بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
1.அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்த வாக்குமூலம் என்ன?
وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ.
13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்து வைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள், இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்,மேலும் (மறுமைநாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்து பயப்படுவார்கள்.
விளக்கம் :
(1) அல்லாஹ்விடம் செய்துகொண்ட அந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால், சமுதாயத்தில் பிரிவினை ஏற்படாதவாறு அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் பேணிக்காத்து, அவர்களுடைய நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு, சமுதாய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதே.
(2) அவ்வாறு செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை எண்ணி அதற்கு அஞ்சுபவர்களே அறிவுடையோர் ஆவார்கள்.
(3) அல்லாஹ்விடமுள்ள கேள்விக் கணக்கு மிகவும் கடுமையானது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
(4) எனவே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் அனைவரும் கூடி ஒற்றுமையுடன் வாழ வழி செய்ய வேண்டும். நம்மிடையே பரஸ்பர உறவை ஏற்படுத்திக் கொண்டு ஆக்கப்பூர்வமான நன்மையான செயலைச் செய்ய வேண்டும்.
2.ஆக்கப்பூர்வமான நற்செயல்கள் யாவை?
وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَانًۭا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًۭا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًۭا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ.
2:83. இன்னும் (நினைவு கூருங்கள்:) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் - எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும். மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள், மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள், மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள், ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்"" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதிமொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டு விட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கிறீர்கள்.
விளக்கம் :
(1) ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்கள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அதே அடிப்படையில்தான் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரிடமும் வாக்குமூலம் வாங்கப்பட்டது.
(2) அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறைக்கும் வணங்கி நடக்கக்கூடாது;
(3) அதையடுத்து பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், சம்பாதிக்க இயலாதவர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றி வரவேண்டும்.
(4) பொது மக்களிடம் பரஸ்பர உரவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
(5) சமுதாய ஒழுக்க மாண்புகளைப் பேணிக் காக்கும் ஸலாத்தை நிலை நிறுத்த வேண்டும். சமுதாய மேம்பாட்டிற்காக அரசு கொண்டுவரும் திட்டங்களை நிறைவேற்ற, தாராளமாகப் பொருளுதவியும் செய்து வாருங்கள் என்று அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
(6) அவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் திசைமாறிப் போய் விட்டார்கள். உங்களில் சிலர்தாம் அவற்றைக் கடைப்பிடிக்கிறீர்கள். இப்போதும் அந்த வாக்குறுதிகளை உங்களில் பெரும்பாலோர் புறக்கணிப்பவர்களாகவே இருக்கிறீர்கள்.
3.ஒப்பந்த வாக்குமூலத்தை மூறித்தவர்களின் நிலை
وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۙ أُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ.
13:25. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்தியபின்னர் முறித்து விடுகிறார்களோ, இன்னும், அல்லாஹ் சேர்த்துவைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ, பூமியில்ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபம்தான், இன்னும், அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது.
விளக்கம் :
(1) அல்லாஹ்விடம் உறுதியோடு செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டு, அவற்றிற்கு மாற்றமாகச் செயல்பட்டு, சமுதாய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் சீர்குலையும் வகையில் செயல்படுவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதே ஆகும்.
(2) இத்தகையவர்களே இறுதியில் பெரும் நஷ்டவாளிகள் ஆவர். (பார்க்க 2:27) அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து மிகவும் கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ.
2:84. இன்னும் (நினைவு கூருங்கள்:) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள், உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்"" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர்(அதை) ஒப்புக் கொண்டீர்கள், (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
விளக்கம் :
(1) மேலும் அந்த ஒப்பந்த வாக்கு மூலத்தில் “உங்களிடையே கொலை, கொள்ளை போன்ற இரத்தம் சிந்தும் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
(2) மேலும் நலிந்த மக்களை அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” என்றும் உறுதிமொழி வாங்கிக் கொள்ளப்பட்டது. நீங்கள் அனைவரும் அவ்வாறே நடந்து கொள்வதாக ஒப்புதலும் அளித்தீர்கள். அதற்கு நீங்களே சாட்சியாளர்களாக இருக்கின்றீர்கள்.
(3) மேற்சொன்ன ஒப்பந்தம் பனீஇஸ்ராயீல் சமூகத்தவருக்குத் தான் என்றும், அதற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். திருக்குர்ஆனில் செல்லப்பட்டிருப்பதால் அது இக்காலத்தில் வாழும் நமக்கும் பொருந்தும்.
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.
2:27. இ(த்தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள், இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
விளக்கம் :
(1) அனைவரும் ஒன்றுபட்டு கூடி வாழ்வதாக அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்த வாக்குமூலத்தை உறுதிப்படுத்திய பின்னர், அதை முறித்து விடுபவர்கள் ஃபாஸிக்குகள் ஆவர்.(பார்க்க 2:26)
(2) அவர்கள் சமுதாயத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அல்லாஹ்விடம் இருந்த உறவைத் துண்டித்துக் கொண்டு, சமுதாயத்தில் பல குழப்பங்களை உண்டாக்கி விட்டவர்கள் ஆவர்.
(3) இப்படிப்பட்டவர்கள் தாம் பேரிழப்புக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
4. உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்,
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ
5:1 இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்வதாக இறைவனிடம் செய்து கொண்ட உறுதிமொழியை முறைப்படி நிறைவேற்றி வாருங்கள்.
சிந்தனையாளர்களே! இதை கருத்தில் கொண்டு, அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்காமல் கூடி வாழ்ந்தால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளவிலா அருட்கொடைகள் கிடைப்பது சர்வ நிச்சயம். இதைப் பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது என்று இருந்து விடாதீர்கள்.
5.வேத உண்மைகளை மறைக்காதீர்கள்:
எனவேதான் திருக்குர்ஆனில் உள்ள வேத உண்மைகளை மக்களை விட்டு மறைத்து விடாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லப்படுகிறது. ஏனெனில் உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரியமால் போய்விடும். அதன்பின் அவர்கள் தம் விருப்பம் போல் செயல்படுவார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகளை சரிசெய்யவே முடியாது.
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَٰبِ ۙ أُو۟لَٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّهُ وَيَلْعَنُهُمُ ٱللَّٰعِنُونَ
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் -அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்,மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமையுடைய) வர்களும் சபிக்கிறார்கள்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரப்பூர்வமான நேர்வழியும் வந்து விட்டது.
(2) உலக மக்கள் அனைவருக்காகவும் அனைத்து விஷயங்களும் இவ்வேதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன.
(3) யார் இவற்றையெல்லாம் மூடி மறைத்து வெறும் சடங்குச் சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் கடைப்பிடிக் கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து தவிப்பார்கள்.
(4) அத்தகைய சமூக அமைப்பு, பொது மக்களின் சாபத்திற்கும் ஆளாகும்.
(5) இதுதான் அவர்களுக்கு ஏற்படும் துர்பாக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلْكِتَٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًا ۙ أُو۟لَٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை, மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான், அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
விளக்கம் :
(1) யார் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட வேத உண்மைகளை மக்களிடம் எடுத்துக் கூறாமல் சொற்ப ஆதாயங்களுக்காக அவற்றை மறைத்து விடுகிறார்களோ, அவர்கள் தம் வயிற்றில் தாமே நெருப்பை அள்ளி கொட்டிக் கொள்பவர்களுக்கு சமமாவார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
(2) அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அல்லாஹ்வின் கருணை என்ற பேச்சிற்கே இடமிருக்காது.
(3) அவர்களுடைய வளர்ச்சியும் தடைபட்டு துன்பந்தரும் வேதனைகளே வந்தடையும்.
6.வேத உண்மைகளுடன் கற்பனைக் கதைகளை கலக்காதீர்கள்:
وَلَا تَلْبِسُوا۟ ٱلْحَقَّ بِٱلْبَٰطِلِ وَتَكْتُمُوا۟ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ.
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்,உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
விளக்கம் :
மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டும் இந்த இறைவழிகாட்டுதல்களில், போலியான தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைக் கலந்து விடாதீர்கள். மேலும் இதிலுள்ள ஆக்கப்பூர்வமான நன்மையான விஷயங்களை மக்களை விட்டு மறைத்து விடாதீர்கள். வேத உண்மைகளையெல்லாம் அறிந்துகொண்டே இவ்வாறு செயல்படாதீர்ள்.
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱرْكَعُوا۟ مَعَ ٱلرَّٰكِعِينَ.
2:43. தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்)கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃசெய்யுங்கள்.
விளக்கம் :
மேலும் இறைவழிகாட்டுதலைப் பேணி ஒழுக்கத்துடன் வாழ கற்றுத் தரும் ஸலாத்தை முறைப்படி கடைப்பிடித்து வாருங்கள். மேலும் சமுதாய மேம்பாட்டிற்காக உதவியும் செய்து வாருங்கள். (பார்க்க 29:45) இப்படியாக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுடன் இணைந்து நீங்களும் செயலாற்றுங்கள்.
أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَٰبَ ۚ أَفَلَا تَعْقِلُون
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மைசெய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகின்றீர்களா? நீங்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டாமா?
விளக்கம் :
நீங்கள் வேதத்தை வைத்துக்கொண்டு, அதன்படி நன்மையான செயல்களைச் செய்யுமாறு பிறரை அறிவுறுத்தி வருகிறீர்கள். பிறருக்கு எடுத்துரைத்த அதே அறிவுரைகளை நீங்கள் கடைப்பிடிக்கத் தவறி விடுகிறீர்களே!. இதைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
فَٱذْكُرُونِىٓ أَذْكُرْكُمْ وَٱشْكُرُوا۟ لِى وَلَا تَكْفُرُونِ.
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூருங்கள், நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள்.
விளக்கம்:
எனவே நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டால், பரிபாலன விதிமுறைகளின்படி உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற வழிகள் பிறக்கும். (பார்க்க 21:10) எனவே நீங்கள் அவற்றை நிராகரித்து இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்யாதீர்கள்.
7.சமுதாயத்தில் குழப்பம் செய்யாதீர்கள்:
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ.
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்"" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்"" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
விளக்கம் :
சமுதாயத் தலைவர்களிடம், “சமூக நலன்கள் சீர்குலையும் வகையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்று கூறினால், “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ.
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
விளக்கம் :
ஆனால் நிச்சயமாக அவர்களே சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்து, குழப்பங்களை உண்டாக்குபவர்கள். ஆனால் அவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்வதில்லை.
وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ ۚ
2:191 ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும்.
விளக்கம் :
அயல்நாட்டுப் பகைவர்களைவிட உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவர்களே மிகவும் கொடியவர்கள் ஆவார்கள். எனவே உள்நாட்டுக் குழப்பங்கள், கொலை குற்றங்களை விட கொடியதாகும்.
8.நன்மையின் பக்கம் அழைத்தலும் தீமையை விட்டு தடுத்தலும்:
يَٰبُنَىَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأْمُرْ بِٱلْمَعْرُوفِ وَٱنْهَ عَنِ ٱلْمُنكَرِ وَٱصْبِرْ عَلَىٰ مَآ أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ.
31:17. “என் அருமை மகனே! நீ ஸலாத்தை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக, உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக, நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
விளக்கம் :
(1) லுக்மான் என்கின்ற இறைவழிகாட்டுதலில் ஞானம் பெற்ற ஒருவர், தம் மகனுக்கு உபதேசம் செய்வதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.
(2) அதன் தொடர்சியாக அவர், “என் அருமை மகனே! நீ இறைவழிகாட்டுதலை மக்களுக்குப் போதிக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்து"".
(3) அதன் மூலமாக மக்களுக்கு இறைவன் காட்டும் நன்மையான செயல்கள் எவை என்பதை எடுத்துரைத்து அவற்றின் பக்கம் அழைப்பு விடு.
(4) மேலும் தீய செயல்கள் என எவற்றை அல்லாஹ் கோடிட்டுக் காட்டுகின்றானோ, அவற்றை தடுத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுருத்தி வா.
(5) இவ்வாறு சமூக சீர்த்திருத்தப் பணிகளில் ஈடுபடும்போது, சில சமயங்களில் உனக்கு தொல்லைகள் ஏற்படலாம் (பார்க்க 2:155-156)
(6) அவற்றைக் கண்டு மனந்தளராமல் உன் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து செயல்படு.
(7) இதுவே சிறந்த வீரனுக்குள்ள அழகிய பண்புகளாகும்.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍۢ فَخُورٍۢ.
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
விளக்கம் :
இறைவனின் அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, மக்கள் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். கேலியும் செய்வார்கள். இருந்தாலும் நீ; அவர்களை விட்டு உன் முகத்தை சுருக்கிக் கொள்ளாதே. நீ சொல்வதும் செய்வதும் தான் சரி என்று ஒருபோதும் கர்வத்துடன் நடந்து கொள்ளாதே. இவ்வாறு ஆணவங் கொண்டு செயல்படுவோரை, அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. (மேலும் பார்க்க 16:125)
9.ஸலாத்:
“ஸலாத்” என்ற வார்த்தைக்கு பின் தொடர்வது என்ற பொருள் வருகிறது, நடைமுறையில் கூட்டுத் தொழுகை முறை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை மிக விசாலமான கருத்துக்களை தன்னகத்தே அடக்கியுள்ளது. இதை பற்றி நாம் நபிமார்களின் அற்புதங்கள் என்ற புத்தகத்தில் தந்துள்ளோம். அங்கு திருக்குர்ஆனில் வரும் வாசகங்களை எடுத்துரைத்து விளக்கம் அளித்துள்ளோம். சமுதாய மக்கள் அனைவரும் பின்பற்றக் கூடிய வரைகளை கற்றுக் கொடுத்து, சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் முக்கிய பணி, கூட்டு ஸலாத் முறையைக் கொண்டுதான் நிறைவேற்ற முடியும் என்பது திருக்குர்ஆனின் நிலைப்பாடாகும். (பார்க்க 29:45)
10.ஜகாத்: (நலிந்த மக்களின் வளர்ச்சிக்கான நிதி உதவி)
சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக உதவி செய்வது வசதி படைத்தோரின் முக்கிய பணியாகும். வெறும் போதனைகளால் சமுதாயத்தை சீராக்க முடியாது.
يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍۢ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌۭ.
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்: “எதை (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்"" என்று: நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும் வழிப் போக்கர்களுக்கும் (கொடுங்கள்), மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.""
விளக்கம் :
(1) சமுதாய சீரமைப்புப் பணிகளுக்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பண உதவி செய்ய வேண்டும். எவ்வளவு உதவ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
(2) உங்களால் முடிந்த வரை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து உதவுங்கள்.(பார்க்க 2:219)
(3) இதில் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், ஆதரவற்ற நிலையில் தவிப்பவர்கள், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்கள், இறைச் செய்திகளைப் பரப்புவதற்காக பயணத்தை மேற்கொள்பவர்கள், என பட்டியலிட்டு உங்கள் வசதிக்கேற்ப உதவி செய்து வாருங்கள்.
(4) ஆக ஆக்கப்பூர்வமான எந்த நற்செயலைச் செய்தாலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதன் பலன்கள் அவனிடமிருந்து நிச்சயமாய் திரும்ப வந்தடையும்.
11.பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக செய்யும் தான தர்மங்கள்:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌۭ فَأَصَابَهُۥ وَابِلٌۭ فَتَرَكَهُۥ صَلْدًۭا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍۢ مِّمَّا كَسَبُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.
2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிச் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்,அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும், அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது, இவ்வாறே அவர்கள் செய்த - (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள், இன்னும்இ அல்லாஹ் காஃபிரான மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் மக்கள் மத்தியில் விளம்பரம் பெற வேண்டும் என்பதற்காக, தான தர்மம் செய்யாதீர்கள்.
(2) அவ்வாறு செய்தால் உண்மையிலேயே அல்லாஹ்வையும் அவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும்.
(3) நீங்கள் அவ்வாறு செய்து வரும் தான தர்மங்களால் ஒரு பலனும் ஏற்படாது.
(4) எவ்வாறு கற்பாறைகள் மீது பெருமழை பெய்யும் போது, அதன் மீது படிந்துள்ள தூசி அடித்துச் சென்று விடுகின்றதோ, அது போல் நீங்கள் செய்து வரும் தான தர்மங்கள் பலனற்றுப் போயிவிடும்.
(5) அல்லாஹ்வின் அறிவுரைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.
(6) சிந்தனையாளர்களே! மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகச் செய்யும் தான தர்மத்திற்கும் ஆஃகிரத்திற்கும் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. அதாவது இப்படி தனிப்பட்ட முறையில் தான தர்மம் செய்தால், நலிந்த மக்களிடம் கையேந்தும் பழக்கம் ஏற்பட்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுவார்கள். இது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானாதாகும்.
12.அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்யும் தான தர்மங்கள்:
وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًۭا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌۭ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌۭ فَطَلٌّۭ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.
2:265. அல்லாஹ்வ்pன் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது, அதன் மேல் பெருமழை பெய்கிறது, அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது, இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யா விட்டாலும் பாடி மழையே அதற்குப் போதுமானது, அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
விளக்கம் :
(1) அல்லாஹ்வின் திருப் பொருத்தம் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள.
(2) அல்லாஹ்வின் விருப்பப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலமாக அனைத்துத் தரப்பு மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் உதவி செய்து வரவேண்டும்.
(3) இப்படிச் செய்யும் உதவிகள்தாம் பலனுள்ளதாக இருக்கும்.
(4) எவ்வாறு மேட்டுப் பகுதியில் இருக்கும் பூமியில் பெருமழை பெய்தாலும், சிறிதளவே பெய்தாலும் அது செழிப்புடன் இரட்டிப்பான நல்ல விளைச்சலைத் தருகின்றதோ, அது போல நீங்கள் இறை சமூக அமைப்பிற்கு, உங்களிடம் உள்ள செல்வத்தை அளித்து, சிறப்பான சமுதாயம் உருவாகப் பங்கெடுத்துக் கொண்டால், உங்களுள் சிறப்பான ஒழுக்க மாண்புகளும் செயல்வேகமும் வளரும்.
(5) ஆக நீங்கள் செய்வது எதுவும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்புவதில்லை என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
13.அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவது என்றால் என்ன?
அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செலவு செய்வது என்பது அதன் பொருளாகும். இதைப் பற்றி நாம் ஏற்கனவே சொன்னது போல நலிந்த மக்களின் துயர் துடைப்புக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக செலவழிப்பது என்பதே அதன் பொருளாகும். மேலும் நலிந்த மக்களின் துயர் துடைப்புக்காகவும் அவர்களுடைய மேம்பாட்டிற்காகவுமே செலவிட வேண்டும். தனிப்பட்ட முறையிலும் இப்படித் தான் செய்யவேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் உதவி செய்தால் மக்களிடையே கையேந்தும் பழக்கம் ஏற்பட்டுவிடும். சமுதாயம் முன்னேறுவதற்குப் பதிலாக அது மோசமான நிலைக்கு சென்றுவிடும். இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக அளித்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதையே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வலியுறுத்திச் சொல்கிறது.
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍۢ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ.
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியமணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது,அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான், இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன்.
விளக்கம் :
(1) தனக்குக் கிடைத்துள்ள உபரி சொத்துச் செல்வங்களை அல்லாஹ்வின் சமூக/ஆட்சிஅமைப்புக்குக் கொடுத்து விட்டால், அவை குறைந்து விடுமே என்று நினைக்கத் தோன்றும்.
(2) உதாரணமாக ஒரு விவசாயி தம்மிடமுள்ள தானியத்தை பூமியில் போட்டுவிட்டால், அது அழிந்து விடுமே என்று எண்ணி, அதை பயிரிடாமல் அவன் தனக்காகவே முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டால், உணவு உற்பத்தியை எவ்வாறு பெருக்க முடியும்?
(3) எனவே அவன் முறைப்படி பயிரிடுவதால் தான் அது பன்மடங்காகப் பெருகி, அவனுக்கும் மற்றவர்களுக்கும் உணவு கிடைத்து வருகிறது.
(4) அது போல அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் செயல் திட்டங்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அதன் நலத்திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்?
(5) எனவே இறைவனின் வழிகாட்டுதலின்படி சமூக/ஆட்சியமைப்புக்கு உதவி செய்வது எதுவும் வீண் போகாது.
(6) அதுவும் பன்மடங்காகப் பெருகி உங்களிடமே வந்தடையும். அல்லாஹ்வின் அறிவுரையின்படி உழைத்து வாழ்பவர்களின் செல்வங்கள் பெருகி விடுகிறது.
(7) ஆக அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்டபின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.
விளக்கம் :
அல்லாஹ் காட்டிய வழியில் உதவி செய்பவர்கள், தாம் உதவி செய்ததை பிறரிடம் சொல்லிக் காண்பிக்க மாட்டார்கள். (பார்க்க 76:9) அவ்வாறு சொல்லிக் காட்டி மற்றவர்களை நோவினை செய்வதும் கூடாது. தாம் செய்யும் நற்செயல்களுக்;கு உரிய பிரதிப்பலன்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாகக் கிடைக்கும். இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் எவ்வித துக்கமோ துயரமோ நெருங்காது.
14.அல்லாஹ்வுக்கு அழகிய கடன்?
திருக்குர்ஆனில் ஆங்காங்கே அல்லாஹ்வுக்கு அழகிய கடனைக் கொடுக்கும்படி சொல்லப்படுகிறது. அகிலங்களையும் பூமியையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்வுக்கு கடனுதவி அவசியமா என்ற கேள்வி எழுகிறது. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். முஹம்மது நபிஸல் அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு சென்று, அங்கு ஃகிலாஃபத் என்கின்ற மக்களாட்சியை ஏற்படுத்தினார்கள். (பார்க்க 17:1) அந்த ஆட்சியமைப்பின் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி உதவி தேவைப்பட்டது. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்படும் மக்களாட்சிக்கு உதவி செய்வதையே அல்லாஹ்வுக்குக் கடனுதவி செய்யும்படி சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சமூக/ஆட்சியமைப்பை இன்றைக்கும் நாம் ஏற்படுத்த முடியும்.
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍۢ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيْرًۭا وَأَعْظَمَ أَجْرًۭا ۚ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيم
73:20 தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகானக் கடனாகக் கடன் கொடுங்கள். நன்மைகளில் எவற்றையும் நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காகச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலாதனதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள். அன்றியும் அல்லாஹ்விடமே பாதுகாப்புக் தேடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பாதுகாப்பவன்.மிக்க கிருபையுடையவன்.
விளக்கம் :
(1) இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் சமுதாய அமைப்பை நிலைநாட்டுங்கள்.
(2) இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்பட தம்மாலான பொருளுதவிகளைச் செய்து வாருங்கள்.
(3) இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக/ஆட்சியமைப்பு உருவாகி விடும்.
(4) அதன் செயல்திட்டங்கள் நிறைவேற எந்த நன்மையான காரியங்களைச் செய்தாலும் அவற்றை அவர்களுடைய நன்மைக்காகவே செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும்.
(5) அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு அவர்கள் செய்த உதவிகள் பன்மடங்காகப் பெருகி மகத்தான நன்மைகளாக அவர்களிடமே வந்தடையும் என்பதை அறிந்துகொள்ளட்டும்.
(6) மேலும் அவர்கள் தம் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வேண்டிய வசிதிகளை அல்லாஹ்வின் நியதிப்படி தேடிக்கொள்ளட்டும்.
(7) அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே அருளப்படுகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இது அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையாகும்.
15.உயர் பதவியும் அந்தஸ்தும் யாருக்குக் கிடைக்கும்?
لَّا يَسْتَوِى ٱلْقَٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَٰعِدِينَ دَرَجَةًۭ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ عَلَى ٱلْقَٰعِدِينَ أَجْرًا عَظِيمًۭا.
4:95. ஈமான் கொண்டவர்களில் உட்கார்ந்து இருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள், தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்து இருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான், எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான் ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரை விட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
விளக்கம் :
(1) ஈமான் கொள்பவர்களில் இருபிரிவினர் இருக்கிறார்கள்.
(2) அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் சமூக நலப்பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள்,
(3) அதற்காகத் திட்டங்களைத் தீட்டி தம் செல்வத்தையும் உயிரையும் பணயம் வைத்துச் செயல்படும் செயல்வீரர்கள்-இவர்கள் ஒரு பக்கம்.
(4) இப்படிப்பட்ட எந்தச் செயலிலும் பங்கெடுக்காமல் தத்தம் தொழிலில் நிலைத்திருப்பவர்கள் மறுபக்கம்.
(5) இவர்கள் இருவரும் சமமாகமாட்டார்கள்.
(6) அல்லாஹ்வின் பாதையில் அயராது பாடுபடுபவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர் பதவியும் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும்.
(7) ஆயினும் மற்ற மூஃமின்களின் பங்கிற்கு எதுவும் கிடைக்காது என்பதல்ல. இந்தச் செயல்திட்டங்கள் நிறைவேற அவர்களுடைய ஒத்துழைப்பும் தேவை. அவர்களுக்கும் தம் பங்கிற்கு உரியன கிடைக்கும்.
(8) ஆனால் பதவி அந்தஸ்து என்னும் போது இவர்களுக்குக் கிடைப்பதைவிட ,அந்தச் செயல் வீரர்களுக்குச் சிறப்பாக இருக்கும்.
دَرَجَٰتٍۢ مِّنْهُ وَمَغْفِرَةًۭ وَرَحْمَةًۭ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًا.
4:96. (இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், பாதுகாப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான், ஏனென்றால் அல்லாஹ் பாதுகாப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
ஆக இதுவே உயர்பதவியும் அந்தஸ்தும் கிடைக்க அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட வரையறைகளாகும். (மேலும் பார்க்க- 84:19) மேலும் இவ்வாறு இறைவனின் ஆட்சியமைப்பின் செயல் திட்டங்களை நிறைவேற்றி வருபவர்களால் ஏற்படும் சிறு தவறுகள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேலும் அல்லாஹ்வின் நியதியின்படி அவர்களுடைய ஆற்றல்களும் செயல்திறனும் வளர்கின்றன. இப்படியாக அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளில் பாதுகாப்பும்; வளர்ச்சிக்கான அனைத்து வழிமுறைகளும் நிர்ணயமாகி உள்ளன.