் மிகைத்திருந்தது. அவர்கள் குலுக்குச் சீட்டு போட்;டதில் ஜோஸஃப் என்பவர் பெயரில் விழுந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அவருடன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஜோஸஃப்புடைய பூர்விகமும் ஹஜ்ரத் தாவூத் நபியை சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
(3) அந்த ஆசிரமத்தில் பெண் துறவிகளிடம் (NUNS) மதகுருமார்களும் மடாதிபதிகளும் தகாத முறையில் நடந்து கொள்வதை அறிந்த மர்யம், அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தொடுத்தார். இதனால் மர்யமுக்கு எதிராக ஆசிரமத்தில் பகைமை வலுத்தது. அங்கு தொடர்ந்து, அங்கு நீடித்தால் தன் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சி அங்கிருந்து இரகசியமாகத் ஜோஸஃப்புடன் வெளியேறி விட்டார். அவ்வாறு அந்த ஆசிரமத்தை விட்டு வளியேறியதால் மக்கள் மத்தியில் பெரும் அமளி ஏற்பட்டு விட்டது. மக்களும் அத்தகைய புரளிகளை உண்மையென என நம்பினார்கள்.

(وَّبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلٰى مَرۡيَمَ بُهۡتَانًـا عَظِيۡمًا ۙ‏ ﴿۱۵۶

4:156 இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதன் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்)

விளக்கம்:
இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்ததோடு, ஈஸா நபியின் தாயார் மர்யமைப் பற்றியும் பல அவதூறுகளைச் சொல்லி, அவருடைய கண்ணியத்திற்கு பங்கம் விளைவித்தனர். இப்படிச் செய்ததால் அவர்கள் நேர்வழியிலிருந்து விலகி வழிதவறிச் சென்றுவிட்டனர்.

உண்மை நிலையை அறியாமல், மக்கள் மர்யமைப் பற்றி விதவிதமான கட்டுக் கதைகளைக் கூறி வருகின்றனர். அவற்றை நீக்கி உண்மை விஷயத்தை எடுத்துரைப்பதே இந்த தொகுப்பின் நோக்கமாகும். அதன்பின் மர்யம் யூசுஃப் (JOSEPH) என்பவரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. மேலும் அவர் தச்சு தொழில் (CARPENTRY) செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடன் மர்யம் திருமணம் செய்து கொண்டதாகவும் பைபிள்கள் கூறுகின்றன. அவர் திருமணம் செய்து கொண்டாலும் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்பது ஆசிரமத்தின் விதிமுறையாக இருந்து வந்தது. எனவே ஆசிரமத்தை விட்டு வெளியேறிய மர்யம் ‘நசீரியா’ என்ற இடத்திற்குச் சென்று மறைவாக வாழலானார். ஆசிரமத்தில் இருந்து கொண்டுதான் துறவறத்தைத் தொடர முடியும் என்பதல்ல. உலகில் எங்கிருந்தாலும் இல்லறத்தில் ஈடுபடாமல் பரிசுத்தமாக இருக்க முடியும் என்று மரியம் திடமாக கருதியதும் அதற்கு ஒரு காரணமாகும்.

(وَاذۡكُرۡ فِى الۡـكِتٰبِ مَرۡيَمَ‌ۘ اِذِ انْتَبَذَتۡ مِنۡ اَهۡلِهَا مَكَانًا شَرۡقِيًّا ۙ‏ ﴿۱۶

19:16 (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக: அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும் போது,

விளக்கம்:
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரையுங்கள். அவர் ஆசிரமத்தில் தம்மோடு வாழ்ந்து வந்தவர்களை விட்டு வெளியேறி, கிழக்குப் பக்கமுள்ள தொலைவான இடத்திற்குச் சென்று மறைவாக வாழலானார். ஆசிரமத்தை ஆதரிப்பவர்களால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் அவர் இவ்வாறு மறைவாக வாழ்ந்து வந்தார்.

  (فَاتَّخَذَتۡ مِنۡ دُوۡنِهِمۡ حِجَابًا فَاَرۡسَلۡنَاۤ اِلَيۡهَا رُوۡحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا‏ ﴿۱۷

19:17.அவர் (தம்மை) அவர்களிட மிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார், அப்போது நாம் அவரிடத்தில் நம்ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம், (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

விளக்கம்:
அவர் யாருக்கும் தெரியாதவாறு, அவர்களை விட்டு மறைவாக வாழ்ந்து வந்தார். அப்போது நாம் ஒரு செய்தியை ஜக்கரிய்யா நபி மூலமாக அனுப்பி வைத்தோம். அந்தச் செய்தியை கொண்டு சென்றவரும் ஒரு மனிதராகவே இருந்தார்.


7.ஈஸா நபி பிறக்கப் போகும் செய்தி

  اِذۡ قَالَتِ الۡمَلٰٓٮِٕكَةُ يٰمَرۡيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنۡهُ ۖ اسۡمُهُ الۡمَسِيۡحُ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ وَجِيۡهًا فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَمِنَ الۡمُقَرَّبِيۡنَۙ‏ ﴿۴۵﴾ 

3:45. மலக்குகள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாரயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

விளக்கம்:
மர்யமே! உனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அக்குழந்தையின் பெயர் மஸீஹ் மர்யமின் குமாரர் ஈஸா என்பதாக இருக்கும். உனக்குப் பிறக்கப் போகும் அக்குழந்தை இவ்வுலகிலும் மறுவுலகிலும் மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும்; இறைவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான்"" என்று அச்செய்தியாளர் கூறினார்.

  (وَيُكَلِّمُ النَّاسَ فِى الۡمَهۡدِ وَكَهۡلًا وَّمِنَ الصّٰلِحِيۡنَ‏ ﴿۴۶

3:46.“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும் போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார், இன்னும் (நல்லொழுக்க முடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.

விளக்கம்:
மேலும் அவர், “மர்யமே! உனக்குப் பிறக்கப்போகும் அக்குழந்தை, இளமைப் பருவத்திலும் முதுமையிலும் சிறந்த பேச்சு திறமை மிக்கவனாக வருவான். எல்லா ஆற்றல்களுடன் கூடிய சிறந்த செயல் வீரனாகவும் இருப்பான்"" என்று அச்செய்தியைக் கொண்டு வந்தவர் கூறினார்.

துறவறத்தை மேற்கொள்ளும் ஒரு “கன்னி ஸ்திரி” இல்லறத்தில் ஈடுபடுவதை கற்பனை கூட செய்ய முடியாது. மேலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறிதால் அவர் பழிச்சொல்லுக்கு ஆளாகி, தன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், தனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தி எந்த அளவுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் துறவிகள் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அல்லாஹ்வுக்கு எதிரானச் செயலாகும் என்ற நினைப்பில் வாழ்ந்தவர் ஆவார். இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள அவரது மனம் ஒப்பவில்லை. எனவே அவர் அச்செய்தியை கொண்டு வந்தவரிடம்,

(قَالَتۡ اِنِّىۡۤ اَعُوۡذُ بِالرَّحۡمٰنِ مِنۡكَ اِنۡ كُنۡتَ تَقِيًّا‏ ﴿۱۸

19:18 “நிச்சயமாக நான் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன், நீர் பயபக்தியுடையவராக இருந்தால் என்னிடம் வராதீர்"" என்றார்.

விளக்கம்:
“இப்படிப்பட்ட செய்தியை விட்டு அர்ரஹ்மானிடம் காவல் தேடிக் கொள்கிறேன். நீ அல்லாஹ்வுக்கு பயப்படுபவராக இருந்தால், நீ இப்படிப்பட்ட செய்தியுடன் என்னிடம் வராதே” என்றார்.

  ‌(قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوۡلُ رَبِّكِ ‌ ۖ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا‏ ﴿۱۹

19:19.“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன், பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்"") என்று கூறினார்.

விளக்கம்:
அதற்கு செய்தியைக் கொண்டுவந்தவர்,“நிச்சயமாக நான் கொண்டு வந்தது உமது இறைவனின் செய்தியே ஆகும். அறிவாற்றலும், நற்பண்புகளும் கூடிய ஒர் ஆண் குழந்தை உமக்குப் பிறக்கப் போகும் நற்செய்தி இறைவனிடமிருந்துதான் வந்துள்ளது” என்றார்.

 قَالَتۡ رَبِّ اَنّٰى يَكُوۡنُ لِىۡ وَلَدٌ وَّلَمۡ يَمۡسَسۡنِىۡ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخۡلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمۡرًا فَاِنَّمَا يَقُوۡلُ لَهٗ كُنۡ فَيَكُوۡنُ‏ ﴿۴۷﴾ 

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியம்?"" (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித் தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக” எனக் கூறுகிறான், உடனேஅது ஆகிவிடுகிறது.""

விளக்கம்:
“எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? எந்த ஆடவரும் என்னை “தீண்டாதிருக்க” எனக்குக் குழந்தை எவ்வாறு பிறக்கும்?"" என்று வியந்து கேட்டார். “குழந்தையைப் பெற அல்லாஹ் எல்லோருக்கும் எவ்வாறு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளானோ, “அவ்வாறே” உனக்கும் குழந்தை பிறக்கும்"" என்று பதிலளிக்கப்பட்டது. அதற்கான முயற்சிகளை மேற்கொள் என்று மர்யமிற்குக் கட்டளை இடப்பட்டது. அவ்வாறே அந்தக் கட்டளையும் நிறைவேறியது.

மர்யமிடமிருந்த மனச் சஞ்சலத்தைப் போக்க, பிறக்கப் போகும் அக்குழந்தையைப் பற்றி மேற்கொண்டு விவரங்களை அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவர் விளக்கியதாகப் புலனாகிறது. சூர மர்யம் என்ற அத்தியாயத்திலும் இதையே இவ்வாறு விவரிக்கப்படுகிறது.

  (قَالَتۡ اَنّٰى يَكُوۡنُ لِىۡ غُلٰمٌ وَّلَمۡ يَمۡسَسۡنِىۡ بَشَرٌ وَّلَمۡ اَكُ بَغِيًّا‏ ﴿۲۰

19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?"" என்று கூறினார்.

விளக்கம்:
அதற்கு மர்யம்,“என்னை எந்த ஆடவரும் தீண்டாதிருக்க, எனக்கு எவ்வாறு குழந்தைப் பிறக்கும்? மேலும் நான் நடத்தை பிசகியவளாகவும் இருந்ததில்லையே” என்று ஆவேசத்துடன் கேட்டார்.

கவனித்தீர்களா? ஒரு ஆணுடன் இணைந்துதான் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற உண்மை மர்யமிற்கு தெரிந்தே இருந்தது. மேலும் அவருடைய நன் நடத்தைக்கும் இந்த வாசகம் சாட்சியளிக்கிறது. அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதால், மக்கள் அவரைப் பற்றி அவதூறுகள் கூறி வந்தனர் (பார்க்க 4:156) மேலும், “ஒர் ஆண் குழந்தை பிறக்கும்” என்று எந்தப் பெண்ணிடமும் அறிவிக்கும் போது, அவள் மிகவும் சந்தோஷப்படுவாள். அல்லது தனக்கு திருமண ஆகவில்லை என்றுதான் சொல்வாள். “என்னை எந்த ஆடவரும் தீண்டாதிருக்க” என்று எந்தப் பெண்ணாவது சொல்வாளா? சற்று கவனித்துப் பாருங்கள். மர்யம் துறவியாக இருந்ததால் தான், ஆசிரமத்து விதிமுறைகளின் படி அவளை யாரும் தீண்ட முடியாது. அவளும் எந்த ஆடவருடனும் உறவு கொள்ள முடியாது. எனவேதான் இத்தகைய வார்த்தைகள் அவரிடமிருந்து வந்தன.
சூர மர்யம் என்ற அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.

 (قَالَ كَذٰلِكِ‌ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ‌ ۚ وَلِنَجۡعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحۡمَةً مِّنَّا‌ ۚ وَكَانَ اَمۡرًا مَّقۡضِيًّا‏ ﴿۲۱

19:21.“அவ்வாறே” ஆகும், 'இது எனக்கு மிகவும் சுலபமானதே, மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம், இது விதிக்கப்பட்ட விஷயமாகும், என்று உம் இறைவன் கூறுகிறான்"" எனக் கூறினார்.

விளக்கம்:
அதற்கு அச்செய்தியைக் கொண்டு வந்தவர், “இறைவனின் படைப்புச் சட்டத்தின்படி எவ்வாறு குழந்தைப் பிறக்கின்றதோ, “அவ்வாறே” உனக்கும்; பிறக்கும். இதில் எந்த சிக்கலும் இல்லை. உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை, உலக மக்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குவான். அவனுக்கு இறைவனிடமிருந்து எல்லா வகையிலும் வழிகாட்டுதல்கள் என்ற அருட்கொடைகள் கிடைத்து சிறப்பாக வருவான். இவை யாவும் இறைவனின் செயல்திட்டப் படி தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். மேலும் இச்செய்தியை நானே சுயமாக உனக்கு எடுத்துக் கூறவில்லை. மாறாக இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியாகும்” என்று விளக்கமளித்தார். (மேல்கொண்டு விளக்கத்திற்கு பார்க்க 3:48-50)

  (وَيُعَلِّمُهُ الۡكِتٰبَ وَالۡحِكۡمَةَ وَالتَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَ‌ۚ‏ ﴿۴۸

3:48.இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

விளக்கம்:
அவர், “மர்யமே! உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையாக இருக்காது. அக்குழந்தை பெரியவனானதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தவ்ராத் மற்றும் பைபிள் உடைய ஞானம் முழு அளவில் பெறுவார்” என்றார்.

وَرَسُوۡلًا اِلٰى بَنِىۡۤ اِسۡرٰٓءِيۡلَ ۙ اَنِّىۡ قَدۡ جِئۡتُكُمۡ بِاٰيَةٍ مِّنۡ رَّبِّكُمۡ ۙۚ اَنِّىۡۤ  اَخۡلُقُ لَـكُمۡ مِّنَ الطِّيۡنِ كَهَیْـــَٔةِ الطَّيۡرِ فَاَنۡفُخُ فِيۡهِ فَيَكُوۡنُ طَيۡرًاۢ بِاِذۡنِ اللّٰهِ‌‌ۚ وَاُبۡرِئُ الۡاَكۡمَهَ وَالۡاَبۡرَصَ وَاُحۡىِ الۡمَوۡتٰى بِاِذۡنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمۡ بِمَا تَاۡكُلُوۡنَ وَمَا تَدَّخِرُوۡنَۙ فِىۡ بُيُوۡتِكُمۡ‌ؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَۚ‏ ﴿۴۹﴾ 

3:49.இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்,இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்: “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் ,நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன், அது அல்லாஹவின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும். பிறவிக் குருடர் களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்,

அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன், நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்ப வற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்களாக நம்பிக்கையாளர்களாக) இருந்தால் நிச்சயமாகஇவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது"" (என்றுகூறினார்)

விளக்கம்:
மேலும் அவர் பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்க்கு இறைத்தூதராக வருவார். நடைபிணங்களாக வாழும் தம் சமூகத்தவர்களை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றி அமைக்க இறைவன் புறத்திலிருந்து நற்செய்திகளைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுவார். மேலும் அவர் மக்களிடம், “இறைவனின் வழிகாட்டுதலைக் கொண்டு உங்கள் அனைவரையும் புத்துயிர் பெற்று வாழ வழி செய்வேன். களிமண்ணாகப் புதைந்து கிடக்கும் உங்கள் சிந்தனை மற்றும் ஆற்றல்களை வளர்த்து வானில் பறக்கும் சுதந்திரப் பறவைகளைப் போல் உயர் நிலைக்குக் கொண்டு செல்வேன். உங்களுடைய நற்செயல்களைக் கொண்டு உங்கள் வாழ்வை வளமாக்குவேன்” என்பார். மேலும் அவர், “நீங்கள் கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்ந்து வருகிறீர்கள். அதனால் சமுதாயமே அருவருக்கத் தக்க குஷ்டத்தைப் போல் சீர்கெட்டு விட்டது. எனவே இறைவழிகாட்டுதலைக் கொண்டு உங்கள் அனைவரையும் நேர்வழி என்னும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்"" என்பார்.

சுருங்கச் சொன்னால், “உங்களின் தீய செயல்களால், “வாழ்வின் இழிநிலை” என்ற மரணத்தின் பால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். அதிலிருந்து உங்களை மீட்டு புத்துயிர் பெறச் செய்வேன்” என்பார். “சட்ட விரோதமாகச் செயல்படும் பதுக்கல் பேர்வழிகளைப் (Hoardings) பற்றியும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகளைப் பற்றியும் உங்களிடம் எடுத்துரைக்கின்றேன். மேலும் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள்."" என்பார்.

 وَمُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَىَّ مِنَ التَّوۡرٰٮةِ وَلِاُحِلَّ لَـكُمۡ بَعۡضَ الَّذِىۡ حُرِّمَ عَلَيۡكُمۡ‌وَجِئۡتُكُمۡ بِاٰيَةٍ مِّنۡ رَّبِّكُمۡ فَاتَّقُوۡا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‏ ﴿۵۰﴾

3:50.“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்ப்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம்நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின்பற்றுங்கள்.""

விளக்கம்:
மேலும் அவர் இஸ்ரவேலர்களிடம்,“எனக்கு வஹீ மூலமாகக் கிடைத்துள்ள இறைவழிகாட்டுதல்கள் ஏற்கனவே உங்களிடமுள்ள தவ்ராத்தில் கூறப்பட்டவையே. அவற்றை உண்மைப்படுத்தி உங்களை வழிநடத்திச் செல்லவே வந்துள்ளேன். நீங்களே உருவாக்கி வைத்துள்ள தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை நீக்கிவிடவே வந்துள்ளேன். ஆக இறைவனிடமிருந்து உங்களுக்கான வாழ்க்கை நெறிமுறைகளைக் கொண்டு வந்துள்ளேன். அவற்றைப் பின்பற்றுங்கள். அதனடிப்டையில் நான் உருவாக்கும் ஆட்சிமுறை சட்டங்களுக்கு (BY-LAWS) அடிபணியுங்கள்"" என்பார்.

  (اِنَّ اللّٰهَ رَبِّىۡ وَرَبُّكُمۡ فَاعۡبُدُوۡهُ‌ ؕ هٰذَا صِرَاطٌ مُّسۡتَقِيۡمٌ‏ ﴿۵۱

3:51.“நிச்சயமாக அல்லாஹ் என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான், ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்""

விளக்கம்:
“நான் உருவாக்கி வரும் சமூக அமைப்பு, உங்களையும் என்னையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய இறைவன் வகுத்துத் தந்துள்ள கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழுங்கள். அதுவே உங்கள் அனைவரையும் நேரானப் பாதைக்கு அழைத்துச் செல்லும்"" என்பார்.

மரியமே! இப்படிப்பட்ட உயர் பண்புகளையும் பேராற்றல்களையும் கொண்டு விளங்கப்போகும் குழந்தையைப் பெற்றெடுக்க தயக்கம் காட்டுகிறாயா? இறைவனின் மாபெரும் செயல்திட்டத்தை நிறைவேற்ற, இறைவன் விதியாக்காத துறவித்தனத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டங்களின்படி (சுன்னத்தல்லாஹ்வின் படி) இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளும்படி மர்யமிடம் இறைச் செய்தியைக் கொண்டுவந்தவர் கூறியதாகப் புலனாகிறது. அவ்வாறே அவரும் முறைப்படி குழந்தையைப் பெற்றெடுத்தார். அதுமட்டுமின்றி ஈஸா நபிக்கு ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் இருந்தனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. மர்யம் திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. எனவே ஈஸா நபி தந்ததையின்றி பிறந்தார் என்ற பேச்சிற்கு இடமே இல்லை.

திருக்குர்ஆனில் எல்லா நபிமார்களின் தாய் தந்தையரின் பெயர்கள் இடம் பெறவுமில்லை. இதற்காக எந்த நபியைப் பற்றியும் தந்தையின்றி பிறந்தார் என்று யாரும் கூறுவதுமில்லை. கிறிஸ்தவர்கள் தங்களுடைய நபியைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் தனிச்சிறப்பு பெற்றவர் என்பதை நிரூபிப்பதற்காக இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி விட்டனர். நம் நாட்டிலும் ஏறக்குறைய 300 ஆண்டுகள் வரையில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்று வந்ததால், அவர்கள் பலப் புத்தகங்களை வெளியிட்டு இத்தகைய கருத்தினை முஸ்லிம்களிடையே பரப்பி விட்டனர். ஆக மர்யம் அலை அவர்கள் துறவறத்தை விட்டுவிட்டு தன் கணவர் யூசுஃப்புடன் இல்லற வாழ்வைத் தொடங்கினார்.


8.மர்யம் கருவுற்றார்

  (فَحَمَلَـتۡهُ فَانْتَبَذَتۡ بِهٖ مَكَانًا قَصِيًّا‏ ﴿۲۲

19:22 அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார், பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
விளக்கம்:
அதைத் தொடர்ந்து அவர் முறைப்படி கருவுற்றார். கன்னிஸ்திரியாக இருந்து வந்த இவரை, மக்கள் பலவாராக கேள்விகளை கேட்பார்கள் என்பதற்காக காப்பவாதியான அவர் ஒரு தொலைவான இடத்திற்குச் சென்றடைந்தார்.


9.மர்யமிற்கு ஏற்பட்ட பிரசவ வலி

 (فَاَجَآءَهَا الۡمَخَاضُ اِلٰى جِذۡعِ النَّخۡلَةِ‌ۚ قَالَتۡ يٰلَيۡتَنِىۡ مِتُّ قَبۡلَ هٰذَا وَكُنۡتُ نَسۡيًا مَّنۡسِيًّا‏ ﴿۲۳

19:23.பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின் பால் கொண்டு வந்தது, “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா?"" என்று கூறி (அரற்றி)னார்.
விளக்கம்:
அவ்வாறே அவர் ஒரு பேரித்த மரங்களின் தோட்டத்தில் வந்து தங்கினார். அதைத் தொடர்ந்து எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிரசவ வலி ஏற்படுவது போலவே, அவருக்கும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு துடிதுடித்துப் போனார். “இப்படி ஒரு வேதனை ஏற்படும் முன்பே நான் மரணித்திருக்கக் கூடாதா? இதைப் பற்றி அறியாதவளாகவே நான் இருந்திருப்பேனே!” என்று பிரசவ வேதனையால் துடிதுடித்தார்.

  (فَنَادٰٮهَا مِنۡ تَحۡتِهَاۤ اَلَّا تَحۡزَنِىۡ قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيًّا‏ ﴿۲۴

19:24 அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒருசின்ன ஆற்றை உண்டாக்கி இருக்கின்றான்"" என்று அழைத்துக் கூறினார்.
விளக்கம்:
அதற்கு, “இப்படி வலி ஏற்படுவது இயல்புதான். இதற்கெல்லாம் நீ பயப்படாதே. உனக்கு அருகாமையில் நீரோடையும், தலைக்கு மேல் பழுத்த பேரீத்தங்களைக் கொண்ட மரங்களும் உள்ளன. இவை யாவும் இறைவனின் அருட்கொடையாகும்” என்று அவருடன் இருந்தவர்கள் மூலம் ஆறுதல் அளிக்கப்பட்டது.

 (وَهُزِّىۡۤ اِلَيۡكِ بِجِذۡعِ النَّخۡلَةِ تُسٰقِطۡ عَلَيۡكِ رُطَبًا جَنِيًّا ﴿۲۵

19:25.“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும், (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம்மீது அது உதிர்க்கும்.”
விளக்கம்:
“மேலும் இந்த மரத்தை உலுக்கினால் உண்பதற்குச் சுவையான பழுத்த பேரீத்தப் பழங்களும் கிடைத்துவிடும். இப்படியாக எந்த சிரமும் இல்லாமல் நீ வாழலாம்” என்றனர்.


10.மௌன விரதம் எதற்கு?

  فَكُلِىۡ وَاشۡرَبِىۡ وَقَرِّىۡ عَيۡنًا‌ ۚ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الۡبَشَرِ اَحَدًا ۙ فَقُوۡلِىۡۤ اِنِّىۡ نَذَرۡتُ لِلرَّحۡمٰنِ صَوۡمًا فَلَنۡ اُكَلِّمَ الۡيَوۡمَ اِنۡسِيًّا ‌ۚ‏ ﴿۲۶﴾ 

19:26.“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரை யேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாக அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன், ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்” என்று கூறும்.
விளக்கம்:
அவ்வாறே அந்த குழந்தையும் பிறந்தது. “அந்தப் பழங்களை உண்டு மகிழ்ந்து நீரோடையின் நீரைப் பருகி குழந்தையின் அழகிய முகத்தைப் கண்குளிரப் பார்த்து சந்தோஷமாக இரு. இதையும் மீறி யாராவது உன்னை அடையாளங் கண்டு உன்னை விசாரிக்க வந்தால், அருட்கொடையாளன் இறைவனுக்காக மௌன விரதம் கடைப்பிடித்து இருப்பதாக சைகையின் மூலம் கூறிவிடு. இதனால் நீ யாரிடமும் பேச வேண்டி இருக்காது” என்று அறிவுறுத்தினார்கள்.

அதாவது யாராவது உன்னிடம் வந்து கேள்வி கேட்க முற்படும்போது, மௌன விரதம் இருப்பதாக சைகையின் மூலம் கூறிவிடும்படி சொல்லப்படுகிறது. ஒரு குழந்தைப் பிறந்தால், எல்லோருக்கும் சந்தோஷம் தான் ஏற்படும். அதுவும் ஆண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் இங்கு இதற்கு நேர் எதிராக இருக்கிறது. காரணம் இவர் துறவறத்தை மேற்கொண்ட கன்னி ஸ்திரியாக இருந்ததால், இவரை அடையாளங் கொள்பவர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பொருத்த வரையில் ஒரு பெண் துறவி குழந்தையைப் பெற்றெடுப்பது பெரிய தெய்வ குற்றமாக இருக்கும். எனவே கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் இறைவனின் செயல் திட்டத்தைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே அதைப் பற்றி எடுத்துச் சொன்னாலும் அது அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அல்லது ஆசிரமத்து பூசாரிகளுக்கு உண்மை தெரிந்தால் மீண்டும் அவருக்கு ஆபத்து ஏற்படும். எனவே இந்த உபாயத்தை கையாளச் சொல்லப்படுகிறது.


11.ஈஸா நபி பிறந்த மாதம்

மேற்சொன்ன 19:26 வாசகத்தில் பழுத்த பேரீத்த மரங்களின் அடியில் குழந்தைப் பிறந்ததாக கூறப்படுகிறது. எனவே ஈஸா நபி பிறந்தது கோடைக் காலத்தில்தான் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. குறிப்பாக ஆங்கில மாதக் கணக்குப்படி ஆகஸ்ட் மாதம் என்றும் புலனாகிறது. அப்போதுதான் அப்பகுதிகளில் பேரீத்தப் பழங்கள் பழுக்கும் பருவக் காலமாகும்.

இப்படியாக அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து அவருடைய கணவருடன் யாருக்கும் தெரியாத இடத்தில் வளர்த்து வந்தார். ஜக்கரிய்யா நபி மூலம் கற்றிருந்த தவ்ராத் எனும் இறை வழிகாட்டுதலை ஈஸாவுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவர் வாலிப வயதை அடைந்தப் பின் அவருக்கு நபித்துவமும் கிடைத்தது. (19:30)


12.மர்யமிடம் சமுதாய தலைவர்கள் செய்த தர்க்கம்

 ( فَاَتَتۡ بِهٖ قَوۡمَهَا تَحۡمِلُهٗ‌ؕ قَالُوۡا يٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـًٔـا فَرِيًّا‏ ﴿۲۷

19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார், அவர்கள் கூறினார்கள்: ""மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"

விளக்கம்:
அதன்பின் மர்யம் தன் மகனை அழைத்துக் கொண்டு தம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். ஈஸா நபியின் போதனைகளைக் கேள்விப்பட்ட அவருடைய சமூகத் தலைவர்கள், மிகவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள் மிகவும் கோபத்துடன்,“இது என்ன? இப்படி ஒரு விபரீதமான செயலை செய்திருக்கிறாய்!” என்று மர்யமிடம் வாதிட்டு வந்தனர்.

 ( يٰۤـاُخۡتَ هٰرُوۡنَ مَا كَانَ اَ بُوۡكِ امۡرَاَ سَوۡءٍ وَّمَا كَانَتۡ اُمُّكِ بَغِيًّا‌ ۖ‌ ۚ‏ ﴿۲۸

19:28.“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்க வில்லை, உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை""(என்று பழித்துக் கூறினார்கள்).

விளக்கம்:
சமுதாய தலைவர்கள்;, “ஹாரூனின் சகோதரியே! நீயோ உன் தந்தையோ கெட்ட மனிதராக இருந்ததில்லை. உன் தாயாரும் ஆசிரமத்திற்கு எதிரான எந்த பேச்சும் பேசினதும் கிடையாது”
“ஆனால் நீயோ உன் பையனை ஏன் இப்படி வளர்த்து இருக்கிறாய்? அவன் நம் ஆசிரம சட்ட விதிமுறைகளுக்கும், அரசாட்சிக்கும் எதிராக பேசி வருகிறானே!” என்று ஆவேசமாகப் பேசினார்கள்.


13.தொட்டில் குழந்தை ஈஸா?

( فَاَشَارَتۡ اِلَيۡهِ‌ ؕ قَالُوۡا كَيۡفَ نُـكَلِّمُ مَنۡ كَانَ فِى الۡمَهۡدِ صَبِيًّا‏ ﴿۲۹

19:29.(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும்படி) அதன் பால் சுட்டிக் காட்டினார், ""நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?"" என்று கூறினார்கள்.

விளக்கம்:
அதற்கு மர்யம், தன் மகனிடமே கேட்டுக் கொள்ளும்படி சொல்லி வந்தார். அதற்கு அச்சமுதாயத் தலைவர்கள்,“நாம் எப்படி தொட்டில் குழந்தையிடம் பேசுவது?” என்று ஆவேசமாகக் கேட்டார்கள்.

அதாவது பெரியவர்களான நாம் சின்ன குழந்தையிடம் எவ்வாறு பேசுவது? எங்களைப் பொருத்த வரையில் அவன் தொட்டில் குழந்தையே! சிந்தனையாளர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். ஈஸா நபி இறைவழிகாட்டுதலை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வந்ததால் தான் சமுதாயத் தலைவர்கள் அவருடைய தாயாரிடம் இவ்வாறு தர்க்கம் செய்தனர்.

ஈஸா நபியின் போதனைகள் மக்கள் மத்தியில் பரவியதால் அதை கேள்வியுற்று இவ்வாறு தர்க்கம் செய்தனர். எனவே அவர் உண்மையிலேயே தொட்டில் குழந்தை அல்ல. நாமும் ஆவேசமாகப் பேசும் போது இப்படிப்பட்ட வார்த்தைகளை வெளிப் படுத்துகிறோம். இளைஞனைப் பார்த்து பால் வடியும் முகம் என்கிறோம். உண்மையிலேயே பால் வடிப்பதாகப் பொருள் கொள்ள முடியுமா? மேலும் அடுத்த வாசகத்தை கவனித்துப் பாருங்கள்.

( قَالَ اِنِّىۡ عَبۡدُ اللّٰهِؕ اٰتٰٮنِىَ الۡكِتٰبَ وَجَعَلَنِىۡ نَبِيًّا ۙ‏ ﴿۳۰

19:30.“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்,அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான், இன்னும்,என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
விளக்கம்:
அதற்கு ஈஸா நபி, “நான் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்பவனாகவே இருக்கிறேன். எனக்கு இன்ஜீல் எனும் வேதம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் நான் இறைத்தூதனாக இருக்கிறேன்” என்றார்.

 ( وَّجَعَلَنِىۡ مُبٰـرَكًا اَيۡنَ مَا كُنۡتُ َ و اَوۡصٰنِىۡ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمۡتُ حَيًّا ‌ۖ ﴿۳۱

19:31.இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியம் உடையவனாக) ஆக்கியிருக்கின்றான், மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸிய்யத் செய்து (கட்டளையிட்டு)இருக்கின்றான்.

விளக்கம்:
“மேலும் இறைவனின் எல்லா பாக்கியங்களையும் பெற்று நான் சிறப்பாக வாழ்கிறேன். எனவே நான் எங்கிருந்த போதிலும், நீங்கள் சுயமாக உருவாக்கி வைத்திருக்கும் ஷரீயத் சட்டங்களை விட்டுவிட்டு இறைவழிகாட்டுதலை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுபவனாகவே இருப்பேன்” என்றார்.

சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? “தொட்டில் குழந்தை” என்ன பதிலளித்தது என்பதைக் கவனித்தீர்களா? தனக்கு வேதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், தான் ஒரு இறைத்தூதன் என்றும் பதிலளிக்கிறார். நபித்துவம் எல்லாம் தொட்டில் குழந்தைக்கு அல்லாஹ் தருவானா? தொட்டில் குழந்தையால் வேத நூலை எவ்வாறு சுமக்க முடியும்? அப்படியே சுமந்தாலும் வேத உண்மைகளை எப்படி மக்களிடம் எடுத்துக் கூற முடியும்? எனவே நாம் முன்பு கூறியது போல் மர்யமிடம் நடந்த இந்த வாக்கு வாதம் யாவும், ஈஸா நபி நபித்துவம் பெற்று, மக்களிடம் போதனை செய்ததன் விளைவாக ஏற்பட்ட தர்க்கங்களே ஆகும். உண்மையிலேயே ‘தொட்டில் குழந்தை’ அல்ல. மேலும் இத்தகைய வாக்கு வாதம் பலமுறை நடந்து வந்ததாகவும் தெரிகிறது.

மேலும் தனது தாயார் பலவிதமான அவதூறுகளுக்கு ஆளாகி இருப்பதைக் கவனிக்கும் அவர், தன் தாயை விட்டுவிட்டு, யூதர்கள் உருவாக்கி வைத்திருந்த ஷரியத் சட்டங்களைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் கூறி இருப்பதைக் கவனியுங்கள். எனவே அவர் இறை வழிகாட்டுதலின் படியே வாழ்ந்து வந்தவர் ஆவார்.

( وَّبَرًّۢابِوَالِدَتِىۡ وَلَمۡ يَجۡعَلۡنِىۡ جَبَّارًا شَقِيًّا‏ ﴿۳۲

19:32.என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்,) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
விளக்கம்:
“எனவே நான் என் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்ய கடமைப்பட்டுள்ளேன். உங்கள் பேச்சைக் கேட்டு அவருக்கு தீங்கிழைக்க நான் ஒன்றும் கர்வம் பிடித்த மனிதன் அல்ல” என்றார்.


14. ஈஸா நபிக்கு எதிரான சதி

இப்படியாக ஈஸா நபி மதகுருமார்களின் எதிர்ப்பையும் ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு தன் போதனையை மக்களிடம் தொடர்ந்து செய்துவந்தார். ஆரம்ப கால கட்டத்தில் மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.

  فَلَمَّاۤ اَحَسَّ عِيۡسٰى مِنۡهُمُ الۡكُفۡرَ قَالَ مَنۡ اَنۡصَارِىۡۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الۡحَـوَارِيُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشۡهَدۡ بِاَنَّا مُسۡلِمُوۡنَ‏ ﴿۵۲﴾ 

3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்? என்று அவர் கேட்டார் (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம், திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்"" எனக் கூறினர்.

விளக்கம்:
தம் சமுதாயத்திலுள்ள அனைவரும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாக துணை நிற்பவர்கள் யார் என்று அழைப்பு விடுத்தார். அதற்கு அவரை முழு அளவில் ஏற்றுக் கொண்டவர்கள், நாங்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்படுத்திட துணை புறிவோம் என்றும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முற்றிலும் ஏற்று அதன்படி நடப்போம் என்றும் கூறி சிலர் அவரிடம் வந்து இணைந்தனர்.

( رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاكۡتُبۡنَا مَعَ الشّٰهِدِيۡنَ‏ ﴿۵۳

3:53.“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம், எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்துஎழுதுவாயாக!"" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)

விளக்கம்:
அவ்வாறு வந்து இணைந்தவர்கள், தம்மைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்ட திட்டங்களை முற்றிலும் ஏற்றுக் கொள்வதாகவும் அதன் அடிப்படையில் வழிநடத்திச் செல்ல வந்துள்ள இறைத்தூதரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதாகவும் உறுதியளித்தனர். இறைவனின் வழிகாட்டுதலை உண்மைப்படுத்திக் காட்டியவர்கள் பட்டியலில் தம்மையும் இணைத்துக் கொள்ளும்படி இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

இப்படியாக அந்தச் சமுதாயம் இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒன்று, மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியானப் பாதையை ஏற்று நடப்பவர்கள்; மற்றொன்று அதை எதிர்ப்பவர்கள். ஈஸா நபியை எதிர்த்து வந்த தலைவர்களும் மதகுருமார்களும் அவருக்கெதிராக விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். இந்தப் போதனைளை விட்டுவிட அவரிடம் தர்க்கமும் செய்து பார்த்தனர் (19:28-33). இவை எல்லாம் பலன் அளிக்காததால்


15.ஈஸா நபியை கொல்ல சதி

 ( وَمَكَرُوۡا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيۡرُ الۡمَاكِرِيۡنَ ﴿۵۴ 

3:54.(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதிசெய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான், தவிர அல்லாஹ் சதிசெய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

விளக்கம்:
அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஆனால் அதிலிருந்து தப்பிச் செல்ல, அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் சிறந்த வழிமுறைகள் பல இருந்தன. இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டங்களே தலைசிறந்தவையாகும்.
அவரைச் சிறைபிடித்து சிலுலையில் ஏற்றிக் கொடூரமான முறையில் கொன்று விடுவது என்று எதிர்தரப்பினர் திட்டமிட்டு இருந்தார்கள். அது நிறைவேறாமல் போயிற்று. அவர்களுடைய சதித் திட்டத்தை அல்லாஹ் ஈஸா நபிக்கு வெளிப்படுத்தி விட்டான். எனவே அவரும் அந்தச் சதியிலிருந்து தப்பிச் சென்றார்.


16.ஈஸா நபியின் மறைவு

  اِذۡ قَالَ اللّٰهُ يٰعِيۡسٰۤى اِنِّىۡ مُتَوَفِّيۡكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيۡنَ كَفَرُوۡا 

3:55.“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன், இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன், நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்,

விளக்கம்:
“ஈஸாவே! அவர்களுடைய சதி திட்டங்களுக்கு நீ பலியாகமாட்டாய். உனக்கு நாம் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளின் படி இயற்கையான மரணமே ஏற்படும். உனக்கு உயர்வும் கண்ணியமும் கிடைக்க நம் புறத்திலிருந்து வழிகள் பிறக்கும். உனக்கு எதிராக விதவிதமான அவதூறுகளை அவர்கள் பரப்பி வருகிறார்கள். அவற்றை எல்லாம் போக்கி உன்னை உயர் நிலைக்குக் கொண்டு செல்வேன்” என்று அல்லாஹ் அறிவித்தான்.

இவ்வாசகத்தின் தொடற்சியை நாம் கடைசியில் யவுமுல் கியாம என்ற தலைப்பில் கொடுத்துள்ளோம். மேற்சொன்ன வாசகத்தில் முதவஃப்பீக متوفيك என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நான் உன்னை மரணிக்கச் செய்வேன் என்பது அதன் பொருளாகும்.

அல்லாஹ் மரணிக்கச் செய்வது அவன் ஏற்படுத்தியுள்ள இயற்கைச் சட்டங்களின் படியே ஆகும். காரணம் இதே போன்று வார்த்தை முஹம்மது நபிக்கும் 13ஆவது அத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(وَاِنۡ مَّا نُرِيَـنَّكَ بَعۡضَ الَّذِىۡ نَعِدُهُمۡ اَوۡ نَـتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيۡكَ الۡبَلٰغُ وَعَلَيۡنَا الۡحِسَابُ‏ ﴿۴۰

13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம்வாழ்நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்), உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான், (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

விளக்கம்:
நபியே! அல்லாஹ்வின் நிலையான சட்டங்களின்படி மூஃமின்கள் முன்னேறி வருவதையும், நிரகாரிப்பவர்களுக்கு ஏற்படும் துயர சம்பவங்களில் சிலவற்றையும் உன் வாழ்நாளிலேயே பார்ப்பீர். அதற்குள் உம்மை நாம் மரணிக்கச் செய்தாலும், அவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மக்களிடம் எடுத்துரைப்பதே உம்மீதுள்ள முக்கிய கடமையாகும்.மற்றபடி அவரவர்களுக்கு நேரவிருக்கும் முன்னேற்றங்கள் மற்றும் அழிவுகள் யாவும் அல்லாஹ்வின் நியதிப்படியே ஏற்பட்டு வரும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலமான விஷயம் ஊரறிந்த உண்மையே. ஆனால் ஈஸா நபியின் மரணத்தைப் பற்றி மட்டும் அவரை உயிருடன் மேலே உயர்த்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் 3:55 வாசகத்தில் வராஃபிவுக وَرَافِعُكَ என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு அல்லாஹ் அவரை உயிருடன் மேலே உயர்த்திக் கொண்டதாக அர்த்தம் எழுதியுள்ளார்கள். இந்த வார்த்தைக்கு இவ்வாறு பொருள் கொள்வது சரிஅல்ல. காரணம் இந்த வார்த்தை ஏனைய நபிமார்கள் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூஸா நபி காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி 2ஆவது அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.

وَاِذۡ اَخَذۡنَا مِيۡثَاقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ الطُّوۡرَؕ

2:63. இன்னும் நாம் உங்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கி, தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தினோம்.
விளக்கம்:
அதாவது இஸ்ரவேலர்களிடமும் நபிமார்கள் மூலம் வாக்குறுதி வாங்கிக் கொள்ளப்பட்டது. “தூர்” என்னும் உயரமான மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த உங்களிடமும் அவ்வாறே அந்த வாக்கு இருந்தது என்பது இவ்வாசகத்தின் பொருளாகும். அந்த சமயத்தில் அவர்கள் மீது மலையை உயர்த்தவில்லை எனவே வராஃபிவுக என்றால் உன்னுடைய பதவியையும் அந்தஸ்தையும் உயர்த்துவேன் என்பதாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே சொல்லப்படுகிறது.

 ( وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ‏ ﴿۴

94:4. மேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்வோம்.

விளக்கம்:
இங்கு வரஃபஅனா وَرَفَعۡنَا என்ற வார்த்தைக்கு புகழை மேலோங்கச் செய்வோம் என்று பொருள் எழுதப்பட்டுள்ளது. அதுபோல ஈஸா நபிக்கும் இதே செய்திதான் தரப்பட்டது. அதாவது இஸ்ரவேலர்களின் சதி வலையில் சிக்கமால் அவருக்கு அல்லாஹ்வின் நியதிப்படி இயற்கையான மரணமே ஏற்படும் என்றும், மரணத்திற்கு முன்பே அவருடைய பதவியும் அந்தஸ்தும் உயரும் என்றும் சொல்லப்பட்டது.
எனவேதான் திருக்குர்ஆன் ஈஸா நபியை சிலுவையில் அறைந்து கொல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லி விட்டது.

  وَّقَوۡلِهِمۡ اِنَّا قَتَلۡنَا الۡمَسِيۡحَ عِيۡسَى ابۡنَ مَرۡيَمَ رَسُوۡلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوۡهُ وَمَا صَلَبُوۡهُ وَلٰـكِنۡ شُبِّهَ لَهُمۡ‌ ؕ وَاِنَّ الَّذِيۡنَ اخۡتَلَـفُوۡا فِيۡهِ لَفِىۡ شَكٍّ مِّنۡهُ‌ ؕ مَا لَهُمۡ بِهٖ مِنۡ عِلۡمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوۡهُ يَقِيۡنًا ۢ ۙ‏ ﴿۱۵۷﴾ 

4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய - ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்"" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்), அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை.ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்படைக்கப்பட்டான், மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம்கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது, நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

விளக்கம்:
மேலும் யூதர்கள் கூறி வரும் கட்டுக் கதைகளில், மர்யமின் குமாரரும் இறைத் தூதருமான ஈஸாவைக் கொன்று விட்டதாகக் கூறுவதும் ஒன்றாகும். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை; அவர்கள் சொல்லி வருவது போல் அவரை சிலுவையில் ஏற்றவும் இல்லை. இவை யாவும் அவர்களுடைய கற்பனை கதைகள்தான். அதில் பலர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். அதில் இன்னமும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர். இதைப் பற்றி அவர்களிடம் தெளிவான ஞானம் எதுவும் இல்லை. வெறும் யூகங்களை வைத்தே பேசி வருகின்றனர். ஆக அவரை ஒருபோதும் கொல்ல வில்லை என்பதுதான் உண்மையாகும்.

 ( بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيۡهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيۡزًا حَكِيۡمًا‏ ﴿۱۵۸

4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் -இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானம் உடையோனாகவும் இருக்கின்றான்.

விளக்கம்:
அவர்கள் கூறி வருவது போல் அவரை சிலுவையில் ஏற்றி அவருக்கு இழிவான மரணம் ஏற்படவில்லை. மாறாக அல்லாஹ்வின் நியதிப்படி அவருக்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தன. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மாபெரும் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும்.

இவ்வாசகத்தில் பல் ரஃபஅஉல்லாஹ{ இலைஹி رَّفَعَهُ اللّٰهُ اِلَيۡهِ‌ என்று வருகிறது. இதற்கு ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாக பொருள் தரப்படுகிறது. ‘இலைஹி’ என்ற வார்த்தைக்கு ‘தன் பக்கம்’ என்று சொன்னால் அல்லாஹ் ஒர் இடத்தில் அமர்ந்து இருப்பதாக பொருள் கொள்ள வேண்டிவரும். அல்லாஹ் அகிலங்கள் அனைத்திலும் செயல்பட்டு வருவதாக திருக்குர்ஆன் வாசகங்கள் பல கோணங்களில் சொல்லும் போது, அல்லாஹ் ஓரிடத்தில் அமர்ந்திருப்பதாகப் பொருள் கொள்வது சரியாகாது. விளக்கத்திற்கு நாம் எழுதிய அல்லாஹ்வும் மனிதனும் என்ற நூலைப் படியுங்கள்.
அல்லாஹ் 25ஆவது அத்தியாயத்தில நிழலைப் பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறான்.

(ثُمَّ قَبَضۡنٰهُ اِلَـيۡنَا قَبۡضًا يَّسِيۡرًا‏ ﴿۴۶

25:46. பிறகு நாம் அந்த நிழலை சிறுகச் சிறுக குறைத்து நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.

இந்த வாசகத்தில் உள்ளபடி பொருள் கொண்டால் நிழல் அல்லாஹ்விடம் சென்று விடுவதாக பொருள் வருகிறது. அப்படி நிழல் அல்லாஹ்விடம் சென்று விடுகின்றதா? இல்லையே! அல்லாஹ்வின் நியதிப்படி சூரியன் அஸ்தமிக்கும் போது, அதன் நிழல் பூமி முழுவதும் பரவிவிடுகிறது என்றுதான் பொருள் கொள்ள முடியும். இதே போல் அல்லாஹ் தன்னகத்தே ஈஸா நபியை உயர்த்திக் கொண்டான் என்றால் அல்லாஹ்வின் நியதிப்படி ஈஸா நபிக்கு இவ்வுலகில் உயர்வும் கண்ணியமும் கிடைத்தன என்றுதான் பொருள்படும். எனவே ஈஸா நபியின் மரணம் இயற்கை மரணமே ஆகும்.


17. ஈஸா நபியின் ஹிஜ்ரத் சம்பவம்

நடந்த உண்மை என்னவென்றால் இஸ்ரவேலர்களின் சதி திட்டத்தைப் பற்றி அல்லாஹ் வெளிப்படுத்தியதும் அவர் தன் இடத்தைவிட்டு வேறு ஊருக்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார். அவருடைய இரகசிய பயணத்தில் அவருடைய சீடர்களான ஹவாரியூன்கள் அவருக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டனர். அவருடைய உயிரைக் காப்பாற்ற பல திட்டங்களைத் தீட்டி அரும்பாடுபட்டனர். அவருடைய சீடர்களில் ஒருவர் தானே முன்வந்து தான்தான் ஈஸா என்று கூறி தண்டனையை ஏற்று தன்னை தியாகம் செய்து கொண்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அதாவது உலக மக்கள் செய்துவரும் பாவச் செயல்களை நீக்கும் பொருட்டு ஈஸா நபி உயிருடன் இருப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. திருக்குர்ஆன் ஈஸா நபியையும் அவரது தாயாரையும் நீர் வீழ்ச்சிகள் நிறைந்த பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகிறது.

(وَجَعَلۡنَا ابۡنَ مَرۡيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيۡنٰهُمَاۤ اِلٰى رَبۡوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيۡنٍ ﴿۵۰

23:50. மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம், அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப்பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.

விளக்கம்:
இப்படியாக ஈஸா நபியும் அவருடைய தாயார் மர்யமும், இறைவழிகாட்டுதலின் படி செயல்பட்ட மாவீரர்களின் ஆத்தாட்சிகள் ஆவர். மேலும் அவ்விருவர் யூதர்களின் சதி வலையில் சிக்காமல், பாதுகாப்பான இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற இடம் நீர் வீழ்ச்சிகள் நிரைந்த செழிப்பான மலைப் பிரதேசமாக இருந்தது. இப்படியாக அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைத்தது.

அவ்வாறு அவர்கள் சென்ற இடம் பாலஸ்தீன நாட்டில் உள்ளது. சிறிது காலத்திற்குப் பின் அவர் மீண்டும் தன்னுடைய மார்க்க பிரச்சாரத்தை தொடங்கிய போது, மக்களுக்கு பேரதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைத்தான் சிலுவையில் ஏற்றி அந்நாட்டு அரசன் கொன்று விட்டானே. அதன்பின் அவர் எவ்வாறு உயிர் பெற்று எழுந்தார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ஈஸா நபி தப்பிச் சென்ற விஷயத்தை ஹவாரியூன்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. காரணம் இவர்தான் உண்மையான மர்யமின் குமாரர் ஈஸா என்று அறிவித்தால் அவரை மீண்டும் சிலுவையில் ஏற்றி கொன்று விடுவார்கள் என்று பயந்தார்கள். மேலும் அக்காலத்தில புகைப் படம் கேமரா போன்ற கருவிகள் இல்லாததால் அவரை அடையாளம் கொள்வதில் சிக்கலும் இருந்தது.

ஆக யூதர்களும் கிறிஸ்தவர்களும் சொல்வது போல அவரை சிலுவையில் ஏற்றி கொல்லவும் இல்லை. முஸ்லிம்கள் கூறுவது போல அவரை அல்லாஹ் உயிருடன் மேலே தூக்கிக் கொண்டு செல்லவும் இல்லை. அவருக்கு ஏற்பட்டது இயற்கையான மரணமே.


18. நபிமார்கள் ஹிஜ்ரத் செய்ததன் நோக்கம் என்ன?

ஹிஜ்ரத் செய்வது என்றால் ஒருவர், தான் இருக்கும் ஊரை விட்டு தனக்குச் சாதகமாக இருக்கும் வேறு ஊருக்குச் சென்று விடுவது என்று பொருளாகும். (பார்க்க 4:97) நபிமார்கள் இறைக்கொள்கை கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைத்த போது, மதகுருமார்கள், ஆட்சியாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் ஆகியோர் எதிர்க்கவே செய்தார்கள். காரணம் இறைக்கொள்கை கோட்பாடுகள் சமுதாய சமன்பாட்டைப் பற்றி பேசுகிறது. மேற்சொன்ன இம்மூன்று வர்க்கத்திற்கும் அவை எதிரானதாகும். எனவே இத்தகைய சிந்தனைகள் மக்கள் மத்தியில் வளர விடாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தார்கள். இதைக் கண்ட நபிமார்கள் யாரும் பயந்ததில்லை. எனவே அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது, அவ்வூரை விட்டு தனக்குச் சாதகமான இடத்திற்குச் சென்றுவிட்டார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு நபிமார்கள் விஷயத்திலும் நடந்து வந்துள்ளது. இப்றாஹிம் நபியும் தன் நாட்டை விட்டு பாலஸ்தீன நாட்டிற்குச் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார். (பார்க்க 38:99) மூஸா நபியும் தம் சக தோழர்களுடன் ஃபிர்அவுன் மன்னனின் சதியிலிருந்து தப்பித்து ஹிஜரத் செய்து சென்று விட்டார். (பார்க்க 20:77) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக மக்கமா நகரில் இருந்த ஆட்சியாளர்கள் கொன்றுவிட முயன்றனர் (பார்க்க 8:30&16:127) எனவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து தனக்குச் சாதகமாக மக்களின் ஆதரவுள்ள இடமான மதினாவிற்குச் சென்றுவிட்டார். (பார்க்க 17:1). அங்கு மக்களின் ஆதரவுடன் ஃகிலாஃபத் என்கின்ற மக்களாட்சியை ஏற்படுத்தினார். அதுபோலவே ஈஸா நபி அவர்களையும் கொன்றுவிட அந்நாட்டு ஆட்சியாளர்கள் சதி திட்டம் தீட்டினர். (பார்க்க 3:54) எனவே அவரும் தனக்குச் சாதகமாக இருந்த ஜெருசெலம் என்ற ஊருக்கு சென்றார். அங்கு தம் மக்களின் ஆதரவுடன் ஆட்சி ஏற்படுத்தி இறைக்கொள்கை கோட்பாடுகளை உண்மைப்படுத்திக் காட்டினார். இந்த உண்மை அரபு நாட்டு மக்களுக்கு தெரிந்து இருந்ததால் அதைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆன் தரவில்லை.

இதுதான் நடந்த உண்மையாகும். இதை விட்டுவிட்டு ஈஸா நபியும் அவரது தாயாரும், மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன வந்தது என்று ஊரை விட்டு ஓடிவிடவில்லை. ஈஸா நபி இந்தியாவுக்கு வந்ததாகவும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் சொகுசாக வாழ்ந்ததாகவும், சிலர் கற்பனை செய்து சொல்கிறார்கள். இவையெல்லாம் உண்மைக்குப் புரம்பான விஷயமாகும்.


19. ஈஸா நபிக்கு கியாம நாளில் திருமணம் நடக்குமா?

மேலும் முஸ்லிம்களில் சிலர் ஈஸா நபியை உயிருடன் மேலே தூக்கிச் சென்றுவிட்டதால் அவருக்குத் திருமணம் நடை பெறவில்லை என்றும் கியாம நாளில் அவரை அல்லாஹ் திருமணம் செய்து வைப்பான் என்றும் கூறி வருகின்றனர். இவையாவும் கட்டுக்கதைகளே. காரணம் உலகில் பிறந்த எந்த நபியும் முற்றும் துறந்த முனிவர்களோ சாமியார்களோ அல்ல. அவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் வாசகம் கூறுகிறது.

وَلَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلًا مِّنۡ قَبۡلِكَ وَ جَعَلۡنَا لَهُمۡ اَزۡوَاجًا وَّذُرِّيَّةً ‌ ؕ وَمَا كَانَ لِرَسُوۡلٍ اَنۡ يَّاۡتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ‌ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ‏ ﴿۳۸﴾ 

13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பிவைத்தோம், அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம், மேலும், எந்த தூதரும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை, ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.

விளக்கம்:
நபியே! உமக்கு முன்னர் வந்த நபிமார்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு மனைவி மக்களோடு சிறப்பாக வாழ்ந்தவர்களே ஆவர். அவர்களில் எவரும் உலகைத் துறந்த முனிவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் சமுதாய சீர்திருத்தவாதிகளே. (பார்க்க 2:151) அது மட்டுமின்றி நபிமார்கள் எவரும் இறைக் கட்டளைகளைத் தவிர வேறு எந்த ஆதாரங்களையும் மக்களிடம் எடுத்துரைத்த தில்லை. ஆனால் அவர்களுக்குப் பின் வந்த சமூகத்தவர்களே அவர்களைக் குறித்து மாற்றமான கருத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் அழிவை சந்தித்துக் கொண்டார்கள்.

கவனித்தீர்களா? உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் அனைவரும் திருமணம் செய்து பிள்ளைகளோடு வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் ஈஸா நபி மட்டும் விதிவிலக்கு என்று சொல்வது சரியான தகவலா? இதத்தகைய பேச்சுகளுக்கு இஸ்லாத்தில் ஒருபோதும் இடமே இல்லை.

எனவே கியாம நாளில் அவருக்குத் திருமணம் ஆகும் என்ற தகவல்கள் கற்பனையில் வடிந்த சிந்தனையே ஆகும். அதற்கு அவசியமில்லை. அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவருடைய உடலையும், அவருடைய குடும்பத்தினர்களின் உடலையும் தோண்டி எடுத்து உலகார் முன் வைத்தனர். அதை சினிமா படமாகவும் எடுத்துக் காட்டினர். என்ன செய்வது? அவை யாவும் கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகச் செல்வதால், அதை அப்படியே மூடி மறைக்க முற்படுகின்றனர். ஆயிரம்தான் விரும்பினாலும் உண்மை வெளி வராமல் போயிவிடுமா? ஆனால் முஸ்லிம்களைப் பாருங்கள். கிறிஸ்தவர்களைவிட மிக ஆணித்தரமாக, அவரை வானத்தில் ஏற்றிச் சென்று, அவர் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆச்சரியமே!


20.ஈஸா நபி மீண்டும் உயிர்த்தெழுந்தாரா?

கிறிஸ்தவர்களின் பிரச்சாரத்தில் முக்கியமான ஒன்று, அவர் மரணித்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்ததாக சொல்வது ஆகும். இதற்கு அவசியமே ஏற்பட்டதில்லை. காரணம் அவர்கள் யூகித்திருப்பது போல அவர் அந்த சமயத்தில் மரணிக்கவே இல்லையே. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில காலத்திற்குப் பின், அவர் மீண்டும் தன் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது, மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. உண்மை விஷயம் ஹவாரியூன்களுக்குத் தெரிந்திருந்தும், அதைப் பற்றி யாருக்கும் அவர்கள் தெரியப்படுத்தவில்லை. அப்படியும் யூதர்களின் அரசனிடமிருந்து தப்பிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அவர் தப்பித்தது அவருக்குக் கிடைத்த “புணர் ஜென்மமே” ஆகும். காரணம் நாமும் நோய்வாய்ப்பட்டு, உயிர் பிழைத்தால் புணர் ஜென்மம் கிடைத்ததாகச் சொல்லிவிடுகிறோம். உண்மையிலேயே மரணம் ஏற்பட்டு மீண்டும் வானத்திலிருந்து வந்ததாகப் பொருள் கொள்ள முடியுமா? அது போலத்தான் ஈஸா நபியின் விஷயமும்.


21.ஈஸா நபியின் ஆட்சி

ஈஸா நபி மீண்டும் மார்க்க பிரச்சாரத்தைக் மேற்கொண்டதால், அவரை மக்கள் மீண்டும் உயிர் பிழைத்து வந்ததாக நம்பி, அவரை ஏற்றுக் கொண்டனர். அவருடைய இலட்சியப் பயணத்தில் அவருடைய சீடர்கள் பக்க பலமாக இருந்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வந்தனர்.அவர்களைப் பற்றி திருக்குர்ஆனே புகழாரம் செய்கிறது என்றால், எந்த அளவுக்குப் பாடுபட்டு இருப்பார்கள் என்பதைக் கவனியுங்கள்.

 يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا كُوۡنُوۡۤا اَنۡصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ لِلۡحَوٰارِيّٖنَ مَنۡ اَنۡصَارِىۡۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الۡحَـوٰرِيُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتۡ طَّآٮِٕفَةٌ مِّنۡۢ بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ وَكَفَرَتۡ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدۡنَا الَّذِيۡنَ اٰمَنُوۡا عَلٰى عَدُوِّهِمۡ فَاَصۡبَحُوۡا ظٰهِرِيۡنَ‏ ﴿۱۴﴾ 

61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களைநோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?"" எனக்கேட்க, சீடர்கள், நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்"" என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான்கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவிஅளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகி விட்டார்கள்.

விளக்கம்:
ஈஸா நபி, தன் சமூகத்தாரை நோக்கி, “அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணிக்க முன்வருபவர்கள் யார்?” என்று அறிவித்த போது, அவரை மனதார ஏற்று வந்த செயல்வீரர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற உதவி புரிவோம்” என்று முன்வந்தார்கள். இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! அவர்களைப் போல் நீங்களும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவருக்கு உதவி செய்ய முன்வாருங்கள். எனினும் அப்போது இஸ்ரவேலர்களில் சிலர் ஈமான் கொண்டனர்; மற்றும் பலர் அவருடைய அழைப்பை ஏற்க மறுத்தனர். எனவே இறைவனின் ஆட்சியமைப்பை முறியடிக்க முயன்ற பகைவர்களை ஒடுக்க, மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி வந்தது. அதனால் அவர்களுக்கு மாபெரும் வெற்றியும் கிடைத்தது.

கவனித்தீர்களா? ஹவாரியூன்கள் அரும்பாடுபட்டு வெற்றிப் பெற்றது போல, நீங்களும் பாடுங்கள் என்று நம்மைப் பார்த்து திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்களை நமக்கு முன் உதாரணமாக எடுத்துரைக்கிறது. எனவே ஈஸா நபி ஹிஜ்ரத் செய்த பின், நடந்த உண்மை விஷயங்களை திருக்குர்ஆன் விவரமாகக் கூறவில்லை. எனினும் மேற்சொன்ன வாசகத்தை வைத்துப் பார்க்கும் போது, அவரும் அல்லாஹ்வின் ஆட்சி ஏற்படுத்திச் சென்றார் என்ற உண்மை நமக்குப் புலனாகிறது. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் 5ஆவது அத்தியாயத்தில் வரும் வாசகங்களையும் தருகிறோம். கவனியுங்கள்

(وَ اِذۡ اَوۡحَيۡتُ اِلَى الۡحَـوَارِيّٖنَ اَنۡ اٰمِنُوۡا بِىۡ وَبِرَسُوۡلِىۡ‌ۚ قَالُوۡۤا اٰمَنَّا وَاشۡهَدۡ بِاَنَّـنَا مُسۡلِمُوۡنَ‏ ﴿۱۱۱

5:111. “என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்"" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்"" என்று கூறினார்கள்.

விளக்கம்:
ஈஸா நபியை பின்பற்றி வந்த ஹவாரிய்யூன் என்னும் தோழர்களிடம், “என் மீதும் என் தூதுச் செய்திகள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர் மூலம் அல்லாஹ் அறிவித்தபோது, அவர்களும் நாம் இறைவழிகாட்டுதலை ஏற்று உலக மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவோம் என்று உறுதியளித்தார்கள். மேலும் ஈஸா நபியின் தலைமையின் கீழ் செயல்படப் போவதாகவும் உறுதி அளித்தார்கள்.


22.உணவு மரவை கேட்டு ஹவாரிய்யூன்கள்

  اِذۡ قَالَ الۡحَـوَارِيُّوۡنَ يٰعِيۡسَى ابۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيۡعُ رَبُّكَ اَنۡ يُّنَزِّلَ عَلَيۡنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ‌ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ‏ ﴿۱۱۲﴾

5:112. “மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?"" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்"" என்று கூறினார்.

விளக்கம்:
அந்த ஹவாரிய்யூன்கள் ஈஸா நபியிடம், “வாழ்வாதார வசதிகள் எங்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு அவர், “நீங்கள் வானுலக வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடும் மூஃமின்களாக இருந்தால், உங்களுக்கு அப்படி ஒரு தாராளமான வசதிகள் கொண்ட வாழ்வு கிடைக்கும்” என்று பதிலளித்தார்.

அதாவது தற்சமயம் உணவுப் பங்கீட்டு முறை தனியார் கைகளில் சிக்கிக் கிடப்பதால் பதுக்கல் பேர்வழிகளால் அவை பதுக்கப்படுகின்றன. (பார்க்க 3:49). அதனால் மக்களுக்கு உணவு சரிவர கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலை மாறி சிறந்த அரசமைப்பு உருவாகி அதன் மூலம் வாழ்க்கை வசதிகள் பெருகுமா என்பதே அவர்கள் கேட்ட கேள்வியாகும்.

(قَالُوۡا نُرِيۡدُ اَنۡ نَّاۡكُلَ مِنۡهَا وَتَطۡمَٮِٕنَّ قُلُوۡبُنَا وَنَـعۡلَمَ اَنۡ قَدۡ صَدَقۡتَـنَا وَنَكُوۡنَ عَلَيۡهَا مِنَ الشّٰهِدِيۡنَ‏ ﴿۱۱۳

5:113. அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப் பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்"" என்று கூறினார்கள்.

விளக்கம்:
அதற்கு அவர்கள், “நாங்களும் அப்படி ஒரு சிறந்த ஆட்சியமைப்பை உருவாக்கி, அதன் மூலமே நியாயமான வாழ்வாதாரங்களைப் பெற்று மனநிறைவுடன் கூடிய வாழ்வை பெற நாடுகிறோம். இப்படி ஒரு சிறந்த சமுதாயம் உருவாவது நிச்சயமாக நடக்கக்கூடியதே என்பதை நாங்கள் நம்புகிறோம். அதற்கு நாங்கள் சாட்சியாளர்களாக இருந்து உதவி புரிவோம்” என்றும் கூறினார்கள்.

  قَالَ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَيۡنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوۡنُ لَـنَا عِيۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنۡكَ‌ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَيۡرُ الرّٰزِقِيۡنَ‏ ﴿۱۱۴﴾

5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக, அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும், இன்னும் எங்களுக்கு உணவுக் பொருட்களை அளிப்பாயாக, நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்"" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

விளக்கம்:
அதற்கு மர்யமின் குமாரர் ஈஸா நபி, “அல்லாஹ்வே! நீ இந்த ஆட்சியமைப்பு மூலமாக வானளாவிய தாராளமான வாழ்வாதார வசதிகளை எங்களுக்குச் செய்து தருவாயாக. இதைக் கொண்டு உம்மீது ஈமான் கொள்வதில் முன்னிலை வகிப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின்னால் இதில் வந்து இணைபவர்களுக்கும் வாழ்க்கை வசதிகள் கிடைக்கச் செய்வாயாக. இவ்வாறு உம்மிடமிருந்து கிடைப்பது உலக மக்களுக்கு மிகப்பெரிய அத்தாட்சியாக இருக்கும். மேலும் எங்களுக்கு தாராளமான வாழ்க்கை வசதிகளைச் செய்து தருவாயாக. அவ்வாறு அருட்கொடைகளை அளிப்பதில் நீயே சிறந்தவன் ஆவாய்” என்று பிரார்த்தித்தார்.

  قَالَ اللّٰهُ اِنِّىۡ مُنَزِّلُهَا عَلَيۡكُمۡ‌ۚ فَمَنۡ يَّكۡفُرۡ بَعۡدُ مِنۡكُمۡ فَاِنِّىۡۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الۡعٰلَمِيۡنَ ﴿۱۱۵﴾ 

5:115. அதற்கு அல்லாஹ், நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கி வைக்கிறேன், ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப் படுத்துவேன்"" என்று கூறினான்.

விளக்கம்:
அதற்கு, “உங்கள் வேண்டுதலின்படி உங்கள் உழைப்பிற்கு ஏற்ப வாழ்க்கை வசதிகளைப் பெருகச் செய்வேன். அவற்றை என் கட்டளையின்படி சரியான முறையில் பங்கிட்டு, அனைவரும் இன்புற்று வாழ வழி செய்ய வேண்டும். ஆனால் இந்த வசதிகளைப் பெற்ற பின், யாராவது என் கட்டளைக்கு மாறு செய்தால் உலகில் யாருக்கும் கிடைக்காத வேதனைகளைக் கொண்டு உங்களை வேதனைப்படுத்துவேன்” என்று அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது.


23.வேதத்தை மாற்றியமைத்து கொண்டனர்

இதுதான் நடந்த உண்மையாகும். ஈஸா நபி அவர்களும் உலகில் சிறந்ததொரு ஆட்சியமைப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றார் என்றே நமக்குப் தெளிவாகிறது. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய பகைவர்களாக இருந்த யூதர்கள், அந்த ஆட்சியமைப்புக்கு எதிராக பல வதந்திகளைப் பரப்பி, அதை வலுவிழக்கச் செய்து விட்டனர். ஈஸா நபியின் தோழர்களாகிய ஹவாரியூன்களும் ஒதுங்கி இருக்க வேண்டியதாயிற்று. இறுதியில் எழுபது ஆண்டுகளுக்குப் பின் (70 A.D.) 5:115இல் குறிப்பிடப்பட்டது போல் ரோமியர்களுக்கு அழிவு ஏற்பட ஆரம்பித்தது. ஈஸா நபி சொல்லி விட்டு சென்றது போலவே, அவர்களுக்குப் பல வேதனைகள் ஏற்பட்டதால், அவர்கள் மீண்டும் இறை வேதமான பைபிளைத் தேடி அலைந்தனர். அதன் மூலப் பிரதி கிடைக்காததால், ஈஸா நபியின் தோழர்களைத் தேடிச் சென்றனர். அவர்கள் தொகுத்து வழங்கிய பைபிள்கள்தான் இன்றைக்கும் உலகில் பரவி இருக்கின்றன.

எனவேதான் லூக்காஸ், மேத்தியூஸ், பர்னபாஸ் போன்ற பெயர்களைக் கொண்ட பைபிள்கள் உள்ளன. அவை யாவும் காலப் போக்கில் கிறிஸ்தவர்கள் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட பைபிள்களாகும். மூலப் பிரதி எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் அவர்களைப் பின்பற்றி வந்த வேதக்காரர்கள் வேத உண்மைகளை காலப்போக்கில் மாற்றி அமைத்துக் கொண்டதாக திருக்குர்ஆன் குற்றம் சுமத்துகிறது.

 وَاِنَّ مِنۡهُمۡ لَـفَرِيۡقًا يَّلۡوٗنَ اَلۡسِنَتَهُمۡ بِالۡكِتٰبِ لِتَحۡسَبُوۡهُ مِنَ الۡكِتٰبِ‌ وَمَا هُوَ مِنَ الۡكِتٰبِۚ وَيَقُوۡلُوۡنَ هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِ وَمَا هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِ‌ۚ وَيَقُوۡلُوۡنَ عَلَى اللّٰهِ الۡكَذِبَ وَ هُمۡ يَعۡلَمُوۡنَ‏ ﴿۷۸﴾

3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும் போது, தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக, ஆனால் அதுவேதத்தில் உள்ளதல்ல, “அது அல்லாஹவிடம் இருந்து (வந்தது)"" என்றும் அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல, இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.

விளக்கம்:
வேதக்காரர்களில் மதகுருமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் தம் பேச்சுத் திறமையால் மக்களிடம், அல்லாஹ் சொல்லாதவற்றை எல்லாம் இறைக்கட்டளைப் போலவே எடுத்துரைக்கிறார்கள். இவ்வாறாக மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகள் காலப்போக்கில் இறைச் சட்டங்களாக மாறிவிட்டன. உண்மை அறியாத மக்களும், அவற்றை இறைக் கட்டளைகள்தான் என எண்ணி அவற்றையே கடைப்பிடித்து வருகிறார்கள். யாராவது இது விஷயமாக மத குருமார்களிடம் கேட்டால், அவை யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்று தைரியமாகப் பதில் அளித்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவை அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளைகளாக இருப்பதில்லை. இந்த உண்மையை அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டிச் சொல்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு பைபிளில் வந்த கட்டளை என்ன என்பதையும் கவனியுங்கள்.

وَقَفَّيۡنَا عَلٰٓى اٰثَارِهِمۡ بِعِيۡسَى ابۡنِ مَرۡيَمَ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ التَّوۡرٰٮةِ‌وَاٰتَيۡنٰهُ الۡاِنۡجِيۡلَ فِيۡهِ هُدًى وَّنُوۡرٌ ۙ وَّ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ التَّوۡرٰٮةِ وَهُدًى وَّمَوۡعِظَةً لِّـلۡمُتَّقِيۡنَ ؕ‏ ﴿۴۶﴾ 

5:46 இன்னும் (முன்சென்ற தூதர்களான) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை அவருக்கு முன் வந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம். அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழிகாட்டிhயகவும் உபதேசமாகவும் இருந்தது.

விளக்கம்:
அதே போல் நபிமார்கள் வரிசையில் இடம் பெற்ற மர்யமின் குமாரர் ஈஸா நபியும், அவருக்கு முன்வந்த தவ்ராத்தின் வழிகாட்டுதலை உலகார்க்கு உண்மைப்படுத்திக் காட்டவே வந்தார். அதே அடிப்படையாகக் கொண்ட ‘இன்ஜீல்’(Bible) என்ற வேத அறிவுரைகளை அவருக்கு நாம் கொடுத்தோம். அதுவும் மனித குலத்தின் ஒளிமயமான வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்தது. அது தனக்கு முன்வந்த தவ்ராத்தின் வழிகாட்டுதலையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு அது வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது.

( وَلۡيَحۡكُمۡ اَهۡلُ الۡاِنۡجِيۡلِ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ فِيۡهِ‌ؕ وَمَنۡ لَّمۡ يَحۡكُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡفٰسِقُوۡنَ‏ ﴿۴۷

5:47 இன்னும் உண்மையான இன்ஜீலை உடையவர்கள் அவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும். யார் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு அளிக்க வில்லையோ அவர்கள் பாவிகள் ஆவார்கள்.
விளக்கம்:
ஆதலால் இன்ஜீல் என்ற வேதமுடையவர்களிடம், அதில் இறக்கி அருளப்பட்ட அறிவுரைகளின்படியே மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்ப்பு அளிக்கும்படி அல்லாஹ்வின் கட்டளை இருந்தது. யார் அல்லாஹ் இறக்கி அருளிய வேத அறிவுரைகளின் படி ஆட்சியும் நீதியும்; அளிக்கவில்லையோ, அவர்கள் பெரும் பாவிகள் ஆவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது.
உண்மை இவ்வாறிருக்க கிறிஸ்தவர்கள் செய்வது என்ன?


24.பாவ மன்னிப்பு

அவர்கள் பல கதைகளை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அத்தகைய கதைகளில், உலகிலுள்ள மக்கள் புரியும் பாவச் செயல்களை ஈஸா நபி மன்னிக்கக் கூடியவராக இருக்கிறார் என்பதும் ஒன்றாகும். பாவச் செயல்களின் விளைவுகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உலகம் அறிந்த உண்மை. காரணம் பாவச் செயல்களை மன்னித்து விட்டால் அதனால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை யார் சரி செய்வது? எனவே அறியாமையில் செய்யும் பாவச் செயல்களுக்கு மட்டும் மன்னிப்பு உண்டு என்கிறது திருக்குர்ஆன்.

اِنَّمَا التَّوۡبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ السُّوۡٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوۡبُوۡنَ مِنۡ قَرِيۡبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوۡبُ اللّٰهُ عَلَيۡهِمۡ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيۡمًا حَكِيۡمًا‏ ﴿۱۷﴾

4:17.எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹவிடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.

விளக்கம்:
தீய செயல் எதுவாக இருந்தாலும், அறியாமையில் செய்திருந்தால், அதனை உடனே விட்டுவிட்டு திருந்திக் கொள்ள வேண்டும். அப்படி மன்னிப்பு கோரி திருந்தி வாழ்பவர்களுக்கே அல்லாஹ்வின் சட்டத்தில் மன்னிப்பு உண்டு. ஏனெனில் இந்தச் சட்ட திட்டங்கள் யாவும் அல்லாஹ்வின் கல்வி ஞான அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

  وَلَيۡسَتِ التَّوۡبَةُ لِلَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ السَّيِّاٰتِ‌ ۚ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الۡمَوۡتُ قَالَ اِنِّىۡ تُبۡتُ الۡـــٰٔنَ وَلَا الَّذِيۡنَ يَمُوۡتُوۡنَ وَهُمۡ كُفَّارٌ ‌ؕ اُولٰٓٮِٕكَ اَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا اَ لِيۡمًا‏ ﴿۱۸﴾

4:18. இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்""என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

விளக்கம்:
இதற்கு மாறாக ஒருவர் காலமெல்லாம் தீய செயல்களில் தம்மை ஈடுபடுத்தி விட்டு, தனக்கு மரணம் நெருங்கும் தருவாயில், பாவமன்னிப்புக் கோரினால் அப்படிப்பட்டவர்க்கு மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாது. மேலும் யார் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாக தொடர்ந்து செயல்பட்டு மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு கிடையாது. அத்தகையோருக்குத் துயரமிக்க வேதனைகள் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதான் பாவ மன்னிப்பைப் பற்றி வேதங்களின் நிலைப்பாடாகும். இதை விட்டுவிட்டு காலமெல்லாம் பாவங்களை செய்து கொண்டிருந்தாலும் ஈஸா நபியிடம் சென்று மன்னிப்பை தேடிக்கொண்டால் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து விடும் என்று சொல்வது மிகப் பெரிய ஆபத்தான விஷயமாகும். காரணம் மன்னிப்பு அளிக்கும் ஒருவர் நமக்குச் சாதகமாக இருப்பதால், பாவச் செயலை செய்வதற்கு தைரியம் வந்துவிடும். இதனால் சமுதாய சீர்கேடுகளுக்கு அவை காரணிகளாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி அவர்கள் சொல்லி வரும் கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்று. அதாவது நரகத்தில் சில காலம் தான் இருக்க வேண்டிவரும். அதன்பின் நம்மை சுவனத்திற்கு அனுப்பி விடுவார் என்கிறார்கள். ஆனால் திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.

 ( ذٰ لِكَ بِاَنَّهُمۡ قَالُوۡا لَنۡ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعۡدُوۡدٰتٍ‌وَغَرَّهُمۡ فِىۡ دِيۡنِهِمۡ مَّا كَانُوۡا يَفۡتَرُوۡنَ‏ ﴿۲۴

3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர(நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பது தான், (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றிவிடப் போகிறது.

விளக்கம்:
அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? “நாங்கள் நரகத்தில் தள்ளப்பட்டாலும், சில காலம்தான் இருக்க நேரிடும். அதன்பின் நாம் சுவர்க்கத்திற்குச் சென்றுவிடுவோம்” என்று மக்களிடம் சொல்லி வருகிறார்கள். இப்படி பொய்க் கற்பனைகளை மக்களிடம் சொல்லி வருவதால், இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட தைரியம் வந்துவிட்டது. ஆக மார்க்க விஷயத்தில் அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வருவதெல்லாம் இறுதியில் ஏமாற்றத்தையே தரும்.

ஆனால் இப்போதுள்ள கிறிஸ்தவர்கள், மனித பாவங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தமாக்கவே ஈஸா நபி சிலுவையில் ஏறி இரத்தம் சிந்தியதாகத் திடமாக நம்புகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் ஈஸா நபி மீது ஈமான் கொள்ளாமல் யாரும் இறக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

( وَاِنۡ مِّنۡ اَهۡلِ الۡكِتٰبِ اِلَّا لَيُـؤۡمِنَنَّ بِهٖ قَبۡلَ مَوۡتِهٖ‌ ۚ وَيَوۡمَ الۡقِيٰمَةِ يَكُوۡنُ عَلَيۡهِمۡ شَهِيۡدًا‌ ۚ‏ ﴿۱۵۹

4:159.வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா)மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை, ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.

விளக்கம் :
அந்த வேதமுடையவர்களைக் கவனியுங்கள். குறைந்த பட்சம் மரணம் சம்பவிக்கும் முன்பாவது ஈஸா (கர்த்தர்) தம்மை இரட்சிப்பார் என்று ஒவ்வொரு கிறஸ்தவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக் கட்டத்தில்தான் இவர்களின் கூற்று வெட்ட வெளிச்சமாகி விடும். அதாவது அவர்கள் எதிர் பார்ப்பது போன்று ஈஸா நபி இரட்சிக்க மாட்டார். (பார்க்க: 5-116 &117)


25.ஈஸா நபி மீண்டும் உலகிற்கு வருவாரா?

மேலும் ஈஸா நபி அவர்களைப் பற்றி பேசும் போது, அவர் மீண்டும் உலகிற்கு வருவார் என்ற கருத்தினை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். உண்மை விஷயத்தை நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இறைத் தூதர்கள் பலர் இஸ்ரவேலர் களிடையே வந்த வண்ணம் இருந்தார்கள். அது போலவே அவர்களிடையே இறுதியாக தூதர் ஒருவர் வருவார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அதன்படி ஈஸா நபி இறுதியாக வந்தார்.

ஆனால் நபியின் வருகையை எதிர்ப்பார்த்திருந்த இஸ்ரவேலர்களுக்கு, ஈஸா நபியின் போதனைகள் பிடிக்காததால், அவரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தனர். அவர்கள் எதிர்ப் பார்த்த நபி இவர் இல்லை என்றும், வேறொருவர் வருவார் என்றும் சொல்லிக் கொண்டு, வேறு ஒரு நபியின் வருகையை எதிர்ப்பார்த்துக் கிடந்தனர். காலப் போக்கில் இதே நிலை கிறிஸ்தவர்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. இன்றைய காலக் கட்டம் வரையில் அவர்கள் ஈஸா நபியின் வருகையை எதிர்ப்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

ஆனால் ஈஸா நபி அவர்கள் அறிவித்தபடி முஹம்மது நபி (ஸல்) வந்தார். அவர் உலகார்க்கு வேத உண்மைகளை விளக்கிக் காட்டி, அதன்படி சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிச் சென்றார். அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செயல்படும்படி மூஃமின்களுக்கு அறிவுறுத்திச் செனறார். (பார்க்க 3:144) ஆனால் துரதிஷ்டவசமாக கிறிஸ்தவர்களைப் போல, முஸ்லிம்களும் அவருடைய வருகையை எதிர்ப்பார்த்து நிற்கின்றனர். இதற்கு ஏற்ற வகையில் கீழ்கண்ட திருக்குர்ஆன் வாசகத்தையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

(وَاِنَّهٗ لَعِلۡمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَاتَّبِعُوۡنِ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسۡتَقِيۡمٌ‏ ﴿۶۱

43:61. நிச்சயமாக ஈஸா நபி இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார். ஆகவே இதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகங்கொள்ள வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரானப் பாதையாகும்.

விளக்கம்: இவ்வாசகத்திலிருந்து ஈஸா நபி மீண்டும் வரப்போவதாகப் பொருள் கொள்கின்றனர். லஇல்முன் லிஸ்ஸாஅத் لَعِلۡمٌ لِّلسَّاعَةِ என்று அரபி மொழியில் சொல்லப்பட்டுள்ளது. “ ஸாஅத்” என்றால் தருணம் அல்லது காலக் கட்டம் என்று பொருள்படும். அதாவது முஹம்மது நபி (ஸல்) மூலம் உலகில் மீண்டும் எழுச்சிமிகு காலம் வரும் என்ற உண்மை ஈஸா நபிக்கும் தெரிந்து இருந்தது. அவரே அதற்குரிய சாட்சியாகவும் இருக்கிறார். இந்த விஷயத்தை அவர் தம் சமூகத்தாருக்கு அறிவித்தும் இருக்கிறார்.

 وَاِذۡ قَالَ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ يٰبَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ اِنِّىۡ رَسُوۡلُ اللّٰهِ اِلَيۡكُمۡ مُّصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَىَّ مِنَ التَّوۡرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوۡلٍ يَّاۡتِىۡ مِنۡۢ بَعۡدِى اسۡمُهٗۤ اَحۡمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمۡ بِالۡبَيِّنٰتِ قَالُوۡا هٰذَا سِحۡرٌ مُّبِيۡنٌ‏ ﴿۶﴾ 

61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ""இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹ்மது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்"" என்று கூறிய வேளையில் . . . .

விளக்கம்:
மர்யமின் குமாரர் ஈஸா நபியும் தம் சமூகத்தாராகிய இஸ்ரவேலர்களிடம், “நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதன் ஆவேன். உங்களிடமுள்ள இறைவேதமாகிய தவ்ராத்தை நடைமுறைப்படுத்திக் காட்டவே வந்துள்ளேன். அதுமட்டுமின்றி எனக்குப் பின்பும் ‘அஹ்மது’ என்னும் பெயருடைய இறைத்தூதர் வருவார் என்ற நன்மாறாயமும் கூறவே வந்துள்ளேன்” என்று கூறினார்.

எனவே 43:61 வாசகத்தின் பொருள் இவ்வாறு வரும்:
முஹம்மது நபி(ஸல்) மூலம் இத்தகைய எழுச்சி மிகு காலம் மீண்டும் வரும் என்ற ஞானம் ஈஸா நபிக்கு இருந்தது. நபியே! நீர் மக்களிடம், “அவர் முன்னறிவிப்பு செய்தபடி நான் இறுதி தூதனாக உங்களிடம் வந்தள்ளேன். (பார்க்க 33:40) இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். எனவே நான் காட்டும் வழியிலேயே செயல்படுங்கள். அதுவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு நேரானப் பாதையை காட்டும்” என்று நபியே! அறிவித்துவிடுங்கள்.

இவ்வாசகத்தில் முஹம்மது நபி, “என்னையே பின்பற்றுங்கள்” என்று கூறுகிறார்.

ஒருவேளை ஈஸா நபி மீண்டும் வருவதாக இருந்தால் அவரையே பின்பற்றுங்கள் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

எனவே திருக்குர்ஆனில் அவர் மீண்டும் உலகிற்கு வருவார் என்ற செய்தி எங்கும் இல்லை. மாறாக அவர் செய்த போதனைகளைப் பற்றி கியமா நாளில் விசாரணை நடக்கும் போது, அவர் சாட்சிக்காக அழைக்கப்படுவார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

 وَاِذۡ قَالَ اللّٰهُ يٰعِيۡسَى ابۡنَ مَرۡيَمَ ءَاَنۡتَ قُلۡتَ لِلنَّاسِ اتَّخِذُوۡنِىۡ وَاُمِّىَ اِلٰهَيۡنِ مِنۡ دُوۡنِ اللّٰهِ‌ؕ قَالَ سُبۡحٰنَكَ مَا يَكُوۡنُ لِىۡۤ اَنۡ اَقُوۡلَ مَا لَـيۡسَ لِىۡ بِحَقٍّ‌ؕؔ اِنۡ كُنۡتُ قُلۡتُهٗ فَقَدۡ عَلِمۡتَهٗ‌ؕ تَعۡلَمُ مَا فِىۡ نَفۡسِىۡ وَلَاۤ اَعۡلَمُ مَا فِىۡ نَفۡسِكَ‌ؕ اِنَّكَ اَنۡتَ عَلَّامُ الۡغُيُوۡبِ‏ ﴿۱۱۶﴾

5:116. இன்னும், ""மர்யமுடைய மகன் ஈஸாவே, அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?"" என்று அல்லாஹ் கேட்கும்போது போது, அவர், “நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை, அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய், என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறியமாட்டேன், நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்குஅறிபவன்"" என்று அவர் கூறுவார்.

விளக்கம்:
“மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வை விட்டுவிட்டு உன்னையும் உன் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ள மக்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கியாம நாளில் கேட்கும்போது, அவர், “நீ மனித கற்பனைக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவன். எனக்குச் சிறிதும் உரிமை இல்லாத ஒன்றை நான் மக்களிடம் ஒருபோதும் சொல்வதற்கில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீ நிச்சயமாக அறிந்திருப்பாய். ஏனெனில் என் மனதில் தோன்றும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் வல்லமையுடைவன் நீ. அதே சமயத்தில் உன் செயல்திட்டத்தில் உள்ளவற்றை எனக்கு நீ அறிவித்தால் அன்றி நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் பதில் கூறுவார்.

  مَا قُلۡتُ لَهُمۡ اِلَّا مَاۤ اَمَرۡتَنِىۡ بِهٖۤ اَنِ اعۡبُدُوا اللّٰهَ رَبِّىۡ وَرَبَّكُمۡ‌ۚ وَكُنۡتُ عَلَيۡهِمۡ شَهِيۡدًا مَّا دُمۡتُ فِيۡهِمۡ‌ۚ فَلَمَّا تَوَفَّيۡتَنِىۡ كُنۡتَ اَنۡتَ الرَّقِيۡبَ عَلَيۡهِمۡ‌ؕ وَاَنۡتَ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ‏ ﴿۱۱۷﴾ 

5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்' என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை, மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்,அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும்சாட்சியாக இருக்கிறாய்"" (என்றும்),

விளக்கம்:
மேலும் அவர், “எனக்கு நீ கட்டளையிட்டபடி மக்களிடம் என்னையும் உங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே கட்டுப்பட்டு வாழுங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. மேலும் நான் அவர்களுடன் வாழ்ந்த காலமெல்லாம் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதைக் கண்காணித்து வந்தேன். என் உலக வாழ்வு முடிந்து மரணித்த பின், அவர்கள் என்ன செய்து வந்தார்கள் என்பதை நீயே கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றாய்” என்றும் அல்லாஹ்விடம் கூறுவார்.

மேற்சொன்ன விசாரணை ஒவ்வொரு நபிமார்கள் விஷயத்திலும் நடக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 4:41) ஆக கியமா நாளில் இந்த விசாணை நடக்கும் என்றால், ஈஸா நபி மீண்டும் உலகிற்கு வருவதாகச் சொல்லும் விஷயம் பொய்யென ஆகிவிடுகிறது. ஒரு வேளை அவர் வந்தாலும், அவருடன் அல்லாஹ் நேரடியாக எப்படி பேசுவான்? அப்படியே பேசினாலும் மேற்சொன்ன விஷயத்தை கேட்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் அவர் இறந்த பின் உலகில் நடந்த விஷயங்களுக்கு நீயே சாட்சி என்று அல்லாஹ்விடம் கூறிவிடுவார் என்றால், இன்றைய காலக் கட்டத்தில் உலகில் நடக்கின்ற விஷயங்களுக்கு அவர் பொறுப்பாளி ஆகமாட்டார் என்றுதானே பொருள்! எனவே அவர் மீண்டும் உலகிற்கு வருவார் என்ற பேச்சிற்கே இடமிருப்பதில்லையே. சிந்திப்பீர்!


26.ஈஸா நபியின் வருகையை எதிர்பார்ப்பதன் நோக்கம் என்ன?

உண்மை இவ்வாறு இருக்கும் போது, முஸ்லிம்களும் அவருடைய வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் இதோ: தற்போதுள்ள மார்க்க அறிஞர்களிடம், இக்காலத்தில் உள்ள சமுதாய சீர்கேடுகளுக்கு என்ன காரணம் என்று கேட்டுப் பாருங்கள். “எல்லாம் அல்லாஹ்வின் செயல்” என்பார்கள். அவனுடைய நாட்டப்படியே எல்லாமே நடக்கின்றன என்பார்கள். இத்தகைய சீர்கேடுகளை சரிசெய்ய என்ன செய்வது என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடனே அவர்கள் இமாம் மெஹ்தி வருவார். அதன் பின் ஈஸா அலை வஸ்ஸல்லிம் அவர்கள் வருவார். இந்த சீர்கேடுகளை அவர்தான் சரி செய்வார் என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, சமுதாய நலனில் அக்கரை கொண்டுள்ளவர்களுள் பொங்கி எழும் உற்சாகத்தை பொசுக்கி விடுவார்கள். சமுதாய சீர்கேடுகளை சரி செய்யும் பொறுப்புகளை அல்லாஹ் இவர்களிடம் ஒப்படைத்து இருப்பதை இவர்கள் யாருக்கும் எடுத்துரைப்பதில்லை. அந்தப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கவே இவ்வாறு அவர்கள் கூறி வருகிறார்கள். பார்க்க 3ஆவது அத்தியாயத்தின் இந்த வாசகத்தை:

  وَلۡتَكُنۡ مِّنۡكُمۡ اُمَّةٌ يَّدۡعُوۡنَ اِلَى الۡخَيۡرِ وَيَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَيَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ‏ ﴿۱۰۴﴾

3:104. மேலும், (மக்களை) நன்மையிலன் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

விளக்கம்:
உலக மக்கள் அனைவரையும் இறைவழிகாட்டுதலின் பக்கம் அழைப்புவிடும் ஒரு கூட்டத்தார் உங்களிடையே இருந்து வருவது மிகமிக முக்கியம். திருக்குர்ஆன் எவற்றை நன்மையான செயல் என்று அறிவுறுத்துகிறதோ அதன்படிச் செயலாற்ற வைப்பதும், எவற்றைத் தடை விதிக்கிறதோ அவற்றிலிருந்து பொது மக்களை விலகி இருக்கச் செய்வதும் அவர்களுடைய பணிகளாகும். இத்தகைய ஏற்பாடுகளைச் செய்யும் சமூகத்தவர்களே வாழ்வின் உயர் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவார்கள். (23:1)

இவ்வாறாக உலக மக்களை சீர்கேடுகளிலிருந்து காப்பாற்றும் கூட்டத்தார் மூஃமின்களிடையே இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இத்தகையவர்கள் தாம் மெஹ்திக்கள் ஆவர். அவர்களை நாம் ஆசிரியர்கள் என்று தமிழில் சொல்கிறோம். அதாவது வருங்கால தலைமுறையினருக்கு அல்லாஹ் படைத்துள்ள உலக படைப்புகளின் உண்மை நிலவரங்களை புரிய வைப்பது. மற்றும் சமுதாய அழிவிற்குக் காரணிகளாக இருக்கும் தீய செயல்களைத் தடுப்பது இவர்களுடைய பொறுப்புகளாகும். ஆனால் இந்த பொறுப்புகளை சுமக்க விருப்பமில்லாமல், இமாம் மெஹ்தியின் வருகையையும், ஈஸா நபியின் வருகையையும் எதிர்ப்பார்த்து இருப்பதாகச் சொல்வார்கள். உலகை விட்டுப் பிரிந்து சென்றவரை மீண்டும் ஒரு முறை அனுப்பும் செயல்திட்டம் அல்லாஹ்விடம் ஒருபோதும் இல்லை. இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்!

(ذٰ لِكَ نَـتۡلُوۡهُ عَلَيۡكَ مِنَ الۡاٰيٰتِ وَ الذِّكۡرِ الۡحَكِيۡمِ‏ ﴿۵۸

3:58. இவையே ஈஸா நபியின் உண்மை வரலாறும் ஞானமிக்க அறிவுரைகளும் ஆகும். இவை வஹீ மூலமாக நபிக்கு இறக்கி அருளப்படுகின்றன.

( وَمَا جَعَلۡنَا لِبَشَرٍ مِّنۡ قَبۡلِكَ الۡخُـلۡدَ‌ ؕ اَفَا۟ٮِٕن مِّتَّ فَهُمُ الۡخٰـلِدُوۡنَ‏ ﴿۳۴

21:34. நபியே! உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் இந்தப் பூமியில் நிரந்தர வாழ்வு கிடைத்ததில்லை. இவ்விஷயத்தில் யாரும் விதிவிலக்கு அல்ல. நபியே! நீரும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டும். இந்த உண்மையை மறுப்பவர்களும் மரணித்தே ஆக வேண்டும்.

كُلُّ نَفۡسٍ ذَآٮِٕقَةُ الۡمَوۡتِ‌ؕ 

21:35 ஒவ்வொரு உயிரும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும்.

விளக்கம்:
மேற்சொன்ன வாசகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மரணித்தே இருக்கிறார்கள் என்றும் யாருக்கும் நித்திய வாழ்வு கிடைக்கவில்லை என்றும் அல்லாஹ்வே சொன்ன பின் ஈஸா நபி மட்டும் உயிருடன் இருப்பதாகச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

ஆக ஈஸா நபி மற்ற ஏனைய நபிமார்களைப் போன்றே (5:75) இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, இறை வழிகாட்டுதலைப் பெற்று, மக்களுக்கு அவற்றைப் போதித்து, தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கி காட்டிய சீர்திருத்தவாதி ஆவார் (61:14). அதன்பின், அவர் இயற்கை மரணம் எய்தினார். (5:117). நபிமார்கள் அனைவரும் மனிதர்களே அன்றி வேறில்லை. (21:7) அதே போன்றுதான் இவரும். ஆனால் கிறிஸ்தவர்களைப் பாருங்கள். அவரை தேவகுமாரன் என்றும், (2:116) அவர் தந்தையின்றி பிறந்தவர் என்றும், அவர் ஒரு மலக்கு என்றும் (17:95) கூறி வருகிறார்கள். மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்கும் இரட்சகர் என்றும் கூறுகிறார்கள். அவையெல்லாம் கற்பனைக் கதைகளே. இவர்களின் இத்தகைய பேச்சிற்கு ஈஸா நபி பொறுப்பு ஏற்கமாட்டார். (5:117)


27.ஈஸா நபியின் பிறப்பை பற்றிய தர்க்கங்கள் ஏன்?

கிறிஸ்தவர்களை விடுங்கள். அவர்கள் ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் என்கிறார்கள். (பார்க்க 6:30). அல்லது தேவைப்படும் போது, அவரையே அல்லாஹ் என்கிறார்கள். (பார்க்க 5:17). அகிலங்களையும் உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வின் வல்லமை எல்லையற்றது. அல்லாஹ்வின் அளவற்ற வல்லமையையும், அவன் காட்டும் பாதையில் அனைவரையும் வழி நடத்திச் சென்று உலகில் மாபெரும் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்திக் காட்டியவர்தான் ஜோஸஃப் மரியா தம்பதியருக்குப் பிறந்த ஈஸா நபி ஆவார். அரையே அல்லாஹ் என்று சொல்வதோ அல்லது அல்லாஹ்வின் மகன் என்று சொல்வதோ எப்படி சரியாகும்? ஆனால் முஸ்லிம்களிடையே இத்தகைய பேச்சு இருப்பதில்லை. மாறாக அவர்களுடைய தர்க்கம் வேறு விதமாக உள்ளது.

ஈஸா நபியின் பிறப்பு சாதாரணமாக இருந்தால், அவருடைய பிறப்பைப் பற்றி திருக்குர்ஆன் (3:42-49 வரையில்) விவரமாக ஏன் எடுத்துக் கூற வேண்டும்? மேலும் மர்யம் குழந்தையின் செய்தியைக் கொண்டு வந்தவரிடம், “தன்னை எந்த ஆடவரும் தொடாதிருக்க எனக்கு எப்படி ஒரு மகன் பிறப்பான்?” என்று கூறும்போது, அதற்கு அவர், “அவ்வாறே பிறக்கும் என்றும், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான். அது உடனே ஆகிவிடுகிறது” என்று பதிலளிப்பது போல் ஏன் குர்ஆனில் சொல்லப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள்.

மர்யம் ஆசிரமத்தில் வளர்ந்த துறவிப் பெண்ணாக இருந்ததால், ஒரு குழந்தையின் பிறப்பைப் பற்றிய செய்தியைக் கேட்டதும் வியந்து இவ்வாறு கூறினார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இங்கு “அவ்வாறே பிறக்கும்” என்று சொல்லப் பட்டதை, ஆண் யாரும் தொடாமலே பிறக்கும் என்று விளக்கமளித்து விடுகிறார்கள். இதனால் அவருக்குத் தந்தை இல்லை என்றும் கூறிவிடுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஆணோடு கூடினால்தான் குழந்தைப் பிறக்கும் என்ற உண்மை மர்யமுக்கும் தெரிந்திருந்தது. எனவே “அவ்வாறே” பிறக்கும் என்றால், ஆண் தொட்டுத்தான் பிறக்கும் என்பதாக அந்த செய்தியைக் கொண்டு வந்தவருடைய பதில் அமைகிறது. அதாவது அவர் திருமணம் செய்து இருந்த, ஜோசப்பின் துணையோடுதான் குழந்தை பிறக்கும் என்று பதில் சொல்லப்படுகிறது.

அதாவது மர்யமுக்குக் குழந்தை பிறக்கும் என்ற செய்தி வரும் வரையில் அவரை யாரும் தீண்டியதில்லை. அதன்பின் அவர் முறைப்படிதான் குழந்தை பெற்றெடுத்தார்.


28.அல்லாஹ் “தான் நாடியதை” படைப்பவன்?

இந்த விஷயத்தைப் பற்றியும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் “நாட்டம்” என்றால் அன்றாடம் ஒவ்வொருடைய விஷயத்திலும் அல்லாஹ் நாடி முடிவெடுப்பது என்பதல்ல அதன் பொருள். அல்லாஹ்வின் நாட்டம் என்பது அல்லாஹ் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையான சட்டதிட்டங்களாகும். அதன்படியே அக்குழந்தைப் பிறக்கும் என்பதே அதன் பொருளாகும். சூரத்துர் ரூம் என்ற அத்தியாயத்தில் இவ்வாறு வருகிறது.

فَاَقِمۡ وَجۡهَكَ لِلدِّيۡنِ حَنِيۡفًا ‌ؕ فِطۡرَتَ اللّٰهِ الَّتِىۡ فَطَرَ النَّاسَ عَلَيۡهَا ‌ؕ لَا تَبۡدِيۡلَ لِخَـلۡقِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ الدِّيۡنُ الۡقَيِّمُ ۙ وَلٰـكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يَعۡلَمُوۡنَ ۙ ‏ ﴿۳۰﴾ 

30:30. ஆகவே, நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான)இயற்கை மார்க்கமாகும், அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை, அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

விளக்கம்: இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் தவறான போக்கை விட்டுவிட்டு, அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக்காக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் பக்கமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வாருங்கள். அல்லாஹ்வின் நிலையான படைப்புச் சட்டத்தின்படி உங்கள் அனைவரையும் எவ்வாறு படைத்துள்ளானோ, (பார்க்க 23:12-14 & 32:8) அவ்வாறே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான சட்ட திட்டங்களையும் அவன் நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்வின் படைப்புச் சட்டத்தில் நீங்கள் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். அதுபோல அல்லாஹ்வின் மார்க்கத்திலும் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். இதுவே அல்லாஹ்வின் நிலைமாறா நிரந்தர மார்க்கமாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மைகளை அறிவதில்லை.

கவனித்தீர்களா? அல்லாஹ்வின் படைப்புச் சட்டத்தில் ஒருபோதும் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர் என்று ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆணின் துணையின்றி குழந்தைப் பிறக்க வாய்ப்புள்ளதா என்று மனிதன் உலகம் முழுவதும் அலசி ஆறாய்ந்து வருகிறான். ஒருபோதும் முடியாது என்பதே உலகம் அறிந்த உண்மையாகும். ஆனால் எப்படியாவது ஆணின் துணையின்றி குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று இக்கால மனிதன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறான்.

அதை ஆதாரமாக வைத்து ஆணோடு உடலுறவு கொள்ளாமலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை என்னவென்றால் ஆணின் விந்தையோ, அல்லது பெண்ணின் இரத்தத்தில் உள்ள உயிரணுவையோ எடுத்து பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து, சோதனை குழாயில் செலுத்தி அதற்குரிய வெப்பத்தில் வைத்து வளர விடுவார்கள். அந்த சினை முட்டையில் உயிரணு ஐக்கியமாகி 40 நாட்கள் கழித்து, அதை எடுத்து பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவார்கள். அதன்பின் அது வளர்ந்து குழந்தை பிறக்கும்.

ஆணிண் விந்தை வைத்து குழந்தை பிறந்துள்ளதாக கேள்விப் படுகிறோம். ஆனால் பெண்ணின் இரத்ததில் உள்ள உயிரணுவை வைத்து, குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். மற்ற உயிர் பிராணிகளில் சோதனை அளவில் வெற்றி பெற்றதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எது எப்படி இருப்பினும் அந்தக் குழந்தை வளர சினை முட்டையை பெண்ணின் கருப்பையில்தான் கொண்டுவந்து வைக்க வேணடியுள்ளது. இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த உபாயமும் இவ்வுலகில் கிடையாது. எனவே மர்யமிற்கு செய்தி கொண்டு வந்தவர் குழந்தைப் பிறக்கும் என்ற செய்தியைத் தான் சமர்ப்பித்துச் சென்றாரே அன்றி, மேற்சொன்ன எந்த ஏற்பாட்டையும் அவர் செய்யவே இல்லை. எனவே ஆணின் துணையின்றி மர்யம் குழந்தை பெற்றெடுத்தார் என்ற பேச்சு பொய்யானதே ஆகும்.


29.ஈஸா நபியின் உதாரணம் ஆதம் (அலை) போன்றதே

அனால் இஸ்லாமிய மார்க அறிஞர்களில் சிலர், திருக்குர்ஆனின் வாசகத்தை வைத்து ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார் என்று நிரூபிக்க முற்படுகின்றனர். இதற்காக அவர்கள் எடுத்துக் கூறும் வாசம் 3ஆவது அத்தியாயத்தில் வருகிறது.

 ( اِنَّ مَثَلَ عِيۡسٰى عِنۡدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنۡ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنۡ فَيَكُوۡنُ‏ ﴿۵۹

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் குன் (ஆகுக) எனக் கூறினான். அவர்கள மனிதர் ஆகிவிட்டார்.

விளக்கம்:
இங்கு ‘ஆதம’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. உலமாக்களின் கருத்துப்படி, “ஆதம்” என்பவர் உலகில் பிறந்த முதல் மனிதர் ஆவார். அவர் தாய் தந்தை ஆகிய இருவருமே இல்லாமல் பிறந்தவர் ஆவார். ஆனால் ஈஸா நபியின் பிறப்பு அவ்வாறு இல்லை. அவர் மர்யம் மூலமாகத் தானே பிறந்தார். அவருக்கு தாய் இருந்தாரே. எனவே ஆதமின் உதாரணத்தை ஆதம் (அலை) யின் உதாரணம் என்று கூறி ஈஸா நபிக்கு ஒப்பிடுவது சரியாகாது. “ஆதம்” என்ற வார்த்தைக்கு மனித இனம் அல்லது “மனிதனின் கூட்டு வாழ்க்கை முறை” “நாகரீக மனிதன்” என்று பொருள் வரும். ஈஸா நபியை மண்ணிலிருந்து படைத்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மனிதர்கள் அனைவரையும் மண்ணிலிருந்து தான் படைத்திருப்பதாக திருக்குர்ஆன் வாசகம் கூறுகிறது.

மேலும் திருக்குர்ஆன் மொழிப் பெயர்ப்பைப் படித்துப் பாருங்கள். ஈஸா நபிக்காக தனிப்பட்ட முறையில் ஆகுக என்று அல்லாஹ் சொன்னதாகவும் அவர் மனிதர் ஆகிவிட்டதாகவும் மொழி பெயர்த்துள்ளார்கள். அவர் மர்யமின் மகனாகத் தான் பிறந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். மேலும் கீழ் கண்ட வாசகத்தைப் படித்துப் பாருங்கள்.

 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنۡ كُنۡـتُمۡ فِىۡ رَيۡبٍ مِّنَ الۡبَـعۡثِ فَاِنَّـا خَلَقۡنٰكُمۡ مِّنۡ تُرَابٍ

22:55 உலக மக்களே! நீங்கள் மீண்டும் எழுப்படுவது பற்றி சந்தேகம் கொண்டால், உங்கள் அனைவரையும் மண்ணின் சத்திலிருந்து படைத்துள்ளதைப் பற்றி கவனியுங்கள். அதன் பின் . . .

எனவே ஈஸா நபியை மட்டும் தனிப்பட்ட முறையில் மண்ணிலிருந்து படைத்ததாகப் பொருள் கொள்வது முறையாகாது. இன்றைக்கும் ஆணின் விந்து அவன் உட்கொள்ளும் உணவிலிருந்து தான் உருவாகிறது. அதே போன்று பெண்ணும் வளர்ந்து வயதுக்கு வரும் போது, அவளது கர்ப்பப் பையிம் இரு பக்கங்களிலும் சினை முட்டை உருவாகிறது. இவை யாவும் அவர்கள் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் உருவாகின்றன. அந்த உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. எனவே மனிதனை இன்றைக்கும் அல்லாஹ் மண்ணிலிருந்து தான் படைக்கிறான். எனவே 3ஆவது அத்தியாயத்தில் 59ஆவது வாசகத்திற்கு இவ்வாறு பொருள் வரும்:

அல்லாஹ்வைப் பொறுத்தவரை ஈஸா நபியின் பிறப்பு, வளர்ப்பு எல்லாம் மற்ற மனிதர்களைப் போன்றதே ஆகும். அவன் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின்படியே அவருடைய பிறப்பின் ஆரம்பமும் மற்ற மனிதர்களைப் போலவே (பார்க்க 22:5) மண்ணின் சத்திலிருந்து (விந்து) உருவாகி, தாயின் வயிற்றில் கருவுற்று (19:22) பிறந்தவரே ஆவார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அத்திட்டம் நிறைவேறியது. (பார்க்க 3:47)


30.மர்யமிடம் அல்லாஹ் தன் ரூஹ்வை போட்டான்!

يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لَا تَغۡلُوۡا فِىۡ دِيۡـنِكُمۡوَلَا تَقُوۡلُوۡا عَلَى اللّٰهِ اِلَّا الۡحَـقَّ‌ ؕ اِنَّمَا الۡمَسِيۡحُ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ رَسُوۡلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لۡقٰٮهَاۤ اِلٰى مَرۡيَمَ وَرُوۡحٌ مِّنۡهُ‌ فَاٰمِنُوۡا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ‌ۚ 

4:171 வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான். இன்னும் அவர் அல்லாஹ்வின் வாக்காக இருக்கிறார். அந்த ரூஹ்வை மர்யமின் பால் போட்டான்.

இங்கு ஈஸா وَكَلِمَتُهٗ‌ கலிமதுஹுவாக இருந்ததாகவும் அந்த ரூஹ்வை மர்யமிடம் போட்டதாகவும் வருகிறது. “கலிமதுஹு“ என்றால் பிரபஞ்சத்தில் அல்லாஹ் நிலை நிறுத்தியுள்ள நிலையான சட்டதிட்டங்கள் என்பதாகும். அவற்றை ஈஸா நபி, மக்களிடம் எடுத்துரைப்பவராக இருந்தார் என்பதாகும். ரூஹ்வை போட்டதாகச் சொல்வது ஈஸா நபியின் வருகையைப் பற்றிய செய்தி மர்யமிடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகப் பொருள்படும். எனவே மேற்சொன்ன வாசகத்திற்கு இவ்வாறு பொருள் வரும்.

வேதமுடையவர்களே! நீங்கள் மார்க்க விஷயங்களில் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈஸா அல் மஸீஹ் ஓர் இறைத்தூதரே ஆவார். மேலும் இறைச் செயல்திட்டங்களுக்கு அவர் சான்றாக விளங்கியவர் ஆவார். இது விஷயமாக மர்யமிற்கு முன் கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி மக்களை வழிநடத்துவதே அவருடைய போதனைகளின் கருவூலமாக இருந்தது. . . . .


31.ஜக்கரிய்யா நபிக்கு பிறக்கும் குழந்தையின் நற்செய்தி

உண்மை விஷயம் என்னவெனறால் ஈஸா நபியின் தந்தையைப் பற்றி அக்கால அரபு நாட்டு மக்களுக்கு தெரிந்திருந்தது. எனவே அதைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. காரணம் எல்லா நபிமார்களின் தந்தையின் பெயரையும் திருக்குர்ஆனில் குறிப்பிடவில்லை. இதனால் அவர்கள் யாவரும் தந்தையின்றி பிறந்ததாகப் பொருள் கொள்ள முடியுமா? குழந்தையின் செய்தியை கேள்வியுற்ற மர்யம் ஆச்சிரியப்பட்டு கேட்டது போலவே, அதே கேள்வியை ஜக்கரிய்யா நபியும் கேட்கிறார்.

(قَالَ رَبِّ اَنّٰى يَكُوۡنُ لِىۡ غُلٰمٌ وَّقَدۡ بَلَغَنِىَ الۡكِبَرُ وَامۡرَاَتِىۡ عَاقِرٌ‌ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفۡعَلُ مَا يَشَآءُ‏ ﴿۴۰

3:40.“இறைவா! நான் முதுமையை அடைந்துவிட்டேன். மேலும் என் மனைவியும் மலடாக இருக்கின்றாள். எனவே எனக்கு எப்படி குழந்தைப் பிறக்கும்?" என வினவினார். அதற்கு, “அவ்வாறே பிறக்கும். அல்லாஹ் தான் நாடியதை செய்து முடிக்கிறான்” என்று அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது.

விளக்கம் :
கவனித்தீர்களா? மர்யம் (அலை) அவர்களுக்கு அளித்த அதே பதில் ஜக்கரிய்யா நபிக்கும் தரப்படுகிறது. அவருடைய மகன் எஹ்யா நபியின் பிறப்பைப் பற்றி உலகில் எந்த சர்ச்சையும் இருப்பதில்லை. ஜக்கரிய்யா நபி தன் மனைவியுடன் கூடாமலேயே எஹ்யா நபியை பெற்றெடுத்தார் என்று யாராவது சொல்கிறார்களா?. அப்படி யாரும் சொல்வதில்லையே.

ஆனால் ஈஸா நபியின் பிறப்பைப் பற்றி மட்டும் இத்தனை சர்ச்கைகள் ஏன்? காரணம் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை தேவகுமாரன் என்றோ அல்லது அவரையே கடவுள் என்றோ சொல்லிக் கொள்வதாலும், அவரைப் பற்றி ஏதாவது ஒரு தனிச் சிறப்பைச் சொல்லியாக வேண்டும் என்பதற்காகவும், அவர் தந்தையின்றி பிறந்தவர் என்ற புரளிகளை அவர்கள் பரப்பி விட்டார்கள். உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நடைபெற்று வந்ததால் அவர்கள் சொல்லி வருவதையே முஸ்லிம்களும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த கருத்தை முஹ்ம்மது நபி (ஸல்) ஆதரிப்பது போல் பல புத்தகங்களை வெளியிட்டார்கள்.

இதைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் தந்தையின்றி பிறக்க வைக்க அல்லாஹ்வால் முடியாதா என்று வாய் கூசாமல் கேட்டு விடுகிறார்கள். அல்லாஹ்வின் வல்லமைப் பற்றியோ அவனது நிலையான செயல் திட்டங்களைப் பற்றியோ ஞானம் இருப்பதில்லை. அப்படியே ஒரு குழந்தையை பெற்றெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் தாய் தந்தை ஆகிய இருவரும் இல்லாமலே பெற்றெடுக்க முடியுமே!


32.தாய் தந்தை ஆகிய இருவரும் இல்லாமலேயே ஈஸாவை அல்லாஹ் படைத்து இருக்கலாமே!

 ( لَوۡ اَرَادَ اللّٰهُ اَنۡ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصۡطَفٰى مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُ‌ ۙ سُبۡحٰنَهٗ‌ ؕ هُوَ اللّٰهُ الۡوَاحِدُ الۡقَهَّارُ‏ ﴿۴

39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கி ஆளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.

விளக்கம்:
இன்னும் சிலர் அல்லாஹ்வுக்கு ஒரு புதல்வரும் உண்டு என்று கூறி (பார்க்க 18:5) அல்லாஹ்வை மனித அளவிற்கு கொண்டுவந்து விட்டார்கள். அப்படியும் அல்லாஹ் ஒரு மகனை எடுத்துக் கொள்வதாக இருந்திருந்தால், அப்படியே படைத்திருக்க முடியுமே! அல்லாஹ்வின் வல்லமைகளோ அவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும். அல்லாஹ்வுக்கு நிகராக அனைத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை, அகிலத்தில் வேறு யாருக்கும் இல்லை. அவனுடைய வல்லமைக்கு நிகர் அவனே.

அதாவது ஈஸாவை நேரடியாகவே படைத்திருக்கலாமே! அதற்குப் பதிலாக ஏன் அவன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கருத்தரிக்கச் செய்து பிரசவ வலியால் துடிதுடிக்க வைத்து பிறக்கவைக்க வேண்டும்? (பார்க்க 19:22)? எனவே ஈஸா நபி அல்லாஹ்வின் புதல்வர் என்பதெல்லாம் கிறிஸ்தவர்களின் கற்பனைக் கதைகளே ஆகும்.

بَدِيۡعُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ؕ اَنّٰى يَكُوۡنُ لَهٗ وَلَدٌ وَّلَمۡ تَكُنۡ لَّهٗ صَاحِبَةٌ‌ ؕ وَخَلَقَ كُلَّ شَىۡءٍ‌ ۚ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيۡمٌ‏ ﴿۱۰۱﴾ 

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்.அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

விளக்கம்:
அல்லாஹ்வோ எந்தப் பொருளின் துணையுமின்றி வானங்களையும் பூமியையும் படைக்கும் வல்லமையுடையவன் ஆவான். உண்மை இவ்வாறு இருக்கும் போது, அவனுக்குப் பிள்ளைகள் உண்டு என்ற பேச்சு, கற்பனையில் வடித்த சிந்தனையே அன்றி வேறு ஒன்றுமில்லை. ஏனெனில் பிள்ளைப் பெறுவதற்கு மனைவியின் துணை அவசியமாகிறது. இப்படிப்பட்ட பேச்செல்லாம் கற்பனையில் உருவானவையே. எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றில் உள்ள ஒவ்வொன்றையும் அறியக்கூடியவன் தான் அல்லாஹ். அவனுக்கு உதவி புரிய ஒரு பிள்ளை தேவையா?

சிந்தனையாளர்களே! பெண்ணின் துணை இல்லாமல் பிள்ளையை பெற்றெடுக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. காரணம் அல்லாஹ்வால் முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. அல்லாஹ் சட்ட திட்டங்களை ஏற்படுத்திய பின், அவன் அதற்கு மாற்றமாக செயல்படுகிறானா என்பதுதான் கேள்வி. எனவேதான் அல்லாஹ் ஒரு பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்றாலும் இவ்வுலகில் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, பெண்ணின் துணையுடன் தான் பிள்ளை பெற்றெடுக்க முடியும் என்று அல்லாஹ்வே கூறி விட்டான். எனவே மரியம் (அலை) மட்டும் ஆணின் துணையின்றி பிள்ளையை எவ்வாறு பெற்றிருக்க முடியும்?


33.ஈஸா இப்னு மர்யமா

ஈஸா இப்னு மர்யமா – அதாவது “மர்யமின் குமாரர் ஈஸா” என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உலகில் நிலவிவந்த “துறவித்தனம்"" என்ற தவறான சித்தாந்தத்தை, வேரறுத்துக் காட்டிய புரட்சிகரமான பெண்மணி தான் மர்யம். “ஆசிரமம்” என்ற பெயரில் நடக்கும் முறைகேடுகளுக்குப் பலியாகாமல் தன் கற்பைக் பாதுகாதுக் கொண்டு, தன்னந் தனியாக எதிர்ப்பது சாதாரண விஷயமல்ல. ஆசிரமத்தைச் சார்ந்தவர்களால் சிறிது காலத்திற்கு மர்யம் அவச்சொல்லுக்கு ஆளானாலும், (பார்க்க 4:156) காலப்போக்கில் அவருடைய புரட்சிகர செயலும், அவர் தம் மகன் ஈஸாவை வளர்த்ததும் அவர் கற்றிருந்த தவ்ராத்தின் போதனைகளை ஈஸாவிற்கும் கற்றுத் தந்து பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் ஆணிவேராகத் திகழந்தார். ஆக அவர் உலக வரலாற்றில் தலைசிறந்த பெண்மணி என்ற முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றார் (66:12). எனவே ஈஸா “மர்யமின் குமாரர் ஈஸா” என்ற பெயரைப் பெற்றார்.

மேலும் ஈஸா நபியின் தந்தை யூசுஃப் காலமாகி விட்டதால், மர்யம் (அலை) அவர்கள் தம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். எனவேதான் ஈஸா நபியின் பெயரைக் குறிப்பிடும் போது மர்யமின் குமாரர் ஈஸா என்றுதான் குறிப்பிடுவார்கள். எனவே அதே பாணியை திருக்குர்ஆனும் கையாளுகிறது.

`

34.ஈஸா நபியின் பிறப்பு இறப்பைப் பற்றி இனி தர்க்கம் வேண்டாம்

ஆனால் ஈஸா நபியின் பிறப்பைப் பற்றி மட்டும் இத்தனை தர்க்கங்கள் ஏன்? ஏனெனில் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை முதன் முதலில் தேவன் மகன் அல்லது தேவகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதன்பின் காலப்போக்கில் அவரையே கடவுளாக ஆக்கிவிட்டார்கள். எனவேதான் திருக்குர்ஆன், நடந்த உண்மைகளை எடுத்துரைத்து சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார் என்பதால் யாருக்கும் எந்த உயர்வும் செல்வமும் குவிந்துவிடப் போவதுமில்லை. தந்தையுடன்தான் பிறந்தார் என்பதால், நம் வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதுமில்லை. மக்கள் யாவரும் மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்க வேண்டாம் என்பதால் இதை நாம் விவரமாக எழுதுகிறோம். திருக்குர்ஆன் மொழியில் இவ்வாறு கூறப்படுகிறது.

 ( اَلۡحَـقُّ مِنۡ رَّبِّكَ فَلَا تَكُنۡ مِّنَ الۡمُمۡتَرِيۡنَ‏ ﴿۶۰

3:60. இதுவே ஈஸா நபி விஷயமாக இறைவனிடமிருந்து வந்த உண்மை வரலாறாகும். அதுபற்றிய விவாதத்திற்கு இனி அவசியமில்லை.

  فَمَنۡ حَآجَّكَ فِيۡهِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ اللّٰهِ عَلَى الۡكٰذِبِيۡنَ‏ ﴿۶۱﴾

3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!"" என நீர் கூறும்.

விளக்கம்:
இந்த அளவிற்குத் தெளிவாக அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்த பின்பும், அவர்கள் இது விஷயமாக சச்சரவு செய்ய நாடினால், அவர்களிடம்,“இது குறித்து இனியும் நான் உங்களிடம் தர்க்கம் செய்யத் தயாராக இல்லை. எனவே நீங்கள் உங்களைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொள்ளுங்கள். நாங்களும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட ஆண்களையும் பெண்களையும் அழைத்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வழக்கப்படி உங்கள் விருப்பம் போல செயல்பட்டு வாருங்கள். நாமும் இறைச் செயல் திட்டங்களின்படி செயல்பட்டு வருகிறோம். இறுதியில் யார் வாழ்வின் சுபிட்சங்களை இழந்து தவிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்துவிடுங்கள்.

( اِنَّ هٰذَا لَهُوَ الۡقَصَصُ الۡحَـقُّ ‌‌ۚ وَمَا مِنۡ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏ ﴿۶۲

3:62 நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன், மிக்க ஞானமுடையோன்.

விளக்கம்:
இந்தச் சவாலை வெளிப்படையாகவே அறிவித்து விடுங்கள். ஏனெனில் பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் என்பதெல்லாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அந்த அதிகாரத்தில் பங்கு பெறுவோர் வேறு எவரும் இல்லை. எனவே வேறு எவரையும் அல்லாஹ்வுக்கு இணையாக வைத்துப் பேசுவதில் நியாயமில்லை. மேலும் இறைவனுடைய செயல்திட்டங்கள் யாவும் எல்லாவற்றையும் மிகைத்து நிற்கும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை ஆகும். இதில் மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை.


35.ஈஸா நபி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினாரா?

மூன்றாவது அத்தியாயத்தில் மர்யமிடம் அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி செய்தியைக் கொண்டுவந்தவர் எடுத்துரைக்கும் போது ஈஸா நபியிடம் இருக்கப் போகும் பேராற்றலை எடுத்துரைக்கிறார். இதை நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இந்த வாசகத்திற்கு நேரடி மொழி பெயர்ப்பு செய்து ஈஸா நபி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாகக் கூறுகிறார்கள். அதை தெளிவாக்கிடவே இதைப் பற்றியும் எழுதுகிறோம்.

اَنِّىۡۤ  اَخۡلُقُ لَـكُمۡ مِّنَ الطِّيۡنِ كَهَیْـــَٔةِ الطَّيۡرِ فَاَنۡفُخُ فِيۡهِ فَيَكُوۡنُ طَيۡرًاۢ بِاِذۡنِ اللّٰهِ‌‌ۚ

3:49 நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு பறவையாகி விடும்.

விளக்கம்:
இந்த வாசகத்தில் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தை உண்டாக்கி அதில் ஊதுவேன் எனப்படுகிறது. இங்கு கஹே அதித்தைரி كَهَیْـــَٔةِ الطَّيۡرِ என்று வருகிறது.அதாவது “பறவையைப் போல்” என்பது அதன் பொருளாகும்.

இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாமல் இஸ்ரவேலர்களின் ஆற்றல்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ளது. இறைவழிகாட்டுதலைக் கொண்டு அந்த ஆற்றல்களை வளர்த்து சுதந்திரப் பறவைகளைப் போல் ஆக்குவேன் என்பதே அதன் பொருளாகும். இன்றைக்கும் பள்ளிக்கூடத்தில் சரிவர படிக்காத மாணவர்களைப் பார்த்து, “மக்கு, உன் மண்டைக்குள் களிமண்ணா இருக்கு?” என்று ஆசரியர்கள் திட்டுவதைக் கவனிக்கிறோம். எனவே மனித ஆற்றல்கள் குன்றிவிட்டால் மூட நம்பிக்கையும் மடமையும் வளர்ந்து விடுகிறது. அதனால் அவர்களுடைய சிந்தனைகள் புதைந்து விடுகிறது.


36.பிறவிக் குருடர்களையும் வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினாரா?

وَاُبۡرِئُ الۡاَكۡمَهَ وَالۡاَبۡرَصَ 

3:49 பிறவிக் குருடர்களையும் வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்.
விளக்கம்:
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாத சமுதாயத்தில் மக்கள் உள்ளங்கள் இருந்தும் நல்லறிவு பெறாதவர்களாகவும், கண்களிருந்தும் குருட்டுத்தனமாகவும், காதுகள் இருந்தும் செவிடர்களைப் போலவும் வாழ்கின்றனர். இதனால் சமுதாயமே சீரழிந்து அழிவுக்குள்ளாகி நரக வேதனையைப் அனுபவிப்பதாக திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுகின்றன. இதற்கு ஆதரவாக கீழ்கண்ட வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.

وَلَـقَدۡ ذَرَاۡنَا لِجَـهَنَّمَ كَثِيۡرًا مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ‌ ‌ۖ لَهُمۡ قُلُوۡبٌ لَّا يَفۡقَهُوۡنَ بِهَا َلَهُمۡ اَعۡيُنٌ لَّا يُبۡصِرُوۡنَ بِهَا وَلَهُمۡ اٰذَانٌ لَّا يَسۡمَعُوۡنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالۡاَنۡعَامِ بَلۡ هُمۡ اَضَلُّ‌ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الۡغٰفِلُوۡنَ‏ ﴿۱۷۹﴾ 

7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்று படைத்துள்ளோம், அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள், அவர்களுக்கு கண்கள் உண்டு, ஆனால்இஅவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை, அவர்களுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைளைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றைவிடவும் வழி கேடர்கள், இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்பவர்கள்.
விளக்கம்:
கால்நடைகளைவிட மோசமான நிலையில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு ஈஸா நபி இறைவழிகாட்டுதல் அளித்து சிறந்த மக்களாக உருவாக்கி காட்டினார். (பார்க்க 5:110) உண்மையிலேயே கண்ணில்லாத குருடர்கள் என்று பொருள் கொண்டால் அவர் மருத்துவமனை நடத்தியதாகப் பொருள்படுகிறது. இதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை.


37.இறந்தோரை ஈஸா நபி உயிர்ப்பித்தாரா?

وَاُحۡىِ الۡمَوۡتٰى بِاِذۡنِ اللّٰهِ‌ۚ 

3:49 அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.
விளக்கம்:
இதுவும் ஒரு முக்கியமான விஷயமாகும். உலகில் வருகை தந்த எல்லா நபிமார்களின் நோக்கமும் என்னவென்றால், ஆற்றல்களை இழந்து வெறும் ஜடங்களைப் போல் வாழும் மக்களை சிறந்த மேதைகளாக உருவாக்குவதே ஆகும். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இந்த சாதனையையே படைத்தார். திருக்குர்ஆன் வாசகத்தைக் கவனியுங்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اسۡتَجِيۡبُوۡا لِلّٰهِ وَلِلرَّسُوۡلِ اِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيۡكُمۡ‌ۚ

8:24 ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் உங்களை அழைத்தால் நீங்கள் அவருடைய அழைப்பை ஏற்று அவரிடம் செல்லுங்கள்.

விளக்கம்:
இங்கு உயிரளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைப்பு விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எல்லோரும் இறந்து விட்டதாகப் பொருள் கொள்ள முடியுமா? அது போலத்தான் ஈஸா நபியின் விஷயமும் ஆகும். இஸ்ரவேலர்கள் எல்லா ஆற்றல்களையும் இழந்து ஜடங்களைப் போல் நடைப்பிணங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களை ஈஸா நபி உயிர்ப்பித்தார் என்பதே அதன் சரியான பொருளாகும்.
எனவே ஈஸா நபி உலக மக்களை சீர்த்திருத்தி அற்புதான சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார். அவருடைய மறைவுக்குப் பின் கிறிஸ்தவர்கள் அவருடைய போதனைகளை புறந்தள்ளி விட்டார்கள். இதனால் அவர்களுக்கு பேரழிவு ஏற்பட்டது.


38.ஈஸா நபி ஒரு மலக்கா?

கிறிஸ்தவர்களின் சிலர் ஈஸா நபியைப் பற்றி குறிப்பிடும் போது, அவர் ஒரு தெய்வப்பிறவி என்கின்றனர். மற்றும் சிலர் அவர் மலக்கு என்கின்றனர். மலக்கு என்பதன் பொருள் என்னவென்றால் அல்லாஹ்வின் கட்டளைகள் என்னவோ அவற்றின்படியே செயல்படும் இயற்கைச் சக்திகள் என்பதாகும். ஈஸா நபியும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே செயல்பட்டவர் ஆவார். அந்த அடிப்படையில் அவர் மலக்கின் தன்மையுடையவராக இருந்தார். ஆனால் மக்களிடையே உள்ள மலக்கைப் பற்றிய கற்பனையே வேறு. அவர்கள் அவரை மாபெரும் சக்தி படைத்த தேவன் என்று கூறி அவரை தெய்வமாக எண்ணி வழிபட்டு வருகிறார்கள். காரணம் அவர்களைப் பொறுத்த வரையில் இறைத்தூதர்கள் யாவுரும் என்பவர் மாபெரும் சக்தி படைத்தவர்களாகவும் அற்புதங்களை நிகழ்த்தி காட்டுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதே. இதை திருக்குர்ஆன் மறுக்கிறது.

(وَمَا مَنَعَ النَّاسَ اَنۡ يُّؤۡمِنُوۡۤا اِذۡ جَآءَهُمُ الۡهُدٰٓى اِلَّاۤ اَنۡ قَالُـوۡۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوۡلًا‏ ﴿۹۴

17:94. நேரானப் பாதையை எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு மக்கள் கூறும் காரணம், இறைத்தூதர் ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறார் என்பதே ஆகும். அவர்கள் கூறுவது போல் இறைத்தூதர் ஒரு மலக்காகவோ அல்லது அபூர்வமான மனிதராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதே.
அப்போதாவது அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டிருப்பார்களா? இல்லை. இவையாவும் அவர்கள் கூறும் சாக்கு போக்குகளே ஆகும்.

( قُلْ لَّوۡ كَانَ فِى الۡاَرۡضِ مَلٰۤٮِٕكَةٌ يَّمۡشُوۡنَ مُطۡمَٮِٕنِّيۡنَ لَـنَزَّلۡنَا عَلَيۡهِمۡ مِّنَ السَّمَآءِ مَلَـكًا رَّسُوۡلًا‏ ﴿۹۵

17:95. நீங்கள் அவர்களிடம், “இவ்வுலகில் வானவர்கள் (மலக்குகள்) வசித்திருந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவன் ஒரு வானவரையே வானத்திலிருந்து இறைத்தூதராக அனுப்பி இருப்பான். ஆனால் இவ்வுலகில் மனிதர்கள் வாழ்வதால் மனிதரிடமிருந்து ஒருவரை இறைத்தூதராக தேர்ந்தெடுத்து என்னை அனுப்பி இருக்கிறான்” என்று கூறிவிடுங்கள்.

(اِنۡ هُوَ اِلَّا عَبۡدٌ اَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنٰهُ مَثَلًا لِّبَنِىۡۤ اِسۡرَآءِيۡلَؕ‏ ﴿۵۹

43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை, அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

விளக்கம்:
நீர் ஈஸாவைப் பற்றிய உண்மைகளை தெளிவாக்குவீராக. அவர் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட்ட ஒரு மாவீரர் ஆவார். அவருக்கும் இறைவழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் அளிக்கப்பட்டன. அவை இஸ்ரவேலர்களின் சிறப்பான வாழ்விற்கு அழகான வழிகாட்டுதல்களாக இருந்தன. அவர் நடைமுறைப் படுத்திக் காட்டியவை யாவும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தன.

 ( وَلَوۡ نَشَآءُ لَجَـعَلۡنَا مِنۡكُمۡ مَّلٰٓٮِٕكَةً فِى الۡاَرۡضِ يَخۡلُفُوۡنَ‏ ﴿۶۰

43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி அவர்களைப் பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
விளக்கம்:
மலக்குகள் வசித்திருந்தால் மலக்குகளையே இறைவன் தோற்றுவித்து இருப்பான். அவர்களையே இந்தப் பூமியை ஆளும் தகுதியை அளித்திருப்பான். (மேலும் பார்க்க 17:95) எனவே நபிமார்களில் யாரும் ""மலக்""காக இருந்ததில்லை.


39.ஈஸா நபி செய்த போதனைகள்

 وَ لَمَّا جَآءَ عِيۡسٰى بِالۡبَيِّنٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُمۡ بِالۡحِكۡمَةِ وَلِاُبَيِّنَ لَكُمۡ بَعۡضَ الَّذِىۡ تَخۡتَلِفُوۡنَ فِيۡهِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‏ ﴿۶۳﴾

43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன், நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள், எனக்கும் கீழ்ப்படியுங்கள்"" என்று கூறினார்.

விளக்கம்:
ஈஸா நபியும் தெளிவான ஆதாரங்களுடன் தம் சமூகத்தாருக்கு வழிகாட்டுதலை எடுத்துரைத்தார். அவர், “நான் தெளிவான ஞான அறிவுரைகளை கொண்டுவந்துள்ளேன். உங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவேன். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஆகும். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். மேலும் என்னைப் பின்பற்றி நடந்துகொள்ளுங்கள்” என்றார்.

 ( اِنَّ اللّٰهَ هُوَ رَبِّىۡ وَرَبُّكُمۡ فَاعۡبُدُوۡهُ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسۡتَقِيۡمٌ‏ ﴿۶۴

43:64. நிச்சயமாக அல்லாஹ் தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
விளக்கம்:
மேலும் அவர், “உங்களையும் என்னையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவன் அல்லாஹ்வே ஆவான். அவனுடைய கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். அதுவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது” என்றார்.

 (فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَيۡنِهِمۡ‌ۚ فَوَيۡلٌ لِّلَّذِيۡنَ ظَلَمُوۡا مِنۡ عَذَابِ يَوۡمٍ اَلِيۡمٍ‏ ﴿۶۵

43:65. ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர், ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாறுடைய வேதனையின் கேடு தான் உண்டாகும்.

விளக்கம்: இப்படியாக ஈஸா நபி தம் சமூகத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்து சீர்த்திருத்தங்களை செய்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் காலப் போக்கில் அவரைப் பின்பற்றியவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வலுத்து, அநியாய அக்கிரமச் செயல்களை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக அவர்கள் வேதனை மிக்க கேடுகளில் சிக்கி மடிந்தனர்.

 ( هَلۡ يَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَةَ اَنۡ تَاۡتِيَهُمۡ بَغۡتَةً وَّهُمۡ لَا يَشۡعُرُوۡنَ‏ ﴿۶۶

43:66. தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர் பார்க்கிறார்களா?

விளக்கம்:
அவர்களுடைய தவறானச் செயல்களின் விளைவுகள் அவர்கள் அறியா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு அவற்றின் கேடுகள் தோற்றத்திற்கு வந்தன. இப்போதும் அதே போன்று கேடுகள் ஏற்படவேண்டும் என்றுதான் இவர்கள் எதிர் பார்க்கின்றார்களா?

ஆக ஈஸா நபி உலகிற்கு வருகைத் தந்து இஸ்ரவேலர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திக் காட்டினார். அவர் இஸ்ஹாக் நபியின் சந்ததியில் இஸ்ரவேலர்களுக்கு இறுதி தூதராக இருந்தார். அவருக்குப் பின் இறைவழிகாட்டுதல் இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறுதி நபியாக முஹம்மது நபி வருவார் என்ற உண்மை அவருக்குத் தெரியும் (பார்க்க 61:6 & 7:157) இதை அவர் அறிவித்தும் இருந்தார். ஆனால் இப்போது அவரைப் பற்றி பேசப்படுகின்ற விஷயமே வேறு.


40.இன்றைய உலகில் நடப்பதென்ன?

 ( اَمۡ اَبۡرَمُوۡۤا اَمۡرًا فَاِنَّا مُبۡرِمُوۡنَ‌ۚ‏ ﴿۷۹

43:79. அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவுகட்டுகிறது நாம் தான்.
விளக்கம்:
இறைவனின் அறிவுரையை எதிர்த்து போரிட அவர்கள் அனைவரும் ஆயத்தமாகி விட்டர்கள் போலும். நாமும் அவர்களுடைய திட்டங்களை முறியடிக்க ஆயத்தமாகி விட்டதாக சொல்லிவிடுங்கள்.

( اَمۡ يَحۡسَبُوۡنَ اَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوٰٮهُمۡ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُوۡنَ‏ ﴿۸۰

43:80. அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல, மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.

விளக்கம்: அல்லது அவர்கள் அனைவரும் இரகசியமாகக் கூடி தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருப்பவை யாவும் இறைவனுக்குத் தெரியமால் போய்விடும் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீட்டி வரும் திட்டங்களே அவர்களைக் காட்டி கொடுத்து விடுகின்றன.
அவர்கள் இதை எதிர்த்துப் போரிடக் காரணம் என்ன? ஈஸாவை அல்லாஹ்வின் புதல்வன் என்ற அவர்களுடைய கூற்றை ஏற்காதது தான் அவர்கள் எதிர்ப்பதற்குக் காரணமா?

(قُلۡ اِنۡ كَانَ لِلرَّحۡمٰنِ وَلَدٌ  ۖ فَاَنَا اَوَّلُ الۡعٰبِدِيۡنَ‏ ﴿۸۱

43:81. (நபியே!) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!""

விளக்கம்:
அப்படியென்றால் “அருட்கொடையாளன் அர்ரஹ்மானுக்கு ஒரு புதல்வன் இருந்திருக்குமானால் அவரை வணங்குவதில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேனே!” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.

சிந்தனையாளர்களே! ஈஸா நபி அல்லாஹ்வின் புதல்வன் என்று கூறிக் கொள்வதாலோ அல்லது அதை மறுப்பதாலோ உலகிற்கு எந்த பலனோ பாதிப்போ ஏற்படப் போவதில்லை. இவற்றை விட்டுவிட்டு அல்லாஹ் காட்டிய வழியில் செயல்பட்டால் உலகமே சுவர்க்கலோகமாக மாறிவிடும். இப்படியாக சுவர்கத்தை இழந்து நிற்கும் “ஆதமுக்கு” மீண்டும் கிடைத்துவிடும்.


41.பாவத்தின் சம்பளம் மரணம் - ஒரு விளக்கம்

ஈஸா நபியின் இக்கூற்றை நாம் ஆங்காங்கே கிறிஸ்துவ ஆலயங்களில் இருப்பதை காண்கிறோம். இதற்கு நேரடி பொருள் கொண்டால் இறந்தவர்கள் அனைவரும் பாவப்பட்ட ஜன்மங்கள் எனப் பொருளாகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். எனவே அவரது கூற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள்.

“தான் கொண்டுவந்த இறை அறிவுரைகளை பின்பற்றாமல், சமுதாய மக்களுள் பாவச் செயல்கள் மலிந்து விட்டால், அதனால் சமுதாயம் முழுவதிலும் சீர்கேடுகள் பரவிவிடும். காலப்போக்கில் சமுதாயத்தில் உள்ள ஆற்றல்கள் குன்றி அழிவை நோக்கிச் சென்றுவிடும். அதாவது அந்தச் சமுதாயம் செத்துப் போகும்” என்று ஈஸா நபி அறிவித்துச் சென்றார்.

தற்போதுள்ள மேலை நாடுகளும் அமெரிக்கா போன்ற நாடுகள், பொருளாதாரம் மற்றும் விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்று விட்டன. ஆனால் ஈஸா நபி காட்டிச் சென்ற அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை. இதனால் அங்கும் ஒழுங்கீனங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். அநியாய அக்கிரமங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி நாடுகளுக்கிடையே போட்டி பொறாமை ஏற்பட்டு கலவரங்கள், மோதல்கள் மற்றும் யுத்தங்கள் நடைபெற்று அழிவைச் சந்திக்கின்றன. இவ்வாறாக உலக யுத்தங்களை இரு முறை இவ்வுலகம் பார்த்துக் கொண்டது. ஆக பாவச் செயல்களின் இறுதி விளைவாக – சம்பளமாக ஏற்படப் போவது நாசகர அழிவுகளே. அதில் பலர் மாண்டு போய் விடுவார்கள். இப்படியாக பாவத்தின் சம்பளம் மரணமாக இன்றைக்கும் உலகில் நிலைத்து நிற்கிறது.


42.யவுமுல் ஃகியாமா

وَجَاعِلُ الَّذِيۡنَ اتَّبَعُوۡكَ فَوۡقَ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرۡجِعُكُمۡ فَاَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيۡمَا كُنۡتُمۡ فِيۡهِ تَخۡتَلِفُوۡنَ‏ ﴿۵۵﴾

3:55 மேலும் உம்மைப் (ஈஸா நபியை) பின்பற்றுவோரை கியாமநாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன், பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது, (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்"" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக!)

விளக்கம் :
இங்கு ஈஸா நபியை பின்பற்றி வருபவர்களுக்கு ஃகியாம நாள் வரையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதரவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஃகியாம என்ற வார்த்தை ஃகாயிம் - நிலையானது வாஃகீமு – நிலை நிறுத்து - ஃகியாம நிலை நிறுத்தப்பட்ட – யவ்முல் ஃகியாம – நிலை நிறுத்தப்பட்ட காலம். அதாவது எதுவரையில் ஈஸா நபியைப் பின்பற்றுபவர்கள் அல்லாஹ்வின் நிலையான சட்டப்படி செயல்படுகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆதரவு கிடைக்கும். கீழ்கண்ட வாசகத்தை கவனியுங்கள்.

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمۡ يَكُ مُغَيِّرًا نِّـعۡمَةً اَنۡعَمَهَا عَلٰى قَوۡمٍ حَتّٰى يُغَيِّرُوۡا مَا بِاَنۡفُسِهِمۡ‌ۙ

8:53 எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை (மாற்றிவிடுவதில்லை) -

ஆக ஃகியாம நாள் வரையில் என்றால் உலகம் நிலைத்திருக்கும் காலம் வரை என்று .இங்கு பொருள் கொள்ள முடியாது. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பை/ஆட்சியமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு அல்லாஹ்வின் பேராதரவு கிடைக்கும். இதைப் பற்றி நிராகரிப்பவர்கள் தற்சமயம் சந்தேகத்தில் இருந்து கொண்டு தர்க்கம் செய்கின்றனர். இந்த ஆட்சியமைப்பு நிலைநிறுத்தப்படும் வரையில் இந்த தர்க்கங்களும் வீண் சந்தேகங்களும் நீடிக்கும். அதன் பின் அவை ஓய்ந்து விடும்.


43. ஈஸா நபியை எதிர் பார்ப்பதன் விபரீதங்கள்

நாம் ஏற்கனவே சொன்னது போல இன்றைய முஸ்லிம்கள் ஈஸா நபியின் வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் தான் ஏற்கனவே இறுதி தூதராக வந்து சென்றுவிட்டாரே (பார்க்க 33:40) ஈஸா நபி எப்படி மீண்டும் வர முடியும் என்று மார்க்க அறிஞர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடனே அவர்கள் ஈஸா நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக (பின்பற்றுபவராக) வருவார் என்று சொல்லிவிடுவார்கள். ஈஸா நபி உலகிற்கு வந்து என்ன செய்வார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் உலகிற்கு வந்து அநியாய அக்கிரமங்களை ஒழித்துக் கட்டுவார். கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் ஒழித்து விட்டு இஸ்லாமிய ஆட்சியை உலகில் நிலை நிறுத்துவார் என்பார்கள்.

ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இயேசு கிறிஸ்து விரைவில் வானில் தோன்றுவார். அவர் பாலஸ்தீன நாட்டில் உள்ள ஜெரூசெலத்தில் தான் இறங்குவார் என்கிறார்கள். மேலும் அவர் வந்ததும் உலகிலுள்ள அநியாய அக்கிரமத்தை ஒழித்துக் கட்டுவார். கிறிஸ்தவர்களை மீட்சிப்பார். மற்றவர்களை ஒழித்துவிடுவார். இயேசு கிறிஸ்து முஹம்மது நபியின் உம்மத்தாக (பின்பற்றுபவராக) வருவார் என்ற முஸ்லிம்களின் கூற்று கிறிஸ்தவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே அவர்கள் அதை அறவே வெறுக்கின்றனர்.

 اَوۡ يُحَآجُّوۡكُمۡ عِنۡدَ رَبِّكُمۡ‌ؕ

3:73 அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா? (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
அதாவது எங்களுடைய இறைவனைவிட அவர்களுடைய இறைவன் மிஞ்சிவிடுவதா என்கின்றனர்.

(وَلَمَّا ضُرِبَ ابۡنُ مَرۡيَمَ مَثَلًا اِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّوۡنَ‏ ﴿۵۷

43:57. இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
விளக்கம்:
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மர்யமின் குமாரர் ஈஸா நபியின் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் போது, உமது சமூகத்தார் கடுப்பாகி விடுகிறார்கள்.

 ( وَقَالُـوۡٓا ءَاٰلِهَتُنَا خَيۡرٌ اَمۡ هُوَ‌ؕ مَا ضَرَبُوۡهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُوۡنَ‏ ﴿۵۸

43:58. “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?"" அவர்கள் கேட்கிறார்கள், அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள், ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
விளக்கம்:
அவர்கள் ஆவேசத்துடன், “நாங்கள் வழிபட்டு வரும் தெய்வத்தைவிட இவர் சிறந்தவராகி விடுகிறாரா?” என்று கேட்கிறார்கள். அதாவது அவர் ஓரிறைக் கொள்கையின் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்காக எங்களுடைய தெய்வங்களை எதிர்ப்பதா என்று கிறிஸ்தவர்கள் கேட்கிறார்கள். உம்மிடம் அவர்கள் தர்க்கம் செய்வதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள்.

திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் காலத்தில் கிறிஸ்தவர்களிடையே இருந்த இந்த வெறுப்பு இன்றைக்கும் நிலவி வருகிறது. இருந்தும் அவர்கள் அதை வெளிப்படுத்தாமல் முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்தில் மாற்றி விட அயறாது உழைத்து வருகிறார்கள். கிறஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே உள்ள இந்த கருத்து வேற்றுமையை வைத்து அவர்களிடையே பகைமையை உருவாக்கி, யூதர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். அதவாது மேற்காசியாவில் உள்ள ஜெரூசெலத்தில் தான் இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து மீண்டும் இறங்குவார். அந்த இடம் மூஸ்லிம்கள் கையில் இருந்தால் அவரை அவர்கள் முஸ்லிம் ஆக்கிவிடுவார்கள். அதனால் உங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுவிடும் என்று கிறிஸ்தவர்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள். அந்த இடம் நம் கையில் இருந்தால் அவரை உங்களிடம் ஒப்படைக்கிறோம். அவரை கிறிஸ்தவராக ஆக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர் முஸ்லிம்களை ஒழித்துவிடுவார். இதை உண்மை என நம்பும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் நாட்டை, கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர். அவர்கள் செய்து வரும் அட்டூழிங்களை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இவையெல்லாம் மூடத்தனமான கட்டுக் கதைகளை நம்புவதன் விபரீத விளைவுகள் ஆகும். இப்போதாவது மக்கள் விழித்துக் கொள்வார்களா? குறைந்த பட்சம் முஸ்லிம்களாவது திருந்துவார்களா? மறைந்திருக்கும் பகைவனை அடையாளங் கொள்வார்களா?


ந. ரூஹுல்லா. பி.காம்.
தொ.தொடர்பு எண் : 9381004531, 9884852672
தேதி: 20/08/2016