بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.நியாயமாக நீதி வழங்குங்கள்:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை (யெல்லாம் நன்கு)அறிந்தவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளையின்படி சமுதாய சமச் சீர்நிலையைக் கட்டிக்காக்க வேண்டுமென்றால் நீங்கள் எப்போதும் நடுநிலைமை வகித்து நியாயமான முறையில் நீதி வழங்க வேண்டும்.
(2) நடுநிலை வகிக்கும் சமுதாயம் என்பதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். இதில் விருப்பு வெறுப்பு என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது.
(3) நீங்கள் வெறுக்கும் சமுதாயத்தவராக இருப்பினும், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால், நீதி செலுத்த உங்கள் வெறுப்பு தடையாக இருக்கக் கூடாது.
(4) நியாயத்தை எக்காரணத்தைக் கொண்டும் கைவிடாதீர்கள். வாழ்வின் உயர் இலட்சியம் பெற இதுவே சிறந்த வழிமுறையாகும்.
(5) அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுகக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(6) இதே போன்ற கட்டளைகள் இதற்கு முன் இருந்த வேதமுடையவர்களுக்கும் விதிக்கப்பட்டது.
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌۭ ۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌۭ لَّهُۥ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.
5:45. அவர்களுக்கு நாம் அதில் : உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்,"" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும், எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!
விளக்கம் :
(1) மேலும் நாம் இஸரவேலர்களுக்கு வழங்கிய வேதத்தில் நியாயத்தை மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்து வரும்படி அறிவுறுத்தி இருந்தோம்.
(2) கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை என்றும், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் என மிகவும் துல்லியமாக நேர்மையான முறையில் நீதி வழங்கும் படியும் அறிவுறுத்தி இருந்தோம்.
(3) காயங்களுக்குச் சமமான காயத்தைக் கொண்டு தண்டனை வழங்க விதித்திருந்தோம்.
(4) எனினும் சூழ்நிலையை அறிந்து பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுத்தால், அது அவருக்குப் பன்மடங்கு நன்மைகள் ஏற்படும்.
(5) ஆக எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய வேத அறிவுரைகளின் படி நீதி வழங்கவில்லையோ அல்லது ஆட்சி செய்யவில்லையோ, அவர்கள் அநியாயக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
2.உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுங்கள்
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍۢ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًۭا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًۭا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًۭا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ.
5:32. இதன் காரணமாகவே, நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த்தடுப்பதற்காவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான், மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
விளக்கம் :
(1) “எவன் ஒருவன் எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக ஒருவரைக் கொலை செய்கின்றானோ, அவன் முழு மனித இனத்தையும் கொலை செய்து விட்டதாகப் பொருள் கொள்ளப்படும்.
(2) கொலைக்குத் தண்டனையாக மரண தண்டனை அளிப்பதோ, சமுதாய நல்லிணக்கத்தைச் சீரழிக்கும் வகையில் குழப்பங்களை ஏற்படுத்துபவனைக் கொல்வது என்பதோ வேறு விஷயமாகும்.
(3) ஆனால் தனிப்பட்ட முறையில் கொலை செய்வது என்பது கடுமையான தண்டனைக்குரியது.
(4) அதே போல் எவர் ஒருவர் மற்றவரைத் துயரத்திலிருந்து காப்பாற்றி வாழ வைக்கின்றாரோ, அவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்ததாகக் கருதப்படும்” என்றும்,
(5) இதுபோன்ற பல ஒழுங்குமுறைச் சட்டங்கள் பனீ இஸ்ரயீல் சமூகத்தினருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இயற்றப்பட்டன.
(6) நிச்சயமாக இறைத்தூதர்கள் ஆக்கப்பூர்வமான சட்ட திட்டங்களையே அவர்களிடம் தொடர்ந்து கொண்டு வந்தார்கள்.
(7) ஆனால் அவர்களுடைய மறைவுக்குப் பின் வந்தவர்களில் பெரும்பாலோர், காலப் போக்கில், அதம் காக்காய் கதைகளை சொல்லி, (பார்க்க தருக்குர்ஆன் தெளிவுரை)வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டனர்.
அல்லாஹ் பிறப்பித்துள்ள சட்டங்கள் யாவும் உலக மக்கள் அனைவருக்காகவும் அளிக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இச்சட்டம் இன்றைக்கும் நமக்கும் பொருந்தும்.
3.குற்றங்களுக்குத் தக்க தண்டனை:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ۖ ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌۭ فَٱتِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَٰنٍۢ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌۭ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌۭ ۗ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌۭ.
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது - சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகள்) விட்டுக் கொடுத்தால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும், ஆகவே, இதன் பிறகு(உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
விளக்கம் :
(1) உங்களுடைய நீதித்துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(2) இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! கொலைக் குற்றங்களுக்குத் தக்க தண்டனை அளிப்பது உங்கள் நீதிமன்றத்தின் தலையாய கடமையாகும்.
(3) இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ, ஆண் பெண் என்றோ பாரபட்சம் இருக்கக் கூடாது.
(4) கொலையாளி செல்வந்தனாக இருந்தாலும் அவனுக்கே தண்டனை அளிக்க வேண்டும். அவன் ஏழையாக இருந்தாலும் அவனுக்கே தண்டனை அளிக்க வேண்டும்.
(5) மேலும் குற்றங்களின் பின்னணியைப் பற்றியும் ஆராய வேண்டும். அக்குற்றம் எதிர்பாராத விதமாய் நடந்திருந்தால், அதற்குப் பகரமாக பாதிக்கப்ட்ட வாரிசுதாரர்களுக்கு நஷ்டயீட்டை கொடுக்க முறைப்படி ஏற்பாடு செய்யலாம்.
(6) இந்தச் சலுகையும் கருணையும், எதிர் பாராமல் நடந்த விபரீதங்களுக்கு மட்டும்தான் என்பது இறைவனின் கட்டளை.
(7) திட்டமிட்டுச் செய்யப்படும் கொலைக் குற்றங்களுக்கு அல்ல. ஆக குற்றங்களுக்கு ஏற்ப தக்க தண்டனையே வழங்கவேண்டும். (பார்க்க 4:93)
(8) இதில் ஒருபோதும் வரம்பு மீறுதல் கூடாது. இல்லையேல் நீதித்துறையும் சீர்கெட்டுவிடும். சமுதாயமும் வேதனைகளுக்கு ஆளாகும்.
(9) வரம்பு மீறி தீர்ப்பளிக்கும் நீதிபதியும் தண்டனைக்கு உரியவர் ஆவார். (மேலும் பார்க்க 17:33, 42:40)
وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌۭ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ.
2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு, (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
விளக்கம் :
சிந்தனையாளர்களே! குற்றங்களுக்குத் தக்க தண்டனைக் கிடைக்க வழிசெய்வதன் மூலமே, சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று சிறப்பான வாழ்விற்கு வழிசெய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதனால் மட்டுமே நீங்கள் தீய விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
4.அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நீதி வழங்காதவர்கள்?
وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ.
5:44 எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள் தாம்.
விளக்கம் :
எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய வேத அறிவுரைகளின் படி தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிராகரிப்பவர்கள் பட்டியலில் இடம் பெறுவர்.
وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.
5:45 எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு அளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் தாம்.
விளக்கம் :
எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய வேத அறிவுரைகளின்படி நீதி வழங்கவில்லையோ, அல்லது ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.
5:46 எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக பெரும் பாவிகள் தாம்.
விளக்கம் :
யார் அல்லாஹ் இறக்கி அருளிய வேத அறிவுரைகளின் படி தீர்ப்பளிக்கவில்லையோ, அல்லது ஆட்சி செய்யவில்லையோ, அவர்கள் பெரும் பாவிகள் ஆவார்கள்.
5.நபிக்கு வந்த கட்டளை என்ன?
وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ ۖ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ ۚ
5:48. நபியே! முற்றிலும் உண்மையை கொணடுள்ள இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதத்தை மெய்ப்படுத்தக் கூடியதாகவும் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த சட்ட திட்டத்தைக் கொண்டே அவர்களிடையே தீர்ப்பு செய்வீராக. உமக்கு உண்மை வந்த பின்பும் நீர் அவர்களுடைய மன இச்சையைப் பின்பற்றாதீர்.
விளக்கம் :
இவ்வேதம் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுடன் இறக்கி அருளப்படுகிறது.
இதற்கு முன்னுள்ள வேதத்தில் என்ன இறக்கி அருளப் பட்டதோ, அதையே இவ்வேதத்திலும் இறக்கி அருளப்படுகிறது.
இப்படியாக இதற்கு முன்னுள்ள வேதத்தை இது மெய்ப்பித்து பாதுகாக்கிறது.
எனவே மக்களிடையே உள்ள வழக்கு விவகாரங்களை இவ்வேதத்தில் உள்ள அறிவுரைப்படி தீர்ப்பு வ்ழங்குவீராக.
இதை விட்டுவிட்டு மக்களிடம் அபிப்ராயம் கேட்டு அதன்படி தீர்ப்பு செய்யாதீர். காரணம் அவர்களில் பெரும்பாலோர் தம் மன இச்சையைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.
6.நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது
6:152. நீஙகள் பேசும்போது, அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். அல்லாஹ்வுக்கு நீஙகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு போதிக்கிறான்.
விளக்கம் :
(1) நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் போது, அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருப்பினும் சரியே, நியாயத்தைக் கைவிடாதீர்கள்.
(2) அதாவது நடந்த உண்மை எதுவோ அதையே எடுத்துரையுங்கள்.
(3) அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு விஷயத்தில் நீங்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள்.
(4) இவற்றை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய அறிவுரைகள் தரப்படுகின்றன.
تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًۭا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًۭا لَّمِنَ ٱلْءَاثِمِينَ.
5:106 உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும், இவ்விருவரும் ""நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை, அவர்கள் எங்களுடைய பந்துக்களாகயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை, அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாய் விடுவோம்"" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
விளக்கம் :
(1) பாகப்பிரிவினை போன்ற வழக்கு சம்பந்தமாக விசாரிக்க சாட்சி தேவைப்பட்டால், சாட்சியாளர்களை கூட்டு ஸலாத்துக்குப் பின் பள்ளியில் நிறுத்திக் கொள்ளலாம்.
(2) காரணம் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்ப்பு பள்ளிவாசல்களில் தான் அளிக்கப்பட்டு வந்தன.
(3) அவர்கள் சாட்சி சொல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து எந்தப் பணமும் வாங்கிக் கொள்ளவில்லை என்றும்
(4) அல்லாஹ்வுக்கு பயந்தே சாட்சி சொல்வதாகவும் அவ்வாறு பொய் சாட்சி கூறினால், தாம் குற்றவாளிகள் ஆகிவிடுவோம் என்றும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًۭا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًۭا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ.
5:107. நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்து விட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தை விட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது, நாங்கள் வரம்பு மீறவில்லை, (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்"" என்று அலலாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
விளக்கம் :
விசாரணையில் அவ்விருவரும் சாட்சி சொல்வதில் தவறு செய்து விட்டதாகத் நீதி மன்றத்திற்கு தெரிந்தால், அச்சொத்திற்கு உரிமை கோருபவர்கள், சாட்சிக் கூடத்தில் (Witness Box)ல் நின்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவ்விருவரின் சாட்சிகளை விட நம்முடைய உரிமை கோரலே மிகவும் உண்மையானது என்றும்; இதில் இம்மியளவும் வரம்பு மீறவில்லை என்றும், அவ்வாறு மீறினால் நாங்கள் குற்றவாளிகள் ஆகிவிடுவோம் என்றும் சத்தியம் செய்து வாதிட வேண்டும்.
ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَٰنٌۢ بَعْدَ أَيْمَٰنِهِمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ.
5:108. இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டு விடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
விளக்கம் :
(1)இவ்வாறு வெளிப்படையான முறையில் சாட்சியங்களை குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களுடைய முகபாவனை மற்றும் பேசும் பாணியைக் கொண்டே யாருடைய சாட்சியங்கள் உண்மையானவை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
(2) அவ்வாறு குற்றம் புரிபவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும்.
(3) இதனால் மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்.
(4) எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி இந்தச் சட்ட விதிமுறைகளைப் பற்றி நன்கு கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
(5) அப்போது தான் நீங்கள் வழிதவறி போகமாட்டீர்கள்.
(6) மேலும் வழிதவறிச் செல்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை.
(7) எனவே இறைவழிகாட்டுதல்கள் என்பது உலக மக்களின் நன்மையைக் கருதியே இறக்கி அருளப்பட்டதாகும். ஆனால் அவர்களோ அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, தம் மனம் போன போக்கில் வாழ்வதும், பொய் சாட்சி சொல்வதுமாக இருக்கிறார்கள். இவ்வுலக வாழ்வில் ஒருவேளை அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை வாழ்வில் ஒருபோதும் தப்பவே முடியாது.
7.கை, கால், முகம் ஆகியவற்றின் சாட்சிகள்
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு எதிராக, அவர்கள் செய்தவை பற்றிச் சாட்சியம் கூறும்.
விளக்கம் :
(1) நீதிமன்ற விசாரணையின் போது சம்பந்தப்பட்ட சாட்சி சொல்பவர்களின் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.
(2) அல்லது அந்த குற்றவாளியின் கைகள் மற்றும் கால்களின் ரேகைகளாகவும் இருக்கலாம்.
(3) அவற்றையும் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
(4) அந்தச் சம்பவம் தொடர்புள்ள பொருட்களையும் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
(5) உதாரணத்திற்கு ஒரு பெண் தகாத உறவை வைத்துள்ளதாகப் புகார் வந்தால், அவள் கருத்தரித்திருந்தால் அதையே தக்க சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
8.உங்கள் தாய் தந்தையருக்கு எதிராக இருப்பினும் உண்மைக்கு சாட்சி சொல்லுங்கள்
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًۭا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்து இருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள், (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்): ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன், எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள், மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை எல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் எப்போதும் நடுநிலை வகிக்கும் சமூகத்தாராகத் திகழவேண்டும். ஒருபோதும் நியாயத்தை கைவிடக் கூடாது. (மேலும் பார்க்க: 5-8)
(2) எனவே மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க நேர்மையான சாட்சியங்கள் இருப்பது அவசியாமாகின்றன.
(3) எனவே நீங்கள் சாட்சி கூறுவதாக இருந்தால், அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த உண்மைக்கு சாட்சியாக நில்லுங்கள்.
(4) இதில் செல்வந்தர்கள் ஏழைகள் என்ற பாகுபாடும் இருக்கக் கூடாது. இவ்விரு விஷயத்தைப் பாதுகாப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
(5) நீங்கள் நீதிமன்ற விஷயங்களில் அல்லாஹ்வின் கட்டளையை விட்டுவிட்டு, தம் மனோ இச்சைக்கு இடமளிக்காதீர்கள்.
(6) சாட்சி கூறுவதில் உண்மைக்குப் புறம்பாகவோ, அல்லது உண்மை தெரிந்தும் சாட்சி கூறாமலிருப்பதோ கூடாது.
(7) ஆக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.
9. அதிகார துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்
وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًۭا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ.
2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள், மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து (எந்த) ஒருபகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம்கொடுக்க) நெருங்காதீர்கள்.
விளக்கம் :
(1) இறைக்கட்டளையின்படி நோன்பு நேரங்களில் உண்ணமால் பருகாமல் இருந்தீர்கள்.
(2) அதே போல் ஒருவர் மற்றவரின் செல்வங்களையும் தவறான முறையில் ஈட்டிக் கொள்ளாதீர்கள்.
(3) இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து தனக்குச் சாதகமாகப் பிறருடைய செல்வங்களை அபகரிக்க முயலாதீர்கள்.
(4) இது மிகப்பெரிய அநியாயச் செயல் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
(5) ஆக நோன்பின் நோக்கமே உங்கள் அனைவரையும் இறைவழிகாட்டுதல் என்ற வட்டத்திற்குள் கொண்டு வருவதே ஆகும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٍۢ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا.
4:29. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள், நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் -நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறீர்கள். இது வியாபாரமாகும். இதில் தவறு ஒன்றுமில்லை.
(2) ஆனால் ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்துக் கொள்வது மிகப் பெரிய குற்றமாகும்.
(3) இதனால் காலப்போக்கில் சண்டைச் சச்சரவு, கொலை என அசம்பாவிதங்கள் தான் ஏற்படும்.
(4) நாட்டில் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தாதீர்கள்.
(5) நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்துத் தரப்பின் மக்களின் நலனை முன்வைத்தே தரப்படுகின்றன.
(6) இதுவே அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாகும்.
وَمَن يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَٰنًۭا وَظُلْمًۭا فَسَوْفَ نُصْلِيهِ نَارًۭا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا.
4:30. எவரேனும் அல்லாஹ்வ்pன் வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாக அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம், அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
விளக்கம் :
(1) இவ்வாறாக தெளிவான எச்சரிக்கைகள் வந்த பின்பும், அதிகார துஷ்பிரயோகம் செய்து ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்து, வரம்பு மீறின செயலில் ஈடுபடும் சமுதாயமாக உருவானால், அது விரையில் நரக வேதனைகளில் சிக்கிக்கொள்ளும்.
(2) ஏனெனில் பொது நலனில் அக்கறை காட்டாத சுயநலவாதிகள் வாழும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு அழிந்து போவது இயல்புதானே.
إِن تَجْتَنِبُوا۟ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًۭا كَرِيمًۭا.
4:31. நீங்கள் தடுக்கபட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்ந்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்பு மிக்க இடங்களில் புகுத்துவோம்.
விளக்கம் :
(1) எனவே தடை செய்யப்பட்ட இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
(2) ஏனெனில் இவை மனித நேயத்தை சீரழிக்கும் செயல்களாகும்.
(3) இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொண்டால் உங்களிடையே உள்ள தீய பழக்கங்கள் மறைந்து சுமுகமான சூழ்நிலை உருவாகி, உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிவரும்.
10.அநாதைகளின் சொத்துக்களை பராமரிப்பவர்கள்
وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۖ
6:152. அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்,
விளக்கம் :
(1) அநாதைகளின் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பு ஏற்பவர்கள், அவர்கள் முழு அளவில் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் வாலிப பருவத்தை அடையும் வரையில் அச்சொத்தைப் பாதுகாத்து வாருங்கள்.
(2) அவற்றில் எதையும் முறை தவறி அபகரித்துக் கொள்ளாதீர்கள். (பார்க்க 4:6)
(3) அதாவது பராமரிப்புச் செலவில் நியாயமானதைப் பெற்றுக் கொள்ளலாம்.
وَلَا تَأْكُلُوهَآ إِسْرَافًۭا وَبِدَارًا أَن يَكْبَرُوا۟ ۚ وَمَن كَانَ غَنِيًّۭا فَلْيَسْتَعْفِفْ ۖ وَمَن كَانَ فَقِيرًۭا فَلْيَأْكُلْ بِٱلْمَعْرُوفِ ۚ
4:6. அநாதைகள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரயமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்)தடுத்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்.
விளக்கம் :
(1) அநாதைகள் வாலிப வயதை (Major) அடைந்த பின் அவர்களுடைய சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமே என்ற எண்ணத்துடன், அவசர அவசரமாக வீணான செலவுகளாக பொய்க் கணக்கு காட்டி அதை அபகரிக்க எண்ணாதீர்கள்.
(2) மேலும் அநாதைச் சொத்துக்களைப் பாதுகாக்க பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் செல்வந்தர்களாக இருந்தால், அவற்றின் பராமரிப்புச் செலவுகளைத் விட்டுக் கொடுக்கட்டும்.
(3) அவர் வசதியற்றவராக இருந்தால், அவற்றின் பராமரிப்புச் செலவுகளை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
إِنَّ ٱلَّذِينَ يَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلْيَتَٰمَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ نَارًۭا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًۭا.
4:10. நிச்சயமாக யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ, அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவ தெல்லாம் நெருப்பைத் தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
விளக்கம் :
நினைவில் கொள்ளுங்கள். இப்படியாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தம் வயிறுகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதற்குச் சமம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். சொத்துக் குவிப்பின் பேராசையும் வெறியும் அவர்களுக்கு நிம்மதியற்ற வேதனை மிக்க வாழ்வைத் தான் தேடித் தரும்.
11. அநாதைகளின் சொத்துக்களை இரண்டு சாட்சியங்களை வைத்துக்கொண்டு ஒப்படையுங்கள்
فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ فَأَشْهِدُوا۟ عَلَيْهِمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًۭا.
4:6 மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
விளக்கம் :
மேலும் அச்சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, சாட்சிகள் இருவரை ஏற்படுத்தி, அவர்கள் முன்னிலையில் ஒப்படையுங்கள். ஆக கணக்கெடுப்பதில் சகல வல்லமையும் பெற்ற அல்லாஹ்வின் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
12.ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள்
وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَٰمَىٰ ۖ قُلْ إِصْلَاحٌۭ لَّهُمْ خَيْرٌۭ ۖ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ ۚ
2:220 நபியே! “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்,"" நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது, நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால், அவர்கள் உங்கள் சகோதரர்களே ஆவார்கள், இன்னும் அல்லாஹ் குழப்பம் உணடாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்,
விளக்கம் :
(1) நபியே! அநாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறு விளக்கமளித்து விடுங்கள்.
(2) உதவி பெறுபவர் பட்டியலில் முதலில் இடம் பெறுவது சமுதாயத்தில் ஆதவற்ற நிலையில் தவிக்கும் அநாதைகள் ஆவர்.
(3) அவர்களுடைய துயரங்களைத் துடைத்து அவர்களைச் சீராக்கி வைக்கவேண்டும்.
(4) அதுமட்டுமின்றி நீங்கள் அவர்களோடு சேர்ந்து வாழ நேரிட்டால்’ அவர்களிடம் சகோதரப் பாசத்துடன்தான் பழக வேண்டும்.
(5) சமுதாய சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருப்போரில் யார் முறைதவறி நடக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
13.ஜும்மா தொழுகை குதுபா
إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
16:90 நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு உங்களை ஏவுகிறான். அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவங்கள்,அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் விலக்குகிறான். நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ.
16:91 இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிவான்.
விளக்கம் :
(1) சமுதாயத்தில் நீதி நெறிமுறையை கட்டிக் காத்து வரவேண்டும். அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பு அளிக்கவேண்டும். அந்த தீர்ப்பு தம்மை சார்ந்தவர்களுக்கு எதிராகச் சென்றாலும் சரியே. நீதியை விட்டுவிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். (பார்க்க 5:8)
(2) சமுதாயச் சமச்சீர்நிலையை ஏற்படுத்தி, அதை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(3) சமூகச் சீர்திருத்தங்களை உற்றார் உறவினர்களிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வாருங்கள். அதன் பின் அதை படிப்படியாக விரிவாக்கம் செய்து, ஒட்டு மொத்த சமுதாயத்தின் தேவைகளையும் நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(4) சமுதாயத்தில் மானக்கேடான மற்றும் தீய செயல்கள் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மானக்கேடான செயல்கள் - வெளிப்படையாக இருந்தாலும், அந்தரங்கமாக இருந்தாலும் சரியே அவற்றைத் தடுக்க வேண்டும்என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(பார்க்க 7:33)
(5) அல்லாஹ் நிர்ணயித்துள்ள வரம்புகளை மீறி செயல்படாதீர்கள். இந்த அறிவுரைகளை அல்லாஹ் அருளுவதன் நோக்கமே, நீங்கள் அனைவரும் அவற்றைக் கடைப்பிடித்து சிறந்த மஹான்களாகத் திகழவேண்டும் என்பதற்காகவே ஆகும். மேலும்
(6) நீங்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை (பார்க்க 9:111) ஒரு போதும் மீறாதீர்கள். அதனடிப்டையில் நீங்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
மேற்சொன்ன கட்டளைகளை பள்ளிவாசல் இமாம்கள் ஒவ்வொரு ஜும்மா தொழுகையின் சொற்பொழிவிலும் ஓதாமல் இருப்பதில்லை. ஓதி என்ன பயன்? ஓதுபவருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. கேட்பவர்களுக்கும் தெரியாது.
தொழுகையை கடைப்பிடிக்கும் படி அல்லாஹ் அறிவுருத்துகிறான். நோன்பு கடமையாக்கியுள்ளான். ஜகாத் கொடுத்து வரும்படி அறிவுருத்துகிறான். இவற்றைப் பற்றி சதா பேசிக் கொண்டு இருக்கும் போது, மேற்சொன்ன கட்டளைகளைப் பற்றி யாராவது எப்போதாவது பேசுகிறார்களா? அவை எல்லாம் நமக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் ஆயிற்றே! நாம் ஏன் அவற்றை பொருட்படுத்து வதில்லை? எவ்வளவு பெரிய பொறுப்புகள்?