திருக்குர்ஆன் தெளிவுரை, சூரா அட்டவணைகள்
.بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
2. எனதருமை சகோதர சகோதரிகளே!
இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொன்றிலும் தனிச் சிறப்புகள் இருக்கும். உவமை வடிவிலும், இலக்கண இலக்கிய நயத்துடன் சொல்லபபட்ட விஷயங்களும் இருக்கும். எனவே ஒரு மொழியில் உள்ள நூலை இனனொரு மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமென்றால், அந்த மொழியை நாம் நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். அந்த மொழியிலுள்ள இலக்கண இலக்கியத்தையும் நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் சரியாக மொழிபெயர்க்க முடியும்.
3. எனவே ஒவ்வொரு மொழியிலும் நேரடி பொருள் தரக்கூடிய வாக்கிய அமைப்புகளும், உவமை வடிவில் இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்ட வாக்கிய அமைப்புகளும் இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை He is healthy என்று ஆங்கிலத்தில் நேரடியாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் என்பதை ஆங்கிலத்தில் நேரடி மொழிபெயர்த்தால் He filters his happy tears என்றுதான் மொழிபெயர்க்க முடியும். இதை தமிழில் மொழிபெயர்த்தால் அவர் தன் ஆனந்த கண்ணீரை வடிகட்டுகிறார் என்று மொழி பெயர்க்க முடியும். எனவே அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.
4. அதுபோல அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனிலும் நேரடிப் பொருள் தரக்கூடிய வாக்கிய அமைப்புகளும், இலக்கிய நயத்துடன் உவமை வடிவில் சொல்லப்பட்ட வாக்கிய அமைப்புகளும் உள்ளன. (பார்க்க 3:7) இவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குரிய விடையை காண்பது எளிது. அதாவது ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும், அதற்கே உரிய மையக் கருத்து ஒன்று இருக்கும். அதைச் சுற்றியே அந்த புத்தகமும் எழுதப்பட்டிருக்கும். அதே போல் உலக பொதுமறையாக இருக்கும் திருக்குர்ஆனுக்கும் மையக் கருத்து உள்ளது. அது உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள், அவற்றைப் பின்பற்றினால் ஏற்படும் நன்மைகள் அல்லது அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படுகின்ற துயரங்கள் என்ற அடிப்படையில் பேசுகிறது. எனவே சமூக அமைப்பு, நாடு, நாட்டு மக்கள், உலகம், உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவது எப்படி என்ற அடிப்படையில் அது பேசுகிறது. இந்த மையக் கருத்தை வைத்து நாம் திருக்குர்ஆன் வாசகத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். விளக்கத்திற்குப் பார்க்க அத்தியாயம் 3:7
5. மேலும் உலக நிகழ்வுகள் அனைத்தையும் அல்லாஹ்வே செய்வதாக திருக்குர்ஆனில் சொல்லப்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அல்லாஹ் அளித்து விட்டதால், மனித செயல்களில் அல்லாஹ்வின் தலையீடு இருப்பதில்லை. மாறாக மனிதனின் “செயல்களுக்குரிய விளைவுகள்” என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் செயல்பாடுகள் அமைகின்றன. (பார்க்க 11:56) எடுத்துக்காட்டாக எத்தனையோ சமுதாயங்களை அல்லாஹ் அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது (பார்க்க 6:6) இதை நாம் அப்படியே பொருள் கொண்டால் மனிதன் உழைத்து உலகை உருவாக்குவது போலவும், அல்லாஹ்வுக்கு அது பிடிக்காமல் அழித்துவிடுவது போலவும் பொருளாகிவிடும். இப்படிப் பொருள் கொள்வது சரியல்ல. அதாவது ஒரு சமுதாயம் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடும்போது, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற பின்விளைவுகள்” என்ற 11:56இன் விதிமுறைகளின்படி சமுதாயங்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டன என்பதே அதன் பொருளாகும். இப்படிப்பட்ட விதிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியதால் அவனே அழித்து விடுவதாக கூறுகிறான். இதை அடிப்படையாக வைத்து நாம் தெளிவுரையை தந்துள்ளோம்.
6. மேலும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது,“அல்லாஹ் நாடினால்” என்றும் “அல்லாஹ்வின் அனுமதி இருந்தால்” என்றும் பல இடங்களில் வருகிறது. இவையாவும் அல்லாஹ் அன்றாடம் நாடும் விஷயங்கள் அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். “அல்லாஹ்வின் நாட்டம்” என்பது அல்லாஹ் உருவாக்கிய “நிலைமாறா நிரந்தர சட்ட திட்டங்கள் அல்லது விதிமுறைகள்” என்பதாகும். எனவே இறைவனின் நிலைமாறா விதிமுறைகளின் படி மனிதனுடைய நாட்டமும் உழைப்பும் இணைந்திருந்தால், மனிதன் நாடுவதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அதன் பொருளாகும். எடுத்துக்காட்டாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமான உணவுகளை வழங்குகிறான்; தான் நாடியவருக்கு அளவோடு கொடுக்கிறான் என்று 17:30 வாசகம் கூறுகிறது. இதை அப்படியே நேரடி பொருள் கொண்டால் அல்லாஹ் பாகுபாடுடன் செயல்படுவதாக பொருளாகிவிடும். அல்லாஹ்வோ உலக மக்கள் அனைவரையும் பரிபாலிக்கும் ‘ரப்புல்ஆலமீனாக’ இருக்கும்போது, இவ்வாறு அவன் பாகுபாடுடன் செயல்பட மாட்டான். எனவே 53:39இல் உள்ள விதிமுறையின்படி திறமையுடன் உழைப்பவர்களுக்கு அதிக அளவில் செல்வமும், திறமையின்றி உழைப்பவர்களுக்குக் குறைவான செல்வங்களும் கிடைக்கின்றன. எனவே திறமைகளை வளர்த்துக்கொள்வது மனித பொறுப்பில் உள்ள விஷயங்களாகும். இதையும் மையமாக வைத்து நாம் தெளிவுரையை தந்துள்ளோம்.
7.மேலும் திருக்குர்ஆன் முழுமையாக்கப்பட்ட வேதம் என்று அறிவித்துக் கொள்கிறது. (பார்க்க 5:3) எனவே உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைக் கோட்பாடுகள் இதில் விவரமாக அளிக்கப் பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் ஒரே சீராகச் சொல்லாமல் ஆங்காங்கே விளக்கம் அளிக்கும் வகையில் வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் யாதெனில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக்கிட வேண்டும் என்பதே ஆகும். எனவே ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது, அதன் விளக்கம் அதை ஒட்டிய மற்ற வாசகக்தில் உள்ளதை நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக மக்கள் அவ்வேதனையைப் பற்றி அவசரப்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட தவணை நாம் ஏற்படுத்தாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு எப்போதோ வந்திருக்கும் என்று 29:53 வாசகத்தில் வருகிறது. இதன் விளக்கம் 16:61இல் வருகிறது. அதாவது மக்கள் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிப்பதாக இருந்தால் இப்பூமியில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் திருந்துவதற்காக தக்க கால அவகாசம் அளிப்பது என்பதும் அல்லாஹ்வின் செயல்திட்டமாகும் என சொல்லப்படுகிறது. எனவே 29:53 வாசகத்தைப் பற்றிய விளக்கம் 16:61 வாசகத்தில் கிடைத்துவிடுகிறது. இப்படியாக ஒவ்வவொரு வாசகமும் தெளிவாகிவிடுகிறது.
8.திருக்குர்ஆனை விளக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றிருக்கிறான் (பார்க்க 75:17-19). நாம் மேலே சொன்னது போல திருக்குர்ஆனின் ஒரு வாசகத்தை அதன் முற்பகுதி அல்லது பிற்பகுதியில் வரும் வாசகங்கள் அழகுபட விளக்கமளித்து விடுகின்றன. இது திருக்குர்ஆனின் மாபெரும் அற்புதமாகும். திருக்குர்ஆனை எளிதில் சரியாகப் புரிந்துகொள்ள இதுவே சிறந்த வழிமுறையாகும். இவ்வாறே திருக்குர்ஆனின் வாசகத்திற்கு தெளிவுரை தரும்போது, அதை ஒட்டடிய மற்ற வாசகத்தின் விளக்கங்களையும் இணைத்து தந்துள்ளோம். அந்த வாசகத்தின் எண்களையும் அதன் பக்கத்திலேயே தந்துள்ளோம்.
9.ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறோம். தற்சமயம் உள்ள திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் யாவும் தவறானவை என்று நாம் சொல்லவில்லை. அந்தந்த வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பையே தந்துள்ளார்கள். ஆனால் திருக்குர்ஆன் வாசகங்களின் பொருள் என்னவென்பதை பாமர மக்களால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே திருக்குர்ஆனின் தெளிவுரை அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் தெளிவுரையைத் தந்துள்ளோம். எனவே இது திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பும் அல்ல. தஃப்ஸீர் எனும் விரிவாக்கமும் அல்ல. மாறாக 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் பல அரபியில் தேற்சி பெற்றவர்கள் திருக்குர்ஆனை ஆய்வு செய்து அரிய பல கருத்துக்களை உருது மொழியில் தொகுத்து எழுதியுள்ளார்கள். அந்த வகையில் முதலிடம் வகிப்பவர் அல்லாமா இஃக்பால் (ரஹ்) அவர்கள் ஆவார். அவருடைய கருத்துக்களைப் பின்பற்றி ஸர் சையது அஹ்மத் கான், மவுலானா அல்தாஃப் ஹுஸைன் ஹாலி, ஜீலானி பர்ஃக், அஸ்லம் ஜயராஜ்பூரி, அல்லாமா ஃகுலாம் அஹ்மத் பர்வேஸ் போன்றோர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவற்றின் கருத்துக்களை வைத்து திருக்குர்ஆனின் தெளிவுரையை எழுதியுள்ளோம். எனினும் இவ்வாறு விளக்கம் தரும்போது, மனிதன் என்ற முறையில் நம்மாலும் சில குறைகள் ஏற்பட்டிருக்கலாம். இதற்கு நாமே பொறுப்பு ஆவோம். அன்பர்கள் அதைச் சுட்டிக்காட்ட உரிமைப் பெற்றவர்களே. மேலும் இதுவே இறுதியான விளக்கம் என்றும் யாரும் முறையிட்டுக் கொள்ள முடியாது. இதைவிட சிறந்த விளக்கங்களைச் சொல்லும் வல்லுனர்கள் அல்லாஹ்வின் நியதிப்படி வருவார்கள். ஆனால் அத்தகைய கருத்துக்கள், ஒட்டுமொத்த குர்ஆனின் கொள்கை கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருத்தல் அவசியம் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். (பார்க்க 27:84)
10.மேலும் ஒரு விஷயத்தை முக்கியமாக சொல்ல விரும்புகிறோம். தெளிவுரை சரியானவை என்று எண்ணுபவர்கள் அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும்போது, இந்தக் குர்ஆனின் வாசகத்திற்கு இன்ன பொருள் வருகிறது என்பதைத்தான் சொல்ல வேண்டுமே அன்றி, “இன்னார்” இப்படி பொருள் தருகிறார் என்று சொல்லக் கூடாது. நீங்கள் அவ்வாறு சொன்னால் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தி விடுவீர்கள். அது மிகப் பெரிய பாவச் செயலாகும். மேலும் விளக்கவுரை சம்பந்தமாக சந்தேகம் ஏதாவது இருந்தால் கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கத்தைப் பெறலாம்
11.தமிழாக்கம் :ந. ரூஹுல்லா. பி.காம்.
தொ.பே. எண்:9381004531, 9884852672